இரா. முருகன்'s Blog, page 83
February 12, 2021
மலையாளமான தமிழ்
என் கட்டுரைத் தொகுப்பு ‘ராயர் காப்பி கிளப்’ (அச்சுப் புத்தகம், மின்நூல்) கட்டுரை ஒன்று –
வழியெனக்கு பிழயாத வண்ணம்முற்றருள் செய்யென்
மனகுருந்திலிளகொண்டு புனல் கொண்டு வடிவாண்டு
எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி
இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி
சுழலின்றகிலலோகர் வணங்கின்ற குழலி
துகில் புலித் தொலி கொள்ளின்றரநுதல் கண்ணிட பெட்டு
அழிவு பெட்ட மலர்வில்லியெயனங்கனெ
அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே
இது என்ன? பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கேரள இலக்கியமான (கவனிக்கவும் – மலையாள இலக்கியம் என்று சொல்லவில்லை) ‘ராமசரிதம்’ நூலில் மலைமகள் வழிபாடு.
இந்நூலை எழுதியவர் பெயர் இன்னும் தெரியவில்லை. திருவிதாங்கூர் அரசராக இருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது.
தமிழிலிருந்து மலையாளம் கிளை பிரியத் தொடங்கிய காலமாக இருக்கலாம் ராமசரிதம் எழுந்த போது.
பாடலை அலகிட்டுப் பார்த்தால் முக்காலே மூணு வீசம் தமிழ்தான்.
வழியெனக்கு(ப்) பிழையாத வண்ணம் உற்றருள் செய் என்
மனகுருந்தில் இளைகொண்டு புனல் கொண்டு வடிவு ஆண்டு
எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி.
இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி
சுழலின்ற அகில லோகர் வணங்கின்ற குழலி
துகில் புலித் தொலி கொள்ளின்ற அரன் நுதல் கண் இடைப்பட்டு
அழிவு பட்ட மலர்வில்லியை அனங்கனை
அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே
மலையாள நிகண்டில் ‘இளை’ என்பதற்கு பூமி, நிலம் என்று பொருள் காணப்படுகிறது. ‘பதரும்’ என்பதற்கு ‘wave like’ – அலையாடும் என்று பொருள் கிடைக்கிறது. நெறி நெற்றியாக இருக்கும்.
தழுத்த – தழைத்த.
எளிய தமிழில் சொன்னால்
எனக்கு வழி தவறிப் போகாமல் அருள் செய்யம்மா
என் மனதில் மண்ணும் நீருமாக உருக் கொண்டு
எழுந்தவளே.. கருமேகம் அலையசையும்
நெற்றி கொண்ட, தழைத்த கருங்குழலி!
சந்திரன் ஏங்கும் வண்ணம்
அழகுடைய பிறைநுதல் கொண்டவளே..
சுழலும் உலகோர் வணங்கும் குழலி
புலித்தோல் துகிலாய் உடுத்த அரன் நெற்றிக் கண் பட்டு
அழிந்த மலர்வில்லாளன் மன்மதன் போல் அழகோடு
அவதரித்த இளையவளான மலைமகளே.
கவனித்துப் படித்தால், தமிழ் மலையாளமாக மெல்ல மாறும் பரிணாம நிகழ்வின் கூறுகள் தெரிகின்றன –
1) ஐகாரம் அகரமாவது – ‘பிழை’ என்பது ‘பிழ’ யாவது; ‘வில்லியை’ என்பது ‘வில்லியெ’ ஆவது
2)”கின்ற’ சிதைவது – ‘சுழலின்ற’ (சுழல்கின்ற), ‘வணங்கின்ற’ (வணங்குகின்ற) – இது பின்னாட்களில் ‘சுழலும்’, ‘வணங்கும்’ என்று இன்னும் எளிமைப் படுத்தப் பட்டிருக்கிறது.
3) அகரம் எகரம் ஆவது – பட்டு என்பது பெட்டு என்றாகிறது.
4) சொல்லாக்கம் – செருப்பம் – ‘இளமை’ என்ற பொருளில். ‘சிறு’ – ‘செறு’ – ‘செருப்பம்’ . வல்லினம் இடையினமானதற்குக் காரணம் தெரியவில்லை. செறு என்பதற்கு ஏற்கனவே போர் என்ற பொருள் இருந்ததாலோ? பேச்சு மொழியிலிருந்து வந்திருக்கலாம்.
5) வெப்பு – இது வெற்பு என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. தற்கால மலையாளத்தில் வெப்பு பெரும்பாலும் சமையல் செய்வதைக் குறிக்கும் –
அரிவெப்பு – வைத்தலிலிருந்து வைப்பு வந்து அது வெப்பாகி இருக்கலாம். அல்லது வெப்பப் படுத்துவதாலா?
மனிதன் சமுதாயத்தோடு கலந்து உறவாட ஏற்பட்ட ஊடகமான மொழி ஒரு static சமாசாரமாக இல்லாமல் வளர்சிதைமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு மேலே கண்டது உதாரணம்.
மொழியை ஊடகமாகப் பார்க்கும் போது வியத்தலும், இகழ்தலும் நீங்கிப் போகிறது. ஊடகம் என்பதால், ஆதிக்கம் செய்கிறவர்கள் மொழியை வழங்குவதிலும், அடிமைப் படுத்தப் பட்டவர் வழங்குவதிலும் (வழங்க வைக்கப்பட்டதிலும்) புலப்படும் வேறுபாடுகள் சமூகவியல் ஆய்வுக்கு உரியன.
February 11, 2021
அந்த நேரிசை வெண்பா வரிசைகளுக்குக் குறுக்கே மெல்ல நடந்து போனது
என் ‘தியூப்ளே வீதி’ நாவலில் இருந்து –
ஞாயிற்றுக்கிழமை.
தியூப்ளே வீதி கொஞ்சம் போல் ஓய்வெடுத்துக் கொள்ளும் தினம் அது. ஆனாலும் இயக்கம் நிற்பதில்லை. தெருவின் கிழக்கு முனையில் பரிசுத்தமே செங்கலும் சுண்ணாம்புமாகி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போன நூற்றாண்டுக் கட்டிடங்கள். அவை, நெருங்கி வந்து வந்து கரையைத் தொட்டு இரையும் கடலோடு சதா வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும்.
அந்தக் கட்டிடங்களில் ஏதாவது ஒன்றின் உள்ளறையில் இருந்து எப்போதும் பியானோ இசையின் சில நறுக்குகள் கசிந்து தெருவில் நடக்கிறவர்களை நூறாண்டு முந்திய ஐரோப்பாவுக்கு நாடு கடத்தும். அழகான புகைப்படங்கள் எடுக்கவே ஏற்படுத்தப் பட்டதாகத் தோன்றும், நகரின் அமைதியான பகுதி அது.
தியூப்ளே வீதியின் மேற்கு முனை இந்தத் தூய்மைக்கும் தத்துவ விசாரத்துக்கும் நேர் எதிரானது. கடல் வளைந்து, தொட்டு இரைந்து, அங்கே ஒரு நாளும் சூழப் போவதில்லை. குலைந்த வரிசையில் அரை டஜன் சினிமா அரங்குகள் அந்த முனையில் படர்ந்து, கடைக்கோடியில் வெளியூர் பஸ் ஸ்டாண்டு வரை பரவி இருக்கும். இடைவெளியில் கள்ளும் சாராயமும் விற்கும் ஏழெட்டு மதுக் கடைகள், சீமைச் சரக்கு விற்கும் நாலைந்து பார்கள். கட்டிடங்களை ஒட்டி நகராட்சிச் சாக்கடை, கருத்த நீர்ப்பரப்பாகப் பிடிவாதமாக அடர்ந்து வாடையைக் கிளப்பும்.
தியூப்ளே வீதிக் கடைகளை எந்த வகையாகவும் பிரித்து விட முடியாது. சைக்கிள்களை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கடையின் ஒரு பகுதி ப்ளைவுட் தடுப்பு முக்கால் ஆள் உயரத்துக்கு அடைத்து தடுப்புக்கு அந்தப் பக்கம் தலைமுடியும் டோப்பாவும் விக்கும் ஏற்றுமதி செய்யும் கம்பெனியாக இருக்கும். பென்சில், கோந்து பாட்டில், ரப்பர் ஸ்டாம்ப் நனைக்க ஸ்டாம்ப் பேட் இதெல்லாம் ரெண்டு கம்பெனிகளுக்கும் பொதுச் சொத்து. நடந்து துடைப்பத்தால் தரையைக் கூட்டிப் பெருக்குகிற பெண்மணியில் இருந்து, உட்கார்ந்து கூட்டிப் பெருக்கிக் கணக்கெழுதும் ஊழியர்கள் வரை சகலமானவர்களும் தேவையை அடிப்படையாக வைத்து அங்கும் இங்கும் பிரித்துக் கொள்ளப் படுவார்கள்.
அப்புறம் மறக்காமல் சொல்ல வேண்டியவை, தியூப்ளே வீதியின் லாட்ஜுகள். புறாக் கூண்டு போல் இத்துணூண்டு வாசஸ்தலங்கள் அவை. சின்ன நடைபாதையில் ஒருக்களித்து நடந்துபோய்த் திரும்பி அதே வாகில் இருபது டிகிரி வலம் சுழன்று கதவைத் திறந்து உள்ளே போனால், ஒருவர் கிடக்கலாம். இருவர் இருக்கலாம் ரகக் குடியிருப்பு. கட்டும்போதே ஒவ்வொரு அறை வாசலிலும் காலி பிராந்தி பாட்டில் வைத்து சிமெண்ட் பூசி விட்டார்கள் என்று தோன்றும் அளவு உள்ளே ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியே ஒரு காலி போத்தல் நிச்சயம்.
இவை தவிர, மிக்சியில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து விளம்பும் ஜூஸ் கடை வாசலில் பரபரப்பாகக் கூட்டம் நிரம்பி வழியும். ‘இதுக்குக் கூட மெஷின் கண்டு பிடிச்சுட்டாண்டா’ என்று ஆரம்பிக்கும் ஆச்சரியம் ராத்திரி நேர அந்தரங்கத்துக்கு மெஷின் வரும் என்று ஆருடம் சொல்வதில் முடிவது வாடிக்கை.
பிள்ளையார் படமோ ஜெயசித்ரா படமோ போட்ட ஒரு கொயர் நோட்டும், சைவப் பிள்ளை நெற்றி போலப் பக்கம் முழுக்க நாலு நாலு வரியாக விரிந்த காப்பி நோட்டும், நான்-டிடெயில் உபபாடப் புத்தகமாக ‘தமிழர் மாண்பு’ம் விற்கிற எழுதுபொருள்-புத்தகங்கள் கடையில் மேற்கத்திய பாணி ஸ்கர்ட் அணிந்த வயதான மிஸ்ஸி ஒருத்தி கால் மேல் கால் போட்டுத் தூங்கிக் கொண்டிருப்பாள்.
தெருவில் அதிகப் பரபரப்பாக, நிறையப் பணம் புரளும் ரெண்டு இடத்தில் ஒன்று, அப்பா மேனேஜராக இருந்த வங்கிக் கிளை. மற்றது கல்யாணம் துணிக்கடையும் ஆயத்த உடுப்பு அங்காடியும். அதற்கு அடுத்த லெவல் பரபரப்பில் தம்பீஸ் ஹோட்டல், சுபாஷ் ஹோட்டல், இந்தியா காப்பி ஹவுஸ், மதராஸ் கபே என்று பத்து மீட்டருக்கு ஒன்றாக இருக்கும் ஹோட்டல்கள். பேங்கும் ஜவுளிக்கடையும் ஞாயிற்றுக்கிழமை அமைதியாகும். மற்றவை கூடுதல் கலகலப்பும் பரபரப்புமாகும்.
இந்தியா காப்பி ஹவுஸ் தவிர்த்த இதர ஓட்டல்களில் இட்லியும், துணைக்கு கடப்பா என்ற அபூர்வ உணவுப் பொருளும் வழங்கப்படுகிற தினம் ஞாயிறு. கிழக்கே கடற்கரை வரைக்கும் காற்று கடப்பாவின் வாசனையைக் கொண்டு சேர்க்கும். ஊர் அந்த உணவுக்கும் வாசனைக்கும் ஆட்பட்டிருந்தது. தேசிய, மாநில உணவாக புரட்டா கலாச்சாரம் உருவாகாத காலத்தில் பெரிய நிலப் பிரதேசத்தையை கட்டிப் போட்டிருந்தது கடப்பா. இரண்டே இட்லியும் அரை லிட்டர் கடப்பாவும் வாங்கிப் போக ஓட்டல் வாசல்களில் தள்ளுமுள்ளு சகஜமான ஞாயிறுகள் அவை. என் போல வந்தேறிகளும் வாழ்த்தியது கடப்பாவை.
ஞாயிறு காலை சரியாக எட்டு மணிக்குக் கடப்பா விஜயம் தொடங்கும். இப்போது மணி ஏழரை.
மேலே வீட்டிலிருந்து இறங்கி வந்தேன்.
‘தந்தையார் வீட்டிலே தானே, தம்பி?’
சொல், பொருள் சுத்தமாக ஒலிக்க எழுந்து வந்த குரல் வாசலில் இருந்து தான்.
பயத்தோடு பார்த்தேன். வா.சி.பார்வேந்தனார். ரிடயர்ட் வருமான வரி அலுவலகத் தலைமை எழுத்தர். அங்கே பெயர் பராங்குசம். மரபுத் தமிழ்க் கவிஞர்.
ஓய்வு பெற்ற, தமிழ்க் கவிஞர் என்ற இந்த இரண்டு அடைமொழிகள் போதும் அப்பாவுக்கு. அபிமானத்தோடு தோழர் ஆக்கிக் கொண்டு விடுவார். கனகாலம் வேலை பார்த்த கல்கத்தாவிலும், மாற்றலில் வந்த இங்கேயும் இதுவே நடப்பு.
‘இவன் தான் என் மகன். தமிழும் படிக்கறான்’ என்று ஒரு அப்பா அவருடைய சிநேகிதரிடம் மகனை அறிமுகப் படுத்தி வைத்தால் என்ன மாதிரி பதிலை எதிர்பார்க்கலாம்?
‘நல்லது தம்பி, நிறையப் படியுங்க’. ‘பிழையில்லாம எழுத முயற்சி செய்யுங்க’
ஆனால் பார்வேந்தனார் என்னிடம் கேட்டது –
‘தம்பி, வியங்கோள் வினைமுற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுங்க பார்ப்போம்’.
அன்னாருக்குத் தமிழ் இலக்கணம் அச்சு வெல்லம் போல என்று அறிந்து நான் வெலவெலத்துப் போனேன் அப்போது. அது இரண்டு வாரம் முன்னால் நடந்த முன்கதை. சம்பவ தினத்தில், நான் எசகுபிசகாக அவர் பார்வையில் படுவதற்குப் பத்து நிமிடம் முன்பு இருந்து அவரும், இலக்கணத்தோடு எந்த வித சம்பந்தமும் இல்லாத அப்பாவும், வங்கி அக்கவுண்டண்ட் ஓவர்கோட் புருஷோத்தம நாயக்கரும் நன்னூல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம்! என்ன மாதிரி உலகம் இது!
இப்படி முதல் பந்திலேயே கூக்ளி போடக் கூடியவர் அடுத்த பத்தே நிமிடத்தில் அடித்துத் துவைத்து அலசிப் பிழிந்து ஆளே அடையாளம் தெரியாமல் ஆக்கி விடக் கூடும். இந்த பயத்தில், அப்போது பதுங்கியது தான், இப்படி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வசமாகத் திரும்ப அவரிடம் மாட்டிக் கொள்ள வேண்டிப் போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
‘அப்பா வந்துவிடுவார். உக்காருங்க’.
பார்வேந்தனாரைப் பிரம்பு அரியணையில் உட்கார்த்தி வைத்தேன். நழுவி விடலாமா என்று அரை மனது நப்பாசை காட்டியது. தேடி வந்தவர் வரும் வரையாவது கூட இருப்பதல்லவா மரியாதை என்றது மனச்சாட்சி. இருந்தேன்.
பார்வேந்தனார் கையில் அட்டை போட்டுக் கட்டி நிறையக் காகிதம் வைத்திருந்தார். அதை அடிக்கடி பார்க்கிறதும் வெற்று வெளியில் விரலைச் சுழற்றி ஏதோ கணக்குப் போடுவதுமாக வேறே இருந்தார். என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல் தான். ஆனால் அவர் வியங்கோள் வினைமுற்றை திரும்ப எடுத்து விட்டால் பிரச்சனை.
‘கல்லூரி எப்படிப் போறது?’
பார்வேந்தர் என்னிடம் கேட்டார். என்ன சந்தேகம்? பஸ்ஸிலே, சோல்தாக்களும், மீன் வியாபாரிகளும் சக பயணிகளாகக் கூடவே வரத்தானே போயாகிறது?
அவர் அதைக் கேட்கவில்லை என்று புரிந்து, நழுவுகிற பதில் ஏதோ சொன்னேன்.
‘எம் மகளும் அப்படித்தான் சொல்றா. பள்ளி வேறே, கல்லூரி வேறே’.
இது கொஞ்சம் சுவாரசியமானது. அவர் மகள்?
தானே மேலதிகத் தகவல் வந்தது. கயல்விழி. அதுதான் பெயர். உயிரியல் சேர்ந்திருக்கிறாள். அப்படி என்றால்? தெரியவில்லை. விசாரிக்க வேண்டியது தான். பிரஞ்சு, பார்வேந்தனார் சொற்படி, கசடறக் கற்றிருந்தாலும், மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவள். கடைசி மகள் என்பதால் செல்லம். மகளிர் பண்பாட்டு ஆடையான சிற்றாடை அணிந்து நடமாடுவதே சாலச் சிறந்தது என்ற தந்தை சொல்மீறி பிரஞ்சு மங்கையர் போல் உடுத்து நடக்கிறவள் என்பது தான் வருத்தம். வாரம் ஒரு நாளாவது சிற்றாடை அணியலாமே.
போதும், நாளை, திங்கள்கிழமையாகப் பொழுது விடிந்ததும், உருப்படியான முதல் வேலை சிற்றாடை உடுத்த கயல்விழியைத் காலேஜில் தேடுவதுதான்.
‘காப்பி சாப்பிடறீங்களா?’
கயல்விழியின் தகப்பனாரைப் பிரியமாக விசாரித்தேன்.
