இரா. முருகன்'s Blog, page 3

February 28, 2025

பூக்களின் திருவிழா

வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் அனைத்து கவிதைகளும்’ தொகுப்பிலிருந்து\
—————————————————————–
ராத்திரி முழுக்க ரதங்கள் ஊரும்
பூக்களைக் குவித்துச் சுமந்த வண்ணம்.
சாமியோ மானுட சாதியோ உலாவில்
வருவது இல்லை எல்லாம் மலர்களே.

பிள்ளைவயல் காளி சின்ன உருவம் மேல்
பூவெல்லாம் கவிந்து மணத்து இருக்க
வருடம் ஒருமுறை மலர்களின் திருவிழா.

பூக்களைப் பறித்து பூக்களை அடுக்கி
பூக்களைத் தேரேற்றி, பல்லக்கில் பூசுமந்து
பூக்களை சொரிந்து பூக்களை அகற்றி
பூக்களை மேலும் சொரிந்து குவித்து
இரவு நகர்ந்து புலரி வரைக்கும்
பூக்களை நேசித்து பூக்களை சுவாசித்து
வந்தவர் அனைவரும் பூக்களாய் மாறுவர்.

வாசனைப் பூக்கள்தாம் வேணும் என்று
பிடிவாதம் யாரும் பிடிப்பதில்லை
கனகாம்பரமும் வயலட் பூவும்
கூடை நிறையக் கொண்டுவந்து
தூவிச் செரிய மல்லியோடு சிரிக்கும்.
அரளியும் தும்பையும் பார்த்த நினைவு
காட்டுப் பூக்களும் ஒருமுறை வந்தன.

பூக்களின் ஊர்வலம் சும்மா நடக்காது
கடைத்தெரு வணிகர்கள் ஒன்று திரண்டு
தெருவை அடைத்து பந்தல் போட்டு
கச்சேரி நடத்துவர் இளைஞர் விருப்பமாய்.
சினிமா பாட்டு பாடும் கூட்டம்
மதுரையில் திருச்சியில் கூட்டி வந்து
பளபளவென்று கலர் விளக்கெரியப்
பாட வைப்பர் உச்ச ஸ்தாயியில்.

சினிமாவில் மட்டும் பார்த்திருக்கின்ற
கிதாரும் அகார்டியன் டிரம்ஸும் நேரே
வாசிப்பது கண்டும் கேட்டும்
சொர்க்கம் போவார் ஊர்முச்சூடும்.
திருச்சியில் இருந்து ஓர்முறை நாகாஸ்
என்ற பெயரில் மிமிக்ரி கலைஞர்
அண்ணா குரலில், காமராஜர்,
பெரியார், கலைஞர் போலெலாம்
பேசிக் காட்ட கரங்களின் கடல் ஒலி.
பேசிக் கொண்டிருந்தவர் திடுதிப்பென்று
சிங்கார வேலனே தேவா
பாட்டின் முதலில் மிதந்து வரும்
ஜானகி குரலில் ராகமிழுத்துப்
பாட மீண்டும் கரவொலி.
நகாசுவேலை இன்னுமுண்டு
மூக்கை ஒருபக்கம் முழுக்க மூடி
காருகுறிச்சி நாகஸ்வரமாய்
ஜானகி குரலைப் பின்தொடர்ந்தார்
கூடவே சாவித்திரி ஜெமினி குரலில்
பாடு சாந்தா பாடு
உச்சகட்ட மகிழ்ச்சியில் கூட்டம்
ஓஓஓவென்று ஆர்பரித்தது.

திறந்தவெளி அரங்கம் மேலும்
ராத்திரி என்பதால் வெப்பம் இல்லை
கச்சேரி கேட்க வந்தவர்க்கெல்லாம்
குழல் விளக்குகள் அலங்கரித்த
நிஜாம்லேடி புகையிலை வேனில்
காகித விசிறி இலவசமாக வழங்கினர்
விசிறி தோறும் தேவிகா புகைப்படம்
வியர்க்காமல் விசிறிய பின்னர்
காலை விடிந்து ஆயிரக் கணக்கில்
வீடுகள் போனார் தேவிகா களைத்து.

பூக்கள் சுமந்து முதல் ரதம்
பெரிய ஆஸ்பத்திரி பின்னால் புறப்படும்
சுத்தபத்தமாய் அலம்பித் துடைத்த
மண்கொண்டு போகும் டிப்பர் லாரியில்
அட்டை கொண்டு அரண்மனை போல்
கட்டி நிறுத்தி கோபுரம் செய்து
நடுவில் பீடம் பட்டுத் துணிசுற்றி
மேலே பத்திருபது மூங்கில்
தட்டுக்கள் நிறைய ரோஜா
மல்லிகை ஜவ்வந்தி பூக்கள்
பட்டில் போர்த்திய கோபுரக் கலசம்
பூபோல் எலக்ட்ரிக் வேலை கலரில் சுழலும்
வாசனை போதாதென்று செண்ட் தெளித்து
ரதம் அருகில் வரும்போது கிறக்கமானது.

கடைத்தெரு இருந்து ஒன்றில்லை மூன்று
ரதங்கள் கிளம்பும் எல்லாம் அட்டையும்
பலகையும் அறுத்துச் சமைத்த கோவில்;
மலையில் அருவி வீழும், விண்மீன்கள்
மின்னி ஒளிரும் விளக்குகள் சுழலும்
எலக்ட்ரீஷியன் தஸ்தகீர் வடித்தது.
மதுரையில் கொள்முதல் வண்டி நிறைத்த
குண்டு மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ
எடுத்துப்போக பாதை மணக்கும்.
ரதத்தைத் தொடர்ந்து கடைத்தெரு பிரமுகர்
கூடி நடப்பர் சச்சரவின்றி
நின்றுநின்று கரகம், நாயனம்
விடியுமுன் ஊர்வலம் கோவில் சேரும்.

வடக்கு ராஜ வீதி அன்பர்கள்
தெற்கு கோவில் தெருக்காரர்கள்
ஆனந்தபவான் பெத்தவாரு, மெஸ்காரர்கள்
பஜ்ஜி ராயர், மிட்டாய்க்கடை சொக்கநாதன்
மிலிட்டரி ஓட்டல் உடமையாளர்கள்
பரோட்டா கடை இக்பால் நண்பர்கள்
சாயாக்கடை சங்கத்தார்
அனைவரும் அங்கங்கே ரதங்கள் செய்து
பூக்களை எடுத்து கோவில் புகுவர்
கண்முழிப்பவர்க்கெல்லாம்
டீ ஸ்டால், மிட்டாய்க்கடை சப்ளையாய்
பால் டீ இலவசம் காராசேவும் உண்டு
இட்லி கட்டி எடுத்துக் கொண்டு
ஆனந்த பவான் காரர் வந்து போவார்.

