இரா. முருகன்'s Blog, page 54
April 2, 2022
அரசூர் நான்கு நாவல்களில் புனித கங்கை – 1. அச்சுதம் கேசவம்
என் அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- ஹரித்வாரில் கங்கை
டோங்கா ஏற்படுத்திக் கொண்டு ஹர் கி பவ்ரி என்ற கங்கைப் படித்துறைக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தபோது சாயந்திரம் ஐந்து மணி ஆகி இருந்தது. ஒருத்தர் இருவராகக் கூட்டம் வர ஆரம்பிக்கும் முன்னாலேயே அரசூர் கோஷ்டி படித்துறைக்குப் போய்ச் சேர்ந்து, தரிசிக்க வாகான படிகளில் இடம் பிடித்தது.
கங்கா மாதாவுக்கு புஷ்பமும் நெய் தீபமும் ஏற்றி, எல்லா சாஸ்திரத்தில் இருந்தும் நாலு வேதத்தில் இருந்தும், ஆமா நாலும் உண்டு, அதர்வம் உள்பட, நாலு வேதத்திலே இருந்தும் மந்திரங்கள் சொல்லி செய்யற வழிபாடு. இதைப் பார்க்கப் பூர்வ ஜென்ம பலன் இல்லாமல் வாய்க்காது. உங்களுக்கெல்லாம் வாய்ச்சிருக்கு. அம்மா, நீங்க எங்க தாத்தா காலத்திலே வந்தபோது பார்த்திருப்பீங்களே?
ஜெயராமப் பண்டிதரின் பேரரான ராதாகிருஷ்ண திராவிடர் லோகசுந்தரிப் பாட்டியை விசாரித்தார். அவள் அவசரமாகத் தலையாட்டினாள்.
அறுபது வருஷம் முன் வந்திருக்கிறாள். அப்போது அவளுக்கு இருபது சொச்சம் வயது. கல்யாணம் செய்து ஐந்து வருஷம் கழித்து அவளும் வீட்டுக்காரர் கிராமக் கணக்கர் கங்காதர ஐயரும் தனியாக இருக்க அப்போது தான் நேரம் வாய்த்தது. கணக்கரின் அம்மா காலமாகி, அஸ்தியை ஹரித்துவாரிலும் வாரணாசியிலும் கங்கையில் கரைக்க ஏற்பாடாக வந்தார்கள்.
தொண்ணூறு வயசில் காலமானாள் கணக்கரின் அம்மா. உயிர் பிரியும் தறுவாயில் நினைவு தடுமாறாமல் பேசினாள் –
நானும் உங்க அப்பாவும் சுப்பிரமணிய அய்யரோடவும், பாகீரதி அம்மாளோடும், நித்ய சுமங்கலி சுப்பம்மா கிழவியோடயும் வட தேச யாத்திரை வந்தபோது மனசுலே சங்கல்பமாச்சு. நான் போனா, என் பிள்ளை அஸ்தியை கங்கையிலே கரைக்கணும்னு. போய்த் தவறாம செஞ்சுடு.
அந்தப் பயணத்தை நினைக்கும்போதெல்லாம் புதுசாகக் கல்யாணம் ஆன சின்னப் பெண் மாதிரி லோகசுந்தரிப் பாட்டி நாணப்படுவாள். இங்கே இந்தக் கங்கை ஆரத்திக்கு வந்திருக்கிறாள் தான். கூட்டம் அதிகமாவதற்குள் கணக்கர் கண்காட்ட இருவரும் தங்கியிருந்த சத்திரத்துக்கே அவசரமாகத் திரும்பி விட்டார்கள். அவளுக்கு சோபான சாயங்காலமாக அமைந்து போன அந்த மாலைப் பொழுதை நினைவு படுத்திக் கொள்ள கிழவிக்கு இப்போது ஏக வெட்கம்.
பார்த்தாலே தூய்மையாக்கும் ஸ்படிகம் போன்ற நீர்ப் பெருக்கில் கங்கை இருந்தது. அந்தப் பரிசுத்ததை கையளைந்து கூட, விரல் நனைத்துக் கூட களங்கப்படுத்த சகிக்காதவர்களாக கங்கைக் கரையில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது.
தினசரி கூடுகிற கூட்டம் தான். தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள். கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள். ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தக் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீர் மல்கப் பார்க்கிறார்கள். அம்மாவை ஷண நேரம் பிரிந்து திரும்ப வந்த குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். எதுவுமே எனக்கு வேண்டாம். உன் காலடியிலேயே சேவை செய்து இந்த வாழ்க்கையைக் கழிக்கிறேன் என்று படிகளில் முட்டி முட்டி அழுகிறார்கள். மனசே இல்லாமல் திரும்பப் போகிறார்கள். இந்த அனுபவம் மறக்கப்பட்டு வாழ்க்கையில் சந்தோஷமாகவும் துக்கமாகவும் எத்தனையோ நிகழ்வுகள். மழை ஓய்ந்த ராத்திரிகளில் தூக்கம் கலைந்து கிடக்கும்போது கங்கைப் பிரவாகமும் ஆரத்தியும் அழுகையும் அம்மாவும் நினைவு வர மீண்டும் உறக்கம் கவிகிறது.
