இரா. முருகன்'s Blog, page 4
February 1, 2025
தீவளிக்கு தீவளி
சின்னச் சின்ன சந்தோஷங்களில்
இதுவும் உண்டெனக்கு –
பழைய தீபாவளி மலர்களை
பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது
காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது
டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது,
நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால்
காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி;
நானில்லா பழையதோர் ஆண்டுக்கு
ஓசையின்றி சென்று வரலாம்.
எல்லா தெய்வமும் வந்திருந்து
பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி
நிற்பர் சாய்ந்து முன்னட்டையில்
இன்னும் யாரும் அமரவில்லை.
பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும்
சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும்
தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்;
திண்தோள் மான்கண்ணி ராஜகுமாரி
புன்சிரித் திளமை மதர்த்து நிற்கிறார்.
உற்று நோக்கி உன்மத்தமாகிப்
பார்த்துக் கிளர்ந்தோர்
எத்தனை பேரோ.
சின்னப்பா விரும்பி அணிவதென்று
சட்டைத் துணிக்கு சிபார்சு
சுதேசியில்லை மில்துணி மல்துணி
காந்தி சொல்மீறி யார் வாங்கினரோ.
தீபாவளி மலர்க் கதையிலெல்லாம்
கோலம் போட்ட வாசல்தோறும்
குதிரை வண்டி நிறுத்தி
தலைதீபாவளி மாப்பிள்ளைகள்
இறங்கி முடியலை.
தீபாவளிக்கு வைரமோதிரம்
போடலையென்று கோபித்துப் போனவர்
மூன்றாம் பக்கம் திரும்பி வருவார்
மகிழ்ச்சியாக முடித்து வைக்க
தீபாவளி மலர்க் கதையாச்சே.
ஆபீசுகளில் அரைத்தூக்கம்
போடுகிறவர்கள் சம்மர் கிராப் வைத்து
வேட்டியும் ஓவர் கோட்டும் தரித்து
துணுக்குப் படத்தில் தும்முகிறார்கள்.
எதிர்ப் பக்க விளம்பரம்
ஆபீஸர் மூக்குத்தூள்.
கருப்பு வெள்ளை புகைப்படங்களில்
கம்பி மத்தாப்பு கொளுத்திச் சிரிக்கும்
குழந்தைப் பெண்கள் இன்றுமிருந்தால்
எண்பத்தைந்து வயது ஏறக்குறைய.
கந்தபுராணக் கதையொன்று
மஞ்சள் சிவப்பில் சர்வமும் துலங்க;
கந்தன் பார்க்கக் கண்ணன் சாயலில்
கண்ணனை இங்கே பார்த்தவர் யாரோ.
எண்பது வருடம் முந்திய ஓர்தினம்
பண்டிகை விருந்து புதுத்துணி உடுத்தி
கையில் எடுத்துப் புத்தகம் பிரித்து
காகிதம் முகர்ந்தவர் நினைவுக்கு வந்தனம்.
(சென்னை அசோக்நகரில் வசித்தபோது எழுதியது)
January 31, 2025
அனுமன் காத்திருக்கின்றான் மின்முரசு அதிர
அனுமன் திருக்கோவில்
முக்கால்வாசி மூடிய வாசல்முன்
பத்திருபது பக்தர்கள் காத்திருப்பர்;
குளிக்காத, ஷார்ட்ஸ் அணிந்த
கான்வாஸ் ஷூ கழற்றாத
இன்னும் பலர் என்போல
வெளிவாசல் நின்று
உள்நோக்கிக் காத்திருப்போம்;
திருத்துழாயும் உலர்ந்த திராட்சை
தட்டுமாக கோயிலர்கள்
மணியடிக்கக் காத்திருப்பர்;
மடைப்பள்ளி நைவேத்யம்
வெண்பொங்கல் பொங்கிவர
அனுமன் காத்திருப்பார்
இன்றைய காத்திருப்பு
இத்துடன் முடிய
மின்சார முரசு முழங்குது கேள்.
January 28, 2025
கணையாழியும் கி.கஸ்தூரிரங்கனும் நானும் சுஜாதாவும் (நிறைவு)
பதிப்பிக்கப்பட இருக்கும் என் அல்புனைவு நூல் இதுவும் அதுவும் உதுவும்-இல் இருந்து
————————————————————————
— —
தொண்ணூறுகளின் மத்தியில் கி.கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது.
ராம்ஜி என் நெருங்கிய குடும்ப நண்பர். நானும் அவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலமை அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தோம். பாரதி மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். (நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.).
ராம்ஜியும் நானும். கி.கவை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். கணையாழி இதழின் அப்போதைய இலக்கியப் பங்களிப்பு, நிதி நிலைமை, பற்றிய Status Review meeting ஆன அந்தச் சந்திப்புகளில் சுஜாதாவும் இ.பாவும் தவறாமல் கலந்து கொள்வார்கள். அப்படியான ஃபுல் பெஞ்ச் சந்திப்பு நிகழும்போது ‘கணையாழி கவிதை முந்தைய தரத்தில் இல்லை’ என்ற சாகாவரம் பெற்ற வரியோடு ஒரு போஸ்ட் கார்ட் நிச்சயம் வந்திருக்கும். அதைக் காட்டி சுஜாதா என்னை குறுக்கு விசாரணை செய்வார். ‘ஏம்பா போன மாசம் ஒரு கவிதைகூட தேறலியாமே?’
