இரா. முருகன்'s Blog, page 74
August 6, 2021
மிளகு – தமிழில் இதுவரை எழுதப்படாத வகை நாவல்
மிளகு நாவல் சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 45 அத்தியாயங்கள் (கிட்டத்தட்ட 450 பக்கங்கள்) முதல் பிரதியாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் 40 அத்தியாயங்கள் synopsis எழுதி வைத்திருக்கிறேன்.
நாவலின் பரல்கள் (நான்கு அல்லது ஐந்து பத்தி)எந்த வரிசையிலுமின்றித் தினமும் முகநூலில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாவல் அத்தியாய வரிசையில் சொல்வனம் இணைய இலக்கிய பத்திரிகையில் தொடராக வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு அத்தியாயங்கள் முழுமையாக இதுவரை வெளியாகியுள்ளன.
மிளகு ஒரு சரித்திர நாவல். மிளகு time space continuum குறித்த ஒரு அறிவியல் நாவல். மிளகு அரசூர் வம்சத்திலிருந்து சுவடு விட்டுப் போகும் ஒரு சமூக நாவல்.
தமிழில் இதுவரை எழுதப்படாத வகை நாவல் மிளகு.
வாசக நண்பர்கள் முகநூலிலும், சொல்வனத்திலும் நாவலை ஆர்வத்துடன் படிப்பதாகத் தனி உரையாடல்களில் அறிகிறேன். என்றாலும் லைக் எல்லாம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.
வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இவன் என்ன எழுதிக் கிழிக்கப் போகிறான் என்று உதாசீனத்தோடு உதடு சுழித்துக் கடந்து போகிறவர்களுக்கும் அதே அன்பான வாழ்த்துகள்.
நிச்சலா மோதக்கின் சுகவீனமும் மர முக்காலியும் (நாவல் மிளகு)
அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார்.
தினம்தினம் சிரமப்படுவது மோதக்கும் நிச்சலாவும் தான். மோதக் ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு முக்காலியை தச்சரைக் கொண்டு செய்வித்தார். அதை முதுகில் ஆசனம் பொருந்துமாறு வார்கள் கொண்டு பிணைக்கச் சொன்னார். மூன்று கால்களும் பின்னால் நீட்டிக்கொண்டிருக்காமல் மடிந்து ஆசனத்துக்கு மேல் பிணைத்திருக்கும். கௌபாய் பசுமேய்க்கி ஹாலிவுட் இங்க்லீஷ் சினிமாக்களில் குதிரையேறி துப்பாக்கியோடு வரும் கதாநாயகன் மாதிரி பின்னால் முக்காலியோடு அவர் புறப்படும்போது நிச்சலா மோதக் கூடவே நடப்பாள்.
ஒவ்வொரு பத்து நிமிடமும் சட்டைப் பையில் அலாரம் அடிக்க மோதக் முக்காலியை தரைக்கு இறக்கி மனையாள் கால் வலித்ததா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு உட்காரச் செய்வார்.
ஒரு வாரம் இப்படி செயல்பட்டு பத்து நிமிட இடைவெளி அரைமணி நேர இடைவெளியானது. ஆனாலும் ஒரு பிரச்சனை. அலாரம் அடித்ததும் மனைவி உட்கார வேண்டிய இடம் நடுத்தெருவாகவோ, கழிவறை அதுவும் ஆண்கள் கழிப்பறை வாசலாகவோ இருக்கக் கூடும்.
முக்காலி இறங்காவிட்டால் நிச்சலா நிச்சயமாக பலகீனப்பட்டுப் போவாள். இதையெல்லாம் யோசித்து ஐந்து நிமிடத்துக்கு மேல் பயணம் தவிர்க்கவும், எப்போதாவது முக்காலி சேவையை அமுல் படுத்துவதை ஒத்திகை பார்க்கவுமாக மோதக் அல்லல் படுகிறார்.
சமையல் செய்யும்போது இன்னொரு முக்காலி ஸ்திரமாக சமையல்கட்டில் இருப்பதோடு, உட்கார்ந்து சமைக்கும் உயரத்தில் சமையலறை பளிங்குப் பாளம் அமைத்ததும் மோதக்கின் யோசனை. சந்தேகமே இல்லாமல் இந்த முப்பது வருடத்தில் உபயோகமான புத்திசாலித்தனத்துக்கு அரசாங்க விருது ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், தொடர்ந்து அவர் விருது பெற்றிருப்பார்.
