இரா. முருகன்'s Blog, page 53

April 13, 2022

இரண்டாம் உலக மகாயுத்தம் – ஜப்பான் குண்டுமழை பீதியில் மதறாஸ் 1944

ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ்

 

கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும்.   தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

 

பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட  பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி வைத்துப் பரபரப்பாக வியாபாரம் நடக்கும் சின்னச் சின்னக் கடைகளையும் அடைத்துப் பூட்டியானது.

 

தெருக்கோடியில் உட்கார்ந்து ரப்பர் வளையல் போட்ட கையால் முழம் போட்டு மல்லிகைப்பூ விற்கும் பூக்காரியும்   நேற்றிலிருந்து காணாமல் போனாள்.

 

இன்று தமிழ் வருஷப் பிறப்பு. பண்டிகைக்கு அடையாளமாக ஒரே ஒரு வீட்டில் முகப்பில்  மாக்கோலம் கண்ணில் படுகிறது. நாலு இழை திடமாக இழுத்து

ரத்னா பாய் தான் வீட்டு வாசலில்  கோலம் போட்டிருக்கிறாள். கோலத்தைச் சுற்றி செம்மண்ணைப் பட்டையாகத் தீற்றவும் மறக்கவில்லை அவள்.

 

தினசரி பேப்பர்  திண்ணைக்கும் ரேழிக்கும் குறுக்கே கதவோரமாகக் கிடக்கிறது.. நாளை பேப்பர் வருமோ என்று தெரியவில்லை. வந்தாலும் யுத்தச் செய்தி தவிரப் புதுசாகப் படிக்க அதில் ஏதுமிருக்காது. யுத்தத்துக்கு அடுத்த முக்கியமான விஷயமான ரேஷன் பற்றியும் புதுசாக ஏதும் வராது.

 

உப்பு, புளி தவிர சகலமானதுக்கும் ரேஷன் ஏற்கனவே அமுலில் இருப்பதால் ரேஷனில் புதுசாகச் சேர்க்க ஒரு உருப்படியும் கிடையாது. அடுப்பெரிக்க விறகுக்கு ரேஷன் வரப் போகிறதாக ரொம்ப நாளாக வதந்தி.

 

சர்க்கார் விறகுக்கடை, அடுப்புக்கரிக்கடை, கும்முட்டி அடுப்பு விற்கிற கடை என்று நடத்தினால் எப்படி இருக்கும் தெரியவில்லை.

 

ரேடியோ, நாள் முழுக்க ’மெட்றாஸை காலி செய்து விட்டு வெளியேறிப் போங்கள்’ என்று சகலரையும் வேண்டிக் கொண்டிருக்கிற செய்திதான் பத்திரிகையிலும் அச்சடித்து வந்திருக்கும். ரேடியோவில், அறிவித்த பிறகு நிலைய வித்வான் சோகம்  கவிய கோட்டு வாத்தியம் வாசிப்பார்.

 

பேப்பரில் அந்தத் தொடர் மிரட்டல் இல்லை. என்னத்தைச் சொல்ல? யுத்தம் லண்டன், பெர்லின், மாஸ்கோ. பாரீஸ், டோக்யோ என்று சுற்றி விட்டு இப்போது சென்னைப் பட்டணத்தைக் குசலம் விசாரிக்க நெருங்கி வந்தே விட்டது.

 

எல்லாம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான போன வாரம் ஐந்தாம் தேதி, கொழும்பு துறைமுகத்தை ஜப்பான் விமானப்படையின் எழுபது சொச்சம் விமானங்கள் பப்படமாக நொறுக்கி கிட்டத்தட்ட ஐம்பது பேரைக் காவு கொண்டதில் தொடங்கியது. பிரிட்டீஷ் சமுத்திர சேனையின் ஒரு விமானம் தாங்கிக் கப்பலும், இரண்டு யுத்தக் கப்பல்களும் ஜப்பான் தாக்குதலில் சிதறியதாகத் தெரிய வந்தது.

 

இப்படி ஆள் சேதம், பொருள் சேதம் என்று கணிசமாக ஏற்பட்டாலும், வருத்தப்பட  ஒண்ணுமில்லே என்று இங்க்லீஷ்கார இலங்கை கவர்னர்,  நம்பிக்கை கொடுத்துப் பேசியதாகச் செய்தி. அதுவும் தமிழில் பேசினாராம். கொழும்பில் இறந்த பலரும் தமிழர்கள் என்றும் தெரிய வந்தது.

 

கவர்னர் தமிழில் பேசியதற்காக நாலு பேர் சந்தோஷப்படலாம். என்றாலும் ’ஐம்பது பேர் பரலோகம் போனதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லண்டனில் தினம் தினம் போக்குவரத்து விபத்துகளில் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அது’ என்று அவர் பிரிட்டீஷ் சர்க்காரின் அசமஞ்சத்தனத்துக்குச் சப்பைக்கட்டு கட்டிப் பேசியது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாச்சு.

 

சகுந்தலா, மீராபாய் என்று ஏதாவது புனைபெயர் வைத்துக்கொண்டு இந்த ஏகடிய அதிகப்பிரசங்கம் பற்றி ’தி ஹிந்து’ பத்திரிகைக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலென்ன என்று யோசித்தேன்.

 

பத்திரிகை படிப்பதில் ஏற்படும் களைப்புக்கு கொஞ்சமும் குறையாத ஒன்று, அதற்குக் கடிதாசு எழுதணும் என்றதுமே வந்து சேர்கிற அலுப்பு.

 

இப்படி   ஒருத்தர் மனுஷத்தன்மை இல்லாமல் பேசிவிட்டுப் போனது பற்றிய கடிதாசு வன்மையாகக் கண்டிக்கும் அல்லது ஓவென்று கட்டிப் பிடித்து அழும் தொனியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறதே.

 

என் இங்க்லீஷ் அதெல்லாம் செய்யாது.  வேண்டுமானல் தொப்பியைக் கழற்றும். யாருக்கு எதுக்கு ஹாட்ஸ் ஆஃப்?

 

ஏப்ரல் ஆறாந்தேதி காக்கினாடாவிலும், விசாகப்பட்டணத்திலும் ஜப்பான் விமானத் தாக்குதல் எனறு தகவல் வந்தபோது மெட்றாஸுக்கு தொடை நடுங்க ஆரம்பித்தது.

 

ஏப்ரல் ஏழாம் தேதி ஏதோ பொத்தானை எங்கேயோ யாரோ தவறாக அழுத்தி, சென்னைக்கு மேல் ஜப்பானிய விமானப்படை தாக்குதல் நடத்தப் போவதாக விடிகாலை நாலே முக்கால் மணிக்கு சைரன் அலற,   பட்டணம் உச்ச பட்ச பிராண பயத்தில்  கதவடைத்து   வீட்டுக்குள் மத்தியானம் வரை அடைந்து கிடந்தது.

 

அப்புறம் பகல் சாப்பாட்டுக்காக அசைய நகர நிற்க உட்கார வேண்டிப் போனது. உயிர்ப் பயம் என்பதால் வாய்க்கு ருசியாகச் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன?

 

ஐந்து லட்சம் பேர். மெட்றாஸின் பாதி ஜனத்தொகை. இந்த ஜனக்கூட்டம் உயிருக்குப் பயந்து பட்டணத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

 

ரயிலில், பஸ்ஸில், மாட்டு வண்டியில் காணும் பொங்கலுக்கு உசிர்க் காலேஜ், செத்த காலேஜ், கடற்கரை பார்க்கப் போகிற மாதிரி குடும்பம் குடும்பமாகப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எவாகுவேஷன் என்ற வார்த்தை எல்லார் நாக்கிலும் சரளமாகப் புரள ஆரம்பித்து விட்டது.

 

எழும்பூர் ரயில்வே ஜங்க்‌ஷனும் சென்ட்ரல் ஸ்டேஷனும் நித்திய கல்யாண உற்சவம் மாதிரி நாள் முழுக்க, ராத்திரி முழுக்க ஜனநெரிசலில் திணறுகின்றன, ஜனங்களை ஏற்றிக்கொண்டு மெட்றாஸ் விட்டு ஓடும் ரயில்கள் இலவச சேவையாகத்தான் பிரயாணப்படுகின்றன. யாரும் எங்கே போகவும் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. டிக்கட் வாங்கணும் என்று வைத்தாலும், யார் டிக்கட் கொடுக்க, யார் வாங்கின விஷயம் சோதிக்க?

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2022 20:36

April 12, 2022

பித்தளைக் குடம் தொலைந்து போன 1964 தமிழ்ப்பட அரங்கம்

குடம்

 

ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.

 

எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்தநாள் என்றால் இனிமேல் தில்லியிலிருந்து யார் அறிக்கை விடப் போகிறார்கள்? கொடி ஏற்றுகிறது போல், சமாதானப் புறா பறக்க விடுகிற மாதிரியெல்லாம் பத்திரிகை முதல் பக்கத்தில் போட வேறு யாருடைய படம் தோதாக இருக்கும்? அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அவர் போயிருக்கலாம். குறைந்த பட்சம் சக்ரபாணி ஓட்டலை அடைக்காமல் அங்கே வழக்கம்போல் இட்லியும் காப்பியும் கிடைக்கவாவது வழி செய்திருந்தால், குளித்து, நாஷ்டா பண்ணிவிட்டு வேலைக்குக் கிளம்பி இருக்கலாம். வேலை  இன்று நடக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பசியாறாமல் முடியுமா?

 

போனவாரம் பார்த்தபோது சொன்னேனே, நாங்கள் ஒரு சினிமாப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்ப் படம். தேவகோட்டை அனாருனா தான் பைனான்சியர். கண்டமங்கலம் பையன் ஒருத்தன் கெச்சலாக நம்ம ராமநாதன் சார் கூடத் திரிந்து கொண்டிருப்பான் இல்லே, அவன் தான் டைரக்டர். ராமநாதன் சார் டைரக்ட் செய்து போன மாதம் வந்த படத்தில் உதவியாளர்கள் பெயர் அடங்கிய டைட்டில் கார்டில் கீழாக துணை வசனம் என்று போட்டு அவன் பெயரும் வந்திருந்தது, பார்த்திருப்பீர்கள். அந்தப் படம் சரியாக ஓடவில்லைதான். டவுணுக்கு வெளியே எங்கேயாவது  கீற்றுக் கொட்டகையிலாவது அது தட்டுப்படாமல் போகாது. கிடைத்தால் அவசியம் பாருங்கள். இன்றைக்கு வேண்டாம். கொட்டகை எல்லாம் அடைத்திருக்கும்.

 

ராமநாதன் சாரும் கண்டமங்கலம் பையனும் ஜவஹர்லால் நேருவும் கிடக்கட்டும். ஆனந்தராவ் என்னத்துக்கு வந்திருக்கிறான்? சட்டையில் கருப்புத் துணி குத்திவிடவா? அதற்கும் வழி இல்லாமல் சட்டையைத் துவைத்துப் போட்டிருக்கிறேன். ஆனந்தராவ் போல அசிஸ்டெண்ட் டைரக்டராக நான் இருந்தால் ரெண்டு சட்டையாவது கைவசம் இருக்கும். ஆர்ட் டைரக்டருக்கு எடுபிடி. கொஞ்சம் மேலே வந்து என் பெயரும் டைட்டில் கார்டில் போடுவதற்குள் நேருவுக்குப் பத்து இருபது திதி திவசம் நடந்திருக்கும். அதுவரை இந்தச் சட்டை கிழியாமல் இருக்குமா?

 

வாய்யா ஜேம்சு. ஷூட்டிங் லேது. நேரு மர்கயா. சரியா?

 

நான் புஷ் டிரான்சிஸ்டரை மேன்ஷன் வாசல்படியில் வைத்துவிட்டு ஆனந்தராவை விசாரித்தேன். என்னுடையதில்லை. கூடத் தங்கியிருக்கிற  காமரா அசிஸ்டெண்டுடையது. எனக்கான டைட்டில் கார்ட் போட்டதும் நானும் வாங்குவேன். வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு டிரான்சிஸ்டரில் மங்கல இசை, ஒலிச் சித்திரம், ஆகாசவாணி செய்திகள், சோக கீதம் என்று கேட்க சுகமாக இருக்கும்.

 

ராவ் சைக்கிளை ஸ்டாண்ட் போடாமல் சுவரில் அதை சார்த்தி வைத்துவிட்டு அரக்கப் பரக்கப் படி ஏறினான். அவன் காலடியில் டிரான்சிஸ்டரில் ஒற்றை வயலின் புலம்பியது. கிட்டத்தட்ட இதே டியூனில் தான் ஒரு பேத்தாஸ் பாட்டு போன மாதம் படத்துக்காக ரிக்கார்ட் செய்தோம். ரேப் சீனுக்கு அடுத்த காட்சி. நேரு உயிரோடு இருந்த நேரம்.

 

பல்லு வெளக்கிட்டியா? சட்டையைப் போட்டுக்கிட்டு வா.

