சர்க்கார் ஆஸ்பத்திரியில் ட்ரஸ்ஸரை போய்ப் பார்த்தா கசப்பா மருந்து கொடுப்பார்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் – சிறு பகுதி

———————————————————————————————————————————————

அக்கா, தங்கை ஜோடியா பேரழகா, அதி சுந்தர ரூபவதிகளா இருக்கறதை அங்கே எங்க குட்டநாட்டுலே நிறையக் கண்டிருக்கேன்.  அதுலே சிலது, அம்மா இன்னும் அழகாயிண்டே போவா. பொண்ணுக்கு  பொது பொதுன்னு அம்மாக் களை அத்தைக் களை வந்துடும் சீக்கிரமே. உடம்பும் வண்ணம் வச்சுடும்.  இங்கே சௌந்தர்யம் வர்த்திக்கறதே தவிர இறங்குமுகமே இல்லை. இத்தனைக்கும் அமிர்தவல்லி சீக்குக்காரி.

 

அமிர்தவல்லிக்கு மாசாந்திர தூரம் வந்தா லேசுலே நிக்காத நோக்காடாம் பாவம். மூணு நாள் கஷ்டமா, ஸ்திரி ஜன்மத்துக்கு விதிச்ச ஏதோ தண்டனையா பல்லைக் கடிச்சுண்டு பொறுத்து, குளிச்சு, தூரத் துணி உலர்த்தி மடிச்சு என்னமோ நாமளும் தான் பண்ணியாறது.

 

மூணு நாள் ஓரமா உக்காரும் போதே ஏதோ மத்தவாளுக்கு பாரமா, அடுப்புக் காரியம் பார்க்காம, சுத்துவேலை செய்யாம, குடும்பத்தை பராமரிக்காம, சும்மா கொல்லையிலே நேரம் கெட்ட நேரத்துலே வேப்பமர நிழல்லே தூங்கறேனேன்னு மனசு மாஞ்சு போயிடும்.

 

அவர் ராமலட்சுமி பாட்டியை கொட்டு ரசமும் கீரை மசியலும் போதும்னு பண்ணச் சொல்லி, கீரை மசியல்லே கிழவியோட தலைமுடியோட உப்பு ஜாஸ்தியா, உரப்பு மட்டா, புளி கரையாம இறுகி ஏதோ சாப்பிட்டு ஒப்பேத்தற கஷ்டம் வேறே. போறும்டாப்பா.

 

அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.

 

இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே.  எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர் மாதிரி தங்கமான மனுஷன். ஆனா, பிஷாரடி வைத்தியர் விக்ஞானம், ரசாயனம்னு கோணக் கட்சி பேசிண்டு கிடக்கற மாதிரி இல்லையாக்கும் இவர். பெரிய குடுமியும், பவ்யமும், சதா ஏதோ நாம ஜபமுமா அலைஞ்சுண்டிருப்பார். சுத்துலே ஏழெட்டு பட்டி தொட்டி கிராமத்திலேயும் யாருக்காவது ஏதாவதுன்னா,  சர்க்கார் ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸரைப் பாக்கப் போறது இந்தப் பக்கம் ரொம்பக் கம்மி. புதன்கிழமை சந்தை கூடுமே, அன்னிக்கு பரமக்குடி வைத்தியர் வீட்டு வாசல்லேயும் ஏகத்துக்கு காத்துண்டிருப்பா கையிலே சீசா வைச்சுண்டு.

 

அமிர்தவல்லியம்மாளுக்கு அவர் தான் சிஷ்ருஷை பண்ணறார். சொஸ்தமாயிண்டிருக்கோன்னு தெரியலேன்னேன் இவர் கிட்டே ஒரு விசை.  இவரோட பாணியிலே சோடா உடைச்ச மாதிரி சிரிக்கறார். இதுலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2024 18:54
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.