இரா. முருகன்'s Blog, page 8
September 5, 2024
கல்யாணக்காரி மேல் மையலுற்றுக் கவிதைகள் எழுதிய பாவம்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து-
அவனை ஏனோ பிடித்துப் போனது. நானூறு வருஷமாக அவரிடம் யாரும் உதவி என்று கேட்டதில்லை. இன்றைக்கு இந்த மனுஷன் அவரைப் பாதிரியார் ஆக்கியிருக்கிறான். அலமாரியில் கடற்படை மேலதிகாரியின் சலவை உடுப்புகள் கிட்டாமல் எதையோ அணிந்து வந்திருப்பதால், அவருக்கே தான் யாரென்று குழம்புகிறது. நேரம் வேறே விரைந்து கொண்டிருக்கிறது. அவர் மறுபடி உறங்கப் போக வேண்டும்.
சொல்லலாமா? அவன் கேட்டான்.
முதல்லே உன் பேரைச் சொல்லு.
முசாபர்.
முழுப் பெயர் அதுதானா?
முசாபர் உல்ஹக் ஸபர்.
ஸபர் குடும்பப் பெயரா?
புனைப்பெயர். கவிதை எழுத வச்சிக்கிட்டது.
கவிதை எல்லாம் எழுதுவியா?
ஆமா?
அப்புறம் எப்படி பாவமன்னிப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கறே?
இப்போ எழுதறதில்லே.
என்ன மாதிரி கவிதைகள்?
உருதுவிலே காதல் கவிதைகள்.
யார் மேல்?
கொச்சு தெரிசா மேல்.
அதுக்குத் தான் மன்னிப்பு வேணுமா?
அதுக்கும். அந்தக் கவிதைகளை எழுதிய போது மெட்காஃப் உசிரோடு இருந்தான்.
யார் மெட்காஃப்?
கொச்சு தெரிசாவோட முதல் கணவன்.
கல்யாணக்காரி பற்றி காதல் கவிதை எழுதறது தப்பு இல்லையா?
அதுக்குத்தானே நீங்க மன்னிப்பு தரப் போறீங்க?
காதலுக்கா, கவிதைக்கா?
ரெண்டுக்கும் தான்.
காதலை மன்னிச்சுடறேன். மற்றதைப் பற்றிக் கடவுள் தான் தீர்ப்பு சொல்லணும்.
September 2, 2024
நானூறு வருடம் முன் இருந்தவரும், லத்தீனும்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நூல். அதிலிருந்து –
அவன் இந்திய பாணியில் இரு கரம் கூப்பிக் கும்பிட்டுக் கேட்டான் –
துரையவர்கள் யாருன்னு புலப்படலே. அமேயர் பாதிரியாருக்கு உறவா?
பாதிரியாருக்கு எப்படி உறவு இருக்க முடியும்?
மன்னிக்கணும்.
அதைச் சொல்லியாச்சு.
ஆமா, ஆனா உங்க கிட்டே சொல்லலே. கொச்சு தெரிசா கிட்டே சொன்னேன்.
நான் கேட்டதாலே, என்கிட்டே சொன்னதாகவும் அர்த்தமாகும்.
அப்படியா?
அப்படித்தான்.
நீங்க பாதிரியார்னே வச்சுக்கட்டா?
எதுக்கு?
நான் பாவம் செஞ்சுட்டேன்.
பாவத்துக்கும் பாதிரியாருக்கும் என்ன சம்பந்தம்?
அவர் தான் பாவியை மன்னிப்பார்.
அது பாவம் இல்லேன்னா?
அதையும் அவர் தான் சொல்லணும்.
நீ என்ன பாவம் செஞ்சே?
நீங்க பாதிரியாரா இருக்கத் தயார்னா சொல்றேன்.
நான் நானூறு வருஷமா எதுவுமாகவும் இல்லே.
பரவாயில்லே, இந்த நிமிஷத்திலே இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்களே. இது போதும்.
பாவ மன்னிப்பு கேட்க நீ என் பார்வையிலே படும் மாதிரி இருக்கக் கூடாது. எனக்குக் கண் இல்லேன்னாலும் பார்க்கறேன்.
சரி நான் அடுத்த அறையிலே போய் அங்கே இருந்து பாவம் சொல்லட்டா?
அங்கே போய்க் கூச்சல் போட்டா வீட்டுலே, அடுத்த வீட்டுலே, தெருவிலே எல்லாரும் என்னன்னு கேட்டு வந்துடுவாங்க.
அங்கே எக்ஸ்டென்ஷன் ஃபோன் இருக்கே, அதுலே இருந்து பேசட்டுமா? நீங்க இங்கே எடுத்துக் கேட்கலாம்.
என்னாலே அந்த கருவியை எல்லாம் இயக்க முடியாது. நான் இருந்த போது அது இல்லை.
