இரா. முருகன்'s Blog, page 51

May 31, 2022

இரா.முருகன் புரவி இலக்கிய இதழ் நேர்காணல் ஏப்ரல் – மே 2022 இல் இருந்து

நேர்கண்டவர் எழுத்தாளர் காளிப்ரசாத்

புரவி

மிளகு நாவலின் அடிப்படை பற்றி…

இரா.முருகன்

54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா என்ற துறைமுக நகரமே செழித்து வளர்ச்சி அடைந்தது சென்னபைரதேவி காலத்தில். ஆனால் அது விரைவில், மக்கள் வெளியேறியதால் பாழடைந்து போனது ஆச்சரியமான விஷயம். அடுத்திருந்த கெலதி பிரதேச அரசாங்கப் படைகள் கெருஸொப்பாவை அழிக்க முகாந்தரம் இல்லை. வரலாற்றுத் தரவுகள் இல்லாமல் இருந்தாலும் சென்னபைரதேவி காலத்தில் ஐரோப்பிய யாத்திரீகர்கள் கெருஸொப்பா வந்து தங்கி இருந்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். முக்கியமான தரவுகளில் அவையும் பிரதானமாக உண்டு.

புரவி

மீண்டும் ஒரு பழைய கேள்விதான்..மிளகுராணி கதை மற்றும் கதாபாத்திரங்களோடு அரசூர் வம்சத்தினரின் இளம் தலைமுறைகளை கொண்டு வந்து இணைத்தது சுவாரசியம்தான். ஆனால் குறிப்பாக  எவ்விதத்தில் அது நாவலுக்கு உதவுகிறது அல்லது  தான் உருவாக்கிய பாத்திரங்கள் மீதான பற்று ஆசிரியருக்குத் தொற்றிக் கொண்டுவிட்டதா?

இரா.முருகன்

நாவலாசிரியருக்குத் தான் உருவாக்கிய பாத்திரங்கள் மேல் எப்போதுதான் பற்று இல்லை!  மார்க்வெஸின் நூறாண்டு தனிமை நாவலில் ஒரு காட்சியில் வந்து போகிற கர்னல் ஒருவர்  மார்க்வெஸ் அடுத்து எழுதிய ’கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை’ நாவலில் முக்கியப் பாத்திரமாவார். பெற்றோர்  பேச்சைக் கேட்காமல் திருவிழாவுக்குப் போன ஒரு பெண் சபிக்கப்பட்டு பாதி உடல் பாம்பாகி மார்க்வெஸின் நாவல்கள் பலவற்றிலும் வந்து  போவாள். பழகியவர்களைக் கூடுதல் வாத்சல்யத்தோடு எதிர்கொள்கிறோமே அதுபோல் அரசூர் வம்ச பாத்திரங்களில் சில மிளகிலும் வந்து போகும். ராமோஜியத்தில் தி.ஜாவின் மோகமுள் கதாபாத்திரங்கள் வந்து போவது போல் இதெல்லாம் ஒரு ரசானுபவம் தரத்தான். எழுதும் போது இயல்பாக கதை கடந்து வந்து போகிற பாத்திரங்கள் அவையெல்லாம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2022 19:35

May 30, 2022

அற்ப விஷயம் – சோற்றுக்கடியார்கள்

என்  ‘அற்ப விஷயம்’ மின்நூலிலிருந்து

அற்ப விஷயம் -11          நாக்கு மூக்கு

 

காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி.  காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை நுழைத்துக் கொண்டு புறப்படும் இடம் தெருக்கோடி நாயர் டீக்கடையாக இருக்கும். அங்கே ஒரு டீயை வயிற்றுக்குள் இறக்கினால் தான்  மற்றையவை கிரமமாக இறங்கி இன்றைய நாள் இனிய நாளாகும். நாயர் டீயில் வல்லாரை லேகியத்தையா கலக்கித் தருகிறார்? ஓணத்துக்கு அவர் கடையடைத்தால் இங்கேயும் கார்க் வைத்த மாதிரி அடைப்பு வந்துவிடுமா என்ன?

 

‘டயபடீஸ் கிளினிக் ஆரம்பிக்கப் போறேன். எங்கே திறக்கலாம்?’ சர்க்கரை வியாதிச் சிகிச்சை நிபுணர் ஒருத்தர் என் நண்பரைக் கேட்டார். பிசினஸ் கன்சல்டண்ட் ஆன இவர் ஒரு ஸ்வீட் ஸ்டால் பெயரைச் சொன்னார். நகரம் முழுக்க அங்கங்கே கிளைகள் வைத்து இனிப்பு விற்கும் நிறுவனம் அது. ‘அதிலே ஏதாவது ஒரு கடைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளே கிளினிக் திறங்க. உங்க காட்டிலே மழைதான்’. பின்னே இல்லையா? நாம் எல்லாம் இனியவர்கள். கடைக்காரரின் தாத்தாவுக்கு நூறாவது பிறந்த நாள் என்பதால் விலையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி என்று சமீபத்தில் ஒரு விளம்பரம். விடிகாலையிலேயே நாலு தெரு கடந்து நீண்ட வரிசை. கடையின் சீனிச் சுவைக்கு நாக்கை அடமானம் வைத்தவர்கள்  காத்து நின்று பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்வீட் வாங்கிப் போனார்கள்.

 

திருவல்லிக்கேணியில் ஒரு ஓட்டலில் சாம்பார் ஸ்பெஷல். அதுவும் ஞாயிற்றுக் கிழமை தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து அங்கே யாரோ சாம்பார் வைப்பதாகக் கேள்வி. பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர், கார் என்று ஏறி வந்து மக்கள் அங்கே காலையில் வந்து குவிவது வாடிக்கை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி எல்லோரும் இட்லி சாம்பார் தான் ஆர்டர் செய்வார்கள். அந்த சாம்பார் தேசத்தில் சட்னி கொண்டு வரச் சொன்னால், சர்வர் உங்களைத் துச்சமாகப் பார்ப்பது நிச்சயம். மராத்திய மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட சாம்பாருக்கு சூப்பர், வேணாம், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தைப் ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான்.

 

ஊருக்கும் தீனிக்கும் முடிச்சுப் போடுகிற கலை கைவந்த ஒன்று நமக்கு. சைவ சாப்பாட்டு ஓட்டல் என்றால் பெயரில் எங்கேயாவது உடுப்பி ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். அசைவம் என்றால் திருச்சிக்குத் தெற்கே இருக்கும் ஏதாவது ஊரின் பெயரைத் துணிந்து வைக்கலாம். பாக்கி இருக்கிற ஊர்கள் சிவகங்கை, கல்லல், சருகணி, தேவகோட்டை. வேணாமா? பெயர்ப் பலகையில் அப்பத்தா, அம்மாச்சி என்று உறவுமுறை சொல்லி  அழைக்கலாம்.  அதாவது தெக்கத்தி உறவே தேவை.

 

தி.நகர் ஹோட்டலில் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும்போது  பொரியலுக்கு மேல் ரசத்தைத் தவறுதலாக ஊற்றிவிட்டால் பரிமாறுகிறவரிடம் எரிந்து விழுகிறவர்கள் சினம் காக்கும் இடம் ஐந்து நட்சத்திர ஓட்டல். டையைக் கட்டிக் கொண்டு கருத்தரங்கம், போர்ட் மீட்டிங் என்று இங்கே எப்போதாவது படியேறும்போது பகல் சாப்பாடு கட்டாயம் இருக்கும். ஒரே தட்டில் தயிர் வடை, வறுத்த கோழி, கீரை மசியல், தேங்காய்ச் சாதம் என்று கலந்து கட்டியாகச் சாப்பிட வேண்டி வரும். அதுவும் நின்ற கோலத்தில். யாரும் இதுக்காக அலுத்துக் கொள்வதில்லை.

 

விலைவாசி எகிற எகிற ஹோட்டலை மறந்து ஒரு பெரும்படை தெருவோரக் கையேந்தி பவான் தள்ளுவண்டிகளில் பொடி தோசைக்காகக் காத்து நிற்கிறது. சொகுசு காரில் வரும் இன்னொரு கூட்டம் ஸ்டார் ஹோட்டலில் நுழைகிறது. அங்கே ஸ்பெஷலாக கையேந்தி பவான் அரங்கம் அமைத்து தள்ளுவண்டி வைத்து பொடி தோசை விற்கிறார்கள். அதிக விலைக்கு, இக்கரையில் அக்கரை ருசி.

 

ஆகாரத்தில் வீட்டு மணத்துக்கு ஏங்குகிறதில் வெள்ளைக்காரர்கள் தனிரகம். பெரிய ஹோட்டல்களில் கூட ‘ஹோம் மேட் சூப்’ என்று பெருமையோடு விளம்பரம் செய்திருப்பார்கள். ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் சமையல்காரர்கள்  காரில் வேலைக்கு வரும்போதே தூக்குப் பாத்திரத்தில் வீட்டிலிருந்து சூப் கொண்டு வந்து விடுவார்களோ என்னமோ. எடின்பரோ நகரில்  ஒரு ஹோட்டலில் பார்த்தது இது. ‘நேற்றைய சூப்பும் ரொட்டியும்’ சிறப்பு காலை உணவு. கறுப்போ வெளுப்போ,  நேத்து வச்ச மீன் குழம்பு வகையறா சகலரையும் கட்டிப் போடுகிற சமாச்சாரம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2022 20:01

May 29, 2022

அற்ப விஷயம் – முன்கூட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை

அற்ப விஷயம் மின்நூலில் இருந்து

அற்ப விஷயம்-4         

எட்டு பெட்டிகள்

 

வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள்.

 

மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள் உண்டு. ஆபிசுவரி எடிட்டர் வேலைக்கு ஆள் தேவை என்று கார்டியன் பத்திரிகை இரண்டு வருடம் முன் விளம்பரம் வெளியிட்டது.  நூறு வருடமாகப் பிரசுரமாகும் தினசரி அது. நூறு வருடத்தில் எத்தனை பிரமுகர்கள் உள்நாட்டில், அயல் நாட்டில் மூச்சுவிட மறந்து போயிருப்பார்கள்? இவர்கள் எல்லோருக்காகவும் மனம் உருகி இரங்கி கண்ணீர் சிந்த வைத்த நினைவுக் குறிப்புகள் எத்தனை இருக்கும். அதில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் புத்தகமாகப் போட்டு கார்டியன் வெளியிட, அமோக விற்பனை. இனி அவ்வப்போது  அடுத்த பதிப்பு வரும்போது புதிதாகச் சேர்க்க தகவலுக்குப் பஞ்சமே இல்லை. பக்கத்தையும் விலையையும் கூட்ட இதைவிட சுலபமான வழி வேறே ஏது?

