இரா. முருகன்'s Blog, page 68
October 7, 2021
மிளகு பெருநாவலில் இருந்து – வல்லூர் ராமானுஜ கூடம் சத்திரத்தில் ஒரு காலை நேரம்
வழியில் தென்படும் முதல் சத்திரத்தில் சாரட் வண்டிகளை நிறுத்தச் சொல்கிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வல்லூர் ராமானுஜ கூடம் என்று பெயர் எழுதிய வழிப்போக்கர் சத்திரத்தை அடைந்து நிற்கின்றன.
முதல் சாரட்டில் வந்த பாதுகாப்பு வீரர்கள் சாரட்டில் இருந்து கீழே இறங்கி சத்திரத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். வாசலில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு காலணிகளைக் கழற்றி உள்ளே ஓடுகிறதைப் பார்த்து புன்னகைக்கிறேன். நான் இது தொடர்பாகக் கொடுத்திருந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே இருந்து நெற்றி நிறைய, தோள்களில், வயிற்றில் வடகலை நாமம் அணிந்திருந்த ஒரு முதியவர் காதில் செருகிய பூணூலோடு இரைந்து கொண்டு வருகிறார்-
இன்றைக்கு வேலைக்காரி வராமல் நானே பெருக்கித் துடைத்து குளித்து வந்து சமையல் பண்ணிண்டிருக்கேன். உப்புமா மட்டும்தான் செஞ்சிருக்கு. உப்புமா. ஒருத்தொருத்தருக்கும் மூணு சேர் உப்புமாவும், ஒரு ஆழாக்கு மோரும் கொடுக்கப்படும். கூட்டம் போடாமே ஒருத்தருக்கு பின்னாடி இன்னொருத்தரா நிண்ணுக்குங்க;.
அவர் பாட்டுக்கு சத்தம் போட்டுக்கொண்டு உப்புமா வைத்த வெங்கல உருளி மேல் பித்தளைக் கரண்டியால் லொட்டுலொட்டென்று தட்டியபடி திரும்ப சொல்கிறார் ஒவ்வொருத்தருக்கும் மூணு சேர் உப்புமா, ஒரு ஆழாக்கு மோர்.
பாதுகாப்பு வீரர்கள் அவர் வாயைப் பொத்தி மரியாதை காட்டச் சொல்ல விரைய நான் வேண்டாம் என்று சைகை செய்கிறேன். எத்தனை சுவாரசியமான மனிதர். நான் என்ன, முகலாய சக்கரவர்த்தி அக்பர் வந்தால் கூட ஒரு ஆழாக்கு மோரும், மூணு சேர் உப்புமாவும்தான். அதென்ன உப்புமா? புது விஷயமாக இருக்கே. இப்படி ஒரு பலகாரம் உண்டா என்ன?
நான் எதற்கும் இருக்கட்டும் என்று பிடவைத் தலைப்பை தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு உள்ளே போகிறேன்.
இந்தாம்மா பரதேவதை, பின்னால் தண்ணி பிடிச்சு வச்சிருக்கறது போறுமான்னு பாரு. இல்லேன்னா ஸ்ரமம் பார்க்காம ரெண்டு வாளி கிணத்துலே இரைச்சு பீப்பாய்லே கொட்டிட்டு கால் அலம்பிண்டு வந்துடேன். உனக்கு நாலு சேர் உப்புமாவா தர்றேன்.
எனக்கு சிரிப்பு பீறிட்டு எழுகிறது. சுவாமிகள் திருநாமம் என்ன என்று பவ்யமாக விசாரிக்கிறேன்.
ஏண்டியம்மா அதை தெரிஞ்சிண்டாத்தான் தண்ணி ரொப்புவியோ. அப்படின்னா கேளு நான் மாண்ட்யா செலுவ கேசவ ஐயங்காரன். இந்த வைஷ்ணவ சத்திர தர்மாதிகாரி. இப்போ தண்ணி இறைக்க போறியாடியம்மா?
பாதுகாப்பு வீரர்களில் துடிப்போடு நின்ற இளைஞர் ஐயங்காரைப் பார்த்து சிரிப்போடு விசாரிக்கிறார், நான் வேண்டாம் வேண்டாம் என்றாலும். எனக்கு இந்த காட்சி நீடிக்க ரொம்ப ஆசை. இவர்களுக்கோ இது எனக்குச் செய்யப்படும் மரியாதைக் குறைச்சலாம்.
ஓய் ஐயங்கார் ஸ்வாமின், நீர் யாரென்று நினைத்து அம்மாவை கிணற்றில் தண்ணீர் சேந்தச் சொல்கிறீர்? அவர் இந்த பூமியை ராஜ்யபரிபாலனம் செய்கிற ஸ்ரீமதி அப்பக்கா மகாராணி ஓய்.
ஐயங்கார் ஒரு வினாடி என்னைப் பார்க்கிறார். ரொம்ப சந்தோஷம். உப்புமா நாலு சேர் மோர் ஒரு ஆழாக்கு தரையிலே உக்காந்து சாப்பிடலாம். பெருக்கி வச்சுட்டேன் என்றபடி வாழை இலையை வரிசையாக விரிக்கிறார்.
நான் முதலில் ஓரமாக இருந்த இலைக்கு முன் உட்கார்ந்து அடுத்து என் கூட்டத்தைக் கைகாட்டுகிறேன். கொஞ்சம் தயங்கி அவர்கள் வந்து மூன்றடி தொலைவில் இலையை மாற்றிப் போட்டு உட்கார்கிறார்கள். திவ்யமான உப்பிட்டு கரண்டி கரண்டியாக வட்டிக்கிறார் ஐயங்கார்.
சரியாக மூன்று கரண்டி உப்பிட்டு ஒவ்வொருவருக்கும் போட்டு எனக்கு ராணி என்பதால் நான்கு சேர் அதாவது நான்கு கரண்டி இலையில் வார்க்கிறார். முடித்து விட்டுக் கையலம்பிப் புறப்படும் போது மண்சட்டி குவளையில் அளவுக் குவளையால் ஒரு ஆழாக்கு மோர் ஊற்றி எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். நான் முதலில் எடுத்துக்கொண்டு கைகாட்ட மற்றவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். எலுமிச்சைச் சாறு பிழிந்து, மிளகாயும் கொத்தமல்லியும், சன்னமாக இஞ்சியும் அரிந்து போட்டு அமிர்தமாக்கிய மோர் அது.
ஐயங்காரிடம் நன்றி சொல்லிப் புறப்பட்டோம்.
நன்னா இருந்ததா, சந்தோஷம். உப்புமாவில் எலுமிச்சை சாறு அரைக்கால் குவளை கலந்திருக்கலாம். முந்திரிப் பருப்பு முழிச்சிண்டு இருக்க நெய் கொஞ்சமா ஆரம்பத்திலே ஊத்தி வறுத்து வச்சு கடைசியா சேர்த்திருக்கலாம் என்று கவனத்தோடு சொன்னார்.
நான் சொன்னேன் – நாளையிலிருந்து உம் சத்திரத்துக்கு தினசரி இரண்டு வீசை முந்திரிப்பருப்பும், ஒரு படி பசுநெய்யும் தர ஆக்ஞை பிறப்பிக்கறேன் என்று சொல்கிறேன்.
செலுவ ஐயங்கார் நமஸ்காரம் செய்து நிற்க நாங்கள் வெளியேறுகிறோம். ஏப்பம் விட்டது யார்?