அப்போ நான் இப்படி கண்ணை மூடிக்கிட்டே உங்க கிட்டே சொல்றேன். நீங்க மன்னிச்சுடுங்க.
கேட்க முந்தி எப்படி மன்னிப்பேன்னு சொல்ல முடியும்?
மன்னிப்பை எதிர்பார்த்துத் தானே சொல்றது?
அது பாதிரியார்களுக்கு.
நீங்க இப்போ எனக்காக இந்த நிமிஷம் அப்படி இருங்க.
எனக்கு லத்தீன் மொழி தெரியாது. மன்னிப்பை லத்தீனில் தானே வழங்கணும்?
லத்தீனில் பாவ மன்னிப்பு தருவாங்கன்னு எனக்குத் தெரியாதே.
நீ அப்போ இதுவரை பாவம் செஞ்சதில்லை, அப்படியா?
இல்லே, இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை.
நீ கிறிஸ்துவன் தானே?
இல்லை, மற்ற மதம்.
அப்போ எதுக்கு மன்னிப்பு எல்லாம்?
பாவம் யார் செஞ்சாலும் கேட்கலாமே?
அதுக்கு பாதிரியார் எதுக்கு?
நீங்க தான் பாதிரியார் இல்லையே.
அவன் காரியமாகச் சொல்ல, ஆல்பர்ட் பிரபு சத்தம் எழுப்பாமல் சிரித்தார்.
September 1, 2024
நானூறு வருடம் பழையது, எனவே புனிதமானது
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ –
ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் –
நான் கொச்சு தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு.
அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது –
நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு தரணும். நானூறு வருஷம் பழையவர். அதுனாலே புனிதமானவர். பழையது எல்லாம் பரிசுத்தம் ஆனது.
பாவ மன்னிப்பு தர இந்த வீட்டுலே ஒண்ணுக்கு ரெண்டு பாதிரிமார் இருக்காங்களே. ஒருத்தர் பிரஞ்சுக் காரர், மற்றவர் இந்தியர்.
அமேயர் பாதிரியார் ப்ரஞ்சுக்காரர் . அவரோடு தான் இங்கே வந்தேன்.
அவர் கிட்டேயே கேட்கலாமே.
அவர் கோவில்லே பூசை வைக்கிறதை நிறுத்தச் சொல்லியிருக்காங்க.
யாரு?
டயோசிஸ்லே, மறை மாவட்ட நிர்வாகம் அவரை தாற்காலிகமா குரிசுப்பள்ளி ஊழியத்தை விட்டு ஒதுங்கி இருக்கச் சொல்லுது. அவிசுவாசின்னு சந்தேகப்படுது. விளக்கம் கேட்டிருக்கு.
இருக்கட்டுமே, பாதிரியார் பாதிரியார் தானே?
ஆமா, ஆனா அவர் வத்திகனுக்குப் போயிட்டு இருக்கறவர்.
அவிசுவாசி எதுக்கு வாடிகன்போகணும்?
அவர் அவிசுவாசி இல்லே, அழுத்தமான இறை ஊழியர்னு விளக்கிக் கடிதம் எழுதத் தான் அவங்க மூணு பேரும் உக்காந்திருக்காங்க.
இப்போ உறங்கிட்டிருக்காங்க.
தொடர்ந்து எட்டு மணி நேரம் லத்தீனில் பேசி, எழுதி வந்த களைப்பாக இருக்கும்.
நீயும் உறங்க வேண்டியதுதானே? நான் இங்கே காலாற நடக்கக் கூட இடம் விடாம நீங்க எல்லோரும் கெடுத்திட்டீங்க.
ஆல்பர்ட் பிரபு அலுத்துக் கொண்டார்.
August 30, 2024
வழி மாறித் திரும்பி நீண்டு தேய்ந்து மறையும் பாவமன்னிப்பு
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி கீழே தொடர்கிறது-
மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், கெட்டுப் போன ஒயினும், முந்தாநாள் சாப்பிட்ட மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம் கொடுப்பதிலும் மட்டுமே சிரத்தை கொண்ட பிரஞ்சுக் காரர்களுக்கு இங்கிலீஷ் வரவேயில்லை.
ஆல்பர்ட் பிரபுவுக்கு பிரஞ்சுப் பெண்களின் வாய் நாற்றம் அனுபவம் உண்டு, மாளிகையில் அவ்வப்போது வேலைக்கு வந்த பிரஞ்சு பணிப்பெண்களுக்கு அவரும் பிரஞ்சு முத்தம் கொடுத்துப் பெற்றிருக்கிறார். அவர்கள் குளிக்கச் சோம்பல் பட்டவர்கள். அந்த உடல்வாடைக்கே அவருக்கு மீண்டும் உடல் எடுக்க ஆசை.