 

ஆனந்தராவ் சொன்னான். நான் பல்லு வெளக்கியிருந்தால் உடனே சட்டையை மாட்டி விட்டுச் சாப்பாடு போடக் கையோடு கூட்டி வரும்படி யாரோ சொல்லி அனுப்பியதுபோல் இருந்தது. துக்கம் இல்லாமல் மங்கல இசை கேட்கிற யாரோ.

 

எங்கே போகணும் சொல்லு. காலையிலே இருந்து காப்பி கூட இல்லாம உக்காந்திருக்கேன். நேரு இப்படி திடீர்னு அவுட்டாகி.

 

அதுக்கு  சாவகாசமா உக்காந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதுடலாம் மவனே..

 

ரூம் உள்ளே அவன் வந்தபோது ராத்திரி படுத்துக் கிடந்த பாயைக் கூடச் சுருட்டி வைக்காதது ஞாபகத்துக்கு வந்தது. ஆனந்தராவ் பாயில் காலைப் பரப்பி உட்கார்ந்தான். பாய் ஓரமாகப் பிரிந்து இருந்த கோரையைப் பிய்த்தான்.

 

முந்தாநாள் பாட்டு ஷூட் பண்ணிணோம் இல்லே.

 

அவன் கோரைத் துரும்பால் காது குடைந்தபடி சாவகாசமாக ஆரம்பித்தான். போன வருடம் கல்யாணம் முடிந்து ஸ்டோர் வீட்டில் குடித்தனம் நடத்துகிற சம்சாரி. தாம்பத்தியத்தில் வேறே ஏது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காலையில் ஒரு டம்ளர் நீர்க்கவாவது காப்பி கிடைக்கும். குடித்துவிட்டுக் காது குடைந்து கொண்டு உட்காரலாம். நேரு சாவுச் செய்தி திடீரென்று வந்து எல்லாம் இதை மாற்றாது.

 

நான் சும்மா வாய் பார்த்துக் கொண்டு நிற்க ஆனந்தராவ் தொடர்ந்தான்.

 

முடிச்சு பேக் அப் பண்ணி செட் ப்ராப்பர்டி எல்லாம் திருப்பிக் கொடுத்தாச்சோ?

 

பின்னே? உதவி-ன்னு டைட்டில் கார்ட் போடாவிட்டாலும் என் பொறுப்பில் இருக்கப்பட்ட காரியம் இல்லையா அது எல்லாம்? கிணத்தங்கரையிலே ஹீரோயின் தண்ணீர் இரைத்தபடி செகண்ட் ஹீரோயினோடு பாடுகிற காட்சி. கிணற்றுப் பக்கம் துளசி மாடம், அவசரமாகக் கட்டி வைத்த செங்கல், மேலே கவிழ்த்து நிறுத்தின ப-வடிவ மரச் சட்டம், நடுவில் ராட்டினம், தாம்புக் கயிறு, தகர வாளி இப்படி ஒரு ஜாமானையும். வேண்டாம். அது கெட்ட வார்த்தையாகிக் கொண்டிருக்கிறது இப்போது பட்டணத்தில். ஒரு பொருள் விடாமல். இது நல்ல வார்த்தை. ஒரு பொருள் விடாமல் ஜாப்தா படி எடுத்துப் போய் வாடகைக்கு எடுத்த கடைகளில் கொடுக்க வேண்டும். ஹீரோயினின் பஞ்சு அடைத்த உள்பாடி முதற்கொண்டு என் பொறுப்பில் தான் விடப்படுகிறது. அதுக்கு ஒரு வாடை உண்டு.

 

கிணற்றுப் பாட்டுக்காக தகரவாளியில் ஸ்டூடியோ கழிப்பறையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பியது நான் தான்.  எடுத்து முடிந்து ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துப் போய் சொக்கலிங்க ஆசாரியாரின் சகலபாடியின் கடையில் கொடுத்துவிட்டு வர ப்ரொடக்ஷன் யூனிட் காரில் போனேன். அப்போதும் நேரு மூச்சு விட்டுக்கொண்டு இருந்தார். அன்றைக்கு டேராடூனில் இருந்தார் அவர். மகள் இந்திராவோடு பூந்தோட்டத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்ததாக சகலபாடி  கடையில் அப்போது ஆகாசவாணி செய்தி அறிக்கை படித்தது துல்லியமாக நினைவில் இருக்கிறது.

 

கிணத்துக் கைப்பிடிச் சுவர் மேலே ஒரு பித்தளைக் குடம் இருந்துதே. இன்னொரு குடம் வச்சா இடுப்பு உடையாதான்னு கதாநாயகி பாடும். அப்ப இந்த செகண்ட் ஹீரோயின் பொண்ணு குடத்தைத் தூக்கி இடுப்புலே வச்சுக்கும்.  அதை அப்படியே அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுச் சைட் ப்ரொபைல்லே  ரெண்டு மாரும் அலுக்கிக் குலுக்கிக்கிட்டு ஒய்யாரமா நடக்கும். காமிராவிலே மூணு குடம் தெரியும். சரியா?

 

ஆனந்தராவ் மாரைத் தள்ளிக் கொண்டு அசைந்தபடி பாடிக் காட்டினான். துணைக்கு ரேடியோவில் துக்கமான சங்கீதம். அது என்னமோ சாவு  என்றால்  யாரையாவது பிடித்து வந்து ஆகாசவாணியில் அழ வைத்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து சப்பாத்தி கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வேலைக்கு வந்திருப்பார்கள் போல.

 

அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.

 

ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று  புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.

 

அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால்  வாடகைக்கு கொடுத்த குடத்தைத் தலை முழுகிவிடலாமா? வேண்டாம்தான். அதுக்காகப் பொழுது ஒரு பக்கம் விடிந்ததுமே ஆனந்தராவ் வந்து இறங்கி தேடச் சொல்லி அவசரப் படுத்த அது தங்கக் குடமா என்ன? தங்கத்திலே குடம் செய்வார்களா? செட்டிநாட்டில் வேணுமானால் கொல்லுப் பட்டறையில், இதுக்கெதுக்கு கொல்லுப் பட்டறை? பத்தர் நகைக்கடையில் செய்து வாங்கி கல்யாணத்துக்கு சீர் பரப்பி இருப்பார்கள். நம்ம படத்தில், ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வந்த ரெண்டாம் கதாநாயகி கோடம்பாக்கம் ஸ்டூடியோ கிணற்றடி செட்டில் தடவத் தங்கக் குடம் எல்லாம் கட்டுப்ப்படியாகாது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2022 20:47

April 11, 2022

நான் உபதேசங்கள் செய்யறவன் இல்லை, என் கதைகளும்

எழுத்தாளர் இரா.முருகன்ஒரு உரையாடல்

 கேள்வி : காளிப்ரசாத்

1) தகவல் தொழில் நுட்ப துறையின் பணியாளர்கள் மீது ஒரு புரிதல் உண்டானது மிகச் சமீபத்தில்தான். அதுவரை அவர்கள் மீது ஒரு விலக்கத்தைத்தான் ஊடகங்கள் /திரைப்படங்கள் பதிவு செய்திருந்தன. பொதுமக்களிடமும் அவர்கள் மீது அமெரிக்க மாப்பிள்ளை போன்ற ஏளனமும், மனதளவில் ஒருவித எதிர்ப்பும் இருந்தனஇன்று அந்த சூழல் மாறியுள்ளதுஉங்களுடைய ஆரம்பகால கதைகளில் (உதாரணமாக சிலிக்கான் வாசல்) அது உருவாக்கும் மன அழுத்தம் அங்கு நிகழும் மனித உரிமை மீறல் குறித்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அது வந்த காலத்தில் அது பொதுச்சமூகத்துக்கான எதிர்நிலை வாதம்தான்அன்றைக்கு அதை எழுத எண்ணியது ஏன்??

பதில்: இரா.முருகன்

நான் சிறுகதை எழுத வந்ததும் இந்தியாவில் ஐ.டி ஒரு துறையாக அசுர வேகத்தில் வளர ஆரம்பித்ததும் கிட்டத்தட்ட  ஓரே காலத்தில்தான். 1984 ல் நான் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்தேன்.  1984 ன் இறுதியில்தான்  ராஜீவ்காந்தியும் கணினியாக்கமும் -ஐடியும்  முறையே இந்திய அரசிலும் இந்தியக் கல்வி, தொழில், நிர்வாகத்திலும் புது வரவாக நுழைந்து ஒரு மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது நிகழ்ந்தது.

 

ஐடி வந்தவுடனே அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஏன்னு கேட்டீங்கன்னா  அதில் வருகிற சம்பளம். அது வரைக்கும் பேங்க் ல் வர உத்யோகம்தான் ரொம்ப முக்கியமா இருந்தது. பேங்க் மாப்பிள்ளைதான் வேணும்னு எல்லாருமே பேசிக்கொண்டிருந்த காலம்.  அப்பொழுது பேங்க் சம்பளம் தான் பெரிய விஷயம். ஆனால் ஐடி வந்த பிறகு அதைவிட நாலு மடங்கு பெரிய சம்பளம்லாம் கிடைக்க ஆரம்பித்தது. நான் பேங்க் கிளை அதிகாரியாக ஏழெட்டு வருடம் இருந்து, வங்கி கணினித்துறையில் அடுத்த பதினைந்து வருடம் கணினி மென்பொருள் வடிவமைத்து உருவாக்கும்  டெக்னோ பேங்கராக ஐ.டிக்கு வந்தவன். வங்கி கணினித்துறை போதுமென்று தனியார் ஐடி பன்னாட்டு நிறுவனப் பணிக்கு மாறினேன். அப்பொழுது  1984 லிருந்து 1999 ல் டாட்காம் bust ஆகும் வரைக்குமான பதினைந்து வருடங்கள் அப்படியே  ஏறுமுகமாகவே போனது. அதுவரை அந்த துறைக்கு வெளியில் இருந்தவர்கள் பலர்  அதன் மீதான பொறாமையில் நிறைய கற்பனை செய்துகொண்டு பலவிதமாக  பேசிக்கிக்கொண்டு இருந்தனர். அதை அவ்வாறே சிலபேர் எழுதவும் செய்தார்கள். அதன் விளைவாக பொது மக்களிடம் ஒரு தவறான கருத்தே சென்று சேர்ந்தது. அதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாமுமே ஐ.டி  வராத கதைகள்தான். என் எழுத்து தனியாகவும் நான் பணிபுரியும் துறை தனியாகவும்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் ஐ.டி-யைப் பற்றியும் எழுதத் துவங்கினேன். இந்தத் துறை குறித்து, முக்கியமாக ஐடி ஊழியர்கள் பற்றி, அவர்களுடைய work-life balance பிரச்சனைகள் பற்றி, ஐ.டி துறையில் இருக்கிறவனாக சரியான புரிதலைத் தருவது என் நோக்கமாக இருந்தது.

 

அந்தகாலங்களில் குறிப்பாக  பிறதுறைகளில் ஒய்வு வயது என்பது வேறு. ஆனால்  ஐ.டி கணினித் துறைப் பணியில் நாற்பது வயது எய்துகிறவர்களுக்கு இனி அநேகமாகச் சந்திக்க வேண்டிய தேக்க நிலை, பணி நிரந்தரம் குறித்த கவலைகள் ஏற்பட்டு   ஒரு கலக்கத்தை தந்துவிடும். நம்மை எல்லாரும் முந்திச் சென்று விடுவார்களோ என்று தோன்றும். அதுவரை ஏறுமுகமாக இருந்த வாழ்க்கை சற்று தடுமாறும். இதன்பின்னர் நான் என்னவாகப் போகிறேன் என்கிற குழப்பமும் வந்து சேர்ந்திருக்கும். அது ஒரு இருத்தலியல் பிரச்சனையாக போய் நின்றுவிடும் சாத்தியமும் உண்டு. கடும் வேலையை வாங்கும். 24 மணிநேரமும் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தது அதன் deadlines மிகவும் விசித்திரமாக இருக்கும். பத்துநாள் வேலைய இன்னும் நாலுபேரை சேர்த்து வச்சு நாலுநாள்ல முடிங்க என்று சொல்லுவாங்க..  இதை பற்றி பேசாமல் அங்கு ஆண்களும் பெண்களும் ஒண்ணா சுத்தறாங்க. ஒழுக்கக் கேடான விஷயங்கள் நடக்கும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு கற்பனை செய்து, சொல்லி எழுதப்பட்டிருந்த காலங்களில்,   என் கதைகளில் சிலிக்கான் வாசலிலும் லாசரஸ் நாற்பது, இளைப்பாறுதல் போன்ற கதைகளிலும் ஐ.டி .யில் நடுத்தர அல்லது இளைய நிலைகளில் பணிபுரிபவர்களை மையமாக வைத்தது எழுதினேன்.  முதல் இரண்டும், இரண்டும் இந்தியா டுடே தமிழ் இதழிலும், அடுத்துக் கூறியது இலக்கியப் பத்திரிகையான உயிர்மையிலும்  வந்தன. விடுமுறை தராத அந்த விசித்திர  சம்பவங்களை வைத்து 24X7 என்கிற கதையை ஆனந்த விகடன் தொகுப்புக்காக எழுதினேன். இவ்வாறு ஐ.டி யில் இருந்தாலும் பத்து வருடங்கள் ஏதும் அது பற்றி எழுதாமல் இருந்தவன் 1990 களில் ஐ.டி பற்றி எழுத துவங்கி 1998 ல் பார்த்தீர்களானால் ஐந்துக்கு மூன்று ஐ.டி யைப் பற்றியே இருக்கும். அதன்பின் அந்த துவக்ககால அலைகள் அடங்கிய பின்னர்தான் மூன்றுவிரல் என்கிற ஐ.டி .துறை குறித்த எனது முதல் நாவலை 2002இல் எழுதினேன்.

