இரா. முருகன்'s Blog, page 5

November 9, 2024

நாட்டு நடப்பைக் குறித்து கரிசனம் பகிர கரோல்பாக்கிலிருந்து தில்லிக் குளிரில் வந்த கிழவர்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து

இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.

 

தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.

 

அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது. வெளியே போய் வந்தால் என்ன? புதுசாக வாங்கி நிறுத்தி இருக்கும் இந்துஸ்தான் காரிலும் சவாரி செய்த மாதிரி இருக்கும். தனியாகப் போவானேன்? குடும்ப சகிதம்.

 

வசந்தியைக் கேட்டான்.

 

ஒழுங்கா ஓட்டக் கத்துண்டாச்சா?

 

அவள் குழந்தையை மடியில் வைத்தபடி விசாரணை செய்தாள்.

 

லைசன்ஸ் வச்சிருக்கேனாக்கும்.

 

கார் ஓட்டவா, ஸ்கூட்டர் ஓட்டவா?

 

சகலமானதிலேயும் ஆரோகணிச்சு சுகமா ஓட்டத் தான். வந்தா புரியும்.

 

அதென்ன காவாலித் தனமான பேச்சு?

 

நான் சாதாரணமாத்தானே சொன்னேன்.

 

போய் தில்ஷித் கவுர் கிட்டே சொல்லுங்கோ.

 

அவ எதுக்கு? நீ ஒருத்தி போறாதா?

 

அவளோடு சேர்ந்து சிரித்தான். குழந்தை தலையில் செல்லமாக முட்டி அதன் கன்னத்தில் முத்தமிட்டாள் வசந்தி.

 

இவளைப் பிடிச்சுக்குங்கோ. குண்டியிலே எல்லாம் ஈஷி வச்சிண்டிருக்கா. வாசனையா குட்டியம்மாவுக்குக் குளிச்சு விட்டுட்டு புடவையை மாத்திண்டு கிளம்பிடறேன். அரை மணி நேரம் எதேஷ்டம்.

 

அவள் சொன்னபடிக்கு வந்து ரதி மாதிரி ஒய்யாரமாக காரில் சவாரி செய்யத் தயாராக நிற்க சங்கரன் பங்கரையாக, பாஷாண்டியாகத் தினசரி பேப்பர் கிராஸ்வேர்டில் மூழ்கி இருந்தான்.

 

விரட்டி சட்டையும் கால் சராயும் தரிச்சு வரச் சொன்னாள் வசந்தி. அவள் கண்ணை உருட்டி மிரட்டுவதாக போக்குக் காட்ட குழந்தை ஓவென்று சிரித்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2024 22:11

November 8, 2024

மரக்கொன்னைத் தைலமும் கல்காஜி மாமாவும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது – சிறு பகுதி

நாக்பூர் சித்தப்பா வந்திருக்கார். அப்பா கூட்டிண்டு வந்தார். அவரோட பக்கத்து, எதிர் குடித்தன மாமாஸ் வேறே. எல்லோரும் ஹால்லே குழந்தையோட விளையாடிண்டிருக்கா.

 

நல்லதாப் போச்சு. இதை எல்லாம் உத்தேசிச்சுத் தான் சொன்னேன்.

 

என்னன்னு?

 

நம்ம விளையாட்டை இந்த நிமிஷமே, விட்ட இடத்துலே தொடரலாம்னேன்.

 

ஆமாமா, அதுக்குத் தானே எழுப்பியானது.

 

அவன் முகத்தை இரு கையாலும் ஏந்தி மாரோடு அழுத்தி, உதட்டில் வெறியோடு முத்தமிட்டு விலகினாள் வசந்தி.

 

முகத்தை அலம்பிண்டு, பல் தேய்ச்சுட்டு ஹால்லே உக்கார்ந்து பெரிய மனுஷ தோரணையா வார்த்தை சொல்லிண்டு இருங்கோ. காப்பி சேர்க்கறேன்.

 

அவள் துண்டைத் தோளுக்குக் குறுக்கே போர்த்திக் கொண்டு உத்தரப் பிரதேச அரசியல் தலைவர் மாதிரி எவ்விக் குதித்து நடந்து போனாள்.

 

சங்கரன் ஹாலுக்கு வந்தபோது மரக்கொன்னைத் தைலம் பற்றிப் பரபரப்பான கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். அவனுடைய மாமனாரும், அவர்தம் இளவலும், கூடவே இன்னும் இரண்டு கல்காஜி மாமாக்களும் அந்தத் தைலத்தின் மகிமையை விதந்தோதிக் கொண்டிருந்தார்கள். கேரளத்தில் அங்கமாலிக்கும் அடிமாலிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் குக்கிராம ஆயுர்வேத வைத்தியன் ஒருத்தன் உண்டாக்கியது அது.

 

ஊர்த் திருவிழாவில் குழந்தைகளைப் பயப்படுத்தும் தெய்யம் ஒப்பனை கட்டி ஆடிய நேரம் போக மூலிகை வைத்தியம் பார்க்கிற வைத்தியன், சிசுக்களுக்கு ஜலதோஷமும் மூக்கடைப்பும் உடன் நிவர்த்தியாக மூலிகை எண்ணெய் காய்ச்சி உருவாக்கியது அந்தத் தைலம். அது சர்வ ரோக நிவாரணியாக மாற அதிகம் நாட்கள் செல்லவில்லை.

 

எப்படியோ யார் மூலமோ சங்கரனின் மாமனார் சுந்தர சாஸ்திரிகள் தில்லிக் கடையில் அதை விற்க வரவழைத்து, கூடவே தைலத்தின் புகழ் பாட நாலைந்து அங்கமாலி, அடிமாலி ஆட்களையும், பத்து நாள் செண்டை மேளக் கொட்டும் உற்சவமுமாக அமர்க்களப் பட்டுக் கொண்டிருக்கும் தெற்கத்திய கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.

 

பிரதி தினம் கடை பெஞ்சில் உட்கார்ந்து அசல் குட்டநாடன் மலையாளத்தில் மரக்கொன்னை மகாத்மியம் பாடி, உள்ளே காப்பியும் பலகாரமும் கழித்தே கோவிலில் கொட்டி முழக்கப் போனார்கள் அவர்கள்.

 

Nov 8 2024

 

கிட்டத்தட்ட அழுத்தமான நூறு வருஷ தீர்க்காயுசையும், லோகாயதமான ஜீவிதத்தில் சம்திருப்தி – அப்படின்னா என்ன என்று வாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கேட்டால் நீடித்த பெண் சுகம் என்று பதில் வரும்; தேக காந்தி – மின்னும் உடம்பு, ஆரோக்கியமான பசி, வாயு சேராத வயிறு என்று ஆயிரத்தெட்டு விஷயம் இந்த ஓயிலைப் புரட்டினால் நடந்தேறும். அதற்கெல்லாம் பிரத்யட்ச சாட்சி நாங்களே என்று அவர்கள் மலையாளத் தாடிக்குள் வசீகரமாகச் சிரித்தபடி துண்டைப் போட்டுத் தாண்டிப் போவார்கள்.