 

ஆபிச்சுவரி அற்புதமாக வரவேண்டியது முக்கியம். செய்தி கிடைத்த ஒரு மணி நேரத்தில் எழுதி அச்சுக்கு அனுப்பும் காரியமில்லை இது. கதை எழுதுவதை விட கடினம். இதற்காக  யாரெல்லாம் பிரபலமானவர்கள் பட்டியலில் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேருடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் அவ்வப்போது பேசியதிலிருந்து நச்சென்று நாலைந்து வரிகள், வேறுபட்ட காலகட்டங்களில் எடுத்த புகைப்படங்கள் என்று பத்திரிகைகள் சேகரித்து வைப்பதுண்டு. அதில் அவ்வப்போது கூட்டிச் சேர்த்து ‘அன்னார் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று  முடியும் உருக்கமான கட்டுரையும் எழுதி தயாராக வைத்திருப்பார்கள்.

 

சமீபத்தில் அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் சி கிளார்க் காலமானபோது வெளியான இரங்கல் குறிப்புக்குக் கீழே ஒரு வரி சேர்த்திருந்தார்கள் – ‘இந்த ஆபிச்சுவரி கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. எழுதியவர்  மரணமடைந்து விட்டார்’. 2008 மார்ச்சில் காலமான ஆர்தர் கிளார்க்குக்கு 1998-ல் காலமானவர் எழுதிய அஞ்சலி. செய்திகளை முன்கூட்டித் தயாரிப்பதில் வரும் பிரச்சனை இது.

 

சில மரண வார்த்தைகள் வதந்தியாகவே சில பல காலம் நின்று போய்விடும். ஒரு நகைச்சுவை எழுத்தாளர் காலமானதாக செய்தி வந்தபோது அவரே பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசினார். ‘என் மரணம் பற்றி வெளியாகியிருக்கும் செய்தி மிகைப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

 

வெள்ளைக்காரனோ, கறுப்பனோ, பிரபலங்களின் சாவுச் செய்தி எல்லோரிலும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதைக் கேட்கிறபோது அல்லது படிக்கிறபோது வருத்தம் ஏற்படுகிறதுதான். ஆனாலும், பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி ஆவலும், பரபரப்பும் உண்டாகிறது,  அலாதியான உணர்ச்சி அதெல்லாம்.

 

சாவுச் செய்தி இருக்கட்டும். மரணத்துக்காக வருந்தி மற்றவர்கள் செய்தி தருவது இன்னொரு சடங்கு. இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பிரதாயம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் படுகிற ஒன்று. தொண்ணூற்றொன்பது வயதில் ஒரு பிரபலம் காலமானபோது ‘டீப்லி ஷாக்ட்’ என்று வேறு ஒருத்தர் வருந்தியிருந்தார். அவர் வருத்தம் புரிகிறது. ஆனால் மிகவும் அதிர்ச்சி அடைய இதில் என்ன இருக்கிறது?

 

பிரபலங்களின் மரணத்தை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துவது நெருங்கிய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை இழப்பது. மறைந்தவர்களோடு    தொடர்பு படுத்தி பழைய நினைவில் ஆழ்ந்து கண்ணீர் வடிக்க அவர்கள் பரிசளித்த அல்லது பயன்படுத்தியிருந்த ஒரு கைக்குட்டை கூடப் போதுமானது. இம்மாதிரி சேகரித்த பொருள்கள் மீது தனி அபிமானமும் மரியாதையும் உண்டாவதால் இதில் எதையும் வெளியே தூக்கிப்போட எப்போதும் மனம் வருவதில்லை.

 

இறந்து போன ஒவ்வொருவருக்காகவுமாக இப்படி சேர்த்த நினைவுச் சின்னங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிந்து வீடு நிறைந்து போகிறது. வீடு மாற்றி வேறு வீட்டுக்குப் போகவேண்டி நேர்ந்தால் இவற்றை பத்திரமாக மூட்டை கட்டி அனுப்பி குடி போகும் இடத்தில் திரும்ப எடுத்து அதேபடி வைத்தால்தான் நிம்மதி வருகிறது. அந்த நிம்மதியைத் தவிர நினைவு மூட்டைகளில் என்ன இருக்கிறது?

 

‘ஒன்றுமே இல்லை லாரி முழுக்க பழைய அடைசல்களோடு புதுவீட்டுக்குப் போகாமல் குறைந்த சுமையோடு புறப்படுங்கள். எட்டே பெட்டிகள் போதும். உங்களுக்கு அவசியமானதை மட்டும் நாங்கள் கவனித்துத் தேர்ந்தெடுத்து மூட்டை கட்டி அனுப்பித் தருகிறோம்’. பிரிட்டனில் இப்படி ஒரு விளம்பரத்தோடு தொடங்கிய ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’  பிசினஸ் சக்கைப்போடு போடுகிறது இப்போது. பாட்டி படியப் படிய தலைவாரிய சீப்பு, தாத்தாவின் சாய்வு நாற்காலி, பெரியப்பா மூக்குக் கண்ணாடி, சித்தப்பா பல்செட்  இதெல்லாம் குவிந்து இருப்பிடத்தில் பாதியை அடைக்கிறதா? எட்டு பெட்டி கம்பெனியைக் கூப்பிட்டால் அறை சுத்தமாகும். மனசு வெறுமையாகுமோ என்னமோ தெரியாது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2022 20:33

May 28, 2022

என்ன படிக்கிறேன்?

எகிப்திய எழுத்தாளர் நக்யுய்ப் மஹ்ஃஃபவுஸ் (Naguib Mahfouz) எழுதிய ‘கெய்ரோ மூன்று நாவல்’களைப் படித்து முடித்து ஆப்ரிக்க மூன்று நாவல்களை வாசிக்க எடுத்திருந்தேன் அல்லவா?

நைஜீரிய எழுத்தாளர் சின்வா அச்சூபி (Chinua Achebe) எழுதிய இவற்றில் முதலாவது நூல் Things Fall Apart இரண்டு நாளில் வாசித்து முடித்தேன்.

மற்ற இரு ஆப்பிரிக்க நாவல்களைப் படிக்கும் முன், நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பமுக் எழுதிய ‘இஸ்தான்புல்’ நாவலை அடுத்து வாசிக்க இப்போது எடுத்திருக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2022 06:56

May 26, 2022

மிளகு – பெரும் நாவல் மதிப்புரை – திரு.சரவணன் மாணிக்கவாசகம்

மிளகு – இரா.முருகன்:

இரா.முருகன் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தவர். வெளிநாட்டில் வசித்தவர். 1977ல் கணையாழியில் ஆரம்பித்த இலக்கியப் பயணம் ஐம்பதாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முப்பதுக்கும் மேல் நூல்கள், புனைவின் எல்லா வகைமைகளிலும் எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேல் முகமில்லாதவரையும் சமமாக நடத்தும் அந்த Humbleness தமிழில் ரொம்ப அரிதான சரக்கு.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் மிர்ஜான் கோட்டையில் சென்னபைராதேவியின் அறுபதாமாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஆரம்பிக்கும் நாவல், இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரே தாவலாகத் தாவி, கடவுள் தேசத்தின் அம்பலப்புழையில், அகல்யாவின் சிரார்த்தஉணவில் மிளகு சேர்க்காமல், மிளகாய் போட்டதன் சிறிய தகராறைக் கடந்து, லண்டனுக்குப் பயணமாகிறது. 1189 பக்கங்கள் கொண்ட பெருநாவல் இது.

இரண்டு காலகட்டங்களில் நான்கைந்து கிளைச்சாலைகளில் நடக்கும் கதை இது. சென்னபைராதேவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்டது வரலாறு, போர்த்துகீசியர் மிளகு வியாபாரம் செய்தது, கந்தஹாருக்கு இந்திய விமானம் பயணிகளுடன் கடத்தி செல்லப்பட்டு, தீவிரவாதிகளை விடுவித்துப் பயணிகளை மீட்டது என்பதெல்லாமே வரலாறு. எனவே சரித்திரச் சட்டகத்திற்குள் கச்சிதமாக புனைவை நுழைத்திருக்கிறார் இரா.முருகன்.

ராணி சமண மதத்தைப் பின்பற்றினாலும், சைவ, வைணவக் கோவில்களுக்கு ஆதரவு அளித்தது உண்மை. கர்நாடகா, ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளில் சமணமும், பௌத்தமும் பின்பற்றப்பட்ட போதும் கூட இந்து தெய்வ வழிபாடுகள் நிற்கவில்லை. சமணம் தேய்கின்ற காலகட்டம் இது. திகம்பரர்கள் பிறக்கும் போதிருந்த உடைகளுடன் அலைகிறார்கள். சமண குருக்கள் வந்து பிராத்தனை செய்தால் மழை பெய்யும், போரில் வெல்லலாம் என்று ராணிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.
மொழிநடை இந்த நாவலின் சுவாரசியங்களில் ஒன்று. நானூறு வருடங்கள் இடைவெளியில் கதைகள் தொடர்ந்து நடப்பதால் அந்தந்த காலங்களுக்கான மொழியை உபயோகிக்க வேண்டியதாகிறது. அதிகம் மெனக்கெடாமல் எளிதாக அதைச் செய்திருக்கிறார் இரா.முருகன். நானூறு வருடங்கள் முன்பின் நகர்கையில், ஹரிதாஸில் பாகவதர், ராஜகுமாரியைக் காதல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சூரியா இடையே வந்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்று சொன்னால் வரும் அதிர்ச்சி, வாசகர்களுக்கு வந்து பின் அதுவும் நூறுபக்கங்களுக்குள் பழகிவிடுகிறது.

மாயயதார்த்தத்தைத் தன்னுடைய கதைகளில் அதிகம் பயன்படுத்தியவர் இரா.முருகன். இதில் ஒரு மாறுதலுக்கு Fantasy. காலத்தில் தொலைந்து நானூறு வருடங்கள் முன் சென்று, நாற்பது வருடங்கள் கழித்து நிகழ்காலத்திற்கு நூற்றுப்பத்து வயதில் திரும்பும் முதியவர். நானூறு வருடங்களுக்கு முன்னான பாட்டிகளின், பாட்டிகளின், பாட்டிகளைக் காதலித்துத் திரும்பிய பாக்கியவான். மாயயதார்த்தம் தன் பங்கிற்கு ராட்சஷக் கொடியாய் வீட்டைச் சுற்றி வளரும் பேய்மிளகு, ஆவிகள் நேமிநாதனுடன் பேசுவது என்பது போல் இடையில் கலக்கின்றன.