குவிந்த பூக்களால் பிள்ளைவயலில்
சன்னிதி மறைய காளி நகைப்பாள்
அத்தனை பூவும் காலைநேரம்
பக்கம் ஓடும் ஓடையில் மிதந்து
மெல்ல நகர்ந்து ஓடி மறைய
அருகில் ஓடும் நூத்தியொண்ணு
மதராஸ் ராமேஸ்வரம் போட்மெயில் வண்டி.

பூக்கள் ஒருநாள் முழுக்க ஆளும்
விழாவின் விவரம் இன்னுமுண்டு
பூக்கள் குறைந்து போனதால் என்றும்
பூத்திருவிழா நின்றது இல்லை.
காட்டுப் பூக்கள் வயலட் பூக்கள்
அரளியும் இருவாட்சியும் மகிழமும்
வந்திடும் மறுபடி ரதங்கள்
பார்க்கணும் முடிந்தால், ஆயுசு சொற்பம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2025 21:15

February 26, 2025

வார பலனில் வாகன யோகம்

வெளிவர இருக்கும் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள் தொகுப்பில் இருந்து

ஊரிலிருந்து மதுரைக்குப் போகும் நேரம்
ஒற்றை மணி இன்னும் வேகம் போனாலோ
முக்கால் மணி தான் பிடிக்கும்.

அரைமணி நேரத்தில் ஒன்றென
மதுரை போகும் பஸ் வரும்
பாதிக்கு மேல் அவற்றில் பட்டது
மதுரை விட்டு இங்கு வந்து
மதுரை திரும்பும் நேரடி சர்வீஸ்
சிலது மட்டும் தொண்டியிலிருந்து
ஊர்வழியாக மதுரை செல்லும்
உலர்ந்த மீனும் பனையின் கிழங்கும்
கவுளி வெற்றிலையும் வாடைகிளப்ப.

எங்கிருந்து புறப்பட்டு வந்தாலும்
மதுரை பஸ்ஸுக்கு மாப்பிள்ளை மதிப்பு
வண்டி கெத்தாக ஸ்டாண்டில் நிற்க
ஏஜெண்ட் ஒருத்தர் திரும்பத் திரும்ப
மதுரை மதுரையென சொல்லிச் சுற்றுவார்
பேருந்து என்ற இரும்புப் பரியை
தோத்திரம் சொல்லி ஆராதிப்பதுபோல்
மதுரை மதுரை கூச்சல் தொடரும்.
அப்புறம் என்னமோ மனசு மாறி
பூவந்தி பூவந்தி கூச்சல் தொடரும்
பூவந்தி என்றவூர் மதுரை போகும்
வழியில் பாதித் தொலைவில் வரும்
பூவந்தி நிற்காத பஸ்கள் பலவுண்டு
அங்கே வசிப்பவர் அதிர்ஷ்டம் குறைந்தவர்
பாதிதூரம் பஸ்விட ஏனோ
யாரும் யோசிக்காத மதுரைக் கிறுக்கு.

என்ன காரணமோ புதன்கிழமைகளில்
பகல்வரை மதுரைபோகக் கூட்டம்
கூடுவதில்லை அதுபோல் தானே
வெள்ளிகாலை தொடங்கிக் கும்பல்
நடுப்பகலுக்கு உச்சியைத் தொடும்
வெள்ளி மாலை மதுரையில் இருந்து
வரும் பயணிகள் எண்ணிக்கை கூடும்
அங்கே தங்கி வேலை செய்வோர்
வார இறுதி என்பதால் திரும்ப.
கணக்கு சொன்னவர் மதுரைக் கூவல்
ஏஜெண்ட்; சொன்னபடிக்கு நடப்பதில்லை
திங்கள் கிழமை வரிசையில் நின்று
மதுரை போகப் பெருங்கூட்டம்
கோவிலில் திருவிழா, பொங்கல் ஷாப்பிங்
புதுப்பட ரிலீஸ் பொதுக்கூட்டம்
என்று ஏதும் இல்லாக் கிழமை.

மானாமதுரை போகவேண்டிய
ராக்காயி அப்பத்தா தவறுதலாக
மதுரை பஸ்ஸில் ஏறிப் பத்தடி
போனதும் யாரோ சொல்ல எழுந்து
அடித்துப் புரண்டு கூச்சல் போட்டாள்
வண்டியைத் திருப்பி ஸ்டாண்டில் வந்து
மானாமதுரை பஸ் பக்கம் நின்று
நாலுபேர் சேர்ந்து ஏற்றி விட்டார்கள்
காது வளர்த்துத் தண்டட்டி போட்ட
ராக்கி அப்பத்தா மவுசு அதிகம்தான்.
கோடாங்கிப் பட்டியில் குறிசொல்கிற
பூசாரிக்கவள் வீட்டுக்காரி
நல்லதும் மற்றும் சொன்னால் பலிக்கும்.

மதுரை பஸ்கள் நிறைத்த வெளியில்
ஓரம் ஒதுங்கி வெய்யிலில் காய்ந்து
தேவகோட்டை பேருந்து நிற்க
சுரத்து இல்லாக் குரலில் ’தேவோட்டை
புலியடிதம்மம் உச்சிப்புளி வரை
போகும் வண்டி’, ஏஜண்ட் பெஞ்சில்
இருந்து சொல்வார் அலுப்பு தென்பட..

சுற்றுப் பற்றும் பத்திருபது
கிராமம் போய்வர டவுன்பஸ் விட்டார்
நகர்நலம் கருதிய நண்பர்கள் சிலபேர்
உண்ணாவிரதம் இருந்தபின் சாதனை
மேலக் கண்டனி, கீழக் கண்டனி,
இடையமேலூர், பையூர், ஒக்கூர், பனையூர்
முத்துப்பட்டி, வீரவலசை, ஏனாபுரம்,
அ.புதூர், ப.புதூர், பு.புதூர்
நீண்ட பட்டியல் சொல்லிச் சொல்லி
ஏஜண்ட் கனவிலும் டவுன்பஸ் தொடரும்
ஓட்டுநர் நடத்துனர் இல்லாத பேருந்து
இருக்கலாம் எனினும் ஏஜெண்ட் இன்றி
பஸ் ஓடினால் சங்கடம் தானாம்.