எல்லாத் தரப்புக்கும் எப்போதும் ஏற்ற கேள்வி அது. நிச்சயம் சாப்பிடறேன் என்று பதில் வராது என்று நம்பிக்கை. வந்தாலும் அப்பா பெயரைச் சொல்லி எதிர் ஓட்டலில் வாங்கிக் கொடுத்து விட்டுப் பிய்த்துக் கொண்டு புறப்படலாம்.
பார்வேந்தனார் அதிருப்தியோடு தலையைக் குலுக்கினார். சுவைக் குழம்பி என்று சொல்வதே நல்லது என்றார். இவருக்கு இனி வாழ்க்கையில் காப்பி வாங்கித் தரப் போவதில்லை. கயல்விழி எவ்வளவு அழகான பாவாடை தாவணித் தேவதையாக இருந்தாலும்.
அப்பா கீழே வந்தபோது பார்வேந்தனார் வணக்கம் சொல்லி அறிவித்தார் –
‘பெற்றோர் மன்ற நிகழ்ச்சிக்கான ஆவணமெல்லாம் கொண்டு வந்திருக்கேன் ஐயா. நோட்டீசு என்ற குறும் சுற்றறிவிப்பும் உண்டு. நடுநடுவே புகைப்படம் அச்சடித்து வரும். ஒரே ஒரு விடயம் மட்டும் உங்க தேர்வுக்கு விட்டிருக்கோம்’
அப்பா ‘என்ன’ என்று நிமிர்ந்து பார்த்தார்.
‘அறிவிப்பு தொடக்கத்தில் கட்டளைக் கலித்துறையா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமா அல்லது தரவு கொச்சகக் கலிப்பாவா? சொல்லாடல் தொடருது. எழுத நண்பர்கள் முனைப்பாக இருக்காங்க. நான் இங்கே இருந்த நேரத்தில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக மனதில் செய்த வண்ணம் தான் இருந்தேன்னா பார்த்துக் கொள்ளுங்க’
பகீர் பகீர் என்று வயிற்றில் பனிக் கத்தி இறங்கியது. வகைக்கு ஒன்றாகச் சொல்லச் சொல்லுவாரோ. வியங்கோள் வினைமுற்றே தெரியாதவனை இப்படி எல்லாம் சோதித்தால் மணக்குள விநாயகரே மன்னிக்க மாட்டார் அவரை.
‘தம்பி, உக்காருங்க. உங்க கல்லூரி பற்றித்தான். கேளுங்க’
தம்பீஸ் ஹோட்டலில் கடப்பா தீர்ந்து போய் மண்ணாந்தை சாம்பார் தான் இட்லிக்கு இணையாகக் கிடைக்கும் இனியும் தாமதமாகப் போனால். மனசே இல்லாமல் திரும்ப உட்கார்ந்தேன்.
பார்வேந்தனாரும் அப்பாவும் பேசப் பேச, விஷயம் துண்டு துணுக்காக விளங்கியது.
‘இறுதி செய்யப்பட வேண்டிய விதிமுறைகள் இதெல்லாம்’
பார்வேந்தனார் நீட்டிய நீளக் காகிதத்தில் வரிசையாக எழுதியிருந்தது.
‘கண்ணாடி கொண்டு வரல்லே, படிச்சுடேன்’.
அப்பா நைசாக என்னிடம் தள்ளி விட்டார். நான் ஒரு பெருமூச்சோடு படிக்க ஆரம்பித்தேன். இதெல்லாம் ராகிங் மாதிரி தானே ஆரம்பித்துத் தானே முடியும்.
கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் அமைத்திருக்கும் சங்கமாம் இது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என்று முத்தரப்பிலும் நல்லுறவைப் பேண ஆரம்பிக்கப் பட்ட அமைப்பாம் இது. பார்வேந்தனாரே இங்கேயும் வேந்தர். செயலாளர் எங்கள் வீட்டுப் பெரிசு ஆன பேங்க் மேனேஜர். பொருளாளர், கல்யாணம் ஜவுளிக்கடை முதலாளி. ஜூனியர்களைக் காலேஜ் ராகிங்கில் கொப்பும் குழையுமாகக் குதித்து ஆட வைத்த சீனியர் தெய்வமான லச்சு என்ற லச்சுமணனின் அப்பா அவர். இன்னும் சில உறுப்பினர்கள் கமிட்டியில் உண்டு. அதில் ஒருத்தர் சினிமா டிஸ்ட்ரிப்யூட்டர். அவர் இலவசமாகக் படப் பிரதியைத் தர, மன்ற நிதிக்காக திரைப்படம் திரையிடப் படும். ஒரு காட்சி மட்டும் திரையிட இலவசமாகவே கொட்டகையும் கிடைத்திருக்கிறது. புதுசாகக் கட்டிய அரங்கம்.
நிமிர்ந்து உட்கார்ந்தேன். சினிமா காட்சி. இது நம்ம டிபார்ட்மெண்ட்.
‘இதான் திரைப்படம் பற்றிய சிற்றறிவிப்பு’.
அப்பா வழக்கம்போல் ‘கண்ணு மங்கலாக இருக்கு’ என்ற சால்ஜாப்போடு இதையும் படிக்க என்னிடம் தள்ளி விட்டார்.
சினிமா பிட் நோட்டீஸை எல்லாம் படிக்க வேண்டிய தலைவிதி. நோட்டீசா அது?
‘மக்கள் கலைஞர் ஜெயசங்கரனும், நடிப்புச் சுடர் இலக்குமியும் வாழ்ந்து காட்டும் திரை ஓவியம் ஜீவனாம்சம். படம் பார்த்த உள்ளக் களிப்பும் பெற்றோர் மன்றத்துக்குப் பொருளுதவி செய்த மன நிறைவும் ஒரு சேர உங்களுக்கு ஏற்படும் என்பது வெள்ளிடைமலை’.
இப்படிப் போகிற நோட்டீஸ். இதுவரை வேறெந்தத் தமிழ்ப் படத்துக்கும் இப்படி ஒரு சிற்றறிக்கையை நான் பார்த்தது இல்லை. முகப்பில் படத்தின் சிறப்பை விளக்கும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, மற்றதோ பாக்கி உண்டு.
‘ஜெயசங்கர், ஜீவனாம்சம் இதெல்லாம் கூட மாற்றிடலாம்னேன். வேணாம்னுட்டாங்க. போகட்டும். நான் சொன்னபடி இலக்குமியாவது உண்டே’ என்றார் பார்வேந்தனார் வருத்தம் குரலில் தெரிய.
எனக்கே ஆச்சரியம். நோட்டீசில் அடித்து வந்தது எதிர்பாராத விதமாகப் புதுக் கவிதை. ‘ஆர்பரித்து வா அடலேறே’ என்று உலகத்தைத் திருத்தவோ, ஜீவனாம்சம் படம் பார்க்கவோ ஏகப்பட்ட ‘ஓ’ மற்றும் ஆச்சரியக் குறிகளைத் தாளித்துப் போட்டு விடுக்கும் அழைப்பு. ஓசியில் பிலிம் பிரதி கொடுத்த சினிமா டிஸ்ட்ரிப்யூட்டரான பெற்றோர் மன்ற உறுப்பினர் எழுதியது அது.
இந்த நோட்டீசை ஊர் முழுக்க விநியோகித்தார்கள். இதோடு கூட பிரஞ்சிலும் ஜீவனாம்சம் விளம்பரம் புதுக்கவிதை பயமுறுத்தாமல் அச்சடிக்கப்பட்டது. பிரஞ்சுப் பென்ஷன் வாங்குகிற பெரியவர்கள் பெரிய சைஸ் கோலிக்குண்டு ஆடாத, நடனத்துக்குப் போகாத நேரத்தில் படித்து நிதி உதவி அளிக்கவாம் அது.
‘சம்பா கோவில்லே, சர்வீஸ் முடிஞ்சதும் நம்ம பியானோ ஆர்கன் கேட்க கூடியிருந்தாங்க பெரிய கூட்டம். அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்கேன்’
சந்தடி சாக்கில் பேங்க் ஊழியர் விக்தோ சார் ஒரு மாலை நேரத்தில் சொல்லி பார்வேந்தரின் அன்பையும் எதிரே தம்பீஸ் உணவு விடுதியில் பரிமாறும் சூடு நிறை சுவைக் குழம்பியையும் பரிசாகப் பெற்றார். வின்செண்ட் நடராஜன் ஒரு கத்தை நோட்டீசை அவர் பேட்டையில் கொடுக்க அள்ளிப் போனார். எனக்கென்னமோ குக்கிக்குக் கூளத்தோடு ஜீவனாம்சத்தையும், ஆச்சரியக் குறிகளையும் கலந்து கொடுத்திருப்பார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
நன்கொடை கொடுத்துப் படம் பார்க்க அடுத்த ஞாயிறு காலையில் சுமாரான கூட்டம் வந்திருந்தது. அதில் பலரும் தம்பீஸ் கபே, சுபாஷ் கபே படியேறி கடப்பாவும் இட்லியும் வெட்டி விட்டுக் குழம்பி அருந்தி வந்தவர்கள். தியேட்டரில் நீக்கமற நிறைந்து எங்கும் கடப்பா வாசனை தூக்கலாக அடித்தது நிஜம்.
நானும் வந்தே ஆகணும் என்று சகலரும் சொன்னதால் போய்ச் சேர்ந்தேன். பத்தே பத்து வினாடி பெற்றோர் மன்றப் பெரியவர்கள் கண்ணில் பட்டு வணக்கம் சொல்லி விட்டு சைக்கிளைப் பூட்டி வைக்க மறந்ததாகப் பொய் சொல்லித் தப்பித்தேன்.
ஒரு சின்ன ரவுண்ட் புலிவார்டில் சைக்கிள் மிதித்து சில்லென்ற கடல் காற்றில் போக, மனம் லேசாக இருந்தது. வந்தபோது இந்தியன் நியூஸ் ரீலில் புல்லாங்குழல் சாஸ்வதமாகப் பொழியும் சோக இசை.
கீழே இருந்தால் ஜீவனாம்சத்தை சொல்லிலக்கணம், எழுத்திலக்கணம் சகிதம் பார்க்க வேண்டி வரும் என்ற பயத்தோடு பால்கனிக்கு விரைந்தேன். கிட்டத்தட்ட காலியாக இருந்தது அது.
‘இங்கே உக்கார அனுமதி இல்லே முசியே’.
காவலர் ஒருத்தர் சிரத்தை இல்லாமல் சொல்லி விட்டு எனக்கென்ன போச்சு, கேட்டாக் கேளு, கேட்காட்டப் போ என்ற முகபாவத்தோடு போய் விட்டார். ஒருத்தர் ரெண்டு பேராக வயசானவர்கள் மின்விசிறிகளுக்குக் கீழ் உட்கார்ந்து கடப்பா உண்ட களைப்பைக் கண்மூடி இறக்கிக் கொண்டிருந்தார்கள் அங்கே.
கிட்டத்தட்ட முழு இருட்டு. நான் நின்ற இடத்துக்கு முன் வரிசை நடுவில் இருந்து கரகரவென்று ஏதோ சத்தம். பீகாரில் வெள்ளம் வந்து ஹெலிகாப்டரில் இந்திரா காந்தி பார்வையிட, அரங்கில் லேசான வெளிச்சம்.
கறுப்பு தாவணியும், வெள்ளைப் பட்டுப் பாவாடையுமாக ரெட்டைச் சடையும் போட்டு திம்மென்று லட்சணமான இளம் பெண். கண் என்றால் அது தான் கண். இவ்வளவு பெரிய கருவிழிகளை நான் எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை. திரையைப் பார்த்துக் கொண்டு கையை அடுத்த இருக்கைக்கு எடுத்துப் போகிறாள். பக்கத்து சீட்டில் எதையோ எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பிக்கிறாள்.
இதைத் தான் எதிர்பார்த்தேன்.
நேரே அவளிடம் போனேன்.
‘கயல்விழி தானே?’
அவள் மை தீட்டிய கண்கள் அழகாக விரிய என்னைப் பார்த்தாள். பதில் சொல்லாவிட்டால் என்ன, அவளே தான். இந்தக் கண்ணுக்காக வியங்கோள் வினைமுற்று என்ன என்று கற்றுக் கொண்டு நாள் பூரா எடுத்துக் காட்டலாம்.
‘உயிரியல் தானே?’
அரை இருட்டில் அந்தக் கண்கள் இன்னும் அழகாக இருந்தன. சற்றே விரிந்திருந்த செவ்விதழ்களும்.
‘இலக்குமியை உனக்குப் பிடிக்குமா?’
‘புதுசா வந்திருக்கே.. பேங்க் வீடு.. பிசிக்ஸ் க்ராஜுவேஷன் .. கிராமத்துப் பக்கம்’
‘எப்படித் தெரியும்?’
‘அப்பா கொஞ்சம் சொல்லியிருக்கார். மூஞ்சிலே தான் ஒட்டியிருக்கே … சும்மா சொன்னேன்.. குட் பாயாமே அப்படியா? ‘.
‘நான் இங்கே உட்காரலாமா’?
அவள் பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சிரித்தாள். கை இரண்டிலும் பூனைமுடி சன்னமாகப் படர்ந்திருந்ததையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
‘சொன்னாத் தான் உட்காரணுமா?’
அடுத்த இருக்கையில் அமர்ந்தேன். டைட்டில்கள் சரம் சரமாக வந்து விழ ஆரம்பித்திருந்தன. நான் அதில் ஒரு கண்ணும் கயல் மேல் மற்றதுமாக இருந்தேன்.
‘முறுக்கு ஒரு விள்ளல் வேணுமா?’
ஜாக்கிரதையாக என் கையில் போட்டாள். உடைத்துக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை அரவை மில்லுக்குச் செலுத்த மறைமுகமான கட்டளை.
நான் ஒடிக்க ஒடிக்க விரலே ஒடிந்து விடும் அபாயம். முறுக்கு என்னமோ முறுக்கிக் கொண்டு நிற்கிறது.
அவள் சட்டென்று முறுக்கைப் பிடுங்கினாள். ஓர வாயில் வைத்து ஒரே கடி.
‘இந்தா’
என் ஜீவனாம்சம் அந்த வினாடியில் ஆரம்பித்தது என்பது வெள்ளிடைமலை.
சம்மன் இல்லாமல் மனதில் ஆஜரான மேகலா, ‘உன்னை அறம் பாடியே கொல்லணும்டா’ என்று இலக்கிய வசவு சொல்லி உடனே காணாமல் போனாள்.
இடைவேளையில் எழுந்து போய்த் திரும்பி வரும்போது புதுசாக ஒரு டஜன் முறுக்கு வாங்கி வந்து கொடுத்தேன். கயல்விழி முகம் மலர்ந்து நன்றி சொன்ன அழகுக்கு மொத்தக் குத்தகைக்கு தியேட்டர் கடையையே எடுத்து விடலாம்.
ஜெய்சங்கரும் லட்சுமியும் போல கயல்விழியோடு டூயட் பாடி ஆடுவதாகக் கற்பனை செய்ய ஆனந்தமாக இருந்தது. பாட்டைப் பாதியில் நிறுத்தி முறுக்கு தின்று விட்டுத் தொடர்ந்தோம். உணவு மயமான இனிய உலகு. கயலுக்குக் கடப்பா பிடிக்குமா என்று கேட்க நினைத்து சாய்ஸில் விட்டேன்.
படம் முடிந்து சுபம் போட்டபோது கயல்விழி சொன்னாள் –
‘படத்துலே பாதி மனசு தான் இருந்தது’
‘எனக்கும் தான்’ என்றேன்.
‘நீ கூட வெண்பா எழுதுவியா?’
என்னது?
இலக்குமிக்கு உண்டோ இணை. இதான் ஈற்றடி. மனசுலேயே தளை தட்டாம நேரிசை வெண்பா எழுதிட்டேன். சொல்லட்டா?
கீழே விளக்குகள் எரிய முற்பட்ட நேரம்.
‘அப்புறம் பார்க்கலாம்’
அந்த நேரிசை வெண்பா, வரிசைகளுக்குக் குறுக்கே ஒயிலாக நடந்து போனது.
ஹாலிபேக்ஸ்
என் ‘ராயர் காப்பி கிளப்’ கிண்டில் மின்நூலில் இருந்து –
நான் இங்கிலாந்தில் யார்க்ஷயரில் கிரிக்கெட்டால் பிரசித்தமான லீட்ஸ் பக்கம் ஹாலிபாக்ஸ் என்ற மலைப்பிரதேச நகரத்தில் இருக்கிறேன்.
பாரதியாரின் சின்னச் சங்கரன் கதையில் வரும் கவுண்டனூர் மாதிரி, பத்து பதினைந்து நிமிஷம் காலாற நடந்தால் ஊர் முழுக்க வலம் வந்து விடலாம். மலைச்சரிவில் ஏற்றமும் தாழ்ச்சியுமாக இருக்கும் இந்த இடத்தில் எதற்கு இத்தனை காரும் வேனும் என்று தெரியவில்லை.
ஊரில் இன்னொரு விசேஷம் எங்கே திரும்பினாலும் பாக்கிஸ்தானியர்கள். இதில் பலபேர் சொல்லி வைத்தாற்போல் தந்தூரி ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறார்கள். அல்லது வீடியோ பார்லர் வைத்து பொழுது சாய்ந்தபோது கடையை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டு நல்ல வீடியோ, திருட்டு வீடியோ (இந்திப் படம்) எல்லாம் வாடகைக்குத் தருகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் குண்டூசி, கோணி ஊசி, செக்ஸ் புத்தகம், பீடிங்க் பாட்டில் என்று சகலமானதையும் கொட்டிக் குவித்து அடுக்கி வைத்து இண்டு இடுக்கில் கடை வைத்திருக்கிறார்கள்.
சாயந்திரம் ஊரே உறங்கப் போய்விடும் போது இவர்கள் கடைகளும் இந்தி சினிமாப் பாட்டு ஒலிக்கும் தந்தூரி ஓட்டல்களும் தான் நம் மாதிரி சாமானியர்களுக்காகத் திறந்து இருக்கின்றன.
“இங்கே சில பங்களாதேஷிகள் கடை வச்சிருக்காங்க சார் .. ஜாக்கிரதையா இருங்க அவங்க கிட்டே .. ஏமாந்தா பணத்தைச் சுருட்டிட்டுப் போயிடுவாங்க ..”
