மிளகு பெருநாவலில் இருந்து : The Calderdale – Kuttanadu virtual way of wild pepper creepers

சாரதா – தெரிசாவும் அசுர மிளகும் – நீள்பதிவிலிருந்து ஒரு சிறு பகுதி

முப்பது வருஷம் என் வாழ்க்கையில் அதிசயங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த சில மாதங்களாக, குறிப்பாகச் சொல்லப் போனால் வருஷம் 2000 பிறந்தபின் ஆச்சரியகரமான நிகழ்வுகள் மறுபடி தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.

டிசம்பர் 1999 இறுதியில் நான் என் மகன் மருதுவோடு கொஞ்சம் நாள் லண்டன் கருப்புக் குதிரை வீதி பலமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்து வர லண்டன் போயிருந்தேன். சின்னச் சங்கரன் காத்மாண்டுவில் இருந்து தில்லி போய்ச் சேர ஏறிய விமானம் மத அடிப்படைத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கண்ட்ஹரில் எந்த நேரமும் சின்னச் சங்கரன் உயிர் போகலாம் என்ற பயங்கரமான சூழ்நிலை என்னைப் பாதித்த டிசம்பர் இறுதி 1999இல் தான் அற்புதங்கள் என்னை திரும்ப சூழ்கின்றன.

சின்னச் சங்கரன் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டபோது நான் லண்டனில் இருந்து தில்லி போயிருந்தேன். முதல் தடவையாக என் சின்னச் சங்கரன் சங்கூவின் சட்டபூர்வ மனைவி வசந்தி, மகள் பகவதிக்குட்டியோடு கூட சங்கரனின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். சங்கரன் கந்தஹரில் இருந்து மீட்கப்பட்டு தில்லி பாலம் விமானத்தாவளத்தில் வந்து சேர்ந்தபோது வசந்தி அவனைக் கட்டியணைத்துக் கொண்டபோது என்னையும் அந்த அணைப்பு வளையத்தில் வந்திருக்கச் சொன்னதை மறக்க முடியாது. என்றாலும் நான் குறிப்பிட்ட அதிசயம் அது இல்லை.

தில்லியில் இருந்து அம்பலப்புழை வந்த ராத்திரி வீட்டைச் சூழ்ந்தது ஒரு வினோதமான தாவரம். அசுர மிளகு என்று அதன் பெயரை எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் பிஷாரடி குறிப்பிட்டார்.  பெயரில் என்ன இருக்கிறது?

சாயந்திரம் நான் கொச்சி நெடும்பாசேரி விமானத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது வாசல் படி ஓரமாக செடிபோல் இரு புறமும் தழைத்திருந்ததைக் கண்டபோது ஏதோ காட்டுச்செடி வாசலுக்கு வந்திருக்கிறது, நான் இல்லாத நேரத்தில் வாசல் தோட்டத்தை யாரும் கவனிக்காததால் ஏதேதோ தாவரங்கள் அண்டியிருக்கின்றன என்று தோன்ற உள்ளே போகிறேன்.

மனமெல்லாம் சின்னச்சங்கரனின் மனத் துன்பமும், சாவு என்ற பள்ளத்தாக்கின் ஓரம் வரை போய் எட்டிப் பார்த்து திரும்பிய சங்கரனின் பரிதாபத்துக்குரிய நிலையும் தான் நினைவில் முழுக்கச் சூழ்ந்திருந்ததால் வாசல் தாவரம் நினைவில் வரவேயில்லை.

ராத்திரி எட்டு மணியைப் போல் வீட்டுக் காரியம் செய்து வீட்டைப் பராமரிக்கவும், அத்தியாவசிய சமையல் செய்யவும் நான் ஏற்பாடு செய்திருக்கும் சுகிர்தா என்ற பேரிளம்பெண் வீட்டு குசினியில் முழுக்கப் பற்றிப் படர்ந்து இன்னும் அதிகமாகிக்கொண்டு அந்த அசுரமிளகுக் கொடி ராட்சச வேகத்தில் வீட்டுக்குள் பரவி வருவதை முதலில் பார்த்து குடல் நடுங்க சத்தமிடுகிறாள்.

வீட்டு மாடியில் ஓடித் திரிந்த கரப்பான் பூச்சிகளும், எங்கிருந்தோ எப்படியோ ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்திருந்த எலிகளும் சத்தியத்துக்குக் கட்டப்பட்டதுபோல் மேலே வேகமாக வளர்ந்து வரும் அசுர மிளகுக் கொடிக்குள் நுழைகின்றன. பின் அவை வெளியே வருவதில்லை.

மேடம் எலி இன்னிக்கு உள்ளே போகும்னா, நானும் நீங்களும் உள்ளே போக எவ்வளவு நேரம் பிடிக்கப் போறது? ஆப்பிரிக்காவிலே காட்டுலே திரியறவங்களைக் கட்டி அணைச்சு ரத்தத்தை உறிஞ்சற மரம் பற்றி பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கேன். இங்கே அம்பலப்புழையிலே மாமிசம் தின்னற மிளகுக்கொடி பற்றி, அதுவும் ஒரு மணி நேரத்திலே வீட்டை சூழ்கிற ராட்சச தாவரம் பற்றி கேட்டதே இல்லை. இப்போது தான் பார்க்கிறேன் என்று பயமும் ஆர்வமும் கலந்து கூச்சலிடுகிறாள் சுகிர்தா.

