மரக்கொன்னைத் தைலமும் கல்காஜி மாமாவும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது – சிறு பகுதி

நாக்பூர் சித்தப்பா வந்திருக்கார். அப்பா கூட்டிண்டு வந்தார். அவரோட பக்கத்து, எதிர் குடித்தன மாமாஸ் வேறே. எல்லோரும் ஹால்லே குழந்தையோட விளையாடிண்டிருக்கா.

 

நல்லதாப் போச்சு. இதை எல்லாம் உத்தேசிச்சுத் தான் சொன்னேன்.

 

என்னன்னு?

 

நம்ம விளையாட்டை இந்த நிமிஷமே, விட்ட இடத்துலே தொடரலாம்னேன்.

 

ஆமாமா, அதுக்குத் தானே எழுப்பியானது.

 

அவன் முகத்தை இரு கையாலும் ஏந்தி மாரோடு அழுத்தி, உதட்டில் வெறியோடு முத்தமிட்டு விலகினாள் வசந்தி.

 

முகத்தை அலம்பிண்டு, பல் தேய்ச்சுட்டு ஹால்லே உக்கார்ந்து பெரிய மனுஷ தோரணையா வார்த்தை சொல்லிண்டு இருங்கோ. காப்பி சேர்க்கறேன்.

 

அவள் துண்டைத் தோளுக்குக் குறுக்கே போர்த்திக் கொண்டு உத்தரப் பிரதேச அரசியல் தலைவர் மாதிரி எவ்விக் குதித்து நடந்து போனாள்.

 

சங்கரன் ஹாலுக்கு வந்தபோது மரக்கொன்னைத் தைலம் பற்றிப் பரபரப்பான கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். அவனுடைய மாமனாரும், அவர்தம் இளவலும், கூடவே இன்னும் இரண்டு கல்காஜி மாமாக்களும் அந்தத் தைலத்தின் மகிமையை விதந்தோதிக் கொண்டிருந்தார்கள். கேரளத்தில் அங்கமாலிக்கும் அடிமாலிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் குக்கிராம ஆயுர்வேத வைத்தியன் ஒருத்தன் உண்டாக்கியது அது.

 

ஊர்த் திருவிழாவில் குழந்தைகளைப் பயப்படுத்தும் தெய்யம் ஒப்பனை கட்டி ஆடிய நேரம் போக மூலிகை வைத்தியம் பார்க்கிற வைத்தியன், சிசுக்களுக்கு ஜலதோஷமும் மூக்கடைப்பும் உடன் நிவர்த்தியாக மூலிகை எண்ணெய் காய்ச்சி உருவாக்கியது அந்தத் தைலம். அது சர்வ ரோக நிவாரணியாக மாற அதிகம் நாட்கள் செல்லவில்லை.

 

எப்படியோ யார் மூலமோ சங்கரனின் மாமனார் சுந்தர சாஸ்திரிகள் தில்லிக் கடையில் அதை விற்க வரவழைத்து, கூடவே தைலத்தின் புகழ் பாட நாலைந்து அங்கமாலி, அடிமாலி ஆட்களையும், பத்து நாள் செண்டை மேளக் கொட்டும் உற்சவமுமாக அமர்க்களப் பட்டுக் கொண்டிருக்கும் தெற்கத்திய கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார்.

 

பிரதி தினம் கடை பெஞ்சில் உட்கார்ந்து அசல் குட்டநாடன் மலையாளத்தில் மரக்கொன்னை மகாத்மியம் பாடி, உள்ளே காப்பியும் பலகாரமும் கழித்தே கோவிலில் கொட்டி முழக்கப் போனார்கள் அவர்கள்.

 

Nov 8 2024

 

கிட்டத்தட்ட அழுத்தமான நூறு வருஷ தீர்க்காயுசையும், லோகாயதமான ஜீவிதத்தில் சம்திருப்தி – அப்படின்னா என்ன என்று வாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கேட்டால் நீடித்த பெண் சுகம் என்று பதில் வரும்; தேக காந்தி – மின்னும் உடம்பு, ஆரோக்கியமான பசி, வாயு சேராத வயிறு என்று ஆயிரத்தெட்டு விஷயம் இந்த ஓயிலைப் புரட்டினால் நடந்தேறும். அதற்கெல்லாம் பிரத்யட்ச சாட்சி நாங்களே என்று அவர்கள் மலையாளத் தாடிக்குள் வசீகரமாகச் சிரித்தபடி துண்டைப் போட்டுத் தாண்டிப் போவார்கள்.