சிருங்காரமும், மிளகும் நாவல் முழுவதும் விரவி இருக்கின்றன. இவரது ஒவ்வொரு அடுத்த நாவலுக்கும் சிருங்காரம் கூடுவதாகத் தோன்றுவது என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம். ராமோஜியத்தில் ரத்னாபாயின் ஒருமுனைத் தாக்குதலில் இருந்து இதில் பன்முனைத் தாக்குதல். மிளகு, கதையின் உயிர்நாடி. நானூறு வருடங்கள் முன்பு கப்பலில் நடத்திய வர்த்தகம் முதல், மிளகு Option வரைக் கதையில் வருகிறது. மிளகு வர்த்தகத்தை உலகமெங்கும் நடத்திய, ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அரசாண்ட, கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ராணியை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் மிளகுராணியாக. பெண்கள் வரலாற்றில் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஜான்சி ராணி போல் குழந்தையைக் கட்டிக்கொண்டு போருக்கு செல்லவேண்டும்.

மிர்ஜான் கோட்டை வரலாற்று சாட்சியாக இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது.

சமணம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. சமணம், பௌத்தத்தை அழித்த சைவத்தால் அதற்குப் பின் வந்த இரண்டு மதங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாக் காலங்களிலும் உடன்இருந்து கொல்லும் வியாதி போல், மண்ணாசை கொண்டு ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டு அடுத்தவர்களை உள்ளே நுழையவிட்ட வரலாறு இந்த நாவலிலும் தொடர்கிறது. முந்தைய நாவல் ராமோஜியத்தைப் போலவே இதிலும் ஏராளமான தகவல்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு பக்கங்கள் கொண்ட நாவலில் கொச்சு பகவதியைப் பற்றி கொஞ்சமே தெரிந்துகொண்ட மனக்கிடக்கையுடன் நாவலை முடிப்பவர்கள் அச்சுதம் கேசவம் வாசிக்கவும்.

#நாவல்கள்
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 89250 61999
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.1400.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2022 20:18

பகவதியின் டயரிக் குறிப்புகள் 1857 (அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து)

பகவதியின் டயரியில் இருந்து

————————

அரசூர் பொங்கல் கழிந்து  நாலாவது சனிக்கிழமை இங்கிலீஷ் வருஷம் 1877

 

நான் பகவதி. பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.  மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக தப்பு இல்லாதபடிக்கு எழுத, மலையாள வாடை அதிகம் கலக்காமல் பேசக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.

 

நாங்கள் இங்கே அரசூரில் இருக்கிறோம். அவர் புகையிலைக் கடை வைத்து நிர்வாகம் செய்கிற பிராமணன். என்ன யோசனை? பிராமணன் புகையிலைக் கடை வச்சிருக்கானா, அடுத்தாப்பல என்ன, அரவசாலை.. ஷமிக்கணும்..கசாப்புசாலை..கசாப்புக்கடை, சாராயக்கடை தான் பாக்கி என்று நினைக்கிற தோதிலா?

 

புகையிலைக்கடைக்காரனுக்கு எல்லாம் நம்மாத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து அனுப்புகிறோமே, காசு வசதி அத்தனைக்கு இல்லாமலா போனது நமக்கு என்று என் அண்ணாக்கள் மூணு பேரும் ஏகத்துக்கு விசனப்பட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாரும் தாசில்தார், கோர்டு கிளார்க்கர்மார் போல் பெரிய உத்தியோகத்தில் இருக்கப்பட்ட மனுஷ்யர் இல்லை. சமையல்காரர்கள் தான். நாலு பேருக்கு இல்லை, நானூறு பேருக்கு வடிச்சுக் கொட்டி, கிண்டிக் கிளறி, வறுத்துப் பொடித்து வதக்கி,  கரைத்து, காய்ச்சி மணக்க மணக்க கல்யாண சமையல் செய்கிற சமையல்காரர்கள். தேகண்ட பட்டன்மார் என்பார்கள் எர்ணாகுளம், கொச்சி பக்கம். பட்டன் என்றால் தமிழ் பேசுகிற தாழ்ந்த ஸ்திதியில் இருக்கப்பட்ட பிராமணன். நம்பூதிரிகள் உயர்ஜாதி தெய்வ துல்யரான பிராமணர்கள். அவர்களுக்கு பட்டன்மார் ஆக்கி வைக்கிற சமையல் ரொம்பவே பிடிக்கும். எங்களை மாதிரி பட்டத்திக் குட்டிகளையும் கூட. எந்த ஜாதி பெண்ணை விட்டார்கள் அவர்கள்? எது எப்படியோ, தமிழ் பிராமணன் அழுக்கு தரித்திரவாசி. போனால் போகட்டும் என்று ரொம்ப தாழ்ந்த ஸ்தானம் கொடுத்து அவர்களையும் பிராமணர்களாக கொஞ்சூண்டு மதிக்கிறார்கள்.

 

நம்பூத்ரி கிடக்கட்டும். அம்பலப்புழை பற்றி இல்லையோ பிரஸ்தாபம்.

 

கல்யாணம் கழிச்சு ரெண்டு வருஷம் பாண்டி பிரதேசத்தில் இந்த அரசூரில் குடியும் குடித்தனமுமாக இருக்க ஆரம்பித்த பிற்பாடு கூடசொந்த ஊர் மோகமும், ஈர்ப்பும், பறி கொடுத்த மனசும், அங்கே போகணுமே என்று சதா மனசிலொரு மூலையில் நமநமன்னு பிறாண்டி பிராணனை வாங்கறது.

 

கிடக்கட்டும் அதெல்லாம். அதை எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு உட்கார்ந்து எழுத இல்லையாக்கும் எங்காத்துக்காரர் இப்படி கட்டு கட்டாக காகிதமும் கட்டைப் பேனாவும், ஜலத்தில் கரைத்தால் மசியாகிற குளிகையும் வாங்கி கொடுத்ததும் கையைப் பிடித்து உருட்டி உருட்டி தமிழ் எழுத சொல்லிக் கொடுத்தது.

 

தினசரி மனசில் தோணுகிறதை நாலு வரியாவது எழுதி வை. கையெழுத்தும் தமிழ் ஞானமும் மேம்படும். நிறைய எழுத ஆரம்பித்ததும் பட்டணத்தில் வெள்ளைக்காரன் போட்டு விக்கற டயரி   வாங்கி வந்து தரேன். தினசரி ஒரு பக்கம் தேதி போட்டு எழுத சவுகரியமாக கோடு எல்லாம் போட்டு வச்சிருக்கும். வருஷா வருஷம் டயரி எழுதி நம்ம சந்ததிக்கு நாலு காசோடு கூட ஆஸ்தியாக விட்டுட்டுப் போகலாம். இதோட மதிப்பு இப்போ தெரியாது. இன்னும் நூறு வருஷம் கழிச்சு தெரிய வரும் அப்படீன்னு சொன்னார்.

 

இங்கிலீஷ்காரன் பிருஷ்டம் துடைச்சுப் போடுகிற எழவெடுத்தவன். அவன் போட்ட நாத்தம் பிடிச்ச டயரி எல்லாம் வேண்டாம். உங்க பேரை எழுதக் கூட அது தகுந்ததில்லைன்னு சொல்லிட்டேன்.

 

அய்யோ, மசி தீர்ந்து கொண்டு போறது. நான் இன்னும் விஷயத்துக்கே வரலே. வந்தாச்சுடீயம்மா.

 

நேற்றைக்கு வெள்ளிக்கிழமையாச்சா? அரசூர் பக்கம் நாட்டுராஜன்கோட்டையில் கண்ணாத்தா கோவிலுக்கு சாயந்திரம் போய் மாவிளக்கு ஏற்றி வச்சு ஒரு கண்மலர் சாத்திட்டு வரலாமேன்னார். அவர் போன மாசம் கண்ணிலே கட்டி வந்து கஷ்டப்பட்டபோது வேண்டிண்டது.. வெள்ளியிலே கண் மலர்னு சொல்வா இங்கே.. அம்பாள் கண்ணோட சின்ன பிரதிமை.. அங்கேயே விக்கற வழக்கம். வாங்கி கண்ணாத்தா பாதத்தில் வச்சுக் கும்புடணும். ரொம்ப இஷ்டமான காரியமாச்சே. அம்மாவோ அம்மையோ எல்லாம் நீதாண்டி ஈஸ்வரி.

 

ஆக நான், வண்டிக்கார ஐயணை, பக்கத்தாத்து அரண்மனைக்கார ராணி மாமி. என்ன அதிசயமா அப்படி ஒரு பார்வை? எங்காத்துக்கு அடுத்த வீடு ஜமீன் அரண்மனை. ராஜா இருக்கார். மாமனார் இருந்தா அவர் வயசு. ராணியம்மா உண்டு. ராணி மாமின்னு கூப்பிடுப் பழகிடுத்து. தங்கமான மனுஷர்கள்.

 

நாங்க தவிர, அரசூர் அரண்மனை ஜோசியர் வீட்டு சோழிய அய்யங்கார் மாமி, அவா பக்கத்து எதிர் வீட்டுலே ரெண்டு பெண்டுகள் .. பெருங்கூட்டம் தான். ஐயணை ஓட்டற ரெட்டை மாட்டு வண்டியிலே நாங்க. பெரிய கப்பல் மாதிரி விஸ்தாரமான வண்டியாக்கும் அது. ராணியம்மா ஏறணும்னா ஏப்பை சாப்பை வண்டி எல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?

 

இது ஸ்திரிகள் பட்டியல். ஆம்பளைகளும் நிறைய.  எங்காத்துக்காரர், அவருடைய புகையிலைக்கடை ஸ்நேகிதர்கள், அரண்மனை வாசல் ஜவுளிக்கடை மூக்கக் கோனார், அரண்மனை சமையல்காரன் பளனியப்பன் ஆமா பழனியப்பன் இல்லையாம். இப்படி இன்னொரு கூட்டம் புளி மூட்டையாக இன்னொரு பெரிய வண்டியில்.