ப்ரேக்டவுன் ஆன பஸ்ஸில் போனவர்
மந்திரவாதியை நோக்கும் சிறுவர்போல்
கண்டக்டரைப் பார்த்துக்கொண்டு
சுற்றி நிற்க நேரடி சர்வீஸ்
மதுரைபஸ் ஒன்று கடந்து போகும்
தன்னால் ஏதோ தப்பானது போல்சிலர்
தலைகுனிந்தபடி வெட்கம் பிடுங்க
முகம் திருப்பி பின்னால் பார்ப்பார்.
இலவச சவாரி கிடைத்தவர்
காரில் லாரியில் மோட்டார் சைக்கிளில்
போகும்போது பெருமை முகத்தில்
வாரபலனில் வாகனயோகம்
அப்படியும் அமையும் அறிவீர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2025 17:18

February 25, 2025

மிளகு பெருநாவல் தடத்தில்

நீண்ட எண்பத்தெட்டு அத்தியாயங்களோடு பெருநாவல் மிளகு 2021 ஜூன் முதல் 2025 ஃபெப்ருவரி வரை சொல்வனம் இணைய இதழில் சீராக வெளியாகிப் பின்கதையோடு இந்த வாரம் நல்ல வண்ணம் நிறைவடைந்தது,

இந்த நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போதே சொல்வனம் இணைய இதழில் பிரசுரமாக நண்பர் பாஸ்டன் பாலா முன்கை எடுத்தது சிறப்பாக இருந்தது. எண்பத்தெட்டு அத்தியாயங்களை இரண்டிரண்டு அத்தியாயம் ஒரு மின்கோப்பாக வடிவமைத்து – நாற்பத்திநான்கு கோப்புகள் – நான் ஒவ்வொன்றாக அனுப்பி வைப்பேன். அனுப்பிய பிறகு எடிட்டிங்கில் மாற்றினால் (நிறைய மாற்ற வேண்டி வந்ததில்லை) சொல்வனம் போன பிரதியை அகற்றி விட்டு புதியதைப் பிரசுரிக்க வேண்டும். ஒவ்வொரு இதழிலும் மிளகு இருக்க வேண்டும். இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்தது.

சென்னபைராதேவி மிளகு ராணியாக வாழ்த்தப்பட்டு அரசாண்ட தலைநகரின் பெயர் என்ன? ஜெரஸோப்பாவா கெரஸோப்பாவா?. கன்னட எழுத்தாளர் டாக்டர் கஜானன சர்மா, எழுத்தாளார் மதுரபாரதி போன்ற நண்பர்கள் கெரஸோப்பா தான் சரியான உச்சரிப்பு என்று அறுதியிட்டு நிறுவினர். எனில் சொல்வனத்துக்குப் போன பிரதியில் ஜெரஸோப்பா. அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பிரதியில் கெரஸோப்பா என்று அமைந்தது. பாதியில் மாற்றினால், வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் குழம்பிப் போவார்கள் என்று படவே ஜெரஸோப்பா மாற்றமின்றி இருக்கிறது.

சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றி. நண்பர்கள் ரவிசங்கர், பாஸ்டன் பாலா, மைத்ரேயன், நம்பி, கிரிதரன் என்று இந்தக் குழு ஒரு லட்சத்து எழுபத்தேழாயிரம் சொற்களில் (177,700) எண்ணூற்று அறுபது பக்கங்களுக்கு (860) நீளும் பிரதியைப் பொறுமையாக வாசித்துப் பிழை கண்டால் திருத்தப் பெற்று காலம் தவறாமல், வரிசை மாறாமல் பிர்சுரித்தார்கள். நன்றி.
சொல்வனத்தில் தொடர்ந்து மிளகு வாசித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். எண்பத்தெட்டு அத்தியாயங்களை ,மூன்றாண்டுகளாக வாசித்த டமில் டயாஸ்போரா ஒரு கமெண்ட் கூடப் பதிவு செய்யவில்லை. சாதனைக்கு நன்றி

சொல்வனத்தில் மிளகு தொடர, எனக்கு அற்புதமான ஒரு நட்பு கிடைத்தது – சரஸ்வதி தியாகராஜன் மேடம். எண்பத்தெட்டு அத்தியாயம் எழுபதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களை, அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காண ஒவ்வொரு பேச்சுககுரல் ஈந்து ஒலி வடிவமாக்கினார் சரஸ்வதி. மிளகு நாவலின் காத்திரமான, கம்பீரமான குரல் அவர்.. அவருக்கு என் நன்றி.

2022-ம் ஆண்டு என் இனிய பதிப்பாள நண்பர்கள் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் காயத்ரி, ராம்ஜி இருவரும் மிளகு பெருநாவலை அச்சில் கொண்டு வர, அதுவும் உடனே நூலாகப் பிரசுரமாக சுறுசுறுப்போடு நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களுக்கும் ஸீரோ டிகிரி வடிவமைப்பாளர் விஜயனுக்கும் என் நன்றி.

2022 ஜுனில் ஆயிரத்து நூறு பக்கங்களோடு மிளகு வெளிவந்தது. அந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் வாசகர்களுக்கு அறிமுகமானது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2025 02:51

February 22, 2025

திருச்சீரலைவாய் சாப்பாட்டுக் கடை

(அசோக்நகரில் வசித்த போது எழுதியது)

திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1

மறதி குறித்த மனக் குமைச்சலோடு
வார இறுதிக் காலை விடிந்தது.

வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு
வாக்குத் தத்தம் செய்தபடி
ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு
புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன்
இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும்
ஊறுகாயாவதாய் படித்ததாலஃது.
சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும்.

பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில்
ஊரே ருசிக்கும் காப்பி அருந்த
அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு
அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன்.
நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக.

ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை
ஆங்கிலத்தில் நடத்தி ஓய்ந்த
சிரித்த முகத்து சித்தனை
மத்ஸ்யம் என்று மீன்பெயர் தாங்கி
மாத்வர் நடத்தும் சைவ ஓட்டலில்
மதிய விருந்துக்கு அழைத்திருந்தேன்
நீர்தோசை, மத்தூர்வடை, பிசிபேளா ஈறாக
உத்தர கன்னடச் சமையல்
சுவை கண்டவர் அவர் கன்னட இலக்கிய
மயக்கமும் உண்டு பலநாள் சென்றெனக்கு
மறந்தது நினைவுவர சித்தர் சிவனடி புகுந்தார்.

புதுவையில் இந்தியக் காப்பியகத்தில்
கடித்துக் கொடுத்த பாதி கேக்கின்
பதிலாக பட்டிஸேரி எனும்பெயர் கடையில்
ப்ளம் கேக் வாங்கி ஊட்ட
அமேலியிடம் சொன்னதும் மறந்தேன்
அது ஆச்சு நாற்பது ஆண்டு முன்பு
அவள் இன்னும் கேட்க மறந்தாளில்லை
அச்சுவை கடந்து போனது எனக்கெப்போது
அதுவும் மறந்தேன் நினைத்தென்ன ஆகணும்.

——————————————–
(அசோக்நகரில் வசித்த பொழுது)
திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 2

நுழையும்போதே சல்யூட் அடித்த
காவல்காரர் சின்னச் சிரிப்போடு
அப்புறம் கொடுங்க என்றார்
நக்கலான சென்னைச் சிரிப்பில்லை
நேசமான செட்டிநாட்டுப் புன்னகை.

அந்தக்கால சோவியத் நாட்டு
ஏரோஃப்ளோட் விமான சேவையில்
கண்டிப்பான உபசரிணிபோல்
ஓவர்கோட் பெண்கள்
வாழை இலைவிரித்த மேசைமுன்னே
இருந்துண்ண இடம் சுட்டினர்.

