இரா. முருகன்'s Blog, page 84

December 21, 2020

மார்கழிக் குளிரில்

சீரியல் சிறுவிளக்குச் சிங்காரம் செய்து

இரவு படிப்பித்தபடி கண்சிமிட்டி நின்ற

வன்மரங்கள் கண்ணயர்ந்த விநாடி

பம்மிப் பதுங்கி நுழையும் காலைக்குளிர்



மெய்தழுவி ஓர்நொடி தவழ்ந்து

ஓடிமறைந்து மறுநொடி மறுபடியும்

புறம்புல்கும் முன்பனிக் காற்றை

இந்தப் படம் சொல்லும்வரை

ஏதோ எழுதித்தான் தீரணும்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2020 18:10

December 20, 2020

1960-களில் ஒரு மார்கழிக் காலை – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

நாலே கால் மணி. கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் மட்டும் இருந்த தெரு. லாட்ஜ் வாசலில் இளம் பெண்களாக குஜராத்திகள் நின்று ஏதோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். முகத்தைப் பார்த்தால் ஒவ்வொருத்தியும் உன்னதமான அழகி. பின்னால் இருந்து பார்க்க அவர்கள் அனைவரும் சங்கரனுக்குக் கதகளி ஆட்டக்காரர்களை நினைவு படுத்தினார்கள்.


யாரோ சங்கரனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். மெல்ல நடக்கிறான் அவனும். பக்கத்தில் இதமான கிராம்பு வாடை. பழையதானாலும் பாந்தமாக, ஒரு அழுக்கு இல்லாமல் கசங்கல் காணாமல் இருக்கிற ஒன்பது கஜ பட்டுப்புடவை வாசனை. பகவதிப் பாட்டி.


பாட்டி, சுருக்கம் விழ ஆரம்பித்த கன்னத்தில் கை வைத்து செல்லமாக ஆச்சரியப்பட்டபடி சங்கரனைப் பார்த்துச் சிரிக்கிறாள் –


ஏண்டா கொழந்தே, இருந்து இருந்து இத்தனை வருஷம் கழிச்சு நம்ம பூர்வீக ஊருக்கு வந்திருக்கே. ஸ்ரீகிருஷ்ணனைப் போய்ப் பார்த்து ஒரு நமஸ்காரம் பண்ணுவோம், ஒரு மிடக்கு பால் பாயசம் கழிப்போம், நம்ம பூர்விக வீடு எங்கே இருந்ததுன்னு கொஞ்சம் தேடுவோம்னு இருக்க மாட்டியோ. அது என்னடா உங்க தாத்தா மாதிரியே புடவையை பாத்துட்டா நின்னாறது.


பகவதிப் பாட்டி தெரு முனையில் திரண்டு வந்த பனிப் புகையில் கரைந்து கலைந்து போக எதற்கென்று தெரியாத சிரிப்போடு சங்கரன் வசந்தி பின்னால் நடையை எட்டிப் போட்டான்.


வந்துண்டே இருந்தபோது காணாமப் போய், எனக்கு ப்ளேன்லே அந்த வயசன் காணாமப் போனது ஞாபகம் வந்து கதி கலங்கிடுத்து.


வசந்தி ஒரு வினாடி முழு வட்டம் கறங்கி சங்கரனைத் தேடி அவன் பின்னால் வந்து கொண்டிருப்பதில் ஆசுவாசம் கொண்டு கையை இறுகப் பற்றிக் கொண்டாள். பகவதிப் பாட்டி கை இன்னும் மென்மையாக இருக்கும்.


ஷேர்ட்டு தரிச்சு அகத்தேக்கு கடக்கான் பாடில்ல.


கோவில் முன்வாசல் மண்டபத்தில் யோகம் செய்கிறது போல் உட்கார்ந்து புகையிலையைக் கையில் தேய்த்துக் கொண்டிருந்த பெரியவர் தாக்கீது நல்க, சட்டையைக் களைந்து கக்கத்தில் இடுக்கியபடி நடந்தான் சங்கரன்.


நிர்மால்ய தரிசனம். சந்நிதியில் நின்ற முப்பது பேரோடு சங்கரனும் வசந்தியும் கை கூப்பி வாய் நாமம் சொல்லி, கண் அகத்தில் நிலைகொண்டு உட்திரும்பி நோக்க, அங்கேயும் எங்கேயும் பரவி நின்ற சாந்நித்தியத்தில் துகளாக, துகளின் துகளாகக் கரைந்தார்கள்.


யோசித்து, ஆலோசனை பெற்று, இங்கே பயணம் வைத்து வந்ததன் நோக்கமே மறந்து போனது. ஸ்ரீக்ருஷ்ணனிடம் பிள்ளை வரம் கேட்கவில்லை சங்கரனும், வசந்தியும்.