8 பலம்=1 சேர்; 5சேர்=1 வீசை(426.67 கிராம்); 3.5 சேர்=28 பலம்; 8 ஆழக்கு= 1 படி.
October 6, 2021
பெருநாவல் மிளகு – Thus spoke Abbakka Chowdha, Queen of Ullal
Excerpt from my forthcoming novel MILAGU
நான் அப்பக்கா. இப்படிச் சொன்னால் போதாது. எந்த அப்பக்கா? என் அம்மா பெயரும் அதேதான். போதாக்குறைக்கு என் தங்கையும் அப்பக்கா தான். உலகத்தில் புதிதாகச் சூட்டப் பெயர்களே இல்லாமல் அஸ்தமித்து, எல்லோரும் வேறு வழியின்றி அப்பக்கா என்று நாமகரணம் பெறவேண்டும் என்பது எழுதாவிதியோ என்னமோ.
நான் மூத்த மகள் அப்பக்கா சௌதா. சௌதா என்பது வீட்டுப் பெயர். வடக்கு கர்னாடகத்தில் உள்ளால் மற்றும் புட்டிகே பிரதேசங்களுக்கு துளுவ வம்ச அரசி. அரசியோ அரசனோ நாளும், பொழுதும் ஒரு கணம் விலக்காமல் நிர்வகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்க, நான் இந்த அதிகாலையில் படகுத்துறையில் நின்று கொண்டிருக்கிறேன்.
என் ஆட்சிக்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் திடீரென்று கிளம்பிய பிரச்சனைகள் என்னை வரச்சொல்லி அழைக்கின்றன. ஆட்சி உட்படுதல் எல்லாம் பெரிய சொற்றொடர் பயன்பாடுகள். நூறு இருநூறு கிராமம், கூடவே ஒன்றிரண்டு சிறு நகரங்கள். இவை தான் நான் நிர்வாகம் செய்யும் நிலப்பரப்பு. எனக்கான நகரங்கள் உள்ளாலும் பட்டிகேயும். சென்னபராதேவிக்கு ஜெருஸோப்பாவும் ஹொன்னாவரும். என் கணவன் வீரு என்ற வீரநரசிம்ம்மருக்கு நாற்பத்தைந்து குக்கிராமங்கள் மட்டும்.
விஜயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்டி சுல்தானிய, முகலாய ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறது எல்லா குறுநில மன்னர்களும் வழக்கமாகச் செய்வது. விஜயநகரைப் பாதுகாக்கவே வலுவான படை வேண்டியிருக்க, நாங்கள் மாசாமாசம் அளிக்கும் கப்பமும் திறையும் அவர்களுடைய தினப்படி பராமரிப்புக்கு வழி செய்கின்றன என்பதே பொருத்தமானது. அமைப்பு இருநூறு வருடம் பழையவை என்பதால் அவற்றை மாற்ற யாரும் முற்படுவதில்லை. நானும் தான்.
உள்ளால் மகாராணியாக நான் அதிகாலையில் ஆட்சி செய்யப் போகவேண்டும்.
உள்ளால் துறைமுகத்துக்கு வடக்கே பத்துமைல் தூரத்தில் அம்பெலி என்ற ஒரு கிராமத்தில் ஏரி உடைத்துக்கொண்டு விட்டது என்று விடிவதற்கு ஐந்து நாழிகை முன் தாக்கல் வந்து சேர்ந்தது, அது காலை நாலு மணி. சேதம் எதுவும் இல்லை உடைப்பு அடைபட்டிருக்கிறது என்றாலும் ஏரிக்குள் நீர் வரத்து மெல்ல உயர்ந்துதான் கொண்டிருக்கிறதாம். எங்கிருந்து நீர் வருகிறது என்று தெரியவில்லையாம். நிலத்தடி நீராக இருக்கும் என்று தோன்றுகிறதாம்.
அங்கிருந்து இன்னும் தென்மேற்கே துர்கி என்று இன்னொரு பெரிய கிராமம். அங்கேயும் பெரிய ஏரி. அது உடையவில்லை. ஆனால் ஒரு வேண்டாத விருந்தினர் வந்திருக்கிறாராம் ஏரிக்கு. என்றால், முதலை ஒன்று எங்கிருந்தோ வந்து ஏரிக் களிமண் சதுப்புப் பிரதேசத்தில் மறைந்து திரிகிறதாம். இன்னும் முதலை வாயில் யாரும் போகவில்லை என்றாலும் அதற்கான காலம் வரலாமாம்.
இந்த இரண்டு ஏரிகளுக்கும் கிழக்கே இருக்கும் இருபது சின்னக் கிராமங்களின் தொகுதியில் நடுநாயகமாக கட்டோலி கிராமத்தில் பரந்து விரிந்த மற்றொரு நீர்நிலை. ஏரிக்குள் இருந்து கணபதி தும்பிக்கை பின்னமான மர விக்கிரகம் ஆக நீர்ப்பரப்புக்கு மேலே வந்து இருக்கிறாராம். முன்னூறு வருஷம் முந்திய கோவில் விக்கிரகம் என்று சொல்கிறார்கள். கட்டோலி கிராமத்தில் தினம் ஆயிரம் பேராவது தினம் வந்து தரிசித்துப் போகிறார்களாம். சுற்றுப்புற கிராமங்களில் இந்த நிகழ்வு சிரத்தையாகக் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லைதான். கட்டோலி கிராமத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, ஒவ்வொரு வீட்டிலும் தினம் யாராவது உறவுக்காரர்கள் விருந்தாட வந்து கிரமமான விவசாய, தறிநெய்தல், பசு பராமரிப்பு, எருமை வளர்ப்பு, ஆடு கோழி பராமரிப்பு எல்லாம் தறிகெட்டுப் போகிறதாம். கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் பரவி கணிசமான கோழி, சேவல்கள் மடிந்து விட்டனவாம். வெளியூர்க் காரர்களுக்கு, கணபதி வரவு புல்லரிக்க வைப்பது. குடும்பத்தோடு போய்க் காண வேண்டிய வேடிக்கை, அவசர பக்தி, கூட்டு ப்ரார்த்தனை. மிஞ்சினால் ஒருநாள் விடுமுறை. தரிசனமும் தொடர்ந்து, கட்டோலி கிராமம் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதும் நிகழ இதற்கு ஒரு வழி காண வேண்டும். ஆக நான் இந்த மூன்று கிராமத்து ஏரிகளையும் பார்வையிட்டு மூன்று விதமான பிரச்சனைகளை தீர்த்து வரவேண்டும்.
pic Ullal beach, Karnataka
ack en.wikimedia.org
October 5, 2021
மிளகு – Portuguese Ambassador Immanuel Pedro meets Madurai King Muthu Krishnappa Naicker
சாப்பிடாமல் வாருங்கள் என்று இரண்டு தூதர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பியிருந்தார் மதுரை மாமன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். சாயந்திரம் ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார் அவர்.
கோழிக்கோடு ஸாமுரின் போல் நல்ல உயரமும், கெச்சலான கருத்த உருவமும், மேலுடம்பு மறைக்கும் வெள்ளி, பொன் ஆபரணங்களுமாக நாயக்கரைக் கற்பனை செய்திருந்ததது தவறாகப் போனது.