 

என்ன கஷ்டமாக இருந்தாலும் கொழும்பில் இருந்து கொப்பரைத் தேங்காய் வரவழைத்து தைலம் உண்டாக்குவதால் அதற்கெனத் தனியான மணம் உண்டாக்கும் என்று மேளர்கள் சொன்னதை அதிசுந்தரமான வாசனை என்று பம்பாய் விளம்பரக் கம்பெனித் தமிழில்  மாமானார் மொழிபெயர்த்துக் கூடி இருந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சிலாகிப்பைப் பெற்றது சங்கரன் கண்ணில் படத் தவறவில்லை. போகட்டும், காப்பியும் மின்சார கணப்பில் கதகதப்புமாக அவர்களுடைய நாள் நல்ல படியாகப் போகட்டும்.

 

ஆனாலும் இந்தக் கூத்தை குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரமாகப் பார்த்து சங்கரனிடமும் அரங்கேற்ற கோஷ்டியாக அவர்கள் ஏன் கிளம்பி வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

தைலம் கை நிறைய எடுத்துத் தேய்த்து முழுகாமலேயே அவன் திடகாத்திரமாக இருக்கிறான். ஸ்திரி சம்பந்தம் தீர்க்கமாகக் கிடைத்திருக்கிறது. பசி எங்கே எங்கே என்று நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வந்து சேருகிறது. கொச்சு தெரிசாவோடு கிடந்த நேரத்தில் ரெண்டு பேருக்கும் வயிற்றுப் பசி உண்டாக, பிஸ்கட் பாக்கெட்டுகளை அவசரமாகப் பிரித்து கரமுர என்று மென்று தின்ன வைத்த பசி அது.

 

விட்டுத் தள்ளு. கொச்சு தெரிசாவும் மற்றதுமெல்லாம் தில்லிக் குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வெட்டி அரட்டைக்கு வந்த  கிழவர்களோடு காப்பி குடித்தபடி பேச எதற்கு?

 

சாஸ்திரிக்கு ஹெர்னியாவாமே? பாவம் நல்ல மனுஷர். ஆனாலும் காங்கிரஸ்லே மாட்டிண்டு முழிக்கறார். அடுத்த பிரதமரா, மகாபீடை  கடன்காரன் பொண்ணையே டெம்பரவரியா அப்பாயிண்ட் பண்ணிட்டு லண்டன்லே போய் ஹெர்னியாவுக்கும் ஹைட்ரோசிலுக்கும் ஆப்பரேஷன் செஞ்சுண்டு வர்றதா திட்டமாமே

 

மாமனாரின் தம்பி, தேசம் பற்றிய தன் ஆழ்ந்த கவலைகளை சர்க்காரின் மிக முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் சங்கரனுடன் பகிர்ந்து கொண்ட போது அவனுக்குச் சொல்லத் தோன்றியது இதுதான் –

 

ஓய் சாஸ்திரியை நானும் தூரத்தில் இருந்து தான் பார்க்கறேன்.  அவருக்கு ஹெர்னியாவும் ஹைட்ரோசிலும் இருக்கான்னு எப்படித் தெரியும்? இருந்தாலுந்தான், எனக்கு என்ன போச்சு, உமக்குத் தான் என்ன போச்சு? வந்ததுக்கு இன்னொரு டோஸ் வேணும்னா ஜீனி போடாம காப்பி குடிச்சுட்டு தைலத்தை சிரசிலேயும் விதைக் கொட்டையிலும் திடமாப் புரட்டிண்டு போய்ச் சேருமே.

 

ஏதும்   சொல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் அவர்கள் புறப்பட்டுப் போக, கதவை அடைத்து விட்டு உள்ளே போனான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2024 01:21

November 5, 2024

அறை முழுக்கக் கவிந்த குழந்தை வாடை இதமாகக் குளிர் போர்த்தி இருந்தது

வாழ்ந்து போதீரே (அரசூர் வம்சம் நாவல் தொகுதியில் நான்காவது நூல்) நாவலில் இருந்து –

இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான்.

 

சங்கரனுக்குத் தோன்றியது.  ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் கொச்சு தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற அத்துமீறல் எப்படிச் செய்யப் போனது? எப்படி வந்து படிந்த உறவு அது?

 

இப்படிக் கட்டியவளுக்குத் துரோகம் பண்ணினவன் மனம் குமைந்து திரும்பி வருவான் அவளிடம்.  சாஸ்திரமும் சம்பிரதாயமும் சாகித்யமும், கலாசாரமும் எல்லாம் இதைத் தான் சொல்கிறது.

 

எத்தனை சினிமா கதாநாயகர்கள் இந்த மாதிரியான சூழலில் மனம் நோவதை தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து மொறிச்சென்று குளித்து விட்டு, சுத்த வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும் அணிந்து, புஷ்டியான வடக்கத்திய பாணி கடவுள்கள் ஏகப்பட்ட பட்டு, பீதாம்பரத்தோடு பளிங்கில் உட்கார்ந்திருக்கும் கோவில்களில் நூறு படி ஏறிப் போய், அங்கே மணியை அடித்து மனம் திறந்து பாடித் துரோகத்துக்குக் கழுவாய் தேடுவார்கள் அவர்கள்.  என்ன ஏது என்று கேட்காமல், வாயைத் திறந்ததுமே மன்னிக்கத் தயாராக உள்ள, தலையில் முக்காடிட்ட, நடு வகிட்டில் குங்குமம் தீற்றிய பெண்டாட்டி உள்ளவர்கள்.

 

வசந்தி மன்னிக்க மாட்டாள். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தோன்றவும் இல்லை. அவன் உடம்பு திசுக்களில் இருக்கிற திமிராக இருக்கலாம் இது என்று மட்டும் தோன்றியது. பரம்பரையாக வருவதோ.

 

வசந்தி குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். ரஜாயைத் திரும்பப் போர்த்திக் கைக்கடியாரத்தில் மணி பார்க்க எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு கண் மூடிக் கிடந்தான். அறை முழுக்க அடர்த்தியான குழந்தை வாடை. முன்பெல்லாம் வசந்தி வாடை தான் அடிக்கும்.