கிடக்கட்டும். இந்த பிரஞ்ச் பாதிரியாருக்கு சிநேகிதிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருடைய இங்கிலீஷ் அறிவு சொல்லும் தரத்தில் இருக்கக் கூடும்.
இப்படியான சிந்தனைகளோடு நகர்ந்து, முதல் அறைக்குள் எட்டிப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. மேசை மேல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கருப்பன் உறங்கிக் கொண்டிருந்தான். இவன் போன முறை பார்த்தபோது முட்டக் குடித்து விட்டு இந்தக் கென்ஸிங்டன் வீட்டுப் படியேறி இருந்தான். இப்போது குடித்தானா என்று தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
ஆல்பர்ட் பிரபு உள்ளே நுழைந்து அவன் தலையில் கை வைத்தார். இது பனிக்கட்டியைக் கவசம் செய்து தலையில் கவிழ்த்தாற்போல் ஒரு குளிரை உடலெங்கும் பரவ வைக்கும். அவன் எழுந்து உட்காரட்டும். சத்தம் போடுவானோ தெரியவில்லை. என்றால், ஆல்பர்ட் பிரபுவுக்கு சத்தம் உகந்ததில்லை.
தெரிசா நீ மன்னிக்க நேரம் வந்திருக்கு. என்னை மன்னிச்சுடு தெரிசா.
ஆசியக் களையுள்ள அவன் யாரிடமோ எதற்கோ மன்னிக்கச் சொல்லி நல்ல இங்கிலீஷில் மன்றாடுகிறான். அவனுடைய வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற வந்த சேடியோ? அவள் பிரஞ்சுக்காரியாக இருப்பாளோ?
அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணை மூடியபடியே ஆல்பர்ட் பிரபுவின் புகை வடிவெடுத்த கை மேல் தன் கரத்தை வைத்து இன்னொரு முறை அழும் குரலில் சொன்னான் –
உன் மேலே பிரியம் இருந்த காரணத்தாலே தான் இதைச் சொல்லாமலேயே இருந்துட்டேன். நான் செஞ்சது தப்பு தான் கொச்சு தெரிசா. என்னை மன்னிக்கணும் நீ.
August 27, 2024
ஆல்பர்ட் கோமகன் நடு இரவில் அருளி நடந்தது-வைதிகர்கள் வாழ்த்தப்படட்டும்
வாழ்ந்து போதீரே – அரசூர் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ-
கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள்.
மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம்.
குடியும், சதா பெண் மோகமுமாக அலைந்து ஐவேசு சொத்தை எல்லாம் கரைத்த அந்த அயோக்கியர்கள் மேஜை வாங்கியா போட்டிருப்பார்கள். ஆல்பர்ட் பிரபு அவர்களுடைய அரைக்குக் கீழே புழுத்துத் தொங்கவும் வலிக்க வலிக்க அறுந்து விழவும் சபித்த பிற்பாடே அவருடைய சந்ததி அவரோடு முடிந்த விவரம் நினைவு வந்தது.
மூன்று மர நாற்காலிகளில் இரண்டில் பாதிரியார்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருத்தர் ஏற்கனவே ஆல்பர்ட் பிரபு சந்தித்திருந்த பிரஞ்சுக் காரர். இன்னொருத்தனுக்கு முழுக்க இந்தியக் களை. ஆனாலும் பாதிரி உடுப்பு. இங்கிலாந்தில் பூசை வைக்கிறவன் இல்லை போல. இந்தியாவில் இருந்து வந்திருப்பானோ?
அந்த வைதிகன் எங்கே இருந்து வந்திருந்தாலும், இப்படி ஆல்பர்ட் பிரபு மாளிகையில் சர்வ சுதந்திரத்தோடு இருந்து சௌக்கியப்பட அவனுக்காகி இருக்கிறது. இருக்கட்டும். கருத்த பாதிரிகள் வாழ்த்தப்படட்டும்
மூன்றாவது நாற்காலியில் அந்த இந்தியப் பேராசிரியன், அவன் தான் வீட்டில் சட்டமாக குடி வந்தது மட்டுமில்லாமல், ஆல்பர்ட் பிரபுவின் ராத்திரி நேர சஞ்சாரங்களை ஒரு பொருட்டாக மதிக்காத மனுஷன். மந்திரவாதியோ என்னவோ. ஆல்பர்ட் பிரபுவை மந்திரத்தால் ஒரு சிறு மரச் செப்பில் அடைத்து தேம்ஸ் நதியில் மிதக்கவோ அமிழ்ந்து போகவோ கொண்டுபோய் விடக்கூடும். மரச் செப்புகள் இன்னும் கிடைக்கின்றனவா என்று அவருக்குத் தெரியவில்லை.
பிரபு இந்த மூன்று பேருக்கும் அருகில் போய் நோட்டமிட்டார். மூவரும் மேஜையில் தலை வைத்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கம் பக்கமாக எழுதி அடுக்கிய ஏதோ அவர்கள் அருகில் இருந்தது. இங்கிலீஷில் தான் எல்லாம்.