கணையாழிக்கு முதல் கட்ட கவிதைத் தேர்வாளன் என்ற முறையில் நான் அடுத்த கட்டத் தேர்வாளர் ஞானக்கூத்தனைக் கைகாட்டி, சுஜாதாவின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அபூர்வமாக கி.க பாராட்டிய கவிதைகளையும் மறக்காமல் குறிப்பிடுவேன். இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்பட்டால் சிலாகிக்க எப்போதும் பசுமையாக நினைவில் ஒட்டிக்கொண்ட, கி.க எழுதிய கவிதையே துணை – ,
கடவுளையும் சர்க்காரையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது இன்னொரு சர்க்கார்’.
நான் சொல்வேன் ‘கடவுளையும் கவிதையையும் பழிக்காதே. பழித்தால் உனக்குக் கிடைப்பது ஓராயிரம் கவிதை’.
கி.கவின் சர்க்கார் கவிதையை யார் எழுதியது என்று தெரிந்தோ தெரியாமலோ இன்னும் மேற்கோள் காட்டுகிறார்கள். நான் கலந்து கொண்ட ஒரு சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் ரிவ்யூ மீட்டிங்கில் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் செய்த இலக்கிய ரசிகரான (அப்போ நிச்சயம் கவிஞரும் தான்) பிராஜக்ட் மேனேஜர் கூட இதில் உண்டு. கி.கவுக்கும் சுஜாதாவுக்கும் சொல்ல விட்டுப்போன தகவல் இது.
கி.க சொல்லி நான் முடிக்காமல் போன காரியம் உண்டு. கணையாழித் தொகுப்புகளாக நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட என்னை தொகுப்பாசிரியனாக இருக்கச் சொன்னார். கூடவே ரெண்டு கள்ளியம்பெட்டி நிறைய பழைய கணையாழி இதழ்களையும் பொறுப்பாகக் கொடுத்து அனுப்பினார். ஒவ்வொரு கணையாழியாக எடுத்து நான் வரிவரியாகப் படித்து சிலாகிப்பதற்குள் பிரிட்டன் அழைத்து விட்டதால் கள்ளியம்பெட்டிகளை கி.கவின் கொட்டிவாக்கம் வீட்டில் திருப்பிக் கொடுத்து விட்டுப் பறந்து விட்டேன். வெ.சபாநாயகம் பொறுமையின் திலகமாக அப்புறம் செய்து முடித்த அருஞ்செயல் அது.
சுஜாதா நினைவுக் கூட்டத்தில் பின்னரங்கில் உட்கார்ந்திருந்த கி.க என்னிடம் சொன்னார் – ‘யுகமாயினி பத்திரிகையில் சுஜாதா படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதேன்’. நான் எழுதவில்லை என்றாலும் தேவகோட்டை மூர்த்தி சிரத்தையாக எழுதி வந்தார். யுகமாயினி தான் நின்று போய்விட்டது.
சுஜாதா நினைவுக்காக இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டத்தில் பேசும்போது கி.க சொன்னார் –‘என்னை விட வயசிலே சின்னவன்(ர்). அவர் போனதுக்குப் பதில் நான் போயிருக்கலாம்.’.
பத்திரிகை ஆசிரியர்கள் கண்கலங்க வைப்பதில்லை. கி.க விதிவிலக்கு. அவர் வாழ்க்கையை என்னைப் போல் மற்ற நண்பர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே இதமாக இருக்கிறது.
அன்னை அணிந்தாள் அனுமன் சுமந்திட்டான்
பின்னையும் யார்க்கோ கிட்டியதாம் – என்னாபோ
அஸ்கா இனிப்பாய் கணையாழி என்றதுமே
கஸ்தூரி ரங்கன் நினைப்பு
(நிறைவு)
January 26, 2025
சுஜாதாவும் கி.கஸ்தூரிரங்கனும் நானும்
என் அல்புனைவுக் கட்டுரைத் தொகுதிகள், ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன். அவற்றில் ஒன்று ‘இதுவும் அதுவும் உதுவும்’. நூலில் இருந்து கொஞ்சம்போல் இங்கே தருகிறேன்.
இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை படித்தேன். ‘நல்லா வந்திருக்கு’ என்று மனம் நிறைய ஆனந்தம். ஆபிசுவரிக்கு இதைவிட அவமானம் கிடையாது. டெலிட் செய்துவிட்டு பய்யாம்பலம் பயணக் கட்டுரையாக்கி அனுப்பி வைத்தேன்.
ஆர்தர் சி கிளார்க் இறந்தபோது மனுஷ்யபுத்ரன் ஒரு சாயந்திரம் கூப்பிட்டு விடிகாலைக்குள் எழுதி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அது என் கல்யாண வெள்ளிவிழா நாள். ராத்தூக்கம் விழித்து மாஞ்சுமாஞ்சு எழுதி – அதைவிட முக்கியமாக வெள்ளிவிழா ராத்திரியில் கொண்டாட வேறே என்ன இருக்கு?- அனுப்பி வைத்தேன். சொன்ன சொல் காப்பாற்றிய நிம்மதி தான் அப்போது. ஆபிசுவரிக்கு ஒத்து வராத உணர்வு இந்த நிம்மதியும்.