எனக்கு உபதேசம் செய்த பாக்கிஸ்தானி நண்பரைப் போலவே மற்றவர்களும் இங்கே மைனாரிட்டியான பங்களாதேஷ் காரரகளை சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கிறார்கள்.
நண்பர் நசீர் உசைன் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பாக்கிஸ்தான் போகிறாராம்.
இரண்டு மாதம் கழித்துப் போகப் போகிறார். அங்கே போனதும் இந்திய நண்பர்களைப் பற்றி என்ன நினைப்பார்? நான் ஊருக்குப் போனதும் அவரைப் பற்றி என்ன நினைப்பேன்?
ஊரில் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் ஏகமாக இருப்பதால், முடிந்த அளவு தண்ணீரை அதிகமாகச் செலவழியுங்கள் .. சார் தண்ணி குடியுங்க.. மேடம் தண்ணி குடியுங்க என்று காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சாத குறையாகக் கோரிக்கை விடுத்து, வேண்டி விரும்பி வற்புறுத்தி விளம்பரம் செய்கிறது தண்ணீர் வாரியம். அவர்களை ஒரு வாரம் சென்னைக்கு அனுப்பி வைத்து வாழ்க்கை வசதிகளை அனுபவித்து விட்டு வரச் சொல்ல வேண்டும்.
சிங்கப்பூரோடு ஒப்பிட்டால் யார்க்ஷயர் கவுண்டியில், முக்கியமாக ஹாலி•பாக்ஸில் சுத்தம் குறைவுதான்.
பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அப்படியே அணைக்காமல் தரையில் போட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டில் நுழையும் மிடில் ஏஜ் வெள்ளைக்காரி மாமிகள் (‘இப்ப என்னாங்கறே’ என்று ஒரு பார்வை), சூயிங்கம்மை உரித்துத் தெருவில் காகிதத்தை எரிந்து விட்டு வரிசை கலையாமல் பள்ளிக்கூட வேனில் ஏறும் பிள்ளைகள், பர்கர் கிங்கில் ‘டேக் அவே’ யாக வாங்கிய மீடியம் சைஸ் ஆமை போன்ற பர்கரைக் கடைக்கு வெளியில் புல்தரையில் காத்தாட உட்கார்ந்து நல்ல வெள்ளை, அழுக்கு வெள்ளை, சோகை வெள்ளை போன்ற நடமாடும் ஒரே நிறப்பிரிகையைப் பார்த்தபடி மொச்சு மொச்சு என்று தின்று விட்டுத் தெருவோரம் பிளாஸ்டிக் டப்பாவை எறிந்து புறங்கை வரை நக்கிக் கொண்டு நடக்கிற இளைஞர்கள் என்று நம் ஊருக்குச் சற்றும் குறையாத விதத்தில் தூய்மையைச் சீராகக் கடைப்பிடிக்கிறார்கள்.
அம்மணிகள் குடித்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகளாலும், எல்லா விதக் காகிதம், பிளாஸ்டிக்கினாலும் சாயந்திரம் ஆறு மணிக்கு நடைபாதை நிரம்பிக் கிடக்கிறது. தெருமுனையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு குத்த வைக்கிறவர்கள் தான் யாரும் தட்டுப்படவில்லை.
திங்கள்கிழமை அலுவலகத்தில் தாமதமாக நுழைந்த நம்ம ஊரு நண்பர் திருப்பதி லட்டு பாக்கெட்டை நீட்டினார். இங்கிலாந்தில் எங்கே ஏடுகொண்ட்ல வாடா என்று அவரைப் பார்க்க, லட்டோடு இலவச இணைப்பாகத் தன் சொந்தக் கதை சோகக் கதையைக் கூறியதன் சுருக்கமாவது –
பக்கத்தில் பர்மிங்க்ஹாமில் வெங்கடாஜலபதி கோயில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ஒரு ரயில்வே டிக்கட் முப்பத்தேழு பவுண்ட் வீதம் வாங்கி (இதுவே ஒரு மாதம் முன்னால் ரிசர்வ் செய்தால் இருபது பவுண்ட் தான் கட்டணம்), பந்து மித்திர சகிதமாக அங்கே போய் ஞாயிற்றுக்கிழமையன்று தரிசித்துவிட்டுப் பிரசாதத்துடன் சாயந்திரம் திரும்பக் கிளம்ப, லீட்ஸ் வரைக்கும் டிராக்ஷனில் கோளாறு என்று ரயில் நின்று நின்று வந்து வீட்டுக்கு வந்து சேரும்போது நடுராத்திரி கழிந்து விட்டதாம். ஒன்றரை மணி நேரம்தான் பிடிக்கும் ரயில் பயணம் இது.
நம்ம ஊரே தேவலை சார் என்றார். போதாக்குறைக்கு அவர் போனதற்கு முதல்நாள் தான் ரயில்வே ஸ்டிரைக்.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்ன என்றால், இங்கே ரயில்வே தனியார் வசம் உள்ள சேவை.
“என்ன சார், டி.வி வாங்கி நிம்மதியாக சினிமா பார்க்கலாம்னு பார்த்தால், டிவி லைசன்ஸ் வாங்கணுமாம். இல்லாட்ட வீட்டுக்குள்ளே நுழைஞ்சு கவர்மெண்டு ஆளுங்க ஜப்தி பண்ணிட்டு அபராதமும் போட்டுட்டுப் போயிடுவாங்களாம்” என்று அலுத்துக் கொள்கிறார் இங்கே புதிதாக வந்த இன்னொரு நண்பர்.
பின்னே என்ன, மூணு மாசத்துக்கு ஒரு தடவை முப்பது பவுண்ட் டி.வி லைசன்ஸ், கேபிள் டிவிக்கு மாதாமாதம் அழ வேண்டியது என்று செலவு அதிகம்தான்.
சின்னவயதில் ஊரில் ரேடியோ லைசன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று போஸ்ட் ஆபீஸில் பணம் கட்ட வீட்டில் என்னைத்தான் விரட்டுவார்கள்.
“ஏண்டா உங்க வீட்டிலே இன்னொரு மர்பி ரேடியோ இருக்குமே ..”
போஸ்ட் மாஸ்டர் நாயுடு நைசாகத் தன் நினைவாற்றலைப் பறைசாற்றிக் கெத்தான கவர்மெண்ட் உத்தியோகஸ்தனாக நடந்து கொள்வார்.
“அது ரிப்பேர் மாமா”.
“அப்பக் கொண்டு வந்து எங்கிட்டே காமிச்சுட்டு சர்ட்டிபிகேட் வாங்கிடணும் .. இல்லாட்ட அதுக்கும் சேர்த்து லைசன்ஸ் வாங்கணும் ..”
ஆகாசவாணி .. செய்தி அறிக்கை .. வாசிப்பது பஞ்சாபகேசன் என்று டெல்லியில் இருந்து ஏகப்பட்ட கொரகொரப்புக்கு நடுவே இந்திரா காந்தி ராஜமானியத்தை ஒழித்ததையும், உச்சி வெய்யில் நேரத்தில் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம் வாசிப்பதையும் தாத்தா சந்தோஷமாகக் கேட்க எத்தனை ரேடியோவுக்குக் கிஸ்தி கட்டுவது கட்டபொம்மா என்று எனக்கு இன்னும் முளைக்காத மீசை துடிக்கும்.
இப்போது கட்டை மீசை வைத்திருக்கிறேன். ஆனால் என் டி.வி லைசன்ஸைத் தங்கி இருக்கும் ஹோட்டல்காரர்கள் கட்டி விடுவதால் அது துடிப்பதில்லை.
February 8, 2021
ஓர்ம்மகளுடெ விருந்நு
ஓர்ம்மகளுடெ விருந்நு
காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து.
ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் – இது வெறும் தோற்றம் என்பவர்களும் வாழ்த்தப்படட்டும் – நோஸ்டால்ஜியா என்பது ஐம்பது அறுபது வருடப் பழைய அனுபவங்களை நினைவு கூர்தல் என்பது கடந்துபோய், வெறும் பத்து வருடத்துக்கு முந்திய கணங்களும் ‘இனி இவை திரும்பப் போவதில்லை’ என்ற போதம் மனதில் அழுத்த, அகப் பயணங்களுக்குக்கதவு திறந்து காத்திருக்கின்றன.
பத்து வருடத்துக்கு முன் மலையாள மொழியில் ‘கலாகௌமுதி’ என்ற ஒரு வாரப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. இன்னும் தான் அது வருகிறது. அச்சு மசிவாடையும், சிக்கும் சிடுக்குமான கேரள அரசியல் வாடையும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான ஒற்றை முகமுமாக வெளியாகும் இன்றைய கலாகௌமுதி பற்றி இங்கே எழுத ஒன்றுமில்லை.
அந்தப் பழைய கலாகௌமுதியில் நான்கு தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. நான்குமே பழையதை அசைபோடுவதை ஒரு கலைத்தன்மையோடு செய்தவை.
முதலாவது கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் என்ற கதகளிக் கலைஞரின் சுயசரிதம். அடுத்தது பேராசிரியர் கிருஷ்ணன் நாயர் தன் அனுபவங்களின் அடிப்படையிலும் வாசிப்பின் அடிப்படையிலும் மலையாளப் புத்திலக்கிய க்கங்களை வாராவாரம் விமர்சனம் செய்த இலக்கிய வாரபலன் கட்டுரைப் பகுதியான ‘சாஹித்ய வாரபலம்’. அடுத்தது, கேரள முதலமைச்சராக இருந்த சி.அச்சுதமேனோன் தொடர்ந்து எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள். நான்காவது, மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறந்த பத்திரிகையாளர் என்று அறியப்பட்ட வி.கே.மாதவன்குட்டி எழுதி வந்த ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ என்ற ‘நினைவுகளின் விருந்து’.
இவர்களில் யாருமே இன்று நம்மிடையே இல்லை. 2006 மார்ச் முதல் வாரத்தில் பேராசிரியர் கிருஷ்ணன் நாயரும், அதற்கு ஓர் ஆண்டு முன் வி.கே மாதவன் குட்டியும், அதற்கும் சில ஆண்டுகள் முன் மற்ற இருவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்தார்கள்.
பழைய கலாகௌமுதி பத்திரிகை இவர்களுக்கு முன்பாக அதே பட்டியலில் இடம் பிடித்து விட்டது. னாலும், இவர்கள் எழுத்தில் வடித்த 1930-60 காலகட்டங்களின் கேரளபூமியும், அவை வெளியான 1990-1995 காலமும் ஒரு வாசகன் என்ற விதத்தில் என் மனதில் அழியாத இடத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டவை. பழையதை நினைவு கூர்வது குறித்த நினைவு கூர்தலான இதை ஒரு derivative nostalgia என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
மாதவன் குட்டி ஒரு பத்திரிகையாளராக அறியப்பட்டவர். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதிய அவர் வாழ்க்கையின் முதல் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் மட்டுமே கேரளத்தில் மலபார் பிரதேச கிராமத்தில் வாழ்ந்தவர். அந்த நினைவுகளோடு அப்புறம் ஐம்பது வருடத்துக்கு மேலாக தில்லியில் நிரந்தரமாகக் குடியமர்ந்து பத்திரிகைப் பணி செய்துவந்தார். தன் இளமைக் கால நினைவுகளை அடுத்து வந்த வாழ்க்கை அனுபவங்கள் பாதிக்காமல் பாதுகாத்து அவற்றை எழுத்தில் வடிக்க முற்பட்டபோது அவர் ஒரு புது இலக்கிய வடிவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.
ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் செய்தியாக மட்டும் தன் பிள்ளைப் பிராயத்தைப் பதிவு செய்ய மாதவன் குட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால், அவர் இலக்கியப் படைப்பு எதையும் அதுவரை எழுதியிருக்கவில்லை. ஒரு நாவலாக எழுதினால் அனுபவமின்மை காரணமாகச் சொல்ல வந்தது கட்டுமீறிப் போய்த் தோல்வி ஏற்படலாம். நம்பகத்தன்மை குறையவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்சுருக்கதோடு சகலமான விதத்திலும் தான் மனதில் காத்து வைத்திருந்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அவர் ஏற்படுத்திக் கொண்டது வாழ்க்கைச் சித்திரங்களை (bio-sketches) கோர்த்துத் தொடுத்து நீட்சியடையச் செய்யும் ஒரு சுவாரசியமான கலவையான வடிவம்.
மாதவன் குட்டி இந்தப் படைப்பில் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் காட்டுவது ஒரு சாக்குத்தான். அவற்றின் வழியே ஒரு சமுதாயத்தின் இருப்பை, வளர்சிதை மாற்றத்தை, மாற்றத்தை எதிர்த்து, அது சாத்தியமில்லை என்று தெரிந்து நிறையச் சங்கடத்தோடும் சகிப்புத்தன்மையோடும் ஏற்றுக் கொண்டு தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு பாரதப் புழையோரத்துக் கிராமத்தைக் காட்டுவதே அவருடைய நோக்கம்.
‘நான் பிறந்தது ஒரு கிராமத்தில். பாலக்காடு தாலுக்காவில் உள்ள கிராமம்’ என்று சாதாரணமாகத் தொடங்குகிறது ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையில் இந்த நூல் நகர்கிறது. அந்த வயதுக்கே உரிய நிஜமும், நிழலும், கற்பனையும், துளிர்விடும் சைகளும், குழந்தைமையும், மெல்ல விழித்தெழும் இனக்கவர்ச்சி எண்ணங்களுமாக அந்தப் பிராயத்தில் திரும்ப நுழைகிறபோது புனைவு மெல்லிய பூச்சாகக் கவிகிறது.
மாதவன் குட்டியின் கிராமம் பெரும்பாலும் நாயர் குடும்பங்களால் ஆனது. அதிலும் கிரியத்து நாயர்கள், அத்திக்குறிச்சி நாயர்கள், வெளுத்தோடன் நாயர்கள் என்ற மூன்று பிரிவு நாயர்களே அங்கே இருந்தார்கள். நாயர் தரை என்று அவர்கள் வீடுகள் இருந்த பகுதி அழைக்கப்பட்டது.
‘செறுமன்’ (சிறுமகன்) என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தவரும் சிலர் கிராமத்தில் உண்டு. அவர்களுக்குக் குளத்தில் குளிக்கத் தனிப் படித்துறை. அங்கே அவர்கள் வளர்க்கும் மிருகங்களும் இறங்கிக் குளித்துச் சேறாகிக் கிடக்கும். அவர்களின் கோவில்கள் கூடத் தனியானவை. நாயர்கள் வழிபடும் கோவில்கள் க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் கோவில்கள் காவுகள் என்று பிரித்துக் காட்டி வழங்கப்பட்டன.
கிராமத்து நாவிதர் சின்னான் நாயர்களுக்கு கிராப் வெட்டிவிடுவார். அவருடைய சகோதரர் பக்கத்து கிராமங்களில் பட்டன்மாருக்கு (அந்தணர்களுக்கு) குடுமி திருத்தி, நாள் நட்சத்திரம் பார்த்து தாடி மழித்து விடுவார். இளைய சகோதரர் ஈழவருக்குத் தலையில் கிண்ணியைக் கவிழ்த்ததுபோல் ‘பப்பட வெட்டு’ என்று வெட்டிவிடுவார்.
அந்தணர்கள் குறைவானபடியால் கட்டணத்தை அதிகமாக்குகிறார் நாவிதர். அவர்களோ, மாதத்துக்கு இரண்டு முறை சவரம் என்னும் வழக்கத்தை மாற்றி மாதம் ஒரு முறையாக்கி விடுகிறார்கள். சித்தம் தடம்புரண்ட நாவிதர் அந்தணர்களுக்கும் பப்பட வெட்டு என்று மாற்றி வெட்டித்தள்ள கலவரம் ஏற்படுகிறது. மாதவன் குட்டி விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு சிறுவனின் பார்வையில் பட்ட சம்பவம் இது. அவ்வளவுதான்.
ஒரு பிரம்மாண்டமான சமூக, அரசியல் விழிப்புணர்ச்சியோடு கேரளத்தில் பெருமாற்றம் நிகழ்ந்த காலகட்டத்துக்கு சற்றே முற்பட்ட 1930-40 காலம் மாதவன் குட்டி சித்தரிப்பது. அந்தக் காலப் பாலக்காட்டு கிராமத்துக்கு அப்ரஹாம் புதிதாக வந்து சேர்கிறார். அவர் தபால்காரராகப் பொறுப்பேற்று கிராமத்தில் நுழையும்போது, கிராம மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். முதன்முறையாக ஒரு கிறிஸ்துவர் கிராமத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தக் கால நாயர்கள் ஜாதி உணர்வில் ஊறியவர்கள். ஸ்தானி நாயர் என்று குலப்பெருமை பேசுகிறவர்கள். அஞ்சல் சேவையை அவசியம் கருதி ஏற்றுக் கொண்டாலும், தபால் அட்டையில் எழுத மாட்டார்கள். அது செறுமன்கள் எழுதிச் சேதி சொல்ல. தபால் உறையில் கடிதம் எழுதி வந்து சேர்ந்தாலும், முதலில் மேல் விலாசம் பரிசோதிக்கப்படும். மகா ராஜ ராஜ ஸ்ரீ என்பதன் சுருக்கமாக ம.ரா.ரா. என்று பெயருக்கு முன்னால் போடாததால் தபால்காரரிடமே கடிதத்தைத் திருப்பிக் கொடுக்கிறார் ஒருத்தர். அந்த ஊரில் கிறிஸ்துவரான அப்ரஹாம் தபால்காரராக வரும்போது நாயர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை அவர் தொட்டுக் கொடுத்த கடிதத்தைக் கையில் வாங்கினால் தீட்டுப் பிடிக்குமா என்பது.
புரையத்து நாராயணன் நாயர் பிரச்சனையைத் தீர்க்கிறார். அவர் கோட்டயத்தில் வேலை பார்க்கும்போது அங்கே நாயர்கள் கிறிஸ்துவர்களோடு பழகுவதைப் பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் தொட்டால் தீட்டு இல்லை என்று அவர் ‘அனுபவத்தில்’ சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து சில புதிய நியமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அப்ரஹாம் வீட்டில் படியேறி வந்து கடிதம் கொடுத்தபிறகு, குடிக்கத் தண்ணீர் கேட்டால் தரலாம். அவர் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்துக் குடிக்க வேண்டும். அப்புறம் அப்படியே வைத்துவிட்டுப் போகலாம். கவிழ்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ‘நியமம்’ செறுமன்களுக்கு ஆனது. ஆக, அப்ரஹாம் இடைத் தட்டில் அந்த சமூக அமைப்பில் இருத்தப்படுகிறார்.