ஆல்பர்ட் பிரபு காலத்துக்கு அப்புறம் நிறைய நல்லது நடந்திருக்கிறது. முக்கியமான ஒன்றுண்டு. இந்தியாவுக்குள் புனிதமான அடியெடுத்து நுழைந்து, மேன்மை தாங்கிய ஆங்கிலேயப் பேரரசு அங்கே ஜனங்களுக்கு எல்லாம் இங்கிலீஷ் கற்றுக் கொடுத்துக் கடைத்தேற்றியதே அது. அப்படி நடக்காமல் இருந்தால் இந்த மூன்று பேரும் சட்டமாக உட்கார்ந்து இங்கிலீஷ் என்ற தேவ மொழியில் கத்தை கத்தையாக எழுதிக் குவிக்க முடியுமா என்ன?
August 25, 2024
ஆல்பர்ட் பிரபு இருநூறு வயது சிநேகிதிகளின் பட்டியல் இடும் நேரம்
வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே-
இப்படி யார் யாரையோ வீட்டுக்குக் கூப்பிட்டு அரிசி வடித்துக் கொட்டித் தின்ன வைத்து ராத்திரி முழுக்க விளக்கைப் போட்டுக் கொண்டு கூட்டாலோசனை செய்து கொண்டிருக்கிறவன் தான் காரணம்.
இந்த வீட்டுக்குள் அவன் வந்தது முதலே ஆல்பர்ட் பிரபுவை மதிக்கிறதுமில்லை. கண்டு கொள்வதும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரர், நானூறு வருஷம் முன் மகா பிசகாக ஏதோ செய்து சமுத்திரத்தில் கப்பல் முழக மரித்தாலும் இன்னும் கடைத் தேறாத ஆவி என்பதெல்லாம் மூத்திரம் போவது போல அற்பக் காரியம் அவனுக்கு.
வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஆவி சமாசாரத்துக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ராணி கூடப் பயப்படுவாள். என்னத்துக்கு அந்த அம்மாள் நினைவு?
வாசலை ஒட்டித் தணிந்த நிலைப்படி இருந்த அறையில் விளக்கு எரிகிறது. ஆல்பர்ட் பிரபு பார்த்துப் பார்த்து வடிவமைத்து, ஷாண்லியர் விளக்கு போட்டால் தலையில் முட்டும் என்று மெழுகுவர்த்தி நிறுத்தி வைக்க செப்புக் கிண்ணம் சுவரில் மாட்டிய அருமையான அறை. மெழுகுவர்த்தி வைக்க வந்த பணிப் பெண்களான எமிலி, ரீத், ஹன்னா, ரொபர்ட்டா, கிரேசி, டெய்சி, ஹெலன், கிளாரா, எடித், மரியா, ரூத், ரீகன், ஹென்றியெட்டா, சாரா, ஜூலியா, லியன், கரோலின், விர்ஜீனியா, சூஸன், ரேஷல், வொயலட் என்று எத்தனை பேரை சுவரில் சாய்த்து நிறுத்தி வைத்து சுகம் கொண்டாடி இருக்கிறார் அவர். லாரன்ஸா, கானரில், லில்லி, காதரின், நான்சி, ஷார்லெட், லோலா, ஈவா, ரெபக்கா, ஜென்னி, ஸ்டெல்லா, மேகி, ஏஞ்செலா, ரோஸ், சில்வியா, பார்பரா, ஆட்ரி, லிண்டா, எலிஸா, நவோமி, செல்மா, இசபெல், ஓபல், எம்மா என்று அவரோடு சுகித்த உறவுக்கார, அண்டை அயல் பெண்களையும் மறந்து விட முடியுமா? தினமும் இதில் யாராவது ஒருத்தியின் பிரத்யேக வாடையோடு தான் ராத்திரி முழுக்க இங்கே மெழுகு வர்த்தி எரிந்து கொண்டிருந்தது.
அவர்கள் எல்லோரும் கல்லறைக்குப் போய் எலும்பும் பொடிபொடித்து அந்திம நித்திரையில் இருக்கிறார்கள். தினசரி அலைவது ஆல்பர்ட் துரைக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தாமதமானாலும் அவர் நடந்து போய்த் தான் ஆக வேண்டும்.
August 23, 2024
கென்சிங்டன் – ஏர்ள்’ஸ் கோர்ட் மாளிகையில் ஆல்பர்ட் பிரபுவின் ஆவி எழுந்து உலவும் நள்ளிரவு நேரம்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தைந்து
ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது.
எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.
சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார்.
மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க, இரண்டு பாதிரியார் அங்கிகளும், கால் சராய்களும் உள்ளே உடுக்கும் துணிகளும் நடுநாயகமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. கீழ்த் தட்டில் ஒரு பெரிய தோல்பெட்டி நாராசமாக பயண வாடையைக் கிளப்பிக் கொண்டு பாதி திறந்து கிடந்தது. அதைச் சுற்றி அழுக்கான, வியர்வை உலர்ந்த காலுறைகள். கசங்கிச் சுருண்ட கைக்குட்டைகள். புழுதி படிந்த இரண்டு ஜதை காலணிகளும் கூட அங்கே உண்டு. ஆக, நானூறு ஆண்டு பழமையுள்ள அலமாரியும் பறிபோனது இன்று.
இது ஏர்ல் ஓஃப் ஃபோர்ட் லில்லியென்ற அல்லிக் கோட்டை பிரபுவான ஆல்பர்ட் ரிச்சர்டன் அவர்களின் சபிக்கப்பட்ட பொழுதாக இருக்கக் கூடும்.
ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர் நீள நெடுக நடக்க வேண்டும். கீழ்வீடு முழுவதும், படியேறி மாடியிலும், வெளியே சிறு தோட்டத்திலும் காலாற உலாவ வேண்டும். ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்குள், ஜன்னலை விரியத் திறந்து பிரவேசிக்க வேண்டும்.
எதற்காக அதை எல்லாம் செய்ய வேண்டும்? இன்று அவரால் முடியாது. என்ன பயித்தியக்காரத் தனம்? செய்யச் சொல்லி யார் விதித்தது?
கோபம் தலையேற அவர் வெளியே வரும்போது கதவு அடித்துச் சார்த்திக் கொள்ளும். காற்றால் மரக் கதவும் ஜன்னலும் மூடியதாகவும் திறந்ததாகவும் நினைக்கிற மனிதர்களுக்கு அவ்வப்போது தன் உருவத்தைக் காட்டித் தருவார்.
எதற்காக? ஆல்பர்ட் பிரபுவின் அந்தரங்க உறுப்பு ரோமத்தை விட இழிவானவர்கள் அவர்கள். அவருக்கு அப்படி ஒரு உறுப்பு தற்போது, ஒரு நானூறு வருஷமாக இல்லை தான். ஆனால் என்ன? அவருடைய சரி சமானமாக இங்கே பிருஷ்டத்தை வைக்க எவனுக்குத் தகுதி உண்டு. இந்த நாட்டை ஆளுகிற பக்கிங்ஹாம் வம்ச ராணியம்மாள் கூட இங்கே படியேற அருகதை இல்லாதவள். அவளை ஒரு நாள் அரண்மனைக்குப் போய்ப் பயமுறுத்தினால் என்ன?
ஏர்ல்ஸ் கோர்ட் வீட்டில் நாலடி நடக்கவே சோர்ந்து வருகிறது. அரண்மனைக்குப் பூச்சாண்டி காட்டப் போவதாவது ஒன்றாவது. ஆல்பர்ட் பிரபு போகத் தகுந்ததா அது. இந்த வீட்டின் கழிப்பறை அந்தஸ்து பெறுமா பக்கிங்ஹாம் அரண்மனை?
வீட்டு முன்னறையில் இரண்டு ஜோடி காலணிகளைப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு. புதியதாகத் தெரியும், நல்ல தோலில் செய்யப்பட்ட, ஆண்கள் அணியும் பாதரட்சை ஒரு ஜோடி. எந்த நிமிடமும் அடிப்பாகம் அற்று விழுந்து உபயோகிப்பவரைத் தரை தொட வைக்கும் நைந்த ஜோடி மற்றது.
ஆல்பர்ட் பிரபு புன்னகை புரிந்தார். அவருக்கு நைந்த இந்தக் காலணிகளைத் தெரியும். பாதிரியார்களும் பிஷப்புகளும் அணிகிறவை அவை. நானூறு வருடமாக அப்படித்தான். இந்த வீட்டுக்குள் முன்னொரு முறை படியேறி வந்தவை. கூட இருக்கும் புதுச் செருப்புகளை அணிந்தவனையும் அவருக்குத் தெரியும்.
பாதிரியார் போன தடவை வந்தபோது கூடவே ஒரு செழிப்பான இந்தியப் பெண் வந்தாளே? அவள் என்ன ஆனாள்?
யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஒரு நாளா, ரெண்டு நாளா, நானூறு வருஷமாகத் தினம் தினம் வழக்கமாக நடந்ததை இன்றைக்குத் தாறுமாறாக்கியது யாராக இருக்கும்?
August 20, 2024
தடாகங்களையும் வாய்க்கால்களையும் எதிர்பார்த்து லீட்ஸ் வழி லண்டன்
பரிசோதகர் டிக்கட்டைப் பரிசோதிக்காமலே இறங்கி விட்டதில் அவருக்கு மகா ஏமாற்றம். ஒரு குளிர் பானமும் ஒரு தகரக் குவளை லாகர் பியரும் என்று முசாபர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, அமேயர் பாதிரியார் கழிப்பறைக்கு நடந்தார்.
