இரா. முருகன்'s Blog, page 52

May 5, 2022

இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல

‘இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2022 05:27

May 3, 2022

நாலு வரிக் கடிதத்திலும் ஒரு நகைச்சுவை – அவர் தான் சுஜாதா

இன்று சுஜாதா சார் பிறந்தநாள்.

 

சாஹித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘சுஜாதா’ நூலுக்கான முதல் வடிவத்திலிருந்து –

 

——————————————-

சந்திப்பு – சென்னை 1995

 

அவர் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை முடிந்து வந்திருந்த நேரம். காலில் நீளமாக வடு. அறுவை சிகிச்சைக்காக அவரைக் குத்திக் கிழித்திருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

 

ரெண்டாம் பைபாஸ் வெற்றிகரமாக முடிந்து அதற்கப்புறம் ரகளையாக இருபது வருடத்துக்கு மேல் அட்டகாசம் செய்து கொண்டிருந்த யாரையோ பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.

 

அவர் சிரிக்காமல் சொன்னாலும், எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எங்களால் என்றால், நானும், மறைந்த நண்பர் ‘ஆய்வு வட்டம்’ வெ.கிருஷ்ணமூர்த்தியும்.

 

அந்த நேரத்தில் சந்திப்புகளைத் தவிர்த்து வந்தாலும், ’வெ.கியோடு கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேச முடியுமா’ என்று தொலைபேசிக் கேட்டதும், ‘யாரு, நா.வானமாமலை மாணவர் தானே, கூட்டிட்டு வா, நானே பார்க்கணும்னு இருந்தேன்’ என்று உடனே சம்மதித்தார். வாரக் கடைசியில் போயிருந்தோம்.

 

நொபோரு கராஷிமா என்ற ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர், சோழர் கால வாழ்க்கை முறை, மற்றும் ராஜராஜன் காலத்தில் நடந்த உழவர் கலகம் பற்றி எழுதியிருந்தார். அதைப் பற்றிப் பேச்சு சுழன்று கொண்டிருந்தது. அங்கிருந்து, திருவரங்கம் கோவிலில் அந்நியர் படையெடுப்பு, கோபுரத்திலிருந்து விழுந்து உயிர் விட்டவர்கள், சிவகங்கை சரித்திரத்தில் மருதுநாயகம் என்ற கான்சாகிபின் பங்கு என முழுக்க வரலாறாகப் பேசிக் கொண்டே போனார் சுஜாதா.

 

திருமதி சுஜாதா நாசுக்காக, ’போதும், சிரமப் படுத்திக் கொள்ள வேணாம்’ என்று குறிப்பால் உணர்த்த, நானும் வெ.கியும் எழுந்து கொண்டோம். கைகாட்டி அமர்த்தினார் சுஜாதா. ஆனாலும் என்ன, எழுந்தது எழுந்ததுதான்.

 

‘இதெல்லாம் வரவர எப்போவாவது தான் பேசக் கிடைக்கறது. முக்கால் வாசி நேரம் சினிமாக் கதை வசனம் எப்படி எழுதறீங்க, அவர் ஏன் இப்படிச் சொன்னார், ஏன் இந்தப் படம் ஓடலே, எவ்வளவு பணம் கொடுப்பாங்க இந்தப் பேச்சு தான். கான்சாகிப் சண்டை புத்தகம், நா.வா பப்ளிஷ் பண்ணியிருக்கார்னீங்களே, இருந்தா அனுப்புங்க, படிச்சுட்டுத் தரேன்’

 

விடைபெறும் போது சொன்னார் சுஜாதா. அவருக்குப் பின்னால் சாப்பாட்டு மேஜையில், உயர ஸ்டூலில், மர ஷெல்பில், சோபா ஓரமாக என்று அவர் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை போன காலத்தில் வந்து குவிந்திருந்த புத்தகங்களைப் பார்த்தபடி வெளியே வந்தோம்.

 

’தெளிவான பார்வை, ஆழ்ந்த படிப்பு, அபூர்வமான மனிதர்’.

 

வெ.கி சொன்னார். ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவர் சாதாரணமாக யாரையும் பாராட்ட மாட்டார்.

 

சந்திப்பு – சென்னை 1999

 

தாய்லாந்தில் இருந்து, நடுவில் இங்கே வந்தபோது, ஒரு மாலைப் பொழுதில் அம்புஜம்மாள் தெரு போனேன்.

 

‘என்ன, லேசா வெயிட் போட்டிருக்கே?’

 

‘சிவப்பு மாமிசம், சார்.. வேறே சாய்ஸ் இல்லே’.

 

‘லீன் மீட், போன்லெஸ் சிக்கன்.. தயிர் கிடைக்கலேன்னா பல்கேரியன் யோகர்ட் பிசைஞ்சு தயிர் சாதம்.. தேடினா கிடைக்கும்’. ட்ரேட்மார்க் சுஜாதா சிரிப்பு.

 

நினைவாகக் கேட்டார், ’கான்சாகிப் சண்டை என்ன ஆச்சு?’

.

’வெ.கி காலமாயிட்டார் சார்’.

 

வெ.கி என்னிடம் புத்தகம் கொடுத்திருந்ததையும் அதை நான் கைமறதியாக எங்கேயோ வைத்துவிட்டதையும் சொல்லவில்லை.

 

தாய்லாந்து திரும்பினதும் ரெண்டு நாள் சுஜாதா அறிவுரையைக் கடைப்பிடித்து, பல்கேரியன் தயிர் சாதம். அப்புறம், திரும்பவும் சிவப்பு மாமிசம்.

 

இலக்கியத் தேடல், வரலாற்று விவாதம், தொழில் நுட்ப அறிவு மேம்படுத்துதல், எழுத்து, வாசிப்பு என்று எல்லாமே வாழ்க்கைக்கு அப்புறம் தானே.

 

வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு நாடு, வெவ்வேறு ஊர் என்று அலைந்து கொண்டிருந்த போதும், தொலைபேசி, மின்னஞ்சல் என்று எப்படியாவது மாதம் ஒருமுறை அவரைப் பிடித்து விடுவேன். நேரில் பேசுகிற அதே நேசமும், கண்டிப்புமாகத் தொடர்பு கிடைக்கும்.

 

நான் படித்த ஒரு கவிதையை அனுப்ப, ’கண்ட குப்பையை அனுப்பி நேரத்தை வீணாக்காதே’ என்ற திட்டு கிட்டியதும் உண்டு. என்ன எழுதினாலும், பேசினாலும், கான்சாகிப் சண்டை பற்றி விசாரணை இல்லாமல் இருக்காது. வெ.கி கொடுக்கலை என்று பொய் சொல்ல மனம் வராமல் நான் சுற்றி வளைத்துக் கட்டி ஏதேதோ பேசியே அடுத்த பத்தாண்டு போனது.

 

அடுத்து வீடு மாற்றும்போது யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றிய நாலைந்து புத்தகத்தைக் களைய வேண்டியிருந்தது. உலகம் யூனிக்ஸை விட்டு வெகு தூரம் முன்னே போய்விட்டதால் அவை தேவையே இல்லை.

 

யூனிக்ஸ் புத்தகங்களோடு, வெ.கி கொடுத்த ‘கான்சாகிப் சண்டை’ இருந்தது. பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டேன். சுஜாதாவை சந்திக்கும்போது கொடுக்க வேண்டும்.

 

அஞ்சலி – சென்னை 2008

 

மேஜை மேல் வைத்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்கிறது. இதுதான் இதுதான் என்று ஏதோ துக்கத்தை எதிர்பார்த்து எடுத்த கை நடுங்குகிறது. “சுஜாதா சார் காலமாகி விட்டார்”. நண்பரான பத்திரிகை ஆசிரியரின் குரல் எதிர்முனையில். தொடர்ந்து பேச ஏதுமில்லாததுபோல் நீண்ட நிசப்தம். ‘சரி’. எதுவும் சரியில்லைதான். ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டுமே. சொன்னேன்.

 

மூன்று தலைமுறைகளைத் தொடர்ந்து வசீகரித்து வரும் சுஜாதாவின் எழுத்து ரகசியம் என்ன? எழுத்தில், இலக்கியத்தில், அறிவியலில் அவருக்கு இருந்த தீராத காதல். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பதில் காட்டுகிற அதே ஈடுபாட்டை நானோ டெக்னாலஜியின், ஸ்டெம் செல் உருவாக்கும் மருத்துவ நுட்பத்தில் காட்டுவார் அவர். காலத்தோடு கைகோர்த்துச் செல்லும் எழுத்து பாணி அவருடையது. மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் கற்பழித்தது என்று கதை எழுதி தலையில் ராட்சத பல்புகள் சுழல ஒரு யந்திரம் நடந்து வருவதாகப் படம் போட்ட காலத்திலேயே அவர் கதையிலும் கட்டுரையிலும் நாம் தொட்டு உணரக் கூடிய கம்ப்யூட்டரைக் காட்டினார்.

 

பஞ்சாயத்து போர்ட் நூலகத்தில் பத்திரிகை படிக்கக் கிடைக்கிற கிராமப்புற, சிறு நகர இளைஞர் கூட்டத்துக்கு அவர் இப்படிக் காட்டியது கம்ப்யூட்டரை மட்டுமில்லை. ஷியாம் பெனகலின் ‘அங்கூர்’, பாபு நந்தன் கோடுவின் ‘தாகம்’ போன்ற ஆர்ட் சினிமாக்களை, ஞானக்கூத்தன் கவிதைகளை, எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசையில் ஆயிரம் கார்ப்பரேஷன் பள்ளிச் சிறுவர்களை. ஒரே குரலில் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி பாடலைப் பாடவைத்த அற்புதத்தை, சால்வடார் டாலி, பிகாசோவின் ஓவியத்தை, பீட்டில்ஸின் ‘செர்ஜண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட் கிளப்’ இசை ஆல்பத்தை, ஹோலோகிராமை, ஆழ்வார் பாசுரத்தை.

 

எதைத்தான் விட்டார் அவர்?

 

எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார் –

 

‘என்னது? ஐம்பத்து ரெண்டெல்லாம் வயதில் சேர்த்தியா? ஏன் அதற்குள் வேலைக்கு குட்பை சொல்லி விட்டு இலக்கிய சேவையில் முழுமூச்சாக இறங்க நினைக்கிறாய்? எழுபத்துரெண்டு வயதில் இன்னும் நான் பார்ட் டைம் கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்கிறேனே? வேறு எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டில் மனைவிக்கு ஒரு ஏழெட்டு மணி நேரம் தனிமையில் நிம்மதி கிடைக்குமில்லையோ?’

 

நாலு வரிக் கடிதத்திலும் இந்த நகைச்சுவை தான் சுஜாதா.

 

2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2022 06:57

May 2, 2022

The Muddy River – பி.ஏ.கிருஷ்ணனின் ‘கலங்கிய நதி’ என்ற தெளிவான நாவல்

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an ancient text, is more in the Latin Americal genre of..’ என்று ஆரம்பித்து இதெல்லாம் சகஜம்’பா தோரணையோடு எழுதிக் கொண்டு போகலாம். ’அம்மா இன்னிக்கு செத்துப் போனாள். இல்லே அது நேற்றா?’ என்று ஆல்பர்ட் காமு எழுதிய ‘அந்நியன்’ கதைத் தொடக்கம் எத்தனை கட்டுரைகளுக்கு மூல ஊற்று!.

 

தமிழ், ஆங்கில எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் இரண்டாவது ஆங்கில நாவல் ‘The muddy river’. இதில் அங்கி இழந்த பாதிரிகளோ, இருவழி புரட்சிக்காரர்களோ, கிரேக்கத்து ஹெலனோ எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தில்லி, அசாம், உல்பா, தீவிரவாதிகளால் கடத்தப்படும் அரசாங்க  இஞ்சினியர்கள், சாவு, காதல், காமம், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், அவற்றை நிறுவவதில் ஊழல், தமிழும், பெங்காலியும், அசாமியர்களுமான கதாபாத்திரங்கள் – பலதும் நாவலில் உண்டு.

 

அப்புறம் கம்பீரமான நடை. நிமிர்ந்து உட்கார்ந்து கவனமாக வாசித்து அனுபவிக்க வேண்டிய, சாய்வு நாற்காலிகளுக்கு சரிப்படாத புத்தகம் இது. இதுவும் வேற்றுமொழி நாவலில் எதிர்பார்க்கக் கூடியதுதான். .

 

நாவலாசிரியர் சொல்லும் கதையே நாவல் பாத்திரம் எழுதும்  ’கதைக்குள் இன்னொரு கதை’யாக விரிவது நாவலை சுவாரசியமாக்குகிறது. புதினமும், கதைக்குள் கதையும் இணங்கியும் பிணங்கியும் இறுதிவரை நடப்பது பி.ஏ.கேயின் Tiger Claw Tree (புலிநகக் கொன்றை) தொடங்கிப் பரிச்சயமான நறுக்குத் தெறித்தாற்போன்ற அற்புதமான ஆங்கில நடையில். வாழ்வின் அசாதாரணமான முரண்களையும் அவற்றின் அங்கதத்தையும் போகிற போக்கில் விவரித்துப் போகிற நேர்த்தியை The Muddy River-லும் காணலாம். ஆனால் இந்த இரண்டு நாவல்களும் வெவ்வேறு வகை – ழானர்.