கேள்வி : காளிப்ரசாத்

2) அதன் தொடர்ச்சியாக அடுத்த கேள்வி.. அதேநேரம் இன்று .டி வேலை சலித்து போகிறது என்று எழுத துவங்கி விட்டார்கள். ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வருகிறார்கள். இது போன்ற இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியவாதிகள் தொடர்ச்சியாக எழுதியும் வந்துள்ளார்கள். இலக்கியத்தில் இந்த இருத்தலியல் trend லும் இயல் வாழ்க்கையில் IT துறை மீதான trend லும்   ஒருசேர இருந்தவர் நீங்கள். மூத்த எழுத்தாளராக இதைப்பற்றிய உங்கள் பார்வையை தொகுத்து செல்ல இயலுமா?

பதில் : இரா.முருகன்

 

இப்பொழுது பெரும்பான்மை அயல்நாடு வாழ் தமிழர் மனநிலைப்படி  அங்கே போய் இருந்து வேலை பார்த்து, பத்து வருஷத்துல போரடிக்குது விவசாயம் பண்ணப்போறேன் வேறு வேலை பண்ணப்போறேன்னு கிளம்ப நினைக்கறதாகச் சொல்றாங்க. ஆனால் எத்தனை பேர் சொல்றபடி செய்யறாங்க? அவங்க நல்ல வேலையில இருக்காங்க நல்லா சம்பாதிக்கிறாங்கதான். வேணாம்னு சொல்லல நல்லா இருக்கட்டும்.  . வேலையில் வரும் திரும்பத்  திரும்ப ஒரே வேலையைச் செய்கிற அலுப்பு- ரெபடிஷன் போரடிக்குதுன்னு சொல்றாங்க. இந்த repeatation எங்கதான் இல்ல? நான்  28 வருஷங்கள் ஐ.டி ல இருந்தாலும் அதுல இரு existential  பிரச்சனை எனக்கு ஒருசில நேரங்களில் தான் தோன்றியது. அது பணி நிமித்தமாக குடும்பத்தை அடிக்கடி வருடக் கணக்கில் பிரிவதால் ஏற்பட்டது.   பழங்கால இலக்கியத்திலேயே வருமே, பொருள் வயின் பிரிதல்,   அதன் ஒரு வடிவம். இந்த ஆட்டங்களுக்கான விதிமுறைகளை மீற முடியாது.

 

நான் என் வாழ்க்கையிலும், கதைகளிலும் உபதேசங்கள் செய்யறவன் கிடையாது. ஒவ்வொரு கதையிலும் நீதி போதனை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவன் அல்ல என்பதும் ஒரு காரணம். ஆனால் சில இடங்களில் அனுபவம் சார்ந்த ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.  இந்த இருத்தலியல் பிரச்சனையும்தான்  எந்த துறையிலதான் இல்ல?  அதனால நல்ல வருமானம், குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல கெளரவமான, பாதுகாப்பான  வாழ்க்கை என அமைத்துத் தரும் துறை எதுவாக இருந்தாலும் அது நல்ல துறைதான். அதுக்குள்ளே இந்த இருத்தலியல் சிக்கலையெல்லாம் போட்டு மொலடோவ் காக்டெயிலாக்கிக் கதையை வாசகர்மேல் பிரயோகிக்க வேணாம்னுதான் நான் சொல்லுவேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2022 20:11

April 10, 2022

ஊருணிக்குள் விழுந்த பாதரட்சை – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது.

‘லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ ‘

மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான்.

தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச் சேர்ந்த தாக்கல் வந்தபோது கழிச்சல்லே போற நான் என்ன ஏதுன்னு கூடக் கேட்க முடியாம மயக்கம் போட்டுச் சுருண்டு கெடந்தேன். சாமி சத்தியமா, நம்ம குலதெய்வம் சத்தியமா.

மொட்டையன் முன்னால் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான் முக்கால் கிழவன் ஒருத்தன். அவனுக்கும் வசதியாக ஒரு இடத்தைப் புஸ்தி மீசையான் தான் போய் விழுந்த இடத்தில் பிடித்து வைக்கலாம்.

பெரியண்ணே, மாமன் சொல்றது நிசம்தான். பாவம் ரொம்பத் தளர்ந்து போயில்லே வந்திருக்காரு. பாரு.

ராணி சமாதானம் செய்து வைக்கப் போனாள்.

உனக்குத் தெரியாது தங்கச்சி. இந்தாளு மருதையிலே சீமைச் சாராயம் அடிச்சுட்டு மேல மாசி வீதி முச்சூடும் இடுப்புலே துணி தங்காமே உருண்டுட்டுக் கிடந்தானாம். கேதம் சொல்லப் போனவங்க சொன்னாங்க.

மொட்டையன் இல்லாத மீசையை நீவிக் கொண்டான். உலகத்தின் துக்கமெல்லாம் மொத்தமாகத் தன்மேல் கவிந்தது போலவும் அதைக் கொஞ்சம் நகர்த்திக் கூடத் தோ:ள் கொடுக்க யாரும் முன்னால் வரவில்லை என்ற ஆதங்கத்தோடும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது.

ஐயோ யாரோ பொரணி பேசற தாயோளி சொல்லியிருக்கான் அப்படி. மருதையாவது மானாமருதையாவது. கொல்லையிலே போய்க் குத்த வைக்கவே உடம்பிலே சக்தி இல்லே. பாரு, வைத்தியனையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்.

வந்த கிழவனோடு அவசரமாக வந்து ஒட்டிக் கொண்ட வைத்தியன் கெச்சலாக, சுறுசுறுப்பாக இருந்தான். இவனிடம் சிட்டுக் குருவி லேகியம் இருக்கா என்று கேட்கலாமா என்று ராஜா ஒரு வினாடி யோசித்தார்.

வண்டிக்காரன் கும்பிட்டுக் கொண்டே நிற்க, குதிரை அலைபாய ஆரம்பித்திருந்தது. அதை நிறுத்திப் பிடித்திருந்தவர்கள் ராஜா எப்போது வண்டி ஏறுவார் அடுத்த வேலைக்குப் போகலாம் என்று காத்திருந்தார்கள்.

வம்பு வழக்கைத் திரும்பி வந்து வேடிக்கை பார்க்கலாம் என்று உத்தேசித்து ராஜா வண்டியேறினார். இவன்கள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இதையே வைத்து நடுராத்திரி வரை அடித்துக் கொள்வார்கள்.

அவர் ஊருணிக் கரைக்கு வந்தபோது இடமே அமைதியாக இருந்தது. ராஜா தண்ணீருக்கு வெகு பக்கத்தில் ஆலமரத்தடி மேடையில் உட்கார்ந்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசையிலும் பார்த்தார்.

செம்மண் தண்ணீர். மரம். கோவில். மேலே எவ்விப் பறக்கும் காக்கைகள். தரையில் தத்தும் மைனா, கிளி, குருவிகள். எல்லாம் இருந்தது. தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் எங்கே ?

ஒருத்தர் கூடவா இல்லை ? ஊரோடு காணாமல் போனார்களா ? இல்லை தான் வருவது தெரிந்து, தூர்த்தன் வருகிறான். துன்மார்க்கன் வருகிறான். ஓடிப் போய் ஒளிந்துகொள் என்று கண்ணுக்கு மறைவாகப் போனார்களா ?

அவர் உள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டதுபோல் சேவகன் முன்னால் வந்து வணங்கி புத்தி என்றான்.

என்னடா பயலே ?

இன்னிக்குக் கோயில்லே பிரதோசமாம். சனம் எல்லாம் அங்கேதான்.

இந்தக் களவாணிகளுக்கு ராஜாவின் நினைப்பு எல்லாம் அத்துப்படி.

அவர் மெளனமாகப் புன்சிரித்தபோது காலடியில் ஏதோ ஊர்கிற மாதிரி இருந்தது. அவசரமாகக் காலை மேலே ஏற்றிக் கொள்ள, ஒரு செருப்பு தண்ணீருக்குள் விழுந்தது.

அடடா நல்ல தண்ணி ஊருணிக்குள்ளாற விழுந்துடுச்சே.

கவலைப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தார் அவர்.

எத்தனை வீர சாகசக் கதைகளில் படித்திருக்கிறார். ராஜ விசுவாசியான வீரர்கள் உயர்ந்த மலைகளில் இருந்தும், அருவியின் நீர்ப்பெருக்குக்கு இடையிலும், பாலைப் பிரதேசங்களிலும் உயிரைத் துச்சமாக மதித்து அரசனின் குறிப்பறிந்து பணியாற்றுவது வழக்கமில்லையோ.

இவன்களுக்கு ஒரு செருப்பை ஊருணிக்குள் கைவிட்டு அளைந்து எடுக்கக் கூடத் துப்பில்லை. போதாக்குறைக்கு எஜமானனையே குற்றம் சாட்டுகிற மாதிரிப் பேச்சு வேறு.

தேர்ந்தெடுத்து நாலு வசவுகளைச் சொன்னார். அதெல்லாம் கலந்து எழுந்து காற்று கெட்ட வாடை அடிக்க ஆரம்பித்தபோது திரும்ப வண்டியேறினார். இன்னொரு கால் செருப்பைச் சுமந்து கொண்டு லொங்கு லொங்கென்று வண்டியோடு கூட ஓடி வந்தவனை அவர் லட்சியம் செய்யவே இல்லை.

சாவு வீட்டில் விளக்கு வைத்து, கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவே இருக்கிறவர்களை எங்கோ பார்த்த நினைவு ராஜாவுக்கு.

கொலைச் சிந்து பாட வந்தவர்கள். புஸ்தி மீசைக் கிழவனைக் கூடத்தில் கிடத்திக் குளிப்பாட்ட நீர்மாலை எடுத்து வந்தபோது வாசலில் நின்று மரியாதையாகக் கும்பிட்டவர்கள்.

யாரோ எடுத்து வந்து ஓசையில்லாமல் பின்னால் நகர்த்திய மெத்தை வைத்த ஆசனத்தில் ராஜா ஆரோகணித்தார். நாலைந்து தீப்பந்தங்கள் இலுப்பை எண்ணெய் வாடையோடு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, கொலைச் சிந்துப் பாடகர்கள் பாட ஆரம்பித்தார்கள்.

வந்தனம் ஐயாமாரே

வாருமம்மா தேவியரே

சாமித்துரை புண்ணியவான்

சீமைத்துரை ஆவதற்கு

பல்லக்கு பரிவட்டம்

பாங்கான தப்புக் கொட்டு

நல்ல தண்ணி நீர்மாலை

நாக்குலேதான் வாக்கரிசி

எல்லாமும் கவுரதையாய்

எசமான்கள் செய்துதந்து

வழியனுப்பி வச்சாரே

வமிசம் செழிக்க வாழ்த்துவீரே.

ஐயாமார் எல்லாம் அவனுக்கு முன்னால் கால் மடித்து உட்கார்ந்திருந்தார்கள். தேவியர் எல்லோரும் முற்றத்தின் விளிம்புகளில் பாதி மறைந்தும் மறையாமலும் வெகு அழகோடு அமர்ந்திருந்தார்கள். தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் எல்லோருமே அப்சரஸ்களாக ராஜாவுக்குத் தெரிந்தபோது புஸ்தி மீசைக்காரனின் ஆசைநாயகியான காது வளர்த்த கிழவி நான் கூடவா என்று சிரித்து வாயில் புகையிலைக் கட்டையை அடக்கிக் கொண்டாள்.

யாரோ முன்னால் குந்தியிருந்த பாட்டுக்காரன் காதில் ஓதிவிட்டு வர அவன் சங்கடமாகப் பார்த்தான். இன்னும் நாலு பேர் எழுந்தார்கள். எல்லோரும் சின்ன வயசு. அவர்களும் பாட்டுக்காரனிடம் ஏதோ கேட்டார்கள்.

அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு புராணக்கதை சொல்ல ஆரம்பித்தான்.

முனிவனவன் பெண்டாட்டி

முடிஞ்சு வச்ச கூந்தலிலே

செல்லமாத் தலைப்பேனா

கள்ளப் புருசனையும்

ஒளிச்செடுத்து வந்து

ஓரமாத் தலைவிரிச்சா.

கச்சு அகற்றிப் பழம்போல

கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்.

கொட்டி முழக்கினார்கள். ராஜாவுக்குக் கொஞ்சம் பசியெடுத்தது.

நிறுத்துலே.

சாயந்திரம் பரிவட்டம் கட்ட மன்றாடியவன் எழுந்து சத்தம் போட்டான்.