 

சட்டென்று அவன் உணர்வில் கொச்சு தெரிசாவின் உடல் வாடை அழுந்த அமர்ந்தது. மோகமும் காமமுமாகப் புரண்டு கிடந்து அவன் திரும்ப உறங்கிப் போனான்.

 

சாப், திங்கள்கிழமை விடிஞ்சுது. எழுந்திருந்து ஆபீஸ் போகலாம்.

 

வசந்தி எழுப்பத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் சங்கரன். என்ன கண்றாவி, இருபது இருபத்துநாலு மணி நேரமா உறங்கிப் போனான் அவன்? உடம்புக்கு என்ன நோக்காடு வந்திருக்கிறது தெரியலையே.

 

படுக்கைக்குப் பக்கத்து மேஜையில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்துப் பார்த்தான். காலை ஏழு மணி தான். அவனுக்கு ஆசுவாசம் தர, இன்னும் ஞாயிறுதான் நடந்து கொண்டிருக்கிறது.

 

வசந்தி ஓவென்று பெரிதாகச் சிரித்தபடி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். அவளுக்குள் பாதுகாப்பாக ஒதுங்கியபடி அவள் இடுப்பை முத்தமிட்டான் சங்கரன்.

 

சனியனே. கும்பகர்ணத் தூக்கம் போட்டுட்டேனோ என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்.

 

ஐயோ வலிக்கறது. கடிக்க வேண்டாம். கேட்டேளா? சூல் இருந்த வயிறு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 22:45

November 3, 2024

தில்லியில் இன்னும் ஒரு குளிர்காலம் – காற்று நச்சாகி

இந்தச் சிறு பகுதி ‘வாழ்ந்து போதீரே’ என்னும் நான்காவது அரசூர் நாவலில் வருவது –

சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து  உறங்கும் பொழுது அது.

 

குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே யார் ரட்சிக்க?

 

பகிக்கு பால் கரைச்சுண்டு வா.

 

முதலில் விழித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி பக்கத்தில் தொட்டிலை சற்றே எம்பிப் பிடித்து சங்கரன் தூக்கக் கலக்கத்துடன் ஆட்டியபடி சொன்னான்.

 

வசந்தி அவனை உலுக்கி நிறுத்தினாள்.

 

பால் இல்லே. இது சூசு. பால் கொடுத்த போதே பகவதிக்கு இடுப்புத் துணி மாத்தியிருக்கணும். விடிகாலை தூக்கத்திலே கண் அசந்துட்டேன்.

 

அவன் மடியில் குழந்தையைப் விட்டு விட்டு வசந்தி ஈரமான விரிப்பையும் குட்டிக் கம்பளியையும் வெளியே எடுத்துப் போகும்போது சங்கரன் சொன்னான் –

 

கிறிஸ்துமஸ் தாத்தாவோட பொண்ணு வயத்துப் பேத்தி மாதிரி இருக்கேடீ.

 

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.  அப்படியே பக்கத்துலே இருக்கற கூடையிலே இருந்து துணி எடுத்து குழந்தைக்கு போடலாமில்லையா?

 

வசந்தி வெளியே இருந்து மாற்று கம்பளியும், விரிப்புமாக உள்ளே வந்தாள். அவள் கையில் கிரைப் வாட்டரும், இங்க் பில்லரில் ஊட்ட வேண்டிய ஏதோ டானிக்கும் கூட இருந்தன.

 

அவன் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையைத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டாள். குழந்தையைப் போட்ட மடி அசைந்து தாழ்ந்தபடி இருக்க, அது தன் மழலையில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தது. வசந்தி குனிந்து, காது ரெண்டையும் தலைமுடி கவிந்து மறைத்திருக்க அதன் பேச்சில் ஆமாடி செல்லம், தங்கக் குடமே, சமத்து ராஜாத்திடீ நீ என்றெல்லாம் ஆமோதித்து ஆழ்ந்திருந்தாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2024 00:58

October 30, 2024

என் கை நழுவிப்போன க்ராஸ்வேர்ட் விருது

என் அல்புனைவு நூல் வரிசையில் இர்ண்டாவதாகப் பிரசுரமாக ஆயத்தம் செய்யப்படும் சற்றே  நகுக நூலில் இருந்து

தமிழ்ப் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கிலப் படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடு சென்னைக்கும் மும்பைக்கும் நடுவே ஆறு அல்லது அறுநூறு வித்தியாசம் கண்டுபிடிக்கிறது போல் சுவாரசியமானது. தமிழில் ஒரு நாவல் வெளிவந்தால் கிணற்றில் ஊறப்போட்ட கல்லாக அது அநேகமாக லைபிரரி ஆர்டரில் சகாய விலைக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு கிளை நூலக மேல் ஷெல்பில் செருகி வைக்கப்படும். கிட்டத்தட்ட நாற்பது வருடம் கழித்து ‘நினைத்துப் பார்க்கிறேன்’ ரேஞ்சில் யாராவது அதைப் பற்றி மெதுவாக குரல் விட ஆரம்பிப்பார்கள். அப்புறம் அங்கே இங்கே என்று நாலு குரல் ஆமோதித்தும், ஆட்சேபித்தும் இலக்கியப் பத்திரிகையில் எழுத, அநேகமாக நாவலாசிரியர் ஆவி ரூபமாக இந்த இலக்கிய உரையாடலை அனுபவித்தபடி ஆத்மா சாந்தியடைந்து அடுத்த பிறவி ஆங்கில நாவலாசிரியராகப் பிறக்க அப்ளிகேஷன் போட்டிருப்பார். எல்லோருக்குமா அந்த அதிர்ஷ்டம் கிட்டும்?

 

