டூரிங் டாக்கீஸ்

1970- களில் பதின்ம வயதிலிருந்தபோது எங்களூர் அமுதா டூரிங்க் டாக்கீஸில் விட்டலாசார்யா படம் பார்த்த நினைவுகளில்…
—————————————————————–

உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம்
போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்
டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது
நாம்தான் டூரிங் அது இல்லையாம்.

வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ
பரத்தி வைத்த மணல்வெளி
பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த
தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு.
தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும்
இருபதுபைசா நாணயம் ஒன்றும்
பத்துக் காசும் சேர்த்துக் கட்டணம்
செலுத்தித் தரையில் ஒருத்தர் அமரலாம்.

இந்தியன் நியூஸ் ரீல் என்றும் துக்கம்
பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட
புல்லாங்குழல் வாசித்தபடிக்கு
கறுப்பு வெள்ளை காமிரா தொடரும்
சிங்கம் முழங்கி மெட்ரோ நியூஸில்
எலிசபெத் அரசி பட்டம் சூடுவார்.

ஆணும் பெண்ணும் பேதம் காட்ட
தட்டித் தடுப்பு நடுவில் நிறுத்தி
கிடுகு உதிர்ந்த ஓட்டைகள் ஊடே
தோராயமாகத் தொட்டுத் தடவி
கடலைமிட்டாய் கடிக்கக் கொடுத்து
எச்சில் மீதம் யாசித்து வாங்கி
கரங்கள் அங்கங்கே காதல் செய்யும்.

புதுப் படங்கள் போடுவது அபூர்வம்
கொஞ்சம் புதுசு அண்மையில் வந்த
பூம்புகார் போட்டனர் ; ஒற்றைப் புரஜக்டர்
படச்சுருள் சுழற்றி தீர்ந்ததும் நிறுத்தி
விஜயகுமாரி மதுரையை எரித்த பின்னர்
எங்கிருந்தோ பத்மினி வந்து
எஸ்எஸ்ஆரை குடையால் அடித்தார்
என்ன ஆச்சு கண்ணகி கதைக்கு
படச்சுருள் மாறி குழப்பம் வந்ததாம்
விளக்குகள் போட்டு மீண்டும் நிறுத்தி
இன்னொரு தடவை மதுரை எரிந்தது
வணக்கம் போட்டு பூம்புகார் முடிந்தது.

விட்டலாசார்யா சினிமா என்றால்
பெண்கள் பகுதியும் ஆண்கள் இருக்க
எல்லைகள் விரியும்
நைட்ஷோ நடுவில் சினிமா நிறுத்தி
நட்ட நடுவில் பிட்டுகள் ஓடும்
தேசல் ஃபிலிமில் கெட்ட காரியம்
பார்க்கும் முன்னால் முடிந்துபோக
ஆச்சார்யா படத்தில் ஆடாக மாறுவார்
காந்தாராவ் என்ற கதாநாயகுடு.
பிட்டுக்கு வந்த ஆடுகள் கனைக்க
டெண்டுக் கொட்டகை மொத்தமும் சிரிப்பு.

ராத்திரி ஷோ மாய மோதிரம்
ஒரு முறை போனேன்
வந்தவர் பலரும் தலப்பா கட்டி
மண்ணில படுத்து மல்லாந்து நோக்கி
ஜோதிலட்சுமி ஆட்டம் பார்க்கக்
காதுகள் அதிருமோ வேறெதோ
பிட்டேதும் அன்று பார்க்கக் கிடைக்கலை.

காட்சி இடையில் இண்டர்வெல் விடுவது
ஆடவர்க்கு மட்டும் தான்
ஓரம் சென்று சூனியம் வெறித்து
வரிசையாயவர் சிறுநீர் கழிக்க,
பெண்கள் பகுதியில் மும்முரமாக
முறுக்கு விற்பனை கடலை அச்சும்
வெண் திரை பார்த்து வாயில் அரைபடும்.

இடைவேளை முடியும் நேரம்
நுடவைத்ய சாலை ஸ்லைடு
கைகால் முறிவு கடந்து எலும்பு ஒட்டவும்
பாம்படம் மாட்ட வலமும் இடமும்
புத்தபிரான் போல காது வளர்க்கவும்
வளர்த்த காதை திரும்ப ஒட்டவும்
நயம் கட்டணத்தில் சிகிச்சை கிட்டுமாம்.

கவ்னர் பீடியும் லெனின் படத்தோடு
பொரட்டா கடையும் நடேசநயினார் டீக்கடையும்
ஸ்லைடுகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்து தேய
சீட்டியொலியும் கைதட்டலும் காதைப் பிளக்கும்.

இந்திப் படமும் எப்போதாவது
வந்தால் எதிர்ப்பில்லை ஊரே கூடும்.

ஆடுவார் ஹெலன் ஆண்டவர்க்கே சவால்விட்டு
பாடுவார் ஆஷா பனியில் நடுங்கி
பர்மன் கூவுவார் காய்கறிக்காரர் போல்
மோனிகா ஓ மை டார்லிங்
கைகள் தட்டி ஒன்ஸ்மோர் கேட்டு
இதுக்கே காசு சரியாப் போச்சென்று
சொன்னவர் யாரும் இந்தி அறியார்
எதுக்குத் தெரியணும் இந்தியும் மண்ணும்?

ஹெலன் யார்? உத்தம புத்திரன்
சிவாஜியோடு ஆடிய
நம்மூர்ப் பொண்ணுதான்,
இல்லையா பின்னே!

(வெளிவர இருக்கும் என் கவிதைத் தொகுதியில் இருந்து)

Facebook

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2025 00:19
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.