இரா. முருகன்'s Blog, page 65
October 31, 2021
பெருநாவல் ‘மிளகு’ – “If hungry, eat grass”, they say in Mirjan
Excerpt from novel MILAGU
நாட்டில் வீதி குண்டும் குழியுமா இருக்கு. குடிதண்ணீர்லே சாக்கடை கலக்கறதாலே வயிறு உப்புசம் கண்டு சிலபேர் கைலாச யாத்திரை. ராத்திரி தெருவிலே ஏத்தி வைக்க விளக்கு கிடையாது. அதுக்கெல்லாம் யார் கவலைப் படறா? மிளகு விளைஞ்சா போதும். அரிசி இல்லேன்னா மிளகைப் பொங்கித் தின்னுன்னு விவஸ்தையில்லாமே ஆலோசனை சொல்றாளாம்.
ஆமா, போன வாரம் கோகர்ணத்துலே ஒரு தெலுங்கனும், துளுவனும் அவா அவா குடும்பத்தோட கோட்டைக்கு வந்து அங்கே வளர்ந்திருக்கற புல்லைத் தின்ன ஆரம்பிச்சு ஏக களேபரமாயிடுத்தாம்.
ராணி ஹொன்னாவர் பஸ்தி தரை எப்படி போட்டிருக்குன்னு சோதனை செய்யறதிலே மும்முரமா இருக்க, இவா சத்தம் இங்கே. யார் காதுலே அது விழணுமோ அவா காதுலே விழல்லே.
நஞ்சுண்டய்யா பிரதானி அவராத்தானோ ராணி சொல்லியோ, அப்புறம் கோட்டை போஜனசாலையிலே இருந்து ஆளுக்கு ஒரு மூட்டை அரிசியும், உப்பு, மிளகு, பருப்பும் கொடுத்து அனுப்பிச்சாராம்.
பாத்துண்டே இரும், ஒரு நாள் இல்லே ஒரு நாள் இன்னும் நூறு பேர் இப்படி குடும்பம் குடும்பமா புல்லு தின்ன வந்து கோட்டைக்குள்ளே உக்காந்துடுவா. அப்போ அரிசி கிடைக்காது அவாளுக்கு. பேஷா இந்த பிரதேசத்துலே எங்கே இருக்கோ புல்லு எல்லாத்தையும் சாப்பிட்டுக்க வேண்டியது அது தீர்ந்து மொட்டையாப் போனா, உள்ளே வந்து தோட்டத்திலே மல்லிகைக் கொடி, ரோசா பூச்செடி, அவரைக் கொடி, வேப்ப மரம்னு விதம்விதமா சாப்பிட்டு போங்கோன்னு சொன்னாலும் சொல்லிடுவா.
என்ன தான் சொல்லும் ராயரே, முப்பது வருஷம் முந்தி ஜனங்களுக்காக ராஜாங்கம்னு சொல்லி முடி சூட்டிண்டா நம்ம மகாராணி. இப்போ ராஜாங்கம் இல்லே. ஜனங்களும் இங்கே இன்னும் இருக்கறதா, வேறே எங்கேயாவது மூட்டை முடிச்சோட கிளம்பறதான்னு யோஜிக்க ஆரம்பிச்சதா தெரியறது.
அண்ணா அப்புறம் அந்த மிட்டாய்க்கடை ஆமா, அந்த நாத்தம் பிடிச்ச தேவடியா மதுரம் மதுரம் மதுராதிபதேன்னு பண்ணி விக்க புதுசு புதுசாக் கடை திறக்க, பணம் கோட்டையிலே இருந்துதான் முதல் போட்டு வர்றதாம். அந்த ரோகிணி சென்னாவோட ஸ்தூல பிரதிநிதியாம். மிளகு விற்ற காசை வச்சு தித்திப்பு பலகாரம் பண்ணி வித்து ஒரு வராகன் பத்து வராகனாக ராணியும் அந்த மேனாமினுக்கியும் கூட்டுலே பிரிச்செடுத்துப்பாளாம்.
இரு வாயைக் கழுவிட்டு வரேன். அசிங்கமானதெல்லாம் பேசியாச்சு.
பேசியாச்சு அண்ணா, எதுக்கும் குரலை கொஞ்சம் குறைச்சுக்குங்கோ. கோட்டை உத்தியோகஸ்தன் யாரு, கோட்டை மறைமுக உத்தியோகஸ்தன் யாருன்னே தெரியலே.
நான் கோட்டையிலே வேலை பார்க்கலே பட்டரே.
நானும் தான் ராயரே.
வைத்தியன் அப்படீன்னா, மூலிகை எடுத்து வஸ்திரகாயம் பண்ணிண்டு இருப்பான் மத்த பிரதேசத்துலே. ஒழிஞ்ச நேரத்திலே உடம்பு வித்தா உப்பு புளிக்கு ஆகும்கற பழஞ்சொல் இருக்கே, அப்படி இங்கே அவன் ஒழிஞ்ச நேரத்துலே துப்பு துலக்கற ஒற்றனா இருக்கானாம். அவன் பொண்டாட்டி மிங்குவோ சங்குவோ, அவள் மகாராணிக்கு தாதின்னு போடற ஆட்டத்துக்கு அளவே இல்லையாம்.
pic medieval lunch
ack en.wikipedia.org
October 30, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – A chat before midday siesta in Gersoppa 1610 AD
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஒவ்வொரு மனையிலும் இருக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட பிரதி தினமும், காலை ஏழிலிருந்து பிற்பகல் அல்லது சாயந்திரம் வரை காணாமல், முப்பது கல் சுற்றளவில் ஏதாவது கிரஹத்தில் மங்கலமான, அல்லாத சடங்கு நிறைவேற்றித்தரப் போயிருப்பதால், அக்ரஹாரத்தில் ஆண் மூச்சு ஆகக் குறைவாகவே இருக்கும்.
எழுபது வயதில் ஓய்வு பெற்ற சாஸ்திரிகள் கூட குரல் நடுங்காமல் ஸ்பஷ்டமாக எழும் வரை வேதபாடசாலையில் பாடம் நடத்தப் போய் விடுவார்கள் பெரும்பாலும்.
வாரம் ஏழு நாள், மாதத்துக்கு ஒரு சுக்ல பட்சம், ஒரு கிருஷ்ண பட்சம், வருஷம் முன்னூற்று அறுபது நாள் என்று அக்ரஹாரத்து ஆண்கள் பரபரப்பாக இருப்பார்கள்.
அவற்றில் ஒரு நாள் இது.
வழக்கமான ஆண்வாடை இல்லாத அமைதி. அதைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் குரல். தொடர்ந்து சிரிப்பு. ராம ராயர் சொல்கிறார் – அக்ரஹாரம்னா ஆண்வாடை பகல்லே இருக்காதுங்கறதை நாம ரெண்டு பேரும் பொய்யாக்கறோம். கேளுங்கோ சிவராம பட்டரே.
இன்று, ராம ராயர் சீமந்தக் கல்யாணம் ஒன்று, நாமகரணம் என்று இரண்டு நிகழ்ச்சிகளில் பிரதான புரோகிதராக இருந்து நடத்தித்தர வேண்டும். அவருடைய அம்மா வழி தொண்ணூறு வயசு உறவினர் ஒருத்தர் திடீரென்று பிராய முதிர்வால் நாலு நாள் முன் இறந்துபோக, இன்னும் ஒரு வாரத்துக்கு ராம ராயருக்கு தாயாதி தீட்டு.
சிவராம பட்டருக்கு வேறே மாதிரி தீட்டு. கல்யாணம் கழித்து எட்டு வருஷம் கழித்து அவருடைய அகத்துக்காரி பரசுராம விக்ரகம் போல ஒரு சிசுவைப் போனவாரம் பெற்றெடுக்க, சிவராம பட்டர் நாளை நாமகரணம் வரை தீட்டு. எல்லா சிசுவும் கிருஷ்ண விக்ரகம். இந்தக் குழந்தை சிரிக்கவே மாட்டேன் என்கிறதாம். அதனால் பரசுராம விக்ரகமாம்.
ஆக இரண்டு தீட்டு வாத்தியார்களும் காலைப் பசியாறி வாசல் திண்ணையில் உட்கார்ந்து விஸ்தாரமாக வெற்றிலை போட்டு, சகல வம்பையும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வம்பு, தெரு வம்பு, அடுத்த தெரு வம்பு என்று அடுக்கடுக்காக அலசி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் இருவரும்.
ஜெருஸோப்பாவின் விசுவாசமான பிரஜைகள் அவர்கள். சென்னபைரதேவி மிளகு ராணி மேல் மதிப்பும் பிரியமும் வைத்திருக்கிறவர்கள். என்றாலும் இப்போது சென்னா ராஜாங்கத்தில் அலுப்பு தோன்ற ஆரம்பித்திருக்கிறது இரண்டு பேருக்கும்.
அறுபது வயதுக்கு மேலாகி விட்டதே, இன்னும் ராணியாக இருந்தாகணுமா?
சமணனும் சைவனும் புதுசாக வந்த கிறிஸ்துவனும் நாள் முழுக்க சண்டை போட்டுண்டிருக்க இந்தம்மா ஊர் முழுக்க கோவில், ஜைன பஸ்தி என்று கட்டிண்டே போக என்ன அவசியம்?