 

வெய்யில் தாழ நாலரை மணிக்குக் கிளம்ப உத்தேசிக்க, இவர் புகையிலைக் கடை நெடியும், கடைத்தெரு புழுதியும் வியர்வையுமாகக் கசகசக்கிறது என்று குளிக்கக் கிளம்பிவிட்டார். கிணற்றில் இரைத்து ஊற்றி, ஊர்க்கதை பேசி ஐயணை குளிப்பாட்டி விட்டபோது ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. புருஷன் குளித்துக் கிளம்பும்போது பெண்ஜாதி அட்டுப் பிடித்தாற்போல் போகலாமா என்று நானும் நாலு வாளி இரைத்து ஊற்றிக் கொள்ளும்போது மூக்கில் போட்ட நத்து கிணற்றில் விழுந்து தொலைத்தது. வைரத்தோட்டை எடு, மூக்கில் குத்தி ரத்தம் வர திருகு என்று நரக வாதனையோடு அதை போடுவதற்குள் மூத்திரம் ஒழிக்க முட்டிக் கொண்டு வந்தது.

 

சரி கிளம்பலாம் என்று எல்லோரும் புறபபட மாம்பழப் பட்டுப் புடவையைச் சுற்றிக் கொண்டு அவசரமாக மாட்டு வண்டியில் போய் உட்கார்ந்தேன். பக்கத்து அரண்மனையாத்து ராணிமாமி எனக்கு முன்னாடியே அங்கே இருந்தார். ரொம்ப வாஞ்சை அம்மா மாதிரி. மாமியார் இல்லாத குறையை தீர்க்கவே இவரை தெய்வம் கொண்டு வந்து விட்டதோ என்னமோ. பிராமணாள் இல்லை. சேர்வைக்காரர் வம்ச வாவரசி. ஜாதி என்ன கண்றாவிக்கு? மனுஷா மனசில் அன்போடு பழகினால் போறாதா?

 

தட்டை, முறுக்கு, திராட்சைப் பழம் என்று நாலைந்து ஆகார வகையறாவை வண்டியிலேயே ராணிமாமி திறக்க மற்றப் பெண்டுகள் வஞ்சனையில்லாமல் தின்று தீர்த்தார்கள். கூட ஆண்கள் இல்லாத சந்தோஷமாக்கும் அது. அப்புறம் பானகம். வேணாம் வேணாம் என்று நான் சொல்ல சங்கிலே சிசுவுக்கு மருந்து புகட்டுகிற மாதிரி தலையைத் திருகி வாயில் ஒரு பஞ்ச பாத்திரம் நிறைய் வார்த்து விட்டாள் ராணி.  நான் எட்டிப் பார்த்தேன். ஆண்கள் வந்த வண்டியை எங்காத்துக்காரர் தான் ஜன்மாஜன்மத்துக்கும் வண்டிக்காரனாக ஆயுசைக் கழிக்கிற மாதிரி உற்சாகமாக வண்டி ஓட்டி வந்தார். வாயில் ஏதோ தீத்தாராண்டி பாட்டு வேறே.

 

நாட்டுராஜன்கோட்டை போனதும் தெப்பக்குளக் கரையில் ரெண்டு வண்டியும் நின்றது. ஆம்பிளைகள், எங்காத்துக்காரரும் கூடத்தான் வரிசையாக இறங்கி ஓரமாக வேலி காத்தான் புதர் ஓரம் குத்த வைத்தார்கள். எங்க வண்டியிலே மசான அமைதி. பொண்ணாப் பிறந்த ஜன்ம சாபம் அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது.

 

அத்தனை பொம்மனாட்டிகளும் பானகமும் ஊருணித் தண்ணீரும், சீடை முறுக்கு சாப்பிட்ட அப்புறம் பித்தளை கூஜாவில் இருந்து ஏலக்காய் போட்ட வென்னீருமாகக் குடித்து எல்லோருக்கும் வயிறு வீங்குகிற அளவு மூத்திரம் முட்டுறது. ஆனா, பெண்ணாப் பிறந்தவ, அவ ஊருக்கே பட்டத்து ராணியா இருந்தாலும்,  உலகத்துக்கு ஜாதகம் கணிக்கிற ஜோசியர் பெண்டாட்டியாக இருந்தாலும், காசு புரளும் புகையிலைக்கடைக்காரன் ஆம்படையாளாக இருந்தாலும் இடுப்புக்கு கீழே ராத்திரி மட்டும் உசிர் வரப் பட்டவர்கள். மற்ற நேரம், பொண்ணாப் பொறந்தாச்சு, பொறுத்துக்கோ.

 

சந்நிதிப் படி கடக்கும்போது எங்கே புடவையை நனைத்துக் கொண்டு விடுவேனோ என்று ஏக பயம். அதோடு கண்ணாத்தாளைத் தரிசிக்க, அவள் சிரித்தாள். என்ன அய்யர் ஊட்டுப் பொண்ணே, ரொம்ப நெருக்குதா? என்றாள். ஆமாடி ஆத்தா.

 

ஒரு நாள் இப்படி வாயிலே நுரை தள்ளுதே நான் வருஷக் கணக்கா இப்படித்தானே நிக்கறேன்னாளே பார்க்கணும். இல்லை எனக்கு மட்டும் கேட்டுதா?

 

அவசரமே இல்லாமல் பூசாரி தமிழ், கொஞ்சம் கிரந்தம், அப்புறம் ஏதோ புரியாத பாஷை எல்லாத்திலேயும் மந்திரம் சொல்லி  சிரித்தார். தமிழில் நெஞ்சு உருகப் பாடினால் வேணாம் என்றா சொல்லப் போறா? அவ கிடக்கா. எனக்கு இப்படி முட்டிண்டு.

 

அப்புறம் ஒரு மணி நேர்ம் கூடுதல் சித்தரவதையோடு ஊர் திரும்ப வண்டி கட்டினார்கள். போகிற வழியில் ஆம்பிளைகள் திரும்ப குத்தி உட்கார்ந்து இன்னொரு தடவை நீரை எல்லாம் இறக்க, கால் வீங்கிப் போய் நாங்கள் சிவனே என்று வண்டியிலேயே உட்கார்ந்திருக்க வேண்டிப் போனது. பிரம்மா படைச்சபோது ஒரு குழாயை கூடவே கொடுத்திருக்கக் கூடாதா? நாளைக்கு விக்ஞானம் வளரும்போதாவது பிரம்மாவாவது புடலங்காயாவது என்று தூக்கிப் போட்டு விட்டு இந்தக் குழாய் சமாசாரத்தைக் கவனிக்கக் கூடாதா?

 

வீட்டுக்குள் வந்து பின்கட்டுக்கு ஓடி ஒரு பத்து நிமிஷம் பெய்து தீர்த்தேன். எதுக்கோ உடனே குளிக்கத் தோன்ற கிணற்றில் இரைத்து இன்னொரு ஸ்நானம். உள்ளே வந்து புடவையை மாற்றிக் கொண்டு பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நமஸ்காரம் பண்ணினேன். தப்பாச் சொல்லிட்டேனேப்பா உன்னை. பொண்ணு என்ன சொன்னாலும் எப்பச் சொன்னாலும் தப்பாச்சே. குழாய் எல்லாம் வேண்டாம்.

(பகவதியின் டயரிக் குறிப்பு நிறைவு)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2022 06:35

May 21, 2022

பெருநாவல் மிளகு – இருமை கரைந்து வரும் ஒருமை

புரவி கலை இலக்கிய இதழ் மே 2022- இரா.முருகன் நேர்காணலில் இருந்து (நேர் கண்டவர் – காளிப்ரசாத்)

கேள்வி
வணிகமும் சமணமும் கலந்த ஒரு முரணாக ஒரு இழையை காட்சியமைக்கிறீர்கள்.. இது ஒருபக்கம் பொருள் ஈட்டும் பற்று மறுபக்கம் துறக்கும் திகம்பரம் என சமணத்தின் இரு பிரிவுகளை கூறுகிறது. சமண பஸதிக்குள் புத்திர பாசத்தில் சென்று விழும் பரமன் என இந்த duality பாத்திரங்கள் வரை நீளுகிறது. சமணம் மீதான உங்களுடைய பார்வைகளை கூற இயலுமா..? அது குறித்து எழுதும் எண்ணம் உள்ளதா?

இரா.முருகன்
இந்தக் கதை நிகழும் காலத்தில் சமணம் தன் தனி அடையாளத்தைப் பெரும்பாலும் தொலைத்து வைதீக இந்து மதத்தில் கலந்து கரைந்து கொண்டிருந்தது.

சென்னபைரதேவி சதுர்முக பசதி கட்டிய அதே சுறுசுறுப்போடு கோகர்ணம் சிவன் கோவிலில் திருப்பணி செய்கிறார். இது வரலாறு.

நாவலில் சென்னாவின் தத்தெடுத்த புத்திரனாக வரும் நேமிநாதன் இந்த இருமை கரைந்துவரும் ஒருமை மத நம்பிக்கை சார்ந்து கெலதியில் சிவன் கோவிலில் வழிபடுகிறான். வரலாறு அடிப்படையான புனைவில் சென்னபைரதேவி சிவராத்திரியன்று கெருஸொப்பா சிவன்கோவிலில் வழிபாடு செய்யப் போகிறாள் – சமண மதத்தவள் ஆக இருந்தாலும். இது இயல்பாக கதையிலும் வரலாற்றிலும் நடந்த நிகழ்வு.

நேமிநாதன் கதாபாத்திரம் போர்த்துகீசிய கார்டெல் வணிகக் குழு யோசனைப்படி சிவன் கோவிலில் வெடியை விட்டெறியவும் அதே போல் சமண பசதியில் மாமிசத் துண்டை எறியவும் நடந்த சதியின் பின்னணியில் இருக்கிறான். அதுவரை இல்லாததாக, இந்த இரு மதங்களுக்கு நடுவே பரஸ்பர நம்பிக்கை குறைந்து ஒருவரை மற்றவர் சந்தேகப்படும் சூழல் அங்கே உருவாகிறது. மதம் தொடர்பான வன்முறையின் மோசமான அம்சம் வன்முறையைத் தூண்டி விடுவது.

அப்படிச் செய்கிறவர்களை அடையாளம் காண்பது கடினம். மக்களே போல்வர் அக்கயவர். இந்த நிலை சீர்படுமா? மானுடத்தில் நம்பிக்கை வைக்கும் இலக்கியமும், கலைவெளிப்பாடுகளும் அதற்கான நம்பிக்கை தருமா? காலம் தான் சொல்ல வேண்டும்.

