Jeyamohan's Blog, page 139

March 30, 2025

பறவை பார்த்தல் வகுப்புகள் (சிறார்களுக்கும்)

நாங்கள் நடத்தும் மூன்றாவது பறவை பார்த்தல் நிகழ்வு இது. இயற்கையுடன் இருத்தலுக்கு மிகச்சிறந்த வழிகளில் ஒன்று பறவை பார்த்தல். இன்றைய இணைய- செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறுவதற்கான நம்பகமான வாசல் அது. செல்பேசிக்கு அப்பால் நேரடி அனுபவம் ஒன்று உள்ளது என அறிவதற்கான வழி.

சென்ற வகுப்புகளுக்கு வந்த குழந்தைகள் அவ்வகுப்பில் இருந்து பறவைகளின் பேருலகைப் பற்றிய அனுபவத்தை அடைந்தனர். பல குழந்தைகள் பறவைகளை பதிவுசெய்யும் தளங்களில் நூற்றுக்கும் மேலான பதிவுகளை போட்டுவிட்டனர். இது ஒரு பயிற்சி வகுப்பு மட்டும் அல்ல, ஓர் உளகளாவிய சமூகத்தில் இணைவதும்கூட.

பறவைகளை பார்த்தல் என்பது பொறுமையை பயில்வது. இயற்கையுடன் கலந்து அமைந்திருக்கும் அனுபவம் அது. பறவைகள் ஒட்டுமொத்தமாகவே இயற்கையை அறிமுகம் செய்பவை. இன்றைய குழந்தைகளுக்குள்ள கவனக்குவிப்புக் குறைவுக்கு உலகமெங்கும் பறவை பார்த்தல் போன்ற இயற்கையுடன் இணைந்திருக்கும் வழிகளே பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேலைநாடுகளில் பள்ளிகளே அவற்றை ஏற்பாடு செய்வதை அங்கே செல்லும்போதெல்லாம் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன். காட்டில் தனியாக கூடாரம் கட்டி, தங்கி, ஆய்வுசெய்து, அவற்றை பதிவுசெய்வது வரை அங்கே தொடக்கநிலைக் குழந்தைகளுக்கே கற்பிக்கிறார்கள். அவர்களே பின்னர் நேரடிக் கள ஆய்வாளர்களாகவும் மலர்கிறார்கள். நாங்கள் நடத்துவது ஒரு தொடக்கம்.

நாங்கள் அமைத்துள்ள பறவைபார்த்தல் குழுமத்தை நடத்தும் விஜயபாரதி – ஈஸ்வர மூர்த்தி இருவரும் இவ்வகுப்பை நடத்துகின்றனர். பாதுகாக்கப்பட்ட காடுபோன்ற வளாகத்திற்குள் இந்த வகுப்பு நிகழும்.

மே 2 ,3 மற்றும் 4 (வெள்ளி சனி ஞாயிறு)

programsvishnupuram@gmail.com

 

பறவைபார்த்தலும் குழந்தைகளும் பறவைபார்த்தல், தாவரங்களை அறிதல் ஏன்? இயற்கை நோக்கி துடுப்புவால் கரிச்சானின் நாட்கள் பறவை பார்த்தல் ஒரு தியானம் வனத்தில் ஒரு தவம் – பறவை பார்த்தல் வகுப்பு அனுபவ பதிவு பறவைபார்த்தல், நூறாவது நாள்  பறவை பார்த்தல் பயிற்சி கோணலின் தொடக்கம் அறிவிக்கப்பட்ட வகுப்புகள்( இடமிருப்பவை) சிறில் அலெக்ஸ்கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்

சிறில் அலெக்ஸ் நடத்தும் மூன்றாவது கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு இது. இதற்கு முந்தைய வகுப்புகள் மிகப்பெரிய வரலாற்று- பண்பாட்டு அறிமுகமாக அமைந்திருந்தன என்று பலரும் எழுதியிருந்தார்கள்.