August 5, 2021
மிளகு நாவல் – அம்பலப்புழை பால் பாயசத்துக்கு மராட்டியரின் ஆண்டு தோறுமான யாத்திரை
கஜானன் விநாயக் மோதக் வருடா வருடம் இல்லாவிட்டாலும் முகம் மறந்து போகாமல் வைத்திருக்கத் தக்க விதமாக, அவ்வப்போது அம்பலப்புழைக்கு வந்துவிடுவார்.
அம்பலப்புழை கிருஷ்ணன் கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் பால் பாயசத்துக்கு மிகப் பெரிய ரசிகரும் கூட, மோதக்.
நாற்பத்தைந்து வருடமாக ஒரு மராட்டிக்காரருக்கும் ஒரு மலையாள பூமித் தமிழருக்கும் இடையே நிலவும் நல்ல நட்பும் இணக்கமும் இவர்களில் ஒருத்தர் மறைவது வரை கண்டிப்பாக இதே நிலையில் தொடரும்.
மும்பாய் பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது. அப்போது மதறாஸிகளை வெளியேற்ற நடைபெற்ற போராட்டத்தின் போது மோதக் புத்திளைஞன். பத்து நிமிஷம் முன் வந்த கல்யாண் – தாதர் லோக்கல் ரயிலில் இடம் கிடைக்காமல் அடுத்த ஐந்தாவது நிமிடம் அடுத்த லோக்கலில் போகவேண்டி வந்தால் கூட, இது மதறாஸி சதி என்று எதிர்த்துப் போராடக் கிளம்பி வந்த மராட்டிய வீரன் மோதக்.
திலீப் ராவ்ஜி? அவர் அப்போது வேலைதேடிக் கொண்டிருந்தவர். கிடைக்காமல் மராட்டிய இளைஞரானவர். திலீப் அம்மா வழியில் மராட்டியும் அப்பா வழியில் மதறாஸியும் ஆனபடியால் இது சாத்தியமானது.
உடுப்பி ஓட்டலில் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மதறாஸி பிராமணனை முதுகில் ஒரு போடு சும்மா வலிக்காமல் போட்டு அனுப்பிவிட்டு, கல்லா பணத்தில் ஐந்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வர மோதக்கால் முடியும். அந்த ஐந்து ரூபாயும் வெளியே போகும்போது ஜாக்கிரதையாக திருப்பி எறியப்படும். அது ஒரு காலம்.
மோதக் மும்பையிலிருந்து ஆலப்புழை வந்துகொண்டிருக்கிறார்.
தன்பாத் ஆலப்புழை எக்ஸ்பிரஸ்
நன்றி விக்கிபீடியா
மிளகு நாவலில் எங்கோ ஓர் இடத்தில் இரண்டு தோழிகள் – சென்னபைரதேவியும் அப்பக்கா சௌதாவும் மகிழ்ந்திருப்பது
போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயன் தெலுங்கில் துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கன்யகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தான்.
அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. பெரியவை. உன் தனங்கள் மாம்பழங்கள் மிருதுவானவை. பெரியவை. உருண்டு திரண்டவை. கனமானவை. இடுப்பு இல்லாதது. குறி தேர் போல் பரந்துபட்டது. பிருஷ்டம் மலைகள் போன்றது. நீவாழ்க துளுவ ராஜ்யரஜினியே நீடூழி வாழ்க என்று எழுதிப் பாடி ஆடி அப்பக்காவிடமிருந்து ஐந்து வராகன் பெற்றுப் போனான்,
அந்தப் பாட்டை உற்சாகமாகத் தன் ஆருயிர்த் தோழி சென்னபைரதேவியிடம் அவள் பாடிக் காட்ட, என்ன ஆச்சரியம், பட்கல் கவிஞனா அது? போன வாரம் தான் இந்த வருணனைகள் எல்லாம் இட்டு, நடுநடுவே மிளகு என்று வருமாறு வைத்து சாளுவ ராஜ்யரஜினி என்று விளிக்கும் பாட்டை இளம் பெண்களைக் கொண்டு பாடி ஆடி நூறு வராகன் வாங்கிப் போனான் அதே கவிராயன் என்றாள் சென்னா ஆச்சர்யத்தோடு.