அப்புறம் அப்ரஹாம் கிராமத்தில் வீடு வாங்குகிறார். பரம்பு (தோட்டம்) வாங்குகிறார். ரப்பர் செடி வரவழைத்து வளர்க்கிறார். நிலத்தில் கப்பை (மரச்சீனிக் கிழங்கு) பயிரிடுகிறார். ‘இது கிறிஸ்துவர்கள் சாப்பிடற சமாச்சாரம். நாயர்களுக்கு ஏற்பட்டதில்லை’ என்று கள்ளச் சிரிப்போடு நாயர்கள் அப்ரஹாமின் நடவடிக்கைகளைக் கவனிக்கிறார்கள். அவர் திரேசம்மையைக் கல்யாணம் செய்து கிராமத்துக்குக் கூட்டிவருகிறார். கழுத்தில் நாலு பவுன் நகையும், நீண்டு கருத்த கூந்தலுமாக கிராமத்துக்கு வரும் திரேசாளை நாயர் ஸ்த்ரீகளுக்குப் பிடித்துப் போகிறது – அவள் நெற்றியில் சந்தனப் பொட்டு இல்லாமல் போனாலும்.
அப்ரஹாம் தலைமை தபால் உத்தியோகஸ்தனாகும்போது கிராம போஸ்ட் ஆபீசில் அவருக்குக் கீழ் உத்தியோகம் பார்க்க ஒரு நாயர் நியமிக்கப்படுகிறார். மெல்ல கிராமப் பிரமுகராக உயரும் அப்ரஹாம் ‘அவுரச்சன்’ என்ற மரியாதையாக அழைக்கப்படுகிறார்.
அவர் உயிர் பிரியும்போது கிறிஸ்துவ சமுதாயத்தின் அரசியல் அங்கமான கேரள காங்கிரஸ் உயிர் பெறுகிறது. கிராமத்தில் இன்னும் சில கிறிஸ்துவக் குடும்பங்களும், மாதாகோவிலும், கப்பையும் மெல்ல நுழைந்து அந்த சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கங்களாகின்றன.
ஒரு நாலு பக்கத்தில் அப்ரஹாம் மெல்ல எழுந்து கிராமத்துப் பெரிய மனிதராவதை அற்புதமான சொற்சிக்கனத்தோடு சித்தரிக்கிறார் மாதவன் குட்டி. ஓவியர் நம்பூத்ரி வரைந்த கோட்டோவியத்தில் அப்ரஹாம் இன்னும் உயிரோடு நடந்து வருகிறார்.
பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது நம்பூத்ரியின் சித்திரங்களுக்காகவே பத்திரிகையைப் பிரித்ததும் ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ பக்கத்தைத் தேடிப் புரட்டிய ஓர்மை இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அந்தக் கோட்டோவியங்களில் பலவும் புத்தகத்திலும் இடம் பெற்றது இந்த நூலின் வாசிப்பு அனுபவத்தை இன்னும் முழுமையாக்குகிறது.
தமிழ்நாட்டிலிருந்து ஆண்டிப் பண்டாரங்கள் கிராமத்தில் வந்து ஊர்ப்பொதுவில் ஆலமரத்தடியில் தங்குகிறார்கள். காலையில் ஆலமரத்தில் காகங்கள் விழித்தெழும்போது அவர்களும் எழுந்து அன்னக் காவடிகளோடு பக்கத்து கிராமங்களுக்குப் போகிறார்கள். அவர்களின் மனைவிமார், கிராமத்தில் எண்ணெய் விற்கிறார்கள். ஆண்டிகளும் அவர்களின் மனைவிகளும் ராத்திரியில் சண்டை போட்டால் ஆலமரத்துக் காக்கைகள் விழித்தெழுந்து பெருஞ்சத்தத்தோடு கரைய ஆரம்பிக்கின்றன. இந்தத் தொல்லைக்குப் பயந்து அவர்கள் குடும்பங்களில் கலகமே ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் சிறப்பு அம்சம் இது என்பதை மாதவன் குட்டி சொல்லாமல் சொல்கிறபோது நமக்குள் ஒரு புன்சிரிப்பு எழுகிறது.
மழை பெய்யாதபோது, வீடு வீடாகச் சென்று ‘மானத்து மகாதேவா, மழைபெய்தால் ஆகாதோ’ என்று தமிழில் பாடிக் கும்மியடிக்கிறார்கள் ஆண்டிப் பெண்கள். எண்ணெய் விற்க வந்த ஒரு ஆண்டிச்சிப் பெண்மேல் கண் வைக்கிறார் தரவாட்டு நாயரான கிட்டுண்யார் (கிட்டு நாயர் என்ற கிருஷ்ணன் நாயர்). கமலேடத்தி (கமலாக்கா) கழுத்து டாலர் காணாமல் போகிறபோது எண்ணெய் விற்க வந்த ஆண்டிச்சிதான் திருடிப் போயிருக்கிறாள் என்று கிட்டுண்யார் அவளைத் தேடிப்போய், ஆளில்லாத இடத்தில் அவள் உடல் முழுக்கத் தடவிச் சோதனை நடத்துகிறார். நகை கிடைக்கிறது. அதை அவர்தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தார் என்று கமலேடத்திக்குத் தாமதமாகத் தெரிகிறது.
மாதவன் குட்டி காட்டும் கிராமத்தில் ஒரு வேசியும் உண்டு. குஞ்ஞு மாதவி என்ற அந்தப் பெண்ணை ஒரு நாயர் பையன் காதலித்துக் கைவிட்டுப் போயிருக்கிறான். அவளுடைய தேநீர்க்கடைக்குப் போகவேண்டாம் என்று சிறுவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அங்கே உள்ளே நுழைந்து மெல்ல வெளியே வருகிறவர்களைப் பற்றிய குறுகுறுப்பான பார்வையை, எண்ண ஓட்டங்களை பதின்ம வயது மாதவன் குட்டி அற்புதமாகப் பதிவு செய்கிறார்.
ஒரு நினைவு, அது சார்ந்து ஒரு நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் முக்கியப் பாத்திரமான கிராமத்து ஆண் அல்லது பெண் பற்றி ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம், அந்தச் சித்திரத்தினடியில் பிறக்கும் இன்னொரு நினைவு, இன்னொரு வாழ்க்கைச் சித்திரம் இப்படிப் பின்னலிட்டுப் போகிறது மாதவன் குட்டியின் புத்தகம்.
பழைய கால தென்னிந்திய சமூகத்தில் அவ்வப்போது நிகழும் சம்பவமான யாராவது வீட்டை விட்டுப் போய் அலைந்து திரிந்து விட்டு சாவகாசமாகப் பல வருடம் கழித்துத் திரும்ப வருவது மாதவன் குட்டியின் கிராமத்திலும் நடக்கிறது. நான்கு பெண்குட்டிகளுக்குத் தந்தையான வாத்தியார் குட்டிராமன் நாயர் வீட்டை விட்டுப் போய் பதினெட்டு வருடத்துக்கு அப்புறம் திரும்பி வருகிறார். மனைவி பாஞ்சாலியம்மையும் குடும்பமும் ஏதும் நடக்காததுபோல் அவர் வரவை ஏற்றுக்கொள்கிறார்கள். பள்ளிக்கூட வாத்தியார் வேலை திரும்பக் கிடைக்கிறது. இன்னொரு முறை தந்தையாகிறார் குட்டிராமன் நாயர். ஐந்தாவது பெண்குழந்தை இப்போது.
மொத்தம் நூறு வார்த்தைகளுக்குள் இத்தனையும் சொல்லி முன்னால் போகிறார் மாதவன் குட்டி. வார்த்தைகளுக்கு இடையே உள்ள வெளியைக் கட்டுக்குள் வைக்கத் தெரிந்த அவருக்கு படைப்பின் முழு வெளியும், அதைச் சார்ந்த புறவெளியும் இயல்பாக வசப்படுகின்றன. ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ நூலைத் திரும்பத் திரும்ப வாசித்து அனுபவிக்க வைப்பது அவருடைய இந்தத் திறமைதான்.
2007
February 7, 2021
நிக்கொலா பெனடிட்டி என்ற வயலின் கலைஞர்
என் ‘ஏதோ ஒரு பக்கம்’ கிண்டில் மின்நூலில் இருந்து –
எடின்பரோ அஷர் ஹால் வாசல். ஒரு கோடை கால சாயந்திரத்தில் நண்பர் ஆண்டோவும் நானும் க்யூவில் நிற்கிறோம். ஆண்டோ இத்தாலியர். முழுப்பெயர் அண்டோனியோனி. புதுக் கவிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெயர் என்றாலும் சுருக்கி உச்சரிக்க சிரமப்பட்டதால் எனக்கு ஆண்டோ ஆனார்.
‘நிக்கோலா பெனடிட்டின்னு ஸ்காட்டிஷ் பொண்ணு. இத்தாலிய வம்சாவளி. அற்புதமா வயலின் வாசிக்கிறா. கிளாசிக்கல் வெஸ்டர்ன். உனக்குப் பிடிக்குமே, வா, போகலாம்’. ஆண்டோ வற்புறுத்தவே எடின்பரோ கோட்டை பக்கம் விளிம்பு நாடக விழாவில் ‘ரசீது’ நாடகம் பார்க்க உத்தேசித்ததைத் தள்ளிப் போட்டேன்.
டிக்கெட் வாங்க க்யூவில் நிற்கிறபோது அஷர் ஹால் வாசலில் நிக்கோலாவின் போஸ்டர் கண்ணில் பட்டது.
அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பெனலோப் க்ரூசில் தொடங்கி எனக்குத் தெரிந்த எல்லா அழகான பெண்களும் வரிசையாக நினைவு வந்த அதியற்புத நேரம் அது. பார்க்க மூக்கும் முழியுமாக இருந்து மற்ற ஏதாவது திறமையும் சொல்லிக் கொள்கிறது மாதிரி அமைந்துவிட்டால் இவர்களுக்கு வானமே எல்லை.
நிக்கோலா பெனடிட்டிக்கு சமீபத்தில் தான் 18 வயது முடிந்தது. மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதக் கச்சேரி சர்க்யூட்டின் இப்போதைய சர்வதேசப் பிரபலங்களில் இளையவர் நிக்கோலா தான்.
நம் ஊர் சைல்ட் பிராடிஜிகளின் சாதனைக்குச் சற்றும் குறைந்ததில்லை நிக்கோலாவுடையது. நாலு வயதில் வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்து, ஒன்பது வயதிற்குள் வரிசையாக எட்டு இசைத் தேர்வுகளில் வெற்றி பெற்று வயலின் மேதை யஹூதி மெனுஹ்சின் இசைக் கல்லூரியில் பட்டம் வாங்கியவர். ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, ஸ்காட்டிஷ் பாலே இசைக்குழு போன்ற புகழ்பெற்ற குழுக்களில் வாசிப்பவர். பிரிட்டீஷ் அரச குடும்பத்துக்காக அரசவைக் கலைஞராகத் தனிக் கச்சேரி செய்தவர்.
சூயிங்கம் மென்றபடி பெரும்பாலான பிரிட்டீஷ் கன்யகைகள் விஸ்கி குடிக்கும் பாய் பிரண்டோடு சுற்றும் பருவத்தில், ஷைக்கோவிஸ்கி சைமனோவிஸ்கி, ஸ்ட்ராவின்ஸ்கி என்று இசைமேதைகளின் படைப்புகளைத் துரத்திப் பிடித்து ஆழ்ந்து கற்றவர். லண்டன் பிபிசி ப்ரோமனேட் இசைவிழாவிலும் இதற்கு முந்தைய எடின்பரோ சங்கீத சீசன் கச்சேரியிலும் ஒளி வட்டத்துக்கு வந்து கண்டிப்பான பத்திரிகை விமர்சகர்களால் தாராளமாகப் பாராட்டப்பட்டவர். இவருடைய ரசிகர் கூட்டமும் ஸ்காட்லாந்தில் அதிகம்.
நாலாம் வரிசையில் உட்கார டிக்கெட் தலா முப்பது பவுண்ட் கொடுத்து வாங்கியானது. சென்னை மியூசிக் சீசனில் சௌம்யா, நித்யஸ்ரீ கச்சேரிக்கு வாங்குவதைவிட ரெண்டாயிரம் ரூபாய் அதிகம்.
இவர்களுக்கு ஈடான க்ளோஸ் அப் புன்னகை சவிதா நரசிம்மன் கச்சேரி ஓசியிலேயே மதிய அரங்கில் கிட்டியதுண்டு. ஆண்டோவை சென்னை சீசனுக்கு அழைத்தபோது மணி அடித்துத் திரை உயர, மேடையில் வயலினை ஏந்தியபடி ஒயிலாக நிற்கும் நிக்கோலா.
‘வாவ், கிரேஸ்புல்’. பக்கத்தில் ஒரு ஸ்காட்டிஷ் பாட்டியம்மா சிலாகித்தாள். கோடைகாலம் என்பதால் மேல் சட்டையைக் கழட்டிப் பந்து போல் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டூ இளைஞன் ஒருத்தன் விடாமல் கைதட்டினான். முத்தங்கள் எல்லாத் திசையிலிருந்தும் மேடைக்குப் இறக்கை இன்றிப் பறந்தன. ‘ஷீ இஸ் ம்யூசிக் பெர்சானிஃபைட்’. பரவசத்தோடு சொன்னார் ஆண்டோ. இத்தனைக்கும் நிக்கோலா வயலினை வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.
‘அந்தப் பொண்ணு கையிலே வச்சிருக்கற வயலின் மதிப்பு தெரியுமா?’ ஆண்டோ என் காதில் கிசுகிசுத்தார்.
என்ன, நம்ம லால்குடி, குன்னக்குடி, கன்யாகுமரி வாசிக்கற மாதிரி சமாச்சாரம். மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய். இல்லையாம். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய். மயக்கம் போட்டு விழாமல் சமாளித்துக் கொண்டு ஏன் என்று விசாரித்தேன். ஸ்ட்ராடிவாரி என்றார் ஆண்டோ சுருக்கமாக. பதினெட்டாம் நூற்றாண்டில் வயலின் தயாரித்த மேதை கையால் உருவானதாம். உலகத்திலேயே தற்போது ஆயிரத்துக்கும் குறைவான ஸ்ட்ராடிவாரி வயலின்களே மிச்சம். லண்டன் ராயல் மியூசிக் அகாதமி நிக்கோலா வாசிக்க இப்படி அரைக் கோடி ரூபாய் வயலினை கடன் கொடுத்திருக்கிறது. அந்த அழகி ‘கொடுங்க ப்ளீஸ்’ என்று கேட்டால், ஒரு ஆர்க்கெஸ்ட்ராவே இலவசமாகக் கிடைக்கலாம்.
சும்மா சொல்லக் கூடாது. வில்லைக் கையில் எடுத்ததும் நிக்கோலா விசுவரூபம் எடுத்தார். மெண்டல்சன் வயலின் கான்சர்ட்டோ ஈ-மைனர், மோசர்டின் வயலின் அடாகியோ, ப்ராஹ்ம்ஸின் வி மெலோடியன், எல்லோருக்கும் தெரிந்த ஆவே மரியா என்று அடுத்தடுத்து நேர்த்தியாக வாசித்து அசத்திவிட்டார்.
அடுத்து வந்த இசையை எங்கோ கேட்ட நினைவு.
‘இளவரசர் சார்ல்ஸின் முன்னாள் மனைவி டயானாவின் சவப்பெட்டி வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டு அடக்கத்துக்கு முந்திய வழிபாடு நடந்ததே, நினைவு இருக்கா?’. ஆண்டோ கேட்டார்.
நினைவு வந்துவிட்டது. ஜான் டவனர் இசையமைத்த அற்புதமான ‘அத்தீனுக்கான பாட்டு’ அது. இழவு நேரத்திலும் இசையை அரங்கேற்றிப் பிரபலப்படுத்த வெள்ளைக்காரர்களால் தான் முடியும். நிக்கோலா வாசித்தது ஹமீர் கல்யாணி போல் கம்பீரமான சோகம் ததும்பும் இதே ‘சாங்க் ஃபார் அதீன்’ தான்.
கர்ட்டன் காலாக அவர் கரவொலிக்கு நடுவே மேடைக்கு மூன்று தடவை குனிந்து வணங்கியபடி வந்தும் சத்தம் அடங்கவே இல்லை. நிக்கோலா நினைவில் ராத்திரி முழுக்க கிளாசிக் எப்.எம் ரேடியோ கேட்டபடி விழித்திருந்தாராம் ஆண்டோ.
போன வாரம் நிக்கோவாவின் இணையத் தளத்தில் பார்த்தபோது, அவருக்கு இந்திய ஆன்மீகத்தில் சிரத்தை வந்திருப்பது புரிந்தது. அவர் அண்மையில் வாசிதது வெளியான, ஜான் டவ்னர் இசையில் அமைந்த புதுத் தொகுப்பில் தியானம், லாலிஸ்ரீ போன்றவை பெயரில் மட்டுமில்லாமல் இசை இனிமையிலும் நம்ம ஊர் சாயலுடன் இருக்கின்றன. கூடிய சீக்கிரமே டிசம்பர் சீசனில் மியூசிக் அகாதமி சதஸ்ஸிலோ, சாயந்திரக் கச்சேரியிலோ நிக்கோலா பெனடிட்டியைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அருணா சாயிராம் போல் ஹவுஸ்ஃபுல் நிச்சயம்.
Nicola Benedetti picture courtesy : https://www.nicolabenedetti.co.uk/
February 6, 2021
எடின்பரோவில் சுற்றி வந்தபோது
என் ‘எடின்பரோ குறிப்புகள்’ கிண்டில் மின்நூலில் இருந்து –
எடின்பரோ – ஊர் சுற்றி வந்தபோது
எடின்பரோ கோட்டைக்குத் தெற்கே நீண்டு வளைந்து உயரும் ராயல் மைல் தெருவில் பழைய பட்டணம் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்புப் பட்டணமாக விரிந்த சென்னை ஜார்ஜ் டவுண் போல காலம் உறைந்து நிற்கும் சுற்றுப்புறங்கள். மூதாதையரின் மூச்சுக் காற்றின் வாடை இன்னும் கூடத் தீர்க்கமாக புலனை ஊடுருவி, மனதின் திசைகளை உள்வளைத்து ஒரே முகமாகத் திருப்பும் வீதி இது.