உளுந்து வடையா உழுந்து வடையா
பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும்
நான் பார்த்த நாலு பேரும்
இன்னும் தொலைவில் ஒரு சிலரும்
மென்றபடிக்கிருந்தது வடைகளே
என்ன வேண்டும் சொல்லும்முன்
எனக்கும் கொணர்ந்தார் வடைகள்
திருச்சீரலைவாய் வழக்கமோ என்னமோ.

சிவப்பும் பச்சையும் சற்றே கருப்புமாக
சட்டினி துவையல் சாம்பார் நிரம்பி
வாளிகள் அணிவகுக்க பாதுகாப்பில்
இட்லியோடு இன்னொரு வடையும்
மேசை வந்தது வேண்டாம் எனும்முன்;
எள்ளெண்ணெய் கூட இருந்த நினைவு.
இத்தனை அமர்க்களமாய் இட்லி தின்றால்
சீரணமாவது சிரமமன்றோ.

சுவையாய் இருப்பதாய்த் தோன்றும் முன்னர்
உண்டு முடித்து காப்பி அருந்தல்
நல்ல சுவையென டாக்டரே சொல்கிறார்
நண்பர் மற்றவர் கரித்துக் கொட்டுவார்
எனக்கு ஆழ்நினைவிலோர்
உளுந்து வடை காப்பியில் நனைந்து.

இலை எடுக்கணுமா என்று கேட்டேன்
இன்னும் சாப்பிட்டு முடிக்கலை என
அவசரக் குரல்கள் அருகே எழுந்தன.

75

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2025 21:41

February 20, 2025

அரசூர் வரும் ஆதம்பூர் ஏலக்கடை

வர இருக்கும் ’இரா.முருகன் கவிதைகள்’ அனைத்து நூலிலிருந்து-
———————————————————————
ராத்திரியில் லாரி வந்து நிற்க
இந்திக் குரல்கள் உரக்கக் கேட்டால்
டில்லி பகதூர் ஏலக்கடை
எல்லா வருடமும் வருவதுபோல்
எங்கள் தெருவுக்கு வந்தாச்சு
நாளை காண நிறையக் கிடைக்கும்
விட்ட இடத்தில் உறக்கம் தொடர்வோம்

சொல்லி வைத்தாற்போல் ஏலக்கடை
வருடம் தோறும் வருவது எங்கள்
அரைப் பரீட்சை டிசம்பரில் முடித்து
விடுமுறை விட்ட நாட்களில் இருக்கும்.
ஏலக் கடையில் எழுதும் கணக்கும்
இந்தி நம்பராம் நம்போல் இல்லை

தலையில் நீலத் தலைப்பாகை வைத்த
நானா என்னும் பெரியவர் சொன்னார்
நானா தானாம் கடை முதலாளி
இந்தி எண்களோ என்ன கணக்கோ
ஏலக்கடை இருக்கும் நேரம் மட்டும்

இந்தியை சகிப்போம் அப்புறம் ஒழிகதான்.
ஆறடி உயரமாய் லாலா வந்து
என்னடா பசங்களா சௌக்கியம்தானா
என்று விசாரிக்க ஏலக்கடை மேல்
சொந்த பந்தம்போல் பிரியம் உதிக்கும்
எல்லா மொழியும் லாலா பேசுவார்
ஏலக்கடையில் எல்லோர் மூச்சும்
இந்தியில் எனினும் தமிழும் தெரியும்.

ரோஸ்கலர் மஞ்சள் ஆரஞ்சென்று
சின்னச் சின்ன நோட்டீஸ் கொடுத்து
டமடம என்று முரசு முழங்கி
நடந்த படிக்கு லாலா பாடுவார்
மேரெ ஜூத்தா ஹை ஜப்பானி.
இதுவும் இந்திதான். போனால் போகட்டும்..

ராத்திரி ஏழுக்கு ஏலம் ஆரம்பம்
அறிவிப்பு சொன்னாலும் ஏழுமணிக்கு
நண்டுசிண்டு கூட்டம்தான் நிற்கும்
ஏழரை ஆகும் பெரிசுகள் வந்திட.
ஊருணிக்கரை ஏறும் வழியில்
சாயாக்கடை வாசலை ஒட்டி
தேவிகாவைப் பேசி நிற்கும்
இளைஞர் கூட்டம் இன்னும் சிலநாள்
ஏலக் கடைக்கு இடம் மாறும்.

முன்சீப் கோர்ட் அமீனா தஃப்த்ரி
சப்கோர்ட் நாசர் சிரஸ்ததார் என
கோர்ட் உத்தியோகம் பார்க்கும்
சிப்பந்திகள் என்.ஜி.ஓக்கள் கூட்டம்.
வக்கீல் குமஸ்தரும் வருவதுண்டு
மத்திய அரசு ஊழியர் சைக்கிளில்
இருந்தபடிக்கே ஏலம் கேட்பர்.

சட்டைத்துணி புடவை அடுக்குப் பாத்திரம்
இங்க் பாட்டில் ஊசிகள் கடியாரம் ரூல்தடி
பேனாக் கத்தி கப்பும் சாசரும்
வெங்கலப் பானை சிப்பல் தட்டு
ஏலக் கடையில் மணியடித்து
அதிகத் தொகைக்கு ஏலம் கேட்ட
கண்ணாடிக் காரரும் நீலச் சட்டைக்காரரும்
கழுத்தில் மஃப்ளர் சுற்றிய நபரும்
உசரமாக ஓரத்தில் நிற்கும் அண்ணாச்சியும்
வாங்கிக் கொண்டு கூட்டத்தில் கலக்க
ராத்திரி பத்து கடைகட்டும் நேரம்.

நல்ல சில்க் புடவை பாருங்க
இருநூறுக்குக் குறையாதென்று
ஏலம் தொடங்கினார் பத்து ரூபாய்
தொடக்கம் வைத்து.
ரேடியோ ரிப்பேர் ராஜன் கேட்டது
இருபது ரூபாய் ஏலக்காரர்
இருபது என்று மும்முறை சொல்லி
ஏதோ நினைவில் மணியும் அடித்தார்
ஏலக்கடை விதிகள் படிக்கு ஏலம் வென்று
ராஜன் வாங்கினார் புடவை இருபதுக்கு
லாட்டரி அடிச்சது சிநேகிதர் சொன்னார்.

ராஜன் சடுதியில் கோகிலாவை
திருமணம் செய்தார்; அம்மா ஓர்தினம்
புடவை அவளுக்கு பிடிச்சுதா கேட்டாள்
சாயம் போச்சு மாமி தெரிந்திருந்தால்
அவசரக் கல்யாணம்
தவிர்த்திருப்பேன் ராஜன் சிரித்தார்
ஏலக்கடை அடுத்து வந்தபோது
ஏலம் கேட்க ராஜன் வரலை
வீட்டில் குழந்தை சுமந்தபடிக்கு
வாசலில் நின்றார் வேடிக்கை பார்த்து.
—————

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2025 21:14

February 19, 2025

மெகாஃபோன் மாதவனும் கேரள சுந்தரமும்

From my book readied for Publication
மன்னர் அரங்கில் மாபெரும் கூட்டம்
வந்து சிறப்பிக்க வரவேற்கிறோம்
நாளைக்கு மாலை ஏழு மணிக்கு
தலைவர் பேசுவார் தவறாமல் வாருங்கள்.

