தில்லிக்குக் குளிர் அழகு

தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம்
மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது
முன்பே சொன்னேன் பின்னே வையாதீர்.

நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில்
காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க
வரலாமா என்று குளிரொன்று கேட்கும்.

இந்த வருடம் பனிவிழும் என்பார்
பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர்
நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய
பழைய காலம் பங்கு வைத்து
தேநீர் பருகிக் கம்பளி தேடுவர்.

மூடுபனியாய் மெல்லப் பரவி
ஆளில்லாத தெருக்களில் கவிந்து
பார்வை மறைத்து காலை புலரும்.

பச்சுப் பச்சென்று வெண்டை தொடங்கி
காய்கறிப் பிஞ்சுகள் வண்டி நிறைத்து
வாசம் தெருமுனை கடக்கும் முன்னே
வண்டியோடு வாங்கிடத் தோன்றும்.

குளிருக்கு ஓர்குணம் உண்டு குறிப்பாய்
அத்தனை பெண்களும் அழகாய்த் தெரிய
முன்பனி முகத்தில் குளிரால் எழுதும்.
வந்த தினத்தை ஆம்லெட்டில் தொடங்க
முட்டை வாங்க அணங்குகள் ஏக
காலு கடையில் பெண்வாசம் குளிர்வாசம்.
காலு என்பது கடைக்காரன் பெயர்.

கோடையில் கல்யாணி பியர் போல
குளிரில் அந்நாள் ஆடவர் உலகம்
ஃபோர் ஸ்கொயர் சிகரெட்டால் ஆனது
வில்ஸ் ஃபில்டரும் கொஞ்சம் உண்டு
குளிரில் புகைக்கக் கூடுதல் வாடை,

ஊர்விட்டு ஊர்வந்த கிருஷ்ண மூர்த்தி
புதுசாய்ப் புகைக்கும் பதைபதைப்போடு
பில்ஸ் வில்டர் சிகரெட் கேட்க
கூட்டமாய்க் குவிந்த பெண்கள் சிரிப்பில்
வஜ்ரதந்தி விக்கோ பற்பசை வாசனை
சூடுபறக்கப் பூசிவைத்த கடுகெண்ணெயின்
வெப்பவாடையில் பிடரியும் முழங்கையும்.

முட்டைகளோடு கோதுமை நெடியில்
மாடர்ன் ரொட்டியும் வெண்ணெய்க் கட்டியும்
வாங்கிப் பெண்கள் குளிரோடு போக
காலு பிரித்து வாயில் அதக்கும்
கட்டி தட்டிய ஜர்தாபான் நாற்றம்.

சிவப்பு ஸ்வட்டர் அந்துருண்டை வாடை
நீலச் சால்வை கடல்நீர் வாடை
வெங்காயம் உண்ட வனிதைகள் இருவர்
சிக்னல் மாற வண்டி நிறுத்திய
என்னைக் கடக்க தீர்க்கமாய் முகர்ந்தேன்
என்றும் குளிராய் இருக்கலாமே.

பச்சை சால்வை களைந்த பெண்ணும்
க்றுப்புக் கம்பளி நீக்கியவளும்
கணப்பின் முன் நிற்க வயலெட் நிறத்து
பூக்களின் வாடை ஆபீஸ் சூழ்ந்தது
குளிரை வாழ்த்தும் குதூகலத்தோடு.

கம்பளிக் கோட்டில் நீல சூட்டில்
அத்தர் மணமும் தாடியில் தடவிய
தைலத்தின் வாடையும் பழவாடை
பாலீஷ் போட்ட ஷூக்களும் தலைப்
பாகை அணிந்தோர், மற்ற சகாக்கள்
அமர்ந்து அலுவல் தொடங்க
காகித வாடையும், லெட்ஜர் வாடையும்
கேஷியர் கூண்டில் காசுவாடையும்
ஓங்கி உயர்ந்து குளிரும் ஆபீஸ்.

வாடிக்கையாளர் ஓய்ந்த மூன்று மணி
ஆபீஸில் ஆலு மேதி பரட்டாவும்
கத்தரித் துவையலும் வெண்டை கூட்டும்
மைக்ரோ அவனில் மணக்க கதவுகள்
உள்ளே அடைத்த குளிரும் உறங்கும்.

பிற்பகல் தெருவில் வண்டியில் வைத்து
மீன்பஜ்ஜியும் மட்டன் கவாபும்
புத்தம் புதிதாய்க் கிளப்பும் வாசம்
உங்களுக்குப் பிடிக்காது எனினும்
குளிருக்குப் பிடிக்கும் கொண்டாடிடுக.

மிட்டாய்க்கடையில் புதிதாய்க் கிளறிய
கேரட் அல்வாவும், பட்டாணி சுண்டலும்
குளிருக்கு இதமாய் விஸ்கியும் ரம்மும்
மணக்கப் பரப்பினோம் கூடி அமர்ந்து
நிலவில்லா முன்னிரவில் தெரு இருட்டில்
பனி பொழியத் துவங்கியது கவிதை போல.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2025 18:46
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.