சூரியன் மங்கி நீளமான நிழல்கள் கங்கைக் கரையில் படிந்து பரவி அதிர்ந்து கொண்டிருக்க, கனமான இருள் தொலைவில் இருந்து இறங்கி வர ஆரம்பித்தது. நீர்ப் பெருக்கு கருநீலத் தாரையாக வேகம் கூட்டாது, சட்டம் கூட்டாது பிரவகித்துக் கொண்டிருந்தது.
எத்தனையோ தலைமுறையாகக் கங்கையின் குழந்தைகள் வருகிறார்கள். இன்னும் எத்தனையோ தலைமுறை அவர்கள் வருவார்கள். கங்கை வற்றாமல் கங்கோத்ரியின் பனிச் சிகரங்களில் உருக்கொண்டு ஓடி வந்து, ஹரித்துவாரில் சமவெளியில் நடந்து கொண்டே தான் இருப்பாள்.
சங்குகள் ஒரு சேர முழங்க, லோகசுந்தரி முதுகைச் சிலிர்த்துக் கொண்டாள். தூரத்திலும் பக்கத்திலும் கோவில் மணிகள் சேர்ந்து ஒலித்தன. வேதமோ உபநிஷதமோ, கனமான குரல்கள் ஒன்றிரண்டாக உயர்ந்தன. இன்னும் நூறு குரல்கள் அவற்றோடு சேர்ந்தன. ஆயிரம் குரல்கள் அதற்கு மேலும் ஒன்று கலந்தன. அம்மா அம்மா என்று எல்லா மொழியிலும் அரற்றும் குழந்தைகளாகப் பக்தர்கள்.
இருட்டில் நடக்கும் கங்கைக்கு வழி சொல்ல சின்னச் சின்னதாக தீபங்கள் கரையெங்கும் ஒளி விடத் தொடங்கின. அவை சற்றுப் பொறுத்து, கங்கைப் பிரவாகத்தில் மெல்ல வைக்கப்பட்டன. ஆடி அசைந்து மெல்ல நதியோடு போகிற தீபங்களின் ஒளி தவிர வேறேதும் வெளிச்சம் இல்லாத காற்று ஓய்ந்த அமைதியான முன்னிரவு.
சங்குகள் ஒலி மிகுந்து சேர்ந்து ஒலித்தன. கரையில் கொளுத்திப் பிடித்த தீவட்டிகள் போல, பிரம்மாண்டமான அர்ச்சனை தீபங்கள் ஏற்றப்பட்டன.
கங்கா மாதா கி ஜெய்.
திரும்பத் திரும்ப ஒலிக்கும் குரல்கள் சூழலை முழுக்க ஆக்கிரமித்துப் படர்ந்தன,. லோகசுந்தரி கூடச் சேர்ந்து உச்சரிக்க, கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது.
முப்பது வருஷம் முன் இறந்து போன அவளுடைய வீட்டுக்காரக் கணக்கர் பொடி மட்டை வாடையோடு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவருடைய பொடி மட்டையைப் பறித்து வீசி விட்டு லோகசுந்தரி கும்பிடச் சொன்னாள். அந்த மனுஷனும் கண்மூடி வணங்கியபடி கலைந்து போனான்.
March 14, 2022
ஆத்மார்த்தி – மந்திரமூர்த்தி அழகு – இரா.முருகன்
எழுத்தாளர் இரா.முருகன் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள்
அருமையாக ஆய்வு செய்து பேசினார். அவரது உரையானது எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளை அவர் எப்படி அணுகுகிறார் என்பது குறித்தும், தனக்கு முந்தைய எழுத்தாளர்களை இரா.முருகன் எப்படி அவரது பாணியில் தாண்டிச் செல்கிறார் என்பது குறித்தும் விளக்குவதாக அமைந்தது.நேற்றைய நிகழ்வில் நமது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இரா. முருகன் அவர்களும் கலந்து கொண்டார். எழுத்தாளர்கள் பா.ராகவன், சு.வேணுகோபால், கண்மணி, ரமேஷ் கல்யாண் உள்ளிட்ட பல படைப்பாளிகளும், தேர்ந்த வாசகர்களும் நிகழ்வில் கணிசமாகப் பங்கேற்றுச் சிறப்பாக நடைபெறத் துணை நின்றார்கள்.ஆத்மார்த்தியின் ஆத்மார்த்தமான உரை எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்தது. இது தான் இந்த இலக்கியக் கூட்டங்களின் மூலமாக நாங்கள் சென்றடைய மனதார ஆசைப்பட்டது! இவை எல்லாம் நல்ல முறையில் நடப்பதற்குத் துணை நிற்கும் எழுத்தாள நண்பர் காளிப்ரசாத் உள்ளிட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!நிகழ்வு ஏற்பாடு செய்த வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழு மட்டுறுத்துநர் மந்திரமூர்த்தி அழகுக்கு நன்றிநிகழ்வைக் குறித்த லிங்க்:https://youtu.be/GziLcH7gCao

March 9, 2022
பெரு நாவல் ‘மிளகு’ – விற்பனையும் வரவேற்பும்
பெரு நாவல் ‘மிளகு’ அண்மையில் நிறைவு பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி 2022-இல் முதல் நூறு பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.
பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜி நரசிம்மன் தெரிவித்த தகவல் இது
1189 பக்கங்களில் விரியும் இந்த நாவல் குறித்த மதிப்பீடுகள் நல்லனவாக அமைந்துள்ளன.
நன்றி.
March 8, 2022
கருவிகளிலிருந்து விடுதலை – நந்தன் நிலேகனி எழுதிய புத்தகம்
March 7, 2022
பெரு நாவல் ‘மிளகு’ மதிப்புரை – எழுத்தாளர் காளிபிரசாத்
மிளகு நாவல் வழி துவங்கியது இவ்வருடத்தின் புத்தக கண்காட்சிப் புதுவரவுகளுக்கான வாசிப்பு. இரா. முருகன் அவர்களின் சிறுகதைகளில் அவர் காட்டும் கணிப்பொறி உலகம் மற்றும் பழைய காலக் கதைகளில் தொடர்ந்து வரும் ஐயனை என்கிற கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்புகள் நினைவில் நிற்பவை. ஆனால் அவரை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தது அரசூர் வம்சம் நாவல் வழியாகத்தான். ‘அரசூர் வம்சம்’ முதல் ‘வாழ்ந்து போதீரே’ வரை தொடர்ச்சியான வாசிப்பு. இதில் துவக்கமான அரசூர் வம்சம் நாவல் ரகளையானது. அதன் ஒவ்வொரு வரிகளையும் சொல்லிச் சொல்லிச் சிரித்தபடி நாங்கள் ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தோம் ( ஷிமோகா ரவி அண்ணன், சுந்தரவடிவேலன், சுநில் கிருஷ்ணன் மற்றும் நான் ). விமான நிலையத்தில் ஒற்றுமையாக வந்த யாரோ இருவரை பார்த்து பனியன் சகோதரர்கள் எனக் குறிப்பிட்டு சிரித்ததும் நினைவில் இருக்கிறது. இதனுடைய இரண்டாவது நாவலான விஸ்வரூபம் காமத்திலும், அச்சுதன் கேசவம் அலைச்சலிலும் வாழ்ந்து போதீரே உணர்ச்சியிலும் நிறைவும் கொண்ட நாவலாக எனது மனப்பதிவு. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக எழுதவேண்டும். மிளகு நாவல் ஒரே சமயதத்தில் தனித்த நாவலாகவும் அரசூர் வம்ச நாவல்களின் வரிசையின் இறுதிநாவலாகவும் திகழ்கிறது. ராணி சென்னபைரா தேவியின் கதையாகவும் அதன் தற்கால புரிதலாகவும் இரு விதங்களில் இது நிகழ்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் மிளகுராணியின் அரசாங்கம் வீழ்த்தப்படும் கதை. இது ஒரு சரித்திர புத்தகத்தின் ஒரு பத்தியில் சொல்லப்பட்டாலும் கூட என்ன நடந்திருக்கும் என்பது எளிதில் புரிந்து விடும். அந்த அளவிற்கு நாம் அறிந்த போர், தியாகம் மற்றும் துரோகம் கலந்த அரசக்கதைத்தான். ஆனால் 1200 பக்கங்களில் அதை வாசிக்கும்போது எங்கும் சுவாரசியம் குறைவதில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கு நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப கையாண்டிருக்கிறார். குறியீடு், உருவகம் மாய எதார்த்தம் என அனைத்தும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானாகவே வந்துபோகும் என்பதே அவருடைய நாவல்களின் தனித்துவம். அது இங்கும் உண்டு. இதில் ஒரு ரசிக்கத்தக்க உதாரணத்தை இங்கு தருகிறேன்.. மிளகுராணி-நேமிநாதன் பிரச்சனையில் ஆதரவாக வரும் தாமஸ் அகஸ்டின்ஹோவை உறங்க விடாமல் துன்புறுத்தும் பெருச்சாளி சமகாலத்தில் அங்கு சுரண்டி உண்டு கொழுக்கும் அந்நிய வியாபார அரசியலுக்கான குறியீடாக தோன்றினாலும் இறுதியில் அவர் அலறி எழ அனைவரும் பற்றி என்ன என வினவ, ஒரு பணியாள் ‘எலி அம்மணமா ஓடுதாம்’ என்று அதை விளக்கும் ஒரு வரியில் பிற்காலத்தில் இருந்து அதைக் கண்டு நகைக்கும் பகடியாக ஆகிவிடுகிறது. இது தவிர பாரதியாரின் கும்மிப்பாட்டு, காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வருகிறது. இந்த விளையாட்டின் உச்சகட்டமாக மிளகு ராணியைப் பார்த்து ‘அம்மா.. நீங்கள்தான் மக்களின் முதல்வர்’ என்கிறது ஒரு கதாபாத்திரம்.