எந்தக் கட்சி என்றாலும் கூட்டத்துக்கு
வரச் சொல்லி அழைப்பது ஒருத்தர்
மாதவன் என்ற மீட்டிங்காரன்.
மாணவன் போல வருடாவருடம்
நூறு பக்கம் கோடுகள் போட்ட
நோட்புக் சுப்பன் கடையில் வாங்கிக்
கையில் சுமந்து திரிவான் மாதவன்.

எந்தக் கட்சிக் கூட்டம் என்றாலும்
முதலில் சொல்வார் மாதவனைக் கூப்பிடு
கோவில் வாசல் தெப்பக் குளங்கரை
அரண்மனைத் திண்ணை சந்தைக்கடை
எங்கும் தேடினால் எங்கோ கிடைப்பான்
நிறுத்தி வைத்த அந்திம ரதத்தில்
தூங்கிக் கிடந்தான் ஒருமுறை; சொல்வார்.

என்றைக்குக் கூட்டம் எத்தனை மணிக்கு
யார்யார் பேசுறார் வெளியூர் நபர் யார்
கலை நிகழ்ச்சி உண்டா என்றால்
பாடுவதார், ஆடுவதார் என்பது எல்லாம்
மாதவன் நோட்புக்கில் வார்த்தைகள் ஆகும்.

பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட் பெஞ்சில்
ஒடுங்கிப் படுத்தொருநாள்
மாதவன் உறங்கும் நேரம்
நோட்புக்கை புரட்டிப் பார்த்தோம்
தமிழில்லை வேறு மொழியினிலே
விவரங்கள் தேதிபோட்டு
குறித்திருந்தான் மாதவன்
ஜாபர் சொன்னான் உருது என்று
உருதில் ஏது ஜிலேபி, சொன்னேன்
தெலுங்கென்று. மாதவன் எழுந்து

தோளில் சின்ன தமுக்கு மாட்டி
மெகஃபோன் குறுக்கே கயிற்றில் தொங்க
ஒற்றை ஆள் ஊர்வலமாக
மாதவன் தெருவில் நடக்கும்போது
தமுக்கை மெல்ல ஒலித்துப் போவான்.
கூடவே பின்னால் எங்கள் கூட்டம்.

தெருமுனை வக்கீல் ஐயங்கார்
வீட்டை அடுத்த காடிகானா
(என்றால் வண்டிகள் நிற்குமிடம்)
மளிகைச் செட்டியார் கடைவாசல்
மதுரை முக்கு ஊருணிக்கரை
தேர்முட்டி கதவு என்று இடங்கள்
அவனுக்குத் தெரியும் சத்தம் அதிரும்
அங்கே பேசினால் கூட்டம் சேரும்.

நோட்புக் தலைகீழாகப் பிடித்து
மெகஃபோன் வாய் அருகில் வைத்து
கூட்ட விவரம் சொல்லத் தொடங்க
சவுக்கைச் சுழற்றி எம்ஜிஆர் பாடும்
ஈஸ்ட்மென் கலர் எங்க வீட்டுப் பிள்ளை
சினிமா போல் பார்த்து இருந்து
வரிசையாய் தகவல் உதிரக் கேட்போம்.

தற்காலம் காங்கிரஸில் தீப்பொறி ஆறுமுகம்
தப்பாமல் மலையாளத் தமிழ்பேசும்
திமுக பேச்சாளார் கேரள சுந்தரம்
அதிமுக மேயர் மதுரை முத்து
எம் ஆர் வெங்கட்ராமன் மார்க்சிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் சி ஏ பாலன்
எஸ் எஸ் மாரிசாமி சுதந்திரா
எத்தனை பெயர்கள் மாதவன் சொல்ல
கேட்டு நின்றோம் சுற்றிச் சூழ்ந்து.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
பள்ளிக்கூடம் மூடி வைத்தது
வாரக் கணக்கில் மாதக் கணக்கில்
தொடரும்போது மாதவனும்
தமுக்கு முழக்கி கூட்டமாய் நிற்க
நூற்று நாற்பத்து நாலு தடை
சர்க்கார் சேதி அறிவித்துப் போவான்
சர்க்கார் மனிதனாய்க் காக்கிச் சட்டை
அணிந்திருப்பான் அப்போதெல்லாம்.

மைக்செட் ஸ்பீக்கர் கிராமபோனில்
கட்சிப் பாட்டு இசைக்க விட்டு
கூட்ட விவரம் அமர்ந்து சொல்லி
நகர்ந்து செல்ல ரிக்ஷா வண்டி
புதிதாய் வந்து காலம் மாற
மாதவனைக் கூப்பிடக் காணோம்.

பத்து வருடம் முந்திய கூட்டத்தில்
பெருந்தலைவர் முதல்மந்திரி
காமராஜரும் கக்கனும் மஜீதும்
நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியாரும்
சிசுப்பிரமணியமும் பூவராகனும்
ஆர் வெங்கட்ராமனும் பேசுவதாக
அறிவித்து மெகஃபோன் தமுக்கு களைந்து
நோட்புக் கிழித்துக் குப்பையில் வீசி
மாதவன் தெற்கில் நடந்து போனதாக
கதர்க்கடை அலுவலர் இருவர் சொன்னார்
அப்புறம் அவனைக் காணவே இல்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2025 03:00

February 15, 2025

அது ஒரு எமர்ஜென்ஸி கால ராத்திரி

விடியப் போகிறது
எமர்ஜென்ஸி ராத்திரி
நாலு பேட்டரி டிரான்சிஸ்டர் ரேடியோ
நம்பிக்கையோடு இருட்டில் பாடும்;
உச்ச ஸ்தாயியில் ஒற்றைக் குரலில்
சேர்த்து இசைத்த சீனிவாசனை,
இலக்கியம் இசையில் ஆர்வலர் இளைஞரை
நெருக்கடி நிலைமை நல்லதுதானென
நம்ப வைத்தவர் யாரோ எவரோ.
எமர்ஜென்சி சொல்லாட்சியில்
எமர்ஜென்சி என்பது நெருக்கடி நிலைமை
இருபது என்பது பிரதமர் இந்திரா
இங்கறிவித்த இருபது அம்சத் திட்டம்
கொசுறாய் ஐந்து – எந்தப் பதவியும் இல்லாத
சஞ்சய் காந்தி பிரகடனம் செய்த
பரபரப்பான ஐந்தம்ச திட்டம்.
மொத்தம் இருபத்தைந்து, புத்தியுள்ளவர்
கற்றுத் தேர்ந்து பிழைக்கக் கைவசம்.

