இரா. முருகன்'s Blog, page 58
January 16, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – They came, they saw, they plundered
An excerpt from my forthcoming novel MILAGU
ரோகிணி, நல்லா இருக்கீங்களா?
சொத்தைப் பல் தளபதி தான். இவ்வளவு அதிகாலையில் இவன் எங்கே வந்து தொலைந்தான்?
அம்மா அம்மா மஞ்சுநாத் குரல் மறுபடி. படுக்கையை நனைத்திருப்பான். வந்தாச்சு மஞ்சு. ரோகிணி சொல்லியபடி என்ன விஷயம் என்று தளபதியைப் பார்த்துத் தலையாட்டுகிறாள்.
உனக்கு ஒண்ணுமில்லே, வேலையப் பாரு என்று கையை அசைத்து விட்டு அவசரமாக உள்ளே போகிறான் ரோகிணியை முந்திக் கொண்டு. உள்ளிருந்து கதவை அவசரமாகத் தாழ் போட்டுக் கொள்கிறான்.
மஞ்சு மஞ்சு என்று அலறியபடி வெளியில் இருந்து கதவை முட்டுகிறாள். கதவு திறக்கிறது. உறங்கிக் கிடக்கும் மஞ்சுநாத்தை தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு நடக்கிறான் தளபதி.
மயக்க மருந்து கொடுத்திருக்கேன். ஜாக்கிரதையா வச்சிருப்பேன். ஐயாயிரம் வராகனுக்கு தங்கம் கட்டியா கொண்டு வந்து அப்பாண்டை தோப்புலே சாயந்திரத்துக்குள்ளே கைமாற்றிட்டு பிள்ளையை லட்டு மாதிரி உசிரோடு வாங்கிட்டு போ. இல்லேன்னா உன் இஷ்டம்.
சொல்லிவிட்டு அவன் வெளியே நடக்கிறான்.
ஐயோ நில்லு நில்லு என்று ரோகிணி வாசலுக்கு ஓடுவதற்குள் மஞ்சுநாத்தோடு குதிரை வண்டியில் அதி விரைவாக போயே போய்விட்டான்.
வாசலில் மற்ற நாளாக இருந்தால் இதற்குள் பெருங்கூட்டம் கூடியிருக்கும். தெரு கிட்டத்தட்ட முழு நிசப்தமாக இருந்தது. எல்லா வீடுகளிலும் வீட்டைப் பகுதி இடித்து பேய் மிளகு தாவரம் வைத்து மூடிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
மஞ்சு என்று ரோகிணி அலறியது வெற்றிடத்தில் எதிரொலித்துத் திரும்ப வெறுமை பூசி வந்தது. பின்னால் என்னமோ சத்தம். திரும்பினாள் ரோகிணி.
எதிர் வீட்டு சிதிலமான தாழ்வாரத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது பரமன். பெட்டிபெட்டியாக புதையல் தயாரித்தபோது முதுகில் துளைத்த விழிகள் அவருடையவை தானா.
ரோகிணியைப் பார்த்ததும், சரியாகச் சொன்னால், ரோகிணி அவரைப் பார்த்ததும் பரமன் ஓட ஆரம்பித்தார். உயிருக்குப் பயந்த ஓட்டம் அது.
எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் தன்னைக் கொன்றால் காலக்கோடே கந்தர்கோளமாகி விடும் என்று அவருக்கு ரோகிணியிடம் விளக்க ஆசை தான். அவள் கேட்க மாட்டாள்.
ரோகிணி நினைப்பதோ வேறு விதத்தில். மஞ்சுநாத்தை திரும்ப கூட்டிவரப் பரமன் அச்சாணியாகச் செயல்படலாம். காசு சனியன் தொலைந்தால் போகிறது. மஞ்சுநாத் எந்த அபாயமும் இல்லாமல் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும்.
பரம-ரே ஓ பரமரே என்று குரல் எடுத்துக் கூப்பிட கைவண்டியில் தட்டு முட்டு பாத்திரங்களும் குழந்தைகளுமாக இருத்தி தள்ளிக்கொண்டு போகும் ரோகிணியைத் தெரிந்த யாரோ அவள் கணவன் பெயரைச் சொல்லி விளிப்பதை ஒரு வினாடி சுவாரசியமாகப் பார்த்து வேலையில் தொடர்ந்தார்கள்.
ஓ ஸ்வாமிவரே என்று கூப்பிட ஆரம்பித்தாள் அவள். பரமன் உயிருக்குப் பயந்து ஓடினது ஓடினதுதான். தெரு முனையில் பெரிய சத்தத்தோடு புழுதி பறக்க நான்கு குதிரை வீரர்கள் வந்து கொண்டிருந்தது தெரிந்தது.
வந்துவிட்டார்கள். கேலடி படையின் ஜெருஸூப்பா கொள்ளையர்கள் ஊருக்குள், தெருவுக்குள் வந்து விட்டார்கள்.
வீட்டுக்குள் சாடி அடைத்து தயாராக வைத்திருந்த பெரிய சாக்குப்பைகளை சாரட்டில் கொண்டு போய் வைத்தாள். அப்பாண்டை பூங்காவை நோக்கி சாரட் விரைந்தபோது பின்னால் நூற்றுக்கணக்கான கொள்ளைக்காரர்கள். ஜெர்ஸோப்பா கேலடி படை
காலை ஏழு மணி.
கேலடி படை ஒவ்வொரு கட்டிடமாக வெளியே கூட்டமாக நிற்கிறது. ஊரை விட்டு தப்பி ஓடுகிறவர்களில் சிலரைப் பிடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் அந்த பிணைகைதியை இழுத்துப் போய் நிறுத்துகிறது.
சொல்லு இந்த வீட்டுக்காரன் என்ன தொழில் செய்கிறவன்?
எஜமான்களே அவன் நகையாசாரி.
அடுத்த வீடு?
அரண்மனை உத்தியோகஸ்தன். சுங்கத்துறை அதிகாரி.
அப்போது ஆசாரியை விட்டுவிட்டு அரண்மனைக்காரன் வீட்டைப் பிடியுங்கள். நிறைய சொத்து சேர்த்திருப்பான் மிளகுராணி பெயரைச் சொல்லி.
pic medieval plundering
ack fineartamerica.com
பெரு நாவல் ‘மிளகு’ – Royal Soldiers’ Retreat and a Requiem for Nemi
An excerpt from my forthcoming novel MILAGU
உங்களை நாற்பது கல் கொத்தடிமைகளாக நடக்க வைக்க லச்சுவுக்கு எப்படி மனம் வரும் மக்களே. சாரட்டுக்கு ஐந்து பேராக ஏறிக் கொள்ளுங்கள்.
குரலில் அன்பும் வாத்சல்யமும் நிறைந்து வழிய உடனே இளவரசர் ஜயவிஜயிபவ என்று வாழ்த்தும் ஒலி மைதானத்தில் எதிரொலித்தது.
செல்வோம் ஜெருஸூப்பா என்று லட்சுமணன் அடியெடுத்து வைக்க, செல்வோம் ஜெருஸூப்பா என்று இருநூறு குரல்கள் ஆதரித்து முழங்கின.
ஜெருஸூப்பா போய் என்ன செய்வீர்கள்? அடுத்த கேள்வியைக் கேட்டபடி குதிரையேறி நகர்ந்தான் லச்சு. போரிடுவோம் என்றது படையணி. யாரோடு போரிடுவீர்? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.
இன்னொரு தடவை கேட்டான் லச்சு. அப்போதும் குழப்பமான மௌனம் ஓங்கியடித்தது. பதில் இல்லை ஏன் என்று கேட்டபடி அந்த சாரட் அணிவகுப்பை இடவலம் குதிரையேறிச் சுற்றி வந்தான் லச்சு. வெகு திருப்தியாக அவன் இருந்ததை முகக்குறிப்பு சொன்னது.