கிறிஸ்தவமே ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படை. கிறிஸ்தவ இறையியலைப் புரிந்துகொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியம், திரைப்படம் எதையும் சரிவர அறிய முடியாது. ஐரோப்பியப் பண்பாட்டை ஒட்டியே நாம் வாழும் இன்றைய நவீனப்பண்பாடும் உருவாகியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களேகூட கிறிஸ்தவ இறையியலையோ, வரலாற்றையோ அறிந்தவர்கள் அல்ல. வெறும் பக்தியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள், எஞ்சியோர் எதையும் அறிந்திருக்கவில்லை.

ஒரு நவீன வாசகன் உலகசிந்தனைக்குள் நுழைவதற்கு கிறிஸ்தவ இறையியல் அறிமுகம் மிக அவசியமானது. இந்து மெய்யியலை முழுதறியவும்கூட அதை அறிவதும் ஒப்பிடுவதும் அவசியமானது. சிறில் கிறிஸ்தவ இறையியலை முறையாகக் கற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்கூட. நிதானமான, நகைச்சுவையுணர்வுகொண்ட பேச்சாளர். இக்கல்வியை அளிக்க முதன்மைத் தகுதி கொண்ட ஆளுமை

நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13தொடர்புக்கு programsvishnupuram@gmail.com கிறிஸ்தவக் கல்வி இந்து ஆன்மிகத்திற்கு எதற்காக? கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம் கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம் பைபிள், கடிதங்கள் விவிலிய தரிசனம்

 

[image error]

நண்பர் ஃபெய்ஸ் காதிரி உருது மொழி அறிஞர். இந்திய உருதுமொழி இலக்கிய இயக்கத்துடன் முப்பதாண்டுகளாகத் தொடர்புடையவர். உருது மொழி ஆசிரியரும்கூட. அவர் நடத்தும் உருது இலக்கிய அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன (இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்)

உருதுமொழி இலக்கியம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. பண்டைய இந்தியாவில் உருவான இந்த இலக்கிய மரபு இன்று பாகிஸ்தான் உட்பட பலநாடுகளில் பரவியுள்ளது. குவாஜா முகையதீன் சிஷ்திமுதலிய ஆன்மிகச்செல்வர்கள் மிர்ஸா காலிப்  போன்ற நாடோடிப் பெருங்கவிஞர்கள், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் போன்ற நவீனக் கவிஞர்கள் என அதன் வீச்சு பெரியது.

இந்தியாவின் இரண்டு பெரிய பண்பாட்டியக்கங்களான சூஃபி மெய்யியல் மற்றும் கஸல் இசைமரபு ஆகியவற்றை அறிய உருது இலக்கிய அறிமுகம் மிக அடிப்படையானது.

உருது இலக்கியத்தை அறியாமல் இந்திய இலக்கியத்தை ஒருவர் அர்த்தபூர்வமாக அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது.

எனக்கே இந்த உருது இலக்கியம் சார்ந்த விரிவான அறிமுகம் இல்லை. ஆகவே நானும் ஒரு மாணவனாக இவ்வகுப்பில் கலந்துகொள்வதாக உள்ளேன்.

நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com 

வரவிருக்கும் வகுப்புகள்

 

தாவரங்கள் அறிமுகம்

லோகமாதேவி நடத்திய தாவரவியல் வகுப்புகள் அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய உலகில் செயற்கையான இணையக்கேளிக்கைகளில் அடிமையாகக் கிடக்கும் தலைமுறைக்கு இயற்கையுடன் அறிமுகம் கொள்வதற்கு மிகச்சிறந்த வழியாக அமைபவை இந்த வகுப்புகள். குழந்தைகளை செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதற்கு உதவியானவை. இந்த வகுப்புகளில் லோகமாதேவி நம்மைச்சுற்றி உள்ள தாவரங்களை, அவற்றின் விந்தைகளை சுவாரசியமான வகுப்புகள் மற்றும் நேரடி கானுலா வழியாக அறிமுகம் செய்கிறார். முனைவர்.லோகமாதேவி உலக அளவில் முதன்மையான தாவரவியல் ஆவண இதழ்களில் எழுதிவரும் பேராசிரியர்