சமணம் பற்றி நாவலில் சென்னபைரதேவி உரத்த சிந்தனையாகவும் அப்பக்கா தேவியோடான உரையாடலிலும் சொல்வதுதான் என் நோக்கும். நான் பேச வைத்தபடிதானே அவர்கள் பேசுவார்கள்.

மகாத்மா காந்தியின் அஹிம்சை சமணத்திலிருந்து கால்கொண்டது. பெண்ணுக்கு சுவர்க்கம் கிட்டாது, அவள் ஆணாக மறுபடி பிறந்தே சுவர்க்கம் புக நோற்க வேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகளை கடந்து அஹிம்சையை, புலால் மறுப்பை, கள்ளுண்ணாமையை ஆயிரம் ஆண்டாக பாரத பொதுமனப்பாங்கில் ஏற்படுத்தியிருப்பது சமணம். மகாத்மா காந்தியின் வாக்கால், வாழ்க்கையால் மறு உறுதி செய்யப்பட்டது இவை அனைத்தும்.

பரமன் சுழலும் சதுர்முக பசதிக்குள் நுழைவது ஒரு இலக்கிய உத்திதான். வாசகருக்கு நாவலோட்டத்தில் பழக்கமான பசதியை காலத்தில் முன்னும் பின்னும் சென்று வரும் உத்திக்கான கருவியாகப் பயன்படுத்த நாவலில் வருகிறது அது. மற்றப்படி சுழலும் கட்டிடங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2022 20:36

May 13, 2022

என் வாசகர்களும் நானும்

என் வாசகர்களும் நானும்

என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’.

பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து வச்சுக்கிட்டேன். செம வேலை. ஆபீசுக்கு அரை நாள் லீவு போட வேண்டிப் போச்சு” என்றாரே பார்க்கணும்.

அரசூர் வம்ச நாவல்களாக மேஜிக்கல் ரியலிசம் எழுதுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது என்றால் அதைப் படித்து விட்டுக் கேட்கப்படும் கேள்விகளும் இன்னொரு வகை சுவாரசியம். ‘அரசூர் வம்சத்திலே சாமிநாதன் அவனுக்கு நூறு வருஷம் முந்தைய ஒரு பெண்ணின் ஆவியோடு உடல் உறவு வச்சுக்கறானே, அது சாத்தியமா?”. இன்னொரு கேள்வி, ‘ஆலப்பாட்டு வயசன், பறந்து போய் கோவில் கொடிமரத்துக்கு மேலே இருந்து அசுத்தம் பண்றானே, அது நிஜமாவே நடந்ததா?”

என்னிடம் கேள்வி கேட்ட அன்பர்களுக்குச் சொன்ன பதில், ‘இது ஒரு இலக்கிய உத்திங்கற அளவுலே மட்டும் பாருங்க. ஆவியோட எல்லாம் போகம் பண்ண முடியாது. அது எதுக்கு? ஆவி இருந்தாலும், மிதந்துக்கிட்டு வந்தாலும். போகத்துக்கு ஆவியை ஏன் தேடிப் போகணும்? அதே போலத்தான் வயசன் பறக்கறதும். அவன் தன்னை மறந்த நிலையில் செயல்பட்டுக் கிட்டிருக்கான்னு எடுத்துக்கிட்டா பிரச்சனை இல்லை” என்று சொல்லி மேஜிக்கல் ரியலிசம் பற்றி சிறுகுறிப்பு வாயால் வரைய வேண்டிய சந்தர்ப்பங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

இந்த நாவலை எழுத எம்புட்டு நேரம் பிடிச்சது? ஒரு வாசகர் என்னைப் புத்தகக் கண்காட்சியில் கேட்டார். அது அரசூர் வம்சம் நாவல்களில் இரண்டாவதான விஸ்வரூபம் வெளியான நேரம். கனமான எழுத்து. ஆமாம், கிட்டத்தட்ட தொள்ளாயிரம் பக்கம் அந்த நாவல் இருக்கும். நான் ஓரக்கண்ணால் அந்த வாசக நண்பர் சுமந்திருந்த புத்தகப் பையைப் பார்த்தேன். விஸ்வரூபம் அதில் இருந்ததாகத் தெரியவில்லை. என்றாலும் சாந்த சொருபனாகப் பதில் சொன்னேன் –’ரெண்டு வருஷம் எடுத்துக்கிட்டேன் இதை எழுதி முடிக்க”. “நான் கூட ரிடையர் ஆனதும் ஒரு பெரிய நாவல் எழுதலாம்னு இருக்கேன்” என்றார் அவர். ஆகியிருப்பார் இப்போது. அவர் எழுதிய நாவல் வெளியானதா என்று தெரியவில்லை.

இதே நாவலில் 1899 டிசம்பரில் ஏழு கிரகம் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வந்த தினத்தன்று நடப்பதாக ஒரு அத்தியாயம் அமைத்திருந்தேன். அதைக் குறிப்பிட்டுக் கேட்டுப் பாராட்டி அந்த நிகழ்வு பற்றி மேலதிக விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார் இன்னொரு வாசகர். அந்த அத்தியாயத்தில் மகாலிங்க அய்யன் திருக்கழுக்குன்றம் யாத்திரை போகும்போது ஒரு சோனியான, மார்பு பெருத்த கன்யகை மேல் மோகவசப்படுவான். ‘போன வாரம் கழுக்குன்றம் போனேன் சார், அந்த அய்யனும் பொண்ணும் எனக்கு முன்னாடி படி ஏறிட்டிருந்ததா தோணிக்கிட்டே இருந்தது. கழுகு இப்போ எல்லாம் வர்றதில்லே தெரியுமா?” இது இன்னொரு வாசகர் இந்த நாவலை ஆழ்ந்து படித்து விட்டுச் சொன்னது.

விஸ்வரூபம் நாவலைப் படித்து விட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தார் இன்னொரு வாசகர். நல்ல எழுத்தாளரும் விமர்சகருமான ஐராவதம் தான் அவர். எனக்கும் அவருக்கும் நண்பரான விருட்சம் இலக்கிய இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான அழகியசிங்கர் அவரோடு வந்து என்னைச் சந்தித்திருக்க வேண்டியது நடக்காமலே போனது. ஐராவதம் காலமாகி விட்டார் அதற்குள். “விஸ்வரூபம் நாவல்லே ஒவ்வொரு பக்கமா அங்கங்கே அடிக்கோடு இட்டு, மார்ஜின்லே எழுதி வச்சிருந்தார் அவர். நிறைய உங்களோடு பேசணம்னார்” என்றார் அழகியசிங்கர். ‘எனக்கு வேறே எதுவும் வேணாம், பொக்கிஷம் போல, அவர் கையெழுத்தும் போட்ட கோடும் இருக்கற புத்தகப் பிரதி கிடைச்சாலும் போதும். எதை எல்லாம் படிச்சு ரசிச்சிருக்கார், என்ன எல்லாம் பேசணும்னு நினைச்சிருந்தார் ஐராவதம் அப்படீன்னு ஓரளவாவது தெரிஞ்சுக்கலாம்” என்றேன். அந்தப் பிரதி எங்கே போனதோ.

அரசூர் நாவல்களில் வரும், எண்ணற்ற குடும்பங்களின் தீர்த்தயாத்திரை விவரங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பதிந்து வைக்கும் ஹரித்துவார புரோகிதர்கள் பற்றிய தகவல், மீரட் கத்தரிக்கோல் எங்கே கிடைக்கும் என்ற விசாரிப்பு (மீரட்டில் தான் என்று பதில் சொல்லிக் கத்தரித்துக் கொண்டு போக முடியாது, இது வேறே விஷயம்), எடின்பரோ மோஸ்தரில் பிஷ் அண்ட் சிப்ஸ் கடை இங்கே காரைக்குடியில் திறந்தால் பிசினஸ் இருக்குமா என்று ஆலோசனை கோருதல் என்று கதையோடு ஒட்டியும் விலகியும் எழுப்பப்படும் சகல விதமான வினாக்களுக்கும் பதில் சொல்லும்போது எனக்கும் அதைப் பேசுவதில் ஈர்ப்பு அதிகமாகி நானே என் எழுத்தை மீண்டும் படிக்கத் தோன்றும்.

பயோ பிக்ஷன் ஆன நெம்பர் 40, ரெட்டைத் தெரு மற்றும் தியூப்ளே வீதி நூல்களின் வாசகர்கள் வேறு மாதிரி. வாழ்க்கை வரலாற்று அடிப்படையில் புனைவு கலந்து எழுதப்பட்ட இந்த நாவல்களைப் படித்துவிட்டு வந்து கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது, ‘இதுலே எவ்வளவு உண்மை?”. நான் சொல்வேன், “ஐம்பது சதவிகிதம் உண்மை, ஐம்பது பெர்செண்ட் கதை. எது கற்பனை, எது உண்மைங்கறதை நான் சொல்லறதுக்கு இல்லே. எழுத்தை எழுதவும் வாசிக்கவும் சுவையாக்குவது இந்த மயக்கம் தான்”.

ரெட்டைத் தெரு நாவலைப் படித்துவிட்டு நான் படித்த பள்ளியின் .தலைமை ஆசிரியர் கேட்டார் – “அந்த பேங்க் மேனேஜர் வீட்டு வாசல்லே உக்கார்ந்து பாட, நானும் இன்னொருத்தரும் கேட்டோம்னு எழுதினதுலே ஒரு பிசகு. அவர் பாடினது காம்போதியிலே எவரி மாட. நீ எழுதின படிக்கு இல்லே’ என்று நமுட்டுச் சிரிப்போடு சொன்னார். மட்டுமில்லை, ஒரு நாற்பது பக்க நோட்புக்கை நீட்டினார். “இதெல்லாம் நீ சொல்ல விட்டுப்போன அந்தக்கால நிகழ்ச்சிகள். இதையும் சேர்த்துக்கோ”. அந்த நோட்புக்கை பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய அந்த சம்பவங்களை எப்போது எழுதப் போகிறேனோ. இன்னொரு தடவை இறங்க முடியுமா நினைவு நதியில்?

தியூப்ளே வீதி படித்து விட்டு, ‘அமேலியோட நீங்க படுக்கைக்குப் போறபோது காண்டோம் உபயோகிச்சதா சொல்லியிருக்கீங்களே, அப்போ எது காண்டோம்?” ஒருத்தர் கிடுக்கிப்பிடி போட்டார், “ஏன் சார் நான் என்ன 1940-களின் பிரஜையா? 1970-களிலே நடக்கிற கதை இது” என்றால் விடாமல் பிடிக்கிறார் – ‘இன்னும் அமேலியோட செக்ஸ் வச்சிட்டிருக்கீங்களா?’. பைனரியாக ஆம் – இல்லை என்று பதில் சொன்னால் வம்புதான் என்பதால், இந்தக் கேள்விக்குப் பதிலாக நான் புன்னகை பூத்தேன். அவ்வளவுதான்.