அங்கே தாழ்ப்பாள் போட்டிருக்கக் கூடாது. உள்ளே எப்படி இருந்தாலும் சரிதான். பாதிரியார் உடுப்பு நனையாமல் ஜாக்கிரதையாக நிற்க வேண்டும்.
அவர் வேண்டுதல் எல்லாம் செவிசாய்க்கப்பட, வெளியே வந்தபோது அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த முசாபர் குளிர் பானத்தை அவரிடம் நீட்டினான்.
கொச்சு தெரிசாவின் பாட்டி, இந்தியப் பெயர் வரும், தீப்ஜோத் என்றோ என்னமோ, அந்தக் கிழவி என்னை படி ஏற்றாமல் விரட்டி விட்டாள். அது நான் இவளைப் பெண் கேட்டுப் போனபோது.
அவன் பழைய நினைவுகளில் ஆழ்ந்து பியரை உறிஞ்சிக் கொண்டே பேசினான். குளிர்பானத்தை இப்போது குடித்து அது இன்னும் அரை மணி நேரத்தில் நெளிய வைக்கும் என்று பட, அமேயர் பாதிரியார், அதையும் முசாபர் பக்கத்தில் வைத்தார்.
மெட்காப் இறந்து அவனைப் புதைத்த கல்லறை ஈரம் உலர்வதற்குள் நான் கொச்சு தெரிசாவை மணம் செய்து கொண்டேன்.
அவன் பெருமையோடு சொல்ல, அமேயர் பாதிரியாருக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னதான் ஆப்ரகாமிய வேரில் வருகிறவன் என்றாலும், அமேயர் பாதிரியாரின் கோவிலில் பூசை வைத்துப் பரலோகம் போன ஒருத்தனின் நினைவுக்கு மரியாதை இல்லை, இந்த முசாபிர் சொன்னது.
அவர் அமைதியாக ரயில் ஜன்னலுக்கு வெளியே தடாகங்களையும், வாய்க்கால்களையும் எதிர்பார்த்து இருக்க, வெறும் தரையும் கட்டிடங்களின் நெரிசலுமாக லீட்ஸ் வந்து விட்டது.
அவருடைய தோல்பையையும் உரிமையோடு எடுத்துத் தோள்பட்டையில் மாட்டிக் கொண்டு முசாபர் கேட்டான் –
அச்சா, நான் உங்க கிட்டே பாவமன்னிப்பு கேட்கலாமா?
August 19, 2024
ஹதீம் தாய் போன்ற கேவா கலர் சினிமா பாணியில் பழங்கதை சொல்லத் தொடங்கியபோது
வாழ்ந்து போதீரே -அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காவது- அந்தப் புதினத்தில் இருந்து அடுத்த சிறிய பகுதி இங்கே இதோ-
அழகான உச்சரிப்பில் பிபிசி செய்தி வாசிக்கிற அல்லது அரசியல்வாதியைக் கழுத்தில் வார்த்தைக் கத்தி வைத்து நேர்காணல் நடத்தும் ஒளிபரப்பாளன் போன்ற வசீகரமான தோரணைகளோடு முசாபர் கேட்க, அமேயர் பாதிரியார் யோசிக்காமல், அவனிடம் சொன்னார் – சொல்லு.
அவருக்கு ஏதாவது பேச வேண்டும். அல்லது கேட்க வேண்டும். அல்லது அந்த புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவப் பெண்மணி இறங்கிப் போக வேண்டும். அவள் வண்டி ஏறும்போதே அமேயர் பாதிரியாரை இளக்காரத்தோடல்லவா பார்த்தாள்? அவர் வாடிகனுக்கு இறை ஊழியம் செய்யப் புறப்படப் போகிறார் என்று தெரிந்தால் அவளுக்கு மரியாதை வருமோ? போப்பையே மதிக்காத கூட்டம் இல்லையோ அவளுடையது? அவளுக்கு முன்னால் நடந்து போய்க் கதவு திறந்து கழிப்பறையைப் பயன்படுத்துவது போல தரங்கெட்ட ஒரு செயல் இருக்க முடியுமா? வாடிகனில் கழிப்பறைகள் எப்படி இருக்கும்? வேண்டாம் அது.
டிக்கட் பரிசோதகரும், ரயிலின் ஆட்டத்தோடு சேர்ந்து ஆடி, அதிகமாக கொனஷ்டை பண்ணிக் கொண்டு ஒரு இளம் பெண்ணும் ரயில் பெட்டிக்குள் வந்துன்அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு எதிரில் நின்றார்கள். டிக்கெட் பரிசோதரோடு வந்த பெண் கழுத்தில் மாட்டியிருந்த திறந்த பெட்டியில் குளிர் பானங்களும், பியர் தகர உருளைகளும் இருந்ததை இங்கே இருந்தே பார்த்த முசாபிர், குளிர வைத்த பெல்ஜியம் பியர் கிடைக்கும் என்றான் உற்சாகமாக.