ஆகிருதி குள்ளமும் இல்லை உயரமும் இல்லை. இந்துஸ்தானத்தில் மேட்டுக்குடி இயற்கை உடலம்சமாகக் கருதும் சிவப்புத் தோல் என்ற கறுப்பு இல்லாத, ஐரோப்பியர் போல் வெண்மையுமில்லாத தோல் நிறம்.
தலையில் மணிமகுடமாக இல்லாமல் ஜரிகைத் தலைப்பாகை, வயிற்றுப் பக்கம் தொந்தி போட்டு உப்பி, பட்டுக் குப்பாயத்துக்குக் கீழே பெரிய வயிறு.
பட்டுக் கால்சராய் தொளதொளப்பாகக் கணுக்கால் வரை அணிந்த கனமான கால்கள், முன்னால் வளைந்த சீனத்துக் காலணிகள், கை விரல்களில் ஒன்றிரண்டு கனமான மோதிரங்கள். மதுரை அரசர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இருந்த கோலம் அது.
இடி இடித்தது போல் கடகடவென்று சிரிப்பு. பக்கத்தில் இருந்து ரகசியம் பேசினாலே பத்து அடி தூரம் கேட்கும் சிநேகிதமும் பிரியமுமான குரல்.
என் கையைக் குலுக்கி ”சின்ஹோர் பெத்ரோ, சேஜா பெம் விண்டோ சேஜா பெம் விண்டோ” என்று வரவேற்ற நிமிடம் முதல் எனக்கு நல்ல சிநேகிதராகி விட்டார் அவர்.
”எதுவும் பேசுவதற்கு முன் எங்கள் எளிய உணவை பெத்ரோ அவர்களோடு பங்கிட்டுக் கொள்ள எங்களை அவர் அன்போடு அனுமதிக்க வேண்டும்” என்றார் நாயக்கர். நாடகீய பாணியில் இரு கை கூப்பி சற்றே வளைந்து நின்று வணங்கினேன்.
“மாமன்னர் விஸ்வநாத நாயக்கரின் பேரனும், குமார கிருஷ்ணப்ப நாயக்கரின் மகனுமான முத்து கிருஷ்ணப்ப நாயக்கனின் நன்றி” என்று அரண்மனை போஜன சாலைக்கு அழைத்துச் சென்றார் நாயக்க மன்னர்.
அவருடைய குடும்பத்தினர் ஒரு பத்து பேர் இருந்தார்கள் அங்கே. இரண்டு நாயக்க மகாராணியரும் நான்கு புதல்வர்கள், இரண்டு புதல்வியர் இருந்தார்கள். ஒரு மரஸ்டூலில் தமிழும் போர்த்துகீஸ் மொழியும் அறிந்த துவிபாஷி அமர்ந்திருந்தார். சாப்பிடும்போதே மொழிபெயர்ப்பு தொடங்கி விட்டது.
ராத்திரியில் சந்திப்பு மிக சுவாரசியமானது என்றேன் இட்டலியை கோழிக் குழம்போடு வாயில் போட்டுக் கொண்டு. விஜயநகர அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எங்கும் மெலிந்த இட்டலிகள் உண்ணக் கிடைக்கும். அவற்றின் நான்கு சேர்ந்து ஒன்றாக மதுரை அரண்மனையில் உண்டேன். நல்ல வெள்ளை நிறம், உப்பு சற்றே தூக்கலாக இட்ட, நல்ல சூடான இட்டலிகள் அவை.
”ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம். வேறு எந்த ஊரிலும் லிஸ்பனில் கூட இந்த வசதி இருக்காது” விவரமாகச் சொன்னார் நாயக்கர்.
வேகமாகப் பேசியபடி உண்ண முடிந்தது அவரால் என்பதைக் கவனித்தேன். இந்துஸ்தானத்தில் பலரும் அப்படித்தான்.
கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையின் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் தன்மையை விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. அதை அவரிடம் சொன்னேன்.
”என்ன செய்ய, நாங்க கொஞ்சம் விஷமக்காரங்க. எங்க தாத்தா விஸ்வநாத நாயக்கர் ராயசம் துணையாக, என்றால் எழுத, படிக்க அவைக்கு உதவி செய்ய ஒரு படிப்பாளியை நியமிக்க ரெண்டு முரட்டு நாயக்கர் பய்யன்களை வரச் சொன்னார் –
”ரெண்டரைக்கு ஒருத்தன் வரட்டும். மூணுக்கு இன்னொருத்தன்”.
”பகல் ரெண்டரைக்கு வந்து ராஜாவை சந்திக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார் முதல் ஆள்.
ராஜாவோட விஷயம் – விஷமம் தெரிஞ்ச ரெண்டாவது ஆள் மூணு மணிக்கு தானே வரச் சொன்னார், பகல்லே மூணு மணியாக இருக்காது. ராத்திரி மூணு மணிக்குப் போய்ப் பார்க்கலாம்னு ராத்திரி மூணு மணிக்கு அரண்மனை போனா, விஸ்வநாத நாயக்கர் வந்திருக்கார்! அந்தப் பையன் ராயசம் உப பிரதானியாக எங்க அப்பா காலத்திலே ஓய்வு பெற்றார்”.
நாயக்கர் ரொம்ப சுவாரசியமாகப் பேசியபடி கை அலம்பி அரண்மனை முக மண்டபத்துக்குள் வந்து சேர்ந்தோம்.
pic Lisbon, Capital of Portugal
October 4, 2021
From MILAGU, my next novel – a poignant interaction with the Crown
வந்து விட்டேன் அம்மா. அந்தத் தெருவில் சாக்கடை மூடிகள் காணாமல் போனதால் நேற்று இரவு ஆறேழு வயதுச் சிறுமி ஒருத்தி சாக்கடைக்குள் விழுந்தாள்.
என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு? சென்னா பரபரப்பாகக் கேட்டாள்.
இன்று காலை அவள் இறந்து போனாள்.
அய்யய்யோ. ஆண்டவனே
குயில்தோப்புத் தெருவின் சின்னக் குயில். நன்கு பாடுவாள். என் நல்ல சிறியபெண் சிநேகிதி அவள். போகட்டும். இப்போது மகாராணியிடம் ஒரு உள்ளூர் பிரச்சனையைச் சொல்லி விட்டேன். இதை உள்ளூராட்சிக்கு அனுப்பிக் கவனிக்க வைக்கலாம். சோனு என்ற அந்தக் குழந்தைப் பெண் திரும்பி வரப் போவதில்லை. இதுவும் போகட்டும்.
எல்லாம் போகட்டும் என்று புறம் தள்ளினால் எத்தனை உயிர்களை காவுவாங்கும் அந்தக் கழிவுநீர் ஓடை?
இனியும் இப்படியான விபத்துகள் நடக்காமல் இருக்க, ஹொன்னாவர் நகரச் சாக்கடை அமைப்பை சரியாக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதத்தில் மழைக்காலம் வருவதால் உடனடியாகச் செய்ய வேண்டியது இது.
செலவு என்ன பிடிக்கும்?
செலவு இருபதாயிரம் வராகன் கிட்டத்தட்ட ஆகும்.
இருபதாயிரமா? இரண்டு மாதத்துக்கு முன் என்றால் உடனே நிதி ஒதுக்கி இருப்பேன். இப்போது ஒரு வாரம் இரண்டு வாரம் தாமதமாக அதுவும் நான்கு தடவை ஐந்தாயிரம் ஐந்தாயிரமாகத் தரலாம். யோசித்துச் சொல்கிறேன்.
