Jeyamohan's Blog, page 140

March 28, 2025

கதைசொல்லியின் தளம், கடிதம்

வணக்கம் ஐயா,

நான் உங்களின் சோற்றுக்கணக்கு மற்றும் மாடன் மோட்சம் கதைகளை கிட்டத்தட்ட நான் கற்பித்த அனைத்து வகுப்புகளிலும் சொல்லியிருக்கிறேன். 

Corona காலத்திற்கு பிறகு இது நின்று விட்டது. 

இந்தப்பதிவு 2017ம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பணியில் இருந்த போது சொல்லியது. 

மாணவர்களின் சிரிப்பு சத்தம் வரை பதிவாகியுள்ளது. ஆனால் மொத்தமாக ஒலித்தரம் குறைவு தான். 

மாடன் மோட்சம் நாடகமாக அரங்கேற்றப்பட்ட பின்னர் தான் இந்த பதிவை youtube ல் ஏற்றி வைக்கலாம் என்று தோன்றியது. 

அப்படியே கொஞ்சம் கதைகள், அப்புறம் பொதுவாக நான் மாணவர்களுக்கு சொல்லி வந்த விஷயங்களையும் பதிவு செய்து வைக்கலாம் என்று இந்த channelஐ தொடங்கி விட்டேன். 

நன்றி

மிக்க அன்புடன்

மருது.

https://m.youtube.com/watch?v=vGJItJItSMA

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:31

Can we manage our brain?

In the recent past, there are growing talks about our lapse in concentration and our inability to retain memory. You have also shared your experience and have written about, how to get back our lost focus , hence perform tasks for longer duration. On  thinking further along these lines, I have a question for you : ” Can we manage our brain ? Can we control our brain ?”

Can we manage our brain?

தங்கள் காணொளிகளில் ஒரு விரைவு எப்பொழுதும் தென்படுவதை பார்க்கிறேன்.சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாக ஆனால் விரைவாக வெளிக்கொண்டு வந்து விடுவீர்கள். பொதுவாக ஆன்மீக உரையாற்றுபவர்கள் மென்மையாக ,மெதுவாக பேசுவார்கள் என்ற தன்மை உண்டு.அதிலும் அவர்கள் சொல்லாமல்  விட்ட கருத்துக்கள் உண்டு.

தத்துவமும் மதமும், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:30

March 27, 2025

அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்தரபாண்டியன்

முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன். இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன். மூளை சூடாகாமல், இயல்பாக வாசிக்கத்தக்கவை. வணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவை. நம்மை சிறுவனாக உணரச்செய்பவை. குறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன். என் நண்பர் கடலூர் சீனு, ஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.

ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவை. சினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறது, அதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லை. ஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும், என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளது. ஆகவேதான் இந்த மோகம்.

முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 22:33

மழையும் வேதமும்

சென்ற மழையில் எடுத்த காணொளி. மழையில் இருந்து வேதங்கள் நோக்கி ஒரு பயணம். வேதம் என்பது ஒரு மழை. விருஷ்டி என வேதங்களை கவிஞர் விவரிப்பதுண்டு. விண்ணிலிருந்து இறங்கும் பேரருள். நாம் இங்கே வாழவேண்டும் என வான் எண்ணுவதன் சான்று.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:36

அரதி, இளங்கோ கிருஷ்ணன், சில எண்ணங்கள்

இளங்கோ கிருஷ்ணன் தமிழ் விக்கி

சில நாட்களுக்கு முன் நண்பர் லக்ஷ்மி சரவணக்குமார் குடி பற்றி எழுதியிருந்த ஒரு பதிவைப் பகிர்ந்து என் இணைக்கருத்தைச் சொல்லியிருந்தேன். (குடி, லக்ஷ்மி சரவணக்குமார்) அதைப்போன்ற ஒரு கட்டுரை நண்பர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியது. என் கவனத்துக்கு வந்த இக்கட்டுரையை அவர் 2019 வாக்கில் எழுதியிருக்கிறார். இப்போதும் நிலைமை மாறவில்லை என்று அண்மையில் மீள்பதிவு செய்திருக்கிறார்.

அரதி என்னும் புகழ்பெற்ற கட்டுரையை நான் 2009 ல் இந்த தளத்தில் எழுதினேன்.  தொடர்ச்சியாக வாசகர் கடிதங்களும் அதற்கு வந்தன. (அரதி கடிதங்கள்) அந்தக் கட்டுரை பலமுறை பல இடங்களில் பிரசுரமாகியுமுள்ளது. அன்று சமூகவலைத்தளங்கள் இத்தனை வீச்சுடன் இல்லை. யூடியூப் இப்படி ரீல்ஸ் வரை வந்து நம்மை ஆட்கொண்டிருக்கவில்லை. இன்று அக்கட்டுரையின் பொருள் வீச்சு கொண்டிருக்கிறது. அன்று மாற்றங்களுக்கு எதிராக புலம்பும் ஒரு பழமைவாத, ஒழுக்கவாத நோக்கு என அதைச் சொன்னவர்கள் இன்று அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை.

இளங்கோ கிருஷ்ணனின் கட்டுரை இரு படிகள் கொண்டது. படைப்பூக்கத்துக்கும் அரதிக்குமான தொடர்பை அவர் சொல்கிறார். அந்த இக்கட்டை நேருக்குநேர் எதிர்கொள்ளமுடியாமல் செய்யும் சமூகவலைத்தளச் சூழல் என்னும் புறநெருக்கடியை, அதில் சிக்கியபின் வெளிவரமுடியாத கையறுநிலையை விவரிக்கிறார். அனுபவவிவரணை என்பதனாலேயே மிகுந்த மதிப்புகொண்ட வாக்குமூலம் இது.

இக்கட்டுரையை ஒட்டி என் எண்ணங்களை மீண்டும் சொல்லத் தோன்றுகிறது. அரதி என்பது படைப்பு மனநிலையின் ஒரு பகுதி. அதற்கான காரணம் இதுவே. நாம் எழுதவிருக்கும் ஒரு படைப்பு, நம்முள் கரு என முகிழ்த்துவிட்ட ஒன்று, அசலானது என்றால் அதற்கு நாம் இதுவரை எழுதிய எந்த வடிவமும் பொருந்தி வராது. புதியதாகத்தான் கண்டடையவேண்டும்.

அந்த வடிவத்தை கண்டடைவது எளிது அல்ல. ஏனென்றால் அதை எழுதினால்தான் கண்டுபிடிக்கமுடியும். ஆனால் அந்த வடிவத்தின் ஒரு சிறு தொடக்கமாவது நம்முள் இல்லை என்றால் நம்மால் அதை எழுத ஆரம்பிக்கவும் முடியாது. இது எழுத்தின் அவஸ்தைகளில் ஒன்று. எழுத ஆரம்பிப்போம், சரியாக வரவில்லை என்று வீசிவிடுவோம். மீண்டும் மீண்டும் முயன்று ஒரு கட்டத்தில் சலிப்பும் கசப்பும் அடைவோம்.