வேண்டாம், அதை நினைத்தால் அமேயர் பாதிரியாருக்கு இன்னும் சிரமமாகப் போகும். பாழும் வயிறும் சிறுநீரகமும் இப்படியா பழி வாங்கும்?
டிக்கெட் பரிசோதகர் ஏதோ சொல்லித் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினார். பானங்களைச் சுமந்து வந்த இளம்பெண் சுவாரசியமான காட்சியைக் காணும் ஆர்வத்தோடு பெட்டியில் இருந்து ஒரு சூயிங் கம்மையோ வேறேதோ ஒன்றையோ காகிதம் உரித்துக் கீழே போட்டு, வாயில் இட்டுச் சவைக்க ஆரம்பித்தாள்.
அவளை நோக்கி, பியரைக் கொடுத்துட்டு போ என்று சைகை செய்தான் முசாபர், பெண்டாட்டிக்குத் தங்கை, அக்கா என்று மச்சினியிடம் உரிமை எடுத்துக் கொள்கிற மாதிரி. அவளும், இதோ வரேன் கண்ணா, எனக்காகக் கொஞ்சம் பொறு என்ற தோதில் ஒரு முத்தத்தை முசாபரை நோக்கிப் பறக்க விட, அமேயர் பாதிரியார் எல்லோருக்கும் நல்ல புத்தி வர வேண்டிக் கொண்டிருந்தபோது கடந்து போன பெரிய வாய்க்காலைப் கண்டார்.
வேண்டவே வேண்டாம், இனியும் நேரம் கடத்த முடியாது. புராட்டஸ்டண்ட் கிழவிகள், முத்தம் பறக்க விடும் யுவதிகள் சேரும் அதே நரகத்துக்குப் போகட்டும். அவர்களைச் சங்கடப்படுத்துவது ஒன்றும் பாவ காரியமில்லை.
அவர் பக்கத்தில் தான் ஏசு இருக்கிறார். எல்லாம் ஜெயம் உனக்கு என்கிறார். டிக்கெட் பரிசோதகர் ஒரு தடவை மென்மையாக, மற்ற முறை உரக்க, மறுபடி மென்மையாக என்று மாற்றி மாற்றிச் சொல்லி புராட்டஸ்டண்ட் பெண்மணி பக்கம் அசையாமல் நிற்க அவள் எல்லோரையும் திட்டிக் கொண்டும், திரும்பிப் பார்த்து கத்தோலிக்க அமேயர் பாதிரியாரைத் திடமாகச் சபித்துக் கொண்டும், கீதம் ஒன்றை அபசுவரமும் குரல் பிசிறலுமாகப் பாடிக் கொண்டும் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கிப் போனாள்.
உயர்நிலைப் பள்ளியில் எனக்கு நாலு வகுப்பு கீழே படிச்சிட்டிருந்தா கொச்சு தெரிசா. ரொம்ப அழகான ஆட்டுக்குட்டி அவ அப்போ. அப்பவே அவ மேல் நேசமாச்சு.
முசாபர் பழைய சினிமாப் படத்தில் வசனம் சொன்ன பாணியில் பேசிக் கொண்டிருந்தான்., ஹதிம் தாய் அல்லாத பழைய திரைப்படம் அது. பிரஞ்சில் இருப்பதால் அந்த மொழியில் காதலிப்பார்கள். பிரஞ்சில் சிறுநீர் கழிப்பார்கள்.
போதும், இப்போது நடக்கலாம். எழுந்து நின்றார் அமேயர் பாதிரியார்.
அவர் முசாபரிடம் தன்னை மன்னிக்கும்படி இரைஞ்சி, டாய்லெட்டுக்கு நடக்க, டிக்கெட் பரிசோதகர் இவர்கள் இருக்கைகளை நோக்கி வந்தார். கூடவே அந்த பியர் விற்கும் பெண்ணும்.
கிளம்பிய வேகத்தில் இருக்கைக்குத் திரும்பினார் அமேயர் பாதிரியார். டிக்கெட்டைப் பரிசோதித்த பின்னர் தான் மற்றதெல்லாம். சிறுநீர் கழிப்பதை நினைக்கக் கூடாது. வேறே எதை நினைப்பது?
ஏன், நினைத்துச் சலிக்க அந்த டயோசிஸ் கடிதமே போதுமே. அமேயர் பாதிரியார் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தக்க விதத்தில் விளக்கம் அளித்துத் தான் குற்றமற்றவர் என்று ஒரு விவரமான கடிதம் எழுதி, அது ஏற்றுக் கொள்ளப் பட்டதும் வாடிகன் போகலாம் என்று அறிவுறுத்தி வந்த கடிதம்.