இனிமேல் நானே போனால் கூட ஆபிசுவரி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். சுஜாதா இறந்து போனார். மலர் வளையத்தோடு அஞ்சலி செலுத்தப்போய் சீனியர், ஜூனியர், சக எழுத்தாளர்களோடு சுஜாதா நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் கனிமொழி அழுதபடி நின்றிருந்தார். அவரைப் பாதித்த துக்கம் என்னை பாதிக்காதபடிக்கு குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து கூப்பிட்டு ‘ஃபாரம் ரெடி பண்ணனும். அனுப்புங்க’ என்று அடிக்கடி விரட்டிக் கொண்டிருக்க, சுஜாதா பற்றி உடனடி கட்டுரை எழுதி அனுப்பினேன். நினைவுக் கூட்டத்திலும் சொன்னேன் – சுஜாதா வாழ்க்கையைக் கொண்டாடும் கூட்டம் இது. Celebrating life is better than mourning a death.
இந்த வாரம் புதன்கிழமை விடிந்தபோது இன்னொரு இழப்பு.
காலை ஐந்தரை மணிக்கு கஸ்தூரி ரங்கன் காலமாகி விட்டார்.
இந்திரா பார்த்தசாரதி மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணனின் இ-மெயில். பிரமை பிடித்தமாதிரி ஒரு நிமிடம் இருந்தது.
அப்பாவோ பெரியப்பாவோ இறந்து போன துக்கத்தின் déjà vu நிழலிட்டது. கல்யாணச் சாவு. மனதைத் தேற்றிக் கொள்ளலாம். இது கணையாழிச் சாவு ஆச்சே. எல்லா சாவுச் செய்தியும், பேசி முடித்து வெதுவெதுவென்று வென்னீரில் குளித்து விட்டு சூடாக ரெண்டு தோசை சாப்பிட்டு ஆபீஸ் கிளம்புகிற அன்றாட நிகழ்வில் கிளைக்கதையாவது போல் இது இல்லை. ரெண்டு வரி ட்விட்டரீல் கீச்சு பதிவது மாதிரி அவ்வப்போது நமநமவென்று நினைவில் வந்து கொண்டே இருப்பது. வந்தது
சென்னைக்கு 75-ல் பேங்கு கிளார்க் வேலைக்கு வந்தேன். தி.நகர் ராமநாதன் தெரு கட்டைப் பிரம்மச்சாரி மடத்தில் நிழல்கள் ரவி இருந்ததற்கு ரெண்டு அறை தள்ளி ரூம் கிடைத்தது. அன்றைக்கு சாயந்திரம் கணையாழி ஆபீசுக்கு முதலில் போகணும் என்று மனசில் முடிபோட்டு வைத்துக் கொண்டு அப்புறம் தான் பக்கத்து வீட்டு ஜன்னலில் நடிகை கவிதாவை நோட்டமிட்டேன். அந்தப் பொண்ணு நடித்த காற்றினிலே வரும் கீதம் கலர்ப் படம் வெளியாகியிருந்த நேரம் அது.
சாயந்திரம் சீக்கிரம் திரும்பிய மற்ற பிரம்மசாரிகள் இன்னும் ஜன்னலே கதியாக தய்யர தய்யா என்று கவிதா தரிசனத்துக்குக் காத்து நின்றார்கள். நான் பஸ் பிடித்துப்போய் கணையாழி ஆபீஸ் என்று அனுமானம் செய்த, காலம் உறைந்து போன ஒரு கட்டிடத்தில் படியேறினேன். மவுண்ட் ரோடு ஈசானிய மூலையில் தர்பார் ரெஸ்டாரண்டை ஒட்டி நல்லதம்பி செட்டி தெருவில் இருந்த கட்டிடம்.
அது தீபம் பத்திரிகை ஆபீஸ். கணையாழியும் அங்கேதான் பிரசுரமாவதாக சொந்த ஊரில் நண்பர்கள் சொன்னதால் தீபம் நா.பாவிடம் கணையாழி சந்தா கட்ட முயன்று தோற்றேன். ஆனால் தீபம் சந்தாவும் நா.பா பரிச்சயமும் கிடைத்தது.
இதுக்கு இடையில் தான் எப்போதோ கவிதை எழுத ஆரம்பித்தேன். எண்பதுகளில் கணையாழி அலுவலகம் சென்னைக்கு மாறிய பிறகும் நான் கணையாழி, தீபத்தில் புதுக்கவிதையைத் தாண்டி வெளியே கால் வைக்கவில்லை.
தொடரும்
January 25, 2025
ஏதோ ஒரு பக்கம்
‘ஏதோ ஒரு ’. என் அல்-புனைவு கட்டுரைகளின் தொகுப்பு.
என் மற்ற அல்-புனைவுகளோடு இதுவும் நூலாகிறது. புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே –
—————————————————————————————————
ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்
(சீரங்கத்துச் சிக்கலார் பாரி நாயனத்தை ஊதி முடித்துக் கிளம்பிப் போய்விட்டார். அந்த மேடை வெறுமையாகவே இருக்கும். ஜில்ஜில் ரமாமணி ஓரமாக ஆடலாம்) .
பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம் செய்ய பதிப்பகம் எல்லாம் தேவை. பால் தோரோவும் பில் பிரைசனும் இந்த விஷயம் அத்துப்படியான காரணத்தால் உலகத்தைச் சுற்றி வந்து சந்தோஷமாகச் சில்லறை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சீனியரான பால் தோரோ ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த சுற்றுக்காக சமீபத்தில் திரும்ப இந்தியா வந்திருந்தார். அதுவும் சென்னைக்கு.