இதெல்லாம் இப்போ வேணாம். மொதல்லே கொலைச் சிந்து. அப்புறம் மத்ததெல்லாம். சம்பிரதாயத்தை மீறக்கூடாதுன்னேன். என்ன நான் சொல்றது ?

அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் மைத்துனன் மொட்டையன் ஆமா ஆமா என்று பலமாகத் தலையாட்டினான். எழவெடுத்தவன்கள் சமாதானமாகப் போய்விட்டார்கள். ராஜாவுக்கு எரிச்சல் வந்தது.

ஆமாமா, கொலைச் சிந்துதான் பாடணும் அப்பூ.

துரைத்தனத்தார் போல் சட்டமாகச் சொன்னாள் காது வளர்த்த கிழவி. ராஜாவுக்குள் பிரம்மாண்டமாக ஒரு பசி எழுந்து கொண்டிருந்தது.

தொரே ஒத்தச் செருப்பை என்ன பண்ணனும்னு உத்தரவாகணும்.

சேவகன் காதருகே குனிந்து வேண்டிக் கொண்டான்.

சுட்டு எடுத்துட்டு வாடா. பிச்சுத் தின்னுக்கறேன்.

ராஜா சொன்னது பக்கத்தில் கேட்டிருக்கும்.

சரி பெரிசுங்க சொல்றபடிக்குக் கொலைச் சிந்து மொதல்லே. பொட்டைப் புள்ளைங்க எல்லாம் சாப்பிட்டுப் படுத்தப்புறம் நடுராத்திரிக்கு ரிசிபத்தினி கதை.

மைத்துனனில் பிள்ளைகளில் ஒருத்தன் சத்தமாகச் சொல்ல இளவட்டங்கள் ஏக ஆரவாரமாகச் சிரித்தார்கள்.

பாட்டுக்காரர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் குரலில் சலிப்பு குடியேறி இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியபோது, சமூகம் ஆகாரம் பண்ண வர உத்தரவாகணும் என்றார்கள் யாரோ இருட்டில் பின்னால் குனிந்து.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2022 19:41

April 9, 2022

லேஞ்சி கட்ட வந்தவர்கள் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான்.

புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான்.

அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும் வைத்திருக்கிறவன். எல்லாம் அவன் கட்டிய புலியடிதம்மம் பெண்பிள்ளை கொண்டு வந்தது. ராஜாவுக்கு அவள் எதோ உறவு முறையில் சகோதரமாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவருக்கு புலியடிதம்மம் சம்பந்தம் வாய்த்திருக்கும். சட்டமாக நிலத்தில் வேலையாட்களை விரட்டிக் கொண்டு, தோப்பில் தேங்காய் பிடுங்கிப் போடுவதைக் கணக்குப் பண்ணிக் கொண்டு முழங்காலுக்கு மேலே கட்டிய ஒற்றை வேட்டியும் மேலே தறித் துண்டுமாக நின்றிருப்பார்.

அரண்மனையில் உட்கார்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதை விட உசத்தியா என்ன அதெல்லாம் ?

இல்லை என்று உறுதியாகத் தலையசைத்து எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருந்த மொட்டையனைக் கனிவோடு பார்த்தார் அவர்.

எல்லோருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் அவர்.

கட்டலாமா ?

யாரோ கேட்டார்கள். மொட்டையன் தலையை ஆட்டுகிறான். உருமால் தலையில் ஏறுகிறது. வந்தவன் துக்கம் ஏற்பட்டது போல் முகத்தை வீங்க வைத்துக் கொண்டு எழுந்து கொட்டகையில் இட்டலி தின்னப் போகிறான்.

காலையிலிருந்து இதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது அலுப்புத் தட்ட ஆரம்பித்தது ராஜாவுக்கு. எழுந்து கொஞ்சம் காலாற நடமாடி விட்டு வந்தால் என்ன ?

செம்மண் நிறத்தில் அலையடித்துக் கொண்டிருந்த நல்ல தண்ணி ஊருணி மனதில் வந்தது. ரம்மியமான பிரதேசம். போன தடவை இங்கே வந்தபோது புஸ்தி மீசைக் கிழவன் ஜீவியவந்தனாக இருந்ததால், ஒரு சாயங்கால வேளையில் குதிரையில் ஆரோகணிக்க வைத்துக் கூட்டிக் கொண்டு போய் வெகு வினோதமாகக் காட்டினான் அந்த நீர்நிலையை.

முரண்டு பிடிக்கும் குதிரையும், லகானைப் பிடித்தபடி கூடவே வந்த சிப்பாயும், ஊருணிக்குப் பக்கம் அனுமார்சாமி கோவிலும் அங்கே சுக்காக உலர்ந்த வடைகளைக் சணல் கயிற்றில் கட்டி சாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகக் கொடுத்த கன்னட பாஷை பேசும் குருக்களும் நினைவில் வரத் தவறவில்லை.

எச்சில் படாமல் விண்டு வாயிலிட்டு வடைகளை ருசித்துக் கொண்டு, ஊருணியில் தண்ணீர் தூக்கிப் போன படி இருந்த பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு இருட்டும் வரை உட்கார்ந்திருந்த அந்த இடத்துக்கு இன்னொரு முறை போய் வந்தால் என்ன என்று ராஜா யோசித்தார்.

தொரெ

குனிந்து வணங்கி ஒரு பணியாள் தாம்பாளாத்தில் வாழை இலை பரத்தி அதன் மேல் எதையோ வைத்து இன்னொரு இலையால் மூடிக் கொண்டு வந்து நீட்டினான்.

மேல் இலையை மெல்லத் தூக்கிப் பார்த்தார் ராஜா. லட்டு உருண்டை நாலும் கார சேவும்.

வக்காளி, சாப்பிட வச்சே ஒழிச்சுடுவானுங்க போல இருக்கே. அதுவும் முழுச் சைவமான பதார்த்தங்கள். எண்ணெய்ப் பலகாரங்கள். நொடிக்கொரு தரம் இப்படித் தின்றால் ஊரில் இருக்கப்பட்ட ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் சந்ததியாவது விருத்தியாவது. வைத்தியன் மூத்திரக் கொல்லையில் இடது கையால் பறித்த கண்ட பச்சிலையையும் சாறு பிழிந்து பவ்யமாக வணங்கிக் குடிக்கக் கொடுப்பதை விழுங்குவதை விட மயானம் போவதே மேல்.

அந்தத் தட்டை நீட்டியவன் நீட்டியபடியே குனிந்து நின்றிருந்தான். வேண்டாம் என்று மறுக்கவும் மனம் இல்லாமல் ராஜா ஒரு லட்டை எடுத்து உதிர்த்து அசை போட ஆரம்பித்தார். கூட அந்த அனுமார்சாமி கோவில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு வண்டியை உடனே சித்தம் பண்ணுங்கள். நல்ல தண்ணி ஊருணிப் பக்கம் போய் வர வேணும்.

ராஜா நேராகப் பார்த்துக் கொண்டு உத்தரவு செய்தார். யாராவது செய்து விடுவார்கள் என்று தெரியும்.

மூன்று லட்டு உருண்டைகளும் கால் வீசை கார சேவும் வாயில் அரைபட்ட பிறகு பின்னால் சத்தம் கேட்டது.

சாவுத் தீட்டு இருக்கும் போது சாமி கோவிலுக்கு யாராவது போவார்களா ? உங்களுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது ?

ராணிதான். பக்கத்தில் குனிந்து சொல்லவே, காதை உஷ்ணம் தகித்துப் போட்டது.

அது எனக்குத் தெரியாதா என்ன ? கோயிலுக்குள் எல்லாம் போக மாட்டேன். அந்த ஊருணிக் கரையில் கொஞ்சம் லாந்தி விட்டு வந்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்டம் தேய்ந்து போயிடுத்து பெண்ணே.

சின்ன மைத்துனனின் பிள்ளைகள் அதற்குள் குதிரை வண்டியைச் சித்தம் பண்ணிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தார்கள்.

விரசா வந்துடுங்க. துஷ்டிக்கு வந்தவர்கள் ஒருத்தொருத்தராக் கிளம்புவார்கள் இனிமேல். சொல்லிக் கொண்டு போக முடியாதில்லையா ? கண்ணசைத்து உங்களின் மேலான உத்தரவு இல்லாமல் அவர்களெல்லாம் பிரயாணம் கிளம்புவது உசிதமாக இருக்காதே.

பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2022 19:59

April 7, 2022

ஆலப்பாடு சுவதேசி வயசன் பறந்து போன வர்த்தமானம் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போலப் பறக்கட்டுமா ?

விசாலாட்சி திரும்பச் சிரித்தாள்.

அந்த வயசன், குப்புசாமி அய்யன் ஊருக்குப் போய்த் திரும்பி வந்த இந்த நாலு வாரத்தில் ஒரு தொந்தரவாக மாறியிருக்கிறான். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தது.

நேற்றைக்கு மதியம் வீட்டில் நுழைந்தபோதே குப்புசாமி அய்யன் பார்த்தது தான் அது. என்ன கிரகசாரமோ என்று யோசித்தபடி செம்பில் தண்ணீர் சேந்தி உடம்பு கழுவிக் கொண்டிருந்தபோது, வயசன் தோட்டக் கோடியில் மிதந்தபடி சுற்றி மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தான். அவன் கண் இரண்டும் அரைத் தூக்கத்தில் இருப்பதுபோல் பட்டது குப்புசாமி அய்யனுக்கு.

பிரதட்சணமாகவும் அப்பிரதட்சணமாகவும் வேலிப்பக்க மலை வேம்பை இரண்டு முறை சுற்றி வருவதற்குள் காரியம் முடிந்து அந்தப் படிக்கே மிதந்து திரும்ப வீட்டு மாடிக்குப் போனான் வயசன்.

ஆலப்பாட்டு மடத்தில் ஏதாவது துர்தேவதை நுழைந்திருக்கும். இல்லை, அங்கே நிலையாக இருக்கப்பட்ட அம்மாதிரி எதற்கோ வேண்டிய உபச்சாரம் கிடைக்காமல் போயிருக்கும். வயசன் இங்கே வந்து கிட்டத்தட்ட ஸ்திர தாமசமாக ரெண்டு மாதம் ஆகப் போகிறது என்பது குப்புசாமி அய்யனுக்கு நினைவு வந்தது. இரண்டு மாதமாகப் பசியோடு இருக்கிற எந்த நீலியோ அவனை இப்போது கொட்டையைப் பிடித்துக் கசக்கி ஆட்டி வைக்கிறாள் போலிருக்கிறது.

இதெல்லாம் யோசித்தபடி கொல்லையில் இருந்து வீட்டுக்குள் வந்தபோது உயரம் போதாத பின் நிலைவாசல் தலையில் இடித்து விண்ணென்று தலைக்குள் வலி வேறு.

வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள் அப்போது. குழந்தையும் குட்டியும் பெரியவர்களுமாக எப்போதும் போல் இருந்த வீடு. தம்பி துரைசாமி அய்யன் கூட அங்கே இருந்தான்.

என்னவாக்கும் எல்லோரும் ஆத்தை மட்ட மல்லாக்கத் திறந்து போட்டுட்டு எங்கே போய்ட்டேள் ? ஏண்டா தொரை, நீ ஆதிச்ச நல்லூர்லே கைமள் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒத்துண்டு போகலியோ ? புனலூர்லே ராமேந்திரன் அத்திம்பேரோட தம்பியைப் பார்த்தபோது சொன்னானே ?

அண்ணா அது கிட்டன் போயிருக்கான். நான் மைநாகப்பள்ளி குரூப்பு வீட்டுலே அவனோட அப்பன் அடியந்திரத்துக்குச் சொல்லி விட்டான்னு போயிருந்தேனா. போன இடத்துலே குருப்போட தள்ளைக் கிழவியும் நாலு நாள் முன்னாடி போய்ச் சேர்ந்து. இன்னும் ஏழு நாள் கழிச்சு ரெண்டையும் ஒண்ணா நடத்திக்கலாம்னுட்டான் குரூப்பு. மகா பிசுக்கனாக்கும் அவன். பேசினதுலே கால்வாசிப் பணம் கொடுடா இப்போ சிரத்தைக்குன்னு கேட்டு வாங்கிண்டு வந்தேன்.

மைநாகப்பள்ளியில் இருந்து கருநாகப்பள்ளி போய்க் கிட்டனுக்குக் கூடமாட இருக்கக் கூடாதோ ? காமாட்சி நினைப்பில் ஓடி வந்திருக்கிறான் கழுவேறி. தனியாகப் படுத்துக்கலாம்னு நப்பாசை.

நீங்க எனக்காக வரலியா அது மாதிரித்தான்.

விசாலாட்சி அவனுக்கு மட்டும் புரிகிற மாதிரி சிரித்தாள். அவள் தலையில் மீன்கூடையும் வாய் நிறைய தாம்பூல எச்சிலுமாகச் நிற்கிறது போல் தோன்றியது குப்புசாமி அய்யனுக்கு.

அதொக்கே சரிதான். இப்போ எல்லோரும் எங்கேயாக்கும் ஒருமிச்சுப் போய்ட்டு வரேள் ?