இங்கிலீஷில் தமிழ் நாவல் எழுதினாலும் அது போய்ச் சேரும் வட்டம் மாணப் பெரிது. புத்தகம் சம்பந்தமான விழா என்றால் ஆயிரம் பேர் அமரக்கூடிய அவை நிறைந்து வழியக் கூட்டம் கூடும். நாவலை மேடையில் வாசிக்க, விவாதிக்க எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் ஓவியர்கள், பத்திரிகையாளர்கள், ஃபாஷன் டிசைனர்கள், ஆர்ட் பிலிம் இயக்குனர், நடிகர்கள், பரீட்சார்த்த நாடக மேடைகளில் தூள் கிளப்பும் நாடக ஆசிரியர்கள், முப்பது வயதுக்குக் கீழான துருதுரு மாடல் கன்யகைகள் இப்படி கலந்து கட்டியான ஒரு கூட்டம். மேடை போட்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி, தொடர்ந்து நடு ராத்திரி தாண்டி கிட்டத்தட்ட அதிகாலை வரை விருந்து, வந்த ஒவ்வொருத்தரும் மற்றவர் ஒருவர் விடாமல் கையில் கிண்ணத்தோடு கலை, இலக்கிய, சினிமா வம்பு பேச என்று அமர்க்களப்படும். ஆங்கிலப் பத்திரிகைகள் முதல் பக்கச் செய்தியாகப் போடாவிட்டாலும் ஆறாம் பக்கத்தில் ‘காலமனார்’ வரி விளம்பரங்களுக்கு மேலேயாவது நாவலாசிரியர் படம் போட்டு செய்தி பிரசுரிக்கும். கல்யாணத்துக்கும் சாவுக்கும் நடுவே கதாநாயகனாகவோ நாயகியாகவோ ஷார்ட் ஸ்பான் அவதாரம் எடுக்க நாவலாசிரியருக்கு ஒரு சந்தர்ப்பம் இதெல்லாம். அதுவும் மும்பையிலும் லண்டனிலும் எடின்பரோவிலும் இங்கிலீஷ் நாவலிஸ்டுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கவனித்து நானும் அட்வான்சாகவே அடுத்த பிறவி அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். பகவான் கொஞ்சம் போல் கருணை செய்தார் சமீபத்தில்.

 

அரசூர் வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான கோஸ்ட்ஸ் ஆப் அரசூர் மூலம் இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கிராஸ்வேர்ட் பரிசுக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இந்த இங்கிலீஷ் பிசாசு. கிராஸ்வேர்ட் புத்தகக் கடையின் லோக்கல் கிளையில் புத்தகத்தை ரசிகர்களுக்கு வாசித்துக் காட்ட வீட்டிலிருந்து காரில் கூப்பிட்டுக் கொண்டு போனார்கள். டிராபிக் நெரிசலுக்கு இடையே அரைமணி நீண்ட கார் யாத்திரை. பொடிநடையாக நான் ஐந்து நிமிடத்தில் போய்ச் சேர்ந்திருப்பேன். எங்கள் தெருக் கோடியில் தான் அந்தக் கடை இருக்கிறது. ஆனாலும் ஆங்கில நாவல் எழுதியவர் நடந்து போகக் கூடாது.

 

தமிழ் எழுத்தாளனை போடா முடியாண்டி என்று அங்கீகரிக்கும் சென்னை இங்கிலீஷ் பத்திரிகைகள் கூட ‘மூஞ்சியை மறைக்காம புத்தகத்தை தூக்கிப் பிடிச்சுட்டு போஸ் கொடுங்க’ என்று கோரிக்கை விடுத்து பிளாஷ் அடித்து, நேரிலோ தொலைபேசியிலோ பேட்டி கண்டு செய்தி வெளியிட்டன. என் படத்தைப் போட்டு இதுதான் பிசாசு என்று டெக்கான் கிரானிகிள் எழுதியிருந்தது. படத்தைப் போட்டாலே போதாதா? விளக்க உரை இல்லாமல் புரியாதா என்ன?

 

அடுத்த வாரம் மும்பைக்கு கிராஸ்வேர்ட் செலவில் விமானப் பயணம். நாள் முழுக்க ஒரு டாக்சி கூப்பிட்ட குரலுக்கு. நான் எத்தனையோ தடவை நடை போட்டிருக்கிற மெரின் டிரைவ் பகுதியில் கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் அலுவலகத்துக்கு எதிரே பெரிய ஓட்டலில் சர்வ வசதியோடும் கூடிய அறை. உங்க வீடு மாதிரி ப்ரீயா இருங்க. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. இனிமையாகச் சொல்லி பூச்செண்டு கொடுக்க அழகான பெண்கள். சொன்னேனே, இங்கிலீஷ் நாவலிஸ்ட். மொழிபெயர்ப்பு ஆனாலும் கவுரதைக்கு குறைச்சல் ஏது?

 

சாயந்திரம் ஒர்லி நேரு கோளரங்கத்தில் பரிசளிப்பு விழா. ஆஸ்கார் பரிசு ஸ்டைலில் கடைசி நிமிடத்தில் மேடையில் அறிவிக்கப்படும் பரிசு இது. மூன்று லட்சம் ரூபாய் அவார்ட். நாவலாசிரியருக்கு ஒன்றரை லட்சமும், மொழிபெயர்ப்பாளருக்கு ஒன்றரை லட்சமும். ஆங்கிலத்திலேயே எழுதிப் பரிசு வாங்கினால் மூணு லட்சம் மொத்த பிரைஸ். எழுதி இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் எதற்கு டையைக் கட்டிக் கொண்டு கம்ப்யூட்டர் கம்பெனி சேவகம்?

 

சர்வதேச அளவில் ஆங்கில இலக்கியத்துக்கான புக்கர் பரிசு போல் இந்திய புக்கர் பரிசு இந்த கிராஸ்வோர்ட் என்று லோக்கல் பத்திரிகை, இண்டர்நெட் வலைமனை, வலைப்பூவில் எல்லாம் ஏகப்பட்ட ஹைப். ஆல்டர்னேட் அமிதாப் பச்சனாக பாதி ஆங்கிலேயரான நடிகர் டாம் ஆல்டர் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

 

அ-கதைக்கான ஷார்ட் லிஸ்ட் வாசிக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் நண்பராகி இருந்த ஸ்காட்லாந்துக்காரரும் டெல்லி வாசியுமான வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய ‘லாஸ்ட் மொகல்’ அதில் உண்டு. எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த டால்ரிம்பிளிடம் ‘உமக்குத் தான்யா ப்ரைஸ்’ என்று சொல்லி வாய் மூடவில்லை. அவருக்கே இந்த ஆண்டு நான் பிக்ஷன் அவார்ட் அறிவிப்பு. அவர் வாங்கினால் என்ன, நான் வாங்கினால் என்ன? எல்லாம் சந்தோஷமானதுதான்.

 

மொழிபெயர்ப்பு நூல்களில் முகுந்தன் எழுதிய ‘கோவர்த்தனனின் யாத்திரைகள்’ மலையாள நாவல் பரிசு பெற்றது. கீதா கிருஷ்ணன்குட்டி மொழிபெயர்த்திருந்த நாவல் இது. இறுதிச் சுற்றுக்கு வந்த இன்னொரு மலையாள நாவலான எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுகட்டு’ கூட அவர் மொழிபெயர்ப்பு தான். அரசூர் வம்சம் மொழிபெயர்ப்பாளர் ஜானகி வெங்கட்ராமன் போல் எனக்கு மூத்த சகோதரி உருவத்தில் கீதாவும் இருந்தார். இரண்டு பேரும் கொஞ்சமாகப் பேசுகிறவர்கள். அரசூர் வம்சம் நாவலின் அசங்கியம், வசவு எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து மொழிபெயர்த்த ஜானகியோடு ஒப்பிடும்போது கீதாவுக்கு கஷ்டம் கம்மி. முகுந்தனும் எம்.டியும் இரண்டு கனவான்கள். முகுந்தன் பழகவும் அப்படியே.

