பெரு நாவல் ‘மிளகு’ – And quite flows the Sherawati, as always

An excerpt from my forthcoming novel  MILAGU

என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர்.

அவர் சொல்லி அனுப்ப குதிரை வீரன் ஒருவன் மிர்ஜான் கோட்டையை நோக்கிப் போய் கோட்டைக்காவலரிடம் ஏதோ சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடம் நேமிநாதன் குற்றுயிரும் குலையுயிருமாக மிர்ஜான் கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டான்.

நடுப்பகல். மிர்ஜான் கோட்டை நேமிநாதனின் அரச  குடும்ப மாளிகை

கருத்த துணியைக் கழியில் பறக்க விட்டுப் பிடித்தபடி குதிரையில் வந்த வீரன் நின்றான். அவனுக்கு அடுத்து இரட்டைக் குதிரை கோச் வண்டி மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. மிக ஆழமாக ரத்தக் காயம் அடைந்த நேமிநாதனை படுக்கையோடு சுமந்து இறக்கிய வீரர்கள் மௌனமாக உள்ளே எடுத்துப் போனார்கள்.

ரஞ்சனா தேவி கூக்குரலிட்டு அழுதபடி ஓடி வந்தாள். நேமிநாதனின் கண்கள் விழித்திருந்தன. வைத்தியர் வேகமாக உள்ளே படியேறி வர, குதிரை வீரர்கள் விலகி நின்றார்கள்.

நஞ்சுண்டய்யா பிரதானியும் வேகமாக மாளிகைக்குள் வந்து கொண்டிருந்ததை நேமிநாதன் கவனித்தான். ரஞ்சி என்று அவன் உதடுகள் உச்சரித்தன. ரஞ்சனா தேவி பார்த்துக் கொண்டிருக்க அந்தப் படுக்கை தரையில் தாழ்த்தி வைக்கப்பட்டது.

நஞ்சுண்டய்யா பிரதானி அங்கே இருந்த மற்றவர்களை வெளியே போகும்படி சைகை செய்துகொண்டு அவரும் வெளியே வந்தார். வைத்தியர் திரும்பத் திரும்ப நேமிநாதனைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றார். அவர் கண்ணுக்கு முன்னால் ஓர் உயிர் உடலை விட்டு நீங்குகின்றது. ஒரு வைத்தியராக, சக மனிதராக ஏதும் செய்ய முடியாது நிற்கும் கையறுநிலை அவருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்டிருக்கிறது.

மிங்குவும் நேமிநாதனும் உயிரையும் கொடுத்து வாங்கியது எதை? யாருக்கும் எதுவும் அவர்கள் பெற்றுத் தந்திடவில்லை. ரத்தம் சிந்தி, கண்கள் மேலே செருக நேமிநாதன் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அவன் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வெளிப்பட்டது.

உனக்கு நான் செய்த துரோகத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான்.

மறுபடியும் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.

மஞ்சுநாத் என் மகன் உன் மகன் இனிமேல். ரோகிணி துரோகி லிஸ்பன் ஓடியிருப்பா. ரஞ்சி ரஞ்சி ரஞ்சி. அம்மாவை கொல்ல கார்டெல்  அதிகப் பணம் கொடுத்தாங்க. அம்மாவோட விருந்துலே வாளோடு வந்த பெண் நான் அனுப்பியவள் தான். அம்மா என்னை மன்னிக்கணும். ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.

அவன் கண்கள் விடை பெற்றுப் பார்வை அவளை வருடியது. மூடிய அந்த விழிகள் அப்புறம் திறக்கவே இல்லை.

மாலை நேரம். வாசலில் பரபரப்பு தெரிந்தது. ரஞ்சனா நீர் நிறைந்த விழிகளோடு வாசலைப் பார்க்க காலில் பாதரட்சைகள் இன்றி வெறுங்காலோடு ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் மிளகு ராணி சென்னபைரதேவி.