இதில் மிளகுராணியாக வரும் ராணி சென்னபைரா தேவியின் ஆளுமையை வடிவமைத்த விதம் அவளை முதன்மைப் பாத்திரமாக நிறுத்துகிறது. பிற்பகுதியில் சொற்பமே விளக்கப்படும் அவளது பால்யமும், ஆசிரியர் மீதான அவளது ஈர்ப்பும் சேர்ந்தே அந்த பாத்திரத்தை முழுமையாக்குகின்றன. அவளுக்கு அப்படியே எதிர் பாத்தி்மாக வரும் ரோஹிணியின் பாத்தி்ரமும் அத்தகைய ஆளுமை கொண்டது ஆனால் எதிர்மறையான குணங்கள் கொண்டது. இறுதியில் பிஷராடி சொல்வது போல இவை எல்லாம் ஒருவர் மற்றவரை பிரதி்செய்வதுதான் இது. யார் யாராகவும் எத்தருணத்திலும் மாறியும் விடலாம் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என ஒரு மெய்யியலாக கருதவும் வைக்கிறது.
நாட்டில் குழப்பத்தை உண்டாக்க பிரிவினைவாதிகளால் வழிபாட்டுத்தலங்களில் சேதம் உண்டாக்கப் படுகிறது. இரு பெரும் மதங்களான சமணமும் சைவமும் மோதுகின்றன. இடையே குளத்திலிருந்து பிரத்யட்சமாகும் விநாயகர் திடீர் பிரபலமாகிறார். இவற்றை எல்லாம் வாசிக்கும் போது, சமயங்களில் எப்பொழுதும் வரலாறு ஒரே போலத்தான் இருக்கிறதோ!! நாம்தான் அது புரியாமல் ஏதோ ஒரு தரப்புக்காக தீவிர நம்பிக்கையுடன் வாதாடிக்கொண்டு இருக்கிறோமோ என்று கூட தோன்றிவிடுகிறது.

இதுவரையிலான அரசூர் தொடர் நாவல்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன பரமன் ( அச்சுதம் கேசவம் நாவலின் பாதியில் விமான பயணத்தில் காணாமல் போகிறவர் ) இங்கு அவ்வாறு கால சுழற்சியில் முன்னும் பின்னும் செல்கிறார்.மிளகு ராணியின் கதையும், பெரிய சங்கரன் – பகவதிக்குட்டி குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறைக் கதையும் இவரால் ஒரு கோட்டில் இணைகிறது. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொதுவான அம்சங்களோடு இவை இணைகின்றன. இரு காலத்திலும் ஒருவர் மற்றவரை பிரதி செய்கிறார்கள். சிலர் அதே குணத்துடன் அவ்வாறே; சிலர் குணம் மாறுபட்டு;
நேமிநாதனுக்கும் ரோஹிணிக்கும் பிறந்த மஞ்சுவிற்கு பராமன்தான் தந்தையாக இருக்கிறான். சின்ன சங்கரனுக்கு கொச்சு தெரசாவுக்கும் பிறந்த மருதுவிற்கு முசாஃபர்த்தான் தந்தையாக இருக்கிறான். அங்கும் இங்கும் மஞ்சுநாத்தும் மருதுவும் தன் ரத்தஉறவான தந்தையைவிட இந்தப் ‘பெயரளவு’ தந்தையுடன்தான் பெரிதும் பாசமாக இருக்கிறார்கள். முந்தைய நாவல்களில் வரும் ‘நீலகண்டன்’ என்கிற காமத்தால் அழிந்த ஒரு பாத்திரம் ஆவியாக மகனே! மகனே! என அலைவது போல இங்கு சிறுவன் மஞ்சு அப்பா! அப்பா! என்று அலைகிறான். ஏதும் பற்று இல்லாதவனாக வரும் பரமன் 16ம் நூற்றாண்டுக்குள் சென்றுவிட்டு அங்கிருந்து தப்பி மீண்டும் 20ம் நூற்றாண்டுக்குள் வர ஏங்கியபடி இருப்பவன். ஆனால் அங்கிருந்த தனது மைந்தன் மீதான அன்பில் அந்த காலச்சுழற்சிக்குள் தானாக விரும்பிச் சென்று சிக்கிக் கொள்கிறான்.
கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரு fantacy கற்பனை என்பது தற்போதைய அறிவுடனும் புரிதலுடனும் நாம் அப்படியே பால்யத்திற்கோ அல்லது இளமைக்கோ திரும்பி வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட முடியுமா என்பது. புளியமரத்தின் கதை நாவலில் பார்க்கில் அமர்ந்து இருக்கும் வயதானவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருப்பார். இந்த தளத்தில் திரைப்படங்களும் வந்துள்ளன. பற்றற்ற தன்மை என்பது மதங்களின் கோட்பாடுகளில் ஒன்று. ஆனால் வயது முதிர்ச்சி ஆக ஆக பற்று கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பது சுயபரிசோதனைக்குரிய ஒன்று. பால்யம் என்றில்லை, வேறு நூற்றாண்டிற்குள் போனால் கூட பற்றில்தான் சிக்குவோம் என்று பரமன் காட்டிவிடுகிறார். அதை ஒரு வேடிக்கை கதையாக இரா.முருகன் சொல்லிச் செல்கிறார்.
இத்தனை தளங்களில் வைத்து யோசிக்க வேண்டாம் என்றாலும் மிக நேரடியாக மிளகு வர்த்தகம் எவ்வாறு எழுந்து வந்து வர்த்தகர்களின் கையில் சிக்கியது என்கிற ஒரு நேரடி கதையாகவும் இதை வாசித்து விடலாம்தான். இதற்குள் வரும் நாயக்கர் அரசாங்கம், அண்டை சமஸ்தானங்கள் அரசியல் முதல் பிற்காலத்தில் பிரிட்டிஷ் கைக்கு போனது வரையிலான சித்திரத்தை பெற்று விடலாம். இன்று உணவக மேசைகளில் எளிதில் கிடைக்கும் சால்ட் அண்ட் பெப்பரில் சாலட்டின் கதை இங்கு பரவலாக அறியப்பட்டு விட்டது. அடுத்ததாக பெப்பரின் கதையை சுவாரசியமாக சொல்ல வந்துவிட்டது மிளகு நாவல்.
March 6, 2022
ஹரித்ரா நதி நூலுக்கு நான் எழுதிய முன்னுரை
நண்பர் ஆர் வி எஸ் எழுதிய ஹரித்ரா நதி நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.
1960-களில் கலைமகள் மாத இதழில் ’எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் பல துறை சார்ந்த சாதனையாளர்கள் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபோது அவை வாசகர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. பிறந்து வளர்ந்த ஊரையும், அங்கே என்றோ ஆடி ஓடி ஓய்ந்த பிள்ளைப் பிராயத்தையும் நினைவு கூரும் இந்தக் கட்டுரைகள் பின்னர் புத்தகமான போதும் பெரும் வரவேற்பை அந்நூல் பெற்றது.
நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ’என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு.
பின்னாட்களில் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகளைத் தம் பால்ய காலமான 1935-45களிலிருந்து மீட்டெடுத்து வசீகரமான எழுத்தில் ஆவாஹனம் செய்ய, இந்த ழானர் புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்விஎஸ் மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் என்று அன்புடன் நாங்கள் விளிக்கும் வெங்கடசுப்ரமணியன் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார்.
1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ரா நதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்விஎஸ். நினைவுகளும் கனவுகளும் தர்க்கத்துக்கு உட்பட்ட எந்த வரிசையிலும் வராது என்பதால் ஒரு அலையில் அவர் பத்து வயதுப் பையனாகவும், அடுத்ததில் பதின்ம வயதும் தொடர்வதில் பனிரெண்டு வயதாகவும், அடுத்து பதினேழு வயதுமாக நேர்த்தியான எழுத்துத் தோரணம் பின்னிக் கொண்டு செல்கிறார்.
சுவாரசியமான மனிதர்கள் புத்தகமெங்கும் பரவி, நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறார்கள்.
இறுக்கிப் பிடிக்கும் சட்டையுடன் தரை பெருக்கும் பெல்பாட்டம் கால்சராய் அணிந்த இளைஞர்களும், பாவாடை தாவணி அணிந்து கைக்குட்டையை இடுப்பில் செருகிய இளம் பெண்களும் நிறைந்த உலகம் அது. காலைக் காட்சியில் மலையாள சினிமாவும் இடையில் ஐந்து நிமிடம், வயது வந்தவர்களுக்கு மட்டுமான தேசலான நீலக் குறும்படமும் அமர்க்களப்பட்ட ஹரித்ரா நதிக் கரை சினிமா கொட்டகையில் அந்த இளைஞர்கள் விலக்கப்பட்ட கனியான அத்திரைப்படத்தையும் அடித்துப் பிடித்துப் பார்த்து பெரியவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.