இச்சூழலில்தான் எழுத்திலிருந்து விலகிக்கொள்கிறோம். சிறிய விஷயங்களில் திளைக்கிறோம். அந்தச் சிறிய விஷயங்களில் திளைக்கையில் நம் ஆழ்மனம் துழாவிக்கொண்டே இருக்கிறது, அந்த வடிவம்தான் என்ன? எப்போதோ பிடி கிடைத்துவிடுகிறது. ஆரம்பித்துவிடுகிறோம். சிலசமயம் கடைசிவரை பிடிகிடைக்காமல் அந்தப்படைப்பு எழுதப்படாமலேகூட போகலாம். ஒன்றும் செய்யமுடியாது, அதன் விதி அவ்வளவுதான்.

இந்தக் காலகட்டத்தில்தான் trivia எனப்படும் விஷயங்களில் கலைஞனின் ஆர்வம் செல்கிறது. அந்த சிறிய விஷயங்கள் அவனை அப்படியே பிடித்து நீண்டதூரம், நீண்ட காலம் கொண்டுசெல்லும் என்றால் அந்தப்படைப்பை உருவாக்கும் மனநிலையை விட்டு அவன் மிகமிக விலகிவிடுவான். திரும்பிப் பார்த்தால் அந்தப் படைப்பு எங்கோ பின்னால் கிடக்கும். மீண்டும் அங்கே சென்று சேரவே முடியாமலாகிவிடும். அப்படியே தொலைந்துபோய்விட நேரிடும்.

இதைத்தான் சமூகவலைத்தளங்கள் செய்கின்றன. ஏன்? ஏனென்றால் அங்கே கலைஞன் அவனுடைய ‘சிறிய விஷயங்களுக்காக’ நுழையும்போது அங்கு குவிந்துகிடக்கும் சிறிய மனிதர்களின் உலகில் நுழைகிறான். அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. அவர்கள் எந்த பெரிய செயலையும் செய்துகொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு எந்தக் கனவுகளும், திட்டங்களும் இல்லை. அவர்களின் உலகியல் இந்த சிறியவிஷயங்களின் சின்ன சுவாரசியம்கூட இல்லாத அன்றாடம். ஆகவேதான் இங்கே வந்திருக்கிறார்கள்.

அவர்கள் தனிநபர்களாகச் சாதாரணமானவர்கள். ஆனால் ஒற்றைப்பெருந்திரளாக பேராற்றல் கொண்டவர்கள். அவர்களுக்கு இன்றைய தொழில்நுட்பமும் சாதகமாக உள்ளது. அவர்களுக்காகவே இன்றைய தகவல்தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஏற்கனவே மோதிக்கொண்டுதான் இருக்கிறான் கலைஞன், அதை கடந்தே அவன் தன் உலகை அமைக்கவேண்டியிருக்கிறது. சிறியவிஷயம் என நம்பி அவன் அதற்குத் தன்னை அளிக்கையில் பல்லாயிரம் கைகளால் இழுத்துச்செல்லப்படுகிறான்.

இன்றைய தகவல்தொழில்நுட்பம் உருவாக்கும் சமூகவெளி என்பது கலைஞனுக்கும் அருஞ்செயல்களுக்கும் முற்றிலும் எதிரானது. எதிலும் நீண்டநாள், நீண்டநேரம் ஈடுபடாதே என்றும்; தனிப்பட்ட சாதனைகளில் ஈடுபடாதே என்றும்; முப்பது நொடிகளுக்குள் இடம்மாறும் கவனம் உனக்குப் போதும் என்றும்; அதுவே உன்னை வெறும் நுகர்வோர் மட்டுமாக நிலைநிறுத்தும் என்றும் அது ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஆகவே சமூகஊடக வெளி அவனுக்கு வெளியேவர முடியாத பொறியாக உள்ளது. இரண்டுவகையில் அவனை அது கட்டிப்போடுகிறது. ஒன்று, அது அவனைச் சீண்டுகிறது. அங்குள்ள சிறுமைகளும், எதிர்மறையம்சங்களும் அவனை எரிச்சலூட்டி எதையாவது எழுதச்செய்கின்றன. அதற்கு எதிர்வினைகள் எழுகின்றன. அந்த எதிர்வினைக்கு அவன் மீண்டும் எதிர்வினை ஆற்றுகிறான். அது அவனை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கிறது

இரண்டாவதாக, கலைஞன் தனிமையில் இருக்கையில் அவனுக்கு ஒரு சிறு சுற்றத்தை சமூக ஊடகவெளி உருவாக்கி அளிக்கிறது. அவர்கள் தன் கலையுலக சகாக்கள் என நினைத்துக்கொள்கிறான். அது மாயை. கலைஞனுக்கு அவன் கலையை உணர்வோர் மட்டுமே தோழர்கள். எழுத்தாளனுக்கு வாசகர்கள் மட்டுமே இணைப்பயணிகள். அவர்கள் மிகச்சிலரே இருக்கலாம். ஆனால் அவர்களையே நம்பவேண்டும். வெட்டி அரட்டைக்கான கூட்டம் அதற்கு ஈடு செய்யாது.

தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் அந்தத் தனிமையை தவிர்க்கவே முடியாது. அதை எதிர்கொண்டே ஆகவேண்டும். தன் வாசகர்களைச் சந்திப்பதற்குரிய வழிகளை அவன் உருவாக்கிக்கொள்ளலாம். அவர்களுடன் இருக்கலாம். சகபடைப்பாளிகளில் இணக்கமானவர்களுடன் இருக்கலாம்.

நான் என்ன செய்கிறேன்? எனக்கு அந்த அரதி நிலை உண்டா? உண்டு. ஒவ்வொரு படைப்புக்கும் இடைவெளிகளில் அதை தீவிரமாக அடைகிறேன். நான் செய்வன இவை.

அ. நான் என் வாசகர்களுடனேயே இருக்கிறேன். அவர்களுடன் பயணங்கள் செய்கிறேன். அவர்களுடன் கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். அவர்கள் என் தனிமையை இல்லாமலாக்குகிறார்கள். எனக்கு சுற்றம் இருக்கிறது என்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்

ஆ. பயணங்கள் செய்கிறேன். பயணம் என் புறவுள்ளத்தை ஆட்கொள்கையில் உள்ளே ஆழுள்ளம் என் படைப்பையே எண்ணிக்கொண்டிருக்கும்.