யாரோடு யுத்தம் என்றால் பதிலுரைக்க மாட்டீரோ? என்றால் நானே உரைப்பேன். யாரோடும் போரிட நாம் போகவில்லை. அங்கே எந்தப் படையும் இல்லை. அங்கிருப்பவர்கள் எல்லோரும் சென்னபைரதேவியின் பேயாட்சிக்கு எதிரே திரண்டெழுந்த பொதுமக்கள். போராட்ட உணர்வு மிகுந்து ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகச் செல்வம் வைத்திருப்பதற்காக அடித்து உதைத்து பறிப்பவர்கள். அரசு கட்டிடங்கள், மாளிகைகளை இடித்துத் தள்ள, சூறையாட முனைந்தவர்கள். நாமிருக்கும்போது அவர்களை சூறையாட விடலாமா?
இந்த இடத்தில் கூட்டமாக ஒலித்தது சிரிப்பு சத்தம். லச்சுவும் சிரித்தான்.
நான் வேறே எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. நீங்களும் வேறெந்த அர்த்தத்திலும் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே நாம் அங்கே ஏன் போகிறோம்? அமைதியை நிலைநாட்டப் போகிறோம். சலோ ஜெருஸுப்பா.
ஒற்றைக் குரலில் சலோ ஜெருஸூப்பா சொல்லியபடி படையணி உற்சாகமாக சாரட்களில் நகரந்தது. ஜெருஸூப்பாவுக்கு இந்தப் படையணி போய்ச் சேரும்போது பிற்பகலாக இருக்கும்.
ஜெர்ஸூப்பா காலைப் பொழுது.
ரோகிணி பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். ஜெருஸூப்பாவில் தான் இருக்கிறாள். மனம் ஹொன்னாவரில் இருக்கிறது.
நேமிநாதன் அனுப்பும் தினசரி தூதன் காலை விடியும்போது வந்து விடுவான். இன்றைக்கு விடிந்து ஒரு நாழிகையானது, இரண்டுமானது. அவன் வருகிற வழியாகவே தெரியவில்லை.
தகவல் அறிவிக்க நேமிநாதனிடம் ஏகத்துக்கு இருக்கக் கூடும். ரோகிணியிடமும் இன்று நேமிநாதனுக்குச் சொல்லியனுப்பத் தகவல் உண்டு.
சின்னக் குருவி வராது.
அது அவர்களுக்குள் ஆன பரிபாஷை. அடுத்த கருத்தரித்தது உதிர்ந்து விட்டது. இதைச் சொல்லி அனுப்பினால் போதும்.
இதை வண்டிக்காரத் தகவல் பரிமாற்றத்தில் எடுத்துப் போகமுடியாது.
வண்டிக்காரர்கள் ஜெருஸூப்பா, ஹொன்னாவர், கேலடி, கோகர்ணம், உள்ளால் இப்படி அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே என வண்டி ஓட்டி வரும்போது வழியில் சந்திக்கிற வேறு வண்டிக்காரர்களோடு முக்கிய செய்திகள் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
போர் ஆரம்பித்த பிறகு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. வரட்டும், வரும்போது வரட்டும் என்று ரோகிணி வீட்டுக்குள் சுற்றிச் சுழன்று அதிகாலையிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
வேறு வேலை இல்லை. வீட்டுக் கூடத்தில் மழை, பனிக்காலத்தில் வெதுவெதுப்பாக தட்ப வெப்பம் நிலவ குளிர் காய சுவரில் பதித்த அமைப்பின் பின்னால் ஒரு கதவு வைத்து அதன் பின் வெற்றிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
ரோகிணி சேர்த்து வைத்த பொன்னை எல்லாம் கட்டுகளாக உள்ளே இருந்து எடுத்து வந்து சுவரில் வைத்து கதவை இழுத்து மூடுகிறாள். என்னமோ நினைப்பு வர, ஒரு மரப்பெட்டியை எடுத்து வருகிறாள்.
நீலச் சாயம் அடித்த பெட்டி. உள்ளே குழந்தை கிண்கிணி, குழந்தை மோதிரம் என்று சில தங்க நகைகளையும் மஞ்சுவின் உடைகள் சிலதையும், அவனுடைய பழைய துணிப் பொம்மை ஒன்றையும் எடுத்து வைக்கிறாள்.
ஏன் அப்படிச் செய்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. முதுகில் பதியும் விழிகள். ஆறாம் புலன் சுறுசுறுப்பாக வேலை செய்ய, பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். யாருமில்லை.
பெட்டியை மற்றப் புதையலோடு பத்திரமாக வைத்து திரும்புகிறாள். உள்ளே குழந்தை மஞ்சுநாத் அம்மா என்று அழைக்கும் குரல்.
பொன் புதையலின் கதவை பேய் மிளகு கொண்டு மறைக்கும் முன் அந்த இரும்புக் கதவை பூட்டி சாவியை கழுத்தில் தாலியில் பிணைத்துக் கொள்கிறாள். அப்போது பரமனை நினைக்கிறாள்.
அவன் கட்டிய தாலிக்கு இப்படி சாவி தொங்கவிடும் சங்கிலியாக அமைவதுதான் ஒரே பயன் போல.
அம்மா அம்மா என்று மறுபடியும் மஞ்சுநாத் குரல். அவள் உள்ளே போகும்போது வாசலில் கனமான வேறு குரல்.
ரோகிணி, நல்லா இருக்கீங்களா?
January 15, 2022
கணிதப் பேராசன் மறைவு – சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் திரு காளீஸ்வரன் மறைவு
January 14, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – prince Venkatalakshman’s battalion on a plundering spree
An excerpt from my forthcoming novel MILAGU
கேலடி — நடு இரவு.
வெங்கட லட்சுமணன் கேலடியில் இருந்து புறப்படும்போது படையினர் முன்னூறு பேர் அவன் தலைமையில் அணிவகுந்து வருகிறார்கள். அவர்களிடம் லட்சு என்ற வெங்கட லட்சுமணன் எங்கே போகிறார்கள் என்று சொல்லவில்லை. யுத்தம் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.
தாயாரின் ஜெருஸுப்பா அரசுக்கு நெருக்கடி உண்டாக்கி மகன் படையெடுத்துப் போய் போர் நடத்தும் யுத்தம். வீட்டுக்குள் அடித்துக் கொள்ளாமல் வெளிநபர்கள் தூண்டி விட்டு நடக்கும் போரில் பங்குபெற கேலடி ராஜதானியின் வீரர்களும் பங்கெடுக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
சதுரங்கத்தில் ராஜா, ராணி, அமைச்சர், மதகுரு, தளபதி என்று பெயரிட்டு பின்னணியில் பாதுகாப்பாக அணிவகுத்து இருந்து நகர்த்தப்படும் காய்களைப் பாதுகாக்க முன்வரிசையில் நிற்கும் பெயரில்லாத சிப்பாய்கள் பலிகொடுக்கப் படுவது போல் யாரையோ வெற்றி பெற வைக்க இவர்கள் பயன்படுகிறார்கள்.
எங்கே போக வேண்டும் என்பது கூடத் தெரியப்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து எங்கோ அனுப்பப்பட்டு யாரோடோ போர் செய்ய கட்டளையிடப்படுகிற கூட்டம் இது.
நடக்கலாம் என்று படைத்தலைவன் லச்சு என்ற வெங்கடலட்சுமணன் உத்தரவிட அந்த இருநூறு பேரும் வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தார்கள்.