அம்மா, நேற்று கருவூலத்தில் வரவு வைக்க மாட்ரிட் வர்த்தகரிடம் இருந்து ஏற்றுமதிக்கான விலை இருபதாயிரம் வராகன் என்ற தொகைக்கு ஒரு கைச்சாத்து.
அதை சாக்கடை சீரமைக்க எடுத்துக் கொள்ளலாம் என்கிறாயா?
தர்மவீர் பிரதானி, உடுப்பி அருகே வராங்க கிராமத்தில் திருக்குளத்து நடுவே அமைந்த நானூறு வருடம் பழைய கேரே பஸ்தியைச் செப்பனிட அந்த மிளகுக்காசை திசை திருப்பி விட்டார்.
அதுவும் வேண்டிய செலவுதானே? வீண் செலவு இல்லையே.
நீங்களே சொல்லுங்கள் அம்மா, சாக்கடை நீரில் மூழ்கி மரணம் ஏற்படுவதைத் தடுப்பதா, தண்ணீர்க் கோவிலைச் செப்பனிடுவதா எது உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம்.
தனித்தனியாகப் பார்க்கும்போது மிகக் கொடிய நடவடிக்கையாகத் தெரியலாம். பிள்ளைகளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளாமல் சாக்கடைக்கு பலி கொடுப்பது பெற்றோரின் அசட்டை காரணமன்றோ என்று இன்னொரு வகையில் பார்த்து வாதாடலாம் பரன்.
இது ஒரே ஒரு சாக்கடை அடைப்பு. ஒரு மரணம். ஒரு பஸதி செப்பனிட அவசியம். ஒரு மிளகு விற்ற வரவு. இதுபோல் எத்தனை உண்டென்று அனுமதி கொடுத்தால் கணக்கு சொல்வேன் அம்மா.
செலவுகள் இந்த ஆண்டு கூடியுள்ளனவே.
இந்தச் செலவுகளில் கோவில் கட்டுகிற செலவு தவிர மற்றவை எப்போதும் வரும் இனம் தான்.
இந்த ஆண்டு கோவில் செலவு மிளகு வரவை எல்லாம் விழுங்கி விட்டது. இது இன்னும் நீள வேணுமா? தீர்வு என்னவாக இருக்கும்? இதற்கெல்லாம் தீர்வு மகாராணி திருமனசு தான் எடுக்க வேண்டும். நான் தவறாக ஏதாவது பேசியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
.
நீளமாகப் பேசி நிறுத்தியது பெருமழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. தடாரென்று சென்னபைரதேவி காலில் விழுந்து வணங்கினான் அந்தக் கருவூல அதிகாரி. பிரமித்துப்போய் இருந்த சென்னபைரதேவி, அவனைக் கைகொடுத்து எழுப்பினாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
Lisbon, the Capital of Portugal
October 3, 2021
மிளகு பெருநாவல் பிரவாகத்தில் இருந்து – Thus schemes the gorgeous Rohini
யூத நண்பர்களிடம் கொடுத்து வைத்த தங்கத்தில் கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டு இந்துஸ்தானம் திரும்ப, நானே எதிர்பாராத விஷயமாக ராஜகுமாரர் நேமிநாதனின் நட்பு கிடைத்தது.
லிஸ்பன் பணக்காரர்கள் போல் பணம் ஆனால் அவர்கள் வயசில் பாதி மட்டுமான இளமை. என்னை விடவும் ஐந்து வயது சின்னவன் நேமிநாதன்.
என்றால் என்ன? என்மீது காமம் மீதுர நான் வலையை விரிக்காமல் அவனே எடுத்து விரித்து தலைகுப்புற சந்தோஷமாக வீழ்ந்தான்.
ரோஜா அத்தரில் நீராடி வந்த முதல் ராத்திரி அது. ரோஜா நறுமணம் என்று அவன் கண்மூடி ரசிக்க, நான் கனகவல்லி அல்ல என்றேன். புரியாமலேயே சிரித்தான் அந்தச் சிறுவன். இப்போதும் அவன் சிறுவன் தான். நான் சொன்னால் அவன் செய்வான். நான் சொல்லாதவரை கைகட்டி வாய்பொத்தி ரோஜாவாடை பிடித்து நிற்பான்.
நான் அளிக்கும் ஊமத்தம்பூ ரச மது என் வாயில் ஊறி இதழ்களில் வழங்கப்படுவது. அவன் மனைவி ரஞ்சனாதேவியைப் பிரிந்தான். மிளகுராணி என்ற சென்னபைரதேவியின் மாற்றாந்தாய்ப் பிரியத்தைப் பிரிந்தான்.
எல்லாம் எதற்கு? அவன் அடுத்த அரசராக வேண்டும். அவனுடைய ராணி நானாக வேண்டும். ரஞ்சனா தேவி எனக்கு எச்சில் படிக்கம் ஏந்தி இரவு முழுவதும் நிற்க வேண்டும். மிளகுராணிக்கு கண்ணாடிக் கத்தியோ பனிக்கத்தியோ காத்திருக்கிறது.
நேமிநாதன் தலையாட்டி பொம்மையாக எனக்குக் கிடைத்தது நல்லதாகப் போயிற்று. நான் மிளகுராணியைப் பதவி இறக்கச் செலவழிக்க.
ஒரு சிவராத்திரி இரவில் பாங்க் என்ற அரிசி மது கண்மண் தெரியாமல் பருகி கலந்தபோது என் அருமை மகன் மஞ்சுநாத் உருவானான்.
நேமிநாதனை எத்தனை மிரட்டினாலும் கட்டளையிட்டாலும், எல்லாப்பூவும் என்னில் வாசம் அடிக்க கிறுகிறுக்க வைத்தாலும் நேமிநாதனால் மஞ்சுநாத்தை மகனாகக் கண்டு அன்பு செலுத்த முடியவில்லை.
மஞ்சுநாத்தை விரட்டி அடிக்கலாம் தெருப் பொறுக்க என்று ஒரு நாள் என் பெற்ற வயிறு கலங்க யோசனை சொல்வான். அவன் மேலும் கண்ணாடிக் கத்தி எறியச் சொல்வான் ஈவிரக்கமே இல்லாமல். அவனை இருட்டறையில் சதா பூட்டி வைத்து உணவு இல்லாமல் பட்டினி போட்டு குடிக்கத் தண்ணீரும் தராமல் வைத்திருக்கச் சொல்வான் இகழ்ச்சியோடு.
இந்த சித்திரவதை எல்லாம் அந்தப் பச்சைக் குழந்தை மேல் பிரயோகிக்க எப்படி மனம் வருமோ. என்னை விட கிராதகன் நேமிநாதன். மென்மையான பேச்சும், கௌரவம் மிகுந்த இடைகலந்து பழகுதலும் எல்லாம் பொய். இந்த ராட்சசன் தான் நேமிநாதன். அவனை அரசராக்க நான் பாடுபடுவது என் தலைவிதி.
அவன் அரசனானதும். நான் மகாராணி ஆவேன். அடுத்து அவனையும் ஒழித்துக்கட்டுவேன்.
என் லியனார்டோவுக்கு ஊமத்தைப் பொடி கலந்த மது கொடுத்து கிறுக்கனாக்கிக் கொன்ற மிளகுராணி குடும்பம் சீரழிந்து போகட்டும்.
நேமிநாதனை நேசமான புன்னகையும், சிருங்கார சேஷ்டைகளுமாக என் தோளடி வியர்வையை முகர்ந்து மயங்க வைத்து எல்லாம் முடிப்பேன்.