 

நாவலின் கதைச் சுருக்கம் இப்படிப் போகிறது –

 

மத்திய அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன். தில்லியின் பாதுகாப்பான சர்க்கார் ஆபீஸ், கோப்பு, குறிப்பு, செக்ரட்டரி, அமைச்சர் இத்யாதி நடமாடும் தெய்வங்களோடு ஒட்டியும் வெட்டியும் உறவாடுவது, மற்றபடிக்கு சுவாசிப்பது, பிரியமான மனைவி சுகன்யாவோடு சுகிப்பது என்று நகர்கிற வாழ்க்கை சமீபத்தில் ஒரே மகளான குழந்தை பிரியாவை மஞ்சள் காமாலையில் பறிகொடுத்ததும் அலைக்கழிய ஆரம்பிக்கிறது. போதாக்குறைக்கு ஆபீஸில் வேறே அல்பமான மேலதிகாரி, கேண்டீன் டீ சூடு ஆறிப் போய் வாயில் வைக்க வழங்கவில்லை என்பதற்காக கேண்டீனையும் நிர்வகிக்கும் ரமேஷோடு மோதுகிறார். டீ தயாரிப்பது, அதன் வெப்ப நிலை, மேலதிகாரி அறையில் வெப்ப நிலை, அவர் டீ குடிக்காமல் கோப்பையை வைத்திருப்பதால் எத்தனை நிமிடம் ஆறாமல் இருக்கும் இன்னோரன்ன நுணுக்கமான விவரணைகளோடு அவரைச் சீண்டி ரமேஷ் ஆபீஸ் நோட் போட, அந்தாளுக்கு பனிஷ்மெண்ட் போஸ்டிங்க். அசாம் சலோ. அசாமில் அரசாங்க மின் உற்பத்தி கார்ப்பரேஷனுக்கு அதிரடி பணிமாற்றம். அங்கே இருந்து போனமாதம் தான் சீனியர் எஞ்சினியர் ஒருத்தரை தீவிரவாதிகள் கடத்திப் போய் 4 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்கிறார்கள். அசாமில் தீவிரவாதிகளோடும், சாதாரணர்களோடும், அதிகார வர்க்கத்தின் இதர தூண், தூசி துப்பட்டைகளோடும், காண்ட்ராக்டர்களோடும் ரமேஷுக்கு ஏற்படும் அனுபவங்கள் நாவலாக விரிகின்றன. இந்த அனுபவங்களை (அல்லது இவற்றை அடிப்படையாக வைத்து, நிகழ்ந்த அனுபவங்களை, நிகழாத கற்பனை சம்பவங்களை) ரமேஷ் தன் முதல் நாவலாக எழுதுகிறான். அவன் மனைவி சுகன்யா அந்த நாவல் உருவாக உருவாக தன்னையும், ரமேஷையும் அதில் வேறு மனிதர்களாக உணர்ந்து ரசிப்பதோடு, ரமேஷின் நாவலில் கதாபாத்திரங்களான அவனுடைய இரண்டு நண்பர்களுக்கும் அத்தியாயங்களின் பிரதிகளை மின்னஞ்சலில் அனுப்புகிறாள். சுகன்யாவும், இந்த நண்பர்களும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் The Muddy River நாவல் வெளியில் நடக்க, பெரும்பாலான கதை நிகழ்வு ரமேஷ் சந்திரன் எழுதும் நாவலுக்குள் நடக்கிறது. அந்த ’நிகழ்வில்’ எத்தனை சதவிகிதம் உண்மை, எது ரமேஷின் கற்பனை என்று கடிதங்கள் தகவல் பகிர்ந்து கொள்கின்றன.

 

புரியலை என்று யாராவது கையை உயர்த்தினால், நம்ம பதில் – படிச்சுப் பாருங்க ப்ளீஸ். தானே புரியும்.

 

இந்தக் கட்டுமானத்தில் பிஏகே உயர்த்தியிருக்கும் புதினம் ஒரு வினாடி ரோலர் கோஸ்டர் பயணமாக (அல்லது பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் தலை கிறுகிறுக்கச் சுற்றுவது) விரைகிறது. மறுவினாடி கலீடாஸ்கோப் காட்சிகளாக விளையாட்டு காட்டுகிறது. தொடர்ந்து  மார்ஃபீன் கனவுகளாக ஒன்றின் மீது ஒன்றாக முன்னது முற்றும் அழியும் முன் படிந்து அலாதியான அமைப்பை (palympset)  உருவாக்குகின்றது. இவற்றோடு, இலக்கு நிர்ணயிக்கப்ப்பட்டு கதையும் முன்னேறுகிறது. மரங்களும், பறவைகளும், காந்தியுமாக ஆரம்பமாகும் ரமேஷின் ‘நாவலுக்குள் நாவல்’, அதே போல் முடிவடைவது பிஏகேயின் புனைகதை ஒழுங்கமைதி பற்றிய அக்கறையைக் காட்டக் கூடும் என்று சொன்னால் அவருக்கு விமர்சனம் இருக்குமோ?

 

ஆபீஸ் மேஜையில் நக்னமாக, குறி விரைத்து நிற்க தலைகீழாக சிரசாசனம் செய்யும் அரசு அதிகாரி, கடத்தல் காரர்களை சந்திக்கப் போகும் இடத்தில் இரண்டு பெண்கள் டேப் ரிக்கார்டர் கொண்டு வந்து ரமேஷ் கேட்டு அனுபவிக்க வைக்கிற அசாம் நாட்டுப்புற இசை, பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலப்பரப்பு, குடிப் பழக்கத்திலிருந்து பக்தரை விடுவிக்க, காணிக்கை வைக்கிற இனிப்பில் ரோமத்தை ஒட்டித் தரும் யோகி (எங்கே இருந்து பிடுங்கிய முடி என்று நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்), தில்லி துர்க்மான் கேட்டில் சந்தோஷமாகப் பேசியபடி மாதுளம்பழம் விற்று, அடுத்த நிமிடத்தில் குடல் சரியக் குத்தப்பட்டு இறக்கும் இளைஞன், பாங்க் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் அரவம் பூண்டு ஆவேச்மாக தாண்டவ நிருத்தம் புரியும் பருமனான சிவன் வேஷ நடிகர், நண்பர்களின் சாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுப்பதற்காகவே சொந்த ஊரான திருநெல்வேலியில் விடாப்பிடியாகத் தங்கி இருந்து, ராத்திரி ஏழு மணிக்கு உறங்கப் போகும் தொண்ணூறு கடந்த முதியவர்கள், இண்டர்நெட் மூலம் ‘கம்பெனி கொடுக்க’ வரும் பெண், போலீசாரால் ஆசனவாயில் எதேதோ நுழைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட, (லெனினை வண்டையாகத் திட்டும்) மார்க்சிஸ்ட், பழைய புள்ளிவிவரங்களால் வசீகரிக்கப்படும் வயதான சோஷலிஸ்ட்கள், ரவீந்த்ரநாத் தாகூரின் சிதை எரிந்து அடங்கும் முன்பே, கால் கட்டை விரலையும் எலும்புகளையும் நினைவுச் சின்ன்ங்களாக பறித்து எடுத்து ஓடும் வங்காளிகள், இன்கிரிட் பெர்க்மென் படங்களை நுணுக்கமாக ரசிக்கிற மற்றப்படி எளிய ரசனையுள்ள காண்ட்ராக்டர் இப்படி குறிப்பிடப்படுவதும், பாத்திரங்களும், பங்கு பெறும் சூழலும் நாவல் முழுக்க வருவதைக் காண்கிறோம்.

 

கதைக்குள் கதை அமைப்பு நாவலாசிரியருக்கு ஒரு தனி புஜபலத்தை அல்லது ஒன்–அப்-மேன்ஷிப்பைக் கொடுக்கிறது என்பது உண்மை. படிக்கும் வாசகனுக்கோ, விமர்சகனுக்கோ ஏதானும் விமர்சனம் எழுந்தால், அது என்னவாக இருக்கும் என்று அனுமானம் செய்யப்பட்டு, நாவலின் கடிதப் போக்குவரத்து வெளியில் உடனே குறிப்பிடப்பட்டு விடுகிறது. மின்சார டிரான்ஸ்பார்மர்களை நிறுவுதல் குறித்து நுணுக்கமாகத் தொழில் நுட்பத் தகவல்களை இவ்வளவு தர வேண்டுமா என்று நான் யோசித்தபடி வாசித்துப் போக, ரமேஷின் நண்பர் சுகன்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இதையே குறிப்பிடுகிறார் என்பது இதற்கு ஓர் உதாரணம். காண்ட்ராக்ட் ஊழல்கள் பற்றிய கதையாடலைப் புரிந்து கொள்ள அந்தத் தகவல் அவசியம் என்று பின்னால் புரிந்தது.

 

இப்படியான பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை பிஏகேயிடம் கேட்டேன் – நாவல் ஏன் பெரும்பான்மையான பக்கங்களில் டைப் ரைட்டரில் தட்டச்சு செய்தது போன்ற எழுத்துருவில் அச்சாகி இருக்கிறது? ரமேஷ் சந்திரனின் நாவல் manuscript பக்கங்கள்   டைப்   செய்யப்பட்டவை என்பதால் The Muddy River நாவலிலும் அவை அதேபடியான அச்செழுத்துக்களில் வருவது பொறுத்தமாக இருக்கும் என்று காப்பி எடிட்டருடன் விவாதித்து முடிவு செய்ததாகச் சொன்னார். பாக்கியவான். நான் என் புத்தகங்களின் காப்பி எடிட்டர் யாரென்று அச்சடித்து வெளிவந்த புத்தகத்தைப் புரட்டித்தான் தெரிந்து கொள்கிறேன். எல்லா தமிழ் எழுத்தாளர்களும் இதேபடிதான் இருக்கிறார்கள்.

 

லார்க்கின், பார்ஸ்டர், எட்வர்ட் டயர், எஸ்ரா பவுண்ட், தாமஸ் ஹார்டி, ஆந்தணி பர்ஜஸ், ஜான் பெட்ஜமென் என்று எல்லா நூற்றாண்டுகளிலும் இருந்து ஐரோப்பிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், காந்தி, மேலும் காந்தி. ரமேஷ் மூலமும் மற்ற பாத்திரங்கள் மூலமும் இவர்கள் சொன்னதையும் எழுதியதையும், அங்கங்கே ஒரு வாக்கியம் இரு வாக்கிய மேற்கோள்களாகக் காட்டியபடியே கதையை நகர்த்திப் போகிறார். பிரஞ்சுப் புரட்சி போன்ற சரித்திர நிகழ்வுகள் பரிச்சயமானவர்களாக ஆங்கில இலக்கிய வாசகர்களை அனுமானம் செய்து கொள்ளலாம் என்பதால் ரோபஸ்பியர் பற்றிய குறிப்பும் அதே போன்ற மற்ற சரித்திர, மார்க் ஷகாலின் ஐரோப்பிய ஓவியம், ஜ்யோதீந்த்ரநாத் தாகூரின் இந்திய ஓவியம், தில்லி வில்லியம் கிரசெண்டில் தண்டி யாத்திரை சிற்பம் பற்றிய குறிப்புகளும் உறுத்தாமல் கதையில் பொதிந்துள்ளன. பிஏகே என்ற கிரிக்கெட் ரசிகரையும் நாவலில் இனம் காணலாம். சுகன்யாவை, ப்ராட்மென் வெளுத்து வாங்கிய தாத்தா கால கிரிக்கெட்டின் ரசிகை  ஆக்கியிருப்பது உதாரணம்.

 

முன்னாள் மார்க்சிஸ்ட்கள் பலரும் பிரிட்டீஷ் ‘ஆராதகர்கள்’ (anglophile) என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் ரமேஷுக்குப் பிடித்த பிபிசி பேட்டியாளர் டிம் செபாஸ்டியனை எனக்கும் பிடிக்கிறது. ரமேஷ் போல், ஸ்காட்டிஷ் பின் ஸ்ட்ரைப் சூட் தான் நானும் விரும்பி அணிவது. பிஏகேயும் இன்னொரு ஆங்கிலோஃபைல் ஆக இருக்கக் கூடும்.

 

நாவலைப் படிக்கும்போது, பிஏகேயோடு (அல்லது ரமேஷ் சந்திரனோடு) நான் உடன்படுகிற இன்னொரு விஷயம் உடல் வாடை பற்றிய எழுத்து. ‘காமத்தில் கொஞ்சம் நாற்றமும் கலந்து இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்’ என்பார் வைக்கம் முகம்மது பஷீர். பிஏகேயும் பஷீர் ரசிகரோ என்னமோ.

 

கடத்தப்பட்ட எஞ்சினியர் கோஷின் மனைவி நந்திதாவால் ஈர்க்கப்படுகிற ரமேஷ் சொல்கிறான்

 

Her smell, part feral and part fruity, is heady. (புனுகு வாடையும் பழவாசனையும் கலந்த, கிறுகிறுக்க வைக்கும் உடம்பு நெடி)

 

அசாமில் கூட வேலை பார்க்கும் அனுபமா பற்றி – இவள் மேலும் மோக வசப்படுகிறான்.

 

Anpuama is sweating. The aroma is bewitching. As we cross the timber shop crunching shavings of wood underfoot, the resinous aroma of timber snuffs Anupama’s. (புதிதாகச் சீவிய மரத் தூளின் வாசத்தோடு கலந்து வரும் வியர்த்த பெண் உடல் வாடை).

 

நாவலின் முக்கியமான பாத்திரங்கள் ரமேஷும்  மனைவி சுகன்யாவும். படித்த உயர் நடுத்தர வர்க்கம். தம்பதிகள் என்றாலும் ஒவ்வொருவரின் individual space-ஐ மதிப்பவர்கள். அங்கு அத்துமீறல் ஏற்படுத்தக் கூடாது என்ற கண்ணியம் நிறைந்தவர்கள். என்றாலும் அவ்வப்போது ஆக்கிரமிப்புக்கான ஆயத்தம் நடப்பதும் உண்டுதான். மனிதர்கள் ஆயிற்றே. எப்போதும் ஒரே மாதிரியாக இயங்க முடியுமா? போதாக்குறைக்கு ரமேஷுக்கு காப்பி டிகாஷன் கூட சரியான பத்த்தில் இறக்க வராது. சுகன்யா நல்ல காப்பி தயாரித்துக் கொடுப்பது அத்துமீறல் என்றால் ரமேஷும் நானும் கவலைப்படப் போவதில்லை.