எங்கே போகவேண்டும் என்று கேட்க வேண்டாமா? ஏன் அந்தக் கேள்வி யாருக்கும் தோன்றவில்லை?
லச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறவனாக படையணி கூட வேகமாக குதிரையேறி நகர்ந்தான். இருநூறு பேரும் இரண்டு இரண்டு பேராக நடக்க சொன்னால் பத்து வினாடியில் நகர்ந்து போய் விடுவார்கள் என்பது மனதில் பட ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நடக்கச் சொல்லிக் கட்டளை இட்டான் உடனே.
அரண்மனைக்கு நல்ல நாள் பெரிய நாளின்போது யாசகம் வாங்க கோட்டைக் காவலர்கள் யாசகர்களை ஒருவர் பின் ஒருவராக நடக்க வைப்பது நினைவு வர, பழையபடி இரண்டிரண்டு பேராக போகச் சொல்லி லச்சு கட்டளை பிறப்பித்தான்.
அந்த நிமிடத்தில் இருநூறு பேர்ப் படையணியில் அவன் மேல் எழுந்திருக்கும் கோபம் அளவிடமுடியாமல் போயிருக்கும் என்று லச்சுவுக்கும் தெரியும். என்றாலும் குதிரையேறி முன்னும் பின்னுமாக படையணியோடு நடக்க, கட்டளையிட கம்பீரமாகத் தோன்றுவது அவனுக்குப் பிடித்துத்தான் இருக்கிறது.
“ஜெருஸூப்பா செல்வோம்’ என்று மூன்று முறை உரக்கக் கட்டளையிட்டான் லச்சு.
நடந்தா?
நாற்பது கல் நடந்து எப்போது ஜெருஸோப்பா சென்றடைய முடியும்? விடிந்து விடுமே. அந்தக் களைப்போடு எப்படி போரிட முடியும்?
அணியின் வேகம் உடனடியாகக் குறைந்து போனது.
என்ன பயமா ஏன் இரையெடுத்த பாம்பு போல் மெல்ல மிக மெல்ல நடக்கிறீர்கள் அனைவரும்? எப்படி நாற்பது கல் நடப்பது என்ற மலைப்பா? கவலையை விடுங்கள். லெச்சு என்ற வெங்கட லட்சுமணன் என்ற கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கரின் மூத்த மகன் நடத்திப்போகும் படை களைத்தும் பசித்தும் போர் செய்யப் போகுமா?
போகாது என்று சொல்வது போல் நம்பிக்கை ஏற்படுத்த கிழக்கில் இருந்து எழுந்த மண் படலம் நகர்ந்து அலைந்தது. வரிசையாக ஓடி வரும் சாரட் வண்டிகள் அவை.
பெரு நாவல் ‘மிளகு’ எழுதி நிறைவுற்றது
January 13, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – And quite flows the Sherawati, as always
An excerpt from my forthcoming novel MILAGU
என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர்.
அவர் சொல்லி அனுப்ப குதிரை வீரன் ஒருவன் மிர்ஜான் கோட்டையை நோக்கிப் போய் கோட்டைக்காவலரிடம் ஏதோ சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடம் நேமிநாதன் குற்றுயிரும் குலையுயிருமாக மிர்ஜான் கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டான்.
நடுப்பகல். மிர்ஜான் கோட்டை நேமிநாதனின் அரச குடும்ப மாளிகை
கருத்த துணியைக் கழியில் பறக்க விட்டுப் பிடித்தபடி குதிரையில் வந்த வீரன் நின்றான். அவனுக்கு அடுத்து இரட்டைக் குதிரை கோச் வண்டி மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. மிக ஆழமாக ரத்தக் காயம் அடைந்த நேமிநாதனை படுக்கையோடு சுமந்து இறக்கிய வீரர்கள் மௌனமாக உள்ளே எடுத்துப் போனார்கள்.
ரஞ்சனா தேவி கூக்குரலிட்டு அழுதபடி ஓடி வந்தாள். நேமிநாதனின் கண்கள் விழித்திருந்தன. வைத்தியர் வேகமாக உள்ளே படியேறி வர, குதிரை வீரர்கள் விலகி நின்றார்கள்.
நஞ்சுண்டய்யா பிரதானியும் வேகமாக மாளிகைக்குள் வந்து கொண்டிருந்ததை நேமிநாதன் கவனித்தான். ரஞ்சி என்று அவன் உதடுகள் உச்சரித்தன. ரஞ்சனா தேவி பார்த்துக் கொண்டிருக்க அந்தப் படுக்கை தரையில் தாழ்த்தி வைக்கப்பட்டது.
நஞ்சுண்டய்யா பிரதானி அங்கே இருந்த மற்றவர்களை வெளியே போகும்படி சைகை செய்துகொண்டு அவரும் வெளியே வந்தார். வைத்தியர் திரும்பத் திரும்ப நேமிநாதனைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றார். அவர் கண்ணுக்கு முன்னால் ஓர் உயிர் உடலை விட்டு நீங்குகின்றது. ஒரு வைத்தியராக, சக மனிதராக ஏதும் செய்ய முடியாது நிற்கும் கையறுநிலை அவருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்டிருக்கிறது.
மிங்குவும் நேமிநாதனும் உயிரையும் கொடுத்து வாங்கியது எதை? யாருக்கும் எதுவும் அவர்கள் பெற்றுத் தந்திடவில்லை. ரத்தம் சிந்தி, கண்கள் மேலே செருக நேமிநாதன் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அவன் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வெளிப்பட்டது.
உனக்கு நான் செய்த துரோகத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான்.
மறுபடியும் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.
மஞ்சுநாத் என் மகன் உன் மகன் இனிமேல். ரோகிணி துரோகி லிஸ்பன் ஓடியிருப்பா. ரஞ்சி ரஞ்சி ரஞ்சி. அம்மாவை கொல்ல கார்டெல் அதிகப் பணம் கொடுத்தாங்க. அம்மாவோட விருந்துலே வாளோடு வந்த பெண் நான் அனுப்பியவள் தான். அம்மா என்னை மன்னிக்கணும். ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.
அவன் கண்கள் விடை பெற்றுப் பார்வை அவளை வருடியது. மூடிய அந்த விழிகள் அப்புறம் திறக்கவே இல்லை.
மாலை நேரம். வாசலில் பரபரப்பு தெரிந்தது. ரஞ்சனா நீர் நிறைந்த விழிகளோடு வாசலைப் பார்க்க காலில் பாதரட்சைகள் இன்றி வெறுங்காலோடு ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் மிளகு ராணி சென்னபைரதேவி.
நேமி என்று அவள் அலறியது கோட்டைச் சுவர்களில் மோதி சில வினாடிகளில் எதிரொலித்தது.
உள்ளே ஓடி வந்த வைத்தியர் நேமிநாதனின் முதுகில் இருந்து கட்டாரியை அசைத்து எடுக்க, அந்த இடம் முழுக்க ரத்தம் பிசுபிசுத்து ஓடியது.
ரத்தத்தில் கால் நனையாதபடி ஜாக்கிரதையாக உள்ளே வந்த கேலடி அரசர் வெங்கடபதி சுற்று முற்றும் பார்த்தார். தரையில் அமர்ந்து அடக்க முடியாமல் அழப் பிரயத்னப்படும் சென்னா மகாராணிக்கு பக்கத்தில் அமர்ந்தார்.
’சென்னம்மா செல்லி. அஞ்சு நிமிஷம் வெளியே போயிருந்தேன்.. என்னமோ ஆயிடுச்சு. போறவங்க போயாச்சு. இருக்கறவங்க இருக்கலாம். போறது போ’ என்று சென்னபைரதேவிக்கு அபத்தமாக ஆறுதல் சொன்னார். எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக நேமிநாதனின் உயிர் நீத்த உடல் கிடந்தது.