மிளகு போர்த்துகலுக்கு விற்று வந்த தங்கம் தங்கமான வருமானத்தை எல்லாம் இப்படி கட்டிடம் கட்டி, ஊதாரித்தனமா செலவு செய்யணுமா?
வைதீகர்கள் சாயந்திரம் பம்மிப் பம்மி சாயந்திரங்களில் ஷெராவதி ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் செய்யக் குழுமும்போது தலைநீட்டும் சமாசாரம் தான் இது. இங்கே வீட்டுத் திண்ணையில் கூடுதல் சுதந்திரமாக அலசலாம். அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
ராம ராயர் அடுத்த வெற்றிலையை மடியில் ஈரம் துடைத்து விட்டு உடைத்த பாக்கும் குல்கந்துமாக மேலே வைத்துச் சுருட்டி வாயில் இட்டுக்கொண்டு அந்த தெய்வீக ருசியையும் பேரானந்தத்தையும் ஒரு வினாடி அமைதியாகக் கண்மூடி ரசிக்கிறார். உடனே பேச ஆரம்பிக்கிறார் –
பட்டரே, ஏன் கேக்கறீர், மிந்தி எல்லாம் மிர்ஜான் கோட்டைக்குள்ளே சிவாச்சாரியார்களோ, வைஷ்ணவ, மாத்வ பெரியவாளோ எப்போவாவது வந்திருந்து அகண்டநாம ஜெபம், பஜனை இப்படி ஏதாவது நடத்தி மழை வருதான்னு பார்ப்பா. சில சமயம் வரும், சில சமயம் அடுத்த வாரமோ அடுத்த மாசமோ வரும்.
இப்போ சென்னா மகாராணிக்கு எல்லாமே அவசரம். சங்கராசார்யர் சமகம் சொல்லி பராசக்தி பூஜை பண்ணி உபன்யாசம் செஞ்சா உடனே மழை வரணும். ராமானுஜ தாத்தாசாரியார் சகஸ்ரகோடி நாம அர்ச்சனை பண்ணினா, அடுத்த ஷணம் வெட்டுக்கிளி உபத்ரவம் நீங்கி அதுகள் தாமே சமுத்திரத்திலே விழுந்து ஆத்மஹத்ய பண்ணிக்கணும். பாலிமர் மடத்து மத்வ சுவாமிகள் வந்து ஆசிர்வதிச்ச அடுத்த நிமிஷம் உபரியாக கொட்டற மழை உடனே நிக்கணும். ஜுரம் வந்து படுத்தவா எல்லாருக்கும் உடனே குணமாகணும்.
ஆமா, பொறுமைங்கறதே கிடையாது ராயரே
இதெல்லாம் நடக்கலேன்னா அவாளை நமஸ்கரிச்சு அனுப்பி வச்சுட்டு, அம்மண சாமிகளை உடனே கூப்பிட்டு உட்கார்த்தி அவா தர்மப்படி பூஜிக்கச் சொல்ல வேண்டியது. அவாளோ, பயிர் பண்ணாதே கிருமிக்கு சாப்பாடு கிடைக்காமல் போகும், தலையிலே தண்ணி விட்டுண்டு குளிக்காதே, தலையிலே இருக்கற பேன் எல்லாம் அநியாயமா செத்துப் போகும், ராத்திரியிலே சாப்பிடாத. புழு பூச்சி வயித்துக்கு உள்ளே போய் ஆகாரமாயிடும். கல்லை எடுத்து நாயை அடிக்காதே. கல்லுக்கும் வலிக்கும், நாய்க்கும் வலிக்கும். இப்படி அதிவிசித்திரமாக ஏதாவது சொல்லிட்டு அவா அதிருஷ்டம், ஒரு நிமிஷம் கழிச்சு சடசடன்னு நாலு தூத்தல் போட்டு மழையா வலுத்துடும் ஒரு நாள்.
அந்த நக்னமுனி தான் மழையக் கொண்டு வந்தார்னு அவரைத் தொட்டு கண்ணிலே ஒத்திண்டு ஆனந்த பாஷ்பம், இதெல்லாம் தேவையா?
Pic Medieval Street
Ack en.wikipedia.org
October 29, 2021
This is an excerpt from பெரு நாவல் ’மிளகு’ – A morning in Honnavar Agrahara 1606 AD
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது.
பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம்.
முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர்.
உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு, சின்னக் குழந்தையோடு பெற்றோர் வந்து உட்கார்ந்தால் பத்து நிமிஷத்தில் மங்கலகரமாக நிறைவேறிவிடும் என்று தோன்றலாம். அப்படி இல்லை.
குட்டி வாத்தியாருக்கு, என்றால் சாஸ்திரம் படிக்கும் சாஸ்திரிப் பையனுக்கு, பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். நாள், நட்சத்திரம், திதி இவற்றோடு, ’ஆத்துக்காரி ஆத்துலே இருக்க மாட்டா’, என்றால் மாதவிலக்கு நாட்கள், எல்லாம் கருத்தில் கொண்டு சுபநிகழ்ச்சிக்கு நாளும், நேரமும் தீர்மானித்து அறிவிக்க வேண்டும்.
கிரஹஸ்தன் என்ன எல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மஞ்சள் முதல் தேன் வரை பட்டியல் ஒப்பித்து, எழுதுவித்துத் தர வேண்டும். குறிப்பிட்ட நாளில், பவித்ரம், வீபுதி மட்டை, கூடுதல் பூணூல், சில சமயம் பஞ்சகவ்யம் சகிதம் கிரஹஸ்தனின் இல்லத்தில் வந்து சேரணும். குழந்தைக்கு காது குத்து ஆகவே முக்கிய பிரஜை அந்தக் குழந்தைதான். குழந்தையாச்சா, அது இன்னும் எழுந்திருந்திருக்காது. அல்லது தொட்டிலில் சிறுநீர் கழித்து உடம்பு மினுமினுக்கக் கிடந்து சிரிக்கக் கூடும்.
வாத்தியாரையும் வைத்தியரையும் பார்த்து சிரிக்கும் சிசுக்கள் ரொம்ப அபூர்வம். கூடவே வந்த தன் சொந்த தாயார், தகப்பனாரை அடையாளம் கண்டு அந்தச் சிரிப்பு.
குழந்தைக்கு வென்னீரில் வெதுவெதுவென்று நாலு சொம்பு ஊற்றி குளியல். புத்தாடை அணிவித்தல் எல்லாம் கழித்து அப்பா அம்மா அருகருகே உட்கார பின்னால் மற்றவர்கள் நிற்க பூ மாலையோடு குழந்தையை தாய்மாமன் மடியில் இருத்துவதற்குள் இன்னொரு வாத்தியார் துணையோடு, அவர் கிரஹஸ்தராக இருந்தால் விசேஷம், கணபதி ஹோமம் செய்து முடித்து விட வேண்டும்.
சமையலறையில் பாயசமோ வேறே எதுவோ செய்ய வேண்டும் என்றால் செய்து வைத்திருக்க உள்ளே வரும்போதே நினைவூட்ட வேண்டும். ஆயுஷ்ஹோமம் என்று சிசுவின் ஆரோக்கியத்துக்கும் தீர்க்க ஆயுளுக்கும் வேண்டி இன்னொரு வாத்தியாரோடு ஹோமம் வளர்க்க வைத்து மந்திரம் எல்லாம், எதுவும் தவறாமல் சொல்லி நாமகரணம் அறிவிக்க வேண்டும்.
குழந்தைக்கு உறவில் ஆளுக்கொரு நாமம் சூட்ட எல்லாவற்றையும் உரக்கச் சொல்லி வாழ்த்தி அடுத்த பெயரை செவியோர்க்க வேண்டும்.
அது முடிந்து நகையாசாரி வரக் காத்திருக்க வேண்டும். குழந்தை காதில் துளைத்து, அது பரிதாபமாக அழுதபடி கையில் பிடித்த லட்டு உருண்டையில் கண்ணீர் விழுந்திருக்க அம்மா மடியில் படுத்துக் கொள்ள, அப்படியே உறங்கி இருக்க, மீதி மந்திரங்கள் சொல்லி முடிக்க வேண்டும்.
உறவினர்கள் பட்டுத்துணி, கிண்டியில் இருந்து கால் பவுனில் மோதிரம், மரப்பாச்சி பொம்மை வரை அன்பளிக்க, ஒவ்வொன்றையும் ஆயிரம் கட்டி வராகன் என்று பெருமதிப்பாக்கி மந்திரம் சொல்லி, விழித்திருந்தால், குழந்தை கையில் கொடுத்து வாங்கக் காத்திருந்து ஆரத்தி எடுக்கச் சொல்லி அதுவும் முடிந்து ’ரொம்ப சந்தோஷம்’ அறிவித்து சம்பாவனை வாங்கிப் புறப்பட வேண்டும்.