வற்றிய குட்டையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர் அணி, அவர்களை விசிலடித்து உற்சாகப்படுத்தத் தனி ரசிகர் கூட்டம், அமைதியாக இருந்து ஊக்கம் தரும் ஒரு சில சியர்கேர்ள்ஸ் கன்னியர் என்று எண்பதுக்களின் மன்னார்குடி கிரிக்கெட் பந்தயக் காட்சி புத்தகத்தின் பக்கங்களில் எழுகிறது.
கிரிக்கெட் இல்லாத நேரங்களில் இவர்கள் இந்தி படித்து ஹிந்தி பிரசார் சபாவின் ப்ராத்மிக் பரீட்சையில் பாஸ் செய்கிறார்கள். அது ஒன்றும் கஷ்டமில்லையாம். கேள்வித் தாளில் ஒவ்வொரு கேள்வியாக, வார்த்தைகளை முன்னே பின்னே மாற்றிப் போட்டு விடைத்தாளில் எழுதினால் ப்ராத்மிக் பாஸ்!
கிரிக்கெட் பந்தயத்தில் ஜெயித்துப் பரிசு வாங்கிப் பங்கு போட்ட ஹரித்ரா நதி கிரிக்கெட் கிளப் (HCC) அந்தப் பரிசுப் பணத்தில் சுற்றுலா போகிறது. வேளாங்கண்ணி கடற்கரையில் ஐந்து ரூபாய் கொடுத்து குதிரை சவாரி போகிற கிரிக்கெட் வீரன், வேகமாகப் போக வேண்டும் என்று குதிரையை வயிற்றில் உதைக்க அது பதிலுக்கு இவனை இடுப்புக்குக் கீழே மெயின் பாயிண்டில் உதைத்துத் தள்ளி விடுகிறது. சிரிப்பதா, அனுதாபப் படுவதா? சிரித்துக் கொண்டே உச்சுக் கொட்டலாம் தான்!
ராசியானது என்று கருதப்படும் வீட்டு மாடிகளில் கூடி பரீட்சைக்குப் படிக்கிறார்கள் மீசை அரும்பும் பருவத்தில் இந்தப் புத்திளைஞர்கள். உள்ளம் கவர்ந்த தாவணிக் கன்னியோடு ‘அழிரப்பரில்’ ஐ லவ் யூ எழுதி அவசரமான காதல் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் தீபாவளிக்குப் புதுசாக நீல உடை உடுத்தால், அண்ணலும் புத்தம்புது நீலச் சட்டை போட்டிருப்பதாக அமைந்த அதிசயம் கண்டு காதல் வெற்றி அடையும் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். வெற்றியடைந்ததா என்று ஆர்விஎஸ் சொல்வதில்லை. எதற்கு அந்தத் தகவல்?
நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ரா நதிக் கரை வீதி. ஆர் வி எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம்.
ராத்திரி எட்டு எட்டரைக்கே ஊர் தூங்கி விடும். ஹரித்ரா நதியும் சலனமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும். லோக்கல் பஸ் கடகடத்து, அழுது வடியும் சில விளக்குகளோடு, ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருக்க பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஊர்ந்து போகும்.
அந்த நதிக்கரையில் அக்கறை மிகுந்த பெரியவர்கள் வீட்டுச் சிறுவர்கள் மேல் அலாதி பிரியம் வைத்தவர்கள். கொஞ்சம் தொலைவில் இருக்கும் பள்ளிக்குப் போக சைக்கிள் டிரைவர் ஏற்பாடு செய்து, வாடகை சைக்கிளில் தினம் கொண்டுபோய்ப் பள்ளியில் விட்டு, மாலையில் திரும்பக் கூட்டி வரச் செய்கிறார்கள். அப்புறம் சைக்கிள் ஓட்டுதல் தேர்ந்து அந்தச் சிறுவர்கள் தொட்டதெற்கெல்லாம் – ‘கொல்லைக்குப் போகக்கூட’- சைக்கிள் மிதித்து ஊரை வலம் வருவதை ரசிக்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
பேக்கரி கடைக்காரரிடம் ஐம்பது காசு கடன் வாங்கி வெள்ளரிப் பிஞ்சு வாங்கிச் சாப்பிட்ட சிறுவனை வன்மையாகக் கண்டித்து அந்தக் கடனை உடனே அடைத்து நல்வழி காட்டுகிறவர்கள் அவர்கள்.