குப்புசாமி அய்யன் பொதுவாகப் பார்த்தபடி சொன்னான். அவனுக்குப் பசி அகோரமாக இருந்தது. விசாலாட்சி படுத்துக் கொள்ள வருவது கிடக்கட்டும். இப்போ சாப்பிட ஏதாவது ஆக்கி வைத்திருக்கிறாளா ?

ராம சாஸ்திரியாத்துலே சீராம நவமி அண்ணா. பூஜை, அப்புறம் சமாராதனை.

வா வான்னு சாஸ்திரிகளோட ஆத்துக்காரி தெலுங்கும் தமிழுமா வந்து வாய் நிறையக் கூப்பிட்டுப் போனாள். கதவைச் சாத்திண்டு தான் போயானது. காத்துலே திறந்திருக்கும்.

கடைசித் தங்கை பகவதி சொன்னாள்.

ராம சாஸ்திரி தெலுங்கு பிரதேசத்தில் இருந்து குடி ஏறினவன். வீணையும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுத்து ஏகத்துக்கு சம்பாதிக்கிறான். சுற்று வட்டம் இருபது கல் வட்டாரத்தில் கானடா, காப்பி, ரீதிகெளளை என்று பேர்பண்ணிக் கொண்டு பெண்டுகள் மூக்கால் பாடுவதும், பெருச்சாளி பிராண்டுகிறதுபோல் சதா வீணையை மீட்டுவதுமாக அவன் இங்கே வந்த நாலே வருஷத்தில் மாறிப்போனது. அவனும் குடக்கூலிக்குப் புகுந்த வீட்டை சொந்தமாகவே வாங்கி விட்டான்.

நம்பூத்திரி அந்தர்ஜனப் பெண்களுக்கு அவரவர்களின் மனையிலும், மற்றவர்களுக்குத் தன் கிரஹத்தில் வரச் சொல்லியும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் அந்தத் தெலுங்கனின் பெண்டாட்டியும் விதூஷியானதால் பணம் கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. பகவதி கூட இரண்டு மாதமாக ராம சாஸ்திரி வீட்டில் தான் கீர்த்தனம் நெட்டுரு பண்ணிப் பாடக் கற்றுக் கொண்டு வருகிறாள்.

சரிதான். ஆத்துலே இன்னிக்கு உலை வைக்கலியா ?

பசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான் குப்புசாமி அய்யன்.

கிட்டாவய்யனின் குழந்தைகள் பந்தி போஜன வீட்டில் இலையில் போட்டதை எடுத்து வைத்து சிற்றாடையில் சுருக்குப் பைக்குள் முடிந்து வைத்துக் கொண்டு வந்த வடையையும் சுவியனையும் சாப்பிட்டபடி வீட்டைச் சுற்றி ஏக களேபரமாக ஓடத் துவங்கின. ஆகச் சின்னது ஊ ஊ என்று இடுப்பில் வெள்ளி ஆலிலை அசையத் தரையில் உருள ஆரம்பித்தது.

இதோ நொடியிலே சாதம் வடிச்சு ஒரு ரசம் பண்ணிடறேன் அண்ணா. மன்னியைக் கஷ்டப் படுத்தாதீங்கோ. எடி லண்டி மிண்டைகளா. வடையைக் கடிச்சு எச்சல் பண்ணாதீங்கோ. கையால விண்டு சாப்பிடுங்கோ. காமாட்சி, இந்தப் பிசாசுகளைக் கொஞ்சம் பார்த்துக்கோடியம்மா. அந்தச் சின்னக் கோட்டானையும் தான்.

கிட்டாவய்யன் பெண்டாட்டி அவசர அவசரமாகச் சொன்னபடி சமையல்கட்டுக்குள் புகுந்தாள். துரைசாமியய்யன் பெண்டாட்டி குழந்தைகளை சின்னவளை இடுப்பில் இடுக்கியபடி மற்ற ரெண்டையும் ரேழியில் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்லப் போனாள்.

அண்ணா நான் கொல்லன் பட்டறைக்குப் போய் ஈயச் சொம்புக்கு எல்லாம் புதுசாப் பூசிண்டு, இருப்பச் சட்டிப் பிடியையும் பத்த வச்சுண்டு வந்துடறேன். லொடலொடன்னு ஆடிண்டே இருக்கு. திளைக்க வச்ச எண்ணெயோட விழுந்து வச்சா வேறே வினையே வேணாம்.

நினைவு வந்ததுபோல் துரைசாமி அய்யனும் கிளம்பிப் போனான்.

லட்சுமியும் பகவதியும் சிநேகாம்பா மன்னிக்கு ஒத்தாசையாக சமையல்கட்டுக்குள் நுழைந்தார்கள்.

குப்புசாமி அய்யன் விசாலாட்சியோடு பேசிக் கொண்டிருக்கட்டும் என்ற வாத்சல்யம் எல்லோரிடமும் தெரிந்தது.

நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு கொல்லைப் பக்கம் விசாலாட்சியோடு வார்த்தை சொல்லிக் கொண்டு நின்றபோது, வயசன் பற்றி அவள்தான் முழு விவரமும் சொன்னாள்.

பாவம், சிநேகாம்பா தோப்பனாருக்கு என்னமோ ஆயிடுத்து. ஒரு வாரம் பத்து நாளாக் கால் தரையிலே பாவ மாட்டேங்கறது. நாள் முச்சூடும் தூங்கியாறது. எழுந்தா தரைக்கு அரை அடி ஒரு அடி உசரத்துலே மிதக்க ஆரம்பிச்சுடறார். பட்சி பறக்கற மாதிரி இல்லே இது. கரப்பான் பூச்சியும், கோழியும் மாதிரி ஒரு மிதப்பு.

துர்தேவதை உபாதையோ ?

குப்புசாமி அய்யன் கேட்டான். எந்த துர்த்தேவதையாவது இந்த வீட்டில் நுழைந்து விட்டிருக்கும் என்ற நினைப்பே சங்கடமாக இருந்தது. அதுகள் வீட்டில் வளைய வரும் பட்சத்தில் ராத்திரி விசாலாட்சியோடு தனியாக இருக்க முடியாது.

தெரியலை. உடம்பு பெலகீனம் என்கிறாள் சிநேகாம்பா. பலகீனப் பட்டவா எல்லாம் பறக்க ஆரம்பிச்சுடறாளா என்ன ? ஏதோ கர்ம வினை பாவம்.

எல்லோரும் முதலில் பயந்திருக்கிறார்கள். ஆண்பிள்ளை யாரும் இல்லாத மனையில் வைத்தியனை ஏற்றலாமா என்று யோசித்திருக்கிறார்கள். துரைசாமி அய்யன் வந்தபோது எல்லோருக்கும் பயம் விலகி இது பழகிப்போய் விட்டிருந்தது.

கிட்டன் வந்துடட்டும். அவனோட மாமனார். அவனண்டையும் ஒரு வார்த்தை கேட்டுண்டு முடிவு பண்ணலாம். அவர் பாட்டுக்கு தேமேன்னு மாடியிலே தானே தூங்கிண்டு இருக்கார். இருக்கட்டுமே. பறந்து வெளியிலே எங்கேயும் போகலியோல்லியோ. மாடிக்கும் தோட்டத்துக்கும் தானே இறங்கி ஏறியாறது.

துரைசாமி அய்யன் சொன்னபோது வயசன் விவகாரம் இன்னும் சாதாரணமாகப் போனது.

இருந்தாலும் பகல் நேரத்தில் மாடியிலிருந்து மிதந்தபடிக்கு இறங்கி வந்த தாத்தனைப் பேத்திப் பெண்டுகள் உஷ் உஷ் என்று கையைக் கொட்டித் துணி உலர்த்தும் கொம்பால் முதுகில் தட்டி மாடிக்குத் திருப்பி இருக்கிறார்கள் என்று அறியக் குப்புசாமி அய்யனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.

சிநேகாம்பா என்ன பண்ணினா ?

அவ தான் நீர்க்கக் கரைச்சு எடுத்துண்டு போய் அப்பாவுக்கு மதியமும் ராத்திரியும் ஊட்டி விட்டுண்டு இருக்கா. பெத்தவன் ஆச்சே.

அந்தப் பேச்சு அப்போது அத்தோடு முடிந்து போனது. ராத்திரி வயசனை நினைக்க எல்லாம் நேரம் இல்லை இரண்டு பேருக்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2022 20:09

April 6, 2022

பெரிய சங்கரனுக்குப் பெண் பார்க்க அம்பலப்புழை போனது 1860கள்- அரசூர் வம்சம் நாவலில் இருந்து

நாவல் இரா.முருகனின் அரசூர் வம்சம் (அரசூர் நான்கு நாவல் வரிசையில் முதல் நூல்)

ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க.

மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான அறுபது வயது கரம்பக்காடு கிருஷ்ணய்யர் (உத்தியோகம் சுகஜீவனம்), அய்யரின் அத்தான் பிரம்மஸ்ரீ சுந்தர கனபாடிகள், இவர்கள் எல்லோருடைய அகத்துக்காரிகள், அப்புறம் நித்திய சுமங்கலி சுப்பம்மாள் என்று ஒரு குழு. இது ஊர் எல்லாம் சுற்றிக் கொண்டு அம்பலப்புழை போய்ச்சேர ஏற்பாடு.

சுப்பிரமணிய அய்யர், சங்கரன், கல்யாணி அம்மாள் என்று இன்னொரு கோஷ்டி. இது விசேஷத்துக்கு இரண்டு நாள் முன்னால் கிளம்பிப் போய்ச் சேருவதாகத் திட்டம். கடையை ஒரு வாரத்துக்கு மேல் வியாபாரம் இல்லாமல் முடக்கி வைக்க சங்கரனுக்கு இஷ்டம் இல்லை.

முதல் கோஷ்டி அரசூரில் இருந்து கிளம்பி குறைந்த தூரத்துக்கு மாட்டு வண்டி குடக்கூலிக்குப் பிடித்துக் கொண்டும், காலாற நடந்தும் அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வழியில் கோவில்களில் தரிசித்துக் கொண்டும் கொல்லம், ஆலப்புழை வழியாக அம்பலப்புழை சேர்வது என்று திட்டம் பண்ணிக் கொண்டு இருபது நாள் முன்னாடியே கிளம்பி விட்டார்கள் இவர்கள்.

தூரம் நின்று போன ஸ்திரீகள் என்பதால் பெண்டுகளைக் கூட்டிப் போக நாள் கணக்கு எதுவும் ரகசியமாக விரல் மடக்கிப் பார்க்க வேண்டியிருக்கவில்லை. சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளை அழுது தொழுது வேண்டிக் கொண்டு அவர்களில் எவளொருத்திக்காகவும் இன்னும் இரண்டு மாச காலம் தூரத்துணியை அரையில் கட்டிக் கொள்ளத் தேவையிலை என்று சத்தியப் பிரமாணம் வாங்கி விட்டாள்.

அவள் இப்போதெல்லாம் சுப்பிரமணிய அய்யர் வீட்டுக்கு வருவதே குறைந்து போனது. அந்த ராட்சசி துர்மரணப் பெண்டு மற்ற நித்திய சுமங்கலிகளை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு சுப்பம்மாள் மேலேறி அவளை இம்சிக்கிறது தாளாமல் எடுத்த முடிவு இது.

சுப்பம்மாள் வேண்டிக் கொண்டதால் ஜோசியர் நாணாவய்யங்கார் ஏகப்பட்ட கிரந்தங்களைப் பரிசீலித்துச் செப்புத் தட்டில் ஒரு யந்த்ரம் செய்து கொடுத்தார். கழுத்திலோ காதிலோ கட்டித் தொங்கப் போட்டுக் கொள்கிற தோதில் செய்து தருவதாக அவர் சொல்லி இருந்தாலும், மூலைக்கு ஒன்றாகத் தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்தச் சதுரத் தகடு முக்காலே மூணு மாகாணி அடி நீள அகலத்தில் முடிந்தது.

ஒன்று ரெண்டு தேவதைகள் ஆவாஹனம் பெறாவிட்டால் பரவாயில்லை என்று சுப்பம்மாள் சொல்லிப் பார்த்தாள். யந்திரத்தின் அளவு அதிகமாகிப் போகிறது தவிர, ஜோசியருக்குத் தர வேண்டிய காசும் கூடிக் கொண்டு போகிறது என்பதும் அதற்கு ஒரு காரணம்.

ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொரு பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிற்பதால் செப்புத் தகட்டை அளவு குறைக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் ஜோசியர்.

அந்த யந்திரத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டபோது விலகு – இது என்னோட இடம் – இது எனக்கு என்று தேவதைகள் அடிபிடி சண்டை போட்டது அவள் காதுகளில் கேட்டது. மூத்த குடிப் பெண்டுகள் அவர்களைச் சமாதானம் செய்து வைத்து எல்லோரும் கால் ஊன்றிக் கொள்ள வழி பண்ணினார்கள்.