இருப்பதிலேயே குறைவான சடங்கு சம்பிரதாயம் கொண்ட சிசுவுக்கு நாமகரணம், பெயர் சூட்டலுக்கு இந்த கிரமம் என்றால், கல்யாணத்துக்கெல்லாம் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கும். இது ஜீவனோபாயத்துக்கான மந்திரங்களை மனனம் செய்திருந்தாலே கிரமமாக நடைபெறும்.
pic medieval office in India
ack nytimes.com
October 28, 2021
பெருநாவல் மிளகு – wherein the Emperor of Keladi works out the logistics of the business deal to provide tactical and strategic support to usurp the throne
சரி உடஞ்சாச்சு ஒட்டுமோ ஒட்டாதோ திரும்பி. காலம் தான் பதில் சொல்லணும் கோகர்ணம் கணபதி சொல்லாட்டாலும். அது இருக்கட்டும், உனக்கு அரசாட்சி கைக்கு வர நானும் திம்மப்பனும் ஏன் உதவி செய்யணும் சொல்லு. திம்மப்பன் கிட்டே கேட்டதை ஒரு சௌகரியத்துக்காகத் தனியா நிறுத்திட்டு என் கிட்டே வந்திருக்கியே உனக்கு உதவி பண்ணனும்னு. செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
நேமிநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அவன் சொன்னது – நான் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டறதை நிறுத்தி உங்களுக்கு அந்தத் தொகையை மாதாமாதம் அனுப்புவேன். தொகையிலே பத்து சதவிகிதம் அதிகரிக்கவும் தயாராக இருக்கேன். நீங்க விருப்பப்பட்டால் அந்தத் தொகையை பில்ஜி அதிபர் திம்மப்பாவோடு தேவையானதாக நீங்க கருதும் அளவு பங்கு வைக்கலாம். திம்மப்பாவோ உங்களுக்கு வேண்டிய வேறே பாளையக்காரராகவும் இருக்கலாம். இது முப்பது வருஷத்துக்கு எழுதிக் கையெழுத்து போட்டு கொடுக்கப் போகிற ஒப்பந்தமாகும். அப்புறம் அருகதேவன் அருளாலே அது புதுப்பிக்கப்படும் அல்லது வேறே எதாவதாக எதிர்காலம் வரும். போர்த்துகீசியர்களோடு மிளகு விற்பன ஒப்பந்ததை நானே தொடர்ந்து கவனிச்சுக்குவேன். அந்த விற்பனை லாபத்தை நான் எடுத்துக்கறேனே மாமா.
வெங்கடப்பா நேமிநாதன் அருகில் வந்து, நீ நான் எதிர்பார்த்ததை விட புத்திசாலியா இருக்கேடா நேமி. ஆரியக் கூத்து ஆடினாலும் காசு காரியத்துலே கண் வைப்பேடா ஒக்காளி. அவன் முதுகில் தட்டி சிரிக்க, நேமிநாதன் எழுந்து அவர் காலில் தொட்டு வணங்கினான்.
சரி பார்க்கலாம். இன்னும் ஒரு வாரத்திலே நானே முடிவைச் சொல்லி விடறேன். நீ இதை ரகசியமாக வச்சுக்கோ. இனிப்பு கடை வைப்பாட்டி கிட்டே போய் முதல் காரியமா சொல்லிட்டு இருக்காதே. அவ உனக்கு சகலமும்னு எனக்கும் தெரியும். ஆனா ராஜாங்கம் லட்டுருண்டை பிடிக்கற விஷயம் இல்லே. அவளோடு ராக்கூத்து ஆடினாலும் ராஜாங்கக் காரியத்துலே கண்ணு வையடா மருமகனே. ஓம் சக்தி ஓம். நீ கிளம்பு. நானும் காரியங்களை நோக்கறேன். வெங்கடப்ப நாயக்கர் எழுந்தார்.
இப்போதைக்கு ஒரு பாடம் கேள். புதையல் கிடைத்து பழையவயல்லே பழைய அரண்மனை கட்டி சுற்றுமுற்றும் அறுபது கிராமத்தை வளைச்சு எங்க மூதாதையர்கள் ரெண்டு கவுடர்களும் ஆட்சி பிரகடனம் பண்ணினாங்க. விஜயநகர பேரரசு செயலாக இருந்த காலம் அது. இவங்க ரெண்டு பேரையும் பிடிச்சு ஹம்பிக்கு கொண்டு போனாங்க. அங்கே போகிறபோதே எங்க மூதாதையிலே அண்ணன்காரர் அவரோட தொடுப்பு மூலம் ஒரு செய்தி அறிஞ்சார். உனக்கு அல்வா கொடுக்கற இனிப்புக்காரி மாதிரி அவருக்கு ஒரு கூத்தியாள், அதான்பா, ஆட்டக்காரி, பாட்டுக்காரி. எவனோ ஒரு பாளையக்காரன் விஜயநகரத்துக்கு வரி கொடுக்க மாட்டேன்னானாம். விஜயநகர பேரரசர் கிட்டே என் மூதாதையர் சொன்னாங்க – நாங்க அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடறோம். எங்களை பழையவயல்லே கொஞ்சம் போலவாவது இடம் கொடுத்து நிர்வாகம் பண்ண விடுங்களேன். சொன்னது போல் செஞ்சு காட்டினாங்க. நான் இன்னிக்கு ஆட்சியிலே இருக்கேன்னா அவங்க பேச்சு சுதாரிப்பும் கொடுத்த வாக்கைக் காப்பாத்தற நேர்மையும் காரணம். என்மருமகன், நீயும் அப்படி இருக்கணும். என்ன புரியுதா?
கோவில் மணி ஒலித்தது. எப்போதும் ஒலிப்பது அது. நேமி நெகிழ்ந்து போய்க் கைகூப்பி நாயக்கரோடு போஜனசாலைக்கு வெளியே வந்தான்.
வெங்கடபதி நாயக்கர் வழியனுப்ப வாசல் வரை வந்தார். நினைவாக இலச்சினையை அவனிடமிருந்து வாங்கி காவலாளியிடம் கொடுத்தார். மதியம் இருந்து சாப்பிட்டு போயிருக்கலாமேடா மருமகனே என்று ராகம் இழுத்தார்.
இல்லே மாமா, நீங்க என் மூளைக்கு வேலை கொடுத்திருக்கீங்க. அதே வேகத்திலே செய்ய வேண்டியதைச் செய்யறேன். சந்திப்போம் மாமா உங்க ஆசிர்வாதத்திலே என்று அடக்கமாகச் சொன்னான் நேமிநாதன். சந்திப்போம் என்று அவர் சொன்னபோது எதிரே தனியாக நடந்து வந்த அரண்மனை புரோகிதர் ”சகுனமே சரியில்லே’ என்று முணுமுணுத்துக்கொண்டு அவசரமாகத் திரும்பி வந்த வழியே ஓடத் தொடங்கினார்.
pic astronomy during medieval times
ack en.historylapse.org
பெருநாவல் மிளகு – wherein the emperor of Keladi, Venkatapathy Naicker plays with family sentiment
ஆக இந்த கார்டெல் ஜீவனோட இருந்தா இதெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். போர்த்துகல்லுக்கு ஒரு அரசர் இருக்கார். ஒரு அரசவை இருக்கு. அவர்கள் ஒரு கையசைத்தால் கார்டல் இருந்த இடம் தெரியாமல் போயிடலாம். அப்புறம் எதை நம்பி நாம ஆற்றிலே இறங்கறதாம்? யோசிச்சுப் பாரு நேமி. நான் சொல்றது தப்பா?
இல்லையென்று தலையாட்டினான் நேமிநாதன். எது சரி என்றுதான் தெரியவில்லை அவனுக்கு.
அது இருக்கட்டும். நூறு வருஷமா கார்டெல் வேறே வேறே ரூபங்கள்லே செயல்பட்டு வருது. ஆனா இதுவரை இங்கே ஒரு சமஸ்தானத்து அரசரை, அரசியை பதவி விலக்க அறிவில்லாத அறமில்லாத வழிமுறைகளைக் கையாண்டதில்லே. சொல்லு வைதீக மதம், சமணம், இப்படி பெரிய மதங்கள், கிறித்துவம், இஸ்லாம் இப்படி இங்கே இன்னும் வேர் ஊன்றாத மதங்கள் இதிலே ஏதாவது ஒண்ணுலே இருந்துக்கிட்டு அவனவன் எந்த புகாரும் இல்லாமல் நிம்மதியா வாழ்கிறான். வைதீகம் சமணம் சண்டை, சமணம் பௌத்தம் தகராறு, வைதீக மதம் இஸ்லாம் அடிதடி இப்படி ஆரம்பிச்சா அதுக்கு தூண்டுகோலாக இருந்தா, அந்த பூதத்தை போத்தல்லே இருந்து இப்போ திறந்து விட்டு எப்படி அதை திரும்ப அடைக்கப்போறோம்? இது இன்னும் நூறு நூறு வருஷமா மோதல், சாவு, அடிதடி இப்படியே போய் மனுஷ குலத்துக்கே நாசம் ஏற்படுத்தி விடும். மேற்குலே அப்பப்போ சிலுவை யுத்தம் வர்ற மாதிரி, ஆனா அதிகம் உக்ரமா இருக்கும். நீ மிளகுராஜா ஆக மனுஷ குலம் நசிக்கணுமா சொல்லு நேமிநாதா.