மே 16 17 மற்றும் 18 programsvishnupuram@gmail.com தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது? வனம், வகுப்பு- கடிதம் மந்தாரை- கடிதம் தாவர உலகம், கடிதம் தாவரங்கள், கடிதம் தாவரங்களும் குழந்தைகளும் தாவரங்களின் பேருலகம் தீராத இன்பங்கள் தாவர உலகம், கடிதம் [image error] ஆலயக்கலை அறிமுகம்

ஜெயக்குமார் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளில் சென்ற மூன்றாண்டுகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் திருப்புமுனை நிகழ்வென்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். நம் கலைச்செல்வங்களை, நம் மரபை ஒரே வீச்சில் அறிமுகம் செய்து ஒரு புதிய உலகுக்கு அழைத்துச்செல்லும் வகுப்புகள் இவை. இந்தியாவின் மகத்தான இந்து, பௌத்த, சமண ஆலயங்களின் கட்டமைப்பு, சிற்பங்களின் அழகியல் ஆகியவற்றை இந்த வகுப்புகள் வழியாக  ஜெயக்குமார் கற்பிக்கிறார்.

நாள் மே 23 24 மற்றும் 25

programsvishnupuram@gmail.com

 

வைணவ இலக்கியம்

ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார். வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்வதென்பது ஒருபக்கம் வைணவ தத்துவம் மறுபக்கம் சங்ககால அகப்பாடல்களில் இருந்து தொடர்ந்து வரும் தமிழ் அழகியல் மரபு இரண்டையும் அறிந்துகொள்வதுதான். இரண்டிலும் பயிற்சி உடைய ஒருவர் மட்டிலுமே அவ்வகுப்பை நடத்த முடியும். வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.

நாள் மே 30 31 ஜூன் 1

programsvishnupuram@gmail.com

நாலாயிரம் கடிதம் பிரபந்த வகுப்பு கடிதம்

பிரபந்தம், கடிதம்

பிரபந்தக் கல்வி, கடிதம் நாலாயிரம் கடிதம் பிரபந்தம், கடிதம் கண்ணனை அறிதல், கடிதம் வைணவம் கல்வி பிரபந்த வகுப்பு கடிதம் வைணவத்தை அறிதல் வருமாறு ஒன்றில்லையேல்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 05:35

March 29, 2025

பெருஞ்செயல்களை தொடங்குவோம்

பெருஞ்செயல் என எதிலாவது சற்றேனும் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறேன். ஒருவர் உடனே கேட்கத்தக்க வினா, எதற்காக அப்படி ஒரு கனவை ஏற்கவேண்டும் என்பதே. அது ஒரு பொறுப்புதானே? இங்கே பல ஆன்மிக உபதேசகர்கள் ஜென், ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையெல்லாம் துணைக்கழைத்து அலுங்காமல் நலுங்காமல் வாழ்வில் ஒழுகிச்செல்வதே நல்லது என்று உபதேசம் செய்யும் காலகட்டம் இது….

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 11:36

உதிர்ந்தமலரின் கவி

எம்.எஸ்.விஸ்வநாதன் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நல்ல படங்களுக்கு அரிய இசையை அமைத்திருக்கிறார். ஆச்சரியமென்னவென்றால் தமிழில் அவர் செய்யாத பல சோதனைகளை அங்கே செய்திருக்கிறார். குறிப்பாக மெட்டுக்கு இசையமைக்காமல் பாடலை எழுதவைத்து இசையமைத்தார். கவிதையைப் பாடுதல் என்பது கேரளத்தின் பண்பாடு. அந்த chanting அம்சம் கொண்ட பல பாடல்களை அங்கே அமைத்தார்.