நேமி என்று அவள் அலறியது கோட்டைச் சுவர்களில் மோதி சில வினாடிகளில் எதிரொலித்தது.

உள்ளே ஓடி வந்த வைத்தியர் நேமிநாதனின் முதுகில் இருந்து கட்டாரியை அசைத்து எடுக்க, அந்த இடம் முழுக்க ரத்தம் பிசுபிசுத்து ஓடியது.

ரத்தத்தில் கால் நனையாதபடி ஜாக்கிரதையாக உள்ளே வந்த கேலடி அரசர் வெங்கடபதி சுற்று முற்றும் பார்த்தார். தரையில் அமர்ந்து அடக்க முடியாமல் அழப் பிரயத்னப்படும் சென்னா மகாராணிக்கு பக்கத்தில் அமர்ந்தார்.

’சென்னம்மா செல்லி. அஞ்சு நிமிஷம் வெளியே போயிருந்தேன்.. என்னமோ ஆயிடுச்சு. போறவங்க போயாச்சு. இருக்கறவங்க இருக்கலாம். போறது போ’ என்று சென்னபைரதேவிக்கு அபத்தமாக ஆறுதல் சொன்னார். எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக நேமிநாதனின் உயிர் நீத்த உடல் கிடந்தது.

ஏன் வந்தீர் அண்ணவாரே, இனியும் நேமிநாதனை என்ன செய்து கூட இருந்தே குழி பறிக்க வந்தீர்?

உட்கார்ந்தபடி வெங்கடப்ப நாயக்கரை உற்று நோக்கி கோபத்தோடு சொன்னாள் சென்னா.  நேமிநாதனின் முகத்திலும் தலைமுடியிலும் கைவிரல்கள் கொண்டு மெல்லத் தொட்டு தடவிவிட்டு நேமி நேமி என்று அதே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள்.

சட்டென்று எழுந்து நின்று வெங்கடப்ப நாயக்கரிடம் சொன்னாள்- எவ்வளவு செயற்கையான மனுஷர் நீங்கள். தெலுங்கில் கவிஞர். இத்தனை அசுத்தம் நிரம்பிய இதயத்தில் எப்படி கவிதை பிறக்கும்? என் அறுபதாம் பிறந்தநாளுக்கு எழுதிக் கொண்டு வந்து படித்தீர்களே அதை பொன்னே போல் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். போய்க் கீறி எறியப் போகிறேன்.

வைத்தியர் பொறுமை இழந்து தலையைக் குலுக்கிக்கொண்டார். பெரிய இழவாக நேமி போய்விட்டிருக்கிறான். சென்னாவின் மனம் அதை நினைக்க திராணியில்லாமல் ஏதோ சின்னச் சின்ன நிகழ்வுகளை மீண்டும் மனத் திரையில் பரத்தி அவைதான் இன்றைய பிரச்சனைகள் என்று புனைந்து நிறுத்துகிறது. இது இப்படியே போனால், சென்னா சீக்கிரம் மனநோயாளியாக, இறந்தகாலமும், நிகழ் காலமும், வரப் போகிறது என்ற நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தையும் குழப்பி மனதை செலுத்தப் போகிறது. அதற்கு ஏது மருந்து?

அவசர அவசரமாக நேமிநாதனின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. சென்னா அருகிலேயே அது முடியும்வரை அமர்ந்திருந்தார் வெங்கடப்ப நாயக்கர்.

அவர் சென்னாவின் கையைப் பற்றிக் கூறினார் – என் அன்புத் தங்கையே, என்னோடு வா. உனக்கு பாதுகாப்பு முக்கியமான காலம் இது.

சென்னபைரதேவியை மெல்ல உந்தி நடக்க வைத்துக் கூட நடந்தார் கேலடி வெங்கடப்பா . கழுகின் பாதுகாப்பான அணைப்பில் வந்த கோழிக்குஞ்சாக சென்னா ஊர்ந்தாள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 18:47
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.