ஏன் வந்தீர் அண்ணவாரே, இனியும் நேமிநாதனை என்ன செய்து கூட இருந்தே குழி பறிக்க வந்தீர்?
உட்கார்ந்தபடி வெங்கடப்ப நாயக்கரை உற்று நோக்கி கோபத்தோடு சொன்னாள் சென்னா. நேமிநாதனின் முகத்திலும் தலைமுடியிலும் கைவிரல்கள் கொண்டு மெல்லத் தொட்டு தடவிவிட்டு நேமி நேமி என்று அதே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள்.
சட்டென்று எழுந்து நின்று வெங்கடப்ப நாயக்கரிடம் சொன்னாள்- எவ்வளவு செயற்கையான மனுஷர் நீங்கள். தெலுங்கில் கவிஞர். இத்தனை அசுத்தம் நிரம்பிய இதயத்தில் எப்படி கவிதை பிறக்கும்? என் அறுபதாம் பிறந்தநாளுக்கு எழுதிக் கொண்டு வந்து படித்தீர்களே அதை பொன்னே போல் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். போய்க் கீறி எறியப் போகிறேன்.
வைத்தியர் பொறுமை இழந்து தலையைக் குலுக்கிக்கொண்டார். பெரிய இழவாக நேமி போய்விட்டிருக்கிறான். சென்னாவின் மனம் அதை நினைக்க திராணியில்லாமல் ஏதோ சின்னச் சின்ன நிகழ்வுகளை மீண்டும் மனத் திரையில் பரத்தி அவைதான் இன்றைய பிரச்சனைகள் என்று புனைந்து நிறுத்துகிறது. இது இப்படியே போனால், சென்னா சீக்கிரம் மனநோயாளியாக, இறந்தகாலமும், நிகழ் காலமும், வரப் போகிறது என்ற நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தையும் குழப்பி மனதை செலுத்தப் போகிறது. அதற்கு ஏது மருந்து?
அவசர அவசரமாக நேமிநாதனின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. சென்னா அருகிலேயே அது முடியும்வரை அமர்ந்திருந்தார் வெங்கடப்ப நாயக்கர்.
அவர் சென்னாவின் கையைப் பற்றிக் கூறினார் – என் அன்புத் தங்கையே, என்னோடு வா. உனக்கு பாதுகாப்பு முக்கியமான காலம் இது.
சென்னபைரதேவியை மெல்ல உந்தி நடக்க வைத்துக் கூட நடந்தார் கேலடி வெங்கடப்பா . கழுகின் பாதுகாப்பான அணைப்பில் வந்த கோழிக்குஞ்சாக சென்னா ஊர்ந்தாள்.
January 12, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – in which Belagi Ruler Thimmarasu elucidates on the strategy shift
An extract from my forthcoming novel MILAGU
யுத்தம் முடிஞ்சு போச்சு. சென்னபைராதேவி தோல்வி கண்டு துவண்டு கிடக்காள் கோட்டைக்குள்ளே. இருக்க விடலாமா மாமனாரே என்று ஊடுருவினார் பிலகி அரசர் திம்மராஜு.
கேட்டுட்டு சொல்லு மாப்ளே என்று அவரை நிறுத்தச் சொன்னார் வெங்கடபதி.
மிர்ஜான் கோட்டை லட்டு மாதிரி ஒரு செங்கல் கூட உடையாமல் நம்ம கைக்கு வரணும். வரும். நம்ம படை மிர்ஜானுக்குள்ளேயும் வேண்டாம். ஹொன்னாவர் உள்ளேயும் வேண்டாம். இன்னிக்கு முழுக்க இங்கேயே கோட்டைக்கு வெளியே இருக்கட்டும். முடிஞ்சா நாளைக்கும். சென்னா படையை கலைந்து போக வைப்போம். அவங்க கலவரம் பண்ணினா ஹொன்னாவர்லே மட்டும் தான் அவங்க உள்ளே போக முடியும். நம்ம படைகளை ஹொன்னாவர் பக்கமா நிறுத்தி அதையும் முறியடிச்சுடலாம். ஆக, நாம் கவனிக்க வேண்டுவது மிர்ஜான் கோட்டையைத்தான். நாம் மிர்ஜானை அழிக்கப் போகிறதில்லே. ஹொன்னாவரையும் சிதிலமாக்கப் போறது இல்லே. அப்படி அப்படியே எல்லா தளத்திலும் ஆட்சி கைமாறும்.
வெங்கடப்ப நாயக்கர் சொல்லியபடி நேமிநாதனைப் பார்க்க அவன் நன்றி சொன்னான்.
என் படை மீதி இருக்கப்பட்ட இருநூறு பேரையும் நான் ஜெர்ஸூப்பா போகச் சொல்லிட்டேன். அவங்களை என் மகன் வெங்கடலட்சுமணன் நடத்தி போறான்.
வெங்கடப்ப நாயக்கர் மாறாத புன்சிரிப்போடு பேச்சை முடிக்க நேமி முகத்தில் கலவரம் தெரிய உட்கார்ந்திருந்தான்.
மாமா அது சரிப்படாது. ஜெர்ஸுப்பா மிளகுராணியே ஆளட்டும். மிர்ஜானும் ஹொன்னாவரும் போதும் எனக்கு என்றான் சமாதானமாக.
மிர்ஜானும் ஹொன்னாவரும் உனக்குன்னு யார் சொன்னது? வெங்கடபதி சிரிப்பு இல்லாத முகம் விகாரமாக வீங்கி வீர்த்துவரச் சொன்னார்.
என்ன சொல்றீங்க? நேமிநாதன் புரியாமல் கேட்டான்.
திம்மராஜு இவனுக்கு விளக்கமா சொல்லுப்பா. நான் வெளிக்கு இருந்துட்டு வந்துடறேன். வரும்போது இருந்தாகணும். இல்லேன்னா அடச்சுக்கும் எழவு;
நாயக்கர் கச்சம் கட்டிய வேட்டியைத் தரைத்துக்கொண்டு நின்றார். வெங்கடப்பா நாயக்கரும் திம்மராஜுவும் தெலுங்கில் வேகமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் ஒஸ்தானு என்று வெளியே நடந்தார்.
நேமி உன் நல்லதுக்குத்தான் சொல்றார் நாயக்கர். விஜயநகர பேரரசர் கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டார். நீ ஆட்சி அனுபவம் இல்லாமல் இருக்கறதாலே இன்னும் ஒரு வருஷம் எப்படி ஆட்சி நடத்தறதுன்னு நாயக்கரையும் என்னையும் பார்த்து கத்துக்கலாம். அவர் மிர்ஜான் கோட்டை, ஹொன்னாவரை ஆளப் போறார். நான் ஜெருஸூப்பாவை நிர்வகிக்கப் போறேன். ஒரு வருஷம் பனிரெண்டே மாசம். அது போதும் நீ கத்துக்க. கற்பூர புத்தியாச்சே உனக்கு.
வேசி மகனே, உதவிக்கு கூப்பிட்டா முதலுக்கே மோசம் பண்றியா?
நேமிநாதன் சிலிர்த்துக் கொண்டு இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து ஓங்கியபடி திம்மராஜுவை நோக்கி ஓடினான். அவன் பின்னால் இருந்து ஒரு சத்தம். வேகமாகப் பாய்ந்து வந்த கட்டாரி ஒன்று நேமிநாதன் முதுகைத் தாக்க அவன் சரிந்து விழுந்தான்.