 

ராத்திரி ஒன்பதரைக்கு விழா முடிந்து மொழிபெயர்ப்பாளர்கள் புறப்பட்டுப் போனபிறகு கிண்ணத்தை ஏந்தினேன். கோஸ்ட் நாவலின் பதிப்பாசிரியர் ராமநாராயணன் (ராம்நாராயண்) விக்ரம் சேத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார். என்ன மாதிரியான நாவல் எழுதியிருக்கீர் என்று ஆர்வமாகக் கேட்டார் விக்ரம். யாரோ வந்து ஓட்காவை திரும்ப கிண்ணங்களில் நிறைத்துப் போனார்கள். நமிதா கோகலே, நமிதா தேவிதயாள், மஞ்சுளா பத்மனாபன், சபீரா மெர்ச்சண்ட், கிட்டு கித்வானி என்று பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு தமிழ் முகம். திலீப் குமார்.

 

கோவிந்த் நிஹலானியின் ‘பார்ட்டி’ படம் பார்க்கிறபோதே திரைக்குள் நானும் நுழைந்தது போன்ற சூழ்நிலை. ‘கோஸ்ட் அட்டை வித்தியாசமா இருக்கு. ப்ளர்ப் படிச்சேன். ரொம்பவே சுவாரசியம்’. பின்னால் குரல். கோவிந்த் நிஹலானியே தான். மொபைலில் மணி பார்த்தேன். சரியாக ராத்திரி பனிரெண்டு மணி. இன்னும் கொஞ்சம் ஓட்கா ஊற்றுங்கப்பா.  நிஹலானியோடு பேச ஆரம்பித்தேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2024 19:32

October 27, 2024

குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே –

 

உடம்பிலே ரோகம் இருக்கும்போது கர்ப்பம் தாங்கினா உசிருக்கே அபாயமாகலாம்னு அந்த டாக்டர் தான் சொன்னாராம்.  கேட்டியா?

 

கேட்டேன்.

 

மனசே இல்லாம, கர்ப்பம் கலைக்கலாம்னாராம்.

 

ஆஹா. அவருக்கு, ரோகம் நிவர்த்தி பண்ண வந்த டாக்டருக்கு எதுக்கு மனசும் மத்தொண்ணும்?

 

அவரைத்தான் கேக்கணும். அவர் கலைச்சு விட தயார் தானாம். ஆனா அதுக்கு பொறுப்பான நபர் கையெழுத்து போடணுமாம்.  நான் போய்க் கையெழுத்துப் போட்டேன்.

 

இதுலே எவ்வளவு நம்பலாம்?

 

நான் குரலை உயர்த்தி அழுதுண்டே கேட்டேன். அடுத்த வீடு எதிர் வீட்டுலே எல்லாம் கேட்டிருக்கலாம். கேட்கட்டுமேன்னு ஒரு வீம்பு.  அவர் பதில் சொல்லலே. திரும்பக்  கேட்டேன் –

 

எவ்வளவு நம்பணும்?

 

அது நீ என் மேலே வச்சிருக்கற நம்பிக்கையைப் பொறுத்தது.

 

அவர் கெந்திக் கெந்தி நடந்து சுவரைப் பிடிச்சபடி என்னைப் பார்த்தார்.

 

நம்பித் தான் ஆகணும். கப்பல்லே வெள்ளைக்காரிச்சிகளோட கும்மாளம் அடிச்ச காலத்தை எல்லாம் விட்டு நெறைய நீங்கி வந்திருக்கார். நானும் சித்தாடைப் பொண்ணு இல்லே. வீட்டைப் பொறுப்பா நிர்வகிக்கறவ.  என் பிள்ளைக்கு இப்படித் திரும்பினா கல்யாணம், காட்சி, எங்களுக்குப் பேரன் பேத்தின்னு வந்துடும். என்னத்துக்கு அதுக்காக காத்துண்டிருக்கணும்? இப்படி ஒரு புருஷரோடு இன்னும் குடித்தனம் நடத்தணுமா? ஆத்துலே குளத்திலே விழுந்து ஒரேயடியாப் போயிடலாமா? எதுக்குங்கறேன். என்ன மாதிரி நினைப்பெல்லாம் வருது கோபத்திலே இருக்கற போது.

 

அவர் என்னைப்  பார்த்துச் சிரித்தார். ஞான் ஒண்ணு மனசு பொட்டி கரஞ்சு. கரைஞ்சு  போனேன்.

 

அவரை ஆரத் தழுவி  மடியிலே போட்டுண்டு சொன்னேன் –

 

புகையிலை கடைக்காரா, வேண்டாம்டா, கண்ணு இல்லியோடா நீ. இன்னமே இந்த மாதிரி காரியம் எல்லாம் வேண்டாம். தென்னை மரத்துக்குக் கீழே உட்கார்ந்து பால் குடிக்கற காரியம் இது.  சொன்னா கேள்டா. சமத்து இல்லே?

 

அவர் என் கிட்டே  சமாதானமா சொன்னார் –

 

சரி , சக்கரவர்த்தினி.

 

அவருடைய காதில் கேட்டேன் –

 

அமிர்தவல்லியை நீங்க வச்சுண்டில்லியே

 

இல்லே

 

அவ சந்தர்ப்பம் கொடுத்திருந்தா அவளோட படுத்துண்டு இப்படி எல்லாம் செஞ்சிருப்பேள் தானே?

 

நான் என்ன வைத்தியனா? ரோகிக்கு சிகிச்சை தரணும். கூட சுகிக்கக் கூடாது.

 

அமிர்தவல்லி இருக்கட்டும்.. உங்க சிநேகிதி மோகனவல்லி, அதான் கொட்டகுடித் தாசி.  கூடப் படுக்க வான்னு அவ கூப்பிட்டிருந்தா?

 

அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.

 

நிச்சயம் போயிருப்பேன்.

 

நான் ஒண்ணும் பேசாமல் தலையை முடிஞ்ச படி வெளியில் வந்தேன். தீத்தி இருந்த குங்குமத்துக்கு மேலே கோவில் பிரசாதமா வந்த குங்குமத்தை வச்சேன். மதுரை மீனாட்சி மஞ்சள் குங்குமம். இதமா வாசனை அடிக்கற அம்மன் குங்குமம் அது.