 

ரமேஷ் தன் நாவலில் சொல்லுவது இது –

 

In grief, Sukanya was tyrannous. She did things, she knew, I abhorred. She brought home manicured, diamond-studded astrologers. She played ghazals played by effeminate, moonstruck morons. She expected these everyday nothings to work on my temper.

 

பி.ஏ.கேயின் வசீகரமான ஆங்கில நடைககு ஒரு சிறு எடுத்துக்காட்டு –

 

The climb to Bedni Bugyal was steep and cypress and spruce quickly gave way to dwarfed rhododendron. We passed the tree line and were entering the moss and lichen zone when the weather was seized by a demon. The wind became a whirling dervish. Presently the rain froze and came down in an unremitting fusillade of pellets.

 

அகப்பயணமாக,  வெட்டி விசாரத்தில் ஈடுபடுவதே இலக்கியத் தரம் வாய்ந்த நாவல் என்று திடமாக நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிற தமிழ்ச் சூழலில், நாவலின், சிறுகதையின் எழுதி வைத்த முகத்தை மாற்ற முயன்று கொண்டிருக்கும் வெகு சிலருக்கு இம்மாதிரி நாவல்கள் உற்சாகம் அளிப்பவை. நான் மகிழ்ச்சியில் மிதக்கிறேன்.

 

சொல்ல மறந்து விட்டேனே, நாவல் தமிழில் பிஏகேயால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மின்பிரதியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் பெயர் ‘கலங்கிய நதி’. அது அச்சுக்கு வரும்முன் அறிமுகப்படுத்துவதையும் பொதுப் பகிர்வில் கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆங்கில மூலம், தமிழில் மிக இசைந்த மொழியாக்கமாகி இருப்பதை மட்டும் சொல்ல எந்தத் தடையும் இல்லை.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888

கமல் ஹாசன் அலுவலகத்தில் அவரோடும்,  திரைக்கதை ஆசிரியர் அதுல் திவாரியோடும் (த்ரோகால், தசாவதார் இந்தி வசனம்) காஞ்ச்ச் இலையாவின் புத்தகம் பற்றி படப்பிடிப்புக்கு நடுவே பேசிக் கொண்டிருந்தேன், மேசையில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘கிறிஸ்துவமும் தமிழ்ச் சூழலும்’ தட்டுப்பட்டது. ஆராய்ச்சி அறிஞர் நா.வானமாமலையின் மாணவர். படிக்க சுவாரசியமான புத்தகம்.

புத்தகத்தில் இருந்து –

தமிழில் நாட்டார் விவிலியம் (Appocripha) உண்டு. விவிலியத்தில் இல்லாத, உள்ளூர்ச் சூழ்நிலை சார்ந்த நிகழ்வுகள். நோவா பிரளய நேரத்தில் கப்பல் கட்டும் பகுதி, கன்யாகுமரி மாவட்ட நாட்டார் பாடலில் சொல்லப்படுகிறது –

ஆனைக்கு ஒரு கூடு செய்யடா – இப்போ

அய்யப்பன் ஆசாரி நீயடா,

பூனைக்கு ஒரு முறி செய்யடா – நீ

பூச்சாண்டி முறையைக் காட்டாதேடா

நரிக்கும் கீரிக்கும் கூடு – நாராயணா நீ செய்யடா

ஓரிக்கொரு கூடு செய்ய ஓச்சன் ஆசாரி போதுமே

கழுதைக்குக் கூடுவேறே வேணுமே

காசி செய்து வைத்தால் போதுமே

அண்டி ஆசாரியும் அறுத்துத் தள்ளுறான்

அண்டிக் கண்ணன் பப்பு எடுத்துச் சீவுறான்

நொண்டி ஆசாரியும் கணக்குப் பார்க்கிறான்

கோரச் சாமியும் நெட்ட முளக்கோலை வைத்து வரையறான்

இப்பகுதிகள் குமரி மாவட்டச் சூழலில் நோவாவின் கப்பல் – பேழை உருவாகிற உணர்வை கச்சிதமாக ஏற்படுத்தும். மொழியாக்கம் நம் முன்னோர்களுக்கு சுலபமாகக் கைவந்த சமாசாரம். வார்த்தைக்கு வார்த்தை முனைந்து செய்யப்படும் அதிரடி மொழிபெயர்ப்புகளுக்காக அவர்கள் மெனக்கெடவில்லை.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2022 19:55

April 29, 2022

இரா.முருகன் நேர்காணல் – எம்.டி.வாசுதேவன் நாயர் – டிசம்பர் 2009

மலையாள இலக்கியத்தில் ஆறு பத்தாண்டுகளாக மிகப் பெரும் ஆளுமையாக விளங்கி வரும் திரு. எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் டிசம்பர் 2009-இல் சென்னை வந்திருந்தபோது நான் சந்தித்தேன்.குமுதம் தீராநதி, அமுதசுரபி (குறுகிய வடிவம்) மற்றும் என் மின்நூல் ‘இதுவும் அதுவும் உதுவும்’ ஆகியவற்றில் இடம் பெற்ற நேர்காணலில் இருந்து –———————————————————————

எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல்                 இரா.முருகன்

 

எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில சாகித்ய அகாதமி, ஞானபீடம், இன்னும் மலையாள மண்ணின் முக்கியமான இலக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்ற இலக்கியவாதி. இத்தனை சிறப்போடு, மாத்ருபூமி என்ற பாரம்பரியம் மிக்க தினசரியின் ஆசிரியராக இருந்த ஆற்றல் மிக்க பத்திரிகையாளரும் கூட. எம்.டி என்ற ஆளுமையின் பன்முகப் பரிமாணம் பிரமிக்க வைக்கிற ஒன்று.

 

எம்.டி. அண்மையில் பாரதி விருது பெற சென்னை வந்திருந்தார். ‘தி.நகரில் இருக்கேன்’ என்று தொலைபேசியில் விலாசம் சொன்னபோது ஒரு அற்ப சந்தோஷம். எங்க பேட்டை ஆளாக்கும்! பொடிநடையாக எம்.டி இருந்த குப்புசாமி தெருவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

 

அடுக்குமாடிக் கட்டிடம். அடுத்த வீட்டுக்காரர் பெயரே தெரியாத கான்கிரீட் காடுகளில் ஒன்று. அடுத்த மாநில எழுத்தாளரை இங்கே எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?

 

வாசலில் மர ஸ்டூலில் ஆரோகணித்திருந்த காவல் தெய்வத்திடம் அடையாளங்களைக் குறிப்பிட்டு விலாவாரியாக விசாரிக்க ஆரம்பிக்கும் முன் ‘வாசுதேவன் நாயர் சாரா?’ என்று பளிச்சென்று கேட்டார் அவர். ஆச்சரியம் அடங்கும் முன், வாசலுக்கு வந்த ஓர் இளைஞரைக் காட்டி ‘இவங்க மாமனாரு தான்’ என்று குறு அறிமுகம் வேறே செய்து வைத்தார்.

 

நான் மலையாளத்தில் அந்த இளைஞரிடம் குலமுறை கிளர்த்தி, வந்த காரியத்தைத் தெரியப்படுத்தியபோது அவர் கொஞ்சம் மிரண்டார். ‘சார், நான் தமிழ்தான். வீட்டுலே அவங்க தான் மலையாளம்’ என்றார் சிரித்தபடி.

 

மடிக் கணினியைப் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டு அறையை நோட்டமிட்டேன். தமிழ் மத்தியதர வர்க்க வீட்டு வரவேற்பரை. இல்லை, இது வித்தியாசமானது என்று அடுத்த வினாடி புரிந்தது. திரை விலக, பலமாகக் கவிந்த பீடிப்புகையோடு, உள்ளே இருந்து மெல்ல நடந்து வந்தார் எம்.டி. நெடிய உருவம். டபிள் முண்டு (எட்டு முழ வேட்டி), ஸ்லாக் ஷர்ட், பட்டை ப்ரேம் மூக்குக்கண்ணாடி. கேரள அரசியல்வாதிகளையும், எழுத்தாளர்களையும் ஒரேபடிக்குச் சேர்த்து நான் மனதில் வைத்திருக்கும் ஒற்றை பிம்பத்துக்குக் கொஞ்சம் நெருங்கிய பெர்சனாலிடி.

 

எம்.டி பீடிக்கட்டை மேஜை மேல் வைத்தார். ‘அப்புறம்?’ என்று விசாரிக்கிற  பார்வை. நான் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிறது போல் சுபாவமாக ஆரம்பித்தேன். அந்த நேர்காணல் இதோ –

 

 

(எம்.டி எழுதிய முதல் நாவல் ‘நாலு கெட்டு’. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்திய காலகட்டத்தில் கேரளத்தின் பசுமை கொழிக்கும் வள்ளுவநாட்டுப் பகுதியில் ஒரு பழைய நாலு கெட்டு மனையின் – நாலு பிரிவு கொண்ட வீடு –  நிகழும் கதை அது. வயதான நம்பூத்ரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழப் புகுந்த யசோதராவின் கதையைச் சொல்கிற நாவலில் அப்புண்ணி ஒரு முக்கிய கதாபாத்திரம். அப்புண்ணியின் பார்வையில்தான் கதை நகர்கிறது.)

 

நான்: எம்.டி.சார். முதல் கேள்வியை நான் கேட்கலே. மலையாள எழுத்தாளர் வி.கே.ஸ்ரீராமன் உங்கள் நாலுகெட்டு கதாநாயகி யசோதராவை பேட்டி கண்டு ‘வேரிட்ட காழ்ச்சகள்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறாரே, அதில் அவர் சொல்கிறார் -– ‘எம்.டியை சந்தித்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்றால், ஏன் நாலு கெட்டு நாவலில் யசோதரா பெயரை அப்படியே பயன்படுத்திக் கொண்டு உங்கள் பெயரை மட்டும் அப்புண்ணி என்று மாற்றிவிட்டீர்கள்’?

 

 

எம்.டி: அது உண்மையில்லை. அவர் எந்த யசோதராவை சந்தித்தார் என்று தெரியவில்லை. நாலு கெட்டு ஒரு நாவல். நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான்.  யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த  அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?

 

 

நான்: யசோதரா இத்தனை காலம் அந்தப் பழைய மனையில் தனியாக வசித்துவிட்டு இனியும் அதில் இருக்க முடியாத சிதிலமடைந்த நிலையில் வெளியே ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபெயர்ந்ததாக சில மாதங்கள் முன்னால் மாத்ருபூமி தினசரியில் செய்தி வந்திருந்ததே. படிச்சீங்களா சார்?

 

எம்.டி: அப்படியா? பார்த்த நினைவு இல்லையே. வந்திருந்தாலும் அது சரியான வார்த்தை இல்லை. யசோதரா என் மற்ற கதாபாத்திரங்களைப் போல் அந்தக் கதையில் மட்டும் உலவிப் போன ஒரு பெண்மணி. அவள் வயதான நம்பூதிரியை மணந்து இளம் பெண்ணாக அடி எடுத்து வைத்த வீட்டில் இத்தனை வருடம் தனியாக இருந்தாள், இடிந்து சிதிலமடைந்து இனியும் இருக்கத் தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டதும் அந்தப் பழைய மனையை விட்டுக் குடி பெயர்ந்தாள் என்பதெல்லாம் எனக்கு சுவாரசியம் தரும் செய்திகள் இல்லை. நாலுகெட்டு கதாபாத்திரங்களை ஆழமாக நேசிக்கிறவர்கள் இன்னும்  இருப்பதாகவே நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

 

நான் : மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன. யாராவது எழுத்தாளர் காலம் சென்றால் உடனே அவர் பெயரில் ஒரு நினைவுப் பரிசு ஏற்படுத்தப்பட்டு விடுவது சர்வ சாதாராணமாக நிகழும் ஒன்றாகும். ‘இனிமேல் எந்த மலையாள எழுத்தாளரும் ஒரு பரிசு கூட வாங்க முடியாமல் இறக்க முடியாது’ என்று கூட சமீபத்தில் ஒரு மலையாள விமர்சகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இலக்கியத்துக்கு அங்கீகாரம் வேண்டியதுதான். அதுக்காக இப்படியா?

 

 

எம்.டி: மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நவீன இலக்கியத்துக்கான நிறைய விருதுகள் கேரளத்தில் இருக்கின்றன என்பது உண்மைதான். எழுத்தை ஊக்குவிக்க அங்கங்கே தனித்தும் குழுவாக அமைத்தும் செய்யப்படும் முயற்சிகள் இவை. ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு மாதிரி.

 

நானே மூன்று முறை கேரள சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு விதமான இலக்கியப் படைப்பாக்கத்துக்காக என்பதை மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறேன். பரிசு பெற்ற ‘நாலுகெட்டு’ நாவல். ‘சுவர்க்கம் துறக்குன்னு’ சிறுகதைத் தொகுப்பு. அதேபோல, இன்னொரு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘ கோபுர நடையில்’, நான் எழுதிய நாடகம்.

 

இதில் நாலுகெட்டு எனக்கு விசேஷமானது. கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் எழுதிய என் முதல் நாவல். முதல் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த ஆரம்ப எழுத்தாளனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கும் அப்போது.  அந்த விருது கிடைத்திருக்காவிட்டாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்திருப்பேன். மத்திய சாகித்ய அகாதமி, ஞானபீடம் என்று எல்லா விருதுகளையும் பற்றியும் என் நிலைபாடு இதுதான்.