வெங்கடப்ப நாயக்கர் மேலே வழிந்த வியர்வையை உத்தரீயம் கொண்டுவரச் சொல்லித் துடைத்துக் கொண்டார். குடிக்க குளிர்ந்த தண்ணீர் கேட்டு கூஜாவில் வாங்கி கடகடவென்று தொண்டையில் சத்தம் ஒலிக்கக் குடித்து கூஜாவை மடியில் இருத்திக் கொண்டார். மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம். தம்பிக்கு பழக்கூழ் எடுத்து வந்து கொடு என்று பிரத்யட்சமாகாத யாருக்கோ உத்தரவு பிறப்பிக்க, நேமிநாதன் வேண்டாம் என்று சொல்வதற்குள் மா, பலா, கனிந்த வாழை, ஆரஞ்சு, கிச்சிலி என்று எல்லாப் பழமும் சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து போட்டு தில்லியில் இருந்து வரவழைத்த முகலாய பாணி ஷர்பத் நனைக்க விட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண். கெலடி நகர்ப் பெண்கள் எல்லாரும் அழகானவர்கள் என்று நேமிநாதனுக்குத் தோன்றியது. அவன் பார்வை போகிற திசை பார்த்து நாயக்கரும் புன்சிரித்து அதை ஆமோதித்தார்.
நேமி, இந்த கார்டல் விநோதம் என்னிடம் தானே முதலில் சொல்கிறாய்? நல்லதாகப் போச்சு. அதில் பலவீனம் பலம் எல்லாம் நான் சொல்லி சரி பண்ணிக்க வைக்க முடியும். அது இல்லையா ஒரு வேளை வேறு யாரிடமோ. அப்பக்கா புருஷன் வீரு போல் புத்திசாலி அரசர்களிடம் கலந்தாலோசித்திருந்தால். வாக்கியத்தை முடிக்காமல் சிரிக்கத் தொடங்கினார் வெங்கடபதி நாயக்கர். அடுத்த மழை ஆரம்பமானது.
மன்னிக்கணும் மாமா, மாமா எப்போதும் நிர்வாக மும்முரத்தில் இருப்பதால் ஒரு அளவு கார்ட்டெல் திட்டம் உருவாகி வரட்டும் அப்போது மாமா நேரத்தை வீணாக்காமல் என்ன திட்டம், எப்படி நடக்கிறது, என்ன வேண்டும் என்று நீங்கள் பேசுவது போல் இல்லாவிட்டாலும் அதில் கொஞ்சம்போலவாவது நேர்த்தியாகப் பேசலாமே என்று நினைத்தேன். ஆகவே போன வாரம் பில்ஜி அரசர் திம்மராஜு அண்ணாவிடம் இதைப் பற்றிக் கொஞ்சம் போல்.
நேமிநாதன் முடிப்பதற்குள், யாரங்கே, எனக்கும் பழக்கூழ் எடுத்து வா என்று சத்தமாகச் சொன்னார்.
சந்தன நறுமணமும் மை எழுதிய பெரிய விழிகளும் நீளக் கருங்கூந்தலுமாக தனக்கு பழக்கூழ் கொண்டு வந்தவளை எதிர்பார்த்திருக்க, உயரமான ஆப்பிரிக்க காவலன் பழத்தோடு வந்தான். அவன் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டது அறிந்தவர்போல் இன்னொரு முறை பலமாகச் சிரித்தார் வெங்கடபதி நாயக்கர்.
நான் தவறு செய்துவிட்டேன். மன்னிக்கணும் மாமா. உங்களிடம் கலந்தாலோசனை செய்ய முதலில் வந்திருக்கணும். மன்னிக்கணும். நேமிநாதன் மன்றாடினான். வெங்கடபதி நாயக்கர் நரை பாய்ந்த மீசையை நீவியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தார். மறுபடி தப்பு செஞ்சிட்டிருக்கே மருமகனே. பில்ஜி திம்மப்பாவை நீ முதல்லே பார்த்தது தப்புன்னு நான் சொன்னேனா? நீயா சூழ்நிலையை தவறுதலாக புரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இது அரசியல் பாலபாடம் மருமகனே.
அவன் கைகூப்பி வெங்கடப்ப நாயக்கரை வணங்கினான். திம்மப்பாவும் நானும் நகமும் சதையும் போல். அவன் கிட்டே பேசினால் எங்கிட்டே பேசிய மாதிரி. அது இருக்கட்டும் உனக்குத் தெரியுமோ திம்மப்பாவுக்கு பிரான்ஸ் சிவப்பு ஒயின் பொண்டாட்டி மாதிரி. ரொம்பப் பிடிக்கும். சமயத்துலே ரொம்ப வெறுப்பான். இல்லாமல் முடியாது. அவ்வளவு பிரியம். உங்க அப்பக்கா சித்திக்கு சமண சாமியார்களை அழைக்கச் செய்து பிரசங்கம் செய்ய வச்சு அவங்க காலைத் தொட்டு கும்புடறது மற்றும் குழிப்பணியாரத்திலே ஆசை அதிகம். உன் அம்மா சென்னாவுக்கு ரொம்ப பிடிச்சது நீதான். உசிரையே வச்சிருக்கா உன் மேலே. இப்படி பிச்சுக்கிட்டு கிளம்பிட்டியேப்பா.
அவர் குரல் கரகரத்தது. நேமிநாதன் அதிர்ந்து போனான். பேச்சு போக வேண்டியதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது என்று புரிகிறது. குறுக்கிட்டால் புரிதல் தப்பு என்று தள்ளிவிடுவார். பொறுத்திருந்தே பார்க்கலாம் என்று முடிவு செய்தான் நேமிநாதன்.
Middle Ages Travel
ack nytimes.com
October 27, 2021
பெருநாவல் மிளகு – With dreams of Portugal leading the generation of electromagnetic power, the game changer for the next few centuries
நேமிநாதன் தனக்குப் பரிமாறப்பட்ட அக்காரவடிசல், இட்டலிகள், குழாய்ப் புட்டு, கடலை என்னும் விஸ்தாரமான காலை ஆகாரத்தைப் பார்த்தபடி ஒரு வினாடி இருந்து பின் சொன்னான் –
மகாராஜா தயை செய்து என்னை ஒருமையில் நீ என்றே அழைக்க வேண்டுகிறேன். தாங்கள் என் அன்னை சென்னபைரதேவி மகாராணிக்கும் தகப்பன் போல். ஒருமையில் அவரையே அழைக்கும்போது நேமிநாதனை அவனுடைய அப்பா வயசு அப்பாவின் சிநேகிதர் அப்படிக் கூப்பிடக்கூடாதா என்று கேட்டான் நேமிநாதன்.
நாயக்கர் ஒருமையிலா, அல்லது முழு மரியாதையோடு பன்மையிலா அதுவும் அன்றி அரை மரியாதையோடு நீர் எனவா விளிப்பதில் இந்தப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடந்தேறுவது இருக்கும் என்று நேமிநாதன் திடமாக நம்பியதாகத் தெரிந்தது.
சரி நீ என்றே சந்தோஷமாக விளிக்கிறேன் உம்மை, உன்னை. உன் அப்பாவின் சிநேகிதன். அவன் போல உரிமை எடுத்துக்கொண்டு என் அபிப்பிராயங்களைச் சொல்வதில் தவறு ஏதுமில்லையே, ஏய் யாரது இந்தப் பையனுக்கு இன்னும் கொஞ்சம் புட்டும் கடலையும் வை.
நீங்கள் ஆகக் குறைவாக உண்கிறீர்களே மாமா என்று சொல்லி நிறுத்தி அவரைப் பார்த்தான் நேமிநாதன்.
அதுவும் சரிதான், நான் சென்னாவின் சகோதரன். எது எப்படியோ என் கவிதைகளை படிக்கும், வாசித்து வெளிப்படையாக ரசிக்கும் எல்லோரும் என் அத்யந்த நண்பர்கள் தாம். சென்னா என் கவிதா லோகத்தில் லயிக்கும் சோதர ஜீவன். மருமகனே, மாமா என்றே அழை என்னை. சொல்லு. வர்த்தமானம் என்னவாக்கும்?
வந்து மாமா, நேமிநாதன் தயங்கித் தயங்கித் தொடங்கினான்.
மென்று முழுங்கணும் என்றால் புட்டையும் கடலையையும் மெல்லு. தேங்காய் சேர்த்து ருஜியாக வேகவைத்தது. உண்டபிறகோ அல்லது உண்ட படிக்கோ எனக்கு கார்டெல் என்ற போர்த்துகீசிய நிதிக்குழு பற்றிச் சொல்லு.
தடாரென்று விஷயத்துக்கு வந்து விட்டார் வெங்கடப்ப நாயக்கர்.
மாமா, கை அலம்பி வந்து சொல்லட்டா, எச்சில் கையோடு பேசினால் கை உலர்ந்து அதிர்ஷ்டம் எல்லாம் இறங்கிப் போய்விடும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நேமிநாதன் எழுந்து வெளியே போய்க் கை அலம்பி வந்தான். ஒரு பாத்திரத்தில் சுத்த நீரில் எலுமிச்சை துண்டு போட்டு கையில் எடுத்துக்கொண்டு ஒரு சிப்பந்திப் பையன் நாயக்கரிடம் நீட்ட, அவர் அந்தக் கிண்ணத்தில் கை முக்கி அலம்பி, எலுமிச்சை துண்டால் உதடு துடைத்தபடி, என்ன கை கழுவி வந்தியா? கொஞ்சம் பொறுத்திருந்தால் தண்ணீரே இப்படி உன்னைத் தேடி வந்திருக்கும் என்றார்.