எண்பதுகளின் தொடக்கத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறி தில்லிக்கு உத்தியோக உயர்வில் (பேசிக் ரூ310; பஞ்சப்படி 235; மற்றவை 130) கிளம்புவதற்கு முன் மூர்மார்க்கெட்டில் புத்தகம் தேடப் போய் மாட்டியது பால் தோரோ எழுதிய ‘தி க்ரேட் ரெயில்வே பஜார்’. இதைவிட சரோஜாதேவியே மேல் என்று பின் அட்டையில் யாரோ கிறுக்கி இருந்ததை மினிமம் கியாரண்டியாக நம்பி வாங்கிவிட்டேன். ரயிலில் புரட்டிய புத்தகத்தில் அந்தத் தரம் கிட்டாத ஏமாற்றம்.
‘’தில்லியிலிருந்து கிளம்பி குறுக்கு வெட்டாக 1800 மைல் கடந்து தெற்கு நோக்கி சென்னைக்கு ஓடிவரும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் நின்ற பிளாட்பாரம் முழுக்க பேருக்கு ஏற்ற மாதிரி பிரம்மாண்டமான டிரங்குப் பெட்டிகள். சடசடவென்று கம்பார்ட்மெண்ட் முழுக்க ஆக்கிரமித்த தமிழர்கள் அதை சொந்த வீடாகப் பாவித்து பேண்டை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். கூடாரம் போல் பெட்ஷீட்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு முட்டியை இப்படியும் அப்படியும் நீட்டி மடக்கி, எம்பி எம்பிக் குதித்தார்கள். செருப்பும் அப்புறம் பேண்டும் கால் வழியாகக் கீழே நழுவி விழுந்தன. இப்படி லுங்கி பனியனுக்கு மாறும்போதும் பேசுவதை நிறுத்தவே இல்லை. பேச்சா அது? ஷவரில் குளித்துக் கொண்டே பாடுகிறதுபோல் ஒரு சத்தம். எல்லோரும் நல்ல கறுப்பு. பல் மட்டும் வெள்ளை வெளேர். பின்னே இல்லையா? மரத்திலிருந்து பறித்த குச்சியை கரகரவென்று பல்லால் ராவி அறுக்கிற மாதிரி ரொம்ப நேரம் பல் தேய்ப்பார்கள் இவர்கள். அப்புறம் சாப்பாடு. நீர்க்க வேகவைத்து பச்சை மிளகாயும் குடமிளகாயும் தூக்கலான காய்கறிக் கூட்டு, இரண்டு பிரம்மாண்டமான மலை போல சோறு.”
ரயில்வே பஜார் புத்தகத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பற்றிய இங்கிலீஷ்காரன் கட்டுரை எடுத்த எடுப்பிலேயே அதிர வைத்தது. அதற்குப் பத்து நிமிடம் முன்னால் தான் நானும் எம்பிக் குதித்து பேண்டை விழுத்துவிட்டூ சங்கு மார்க் லுங்கிக்கு மாறி ஏசி டு ட்யரில் மேல் பர்த்துக்கு ஏறி இருந்தேன். அங்கே இருந்து கீழே பார்த்தபோது விஜயவாடாவில் நடுராத்திரிக்கு இறங்க வேண்டிய ஆந்திர ஜோடி மேலே ஒருத்தன் இருக்கான் என்ற நினைப்பே இல்லாமல் அவசரமாக அந்நியோன்னியமாகிக் கொண்டிருந்தார்கள். கடைசிப் பக்கத்தைத் திருப்பி கிறுக்கலை இன்னொரு தடவை படித்துவிட்டுக் கண்ணை மூடியதுதான் தெரியும். பொலபொலவென்று விடிந்தபோது ஆந்திரா பார்டருக்கு அந்தப் பக்கம் இருந்தேன். எப்போது எல்லை கடந்தது என்று தெரியவில்லை.
பால் தோரோவைத் திரும்பப் புரட்டினேன். லண்டன் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் தொடங்கி பாரீஸ், இஸ்தான்புல், கைபர் கணவாய், லாகூர், தில்லி, சென்னை, ராமேஸ்வரம், இலங்கை என்று முழுக்க ரயில் யாத்திரையாகவே ஊர் சுற்றிய பயண எழுத்தாளர் அவர். கிண்டலைக் கடந்து உள்ளே போனால் வாழ்க்கையை அதன் சகல அபத்தங்களோடும் ரசிக்கிற, சக மனுஷனை நேசிக்க முடிந்த, எந்த சந்தர்ப்பத்திலும் நகைச்சுவை உணர்வை இழக்காத தோரோ தட்டுப்பட்டார். அங்கங்கே கவிதை தெறிக்கும் அழகான ஆங்கிலம் அவருடையது. ‘A joss stick was lit. No one said a word. The train passengers looked at the villagers. The villagers avered their eyes. The canvas ceiling dropped; the tables were worn shiny; the joss stick filled the room with stinking perfume. The train passengers grew uncomfortable and in their discomfort, took an exaggerated interest in the calendar, the faded colour prints of Shiva and Ganapathi. The lanterns flickered in the dead silence as our shadows leaped on the walls’.