 

விருதுக்காக எந்த எழுத்தாளரும் எழுதுவதும் இல்லை. எழுதப் போவதுமில்லை. ஆனால் நல்ல இலக்கியம் என்று இனம் கண்டு பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனியானது. பொருளாதார ரீதியில் இல்லாமல் எழுத்தை இன்னொரு தளத்தில் கௌரவிக்கும் இம்மாதிரி முயற்சிகளை தாராளமாக வரவேற்கலாமே.

 

நான்: சாதாரணமாக எல்லா மொழியிலும் கவிதை எழுத ஆரம்பித்து உரைநடைக்குப் போகிறதுதான் சாதாரணமாக நடப்பது. ஆனால், நீங்கள் நேரடியாக உரைநடைக்கு வந்து விட்டீர்களே?

 

எம்.டி: அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கவிதை எழுதாமல் உரைநடைக்குள் ரைட் ராயலாக நுழைந்த ஒரு எழுத்தாளன் உண்டா இந்த உலகத்தில்? நானும் கவிதை எழுதிப் பழகிவிட்டுத்தான் கதை சொல்ல வந்தவன். என்ன, கல்லூரியில் படிக்கும்போதே எனக்குள் இருந்த கவிஞன் விடைபெற்றுப் போய்விட்டான், அவ்வளவே.

 

 

நான்: நீங்கள் மலையாள மகாகவி துஞ்சன் நம்பியாரின் மரபு இலக்கியத்தோடு தொடர்பு உள்ள நவீன இலக்கியவாதி. துஞ்சன் பற்றி சொல்லுங்களேன். அவர் தான் மலையாளத்தில் முதல்முதலாக 51 எழுத்து மலையாள எழுத்துமுறையைக் கொண்டு வந்தாராமே? அதற்கு முன் 30 அட்சர வட்டெழுத்து லிபிதான் எழுதப் பயன்படுத்தப்பட்டது என்கிறார்களே?

 

எம்.டி: துஞ்சன் ஸ்மாரகம் (நினைவு இயக்கம்) தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். மலையாள இலக்கியத்தை மக்கள் இலக்கியம் ஆக்கிய முதல் படைப்பாளி துஞ்சன். அதுதான்  முக்கியமே தவிர அவர் வட்டெழுத்தில் எழுதினாரா, மலையாள லிபியில் முதல்முறையாகக் காவியம் எழுதினாரா என்பதில்லை. பண்டிதர்கள் மட்டும் படித்து அனுபவிக்கும் கடினமான நடையில் அமைந்தது துஞ்சன் காலத்துக்கு முற்பட்ட அந்த்யந்த ராமாயணம். அதை யார் எழுதியது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொழி கடினமாக இருந்தாலும் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் குழந்தை பிராயத்தில் இருந்து அறிந்து அனுபவித்து ஆழ்ந்த ராமாயணக் கதையை மக்கள் இலக்கிய வடிவமான கிளிப்பாட்டு உருவில் படைத்தார் துஞ்சன். வால்மீகியையும் அத்யந்த ராமாயணத்தையும் ஆழ்ந்து கற்ற அவர் அவற்றின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். மலையாள மண்ணுக்கே உரிய மணத்தோடும் வனப்போடும் இங்கே முழங்கிய இசை வடிவாக  ராமாயணத்தை எழுதினார் அவர். வால்மீகியை விட்டு நிறையவே விலகிப் போயிருக்கிறார் துஞ்சன். ஆனால் என்ன, மகா காவியத்தை காவியச் சுவை கெடாமல் மேலும் மெருகிட்டு மக்கள் காவியமாக்கும் முயற்சி இல்லையா அது? மகாபாரதத்தையும் கிளிப்பாட்டு ஆக்கியிருக்கிற மகாகவி அவர். கிளிப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? கும்மி மாதிரி.

 

(பாடிக் காட்டுகிறார். 76 வயதிலும் நடுங்காத குரல். நாலு வரி பாடி முடித்ததும் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டது போல் சட்டென்று நிறுத்தி இன்னொரு பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்.

 

கும்மி தமிழாச்சே? ‘கும்மியடி பெண்ணே, தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி’ நான் பாரதியின் விடுதலைக் கும்மியைப் பாட முயற்சி செய்ய ‘அதேதான், கொடுந்தமிழ் தானே மலையாளம். அங்கேயும் கும்மி கும்மி தான்’ என்றபடி பீடிப்புகையை இழுத்து ஒரு வினாடி அந்த சுகத்தை அனுபவிக்கிறார்).

 

பதினைந்தாம் நூற்றாண்டில் வடமொழியாக்கம் மலையாள மொழியை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால், துஞ்சன் போன்ற மக்கள் கவிஞர்கள் மொழியை மீட்டெடுத்து வந்து அதைப் பேசிப் பழகும் பொது மக்களின் நாவிலும் மனதிலும் திரும்ப இருத்தியவர்கள். காலப் போக்கில் மொழிவளர்ச்சியில் இது போன்று பாதிப்புகள் ஏற்பட்டு விலகுவதும் மொழி செம்மைப் படுவதும் இயல்பானதுதான்.

 

நான் : சார், கொஞ்சம் சினிமா பற்றி சம்சாரிக்கலாம். 1964-ல் வெளியான மலையாளப்படமான ‘முறைப்பெண்ணு’வில் நீங்கள் திரைக்கதை-வசனகர்த்தாவாக திரையுலகில் அடியெடுத்து வைத்தீர்கள். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் பழசிராஜா வரை கிட்டத்தட்ட அறுபது படங்களுக்கு கதை, வசனம் எழுதியதோடு சிலவற்றை இயக்கியும் இருக்கிறீர்கள். இந்த 45 வருஷத்தில் மலையாள சினிமாவில் ஏற்பட்ட முன்னேற்றம், பின்னடைவு என்று ஏதாவது உங்களுக்கு மனதில் படுகிறதா?

 

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலே. அந்தக் காலத்தில் எழுதியது போல் கதையைக் காட்சிகளாக முழு உருவத்தை மனதில் வரைந்து கொண்டு அதை மெல்ல விரிவாக்கி நகர்த்திப் போகிற திரைக்கதை அமைப்பைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாப் படைப்புக்குமே அடிப்படை அது குறித்த ஆய்வும், அறிவுத் தேடலும். எந்தக் காலத்திலும் இது தேவையில்லாமல் போகாது.

 

மலையாளப் படங்கள் தொடக்க காலத்தில் அந்தக் காலத் தமிழ்ப் படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டவை. இசையும் உரையாடலுமான பாணி அது. பார்சி நாடக மேடை தமிழ் நாடகமாகி அதன் பின் தமிழ்ப் படங்களில்  புகுந்ததன் பாதிப்பு மலையாளத்திலும் தூக்கலாக இருந்தது. அப்புறம் பழைய திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளினார்கள். ஆனால் நான் முறைப்பெண்ணு திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் மலையாள சினிமா தமிழ் சினிமா பாதிப்பில் இருந்து விலகி, மெல்ல மெல்ல மலையாள மண்ணின் கலைவடிவமாகிக் கொண்டிருந்தது.   சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மலையாள சினிமா திரைக்கதை அமைப்பில் உரையாடல் இயல்பாக, குறைச்சலாகத்தான் இருக்கும். இது இன்று புதுசாக ஏற்பட்டதில்லை.

 

நான்: 1973-ல் நீங்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று பரவலாகப் பேசப்பட்ட ‘நிர்மால்யம்’ திரைப்படத்தை இயக்கினீர்கள். ‘பள்ளிவாளும் கால்சலங்கையும்’ என்ற நீண்ட கதையை எழுதிய எம்.டியும், அதன் அடிப்படையில் ‘நிர்மால்யத்தை’ இயக்கிய எம்.டியும் மனதளவில் ஒருவர்தானா?

 

‘பள்ளிவாளும் கால்சிலங்கையும்’ எழுதிய எம்.டி. கிராமத்து மனிதன். கிராமத்து மனிதர்களை, கிராம தேவதைகளை, கோவில்களை, கோவில் பணிக்காரனான வெளிச்சப்பாட்டை (சாமியாடி) பார்த்துப் பழகியவன். சாமியாடியை கோவில் உற்சவ காலத்தில் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருத்தி ஊரே வழிபடும். வருடத்தில் நாலு நாள் இப்படிக் கும்பிட்டு விழுந்து வணங்கி காணிக்கை கொடுத்து விட்டு மற்ற நாட்களில் அவனை ஏறெடுத்தும் கூடப் பார்க்காது போவது வழக்கம். இருந்தானா, செத்தானா, அவனுடைய குடும்பம் வறுமையில் வாடியதா, குழந்தைகளின் பசியைப் போக்க அந்த அப்பாவி என்ன செய்கிறான் என்பவற்றைப் பற்றிக் கவலைப்பட தேவி பகவதி இருக்கிறாளே. ஊர் மக்களுக்கு ஆயிரம் கவலை. இதுவும் கூடி என்னத்துக்கு அவர்களுக்கு? அப்படித்தான் பொதுவான மனநிலை.

 

சாமியாடியும் கடவுளை மனசார நம்புகிறவன். பகவதியை தனக்காக வழிபடுவதை விட ஊருக்காக வழிபடுகிறவன். விரதம் இருந்து சந்நதம் வந்து வாள் எடுத்துக் கையில் பிடித்துச் சலங்கை ஒலிக்க ஆடி, நாடும் வீடும் சிறக்க, தோஷம் தீரப் பரிகாரம் சொல்வான். அதில் நிறைய சந்தோஷமும் காணிக்கையாகக் கொஞ்சம் வருமானமும் பெறுகிறவன் அவன். வெளிச்சப்பாட்டின் வாழ்க்கை நசித்துப் போகிறபோது அவன் நம்பி வணங்கி வாழ்த்திப் பாடிய பகவதி அம்மை மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. இது தான் எம்.டி என்ற எழுத்தாளன் எழுதியது. அதை இயக்கிய எம்.டி என்ற திரைப்பட இயக்குனர் அந்த சாமியாடியைத் தேடி அலைந்து அற்புதமான நடிகரான பி.ஜே.ஆண்டனியில் அவனைக் கண்டார். கவியூர் பொன்னம்மா வெளிச்சப்பாட்டின் மனைவியாக, குழந்தைகளின் பட்டினியைக் காணச் சகிக்காமல் நெறி தவறி அவர்களின் பசி போக்குகிற அன்னையாக நடிக்க வந்தார். எம்.டி எழுதிய படிக்கு, எம்.டி பார்த்த படிக்கு, கற்பனை செய்தபடிக்கு நிர்மால்யம் அமைய அந்த அற்புதமான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் முக்கிய காரணம். எழுத்தின் நீட்சியாக அதன் திரையாக்கம் அமைந்ததாகவே எனக்குப் படுகிறது.

 

நான்: நிர்மால்யம் படத்தின் கடைசிக் காட்சியில் வெளிச்சப்பாடு நடனமாடியபடி தன்னையே வாளால் குத்திக் கொண்டு வாயில் கொப்பளித்து ஊறும் ரத்தத்தை தேவி விக்கிரகத்தின் முகத்தில் உமிழ்ந்து உயிரை விடும் காட்சி வருகிறதே. இறக்கும்போது வெளிச்சப்பாடு தெய்வத்தை நம்பாத நாத்திகனாக மாறியதாக இதைக் கொள்ளலாமா?

 

எம்.டி: அப்படி இல்லை. தான் மலை போல நம்பிய ஒருத்தர் தன்னைக் கைவிட்ட கோபம் அது. எங்கள் ஊரில் ஒரு சாமியாடி இருந்ததாகச் சொன்னேனே. அவன் சாதாரணமாகப் பேசும்போது ‘ஆத்தா கிட்டே கேட்டேன் வாசு. அவளுக்குக் கோபம் போல இருக்கு. எதுக்கும் நீ அந்தப் பக்கம் போனா அந்தப் பொம்பளைக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் போ. பாவம் அதுக்கும் யாரு இருக்கா?’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். பகவதி அம்மன் பெயரைச் சொல்லி ஒரு கைப்பிடி நீரை மேலே அள்ளித் தெளித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்று உள்ளபடிக்கே நம்பியவன் அவன். சக மனிதர்கள் போல தினசரி நெருங்கி உறவாடி உரையாடும் பகவதி அம்மையும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அம்சம். தெய்வாம்சம் எல்லாம் அதுக்கு அப்புறம்.

 

நான்: மலையாளத்தின் பாரம்பரிய வரலாற்று புனைவுகளில் கொடியவனாகச் சித்தரிக்கப்படும் ‘சதியன்’ சந்துவைக் கதாநாயகனாக்கி ஏழெட்டு வருஷம் முன்பு, ‘ஒரு வடக்கன் வீரகாதை’ திரைக்கதை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் திரைக்கதை அமைத்த ‘பழசிராஜா’வில் இன்னொரு சந்து வருகிறான். பழையம்வீடன் சந்து. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்ததாகக் காட்டியிருக்கிறீர்களே இந்தச் சந்துவை? அவனும் வேறு மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா?