அவற்றை அவர் தமிழில் செய்திருக்கமுடியாது. மலையாளத்தில் அவர் ஒரு இசையரசனைப் போல நுழைந்தார். அங்குள்ள தயாரிப்பாளர்களும் நடிகர்களும் அவருக்காக வந்து பணிந்து நின்றனர். இங்கே அது சிவாஜி-எம்.ஜி.ஆர் யுகம். அவர்கள் பாடல்களை இறுதியாக ‘ஓகே’ சொல்லவேண்டும். எம்.எஸ்.வி அதிகாலையிலேயே ஆர்மோனியத்துடன் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று காத்திருந்து, அவர்களுக்கு திரும்பத் திரும்ப மெட்டுக்களை போட்டுக்காட்டி, அவர்கள் ஏற்கும் வரை மன்றாடி, அதன்பின் பாடல்களை இசையமைக்கவேண்டும்.

(அதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார், அவருக்கு அதில் வருத்தமேதும் இல்லை, உற்சாகமாகவே சொல்லியிருக்கிறார், தன் சாதனைகள் என்பதுபோல. அவர் மிக எளிமையான, சிறுவன்போன்ற மனிதர் என எனக்கு நேர்ப்பழக்கத்தில் ஓரளவு தெரியும். நடிகர்களிடமோ, இயக்குநர்களிடமோ, தயாரிப்பாளர்களிடமோ பணிந்து நிற்காத முதல் தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாதான். சிவாஜிக்காக அவர் அமைத்த முதல்படத்தின் பாடல்களை இசையமைப்பு முடிந்து, பாடல்பதிவும் முடிந்து, கடைசிவடிவைத்தான் அவரிடம் காட்டினார் என்றும், சிவாஜி அன்று ஒன்றும் சொல்லமுடியவில்லை என்றும் ஒரு கதை உண்டு.)

எம்.எஸ்.வி அவரது 17 வயதில் கண்ணனூரில் இருந்து சென்னை வந்துவிட்டாலும் அவருள் மலையாளப் பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வு தெளிவாகவே இருந்தது என்று காட்டுபவை அவருடைய பல பாடல்கள். அவற்றிலொன்று இன்றும் மிகப்புகழ் பெற்றிருக்கும் ‘வீண பூவே’ என்ற பாடல். 1973ல் வெளிவந்த ‘ஜீவிக்கான் மறந்நு போய ஸ்த்ரீ’ என்ற படத்திற்காக வயலார் ராமவர்மா எழுதி, யேசுதாஸ் பாடியது.

அந்த கதை மலையாள நாவலாசிரியர் வெட்டூர் ராமன்நாயர் (5 ஜூலை 1919 – 11 ஆகஸ் 2003) அதேபேரில் எழுதியது. வெட்டூர் ராமன்நாயர் சுந்தர ராமசாமியின் நண்பர், நாகர்கோயிலுக்கு வந்து சு.ரா இல்லத்தில் தங்கியிருக்கிறார். மலையாளத்தில் அவர் ஒரு நடுத்தர வகை எழுத்தாளர். தூய இலக்கியமும் அல்ல, வெறும் வணிக எழுத்தும் அல்ல. மிகப்பிரபலமாக இருந்தார். அவருடைய புரி முதல் நாஸிக் வரை என்னும் பயணக்கட்டுரை மிகப்புகழ்பெற்றது- 1940ல் அவர் நடத்திய பயணக்குறிப்பு அது. பாடநூலாக நீண்டகாலம் இருந்தது.

வெட்டூர் ராமன்நாயர்

இந்நாவல் ஒரு நடனமங்கையின் கதை. அவள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்பட்டவள். அவளை ஓர் ஓவியன் காதலிக்கிறான், அவளை ஆராதிக்கிறான், அவளை அரசி என உணரச்செய்கிறான். அந்தக்காதல் அவளை மலரச்செய்கிறது. அவன் சட்டென்று மறைந்துவிடுகிறான். அவள் அவன் நினைவாகவே வாழ்கிறாள். 30 ஆண்டுகள் அவனுக்காக நோன்பாக வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். இசையரசியாக ஆகிவிட்டிருக்கும் அவள் ஒரு பெண்ணை சந்திக்கிறாள். அவளிடமிருந்து தன் காதலனாகிய ஓவியனுக்கு பல பெண் தொடர்புகள் உண்டு என, அவன் ஓர் ஏமாற்றுக்காரன் என அறிகிறாள். ஒவ்வொரு பெண்ணையும் அவளுக்குரிய ஒரு நடிப்பை அளித்து வென்றெடுத்து நுகர்வது அவன் வழக்கம்.