கழுத்தில் எல்லாத் தேவதைகளும், சுற்றி மூத்த குடி நித்திய சுமங்கலிகளும் இருந்தபோது சாமாவைப் பிடித்தவள் சுப்பம்மாள் பக்கம் வரவில்லை தான். ஆனால், பத்து இருபது பேரைக் கட்டிச் சுமக்கும் போது சுப்பம்மா கிழவிக்குத் தாங்க முடியாத தோள் வலியும், இடுப்பில் நோவும் ஏற்பட்டது. மூத்திரம் சரியாகப் பிரியாமல் வயிறு கர்ப்ப ஸ்திரி போல் ஊதிப் போனது.

பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டி எடுத்துப் போவது போல் நடக்க சிரமப்பட்டு அங்கங்கே தடுமாறி விழும்போதெல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் பரிவோடு தூக்கி விட்டார்கள்.

அப்புறம் அவர்கள் ஆலோசனை சொன்னபடிக்கு தச்சு ஆசாரி சுப்பனிடம் சொல்லி ஒரு மர வண்டி செய்வித்து வாங்கிக் கொண்டாள் சுப்பம்மாள். இடுப்பில் கோர்த்த ஒரு கொச்சக் கயிறால் பிணைத்த அந்த வண்டி பின்னால் உருண்டு வர அவள் நடந்தபோது முதல் இரண்டு நாள் தெருவில் விநோதமாகப் பார்த்து அப்புறம் அடங்கிப் போனது.

மரப்பாச்சியைப் பொம்மைச் சகடத்தில் வைத்து இழுத்து வரும் குழந்தை போல் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தைச் சக்கரங்களுக்கு மேலே இருத்தி இழுத்துப் போவதை தேவதைகள் ஆட்சேபித்தார்கள். தெருவில் திரிகிற நாய்கள் பக்கத்தில் வந்து மோந்து பார்க்கும். காலைத் தூக்கும். குழந்தைகள் விஷமம் செய்வார்கள். எங்களுக்கு இது சரிப்படாது.

திரும்பவும் சுப்பம்மாள் சார்பில் மூத்த குடிப் பெண்டுகள் வாதாடி, பிரதிஷ்டையான தேவதைகளைச் சம்மதிக்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் அந்தப் பீடை தொந்தரவு அடியோடு ஒழிந்து விடும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் வேண்டியபோது அவர்கள் சார்பில் சுப்பம்மா நடுத்தெருவில் ஒவ்வொரு திசையாகப் பார்த்து புழுதியில் விழுந்து கும்பிட வேண்டிப் போனது.

இந்தப் பக்கம் மூத்த குடிப் பெண்டுகளும் பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு தேவதைகளுமாக அவள் நடந்தபோது ஒரு நிமிஷம் நின்று குரலெடுத்து அழுதாள். காசியில் எதை எதையோ விட்டதுக்குப் பதில் உசிரை விட்டுவிட்டு வந்திருந்தால் இந்த ஹிம்சை எல்லாம் இருக்காதே என்று ஒரே ஒரு நிமிஷம் தோன்றியதை மாற்ற மூத்த குடிப் பெண்டுகள் அவள் நாக்கில் இருந்து கொண்டு வலசியதி கிண்கிணி என்று அஷ்டபதி பாடி அவளைக் குதித்துக் கூத்தாட வைத்தார்கள்

நடுவில் ஒரே ஒரு நாள் யந்திரம் இல்லாமல் ஒரு பகல் பொழுதில் கல்யாணி அம்மாளைப் பார்க்க அவசரமாக அவள் போனபோது வாடி தேவிடியாளே என்று அந்த லங்கிணி சுப்பம்மாள் மேலே வந்து உட்கார்ந்து விட்டாள்.

நாணாவய்யங்கார் சுப்பிரமணிய அய்யருடன் உட்கார்ந்து சங்கரன் ஜாதகத்தையும், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் இளைய சகோதரி பகவதிக்குட்டி ஜாதகத்தையும் வைத்து நவாம்சமும் அலசிக் கொண்டிருந்த நேரம் அது.

இந்தச் சோழியன் உன்னை வச்சுண்டு இருக்கானா ?

சுப்பம்மாள் உள்ளே நுழைந்ததுமே வேறு குரலில் அலறிக் கொண்டு நாணாவய்யங்காரின் குடுமியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தாள். அவருடைய வற்றிய மாரில் எட்டி உதைத்துதாள். காரி வரவழைத்த சளியை முகத்தில் உமிழ்ந்தாள். பூணூலைக் கால் விரலில் மாட்டி அறுப்பது போல் போக்குக் காட்டினாள்.

அப்புறம் யாரோ சொன்னது போல் ஐயங்காரை உதட்டில் முத்தமிட யத்தனிக்க, ஜோசியர் ஏட்டை எடுத்துக் கொண்டு சமயம் சரியில்லே அய்யர்வாள். உங்காத்துக்குப் ப்ரீதி நடத்தணும். நான் வெகு சீக்கிரம் நடத்தித் தரேன். இந்தக் கிழவி பண்ணிக் கொடுத்த யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்காது என்று சொல்லி வெளியே அவசரமாகக் கிளம்பிப் போனார்.

சுப்பம்மா அவர் கொடுத்த யந்திரத்தை வைத்துக் கொள்ளப் புது இடம் கிடைத்து விட்டதாக அறிவித்து இடுப்புக்குக் கீழே காட்டிச் சிரித்தாள்.

இப்படி யந்திரத்தோடு போனால் ஒரு மாதிரியும் போகாவிட்டால் இன்னொரு மாதிரியும் அவஸ்தை தொடர்ந்ததால் சுப்பம்மாள் புகையிலைக்கடை அய்யர் வீட்டுக்கு வருவது குறைந்தே போனது.

இருந்தாலும் சங்கரனுக்குப் பொண்ணு பார்க்க மலையாளக் கரைக்குப் போக வேணும். க்ஷேத்ராடனமாக மதுரை, பாணதீர்த்தம், சுசீந்திரம் எல்லாம் தரிசித்துக் கொண்டு ஆலப்புழைக்குப் போகலாம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னதும் வேறு எதுவும் யோசிக்காமல் சரி என்று விட்டாள் அவள்.

ஆனாலும் ஜோசியர் நாணுவய்யங்கார் யோசனைப்படி, மடிசஞ்சியில் அந்த யந்திரத்தைப் பத்திரமாக எடுத்துப் போக மறக்கவில்லை அவள்.

எல்லோரும் சுப்பிரமணிய அய்யரின் வீட்டில் இருந்து புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் மாட்டு வண்டியை எதிர்பார்த்து சுப்பம்மாள் நாலு தெரு சந்திப்பிலேயே நார்ப்பெட்டியும், சஞ்சியுமாக நின்றாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2022 19:19

April 5, 2022

அரசூர் வம்சம் நாவலில் சென்னை துறைமுகம் 1860கள்

கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்

வந்தாண்டா வந்தாண்டா *யோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

ஊரில் கொட்டகுடித் தாசிக்கு இந்துஸ்தானி குருட்டுப் பாடமாகத் தெரியும். அவளுக்கு வெண்பாவும், தரவு கொச்சகக் கலிப்பாவும், விருத்தமும் கூட இயற்றத் தெரியும். கூளப்ப நாயக்கன் காதல் பாட்டுக்கு அபிநயம் பிடிக்கத் தெரியும். புகையிலை போடமாட்டாள். போட்டால் பல் கருத்துப் போய் தொழில் நசித்து விடும் என்ற பயமாம். சங்கரன் கடையில் அவளுக்கு வாங்க ஒன்றும் இல்லை. வாங்காட்டப் போறது. சுவர் கே பச்சே அப்படான்னா என்ன ?

அய்யரே, ஒரு சிமிட்டா பொடி மூக்குலே தள்றியா ?

சுலைமான் தந்தத்தால் ஆன சம்புடத்தைக் காற்றுக்கு அணைவாகக் கைக்குள் வைத்துத் திறந்தபடி கேட்டான்.

பெண்பிள்ளைகள் இதைப் போடுவாங்களோடா சுலைமான் ?

அய்யரே, உனக்கு என்ன எப்பப் பாத்தாலும் அங்கேயே போவுது புத்தி ?

சுலைமான் அவன் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான்.

மூணு மணி நேரத்துக்குள் கருத்தானைவிட நெருக்கமான சிநேகிதனாகி இருந்தான் சுலைமான். பணம் புரளும் சீமான் என்பதாலோ என்னமோ அவனையறியாமலேயே அதட்டலும், கிண்டல், கேலியுமாகப் பழகக் கை வந்திருந்தது. கருத்தான் ஒரு எல்லைக்கு மேல் போக மாட்டான். அவனுடைய அய்யர் சாமி அழைப்பு சங்கரனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலைமானுக்கு அவன் வெறும் அய்யர்தான். சீக்கிரமே டேய் சங்கரா என்றும் கூப்பிடக் கூடும். சங்கரனை விடப் பத்து மடங்கு காசும் பணமும் கப்பலில் வரும் வருமானமும் அவனுக்கு ஆகிருதியைக் கூட்டிக் காட்டுகிறது.

அவன் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கும் தான்.

விசாலமான வீட்டு வாசலிலே குரிச்சி போட்டு உட்கார்ந்து வெற்றிலைக்குள் புகையிலையோ வேறு எதோ கலந்து சுருட்டிக் கிராம்பு வைத்து அடைத்த பொட்டலத்தைச் சதா மென்று படிக்கத்தில் துப்பிக்கொண்டு இருந்த அவர் பார்வையில் சங்கரன் பட்ட கொஞ்ச நேரத்திலும் பணத்தைப் பற்றித்தான் பேசினார்.

மதுரைப் பட்டணத்திலே, திருச்சிராப்பள்ளியிலே, தஞ்சாவூரிலே, புதுக்கோட்டையிலே எல்லாம் பாக்குச் சீவல் விற்கவும், வாசனை விடயம் விற்கவும், மூக்குத்தூள் போல் சீக்கிரமே பிரக்யாதி ஏறிக் கொண்டிருக்கிற இலைச் சுருட்டு விற்கவும் யாரெல்லாம் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் பணம் வந்த விதம், அவர்களுக்கு எங்கெல்லாம் வைப்பாட்டிமார், எப்படிச் செலவாகிறது பணம் அந்த விஷயமாக, எவ்வளவு அண்டஞ் சேர்கிறது என்று பட்டியல் ஒப்பித்தபடி, பக்கத்தில் நிரம்பி வழிகிற படிக்கத்தில் துப்பியபடி இருந்தார் அவர்.

வீட்டுக் கூரை மேலும், மேல்தளத்திலும், வாசல் முகப்பிலும் சுவாதீனமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மேலே எச்சம் இடாமல் தோளை அப்படியும் இப்படியும் நகர்த்திக்கொண்டு அவன் மரியாதைக்கு இதைக் கேட்டுக் கொண்டிருந்க, மாடிக்குப் போன சுலைமான் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சங்கரய்யரே சங்கரய்யரே என்று உரக்க விளித்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2022 19:56

April 4, 2022

நகுலம் என்றொரு நீள்கவிதை 04/04/2022

மூத்த எழுத்தாளர் நகுலன் அவர்களுக்கு அவருடைய நண்பரும் எழுத்தாளருமான நீல.பத்மநாபன் அவர்கள் செலுத்தும் நீண்ட கவிதாஞ்சலி இது. நகுலம் என்று பெயர் இந்நீள் கவிதைக்கு,நகுலம் நூல் அறிமுகக் கட்டுரையாக நான் எழுதியது ஏப்ரல் 2022 அந்திமழை மாத இதழில் வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரை இது——————————————————————————————————-

                                                   நகுலம் பற்றி    (இரா.முருகன்)

எழுத்தாளர் நகுலனோடு பழகிய தன் அனுபவங்களை நகுலம் என்ற பெயரில் நீள்கவிதையாக எழுதியிருக்கிறார், இன்னொரு மூத்த எழுத்தாளரான நீல.பத்மநாபன்.  பத்மநாபனுக்குக் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தவர் நகுலன்.   அவர் இருந்தால், இப்போது நூறு வயது. நகுலனின்  நூற்றாண்டைக் கொண்டாடும் கவிதை நகுலம், அதே பெயரில் நூலாகக் காலம் கடக்கிறது.

தனக்கும் நகுலனுக்குமான மூன்று தசாப்தம் நீண்ட தோழமையை உரைநடையில் சொல்வது சித்திரை வெய்யில் நடுப்பகல் நேரத்தில் த்ரீ பீஸ் சூட் அணிந்து மின்விசிறி பழுதான அறையில் உட்கார்ந்தது போல் அசௌகர்யமாக உணர்ந்தோ என்னவோ  நாலு முழ வேட்டி பனியன் கோலமான சௌகர்யம் தரும் கவிதைக்கு மாற்றிக் கொண்டு நகுலத்தை நீண்ட கவிதையாக்குகிறார் நீல.பத்மநாபன். நினைவின், மொழியின் கரைகள் துல்லியமாக வரையறுக்கப்படாது, வாசகரும் இடைகலந்து வாழ்வனுபவத்தில் ஆழ இடம் கொடுக்கும் வசதியான ஊடகம் இது.