போகுது மாமா என்றபடி கார்டெல் பற்றி வாஸ்கொ ட காமா காலத்து கார்டெல் நடவடிக்கையில் தொடங்கிச் சொன்னான் நேமிநாதன்.
ஆக, அவங்க நா செல்லி சென்னபைராளை இறக்கிட்டு உன்னை ராஜாவாக்கினா, அவங்க கொறைச்ச விலைக்கு மிளகு இங்கே வாங்கிப்போய் வக்கணையா ஐரோப்பாவிலே லாபம் பார்ப்பாங்க. அதானே?
ரொம்ப எளிமையா சொன்னா அதுதான். அது மேலே இருக்கற எளிமை இது. தொழில் சிறக்க நடவடிக்கை எடுத்தல், படிக்க கலாசாலை ஏற்படுத்தறது, லிஸ்பன்லே போய் வேலை வாய்ப்பு இப்படி நிறைய நன்மை வரும் மாமா. மெல்லச் சொன்னான் நேமிநாதன்.
அது என்ன மேன்மை நன்மை வரும் இப்படி கார்டெல் நிழல் அரசாங்கம் ஏற்படுத்தினா? சென்னாவாவது ஜெரஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் இப்படி ஒரு நிலப்பகுதிக்கு ராணியா இருக்கா. நீ பார்க்கக் கிடைக்கறது கார்டெல் நிதிக்குழு வெள்ளைக்காரன் குண்டியைத்தான். டர்ர்ர்னு குசு விட்டா ஆஹா என்ன வாசனை என்ன வாசனைன்னு மெய்மறந்து நிப்பே. பாரு நீதான் என்னை ஒருமையிலே கூப்பிட்டு உங்கப்பா மாதிரி வெள்ளையா பேசச் சொன்னே.
பேசுங்க மாமா நான் வேணாம்னு சொல்லலியே.
அப்ப கேளு. மிளகு விலை மிளகு விதைப்பு மிளகு அறுவடை, மிளகு பயிர் பாதுகாப்பு இப்படி ஒரு நாடே மிளகு மேலே மட்டும் முழு ஈடுபாடு வச்சு நடந்தா, மிச்ச தானியம், காய்கறி, ஆடு, மாடு, கோழி பற்றி எல்லாம் யார் கவலைப்படுவாங்க? நீயும் மிளகு ராஜாதான். கோழி ராஜா ஆட்டு ராஜா பச்சரிசி ராஜா இல்லே. ஆக அதெல்லாம் கவனிக்காம விட்டா நாட்டுலே மிளகு விற்று காசு குவியும். காசு கொடுத்து வாங்க அரிசியும் கோதுமையும் புளியும் கிடைக்காது. வேணுமா அது நமக்கு?
நேமிநாதன் நாயக்கரையே பார்த்தபடி இருந்தான்.
அப்புறம் என்ன சொல்றே? நாட்டில் போர்த்துகீஸ்காரன் மூலம் தான் தொழில் அதிகரிக்கும். அப்படியா? என்ன செய்யப்போறே? என்ன செய்யப் போறீங்க?
வயல்லே தண்ணி இரைக்க விசை, விளக்கு வீட்டிலும் தெருவிலும் எரிய விசை, வண்டி இன்னும் வேகமாக போக விசை. நேமிநாதன் கனவுகள் கண்ணில் தெரிய மந்திரம் போல் உச்சரித்தான்.
விசை விசை விசை. எங்கே இருக்கு விசை? லிஸ்பன்லேயே ஒரு தத்துவமா, கோட்பாடாக தான் இந்த விசை வச்சு சக்தி ஏற்படுத்தி உலகத்தை அதைக் கொண்டு இயக்கறதைப் பத்தி பரபரப்பா பேசறாங்க. கடந்த இருபது வருஷமா அதே பேச்சுதான். இன்னும் இருபத்தைந்து வருஷம் அதேதான் பேசுவாங்க. சக்தி உருவாக்கறது இப்போது இல்லே. வந்தாலும் அய்ரோப்பா தான் அதை முதல்லே பயன்படுத்தும். இங்கே அது வருமோ வராதோ.
pic before the advent of electricity
pic ack theguardian.co.uk
பெருநாவல் மிளகு : Venkatappa Naicker, King of Keladi awaiting good omens for his travel to Malpe
நேமிநாதன், நாலு அடி நடந்தவன் திரும்ப அறைக்கு வந்து மேசை மேல் வைத்திருந்த அனுமதி இலச்சினையை எடுத்துக் குப்பாயத்தில் வைத்துக்கொண்டு நடந்தான். அவன் போய்ச் சேர்வதற்குள் போஜனசாலையில் வேலைப்பாடமைந்த சொகுசு நாற்காலியில் நீலமும், பச்சையும், சிவப்புமாக பட்டு உத்தரீயம், குப்பாயம், அரையில் மொகலாய முழு நிஜார் என்று அணிந்து காத்திருந்தார் கெலடி மன்னர் வெங்கடபதி நாயக்கர்.
அவர் கண்கள் மூடியிருக்க கை விரல்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன. உடல் உபாதை ஏதாவது பற்றியிருக்குமோ. நேமி பயப்பட்டான்.
”ஒன்றுமில்லை, அவர் கவிஞராயிற்றே மனதில் வரிவரியாகக் கவிதை கவனம் செய்கிறார் தெலுங்கில்”. வெங்கட லட்சுமணன் எங்கிருந்தோ வந்து நேமிநாதன் காதில் சொல்லிவிட்டுப் பூஞ்சிட்டாக ஓடி மறைந்தான்.
அவன் ஓடும்போது தரையில் வைத்திருந்த செம்பு கால் பட்டு உருள, கண் திறந்து பார்த்த வெங்கடப்ப நாயக்கர் பார்வை நேமிநாதன் மேல் விழுந்தது. சிரித்தபடி அவனை தீனிமேசையில் எதிர் நாற்காலியில் அமரச் சொல்லிக் கைகாட்டினார்.
கைகூப்பி வணங்கி அது போதாது என்று பட குனிந்து அவர் பாதம் தொட்டு வணங்கினான் நேமிநாதன். ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தி அவன் தோளை இறுக்கி உட்கார்ந்தபடியே அணைத்துக் கொண்டார் நாயக்கர்.
வாரும் நேமிநாதரே, நலம் தானா? அவர் குரல் ஆகிருதிக்குப் பொருந்தாமல் சற்று கிரீச்சென்று ஒலித்ததை வெளிக்காட்டிக் கொள்ளாத வியப்புடன் கவனித்தான் நேமிநாதன். ஷேமலாபங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நேமிநாதனின் காலம் சென்ற தந்தையும் மிளகு ராணி சென்னபைரதேவியின் சகோதரனுமான பாரஸ்வநாதரும் வெங்கடப்ப நாயக்கரும் சேர்ந்துதான் இக்கரெ குருக்களிடம் மல்யுத்தமும், அங்கவெட்டும் கற்றுக் கொண்டார்களாம். அது ஒரு வருடம் மிக சிறப்பாகப் போனதாம். பிறகு சமஸ்கிருத ரூபத்தில் கஷ்டம் ஏற்பட்டதாம். கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேணும், அதுவும் அதே இக்கரெ குருக்கள் வித்தியாலயத்தில் என்று நாயக்கரின் தந்தை மகாராஜா வற்புறுத்தினாராம். சமஸ்கிருதம் படிக்க சிரமப்பட்டு நாயக்கர் படிப்பை நிறுத்தியவர் தான், குருகுல நண்பர்களைத் தொலைத்து விட்டாராம் அப்புறம்.
ஒரு நிமிடம் பரஸ்வநாதரின் பதினைந்து வருடம் முன்பு நிகழ்ந்த மறைவுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்திய வெங்கடப்ப நாயக்கர் நேமிநாதன் தீன்மேசை முன்னிட்ட நாற்காலியில் அமர்ந்ததும் சொன்னார் – நேற்று ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது நேமிநாதரே.
என்ன அது என்று குழம்பி அவன் கண்களில் மிரட்சி தென்பட்டது. ஜெர்ஸோப்பாவில் ஏதும் விபத்து அல்லது வேறேதும் அசம்பாவிதமா?
“அதொண்ணும் பெரிய அசம்பாவிதமில்லை, சிறியதுதான். பசியாற என்ன சாப்பிடுகிறீர்கள் நேமிநாதரே?” அவர் சமையலறைப் பக்கம் நோக்கியபடி நேமிநாதனைக் கேட்டார்.
”சைவ உணவாக எது பாகம் செய்திருந்தாலும் சரிதான்” என்று வினயமாகத் தெரிவித்தான் நேமிநாதன்.