”அடியே சாளுவச்சி, ’உன் பிருஷ்டம் இமயமலை, உன் அது தேர்ன்னு என்னைச் சொன்ன பொய்யை அஞ்சே வராகன் கொடுத்து வாங்கிட்டேன். உன் மாம்பழத்துக்கும், இமயமலைக்கும், தேருக்கும் ரொம்ப அதிகமாக கொடுத்திட்டியேடி என்றாள் அப்பக்கா சென்னாவின் முகத்தைக் கையில் ஏந்தி. ’என்ன இருந்தாலும் இந்தத் துளுவச்சி சாமர்த்தியம் சாளுவச்சிக்கு வருமோ’ என்று பாட்டாகப் பாடி ஆடவும் செய்தாள். கூடவே சென்னாவையும் ஆடவைத்தாள். அந்த மகிழ்ச்சிகரமான பொழுதுகள் இப்போதும் வருமோ என்று ஏங்கி இருந்தாள் அப்பக்கா.
pic Ullal Bridge
ack wikipedia.org
August 3, 2021
மிளகு – நானூறு வயசு மூத்த மணப்பெண்ணும் நூற்றுப் பத்து வயது மணமகனும்
பற்றிப் படரும் மிளகு நாவலில் இருந்து –
கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவிலுக்கு வெகு அருகே மஹா கணபதி ஆலயத்தில் ரோகிணியை பரமன் திருமணம் செய்துகொண்டார். ரோகிணி இந்திய போர்த்துகீஸ் கலப்பினப் பெண். பரமனை விட நானூறு வயது மூத்தவள். ஊமத்தை யுத்தத்தில் முழு போர்த்துகீஸ் இனத்தவனான அண்டோனியோ சகாரியோவான தன் முதல் கணவனை இழந்தவள். அதற்கு அப்புறம் முழுக்க இந்திய வம்சாவளியினளாகத்தான் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறாள். லிஸ்பனில் வீடு, தோட்டம், உறவுக்காரர்கள் என்று இருந்தாலும் உத்தர கன்னடப் பிரதேசமான ஜெருஸப்பா, ஹொன்னாவர், பட்கல்,உள்ளால் இப்படி இங்கே வசிப்பதைத்தான் மரியாதைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாக உணர்கிறாள். முதல் கணவன் இறந்தபிறகு இந்திய மிட்டாய்க்கடை வைத்து செல்வம் கொழிக்கிறாள். ராஜகுமாரன் நேமிநாதனுடைய தொடுப்பு பெண் அவள். அவன் மூலம் பெற்றெடுத்த பிள்ளை மஞ்சுநாதனுக்கு மூணு வயது. மஞ்சுவுக்குத் தகப்பனாக பரமனைக் காட்டுகிறாள் ரோகிணி. எங்கப்பாவும் எங்கம்மாவும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று மஞ்சுநாதன் ஒத்த வயதுக் குழந்தைகளோடு விளையாடும்போது சொல்லி வைத்து அந்த நாள் இன்றைக்கு வந்ததில் அவனுக்கு லட்டுருண்டை வடிவிலும் ரவைலாடு வடிவிலும் சந்தோஷம் வந்தது.
கோகர்ணம் ஹொன்னாவரிலிருந்து முப்பது கல் தொலைவில் என்பதால் ஹொன்னாவர் மிட்டாய்க்கடை ஊழியர்கள் தங்கள் கடை உடமையாளர் ரோகிணிக்கும் தலைமை மடையர் பரமனுக்கும் கல்யாணம் என்று ஒரு சாரட் வண்டியிலும். இன்னொரு வாகன் குதிரை வண்டியிலும் வந்து இறங்கிப் பத்து நிமிஷம் ஆகிறது. மொத்தம் பதினாலு பேர் மாப்பிள்ளை, மணப்பெண்ணைச் சேர்த்து.
மொணமொணவென்று முணுமுணுப்பாக தூறல் மழை காது மடலை நனைத்துக் கொண்டிருக்க பரமன் ஒரு சாரட்டில் இருந்து இறங்கினார். அவர் உதடுகள் இது சரியில்லே எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்து. இன்னொரு கல்யாணம் செய்துக்க மனம் இல்லை. என் பெண்டாட்டி ஷாலினிதாய் இறந்ததால் நான் விதவன். ரோகிணியின் கணவன் அண்டானியோ இறந்ததால் அவள் விதவை. ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ராஜகுமாரரே ரோகிணியிடம் சிபாரிசு செய்திருக்கிறாராம். அதை ஏன் ரோகிணியிடம் சொல்ல வேண்டும்? என்னிடம் இல்லையா சொல்லணும் என்று பரமனுக்குத் தோன்றியது. அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்தில் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.
ஒவ்வொருத்தரா வாங்கோ. எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்திலே உள்ளே வந்தா பின்னாலே இருந்து தரிசனம் பண்ணிண்டு இருக்கறவாளுக்கு ஒண்ணும் தெரியாது. கோவில் ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் கணீரென்ற குரலில் சொல்லித் தமிழில் பழம்பாடல் எதுவோ பாட்டும் இல்லாமல் வாசிப்பும் இல்லாமல் ராகம் இழுக்கிறார்.