இ. படைப்பு இடைவெளிகளில் தீவிரமான அறிவுச்செயல்பாடுகளில் இருப்பேன். தமிழ்விக்கி பதிவுபோடுவேன். தத்துவநூல்களை கூர்ந்து படிப்பேன், புரியும் பொருட்டு மொழியாக்கம் செய்வேன். மூளை இன்னொரு பக்கம் முழுமையாக ஆட்கொள்ளப்படுகையில் நனவிலி படைப்பிலேயே இருக்கும்

ஈ. எந்நிலையிலும் என் படைப்பைப் பற்றிய அகத்தொடர்பை விட்டுவிடலாகாது என்பதில் கவனமாக இருப்பேன். அன்றாடத்தின் அலை என்னை அதிலிருந்து நகர்த்திச்செல்கிறதா என்று பார்த்துக்கொள்வேன்.

எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல, வாசகர்களுக்கும் இந்த அரதி நிலை உண்டு. எச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் உண்டு. ஆகவேதான் அதற்குரிய சுற்றத்தை உருவாக்கி அளிக்கும்பொருட்டு முழுமையறிவு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம். அதற்கான இனிய இடங்களை உருவாக்கியிருக்கிறோம்.

ஜெ

அரதி- இளங்கோ கிருஷ்ணன்

கடந்த பத்து வருடங்களாக முகநூலில் என்ன செய்திருக்கிறேன் என்று புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது உருப்படியான விஷயங்கள் நிறைய எழுதியிருக்கிறேன். இலக்கியம், தத்துவம், வரலாறு தொடர்பான பதிவுகள். சிலது எல்லாம் விரிவான கட்டுரைகள் ஆக்கியிருக்க வேண்டிய அவதானங்கள். சில உயர்தள உரையாடலின் எளிய, மேலோட்டமான வெளிப்பாடுகள். இப்படியான விஷயங்கள் என் விருப்பத்திற்குரியன. இவற்றை எழுதியதற்காக மகிழ்ச்சியடைகிறேன். கிட்டதட்ட திருவோட்டுத் தட்டில் தங்க காசு வீசுவதைப் போன்ற காரியமிது. ஆனால் அதை மனமுவந்தே செய்திருக்கிறேன்.

இதற்கடுத்தபடியாக அவ்வப்போதைய சூழலின் அரசியல், சமூக விஷயங்களுக்கான எதிர்வினைகள். ஒரு சிவில் பொறுப்புமிக்க கலைஞனாக இதை செய்ய வேண்டும். சமூக விஷயங்களில் பங்கேற்க வேண்டும் என்பது என் இளவயது நிலைப்பாடுகளில் ஒன்று. இன்றும் அந்தக் கருத்தில் மாற்றமில்லை என்பதால் அப்படியான பதிவுகள் மேல் ஒருவகை திருப்தியே உள்ளது. எதிர்காலத்திலும் இவற்றைத் தொடரவே செய்வேன்.

மூன்றாவதாக விளையாட்டுத்தனமான பதிவுகள், பகடிகள், நகைச்சுவைகள், மேலோட்டமான கருத்துகள், மன அழுத்தம் மிக்க தருணங்களின் எரிச்சலான வெளிப்பாடுகள், சராசரி முகநூல் குப்பைகள். இவற்றை நிறைய எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் முன்னிரண்டை விடவும் இவை எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கக்கூடும். நிஜமாகவே இவற்றை எழுதியதற்காக வருந்துகிறேன். ஓர் உண்மையை வெட்கமின்றி ஒப்புக்கொள்வதென்றால் நேரத்தை வீணடித்திருக்கிறேன். என் ஆற்றல்களை, நேரத்தை, செல்வத்தை இந்த பொருளின்மையில் கரைத்திருக்கிறேன்.

இது ஏன் நிகழ்ந்தது என்று யோசிக்கிறேன். அரதி. அதுதான் காரணம். கலைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு. இது ரைட்டர்ஸ் ப்ளாக் அல்ல. எழுத்தின் நுட்பம் நுடங்கும்போது அதை எப்படி சரியாக்குவதென தெரியாத அறியாமையின் சோர்வு. அறிவு உருவாக்கும் திகைப்பின் மனத்தடங்கல். அறிவு உருவாக்கும் சோம்பல் என்று ஒன்று உண்டு. அது ஈகோவின் சலிப்பில் வருவது. அங்கிருந்துதான் எரிச்சல் பிறக்கிறது. அங்கிருந்துதான் எள்ளல் பிறக்கிறது. அங்கிருந்துதான் எகத்தாளம் பிறக்கிறது. அங்கிருந்துதான் மற்றமை மீதான பொருட்டுடின்மை பிறக்கிறது. இது சிக்கலானது மட்டுமில்லை. கீழ்மையானது. ஆபத்தானது. எதிர் மானுடமானது. ஒரு கலைஞன் இதை கடந்து வராவிடில் பெரும் அபத்த களஞ்சியமாகிவிடுவான். கண் முன்னே நிறைய உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆனால் இதை வாசிக்கும் உங்கள் யூகத்துக்கே விட்டு முன் நகர்கிறேன்.

அரதியை கதிரைவேல் பிள்ளை அகரமுதலி வெறுப்பு என்கிறது. அது வெறுப்பும்தான். ஆனால் அந்த வெறுப்பு ஆர்வமின்மையிலும், சலிப்பிலும் இருந்து வருகிறது. ஆர்வமின்மையும் சலிப்பும் சராசரிதனங்களில் சுவாரஸ்யமின்மைகளில் படைப்பூக்கம் இல்லாத நிலைகளில் இருந்து உருவாகிறது. எதில் படைப்பூக்கம் இல்லையோ, எது வழமையோ, எது க்ளிஷேவோ, எது வியப்புகளற்றதோ, எது அன்றாடமானதோ, எது புதிதற்றதோ அது ஆர்வமூட்டாதாது. அது சலிப்பைத் தருவது, அந்த சலிப்பிலிருந்தே வெறுப்பு உருவாகிறது. இந்த மனநிலையே அரதி.

ஆயுர்வேதம் அரதியை மனச் சிக்கல் என்கிறது. மனதில் தோன்றி உடலை முடக்கும் ஒரு கோளாறு. ரதி என்பதன் எதிர் சொல் அரதி. ரதி என்பது அழகு, காமம், இளமை, படைப்பூக்கம், வாழ்வதற்கான பெருவேட்கை. இவ்வுலகின் ஒவ்வொரு உயிரிலும் ரதியுள்ளது. வாழ்வின் மீதான ஆர்வமே ரதி. வாழ்வின் மீதான சோர்வு அரதி.

அரதி படைப்பூக்கம் உறையும் கணத்தில் தொடங்குகிறது. இனி என்ன புதிதாய் செய்ய என்ற திகைப்பில் பிறக்கிறது. அறிவு அல்லது கலையின் மீதான அப்பியாசம் புதிதாய் ஒன்றை சிருஷ்டிப்பதில் இருக்கும் சவாலை உணர்த்தும்போது அச்சம் உருவாகிறது. தொடர்ந்து கிளிஷேக்களையே உருவாக்கும்போது சோர்வு உருவாகிறது. அரதி உருவாகிறது. இதே கிளிஷேக்களை மற்ற படைப்புகளில், செயல்களில் காணும் கலைஞன் சலிப்பும் எரிச்சலும் கொள்கிறான்.