நேமிநாதன் எனக்கு வழியில் கிடைத்த பொன் தனம் என்றால், பரமன் எனக்கு அதே வழியில் கிடைத்த வைர வைடூர்யப் பொதி. அவன் அவர் என்னை விட பத்து இருபது முப்பது வயது மூத்தவராக இருக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும்.
ஊமத்தைச் சாறு பருகாமலேயே விமானம் எதிர்காலம், பம்பாய், மதறாஸ், நாக்பூர் என்று ஏதோ சதா பிதற்றிக் கொண்டிருக்கிறார் பரமன். நல்ல சமையல்காரர். மஞ்சுநாதனுக்கு நல்ல விளையாட்டுத் தோழன்.
நேமிநாதன் சொன்னபடி அந்த அரைக்கிறுக்கன் பரமனை நான் கல்யாணம் செய்து கொண்டு, நேமியோடு படுத்து அந்தத் திருமணத்தைக் கொண்டாடியாகி விட்டது. அது மட்டுமில்லை, பரமனின் பிள்ளைதான் மஞ்சுநாத் என்று ஊரெல்லாம் சொல்லியாகி விட்டது. நம்பினவர்கள் நம்பட்டும். நேமிநாதனுக்கு பரம திருப்தி. பரமன் கொடுத்த திருப்தி.
பரமனுக்கு ஆப்பிரிக்க மந்திரவாதி மூலம் காலத்தில் முன்னால் போக ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று வாக்குக் கொடுத்தாகி விட்டது. பரமன் சொன்ன கிறுக்குப்பேச்சு எல்லாம் நம்புவதாக நடித்து, அவன் மனதில் மஞ்சுநாத் மூலம் பச்சாதாபத்தையும் கிளப்பி விட்டு கல்யாணமும் முடிச்சாச்சு.
சீக்கிரம் நேமிநாதனை விட்டுத் தொலைத்து நான் ஏகசக்ரவர்த்தினி ஆகும்போது பரமனையும் கிறுக்கர்களுக்குச் செய்யும் கல்லெறி, சாணிப்பால் குடித்தல் உபசாரங்கள் நடத்தி நக்னனாக்கித் துரத்தி விடவேண்டியதுதான்.
October 2, 2021
மிளகு பெரு நாவலில் இருந்து Amelie trapped in a lift as power tripped in London
இருட்டு அச்சமூட்டுவதாக என்னைச் சுற்றிச் சூழ்ந்து விழுங்க வருவதாக பிரமை. நான் ஓவென்று அழுதேன். லிப்ட் கதவுகளை தடதடவென்று அடித்தேன். இல்லை, யாருக்கும் கேட்காது. மின்சாரம் எப்போது வருமோ அப்போது தான் மற்றவர்கள் கவனத்துக்கு நான் வருவேன். அதுவரை?
எப்போது அது நிகழலாம்? யாருக்குத் தெரியும்? மருதுவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் என்ன? நேரம் பார்த்தேன் என் மொபைலில். சாயந்திரம் ஆறரை மணி.
பாளம் பாளமாக சூழும் இரவு எங்கோ நாயோ பூனையோ கழிந்த வாடையோடு வந்து சேர்ந்திருக்கிறது.
மருது அழைப்புக்கு அவசரமாக பதில் சொன்னான். லண்டன் முழுக்க மின்சாரம் நின்று போயுள்ளது. மருதுவின் மொபைல் ஃபோன் சார்ஜ் கிட்டத்தட்ட வடிந்து போய்விட்டது. அவன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கோவண்ட் தோட்டம் பாதாள ரயில் நிலையம் கடந்து போன ரயில் வண்டியில் சுரங்கப் பாதைக்குள் அகப்பட்டிருக்கிறான்.
அமி, சத்தம் போடு. யாராவது கேட்கலாம்.
மருது குரல் தேய்ந்து மறைய என் இருப்பின் பயமூட்டும் தன்மை முழுவதாக என்னைத் தாக்கியது. இந்த மின்சாரக் கூண்டில் இருந்து நான் வெளியே வரப் போவதில்லை. சராசரி ஐரோப்பியப் பெண் போல் இரண்டு மடங்கு உடல் கனமும் ஆறடி உயரமுமாக லிப்டில் அப்படி இப்படி திரும்பி நிற்க முடியாமல் நான் இந்திய ஆனை போல் நிற்கிறேன்.
அறைக்குள் இருக்கும் ஆனை வர்த்தக உரையாடலில் வரும் – பிரத்தியட்சமாகத் தெரியும் நிஜ நிலவரத்தைக் கவனியாமல் வேறு ஏதாவது அற்ப விஷயம் குறித்து சர்ச்சை செய்வது போன்றதைச் சொல்ல ஆனை அறைக்குள் வரும். ஏற்கனவே வந்திருக்கும். நான் லிப்டில் மாட்டிய ஆனை. என்னை நானே பாடி ஷேமிங்க் body shaming செய்து கொள்கிறேன்.
வியர்வை பெருகி உடல் நாற ஆரம்பித்துள்ளது எனக்கே தெரிகிறது. ஹலோ ஹலோ என்று லிஃப்ட் கதவில் கையைக் குவித்துக் குத்தியபடி தரையில் சரிந்தேன்.
விழிப்பு வந்தபோது லிப்ட் கதவு திறந்து மருதுவும் இன்னும் யாரோ எல்லாமும் என்னை லிப்ட் உள்ளே இருந்து வெளியே கொண்டு வர முயல்வது புரிந்தது.
மருதுவின் கைகள் என் தொடையை இறுகப் பிடித்து இருக்க என் மார்பை அவன் நெஞ்சில் சாய்த்தபடி மெல்லப் பின்வாங்கினான் அவன்.
மெழுகுவர்த்தி அமர்த்திய புகை சூழ்ந்த லிப்ட்டில் மங்கலாக மின்சார விளக்கு எரிய நான் வெளியே வந்தேன். மருது கூட இருந்த அபார்ட்மெண்டின் துப்புரவு நிர்வாகி கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு லிப்ட்டை கீழே எடுத்துப் போக பொத்தான் அழுத்த நானும் மருதுவும் ஃப்ளாட்டுக்கு உள்ளே வந்தோம்.
அவன் என்னை அவனுடைய கட்டிலுக்கு உந்திப் போனான். அசதியோடு நான் படுத்தேன். தேங்காய்ப்பூ துவாலை கொண்டு என் உடலில் இருந்து ஆறாகப் பெருகிய வியர்வையைத் துடைத்துக்கொண்டிருக்க, மறுபடி மின்சாரம் நின்றுபோனது.
துணை விட்டுப் போய்விடலாம் என்ற பயம் மேலெழ மருதுவை நான் இறுகத்தழுவி கட்டிலில் சரிக்க, அவன் என் மேல் படர்ந்தது தான் தெரியும். நேரம் போனதே தெரியாமல் இருட்டில் ஒரு நீண்ட கலவி.
எந்த இருளையும் எந்த பயத்தையும் நான் சமாளிப்பேன் என்று உடல் பரவசத்தோடு மனதிடம் சொல்ல கும்மாளி கொட்டி ஆடியது மனம். வயதும் உருவமும் உறவும் இனமும் நேரமும் காலமும் சூழலும் வேறு எதுவும் பாதிக்காத இரண்டு மனங்கள் முழுக்க இயக்கும் உடல்கள் சேர்ந்திருந்த நேரம் அது.