பகலில் கதைகள் பாட்டோடு கலந்து
எமர்ஜென்சி அல்வா கிண்டி
ஆச்சி மனோரமா அனுதினம் வந்து
கோவுராசாமி கதையாய்ப் படைப்பார்.
வீபுதி தூவி சித்து விளையாடும்
கோவுராசாமி துண்ணூறு ‘பிழிந்தால்’
எல்லா நோயும் ஓடி மறையுமாம்

பத்து நிமிடம் சென்னைத் தமிழில்
சொல்லி முடித்து ஆச்சி அப்புறம்
மெல்ல மெல்லத் தொடங்குவார் – ஆத்தீ
சொன்னாங்களே அம்மா சோமங்கலத்துலே.
இருபது அம்சமும் கொசுறாய் ஐந்தும்
வரும் வரும் முடியாக் கதைகள் நீளும்

எமர்ஜென்ஸி நேரம் பிரதமர் ஓர்முறை
தமிழகம் வந்தார் காஞ்சி அருகே
சோமங்கலம் கிராமத்தில்
சொற்பொழிவாற்றினார்
நாற்பது சொச்சம் வருடம் கழித்து
இன்று சோமங்கலம் செழித்த ஊராம்.
இருபதால் ஐந்தால் வந்த வாழ்வோ
தெரியலை எனினும் விடிந்தது அவர்க்கு

எமர்ஜென்ஸி என்றால் இருபதின் வாடை
கூடவே ஐந்து அம்சத்தின் நெடியும்
ஆகாச வாணியில் தூக்கலாய்க் கவிய
எல்லா மொழியிலும் எல்லா நேரமும்
சர்க்கார் சங்கீதம் சதா ஒலிபரப்பு.
நாஜிகள் யூதரை அடித்து வதைத்துப்
பாடவைத்த ஆடவைத்த
சரித்திரம் படித்தோம்.
எனினும் இங்கே கேட்கச் சொல்லிக்
கட்டாயம் இல்லைதான்

கவிஞனை அழைத்து இருபது,
ஐந்தென எண்கள் சொல்லி
தோத்திரப் பாடல் எழுத வைத்து
தட்டி முழக்கி கொட்டிக் கூவி
இசையாக் கூட்டம் பாடிய தெல்லாம்
எமர்ஜென்சி வதையில் முதலாம்.
எதுகை மோனை இல்லாத பாட்டெழுத
கவிஞர் பலரும் வரிசையில் நின்றதால்
பாட்டுக் கூட்டம் பரவியது இங்கே.
பாட்டு இல்லாமல் எமர்ஜென்சி இருந்திருந்தால்
பரவாயில்லை பொறுக்கலாம் போல

நடிகர் நடிகை பட்டியலெடுத்து
விவிதபாரதி, சிற்றலைப் பரப்பில்
பல்பொடி களிம்பு விளம்பரம் மாதிரி
இருபதம்சமும் ஐந்தும் வரிசையாய்ப்
பொழியச் சொல்லி நச்சரித்து
கோவுராசாமி கதைகள் கலந்து
பேசி நிற்கப் புதுயுகம் பிறந்ததோ
சொன்னாங்களோ சோமங்கலத்திலே.
————————————————-
1975 மே மாதம் 21-ம் நாள் நான் சென்னைக்கு வேலை கிடைத்துக் குடிபெயர்ந்தேன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வால்டாக்ஸ் ரோடு – யானைக் கவுனியில் உத்தியோகம். தி.நகர் மோதிலால் தெரு கோபாலன் மேன்ஷனில் குடியிருப்பு. ஒரு மாதம் சென்று, ஜூன் 21 அன்று எமர்ஜென்ஸியும் நுழைந்து விட்டது. என் நாவல் 1975 இந்தக் காலகட்டத்தைச் சித்தரிப்பதாக அமைந்தது. எமர்ஜென்ஸி காலம் என்ற இந்தக் கவிதையும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2025 04:01

February 12, 2025

மாம்பலம் மேன்ஷன்

பாலா சொல்வார் சேவல் பண்ணை
மேன்ஷன் பார்த்தால் அதுதான் நினைவில்.
பாலா என்பது பாலகுமாரனை.
மாடிமாடியாய் வண்ணத்தில் வெளுப்பில்
சட்டை, கால்சராய், அரைக்கால் டிரவுசர்
அங்கங்கே லுங்கிகள் கொடிகளில் காய
மேன்ஷன் எதிர்ப்படும் மாம்பலம் தெருவில்.

வளாகம் உள்ளே வரிசையாய் ஸ்கூட்டர்
மோட்டார் பைக்கும் ஒன்றிரண்டு சைக்கிளுமுண்டு
மேன்ஷன்காரர்கள் சைக்கிள் வாங்கினால்
உடல் பயிற்சிக்கு அன்றி வேறில்லை
கார் வைத்திருக்கும் மான்ஷன்காரரைத்
தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் சொல்வேன்.

ஹாஸ்டல் வேறு மேன்ஷன் வேறு
ஹாஸ்டல் என்றால் எதிர்ப்படும் கேள்வி
மணியார்டர் வந்ததா அப்பா அனுப்பி?
மேன்ஷன் கேள்வி – சம்பளம் வந்ததா?

மூச்சு விடுமிடம் அந்நியரோடு பகிர்ந்து
இசைந்தோ பொறுத்தோ வாழ்க்கை பயில
மான்ஷனில் இருக்கப் புறப்படும் முன்னர்
ஹாஸ்டல் பயிற்சி இருந்தால் எளிதாம்.

மேன்ஷன் வசிப்பில் அவரவர் கொள்ள
ஒவ்வொருவரையும் சூழ்ந்ததோர் அந்தரங்கம்
அவசியம் உண்டு ஹாஸ்டல் போல
ஜட்டியும் சோப்பும் பகிரும் சூழல்
இல்லை மேன்ஷன்; வளர்ந்தவர் வசிப்பிடம்.

மேன்ஷன் சேர முதல்பாடம் இது-
மேன்ஷன் ஓனர் நேர்கண்டு நாளைக்கு
வரச் சொல்லி அனுப்பி வைப்பார்
தெரிவித்த இடத்தில் வேலை பார்ப்பது
உண்மைதானா உத்தியோகம் நிலைக்குமா
முற்றும் விசாரிப்பர் முதுகுப் பின்னால்
திருப்தி அடைந்தாலே வசிக்கச் சேர்ப்பார்.

சிகரெட் புகையேன் மதுவும் அருந்தேன்
வந்தவர் சத்தியம் செய்வது வழக்கம்
நம்புவதாக காட்டுவது நாகரீகம்.

குளிக்க வெந்நீர் போடுவதற்கு
இமர்ஷன் ஹீட்டர் வாங்கி வைக்கணும்
ஒரு கே.வி.ஏ மேலே சக்தி இருந்தால்
ஃப்யூஸ் எகிறும் மேன்ஷனே பதறும்.
இமர்ஷன் ஹீட்டர் வாங்கினால் போதாது
தண்ணீர் வைக்க ப்ளாஸ்டிக் வாளியும்
குறுக்கே வைத்துத் தொங்கவிட
சட்டைமாட்டும் ஹேங்கரும் அவசியம்.
எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ்
வாங்கினால் பலநாள் இரவல் போகும்
இருந்தாலும் இஸ்திரிக்கு சோம்பல்.
தெருக்கடை அயர்ன்காரர் இருக்கும் வரைக்கும்
சுருக்கமில்லா உடுப்போடு அலையலாம்.