அபத்தமா இருந்தது அது கொடு இது கொடுன்னு கேட்க. கொட்டி வச்சு என்ன வேணுமோ எடுத்துண்டு போங்கறான் அவனானா.


திரும்பி வரும்போது வசந்தி நின்று பின்னால் திரும்பி கோவிலைச் சுட்டிக் காட்டிப் பேசிய போது பொழுது விடிந்தது.


கோவில் திருக்குளம் இருக்கு. அப்புறம் வாசல்லே ட்ரம் வச்சிருக்கே. அந்த மண்டபம். கூடவே, ஆற்றங்கரை.


இன்னும் பார்க்க வேண்டிய இடங்களை வசந்தி உற்சாகமாகச் சொன்னாள்.


காப்பி கிடைக்கறதான்னு பார்க்கலாம்.


சங்கரனுக்கு ஒரு மிடறு காப்பி குடித்தாலே அடுத்த அடி எடுக்கச் சரிப்பட்டு வரும். என்றால், தெய்வத்தின் சொந்த பூமியில் சாயா குடிக்கிற சீலம் தவிர மற்றது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.


கொஞ்சம் அசதியா இருக்கு. ஒரு நிமிஷம் இங்கேயே இருக்கேன். நீ ஓடியே போய்த் தெப்பக் குளத்தைப் பாத்துட்டு ஓடி வந்துடு.


வசந்தி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.


அப்படி எனக்கு கோவிலும் குளமும் பார்க்க வேணாம். நீங்களும் வருதுன்னா சொல்லுங்கோ.


சங்கரன் யோசித்தான். அவன் காலடிகளை எதுவோ முன்னால் நடக்க விடாமல் தடுக்கிறது. அல்பமான காப்பி இல்லை.


காலிகோ பைண்ட் செய்த ஹோ அண்ட் கோ கம்பெனி வெளியிட்ட டயரியின் பக்கங்கள் அவை. கருத்த நாட்டு மை கொண்டு எழுதிய பெண்ணெழுத்து. பகவதிப் பாட்டியின் பழைய டயரி பக்கங்கள் ஒவ்வொன்றாக உயிர் பெற்று அவனைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.


ஒரு நிமிஷம் உக்காந்து போகலாம். கோவில் வந்துட்டு உடனே கிளம்பக் கூடாதுன்னு பகவதிப் பாட்டி சொல்லுவா.


அவனைத் தொடர்ந்து வசந்தியும் பிரகார மண்டபத்தின் மேடையில் உட்கார்கிறாள். கைப்பையைத் திறந்து எடுத்த கொண்டை ஊசியைத் அடர்ந்து கருத்த தலைமுடிக்குள் செலுத்தி இறுகச் செருகிக் கொள்ளக் கையை மடக்குகிறாள்.


பெரிய சத்தமாக ஏதோ கேட்கிறது. பழைய பாணியில் கட்டப்பட்ட பெரிய வீடு அது. சங்கரன் கூட்டத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருக்கிறான். இல்லை, அது இந்தச் சங்கரன் இல்லை. இங்கே வெளியே கோவில் பிரகாரத்தில் வசந்தியோடு இருந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் இவன்.. பின்னே, அங்கே உட்கார்ந்திருப்பது? அதுவும் சங்கரன் தான். அவன் பெரிய சங்கரன். இவன் சின்னச் சங்கரன். இவனுக்குப் பாட்டன் அவன்.


உள்ளே ஒரு சின்னப் பெண்ணைச் சுற்றி முழுக் குடும்பமும் இருக்கிறது. கூச்சலும் சிரிப்புமாகத் தோழிகள் வேறே. அந்தப் பெண்? பகவதிப் பாட்டிதான்.


சின்ன வயசு பகவதிக்குத் தலையில் தாழம்பூ வைத்துப் பின்னி, உச்சந்தலையில் சூடாமணி வைத்து நேர்த்தியாகச் சிங்காரம் செய்து கொண்டிருந்த அண்டை அயல் பெண்டுகள் முகம் பார்க்கும் கண்ணாடியை எல்லாத் திசையிலும் திருப்பி அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.


ஆச்சா அம்மாடி எச்சுமி? ஏண்டி நாணி, பொண்ணை சபைக்கு அழைச்சுண்டு போகலாமா?


கொஞ்சம் பொறுங்கோ சாலாச்சி மன்னி. சின்னதா ஒரு சாந்துப்பொட்டு கன்னத்திலே வச்சுட்டாப் போதும். காவிலே யட்சிதான். எங்க கண்ணே பட்டு திருஷ்டி விழுந்துடும் போல இருக்கு.


ஐயோ, ஒண்ணும் வேணாம்டீ. ஏற்கனவே நான் கோரம். இதுலே கன்னத்துலேயும் மூக்கிலேயும் எல்லா வர்ணத்தையும் ஈஷிண்டு போய் நின்னா வந்தவா எல்லாம் ஒரே சாட்டமா ஊரைப் பாக்கப் போயிடுவா.