நாங்கள் ஓய்ந்து கிடக்க, மின்சாரம் வந்தது. என் அன்பு முசாபரின் நினைவும் வந்தது.
Railroad, steamboat, river and canal
Yonder comes a sucker,
And he’s got my girl
And she’s gone, gone, gone
And she’s gone, gone, gone
என்று ஜிம் ரீவ்ஸின் குரலைப் பகர்த்தி எடுத்துப் பாடிக்கொண்டு கடந்து போனதைத் தவிர அவன் வேறேதும் செய்யவில்லை.
Pic Night in London when power tripped
Ack bbc.com
பெருநாவல் மிளகு – Ramblings of Rohini of Lisbon
நாதா, எடோ நேமிநாதா.
இந்த அழைப்பு அவனை இன்னும் காமாந்தகாரனாகி என் முழு அடிமையுமாக்கி ரசவாதம் புரிகிறது. எஜமானி என்று என் பாதங்களை முத்தமிட்டு அவன் சிரசில் வைத்துக்கொள்ள நான் உபசாரம் எல்லாம் பெற்றுக்கொண்டபடி உபதேசம் நல்கினேன் இப்படி-
பில்ஜி அரசர் திம்மையராஜு உன்னை விட ஐந்து வயது பெரியவன். என்னைப் போல். அவனை சந்திக்க என்ன கொண்டு போகப் போகிறாய்?
அப்பாவியாக நான் நேமிநாதனின் விரல்களைச் சொடுக்கியபடி கேட்டேன்.
என்ன எடுத்துப் போவார்களாம்? பழம். இனிப்பு. வைரமும் தங்கமுமாக வார்த்தெடுத்த கிருஷ்ண பிரதிமை.
மடையா இதை வைத்துக்கொண்டா ஆட்சி மாற்றம் கொண்டு வரக் கூடிய முக்கியமான அரசியல் சந்திப்பை நடத்தப் போகிறாய் என்று அவன் தலையில் உதைத்தேன். அவன் என் பாதங்களைக் கொண்டு தன் கண் இமைகளை மூடி அவற்றை முத்தமிட்டான்.
இந்த ரீதியில் புத்தி போதனை செய்து கொண்டிருந்தால் இன்னும் இரண்டு நாள் அறுபத்து மூன்று கரணமும் அரங்கேறிக் கழியுமே தவிர உருப்படியாக போதனை ஏதும் நடக்காது.
நேமி நாதருக்குத் தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். இந்த வார்த்தை சொல்லுதல் முற்றிலும் வேறு வகைப்பட்டது. உங்களுக்குத் தெரியாதா
உங்களுக்குத் தெரியாதா என்று முன்னொட்டு வைத்து அவனுக்குத் தெரியாத ராஜதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டும் முறை. மடியில் போட்டுக்கொண்டு புகட்டலாம். மடியை பிடித்தவன் இறங்காமல் அடியைப் பிடியடா பரத பட்டா என்று கைகள் ஊர்ந்து அப்புறம் போதனை திசை திரிந்து போய்விடும்.
ஆக நான் சொல்ல விரும்பியது அவன் பில்ஜி அரசர் திம்மராஜுவை சந்திக்கப் போகும்போது பழமும், தேங்காயும், இனிப்பும், விக்ரகமும் அன்பளிப்பாக எடுத்துப் போகலாம். கூடவே ரஞ்சனாதேவியும் வர முடியுமானால், வேறே எதுவும் சொல்ல வேண்டாம் எந்த மாதிரிப் பேசவும் நடக்கவும் தேவையில்லை.
வீட்டு விசேஷத்துக்கு கணவன் மனைவியாக அடுத்த ஊர்ப் பிரமுகரை அழைக்க வந்தவர்களாக இரண்டு பேரும் போகணும் என்றேன். அவன் உடனே சொன்னது – அவள் என்னோடு பேசுவது கூட அபூர்வமாகி விட்டது. என்னோடு நீ வாயேன் நீ கூட இருந்தால் முகலாய சக்கரவர்த்தி அக்பர் முகல் எ ஆஸம் அவர்களைக்கூட தைரியமாகச் சந்தித்து சலாம் வைத்து வீட்டில் சத்தியநாராயணா பூஜைக்கு வருக என்று அழைத்துத் திரும்புவேன்.
அக்பர் எதற்கு சத்யநாராயண பூஜைக்கு? நான் சிரிக்கும் போதே பில்ஜி திம்மராஜுவுக்கான திட்டம் மனதில் உருவானது. ரஞ்சனா தேவியும் வேறு வேசி எவளும் போக வேண்டாம். மிளகு ராணியோடு நேமிநாதன் பிணங்கித் தனியாகப் பிரிந்து போனது அரண்மனை ரகசியமும் இல்லை அங்காடி பரஸ்யமும் முழுக்க இல்லை.
October 1, 2021
மிளகு பெருநாவலில் இருந்து – Delving deep into the inner self of Nemi Nathan – a few excerpts
ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன்.
அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும் அழகுமில்லை.
சற்றே பனிச் சிதறலை சந்தனப் பதுமை மேல் சீராக உடல் முழுதும் பூசினாற்போல கனம் கொண்ட ஆகிருதி. கண்ணில் மின்னும் சிரிப்பைக் கொண்டே நலம் விசாரித்து, என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டு, உன்னால் முடியாது என்று புறம் தள்ளி, முடியும் என்று மெய்ப்பிக்கும் வினாடி பிரமாதம் என்று பாராட்டி, அப்புறம் என்ன செய்யப் போகிறாய் என்று அழைத்து, ஓடத் தயாராக இருப்பதாக பொய்ப் பயம் காட்டி, திரும்ப அணைப்பில் வர நாணி, உதடு பிரியாமல், கண் இமை பிரிந்து சிரிக்கும் ரோகிணியை முதலில் சந்தித்ததும் ஒரே வருத்தம் தான். இந்த அழகை இவ்வளவு நாள் எப்படிச் சந்திக்காமல் போனேன்!
அவளே நானும் நானே அவளுமாக சில நாட்கள் பிரிய, ரஞ்சனா சங்கதி தெரிந்து ரோகிணியை நேரே ஹொன்னாவரில் ரோகிணியின் இனிப்பு அங்காடிக்கே போய்க் கண்டித்து விட்டு வந்தாளென்று ரோகிணியும் சொல்லவில்லை, ரஞ்சனாவும் சொல்லவில்லை.
என் தாயார் மிளகு மகாராணியார் என்னைக் கண்டிக்கக் கூப்பிட்டு விட்டு நான் போகாததால், எப்போது நான் மிர்ஜான் கோட்டையில் என் இல்லத்துக்கு வந்தேனோ அப்போது தானே நேரில் வந்துவிட்டார். அவர் வழக்கமான மென்மையான குரலில் நலம் விசாரித்து விட்டு விஷயத்துக்கு வந்து விட்டார்.