மேன்ஷனில் அடுப்பு வைத்து
சமைக்கத் தடை எனினும் சிலரோ
ரைஸ்குக்கரில் சாதம் பொங்கி
பருப்புப் பொடியும் ஊறுகாயுமாய்
சிலநாள் உண்ணுவர் அலுத்து
ஓட்டல் உணவுக்கு ஓடுவர் மறுபடி
அதுவும் அலுக்க திருமணம் கொள்வர்
அல்லாதவர் மேன்ஷன் மாறுவர்.

மேன்ஷன் அறையின் சாவி பத்திரம்
தொலைந்தால் சங்கடம் இஷ்டம்போல
பாண்டிபஜாரில் பூட்டு ரிப்பேர்
செய்பவர் வடித்த நகலோடு திரிதல்
நல்லதுக்கில்லை ஓனர் அறிந்தால்
உடனடியாக மேன்ஷன் விலக்கு.
சாவி தொலைந்தால் பொறுப்பை உணர்த்தி
நிற்க வைத்துச் சொற்பொழிவாற்றி
ஓனரே தருவார் பூட்டுசாவி புதுசாக
ஐநூறு ரூபாய் தண்டம் தீர்க்கணும்.

வார இறுதி சனிக்கிழமை
மாலையும் இரவும் மேன்ஷன் இனிது
சேர்ந்து குடிக்கவும் சேர்ந்து போய் உண்ணவும்
சின்னப் பசங்களாய் சத்தம் போட்டு
சிரித்து மகிழ்ந்து படுத்து உருளவும்
வாரம் ஒருமுறை மற்றவர்க்கு வாய்க்குமோ.

கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர்
வராத காலம் வீட்டு வாழ்க்கையே
தாறுமாறாகும் மேன்ஷன் கடினம்;
ஆபீஸில் குளித்து துவைத்து உலர்த்தல்
ஜோக்கில்லை அசல் நிஜமாகும் சிலர்க்கு.

மேன்ஷன் மொழிகளில் தமிழும் உண்டு
மேன்ஷன் இசையில் காங்கோ முரசும்
மேன்ஷன் ரசனை பகிர்ந்து செழிக்கும்.
வாடா போடா நட்பின் ஆழமாய்
மேன்ஷன் பரிச்சயம் மாறாதெனினும்
பொறுப்பும் பொறுமையும் இடைகலந்த
புதிய வாழ்வின் தொடக்கமாக
மேன்ஷன் வாழ்க்கை என்றும் நினைவில்.

மேன்ஷன் தோழர் திருமணம் என்றால்
மறவாது போய் பரிசொன்று அளித்து
வாழ்த்தி விருந்துண்டு வருதலே அறமாம்

மேன்ஷன் வசித்து இல்லறம் புகுந்தோர்
ஏதோவொரு சாயந்திரம் ஷாப்பிங் வந்து
வாசலில் நின்று சுட்டிக் காட்டி
இங்குதான் இருந்தேன் என்பர் இணையிடம்
கண்ணில் பட்டால் மறுபடி வாழ்த்தி
உதிரி பாத்திரமாய் சிரித்து நிற்கணும்
உமக்கும் ப்ரமோஷன் திருமணம் ஆகி
மேன்ஷன் வாசம் ஒருநாள் முடியும்.

வெளிவர இருக்கும் என் புதுப் புத்தகம் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள் நூலில் இருந்து

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2025 20:36

February 7, 2025

வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் அனைத்துக் கவிதைகள்’ நூலில் இருந்து


நூறு வருடப் புத்தகம் அடுக்கி
நீளநெடுக மர அலமாரிகள்;
இருந்து படிக்கக் கால்கள் உடைந்த
இருக்கைகளோடு நூலகம் கிடக்கும்.

சின்னப் பையன்கள் வருவது பார்த்து
அரபு இரவுகள் ஆயிரமும் அவசரமாய்
மேல்தட்டேறி ஒளிந்து கொள்ளும்
ஏற முடியாத கடைசி ஒண்ணு
பொலபொலவென்று பேப்பராய் உதிரும்.

அநுத்தமாவும் ராஜம் கிருஷ்ணனும்
லஷ்மியும் குகப்ரியையும்
கிருத்திகாவும் கு.ப.சேது அம்மாளும்
குமுதினியும் சூடாமணியும்
வைத்த அலமாரியில் வல்லிக்கண்ணனும்.
அடிக்கடி தரையில் விழுந்திட நூலகர்
வல்லிக்கண்ணனை வாசல் அலமாரிக்கு
மாற்றி வைத்தார். பெண்தனி ஆண்தனி
பேணுவோம் என்றார் சங்கடம் தீர.

வியாசர் விருந்து கடனாய்ப் பெற்று
வீட்டில் படிக்க எடுத்துப் போன
வாசுதேவன் ஒரு நாள் சுணங்கி
புத்தகம் திருப்ப வந்தான்
ஐந்துபைசா அபராதம்.
லெட்ஜரில் எழுதிக் காசு வாங்கி
இரும்புப் பெட்டியில் பூட்டி விட்டு
ரசீது போட்டு ஸ்கேல் வைத்துக் கிழித்து
நீளமாகக் கையெழுத்திட்டு
ரெண்டு பிரதிகள் கோப்பில் வைத்து
தேசலாய் ஒன்று வாசுதேவன் பெற
நாலு கிளார்க்கும் நூலகரும்
வேகம் இயங்கி ஓடி நடக்க
நூலகம் அரைமணி பரபரப்பானது.

பத்து மாதம் திருப்பித் தராமல்
பரமார்த்த குருகதை தன்னிடம் உள்ளதாய்
பரமசிவம் சொன்னான் என்ன ஆகும்
நாடு கடத்த மாட்டாரெனினும்
நூற்றைம்பது ரூபாய் தண்டம் வசூலுக்கு
மாவட்ட நூலகர் ஓடி வருவாரோ
உள்ளூராருக்கு ஓர் அதிகாரமில்லை.

நூலகம் உள்ளே அமைதி காக்கணும்
பேசணும் என்றால் தோட்டம் போகணும்
கக்கம் குடைவைத்த குப்புசாமி
பக்குவமாய் நூலகரை இட்டுப் போய்
கொக்கோகம் கிட்டுமா என்று கேட்டான்
வக்கா எனத்தொடங்கி அவர் வைய
கெக்கே எனச் சிரித்து ஓடினானாம்
செக்கெண்ணெய் கடைக்காரர் சொன்னார்.