பிலகி அரசன் திம்மராஜுவின் பாதுகாப்பு காவலன் கட்டாரி வீசியது.
என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர்.
January 11, 2022
பெரு நாவல் – Venkatappa makes a strategic move without Neminathan’s knowledge, showing him in his true colours
A longish extract from my forthcoming novel MILAGU
மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது 1606 மிர்ஜான் கோட்டை
விடியற்காலையில் ஜெருஸூப்பாவின் சென்னபைராதேவி மிளகு ராணியின் படை எதிரணியான நேமிநாதனின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அறிவித்தது.
மிர்ஜான் கோட்டை உள்ளே இருந்து வெள்ளைக் குதிரை மேல் வெள்ளைக்கொடி பிடித்து மூன்று அரசு தரப்பு படையினர் எதிரணியின் தாவளத்துக்குப் போனபோது அந்த அணியின் வீரர்கள் ஒரே குரலில் ஜெய்ஹோ என்று முழங்கினார்கள்.
போர் முடிந்தது என்று தோல்வியை சென்னபைரதேவி ஏற்றுக்கொண்ட கடிதம் நேமிநாதனுக்கும், அந்தப் போர் நிறுத்தத்தை அங்கீகரித்ததாக நேமிநாதன் சம்மதித்ததை அறிவிக்கும் அவனுடைய பதில் லிகிதம் சென்னா ராணிக்கும் அளிக்கப்பட்டன.
மிர்ஜான் கோட்டை உள்ளே அரசு அணியினர் தோல்வியால் முகம் கருத்து, அவமானம் முகத்தில் அடையாக ஒட்டியிருக்க விதிர்விதிர்த்து, கோட்டை மதிலை ஒட்டி வரிசையேதும் இல்லாது நின்றனர்.
கோட்டை அரச மாளிகைக் கதவுகளும், சாளரங்களும் உள்ளே இருந்து சாத்தப்பட்டிருந்தன. மணி சொல்லும் முரசறைதலும் இல்லை.
கோட்டைக்கு வெளியே எதிரணி கூடாரங்களில் காவல் மிகுந்த ஒன்றில் கேலடி பேரரசர் வெங்கடபதி நாயக்கரும், பிலகி அரசர் திம்மராஜுவும், நேமிநாதனும் ஆலோசனையில் மூழ்கி இருந்தனர்.
நேமிநாதனுக்கு சுருக்கமாக வாழ்த்து சொன்னார் கேலடி அரசர் வெங்கடபதி நாயக்கர். உப்புசம் பாரித்த வயிறு இன்னும் சரியாகவில்லையோ என்னமோ, பில்கி அரசர் திம்மராஜு முகத்தில் வேதனை தெரிய அமர்ந்திருந்தார்.
மாமா, உங்க படை கடைசி ஈடு இருநூறு பேர் முந்தாநாளே கிளம்பிட்டாங்கன்னு சொன்னீங்களே. அவங்களுக்கு இன்னும் வேலை இருக்கா என்று நேமிநாதன் சிரித்தபடி கேலடி அரசரைக் கேட்டான்.
அவங்க வந்தாச்சு என்றார் நாயக்கர் அமர்த்தலாக.
நேரே கோட்டைக்குள்ளே போய்ட்டாங்களா மாமனாரே என்று பிலகி அரசர் வினவினார்.
உன் கொட்டைக்குள்ளே போயிட்டாங்க. நம்ம கண்ணுலே படாம எப்படி மாப்ளே கோட்டைக்குள்ளே போக முடியும் என்றார் வெங்கடபதி நாயக்கர்.
அவங்க வந்து சேர்ந்தது ஜெருஸூப்பாவிலே. நான் கடைசி நிமிஷத்துலே போர்த் தந்திரத்தை கொஞ்சம் மாற்றி விட்டிருக்கேன்.
பூடகமாக சிரித்தபடி நேமிநாதனை உற்று நோக்கினார் அவர்.
நேமிநாதனுக்கு அவர் தன்னிச்சையாக படை நடமாட்டத்தை மாற்றியது தவறு என்று பலமாகத் தோன்றியது. அவர்கள் கேலடி படையினர் தான். ஆனால் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும்போது ஒரே பெயர் தான். நேமநாதன் அணி. அப்படி இருக்க அவனுக்கு தெரியாமல் எப்படி கேலடிப் படை ஜெருஸுப்பா போவது?
என் தந்திரம் ரொம்ப சிக்கலானது எல்லாம் இல்லே. நீ சின்னப் பையன். மிட்டாய் தின்பே. மிட்டாய்க்காரி பிருஷ்டத்தை தடவுவே. இதைத் தவிர போரும், ஓய்வும், போர்க்கால நடவடிக்கையும் நான் வழி நடத்தறேன். பார்த்து கத்துக்கோ.
அவர் மெல்லிய குரலில் அழுத்தமாகச் சொல்ல நேமிநாதன் முகத்தில் சிரிப்பு உறைந்தது.
மாமா இது நல்லா இல்லே சொல்றேன். உங்க சொல் கேட்டு எதுவும் தவறாமே ஜெயிச்சு வந்திருக்கேன். இனிமே என் ஆட்சியை என்னை செய்ய விடுங்க. உங்க ஆட்சியை நீங்க பண்ணுங்க. படை நடத்தி வந்ததுக்கு நன்றி.
அட அப்படி நன்றி சொல்லிட்டு குண்டியிலே மண்ணைத் தட்டி விட்டுக்கிட்டு போயிடறதுக்கா நீ கூப்பிட்டதும் ஏதோ சின்னப் பையன் கூப்பிடறான்னு உதாசீனப்படுத்தாம வந்தேன். சொல்லு.
நாயக்கர் கேட்டபடி உட்கார்ந்திருந்தார்.
அது என்ன மாமனாரே, அஞ்சு நிமிஷத்துலே ரெண்டு பிருஷ்டம் வந்துடுச்சு. ஒண்ணும் விசேஷமில்லையே என்று கேட்டபடி பிலகி திம்மராஜு கேட்டபடி வயிற்றைத் தடவியபடி எழுந்து கூடாரத்தின் நடுவில் நாட்டியிருந்த தாங்குகம்பமான மூங்கில் கழியில் சாய்ந்தபடி ஒலியும், வாடையுமாக அபானவாயு வெளியிட்டார்.
நேமிநாதன் முகத்துக்கு நேரே அவர் பின்புறம் ஒரு வினாடி உரசிப் போக அவன் தர்மசங்கடமாகப் பார்த்தான்.
இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து உதவிக்கு வரச் சொன்னவன் நேமிதான். வந்த பிறகு தான் யுத்தம் ஒரு ஒழுங்குக்கு வந்து ஜெயிக்க முடிந்தது. அதற்காக ஜன்மம் முழுவதும் தோலை செருப்பாகத் தைத்துப் போடுவேன் என்றெல்லாம் அடிபணிந்து நன்றி சொல்ல மாட்டான் நேமி.
யப்பா நேமி, இங்கே வந்து உட்கார். திம்மன் அடுத்து போடறதிலே கம்பம், கழி, கூடாரத்துணி எல்லாம் சுருண்டு விழ போவுது. அதுக்குள்ளே நான் என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லிடறேன். கெலடி அரசர் சொன்னார்.
pic council meet
ack wikipedia.org
பெரு நாவல் ‘மிளகு’ – A soldier’s account of the third day of battle for pepper land
A longish extract from my forthcoming novel MiLAGU
எந்தக் குதிரை வேண்டும்? என்னிடம் குதிரை பராமரிப்பு ஊழியர் கேட்டார்.