வேற்று மத வளர்ச்சிக்கு வெளிநாடான இந்தியாவில் உழைத்தது, இறை ஊழியத்தை உள்ளூரில் புறக்கணித்து சுற்றித் திரிந்தது என்று அவர் செய்யாத குற்றம் எல்லாம் பட்டியல் போட்டதோடு, ஆடும் பறவை என்ற சாத்தானின் மயக்கும் உருவப் பாவத்தை இங்கே கொண்டு வந்து ஊரைப் பயமுறுத்தியதும் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.
அதற்குத் தகுந்த பதில் எழுத வாடிகனிலேயே இருக்கும் தெக்கே பரம்பில் பாதிரியார் உதவி செய்ய இருக்கிறார். மிகப் பெரிய, நூறு பக்கம் வரை வரும் கடிதத்தை அமேயர் பாதிரியார் டயோசிஸுக்கு சமர்ப்பிப்பார்.
அடுத்த மாதம் அவர் வாடிகனுக்குப் போகும் போது குற்றம் சொன்னவர்களே வந்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள். வாடிகனில் அவருக்கு, இதோ எதிரில் நிற்கும் பெண் சுமந்து வந்திருப்பவை போன்றா நல்ல குளிர் பானங்கள் தடையின்றிக் கிட்டும். வேண்டாம். இந்தாருங்கள் என் டிக்கட்.
August 17, 2024
Running a Fish and Chips retail outlet on behalf of Kochu Teresa
இவன் மட்டும் கத்தோலிக்கனாக இருந்தால் குரிசுப் பள்ளியில் அவனுடைய நல்ல குணங்களை, வயிறு சரியாக இயங்கிய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்த்தும் பிரசங்கத்தில் எடுத்துச் சொல்லி அவனுக்காகப் பிரார்த்தித்து இருப்பார்.
இப்போதும் அவனுக்காக மன்றாட என்ன தடை? எதுக்கு மன்றாட? அவன் மனைவியைப் பிரிந்து கிடக்கிற வாதனைக்காக. இல்லறத்தில் இருக்கிறவர்களுக்குப் பெரிய துயரமில்லையா அது? அவர் அங்கி உடுத்தி வந்தாலும் அவருக்கும் இதயம் இருக்கிறதே, அந்தத் துக்கம் விளங்காதா என்ன?
நீ இப்படி கொச்சு தெரிசா நினைப்பும் அந்தப் பொண்ணோட காரியங்களைச் செய்யறதுமா எத்தனை நாள் இன்னும் இருக்கப் போறே? ஃபிஷ் யண்ட் சிப் கடையைத் திறக்கறது இருக்கட்டும், உன்னோட மூலைக் கடை, மளிகை சாமானும், தட்டு முட்டுமா நல்ல வித்துட்டிருந்தியே. அதை இந்தியா போறேன்னு அப்படியே விட்டுட்டியே. தப்பு இல்லியா?
அமேயர் பாதிரியார் முசாபரைக் கேட்டார்.
ரயில் பயணத்தில் மனம் லேசாகிறது. குரிசுப் பள்ளியிலோ, கால்டர்டேல் வீதியிலோ வைத்து முசாபரோடு இதைக் க
மளிகைக் கடையைச் சீக்கிரம் திறக்க சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கு அச்சன்.
முசாபர் சொன்ன போது கொஞ்சம் போல் அதில் சோகம் தட்டுப் பட்டதை அமேயர் பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை.
மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட முசாபரின் பாட்டனார் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்த சிறு வியாபாரி அவர் என்பதும் கால்டர்டேலில் நீண்ட காலம் வசிக்கும் குடும்பங்களில் இவர்களும் உண்டு என்பதும் பூசை நேரம் முடிந்த அரட்டைக் கச்சேரிகளின் போது பாதிரியார் காதிலும் விழுந்ததுண்டு.
அதெல்லாம் வராமலேயே, முசாபர் ஓர் ஆட்டுக் குட்டியாக, இந்த பிரஞ்சுக்கார மேய்ப்பனை, மதம் வேறே என்ற கருதலின்றி வரிந்து கொண்டு கூடவே வருகிறான். கொச்சு தெரிசா கோவிலில் பட்ட குடும்பம் என்பது இந்த உறவை இன்னும் உன்னதப்படுத்தி இருக்கிறது. போய் வந்த இந்தியப் பயணம் அதை இன்னும் பலமாக்கி விட்டது.
லீட்ஸ் போய்ச் சேர இன்னும் முப்பது நிமிஷமாவது ஆகும் அச்சா. அதுவரை என் புராணத்தை கேட்க உங்களுக்குப் பொறுமை உண்டா?
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