சமையலறை உள்ளிருந்து வந்த உபசாரிணிப் பெண்ணை அழைத்து தாழ்ந்த குரலில் ஏதோ தெலுங்கில் சொல்லிச் சிரித்தார் நாயக்கர். அந்தப் பெண்ணும் சிணுங்கிச் சிரித்தபடி உள்ளே போக, பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் –
“உடுப்பி-மால்பேயில் சாயம் தோய்த்து வைத்த நெசவான துணிகள் முதல் முறையாக இத்தாலிக்கு ஏற்றுமதியாகக் கப்பலில் ஏற்றப்படும் நிகழ்ச்சி நேற்று அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு, என்னை வரச்சொல்லி தரையில் விழுந்து புரண்டு வேண்டினார்கள். நம்முடைய நேமியன்றோ நீர், எனக்காக ஒரு பிற்பகலும் ராத்திரியும் காத்திருந்து நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா என்று நான் கோரிக்கை விடுத்தால் மாட்டேன் என்றா சொல்வீர்? அந்த நம்பிக்கையில் உம்மை இருக்கச் சொல்லி மால்பே புறப்பட்டு அரண்மனை வாயிலில் தேர் வெளியேற முற்பட்டேனா? ஏன் கேட்கிறீர், அரண்மனை புரோகிதன் நாராயண பட்டன் குறுக்கே வந்து கடந்து போனானே பார்க்கலாம். ஒற்றைப் பிராமணன் குறுக்கே போனால் என்ன ஆகும் அதுதான் ஆனது. தேர் அச்சு மாளிகை முகப்பில் கட்டுமான வேலைக்காகக் குவித்த கல்லில் பட்டு முறிந்தது. நான் உஷாராகி உடனே மால்பேக்குப் பயணத்தை ரத்து செய்தேன். பேசாமல் ஒரு உத்தரவு போடலாமா என்று பார்க்கிறேன். கெலடி தேசத்தில் பார்ப்பனர்கள் எங்கே போனாலும் ஒற்றையாகப் போகக் கூடாது, இன்னொரு பார்ப்பனர் கூடப் போக வேண்டும். தனியாகப் போக நேர்ந்த பிராமணர்கள் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று சட்டம் இயற்றலாமா என்று கூடத் தோன்றியது. அந்தச் சட்டம் இயற்ற நல்ல நேரம் தேவை. அதைக் கணித்துச் சொல்வதற்கு அரண்மனை புரோகிதரிடம் தான் கேட்கவேண்டும் என்பதால் தடம் புரண்டு ஓடிய சிந்தனையை ஒதுக்கி வைத்தேன்”.
சொல்லி விட்டு ஓவென்று சிரித்தார் நாயக்கர். நேமிநாதனும் ஒரு வினாடி தாமதித்து அவர் நகைப்பில் கலந்து கொண்டான். சட்டென்று நகைப்பை நிறுத்தினார் நாயக்கர்.
நீர் நினைக்கலாம், அதுதான் ஒற்றைப் பார்ப்பான் போயாச்சே மீதி நேரத்தில் நேமிநாதனைச் சந்தித்திருக்கலாமே என்று. யோசித்தீர் இல்லையா, யோசித்தீர்தானே?
ஆம் என்று சொல்லிச் சிரித்தான் நேமிநாதன். இவ்வளவு கலகலவென்று எதற்கும் சிரித்து சூழ்நிலை இறுக்கம் தவிர்த்துத்தான் விஜயநகரத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட குறுநில அரசுகளில் பிரபலமானவராக இருக்கிறார் வெங்கடப்ப நாயக்கர் என்று நினைத்தான் அவன்.
நேமிநாதரே, நேற்று என் அதிர்ஷ்டம் குறைவான தினம். நீர் இளசு. பெரிய பெரிய திட்டங்களோடு எதிர்காலத்தை ஒளிமயமாக்க முனைப்போடு வந்திருக்கலாம் நீர். அதை நல்ல நாள் பார்த்து, ஆலோசனை சொல்ல வேண்டிய மூத்தவனான நான் சகல அதிர்ஷ்டத்தையும் உமக்குக் கடத்தி நல்லபடி எல்லாம் நடக்க வாழ்த்த ஒரு பகலும் ஒரு இரவும் உம்மைச் சந்திக்காமல் தள்ளிப் போட்டேன். தவறு என்றால் மன்னிக்கணும் பிள்ளாய்.
ஐயோ ஒரு தப்பும் இல்லை என்று நேமிநாதன் அவசரமாக நாயக்கரோடு சேர்ந்து சந்தோஷமாகக் கட்சி கட்டினான். இறுக்கம் தளர்ந்த சூழ்நிலை பசியைத் தூண்டுவதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை
pic Good omens -Medieval Times
Ack uab.edu
October 26, 2021
பெருநாவல் மிளகு – Neminathan barred entry into the Keladi fort without the identification insignia
அவன் உள்ளே வந்தபோது இருந்த பாதுகாவலர்கள் பணி முடிந்து அடுத்த குழு காவலுக்கு வந்திருந்தார்கள். நேமிநாதனை இலச்சினை இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள் அவர்கள்.
தான் யார் என்பதை ஒரு தடவைக்கு நான்கு தடவை சொல்லிவிட்டான் நேமிநாதன். எனினும் இலச்சினை இல்லாமல் உள்ளே போக முடியாது என்று பிரவேசிக்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள்.
இரும்புக் கம்பிக் கதவுகள் ஊடே பார்க்க, நேமிநாதனின் ரதம் கதவுக்கு சற்றுத் தொலைவில் நிறுத்தியிருக்க, குதிரைகளை அகற்றி நிறுத்திவிட்டு ரதசாரதி இரவுக்கு உறங்க சித்தம் பண்ணிக்கொண்டிருந்தது தெரிந்தது.
கதவு வழியாகப் பார்த்து, ஆலாலா வா இங்கே என்று உரக்க அவனைக் கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை என்று புரிந்து இன்னும் நாலு தடவை குரல் உயர்த்த, வாசல் காவலர்கள் நேமிநாதனைப் பிடித்து இழுக்க முற்பட்டார்கள். அவர்கள் கொங்கணியோ, கன்னடம், தெலுகு, தமிழோ பேசவில்லை என்பதையும் ஒடிய பாஷை அல்லது வங்காளி போல் புரிபடாத மொழியைப் பேசுவதாகவும் நேமிநாதனுக்குப் பட்டது.
கடைசியாக ஒருதடவை காவலர்களைப் புறம்தள்ளி ரதசாரதியை அழைக்க உள்ளே அரண்மனை சாளரம் ஒன்று திறந்து வெங்கடப்ப நாயக்கரின் இளைய புதல்வன் அரண்மனை வாசலை நோக்கினான். நேமிநாதனை அவன் இனம் கண்டு கொண்டு அவசரமாக கீழே ஓடி வந்து அவனை உள்ளே அழைத்து வந்தபோது, இலச்சினை எடுத்துப் போங்கன்னு சொல்லாமல் போய்ட்டேன் மன்னிக்கணும் என்று சம்பிரதாயமாகச் சொல்லி அதோடு நிறுத்தினான்.
ஒரு இளவரசனாக முத்திரை, இலச்சினை, அனுமதி இதெல்லாம் தேவைப்படாமல் இருந்து இப்போது அதெல்லாம் கட்டாயமான வாழ்க்கை எவ்வளவு துன்பம் நிறைந்தது என்று அனுபவத்தால் தெரிய வரும்போது நேமிநாதனுக்கு மனதில் தேவையற்ற தன்னிரக்கம் வர, அதைக் களைந்தான்.
கெலடி அரண்மனையில் அவனுக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு வெங்கட லட்சுமணன், அதுதான் அந்த இளைய புதல்வனின் பெயர், நேமிநாதனை அழைத்துப் போகும்போது ஒரு பெரிய மண்டபத்தில் வீற்றிருந்து குவளையில் வைத்து ஏதோ பருகியபடி இருந்தவரைப் பார்த்தான். அப்பா என்றான் லட்சுமணன். கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர்.
அவர் மால்பெ போவதாகச் சொன்னாரே என்று நேமிநாதன் புரியாமல் கேட்டான். லட்சுமணன் புன்சிரித்தான். வெங்கடப்ப நாயக்கர் இங்கே இருந்தால் நேமிநாதனை சந்தித்திருக்கலாமே? அவன் வந்தது தெரிந்தும் அவனை நேரில் கண்டு ஒரு மணி நேரமோ அல்லது வரவேற்று ஒரு நிமிடமோ பேசிவிட்டுப் போயிருக்கலாமே.
இன்னும் எவ்வளவு அவமதிப்பை நேமிநாதன் வாங்கிச் சுமக்க வேணுமோ.
அவன் மெல்லத் தனக்கு ஒதுக்கிய அறைக்குப் போய் விரைவில் நித்திரை போனான்.
காலையில் வெங்கட லட்சுமணன் வந்து நித்திரை சுகபரமாக இருந்ததா என்று விசாரித்தான். கொசுக்கள் தொந்தரவு செய்ய மூன்றாம் ஜாமமும், அவற்றை விரட்ட அரண்மனை முழுவதும் சாம்பிராணிப்புகை போட்டு தூமதண்டியோடு சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்கும் நடந்து அடுத்த ஜாமமும் தூங்க முடியாமல் போன துக்கத்தைச் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்தான் நேமிநாதன்.
பசியாறிக்கொண்டே மகாராஜாவும் லட்சுமணனின் பிதாவுமான வெங்கடபதி நாயக்கர் நேமிநாதனோடு சந்திப்பு காலை ஏழரைக்கு என்று அறிவித்தான் லட்சுமணன். நேமிநாதன் கொஞ்சம் தயங்க, நேரம் சரியாக வராதென்றால் சொல்லு, மாற்றிவிடலாம் என்றான்.