தேவாரமா என்று கேட்கிறார் பரமன். அவர் முகம் தீபாராதனை வெளிச்சத்தில் தமிழ்ப் பாடல் கேட்ட பெருமகிழ்ச்சியில் மலந்திருக்கிறது. அவருடைய தேவாரமா என்ற கேள்வி எப்போதாவது சந்திக்கும் பட்டரும் சந்தோஷம் அடைகிறார்.
ஆமா, திருக்கோகர்ணம் தேவாரம். அப்பரும் பாடியிருக்கார். சம்பந்தரும் பாடியிருக்கார். இது அப்பர் தேவாரம் என்று பாட ஆரம்பிக்கிறார் –
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்
தாழ்சடையான் காண் சார்ந்தார்க்கு அமுதானான்
மொழி புரியாவிட்டாலும் உதவி மடையன் ரமணதிலகனும் சுற்றுப் பற்றுக் காரியம் நோக்கும் பெருந்தேவனும் பரமன் பின் நின்று பாடல் முடியும்வரை கண்மூடிக் கைகுவித்து நெக்குருகி இருக்கிறார்கள். கோவில் வாசலில் இன்னொரு சிறிய சாரட் வந்து நிற்கிறது. ரோகிணி காஞ்சிபுரம் பட்டுத் துணியில் நெய்த புதுப் பிடவை உடுத்து நிற்கிறாள். பக்கத்தில் புடவை அணிந்து மணப்பெண்ணின் தோழியாக கஸாண்ட்ரா. ரோகிணியின் கண்கள் உறக்கம் காணாமல் சற்றே களைத்திருக்கின்றன. அவள் கையைப் பிடித்தபடி மூன்று வயது மஞ்சுநாத், அவளுடைய மகன் நிற்கிறான்.
படம் திருக்கோகரணம் மஹாகணபதி கோவில்
August 1, 2021
மடையன் என்றொரு தொழில் – மிளகு நாவலில் இருந்து
மிளகு நாவலில் இருந்து – a small extract
இவ்வளவு கிராமப் புறமாக, பெரிய கோவில்கள், மாளிகைகள் ஒரு பக்கம் இருக்க, மின்சாரத்தின் சுவடுகூட இல்லாமல், உடுப்பும் வேதகாலம் போல் பஞ்சகச்சமும் மூலக்கச்சமும் அணிந்து ஒரு பெரிய நகரமே மேடையில்லாத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்ப மனதில் வந்தது.
வாசலுக்கு வந்த அந்தப் பெண் ஓய் வாரும் எப்படி இருக்கீர் என்றாள். பிரமாதம் என்று அவர் சொன்னது புரியாமல் மயங்கி அடுத்து உடனே வசீகரமாகச் சிரித்தாள் அவள்.
“ஜெரஸோப்பா வண்டியடி சத்திரத்தில் குடியேறி விட்டீராமே. உத்தியோகம் பார்க்கிற தோதில் மனசு போகமாட்டேன் என்கிறதா?”
தெலுங்கும் தமிழுமாக அவள் கேட்க பரமன் ஆழ்ந்து பார்த்தபடி, ”எஜமானி, எனக்கு இந்த மாதிரி சொகுசு எல்லாம் ஏதும் வேண்டாம். பம்பாய் போகிற விமானம் எங்கே ஏற வேண்டும் என்று சொன்னால் போதும்” என்றார்.
“ஆரம்பிச்சுட்டீங்களா யாருக்கும் புரியாத விஷயம் பேச? நீர் சொன்ன விமானம், பம்பாய் எல்லாம் யாருக்கும் தெரியாத சமாசாரங்கள். ஜெரஸோப்பாவில் மட்டுமில்லை, பழைய தலைநகரம் ஹம்பியிலே, இப்போதைய தலைநகரம் பெனுகொண்டாவிலே கூட இதுதான் நிலைமை. ஆக, இங்கே கொஞ்ச நாள் இருந்து பாரும். நிச்சயம் பிடித்துப் போகும். அப்புறம் பம்பாய், விமானம், நாக்பூர் எல்லாம் மறந்துடுவீங்க”
பெரியதாகப் பேசி நிறுத்தினாள்.
“சரி, ஜீவனத்துக்கு என்ன பண்ணப் போறீர்? மூன்று வேளையும் சமணக் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் பிரசாதம் போதுமா? வேறு தேவைக்கு காசு வேணாமா?”
“காசுக்கா பஞ்சம் இதோ” என்றபடி கையில் பிடித்திருந்த சஞ்சியில் இருந்து சில காசுகளை பரமன் எடுத்துக் காட்ட ஏகமான சுவாரசியத்தோடு அவள் அந்த காசுகளைக் கையில் வாங்கிப் பார்த்தாள்.