 

என்ன கஷ்டமாக இருந்தாலும் கொழும்பில் இருந்து கொப்பரைத் தேங்காய் வரவழைத்து தைலம் உண்டாக்குவதால் அதற்கெனத் தனியான மணம் உண்டாக்கும் என்று மேளர்கள் சொன்னதை அதிசுந்தரமான வாசனை என்று பம்பாய் விளம்பரக் கம்பெனித் தமிழில்  மாமானார் மொழிபெயர்த்துக் கூடி இருந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சிலாகிப்பைப் பெற்றது சங்கரன் கண்ணில் படத் தவறவில்லை. போகட்டும், காப்பியும் மின்சார கணப்பில் கதகதப்புமாக அவர்களுடைய நாள் நல்ல படியாகப் போகட்டும்.

 

ஆனாலும் இந்தக் கூத்தை குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரமாகப் பார்த்து சங்கரனிடமும் அரங்கேற்ற கோஷ்டியாக அவர்கள் ஏன் கிளம்பி வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

தைலம் கை நிறைய எடுத்துத் தேய்த்து முழுகாமலேயே அவன் திடகாத்திரமாக இருக்கிறான். ஸ்திரி சம்பந்தம் தீர்க்கமாகக் கிடைத்திருக்கிறது. பசி எங்கே எங்கே என்று நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வந்து சேருகிறது. கொச்சு தெரிசாவோடு கிடந்த நேரத்தில் ரெண்டு பேருக்கும் வயிற்றுப் பசி உண்டாக, பிஸ்கட் பாக்கெட்டுகளை அவசரமாகப் பிரித்து கரமுர என்று மென்று தின்ன வைத்த பசி அது.

 

விட்டுத் தள்ளு. கொச்சு தெரிசாவும் மற்றதுமெல்லாம் தில்லிக் குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வெட்டி அரட்டைக்கு வந்த  கிழவர்களோடு காப்பி குடித்தபடி பேச எதற்கு?

 

சாஸ்திரிக்கு ஹெர்னியாவாமே? பாவம் நல்ல மனுஷர். ஆனாலும் காங்கிரஸ்லே மாட்டிண்டு முழிக்கறார். அடுத்த பிரதமரா, மகாபீடை  கடன்காரன் பொண்ணையே டெம்பரவரியா அப்பாயிண்ட் பண்ணிட்டு லண்டன்லே போய் ஹெர்னியாவுக்கும் ஹைட்ரோசிலுக்கும் ஆப்பரேஷன் செஞ்சுண்டு வர்றதா திட்டமாமே

 

மாமனாரின் தம்பி, தேசம் பற்றிய தன் ஆழ்ந்த கவலைகளை சர்க்காரின் மிக முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் சங்கரனுடன் பகிர்ந்து கொண்ட போது அவனுக்குச் சொல்லத் தோன்றியது இதுதான் –

 

ஓய் சாஸ்திரியை நானும் தூரத்தில் இருந்து தான் பார்க்கறேன்.  அவருக்கு ஹெர்னியாவும் ஹைட்ரோசிலும் இருக்கான்னு எப்படித் தெரியும்? இருந்தாலுந்தான், எனக்கு என்ன போச்சு, உமக்குத் தான் என்ன போச்சு? வந்ததுக்கு இன்னொரு டோஸ் வேணும்னா ஜீனி போடாம காப்பி குடிச்சுட்டு தைலத்தை சிரசிலேயும் விதைக் கொட்டையிலும் திடமாப் புரட்டிண்டு போய்ச் சேருமே.

 

ஏதும்   சொல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் அவர்கள் புறப்பட்டுப் போக, கதவை அடைத்து விட்டு உள்ளே போனான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2024 01:21
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.