பெரு நாவல் ‘மிளகு’ – in which Belagi Ruler Thimmarasu elucidates on the strategy shift

An extract from my forthcoming novel MILAGU

யுத்தம் முடிஞ்சு போச்சு. சென்னபைராதேவி தோல்வி கண்டு துவண்டு கிடக்காள் கோட்டைக்குள்ளே. இருக்க விடலாமா மாமனாரே என்று ஊடுருவினார் பிலகி அரசர் திம்மராஜு.

கேட்டுட்டு சொல்லு மாப்ளே என்று அவரை நிறுத்தச் சொன்னார் வெங்கடபதி.

மிர்ஜான் கோட்டை லட்டு மாதிரி ஒரு செங்கல் கூட உடையாமல் நம்ம கைக்கு வரணும். வரும். நம்ம படை     மிர்ஜானுக்குள்ளேயும் வேண்டாம். ஹொன்னாவர் உள்ளேயும் வேண்டாம். இன்னிக்கு முழுக்க இங்கேயே கோட்டைக்கு வெளியே இருக்கட்டும். முடிஞ்சா நாளைக்கும். சென்னா படையை கலைந்து போக வைப்போம். அவங்க கலவரம் பண்ணினா ஹொன்னாவர்லே மட்டும் தான் அவங்க உள்ளே போக முடியும். நம்ம படைகளை ஹொன்னாவர் பக்கமா நிறுத்தி அதையும் முறியடிச்சுடலாம். ஆக, நாம் கவனிக்க வேண்டுவது மிர்ஜான் கோட்டையைத்தான். நாம் மிர்ஜானை அழிக்கப் போகிறதில்லே. ஹொன்னாவரையும் சிதிலமாக்கப் போறது இல்லே. அப்படி அப்படியே எல்லா தளத்திலும் ஆட்சி கைமாறும்.

வெங்கடப்ப நாயக்கர் சொல்லியபடி நேமிநாதனைப் பார்க்க அவன் நன்றி சொன்னான்.

என் படை மீதி இருக்கப்பட்ட இருநூறு பேரையும் நான் ஜெர்ஸூப்பா போகச் சொல்லிட்டேன். அவங்களை என் மகன் வெங்கடலட்சுமணன் நடத்தி போறான்.

வெங்கடப்ப நாயக்கர் மாறாத புன்சிரிப்போடு பேச்சை முடிக்க நேமி முகத்தில் கலவரம் தெரிய உட்கார்ந்திருந்தான்.

மாமா அது சரிப்படாது. ஜெர்ஸுப்பா மிளகுராணியே ஆளட்டும். மிர்ஜானும் ஹொன்னாவரும் போதும் எனக்கு என்றான் சமாதானமாக.

மிர்ஜானும் ஹொன்னாவரும் உனக்குன்னு யார் சொன்னது? வெங்கடபதி சிரிப்பு இல்லாத முகம் விகாரமாக வீங்கி வீர்த்துவரச் சொன்னார்.

என்ன சொல்றீங்க? நேமிநாதன் புரியாமல் கேட்டான்.

திம்மராஜு இவனுக்கு விளக்கமா சொல்லுப்பா. நான் வெளிக்கு இருந்துட்டு வந்துடறேன். வரும்போது இருந்தாகணும். இல்லேன்னா அடச்சுக்கும் எழவு;

நாயக்கர் கச்சம் கட்டிய வேட்டியைத் தரைத்துக்கொண்டு நின்றார். வெங்கடப்பா நாயக்கரும் திம்மராஜுவும் தெலுங்கில் வேகமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் ஒஸ்தானு என்று வெளியே நடந்தார்.

நேமி உன் நல்லதுக்குத்தான் சொல்றார் நாயக்கர். விஜயநகர பேரரசர் கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டார். நீ ஆட்சி அனுபவம் இல்லாமல் இருக்கறதாலே இன்னும் ஒரு  வருஷம் எப்படி ஆட்சி நடத்தறதுன்னு நாயக்கரையும் என்னையும் பார்த்து கத்துக்கலாம். அவர் மிர்ஜான் கோட்டை, ஹொன்னாவரை ஆளப் போறார். நான் ஜெருஸூப்பாவை நிர்வகிக்கப் போறேன். ஒரு வருஷம் பனிரெண்டே மாசம். அது போதும் நீ கத்துக்க. கற்பூர புத்தியாச்சே உனக்கு.

வேசி மகனே, உதவிக்கு கூப்பிட்டா முதலுக்கே மோசம் பண்றியா?

நேமிநாதன் சிலிர்த்துக் கொண்டு இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து ஓங்கியபடி திம்மராஜுவை நோக்கி ஓடினான். அவன் பின்னால் இருந்து ஒரு   சத்தம். வேகமாகப் பாய்ந்து வந்த கட்டாரி ஒன்று நேமிநாதன் முதுகைத் தாக்க அவன் சரிந்து விழுந்தான்.

பிலகி அரசன் திம்மராஜுவின் பாதுகாப்பு காவலன் கட்டாரி வீசியது.

என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 18:59
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.