 

பத்து நாளா மனசுலே வச்சுப் புழுங்கி, சரியா பேசாம, சாப்பிடாம இருந்த விரதம் கலைஞ்சு இதோ எழுதிண்டிருக்கேன் எல்லாத்தையும்.

 

வாழ்ந்து போங்கோ. வாழ்ந்து போங்கோ எல்லோரும்.  வய்யலே. திட்டலே. மனசுலே  பிரியமும் இல்லாம, விரோதமும் இல்லாம, குரோதமும் இல்லாம, குரூரம் இல்லாம, குசும்பும் இல்லாம சொல்றேன். வாழ்ந்து போங்கோ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2024 03:05

October 24, 2024

வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து

 

 

 

அவர் தோளில் கை வைத்துப் பிடிச்சு நான் கேட்டேன் –

 

நீங்க அமிர்தவல்லியை வச்சிண்டிருக்கேளா?

 

இல்லை.

 

அப்போ நாலு நாள் முன்னாடி கோவில்லே உற்சவக் கொடி ஏத்தின அப்புறம், ஊர் வெளியிலே இருந்து ரெட்டைக் காளை வண்டியிலே அவளோட போனது யாரு?

 

நான் தான்.

 

நான் அழுதபடியே அவர் முகத்தில் அறைந்தேன். அவர் ஒண்ணும் செய்யலே.

 

அவளை எங்கே கூட்டிப் போனேள்?

 

மதுரைக்கு.

 

சிருங்காரமா உல்லாசமா இருந்துட்டு வந்தேளா?

 

இல்லே, ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போனேன்

 

ஏன், பரமக்குடி வைத்தியர் சிஷுருஷை போறாதா? நீங்க வேறேயா?

 

ஆமா. நான் வேறே.

 

என்னெல்லாம் தந்தாப்பலே?

 

வைத்தியர் தராத மத்தொண்ணு

 

அவர் தீவிரமா முயற்சி செஞ்சிண்டிருக்கார் அமிர்தவல்லியை குணமாக்க. தெருவோட தெரியும். ஊரோட தெரியும். நான் சொன்னேன்.

 

அவர் முயற்சியிலே தான் அவ முழுகாம இருக்கா

 

நம்பணுமாக்கும் – நான் கேலியாச் சிரிச்சபடி கேட்டேன்.

 

என் புகையிலைக் கடைக்காரர் கறாரான தொனியோட கேட்டார் என்னை –

 

எதை நம்பலே? அவ முழுகாம இருக்கறதையா,  வைத்தியர் அவளுக்கு அந்தக் கதிகேடு வரும்படிக்கு பண்ணிணதையா?

 

ரெண்டையும் தான்.  அதை விட முக்கியம் இதிலே நீங்க புதுசா எங்கே வந்தது? இல்லே ரெண்டு பேரும் ரகசியமா ரமிச்சு இப்போ தான் வெளியிலே வர்றதா எல்லாம்?

 

நான் அவர் முதுகில் அடித்தேன். ஒண்ணுமே சொல்லலே அவர். ஒண்ணும்.

 

நீ நம்பாட்ட போ. என் மனசு சுத்தம். அவளுக்கு கர்ப்பம் கலைக்க டாக்டர் துரை மாட்டேன்னுட்டார்னு.

 

அவர் சொல்ல வந்ததை முடிக்க விடாமல் நான் கேட்டேன் –

 

கடையிலே படியேறி வெத்தலை வாங்க வந்த ஸ்திரி கடைக்காரர் கிட்டே தன்  கர்ப்பத்தைப் பத்தி பேசறது என்ன மாதிரி நெருக்கம்?

 

அவளுக்கு என் மேல் ஒரு நம்பிக்கை.

 

என்ன, ரகசியமா தப்பு பண்ணுவேள். எசகு பிசகாப் போனாலும் சரியாக்கி விட்டுடுவேள் அதுதானே?

 

வாய்க்கு வந்ததை பேசாதே. சொல்றதை முழுக்கக் கேளு.

 

கேட்கத்தானே இங்கே இருக்கேன். சொல்லுங்கோ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2024 21:55

October 23, 2024

அரசூர் சங்கரனை புகையுலை கடையில் சந்திக்க வந்தவள்

 

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நூல். அதிலிருந்து ஒரு சிறு பகுதி

ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன். இந்தப் பொண்ணு சுகுணவல்லி என் மடியிலே படுத்து உறங்கியே போய்ட்டா. பாவம் சின்னப் பொண்ணு. அவ அம்மா மேலே விரோதம்னா அவ என்ன பண்ணுவா?

 

கதை முடிஞ்சு அவளை வீட்டுலே கொண்டு விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா,  என்னத்தைச் சொல்ல, வாசல் முறியிலே இவர்  குரிச்சி போட்டு, குரிச்சி இல்லே சாருகசேர, என்னாக்க அதென்ன சாய்வு நாற்காலி அதுலே உக்காந்துண்டிருக்கார். அந்த அமிர்தவல்லி அவர் காலைப் பிடிச்சு விட்டுண்டிருக்கா.

 

அவசரமா உள்ளே ஓடிப் போய்ப் பார்த்தா, கண்ணு குறக்களின்னா காட்டினது. அது கடை உத்தியோகஸ்தன் ஐயனாராக்கும். அவன் சொல்றான் –

 

சாமி கடையிலே இருந்து இறங்கற போது கால் சுளுக்கிடுத்து. பரமக்குடி வைத்தியர் இப்போத்தான் தைலம் காய்ச்சிக் கொடுத்துட்டுப்  போனார் அம்மா.

 

நான் அழுகறதா சிரிக்கறதான்னு தெரியாம நின்னேன். அவனைப் போகச் சொல்லிட்டு நானே தைலத்தைப் பொரட்டி விட்டேன்.

 

என்னமோ தோணிணது. பத்து நாளா, பகலா, ராத்திரியா மனசிலே வச்சிருந்தது எல்லாம் கொட்டிட்டேன்.  பட்டுனு விஷயத்துக்கு வந்துட்டேன்.

 

அமிர்தவல்லி கடைக்கு வந்து போனான்னு எல்லாரும் சொல்றாளே.

 

அவர் காலை மாத்தி வச்சு தைலத்தைப் பூசறதுக்காகக் காண்பிச்சபடி தரையைப் பார்த்தபடி பதில் சொன்னார் –

 

வெத்திலை வாங்க, சோடா குடிக்க வந்தா.

 

கொடுத்தேளாக்கும்?

 

காசு வாங்கிண்டு கொடுத்தேன்.

 

அப்புறம்?

 

நானும் கடை எடுத்து வச்சுட்டு கிளம்பி அவளை வில்வண்டியிலே அவ ஜாகையிலே விட்டுட்டு வந்தேன்.