அதை விஷமாய் அவன் சூழலில் இறைக்கிறான். ரதியை இழக்கும் கலைஞன் ஒரு விஷ ஜந்து. பால் திரிந்து விஷமாவதைப் போன்ற மனநிலை அது. முகநூல் போன்ற வெளிகள் அந்த ஆலகாலத்தை கொட்டுவதற்கான சரியான ஏற்பாடு. தன் இறந்த கால அற்புதங்களின் நிழலில் அமர்ந்துகொண்டு ஒரு கலைஞன் இங்கு அதை விண்டு விண்டு கொடுக்கலாம். இங்கு அப்படியான விஷங்களின் பாற்கடல்களே இருப்பதால் யாருக்கும் அது தெரியப்போவதில்லை.

அரதியின் இன்னொரு பண்பு மனதை வெறுமனே வைத்துக்கொண்டிருத்தல். அதாவது எந்த காரியமும் தீவிரமாய் செய்யாமல் அப்படியே பட்டும் படாமல் சூழலில் பங்கெடுத்தல். அங்கு இருக்கும் லெளகீகத்தின் இயல்பில் அதே லெளகீகமாய் புழங்குதல். இது கொஞ்சம் தீங்கற்றது என்றாலும் ஒரு கலைஞனை மிக சராசரியாய் மாற்றிவிடுவது. சிலர் இந்த நிலை தாங்காமல் ஓடிப்போய் குடியில் விழுகிறார்கள்.

ஒரு கலைஞனாக நான் அரதிக்கு அஞ்சுகிறேன். முகநூல் போன்ற வெளிகளை தன் கலைச் செயல்பாட்டுக்கு வெளியே இப்படியான கீழ்மைகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றி நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

உயர்வான, உருப்படியான விஷயங்களை மட்டுமே முகநூலில் எழுத வேண்டும் என்பது என் தொடக்க நாள் தொட்டு விருப்பம். ஆனால், வெட்கத்தைவிட்டு ஒப்புக்கொள்வதென்றால் நான் அதில் மிக மோசமாக சறுக்கியிருக்கிறேன். முகநூலுக்குள் நுழைந்தபோதே இசை உள்ளிட்ட பல நண்பர்கள் என் படைப்பில் அது நிகழ்த்த சாத்தியமான பாதிப்பை பற்றி பேசியிருக்கிறார்கள். நான் அப்போதெல்லாம் மிகுந்த மன தைரியத்துடன் அவர்களை பகடி செய்திருக்கிறேன். என் இயல்பு, சுபாவம் எதிலும் மாறாது என்றே நம்பினேன். நீட்ஷேவின் ஜரதுஸ்ட்ரா தன் தனிமையில் போதுமான அளவு நிரம்பி மீண்டும் மலையிலிருந்து கீழே தன் மக்களைக் காண வருவதைப் போலே என்னை போலிக் கற்பிதம் செய்திருக்கிறேன். ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை. இந்த வெளி மெல்ல உங்களை தன் சுபாவதற்கேற்ப மாற்றக்கூடியது. ஒரு படைப்பாளி இதற்கு அஞ்சத்தான் வேண்டும். ஏனெனில், அஞ்சுவது அஞ்சாமை பேதைமை

(இளங்கோ கிருஷ்ணன்- முகநூல்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:35

அஜந்தகுமார்

[image error]

ஈழத்து தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், இதழியல் விமர்சனம் எழுதி வருகிறார். உயர்வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியர்.

அஜந்தகுமார் அஜந்தகுமார் அஜந்தகுமார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:34

கோவை சொல்முகம் கூடுகை- 65

 நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 65வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 46

நூல் – கிராதம்

பேசுபகுதி :

பகுதி 7 – பாசுபதம் (அத்தியாயம் 1 முதல் 19 வரை)

அமர்வு 2:

நாவல் – ‘நம் காலத்து நாயகன்’

– மி.யூ. லேர்மன்தவ்

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 30-மார்ச்-25,

ஞாயிற்றுக்கிழமை. 

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:32

குற்றம், தண்டனை – கடிதம்

அன்புள்ள ஜெ,

நாவல் சுக்கிரி குழுமத்தில் குற்றமும் தண்டனையும் வாசித்து முடித்தோம்.

முரட்டு மனிதர்களால் நடு ரோட்டில் அடித்துக் கொல்லப்பட்ட கிழட்டு குதிரையை அணைத்துக் கொண்டு அழுவது போல் கனவு காணும் ராஸ்கோல்நிகோவ் என்ற இளைஞன், இரண்டு பெண்களை கோடாரியால் அடித்துக் கொலை செய்துவிடுகிறான். கதையின் முதல் பாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து அவன் படும் மனக்குழப்பங்களும், உணர்வுச் சிக்கல்களும், இந்த இரு மனநிலைகளின் உச்சங்களுக்கு இடையிலாக பைத்தியம் போன்று அவன் படும் பாடுகளும் நாவலாக விரிகின்றன. காவலர்கள் விசாரணை நடைபெறுகிறது. அவர்களுடைய சந்தேக வலையில் ராஸ்கோல்நிகோவும் இருக்கிறான்.

ராஸ்கோல்நிகோவ் மனிதர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான்.

“சாதாரணமானவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்க கொண்டும், ஏற்றுக் கொண்டும், சகித்துக் கொண்டும் அன்றாடம் உள்ள தங்களது கடமைகளை செய்துகொண்டு, இனவிருத்தி செய்துவிட்டு, வாழ்க்கையை நடத்திவிட்டு போகிறார்கள். சட்டங்களை மீறிப் போவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை, அசாதாரணமான மனிதனுக்கு தாங்கள் சார்ந்திருக்கிற துறையைப் பற்றி புதிதாக எதோ ஒன்றைச் சொல்லக்கூடிய திறன் இயல்பாக இருக்கிறது”

“பண்டைக் காலத்திலிருந்து தொடக்கி லிகர்ஸ், ஸோலான், முகம்மது, நெப்போலியன் என்று இவர்கள் எல்லோருமே விதிகள் மீறியவர்கள்தான் … அப்படி செய்யும் பொது இரத்தக் களரி உண்டாக்குவதற்கு, இரத்தம் சொரிவதற்கும்கூட அவர்கள் தயங்குவதில்லை என்பது உண்மைதான். இப்படிப்பட்ட மனிதர்கள் காலங்காலமாக எவையெல்லாம் புனிதமானவை, உயர்ந்தவை, சிறந்தவை என்று சொல்லப்படுகிறது அவற்றை தகர்ப்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது”