அவளுக்கு அது ஏமாற்றம். தன் வாழ்க்கை வீணாகிப்போன ஒன்றா என்னும் ஐயத்தை அடைகிறாள். ஆனால் பின்னர் உணர்கிறாள், அவன் பொய்யானவனாக இருக்கலாம், அவளுடைய காதல் உண்மையானது. அது அவள் வாழ்க்கையை பொருளுள்ளதாக ஆக்கியிருக்கிறது. அது அவள் செல்வம். அவள் வாழ்வின் பொருள் அது. அந்நாவலை தோப்பில் பாஸி திரைக்கதை எழுதி, சேதுமாதவன் இயக்கி படமாக்கினர். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு அன்று மிகவும் பேசப்பட்ட ஒன்று. அன்றிருந்த தமிழ்ப்படங்களின் கண்கூசும் வண்ணங்கள் கொண்ட ஒளிப்பதிவுத்தரத்துடன் ஒப்பிட்டால் வேறுபாடு திகைக்கச் செய்வது. அன்றைய சர்வதேசத்தரமான ஒளிப்பதிவு அது.

இந்தப்பாடல் குமாரன் ஆசான் மலையாளத்தில் எழுதிய மிகப்புகழ்பெற்ற குறுங்காவியமான வீணபூவு (உதிர்ந்த மலர்) என்னும் படைப்பைப் பற்றிப் பேசுகிறது. மலர்ந்திருக்கும்போது உன்னைப்பாட கவிஞர் பலர் வருவார்கள், உதிர்ந்தால் உன் துயர் அறிந்து உன்னை எடுத்து காவியமரத்தின் உச்சிக்கிளையில் வைக்க குமாரன் ஆசான் என்னும் மாபெரும் கவிஞர் மட்டுமே வருவார் அல்லவா என்று பாடல் பேசுகிறது.

இதிலுள்ள ஒரு நுட்பம் ஆசான் உன்னை ‘வசந்ததிலகம்’ ஆக்கினார் என்று வயலார் பாடுகிறார். வசந்தத்தின் பொட்டு என்று பொருள். வசந்ததிலகம் என்பது ஒரு செய்யுள் வடிவமும்கூட.

ஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்
எத்ர சோ·பிச்சிருந்நு ஒரு ராக்ஞி கணக்கே நீ?

[‘ஓ மலரே உன்னதமான இடத்தில்
எத்தனை சோபித்திருந்தாய் நீ, ஒரு மகாராணியைப்போல!’]

என தொடங்கும் வீணபூவு என் அம்மாவுக்கு மிகப்பிடித்தமான கவிதை. அம்மாவின் இனிய குரலில் பல முறை நான் கேட்டது அது.

வீணபூவே குமாரனாசான்றே வீணபூவே
வீண பூவே
விஸ்வதர்சன சக்ரவாளத்திலெ
நக்ஷத்ரமல்லே நீ

விகாரவதி நீ விரிஞ்ஞுநிந்நப்போள்
விரல்தொட்டு உணர்த்திய பாவனகள்
கவி பாவனகள்
நின்னே காமுகி மாருடே சுண்டிலே
நிஸீதகுமுதமாக்கி
கவிகள்
மன்மதன் குலய்க்கும் ஸ்வர்ண தனுஸிலே
மல்லீஸரமாக்கி…

விஷாதவதி நீ கொழிஞ்ஞுவீணப்போள்
விரஹமுணர்த்திய வேதனகள் நின் வேதனகள்
வர்ணப்பீலி தூலிக கொண்டு ஒரு
வசந்த திலகமாக்கி ஆசான்
விண்ணிலே கல்பத்ருமத்தின்றே கொம்பிலே
வாடா மலராக்கி

வயலார்

படம்: ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ
இயக்கம்: கே.எஸ்.சேதுமாதவன்
ஒளிப்பதிவு பாலு மகேந்திரா
நடிப்பு: ஷீலா, மோகன் சர்மா
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வயலார் ராமவர்மா
பாடகர் ஜேசுதாஸ்.