பால் தோரோ புத்தகத்தை முழுக்கப் பாராயணம் செய்து முடித்தபோது குளிர்காலப் பனிமூட்டத்தோடு தில்லி வந்திருந்தது. தோரோவின் எந்தப் புத்தகத்தை அப்புறம் படித்தாலும் அந்தக் குளிர்ச்சியும் சிரிப்பும் கொஞ்சம் கதையும் கோடு போட்டது போல் சோகமும் தட்டுப்படாமல் போகாது. அவர் சென்னை வந்திருக்கிறார் என்று தெரிந்து லேண்ட்மார்க் போவதற்குள் ஆபீஸ் நந்தி மறைத்துவிட்டது. மறுநாள் வழக்கம்போல் இந்து பத்திரிகை பேட்டியில் பால் தோரோவை ஒரு மோர்க்குழம்பு பெர்சனாலிட்டி ஆக்கியிருந்தார்கள். அது தோரோ இல்லை, வேறே யாரோ.
சுஜாதா மறைந்தது தோரோ வந்துபோனதற்கு ஒருவாரம் கழித்து. வாத்தியார் உலகம் முழுக்கச் சுற்றி இருந்தாலும், கதையிலும் கட்டுரையிலும் அவ்வப்போது அந்த அனுபவத்தை அளவோடு வெளியிடுவாரே தவிர உட்கார்ந்து பயணக் கட்டுரை என்று எழுதியதாக நினைவு இல்லை. ஆனாலும் பெங்களூர் மார்க்கெட் போனபோதெல்லாம் அங்கே அவர் குறிப்பிட்டபடி ‘குல்லா வைத்த ராயர்கள் பூ வாங்கிக் கொண்டிருந்தார்கள்’. தில்லி கரோல்பாக் அஜ்மல்கான் ரோடில் சாயங்கால வேளைகளில், ‘குனியும்போது தெரியும் மார்பு வளப்ப ரகசியங்களோடு’ திடகாத்திரமான பஞ்சாபி மங்கையர் சாயம் நனைத்த உதடு மினுமினுக்க நடந்து போனார்கள். பாலிகா பஜாரில் வெள்ளைக்காரர்கள் ‘அலங்கரித்த ஜிகினாக் குப்பைகளை வாங்க அலைந்து கொண்டிருந்தார்கள்’. அவர் எழுதியபடிக்கு, விமானத்தில் எமர்ஜென்சி வாசல் அருகே இருக்கையில் இருந்து ஏர் ஹோஸ்டஸின் எதிர் சீட் புன்னகையில் குளிர் காய்ந்திருக்கிறேன். நீங்களும்தான்.
பயண இலக்கியம் என்றதும் இதையெல்லாம் கடந்து சட்டென்று ஹைபர்லிங்கில் நினைவு வருவது ஒரு பழைய புத்தகம். போன நூற்றாண்டு துவக்கத்தில் தெற்கு சீமையிலிருந்து கிளம்பி ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் காசிக்கு யாத்திரை போனார்கள். அங்கங்கே ராத்தங்கி, ஏரி, குளம், அருவி, சமுத்திர ஸ்நானம் செய்து, கோவில் தோறும் கும்பிட்டு கடைசியில் காசிக்கும் போய்ச் சேர்ந்து வழிபட்டுவந்த நீண்ட பயணம் அது. போய் வந்தவர்களில் ஒருத்தர் திரும்பி வந்ததும் கைகால் குடைச்சலைப் பொருட்படுத்தாமல், பேப்பரும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு அக்கறையாக அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் ஒரு இடத்தில் வருவது (தோராயமாக) இப்படி இருக்கும்:
‘நாங்கள் அந்த ஊருக்குப் போனபோது இருட்டி விட்டது. சத்திரத்தில் போய்த் தங்கினோம். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தபோது மராத்திய அடியார் கூட்டம் ஒன்று அங்கே வந்து சேர்ந்தது. அத்தனையும் பெண்கள். அப்புறம் நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்களோடு சேர்ந்து ராத்திரி முழுக்க பஜனை செய்து கொண்டிருந்தோம்”.
எந்த வார்த்தைக்கும் ஓவர்லோடிங் இல்லாமல் ஒரே ஒரு எளிமையான அர்த்ததோடு எழுதியும் பேசியும் வந்த பொற்காலம் அது என்பதால் அப்போது இதைப் படித்தவர்கள் சகஜமாக அடுத்த பக்கத்தைத் திருப்பி இருப்பார்கள்.
January 18, 2025
எச்சமிடும் பறவைகளும் பூப்பந்தும்
”பூப்பந்து (பாட்மிண்டன்) போட்டி நடத்த தில்லியில் சூழல் உகந்ததாக இல்லை. புகைமூட்டம் கவிந்த மைதானத்தில் பறவைகள் எச்சமிடுகின்றன.”
– டென்மார்க் நாட்டு பூப்பந்து வீராங்கனை மியா ப்ளிச்பெல்ட்
நான் தில்லியில் முப்பது வருடம் முன் வசித்தபோது குளிர் காலத்தை வருடாவருடம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம்.
கிட்டத்தட்ட சுத்தமான காற்றும், பின்கழுத்திலும் செவிமடலிலும் இதமாகப் படிந்து குறுகுறுக்க வைத்து சதா கூட வரும் மெல்லிய மூடுபனியுமாக தில்லி சுவர்க்கமாகத் தெரிந்தது அப்போது. புகைமூட்டம் இல்லாத சூழல் அது. Smog பெரும் பிரச்சனை இப்போது.