மார்க்கோனி கால வால்வ் ரேடியோவில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் கமெண்டரி ஒலிபரப்பு கேட்டபடி டென்னிஸ் ராக்கெட் நரம்பு பின்னும் சாமி – யார் எப்போது ஸ்கோர் கேட்டாலும் முகம் சுளிக்காமல் சொல்வார் அவர். ‘பார்த்து ரொம்ப நாளாச்சே. பேசிக்கிட்டிருப்போம்’ என்று டாக்டரைச் சந்திக்க வந்தவர்களிடம் அரட்டைக்கு அடிபோடுகிற கம்பவுண்டர், யார் வீட்டுக் கிணற்றில் என்ன விழுந்தாலும் உள்ளே சாடி எடுத்துத் தருகிற, நீர்ப் பிரவாகத்தில் முழுகி இறந்து போகிற சாமானியர், மாதக் கணக்காக ஒரே சொல்கட்டை வாசிக்கச் சொல்லிப் படுத்தும் மிருதங்க வாத்தியார், டிவிஎஸ் 50 வாகனத்தில் வலம் வந்து டெலிவிஷன் ஆண்டென்னா நிர்மாணிக்கும், கீச்சுக்குரல், கறார் பேச்சு தொழில்நுட்ப விற்பன்னர்… எத்தனை வகை ஹரித்ரா நதி மனுஷர்கள்!
இவர்களை எல்லாம் ஒரு நமுட்டுச் சிரிப்போடு ஆர்விஎஸ் பரிச்சயப்படுத்தும் தொனி ரசிக்கத் தகுந்தது.
சுவாரசியமான மனிதர்களும் மட்டக் குதிரைகளும் மட்டுமில்லை, மற்ற ஜீவராசிகளும் அங்கங்கே ஹரித்ரா நதியோரம் தலை காட்டுகின்றன. ’தலைக்கு மேலே உத்திரத்தில் ஸ்பிரிங்க் போல் ஐந்தாறு முறை மேனியைச் சுற்றிக்கொண்டு கைப்பிடியளவு காத்திரமான வெள்ளி செயின் போல் அவ்வப்போது தலைகாட்டி’, ”நாகராஜா கண்ணுலே படாம மண்ணுலே போ”, என்று வீட்டு மனுஷர்கள் பேச்சு வார்த்தை நடத்த, ஒப்புக்கொண்டு திரும்பிப் போகும் பாம்புகள் அவற்றில் உண்டு.
ஹரித்ரா நதியின் மேல்கரையில் ஒரு அழகான குடிசை வாசலில் கறுப்பு நிறத்தில், வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளைகள் புல் மேய்ந்து கொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும். வான்கோவோ கான்ஸ்டபிளோ தீட்டிய ஓவியம் போல ஒளிரும் நிலவெளி அது.
மார்கழி முழுவதும் வேட்டியை மடித்துக் கட்டி அண்டர்வேர் நாடா தெரிய, முந்திரிப் பருப்பும் நெய்யும் பெய்த பொங்கல் செய்து அள்ளி எடுத்து கிள்ளிக் கொடுக்கும் கோவில் பரிசாரகரும், அம்மன் பாட்டு இசைத் தட்டுகளை கோவில் பிரகாரத்தில் ஒலிபெருக்கும் அழுக்கு லுங்கி அணிந்த சவுண்ட் சர்வீஸ் காரரும், வைகுண்ட ஏகாதசி கழிந்து சொர்க்க வாசல் திறந்து ராஜகோபாலப் பெருமாள் சேவை சாதிக்க, வெளியே ஆண்டாள், கண்ணன், அனுமன் என்று வேடம் புனைந்து சில்லரைக்குக் கை நீட்டுகிறவர்களும் வரும் கோவில் காட்சிகளுக்கும் ஹரித்ரா நதியில் பஞ்சமில்லை. நதிக்கரை நாகரிகத்தில் கோவில்களும் விழாக்களும் தனியிடம் பெற்றவை அன்றோ.
பங்குனித் திருவிழாவில் ராஜகோபாலன் திரு உலா கண்டு மனதைப் பறிகொடுத்தவர்கள் இந்த நதியோரத்து பெரிசுகளும் பொடிசுகளும்.
”கையிலே சாட்டையும் சிகப்புக் கல் ரத்தினம் பதித்த ஜிகுஜிகு பேண்டும் இடுப்பிலே தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும் தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும் நெஞ்சுலெ பச்ச பசேல்னு மரகத பதக்கமும் கொழந்த மாதிரி சிரிச்ச முகமும் கொஞ்சமா சாஞ்சு நின்னுண்டிருக்கிற ஒய்யாரமும்.. நம்மூர் கோபாலன் அடடா அழகு கொள்ளை அழகுடா ..”.
பாட்டி மெய் சிலிர்த்து வர்ணிக்கும், வெறும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் உலா வந்த கோபாலனின் திருக்கோலம் இது. கண்ணாடியோ கண்ணோ இல்லாமலேயே ஐம்பது வருஷங்கள் கோபாலனைப் பார்த்துப் பழகிய பாட்டியின் மனக்கண் காண்பித்த கோலாகலமான காட்சியல்லவா!
