மிளகு – In the wonderland of minor miracles

நான் சாரதா. நான் தெரிசா. நான் கொச்சு தெரிசா. நான் சாரதா தெரிசா.

இன்றைக்கு என் பிறந்தநாள். ஜூலை 4 அமெரிக்காவுக்கு சுதந்திரதினம் என்பதோடு எனக்கும் விசேஷமான தினம். அறுபத்தைந்து வயது ஆகிறது. அம்பலப்புழை தேகண்ட என்றால் சமையல்கார பிராமணர்களின் கிட்டத்தட்ட நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட குடும்பத்தில் வந்தவள். அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பத்தில் இருந்து என் கொள்ளுத்தாத்தா மதம் மாறியதால் அவர் ஜான் கிட்டாவய்யர் ஆனார். நான் மறுபடி மதம் மாறி இந்துவாக, சாரதாவாக ஆனேன்.  ஜான் கிட்டாவய்யரின் மகள் சாரதாவாக இருந்து வல்ய தெரிசா ஆனாள். நான் கொச்சு தெரிசா.

அம்பலப்புழை குடும்பம் போல  நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட அரசூர் குடும்பத்தில் நான் வாழ்க்கைப்பட்டவள்.  அரசூர் குடும்பத்தில் சங்கர அய்யருக்கு என் கொள்ளுத் தாத்தாவின் தங்கை பகவதி அம்மாள் வாழ்க்கைப்பட்டு வம்சம் விருத்தியானது. பகவதிப் பாட்டியின் பேரன் சின்னச் சங்கரனுக்குத்தான் நான் தாலி கட்டாமலேயே வாழ்க்கைப்பட்டேன்.  அரசூர், அம்பலப்புழை குடும்பங்களை இணைப்பது நானும், எங்கள் அன்பு மகன் மருதுவும்.

என் அறுபதாண்டு ஜீவிதத்தில் அற்புதங்களை நான் தரிசிக்க, அனுபவிக்கத் தொடங்கியது மேற்கு யார்க்‌ஷயரில் இதுவரை இல்லாத அதிசயமாக ஒரு மயில் வந்து ஆடியதில்தான். முப்பது வருடம் முன் நான் கால்டர்டேலில் நடத்தி வந்த பிஷ் அண்ட் சிப்ஸ் கடை வாசலில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

என் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான அமேயார் பாதிரியார் அந்த வினோதப் பறவை என்ன என்று வாட்டிகனுக்கு, சங்கைக்குரிய போப் ஆண்டவருக்கு லிகிதம் எழுதி விளக்கம் வந்து சேர எதிர்பார்த்திருந்தார்.

அதற்கு முன், என் முதல் கணவன் மெட்காஃப் உயிரோடு இருந்த காலத்தில் அதிசயமான ஒரு காரை செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கி அடிக்கடி அங்கே இங்கே மோதி உடைத்து ஒருமாதிரி ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தக் காரில் விபத்து நிகழ்வது அதிசயமில்லை. பெட்ரோல் தேவையில்லாமல் தண்ணீரில் ஓடுவது என்பதே பேராச்சரியம்.

மெட்காஃப் இறந்துபோய் முசாபரை நான் இரண்டாம் கணவனாகத் திருமணம் செய்து கொண்டபோது அந்தக் காரை ஓட்டிப் போக அவன் விருப்பப் படவில்லை. எனினும் அதன் கியாதி லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் பரவ, இங்கிலாந்து ஸ்காட்லாந்து பேரரசியான ஹர் மெஜஸ்ட்டி எலிசபெத் மகாராணி அந்தக்காரைப் பார்க்க விருப்பப்பட்டதால் அமேயர் பாதிரியாரும் மெட்காஃபின் சிநேகிதன் ஒருவனும் காரை லண்டனுக்கு எடுத்துப்போய் அரண்மனை வாசலில் விட அந்த வாகனம் தானே நகர்ந்து விரியத் திறந்த அரண்மனைக் கதவுகள் கடந்து உள்ளே போக, கதவுகள் மறுபடி மூடிக்கொண்டனவாம். அப்புறம் என்னாச்சோ அந்தக் காருக்கு, தெரியவில்லை.

என் வாழ்க்கையில் அதிசயங்கள் அத்தோடு முடிவடைந்தன என்று நான் கருதியிருந்த காலத்தில் அதாவது இன்றைக்கு முப்பது வருடம் முன்பு சின்னச் சங்கரனை முதலில் சந்திப்பதற்கு முன் அடுத்த ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறையில் நானும் என் அப்போதைய கணவன் முசாஃபரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த நேரம் அது. தற்செயலாக அரசூரில் சின்னச் சங்கரனின் பூர்வீகமான வீட்டுக்குப் போயிருந்தேன்.  என்றால் பூட்டியிருந்த கதவுகளுக்கு இந்தப் பக்கம் இருந்து ஒரு ராத்திரி நான் பார்க்க, உள்ளே தீப ஒளியில்  ஹாலில் போட்டு வைத்த ஊஞ்சல் ஆடி அசைந்தபடி இருந்தது. ஊஞ்சலில் குடுமியோடு ஒரு அழகனும் ஆவி ரூபத்தில் ஒரு அழகியும் காதல் புரிந்து கொண்டிருந்தது எனக்கு சிறிது நேரம் கண்ணில் பட்டு நின்று போனது. இந்த மண்ணில் எனக்கு ஏற்பட்ட முதல் அதிசய அனுபவம் அது.

அதற்கு அப்புறம் நானும் முசாஃபரும்  அம்பலப்புழையில் என் பூர்வீக வீட்டின் சிதிலங்களைப் பார்வையிட்டு விட்டு, நூறு வருடம் முன் சாவக்காட்டு வயசன் என்ற குடும்பத்துக்குப் பரிச்சயமான ஒரு கிழவருக்கு புதையல் கிடைத்த தலத்துக்குப் போனோம். புதையுண்ட போத்தலில் நிறைந்திருந்த ஏதோ தைலத்தில் தோய்த்த பலா இலையை கிழவன் வீசியெறிய அந்த இலையை அசைபோட்டு உண்ட பசுமாடு ஒன்று திடீரென்று கட்டைக்குரலில் இங்க்லீஷில் பேச ஆரம்பித்த அந்த இடத்தில் என் கால் பட்டதும்   கரகரத்த குரலில் என்னை அந்தப் பசு வரவேற்றுப் பேசியது மறக்க முடியாத ஒன்று.

fish and chips shop pic

ack wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 04:32
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.