போதாக்குறைக்குத் தெருவில் ஏதாவது ஒரு ஓரத்தில் ஸ்காட்லாந்து தேசிய உடையணிந்த இசைக் கலைஞர்கள் தேசிய இசைக்கருவியான Bagpipe இசைத்தபடி நின்று, கொஞ்ச நஞ்சமிருக்கும் காலப் பிரக்ஞையையும் உதிர்ந்துபோக வைக்கிறார்கள்.
ஆங்கில இலக்கியம் என்றதும் நினைவு வரக்கூடிய வால்டர் ஸ்காட்டின் இல்லம், புதையல் தீவு புதினம் மூலம் குழந்தை இலக்கியத்தில் தடம் பதித்த ஆர்.எல்.ஸ்டீவன்சன் வசித்த இடம் என்று அங்கங்கே கல்லில் பொறித்து வைத்த அறிவிப்புப் பலகைகளை வாசித்தபடி நடந்தால், பதினெட்டாம் நூற்றாண்டு எடின்பரோவின் மிச்சமான ஒரு கட்டிடம் முன்னால் முன்னூறு வருடம் முந்தைய நீர்வழங்கு நிலையம்.
எடின்பரோ நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வந்த அந்தக் காலத்தில் நடுராத்திரிக்குத் தண்ணீர் வழங்கத் தொடங்கி பின்னிரவில் இரண்டு மணிக்கு நிறுத்துவார்களாம்.
இருபது வருடம் முன்னால் புழலேரி வரண்டபோது, சென்னை மாநகராட்சி தண்ணீர் வழங்கிய நேரம் இந்த ராத்திரி 12 – 2 மணி. தூக்கமும் கெடாமல் தண்ணீரும் கிடைக்க, சென்னை மேல் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் கடைப்பிடித்த அதே வழியைத்தான் முன்னூறு வருடம் முந்திய எடின்பரோ மேட்டுக்குடியும் கடைப்பிடித்திருக்கிறது. நடுராத்திரியில் சர்க்கார் கொடுக்கிற தண்ணீருக்காகக் காத்திருந்து வாங்கி வந்து வீட்டுத் தொட்டியில் நிரப்ப, கூலி கொடுத்து ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள்.
இதை எழுதி வைத்த தகவலைச் சுவாரசியமாகப் படித்தபடி மேற்கே நடையை எட்டிப்போட, பிரம்மாண்டமான ராபர்ட் ஹ்யூம் சிலை. தத்துவ மேதையும் வரலாற்றாசிரியருமான ஹ்யும் துரை ரூசோ போன்ற பிரஞ்சுப் புரட்சியாளர்களின் நண்பர். இந்த எடின்பரோ பிரமுகரின் அற்புதமான சிற்பத்துக்கு தற்கால எடின்பரோ இளைய தலைமுறை ஒரு பரிசு வழங்கியிருக்கிறது. பதினைந்து இருபது அடி சிலையின் தோளைப் பிடித்து ஏறி, ராபர்ட் ஹ்யூமின் தலைக்கு மேல் போக்குவரத்தை ஒழுங்கு செய்யத் தெருவோரம் வைக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டிராபிக் கூம்பைக் கவிழ்த்திருக்கிறார்கள். கழுத்தில் காலி பியர் பாட்டிலைக் கட்டித் தொங்க விடாததுதான் பாக்கி.
இந்த vandal பிசாசுகளின் வம்சம் விருத்தியாகாமல் போகட்டும் என்று சபித்தபடி நடக்க, எடின்பரோவில் உலவும் மற்ற பிசாசுகளைக் காட்டித்தரத் தயாராக நிற்கிற தரகர்கள் துரத்துகிறார்கள். எல்லாமே முன்னூறு, நானூறு வருடத்துக்கு முந்திய நிஜப் பிசாசாம்.
அழுக்குக் கோட்டும் தாடியுமாக ஒரு கிழவர் கையில் வைத்திருந்த பைலை நீட்டிப் புரட்டிப்பார்க்கச் சொல்கிறார். எந்த எந்தப் பேயை யார் யார் எந்தக் கிழமையில் பார்த்தார்கள் என்ற தகவல் அதெல்லாம். போன மாதம் எட்டாம் தேதி முன்னிரவில் ஒரு இருபது அடி தள்ளி நிலத்தடிப் பேழைப் பக்கமாகத் தட்டுப்பட்ட பேய் தான் லேடஸ்ட் ghost appearance. நாலு பவுண்ட் கொடுத்து கிழவரோடு நடந்தால் இப்பவும் கணிசமான பேய், பிசாசு, ரத்தக் காட்டேறி வகையறாக்கள் கண்ணில் பட வாய்ப்பு இருக்கிறதாம்.
சரி, பெரிசு. ராத்திரி ஏழு ஏழரையைப் போல சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரேன்,போகலாம். அட நில்லுப்பா, ஏழு மணி வரைக்கும் என்னாத்துக்குக் காத்துக்கிடக்கணும்னேன். இப்பவே நடையைக் கட்டலாம். கிளம்பு.
சாயந்திரம் நாலு மணிக்கு மேட்னி ஷோ நடத்த எந்தப் பிசாசு வரும்?
இந்தப் பக்கம் நூறு வருஷத்துக்கு முந்தின பியர்க்கடை இருக்கு பார், அங்கே ஒரு பைண்ட் வாங்கி ஊத்திட்டு அடுத்த கடைக்கு பத்து மினிட் நடந்தா அடுத்த பைண்ட், வழியிலே ஹலோ சொல்ல ஒரு பிசாசு. அப்புறம் அடுத்த நூறு வருச மது. பக்கத்துலே அழகான ஆவியா அலையற மாது.
கிளம்புப்பா. அமாவாசைக்கு வரேன் பெரிசு என்று பிய்த்துக்கொண்டு கிளம்ப வேண்டிப் போனது.
எடின்பரோ – எழுத்தாளர் மியூசியம்
எழுத்தாளர்கள் அருங்காட்சியகமான ராயல் மைல் ரைட்டர்ஸ் மியூசியத்தில் நுழைய, நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் எழுத உபயோகித்த மேஜை, நாற்காலி, அலமாரி.
அந்த தேக்கு அலமாரிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பகலில் உன்னதமான தச்சுக் கலைஞனாகவும், இரவில் கொடூரமான கொள்ளைக்காரனாகவும் இருந்து பிடிபட்டு, நகர மத்தியில் தூக்கிடப்பட்ட ஒரு எடின்பரோக்காரன் உருவாக்கியதாம் அது.
வால்டர் ஸ்காட் பங்குதாரராக இருந்து நடத்திய அச்சகம் திவாலாகி, தன் வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கு வக்கீல் ஃபீசுக்குப் பதிலாக ஸ்காட் கொடுத்த டைனிங் டேபிள், நாற்காலிகள் ஒரு அறை முழுக்கப் பரத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. முழு உருவ பிளாஸ்டர் ஓஃப் பரீஸ் சிற்பமாக நாற்காலியில் உட்கார்ந்து இன்னும் சாப்பிட ஆரம்பிக்காத வால்டர் ஸ்காட். அறைக்கு வெளியே கண்ணாடிப் பேழைகளில் ஸ்காட்டின் கையெழுத்துப் பிரதிகள், குடை, உடுப்பு, காலணி, துப்பாக்கி.
அவருடைய அச்சகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. அந்தப் பழைய பிரிண்டிங்க் மிஷினை மாடியில் ஒரு அறையில் அப்படியே அலுங்காமல் நலுங்காமல் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
கவிஞர் ராபர்ட் ப்ரவுண், நாவலாசிரியை டோரதி பார்க்கர், ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்று எடின்பரோ படைப்பாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் வால்டர் ஸ்காட் நினைவகம் போலவே பார்த்துப் பார்த்து நேர்த்தியாக அமைத்து வைத்த காட்சிப் பொருள்கள். எழுதிச் சம்பாதிப்பதில் உலக அளவில் உச்சத்தில் இருக்கும் இன்னொரு எடின்பரோ பெண் எழுத்தாளருக்கும் இன்னும் கொஞ்ச நாளில் இங்கே இடம் ஒதுக்கப்படும். ஹாரி பாட்டரைப் படைத்த ஜே.கே.ரவுலிங் தான் அவர்.
ஆனாலும், பின் நவீனத்துவத்தைத் தன் படைப்புகளால் செழுமைப்படுத்தி, போன மாதம் காலமான முதுபெரும் எடின்பரோ எழுத்துக்காரி மூரியல் ஸ்பார்க் இந்த எழுத்தாளர் மியூசியத்தில் இப்போதைக்கு இடம் பெறுவார் என்று தோன்றவில்லை.
எடின்பரோ – பாலே
ராயல் மைலிலிருந்து, தெற்குப் பாலம் வழியாகத் திரும்பினால், ஐந்தே நிமிடத்தில் எடின்பரோ பல்கலைக் கழகம். எதிரே சேம்பர் வீதியில் சோழர்காலச் சிற்பங்கள் வைத்த ராயல் மியூசியம்.
அதற்கும் முன்னால் நிக்கல்சன் தெருவில் புராதனமான எடின்பரோ அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி. இதன் தொடக்ககால மாணவர்கள் – ஆசிரியர்கள் முடிதிருத்தக் கலைஞர்கள். அந்தக்கால வழக்கப்படி இவர்களே சிகையலங்காரத்தோடு அறுவை சிகிச்சையும் நடத்தி வந்தவர்கள்.
கல்லூரிக்கு எதிரே, முகப்பு மட்டும் புதுப்பிக்கப்பட்ட இன்னொரு பழைய கட்டிடமான பெஸ்டிவல் தியேட்டர். பண்டிகைக் கொட்டகையில் கூட்டம் அலைமோதுகிறது. நாலு நாள் மட்டும் இங்கே ஆங்கில தேசிய பாலே கழகம் நடன நிகழ்ச்சி நடத்துகிறது. பாலே என்றாலே நினைவு வரும் ‘அன்னப் பறவைகளின் ஏரி’.
ரஷ்ய இசைமேதை ஷைகோவ்ஸ்கியின் அற்புதமான இசையமைப்பில் உருவான Swan Lake பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தின் மகத்துவம் பற்றி மனதிலிருந்து அப்படியே எடுத்து எழுதினாலும் cliché கலந்துவிடும் என்பதால் தவிர்க்கவேண்டிப் போகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பான் – ஐரோப்பியக் கலை நிகழ்வு ஸ்வான் லேக். ஜெர்மனியப் பழங்கதை. நாடக – நாட்டிய ஆக்கம் பிரஞ்சு முறையில். மேற்கத்திய மரபிசைப்படி இதற்கு இசைவடிவம் கொடுத்தவர் ரஷ்யரான ஷைகோவ்ஸ்கி. அவர் காலத்துக்குப் பிறகு இதை அமர காவியமாக்கியது சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்கக் கலை வெளிப்பாட்டின் உன்னதக் குறியீடான, உழைக்குள் மக்களின் கலைக் கழகம் – போல்ஷாய் தியேட்டர்.
கொடூரமான மந்திரவாதி வான் ரோத்பார்ட். அவன் அன்னமாக உருமாற்றிய பேரழகி ஓடேட். கூடவே மற்ற அன்னப் பறவைகளான அவளுடைய தோழியர். இந்தப் பெண்களின் பெற்றோர் வடித்த கண்ணீர்ப் பெருக்கில் உருவான ஏரியில் சோகத்துடன் நீந்தும் அன்னப் பறவைப் பெண்கள் ராத்திரிக் காலங்களில் மட்டும் மனித உருப் பெறுகிறார்கள்.
அன்னப் பறவை ஏரிப்பக்கம் வந்த அரச குமாரன் சிக்ஃப்ரைட் இரவில் மானுடப் பெண்ணாகும் ஓடேட்டிடம் மனதைப் பறிகொடுக்கிறான். ஓடேட் மேல் உண்மையான காதலை அவன் நிரூபித்தால் அவளுக்கும் தோழியருக்கும் சாப விமோசனம் கிடைக்கும். அது நடக்க விடாமல் மந்திரவாதி தடுக்கிறான். தன் மகள் ஓடைல் என்ற இன்னொரு அழகியை ஓடேட் வடிவத்தில் அரச குமாரனை மயக்க வைக்கிறான். அப்புறம் – போதும், இணையத்தில் தேடினால் முழுக்கதையும் கிடைக்கும்.
நாலு விஸ்தாரமான காட்சிகள். குழு நடனமாகவும், தனி நடனமாகவும், ஜோடி நடனமாகவும் முப்பதுக்கு மேற்பட்ட நடனங்கள். கிட்டத்தட்ட ஐம்பது நடனக் கலைஞர்கள். ஓடேட் மற்றும் ஓடைல் பாத்திரங்களில் நடனமாடும் prima ballerina ஆன முதன்மை நர்த்தகி. வால்ட்ஸ், மார்ச், போல்கா, பாஸ்த் தெ தெக்ஸ், பாஸ் தெ ஆக்ஷன், பாஸ் தெ கெரக்தர் என்று நாட்டிய வகை, அமைப்புகள்.
இந்த நூற்றியிருபது வருடத்தில் ஸ்வான் லேக் கதையாடலில் துணிச்சலான சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாட்டிய அமைப்பிலும், காட்சியாக்கத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், ஷைகோவ்ஸ்கியின் இசை மட்டும் மாற்றமின்றி இன்னும் புத்தம் புதியதாகத் தொடர்ந்து வருகிறது. அந்த மேதையின் உழைப்பும் கலை நேர்த்தியும் ஒவ்வொரு இசைத் துணுக்கிலும் தெறித்துக் கிளம்பி மகத்தான ஓர் இசையனுபவத்தைக் கட்டி நிறுத்தும்போது மூன்று மணிநேரம் கடந்துபோனது தெரியாமல் நெக்குருகிப் போகிறோம்.
இசைக்கு அணி சேர்க்கும் விதத்தில் சோகம், மகிழ்ச்சி, பயம், குரூரம், கம்பீரம் என்று எல்லாப் பாவங்களோடும் அழகாகச் சுழன்றும், துவண்டும், கொடியாகத் துளிர்த்தெழுந்தும், அன்னமாக அசைந்து மேடைமுழுக்க நிறைந்து சூழ்ந்தும் நடனக் கலைஞர்கள். அழகான கறுப்பில் ஒரு ஆப்பிரிக்க நடனக்காரரும் அதில் உண்டு.
நாடகத்தின் கடைசிக் காட்சியில் அரச குமாரன் ஏரியில் குதித்து தன் தெய்வீகக் காதலை நிரூபிக்க, மந்திரவாதி மரணத்தைத் தழுவுகிறான். அன்னங்கள் நிரந்தரமாகப் பெண்களாக உருமாற, அரச குமாரனும், காதலி ஓடேட்டும் ஆவியாக சொர்க்கம் புகுகிறார்கள். போல்ஷாய் தியேட்டர் ஸ்வான் லேக் பாலே முடிவிலிருந்து இது வேறுபட்டது.
எடின்பரோ – பேட்டை பத்திரிகை
எடின்பரோ மட்டுமில்லாமல், இங்கிலாந்தில் முக்கிய நகரங்களில் எல்லாம் இலவசமாக விநியோகிக்கப்படும் பத்திரிகை மெட்ரோ. மாம்பலம் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் போல ஆனால் வாரம் ஒரு தடவை இல்லாமல், தினசரி இலவச சேவை.
காலையில் பஸ்ஸில் ஏறினால் ஒரு பெட்டி நிறைய வைத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி அன்போடு வழங்கப்படும் இந்த மெட்ரோ பேட்டைப் பத்திரிகை தானே என்று அலட்சியம் செய்யாமல், அரசியல், கலை, விளையாட்டுப் பெருந்தலைகள் அவ்வப்போது பேட்டி கொடுப்பதும் உண்டு.
மாம்பலம் டைம்சில் மன்மோகன் சிங்க் பேட்டி வருமோ என்னமோ, இரண்டு வாரம் முன்னால்தான் இவிடத்து மெட்ரோவில் பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேரின் பேட்டி வந்தது. நாலு நாள் முன்பு, மரியாதைக் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கேலவேயின் பேட்டி.
டோனி ப்ளேரைவிட, அவருடைய அடுத்த நிலை அமைச்சர் கார்டன் பிரவுன் சிறப்பானவர் என்று நினைக்கிறீர்களா என்று நிருபர் விசாரித்தபோது கேலவே கொடுத்த பதில் இது.
They both are the cheeks of the same arse.
February 5, 2021
என் நூல்கள் – முன்னுரைகள்
நாவல், சிறுகதை, குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள் அச்சுக்குப் போகும்போது பின்னட்டை வாசகங்களை எழுதுவது வரம். பா.ராகவன் இதைப் பற்றி அவருடைய முகநூல் காலக்கோட்டில் (டைம்லைனில்) எழுதியதைப் படித்தபோது புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் இதே போன்ற, கடினமான இன்னொரு பணி நினைவு வந்தது.
என் முதல் புத்தகமான சிறுகதைத் தொகுப்பு ‘தேர்’, அசோகமித்திரன் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் பரவலான கவனத்தைப் பெற அந்த அற்புதமான முன்னுரையும் ஒரு காரணம்.
அதற்கு அடுத்த மெலிந்த சிறுகதைத் தொகுப்பு ‘ஆதம்பூர்க் காரர்கள்’ புத்தக்த்தில் முன்னுரை போட இடமில்லை. என்றாலும் சுஜாதா சுபமங்களாவில் நூல் விமர்சனம் எழுதி அந்தப் புத்தகத்தையும் பேசப்படச் செய்தார். அவரிடம் முன்னுரை வாங்கியிருந்தால் கூட அந்தக் கவன ஈர்ப்புக் கிட்டியிருக்காது.
அதற்கப்புறம் வந்த ‘முதல் ஆட்டம்’ சிறுகதைத் தொகுப்பு பதிப்பாளர் (நர்மதா பதிப்பகம்) ராமலிங்கம் எழுதிய முன்னுரையோடு வெளியானது. “நானே எழுதிட்டேன் சார்” என்றார் அவர். ”பரவாயில்லேங்க” என்று பதில் சொல்லிக் கடந்து போனேன்.