நேமி, நீ அரசாங்க குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் வருந்துகிறேன். என்னோடு காலையுணவுக்கு வர மாட்டேன் என்று என்னைத் தவிர்த்தால் துயரமடைகிறேன். ஆனால், ரஞ்சனாவை புறக்கணித்து ஹொன்னாவரிலும் ஜெரஸோப்பாவிலும் மிட்டாய் அங்காடி நடத்தும் விதவையும் பேரிளம்பெண்ணும் பாதி போர்த்துகீச இரத்தமும் மீதி கொங்கணி குருதியும் ஓடும் பெண்ணோடு கண்மண் தெரியாக் காமத்தில் வீழ்ந்துகிடப்பதைக் கேட்டு கோபமடைகிறேன். இதற்காக உன்னை ஒரு அம்மா என்ற தகுதியில், நீ எனக்கு அந்தத் தகுதியை அளித்தாலும் இல்லாவிட்டாலும் நான் உரிமையோடு எடுத்துக்கொண்டு, தவறு செய்யும் மகனை அடித்துக் கேட்கும் தாயாக இருந்தால் என்ன என்று யோசிக்கிறேன். இது உன் அந்தரங்கம். என்றாலும் இதனால் ஜரஸோப்பா நிலப்பரப்பின், மிர்ஜான் கோட்டையின் பாதுகாப்பில் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற நிலை உருவானால், கண்டிப்பான நடவடிக்கை உன் மேல் எடுக்கத் தயங்க மாட்டேன். ரஞ்சனாவுக்கு நீ இழைக்கும் துரோகம் தவறு என்று உன்னிடம் உரிமையோடு சொல்கிறேன். வேண்டாம், கூடா நட்பு மட்டுமில்லை, தவறான காமமும் கெடுதிதான்.
இப்படியும் இன்னும் நிறைய இதே தொனியிலும் பேசினார் மிளகுராணி. நான் புன்சிரிப்பு சிரித்தும் முகத்தை சிரத்தையாகக் கேட்பதாக வைத்தும் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவர் திரும்பும்போது ஜெய் மகா காளி சென்று வாருங்கள் என்றேன். இந்த விளி புதிதாக உள்ளதே, நீ குருதி பூஜை செய்யும் கூட்டத்தோடு இருக்கிறாயா என்று கேட்டார் சென்னா ராணி. ஏன் உங்கள் ரகசியத் தகவல் சேகரிப்பு துறை இதை உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே என்று குறும்பாகக் கேட்டேன். நீ குழுவில் உண்டா என்றா இல்லை என்றா? அவர் குரலை சற்றே உயர்த்திச் சொன்னார். நான் புன்னகையே பதிலாக விடைகொடுத்தேன்.
இது போன மாதம் பௌர்ணமியன்று நடந்தது. அன்றைக்கு நான் ஹொன்னாவர் போகவில்லை. ரஞ்சனாவுக்கு ஒரு பிரப்பந்தட்டு நிறைய மல்லிகைப் பூ கொண்டு வரச் சொல்லியிருந்தேன். சிருங்காரத்தைத் தூண்டி அடிமட்ட விலங்கு உணர்ச்சியை மேலே எழுப்பிக் கொண்டு வந்து இரவு அதிகம் பூடகமான பின்புலம் ஏற்றிக் கொடுக்க இணை விழையும் அமைதியும் குளிருமான பொழுது அது. அந்த ராத்திரியில் ரஞ்சனா எனக்கு எனக்கு மட்டுமேயான ரதிதேவியாகி இருந்தாள். அன்றைய உறவு நிதானமாகக் கடந்து போக வீட்டு மாடிக்கு அவளைக் கூட்டிப் போய் பௌர்ணமிச் சந்திரன் பார்க்க இன்னொரு தடவை கூடினோம்.
அடுத்த நாள் ரோகிணியிடம் இதைச் சொல்ல, என்னோடும் அதேபடிக்கு இப்போதே விளையாடுங்கள் என்று நச்சரித்தாள். பௌர்ணமிக்கு நான் எங்கே போவேன்? ஆனால் அப்புறம் ரோகிணியோடு தான் அமாவாசையும் பௌர்ணமியும். அவள் தான் ரஞ்சனாவை, அவள் அழகை முதலீடு செய்யலாம் என்று யோசனை சொன்னவள்.
அதற்கு முன் இன்னும் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டும். என்னை முதலில் ராஜகுமாரர் என்று அழைத்தவள் ரோகிணி தான். சந்திரனில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் அவளுடைய முதல் கணவன் மாதிரி ஒரு பார்வைக்கு இருந்ததாகச் சொல்லி போகம் முந்தாமல் பார்த்துக் கொண்டாள் அந்தச் சிறுக்கி.
போர்த்துகல்கார ஐரோப்பியனான அவன் ஜெர்ஸுப்பாவோடு கப்பலில் வந்த போர்த்துகல் வீரர்கள் மோதாமல் தோற்ற சிறு யுத்தத்தில் இறந்து போனானாம். ஊமத்தை யுத்தம் என்ற அந்த யுத்தம் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன். அவனை ராஜா என்று நகைச்சுவையாகக் கூப்பிடுவாளாம் ரோகிணி. என்னை உண்மையாகவே அப்படி அழைப்பதாகச் சொல்லி மனதை மகிழ்வித்தாள் அவள்.
நான் உங்களை ராஜா என்று அழைத்த நல்ல வேளை நீங்கள் ஜெரஸோப்பா அரசராகப் போகிறீர்கள் என்று பூடகமாகச் சொன்னாள்.
pic Lisbon
ack theguardian.com
September 30, 2021
மிளகு பெருநாவல் – from the chapter I, Rohini – excerpt from Rohini’s soliloquy
நான் ரோகிணி.
நான் எல்லா மதப் பண்டிகைகளையும் இனிப்பு அங்காடியில் கொண்டாடுகிறேன். அங்கே வேலை பார்க்கிற யார் என்ன மதம் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை.
அது அவர்கள் சொந்த விஷயம். தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தெரியாததால் ஏதும் குறை வரவும் வாய்ப்பில்லை. மதம் இனிப்பு அங்காடியில் வேலை பார்ப்பதில்லை. ஆனால் எல்லாக் கொண்டாட்டத்த்திலும் ஏதாவது ஒரு மதம் மகிழ்ச்சியோடு பங்கு பெறுகிறது. அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் அங்காடியின் படி இறங்கிப் போய்விடுகிறது. அடுத்த கொண்டாட்டத்துக்கு இன்னொரு மதம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது.
இத்தனையும் சொல்லி என்னை நான் நிலையுறுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நான் லிஸ்பனில் போர்த்துகல்காரி அம்மாவுக்கும், இந்தியத் தமிழ் தகப்பனுக்கும் பிறந்தவள் என்பதால் இரண்டு பக்கமும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அப்பா இறந்து போய் அம்மாவின் கவனிப்பில் வளர்ந்தேன். அவளை கவனிக்க ஏழெட்டு புருஷன்மார் உண்டு என்பதால் வளர்ச்சி எந்த திசையில் போயிருக்கும் என்று ஊகிக்கலாம். என் பதினெட்டு வயதில் என் கணவர், முதல் கணவர், பத்தாவது இணை அந்த லியனார்டோ. மாதாகோவிலில் கல்யாணம் நடத்த பிஷப் ஒத்துக்கொள்ளாததால் சர்ச்சுக்கு வெளியே நாங்கள் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டோம்.
அம்மா வீட்டுக்கு வரவேண்டாம் என்று மென்மையாகத் தெரிவித்து விட்டு தன் ஆசைநாயகனோடு உறவு தொடரப் படுக்கையை சித்தமாக்கிக் கொண்டிருந்தாள். நானும் லியனார்டோவும் கொஞ்சநாள் லிஸ்பன் யாத்ரிகர் விடுதியில் தங்கியிருந்தோம். நல்ல வேளை அவனுக்கு ராணுவத்தில் குதிரைப்படையில் உத்தியோகம் கிடைத்தது. எங்கள் விருப்பப்படி சிறிய அழகான ஒரு இல்லத்துக்குக் குடிபுகுந்தோம்.