அடர்த்தியும், நெகிழ்ச்சியும், நீளமும், குறுக்கமும் உடையதாகவும்,   நனவிடைத் தோய்வதாகவும், நிகழ்வைச் சித்தரிப்பதாகவும் நினைத்தபடி படைப்பு உருவாக்கம் செய்ய கவிதை அவருக்கு இயல்பாகக் கைவருகிறது. கவிதையில் நாவலும், சிறுகதையில் கவிதையும் இயல்பாகக் கடந்துவரும்  நேர்த்தியான எழுத்து அவருடையது.

நகுலம், நகுலனை அறியத் தருகிறது என்பது ஒரு under statement. நகுலனைச் சுற்றி இருந்த அவர் குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவருக்குப் பணிவிடை செய்வதையே முழுநேரக் கடமையாக வரிந்து கொண்ட உதவியாளர் புறுத்தையை, நகுலம் எழுதிய நீல பத்மநாபனை என்று நகுலனோடு சம்பந்தப்பட்ட சகலரையும் பற்றி அறியத் தருகிறது நகுலம்.

”சொல்லியும் சொல்லாமலும் வாசகனின் கற்பனைக்கு இடம் கொடுக்கும் வசதிக்காகத்தான் கவிதை” என்று முன்னுரையில் சொல்கிறார் நீல.பத்மநாபன். வாசகனின் கற்பனையில், நீல பத்மநாபன் கவிதைக்குள் இடைவரி வெளியில் நகுலனின் அப்பா உத்தியோகத்துக்குப் போகிற பிள்ளையை மதிக்கிறவராக எழுந்து வருகிறார். அவருடைய இரண்டாம் மகன் பெரிய தொழில் நிறுவனத்தில் எழுத்தர் உத்தியோகம் பார்க்கிறதைப் பெருமையோடு பகிர்ந்து கொள்வது கேரளா ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி போர்டில் எஞ்சினியராக உத்தியோகம் பார்க்கும் நீல. பத்மநாபனோடு. நீல.பத்மநாபன் சந்திக்க வந்த நகுலன் துரைசாமி என்ற தம் மூத்த மகன்மேல் அவருக்கு அப்படியான மதிப்பும் மரியாதையும் இருப்பதாகத் தெரியவில்லை.

நகுலன் குடும்பம் பற்றிய சிறு சித்தரிப்பு இது-

நகுலன் அம்மா

தள்ளாமையின் அடையாளங்களுடன்

காணப்பட்டாலும் முகத்தில் ஐசுவர்யம்.

அப்பா உள்ளுக்கும் வெளித்திண்ணைக்குமாக

நடந்து கொண்டே இருப்பார்

வேலை இலக்ட்ரிஸிற்றி போர்டில் தானே

இப்படி ஏதாவது கேட்கத் தொடங்கும் முன்பே

ஆமாமுன்னு எத்தனை தடவை அவர் சொல்லிவிட்டார்

என்று இடைமறித்துச் சொல்வார் நகுலன்.

ஸ்கூட்டர் பக்கம் போக இவன் இறங்கும்போது

பார்த்துப் போங்க ஏதாவது கிடக்கும் என்று

எச்சரித்தபடி வெளிவராந்தாவில் வந்து நின்றுகொண்டு

டார்ச் ஒளிபாய்ச்சும் நகுலன்.

உள்ளிருந்து வரந்தாவுக்கு வந்த நாராயணன் (நகுலன் தம்பி கேட்பார்)

புதிதாக எலக்ட்ரிக் கனெக்‌ஷன் கிடைக்க

கஷ்டம் ஒன்றும் இல்லையே

இதற்கு முன்னாடியும் இவனிடம் இதைக் கேட்டிருக்கிறார்

கஷ்டமொண்ணும் இல்லை

முன்பு சொன்ன பதிலையே இப்போதும் சொன்னான்.

(தனிக் குடித்தனம் போக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் அவர்)

பிரமிள் இறுதிக் காலத்தில் அவரிடம் பரிவு காட்டிப் பணிவிடை செய்ய எங்கிருந்தோ வந்த இளைஞன் போல, நகுலனுடைய கடைசிக் காலத்தில் அவரிடம் எதுவும் எதிர்பார்க்காமல் பரிவும் அன்பும் ஆதரவும் தர எங்கிருந்தோ வந்து சேர்ந்த புறுத்தை நகுலம் கவிதையில் மனதைப் பிடிக்கிறார். அவருக்குச் சொந்தப் பெயர் என்ன என்பதையோ, யாரெவர் என்பதையோ பற்றி ஆராய்ச்சி செய்ய, தேடியடைய தேவை இன்றி புறுத்தை என்று நகுலனோ வேறு யாரோ அவருக்குச் சூட்டிய பெயரோடு வலம் வந்த புறுத்தையின் உண்மைப் பெயர் கோமதி என்று தெரியவரும்போது நகுலனின் புலன்கள் அடங்கிக் கொண்டிருந்தன.

உரைநடையில் இரண்டு பக்கமாவது நடக்கும் இந்த நிகழ்வுகளை பத்திருபது வரிகளில் இறுக்கமும் சுருக்கமும் நெகிழ்ச்சியுமான கவிதையாகத் தருகிறார் நீல.பத்மநாபன்.

நகுலன் என்று ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று நீல.பத்மநாபன் நகுலனை விசாரிக்கிறார். அவர் கெக்கே என நகைத்து, ஏன் இது நல்ல பெயர் இல்லையா என்று கேட்கிறார். நல்ல பெயர்தான், இருந்தாலும்… சகுனியிடம் சாத்திரங்கள் கற்று, பாண்டவர்களில் பின் வரிசையில் இருந்த நகுலனும் சகாதேவனும் இல்லாமல் மகாபாரதம் ஏது?

நகுலன், நீல பத்மநாபன் இருவருக்கும் நல்ல நண்பரான இன்னொரு கவிஞர் ஷண்முக சுப்பையாவின் கவிதையின் நடுவில் இருந்து பகர்த்தியது இது– அணைக்க ஒரு அன்பில்லாத மனைவி,

அன்பு செலுத்த நோய் பாதித்த இரு குழந்தைகள்,

இருக்க ஒரு சௌகரியமில்லாத வீடு,

பார்க்க ஒரு திருப்தி தராத உத்யோகம்

என்றாலும் இந்த வாழ்க்கை சலிக்கவில்லை

என்று வரும் கவிதைத் துண்டில் கடைசி வரியில் கவிஞர் தம் வாழ்வில், உலகில் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கிறார். நீல.பத்மநாபனும் தான். நகுலனுக்குக் கிடைக்காத குடும்ப வாழ்க்கையின் பிரியமும், எரிச்சலும், இன்பமும், துயரமுமான கணங்களின் தொகுப்பு இது.

பெயர் குறித்த நண்பர்களில் மற்றும் ஒருவர் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.

நம்பிக்கு நல்ல மனோபலம் தான்

ஒருகாலை ஆம்ப்யூடேட் பண்ணின பிறகும்

அது பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதாய்க் காட்டிக் கொள்வதில்லை

நட்பு கனிந்து நகுலனும் நீல பத்மநாபனும் சில தடவை ஷண்முக சுப்பையாவோடு நாகர்கோவிலுக்கு சுந்தரராமசாமி வீட்டுக்குப் பயணம் வைக்கிறார்கள். இலக்கிய விவாதம். வாதப் பிரதிவாதங்கள். வாசகர்களின் ரசனையை மழுங்கடிக்கும் வியாபாரப் பத்திரிகைகள் பதிப்பகங்கள் பற்றிய தார்மீகக் கோப வெளியிடல்கள் என்று  நேரம் ஆழ்ந்த உரையாடலில் கழியும்.

கவிதையில் சந்தம் போன்ற கட்டுமானங்களைத் தவிர்த்து விடுகிறார் நீல பத்மநாபன். இது நகுலன் கவிதை பாணியும் ஆகும் என்பது கவனிக்க வேண்டியது.

உள்ளூர் தமிழ்ப் பத்திரிகை வஞ்சிநாட்டில் நகுலன் கவிதை

அச்சுதா என்றால் என் குச்சுநாய் ஓடிவரும்

அப்படீன்னு தொடங்கும் சாரின் கவிதை வாசித்தேன்

இதற்கு சட்டென்று நகுலன் பதில் சொன்னது-

இந்த மாதிரி ஓசை நயமுள்ள கவிதைகள்

நான் இப்போதெல்லாம் எழுதுவதில்லை…..

இன்றைய பரபரப்பான சூழலுக்கு வேறுபட்ட 1950களின் சூழல் நகுலம் கவிதையில் அடர்த்தியான பின்புலமாக இழைந்து வருகிறது இப்படி-

//

வரிசையான கடைகளின் நடுவில் ஒரு பெட்டிக்கடை

அங்கே நின்று வெற்றிலை பாக்கு போட்டுவிட்டு வரும் நகுலன்

//

சுந்தர் ராமசாமி வந்திருக்கார் காரிலிருக்கார்

காரை எங்கே போடலாம்னு கேட்கறார்

எதிர்ப் பக்கமிருக்கும் அக்ரஹாரத்தில் போடலாமே

//

மங்கலான மின்விளக்கொளியில்

நேரம் போவது தெரியாமல்

சுவாரசியமான இலக்கிய சர்ச்சை

கூடவே கொஞ்சம் பரதூஷணை

முடித்துக் கொண்டு வெளியே இறங்கும்போது

இருட்டில் கிடக்கும் காடுபிடித்த சற்று நீண்ட முற்றம்.

//

மணி ஒம்பதாகி விட்டது நம் ரெண்டு பேர்க்கும்

சைக்கிள் சவாரி செய்து வீடு போய்ச்சேர

ஒரு மணி நேரமாவது வேணும்

//   கவடியார், கோல்ட் லிங்க்ஸ் வீடு என்ற விலாசத்தில் அமைந்த நகுலனின் இல்லத்தில் அவரைச் சந்திக்க நண்பர்கள் வருகிறார்கள். எல்லோரும் சாத்வீகமாக நீல.பத்மநாபன் போல் சிறிய ஓமப்பொடிப் பொட்டலத்தோடு வருவார்களா என்ன. நகுலனுக்கு குடி விருப்பம் என்ற நொண்டிச்சாக்கோடு தன் சொந்த விருப்பத்தையும் தீர்த்துக் கொள்ள மது போத்தலோடு வந்து நிற்கிறார்கள் அதில் சிலர்.

புறுத்தை  சொல்கிறாள்-

நேற்று வந்தவர் அடிக்கடி வருகிறவர் தான்

அவருடன் பாட்டில் தீர்கிறவரை பேசிக்கொண்டிருந்தார்

இவர் வாந்தி எடுக்கத் தொடங்கி விட்டார்

கழுவி விட்டுக் கழுவி விட்டுக் கையெல்லாம் வலிக்குது.

படைப்பாளிகளுக்கு இடையேயான  ஓர் இலக்கியப் பாலம் நகுலன் என்கிறார் நீல.பத்மநாபன். ஷண்முகசுப்பையாவும் நகுலனும் சைக்கிளில் நண்பர்களை சந்திக்க சென்றதெல்லாம் பாலம் போட்டதின் பகுதிதான்.

மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கர், விமர்சகர் ரவிகுமார் ஆகியோருக்குத் தமிழ் இலக்கியத்தோடு தீர்க்கமான நிகழ்காலப் பரிச்சயம் ஏற்பட இந்தப் பாலம்தான் காரணம்.

நல்ல நண்பர் தகுதிக்குரிய புறுத்தை ஒரு  கோட்டோவியமாக நகுலத்தில் எழுகிறாள்.

(ஷண்முக சுப்பையா சொன்னது)

வீட்டிலே துணைக்கு புறுத்தை இருப்பதற்கு

இவர் புண்ணியம் செய்திருக்கணும்

நம்ம வாழ்க்கைத் துணைகள் கூட இந்த அளவுக்கு

உதவுவார்கள் என்று தோன்றலை.

நோய் மூர்க்கமாகத் தாக்க, நகுலனுக்குத் தன்னை, சூழ்ந்தவரை யார் என்று தெரியாமல் போகிறது. பிரக்ஞை வெளியில் வெற்றிடமெழப் பேந்தப் பேந்த முழிக்கிற அவரைச் சந்திக்கச் சென்று பழகாமல் இருப்பதே பேரன்பைக் காட்டும் செயலாகச் சித்தரிக்கிறார் நீள்கவிதையில்.

நோயுற்ற நகுலனின் அந்தம் நெருங்குகிறது. அவருடைய மரணத் தருவாயில்  சந்திக்க  மனதைத் திடப்படுத்திக்கொண்டு நீல.பத்மநாபன் மருத்துவமனைக்குப் போகிறார். ”நீல.பத்மநாபன் வந்திருக்கார்’. படுத்திருக்கும் நகுலனிடம் யாரோ சொல்கிறார்கள். நாற்காலியைப் பிரித்துப் போட  அமர்கிறார் நீல.ப. பாதி கவிந்த கண்களோடு வெறித்தபடி நகுலன் நீல பத்மநாபனின் கையைப் பிடித்துக் கொண்டு துயரத்தைச் சொல்லும் அவர் விழிகளை நோக்குகிறார்.