அப்படித்தான், எழுபது வயதான விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயர், வேங்கடப்ப நாயக்கரை சந்திக்க பெனுகொண்டாவில் இருந்து வந்தபோது விஜயநகரத்தார் ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாராம். ”காலையில் வெளிக்குப் போனதற்கு அப்புறம் எந்த நேரமும் சந்திக்கத் தயார். குளித்து, இரண்டு இட்டலிகளை பிட்டுப் போட்டுக்கொண்டு சந்திக்க ஓடி வந்துவிடுவேன்” என்றாராம் விஜயநகரப் பிரதிநிதி. காலை ஆறிலிருந்து எட்டு மணிக்குள் அந்த மகத்தான சம்பவம் நிகழ வாய்ப்பு உண்டாம்.
நல்ல வேளையாக ஆறரை மணிக்கே அதெல்லாம் முடிந்து குளித்து இட்டலி உண்ண ஏழு மணிக்கு வந்துவிட்டாராம் அவர். அவருக்கே தெரியாமல் முந்தின ராத்திரி சாப்பாட்டில் ராயருக்கு மட்டும் கொஞ்சம் கடுக்காய்ப்பொடி சேர்த்து அவருக்குக் காலையில் வயிறு இளகி ஒத்துழைக்கச் செய்ததும் வெங்கடப்ப நாயக்கர் தான் என்று பெரும் சிரிப்போடு நேமிநாதனோடு பகிர்ந்து கொள்ள, நிறுத்தாமல் சிரித்தான் நேமி.
”எனக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை, ஒரே சந்தேகம் என்ன என்றால், நீ காலையில் மகாராஜா பசியாறிக் கொண்டே என்னோடு உரையாடுவார்னு சொன்னியே லட்சுமணா. அப்போது நானும் சாப்பிட்டுக் கொண்டிருப்பேனா அல்லது அவர் சாப்பிட, நான் வாய் பார்த்தபடி வெறும் வயிற்றோடு பேச வேணுமா?” என்று கேட்டான் நேமிநாதன்.
லட்சுமணன் உரக்க நகைத்தான். ”நேமி, உன் நகைச்சுவை அலாதியானது. நாயனாவிடம், என்றால் என் தந்தையாரிடம் இதைச் சொல்கிறேன். நீயும் பசியாறத்தான் அந்த சந்திப்பு. சந்தேகம் என்றால் நான் ஏழரை மணிக்கு போஜனசாலைக்கு வந்து எல்லாம் கிரமமாக வந்திருக்கிறதா என்று பார்த்துப் போகிறேன்” என்றபடி போனான்.
அதுபடிக்கு நேமிநாதன் காலை ஏழு மணிக்கு மெல்லிய சீனக் கத்தி கொண்டு மழமழவென்று முகச் சவரம் செய்துவிக்கப்பட்டு, வெதுவெதுப்பான வென்னீரில் குளித்து, உடுத்து, பாரீஸில் வடித்த ஸ்வப்ன புஷ்பங்கள் மணக்கும் தைலம் கம்புக்கூட்டில் பூசி, காலணியை சிப்பந்தி மூலம் பளபளவென்று துடைத்து அணிந்து கொண்டு புறப்பட்டான். முள்ளுத்தாடியும், புழுதி படிந்த காலணிகளும், அக்குளில் கற்றாழை வாடையும் வெங்கடப்ப நாயக்கருக்குக் காணவும் எதிர்கொள்ளவும் பிடிக்காத கோலம் என்று கேள்விப்பட்டிருந்ததால் ஜாக்கிரதையாகப் பார்த்துப் பார்த்து எல்லாம் சரியாக வைத்து பசியாறப் போனான் நேமிநாதன்.
October 25, 2021
பெருநாவல் மிளகு – Street Scenes in the town of Keladi and the artful streetwalkers
மெல்ல நடந்தான் நேமிநாதன்.
கெலடி வீதிகள் நடக்க நடக்க கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தாலும் ஹொன்னாவர் வீதிகள் போல் விசாலமானவைகளாக இல்லாத காரணத்தால் தோளோடு தோள் இடிக்க நடக்க வேண்டி இருந்தது. இரண்டு கடைகளுக்கு ஒன்று மதுசாலையானதால் தெருவில் கள்ளு மாந்தி போதம் கெட்டுத் திரிகிறவர்கள் அதிகமாக இருந்தனர். சும்மா அலையாமல் போகிறவன் வருகிறவனை வம்பிழுத்துக் கொண்டு நடமாடும் அவர்களைத் தவிர்த்து நடந்தான் நேமிநாதன்.
நான்கு மதுக்கடைகளும் சூதாட்ட விடுதிகளும் இருந்த தெருவில் நெரிசலுக்கு நடுவே யாரோ நேமிநாதனின் இடுப்புக்குக் கீழே தொட்டது போல் இருந்தது. பணப்பையை இடுப்பில் மாட்டி வைத்திருப்பது தெரிந்து அறுத்தெடுத்துப் போகப் பின்னாலேயே வந்த யாரோ நேமிநாதன் விழிப்பாக இருந்ததால் தோற்றுப் போய் நாயின் மகனே என்ற வசவு மொழிந்து ஓடியதைப் பார்த்து நேமிநாதனுக்குச் சிரிப்பு வந்தது.
தெருவின் இருவசமும் காட்சிகள் மாறி இருக்க, தீர்க்கமான மல்லிகைப்பூ மணம். ஒருகதவு மட்டும் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்த வீடுகளில் வாசல் கதவைப் பிடித்தபடி நின்ற இளம் பெண்கள் ’சுகிக்க வா, திருப்தி இல்லையேல் இன்னொரு முறை வா’ என்று கிசுகிசுக்கும் குரலில் அழைத்தார்கள்.
எல்லாப் பெண்களும் மூக்குத்தி அணிந்து கூந்தலை இறக்கி வாரித் தலையில் மல்லிகையும் பிச்சிப் பூவுமாக, கண்ணில் அழுத்தமாக இட்ட கண்மையுமாக சுந்தரிகள்.
வா வா ஓர் இரவுக்கு பத்து வராகன் கொடுத்தால் போதும் என்று சிரிக்கிற அவர்கள் அதரங்களில் சிவப்புச் சாயம் அதிகமாகப் பூசி ரத்தப் பிசாசு சாயலிலும் சிலர் தென்பட்டார்கள்.
உதடுகளைச் சற்றே பிரித்து, ஒளிரும் இரு வரிசைப் பற்களும் நடுவே இடைவெளியின்றி மூடியிருக்க சற்றே குனிந்து பார்த்து எச்சில் உமிழும் காட்சி காமம் எழச் செய்வதென்று நேமிநாதனுக்குத் தோன்ற இறுகி வந்த உடல் ஆமாம் என்றது.
அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து பற்றி இழுத்து, வாரும் வாரும் உம் அந்தரங்கம் எல்லாம் நானறிவேன் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.
ரோகிணியை இப்படி சிருங்காரமாக உமிழச் சொல்லி வாயில் முத்தமிட அவசரம் என்று உடல் இன்னொரு சந்தேசம் பிறப்பித்துச் சொன்னது. வீடெல்லாம் துப்பலாகி இருக்கும் அந்த மோக விளையாட்டுக்குப் பதில் வேறே சுத்தமான எத்தனையோ உண்டே என்று யோசித்தபடி நடந்தான்.
தெரு முனையில் நாட்டிய சாலை இருந்தது. அரை வராகன் கொடுத்து உள்ளே ஆட்டபாட்டம் பார்க்கப் போனான் நேமிநாதன். குதித்து ஆடிய பேரிளம் பெண்கள் மேல் வராகன்களை விட்டெறிந்தும் முலைக் குவட்டில் வராகன் பொற்காசை இருத்தியும் அவர்களை கொங்கை அற்று வீழ குதியுங்கடி என்று கூச்சல் போட்டபடி தேறல் அருந்துகிறவர்களை வெளியே கொண்டு போய் விடுவதும் நிகழ்ந்தது. அலுக்கவே வெளியே வந்தான் நேமி.
இருட்டு ஆட்சி செய்யும் பிரதேசங்கள் தொடர்ந்து வர தனியாக சஞ்சரிக்க தோதுப்படாத பகுதிகளைத் தவிர்க்கலாம் என நேமிநாதன் திரும்பி நடந்தான். அரண்மனை வாசல் கதவுகள் பெரும் ஒலியோடு சார்த்திக்கொள்வதை அப்போது தான் கவனித்தான் நேமிநாதன்.