முதல் வருடம் முழுவதும் ராணுவத்துக்கு எந்தப் போரும் இல்லாத காலம் என்பதால், வேளாவேளைக்கு சாப்பிட, சாயந்திரம் கவாத்து பழக, ராத்திரி களித்து உறங்காமல் உறங்கி உறவு கொண்டு நாட்கள் பறந்தன. அப்போது தான் ஊமத்தை யுத்தம் இந்துஸ்தானத்தில் அதுவும் கோவா துறைமுகத்தில் தொடங்கியது. ராணுவ வீரனாக லியனார்டோ இந்துஸ்தானம் போயிருந்த நேரம் அது. ஊமத்தை யுத்தம் கேட்டிருக்கிறீர்கள் தானே?
மதுசாலைக் காரர்களும், இந்துஸ்தான அரசாங்கமும் கணிகையரும் ஒன்று சேர்ந்து போர்த்துகல் ராணுவ வீரர்கள் அருந்திய மதுவில் கொடிய ஊமத்தைச் சாற்றைக் கலந்து குடிக்கத்தர, அதை குடித்து புத்தி கெட்டு ராணுவ வீரர்கள் இந்துஸ்தான வீதிகளில் பைத்தியமாகத் திரிய வைத்து போர் தொடங்கும் முன்பே தோற்றுப்போகச் செய்த ஏற்பாடு அது.
எப்படியோ திட்டம் வெளியேவர நூற்றுக்கணக்கான போர்த்துகல் வீரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். அவர்களில் லியனார்டோவும் ஒருவன். லிஸ்பன் துறைமுகத்தில் திரும்பி வந்த இருபத்தாறு ராணுவ வீரர்களை வரவேற்றுப் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில ஆண்களும் குழுமி இருந்த சாயங்காலம் அது. நானும் கண்ணில் கண்ணீர் திரைபோட நின்றிருந்தேன். இந்துஸ்தானம் போய்த் திரும்ப அவர்களுக்கு நான்கு மாதம் தான் பிடித்தது. மற்றவர்களை விட பலகீனமாக, கண்கள் அலைபாய்ந்து சூனியத்தில் வெறிக்க, வாயில் எச்சில் தன்னிச்சையாக ஒழுக, ஈர்க்குச்சி மனுஷன் போல தலைமுடி கொட்டிப் போய் தொளதொளத்த, கசங்கி அழுக்கான ராணுவ உடுப்போடு என்னைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தான் லியனார்டோ.
வீட்டுக்கு சாரட் வண்டி பேசிப் போய்ச் சேருவதற்குள் என் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டான் பலகீனம் காரணமோ என்னமோ. ராத்திரி ஏழு மணிக்கு அவனோடு இருந்து அனுபவித்து உண்ண வேண்டிய ராச்சாப்பாடு நடுராத்திரிக்கு குளிர்ந்திருக்க,ரெண்டு பேரும் சாப்பிட்டோம். அப்போது தான் அவன் சொன்னான் – எல்லோருக்கும் விரல் நகக்கண் அளவு கூட ஊமத்தைப் பொடி மதுவில் கலந்து ஹொன்னாவர் தேவடியாள்கள் கொடுக்க, ஊரிலேயே மகாபிரசித்தமான கணிகையான கனகவல்லி விரித்த வலையில் விழுந்தானாம் லியனார்டோ. இவன் படைத்தலைவன் என்று வேறு அவள் கவனத்தை ஈர்க்கச் சொல்லி வைத்திருந்திருக்கிறான். உடுப்பு களைந்து லியனார்டோவை மடியில் சாய்த்து குடி குடி என்று அவனுக்கு அந்தப் பெண்பிள்ளை கொடுத்த ஊமத்தைப் பொடி கலந்த ஒயின் அதிகம். மிக அதிகம்.
அவள் மேல் சதா மல்லிகைப்பூ வாடை லகரி ஏற்றியதாக லியனார்டோ மறக்காமல் குறிப்பிட்டான். மற்றவர்கள் எல்லாம் ஊமத்தைப் பொடி விளைவித்த கிறுக்கு கொஞ்சமானதால் உதிர்ந்து விட, நிரந்தர நோயாளியாக எதற்கும் லாயக்கற்றவனாக வந்திருக்கிறான் என் லியனார்டோ. அப்படியே ஒரு மாதத்தில் அவன் இறந்தும் போனான்.
படம் லிஸ்பன் மாநகரம்
நன்றி lonelyplanet.com
September 29, 2021
மிளகு பெருநாவலும், Zero Time Space-ம், Quantum Tunnelling-ம், Commodity Derivatives – Options Trading-ம்
நவம்பரில் அநேகமாக மிளகு பெருநாவல் பிரசுரிக்கத் தயாராக இருக்கும்.
மிளகு ஒரு சௌகரியத்துக்காக வரலாற்று நாவல் tag கொண்டுள்ளது.
1565-ம் ஆண்டு தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோல்வி கண்ட பிறகு வடக்கு கர்நாடகத்தில் ஹொன்னாவர், ஜெருஸோப்பா, உள்ளால் என்று மிளகு உற்பத்தியில் உலக அளவில் முக்கியத்துவம் வகித்த குறுநில ஆட்சியமைப்புகள் மகத்தான பொருளாதார வளர்ச்சி கண்ட காலகட்டத்தை, மிளகுராணி சென்னபைரதேவியின் காலத்தைச் சித்தரிக்கிறது மிளகு என்பது பகுதி உண்மைதான்.
யா.பெரல்மான். ஏ ஐ கிட்டகொரடஸ்கி போன்ற பெயர்பெற்ற இயற்பியல் எழுத்தாளர்களின் நூல்களான பொழுதுபோக்கு பௌதிகம், எல்லோருக்கும் பௌதிகம் போன்றவை வந்து போகும் கதைவெளி மிளகுக்கு உண்டு.
Zero Space Time, Quantum Tunnelling போன்ற கோட்பாடுகளும் பெருநாவலுக்கு இடையே சுவாரசியமாகச் சொல்லப்பட்டுக் கடந்து போகும்.
பங்குச் சந்தையில் Derivatives – Commodities Options Trading நாவலில் அங்கங்கே வந்து போகும்.
மிளகு நாவலில் இருந்து தினசரி வெளியிடப்படும் சிறு பகுதிகள் இதைக் காட்டும்.
சொல்வனம் இணைய இதழில் மிளகு முழு அத்தியாயங்களாக வெளியிடப்படுகிறது. முதல் ஆறு அத்தியாயங்கள் இதுவரை வெளியாகியுல்லன.
ஒளிவனம் சேனலில் யூடியூப்பிலும், ஒலிவனமாக ஸ்பாடிஃபை, சவுண்ட்க்ளவுட், ஆன்கர் எஃப் எம் தளங்களிலும் மிளகு நாவல் ஒலி உருவில் கேட்கக் கிடைக்கிறது.
எதை எழுதினாலும் எளிதாகப் படிக்கக் கூடியதாக, சுவாரசியமானதாக இருக்க வேண்டும் என்பதில் நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து தீர்மானமாக இருக்கிறேன். மிளகு நாவலும் அந்த வாசக அனுபவத்தை வழங்கத் தவறாது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