இதை உரைநடையாக எவ்வளவு எழுதினாலும் திருப்தி வராது. ஆனால் அந்த இறுக்கத்தையும், நெகிழ்ச்சியையும், வார்த்தைகள் நடுவில் வராத மௌனமான உரையாடலையும் பத்து வரிகளில் கவிதை எடுத்துச் சொல்லி நிலைக்கிறது. ஹென்றி கார்ட்டியர் பிரஸ்ஸனின் புகைப்படமா ரெம்ப்ராண்டின் ஓவியமா என்று கேட்டால் பக்குவமடைந்து வரும் மனம் பிரஸ்ஸனைத் தேர்ந்தெடுக்கும். நுண்கலைகளிலும் இலக்கியத்திலும் ஊறிய மனம் ரெம்ப்ராண்டின் ஓவியத்தைத் தேர்ந்தெடுப்பது இயல்பானதல்லவோ.

நீல.பத்மநாபன் எழுதிய மலையாளக் கட்டுரை ’நகுலன் டி கே துரைஸ்வாமி’, ரவிகுமார் எழுதிய நனவிடைத் தோயும் ‘ஓர்மயுடெ வழி’ மலையாளக் கட்டுரை ஆகியவை தமிழிலும் மொழிபெயர்த்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் நூலில் மலையாள மொழிக் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது ஒரு புதுமைதான்.

தம் கவி நண்பர் ஷண்முக சுப்பையா பற்றி  நகுலனும், நீல.பத்மநாபனும் உரையாடியது எழுத்து வடிவமாக இடம் பெற்ற இந்நூலில் நகுலனின் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் பற்றி நீல.பத்மநாபன் எழுதிய சுருக்கமான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. நீல.பத்மநாபனோடு நகுலன் நடத்திய நேர்முகமும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

மலையாளத்தில். அதிகம் பேசப்பட்ட ஐயப்ப பணிக்கரின் நெடுங்கவிதை குருக்‌ஷேத்ரம்.  தமிழிலும் ஒரு குருக்‌ஷேத்ரம் உண்டு. அது  நகுலன் தொகுத்த  தமிழ்ப் புதுக் குரல்கள் கவிதை இலக்கியத் தொகுப்பு. அந்நூலின் பின் அட்டையில் நகுலன் சொல்கிறார்

// ஒவ்வொரு புதுக்குரலும் ஒரு எதிர்க் குரலாகவே

தொடக்கம் எய்தி இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறது

ஒரு புதுக்குரல் வெறும் எதிரொலியாக மாறுகிறபோது அதன் அடிப்படை ஆற்றல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது

//

புதுக்குரல்கள் – குருக்‌ஷேத்ரத்தில் இருந்து கடந்து வந்த, எந்தக் காலத்துக்கும், சமூக, கலாச்சார, இலக்கியச் சூழலுக்கும் பொருத்தமான வரிகளை  நகுலம் வாசகர் சிந்தையில் விதைத்துப் போகிறது.

நூல் : நகுலம் (நீள் கவிதை) ஆசிரியர் நீல பத்மநாபன்

விருட்சம் சென்னை வெளியீடு விலை ரூ 100  அலைபேசி 9444113205

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2022 17:22

April 3, 2022

அரசூர் வம்சம் நாவலில் வைகை நதி (அரசூர் நான்கு நாவல் வரிசை)

சுந்தர கனபாடிகள் வைகை நதியோடு போய்க் கொண்டிருந்தார்.

சுத்த ஜலம் பிரவாகமாக இரு கரையையும் அடைத்துக் கொண்டு நுங்கும் நுரைப்புமாகப் பொங்கி வழிந்து ஓடியதன் சுவடுகள் ஈர மணலில் அழிந்தும் அழியாமலும் தடம் விரிக்க, வற்றி இளைத்துப் போன நதி சின்னச் சாரைப் பாம்பாக சலித்துக் கொண்டே அசைந்து போனது.

கரையோரம் வெகுதூரம் போய், புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக் கொள்ள வந்தபோதே நதியடி மணலை நாட வேண்டிப் போனது.

நதியெல்லாம் தெய்வம். இப்படி பிருஷ்டம் சுத்தப்படுத்தவா பகவான் அதுகளைப் படைத்து விட்டிருக்கிறான் ? ஜீவாத்மா பரமாத்மாவில் கலக்க விரசாகப் போவது போல் அதெல்லாம் சமுத்திரத்தைப் பார்க்க ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்த வைகை மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக, கிராமதேவதைக்கு நேர்ந்து கொண்ட மாதிரி எங்கேயோ கண்மாயிலோ ஏரியிலோ போய்க் கலக்கிறதாம்.

சுந்தர கனபாடிகளுக்கு பூகோளம் தெரியாது. நாணாவய்யங்கார் சொல்லி நேற்றைக்குக் கேள்விப்பட்டதுதான். வேதபாடசாலையில் அதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறதில்லை. ருத்ரமும் சமகமும் ரிக்கும் யஜூரும் தான் அங்கே நாள் முழுக்க. கனபாடிகள் சாம வேதியான காரணத்தால் அவருக்கு உபரியாக அந்த அத்தியாயனமும் உண்டு.

ஓலைச் சுவடியில் கிரந்த எழுத்தில் எல்லாம் இருக்கும் என்றாலும் யாரும் சுவடியைத் திறந்து வைத்துக் கொண்டு கற்பிப்பதுமில்லை. கற்றுக் கொள்வதுமில்லை. காதால் கேட்க வேணும். மனதில் கிரகித்து வாங்கிக் கொள்ள வேணும். அப்புறம் பல தடவை உரக்கச் சொல்லிப் பழக வேணும்.

பிரம்மஹத்தி. உஷஸ்னு உன் நாக்கெழவுலே வராதா ? தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க. உசஸ்ஸாமே. சவண்டிக்கு ஒத்தனாப் போறதுக்குக் கூட ஒனக்கு யோக்கியதை இல்லை.

சுந்தர கனபாடிகள் சிரித்துக் கொண்டார். அடித்தும், தலைமயிரும் தலைக்குள்ளே இருக்கப்பட்ட மூளையும் எல்லாம் வெளியே தெறித்து விழுவது போல் அப்பளக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரையில் மோதியும் பாடசாலையில் அவருக்கு சாமவேதம் கரைத்துப் புகட்டிய ஈஸ்வர ஸ்ரெளதிகளின் சவண்டிக்கு ஒத்தனைப் பிடிக்க மழைநாளில் அவர் தான் பல வருஷம் முன்னால் காடு மேடெல்லாம் திரிந்து நடக்க வேண்டிப் போனது.

முழங்காலையும் மறைத்து இடுப்பு வரை ஆழத்துக்கு நீர் உயர்ந்த இடத்தில் கொஞ்சம் நின்றார் சுந்தர கனபாடிகள்.

இதுக்கும் மேல் இங்கே தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. நாலு முழுக்குப் போட்டு விட்டுக் கரையேற வேண்டியதுதான்.

நர்மதே சிந்து காவேரி.

குளித்து வந்து வீபுதிச் சம்படத்தைத் திறந்து குழைத்து நெற்றியிலும் மாரிலும் தோளிலும் பூசிக் கொண்டார். இப்படியே ஈர வஸ்திரத்தை உலர்த்தியபடிக்கு மணல் வெளியில் ஏகாங்கியாக நிற்க மனதுக்கு ரம்மியமாக இருந்தது. அடிக்கிற காற்றில் பூவாக அது உலர்ந்ததும் பஞ்ச கச்சமாக உடுத்திக் கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரர்களைப் பார்க்க நடையை எட்டிப் போட வேண்டியதுதான்.

நடந்து நடந்து நடந்தே தான் ஜீவிதம் முழுக்கப் போய்க் கொண்டிருக்கிறது. தர்ப்பைக் கட்டைத் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கம் ஏழு கிராமம் புஞ்சைக் காட்டு வரப்பில் நடக்க வேணும். சீத்தாராமய்யன் பிதாவுக்கு புரட்டாசி திரிதியையில் திதி. குத்திருமல் நோக்காட்டோடு திண்ணையே கதியாகக் கிடந்து உயிரை விட்ட சிவராமனைப் பெற்றவளுக்கு மார்கழி பிரதமையன்று வருஷாந்திரம். சோமசுந்தரமய்யன் பெண்டாட்டி சிவலோகம் புறப்பட்டுப் போய்க் கல் ஊன்றிக் காரியம் செய்ய மூணாவது நாள்.

யாருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ சுந்தர கனபாடிகள் சகலமான சாவுகளையும் அது கழிந்து போய்ப் பல வருஷம் ஓடின பிறகும் நினைவு வைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாவோடு சம்பந்தப்பட்ட கிரியைகளைச் செய்விக்கக் கால் தேயச் சகல திசையிலும் ஓடி நடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நடை நிற்கும்போது அவருக்காகச் சாப்பிட ஒத்தனைத் தேடி யார் நடப்பார்களோ தெரியவில்லை. அதுவரை தர்ப்பைக் கட்டும் மடிசஞ்சியில் ஒற்றை வாழைக்காயும் அரிசியும் உளுந்தும் பயறும் தலையில் எள்ளுமாகக் கால்நடைதான்.

சதாசிவ பிரம்மேந்திரர் போல் நடந்து கொண்டே, பாடிக் கொண்டே சன்னியாசியாகப் போய்விட்டால் என்ன ? எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல், வருத்தப்படாமல்.

வைகைக் கரையில் தானே அவர் கையை வெட்டி எறிந்தார்கள் ? ராஜாவின் அந்தப்புரத்துக்குள் சுய நினைவு தப்பிப்போய், இடுப்பில் துணி இல்லாமல் ஈசுவர தியானத்தில் திளைத்துப் பாடிக் கொண்டே நுழைந்த குற்றத்துக்கான தண்டனை இல்லையோ அது ?

அது என்ன பாட்டு ? மானச சஞ்சரரே. சம்ஸ்கிருதம் தான். சுந்தர கனபாடிகளுக்குக் கரைத்துப் புகட்டியிருக்கிறார்கள். மானச சஞ்சரரேக்கு அப்புறம் அடுத்த அடி என்ன ?

அமாவாசைத் தர்ப்பணம் செய்ய எள்ளோடும் தண்ணீரோடும் இரைத்து விடும் மந்திரம் தான் நாக்கில் சட்டென்று வருகிறது.

திவசப் பிராமணனாகவே ஜீவிதம் முடியப் போகிறது.

தீபாவளிக்குக் கோடி வஸ்திரம் உடுத்தியானதும் அதை அவிழ்த்து வைத்து விட்டுத் ஊரோடு தர்ப்பணம் செய்யப் பவித்திரம் மாட்ட ஓட வேண்டி இருக்கிறது.

நவராத்திரிக் கொலுவுக்கு மூச்சு வாங்க சேந்தியிலிருந்து பொம்மைப் பெட்டியை இறக்கும்போது யாராவது போய்ச் சேர்ந்து தகனத்துக்கு வரச் சொல்லி வாசலில் வந்து நிற்கிறார்கள்.

விஷ்ணு இலையில் அப்பமும் எள்ளுருண்டையும் சரியாக வேகாத சாதமுமாக ஹோமப் புகை சுற்றி வரும் வீடுகளுக்குள் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தட்சிணையோடு திரும்பி வந்ததும் ராத்திரி சாப்பிடாமல் படுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மோர்க்களி சாப்பாட்டில் சேர்த்தி இல்லை, சத்து மாவு உருண்டை ராத்திரி பட்சணம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மற்ற வைதீகர்கள் சமாதானம் சொன்னபடி ராத்திரி ஏதேதோ சாப்பிடுகிறது போல் சுந்தர கனபாடிகளால் முடியாது. திவசத்துக்கு இறங்கி வந்தவர்கள் யாருடைய பித்ருக்களாக இருந்தாலும் இங்கே எல்லாம் முடித்து விட்டுப் போனவர்கள். இல்லை, அவசர அவசரமாக போதும் போயிடு என்று அனுப்பப் பட்டவர்கள். அவர்களின் பிரதிநிதியாக எள்ளைத் தலையில் போட்டுக் கொண்டு பூணூலை வலம் இடமாகத் திருப்பி மாட்டிக் கொண்டவன் கொடுக்கும் மரியாதைகளை ஏற்றுக் கொள்கிற வைதீகன் சுந்தர கனபாடிகள்.

அவர்கள் சார்பாகத் தான் அப்பமும் வடையும் மிளகுக் கறியும் மற்றதும். அது கழித்தால், ராத்திரி போஜனம் செய்யக் கூடாது என்று எழுதாத விதி. மீறிப் பண்ணினால், அந்த ஆத்மாக்கள் பசியோடு அலையும் என்றார்கள் பாடசாலையில் அவருக்குக் கற்பித்தவர்கள்.

ஒரு சத்து மாவு உருண்டை இன்னொருத்தனை, அவன் உயிரோடு இருக்காவிட்டாலும், பட்டினி போடும் என்றால் சுந்தர கனபாடிகளுக்கு அது வேண்டாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2022 20:11

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.