இல்லை, நடந்தும் ஓடியும் யுத்தம் புரியும் காலாட்படை வீரன் நான் என்றேன். குதிரை ஏறத் தெரிந்த சிப்பாய்களில் நூறு பேரை குதிரைவீரர் ஆக்கியிருக்கிறார்களாம். அவர்களில் நானும் ஒருவனாம்.
குதிரை ஏற்றம் தெரியும் என்று அரசவை உத்தியோகத்தில் வரும்போதே அறிவித்து விட்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றியது.
என்னைப் போலவே சாதுவான ஒரு குதிரை, வயது சென்றது அது, எனக்குக் கொடுத்தார்கள். லகானை இழுத்துச் சொன்னபடி திரும்ப, ஓட, நிற்க படித்த குதிரை. அதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாமே என்று அந்தக் குதிரையும் என்னைப் போலவே அங்கலாய்த்திருக்கும்.
எந்த நிலையில் குதிரையோடு போய் யுத்தம் புரிய வேண்டும்? குதிரைப்படை தளவாயிடம் கேட்டேன். நீயும் இன்னும் இருபத்துநான்கு பேரும் போர்ச்சுகீஸ் படைக்கு முன்னே போக வேண்டும். மீதி இருபது பேர் அந்த படைக்கு பின்னால் வரவேண்டும்.
எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. என்ன ஐயா, புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேலே படுங்கன்னு பழமொழி சொல்வாங்க தமிழ்லே அது மாதிரி அந்த சும்பன்களுக்கு பாதுகாப்பாக நின்னு நான் சண்டை போடணுமா என்று கேட்டபடி குதிரையோடு நகர்ந்தேன்.
பின்னே, நானும் நடுவிலே நிக்கறேன்னு அடம் பிடிக்கவா முடியும்?
ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் மிச்சம் இருக்கும்போது கோட்டையில் இருந்து சங்கு பிடிக்கும் சத்தம் கேட்கும். இன்றைய யுத்தம் தொடங்குகிறது என்று முத்திரை காட்டும் சூசனை அது. இன்றைக்கு ஒன்பதும் ஆகி, ஒன்பது மணி பத்து நிமிடமும் ஆச்சு. சங்கு பிடிக்கவில்லை.
என்ன காரணம் என்று பக்கத்தில் குதிரை மேல் ஆரோகணித்திருந்த சக குதிரைவீரனிடம் கேட்டேன். கல்யாண மாப்பிள்ளைகள் வந்து சேரலை என்றான் அவன்.
கேடுகெட்ட போர்த்துகீஸ் படை ராத்திரி சுதி ஏற்றிக்கொண்டது இன்னும் இறங்காமல் கொஞ்சம் மிச்ச சொச்ச போதையும். கொஞ்சம் தூக்கமுமாக கையில் பன்றி இறைச்சி உருளை உருளையாக உருட்டிப் பிடித்துக் கடித்தபடி வருகிறவர்கள் அவர்கள். கொடுக்கப்பட்ட வாள்களை அலட்சியமாக எடுத்து வீசினார்கள்.
எனக்குப் பின்னால் நின்ற அங்கோலா – போர்த்துகீஸ் படையணியின் கருப்பு இன இளைஞன் என்னைக் கேட்டான் – குதிரையை ராத்திரியே கொடுத்துட்டானுங்களா?
நான் சாவதானமாக, இல்லை என்றேன்.
பின்னே ஏன் நொண்டுது? ராத்திரி பூரா நீ குதிரை ஏற்றம் பழகிக்கிட்டு இருந்திருப்பேன்னு நினைச்சேன்
மோசமான பொருள் தொனிக்க என்னை கேலி செய்து வம்புக்கிழுத்தாலும், நான் இப்போதுதான் கவனித்தேன், என் குதிரை பின்னங்கால் இடது கொஞ்சம் நொண்டித்தான் நடக்கிறது.
சங்கொலி. இன்றைய சாவுகளுக்கு முன்கூட்டி ஊதித் துக்கம் கொண்டாடிய சூசனை கோட்டை வெளியில் சூழ்ந்தது.
நான் என் குதிரையை மெல்ல நகர்த்தினேன். ஓ என்று பெரிய சத்தம். அரசு எதிரணிப் படை எங்களை நோக்கி வேகமாக பெருவெள்ளமாக ஓடி வந்தது.
முன்னால் எதிர்கொண்டு அல்ல. எம் பின்னால் இருந்து.
நிலை குலைந்து போன நடுவில் வரும் போர்த்துகீஸ் படை திரும்பி நின்று தாக்காமல் எல்லா திசையிலும் ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் போர்த்துகீஸ் மொழியில் கூவியது சண்டை போட வேண்டாம், எதிரி நம்மைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டியதாக இருந்தது.
பத்தரை மணிக்குள் போர்த்துகீஸ் படை கிழக்கே சமுத்திரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதானிகள் பார்த்துக் கொண்டிருந்த காட்சி தட்டுப்பட்டது.
எங்களுக்குப் பின்னால் எதிரணியின் காலாட்படை ஓவென்று கூச்சலிட்டு மிர்ஜான் கோட்டையை நோக்கி ஓடி வந்தது. இந்தக் களேபரத்தில் என் குதிரை கனைத்தது. முன்கால் இரண்டும் தூக்கி அது நிற்க, பலகீனமான பின்கால் வழுக்கி கீழே விழுந்தது.
அரசுப் படை தினசரி அறிக்கை
இன்று உயிர்த்தியாகம் செய்த காலாட்படையினர் நூற்று முப்பத்தெட்டு பேர் . குதிரைப் படையினர் பத்து பேர். அவர்கள் பட்கல் வாயுசேனன், ஹொன்னாவர் திருத்தக்கன், கோகர்ணம் மல்லையா மற்றும். ஜயவிஜயிபவ.
எதிரணிப் படை தினசரி அறிக்கை
கேலடி அரசரின் போர்த் தந்திரம் வென்ற நாள் இது. நம் படையினர் அரசுப் படையினரை கோட்டைக்கு நேர்பின்னே நிலை எடுத்து அதி விரைவில் சூழ்ந்து பின்னால் இருந்து தாக்கிக் கிடைத்த வெற்றி இது. இன்றைய போர் முடிவில் கேலடி அரசர், பிலகி அரசர், நேம்நாதர் தலைமையில் உள்ள அணி மிகப் பெரும் வெற்றி.
இன்று இருநூற்று முப்பத்தேழு வீரத் தோழர்கள் தங்கள் இன்னுயிர் நீத்தார்கள். நேற்று வாள் காயம் சிரித்தபடி ஏற்ற வஜ்ரமுனி என்னும் கேலடி மாநிலப் பெரும் வீரர் காயம் புரைபிடித்து, சிகிச்சையில் அதிக ரணமாகி இன்று போரிடும்போது அகால மரணமடைந்தார். போரில் நேரடியாக அன்றி களம் கண்டு துஞ்சிய வீரர்களின் இன்றைய எண்ணிக்கை எண்பத்தெட்டு.
இன்று மாலை கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரும், பில்கி அரசர் திம்மராஜுவும் படைகளைச் சந்தித்து பேசி, நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பங்கு கொண்டார்கள். ஜயவிஜயி பவ.