“சமூகத்தின் வழக்கமான பாதையிலிருந்து யாரெல்லாம் விலகிப் போகிறார்களோ, சமுதாயத்திற்காக, சமூக நலன்களுக்காக ஏதேனும் ஒரு சிறிய விஷயத்தையாவது புதிதாக சொல்ல வேண்டுமென்று யாரெல்லாம் இயல்பாக முற்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருமே நிச்சயமாக சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, இயற்கையாகவே குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டால் குட்டையில் உரிய மட்டைகளைப்போல வழக்கமான சுவட்டிலிருந்து விலகிப் போக முடியாமல், அதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இதற்கும் அவர்களுடைய தனிப்பட்ட மனப் போக்கும் இயல்பும்தான் காரணம்”

என்பதுபோன்ற வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருந்த அந்த கட்டுரையின் வழியாக காவல் அதிகாரி, போர்ஃபிரி பெத்ரோவிச் உளவியல் ரீதியான விசாரணையில் அவனை கிட்டத்தட்ட நெருங்கிவிடுகிறார். ராஸ்கோல்நிகோவும் மனதால் தயாராகிவிட்ட நேரம் “மிகோலாய்” தானே அந்த கொலைகளை செய்ததாக வழிய சென்று போர்ஃபிரி பெத்ரோவிச்சிடம் ஒத்துக்கொள்கிறான்.

ராஸ்கோல்நிகோவ் கொலை செய்ததை அறிந்துகொண்ட மற்றொருவனான ஸ்விட்ரி கைலோவ், தற்கொலை செய்துகொள்கிறான். இந்த சூழலில் தப்பித்துவிட வாய்ப்பிருந்தும், ராஸ்கோல்நிகோவ் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்கிறான்.

***

ராஸ்கோல்நிகோவின் கட்டுரை சில பொதுவான கேள்விகளை கேட்டுக்கொள்ள வைக்கிறது.

குற்றம் என்பது சார்பியல் தன்மை கொண்டதா?. நாடு பிடிக்கும் ஆசையிலோ, சமூகத்திற்கு நன்மை தரும் என்று நம்பும் கருத்தியலை நிலைநாட்டுவதற்காகவோ ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றழிக்கும் மனிதருக்கு, அல்லது, அரசருக்கு அல்லது அரசுக்கு இருக்கும் உரிமை, சமூகத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்சி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்ல இதே போன்ற எண்ணம் கொண்ட ஒரு இளைஞனுக்கு இல்லையா?.

குற்றம் என்பதை யார் தீர்மானிப்பது. அப்படி தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?.

தண்டனை என்பது என்ன, அது திருந்தி வருவதற்காக கொடுக்கப்படுகிறதா, அல்லது சட்டங்களை மீறிச்செல்ல முடியாதா சாராசரிகளிலிருந்து விலக்கி வைப்பதற்காக கொடுக்கப்படுகிறதா.

ராஸ்கோல்நிகோவ் என்ற இளைஞன் கொலை செய்தான் என்பதையும் தாண்டி, அவன் காவலர்களால், கண்டுபிடிக்கக்படக் கூடாது என்று வாசிக்கும் எங்களுக்கு தோன்றியது (நாவல் வாசிக்கும் நாங்களும் எதோ ஒரு தருணத்தில் ராஸ்கோல்நிகோவ் போலவே மண்டைக்குழப்பங்களும், அதீத உணர்வு நிலைகளுக்கும் ஆட்பட்டவர்களாக இருந்தோம்).

***

ராஸ்கோல்நிகோவ் எழுதிய கட்டுரை காட்டும் இரண்டு விதமான மனிதர்களில் அவன் எந்த வகையில் இருக்கிறான்?.

ஒரு அதீத மனநிலையில் இரண்டு கொலைகளை செய்துவிட்டு அவன் படும் துன்பங்களும், கிட்டத்தட்ட பைத்தியம் போல அவன் படும் பாடுகளும் அவன் (கட்டுரை சொல்லும்) ஒன்றும் அசாதாரண மனிதன் கிடையாது என்பதை சொல்கின்றன. அவன் ஒரு அசாதாரண மனிதனாக இருந்தால் அவன் மனதில் குற்ற உணர்வு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. சமூகத்திற்கு தேவையில்லை என்று ஒரு பெண்ணையும், அந்த சூழலில் தற்செயலாக மாட்டிக்கொண்ட மற்றொரு பெண்ணையும் கொன்றுவிட்டு குற்ற உணர்வுக்கு ஆட்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நெப்போலியன் சாதாரண மனிதர்களை கொன்றுவிட்டு அதற்காக வருந்தியவன் கிடையாது. அப்படி நினைத்துக் கொண்டிருப்பவன் நெப்போலியனாக இருக்க முடியாது.

கனவில் கண்டதுபோல, இறந்த குதிரையை மடியில் தூக்கிவைத்து பாவப்படும் மனநிலை கொண்டவன். எதோ ஒரு தருணத்தில் அடைந்துவிட்ட மன உச்சத்தில் நிகழ்ந்துவிடும் அந்த கொலைகள், அவனுடைய இயல்பிற்கு உகந்ததாக இல்லை. அதனால்தான் அந்தப்பாடு படுகிறான்.

***

ராஸ்கோல்நிகோவ், ஸ்விட்ரி கைலோவ், லூசின் ஆகிய மூவரும் ஒரு வகையில் ஒற்றுமை கொண்டவர்கள்தான்.

இந்த உலக வாழ்க்கையில், ஓர் அரசனாக, ஒரு திருடராக, மருத்துவராக, ஏமாற்றுக்காரராக, அரசியல் வாதியாக, யாராக இருந்தாலும், அவர்களுடைய செயல்களுக்கும், அவர்களுடைய நடைமுறை வாழ்க்கைக்கும் ஒரு தர்க்க நியாயம் (Justification) தேவைப்படுகிறது. அந்த தர்க்க நியாயத்தை வலுவாக கொண்டவர்கள், தங்களது நிலையிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட தயாராக இருக்கிறார்கள். அப்போது எதிர்தரப்பின் தர்க்க நியாயங்கள் ஒரு பொருட்டாக அவர்களுக்கு தோன்றுவதே இல்லை.

லூசின், தான் நம்பும் புதிய தலைமுறையில் பணம் பிரதானமாக இருப்பதாக நம்புபவன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பவன். ஸ்விட்ரி கைலோவ் பெண் பித்தன். தான் அடைய விரும்பும் பெண்களுக்காக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை கொண்டவன். ராஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தை சிந்தித்து, அதன் மேல் நம்பிக்கை கொண்டு அதற்காக கொலை கூட செய்ய தயாராக இருப்பவன்.