இரண்டு பக்கமும் பார்த்து விட்டு என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள் அவள். இது வேறு எங்கோ இட்டுச் செல்லும் என்று தோன்ற மெல்ல அவளை ஆலிங்கனத்தில் இருந்து விடுவித்து, கீழே போகச் சொல்கிறேன். மாடிப்படிகள் இறங்கும் பாதி தூரம் வரை அசுர மிளகு பரவியிருக்கிறது.

வீட்டை விட்டுப் போய் என் ஓட்டலில் மேல் மாடியில் என் உபயோகத்துக்காக எழுப்பியிருக்கும் தனி அறைக்குத் தற்காலிகமாகக் குடிபெயரலாம் என்று முடிவு செய்து மாடிப்படி இறங்கும்போது கீழே டாக்டர் பிஷாரடி நிற்கிறார். திலீப் ராவ்ஜியும் ரஷ்ய முதுபெண் என் வயதானவள் ஒருத்தியுமாக வாசலில் தாவர முற்றுகை தவிர்த்து உள்ளே வருவதை பார்க்கிறேன்.

பீஜத்தை கெல்லிப் போடுங்க என்று பிஷாரடி சத்தமாக கீழே வந்து நிற்கும் கிட்டாவய்யர் உணவு விடுதி பணியாளர்களிடம் கூச்சலிடுகிறார். அடுத்த பத்தாவது நிமிடம் வாசலுக்கு நேரே இடம் கொண்ட மிளகுக் கொடியின் வேர் தட்டுப்பட அதை அசைத்துப் பிடுங்கி, வேரை அறுத்தெறிகிறார்கள்.

அதில் ஒரு மிளகை வாயிலிட்டுச் சுவைத்த சுகிர்தா பசுமாடு இங்க்லீஷ் பேசுவது போல் கரகரவென்ற குரலில் எல்லோரையும் போகச் சொல்கிறாள். துப்பு சுகிர்தா துப்பு என்று நான் அவள் தலையைக் குலுக்க தரையில் அவள் மென்ற மிளகு கூழாக வந்து விழுகிறது. துப்பிட்டேன் மேடம் என்று அவளுடைய கிரீச்சிடும் குரலில் சொல்கிறாள் சுகிர்தா.

பத்தே நிமிடத்தில் மேலே படர்ந்தேறிய அசுர மிளகு தடதடவென்று கீழே குவிந்து விழுந்து குப்பையாகிறது. வீட்டுப் பின்னாலும் பாருங்கள் என்று பிஷாரடி சத்தம்போட நான் மாடியிலும் கொடி வேர் பரப்ப பால்கனியில் மண் நிறைத்த தொட்டிகள் உண்டென்பது நினைவு வர திரும்ப மேலே ஓடுகிறேன். டாக்டர் பிஷாரடியை வாங்க என்று வரவேற்கக் கூடத் தோன்றாமல் கற்கால மனுஷி உசிர் பயத்தில் ஓடுவது போல் செயல்படுகிறேன்.

ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ணா அதிபரும் இன்னும் இரண்டு பேரும் வாசல் அழைப்பு மணி அழுத்துகிறார்கள்.  பால்கனியில் இருந்து பார்க்க, கை ஆட்டுகிறார்கள். ராத்திரி உடுப்பில், பரவாயில்லை என்ன அவசரமோ என்று மாடிப்படி இறங்கி வருகிறேன்.

“மேடம் திலீப் ராவ்ஜி சாரும் மதம்மா ஒருத்தரும் ரூம் போட்டிருக்காங்க என்று ஹோட்டல் அதிபர் ஆரம்பிக்க, எனக்கெதுக்கு அந்த அந்தரங்கம் எல்லாம் என்றதாக கையை அசைத்து மேலே போகலாம் என்கிறேன்.

மதாம்மா  ரூம் சர்வீஸை ஒரு மணி நேரம் முன்னால் கூப்பிட்டு ஏதோ ராட்சச தாவரம் அவங்களை பெட் மேலே இருந்து இறங்க முடியாமல் சூழ்ந்திருக்கறதாக அலர்றாங்க. போய்ப் பார்த்தால் ஷணத்துக்கு ஷணம் மேலே வளர்ற தாவரம் அது.

யாரோ சொன்னாங்க, உங்க வீட்டுலே முதல்லே வந்து அதை அழிச்சீங்களாம். அவர் முடிப்பதற்குள் நான் களைப்பும்,  பிரயாண அயர்வும், தூக்கத்தில் இருந்து எழுப்ப்பப்பட்ட எரிச்சலுமாக சத்தமிடுகிறேன் –  பீஜத்தை பிடுங்கி எரியுங்க பீஜத்தை பிடுங்குங்க. எரியுங்க. அவர் ஒன்றும் புரியாமல் தன் காலுக்கு நடுவே பார்த்துக்கொள்ள அந்த எரிச்சலிலும் சிரிப்பு வருகிறது. அசுர மிளகு கொடியை பிடுங்கினா வேர் ஒரு இடத்திலே தட்டுப்படும். அந்த பீஜத்தை தூர எரியுங்க அல்லது எரிச்சுடுங்க. கொடி வளராது என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு உறக்கத்தைத் தொடர மாடியேறுகிறேன். உறக்கம் வரவில்லை. அந்த இரவு சுகிர்தா என் வீட்டிலேயே தங்கியிருந்தாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 20:21
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.