எல்லாம் சரிதான். பந்து விளையாட்டு மைதானத்தில் பறவைகள் எச்சமிட்டதாகக் குறை சொல்வது நியாயமா? பறவை என்றால் பறக்கும்; எச்சமிடும் அன்றோ !\\
தில்லிக்குக் குளிர் அழகு
தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம்
மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது
முன்பே சொன்னேன் பின்னே வையாதீர்.
நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில்
காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க
வரலாமா என்று குளிரொன்று கேட்கும்.
இந்த வருடம் பனிவிழும் என்பார்
பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர்
நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய
பழைய காலம் பங்கு வைத்து
தேநீர் பருகிக் கம்பளி தேடுவர்.
மூடுபனியாய் மெல்லப் பரவி
ஆளில்லாத தெருக்களில் கவிந்து
பார்வை மறைத்து காலை புலரும்.
பச்சுப் பச்சென்று வெண்டை தொடங்கி
காய்கறிப் பிஞ்சுகள் வண்டி நிறைத்து
வாசம் தெருமுனை கடக்கும் முன்னே
வண்டியோடு வாங்கிடத் தோன்றும்.
குளிருக்கு ஓர்குணம் உண்டு குறிப்பாய்
அத்தனை பெண்களும் அழகாய்த் தெரிய
முன்பனி முகத்தில் குளிரால் எழுதும்.
வந்த தினத்தை ஆம்லெட்டில் தொடங்க
முட்டை வாங்க அணங்குகள் ஏக
காலு கடையில் பெண்வாசம் குளிர்வாசம்.
காலு என்பது கடைக்காரன் பெயர்.
கோடையில் கல்யாணி பியர் போல
குளிரில் அந்நாள் ஆடவர் உலகம்
ஃபோர் ஸ்கொயர் சிகரெட்டால் ஆனது
வில்ஸ் ஃபில்டரும் கொஞ்சம் உண்டு
குளிரில் புகைக்கக் கூடுதல் வாடை,
ஊர்விட்டு ஊர்வந்த கிருஷ்ண மூர்த்தி
புதுசாய்ப் புகைக்கும் பதைபதைப்போடு
பில்ஸ் வில்டர் சிகரெட் கேட்க
கூட்டமாய்க் குவிந்த பெண்கள் சிரிப்பில்
வஜ்ரதந்தி விக்கோ பற்பசை வாசனை
சூடுபறக்கப் பூசிவைத்த கடுகெண்ணெயின்
வெப்பவாடையில் பிடரியும் முழங்கையும்.
முட்டைகளோடு கோதுமை நெடியில்
மாடர்ன் ரொட்டியும் வெண்ணெய்க் கட்டியும்
வாங்கிப் பெண்கள் குளிரோடு போக
காலு பிரித்து வாயில் அதக்கும்
கட்டி தட்டிய ஜர்தாபான் நாற்றம்.
சிவப்பு ஸ்வட்டர் அந்துருண்டை வாடை
நீலச் சால்வை கடல்நீர் வாடை
வெங்காயம் உண்ட வனிதைகள் இருவர்
சிக்னல் மாற வண்டி நிறுத்திய
என்னைக் கடக்க தீர்க்கமாய் முகர்ந்தேன்
என்றும் குளிராய் இருக்கலாமே.
பச்சை சால்வை களைந்த பெண்ணும்
க்றுப்புக் கம்பளி நீக்கியவளும்
கணப்பின் முன் நிற்க வயலெட் நிறத்து
பூக்களின் வாடை ஆபீஸ் சூழ்ந்தது
குளிரை வாழ்த்தும் குதூகலத்தோடு.
கம்பளிக் கோட்டில் நீல சூட்டில்
அத்தர் மணமும் தாடியில் தடவிய
தைலத்தின் வாடையும் பழவாடை
பாலீஷ் போட்ட ஷூக்களும் தலைப்
பாகை அணிந்தோர், மற்ற சகாக்கள்
அமர்ந்து அலுவல் தொடங்க
காகித வாடையும், லெட்ஜர் வாடையும்
கேஷியர் கூண்டில் காசுவாடையும்
ஓங்கி உயர்ந்து குளிரும் ஆபீஸ்.
வாடிக்கையாளர் ஓய்ந்த மூன்று மணி
ஆபீஸில் ஆலு மேதி பரட்டாவும்
கத்தரித் துவையலும் வெண்டை கூட்டும்
மைக்ரோ அவனில் மணக்க கதவுகள்
உள்ளே அடைத்த குளிரும் உறங்கும்.
பிற்பகல் தெருவில் வண்டியில் வைத்து
மீன்பஜ்ஜியும் மட்டன் கவாபும்
புத்தம் புதிதாய்க் கிளப்பும் வாசம்
உங்களுக்குப் பிடிக்காது எனினும்
குளிருக்குப் பிடிக்கும் கொண்டாடிடுக.
மிட்டாய்க்கடையில் புதிதாய்க் கிளறிய
கேரட் அல்வாவும், பட்டாணி சுண்டலும்
குளிருக்கு இதமாய் விஸ்கியும் ரம்மும்
மணக்கப் பரப்பினோம் கூடி அமர்ந்து
நிலவில்லா முன்னிரவில் தெரு இருட்டில்
பனி பொழியத் துவங்கியது கவிதை போல.
January 16, 2025
கமல்ஹாசன், ஜெயமோகன் மற்றும் இரா.முருகன்
முப்பட்டைக் கண்ணாடியின் உலகம் –
இரா.முருகனின் புனைவுகள்
அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருவிழாவில் வெளியிடப்பட்டநூல் இது.