“ஓய் இந்தக் காசெல்லாம் உம் ஊரில் அது எங்கே இருக்கோ அங்கே செல்லும். இங்கே இதுக்கெல்லாம் ஒரு மதிப்புமில்லை”. என்றாள் அவர் கையைப் பற்றியபடி,
“சரி, இப்போதைக்கு உத்தியோகம் ஏதும் கிடைத்தால் சேர்வேன்” என்றார் பரமன். ”கணக்கு எழுதுவீரா?” என்று முதலில் கேட்டாள் அந்தப் பெண்.
“உங்க பெயர் என்ன மிளகு ராணியா?”
“நான் எதுக்கு மிளகு ராணியாக இருக்கணும்? நான் ரோகிணி. ஜெர்ஸோப்பாவில் பிரசித்தமான மிட்டாய் அங்காடி நடத்தறேன். நீர் கணக்கு எழுத மாட்டீரா? போகுது. மிட்டாய்க்கடை பொருள் சர்க்கரை, நெய், வெண்ணெய், பாதாம் பருப்பு இப்படி எல்லாத்தையும் உக்கிராணத்துலே வச்சு அப்பப்போ கேட்கும் போது எடுத்துத் தந்து மேற்பார்வை செய்வீரா?”
”மாட்டேன் ஆனால் நான் ரவாலாடும், தில்லி ஜிலேபியும், கல்கத்தா ரஸகுல்லாவும், இனிப்பு தயிரும் செய்வேன். எங்க அம்மா இதையெல்லாம் ஒரு ஐம்பது வருஷம் முந்தி செய்தபோது பார்த்து பார்த்து கத்துக்கிட்டேன்”.
“சரி நீர் ஒரு சுத்துகாரியம் பார்க்கற மடையரா வேலைக்கு சேரும்”.
“என்ன?:
“மடையன்…. சமையல்தொழில் செய்யறவன்”
அன்றைக்கு இரண்டு நாள் சென்று இனிப்புத் தயிர் குடிக்க கடைவாசலில் பெரிய கூட்டம் கூடியது. ஊரில் தயிர்ப் பஞ்சம், பால் பஞ்சம். எல்லாம் ரோகிணி மிட்டாய் அங்காடிக்குள் தஞ்சம் புகுந்து இனிப்புப் பலகாரமானது.
தென்னிந்திய சமையல்காரர் படம் நன்றி
July 31, 2021
தின்னுங்கள் இன்னொரு ஜயவிஜயீபவ – எழுதப்படும் ‘மிளகு’ நாவலில் இருந்து
நான் எழுதி வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து ஒரு சிறு பகுதி
அற்பமாக ஒரு இனிப்புப் பதார்த்தத்துக்கு இத்தனை பேர் உயிரை விடுகிறார்கள். நாலு நாளாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரத்தி செங்கல் மாதிரி பெரிய வில்லைகளாக நீளக் கத்தியால் வெட்டி, வாழைமட்டை பொதிகளாக அடுக்க, கையே தனியாகக் கழன்று விழப் போவதுபோல வலி.
விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இது என்ன வருடம் என்று கத்தோலிக்க மதகுரு ஒருவர் இனிப்பு வாங்க அங்காடிக்கு வந்தபோது அவரைக் கேட்டார் பரமன். பதினாறாம் நூற்றாண்டு இன்னும் இரண்டு வருடத்தில் முடிந்து பதினேழாம் நூற்றாண்டு தொடங்கப் போகிறது என்று சொல்லியபடி ஒரு பாதுஷாவைக் கடித்துத் தின்றார் குரு. எச்சில் பண்ணிச் சாப்பிடும் குரு சொன்னாலும் பரமன் நம்ப வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டால் அவருக்கென்ன போச்சு! ஆக, இது கிறிஸ்து சகாப்தத்தில் ஆயிரத்து அறுநூறாம் வருடம்.
”பரமாவரே”.
மிட்டாய்க்கடையின் உரிமைக்காரி அவரை சகல மரியாதையும் பிரியமுமாக அழைக்கிறாள். நாண் பூட்டிய வில் போல் விண்ணென்ற உடல். கவர்ச்சி விட்டுப்போகாத முப்பத்தேழு வயதுப் பெண். பெயர் ரோகிணி.
”சொல்லு ரோகிணி, என்ன புதுசாக சிருஷ்டிக்கலாம்?”