 

எம்.டி: கொலைக்கும் துணிந்த சதியன் சந்து பணிக்கர் என்ற கற்பிதம் வடக்கு கேரள பிரதேசத்தில் வழங்கும் வடக்கன்பாட்டு கிராமிய இசை வடிவில் இல்லை. மலையாள மண் இன்னும் போற்றிப் புகழும் ஆரோமல் உண்ணி போல் அவனும் வடக்கன் பாட்டுகளின்படி ஒரு வீரன் தான்.  50-60களின் மலையாள சினிமா சரித்திரப் புனைவுகளைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்த போது சந்து சதிகாரன் என்ற பொய் கட்டிச் சமைக்கப்பட்டது. வடக்கன் வீரகாதை படத்தில் நான் சித்தரித்த சந்து   சூழ்நிலையால் குற்றவாளி ஆக்கப்பட்ட ஒரு வீரன். இப்போது பழசிராஜா படத்தில் வரும் பழையம்வீடன் சந்து ஆங்கிலேயருக்குத் துணை போனவன் என்பது தொன்மமில்லை. புனைவுமில்லை. வரலாறு.  ஆவணப்படுத்தப்பட்டது.

 

நான்: உங்கள் படமான ‘பரிணயம்’, கேரளத்தில் பரபரப்பு சிருஷ்டித்த ‘குறியேடத்து தாத்ரிகுட்டி’ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இல்லையா?

 

ஆமாம். நம்பூத்ரி சமுதாயத்தைச் சேர்ந்த குறியேடத்து தாத்ரிகுட்டியின் வாழ்க்கை சம்பவங்களுடைய பாதிப்பு பரிணயம் படத்தில் உண்டு. போன நூற்றாண்டு தொடக்கத்தில், நம்பூதிரி பிரிவினரை மட்டுமில்லாமல் கேரளத்தில்   பொதுவாகப் பெண்ணை ஆணாதிக்க சமுதாயம் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வைத்த நிகழ்வு அது. நம்பூத்ரி இனப் பெண் பிறழ்ந்து போக நேர்ந்த சூழ்நிலையைப் கவனமாகப் பரிசீலனை செய்யும் முயற்சி ‘பரிணயம்’.

 

நான்: மாடம்பு குஞ்ஞுகுட்டன் கூட அது குறித்து ப்ரஷ்டு என்ற நாவல் எழுதியிருக்கிறார் இல்லையா? அவருடைய பூர்வீக இல்லமான மாடம்பு மனையின் அடுதிரிப்பாடு தானே தாத்ரிக்குட்டியை ஸ்மார்த்த விசாரம் (சமூக விசாரணை) செய்ய நியமிக்கப்பட்டவர்?

 

எம்.டி: மாடம்பு மனை அடுதிரிப்பாடு விசாரணைக் கமிஷன் உறுப்பினர். அவ்வளவே.

 

நான்: எப்போதும் உங்கள் கதைகளையே திரைப்படமாக்கும் நீங்கள் ‘செறு புஞ்சிரி’ படத்தை, தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரிராமன் எழுதிய ‘மிதுனம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கியது ஏன்?

 

அந்தச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வயதான தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் ஆழமான காதலை மென்மையாகச் சொல்லும் கதை. அதுபோல் வேறு மொழிக் கதைகள் கிடைத்தால் மலையாளத் திரைப்படமாக்கத் தடையேதும் இல்லை. யார், எந்த மொழி என்பது முக்கியமில்லை, நல்ல கதை எங்கேயும் எப்போதும் நல்ல கதைதான்.

 

நான்: நீங்களோ ஒரு முற்போக்கு இலக்கியவாதி. ஆனாலும் உங்களின் முக்கியப் படைப்புகளான ‘ரெண்டாம் ஊழம்’ (நாவல்), ‘வைசாலி’ (திரைக்கதை), ‘பெருந்தச்சன்’ (திரைக்கதை) போன்றவற்றில் இதிகாசம் மற்றும் தொன்மத்தின் பாதிப்பு இருக்கிறதே.

 

ரெண்டாம் ஊழம், வைசாலி இந்த இரண்டுமே மகாபாரதம் என்ற இதிகாசத்தை சற்றே மாறுபட்ட பார்வையில் நோக்கிய படைப்புகள். ரெண்டாம் ஊழம் பீமனின் பார்வையில் மகாபாரதம். வைசாலி மகாபாரதத்தில் ஒரு கிளைக்கதையை தற்கால சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பது. எக்காலத்திலும் பெண்ணை போகப் பொருளாக உபயோகப்படுத்தி விட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிகிற போக்கை கோடிட்டுக் காட்டிய திரைக்கதை அது. பெருந்தச்சன் கர்ண பரம்பரைக் கதை. தச்சுக் கலைத் திறமையில் சொந்த மகனையே முந்தவிடாத கலா கர்வமும் பொறாமையும் கொண்ட வித்தியாசமான அந்தக் கலைஞன் உருவாக்கியதென்று பன்றியூர் அம்பலத்தில் (கோவில்) இன்றைக்கும் ஒரு பெரிய மண்டபத்தைக் காட்டுகிறார்கள். அந்த வாய்வழிச் செய்திக்கு காட்சி உருவம் கொடுத்தது பெருந்தச்சன் திரைக்கதை.  புராணத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் வைக்காததற்கும் இந்தக் கற்பனை நீட்சிகளுக்கும் தொடர்பு இல்லை.

 

 

 

நான்: உங்கள் நாலுகெட்டு, ருதுபேதம் (திரைக்கதை) இரண்டுமே நாயர் சமுதாயம் மரபு சார்ந்த கட்டுக்கோப்பில் இருந்து விலகி பெரும் சமூக மாற்றம் ஏற்பட்ட காலகட்டத்தைச் சித்தரிப்பவை. மருக்கத்தாயம் (மகனுக்கு இல்லாமல் மருமகனுக்குப் பரம்பரை சொத்து உரிமையாவது) ஒழிப்பு, விமோசன சமரம் போன்ற சரித்திர நிகழ்வுகள் ஏற்பட்ட போன நூற்றாண்டில், இந்தப் படைப்புகளில் சித்தரிக்கப்படும் பிரச்சனைகள் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்திசைந்திருக்கலாம். அவை தற்காலத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாதல்லவா?

 

சரிதான். அறுபதுக்களின் சமூகத்தில் அந்தப் பழைய கேரளத் தனிமையை ஆத்மார்த்தமாக அனுபவித்த ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் அவை எல்லாம். இப்போதைய தலைமுறைக்கு இது அந்நியமான சங்கதி.

 

நாலுகெட்டும் எட்டுக் கெட்டும் எல்லாம் இப்போது கேரளத்தில் அபூர்வம். பழைய கட்டிடங்களை இடித்துப் பொளித்து புதுசு புதுசாக ஏதோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூடலூரில் நான் பிறந்த நாலு கெட்டு மனையில் சுற்றுப் பகுதியை இரண்டு புறமும் இடித்துவிட்டு மத்தியப் பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மாற்றியமைத்துக் கட்டிவிட்டார்கள். என்னமோ போல இருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. கூட்டுக் குடும்பக் கலாசாரம் இப்போது கேரளத்தில் மட்டுமில்லை. இந்தியா முழுக்கவே மறைந்து வருகிறது. மாறுதல்தானே நியதி?

 

(நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் நகரத்தார் சமூக பெரும் இல்லங்கள் இன்னும் அதே பொலிவுடன் இருப்பதைச் சொல்கிறேன். ஓ, அதை எல்லாம் போய்ப் பார்த்திருக்கிறேனே என்கிறார் எம்.டி. தமிழகம் பற்றி அவருக்கு நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது. இந்த மண்ணோடு அறுபது வருடப் பழக்கம் இல்லையா!)

 

பழசிராஜா படத்துக்கு கவிஞர் ஒ.என்.வி எழுதிய கானங்கள் உணர்வு பூர்வமான சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்று இசையமைத்த இளையராஜா சொல்லி இருக்கிறாரே?

 

எம்.டி:திரைக்கதை ஆசிரியன் என்ற முறையில் படத்தில் எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் என்றுதான் நான் எழுதுவேனே தவிர பாடல், இசை என்று சகலமானதிலும் தலையிடுவதில்லை. அது திரைக்கதாசிரியருக்கோ வசனகர்த்தாவுக்கோ தேவையில்லாத ஒன்று. எனக்கு ஒ.என்.வி, இளையராஜா இருவர் மேலும் மதிப்பு உண்டு.

 

 

1957-ல் மாத்ருபூமி உதவி ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து, 1999-ல் அந்தப் பத்திரிகை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் என்ற வகையில் அனுபவம் மிகுந்த பத்திரிகையாளரும் கூட நீங்கள். மலையாள இதழியல் இன்னும் பால பருவத்திலேயே இருப்பதாக எனக்கு ஒரு தோணல்….

 

இதற்கு சிரிப்பையே பதிலாகத் தருகிறார் எம்.டி. நான் என் கம்ப்யூட்டர் கான்வாஸ் பையில் இருந்து ஒரு மலையாள தினசரியை எடுத்து அதன் நாலாம் பக்கத்தில் ‘குருவாயூரில் குட்டி கொம்பன் மேல் தெங்கு வீணு; கொம்பிளகி’ (குருவாயூரில் குட்டியானை மேல் தேங்காய் விழுந்து கொம்பு முறிவு)  செய்தியைப் படிக்கிறேன். சிரிக்கிறார்.

 

தினசரியை மடக்கி தினசரியின் முதல் பக்கத்து செய்தியைக் காட்டுகிறேன். ‘அடடா, மராட்டி கவிஞர் திலீப் சித்ரே இறந்து போய்ட்டாரா?’ எம்.டி பதற்றத்தோடு பத்திரிகையைக் கையில் வாங்கிப் படிக்கிறார். ‘இங்கிலீஷ் பத்திரிகையிலே கூட வரலியே’ என்று முணுமுணுக்கிறார். ‘தமிழிலும் இதெல்லாம் போட மாட்டாங்க சார்’ என்கிறேன். ‘திலீப் எனக்கு நல்ல நண்பர். அருமையான கவிஞர், எழுத்தாளர், அற்புதமான நண்பர்’.

 

எம்.டியின் கண்கள் தொலைவில் நோக்குகின்றன. மெல்ல அடுத்த பீடியைக் கட்டில் இருந்து உருவி எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறார். சந்தோஷமோ துக்கமோ அவருக்குத் துணையாக பீடி உண்டு.

 

சார், நீங்கள் கர்னாடக சங்கீதத்தை ரசிக்க மாட்டீர்கள் இல்லையா? இசைமேதை எம்.டி.ராமநாதனைப் பற்றி நீங்கள் சொன்னதாக ஆறேழு மாதம் முன்பு மலையாளப் பத்திரிகையில் வாசித்த நினைவு – ‘எம்.டி.ராமநாதனை ஒரு இசைமேதையாகப் போற்றிப் புகழ்வது ஏன்? அவருக்கும் மற்ற வித்வான்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பாமரனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியுமோ?’ என்று கேட்டீர்களாமே? M.D யாரென்று இப்போதாவது M.T-க்கு மனசிலாயோ?

 

எம்.டி: நான் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டு செய்தியாக்கியதின் விளைவு இது. எனக்கு சங்கீதம் பிடிக்காது அல்லது எம்.டி.ராமநாதனைப் பிடிக்காது என்றா சொன்னேன்? அவர் பாடியது அற்புதமான சங்கீதம் என்று இங்கே இசை ரசிகர்கள் – கேரளத்தில் நிறையப் பேர் அவருக்கு விசிறிகள் – சொல்கிறார்களே, அதைக் கேட்கும்போது, எந்த மாதிரி வித்தியாசமானது அவர் சங்கீதம் என்று தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் தான் கேட்டேன்.  ஆர்வத்தோடு எதையாவது புரிந்து கொள்ள முயலும்போது அட்டாக் செய்கிறதாக ஏன் நினைக்கணும்? நான் இசை, நடனத்துக்கு விரோதியா என்ன?

 

(எம்.டி தன் குடும்பம் பற்றிச் சொல்கிறார் – அவர் மனைவி நாட்டியம் பயின்று ஆடி வந்தவர். மகள் மகா கவிஞர் வள்ளத்தோல் நிறுவிய கேரள கலாமண்டலத்தில் நாட்டியம் பயின்று ஆடி வருகிறவர். அவர் காதலித்துக் கைபிடித்த தமிழர் ஸ்ரீகாந்த், பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டியக்குழுவில் முதன்மையான ஆட்டக் கலைஞர்)

 

 

உங்களுக்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் 1996-ல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது. 2005-ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றவர் நீங்கள். ஆனாலும் எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போடாமல் எப்போதும் வெறும் ‘எம்.டி’யாகவே இருக்கிறீர்களே?

 

 

விருதுகள் பற்றிச் சொன்ன பதில் தான் இதுக்கும்.

 

(சிரிக்கிறார். அடுத்த பீடி கட்டில் இருந்து விடுபடுகிறது)

 

 

பிரபல ஓவியர் எம்.வி.தேவன் கலாகௌமுதி பத்திரிகையில் உங்களைப் பற்றி பேட்டியில் அவமரியாதையாகச் சொல்லியிருந்ததற்காக அவர் மேல் வழக்கு தொடர்ந்தீர்களே. 2002-ல் தானே அது?

 

எம்.டி (சிரித்தபடி): நேற்று தான் தேவனோடு தொலைபேசிக் கொண்டிருந்தேன்.

 

 

எம்.டி கூடலூர் ஸ்வதேசி அல்லே. வள்ளுவநாட்டில் ஜனிச்சு நிளாநதியில் குளிச்சொருங்கி கொடிக்குன்னு பகவதியெ தொழுது குமாரநல்லூர் ஸ்கூலிலேக்கு நடக்கும் குட்டி கால ஜீவிதம் திரிச்சு கிட்டியால் சார் அது ஆஸ்வதிக்குமோ?

(நீங்க கூடலூர்காரர் இல்லே? வள்ளுவநாடு பிரதேசத்தில் பிறந்து பாரதப்புழையில் குளித்து, கொடிக்குன்னு பகவதி கோவிலில் தொழுது, குமாரநல்லூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தப் பருவம் உங்களுக்குத் திரும்பவும் கிடைத்தால்?)