சிறுகதை, குறுநாவல் வாசகர்களில் சிலர் உக்கிரமானவர்கள். அபானவாயு வெளியேற்றும் போட்டியை மையமாக வைத்து ‘வாயு’ என்ற குறுநாவல் எழுதி குமரி மாவட்டத்தில் ஒரு நூலகரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டேன். பரவலான வாசிப்பு உள்ள, நல்ல நூல்களை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதில் அலுப்படையாத நல்ல மனுஷர் அவர். அவருடைய நூலகத்தில் அந்தக் குறுநாவல் உள்ள ‘சைக்கிள் முனி’ சிறுகதைத் தொகுதி இருக்கிறதா என்று கேட்ட வாசகரிடம் பொரிந்து தள்ளி விட்டாராம் – ‘நல்ல நல்ல கதையா எழுதிட்டு வெளிநாடு போனான் அந்த விளங்காப்பய (நான் தான்). குசு விடறதைப் பத்தி எழுதறானாம். பைத்தியம் பிடிச்சிருச்சு”. அவர் சொன்னதை அட்சரம் பிசகாமல் இவர் வந்து என்னிடம் ஒப்பிக்க, என்ன ஒரு சந்தோஷம்.

சிறுகதையோ, நாவல் அத்தியாயமோ, நாலு வரி வெண்பாவோ, எதை எழுதினாலும், முதலில் அதைப் படிக்க அனுப்புவது என் நெருங்கிய நண்பர் கிரேசி மோகனுக்குத்தான். பரந்த இலக்கிய வாசிப்பும், ஆழ்ந்த சமய ஞானமும், மெய்ஞானமும் கரைகண்ட அவருடைய விமர்சனங்களை உட்கொண்டுதான் அவை அச்சேறும்.

”ஏண்டா, அம்பின்னு நான் சின்ன வயசிலே 1920-லே எங்க அக்கா இறந்துபோன போது அனுபவிச்ச துக்கத்தைக் கதையா எழுதியிருக்கியே, நான் உங்கிட்டே அதெல்லாம் பேசினதாவே நினைவு இல்லையே”. அப்பா என்னிடம் தினமணி கதிரில் வெளியான அந்தக் கதையைப் படித்து விட்டுச் சொன்னார். “எனக்குத் தெரியும் அப்பா, எப்படின்னு தெரியாது”. அந்த மகாவாசகர் மறைந்து இன்றோடு பத்து ஆண்டு ஆகிறது.

(  2018 ) அந்திமழை மாத இதழில் மற்றும் வேம்பநாட்டுக் காயல் மின்நூலில் வெளியானது

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 19:56

May 11, 2022

என் புதிய சிறுகதை ‘கர்லா’

மே 2022 அந்திமழை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது

கர்லா

                                                                          இரா.முருகன்     

       

போன வாரம் கர்லாக்கட்டை கந்தசாமி வாத்தியார் கைலாசம் புகுந்தார் என்று கலிபோர்னியா சான் ஒசே நகரத்தில் இருந்து செய்தி வந்தது. அனுப்பியவன் வெங்கி. எழுபது வயதில் என்னைப் போல செய்திகளுக்காகக் காத்திருந்து வந்ததும் இன்னும் பத்து பேருக்கு ஒலிபரப்பி, பேசி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து ஒரு நாள் முழுக்க வாட்ஸ் அப் அரட்டை அடித்து உறங்கி அடுத்த நாளுக்குக் கடந்து போகிறதைச் செய்வதில் நிபுணன் அவனும். கர்லாக்கட்டை எப்படி மின்செய்தியானார் என்று தெரிவிக்காமல் வெங்கி மையச் செய்தியான சாவு மட்டும் அறிவித்துவிட்டு ஓய்வெடுக்கப் போய்விட்டான். அப்போது கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட நடுராத்திரி என்பதால் அவன் மறுபடி கண்விழிக்கும் வரை அகப்பட்ட மற்றவர்களோடு மட்டும் கர்லாக்கட்டை அலசப் பட்டார்.

 

எங்கள் பள்ளிக்கூடத்தில் உடல் பயிற்சி ஆசிரியர் என்ற பி.டி மாஸ்டராக இருந்தார் அவர்.  உலர்ந்த சுள்ளி மாதிரி உடம்பில் ஒரு கிராம் அதிக சதை கூட இல்லாமல், நெடுநெடுவென்று உயரமாக, கழுத்தில் கயிறு மாட்டித் தொங்கும் விசிலோடு அலைவார் கர்லா.

 

கர்லாவின் திறமை கொடி கட்டிப் பறப்பது கால் வருடப் பரீட்சை, அரை வருஷப் பரீட்சை, முழு வருடப் பரீட்சை என்று தேர்வு நேரத்தில் தான். காலையில் சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்துவிடுவார். பரீட்சை எழுத வந்த பசங்களை விட அவருடைய பரபரப்பு அதிகமாக இருக்கும். கேள்வித்தாள் விநியோகிக்கும்போது யார் எந்த டெஸ்கில் என்று பார்த்து வைத்துக் கொண்டு விடுவார். அடுத்து விடைத்தாள் பேப்பர் கொடுக்க உடனே உத்தரவு கொடுக்க மாட்டார். ஒரு நிமிஷம் ப்ரேயர். ”நான் மட்டும் நல்ல மார்க் வாங்கி பாஸ் ஆனா போதாது. நல்லா எல்லாரும் பாஸ் ஆகணும், நல்ல மார்க் வாங்கணும்னு வேண்டிக்கங்கடா” என்று அவர் சொல்லி முடித்து ஒரு நிமிடம் ப்ரேயர். எழுது என்று கையை உயர்த்தினதும்தான் எழுத ஆரம்பிக்கணும்.

 

சுற்றிச் சுற்றி வருவார். நடந்து கொண்டே தூங்குவது போல் கண்கள் கிட்டத்தட்ட மூடி இருக்கும். கேள்வித்தாளோ ஆன்சர் பேப்பரோ பக்கம் திரும்பும் மெல்லிய சத்தம் கூட பரீட்சை ஹாலில் தெளிவாகக் கேட்கும் நேரம் அது. அதை மேம்படுத்திக் காட்ட எழுதுவதில் ஆழ்ந்து இருக்கும் பசங்களின் மௌனம் சூழ்ந்திருக்கும். திடீரென்று ஒரு குரல் உச்ச ஸ்தாயியில் கேட்கும் – ”நடுவரிசை மூணாம் பெஞ்ச் வலதுகைப் பக்க மகாராஜா எழுந்து நிக்கலாம்”.

 

அவசரமாகப் பின்னால் திரும்பிப் போய் எழுந்து நின்ற பையன் முன் அல்சேஷன் போல சிகரெட் வாடையைக் கிளப்பிக்கொண்டு மோப்பம் பிடித்து மூச்சு விடுவார். காப்பி அடிச்சியாடா? இல்லே சார். அப்போ பையிலே இருந்து எடுத்துப் பார்த்தியே துண்டு சீட்டு அது என்ன? சீட்டே கிடையாது சார். அவன் பாக்கெட்டுக்குள் இருந்து கர்ச்சீப், மசி கசியும் பழைய பேனா, பென்சில் சீவி என்று என்ன என்னமோ கிடைக்குமே தவிர பிட் அடிக்க எழுதி வந்த பாடம் எதுவும் கிடைக்காது. இல்லியே நீ எதையோ பையிலே இருந்து எடுத்து அவசரமா பாத்துக்கிட்டிருந்தியே. பையன் இரு கையையும் தூக்கியபடி நிற்க, கர்லா கேட்பார் – தின்னுட்டியாடா? எங்கே வாயைத் திற பார்க்கலாம். கிருஷ்ண பகவான் மாதிரி அவன் வாயைத் திறந்து சொத்தைப் பல்லைக் காட்ட, திரும்ப எழுத அனுமதி தருவார்.

 

பரீட்சை முடிந்து பசங்க வெளியில் வரும்போது அந்தப் பையனை எதிர்பார்த்து வாசலிலே நிற்பார். அவன் வந்ததும் அன்போடு கையைப் பிடித்து முகர்ந்து பார்ப்பார். ”என்னடா வலது கையிலே மூத்திர வாடை அடிக்குது. இல்லையா? நான் கண்டு பிடிச்சதுமே நீ அவசரமா அண்டிராயர்க்குள்ளே  திணிச்சுக்கிட்டியே. என்ன பாடம்டா அது? சரித்திரம்? காந்தியும் நேருவும்  இப்படிக் கண்ட கண்ட இடத்திலே எல்லாம் சுருண்டு கிடந்து துர்வாடையை அனுபவிக்கணும்னு ஏதாவது சாபமா? பாவம்டா. இனிமேல் அவங்களை இடுப்புக்குக் கீழே மறைக்காதே. படி. நல்லா படி”. பையன் கண்கலங்கி நிற்பான். மன்னிப்பு அவனுக்கு  நல்ல புத்தி தரும்.

 

தேர்வுக் கால ட்யூட்டி தவிர இன்னொன்றும் கர்லா பொறுப்பில் வரும். அழகான பள்ளி முற்றத்தில் மேஜிக் ஷோ,  பொம்மலாட்டம், மோனோ ஆக்டிங் இப்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச் சொல்லி ஹெட்மாஸ்டர் கர்லாவிடம் தான் பொறுப்பை ஒப்படைப்பார்.,

 

மேஜிக் ஷோ டிக்கெட் விற்க சாக்பீஸ் டப்பாவில் அடுக்கிய சதுரமாக வெட்டிய சிறு அட்டைத் துண்டுகளை இருபது பைசாவுக்கு ஒன்று என்று தர கர்லா தான் எப்போதும் வருவார். மேஜிக் ஷோவுக்கு இரண்டு நாள் முன்பே கர்லா சுறுசுறுப்பாகி விடுவார். வகுப்பு வகுப்பாகப் போய் பொதுவாக ஒரு சல்யூட் அடிக்க பதிலுக்கு யாரும் அடிப்பதில்லை தான். மாணவர்களை விளித்து தமிழ், அவருடைய சொந்த இங்க்லீஷ் என்று பேசி மேஜிக் எப்படி கண்கட்டு வித்தை என்று தமிழில் சொல்லப்படுகிறது என்று விளக்கி, இதை நேரில் பார்த்து அனுபவிக்க இருபதே பைசா தான் சிறப்புக் கட்டணம் என்று பெஞ்சுகளுக்கு இடையே சாக்பீஸ் டப்பாவைக் குலுக்கிக்கொண்டு நடக்கும்போது சிகரெட் வாடை அடிக்கும் அவரிடம்.