 

ஓ அவ அவ்வளவு நெருக்கமான சிநேகிதமா ஐயர்வாளுக்கு?.

 

அவர் இல்லை என்றார்.

 

பசு இல்லேன்னா, கன்னுக்குட்டி. சுகுணவல்லி நெருக்கமோ?

 

சே, அது கொழந்தை. நமக்கு பொண்ணு இருந்தா அப்படித்தான் இருப்பா என்றார்.

 

ஏதோ இதிலேயாவது கொஞ்சம் போல என்னை மாதிரி நினைக்கறாரேன்னு நினைச்சபடி அடுத்துக் கேட்டேன் –

 

சுகுணவல்லியை நான் பெத்திருந்தேன்னா அப்படி இருப்பாளா?

 

நீ பெத்திருந்தா உன்னை மாதிரி இருப்பா.

 

அப்போ அமிர்தவல்லி உங்களுக்கு பெத்திருந்தா?

 

இப்போ மாதிரி சுந்தரிப் பெண்குட்டியா இருப்பா. ஆனா,  என் பொண்ணா இருந்தா படிக்காம இருக்க மாட்டா.

 

அவ அழகும் உங்க வாசிப்பும் சேர்ந்திருப்பாளாக்கும் அந்தப் பொண்ணு.

 

இதுக்கு என்ன பதில் சொல்றது?

 

அவர் சொல்லியபடிக்கே நாற்காலிச் சட்டத்தைப் பிடிச்சபடி எழுந்து நின்னார். தரையெல்லாம் பரமக்குடி வைத்தியர் கொடுத்து புரட்டச் சொன்ன தைலம். வீடு முழுக்க கொழும்பு தேங்காயெண்ணெய் வாசனை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2024 00:18

October 21, 2024

நீர் நன்னாயிரும் உம்ம குடும்பம் உறவெல்லாம் நன்னாயிருக்கட்டும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் இருந்து ஒரு சிறு பகுதி

அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.

 

இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே.  எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர் மாதிரி தங்கமான மனுஷன். ஆனா, பிஷாரடி வைத்தியர் விக்ஞானம், ரசாயனம்னு கோணக் கட்சி பேசிண்டு கிடக்கற மாதிரி இல்லையாக்கும் இவர். பெரிய குடுமியும், பவ்யமும், சதா ஏதோ நாம ஜபமுமா அலைஞ்சுண்டிருப்பார். சுத்துலே ஏழெட்டு பட்டி தொட்டி கிராமத்திலேயும் யாருக்காவது ஏதாவதுன்னா,  சர்க்கார் ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸரைப் பாக்கப் போறது இந்தப் பக்கம் ரொம்பக் கம்மி. புதன்கிழமை சந்தை கூடுமே, அன்னிக்கு பரமக்குடி வைத்தியர் வீட்டு வாசல்லேயும் ஏகத்துக்கு காத்துண்டிருப்பா கையிலே சீசா வைச்சுண்டு.

 

அமிர்தவல்லியம்மாளுக்கு அவர் தான் சிஷ்ருஷை பண்ணறார். சொஸ்தமாயிண்டிருக்கோன்னு தெரியலேன்னேன் இவர் கிட்டே ஒரு விசை.  இவரோட பாணியிலே சோடா உடைச்ச மாதிரி சிரிக்கறார். இதுலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு.

 

நேத்திக்கு திங்கள் தானே, இல்லே செவ்வாயா, ஞாபகம் இல்லியே. நேத்திக்கு கோவில்லே ஓதுவார் பித்தா பிராந்தான்னு ஏதோ பாடினதுலே ஆரம்பிச்சு அமிர்தவல்லி ரோக விஷயத்துக்கு வந்தாச்சு. இல்லாட்டாலும் அம்மாவும் பொண்ணுமா அவா வந்தப்புறம் எல்லாப் பேச்சும், ஆண் பொண் அடங்கலா இவா பத்தித்தான் போய்ண்டிருக்கு. சொல்லிட்டேன் இல்லே இதை?

 

சுகுணவல்லி கிட்டே சொன்னேன் – போதும்டீ சிரிப்பு. கல்யாணத்துக்கு அப்புறம் சிரிக்க மிச்சம் வச்சுக்கோடீயம்மா. ஓதுவார் வயசான மனுஷர். களியாக்காதேடீ

 

நந்தவனத்திலே சுத்தறபோது இதைச் சொன்னேன். கேட்டதும் கன்னம் குழி விழ திரும்பவும் ஒரு புஞ்சிரி. அவள் என் கையை இறுகப் பிடிச்சுண்டு சொல்றா –

 

ஐயர் வீட்டம்மா, கல்யாணம் எல்லாம் எனக்கு வரப் போறதா என்ன, அதான் இப்பவே எல்லாச் சிரிப்பையும் சிரிச்சு முடிச்சுடறேனே.

 

அம்மா எப்படியோ, இந்தக் குட்டி மனசிலேயும் நடப்பிலேயும் அவளோட சித்தி, ஒண்ணு விட்ட சித்திதான், அந்த கொட்டகுடித் தாசியைக் கொண்டிருக்கா. மோகனவல்லி சிரிப்பும் இப்படி கல்மிஷம் இல்லாமத் தான் இருக்கும்.

 

ஏண்டி பொண்ணே, எதுக்கு அவளோட ஈஷிக்கறே. கோவிலுக்குப் போயிட்டு சமையல்கட்டுலே எல்லாம் போகணும் அவளானா. நீ மேலே பட்டா தீட்டாகி, அவ ராத்திரியிலே கிணத்துலே எறைச்சு விட்டுண்டு குளிக்கணுமாக்கும்,  பாவம்.

 

இப்படி ஜோசியர் மாமி அந்தச் சின்னப் பொண்ணு கிட்டே சொல்றா. நான் என்ன தெரியுமோ பண்ணினேன். அந்தச் செறிய குட்டியை சேர்த்துக் கட்டிண்டேன். கோவில் நந்தவனம்னா என்ன. பிரியத்தைக் காட்டக் கூடாதா.  அவ தலையிலே இதமா வருடி, வாடீன்னு கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போனேன். எங்கேயா? அதான் ஓதுவார் கதா பிரசங்கம் பண்றாரே, சப்பரம் வச்ச கொட்டகைக்கு வெளியே காத்தோட்டமான இடத்துலே, அங்கே தான்.

