பெரு நாவல் ‘மிளகு’ – A chat before midday siesta in Gersoppa 1610 AD

ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஒவ்வொரு மனையிலும் இருக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட பிரதி தினமும், காலை ஏழிலிருந்து பிற்பகல் அல்லது சாயந்திரம் வரை காணாமல், முப்பது கல் சுற்றளவில் ஏதாவது கிரஹத்தில் மங்கலமான, அல்லாத சடங்கு நிறைவேற்றித்தரப் போயிருப்பதால், அக்ரஹாரத்தில் ஆண் மூச்சு ஆகக் குறைவாகவே இருக்கும்.

எழுபது வயதில் ஓய்வு பெற்ற சாஸ்திரிகள் கூட குரல் நடுங்காமல் ஸ்பஷ்டமாக எழும் வரை வேதபாடசாலையில் பாடம் நடத்தப் போய் விடுவார்கள் பெரும்பாலும்.

வாரம் ஏழு நாள், மாதத்துக்கு ஒரு சுக்ல பட்சம், ஒரு கிருஷ்ண பட்சம், வருஷம் முன்னூற்று அறுபது நாள் என்று அக்ரஹாரத்து ஆண்கள் பரபரப்பாக இருப்பார்கள்.

அவற்றில் ஒரு நாள் இது.

வழக்கமான ஆண்வாடை இல்லாத அமைதி. அதைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் குரல். தொடர்ந்து சிரிப்பு. ராம ராயர் சொல்கிறார் – அக்ரஹாரம்னா ஆண்வாடை பகல்லே இருக்காதுங்கறதை நாம ரெண்டு பேரும் பொய்யாக்கறோம். கேளுங்கோ சிவராம பட்டரே.

இன்று, ராம ராயர் சீமந்தக் கல்யாணம் ஒன்று, நாமகரணம் என்று இரண்டு நிகழ்ச்சிகளில் பிரதான புரோகிதராக இருந்து நடத்தித்தர வேண்டும். அவருடைய அம்மா வழி தொண்ணூறு வயசு உறவினர் ஒருத்தர் திடீரென்று பிராய முதிர்வால் நாலு நாள் முன் இறந்துபோக, இன்னும் ஒரு வாரத்துக்கு ராம ராயருக்கு தாயாதி தீட்டு.

சிவராம பட்டருக்கு  வேறே மாதிரி தீட்டு. கல்யாணம் கழித்து எட்டு வருஷம் கழித்து அவருடைய அகத்துக்காரி பரசுராம விக்ரகம் போல ஒரு சிசுவைப் போனவாரம் பெற்றெடுக்க, சிவராம பட்டர் நாளை நாமகரணம் வரை தீட்டு. எல்லா சிசுவும் கிருஷ்ண விக்ரகம். இந்தக் குழந்தை சிரிக்கவே மாட்டேன் என்கிறதாம். அதனால் பரசுராம விக்ரகமாம்.

ஆக இரண்டு தீட்டு வாத்தியார்களும் காலைப் பசியாறி வாசல் திண்ணையில் உட்கார்ந்து விஸ்தாரமாக வெற்றிலை போட்டு, சகல வம்பையும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வம்பு, தெரு வம்பு, அடுத்த தெரு வம்பு என்று அடுக்கடுக்காக அலசி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் இருவரும்.

ஜெருஸோப்பாவின் விசுவாசமான பிரஜைகள் அவர்கள். சென்னபைரதேவி மிளகு ராணி மேல் மதிப்பும் பிரியமும் வைத்திருக்கிறவர்கள். என்றாலும் இப்போது சென்னா ராஜாங்கத்தில் அலுப்பு தோன்ற ஆரம்பித்திருக்கிறது இரண்டு பேருக்கும்.

அறுபது வயதுக்கு மேலாகி விட்டதே, இன்னும் ராணியாக இருந்தாகணுமா?

சமணனும் சைவனும் புதுசாக வந்த கிறிஸ்துவனும் நாள் முழுக்க சண்டை போட்டுண்டிருக்க இந்தம்மா ஊர் முழுக்க கோவில், ஜைன பஸ்தி என்று கட்டிண்டே போக என்ன அவசியம்?