பெண் பித்தனான ஸ்விட்ரி கைலோவிடம் அந்த “தர்க்க நியாயம்” உறுதியாக இருக்கும்வரை, எந்த குற்ற உணர்வும் கொள்ளாமல், பெண்களை வளைத்துக் கொண்டே இருக்கிறான். இறுதியாக ஒரு கணத்தில் அந்த “தர்க்க நியாயம்” உடைந்துவிடுகிறது. அப்போது அவன் தன்னுடைய வாழ்க்கையை இழந்தவனாகிறான். தற்கொலை செய்துகொள்கிறான்.

லூசினுக்கு அந்த கணம் இன்னும் வரவில்லை. அவனுடைய “வாழ்நிலை – தர்க்க நியாயம்” இன்னும் அப்படியே இருக்கிறது. அதனால்தான் எதிர்தரப்பின் நியாயங்கள் அவன் எண்ணத்தில் வரவில்லை. முன்பு போலவே இருக்கிறான்.

ராஸ்கோல்நிகோவுக்கு தான் செய்வது தவறா, சரியா என்ற குழப்பம் இருக்கிறது. அவனுடைய செயலின் “தர்க்க நியாயம்” உறுதியாக இல்லை. அதுவே அவன் படும் மண்டைக் குழப்பங்களுக்கும், பைத்தியக்காரனைப் போன்ற அவனுடைய செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது.

நாவல் முடிந்ததும், விவாதங்களுக்காக சில கேள்விகளை எழுப்பிக் கொண்டோம்.

ஸ்விட்ரி கைலோவ் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான். அதன் பின்புலம் என்னவாக இருக்கும்.இரண்டுமுறை ராஸ்கோல்நிக்கோவ் சோனியாவின் கால்களில் விழுகிறான். வேறு வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. என்ன வேறுபாடு.ஸ்விட்ரி கைலோவ் இறந்தது தெரிந்தவுடன் சரணடையாமல் திரும்பி சென்ற ராஸ்கோல்நிகோவ் சோனியாவை பார்த்ததும் மறுபடியும் வந்து சரணடைகிறான். ஏன்.இறுதிவரை தான் கொலை செய்தது தவறு இல்லை என்று நினைப்பவன், சோனியாவைப் பார்த்தபோதெல்லாம் தவறுதான் என்று நினைக்கிறான். இதற்கு காரணம் என்ன. (அவளை பார்க்கும் போது லிசவேத்தா நினைவு வருவதினாலா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.)அவனுடைய கட்டுரையின் படி நாவல் முடிவில் அவன் தன்னை சாதாரண மனிதனாக நினைத்து விடுகிறானா, அதனால் சோனியாவிற்கு எப்போதும் அவனைப்பார்த்ததும் இருக்கும் பயம் இல்லாமல் ஆகிவிட்டதா.

இந்த விவாதத்தின் ஒரு புள்ளியில் சோனியா தோன்றி வளர்ந்து பேருருவம் பெற்று எழுந்துவந்தாள்.

ராஸ்கோல்நிகோவ், ஸ்விட்ரி கைலோவ், லூசின் ஆகிய இவர்கள் மூவருக்கும் எதிர்ப்பக்கத்தில் சோனியா இருக்கிறாள்.

ராஸ்கோல்நிகோவ் கொலை செய்ததை சொன்னவுடன் அவனிடம் சோனியா சொல்கிறாள்.

“நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியில் சதுக்கத்தின் மத்தியில் சென்று நில்லுங்கள். மாந்தர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் காலங்கப்படுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும் படி “நான் ஒரு கொலைகாரன், நான் ஒரு கொலைகாரன் என்று உரக்கச் சொல்லுங்கள்” என்று சொல்கிறாள்.

காவலர்கள் விசாரணையின்போது தான் செய்ததை மறைக்க முயலும் ராஸ்கோல்நிகோவால் சோனியாவின் வார்த்தைகளை தவிர்க்க முடியவில்லை. அதை அப்படியே செய்ய முயற்சிக்கிறான். ஏனென்றால், சோனியாவின் சரி தவறுகள், எந்த தர்க்கத்தை சார்ந்ததும் இல்லை. அவள் சொன்னவை அவளுடைய தர்க்க புத்தியிலிருந்து வரவில்லை, அது அவளுடைய மனதிலிருந்து வருகிறது. அவளுடைய கருணையிலிருந்து வருகிறது.

அவள் பலி சுமப்பவரின் வடிவமாக இருப்பவள். அவள் துன்பங்களை சுமப்பவள். அவள் குடும்பத்துக்காக, மற்ற மனிதர்களுக்காக மிகப்பெரிய துன்பங்களை சுமப்பவள். அவள் சுமந்துகொண்டிருப்பது சிலுவையை. அத்தகைய சிலுவையை சுமப்பவர்களுக்கு முன்பாக தன்னிலை சார்ந்த எந்த தர்க்க நியாயங்களும் பொருளற்று போய் விடுகின்றன. அவளுடன் தர்க்கத்தினால் அல்ல, ஆன்மாவினால் மட்டுமே எவரும் பேச முடியும்.

காலமெல்லாம் சிலர் அத்தகைய சிலுவைகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள். காந்தியும் இத்தகைய சிலுவையை சுமந்துகொண்டிருந்தார். அவர் சுமந்துகொண்டிருந்தது இந்த உலகத்தின் சிலுவையை. இந்த மனிதகுலம் முழுமைக்குமான சிலுவையை. அத்தகையோர் தர்க்கத்துக்கு அப்பால் அவர்களுடைய ஆன்மாவின் வழியாக பேச முடிகிறது. அதனால்தான் காந்தியை பார்த்த சாதாரண மனிதர்கள் மற்றொரு காந்தியாக மாறினார்கள். சோனியாவும் அப்படித்தான்.

ராஸ்கோல்நிகோவ் இரண்டுமுறை சோனியாவின் கால்களில் விழுகிறான். முதல்முறை அவள் படும் துன்பங்களை பார்த்து, இந்த உலகத்தில் எத்தனை துன்பங்களை சுமந்துகொண்டிருக்கிறாய் என்று அவள் கால்களில் விழுகிறான். அடுத்த முறை விழும்போது அவன் மனம் திருந்தி அவள் கால்களில் விழுகிறான். முதல் முறை அவள் கொடுத்த சிலுவையை வாங்க மறுத்த ராஸ்கோல்நிகோவ் இரண்டாவது முறை அவளுடைய காலில் விழுந்த போது அவளிடம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்கிறான். அப்போது அவனுக்கு சோனியாவிடம் இருந்த விலக்கமும் இல்லாமல் ஆகிவிட்டது. அவன் ஒரு சோனியாவாக சோனியாவின் சிலுவையை சுமக்க தயாராக்கிவிட்டான்.

****

இதுவரை வாசித்த மொழிபெயர்ப்பு நாவல்களில் இதுவே, மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. நாவலின் பாத்திரங்கள் கொண்ட உணர்வுகளை அப்படியே உணர்ந்து கொள்ள முடிந்தது. இதற்கு காரணம் மொழிபெயர்ப்பாளர், எம், ஏ சுசிலா அவர்கள். அவர்களுக்கு குழுவின் சார்பாக நன்றி.