படம் 1600களில் ஒரு நகரத் தெரு
ack wikiart.org
October 24, 2021
பெருநாவல் மிளகு – Temples, tombs and loquacious spirits of Keladi
நேமிநாதன் மேடை வைத்த லிங்கத்தை வணங்கினான். இந்த மேடை எதற்கு? அவன் யோசிக்கத் தொடங்கும் முன் இரண்டு பேரில் ஒருத்தனான ஆவிரூபத்தான் வணங்கிச் சொன்னது –
”கெலடி நகர் ஸ்தாபித்தபோது நாங்கள் சவுட கவுடர், பத்ர கவுடர் சீமான்களுக்காக மாடு மேய்த்து வந்தோம். அந்தப் பசுக்கள் எறும்புப் புற்றில் பால் சொரிந்த போது எஜமானர்களிடம் ஓடி வந்து சொன்னோம். அவர்கள் முதலில் எங்கள் வாயில் சொற்களைப் போட்டார்கள். புற்றை அகழ, சிவலிங்கம் தோன்றியதாகச் சொல்லச் சொன்னார்கள். அந்த சிவலிங்கம் தான் நீங்கள் வழிபட்டது. பின்னால் இருக்கும் மேடைதான் எறும்புப் புற்று இருந்த இடம்”. ஆவியோன் ஒரு வினாடி மௌனத்துக்கு அப்புறம் கூறினான்.
அவர்கள் இருவரும் மிதக்க, சாரட்டும் குதிரை வீரர்களும் கெலடி வெங்கடப்ப நாயக்கரின் அரண்மனைக்குச் செல்லும் பாதையில் திரும்பியானது.
மிகுந்த சுத்தம் கொண்டதும், நன்கு பராமரிக்கப்படுவதுமான அந்தப் பாதை அரண்மனைக்குச் செல்லும் தகுதி வாய்ந்து, சிறப்பு இலச்சினை பெற்ற அரசியல், இதர துறை பிரமுகர்களுக்கானது. நேமிநாதன் அரசியல் பெரும் பிரமுகராகச் சுட்டப்பட்டு அதிவேகமாக இப்பாதையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சாரட் அரண்மனை வளாக வெளி வாசலுக்கு முன் நிற்க, நேமிநாதன் இறங்கினான். மரியாதையோடு அவனுக்குத் தலை வணங்கினர் அங்கே இருந்த காவலர்கள். அது குறைவு படாமல் மெய்யிலும் உடுப்பிலும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று சோதிக்கப்பட்டு உள்ளே இரண்டாம் வாசலுக்கு தலைவாசல் வழியாகப் போகக் கோரப்பட்டான்.
”எங்களைப் போல் மாடு மேய்த்து, கன்றுகாலி பராமரித்து, வயலில் விதைப்பு முதல் அறுவடை வரை உழைத்த இனம் தான் இப்போதைய மன்னன் வெங்கடப்பனும். அவன் மூதாதையர் சௌட, பத்ர கவுடர்களும். எங்களைப் பலி கொடுத்து புதையல் அகழ்ந்து மேலினமானார்கள் அவர்கள். முதலில் எங்கள் வாயில் வார்த்தைகளைப் போட்டார்கள். அதன்பின் எங்கள் கழுத்தில் வாளைச் செலுத்த எங்களையே வேண்டிக் கொண்டார்கள். எங்கள் உயிரை உடலில் இருந்து நீக்கினார்கள். கேளும் நேமிநாதரே, இது தகுமா?” நிறையப் பேசும் ஆவியோன் வெஞ்சினம் உரைக்க மற்றவன் கண்ணீர் உகுத்தான்.
நேமிநாதனுக்கு சூரியன் வெளிச்சப்பட்டிருக்கும் பகலில் இப்படி ஆவியும் பூதமும் தன்னை ஏன் பிடித்துக் கொண்டு, தன்னோடு கெலடிக்குள் மிதந்து, பேசுவது பாதி புரிந்தும் மீதி அர்த்த சூனியமாகவும் இருக்கக் கூடவே ஓடி வரவேண்டும் என்று புரியவில்லை.
“ஐயா, அரண்மனைக்குள் அரசரை சந்திக்கப் போகிறேன். நீங்கள் வேறு சலசலவென்று என்னைச் சுற்றி வந்து என் செவியில் விடாது பேசிக்கொண்டிருந்தால் நான் வந்த காரியம் எப்படி நடக்கும்?”
சற்று கோபத்துடன் நேமிநாதன் இதைச் சொல்லும்போது குரலில் கண்டிப்பு ஏறியிருப்பது தெரிந்தது. அப்போது ஆவியோன் ஒருத்தன் நைச்சியமாகச் சொன்னது –
“எங்களுக்கு அரண்மனைக்குள் போயோ, அரசன் வெங்கடபதி நாயக்கரைப் பார்த்து வணங்கியோ ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. உம்மோடு நீர் கெலடியில் இருக்கும் போது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போவதே உத்தேசம்”.
“அது ஏன் என்னிடம் மட்டும் பேசணும்? ஆயிரம் பேர் இந்தக் கதவுகள் வழியே கெலடி நகரத்துக்கு உள்ளும் வெளியும் சென்றுகொண்டிருக்கிறார்களே. அவர்களில் வேறு யாரையாவது கூப்பிட்டுச் சொல்லலாமே?”
“ஆனால் அவர்கள் விரைவில் மெய்யாகக் கூடிய அரசராகும் கனவுகளோடும் ஆசைகளோடும் கெலடி வரவில்லை. கவுடர்கள் போல் அரசாள அடங்காத ஆசை உமக்கு. அரசனாக வாய்ப்பு அநேகம். அரசனாகும்போது எங்களுக்கும் கடைத்தேற வாய்ப்பு கிடைக்க உம் உதவி வேண்டும். எங்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தால் செய்வீரா?” காளி கேட்டான்.
நேமிநாதன் மௌனமாக அவர்களிடம் சொன்னான் –
“அப்படியென்றால் நான் திரும்பும்போது பேசுங்கள்”.
அவன் சாரட் குதிரை வீரர்களுக்கு வழிவிட அந்த இரண்டு வீரர்களும் முன்னால் போய் கபாடங்களுக்கு முன் மணி ஒலித்துக் காத்திருந்தனர். திட்டிவாசல் திறக்க தலையை மட்டும் நீட்டிப் பார்த்த அலுவலகர் நேமிநாதனைப் பார்த்து தலையசைத்து வணங்கி அவன் முன்னால் கதவு அருகே வரமுடியுமா எனக் கேட்டான்.
நடக்க வேணும் என்றால் நடக்கணும். ஓடணும்னா ஓடணும். தவழணும்னா தவழணும். ராஜாவைப் பார்க்கிறது சும்மாவா என்ன என்று ஆவியோன் சொல்ல, மற்றவன் சத்தமில்லாமல் சிரித்தான். அவனுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.
”ஜெர்ஸோப்பா மகாமன்னருக்கு கெலடி மாமன்னர் ஒரு செய்தி கையில் தரச் சொல்லி இருக்கிறார். அது உசிதமானது என்றால் உங்கள் வரவு நல்வரவானது”. திட்டிவாசல் அதிகாரி நேமிநாதனை வணங்கிச் சொன்னான்.
மடித்து மரப்பட்டை சேர்த்து ஒட்டிய கரமுர என்ற புதுக்காகிதத்தில் எழுதியிருந்த லிகிதத்தைப் படிக்கும் முன் நேமிநாதன் அதிகாரியைக் கேட்டான் – ”உசிதமில்லை என்று எனக்குத் தோன்றினாலோ?”
“பேரரசரே, உசிதமில்லை என்றால் வந்த வழியே போவது தவிர வேறே வழியேதுமில்லை என்று நேமிநாத ராஜ்குமாரர் அறியாததில்லை”.
“காகிதத்துலே எழுதியிருக்கார். உம்மை பெரிய மனுஷனா எடுத்துத்தான் அதிக பட்ச மரியாதையாக காகித லிகிதம் தர்றார். உசிதமில்லேன்னு அதைப் புறக்கணிக்க வேணாம்”.
காளி குரல் இப்போது ஆலோசனை சொல்வதாக மாறியிருந்தது. அதை விட ஆச்சரியம் அது நஞ்சுண்டய்யா பிரதானி குரல் போல் ஒலித்தது.
லேகனத்தைப் பிரித்துப் படித்தான் நேமிநாதன். வெங்கடப்ப நாயக்கர் எழுதி கையொப்பம் இட்டிருந்த கடிதம் அது-
“இன்று அலுவல் நிமித்தம் மால்பெ போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் திடீரென்று வந்ததுபோல் எனக்கும் அதேபடி ஒரு பயணம் வைக்கவேண்டிப் போனது. இன்று ஒரு நாள், இந்த பிற்பகுதி நாள் மட்டும் தாங்கள் காத்திருக்க முடியும் என்றால் நாம் நாளை காலை ஏழு மணிக்கு சந்திக்கலாம். தங்களுக்கு இங்கே நான் இல்லாத குறையே தெரியாமல் முக்கிய விருந்தினருக்கான உபசரிப்பை ராணியம்மாளும், என் இரண்டு மகன்களான ராஜகுமாரர்களும் தங்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறார்கள். நல்ல அறையும் சித்தம் செய்யப்பட்டுள்ளது”.
அந்த லேகனத்திலேயே வெங்கடப்ப நாயக்கரின் குணமும் திட்டமிடலும் பிரியமும் புலப்பட, நேமிநாதன் அரண்மனைக்குள் பிரவேசித்தான்.
அரண்மனை உத்தியோகஸ்தன் பின்னால் திரும்பி சைகை செய்ய, நேமிநாதனுக்கான மரியாதையாக ஏழு தடவை பீரங்கி ஒலித்து முரசும் அதிர்ந்தது.
Medieval Cavalry
Pic Ack en.wikipedia.org
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

