மாம்பலம் மேன்ஷன்
பாலா சொல்வார் சேவல் பண்ணை
மேன்ஷன் பார்த்தால் அதுதான் நினைவில்.
பாலா என்பது பாலகுமாரனை.
மாடிமாடியாய் வண்ணத்தில் வெளுப்பில்
சட்டை, கால்சராய், அரைக்கால் டிரவுசர்
அங்கங்கே லுங்கிகள் கொடிகளில் காய
மேன்ஷன் எதிர்ப்படும் மாம்பலம் தெருவில்.
வளாகம் உள்ளே வரிசையாய் ஸ்கூட்டர்
மோட்டார் பைக்கும் ஒன்றிரண்டு சைக்கிளுமுண்டு
மேன்ஷன்காரர்கள் சைக்கிள் வாங்கினால்
உடல் பயிற்சிக்கு அன்றி வேறில்லை
கார் வைத்திருக்கும் மான்ஷன்காரரைத்
தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் சொல்வேன்.
ஹாஸ்டல் வேறு மேன்ஷன் வேறு
ஹாஸ்டல் என்றால் எதிர்ப்படும் கேள்வி
மணியார்டர் வந்ததா அப்பா அனுப்பி?
மேன்ஷன் கேள்வி – சம்பளம் வந்ததா?
மூச்சு விடுமிடம் அந்நியரோடு பகிர்ந்து
இசைந்தோ பொறுத்தோ வாழ்க்கை பயில
மான்ஷனில் இருக்கப் புறப்படும் முன்னர்
ஹாஸ்டல் பயிற்சி இருந்தால் எளிதாம்.
மேன்ஷன் வசிப்பில் அவரவர் கொள்ள
ஒவ்வொருவரையும் சூழ்ந்ததோர் அந்தரங்கம்
அவசியம் உண்டு ஹாஸ்டல் போல
ஜட்டியும் சோப்பும் பகிரும் சூழல்
இல்லை மேன்ஷன்; வளர்ந்தவர் வசிப்பிடம்.
மேன்ஷன் சேர முதல்பாடம் இது-
மேன்ஷன் ஓனர் நேர்கண்டு நாளைக்கு
வரச் சொல்லி அனுப்பி வைப்பார்
தெரிவித்த இடத்தில் வேலை பார்ப்பது
உண்மைதானா உத்தியோகம் நிலைக்குமா
முற்றும் விசாரிப்பர் முதுகுப் பின்னால்
திருப்தி அடைந்தாலே வசிக்கச் சேர்ப்பார்.
சிகரெட் புகையேன் மதுவும் அருந்தேன்
வந்தவர் சத்தியம் செய்வது வழக்கம்
நம்புவதாக காட்டுவது நாகரீகம்.
குளிக்க வெந்நீர் போடுவதற்கு
இமர்ஷன் ஹீட்டர் வாங்கி வைக்கணும்
ஒரு கே.வி.ஏ மேலே சக்தி இருந்தால்
ஃப்யூஸ் எகிறும் மேன்ஷனே பதறும்.
இமர்ஷன் ஹீட்டர் வாங்கினால் போதாது
தண்ணீர் வைக்க ப்ளாஸ்டிக் வாளியும்
குறுக்கே வைத்துத் தொங்கவிட
சட்டைமாட்டும் ஹேங்கரும் அவசியம்.
எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ்
வாங்கினால் பலநாள் இரவல் போகும்
இருந்தாலும் இஸ்திரிக்கு சோம்பல்.
தெருக்கடை அயர்ன்காரர் இருக்கும் வரைக்கும்
சுருக்கமில்லா உடுப்போடு அலையலாம்.
மேன்ஷனில் அடுப்பு வைத்து
சமைக்கத் தடை எனினும் சிலரோ
ரைஸ்குக்கரில் சாதம் பொங்கி
பருப்புப் பொடியும் ஊறுகாயுமாய்
சிலநாள் உண்ணுவர் அலுத்து
ஓட்டல் உணவுக்கு ஓடுவர் மறுபடி
அதுவும் அலுக்க திருமணம் கொள்வர்
அல்லாதவர் மேன்ஷன் மாறுவர்.
மேன்ஷன் அறையின் சாவி பத்திரம்
தொலைந்தால் சங்கடம் இஷ்டம்போல
பாண்டிபஜாரில் பூட்டு ரிப்பேர்
செய்பவர் வடித்த நகலோடு திரிதல்
நல்லதுக்கில்லை ஓனர் அறிந்தால்
உடனடியாக மேன்ஷன் விலக்கு.
சாவி தொலைந்தால் பொறுப்பை உணர்த்தி
நிற்க வைத்துச் சொற்பொழிவாற்றி
ஓனரே தருவார் பூட்டுசாவி புதுசாக
ஐநூறு ரூபாய் தண்டம் தீர்க்கணும்.
வார இறுதி சனிக்கிழமை
மாலையும் இரவும் மேன்ஷன் இனிது
சேர்ந்து குடிக்கவும் சேர்ந்து போய் உண்ணவும்
சின்னப் பசங்களாய் சத்தம் போட்டு
சிரித்து மகிழ்ந்து படுத்து உருளவும்
வாரம் ஒருமுறை மற்றவர்க்கு வாய்க்குமோ.
கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர்
வராத காலம் வீட்டு வாழ்க்கையே
தாறுமாறாகும் மேன்ஷன் கடினம்;
ஆபீஸில் குளித்து துவைத்து உலர்த்தல்
ஜோக்கில்லை அசல் நிஜமாகும் சிலர்க்கு.
மேன்ஷன் மொழிகளில் தமிழும் உண்டு
மேன்ஷன் இசையில் காங்கோ முரசும்
மேன்ஷன் ரசனை பகிர்ந்து செழிக்கும்.
வாடா போடா நட்பின் ஆழமாய்
மேன்ஷன் பரிச்சயம் மாறாதெனினும்
பொறுப்பும் பொறுமையும் இடைகலந்த
புதிய வாழ்வின் தொடக்கமாக
மேன்ஷன் வாழ்க்கை என்றும் நினைவில்.
மேன்ஷன் தோழர் திருமணம் என்றால்
மறவாது போய் பரிசொன்று அளித்து
வாழ்த்தி விருந்துண்டு வருதலே அறமாம்
மேன்ஷன் வசித்து இல்லறம் புகுந்தோர்
ஏதோவொரு சாயந்திரம் ஷாப்பிங் வந்து
வாசலில் நின்று சுட்டிக் காட்டி
இங்குதான் இருந்தேன் என்பர் இணையிடம்
கண்ணில் பட்டால் மறுபடி வாழ்த்தி
உதிரி பாத்திரமாய் சிரித்து நிற்கணும்
உமக்கும் ப்ரமோஷன் திருமணம் ஆகி
மேன்ஷன் வாசம் ஒருநாள் முடியும்.
வெளிவர இருக்கும் என் புதுப் புத்தகம் இரா.முருகன் அனைத்துக் கவிதைகள்
நூலில் இருந்து
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