 

வாங்கலியா தம்பி? ஒரு டிக்கெட் இருபது காசு இருபதே காசு என்று மன்றாடும் போது சார் மதியம் வீட்டுக்கு சாப்பிடப் போவேனில்லே அப்பாரு அப்பத் தரேன்னாரு. ஒரு குரல் தயங்கித் தயங்கிப் பின்வரிசையில் இருந்து ஒலிக்கும். அது யார் குரல் என்று திரும்பிப் பார்க்காமலேயே தெரியும். சம்மு தான். எலக்ட்ரிசிட்டி போர்டில்  லைன்மேனாக இருக்கும் குப்புசாமி மகன்.

 

குப்புசாமி கர்லாவின் ஆரம்பப் பள்ளித் தோழன் தான். இரண்டு பேருமே உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி என்ற கடைசிக் கட்டத்தைக் கடக்கவில்லை.

 

யாருடா, குப்பன் பெத்த ரத்தினமா? வகுப்பு வாத்தியார் பொறுமையில்லாமல் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளவே இல்லாமல் அவருடைய சொந்த உலகுக்குள் புகுந்திருப்பார் கர்லா.

 

”குப்பனும் நானும் ஒண்ணாப் படிச்சவங்கடா. ராமகிருஷ்ணா பள்ளிக்கூடத்திலே அஞ்சாம் கிளாஸ் பெயில். எங்க கூடப் படிச்சவன் எல்லாம் டாக்டரா, எஞ்சினியரா, லாயரா, மந்திரியா இருக்கான். நாங்க ரெண்டு பேரும் இன்னும் அரை நிஜார் போட்டுக்கிட்டு திரிஞ்சுக்கிட்டிருக்கோம். அவன் டிராயர் போட்ட லைன்மேன். நான் உங்களை கட்டி மேய்க்கிற உடல் பயிற்சி வாத்தியான். என்னமோ போ”.

 

அவர் சொல்லும்போது சிரிக்காமல் முகத்தைக் கோண வைத்துக்கொண்டு துருதுருவென்று பார்க்கிற அழகுக்காகவே எல்லோரும் அவர் பக்கம் திரும்பி இருப்பார்கள். டாபடில்ஸ் வேர்ட்ஸ்வொர்த் கவிதையைத் தொங்க விட்ட வகுப்பு வாத்தியார் உட்பட.

 

”சரிடா, நான் உனக்காக இருபது காசு போட்டுட்டு, அவனைத் தேடிப் போய் வாங்கிக்கறேன். ஏதாவது ஒரு கம்பத்திலே ஏறிட்டிருப்பான் இல்லே இறங்கிட்டிருப்பான். அவ்வளவுதானே”.

 

அவர் சுவரில் பிடித்து ஏறப் போவது போல் அபிநயிக்க உச்ச ஸ்தாயியில் பசங்க சிரிப்பு அலையடிக்கும். கிளாஸ் வாத்தியாருக்கு தனிப்பட்ட நன்றி சல்யூட் அடித்து தரையில் கான்வாஸ் ஷூ அணிந்த காலை உதைத்து அடுத்த வகுப்புக்குப் போவார்.

 

ஒரு தடவை வெங்கி அவர் திரும்பும் நேரத்தில் ’மேஜிக்கை ஏன் கண்கட்டுன்னு சொல்றாங்க சார்? காதுகட்டு, மூக்கு கட்டெல்லாம் உண்டா’   என்று துடுக்காகக் கேட்க, கர்லா வாசல் வரை போனவர் திரும்பி வந்தார். வெங்கிக்கு அடி நிச்சயம் என்று பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருந்தோம். அவரோ வந்தபடிக்கு விரலில் ஒட்டிய சாக்பீஸ் துகளால் வெங்கிக்கு ஒரு நரைமீசை வரைந்தார்.

 

“என் வயசிலே உனக்கும் தெரியும்டா. மேஜிக் என்ன, எல்லாமே கண்கட்டு தான். புரியுதா?” வெங்கி புரிந்தும் புரியாமலும் சிரித்தான்.

 

சாயந்திரம் நாலு மணிக்கு மேஜிக் ஷோ குழு வந்து சேரும். மேஜிக் நிபுணர்கள் பெயருக்கு முன்னால் எதற்காகவோ ப்ரபசர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொண்டிருப்பார்கள். காலேஜ் பெரிய வாத்தியார்களை ப்ரபசர் என்று கூப்பிடுவார்கள் என்று அப்பா சொன்னார். இந்த மேஜிக் ப்ரபசர்களுக்கும் காலேஜுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையாம்.

 

ப்ரபசர் எனப்பட்டவர்  மதியம் ஐந்து மணிக்கு மேஜிக் தொடங்குவார். வகுப்பறைகள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, நடுவே மேலே திறந்த முற்றத்தில் மேஜை நாற்காலி போட்டு மேஜிக் நடக்கும். பையன்களை ஏவி அங்கே சுத்தம் செய்து நடுவில் மேஜை போடுவது, சுற்றி நாலு வட்டமாக உட்கார்ந்து பார்க்க நாற்காலி போடுவது என்று பரபரப்பாக விசில் ஊதிக்கொண்டு திரிவார் கர்லா. மூணு மணிக்கே சக ஆசிரியர்களை உதவிக்கரம் நீட்ட அழைக்க ஆரம்பித்து விடுவார். சதுர அட்டை டிக்கெட்டை வாங்கி வச்சுட்டு உள்ளே அனுப்பணும். வாங்கினதும் டிக்கெட்டை குப்பைத் தொட்டியிலே   தூக்கிப் போடறது இவ்வளவு தான். டிக்கெட்டை தொலச்சிட்டேன் என்று அவ்வப்போது கண்ணீரும் கம்பலையுமாகச் சில பையன்கள் நிற்பார்கள். இவர்களை உள்ளே அனுமதிப்பதா வேண்டாமா என்பதை கர்லா தான் முடிவு செய்வார். டிக்கட் காணாமல் போனதை நம்புவாரோ என்னமோ, யாரையும் திருப்பி அனுப்பியதில்லை. கூட்டம் கம்மியா இருந்தால், ஸ்கூல் டொனேஷன் அதிகமாக இருக்கும். அப்போது பசங்களை ஓசியிலேயே மேஜிக் பார்க்க அனுமதிப்பதும் உண்டு. யாரை உள்ளே அனுப்ப என்று தேர்வு செய்ய சக ஆசிரியர்களின் சகாயத்தை நாடுவார் கர்லா. உடனே கிடைக்கும் உதவி அது.

 

இன்றைக்கு வந்திருக்கும் ப்ரபசர் கொடுத்த அறிமுக அட்டைத் துண்டில் மேஜிக் ப்ரொபசர் என்பதோடு ஹிப்நாடிச ஸ்பெஷலிஸ்ட் என்றும் போட்டுக்கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன என்று கர்லாவைக் கேட்ட பசங்களிடம் தனக்கும் தெரியாது என்று அடக்கத்தோடு சொன்னார் அவர்.

 

மனோவசிய நிபுணர் என்று கணக்கு வாத்தியார் விளக்கம் சொன்னார். ஆளை மயக்கி கூட்டிட்டுப் போகிறதா? கர்லா கேட்க கணிதம் சிரித்தது.

 

”அவருக்கு சோறு கிடைக்கவே கஷ்டம் சார். மயக்கி இன்னொருத்தரைக் கூட்டிப்போய் என்ன பண்ணுவார்?”. மனோவசியம்  எப்படி நடக்கும் என்று தனக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார் அவர்.

 

வழக்கத்தை விட அதிகமாகக் கூட்டம் வந்த ஷோ அந்த மேஜிக் மற்றும் ஹிப்னாடிஸ ஷோ. மேஜிக்கில் கூட  தகர டப்பாவில் காகிதத்தைக் கொளுத்திப் போடாமல் பெரிய ட்ரங்க் பெட்டிகளைத் திறந்து மூடி வித்தியாசமாகச் செய்தார் அந்த ப்ரொபசர் மூர்த்தி. இரண்டு ஸ்டூல்களுக்கு நடுவில் பெட்டியை வைத்து உள்ளே காலி என்று காட்டி விட்டு ஒரு துணியால் மூடித் திறக்க, சோனியான ஒரு பெண் பெட்டிக்குள் இருந்து கையசைத்தபடி வந்தபோது கைதட்டல் அள்ளிக்கொண்டு போனது. அவர் மகள் போல.

 

இப்போது யோகத்தோடு ஹிப்நாடிசம் என்று தடம் மாறினார் ப்ரபசர் மூர்த்தி. அந்தப் பெண்ணை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லி எதிரே இன்னொரு நாற்காலி போட்டு  அவர் உட்கார்ந்தார். கர்லாவைப் பார்த்து  சட்டென்று காட்சியை மாற்றினார் ப்ரபசர். அவரை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லி, எதிரே அந்தப் பெண்ணை இருத்தினார். ஏதோ ஜபித்துக் கொண்டிருந்தார். மந்திரவாதமாக இருக்கும் என்று கர்லா நினைத்தார்.

 

அந்தப் பெண் கர்லாவிடம், சார் என் கண்ணையே பாருங்க என்று சொல்ல கர்லா அதெல்லாம் நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவள் சட்டென்று எழுந்து அவர் பக்கம் நடந்து போய் அவரையே கண்ணில் உற்றுப் பார்த்தாள். கர்லா தலை சுற்றி தன் நாற்காலியில் கண்மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். மேஜிக் பார்க்க வந்த ஆசிரியர்கள் கூட ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருந்த நேரம் அது.