***

நாவல் முடியும்போது, அன்றாடத்தின் cruality என்ற வார்த்தை மனதுக்குள் சுற்றிக் கொண்டிருந்தது.

30ஆண்டுகளுக்கு முன்பு எனது கிராமத்தில் குடிக்கும் தண்ணீரை தொட்டுவிட்டதால் குஷ்ட ரோகம் கொண்ட ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார். வேண்டாத காதல் கொண்ட ஒரு பெண்ணுக்கு phosphine மாத்திரை புகட்டப்பட்டது. இன்றும் அந்த கிராமத்தில் இவை போல நடக்க சாத்தியம் இருக்கிறது என்றாலும் அன்றாடத்தில் இல்லாமல் மிக அரிதாக ஆகிவிட்டது. இது இந்த முப்பது வருடங்களில் வந்த மாற்றம்.

குஷ்ட ரோகம் கொண்டவரை அடித்துக் கொன்றவருக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. வேண்டாத காதல் கொண்ட பெண்ணை கொல்வதற்கும் அவர்களுக்கொரு தர்க்க நியாயம் இருக்கிறது என்றால், மேற்கண்ட மாற்றத்துக்கான விதைகள் எங்கிருந்து போடப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு மனித உயிரை கொல்வது தவறு என்று எப்படி அந்த சமூகத்தில் தோன்றியிருக்கும்?. யார் அதை அறமற்ற செயல் என்று நினைத்திருப்பார்?. எப்படி அது தவறு என்று காலத்தில் அங்கிருந்தவர்களின் மனதில் தோன்றச் செய்திருக்கும் என்பது போன்ற கேள்விகள் ஏராளமாக மனதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.

போன வாரம் எங்களது தோட்டத்தில் நன்றாக முதிர்ந்து விளைந்துவிட்ட வாழைக்குலையை வெட்டினேன். குலை வெட்டிய வெற்று மரத்தை வெட்டும் நேரத்தில் “வாழை மரத்தை வெட்டாதே, இன்று வெள்ளிக்கிழமை”, என்று தொண்ணூறு வயதைத் தொடும் என் அம்மா சொன்னார்.

குலைவெட்டிய பின்னரும் வெறும் மரம் இலைகளோடு ஒரு வாரமாக நின்றுகொண்டிருக்கிறது!!.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:31

வெற்றுப்பெருமிதங்கள் – கடிதம்

தங்கம் தென்னரசு அமைச்சர் சட்டச்சபையிலேயே பேசிய உரை மீதான விவாதங்களுக்குப் பின் இந்த உரையை கண்டடைந்தேன். இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமான உரை இது. நாம் ஏன் பொய்களை நம்பி, பரப்பி நம்மை தூக்கிக்காட்டிக்கொள்ள முயல்கிறோம்? நமக்கு என்னதான் பிரச்சினை?

வெற்றுப்பெருமிதங்கள் – கடிதம்

At a time, three people informed me that they can’t make it to the program. Their note in a single sentence made me furious. I returned their fees and disconnected with them once and for all. They are not in my world anymore.

Avoiders
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:30

March 26, 2025

நாயகி: பெண் எழுத்தாளர்கள்.

அண்மையில் நிகழ்ந்த முக்கியமான இலக்கிய நிகழ்வு நாயகி என்ற தலைப்பில் முந்தைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி சென்னையில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கு. இன்று உலகம் முழுக்கவே இது ஒரு ‘டிரெண்ட்’ ஆகியுள்ளது. சென்ற தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் புதிய கவனத்துடன் மீட்டு எடுக்கப்பட்டு வருகிறார்கள். அன்றைய விமர்சன – வாசிப்பு உலகம் அவர்களுக்கு நீதிசெய்ததா என்னும் வினா எழுந்து வருகிறது.

இந்த வினாவுடன் ஐரோப்பிய பெண் இலக்கியமேதைகளைப் பற்றி சைதன்யா நீலி இணைய இதழில் எழுதிய தொடர்கட்டுரைகள் செறிவானவை, நூலாக வரவுள்ளன. சைதன்யா இந்த கோணத்தில் மிக விரிவான வாசிப்பு கொண்டவள்.(நீலி சைதன்யா கட்டுரைகள் ) சைதன்யா இந்நோக்கத்துடன் மானஸா பதிப்பகம் என்னும் ஆங்கிலப் பதிப்பகத்தையும் தொடங்கவிருக்கிறாள். (மானஸா பதிப்பகம் )

நாயகி என்னும் இந்த முயற்சி அடுத்த தலைமுறை வாசகர்களிடம் இந்தப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டுசென்று சேர்க்கும் என நினைக்கிறேன். அவ்வகையில் இந்த அரங்கு மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. இத்தகைய ஓர் அரங்கை உருவாக்குவது இன்றைய சூழலில் எளிதல்ல. படித்துவிட்டு பேசுவதற்கு ஆள் அமைவதில்லை. பொறுமை, விடாமுயற்சி, நம்பிக்கையுடன் மட்டுமே இதை நிகழ்த்தமுடியும். எதிர்காலத்தில் இந்த அரங்கு முக்கியமான ஒரு தொடக்கமாகக் குறிப்பிடப்படும். அமைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

முந்தைய தலைமுறைப் பெண் எழுத்தாளர்களை இன்று வாசிப்பதில் பல இடர்கள் உள்ளன. அவர்கள் எழுதிய காலகட்டத்தின் பல பிரச்சினைகள் இன்று பொருளிழந்துவிட்டன. உதாரணமாக, படிக்கும் உரிமை, வெளியே செல்லும் உரிமைக்காகவே பெண்கள் போராடியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய இலக்கியவாசகர் அந்த பேசுபொருளுக்காக அவற்றை வாசிக்கக்கூடாது. அந்த சூழலில் கதைமாந்தரின் அகம் வெளிப்படும் விதத்தை அவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் நோக்கினால் அவர்களின் இலக்கியத் தகைமை வெளிப்படும்.

இது சார்ந்து நான் விரிவாக சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். உதாரணமாக, சென்ற காலப் பெண் எழுத்தாளர்களில் பலர் ஒழுக்கப்பிரச்சாரம் போல் எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள்தான் களப்பணி ஆற்றியவர்கள். அரசியல், சமூகவியல்களங்களில். அதைப் புரிந்துகொள்ளும் கூர்மை நமக்கு வேண்டும் (பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும் )

தமிழில் நவீன இலக்கியம் தோன்றியதுமே பெண் எழுத்தாளர்கள் வீறுடன் எழுத ஆரம்பித்துவிட்டனர். அவர்களில் பலர் தீவிரமான களச்செயல்பாட்டாளர்கள். உதாரணமாக, குமுதினி சமூகப்போராளி. வை.மு.கோதைநாயகி அம்மாள் தமிழ் இதழியலின் முன்னோடி. அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பின் ஒரு பகுதியாகவே இலக்கியத்தை அணுகவேண்டும். அத்தகைய மதிப்பீடுகள் உருவாகி வரவேண்டும்.