சேதுமாதவன்

உதிர்ந்த மலரே, குமாரன் ஆசானின் உதிர்ந்த மலரே
உலக இலக்கியத் தொடுவானில் ஒரு
விண்மீன் அல்லவா நீ?

காதல்கொண்டு நீ விரிந்து நின்றிருந்தபோது
விரலால் தொட்டு உன்னை மலரச்செய்த கற்பனைகள்
கவிஞர்களின் கற்பனைகள்
உன்னை
காதலியரின் உதடுகளில் தோன்றும்
இரவுத்தாமரை என்றாக்கினர்
மன்மதன் தொடுக்கும்
பொன்வில்லின்
மல்லிகை அம்பாக்கினர்.

துயர்கொண்டு நீ உதிர்ந்து விழுந்தபோது
பிரிவு அளித்த உன் துயரங்களை
பொற்பீலித் தூரிகையால்
ஒரு வசந்த திலகமாக்கினார்
ஆசான்
வானின் கற்பகமரத்தின் உயர்ந்த கிளையில்
ஒரு வாடாத மலராக ஆக்கினார்.
உதிர்ந்த மலரே

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 11:35

எஸ்.வி.வி

பொதுவாசிப்புக்குரிய நூல்களை ரசனை உணர்வோடு எழுதியவர் எஸ்.வி. வி. அக்காலத்து வாழ்க்கையைப் பற்றியும், பொருளாதார நிலை, சமூகம், மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் பற்றியும் அறியும் சான்றாதாரமாக எஸ்.வி.வியின் எழுத்துக்கள் திகழ்கின்றன. குறிப்பாக, அந்தக் காலத்து பிராமணக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து அதிகம் எழுதியிருக்கிறார். நகைச்சுவை இவரது படைப்பின் முக்கிய அம்சம் எனலாம். நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன், துமிலன், நாடோடி என பலருக்கும் முன்னோடி எஸ்.வி.வி. தான். வெகு ஜன வாசகர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்ட எழுத்தாளர்களில் எஸ்.வி.வி.க்கு மிக முக்கிய இடமுண்டு.

எஸ்.வி.வி எஸ்.வி.வி எஸ்.வி.வி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 11:34

நாயகி, பெண் எழுத்தாளர்கள்- எதிர்வினை

நாயகி: பெண் எழுத்தாளர்கள்.

மார்ச் 22 சென்னையில் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கத்தினை நாயகி என்ற பெயரில் நடத்தினோம். 

‘நாயகி‘ நிகழ்வு குறித்து எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவரது இணையதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். ஊக்கமும், உத்வேகமும் தரும் விதத்தில் அமைந்த அந்தப் பதிவிற்கு எங்களது மனப்பூர்வமான நன்றி.

அந்தக் கட்டுரையில் சிலவற்றை ஜெயமோகன் சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கான விளக்கத்தினைச்  நிகழ்வினை ஒருங்கிணைத்த எட்டு பேரும் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 

தமிழ்விக்கி தளத்தினைப் பற்றி நிகழ்வில் யாரும் குறிப்பிடவில்லை என்று சொல்லியிருந்தார். தமிழ்விக்கி மாபெரும் பணியைச் செய்துவருகிறது. அதில் எங்களுக்கு மிகுத்த மதிப்பும் மரியாதையும் உண்டு. பெண் எழுத்தாளர்கள் குறித்தத் தகவல்களை தமிழ்விக்கி எடுத்துச் சொன்னது. பேச்சாளர்கள் உரையைக் கவனித்தால் ஒன்று புரியும், அவர்கள் எல்லோருமே தாங்கள் படித்தக் கட்டுரைகள், எழுத்தாளர்களின் புத்தகத்தைத் தொகுத்தவர்கள் பெயரைக் குறிப்பிட்டே பேசியிருப்பார்கள். ஆனாலும், தமிழ்விக்கி குறித்து குறிப்பிடாதது ஜெயமோகன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். 