மிளகு போர்த்துகலுக்கு விற்று வந்த தங்கம் தங்கமான வருமானத்தை எல்லாம் இப்படி கட்டிடம் கட்டி, ஊதாரித்தனமா செலவு செய்யணுமா?

வைதீகர்கள் சாயந்திரம் பம்மிப் பம்மி சாயந்திரங்களில் ஷெராவதி ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் செய்யக் குழுமும்போது தலைநீட்டும் சமாசாரம் தான் இது. இங்கே வீட்டுத் திண்ணையில் கூடுதல் சுதந்திரமாக அலசலாம். அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

ராம ராயர் அடுத்த வெற்றிலையை மடியில் ஈரம் துடைத்து விட்டு உடைத்த பாக்கும் குல்கந்துமாக மேலே வைத்துச் சுருட்டி வாயில் இட்டுக்கொண்டு அந்த தெய்வீக ருசியையும் பேரானந்தத்தையும் ஒரு வினாடி அமைதியாகக் கண்மூடி ரசிக்கிறார். உடனே பேச ஆரம்பிக்கிறார் –

பட்டரே, ஏன் கேக்கறீர், மிந்தி எல்லாம் மிர்ஜான் கோட்டைக்குள்ளே சிவாச்சாரியார்களோ, வைஷ்ணவ, மாத்வ பெரியவாளோ எப்போவாவது வந்திருந்து அகண்டநாம ஜெபம், பஜனை இப்படி ஏதாவது நடத்தி மழை வருதான்னு பார்ப்பா. சில சமயம் வரும், சில சமயம் அடுத்த வாரமோ அடுத்த மாசமோ வரும்.

இப்போ சென்னா மகாராணிக்கு எல்லாமே அவசரம். சங்கராசார்யர்  சமகம் சொல்லி பராசக்தி பூஜை பண்ணி உபன்யாசம் செஞ்சா உடனே மழை வரணும். ராமானுஜ தாத்தாசாரியார் சகஸ்ரகோடி நாம அர்ச்சனை பண்ணினா, அடுத்த ஷணம் வெட்டுக்கிளி உபத்ரவம் நீங்கி அதுகள் தாமே சமுத்திரத்திலே விழுந்து ஆத்மஹத்ய பண்ணிக்கணும். பாலிமர் மடத்து மத்வ சுவாமிகள் வந்து ஆசிர்வதிச்ச அடுத்த நிமிஷம் உபரியாக கொட்டற மழை உடனே நிக்கணும். ஜுரம் வந்து படுத்தவா எல்லாருக்கும் உடனே குணமாகணும்.

ஆமா, பொறுமைங்கறதே கிடையாது ராயரே

இதெல்லாம் நடக்கலேன்னா அவாளை நமஸ்கரிச்சு அனுப்பி வச்சுட்டு, அம்மண  சாமிகளை உடனே கூப்பிட்டு உட்கார்த்தி அவா தர்மப்படி பூஜிக்கச் சொல்ல வேண்டியது. அவாளோ, பயிர் பண்ணாதே கிருமிக்கு சாப்பாடு கிடைக்காமல் போகும், தலையிலே தண்ணி விட்டுண்டு குளிக்காதே, தலையிலே இருக்கற பேன் எல்லாம் அநியாயமா செத்துப் போகும், ராத்திரியிலே சாப்பிடாத. புழு பூச்சி வயித்துக்கு உள்ளே போய் ஆகாரமாயிடும். கல்லை எடுத்து நாயை அடிக்காதே. கல்லுக்கும் வலிக்கும், நாய்க்கும் வலிக்கும். இப்படி அதிவிசித்திரமாக ஏதாவது சொல்லிட்டு அவா அதிருஷ்டம், ஒரு நிமிஷம் கழிச்சு சடசடன்னு நாலு தூத்தல் போட்டு மழையா வலுத்துடும் ஒரு நாள்.

அந்த நக்னமுனி தான் மழையக் கொண்டு வந்தார்னு அவரைத் தொட்டு கண்ணிலே ஒத்திண்டு ஆனந்த பாஷ்பம், இதெல்லாம் தேவையா?

 

Pic Medieval Street

Ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2021 08:07
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.