 

சார் அவரை சீக்கிரம் எழுப்புங்க என்று கைத்தொழில் ஆசிரியர் மேஜிக் ப்ரபசரிடம் முறையிட்டார். ப்ரபசர் சிரித்து அவசரப்படாதீங்க என்றபடி மேலே நடத்த அந்தப் பெண்ணுக்கு கை காட்டினார்.   ப்ரபசரும் அவரோடு கூட தோட்டக்காரர் ஒயிட்டு என்ற வெள்ளையப்பனும் கர்லாவை தலைப் பக்கம் ஒருத்தர், கால் பக்கம் இன்னொருத்தராகப் பிடித்து இரண்டு நாற்காலிகளுக்கு மேல் படுத்தாற்போல் வைத்தார்கள். அப்படிப் படுப்பது மகா சிரமமான காரியம் என்று சொல்லாமலே தெரிந்தது எல்லோருக்கும். அந்த சோனிப்பெண் விரலில் சொடக்குப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கர்லா உடம்பு ப்ரபசர் சொன்னபடிக் காதுகள் மட்டும் உயிர்த்திருக்க வளைந்து நெளிந்து நீட்டி மடங்கி ஒத்துழைத்தது.

 

இரண்டு நாற்காலிகளின் நடுவில் கர்லா ஒரு ஐந்து நிமிடம் படுத்திருந்தார். சோனிப்பெண் கை காட்ட ப்ரபசர் அந்த நாற்காலிகளை மெல்ல ஒவ்வொன்றாக விலக்கி ஓரமாகக் கொண்டு போனார். ஒன்றில் அமர்ந்தார். மாலை நேர வெய்யில் கூட உள்ளே எட்டிப் பார்க்கத் தயங்கிய முற்றத்தில் தரைக்கு ஐந்தடி மேலே   அந்தரத்தில் கண்மூடிப் படுத்திருந்தார் கர்லா.

 

கை தட்டப் பயந்த பசங்களோ, தங்களுக்குள் வியந்து கொண்டிருந்த ஆசிரியர்களோ கவனிக்காததை தோட்டக்கார ஒயிட் கவனித்தார்.

 

சார், இந்த மேஜிக் பெரியவர் நாற்காலியிலே உக்காந்திருக்கறது நல்ல விதமா இல்லையே என்றார் ஒயிட் உதவி ஹெட்மாஸ்டரிடம். அவர் வசியத்துலே இருக்காருப்பா என்றார் ஏ.எச்.எம்.

 

இல்லியே இந்தப் பொண்ணு அவரை வச்சு ஒண்ணும் மேஜிக் பண்ணலியே.

 

ஒயிட்டின் சந்தேகம் சரிதான் என்றபடி ஏஎச்.எம் ப்ரபசர் பக்கத்தில் போய் அவர் தோளில் கைவைக்க மரக் கட்டை போல் தரைக்கு வந்தார் ப்ரபசர். போய்ட்டாரா?  யாரோ யாரையோ கேட்டார்கள். இதுவும் கடந்து போகும் என்று இறுக்கமான முகத்தோடு அந்தப் பெண் அமர்ந்து இருந்தாள்.

 

வெங்கி சொன்னான்- ”கர்லா சார் மேலே போய்ட்டிருக்கார்”. ஆமாம், பத்து நிமிடத்துக்கு முன் பார்த்ததை விட கர்லா அந்தரத்தில் ரெண்டு இஞ்ச் கூடுதல் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார்.  தரைக்கு ஆறடி உயரம் அது.

 

கர்லா சார் பறந்து போயிட்டு இருக்கார் சார். ஒயிட் ஹெட் மாஸ்டர் அறையில் தடால் என்று நுழைந்து அறிவித்தார். தூக்கச் சுவடு மாறாமல் ஹெச்.எம் பதைபதைத்தது இப்படி இருந்தது – ”ஐயோ அடுத்த வாரம் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வராரே. ம்யூசிக் ட்ரில் யார் பசங்களுக்கு சொல்லித் தர்றது?”. ஒயிட் பின்னால் வந்த சீனியர் சயன்ஸ் ஆசிரியர் ”நாளைக்கு சனிக்கிழமை லீவுதானே, சேர்ந்து போய் லீகோ அடுப்புக்கரி வாங்கிட்டு வந்துடலாம்னு சொன்னாரே நான் தனியா எப்படிப் போறது, சைக்கிளும் ஓட்டத் தெரியாதே” என்று பிரலாபித்தார். ”இன்னிக்கு மேஜிக் ஷோ வசூல் அவர்கிட்டே தானே இருக்கு. ப்ரபசருக்கு எப்படி  சன்மானம் தர்றது” என்றார்  ஸ்கூல் கிளார்க் நாகு சார். கர்லா அவருக்கு தூரத்து உறவாம். கர்லா சட்டைப்பையில் இருந்து மேஜிக் ஷோ டிக்கட்களும், சிகரெட்டும், முழு சாக்பீஸும் கீழே விழுந்தன. “ஒயிட், சாக்பீசை எடுத்து வை” என்றார் ஏ.எச்.எம்.

 

முற்றத்துக்கு வெளியே ஆகாசத்தை நோக்கி கர்லா போகாமல் பெஞ்ச்களைப் பரபரவென்று ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சக ஆசிரியர்கள் சூழ்ந்து நிற்க, யாரோ சொன்னார்கள் அந்த சோனிப்பெண்ணைப் பார்த்து – ’பார்த்துக்கிட்டு நிக்கறியே அம்மா. மந்திரம் போட்டு கர்லா வாத்தியாரை கீழே இறக்கேன்”. அவள் சொன்னாள் – ”அந்த வசியம் எனக்கு சொல்லித் தரலியே”.

 

ஸ்கூல் தோட்டத்து முருங்கை மரங்களில் எச்.எம் வீட்டு சாம்பாருக்குக் காய் பறிக்க வைத்திருந்த   துரட்டிக் கம்போடு ஓடி வந்தார் ஒயிட். உயரத்திலும் உயரமான தமிழ் வாத்தியாரும், குறளர் கணக்கு வாத்தியாரும்   வெளியைத் துழாவி கர்லா வாத்தியார் சட்டை காலரில் துரட்டி  மாட்டிச் சீராக இழுத்தார்கள். ”பார்த்து. சட்டை கிழியாம’ என்று எச்சரித்தார் வரலாற்று ஆசிரியர். ஹிந்தி பண்டிட் சும்மா நின்றார்.

 

பொங்கல் அலவன்ஸ் ஜி.ஓ ரிலீஸ் ஆகுதாம் என்றார் ஏ.எச்.எம். கர்லா கீழே வந்தார். அவரைத் தரையில் கிடத்தினார்கள். கண் விழித்து, ”தூங்கிட்டேன் சார். மியூசிக் டிரில் ஆரம்பிக்கலாமா?” என்று சுபாவமாகக் கேட்டார்.

 

ப்ரபசர் மூர்த்தி அடுத்தாற்போல் கண் விழித்தார். எவ்வளவு தூரம் இது போகும்னு பார்க்க, யோகத்தில் மூச்சடக்கி இருந்தேன் என்றார் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சிரித்தபடி. அவள் அவருக்கு மனைவியாம். அன்றைக்கு அவர் எழுபது ரூபாய் வருமானத்தோடு போய்ச் சேர்ந்தார்.

 

பழைய நினைவுகளில் மூழ்கியபடி வெங்கிக்கு தொலைபேசினேன். எப்படி இறந்து போனார் கர்லா?  கயிற்றுக் கட்டிலில் இருந்து புரண்டு விழுந்து விட்டாராம். அப்புறம் பேசறேண்டா என்று வெங்கி போனை வைத்தான்.

(இரா.முருகன்  )

ட்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2022 08:00

May 10, 2022

இரா.முருகன் நேர்காணலில் இருந்து – எனக்குப் பிடித்த இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள்

’புரவி’ இலக்கிய மாத இதழ் இரா.முருகன் நேர்காணலில் இருந்து –

(மே 2022 இதழ் -நேர்கண்டவர் காளிபிரசாத்)

 

:

 

இன்றைய இலக்கிய போக்கு குறித்த உங்கள் பார்வை / விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார் யார்?

 

இரா.முருகன்

 

எழுபதுகளில் தமிழ்ச் சிறுகதையின் இரண்டாம் பொற்காலம் வந்த பிறகு (1940களின் மணிக்கொடிக்காலம் முதல் பொற்காலம்) இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறுகதைகள் வரவு குறைந்திருந்தது. இப்போது மறுபடி சிறுகதைகள் நிறையத் தென்படுகின்றன.

 

மற்றப்படி இது நாவல்களின் காலம். சிறுகதை எழுதி வந்தவர்களும் கவிஞர்களும், கட்டுரையாளர்களும், ஓவியர்களும், சிற்பிகளும், பேச்சாளர்களும் குறைந்தது தலைக்கு ஒரு நாவலாவது எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.

 

கலைச்செல்வி, ஆத்மார்த்தி, ஸ்ரீதர் நாராயணன், சுநில் கிருஷ்ணன், வா.மு.கோமு என்று தொடங்கும் நீளப் பட்டியலாக அடுத்த தலைமுறைப் படைப்பாளர்கள் சிறப்பாகச் சிறுகதையிலும் தொடர்ந்து நாவலிலும் செயல்படத் தொடங்கியுள்ளனர். பெரிய பட்டியல் இது. விரிப்பின் பெருகும். அவர்களுக்கு நல்வரவு. அறிவியல் புனைகதை எழுதத்தான் படைப்பாளிகள் குறைவு. சுதாகர் கஸ்தூரி தனியனாக நினைவு வருகிறார்.

 

புரவி

 

இன்றைய காட்சி ஊடக காலத்தில் முன்பிருந்த தீவிர இலக்கியம் & வெகுஜன எழுத்துக்கான இடைவெளி குறைகிறதா.. இனி எழுத்தாளர்களுக்கான இடம் எத்தகையாதாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?

 

இரா.முருகன்

 

காட்சி ஊடகம் பெரும்பாலும் coordinated collaborative effort ஒருங்கிணைத்த கூட்டு முயற்சி அடிப்படையில் இயங்குவது. வெகுஜன எழுத்தாளருக்கும் தீவிர இலக்கிய எழுத்தாளருக்கும் அங்கே இடமுண்டு. தொடர்ந்து நிகழும் காட்சி ஊடக இடையூடுகள் இரு தரப்புக்கும் இடையே இடைவெளியைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. இது தனியாளுமை அடிப்படையில் நிகழ்வது. சார் என்ற மரியாதை விளியைப் பயன்படுத்தத் தொடங்கும்போது தீவிர இலக்கிய எழுத்தாளர் இந்த இடைவெளியைக் கடக்கிறார்.

 

புரவி இதழ் தொடர்புக்கு 9942633833 (கார்த்திகேயன்)

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2022 21:13

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.