பகவதி சிரிக்கும்போது குழந்தை போல் தெரிந்தாள். பாவாடை தாவணி இல்லாமல், முதல் தடவையாக ஜரிகைப் புடவையைக் கட்டியிருந்த அவள் நிமிஷத்துக்கு ஒரு தடவை கொசுவத்தை இழுத்துச் சரிபார்த்துக் கொண்டாள்.


மெல்ல அடி வச்சு வாடி குழந்தே. பொடவை தடுக்கறதுன்னா கொஞ்சமா உசத்திப் பிடிச்சுக்கோ.


அதுக்காகத் தொடை தெரிய ஒரேயடியா வழிச்சுக்காதேடி பகவதி. அதெல்லாம் ஆம்படையான் பாத்தாப் போதும்.


கூட்டுக்காரி நாணி என்ற நாராயணியைச் செல்லமாக அடிக்கப் பகவதி கை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள்.


இது இடுப்பில் சரியாக இருக்க, கூடத்துக்குப் போய் எல்லோரையும் நமஸ்கரிக்க வேண்டும். அப்புறம் ஓரமாக உட்கார்ந்து, அவர்கள் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது தரையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பாடும்மா என்று சொன்னதும் நன்னு பாலிம்ப பாட வேணும்.


எல்லோரும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.


சங்கரனை விட்டு விட்டு அவர்கள் முன்னேற, அவன் திடுக்கிட்டு எழுந்து கண் திறந்தான்.


ஒரு நிமிடம் கூடக் கடந்திருக்கவில்லை. வசந்தி இன்னும் தலையில் கொண்டை ஊசியைச் செருகி முடிக்கவில்லை


பகவதிப் பாட்டியோடு கூட, யார் அவர்கள் எல்லாம்?


எல்லோரையும் சங்கரனுக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் பேச்சும் நடப்பும் அவன் அறிந்தவை.


ஒரு டம்ளர், அரை டம்ளர், ஒரு வாய் காப்பி மட்டும் கிடைத்தால்.


யாரோ பக்கத்தில் வந்து நிற்கிற சத்தம். பக்க வாட்டில் கருப்பு குடை துருத்திக் கொண்டு தெரிந்தது.


காப்பிக் கடை காணிச்சுத் தரேன், வாங்க.


தோளில் குடையோடு வந்தவன் சங்கரனிடம் சொன்னான்.


சங்கரன் நிமிர்ந்து பார்த்தான். நடுவயதுக்கும் மூப்புக்கும் நடுவே நிற்கிறவன். நல்லவன் என்று உருவத்தில், நிற்பதில், நீட்டிய கரத்தில் தெரிகிறது. இருந்தாலும், இந்த மலையாளிகள்.


இல்லே, நானே பார்த்துக்கறேன்.


சங்கரன் வேண்டாமென்றான்.


சாமுவுக்கு காசு தரண்டா. சாமு சாது. நீங்க ஒரு காப்பி குடிக்கும்போது சாமுவுக்கு ஒரு சாயா சொல்ல மாட்டீங்களா?


சாமு யார்?


சங்கரன் கேட்டான்.


நான் தான்.


அவன் குடையை வாள் போல் பிடித்தபடி சொல்ல சங்கரன் சிரித்தான்.


சிரிக்கிற நேரம் சார் பார்க்க வெள்ளைக்கார ப்ரபசர் வைத்தாஸ் சார் போல.


சாமு கூட்டிக் கொண்டு போன இடம் சுத்தமாக இருந்தது. காப்பி நன்றாக இருந்தது.


மலையாளப் பெயர்ப் பலகையைப் படிக்க முயற்சி செய்து தோற்ற சங்கரனிடம் சாமு சொன்னான் –


இது ஏகாம்பர ஐயர் ஓட்டல். மூணு தலைமுறையா இருக்கு.


சங்கரன் கேட்டுக் கொண்டான்.


இந்த ஊர், தெருக்கள், காற்று, வெளிச்சம், மனுஷர்கள், சுற்றுப் புற விருத்தாந்தம், பேசும் குரல்கள், நல்லதும் துர்கந்தமாகவும் வாடை, காப்பி அடிநாக்கில் மிச்சம் வைத்துப்போன சுவை.


எல்லாமே அவனுக்கு ஏற்கனவே பழக்கமானவை. இந்தத் திருப்பம், இந்தத் தெரு முனை, இந்தத் தரிசு, எல்லாம் தான். பூட்டியிருந்த, சிதிலமான ஒரு கட்டிட வாசலில் சற்றே நிற்கிறான்.


தே-ஜா-வு.


வசந்தியிடம் சொன்னான்.


ஏற்கனவே பார்த்த, அனுபவப்பட்டது தான் எல்லாமும்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2020 16:09

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.