என் படைப்புகளைக் குறித்து மிக விரிவாக என் சக எழுத்தாள நண்பர்ப்களும்,, தேர்ந்த வாசகர்களும், விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. என்றும் கிளரொளி இளமை மின்னும் மூத்த ஆளுமைகளோடு talent to watch புத்திளைஞர்களும் பங்குபெறும் இலக்கிய ஆவணம்.
ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்க வாசிக்க உள்ளம் நெகிழ்ந்து போகிறது. நுண்மான் நுழைபுலம் கொண்டு என் நாவல்களை விமர்சனத்துக்கு உட்படுத்தும் இவற்றில் ஒன்று கூட வலிந்து கட்டப்பட்டு வெறும் சொற்கோலமாகப் பக்கம் நிரப்புகிறது இல்லை. வரி விடாமல் படித்துக் கருத்துச் சொல்கிறார்கள். சுவாரசியத்துக்குக் குறையில்லை. ஜெயமோகன் கட்டுரையிலிருந்து –
//முருகன் அவருடைய முன்னோர் சமையற்காரர்கள் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். பேட்டியில் அவர் கூறும் வரிகளைப் பல வகையிலும் புனைவுகளை விளக்குவதற்குப் பயன்படுத்துவதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த ஒரு வரி எனக்குத் தோன்றுவதுண்டு. உணவின் மேல் தேர்ச்சியும் விலக்கமும் ஒருங்கே சமையற்காரர்களிடம் இருக்கும். விருந்துகளை சுவைத்து உண்ணும் சமையற்காரர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் உணவின்மேல் ஒரு விலக்கம், தொழில்ரீதியாக ஒரு ஈடுபாடு, இரண்டும் அவர்களிடம் நிகழ்கிறது. இந்தக் கதைகளில் உள்ளது சமையற்காரரின் பார்வை என்று தோன்றுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருட்களை இணைத்து உருவாக்கும் ஒரு புதிய சாத்தியமும் தான் அந்தப் புதிய சுவை.
//
இசைக் கச்சேரியில் சஞ்சய் சுப்பிரமணியன் பாடிய தோடி ராகம் – தானம் – பல்லவி மனதில் நிறைந்து ததும்ப, பொறிபறக்கும் தனியாவர்த்தனம் தொடர்வது நினைவின் விளிம்புகளிலிருந்து எட்டிப் பார்க்கிறது. எனின், இந்த நூலின் கட்டுரையாளர்கள் உமையாள்புரம் சிவராமன் சார், நெய்வேலி வெங்கடேஷ், முருகபூபதி, பத்ரி போல் சிறப்பான ஆளுமைகள். நான் சஞ்சய் இல்லை தான்.
நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் -மற்றும் எழுதியவர்கள் பட்டியல் –
1. விஸ்வரூபம் எனும் நாவல்
(சுப்ரபாரதி மணியன்)
2. இரா.முருகனும் இருபதாண்டுகளும்
(கடலூர் சீனு)
3. காலம் தப்பிவிட்ட கேலிக்காரன்
(அரவிந்தன்)
4.மிளகு – பெருநாவலை வாசிப்பது எப்படி?
(ஜெயமோகன்)
5. காலம் கலைத்துப் போடும் ரூபம்
(சௌந்தரராஜன்)
6.மூன்று விரல்களின் உலகம்
(மந்திரமூர்த்தி அழகு)
7.இரா.முருகனின் நளபாகம்
(நம்பி கிருஷ்ணன்)
8. அரசூராருக்கு ஒரு கடிதம்
(சக்திவேல்)
9. நீர்வழிப்படும் புணை
(சக்திவேல்)
10. மாயவம்சம்
(தமிழ்க்குமரன் துரை)
11.முப்பட்டைக் கண்ணாடியினூடாக
(ஜெயமோகன்)
[image error]

November 29, 2024
பகை வென்று பகை வென்று அகவி வந்த மயில்
லோதி ரோடு பக்கம் மைசூர் ஸ்கூல் காண்டீன்லே சுருக்கமா இட்லி, வடைன்னு முடிச்சுக்கலாமே. பத்து நிமிஷம் கூட ஆகாது.
கொஞ்சம் போல் ஊசிப் போன சட்னி தவிர காண்டீன் சாப்பாடு பரவாயில்லை தான். காப்பியை வேண்டாம் என்று சங்கரனுக்கு முன்னால் வசந்தி சொல்லி விட்டாள். அவள் போடுகிற காப்பிக்கு இணையில்லை என்ற திடமான நினைப்பு வசந்திக்கு. பிடார் ஜெயம்மா வேறே அவ்வப்போது வந்து, வசந்தி கையால் காப்பி சாப்பிட்டுத் தன் நன்மதிப்பு சர்ட்டிபிகேட்டை புதுப்பித்துத் தருகிறாள்.
வலப்பக்கம் திரும்புங்கோ. சிடியாகர் இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துலே வந்துடும்.
சிடியா கர் என்ற மிருகக் காட்சி சாலை ஞாயிற்றுக்கிழமைக்கான கூட்டம் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அடைத்து வைத்த சிங்கங்களும், புலிகளும், ஓநாயும் உறக்கம் விழித்து, கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி உறுமிக் கொண்டு மறுபடியும் உறங்கத் தொடங்கின. குழந்தை கை கொட்டி எல்லாம் ரசித்தபடி பூவாகச் சிரித்து, வசந்தி தோளில் இருந்து சங்கரனிடம் தாவினாள். வாடி என் கண்ணே என்று குழந்தையைக் கை நீட்டி வாங்கும் போது அவனுக்கு சுவர்க்கம் தெரிந்தது.