 

இது ஒரு ஹைபாதெட்டிகல் கேள்வி ஆச்சே. அந்தக் காலம் போனது போனதுதான். இனி ஒரிக்கலும் திரிச்சு வரான் போகுன்னில்ல.

 

முடிக்கும் முன்னால் ஒரு சம்பிரதாயமான கேள்வி. தமிழ் இலக்கியத்தை மலையாள மண்ணில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

 

தமிழ் வாசகர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்த அளவுக்கு மலையாள இலக்கிய ரசிகர்களுக்குத் தமிழ்ப் படைப்புகள் பரிச்சயம் உண்டு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

 

(ஒரு பீடி புகைத்தபடி நானும் அதேபடி தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு உள்ள மலையாள இலக்கியப் பரிச்சயம் பற்றிச் சொல்வதாகக் கற்பனை செய்தபடி விடைபெறுகிறேன். எம்.டியின் சிரிப்பும் பீடிப் புகையும் வாசல் வரை வந்து வழி அனுப்புகின்றன).

 

December 11, 2009

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2022 20:20

April 26, 2022

மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன்

மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன்

————————————–

லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம்.

 

சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.

 

இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு, சுட வைத்த எண்ணெயில் விழுந்து, பொரிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் செதில் உதிரக் கல்லில் உரசி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி, அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள், இரும்பு வாணலியில் ஒன்றை ஒன்று, அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு, மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும்.

 

இதெல்லாம் நடக்க முடியுமானால் நூறு பேர் சாப்பிட வரும்போது அவசரமாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரிமாற வேண்டியிருக்காது.

 

என்ன செய்ய, ஒஃபிலியா சாப்பாட்டுக்கடை உரிமையாளர் அல்வாரிஸ் காலை பத்து மணிக்கு விருந்து தயாராகி விடும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார்.

 

கடைகண்ணியில் மாதச் சம்பளத்துக்குப் போய்ச் சேர்ந்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் எழும்பும் அவ்வப்போது. லூசியா அவற்றைச் சமாளித்தே ஆகவேண்டும். இது சரிப்படாது என்றால் கோவாவில் இருந்து ஹொன்னாவருக்கு வேலை தேடியே வந்திருக்கக் கூடாது.

 

கோவாவிலேயே இருந்தால் சதா வெற்றிலை பாக்கை மென்று துப்பிக்கொண்டு, வண்டித் துறையில் தலையில் சும்மாடு வைத்து பிரயாணிகளுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கிச் சுமந்து அரைப் பணமும் ஒரு பணமுமாகக் காசு கூலி வாங்கிக்கொண்டு, வீடு பெருக்கி எச்சில் தட்டு கழுவிக் காசு வாங்கிக்கொண்டுதான் ஆயுசுக்கும் இருக்க வேண்டிவரும்.

 

அப்படி இருந்தால், இன்னும் பத்து வருடத்தில் பல் காவி பிடித்துவிடும் அல்லது உபத்ரவமில்லாமல் விழுந்துவிடும். மூட்டை தூக்கித் தூக்கிக் குத்திருமல் வந்து யாரும் கூலிகொடுத்துக் கூப்பிட மாட்டார்கள். வீடு பெருக்கி, மெழுகி, துணி துவைத்து, பாத்திரம் கழுவுவது வேணுமானால் நாலைந்து வீட்டுக்கு செய்து கை காய்த்துப் போயிருக்கும்.

 

ஆனால் பழமை அழுத்தமாகப் பதிந்த கோவாவை விட்டு வெளியே ஹொன்னாவர், பட்கல், உடுப்பி, ஹம்பி என்று போய் உணவுக்கடை உத்தியோகம், துணி, காய்கறி-பழக்கடை, மிட்டாய்க்கடை வேலை என்று சேர்ந்துவிட்டால் பத்து வருடத்தில் அங்கே கிடைத்த அனுபவத்தையும், சேர்த்து வைத்த சம்பளப் பணத்தையும் கொண்டு சிறியதாக சொந்தக்கடை ஒன்று போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கை தான் காலை ஆறுமணிக்கு கோழி சமைக்க வரவழைக்கிறது.

 

லூசியாவுக்கு முகலட்சணம் கொஞ்சம் இருந்தால் போர்த்துகீஸ் பிரபுக்களின் மாளிகை நிர்வாகியாகக் கைநிறைய வருமானம் கிடைக்கும். ஆனால் அங்கேயெல்லாம் வேறு மாதிரி சிக்கல். தனியாக இருக்கும் நேரத்தில் வீட்டு ஆண்கள், விருந்துக்கு வந்த காமாந்தகர்கள் என்று அவனவன் கோவாப் பெண் உடம்பு கேட்பான்.

 

அதிலும், லூசியாவின் ஒன்றுவிட்ட அத்தை மகள் கஸாண்ட்ரா போன்ற ஒரு சிலருக்கு வீட்டையும், வீட்டு எஜமானையும் சேர்த்து நிர்வகிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியே பணிக்காலம் முடிந்து துரை திரும்ப லிஸ்பன் போகும்போது, பெண் நிர்வாகியும் போகவும், அங்கே ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவும் சந்தர்ப்பம் நிறைய உண்டு,

 

எல்லாம் யோசித்தபடி வாசல் கதவை உள்ளே தாழ் போட்டுக்கொண்டு லூசியா மிளகை விழுதாக்க ஆரம்பித்தாள். நேற்றிரவே ஊற வைத்த மிளகு என்பதால் குழைந்து குழைந்து விழுதாகக் கஷ்டமில்லாமல் அரைபட்டுக் கொண்டிருந்தது.

 

”லூசியா, லூசியா” என்று வாசலில் கதவை அடித்தபடி யாரோ கூப்பிடும் சத்தம். மீன் வாடை பலமாகச் சூழ்ந்தது. வாசலுக்குப் போகாமலேயே லூசியாவுக்கு யார் வந்தது என்று தெரியும். மீன்கார அபுசாலி ராவுத்தர்.

 

இன்றைக்கு விருந்துக்கு ஆற்றுமீன் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்ததால் வந்திருக்கிறார்.

 

லூசியா மிளகு விழுது அரைக்கும் அம்மிக் குழவியைக் கல்மேல் ஏற்றி வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.

 

“அப்போ பிடிச்சு கூவிட்டிருக்கேன் உள்ளே கேட்கலியா?” என்றபடி அபுசாலி ராவுத்தர் பெரிய மீன்கூடையை கதவுக்கு இடையே உள்ளே தள்ள, கூடைக்குள் இருந்து, இன்னும் உயிர் இருந்த ஒரு மீன் துள்ளி வெளியே விழுந்தது.

 

எடுத்து உள்ளே போட்டபடி ”எல்லாம் நேத்து ராத்திரி பிடிச்ச மீன் இதுக்கு மேலே புதுசு வேணும்னா சோத்துக் கடையை சமுத்திரத்துக்கு உள்ளே உக்காந்துதான் நடத்தணும்” என்றார்.

 

“அபுசாலிக்கா, கை கழுவிட்டு வாங்க. பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன்” என்று உபசரித்தாள் லூசியா. மீன் கூடையில் இருந்து ஒரு கை மீனை அள்ளிப் பார்த்துவிட்டு மிளகு அரைக்கத் திரும்ப உள்ளே போனாள்.

 

சமையலறை உள்ளே இருந்து, மீன்வாடைக்கு வந்த பூனைக்குட்டி ஒன்று வேகமாக ஓடியது.

 

அபுசாலி தூணை ஒட்டிப் போட்டிருந்த பலகை இருக்கையில் உட்கார்ந்தபடி பசுவின்பால் அருந்திக் கொண்டிருக்கும்போது சோத்துக்கடை அல்லு என்று பெயர் பெற்ற ராபர்டோ அல்வாரிஸ் கடைக்குள் நுழைந்தார். கூடவே சோத்துக்கடை சமையல்காரர்கள் மூன்று பேரும் வந்தார்கள்.

 

லூசியாவுக்கு நிம்மதி ஏற்பட்டது. இவர்கள் வந்தால் வேலை முடிந்த மாதிரித்தான். அவசரம் என்றால் அல்வாரிஸும் ஒருகை கொடுப்பார். அவர் கோவாக்காரராக இருந்தாலும் கள், சாராயம் என்று போகாதவர். உழைக்க அஞ்சாதவர்.

 

லூசியா விழுது அரைத்து, சுற்றுக்காரியம் கவனித்துக்கொண்டு விருந்தில் பரிமாறி எல்லாம் வெற்றிகரமாக முடித்து விடலாம். சமையல்காரர்கள் வேலையை பங்கு போட்டுக்கொண்டு கோழி அறுக்கவும், ஆட்டுக் கறியைக் கொத்தவும் தொடங்கும்போது லூசியா அபுசாலியின் கூடையிலிருந்து மீன்களை அள்ளியபடி எதிரே அலமாரியில் எதையோ தேடினாள்.

 

“மரவை எங்கே நாகு?”

 

லூசியா இளைய சமையல்காரரைக் கேட்க அவன் சிவப்பு வண்ணம் பூசிய அகன்ற கும்பா போன்ற மரவையை எடுத்துவந்து கொடுத்தான்.

 

மரவையில் ஊற்றியிருந்த கல் உப்பு கரைத்த தண்ணீரில் கையில் இருந்த மீன்களை முழுக்கக் கழுவினாள்.

 

”ஷராவதி ஆற்று மீன் ரொம்ப வழுக்குதே” என்றபடி தரையில் விழுந்த ஒரு மீனை மறுபடி கழுவ மறுபடியும் அது விழுந்தது. அபுசாலி ராவுத்தர் சிரித்தபடி சொன்னார் –

 

“இதைத்தான் தமிழ்லே சொல்வாங்க, கழுவற மீன்லே நழுவற மீன்னு”.

 

தமிழ் பேசும் பிரதேசத்தை விட்டு வந்து ஐம்பது வருடமாகி ஹொன்னாவரில் கன்னடத்தில், கொங்கணியில் பேசி மும்முரமான மீன் வியாபாரத்தில் இருந்தாலும், தாய் மொழியை அதன் சகல அழகுகளோடும் நினைவில் வைத்த ஒருவர் அவர் என்பதில் லூசியாவுக்கு அவரிடம் மரியாதை உண்டு.

 

ஒவ்வொரு மீனாக எடுத்து வாலைப் பிடித்துக் கொண்டு செதிலை முழுக்கத் தேய்த்து உதிர்த்தாள். தலை, வால், துடுப்புகளை நீக்கி குடலைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டினாள்.

 

“இந்தாங்க, உங்க மீன். கமகமன்னு மிளகுப் பொடி போட்டு மீன்குழம்பு உண்டாக்குங்க” என்று இரண்டாம் சமையல்காரர் வேம்புவிடம் கொடுத்தாள் மீன் துண்டுகள் நிறைந்த பாத்திரத்தை.

 

லூசியா, வேம்பு சொன்னபடி, மீன் குழம்புக்காக மிளகு விழுதையும் உப்பையும் எடுத்து அடுப்புச் சட்டியில் கொதிக்க வைத்தபோது, பூண்டு போடாதது நினைவு வர, அவசர அவசரமாக அலமாரியைத் திறந்து எடுத்து, சன்னமான துண்டுகளாக வெட்டி, இரும்புச் சட்டிக்குள் போட்டாள்.

 

கையில் பிடித்திருந்த கடைசி மீன்   தரையில் விழுந்து துள்ளியது. லூசியா அதை எடுத்தபோது கை நழுவி மார்க்கச்சில் நடுவாக விழுந்தது. ”சீ காவாலிப்பய மீனே” என்று அதைத் திட்டியபடி லூசியா சிரிக்க காலை நேரம் ஏழு மணிக்கு வந்து சேர்ந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2022 20:42

April 22, 2022

இது ஜெயமோகனம் அல்ல

அன்பு நண்பர் ஜெயமோகன் இன்று அறுபது வயது நிறைவு காண்கிறார்.

அவருக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
இது ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது.

கட்டுரையில் ஒரு சிறு பகுதி –

 

ஆக, ஜெயமோகனைப் பார்க்காமலேயே ரொம்ப நாள் போனது. கணையாழி குறுநாவல் தேர்வு தொடர்ந்தது. நான் ராத்திரி வண்டி எழுதித் தேர்வானால், ஜெயமோகன் டார்த்தீனியம்,  நான் படம் குறுநாவல் எழுதினால், ஜெயமோகனின் கிளிக்காலம், நான் விஷ்ணுபுரம் எழுதித் தேர்வானால், நிற்க. தமிழ்நாட்டில் ஒரு சிறு நகரத்தில் நடைபெற்ற நகரசபை தேர்தல் பற்றி ஒரு பத்து வயதுப் பையனின் கண்ணோட்டத்தில் எழுதிய குறுநாவல் விஷ்ணுபுரம். ஜெயமோகனும் ஒரு விஷ்ணுபுரம் அந்தக் காலகட்டத்தில் எழுதியிருந்தார். அவருக்கு ரப்பர் ஜெயமோகனிலிருந்து விஷ்ணுபுரம் ஜெமோவாக அழியாப் புகழ் கொடுத்த ஐகானிக் நாவல். என் விஷ்ணுபுரத்தை அண்மையில் இரண்டாம் பதிப்பு புத்தகமாக வந்தபோது விஷ்ணுபுரம் தேர்தல் ஆக்கி விட்டேன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2022 00:45

April 20, 2022

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

—————————————

அன்புக்குரிய நண்பர் டாக்டர் வ வே சுப்பிரமணியன் அவர்கள் Valiyur Subramanian தொடர்ந்து ஐம்பது புதன்கிழை மாலை (இந்திய நேரம்) 6:30 முதல் இரவு 7:30 வரை ஒரு வாரம் தவறாமல் பாரதி புதையலில் அமிழ்ந்து கண்ணன் பாட்டு மற்றும் புதிய ஆத்திசூடி என்று ஒவ்வொன்றாக பாரதி படைப்பு்களை நுண்ணிய ரசானுபவத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

 

குவியம் இணையப்பத்திரிகை மற்றும் இலக்கிய அமைப்பு ஒருங்கமைத்த இலக்கிய அமர்வுகள் இவை.