அதற்கு அடுத்து ’சிலிக்கன் வாசல்’, ‘ஐம்பது பைசா சேக்ஷ்பியர்’, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ என்று நான்கைந்து சிறுகதைத் தொகுப்புகள் என்னுடைய முன்னுரையோடு வந்தன. ஒவ்வொன்றும் எழுதி முடித்து அனுப்ப முதலில் சிரமமாக இருந்தாலும், அடுத்தடுத்து வரவே பழகிவிட்டது.
தொடர்ந்து வந்த ‘சைக்கிள் முனி’ சிறுகதைத் தொகுப்பு மாலன் எழுதிய செறிவான முன்னுரையோடு வந்தது. அடுத்து ‘பத்து கதைகள்’ தொகுப்பு கலாப்ரியாவின் விரிவான முன்னுரையோடு வெளியானது.
அதற்கு அப்புறம், தற்போது வெளியாக இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்பு வரை மீண்டும் நானே எழுதிய முன்னுரையோடு அச்சேறியவை.
நாவல்களில் ‘ரெட்டைத் தெரு’வுக்கு கிரேசி மோகன் முன்னுரை கொடுத்திருந்தார். அரசூர் வம்சம் பி.ஏ.கிருஷ்ணன் முன்னுரையோடு வந்த நாவல். பேசப்பட்ட முன்னுரை அதுவும். மற்ற அனைத்து நாவல்களுக்கும், அண்மையில் வெளியான ’ராமோஜியம்’ உட்பட நான் எழுதிய முன்னுரையோடு வெளியாகின.
’கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பு முன்னுரை கல்கி ராஜேந்திரன் அவர்கள் எழுதியது. ‘கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்’ ஞாநி முன்னுரையோடு வந்தது. ’ராயர் காப்பி கிளப்’ தொகுப்பு திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் எழுதித்தர வெளியானது. மற்ற அனைத்தும் நானே எழுதியவை.
புத்தகம் அச்சுக்கு அனுப்பும் முன் முன்னுரை எழுதிச் சேர்த்து அனுப்ப இப்போது பழகி விட்டது.
என்னிடம் முன்னுரை கேட்டு அணுகும் நண்பர்களின் படைப்புகளை முடிந்தவரை படித்து அவ்வப்போது எழுதுகிறேன். சமீபத்தில் முன்னுரை கோரிக்கைகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. சொந்த சோகமான அண்மை நிகழ்வு காரணமாக அந்த முன்னுரைகளை எழுத இயலாமல் போனதில் வருத்தம்தான்.
January 30, 2021
ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.
நான் பிறந்த தினத்தில், லந்தன்பத்தேரியின் கிழக்கிலும், மேற்கிலும் ஓடும் சிற்றாறுகளில் தெளிந்த நீர் ஓடியது. தீவுக்காரர்களின் பேச்சு வழக்கில் அதை ‘தண்ணி மாறிடுச்சு’ என்பார்கள். பெரியாறு அதன் நீர்ப் பெருக்கில் கலந்த உப்பைக் கடலுக்கே திருப்பி அனுப்பும்போது இது நடக்கும்.
தொடர்ந்து வெள்ளத்தில் பெரும் இடப்பெயர்ச்சி உண்டாகும். சாத்தானின் அம்புமுனை போன்ற வாலோடு திரண்டிமீன் கூட்டங்கள் முதலில் சிற்றாற்றிலிருந்து புறப்பட்டுப் போகும். மேற்கோள் குறிகள் போல் சுருண்டிருக்கும் இறால்கள் நீர்ப்பரப்பில் நீண்ட வசனம் எழுதிப் போகும். அயிரை மீன், கணவாய் மீன், துறைமுகத்து முகப்பில் சீன வலைகளுக்குள் விழுந்து சாகும் சோம்பேறியான மடவை மீன்கள் எல்லாம் கிளம்பிப் போகும். சினை வைத்த கரிமீன்கள் மட்டும் தொலைவில் தண்ணீர்முக்கத்தில் இருந்து, நல்ல தண்ணீருக்குத் திரும்பும்.
வெள்ளப் போக்கு மடை மாறியதைக் கண்ட பையன்கள், பீரங்கி மைதானத்தில் வளர்ந்து நிற்கும் தூங்குமூஞ்சி மரங்களிலிருந்து சடசடவென்று புழையில் குதிக்கும் சத்தத்தைக் கேட்டேன். நான் கிடந்த நீரும் அமைதியாக இருந்தது. திடீரென்று அங்கே புயலடித்தது. அம்மாவின் குதிகாலில் புறப்பட்ட ஒரு நடுக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து, கடந்து போனது. நாங்கள் இருவரும் ஒன்றே என்ற நிலை தகர்ந்தே ஆகவேண்டிய தருணத்தில் அம்மா ‘அம்மே’ என்று அலறினாள்.
இதே சமயம், எரணாகுளம் ஹஸூர் நீதிமன்றத்திற்கு முன், திருச்சூர் கலெக்டர் ராமகிருஷ்ணய்யா, திருவனந்தபுரம் – கொச்சி அரசுக்குச் சொந்தமான மோரிஸ் ஆக்ஸ்போர்ட் காரில் வந்திறங்கினார். கணையன்னூர் தாசில்தாரின் அறையில் முப்பது சொச்சம் பேர் – அம்மை குத்துகிறவர்கள், காயத்துக்குக் கட்டுப் போடுகிறவர்கள், மருந்து கலக்கும் கம்பவுண்டர்கள், சானிடரி இன்ஸ்பெக்டர்கள், பப்ளிக் ஹெல்த் ஆபீசர் – எல்லோரும் கலெக்டருக்காகக் காத்திருந்தார்கள்.
மலையாளத்தில் சரளமாகப் பேச முடியாத தன் இயலாமையை கிருஷ்ணய்யா சத்தம் போட்டுப் பேசுவது மூலம் தவிர்க்கப் பார்த்தார்.
”ஃபோர்ட் கொச்சி ஆர்.டி.ஓ அவர்களே, கணையன்னூர் வட்ட தாசில்தாரே, எரணாகுளம் நகரசபை பப்ளிக் ஹெல்த் ஆபீசர் அவர்களே, , மருந்து கலக்கும் அப்போதிகிரிகளே, அம்மை குத்துகிற உத்தியோகஸ்தர்களே, சகோதரர்களே”.
அப்போதுதான் அம்மை குத்துகிறவர்களில் ஒரு பெண்ணும் இருந்ததைக் கவனித்து அவர் தொடர்ந்தார்: ”அம்மை குத்துகிற அம்மாவே, அம்மை குத்தும் தங்கச்சியே, எல்லோருக்கும் வணக்கம்.
”ஒரு நூற்றிருபத்தைஞ்சு வருடம் முன்பு, ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் திருவிதாங்கூருக்கும் கொச்சிக்குமான ஒரே ரெசிடெண்ட், அதாவது அரசாங்க அதிகாரி இருந்தார். அவர்தான் கர்னல் மன்றோ. மன்றோ துரை. அந்தக் காலத்தில், வைசூரிக் கிருமிகள்..வைசூரி அணுக்கள் காற்றில் எங்கும் நிறைந்தன”.
எல்லா சப்தத்துக்கும் ஒரு எழுத்து உருவாக்க முயலும் மலையாளத்தில் அவர் பேச முற்பட, அது சமயத்தில் தடம் புரண்டு மென்மையான தமிழாகி இருக்கும்:
“அப்போள் நான் எந்தாணு பறஞ்சு வந்நது? திருக்கொச்சிக்கு ரெசிடெண்ட் ஒருத்தர். கர்னல் மன்றோ. கொச்சியில் வைசூரி தொற்றுநோயாகப் பரவின காலம். அம்மை வந்தா அது மாரியம்மன் விளையாடறான்னு அர்த்தம். மாரியம்மன் காவடி எடுத்து ஆடறா. ஹரஹரோ ஹரஹரோ. அப்படி சொன்னா, வைசூரி போகுமா? போகாது. வைசூரியை ஒழிக்க மருந்து வேணும். நம்ம ரெசிடெண்ட் துரை கர்னல் மன்றோ, கொச்சி அரண்மனையில் ராஜாங்க வைத்தியர் ப்ரோவன் துரை கிட்டே சொன்னார் : “ப்ரோவா, அக்கரை சீமையிலிருந்து வைசூரி தைலம்# கொண்டு வாங்கோ”. ப்ரோவன் டாக்டருக்கு ஒரே சிரிப்பு. ”கர்னலே, யாருக்காக வைசூரி தைலம் இங்கிலாந்திலே இருந்து வரவழைக்கணும்?
மலையாளத்தானுங்க எல்லாம் பயந்தாங்குளிகள். எறும்பு கடிச்சால் கூட வாய்விட்டு அழுவாங்க. அம்மை குத்தினா பொறுத்துப்பாங்களா? குத்தினா வலிக்குமேன்னு பயந்து இந்தப் பைத்தியங்களெல்லாரும் ஓடிப் போக மாட்டாங்களா”?
அப்போத்தான் கேட்டது அனந்தபுரம் அரண்மனையில் ஒரு ஃபீமேல் வாய்ஸ். ஒரு பெண்குரல். ராணி சேது பார்வதி பாய் குரல் அது. ஹர் ஹைனஸ் மகாராணியம்மா சொன்னாங்க : ”டாக்டர் ப்ரோவன், என் கையில் முதல்லே அம்மை குத்தி விடுங்க”.
”ராணி கையிலே அம்மை குத்தின ரெண்டு வடு விழுந்தது. ராஜ வம்ச ரத்தத்தில் வைசூரி தடுக்கற மருந்து கலந்தது. திருவிதாங்கூரிலே அம்மை குத்தறது ஜெயமாச்சு. கொச்சியிலே என் ஊர்க்காரர், அதாவது கோவை நகரத்துக்காரர், ஒரு வகையிலே எனக்கு மாமா உறவு, திவான் நஞ்சய்யா, ரெசிடெண்ட் மன்றோ துரை சொன்னபடிக்கு பத்து அம்மை குத்தற உத்யோகஸ்தர்களை உத்தியோகத்தில் நியமிச்சார். முதல்லே அம்மை குத்தறவங்க, அவங்க பின்னாடியே காயத்துக்குக் கட்டுப் போடும் டிரஸ்ஸர், அப்புறம் மருந்து கலந்து கொடுக்கும் அபோதிகரிகள், கடைசியா டாக்டர்கள். அம்மை குத்தற ஊழியர்களே, நீங்க தான் ஹெல்த் டிபார்ட்மெண்டை தொடங்கி வச்சவங்க. மலையாளிகள் எப்பவுமே சீக்கு பிடித்தவங்க. ஆகவே டிபார்ட்மெண்ட் மேன்மேலும் வளரட்டும்.
”போன வருஷம் சம்மர்லே, எரணாகுளம் காயல் தீவுகளிலே வைசூரி அம்மை போட்டு செத்துப் போனவங்க எத்தனை பேர் தெரியுமா? இருபத்து நாலு. எத்தனை பேர்?”
”இருபத்துநாலு”, அம்மை குத்துகிறவர்கள் சொன்னார்கள்.
”அந்தத் தீவுகளிலே இருக்கப்பட்டவங்க எல்லாம் முழுமூடர்கள். ரெண்டு மாசம் முன்னாடி பிப்ரவரியிலே தலையெண்ணி ஜனத்தொகை கணக்கெடுக்க அங்கே போன சென்சஸ் ஊழியர்களைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே ஓட்டமா ஓடிட்டாங்க. முதல்லே ஜனத்தொகை கணக்கெடுக்க வருவாங்க. பின்னாலேயே அம்மை குத்தறவங்க வருவாங்க. அதுதான் அவங்க பயம். சின்ன சின்ன தீவுகளிலே வைசூரிக் கிருமி வெளியே வர முடியாமல் அங்கேயே சுத்திக்கிட்டிருந்தது. பாட்டு பாடற பிரபலமான வித்வான் டைகர் வரதாச்சாரி மாதிரி மாரியம்மனுக்கும் பெரிய கூட்டம்னா ரொம்ப பிடிக்கும். கூட்டம் இல்லேன்னா கடுங்கோபம் ஏற்படும். சர்வநாசம்.
”மாரியம்மனை தடுக்க யாராலே முடியும்? அந்த மாரியம்மனைத் தடுக்க முடிந்தவங்க நீங்க. நீங்க மட்டும் தான். அம்மை குத்துறவங்களே, ஹெல்த் டிபார்ட்மெண்டில் முன்னணி உத்தியோகஸ்தர்களே. முளவுகாடு, பனம்புகாடு, கடமகுடி, பொன்னாரிமங்கலம், எடவனகாடு, போஞ்ஞிக்கர, ஞாறய்க்கல், பைப்பின், லந்தன்பத்தேரி, முளகுபாடம், முரிக்கில்பாடம், வல்லார்பாடம் அப்படி சகலமான இடங்களுக்கும் நீங்கள் செல்லுங்கள். ஜெயில்ஜெட்டி படகுத்துறையில் படகுகள் ரெடி. படகோட்டிகள் ரெடி. வீடு வீடாகப் போய்த் தேடுங்கள். ஒரு வீடு விடாமல் தேடுங்கள்.
“புதுசா பிறந்த ஒரு குழந்தையையும் விடக்கூடாது. பிரசவம் பார்க்கிற மருத்துவச்சிகளை முதலில் போய்ப் பார்த்து இனிமையாக கேளுங்கோ : ‘அம்மா, இங்கே புதிய பிரசவங்கள் ஏதும் உண்டோ?”. அவங்க சொல்லவில்லை என்றால் பயமுறுத்துங்கோ. பிறந்த குழந்தைகள் உண்டா என்று சோதனை போடுங்கோ. புது சிசுக்களுக்கு எத்தனை அம்மை குத்தணும்?”.
“ரெண்டு அம்மை குத்தணும்”, அம்மை குத்துகிறவர்கள் சொன்னார்கள்.
“குட்டிக் கையில் அம்மை ரெண்டு. இது அரண்மனை பிரபு பாலராம வர்மா கட்டளை இட்டபடிக்கு. இது இந்தியாவோட பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆணை”.
ராமகிருஷ்ணய்யா சொந்த விஷயம் பேசுகிற மாதிரிக் குரலைத் தாழ்த்திக் கொண்டார். “அம்மை குத்துறது நாம் கொடுக்கற அன்பு முத்தம். ஒரு தடவை தான் அரசாங்கம் அன்போடு வேதனை கொடுக்கும் : அம்மை குத்தும் பொழுது. அது நம் கருணையின் சின்னம். புதுசாகப் பிறந்த சிசுக்களைக் கண்டுபிடிக்க என்ன வழி, சொல்லுங்க பார்க்கலாம்?”
“கண்டுபிடிக்க என்ன வழி?”, அம்மை குத்துகிறவர்கள் கேட்டார்கள்.
“சிசுக்களோட லட்சணம் எது? அதுங்க செய்யற ஒரே ஒரு காரியம் எது?”
“அழுகை”. அழுதுகொண்டு இருக்கும் குழந்தைகளை மட்டும் பார்த்திருக்கும் அம்மை குத்துகிறவர்களின் நடுவே இருந்து பெண்குரல்.
“நோ நோ நோ. தப்பு. புதுசாப் பிறந்த சிசுக்களுக்கு ஒரே வேலை வெளிக்கி போறது. மலம் கழிக்கறது”
”மலம் கழிக்கறதா?”, ஆச்சரியத்தோடு அம்மை குத்துகிறவர்கள் கேட்டார்கள்.
“அதேதான்”, கலெக்டர் சொன்னார். “கழியறது, கழியறது, கழிச்சலோ கழிச்சல்”.
“கழிச்சலோ கழிச்சல்”, புத்தறிவு பெற்ற அம்மை குத்துகிறவர்கள் முழங்கினார்கள்.
“கழிச்சலோ கழிச்சல். ஹரஹரோ ஹரஹர. வீடுவீடாகப் போங்க. துவைத்த துணி காயப் போடும் கயிற்றுக் கொடிகளைக் கவனிச்சுப் பாருங்க. எங்கே சின்னக் குழந்தை உண்டோ, அங்கே கொடியிலே குட்டித் துணிகள். மாரியம்மன் திருமஞ்சன சேலை போல, குழந்தைத் துணி மஞ்சளோடி இருக்கும். அந்த வீட்டுக்கு உள்ளே போ. குழந்தை கையிலே அம்மை குத்து”.
அம்மை குத்துகிறவர்கள் நீதிமன்ற வளாகத்திலிருந்து படகுத்துறைக்குப் போனார்கள். அங்கே படகுக்காரர்கள் காத்திருந்தார்கள். ரெட்டைத் துடுப்போடு பதினெட்டு மச்சுவா படகுகள் வரிசையாக நின்றிருந்தன.
ஒற்றை வரிசையில் அம்மை குத்தும் அணி முன்னேறிப் போனது. ஆடி ஆடிப் போகும் ஒவ்வொரு படகிலும் ஒரு அம்மை குத்துகிறவர் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் கழிந்த போது, படகுகளின் அணி சிதறிப் போனது. ஒவ்வொரு படகும் அததற்காக ஒதுக்கப்பட்ட தீவை நோக்கித் திரும்பியது.
# வைசூரி தடுப்புமருந்து; வாக்சின்
—————————————————————————————-
என்.எஸ்.மாதவனின் மலையாள க்ளாசிகல் நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – ஒரு சிறு பகுதி
தமிழ் மொழிபெயர்ப்பு : பீரங்கிப் பாடல்கள்
மொழிபெயர்ப்பாளர் : நான்தான்.
நாவல் வெளியீடு – கிழக்கு பிரசுரம்
January 22, 2021
2011-இல் வெளியான ஒரு நேர்காணல்
இரா. முருகன் – நேர்காணல்
எண்பதுகளின் தொடக்கத்தில் சிறுபத்திரிகை களில் நவீன கவிஞராக அறிமுகமான இரா. முருகன், பின்னர் சிறுகதையாசிரியராக- நாவலாசிரியராக- கட்டுரையாளராக இலக்கிய வடிவங்களின் அனைத்து நீட்சிகளை யும் தொட்டு நிற்கும் சம கால நவீனப் படைப்பாளி யாவார். “ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ இவரது முக்கியமான கவிதைத் தொகுதியாகும். இதுதவிர, “தேர்’, “ஆதம்பூர்க் காரர்கள்’, “சிலிக்கன் வாசல்’, “முதல் ஆட்டம்’, “ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்’, “மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’, “சைக்கிள் முனி’ போன்ற சிறுகதைத் தொகுதிகள்; “மூன்று விரல்’, அரசூர் வம்சம்’, “40, ரெட்டைத் தெரு’ ஆகிய நாவல்கள்; இருபதுக்கும் மேற்பட்ட குறு நாவல்கள்; “கொறிக்க கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’, “கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்’ ஆகிய அறிவியல் கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை பல நூல்கள் வெளிவந்துள்ளன.