 

யாரோ சுந்தரமூர்த்தி நாயனாராம். அவர் தான் பித்தா, வயசா, பிராந்தான்னு வாயிலே வந்த படிக்கு தேவாரம் எழுதினாராம். அவ்வளவு பிரேமமாம் ஈஸ்வரன் மேலே. சக மனுஷாளை விட பரமசிவனே எல்லாம்னு ஆனவராம். ரெண்டு பொண்டாட்டி வேறே. ரெண்டாவது வேளி கழிக்க ஈஸ்வரனே தரகர் உத்தியோகம் பார்த்தாராம். இதெல்லாம் கேட்க ரசமாத் தான் இருக்கு. அந்த மனுஷர் ரெண்டாம் தாரத்தோட வீட்டிலேயே தங்கிட்டாராம். அந்தப் பொண்ணு இவரை அரைக்கட்டுலே சேர்த்துப் பிடிச்சுண்டவ போல இருக்கு. நீர் இந்த ஊர் எல்லையை விட்டுப் போனீர் பாத்துக்கும்னு மிரட்டி வச்சிருந்தா. என்ன திமிர். இந்த மனுஷன் சொந்த ஊர்லே தேர் திருவிழான்னு கிளம்பிட்டாராம். அவரோட கண்ணு ரெண்டும் தெரியாமப் போனது அந்தப் பொம்மனாட்டி கைவேலயாக்கம். மனுஷன் திருவாரூர்லே போய் ஓய் கண்ணு குடுமய்யான்னு தேவாரம் பாடினாராம். ஈஸ்வரன் ஒத்தைக் கண்ணைக் கொடுத்திட்டு, இன்னொரு கண்ணுக்கு நீ இன்னொரு ஸ்தலத்துலே போய் இன்னொரு தேவாரம் பாடணும்னாராம். இவருக்குக் கோவம் வந்ததே பார்க்கணும். ஓய் ஈஸ்வரன், நீர் மூணு கண்ணோட, உம் பிள்ளை சுப்பிரமணி ஆறு ரெண்டு பனிரெண்டு கண்ணோட, உம்ம ரிஷபம் அதுக்கு ரெண்டு கண், ரெண்டு வீட்டுக்காரிக்கு மொத்தமா நாலு கண் இப்படி எல்லாம் சவுக்கியமா ஜீவியுங்கோ, நான் குன்றத்துலே ஏறி, குழியிலே விழுந்து கண்ணு தெரியாம அவதிப்பட்டுட்டுப் போறேன். நன்னா இருங்கோ. நீங்க நன்னா இருங்கோ. நீங்க எல்லோரும் ரொம்பவே நன்னா இருங்கோன்னாராம் பார்க்கலாம். என்ன தைரியம். இவர் ரெண்டு பொண்டாட்டி வச்சுண்டு கூத்தடிப்பாராம். கண்ணு போனா, மாற்றுக் கண்ணை ஈஸ்வரன் உடனடியா கொண்டு வந்து ஒப்படைச்சுடணுமாம். போக்கடாத்தனம். அவர் ஏழெட்டு பாட்டு வாழ்ந்து போ வாழ்ந்து போன்னு பாடினாராம். இல்லே அந்த  தேவாரம் எல்லாம் வாழ்ந்து போவீர்ன்னோ என்னமோ முடியுமாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2024 05:29

October 19, 2024

சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் – சிறு பகுதி

———————————————————————————————————————————————

அக்கா, தங்கை ஜோடியா பேரழகா, அதி சுந்தர ரூபவதிகளா இருக்கறதை அங்கே எங்க குட்டநாட்டுலே நிறையக் கண்டிருக்கேன்.  அதுலே சிலது, அம்மா இன்னும் அழகாயிண்டே போவா. பொண்ணுக்கு  பொது பொதுன்னு அம்மாக் களை அத்தைக் களை வந்துடும் சீக்கிரமே. உடம்பும் வண்ணம் வச்சுடும்.  இங்கே சௌந்தர்யம் வர்த்திக்கறதே தவிர இறங்குமுகமே இல்லை. இத்தனைக்கும் அமிர்தவல்லி சீக்குக்காரி.

 

அமிர்தவல்லிக்கு மாசாந்திர தூரம் வந்தா லேசுலே நிக்காத நோக்காடாம் பாவம். மூணு நாள் கஷ்டமா, ஸ்திரி ஜன்மத்துக்கு விதிச்ச ஏதோ தண்டனையா பல்லைக் கடிச்சுண்டு பொறுத்து, குளிச்சு, தூரத் துணி உலர்த்தி மடிச்சு என்னமோ நாமளும் தான் பண்ணியாறது.

 

மூணு நாள் ஓரமா உக்காரும் போதே ஏதோ மத்தவாளுக்கு பாரமா, அடுப்புக் காரியம் பார்க்காம, சுத்துவேலை செய்யாம, குடும்பத்தை பராமரிக்காம, சும்மா கொல்லையிலே நேரம் கெட்ட நேரத்துலே வேப்பமர நிழல்லே தூங்கறேனேன்னு மனசு மாஞ்சு போயிடும்.

 

அவர் ராமலட்சுமி பாட்டியை கொட்டு ரசமும் கீரை மசியலும் போதும்னு பண்ணச் சொல்லி, கீரை மசியல்லே கிழவியோட தலைமுடியோட உப்பு ஜாஸ்தியா, உரப்பு மட்டா, புளி கரையாம இறுகி ஏதோ சாப்பிட்டு ஒப்பேத்தற கஷ்டம் வேறே. போறும்டாப்பா.

 

அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.

 

இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே.  எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர் மாதிரி தங்கமான மனுஷன். ஆனா, பிஷாரடி வைத்தியர் விக்ஞானம், ரசாயனம்னு கோணக் கட்சி பேசிண்டு கிடக்கற மாதிரி இல்லையாக்கும் இவர். பெரிய குடுமியும், பவ்யமும், சதா ஏதோ நாம ஜபமுமா அலைஞ்சுண்டிருப்பார். சுத்துலே ஏழெட்டு பட்டி தொட்டி கிராமத்திலேயும் யாருக்காவது ஏதாவதுன்னா,  சர்க்கார் ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸரைப் பாக்கப் போறது இந்தப் பக்கம் ரொம்பக் கம்மி. புதன்கிழமை சந்தை கூடுமே, அன்னிக்கு பரமக்குடி வைத்தியர் வீட்டு வாசல்லேயும் ஏகத்துக்கு காத்துண்டிருப்பா கையிலே சீசா வைச்சுண்டு.

 

அமிர்தவல்லியம்மாளுக்கு அவர் தான் சிஷ்ருஷை பண்ணறார். சொஸ்தமாயிண்டிருக்கோன்னு தெரியலேன்னேன் இவர் கிட்டே ஒரு விசை.  இவரோட பாணியிலே சோடா உடைச்ச மாதிரி சிரிக்கறார். இதுலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2024 18:54

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.