இந்தக் கருத்தரங்கம் கீழ்க்கண்ட பெண் ஆளுமைகளைப் பற்றியது

ஆர். சூடாமணி

[image error]

சித்தி ஜுனைதா பேகம்

வை.மு.கோதைநாயகி அம்மாள்

[image error]

கி.சாவித்ரி அம்மாள்

[image error]

அழகிய நாயகி அம்மாள்

சரஸ்வதி ராம்நாத்

[image error]

குமுதினி

ஹெப்ஸிபா ஜேசுதாசன்

அநுத்தமா

[image error]

கமலா விருத்தாசலம்

ராஜம் கிருஷ்ணன்

கிருத்திகா

கூடுதல் வாசிப்புக்காக

நீலாம்பிகை அம்மையார் எம்.எஸ்.கமலா அம்மணி அம்மாள் ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் ஆர்.பொன்னம்மாள் எஸ். விசாலாட்சி எஸ். அம்புஜம்மாள் கமலா சடகோபன் கமலா பத்மநாபன் கிருபா சத்தியநாதன் கி.சரஸ்வதி அம்மாள் கி.சு.வி.இலட்சுமி அம்மாள் குகப்பிரியை கெளரி அம்மாள் சகுந்தலா ராஜன் சரோஜா ராமமூர்த்தி செய்யிது ஆசியா உம்மா செய்யூர் சாரநாயகி அம்மாள் ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன் டி.பி.ராஜலட்சுமி மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் மீனாட்சிசுந்தரம்மாள் வி. விசாலாட்சி அம்மாள் வி.சரஸ்வதி அம்மாள் விசாலாட்சி அம்மாள் எம்.எஸ்.கமலா

இந்த உரைகளில் நூல்களை ஓரளவேனும் வாசித்துவிட்டு வந்து பேசிய உரைகள் உள்ளன. போகிறபோக்கில் பேசப்பட்டவையும் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட விஷயம் கவனித்தேன். இந்தப் பெண் எழுத்தாளர்கள் அனைவரைப் பற்றியும் மிக விரிவான பதிவுகளும் ,நூல் தொடுப்புகளும் தமிழ்விக்கி தளத்தில் உள்ளன. இதேபோன்று அத்தனை பெண்படைப்பாளிகள் பற்றியும். இவர்களைப் பற்றிய பதிவுகளை விரிவாக உருவாக்கியதில் நீலி பெண்ணிய இணைய இதழ் ஆசிரியர் ரம்யாமற்றும் அரவிந்த் சுவாமிநாதன் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. அம்பை முதல் அ.வெண்ணிலா வரை பலர் பெண் எழுத்தாளர்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அரவிந்த் சுவாமிநாதனின் நூல் அவற்றில் மிக முக்கியமானது.

ஆனால் இந்த உரைகளில் தமிழ்விக்கி சுட்டிக்காட்டப்படவே இல்லை, பலர் அதைச் சார்ந்தே உரையாற்றினார்கள் எனினும். அதிலும் ஜெயஸ்ரீ என்பவர் குமுதினி பற்றி பேசுகிறார். குமுதினி என இணையத்தில் அடித்து தேடினாராம். குமுதினி என்ற பெயர் மட்டுமே வந்ததாம். திரும்பத் திரும்பத் தேடினாராம். ஒரு வரிகூட கிடைக்கவில்லையாம். அரங்கில் சிரிப்பு.

குமுதினி என கூகிளில் தேடினால் வரும் இரண்டாவது பதிவு தமிழ்விக்கி அளிப்பது. மிக விரிவான அப்பதிவில் மேலதிக வாசிப்புக்காக குமுதினியின் வாழ்க்கை வரலாறு (பிரேமா நந்தகுமார் எழுதியது) இணையத்தில் இலவசமாக இருப்பதன் சுட்டியும் உள்ளது. அதை எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் தவறவிட முடியாது.  குமுதினி பற்றி என் தளத்தில் நிகழ்ந்த விவாதங்களை கூகிள் மூன்றாவதாகக் காட்டும்.

ராஜம் கிருஷ்ணன், கிருத்திகா, ஹெப்ஸிபா போன்ற பலருக்கு அவர்களின் முக்கியமான படைப்புகள் பற்றிக்கூட தனியான பதிவுகள் உள்ளன. ஒவ்வொரு பதிவுக்குக் கீழேயும் மிகவிரிவான மேலதிகவாசிப்புக்கான சுட்டிகள் உள்ளன. இணையநூலக இணைப்புகள் உள்ளன.

இதேபோல மேலும் நூறுக்கும் மேற்பட்ட முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் தமிழ்விக்கி தளத்தில் உள்ளன. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முழு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச்சூழலில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிகழும் ஓர் அர்ப்பணிப்புள்ள இலட்சியச் செயல்பாடு இது.

என்னதான் பிரச்சினை? ஒன்று, தமிழ்விக்கி பெயர் சொன்னால் எவராவது எங்காவது எதிரியாகிவிடுவார்களோ என்னும் பயம். தமிழ்விக்கி ஒரு திறந்த கலைக்களஞ்சியம். ஆகவே எவரும் அதை சுட்டிகொடுத்துச் சொல்லவேண்டியதில்லைதான்.இவர்கள் எவர் பெயர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ்விக்கி ஒரு பெரிய மலைபோல வந்து நின்றிருக்கும், அதை எவரும் ஏதும் செய்யமுடியாது.

ஆனால் இத்தகைய ஒரு பெரும்பணி நம் சூழலில் நிகழும்போது அதை ஏதேதோ காரணங்களுக்காக கண்மூடிக் கடந்துசெல்வது சிறுமை. அறிவியக்கத்தில் ஒருபோதும் அத்தகைய சிறு கணக்குகள் இருக்கலாகாது. இக்கருத்தரங்கை நிகழ்த்தியவர்கள் உத்தேசிப்பது ஒரு பெருஞ்செயல், இது அதற்கான தொடக்கம். அதில் இதைப்போன்ற எளிய உணர்வு நிலைகளைக் கடந்து பெரிய கனவுகளுடன் செயல்படுவதே அச்செயல்களுக்கு உண்மையான மதிப்பை அளிக்கும்.

இந்தக் குறிப்பை எழுதுவதேகூட இத்தகைய பெரிய முயற்சி நம் சூழலில் கவனிக்கப்படாமல் ஆகக் கூடாது என்பதற்காகத்தான். இத்தகைய ஒரு முக்கியமான முயற்சி எவரால் செய்யப்பட்டாலும் உடன் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான்.

நாயகி நிகழ்வு உரைகள்

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.