பரமன் அவளை புன்சிரிப்போடு கேட்கிறார். இதை அவர் மனம் இங்கிலீஷ் பாஷையில் கேட்கச் சொல்கிறது. காதில், உட்காதில் விழும் வார்த்தைகள்.
ரோகிணி நாணுகிறாள். வேறு அர்த்தம் எடுத்துக்கொண்டிருக்கிறாள். பரமனுக்கு எழுபதில் காதல் வந்து நிற்கிறது. நானூறு வருடம் மூத்த இளம் பெண்ணோடு அது வந்து படிகிறது. காதலில்லை. வயது நோக்காத காமம்.
“இந்த புது இனிப்பு எப்படி இருக்கும், சொல்லு” அவர் யோசித்தபடி சொல்கிறார்.
பசு நெய்யும் சர்க்கரை இனிப்புமாகப் பொன் நிறத்தில் பொரித்த நீள்சதுரப் பேழையாகக் கடலைமாவுக் கூடு. ரோஜாவின் வாசனை மிகுந்த ஜீராவில் முழுக்க ஊறிய கூட்டின் அடியில் பொதிந்த பாதி கிராம்பு. கூட்டின் உள்ளே முதல் தளத்தில் பாதாம், அடுத்ததில் தேங்காய், மூன்றாவதில் முந்திரி என்று அடைத்த, வேகவைத்த பூரணம். குடுவையை மூடி மேலே சிறு கீற்றாக மிளகுப் பொடிக்கோடு.
கிராம்புக் காரம் ஒரு நொடி. உடனே ஜீராவும் நெய்யும் ரோஜாவும் கலந்த சுவை. அடுத்த வினாடி விதவிதமான இனிப்புப் பூரணச் சுவை என்று நாவில் கரைந்து, இறுதியில் மிளகுத் தீற்றல் சுவை. பரமன் சொன்ன, இனித்தும் உரைத்தும் மாய ருசி காட்டும் புது இனிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது.
நேற்று முழுக்க காலையில் இருந்து அந்தப் பெயர் குறிப்பிடப்படாத இனிப்பை மறுபடி மறுபடி செய்து பூரணத்துவம் அடைய வைத்துக் கொண்டிருந்தார் பரமன்.
கூடு சரியாக வந்தால், ஜீராவில் ஊறியதும் கொழகொழவென்று உருவம் சிதைந்து போகிறது. ஜீராவில் சரியாக ஊறினால் பிசின் மாதிரி வாய்க்கும் விரலுக்கும் பாலம் போடுகிறது. எல்லாம் சரியாக இருந்தால் மேலே மிளகுக் கீற்றுக்கோடு வரமாட்டேன் என்கிறது. வந்தால் சொதசொதவென்று கோடு கலைந்து மேலே எல்லாம் மிளகுப் பொடி நனைக்கிறது. அது சரியாக வந்தால் குடுவையின் தலையில் கத்தி செருகியதுபோல் கிராம்பு உட்கார மாட்டேன் என்று விழுந்து விடுகிறது. உட்கார்ந்தால், துளை பெரியதாக விழுந்து மொத்த வடிவமுமே பழுதுபட்டுப் போகிறது.
சேர்மானங்களின் அளவை, பதத்தை மாற்றி மாற்றி சோதனை செய்து, ஒரு வழியாக எல்லாம் சரியாக வர, ரோகிணி சீனாவில் இருந்து அறிமுகமான விலையுயர்ந்த காகிதத்தில் சாயம் தோய்த்த குச்சி தொட்டு, எப்படி இந்தப் புது இனிப்பு செய்வது என்று எழுதிப் பத்திரமாக வைத்தாள்.
இந்த சமையல் குறிப்பு இனி ரோகிணியின் குடும்பத்துக்கும் பரமனின் குடும்பத்துக்கும் மட்டும் தெரிந்தது. அதை யாருக்காவது சொல்லித் தரவேண்டும் என்றால், இரண்டு பேரும் சம்மதிக்க வேண்டும். ரோகிணி இந்த உரிமை பற்றிய குறிப்புகளை எழுதும்போது கிட்டத்தட்ட சமையலறையே காலியாக இருந்தது. மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.
படம் : ஜயவிஜயீபவ இனிப்பு இப்படி இருந்திருக்குமோ1
நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா
July 30, 2021
நாவல் மிளகு : கொல்லைக்குப் போனாலும் கூட்டு வேண்டாம்
A small extract from my novel MILAGU on the anvil
கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள்.
மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள்.
எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய குளித்துச் சுத்தமாகத் தெரியும் சமையல்காரர்கள் காலை உணவைப் பாகம் செய்து கொண்டிருந்தார்கள். ஆளோடி இறுதியில் ஒரு ஓர அறை ஆகாயத்தைப் பார்தது கூரை இல்லாமல் நீண்டிருக்க, அங்கே பணி எடுக்கிறவர்கள், உபயோகிக்கப்பட்ட பாத்திரங்களைக் தேய்த்துக் கழுவித் தூய்மைப் படுத்தித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
குசினி வாசலில் நின்றபோது பிரதம சமையல்காரர் ஒரு வினாடி தன் உதவியாளனிடம் அடுப்பைக் காட்டிச் சொல்லியபடி ராணிக்கு மரியாதை செலுத்த ஓடி வந்தார்.
”எல்லாம் சரியாக நடக்கிறது தானே?”
”ஆமாம் அம்மா”.
”காலை உணவு என்ன சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்”?
”இட்டலிகளும் தோசையும் துவையலும் பாகம் செய்துகொண்டிருக்கிறோம் அம்மா. வெண்பொங்கலும் வெந்துகொண்டிருக்கிறது. இன்று வெள்ளி என்பதால் பூஜை நைவேத்தியமாகப் படைக்கப் பலாப்பழப் பாயசமும் சமைத்து வைத்தாகி விட்டது அம்மா. நீங்கள் சொன்னபடி குறைந்த அளவு சர்க்கரையே சேர்த்துச் செய்தோம்.
துரை அவர்கள் காணிக்கையாகத் தந்த கொய்யாப் பழங்களையும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கிறோம்”.
”ரொம்ப நல்லது. எனக்கு வேண்டிய தினசரி பானம் அனுப்புகிறீர்களா?”
”நிச்சயமாக அம்மா. உங்கள் தினசரி வழக்கப்படி எலுமிச்சைச் சாறும் தேனும் வென்னீரில் கலந்து வைத்திருக்கிறது. இன்று தேன் சேர்க்க வேண்டாம் என்றால் தேனில்லாமல் கருப்பட்டிக் கூழ் சேர்த்த இன்னொரு குவளையும் உண்டு. இரண்டையும் தங்கள் திருமனசுப்படி அனுப்புகிறேன்”.
”தேனை நாம் விலக்கவில்லை. அடிகளார் வந்தபோது அவருக்கு விலக்கு என்பதால் சொன்னோம். இப்போது தேன் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்”.
மண்டபத்தில் நேமிநாதன் நின்றபடி சென்னா வரக் காத்திருந்தான். வலதுகைச் சுட்டி விரலில் வெள்ளைத் துணியால் கட்டி வைத்திருந்ததை முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாலும் சென்னா கண்ணில் அது படத் தவறவில்லை. தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள் சென்னா.
”வணக்கம் அம்மா, நன்றாக உறங்கினீர்களா? நேற்று முன் தினம் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே அந்தக் குத்திருமல் கட்டுப்பட்டதா? வயிறு சீரணப் பிரச்சனை இன்றி சீராக இயங்குகிறதா?”
அவன் சொல்லச் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள் சென்னா. வயிறு பற்றிய ஆம் உதிர்த்த உடன், அவனை இருக்கச் சொல்லி விட்டு தாதியைப் பார்த்தாள் சென்னா.
”கொல்லைக்குப் போக கூட்டு எதுக்குன்னு பழஞ்சொல் தமிழ்லே உண்டு. ஆனா எனக்கு அறுபது வயசாகி எல்லா சீக்கும் வந்து சேர்ந்திருக்கு. கொல்லையிலே கழிப்பறையிலே கொண்டு போய் விட்டு காத்திருந்து திரும்பக் கூட்டிவர தாதி இருந்தால் மனசு ஆறுதலோட இருக்கு. சுத்தப்படுத்தறதெல்லாம் நானே தான் இதுவரைக்கும் செய்துக்கறது. வெறும் துணைதான். நான் போயிட்டு தோட்டம் போறேன். நேமி, நீ எட்டரைக்கு காரியாலயம் வந்துவிடு”
மிர்ஜான் கோட்டை
படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா’
July 29, 2021
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – லிஸ்பனுக்குப் பயணம், ஒரு திட்டம்
ஜனவரி, பிப்ரவரியில் தேசமே மிதமான குளிரும், பூப்பூத்த மரங்களும், பச்சைச் செடிகொடிகளுமாக சொர்க்கம் போல் காட்சியளிக்கும். மூன்று அல்லது நான்கு பாய்மரங்கள் உள்ள காரக் வகைக் கப்பல்களிலோ, சிறிய ஆனால் ஆழமில்லாத கடற்கரையை ஒட்டிய பிரதேசங்களிலும் எளிதில் பயணம் செய்யும் வேகம் மிகுந்த காரவேலா கப்பலிலோ நீங்கள் வரும் நவம்பர் மத்தியில் புறப்பட்டால் ஜனவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா?”
ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார்.
“இருங்கள் சென்ஹோர் இமானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு, பல் துலக்க வேப்பங்குச்சியை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ அவ்வளவு விரைவில் மிர்ஜான் திரும்ப வேண்டும். யாரெல்லாம் என்னோடு வருகிறார்கள். இது நல்ல கேள்வி. கல்யாண கோஷ்டி மாதிரி முப்பது, நாற்பது பேரோடு லிஸ்பன் புறப்பட நானும் விரும்ப மாட்டேன். உங்கள் அரசரும் அவர்தம் குடும்பமும் கூட இவ்வளவு பெரிய குழுவைச் சந்திக்க விருப்பப்பட மாட்டார்கள். ”
பெத்ரோ சிரித்தபடி இருகை கூப்பி இந்தியனாக வணங்கினார்.
”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். குறையேதும் வராதபடி எல்லாம் திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.
”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது.”
“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.
பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.
”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.
ஒருவினாடி சாந்தமான அந்த முகத்தில் சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார். ஏதோ செய்ய உட்கார்ந்து வேறெதோ வந்து முடிகிற மாதிரி ஆகி விடப் போகிறதே என்ற படபடப்பு அது.
படம் : நான்கு பாய்மரங்கள் கொண்ட காரக் வகை கப்பல்கள் – 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகல் கட்டமைப்பு
நன்றி கார்டியன் பத்திரிகை
July 27, 2021
ஒரு குறுமிளகு ஒரு வால் மிளகு
“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? உன் பெண்டாட்டி மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள்
சென்னபைரதேவி மகாராணி. வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி அவளிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள்.
“பயணம் போனா, நீங்க ரெண்டு பேரும் உண்டு கட்டாயமாக” என்றாள் ராணி. ”பத்து சிமிழ் மருந்து வேணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.
”ஆமாம்மா, சொல்லப் போனால் பத்து சிமிழும் மூலிகைச் சாற்றை கெட்டியாக்கி வச்சது. சிமிழை எடுக்கும்போது அதைக் கரைச்சு வச்சுக்கணும். அதெல்லாம் பார்த்துக்கலாம் அம்மா. என் பொறுப்பு”
“இதை எடுத்துப் போகிறதுக்கு ஏதாவது கவனிக்கணுமா?”
“ஆமாம்மா, கடல்லே பயணம்னா, உப்புக் காற்றிலே மூலிகை வீரியம் குறைய வாய்ப்பு இருக்கு. அதை நிவர்த்தி செய்ய, ஒண்ணுக்குள்ளே ஒண்ணா மூணு பகுதியாக பெட்டி. பெட்டிக்குள் சிமிழ் சரியான வெப்பத்திலே கை படாமல் கிளறிக் கைபடாமல் அடைச்சு அரக்கு உருக்கி வாயை இறுக அடைக்கணும், அப்புறம் கல் உப்பு எடுத்து மரப்பெட்டி உள்ளே வெற்றிடத்திலே தூவி இருக்கணும்”.
சென்னா புன்சிரிப்போடு நின்றாள். இவ்வளவுதானா, ஒரு நிமிஷத்திலே முடிச்சுடலாம். அரிந்தம் வைத்தியரை கூப்பிடு என்றாள் குறும்பாக.
அம்மா, எங்கப்பா மேலே அவ்வளவு நம்பிக்கையா? அவர் இறந்து பத்து வருஷமாச்சே. ஆவியாக வந்து பேசறாரா? வேறே எல்லாரோட ஆவியும் வர்றதாமே” என்றார் வைத்தியர் தரையைப் பார்த்தபடி.
“இப்போ நான் ஒற்றனா பேசணுமா, வைத்தியனா பேசணுமா? பைத்யநாத் வைத்தியர் கேட்டார்.
“எதோ ஒண்ணு தகவல் சொன்னா சரிதான். அதுவும் ஹேஷ்யம், கூட்டி சேர்த்தது எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடிக்கு பேசறது முக்கியம். மிங்கு, நீ போகிறதுன்னா போடி. போய் இவனுக்கு சித்தரத்தை கஷாயம் போட்டு வை. லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருக்கான். சீக்கிரம் அனுப்பிடறேன். பயப்படாதே” என்றாள் சென்னபைரதேவி மகாராணி. மிங்கு குனிந்து வணங்கி வெளியேறினாள்.
picture Pestle & mortar
ack amazon.in
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