சிறுபத்திரிகைகளில் எழுதி வரும் அதே நேரம், வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து வாசகர்கள் வரவேற்று வருகிறார்கள். மேஜிக்கல் ரியலிச கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தி இவர் எழுதிய “அரசூர் வம்சம்’ நாவல் ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. தற்போது “அரசூர் வம்ச’த்தின் தொடர்ச்சியாக “விஸ்வரூபம்’ நாவலை எழுதிக் கொண்டி ருக்கிறார். “முருகனின் சிறுகதைகள் வடிவம் மற்றும் நடை ஆகிய அம்சங் களில் வெகு இயல்பான பரிசோதனைகளைக் கொண்டிருக்கின்றன. காலம், களம் இரண்டும் அவருடைய படைப்பில் மனித மனம்போல எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவை’ என்று அசோகமித்திரனால் பாராட்டப்பட்ட இரா. முருகன், சுஜாதாவுக்குப் பிறகு அறிவியல் தமிழை வாசகத் தோழமை யோடு வெகுஜனப் பத்திரிகைகளின் வழி எடுத்துச் செல்பவர்.
ஒரு தாகம் கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவரும் இரா. முருகன், மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் இவர். சிறுகதைக்காக “இலக்கியச் சிந்தனை’ ஆண்டுப் பரிசு, “கதா விருது’; நாவலுக்காக “பாரதியார் பல்கலைக் கழக விருது’ போன்ற பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
பரிசோதனைப் பாணி எழுத்து வகையில், வாசகனைப் பயமுறுத்தாத பின் நவீனத்துவப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இரா. முருகன், தற்போது தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். கமல்ஹாசன் நடித்துள்ள “உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்தின் உரையாடல்களை எழுதியிருக்கும் இரா. முருகனுக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டு கள் குவிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் “இனிய உதயம்’ இதழுக்காக அவரைச் சந்தித்தோம்…
உங்களின் எழுத்துப் பயணம் கவிதை, சிறுகதை, நாவல் என்கிற ஒரு நேர்கோட்டில் வளர்ந்து வந்திருக்கிறது. இலக்கிய வடிவங்களுடைய ஒவ்வொரு நிலையையும் கடந்து வந்திருக்கி றது. படைப்பாளி இரா. முருகன், தனிமனிதன் இரா. முருகன்- இரண்டுபேரும் வெவ்வேறு மனிதர்களாக இருக்க முடியாது. தனிப்பட்ட வாழ்வில் இரா. முருகன் என்னவாக வேண்டும் என்று நினைத்தீர்களோ, அந்த நிலையை அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
“”இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் அதில் சிறிய மாற்றம். கவிதை, சிறுகதை, நாவல், அறிவியல் கட்டுரை என்பதோடு தற்போது திரைப்படத் துறையில் நுழைந்திருப்பதும்… நான் 25 வருடங்களாக எழுத்துத் துறையில் இருக்கிறேன். வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த தாகவே இருக்கிறது. கவிதை எழுதும்போது அதில் சிறுகதையின் சுவடு இருந்திருக்கிறது. சிறுகதை எழுதும்போது அதில் நாவலுடைய சில வேர்கள் இருந்திருக்கின்றன. நாவல் எழுதும்போது- அதை விஷுவலாகச் சொல்லும்போது அதில் திரைக்கதையின் வடிவம் இருந்திருக்கிறது. பாம்பு சட்டையை உரிப்பது போலதான் நான் ஒன்றிலிருந்து ஒன்றாக என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயத்திலும் சரி; எந்தச் சமுதாயத்திலும் சரி- எழுத்தாளனை தனிமனிதனாகப் பிரித்துப் பார்க்க முடியுமா என்பது எனக்குக் கஷ்டமான காரியமாகவே உள்ளது. இரா. முருகன் என்ற எழுத்தாளன் தனியாக இயங்க முடியாது. மேல்நாட்டு கலாச்சாரத்தில் வேண்டுமானால் ஓர் எழுத்தாளனுக்கு அவனுடைய எழுத்து தொழிலாகப் பயன்படும். ஆனால் நமக்கோ எழுத்துத் துறை என்பது ஒரு பற்றுதலுக்குரியது. இதை எழுதியாகணும், இதை அடைந்தாகணும் என்கிற ஒரு வெறி, வைராக்கியம் போன்றவை இதில் அடங்கும். இதனால் எழுத்தாளனுக்கு வருமானம் வருமா என்பது தெரியாது.
நிம்மதியாக எழுதுவதற்கு ஏழு நாட்கள் வேண்டாம்; ஒருநாள் போதும். மீதி ஆறு நாட்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். ஒருநாளின் நிம்மதி மீதி இருக்கிற ஆறு நாட்களுக்குத் தரவேண்டும். நான் வங்கி அதிகாரியாக இருந்தேன். அங்கு கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றினேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் கன்சல்ட்டன்சியாக இருக்கிறேன்.
நான் படைக்கும் படைப்புகள் எல்லாவற்றிலும் நான் ஊடுருவி இருப்பேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென் றால் நான் நானாகவே இருப்பேன். முக்கியமாக வங்கியிலிருந்து கம்ப்யூட்டர் துறைக்கு வந்தபிறகு இத்துறையானது என்னை மிகவும் பாதித்திருக்கிறது. எழுத்தில் இந்தத் துறை சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசிப் பார்த்திருக்கிறேன். முக்கியமாக இந்தப் பிரச்சினைகளை “மூன்று விரல்’ நாவலிலும், “இந்தியா டுடே’யில் வெளிவந்த “சிலிக்கான்’, “லாசரஸ் 40′ போன்ற சிறுகதைகளிலும் கொண்டு வந்திருக்கிறேன். இதைத் தவிர, நான் சொன்னா நீங்க சிரிப்பீங்க… கம்ப்யூட்டர் துறையில் நுழையும்போது கோடிங் டிசைனிங், வங்கி சம்பந்தமான பணிகள் செய்து வந்தேன். அதை கரண்ட் ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமானால் பொட்டி தட்டுவது என்பார்கள். கையில் லேப்டாப் எடுத்துச் சென்று அங்கங்கு புரோகிராம் செய்வது தான் தற்போதைய பணி. அந்தக் காலத்தில் பாணர்கள் கையில் யாழ் எடுத்துச் சென்று மன்னர்களிடம் பாடி பரிசு பெறுவது போல, நாங்கள் லேப்டாப்பை எடுத்துச் சென்று புரோகிராம் எழுதி அதற்கான சன்மானமாக மாதச் சம்பளம் பெறுகிறோம். அதாவது “குளோரிஃபைடு’ பாணர்களாக இருக்கி றோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உதாரணமாக “சி’ யோ, “சி. பிளஸ்ஸோ’ போன்ற டேட்டா பேஸ் கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து எப்படி கையாள்கிறோமோ அதைப் போன்று எழுத்தில் என்னையறியாமல் கதைக்கான சிந்தனைகளிலும் இந்த கம்ப்யூட்டர் மொழிகள் ஊடுருவி விடுகின்றன.
நான் வங்கிப் பணியில் இருந்தபோது- பகுதி நேரமாக கம்ப்யூட்டர் துறையில் நுழைந்தபோது “ஜம்ப் கட்’டுவது என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. “தேர்’ என்ற முதல் சிறுகதையைக் கொண்டு வந்தேன். அவற்றை நான்கு அல்லது ஆறு பக்கத்தில் முடித்தாக வேண்டும் என்பதற்காக அந்தக் கதையை “ஜம்ப்’ பண்ணி “ஜம்ப்’ பண்ணி விஷுவலாக முடித்திருப்பேன். அசோகமித்திரன் முன்னுரை கொடுத்திருந்தார். “ஜம்ப் கட் யுக்தியை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். எழுத்துத் துறையில் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். எல்லாமே சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்’ என்று தனது முன்னுரையில் சொல்லி இருந்தார்.
முக்கியமான வேலையில் நாம் இருக்கும்போது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்து என்னைச் சந்திக்க வாடிக்கை யாளர்கள் வருவார்கள். அதில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, “”தினமும் நீங்கள் அலுவலகத்திற்கு எத்தனை மணிக்கு வருவீர்கள்?” என்று கேட்டேன். அவர், “”ஏழு மணிக்கு” என்றார். “”நானும் ஏழு மணிக்கு வந்துவிடு வேன்” என்றேன். இருப்பினும் அவரிடம் கேட்டேன்: “”உங்கள் நாடுகளில் ஏழு மணிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காதே? நீங்கள் எதற்காக ஏழு மணிக்கு வருகிறீர்கள்?” என்று. அதற்கு அவர், “”ஏழு மணிக்கு வந்தால் மாலை மூன்றரை மணிக்கு வீட்டுக்குத் திரும்பி விடலாம்” என்றார். “”தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்குப் பின் என்ன செய்வீர்கள்?” அதற்கு அவர், “”வீட்டிற்குப் போனவுடன் மனைவிக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவேன்; அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்; பின்பு அவளை படுக்கையறைக் குச் சுமந்து கொண்டு சென்று தூங்க வைப்பேன்” என்றார். “”ஏன் படுக்கைக்குச் சுமந்து செல்ல வேண்டும்?” என்றேன். “”என் மனைவியால் மூன்று வருடங்களாக நடக்க இயலாது” என்றார். மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்தேன். ஏனெனில், அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். குறிப்பாக, நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான விவாகரத்து வழக்குகள் சர்வசாதாரணமாக நடைபெறும். அப்படி இருக்கையில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று வியந்தேன். இச்சம்பவங் களை என்னிடம் அவர் எடுத்துரைக்கும்போது, நான் என் பதவியை மறந்து, ஒரு எழுத்தாளனாகவே மாறிவிட்டேன். இதை தமிழில் கதையாக எழுதினால் ரொம்ப மிகையாக இருக்கும். தனிமனித வாழ்க்கை இரா. முருகனை எப்படி பாதித்தது, இரா. முருகனின் எழுத்து தனிமனித வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பதற்கு இதுவே சரியான பதிலாக இருக்குமென கருதுகிறேன். இந்த நிகழ்வைக் கதையாக கொண்டுவர முடிவு செய்துள்ளேன். இந்தக் கதை நிச்சயமாக வெளிவரும்.”
தீவிரமான எழுத்துக்கு ஒரு ஜீன் சார்ந்த பின்னணியோ அல்லது இளமைக் காலத்தில் தங்களுக்குக் கிடைத்த இலக்கிய வாசிப்போ காரணமாக இருக்கும். இதில் உங்களுக்கு எழுத்துலகத்திற்கு வித்தாக அமைந்தது எது?
“”மரபணு தொடர்பாகப் பார்க்கும்போது எங்கள் முன்னோர்கள் கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசூரில்தான் குடியேறினார்கள். ஐந்து தலைமுறையை அலசிப் பார்த்திருக்கிறேன். எங்கள் வம்சாவழியினர் சமையல் தொழிலையே செய்து வந்துள்ளனர். அதற்குப் பின் வந்தவர்கள் வக்கீல்களுக்கு குமாஸ்தாவாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இலக்கியத் தேடல் என்பதற்கு நேரமே கிடையாது. வாழ்க்கைத் தேடலே மிகவும் பிரதானமாக இருந்திருக்கிறது. எனது அப்பா கொஞ்சம் மாறுபட்ட நிலையில் இருந்தார். வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். இருப்பினும், அவருக்கு பாரதிமேல் அளவுகடந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. இதனால் எங்கள் வீட்டில் பாரதியின் புத்தகங்கள் அதிகம் உண்டு. எழுத்தாளர் நா. பார்த்தசாரதி எனது அப்பாவின் நெருங்கிய நண்பர். ஆகையால் “தீபம்’ இதழைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எழுத்தாளர் ஆதவன் அதில் எழுதிய “காகித மலர்கள்’ கதை வெளிவந்தது. அதைப் படித்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. உதாரணமாக ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு மத்தியில் இந்த இதழ் எனக்கு மாறுபட்டதாகவே தெரிந்தது.
எனது பள்ளிப் படிப்பு சிவகங்கையில்தான். சிவகங்கை என்றாலே ஜாம்பவான்கள் நிறைந்த ஊராகும். அவர்களில் மூன்று ஜாம்பவான்கள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் பேராசிரியர் நா. தர்மராஜன். இவர் கலை இலக்கியப் பெருமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். தமிழ் மொழிக்காக இவர் செய்த தொண்டு அளப்பரியது. உதாரணமாக ஜெர்மானிய மற்றும் ரஷ்ய படைப்பு களைத் தமிழாக்கம் செய்தவர். இவர் என் பேராசிரியர் மட்டுமல்ல; சிறந்த படைப்பாளியாகவும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அடுத்து மலையாளத்திலிருந்து முக்கியமான இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வந்த பேராசிரியர் இளம்பாரதி. இவருடைய இயற்பெயர் ருத்ர துளசிதாஸன். இவர் மலையாள எழுத்தாளர் முகுந்தனின் நாவலைத் தமிழில் மொழி பெயர்த்ததன் மூலம் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான “சாகித்ய அகாடமி விருது’ பெற்றவர். இவரும் தர்மராஜன்போலவே என் மனதில் குடி பெயர்ந்தவர்.
இவர்கள் இரண்டு பேருமே முக்கியமானவர்கள்தான். இருப்பினும் இலக்கிய உலகில் என்னை மிகவும் பாதித்தவர் கவிஞர் மீராதான். இவர் என் தமிழாசிரியர். இவரது புதுக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பினும் இதெல்லாம் ஒரு கவிதையா என்று பலரும் விமர்சிக்கிறார்கள். தமிழில் புதுக்கவிதையென்றால் என்ன என்பதை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் மீராதான். இக்கவிதையில் சொல் புதுசா இருக்கு, கருத்து புதுசா இருக்கு, எழுத்து சுயமாகவும் இருக்கு. அவருடைய கவிதைகளில் வெளிவந்த “கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள்’ என்னை மிகவும் கவர்ந்தது. மீரா “அகரம்’ பதிப்ப கத்தை நடத்தி வந்தார். அதன் மூலம் முக்கியமான எழுத்தாளர்களை யெல்லாம் அறிமுகப்படுத்தினார். விக்கிரமாதித்தன், கல்யாண்ஜி, கலாப்பிரியா போன்றவர்களின் படைப்புகளையும், அவரின் சகோதரர் வீ. மனோகரன் எழுதிய “மருது பாண்டியரின் வாழ்க்கை வரலாறு’ உட்பட ஒன்பது நூல்களைப் பதிப்பித்தார். இதனால் அவர் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். இருப்பினும் அவர் சோர்ந்து போய் விடவில்லை. அவரின் அயராத உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது.
எனது முதல் கவிதையை “தீப’த்திற்காக எழுதினேன். கி. ராஜநாராய ணன் எழுதிய “பிஞ்சுகள்’ எனும் நாவல் என்னை மிகவும் பாதித்தது. இந்நாவலைப் படிக்கும்போது என்னையும் அறியாமல் அக் கதைக்குள் ஒருவனாக நானும் ஊடுருவி நின்றேன். அடுத்ததாக அவர் எழுதிய “கோபல்லபுரம்’ படைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. “பிஞ்சுகள்’ பற்றி கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை மீராவிடம் கொடுத்தேன். அப்போது அவர் அவசரமாக ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் என்னிடம் அவர், “”படிச்சிட்டு அப்புறம் சொல்றேன். இங்கே வைத்து விட்டுச் செல்” என்றார். அதன்பின் அவர் ஊரிலிருந்து திரும்பியவுடன், “”கட்டுரை நன்றாக இருந்ததா?” என்று அவரிடம் கேட்டேன். அவரும் பாராட்டினார். அந்தக் கட்டுரை “தாமரை’ இதழில் விமர்சனமாக வெளிவந்தது கண்டு ஆச்சரியமடைந் தேன். எனக்குத் தெரியாமலேயே எனது கட்டுரையை அந்த இதழுக்கு அனுப்பிவைத்து, அதுவும் பிரசுரமாகி எனக்கு மிகப் பெரிய கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத நபராக என் உள்ளத்தில் குடிபெயர்ந்து விட்டார். இவர் என் பரம்பரையைச் சார்ந்தவர் அல்ல. இருப்பினும் என்னை ஓர் இலக்கியவாதியாக உருவாக்க அச்சாரம் போட்டவர் கவிஞர் மீராதான்.
மேற்சொன்ன மூன்று ஜாம்பவான்களும் எனது கல்லூரி ஆசிரியர்கள். இவர்கள் மூவரும் இலக்கிய உலகில் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். உதாரணமாக தமிழ் இலக்கியம், பிறமொழி இலக்கியம் போன்றவற்றைப் படிக்குமாறு ஊக்கப்படுத்தியவர்கள். எனது இலக்கியத் தேடல் இங்கிருந்துதான் தொடங்கி யது. எனது பால்ய பருவம்- அதாவது பதினேழு வயதிருக்கும். அப்போதெல்லாம் மலையாள எழுத்தா ளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் படைப்புகளில் ஆழ்ந்திருந்த நேரம். அவருடைய படைப்புகள் சினிமாவாக வெளிவந்தபோது என்னை மிகவும் பாதித்தது. அப்போதெல்லாம் கல்லூரிகளில் பதினாறு எம்எம். திரைப்படத்தைப் போட்டுக் காண்பிப்பார்கள். அவற்றில் வாசுதேவன் நாயரின் படைப்பில் வெளிவந்த “ஏணிப்படிகள்’ என்னும் திரைப்படம் மிகவும் பிரபலம். அதற்குக் காரணமாக அமைந்தது, அவரின் கதையோட்டம்தான். இந்நிலையில் எனது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் இளம்பாரதி என்ற ருத்ர துளசிதாஸன், “”நீ ஏன் மலையாள நாவல்களை நேரடியாகப் படிக்க முயற்சி செய்யக் கூடாது. “நீ நன்றாக மலையாளம் பேசுகிறாய். அப்படி இருக்கும்போது, அதன் எழுத் தாற்றலை அறிந்து கொண்டால் இலக்கிய உலகில் உனக்கு மிகவும் பயன்படும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் பரம்பரை கேரளாவைச் சேர்ந்தது என்பதை நீயும் நினைவில் கொள்ள வேண்டும். இதன்மூலம் இம்மொழியைக் கற்பதில் உனக்கு எவ்வித சிரமமும் இருக்காது என எண்ணுகிறேன்’ என்றார். அதற்கு பிறகுதான் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.”