January 9, 2022
New இலக்கியக் குதிரை வண்டி – டாக்டர் பாஸ்கரனின் ‘இலக்கிய முத்துக்கள் ‘ நூலுக்கு என் முன்னுரை
டாக்டர் பாஸ்கரன் நூல் முன்னுரை
ஆதியில் ஒலி இருந்தது. அது எண்ணத்தை வெளியிட வார்த்தைகளாகப் பிறப்பெடுத்தது. நினைத்ததை முழுக்க வெளிப்படுத்த சொல் மட்டும் போதாது என்ற நிலை வந்தபோது சைகைகளும், ஆட்டமும், பாட்டும் சொல்லை மிகுத்து உயிர்த்து வந்தன. வார்த்தை காதுகளின் வெளியைக் கடந்து போகும்போது புரிதலும், நினைவு கூரலும் ஆளாளுக்கு மாறுபட, ஒரே என்ணத்தின் கணக்கற்ற பிரதிகளாகச் சொல் விரிந்தது. சொல்ல வந்ததில் பகுதி மட்டும் சொல்லப்பட்டு, அதுவும் ஆதி வார்த்தைக்கு வேறுபட்டு வந்து சேர, சொல்லியதும் சொல்ல நினைத்ததும் சொல்லாததும் எழுத்தாகி அடுத்த பரிணாமமாக விரிந்தது.
சொல் என்ற காட்டுக் குதிரையை அடக்கி, எழுத்து என்ற வண்டிக் குதிரை ஆக்கினால், ஓடும் வரை ஜல்ஜல் என்று பசும்புல்லும் கொள்ளும் மணக்க ஓடும். ஓடினால் தான் உண்டு. இதெல்லாம் புரிந்தோ புரியாமலோ தான் எழுத்தை ஆளும் ஆளுமைகளாக எழுத்தாளர்கள் குதிரை வண்டி செலுத்தி வாசகரைப் பயணம் கூட்டிப் போகிறார்கள். எல்லாப் பயணங்களும் சுகமாக இருக்குமா என்ன? எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் வார்த்தை வசப்பட படைப்பாற்றலின் உச்சத்தில் சதா வீற்றிருக்க முடியுமா என்ன? வண்டி குடை சாயலாம். கொண்டும் சேர்க்கலாம்.
வண்டிக்கார அண்ணன் மாரே, அக்கா தங்கச்சிகளே வணக்கம். எழுத்தைப் பற்றி மட்டும் எழுதினால் போதாது, நுட்பமாக வாசித்து, எழுத்தைப் பிறப்பித்தவர்களின் வாழ்க்கையை அவதானம் செய்து எழுதவும் வேண்டியிருக்கிறது. எழுத்தை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்ள எழும் விழைவு அது. லகரி மேம்பொடி கலக்காத சுத்தமான எழுத்தே வேண்டியது. டாக்டர் பாஸ்கரனுக்கு இது கைவந்த கலையாகி இருக்கிறது.
பாஸ்கரன் இந்த நூலில் நமக்குப் படைப்புகள் மூலம் தெரிந்த எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் கவர் டு கவர் ஒரே இருப்பில் இருந்து வாசித்தேன் என்றால் இந்தப் புத்தகம் தான் அது.
எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது கொஞ்சம் சிரமமான விஷயம். ஒருவேளை அவர்களுடைய சொந்த வாழ்க்கை பற்றி எழுத சுவாரசியம் அதிகமாக இல்லாத, ’வந்தார் – இருந்தார் – இல்லாமல் போனார்’ வகை விவரிப்புகள் மட்டும் பெரும்பான்மையாகக் கிடைக்கும். அல்லது எழுத ஏகப்பட்டது கிடைத்தாலும் அதில் பலவும் சபையில் பகிர்ந்து கொள்ள முடியாத வகையில் இருக்கக் கூடும். எல்லோருக்கும் கொஞ்சம் களிமண் பாதமும், கொஞ்சம் பூப்பாதரட்சை அணிந்த தேவதைக் கால்களும் உண்டே. இதில் எழுத்தாளருக்கு மட்டும் என்ன தனியாகப் பார்க்க? நூலுக்கு வருவோம்.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளின் அடிப்படையில் இடதுசாரி சிந்தனை உண்டு என்பது இ.பாவின் வாசகர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் எத்தனை பேருக்கு அவருடைய மூத்த சகோதரர் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர உறுப்பினராக இருந்தார் என்பது தெரியும்? அதே போல், அவருடைய நாவலை நாடகமாக்கி ‘மழை’ என்று பெயரிட்டு உருவாக்கியபோது அதை, வெளிப்படையான வசனங்களோடு (’எனக்கு ஒரு ஆண் துணை வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம்’) அரங்கேற்ற பலர் தயக்கம் காட்டியபோது துணிச்சலாக முன்வந்து நிகழ்த்திக் காட்டியவர் விமர்சகர் க.நா.சுவின் மருமகனான பாரதி மணி என்பதும் அப்படியான இலக்கிய அவல் தான். ‘இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டபோது எண்பது வயது கடந்த இ.பா சட்டென்று அளித்த பதில் – எழுத்தாளனுக்கு வயதானால் வேறென்ன செய்ய முடியும்? கணையாழியின் கடைசிப் பக்கம் பத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்’. மற்றும், குடந்தையில் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இ.பாவுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் தி.ஜானகிராமன்! ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தகவல்கள் நம்மை இ.பாவுக்கு ஒரு மில்லிமீட்டராவது அருகே கொண்டு போவதாகத் தோன்றுகிறது. திருவல்லிக்கேணி முதியவர் ‘அண்ணா பக்கோடா வாங்கித்தான்னு பாரதி என் கிட்ட கேட்டு வாங்கிச் சாப்பிடுவானாக்கும்’ என்று இட்டுக்கட்டிய பெருமையோடு புது வரலாறு மொழிவது போல் இல்லை இத்தகவல்கள். சரி பார்க்கப்பட்டவை.
மேல்மட்ட sophistication உடன் நடமாடும் பல பாத்திரங்களை இ.பா படைத்து உலவ விட்டிருப்பதாக டாக்டர் பாஸ்கரன் சொல்வதோடு உடன்படலாம், அல்லாமலும் இருக்கலாம். இ.பா என்ற தேர்ந்த கதைசொல்லிக்கு இரண்டுமே பொருந்தும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் டாக்டர்.
ஒரு புனைபெயரில் எழுதுவதே ஓர் எழுத்தாளருக்குப் பெரிய விஷயமாக இருக்கக் கூடும். இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கிறவரின் ஆளுமை எது? இவரிடம் எதிர்பார்க்கக் கூடிய நடையும், உத்தியும், உள்ளடகக்கமும் என்னவாக இருக்கும்? இதைவிட முக்கியமாக, இந்தப் புனைபெயரில் என்ன எல்லாம் எழுதக் கூடாது? இப்படித் தமக்குத்தாமே சுய கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு அந்தப் பெயருக்குப் பெருமை சேர்க்க முற்படுவது இயல்பு. ஆனால், ஒன்றல்ல, பத்து புனைபெயர்கள். ஒவ்வொன்றுக்குமென்று பிரத்தியேகமான நடை, எழுத்து வகை, அந்தந்தப் பெயர் எழுத்துக்குத் தேவையான படிப்பு, ஆய்வு, படைப்புத் திட்டமிடல் என்று வேலை பெருகி அந்த எழுத்தாளரை ஓய்த்து விடலாம். சாயாமல், சரியாமல் பத்து பெயரில் பத்து விதமாக எழுதி எல்லாவற்றிலும் சிறப்புப் பெயர் வாங்கி ஒரு ஐம்பது ஆண்டு காலம் தமிழ்ப் பத்திரிகை, இதழ்த் துறைகளில் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று வெற்றிகரமாக வலம் வந்தவர் ரா.கி.ரங்கராஜன். ரா.கி.ர என்ற நல்ல மனிதரை, மிகுதி நல்லனவும் மற்றுமாங்கே அல்லாதனவுமெல்லாம் எழுதிய படைப்பாளியை அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாக, சுவையாக சித்தரிப்பதில் டாக்டர் பாஸ்கரன் பெருவெற்றி பெறுகிறார். இந்திரா பார்த்தசாரதியின் படைப்புலகம் வேறு. ரா.கி.ர-வின் இயங்குதளம் கிட்டத்தட்ட முழுவதும் வேறுபட்டது. இரண்டு பேரைப் பற்றியும் சிறப்பாக எழுத பரந்துபட்ட வாசக அனுபவம் வேண்டும். டாக்டர் பாஸ்கரனுக்கு அது தீர்க்கமாக வாய்த்திருக்கிறது. ரா.கி ரங்கராஜன் எழுத்தில் சிலவாவது படிக்க பேட்டை நியூஸ் பேப்பரான அண்ணாநகர் டைம்ஸ் இருக்கிறது. ரா.கி.ர பற்றிப் படிக்க பாஸ்கரனின் இந்த நூல் உண்டு.