கரடிக் கூண்டில் இரண்டு கரடிகளும் சாவதானமாக உறவு கொண்டபடி உறுமின.
இங்கே வந்தாலும் இதுதானா?
வசந்தி ஓங்கி சங்கரனின் தோளில் அடிக்க என்னமோ என்று பயந்து போன குழந்தை அழுதது. இரண்டு பேரும் அவசரமாக விலகி நடந்தார்கள்.
மயில்கள் வைத்திருந்த மிக உயரமான கம்பி வலை போட்ட வெளியில் இரண்டு மயில்கள் மட்டும் பறக்கத் தொடங்கி இருந்தன. மேலே வலை மூடாத கம்பி மேல் அமர்ந்து அவை கீழே உற்றுப் பார்த்தபடி இருந்தன. சிடியா கர் ஊழியர்கள் தரையில் தானியத்தை விசிறியடித்து அவைகளைத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டும் ஜிவ்வென்று பறந்து சங்கரனின் தோளில் இறக்கை பட வீசி அவன் முகத்தை மறைத்துப் பறக்க அவன் நடுநடுங்கி நின்றான். குழந்தை வீரிடும் சத்தம் இறக்கைகளுக்குப் பின் கேட்க, வசந்தி திரும்பிக் குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு தோளில் சார்த்தி இறுகத் தழுவி, இரண்டடி ஓடி நின்று அலறினாள்.
அடுத்த நொடியில் கீழே இறங்கி தரையில் தானியம் பொறுக்கியபடி மயில்கள் இருக்க, சங்கரன் உடம்பில் நடுக்கம் குறையாது பாதை ஓரக் கல் குவியல்
November 26, 2024
ஞாயிறு ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்ட முயலும் அண்டர் செக்ரட்ட ரி
வாழ்ந்து போதீரே – ==== =====================
இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.
தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.
அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது. வெளியே போய் வந்தால் என்ன? புதுசாக வாங்கி நிறுத்தி இருக்கும் இந்துஸ்தான் காரிலும் சவாரி செய்த மாதிரி இருக்கும். தனியாகப் போவானேன்? குடும்ப சகிதம்.
வசந்தியைக் கேட்டான்.
ஒழுங்கா ஓட்டக் கத்துண்டாச்சா?
அவள் குழந்தையை மடியில் வைத்தபடி விசாரணை செய்தாள்.
லைசன்ஸ் வச்சிருக்கேனாக்கும்.
கார் ஓட்டவா, ஸ்கூட்டர் ஓட்டவா?
சகலமானதிலேயும் ஆரோகணிச்சு சுகமா ஓட்டத் தான். வந்தா புரியும்.
அதென்ன காவாலித் தனமான பேச்சு?
நான் சாதாரணமாத்தானே சொன்னேன்.
போய் தில்ஷித் கவுர் கிட்டே சொல்லுங்கோ.
அவ எதுக்கு? நீ ஒருத்தி போறாதா?
மயில்கள் வைத்திருந்த மிக உயரமான கம்பி வலை போட்ட வெளியில் இரண்டு மயில்கள் மட்டும் பறக்கத் தொடங்கி இருந்தன. மேலே வலை மூடாத கம்பி மேல் அமர்ந்து அவை கீழே உற்றுப் பார்த்தபடி இருந்தன. சிடியா கர் ஊழியர்கள் தரையில் தானியத்தை விசிறியடித்து அவைகளைத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டும் ஜிவ்வென்று பறந்து சங்கரனின் தோளில் இறக்கை பட வீசி அவன் முகத்தை மறைத்துப் பறக்க அவன் நடுநடுங்கி நின்றான். குழந்தை வீரிடும் சத்தம் இறக்கைகளுக்குப் பின் கேட்க, வசந்தி திரும்பிக் குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு தோளில் சார்த்தி இறுகத் தழுவி, இரண்டடி ஓடி நின்று அலறினாள்.
அடுத்த நொடியில் கீழே இறங்கி தரையில் தானியம் பொறுக்கியபடி மயில்கள் இருக்க, சங்கரன் உடம்பில் நடுக்கம் குறையாது பாதை ஓரக் கல் குவியல் மேல் உட்கார்ந்தான்.
Nov 26 29 ஹப்பி ஹாலீடே
குழந்தை சமாதானமாகிச் சிரித்தது. வசந்தி போகலாம் என்றாள்.
சங்கரன் திரும்பிப் பார்த்தான். சிறு தானியம் மேயும் மயிலின் கண் அவன் தெரசாவோடு கலந்தபோது ஊஞ்சலில் ஆடியபடி பார்த்த மூத்தகுடிப் பெண்ணின் கண் போல் இருந்தது.
சாமா, நில்லுடா, நானும் வரேன்.
ஒரு மயில் குரலெடுத்து அகவ, சங்கரன் அவசரமாகக் காருக்கு நடந்தான்.
தப்பு பண்ணிட்டேனா தெரசாவோட?
அவன் திரும்பிப் பார்க்க அந்த மயில்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தாறுமாறாக நிலத்தில் ஓட ஆரம்பித்தன.
=
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