நீங்கள் பள்ளி, கல்லூரிக் காலங்களில் எழுதியிருக்கிறீர்களா?
“”பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது கவிதை எழுதும் பழக்கம் உண்டு. ஏழாம் வகுப்பு படிக்கும்போது, சொன்னா சிரிப்பீங்க… என் மானசீக குருவாக அழ. வள்ளியப்பா இருந்தார். பின்பு தமிழ்வாணனின் “மர்ம மனிதன்’ நாவலைப் படித்து விட்டு, அதேமாதிரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து கையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்தினோம். அதில் “மர்மமனிதன்’ போன்ற நாவலை எழுதினேன். அவற்றை சக மாணவர்களிடம் படிக்கக் கொடுத்தேன். சிலர் “நன்றாக இருக்கிறது’ என்றார்கள். சிலர் “புரிய வில்லை’ என்றார்கள். இதுதான் என் பள்ளிப் பருவத்து இலக்கியத் தேடல்.
கல்லூரிக் காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. அதன் காரணமாக ஆங்கிலத்தில் நான்கைந்து கதைகள் எழுதினேன். அவற்றையெல் லாம் நானே ஒருமுறை படித்துப் பார்த்தேன். இருந்தாலும் இந்தக் கதையை நான் ஏற்கெனவே படித்ததுபோல உணர்ந்தேன். அப்போது என் மனம் சொல்லியது, “இதை நீதான் எழுதின, ஆனா ஆர்.கே. நாராயண் சாயல் இதில் இருக்கு’ன்னு. இதுதான் என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதிய முதல் முயற்சி. இருப்பினும் முப்பது ஆண்டு காலம் கழித்து “40 இரட்டைத் தெரு’ எழுதி முடித்தபோது, அந்த பால்ய காலத்து நினைவு என்னுள் வந்து சென்றது. அப்போது ஆங்கிலத்தில் எழுதியதால் அவற்றை முழுமையாக உணர முடியாமல் போனது.”
உங்கள் எழுத்து மொழிகளில் பல்வேறு பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தில் தனித்துவமாகக் காணப்படும் பகடி, நகைச்சுவை உணர்வு சிறுவயது முதலே உங்களோடு தொடர்ந்து வருகிறதா? அல்லது வாழ்க்கையின் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இடையில் புகுந்த ஒன்றா?
“”என்னுடைய ஆசிரியர்கள் பற்றி சொன்னேன்- மற்ற ஆசிரியர்கள் போலல்லாமல் என் எழுத்துக்கு அச்சாரம் போட்டவர்கள் என்று. அதுபோலத்தான் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பகுதி மலையாளிகள் என்பர். மலையாளின்னு சொல்லக் கூடாது. நாங்கள் தமிழர்கள்தான். இருப்பினும் மலையாளத்தில் எனது வேர்கள் சில உண்டு. மலையாளத்தில் நம்பூதிரிபலிதம் என்று சொல்வார்கள். அதாவது சிரிப்பு பற்றிய கதைகள். இக்கதைகளில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டால் விபரீதமான அர்த்தங்கள் தரும். இவற்றை நாங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லாதபோது நகைச்சுவைக்காக விபரீதமான வார்த்தைகளையெல்லாம் தேடிப்பிடித்து பயன்படுத்துவது உண்டு. இது எல்லாரையும் சிரிக்க வைக்கும். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிவகங்கை. தெற்கத்திய குசும்பைப் பற்றிச் சொல்லவே வேணாம். எங்கள் ஊர் (ஊரணி) தண்ணீரைக் குடித்தாலே போதும். நகைச்சுவை உணர்வு தன்னாலே வந்துவிடும். இவ்வுணர்வானது தெற்கத்திய மண்ணுக்குரியது. தெற்கத்திய மக்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை உணர்வானது வெளிப்படும். அவ்வார்த்தைகளை அங்குள்ள மக்கள் கிண்டலும் கேலியுமாகப் பேசி தங்களுக்குள் நகைத்துக் கொள்வார்கள்.
நான் கவிதை எழுதத் துவங்கிய நேரம், மூன்று விதமாக கவிதையை வடிவமைத்தேன். அவற்றில் காலைப்பொழுது, மதியப் பொழுது, இரவுப் பொழுது ஆகியன அடங்கும்.
விடியும்போது
ஒலிபெருக்கி எழுப்ப
சேவல் அடித்தனர்
விருந்து சமைக்க
பூப்பூ நீராடப் போனாள் சிறுமி
காய்கறிக் கடைக்கு
கூடை சுமந்து
கிளம்பிய அலிக்கு
சோப்பு வாங்க
கடையே திறக்கலை
– இது காலைப் பொழுதுக்கானது.
கரகக்காரனை
பகலில் பார்த்தேன்
நாவிதர் கடையில்
ஆள்வரா பொழுதில்
முகத்தைக் கொடுத்து
தூங்கத் துவங்கி
செண்டை மேளம்
முழங்கும் தெருவில்
கருப்புச் சாமிகள்
ஊர்வலம் வந்தனர்
துடைத்தால் போதுமோ
துடைத்தால் போகுமோ
சிந்திய ரத்தம்
– இது மதியப் பொழுதுக்கானது.
நாடக அரங்கில்
கூட்டம் குறைவு
வசனம் மறந்து
இருமி இரந்து
பணத்தை வாங்கி
வெளியே நடந்தான்
ஒற்றை அறையில்
கூட்டத் தூக்கம்
மனைவியை உசுப்ப
அம்மா இருமினாள்.
மருந்து வாங்க
மறந்து போனது
– இது இரவுப் பொழுதுக்கானது.
இது “கணையாழி’யில் வெளிவந்தது.
இந்தக் கவிதையை “கணையாழி’யில் படித்த எனது நண்பர் ஒருவர், “எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சிறு கவிதையில் அடக்கியுள்ளாய். இதை நீ ஏன் கதையாகக் கொண்டுவரக் கூடாது’ என்றார். “இதற்கு ரொம்பவும் மெனக்கெடணும். நான் ஒரு அறியப்படும் அல்லது அறியப்படாத கவிஞனாக இருப்பதைவிட வெறும் கவிஞனாகவே இருக்க விரும்புகிறேன்’ என்று அவரிடம் சொன்னேன்.
அடுத்து “அலுவலகம் போகும் கடவுள்’ என்ற கவிதை எழுதினேன். அதைப் படித்துவிட்டு சில நண்பர்கள் இதைக் கதையாக எழுதியிருக்கலாம் என்றனர். “தேர்’ என்ற கதையின் மூலம்தான் உரையாடல் பக்கம் வந்தேன். அந்தக் கதையைப் படித்த சுஜாதா, “கணையாழி’யின் கடைசிப் பக்கத்தில் “இரா. முருகன் கவிதையா, சிறுகதையா என்று யோசிக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் கிடந்து அல்லாட வேண்டாம்’ என்று எழுதியிருந்தார். அது எனக்கு பாசிட்டிவ்வாக இருந்தது. அப்போது தான் தீர்மானித்தேன்- கவிதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் சிறுகதை எழுதலாமே என்று.
“கணையாழி’ கஸ்தூரி ரங்கன் “தினமணி கதி’ரில் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் என்னிடம் சிறுகதை கேட்டிருந்தார். நானும் “அலுவலகம் போகும் கடவுள்’ கவிதையை என்னால் முடிந்தவரை சுவாரசியமாக்கி சிறுகதையாக மாற்றி எழுதி அனுப்பினேன். அதைப் படித்த உதவி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், “மிகவும் நன்றாக உள்ளது. இருப்பினும் சிறுகதையைப் பொறுத்தவரை பக்க அளவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சிறுகதைக்காக மட்டும் “தினமணி கதிர்’ அல்ல. இன்னும் நிறைய விஷயங்கள் அதில் சேர்க்க இருப்ப தால் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முருகன்’ என்றார். அதற்குப் பிறகுதான் கதைகளை எப்படி எடிட் செய்ய வேண்டும் என்று சுயமாகக் கற்றுக் கொண்டேன்.
அதற்குப் பிறகு எனது கதைகளில் சற்று சுஜாதா பாணி கலந்திருந்தது. அது எனது குறையாகவும் இருக்கலாம். அல்லது நான் அவர்மீது கொண்ட அபிமானமாகவும் இருக்கலாம். அதன்பின் அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வெளியே வந்தேன்.
அடுத்து என் பரிசோதனை முயற்சியில் கதை யம்சமும் கதை சொல்கிற விதமும் புதிதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படியே “மந்திரவாதியும் தபால் அட்டையும்’ என்ற தொகுப்பு அமைந்தது.
லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்கள், ஜெர்மன் குந்தர் கிராஸ், கார்சியோ மார்க்கஸ் போன்றோரின் மேஜிக் ரியலிசம் எழுத்துகளைப் படிக்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்களுடைய கதைகள் கொஞ்சம்கூட சோர்வு தட்டாமல் என்னை அழைத்துச் சென்றன. கேப்பிரியேல் கார்ஸியோ மார்க்கஸின் “நூறாண்டு தனிமை’ என்ற புத்தகத்தை மலையாளத்தில்தான் படிக்கக் கிடைத்தது. இது தமிழில் கிடைக்கவில்லை. இந்நூல் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிட்டியது என்றால்- டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தபொழுது, இங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. தண்ணீர் பிடிப்பதற்காக இரவு பன்னிரண்டு மணிவரை கண்விழித்திருக்கும் சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில்தான் அந்த புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதன் அனுபவத்தை வைத்து “கார்ஸியோ மார்க்ஸும் அடி பம்பும்’ என்ற கதையை எழுதினேன்.
தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் “விசுவரூபம்’. எல்லா விதமான கதைகளையும் எழுதிய போதிலும் எனது துறை சம்பந்தப்பட்ட- அதாவது கம்ப்யூட்டர் துறை தொடர்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏனெனில், இதில் உள்ள கஷ்டங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. உதாரணமாக கம்ப்யூட்டர் துறை என்றாலே கடவுளுக்குச் சமமாகக் கருதப்பட்ட காலமும் உண்டு. தற்போது கம்ப்யூட்டர் துறை என்றாலே பொண்ணு கொடுக்க யோசிக்கிறார்கள். ஏனெனில் இதில் வேலை என்பது நிரந்தரம் அல்ல. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் துறை மிகவும் மேலோங்கி நின்றது. இத்துறையில் வேலை பார்ப்பவர்களை “இவர்களுக்கென்ன… அதிகபட்சமாக சம்பாதிக் கிறார்கள்’ என்று பலரும் கூறுவர். ஆனால் இன்றைய நிலை வேறு. கம்ப்யூட்டர் துறையிலும் என்னென்ன கஷ்ட- நஷ்டங்கள் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக “மூன்று விரல்’ என்னும் நாவலை ஆரம்பித்தேன். இந்நாவலைப் படித்துப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
இப்போதெல்லாம் காலையில் மேஜிக் ரியலிசம் பற்றியும் மதியம் அறிவியல் கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதி வருகிறேன். மாலையில் “மூன்றுவிரல்’ நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் பாம்பு சட்டையை உரிப்பதுபோல ஒரு நாளைக்கு நான்கு முறை சட்டையை மாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா ஹீரோபோலன்னு வச்சுக்குங்களேன்.”
சுஜாதாவின் எழுத்து, அதன் பாதிப்பு உங்கள் எழுத்தில் இருப்பது பற்றிச் சொன்னீர்கள். சுஜாதா காலமாகி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. வெகுஜன மக்களுக்குப் புரியும் வகையில் அறிவியல் சம்பந்தமான நூல்களை எழுதுவதில் சுஜாதா நமக்கெல்லாம் ஒரு முன்னோடி. சுஜாதாவின் பாதிப்பு தொடர்பானதா, உங்கள் அறிவியல் சம்பந்தமான நூல்?
“”நிச்சயமாக அவர் முன்னோடிதான். இருப்பினும் அவர் அனுமதி யுடன்- அவர் நிச்சயமாக அனுமதிப்பார்னு வச்சுக்கங்களேன். அவரையும் கடந்து அவருக்கு முன்னால் போகிறேன். தமிழில் முதலில் அறிவியலை புரியும்படி எழுதி, வாசகனின் தோளில் கைபோட்டு வந்த முதல் எழுத்தாளர் பேனா. அப்புசாமிதான். சொன்னா நம்பமாட்டீங்க, 1935- ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் பற்றி எழுதியிருக்கிறார். அப்போதுதான் கம்ப்யூட்டர் அறிமுகப் படுத்தப்பட்ட காலம். எப்படி பாரதியார் சென்னையில் வசித்துக் கொண்டு, பத்திரிகைகள் மூலம் உலக நிகழ்வுகளை அலசி ஆராய்ந்தாரோ- அதாவது ரஷ்யப் புரட்சியாளர் லெனினைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தவர். அவரை அடையாளம் கண்டு பாராட்டியவர். உலக அரசியலில் எது நியாயம், எது அநியாயம் என்று எடுத்துச் சொல்லத் தயங்காதவர். அவருடைய எழுத்தாற்றல் உலகில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றிணைக்க வழிவகை செய்தது. அதுபோலதான் பேனா. அப்புசாமியும் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அரிய விஷயங்களை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தனது படைப்புகளில் பதிவு செய்தார். அறிவியல் வளர்ச்சியை அந்தக் காலத்திலேயே அடையாளம் கண்டு வெளிப்படுத்தியவர் பேனா. அப்புசாமி. அவரது வாழ்க்கை முழுவதும் அறிவியலுக்காக அர்ப்பணித்தவர். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர் எழுதிய ஒரு அறிவியல் கட்டுரையை தபால் மூலம் அனுப்புவதற்காக தள்ளாத வயதிலும் (சுமார் 85 வயதிருக்கும்) அஞ்சலகம் சென்று, தபால் பெட்டியில் கட்டுரையைப் போட்டு விட்டுத் திரும்பியபோது இறந்து போனார் என்பார்கள். அந்த அளவுக்கு அறிவியலோடு ஒன்றிப் போனவர். இவரது நூல்கள் மூலம் உலக அளவில் தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்தவர். இவரது தொகுப்பு பற்றி ஒரு கட்டுரைகூட “இந்தியா டுடே’யில் எழுதியிருக்கிறேன். இவருக்குப் பிறகு ஒரு வெற்றிடம் உண்டானது. அதற்குப் பிறகு ரேடியோ தொழில் நுட்பம் குறித்து சிலர் எழுதத் துவங்கினார்கள். அவற்றில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓம். அருணாசலம் என்பவர் என்னை மிகவும் கவர்ந்தவர். இவர் அங்கே ரேடியோ ரிப்பேர் ஷாப் நடத்தி வந்தார். டையோடு, டிரையோடு வால்வு ரேடியோ பற்றி மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். இவரது நூல்களைப் படித்துப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு எளிய நடையைத் தமிழில் கையாண்டுள்ளார். அறிவியல் என்றால் இவ்வளவுதானா? ரேடியோ தொழில் நுட்பம் என்றால் இவ்வளவுதானா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்பது போல இவரது படைப்புகள் அமைந்திருக்கும்.
அடுத்து 1960-ல் சுஜாதா எழுதிய அறிவியல் நூல்கள் அனைவரையும் கவர்ந்தது. இவர் கம்ப்யூட்டர் மூலம் அறிவியலைப் புகுத்தினார். உதாரணமாக ஒரு மூளை எப்படி செயல்படுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக வெளிப்படுத்தியிருப்பார். இவர் அறிவியலைத் தமிழில் கையாண்ட விதம் அளப்பரிய செயலாகும். மேலும் இவர் தனது படைப்புகள் மூலம் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டினை அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கதை, கவிதை, கட்டுரை என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு அறிவியல் சார்ந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் சுஜாதாதான் என்றால் அது மிகையாகாது.
அதற்குப் பிறகுதான் எனது கட்டுரைகள் “கல்கி’யில் பிரசுரமாகியது. அதிலும்கூட வேடிக்கையான சம்பவங்கள் நடந்ததுண்டு. எனது படைப்புகளை பிளாப்பியில் காப்பி செய்து அங்கு அனுப்புவேன். அங்கிருந்து போன் வரும். “என்ன சார், உங்க கட்டுரைக்கு மத்தியில் ஏதாவது இரண்டு இடத்தில் நகைச்சுவை இருந்தால் போதாதா? எல்லாமே சிரிப்பான முகமாக உள்ளதே’ என்று. ஏன் இப்படி சொல்லுகிறார்கள் என்றால், நான் அனுப்பிய படைப் பானது அங்கிருந்த சாப்ட்வேருடன் பொருந்தவில்லை. ஆகையால் தமிழ் எழுத்துகள் எல்லாம் சிரிக்கும் முகங்களாகக் காட்சியளித்தி ருக்கிறது. மொத்தத்தில் ஃபாண்ட்தான் பிரச்சினை. இதை நானும் புரிந்து கொண்டு எழுதிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
“கல்கி’ கி. ராஜேந்திரனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பிறகு அவர் சொன்னார்: “அறிவியல் பற்றியே எழுதுகிறீர்களே.. நீங்கள் வங்கியில் பணிபுரிகிறீர்கள். அதுவும் ஐ.டி டிப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்கள். அது தொடர்பாக எழுதினால் என்ன? சுஜாதாதான் அறிவியல் தொடர்பாக எழுதுகிறாரே’ என்றார். நானும் அவர் சொன்னதற்கிணங்க “மல்டி மீடியா’ பற்றி முதலில் எழுதினேன். தொடர்ந்து பன்னிரண்டு கட்டுரைகள் வரை வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து “கொறிக்க கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ என்று புத்தகமாகப் போட்டோம். இதற்கு என்சிஆர்டி விருது கிடைத்தது. அந்த நூலுக்கு கி.ரா.வே முன்னுரை கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து “கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்’ என்ற நூலை நானும் என் சக நண்பருமான ராஜாராமனும் சேர்ந்து எழுதினோம்.
January 4, 2021
a personal bereavement
என் வாழ்க்கைத் துணைவி திருமதி கிரிஜா முருகன், ரத்தப் புற்றுநோயால் (Acute Myeloid Leukemia) பாதிக்கப்பட்டு டிசம்பர் 30, புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். டிசம்பர் 31 வியாழனன்று இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
கிரிஜாவின் ஆன்மா சாந்தியடைய நண்பர்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