’பிடிச்சுவர் மேல் குடத்தை இறக்கி சுருக்கைக் கழற்றி அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்ட வேகத்தில் ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது’.
உறங்கும் முகத்தில் நீர் விசிறி எழுப்பிக் கவனத்தைக் கவ்விப் பிடிக்கும் வைர வரிகள்.
’பகவானே தன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவனவனும் தன்னை அவனே தானே தேடிக்கொள்ள வேண்டும்’?
’அதன் பெயர் தான் விசுவப் ப்ரேமை. மனிதர் மீதான காதல் அல்ல. காதல் மீது காதல் கொண்டு விட்டது’.
விலையுறுத்த முடியாத எழுத்து. கொஞ்சம் மெனக்கெட்டால் புரியும். பின் ரசானுபவமும் வாசக அனுபவமும் ஒருங்கே கிடைக்கும். பாம்புப் பிடாரன் மகுடி வாசிப்பது போல் சரஞ்சரமாகச் சொற்கள் உதிர்ந்து, ஒன்றாகக் கலந்து, புதுப் புது அர்த்தங்களைக் கோடி காட்டிக் கலைந்து மறுபடி எழுந்து மாயாஜாலம் செய்யும் எழுத்துகள். காருகுறிச்சி அருணாசலத்தின் ’சக்கனிராஜ’ கரகரப்ரியா ராக ஆலாபனை கேட்ட திருப்தியோடு தன் சிறுகதையை, நாவலைப் படித்து அனுபவிக்க வைக்கும் எழுத்தாளர் என்ற பெருமை எல்லாம் லா.ச.ராவுக்கே சேரும். அவர் எழுத்தைப் பற்றி எழுதுவது கடினம். அவரைப் பற்றி எழுதுவது பின்னும் கடினம். அநாயசமாக வெற்றி பெற்றிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன் இந்தக் காரியத்தில்.
கண்ணதாசன் ’கந்தன் கருணை’ திரைப்படத்துக்காக ஓர் அருமையான பாடல் எழுதி இருப்பார் – ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே’ என்று இனிமைத் தடம் பதித்துப் போகும் அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதா தான் நினைவு வருவார். எழுத்திலும், கணினித் துறையில் என் காலத்தைத் திட்டமிடுவதிலும் எனக்கு வழிகாட்டியாக, குருவாக இருந்த மறக்க முடியாத ஆளுமை அவர். ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, சுஜாதா பெயரை’ என்று எனக்குப் பாட வந்தால் பாடுவேன். சுஜாதா பற்றி நேர்த்தியான எழுத்துக் கச்சேரி நிகழ்த்தியிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன் இந்த நூலில்.
’வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபநிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும் அற்புத கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என் நோபல்’ – சுஜாதாவின் சத்தியமான வார்த்தைகளோடு அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் பாஸ்கரன்.
’அப்படி என்ன வாழ்க்கையில் இருக்கிறது? உயிர் வாழும் சவால்’.
சுஜாதாவின் கேள்வி பதில்களில் இருந்து நறுக்குத் தெறித்தது போல் சில பதில்களைக் கோடிட்டுக் காட்டிக் களை கட்ட வைக்கிறார் டாக்டர். சுஜாதாவின் தார்மீகக் கோபத்தைக்கூட விட்டுவைக்கவில்லை – ’எழுத ஆரம்பிக்கிறவன் எல்லாம் படிக்க வேண்டியவர்கள் புதுமைப் பித்தன், கு.ப.ரா எல்லாம். ஆனால் எவனுக்குத் தெரிகிறது. அப்போதுதான் ஒரு எரிச்சல் வருது’ என்ற சுஜாதா மொழி இத்தன்மை கொண்டது. சுஜாதாவின் சாகாவரம் பெற்ற ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் போன்ற பயோபிக்ஷன் கதைகளையும், திமலா போன்ற காலத்தால் அழியாத அறிவியல் புனைகதைகளையும் சுவையாக அலசுகிறார் டாக்டர் பாஸ்கரன். எனக்குப் பிடித்த ’குதிரை’ கதையையும் விட்டு வைக்கவில்லை. சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், பரபரப்பான பத்தி எழுத்து என்று ’சுஜாதாயனா’ பற்றிய நல்ல ஓர் அறிமுகம் இந்தக் கட்டுரை.
”சுஜாதாவின் ’எப்போதும் பெண்’ நாவலில் மையக் கதாபாத்திரம் சின்னுவிடம் அவள் அப்பா இறுதியில் மன்னிப்புக் கேட்கும்போது நான் அழுதேன்” என்று சராசரி வாசகரையும் பிரதிநிதிப் படுத்தி மரியாதை செய்திருக்கிறார் டாக்டர். ’சரசாவின் தியாகத்தைப் படிக்கக் கண்கள் குளமாயின’ என்பது பத்திரிகை ஆசிரியருக்கு வாசகர் கடிதத்தில் வரும் சொல்லாடலாக இருக்கலாம். பாஸ்கரன் எழுதுவதுபோல் சில நேரம் நடந்துமிருக்கலாம். ஒரு நல்ல எழுத்தாளருக்கே இன்னொரு சிறந்த எழுத்தாளரின் படைப்பை சகல நுட்பமான உணர்வுகளோடும் உள்வாங்கி ஒன்றுபட முடியும் என்பதை பாஸ்கரன் காட்டுகிறார்.
ஒரு பானை சோற்றுக்கு இங்கே மூன்று பருக்கை பதம் பார்த்துச் சொன்னேன். இங்கே ஒரு பானை நிறைய சர்க்கரைப் பொங்கலே இனிக்க இனிக்கச் சமைத்திருக்கிறார் டாக்டர்.
சார்வாகன், தேவன், பரணீதரன், சுந்தர ராமசாமி, உ.வே.சா, ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்பிரமணியன், பாக்கியம் ராமசாமி, கி.ராஜநாராயணன், ஆர்.சூடாமணி, ஆ.மாதவன், க.நா.சு, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று தமிழில் பெயர்பெற்ற படைப்பாளிகள் எல்லோரும் டாக்டர் பாஸ்கரனின் எழுத்தில் உயிர்த்து வலம் வருகிறார்கள். விதம்விதமான ஆளுமைகள், வெவ்வேறுபட்ட சித்தரிப்புகள், வளம் சேர்க்கும் தகவல்கள் என்று இந்நூலை உழைத்து, அனுபவித்து எழுதியிருக்கிறார் அவர்.
ஆதியில் வார்த்தை இருந்தது. அது இன்னும் இருக்கிறது. இனியும் இருக்கும் என்று அவருடைய எழுத்தில் சொல்லாமல் சொல்கிறார் நூலாசிரியர். வாழ்க.
இரா.முருகன்
ஏப்ரல் 26 2021

இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