நூல் முழுக்க தூலமான ஒரு கதாபாத்திரமாக ஹரித்ரா நதி வருகிறது. அது நிறைந்து பொங்கிச் செல்லாவிட்டாலும், தேங்கியிருந்தாலும், வரண்டு நீர்த்தடமின்றிக் கிடந்தாலும், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் இடம் பெறுகிறது. ’நதியில் குளிக்காமல் இருந்து காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்வதை விட, அதிகாலை அந்த நீரோட்டத்தில் குளித்து காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லை’ என்று டாக்டரிடம் சொல்லும் சாரதாப் பாட்டி போன்ற மறக்க முடியாத பாத்திரங்கள். வைத்தியனுக்குத் தர வேண்டியதை நேரில் போய்க் கொடுத்தாலே நோய் அண்டாது என்பது அவருடைய நம்பிக்கை. அது வீண் போவதில்லை.
ஹரித்ரா நதி படித்துக் கொண்டிருந்தபோது என் பாலப் பருவத்தையும் மீட்டெடுத்தேன் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. ஆனால் அது உண்மை. எங்கள் செம்மண் பூமியில் சாதாரணமாக உலவும், நான் மறந்தே போயிருந்த சொல் – கோட்டம். இது கோணல் என்ற பொருளில் வரும். சைக்கிள் ஓட்டிப் போகும்போது எதாவது காரணத்தால் வண்டி தரைக்குச் சாய்ந்தால், முன் சக்கரத்தை கால் நடுவே பற்றி, ஹேண்டில் பாரை இப்படியும் அப்படியும் அசைத்துச் சக்கரம் கோணல் ஆகியிருப்பதை நேராக்குதல், கோட்டம் எடுத்தல் எனப்படும். ஆர்விஎஸ் அவர் பாலபருவத்தில் புது சைக்கிள் வாங்கியபோது, அக்கறையுள்ள சைக்கிள் விற்பனையாளர் மெல்லத்தான் சைக்கிளை ஒப்படைக்கிறார், சோதனை செய்து, கோட்டம் இல்லை என்று உறுதிப் படுத்திக்கொண்டு. எனக்கும் ஆர்விஎஸ்ஸுக்கும் ஒரே பெஞ்ச் மட்டுமில்லை, கோட்டமில்லாத ஒரே சைக்கிளும் கூடத்தான்.
ஆர்விஎஸ் எழுத்திலும் எந்தக் கோட்டமும் இல்லை. எடுத்துக்கொண்ட விஷயத்தில் ஆத்மார்த்தமாகத் திளைத்து அன்போடு வாசகரோடு பங்கு போட்டுக் கொள்கிறார். புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்துக் கீழே வைக்கச் செய்ய அவரால் முடிகிறது. ஹரித்ரா நதியின் வெற்றி அங்கே தான் இருக்கிறது.
அன்புடன்
இரா.முருகன்
நூல் ஹரித்ரா நதி
ஆசிரியர் ஆர்.வி.எஸ்
பதிப்பு கிழக்கு பதிப்பகம்
ஆண்டு 2022
March 2, 2022
மீண்டும் ஜெயமோகன் – மிளகு பற்றி
மிகுந்த மகிழ்ச்சியோடு இதைப் பதிவிடுகிறேன். என் உற்ற நண்பர் ஜெயமோகன், மிளகு பெருநாவல் குறித்து இந்த மூன்று நாட்களில் இரண்டாம் முறையாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். Very positive, and as a good friend and a discerning peer.
அவருக்கு என் நன்றி.
eramurukan.in இணையத்தளம் user friendly ஆக இல்லாதது குறித்து அவர் சுட்டிக் காட்டிய குறைகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறேன்.
இணையத் தளம் விரைவில் புது வடிவமைப்பு பெறுகிறது.
மிளகு தமிழில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்று என்று அவர் எழுதியது எனக்கு அண்மைக் காலத்தில் கிட்டிய மிகப் பெரும் கௌரவம்.
ஜெயமோகனுக்கு நன்றி.
ஜெயமோகன் எழுதியது
https://www.jeyamohan.in/162829/
February 28, 2022
ஜெயமோகன் பரிந்துரைக்கும் ‘மிளகு’
https://www.jeyamohan.in/162723/
பெரு நாவல் ‘மிளகு’ – 1189 பக்கங்கள் – வாசிக்க 49 மணி, 32 நிமிடங்கள்
சார். இவ்வளவுஅருமையானமிகவும் பெரிய விஷயங்கள் கொண்ட இப்பெருநாவலை குறுகிய காலத்தில் எங்களுக்கு அளித்தமைக்கு மிகவும் நன்றி.
February 27, 2022
பெரு நாவல் ‘மிளகு’- உப்புக் கிழவரைக் காலப் பயணம் செய்ய வைத்த புனைவின் சாத்தியம்
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