டிடிகே அட்லாஸ் பூகோள வரைபடங்கள்
கடன் கொடுக்க வசதிப்படாது
இங்கு வைத்துத்தான் படிக்கணும்.
விதிகள் அடுக்கிய நூலகர் மருள
இங்கிலீஷ் கவிதைகள் சிற்சில
எடுத்து மேற்கோள் காட்டி
சுப்பன் வக்கீல் நூலோடு நடந்தார்.
சின்ன மகள் சீமந்தம் முடிந்த பின்னர்
பார்க்க வேணுமாம் லிதுவேனியா உள்ளதெங்கே.
இன்னும் பல்லாண்டு இருக்கட்டும் லிதுவேனியா
சொல்லாமல் கொள்ளாமல் சோவியத் நாடுபோல்
இல்லாது வரைபடத்தில் மறைந்து போகாமல்.

சமணத் துறவி போல் வாயும் மூக்கும்
சுற்றி மறைத்து வெள்ளைத் துணிகட்டி
காலில் சைபால் களிம்பும் பூசி
நூலகர் ஒருநாள் நூலகம் புகுந்தார்
புத்தகவாடை பிடிக்கலை அதனால்
நோயுண்டானதாம் தவிர்ப்பேனென்றார்.
புத்தகம் முகர்ந்தால் கால் ஆணி வருமோ?

புதுப் புத்தகங்கள் வண்டி வண்டியாய்
வந்துசேர வாசலில் அடுக்கி
அழகுக் குழந்தை ஆடை களைவதுபோல்
அட்டை அகற்றி அவசர பைண்ட் செய்ய
எல்லா நூலும் ஒருபோல் தோன்றும்.
எல்லா நூலும் ஒருபோல் தானோ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2025 23:44

டூரிங் டாக்கீஸ்

1970- களில் பதின்ம வயதிலிருந்தபோது எங்களூர் அமுதா டூரிங்க் டாக்கீஸில் விட்டலாசார்யா படம் பார்த்த நினைவுகளில்…
—————————————————————–

உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம்
போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது
நாம்தான் டூரிங் அது இல்லையாம்.

வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ
பரத்தி வைத்த மணல்வெளி
பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த
தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு.
தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும்
இருபதுபைசா நாணயம் ஒன்றும்
பத்துக் காசும் சேர்த்துக் கட்டணம்
செலுத்தித் தரையில் ஒருத்தர் அமரலாம்.

இந்தியன் நியூஸ் ரீல் என்றும் துக்கம்
பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட
புல்லாங்குழல் வாசித்தபடிக்கு
கறுப்பு வெள்ளை காமிரா தொடரும்
சிங்கம் முழங்கி மெட்ரோ நியூஸில்
எலிசபெத் அரசி பட்டம் சூடுவார்.

ஆணும் பெண்ணும் பேதம் காட்ட
தட்டித் தடுப்பு நடுவில் நிறுத்தி
கிடுகு உதிர்ந்த ஓட்டைகள் ஊடே
தோராயமாகத் தொட்டுத் தடவி
கடலைமிட்டாய் கடிக்கக் கொடுத்து
எச்சில் மீதம் யாசித்து வாங்கி
கரங்கள் அங்கங்கே காதல் செய்யும்.

புதுப் படங்கள் போடுவது அபூர்வம்
கொஞ்சம் புதுசு அண்மையில் வந்த
பூம்புகார் போட்டனர் ; ஒற்றைப் புரஜக்டர்
படச்சுருள் சுழற்றி தீர்ந்ததும் நிறுத்தி
விஜயகுமாரி மதுரையை எரித்த பின்னர்
எங்கிருந்தோ பத்மினி வந்து
எஸ்எஸ்ஆரை குடையால் அடித்தார்
என்ன ஆச்சு கண்ணகி கதைக்கு
படச்சுருள் மாறி குழப்பம் வந்ததாம்
விளக்குகள் போட்டு மீண்டும் நிறுத்தி
இன்னொரு தடவை மதுரை எரிந்தது
வணக்கம் போட்டு பூம்புகார் முடிந்தது.

விட்டலாசார்யா சினிமா என்றால்
பெண்கள் பகுதியும் ஆண்கள் இருக்க
எல்லைகள் விரியும்
நைட்ஷோ நடுவில் சினிமா நிறுத்தி
நட்ட நடுவில் பிட்டுகள் ஓடும்
தேசல் ஃபிலிமில் கெட்ட காரியம்
பார்க்கும் முன்னால் முடிந்துபோக
ஆச்சார்யா படத்தில் ஆடாக மாறுவார்
காந்தாராவ் என்ற கதாநாயகுடு.
பிட்டுக்கு வந்த ஆடுகள் கனைக்க
டெண்டுக் கொட்டகை மொத்தமும் சிரிப்பு.

ராத்திரி ஷோ மாய மோதிரம்
ஒரு முறை போனேன்
வந்தவர் பலரும் தலப்பா கட்டி
மண்ணில படுத்து மல்லாந்து நோக்கி
ஜோதிலட்சுமி ஆட்டம் பார்க்கக்
காதுகள் அதிருமோ வேறெதோ
பிட்டேதும் அன்று பார்க்கக் கிடைக்கலை.

காட்சி இடையில் இண்டர்வெல் விடுவது
ஆடவர்க்கு மட்டும் தான்
ஓரம் சென்று சூனியம் வெறித்து
வரிசையாயவர் சிறுநீர் கழிக்க,
பெண்கள் பகுதியில் மும்முரமாக
முறுக்கு விற்பனை கடலை அச்சும்
வெண் திரை பார்த்து வாயில் அரைபடும்.

இடைவேளை முடியும் நேரம்
நுடவைத்ய சாலை ஸ்லைடு
கைகால் முறிவு கடந்து எலும்பு ஒட்டவும்
பாம்படம் மாட்ட வலமும் இடமும்
புத்தபிரான் போல காது வளர்க்கவும்
வளர்த்த காதை திரும்ப ஒட்டவும்
நயம் கட்டணத்தில் சிகிச்சை கிட்டுமாம்.

கவ்னர் பீடியும் லெனின் படத்தோடு
பொரட்டா கடையும் நடேசநயினார் டீக்கடையும்
ஸ்லைடுகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்து தேய
சீட்டியொலியும் கைதட்டலும் காதைப் பிளக்கும்.

இந்திப் படமும் எப்போதாவது
வந்தால் எதிர்ப்பில்லை ஊரே கூடும்.

ஆடுவார் ஹெலன் ஆண்டவர்க்கே சவால்விட்டு
பாடுவார் ஆஷா பனியில் நடுங்கி
பர்மன் கூவுவார் காய்கறிக்காரர் போல்
மோனிகா ஓ மை டார்லிங்
கைகள் தட்டி ஒன்ஸ்மோர் கேட்டு
இதுக்கே காசு சரியாப் போச்சென்று
சொன்னவர் யாரும் இந்தி அறியார்
எதுக்குத் தெரியணும் இந்தியும் மண்ணும்?

ஹெலன் யார்? உத்தம புத்திரன்
சிவாஜியோடு ஆடிய
நம்மூர்ப் பொண்ணுதான்,
இல்லையா பின்னே!

(வெளிவர இருக்கும் என் கவிதைத் தொகுதியில் இருந்து)

Facebook

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2025 00:19

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.