 

 

ஓசைப்படாமல் வ.வே.சு செய்த சாதனை இது.

 

’ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

பூ(ச்)சை முற்றவும் நக்குபு புக்கென’ வாரம் நூறு நண்பர்களாவது ஸூம், யுட்யூப் மூலம் பாரதி பாற்கடலைச் சுவைத்து வருகிறோம்.

 

நேற்று (19 ஏப்ரல் 2022 புதன்) புதிய ஆத்திசூடி உரை முற்றுப்பெற்றது.

 

அடுத்து தோத்திரப் பாடல்கள் தொடங்கும். கவிதைகளை அடுத்து பாரதி கதைகள் தொடரும்.

 

நண்பர் வ.வே.சுவுக்கு நன்றி. வாழ்த்துகள்

 

சேர வாரீர் சகத்தீரே!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2022 20:13

April 19, 2022

ஆலப்பாட்டு வயசன் பறந்ததும் இதர சங்கதிகளும் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ?

பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள்.

ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ?

கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து அப்புறம் நிர்மால்யதாரியான பக்க தேவதைக்கும் படைத்தது போக உண்டான மிச்சத்தை யாசித்துக் கொண்டு அங்கே பலிக்கல் பக்கம் பூதங்கள் வந்து நிற்கும். வழியிலே நடக்கும்போது பிரேத உபாதைகள் கன்னியகை என்றால் எங்கே எங்கே என்று ஓடி வந்து ஒண்ட இடம் பார்க்கும். கல்யாணம் திகைந்த பொண்ணு என்றால் இன்னும் இஷ்டம்.

நாணிக்கு முறைச் செக்கன் எட்டுமானூரிலிருந்து வரப் போகிறான். வேளி கழித்து அவளுக்கு இடம் மாற்றம் வருவதற்கு முன் பகவதிக்குட்டி புகையிலைக் கடைக்காரனைக் கல்யாணம் செய்து கொண்டு பாண்டிக்குக் குடிபோய்விடுவாள்.

புகையிலைக் கடைக்காரனோடு படுத்துப் பிள்ளை பெத்துக்கப் போறே. நாளைக்கு அதுகளுக்குத் தலையிலே வெளிச்செண்ணெய் புரட்டிக் குளிப்பாட்டினாலும் எட்டு ஊருக்கு புகையிலை வாடை தான் அடிக்கும் பாரு.

நாணி அம்பலத்துக்கு வரும்வழியில் அவளைக் களியாக்கிக்கொண்டு வந்தாள்.

ஆமா, உன்னோட நம்பூத்ரிக்கு ஹோமப் புகை நெய்வாடையும் சமித்து வாடையுமா மணக்கப் பிள்ளை பெத்துப் போடப்போறே. நான் புகையிலை வாடையோட பெத்தா என்ன குறஞ்சுது சொல்லு.

பகவதி அவளை அடிக்கக் கையை ஓங்க நாணி வரப்புகளுக்கு நடுவிலே குதித்துக் கொண்டு ஓடினாள்.

ஆக, அரசூர்ச் சங்கரய்யன் பகவதியைக் கூடிய சீக்கிரம் கைபிடிக்கப் போகிறான். அது நடக்குமோ இல்லை அவ்வளவுதானோ என்று இழுபறியாகி இப்போது தான் லிகிதம் வந்து சேர்ந்திருக்கிறது. நிச்சயித்த தேதியில் நிச்சயித்தபடிக்குக் கல்யாணம் வைத்துக் கொள்ளப் பூரண சம்மதம் என்று சுப்பிரமணிய அய்யர் கையொப்பிட்டு அனுப்பிய கடிதத்தை நேற்றைக்கு தமையன் துரைசாமி அய்யன் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து உரக்கப் படித்தபிறகு பகவதிக்கு நிலைகொள்ளவில்லை.

வீட்டுக்கு மூத்த பிள்ளை இப்படி பகவதி அங்கே படி ஏறி வரும்போது போய்ச் சேர்ந்திருக்க வேண்டாம். வீடே துர்ச்சொப்பனம் போல பற்றி எரிந்து இல்லாமல் போயிருக்கவும் வேண்டாம். ஆனால் அதற்கு பகவதிக்குட்டி என்ன செய்ய முடியும் ? அவள் பார்க்காத அந்த மூத்தானையும், அரண்மனைக்குப் பக்கத்து மச்சு வீட்டையும் நினைத்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் வடிக்க முடியும். அவளை நிச்சயம் செய்த அப்புறம் நடந்ததாக இருக்கட்டுமே. அவளால் இல்லை அந்த அசம்பாவிதம். பகவதி ஜாதகம் எல்லா விதத்திலும் தோஷமில்லாதது என்று அரசூரில் இருந்து வந்த அய்யங்கார் ஒருத்தர் ஏகப்பட்ட சோழிகளை உருட்டி சிக்கலான கணக்கெல்லாம் போட்டுச் சொன்னதாக தமையன் பிரஸ்தாபித்தது உண்மைதானே ?

அந்த ஜோசியர் துரைசாமி அய்யன் வீடு கூட பிரேதபாதைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாகவும், அதை நிவர்த்திக்க யந்திரம் நிர்மாணித்துத் தருகிறதாகவும் சொன்னார். உடனடியாக முடியாது. கல்யாணத்துக்கு வரும்போது கொண்டு வருகிறேன் என்று கொஞ்சம் முன்பணமும் வாங்கிப் போயிருக்கிறார் அவர். கையோடு செய்து கொடுத்திருந்தால் சிநேகா மன்னியின் தகப்பனார் இப்படிக் கோழி றக்கை மாதிரிப் பறந்து வெடிவழிபாட்டு இடத்தில் விழுந்து இல்லாத கூத்தெல்லாம் பண்ணியிருக்க மாட்டார்.

நாணி அந்த வயசன் பறந்ததைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களில் ஒருத்தி.

பாவமாக்கும் அந்தக் கிளவன். தன்னேர்ச்சயா எவ்விப் பறந்தது மாத்ரம் இல்லே. எங்களோட மனை நம்பூத்ரிகள் மூத்ரம் ஒழிச்சுட்டு வர்ற போது சகலருக்கும் கிடைக்கிற மாதிரி சர்வ தர்சனம் வேறே. இது ஆகாசத்துலேருந்துங்கிறது அதிவிசேஷம். பாரு, நீ சரியாச் சாதம் போடலேன்னா அந்தப் புகையிலைக் காரனும் பறந்துடுவான். இடுப்புலே கயறைக் கட்டி வச்சுக்கோ அவனை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2022 19:25

April 17, 2022

வாவ் தமிழா இணைய இதழில் என் சிறுகதை ‘ஆனைச் சத்தம்’

குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மகன் மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் தொடங்கியுள்ள இணையத்தளம் ‘வாவ் தமிழா’. அங்கே பணிபுரியும் நண்பர் தளவாய் சுந்தரம் கேட்டதால் நான்  எழுதிய சிறுகதை ’ஆனைச் சத்தம்’.https://wowtamizhaa.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2022 20:03

April 15, 2022

சாவக்காட்டானுக்கு வந்த வாழ்வு – (அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் முதல்) பகுதி

அரசூர் வம்சம், விஸ்வருபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே நான்கு நாவல் தொகுதியில் இரண்டாவது விஸ்வரூபம். என் அரசூர் பெருநாவல்களில் எனக்குப் பிடித்த நாவல் வரிசை – விஸ்வரூபம், அரசூர் வம்சம், வாழ்ந்து போதீரே, அச்சுதம் கேசவம்.  அரசூர் வம்சம்  நாவலில் இருந்து –

 

சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது.

ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள்.

ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம்.

சாவக்காட்டானைக் குடியிருக்கும் வீட்டுக்குக் குடக்கூலி கொடுக்காத காரணத்தால் வீட்டுக்காரன் சவட்டிப் புறத்தாக்கிய பிற்பாடு இதெல்லாம் கூடி நடந்தேறியிருக்கிறது. புறத்தாக்கிய வீட்டுக்காரனும் வேதத்தில் ஏறிய இன்னொரு சாவக்காட்டுப் பிராமணன் தான்.

தோமையனோடு கூடப் போன வம்ச வழி வந்தவர்கள் அவனைப் புல்லே என்றுதான் பார்த்திருந்தார்கள். அம்பலப்புழை தேகண்டப் பிராமணர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவியலுக்கும், புளிங்கறிக்கும் காய் நறுக்கிக் கொடுத்துக் கூடமாட ஒத்தாசை செய்கிறேன், ஒரு கும்பா சாதம் போடு என்று நாயாகப் போய் நின்றாலும் எட்டி உதைத்து அனுப்பினார்கள்.

ஆனாலும் தெய்வம் என்று ஒன்று இருக்கிறதே. தோமையனோடு போனால் என்ன, வைக்கத்தப்பன் கோவில் சுற்றம்பலத்தில் தீவட்டி பிடித்துக்கொண்டு தொழுதபடி புறப்பாட்டுக்கு முன்னால் நடந்து போனால் என்ன ?

குடியிருந்த ஓட்டை மனையிடத்தை விட்டு விரட்டியானதும், சாவக்காட்டுக் கிழவன் குப்பைமேட்டுக்குப் போய் ஒண்டிக் கொண்டான். அது வெறும் மண்மேடு இல்லைதான். அவன் பூர்வீகர்கள் எந்தக் கொல்ல வருஷத்திலோ ஏற்படுத்தி, மழையும் வெயிலும் ஊறி ஊறி மனுஷ வாசம் கொள்ளத் தகுதி இழந்து அங்கே வெகு நாள் ஒரு பழைய வீடு நின்றுகொண்டிருந்தது. அது முழுக்க விழுந்து போய்க் குப்பைமேடாயிருந்த இடமாக்கும் அவன் போனது .

இடிந்து விழுந்ததை எல்லாம் எடுத்துக் கழித்து விட்டு, நாலு தூணும், மேலே தென்னோலையுமாக நிறுத்த அவன் தச்சனிடம் வேண்டிக் கொள்ள, தச்சனும் பரிதாபப்பட்டு வேலையை ஆரம்பித்தான். கிழவனுடைய அரைஞாணில் அரைக்கால் வராகன் பெறுமானமுள்ள தங்கம் இருப்பதாகவும் இருக்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் அதை நல்ல வண்ணம் சுத்தி செய்து கூலிப்பணத்துக்கு மாற்றாக ஒப்படைப்பதாகவும் தச்சனிடம் சாவக்காட்டான் சொன்னதும் இதற்கு ஒரு காரணம். தச்சன் நம்பித்தான் ஆகவேண்டி இருந்தது. தங்கம் இருக்கிறதா என்று உடுப்பை உருவியா பார்க்க முடியும் ?

தச்சன் முளை அடித்துக்கொண்டிருக்க, கிழவன் மண்வெட்டி கொண்டு ஒரு மூலையில் பீர்க்கை பயிரிடக் குழிக்கிறேன் என்று உட்கார்ந்திருக்கிறான்.

பிராந்தோ என்று உரக்கச் சந்தேகப்பட்டபடி தச்சன் உளியைத் தன்பாட்டில் இழைக்க, கிழவன் தோண்டிய இடத்தில் டண்டண் என்று சத்தம். என்ன விஷயம் என்று எழுந்துபோய்ப் பார்க்க, நாலு நாழி அரிசி வடிக்கிற அளவிலே உலோகப் பானை ஒண்ணு கிட்டியதாம்.

கிளவனைப் பேப்பட்டி போல புறத்தாக்கினதாச் சொன்னேளே, இப்பப் பாருங்கோ, ரத்னமும் தங்கமுமா அவன் எங்கே உசரத்துலே கேரியாச்சு. நமக்கு இந்த பாசகம், தேகண்டம். ஜன்மத்துக்கும் இதுகூடியல்லாதே வேறே உண்டோ ?

சிநேகாம்பாள் கிட்டாவய்யனிடம் இரைந்து கொண்டிருந்தது ஊர்க் கோடி, யட்சிக்காவு, குளங்கரை, நெல்பாட்டம் எல்லாம் தாண்டி அடுத்த கிராமம் வரை கேட்டிருக்கும்.

கிட்டாவய்யனுக்கும் அந்த வகையில் வருத்தம்தான். பிரஸ்தாப தினத்தில் என்னமோ ரெளத்ரம் தலைக்கேறிப் போய்விட்டது அவனுக்கு. அந்தப் பைராகிகள் வேறே காரே பூரே என்று இந்துஸ்தானியில் அவனையும் அவன் தகப்பனனயும் பிறத்தியாரையும் கிழங்கு கிழங்காக வசவு உதிர்ந்துவிழத் திட்டிவிட்டுப் போனது போல் இருந்தது. உச்சி வெய்யில் நேரத்தில் உயிர்த்தலத்தில் கொட்டிய குளவி வேறே இனிமேல் வம்சவிருத்தி பண்ண முடியுமா என்று அவ்வப்போது மனதில் பிருபிருக்க வைத்தது. ஆனாலும், சிநேகாம்பாள் இந்த மாதம் தூரம் குளிக்காமல் போனதாகச் சொன்னபோது அந்த விஷயத்தில் சேதாரமாக ஒண்ணுமில்லை என்றும் பட்டது.

எல்லாம் கிடக்கட்டும். கிழவனை மனையிலேற்றினது போல இந்தச் சாவக்காட்டு வேதக்காரன் இப்படி உச்சாணிக் கொப்புக்குப் போவான் என்று கிட்டாவய்யன் சொப்பனத்திலும் நினைக்கவே இல்லை.

இது ராஜாக்கன்மார்க்குப் போகவேண்டிய தனம். மூவாட்டுப்புழையில் இருக்கப்பட்ட ராஜப்பிரதானியிடம் இதைச் சேர்ப்பிக்கிறதே நியாயம் என்று விருத்தனுக்குத் தனம் கிடைத்தது தெரிந்து வயிறெரிந்தவர்கள் சொன்னார்கள். அப்போது தெய்வம் மாதிரிப் பாதிரி வந்து உத்தரவாக்கிப் போட்டது இது.

தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்கு ஆச்சரியம் உண்டாகட்டும் என்று தோமையர் புனித வார்த்தை உச்சரித்துப் போனதை அனுசரித்து இந்த மனுஷ்யனுக்குக் கிட்டிய திரவியமெல்லாம் இவனுக்கானதே. ராயனுக்கும் சுங்கத்துக்கும் ஒரு சக்கரமும் இவன் கொடுக்க வேண்டியதில்லை.

எல்லாரும் மாரில் குரிசு வரைந்து கொண்டு அதுவுஞ்சரிதான் என்று புறப்பட்டானபோது, தோமையனை வரி விடாமல் படித்து நித்திய பாராயணம் செய்யும் ஒரு மத்திய வயசுக் கிறிஸ்தியானி விடாமல் சந்தேகம் கேட்டான்.

பிரபு, தெய்வ துல்யமான தோமையர் சொன்னது இந்தப்படிக்கு இல்லையோ ? தேடுகிறவன் கிடைக்கிற வரை தேடிக்கொண்டிருக்கட்டும். கிடைத்தபோது அவனுக்குச் சகிக்கவொண்ணாத மனக் கிலேசம் வரும். அப்புறம் ரோமாஞ்சனத்தோடு பிடரி மயிர் கோரித் தரிக்கும்படிக்கு வெகுவாக ஓர் ஆச்சரியமுண்டாகும். இதை நீங்கள் பள்ளியில் அன்றைக்குப் பிரசங்கிக்கவில்லையோ ? உங்களுக்கு விரலில் நகச்சுற்று ஏற்பட்டு எலுமிச்சம்பழம் அரிந்து பொருத்திப் பிடித்தபடி உபதேசித்த மழைநாள் என்பதாக அடியேனுக்கு ஓர்மை. இந்தப் பாவப்பட்ட மனுஷ்யன் அன்வேஷிச்சுக் கண்டெத்திய விதத்தில் அவனுக்கு வேதம் விதித்த அப்பேர்க்கொத்த துக்கம் ஏதும் மனசிலே உண்டானதோ ?

பாதிரி அவன் நெற்றியில் குரிசு வரைந்தார். சமாதானமுண்டாகப் பிரார்த்தித்து விட்டு, ஒரு வாக்கு அரை வாக்கு குறைந்தாலும் தேவ வாக்கு, தேவ வாக்கில்லையோ என்று பிரியமாகக் கேட்டார். அவன் குனிந்து வணங்கி விட்டு அந்தாண்டை போனான்.

கொடுங்கல்லூரில் மாதா கோவில் கல்பாளங்களை இடிச்சுப் பொளிச்சுப் புதிதாக ஏற்படுத்தி வைக்க முழுச் செலவையும் புதுப்பணக்காரனான சாவக்காட்டு வேதக்காரப் பிராமணன் ஏற்பதாக வாக்குத்தத்தம் செய்ததைக் குடையும், பட்டுத்துணியுமாகக் குதிரையில் ஏறும்போது அந்தப் பாதிரி சொல்லிப் போனார்.

சாவக்காட்டானுக்குப் பழம்பானையிலிருந்து சில பழைய அபூர்வ ஓலைச் சுவடிகளும், கூடவே ஒரு குப்பியில் ஏதோ திரவமும் கூடக் கிடைத்ததாகப் பிரஸ்தாபம்.

சுவடிகள் தமிழ்ச் செய்யுளாக இருந்தபடியால் அவற்றைப் பாண்டிப் பிரதேசப் பண்டிதர் ஒருத்தரிடம் கொடுத்து அதற்கு ஏதாவது விலை படிந்து வந்தால் விற்றுத் தரும்படி சொன்னான் அவன்.

மேற்படி பண்டிதரும் அதையெல்லாம் தீரப் பரிசோதித்து, எழுத்து அத்தரைக்கொண்ணும் அர்த்தமாகவில்லை என்றும் அது சேரமான் பெருமாள் கைலாசம் போக விமானம் கட்டியது பற்றிய விளக்கமாகவோ அல்லாத பட்சத்தில், வஞ்சி என்ற பேரூரின் கழிவு நீர்ச் சாக்கடை அமைப்பு பற்றியதாகவோ இருக்கும் என்றும் தெரிவித்தார். நூதனமாக இப்படியான சுவடிகளை அச்சுப் போடுகிறவர்கள் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பட்டணத்திலும் தொழில் ஆரம்பித்து இருப்பதாகவும், அவர்களிடம் இதைக் காகிதப் புத்தகமாக உண்டாக்கி வாங்கினால் அதை துரைத்தனப் பணம் ஒரு ரூபாய் வீதம் ஆயுர்வேத வைத்தியர்களிடமும், பாண்டி வைத்தியர்களிடமும் விற்கலாம் என்றார் அவர்.

வைத்தியர்கள் இப்படிப் படிக்காத, அவர்களுக்குக் கிஞ்சித்தும் தேவைப்படாத கிரந்தங்களைச் சேகரித்து வைப்பது அவற்றின் நெடி ரோகிகளின் மேல் படப்பட நோய் குறையும் சாத்தியப்பாட்டை உத்தேசித்துத்தான் என்று பாண்டிப் பண்டிதர் சொன்னபோது இது விஷயமாக சாவகாசமாக யோசிக்கலாம் என்று கல்பித்து சாவக்காட்டான் அவரை அனுப்பி விட்டான்.

புதையலாகக் கிடைத்த பணத்தில் ஊர் மூப்பர்கள் சொன்னபடிக்குச் செலவு பண்ணி ஆசாரிமாரையும், மூசாரிகளையும் கொண்டு கொஞ்சம்போல் வசதியான ஒரு ரெண்டுகட்டு வீடு ஏற்படுத்திக் கொண்டான் அவன். மீதிப் பணத்தில் கணிசமான பகுதியை லேவாதேவி நடத்தப் பாண்டி நாட்டிலிருந்து வந்த பெரியகருப்பன் செட்டியிடமும், சுயஜாதிக்காரனும், பெரிய தோதில் கொப்பரை கச்சவடம் செய்கிறவனுமான மலியக்கல் தோமையிடமும் பிரித்துக் கொடுத்து வட்டி வாங்கிவர ஆரம்பித்தான்.

ஆனாலும் பெரிய குப்பியில் இருந்த திரவம் வேறே மாதிரி. அதை எடுத்தபோது குப்பியின் வெளியே வழிந்ததை சாவக்காடன் தன் தலையில் துடைத்துக் கொள்ள திரவம் பட்ட இடம் கருப்பு முடியானதோடு பளிச்சென்று பிரகாசமாக ஒளிரவும் ஆரம்பித்தது. ஆனால் பக்கத்தில் நின்றவன் தலைமுடி கொழிந்து உடனே கொத்துக் கொத்தாகத் தரையில் விழுந்தது.

சாவக்காட்டான் மருந்தை ஒரு சொட்டு இரண்டு சொட்டு குடிக்கலாமா என்று யோசித்தான். அப்புறம் அது வேண்டாம் என்று வைத்து விட்டான். இவன் குடித்துப் பக்கத்தில் இருப்பவன் யாராவது உசிரை விட்டால் ஏகக் களேபரமாகி விடும். அதன் பிற்பாடு யாரோ சொன்னதால் மேலமங்கலம் நம்பூதிரிகளை அழைத்து அஷ்டமாங்கல்யப் பிரச்னம் வைத்துப் பார்த்தான்.

அந்தப் பிரசன்னதன்றைக்கு கிட்டாவய்யன் தான் தேகண்டத்துக்குப் போனது. பட்டு வஸ்திரமும், நடையில் மிடுக்குமாக சாவக்காட்டு வேதக்காரன் இஞ்சிம்புளி கிண்டிக் கொண்டிருந்த கிட்டாவய்யனிடம் வந்து நின்று எப்படி ஓய் நடக்கிறது எல்லாம் ? வர்ஜா வர்ஜமில்லாமல் ஊரில் இருக்கப்பட்ட தனவான்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். உம் சாப்பாடு திருப்தியாக இல்லாத பட்சத்தில் இந்தப் பிரதேசத்திலேயே உமக்கு உத்தியோகம் கிட்டாது போயிடும் என்றான்.

அவனுடைய முகத்தில் ஒரு குரூர சந்தோஷத்தைப் பார்த்தான் கிட்டாவய்யன் அப்போது.

அஷ்டமாங்கல்யப் பிரச்னத்தின் முடிவில் சோமாத்ரி அடுதிரிப்பாடு அஸ்ஸலாயி என்று திருப்தியோடு சொன்னது இப்படி இருந்தது.

சாவக்காட்டு வேதக்காரன் இத்தர நாள் கஷ்டிச்ச ஜீவிதம் அனுபவிச்சது சொவ்வாயும் குசனும் அவன் ஜென்ம ஜாதகத்தில் இருந்த ஸ்தானம் கொண்டு. அது கழிந்து போனகாலம். இனிமேல் கொண்டு அவனுக்குப் பூர்வீகர் அனுக்ரஹம் பரிபூர்ணமாக உண்டு. அந்தக் குப்பி அமிர்தம் கொண்டதாகும். தண்ணி மத்தங்காயில் நடுவிலே அதைப் பிரதிஷ்டை செய்து கிழக்கே பார்த்து வைத்து ஒரு மண்டலம் இஷ்ட தெய்வத்தைப் பூஜிக்க வேணும். அது தோமையனோ, கிறிஸ்து பகவானோ ஆனாலும் சரி. அப்புறம் அந்தக் குப்பியை வெளியே எடுத்துப் பானம் பண்ணினால் அவனுக்கு யெளவனம் திரும்பும்.

இதை வேறே யாருக்காவது கொடுக்கலாமா ?

அவன் கேட்டபோது அடுதிரிப்பாடு அதுக்குப் பாடில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியே குடித்தாலும், அவர்களுக்கு தேக ஆரோக்கியம் கெடாது என்றும் உயிருக்கு ஆபத்து இல்லையென்றும் சொன்னவர் பிரச்னம் வைத்த இடத்தில் பூவை எடுத்து நகர்த்தியபடிக்குத் தொடர்ந்தார்-

அப்படிக் குடித்த மனுஷ்யர்கள் தப்பும் தவறுமாகத் துரைத்தன பாஷை பேச ஆரம்பித்து விடுவார்கள். உமக்கு இப்போது நல்லதெல்லாம் கூடிவரும் காலம். இப்படி ராஜ நிந்தனையாக நாலைந்து பேரைப் படைத்து அனுப்பி உம் பேரைக் கெடுத்துக் கொள்ளலாமா சொல்லும்.

சாவக்காட்டு வேதக்காரன் அப்புறம் அப்படியே ஒரு மண்டலம் மந்திர உருவேற்றம் செய்து அந்தக் குப்பியிலே இருந்து ஒரு பலா இலை மடக்கில் கொஞ்சம் எடுத்து மாந்திவிட்டு இரண்டு நாள் தொடர்ந்து கண்ணாடிக்கு முன்னால் சாட்டியமாக நிற்க ஒரு சுக்கும் இல்லை.

ஆனால் அவன் தூக்கி எறிந்த அந்தப் பலா இலையை மேய்ந்த தெருவிலே போன மாடு ஒன்று அரைகுறையாகத் துரைத்தனப் பாஷையில் இரைய ஆரம்பித்தது. மாட்டுக்காரன் சாவக்காட்டு வேதக்காரன் வீட்டில் ஏறி அவனிடம் பிராது கொடுத்தான்.

இப்படி என் பசுமாட்டை ராஜ தூஷணம் செய்ய வைத்து விட்டார்களே. இது கறக்கிற பாலும் இனி விலை போக மாட்டாதே. ஊரில் ஒருத்தனாவது அதைக் கையால் தொடவும் துணிவானா ? மாட்டைப் பழையபடி ஆக்கிப் போடும். இல்லாத பட்சத்தில் நீரே அதை எடுத்துக்கொண்டு அதுக்குண்டான பணத்தை அடையும்.

சாவக்காட்டான் மறுபேச்சு பேசாமல் மாட்டை அவன் சொன்ன விலை கொடுத்து வாங்கிக் கொட்டிலில் கட்ட அது ராத்திரி முழுக்க ஏதோ அன்னிய பாஷையில் பிரலாபித்துக் கொண்டிருந்தது. அது கறந்த பாலை வீணாக்க மனம் இல்லாமல் தினசரி சுண்டக் காய்ச்சி வெல்லப்பாகு சேர்த்து அம்பலத்தில் பாதியும், கொடுங்கல்லூர் பள்ளியில் மீதியுமாக விநியோகிக்கக் கொடுத்தான். அப்புறம் பாதிரி வந்து இந்த மாதிரிப் பிராணிகளை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது என்று சொல்லிப் போனார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2022 19:37

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.