நிகழ்வில் பேசிய ஜெய்ஸ்ரீ எழுத்தாளர் குமுதினி குறித்து உரை நிகழ்த்தினார். இணையத்தில்  குமுதினி குறித்து தேடியதாகவும் அவர் குறித்தத் தகவல்கள்  எங்குமே கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டதாகவும் ஜெயமோகன் பதிவு செய்திருந்தார். ஜெயஸ்ரீ அப்படிக் குறிப்பிடவில்லை. கன்னிமாரா நூலகத்தின் புத்தக அட்டவணையில் (library catalogue) குமுதினியின் பெயரை குறிப்பிட்டால்,அவரது பெயரின் கீழ் புத்தகங்கள் எதுவும் பட்டியலிப்படவில்லை என்றே குறிப்பிட்டிருந்தார். அவருடைய உரை ஸ்ருதி டிவியில் காணக்கிடைக்கிறது. 

பேச்சாளர்களில் சிலர் முழுமையாகவும், சிலர் மேம்போக்காவும் படித்துவிட்டு வந்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். பேச்சாளர்கள் எல்லோருமே நாங்கள் அழைத்து இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் என்பதால், இதற்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்,. நாங்கள் அழைத்த பேச்சாளர்கள் எல்லோருமே உரைக்கான தயாரிப்போடு வந்திருந்தார்கள். நமக்குத் தேவைப்பட்டது எல்லாம், ஒவ்வொரு பெண் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்தமான படைப்புலகத்தையும்  முன்வைத்துப் பேசுவதாகவே இருந்தது. தீவிர இலக்கிய வாசகர்களை சென்றடைவது மட்டுமே நோக்கமல்ல. அவர்களில் அநேகம் பேருக்கு இந்த பனிரெண்டு பேர்களில் பேரில் அரைவாசிப் பெயர்களைத் தெரியவில்லை. இந்த நிகழ்வு, இந்த பனிரெண்டு எழுத்தாளர்களின் பெயர்களும் அவர்களின் பங்கு இலக்கியத்தில் என்னவாக இருந்தது என்பதையும் நினைவில் நிறுத்த வாய்ப்பாக அமைந்திருந்தது. இதுவே இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகவும் அமைந்திருந்தது. அதனைப் பேச்சாளர்கள் எல்லாருமே திறன்பட செய்தார்கள். 

இந்த நிகழ்வு குறித்து எங்களிடம் நேரடியாகப் பேசியவர்கள், எங்களைக் குறிப்பிட்டு எழுதியவர்கள் அத்தனை பேருக்கும் முறையான பதிலை சொல்லியிருக்கிறோம். பூடகமாகவும், பேரைச் சொல்லாமல் மறைமுகமாக பதிவிட்டவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதனைத் தவிர்க்கிறோம். 

அந்த வகையில் ஜெயமோகன் அவர்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நாங்கள் மிக மதிக்கிறோம். தொடர்ந்து கடந்த நூற்றாண்டு பெண் எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகளை அவர் பதிவு செய்து கொண்டே இருக்கிறார். அதனையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். 

அக்கறை கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி

ஜா தீபா

முகநூலில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 11:31

Ajithan, philosophy -Letter

Myself Kanchan, I attended his western philosophy introduction class in Vellimalai. It was a really thought provoking experience and he treated us very kindly. Over all 40 to 50 members attended the class everyone felt that very worthy to be in the camp

Ajithan, Philosophy- Letter

 

கம்பனோ,அல்லது கண்ணதாசனோ Creativity தளத்தில் வருகிறார்கள்.ஆனால் இன்றைய ஒரு தமிழ் முதுநிலைபட்டாதாரி ஒரு உயர்கல்வி முடித்த வேலைக்கு தகுதியான நபர்.திறமையும், படைப்புதிறனும்  இந்திய  பள்ளிகளில்  ஏன் சாத்தியப்படவில்லை? 

திறமை, அறிவு- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 11:30

March 28, 2025

நீலி, இசை, ஔவை – இணைய கலந்துரையாடல்

அன்பு ஆசிரியருக்கு,

நீலியின் முதல் கலந்துரையாடல் நிகழ்வு மார்ச் 30, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழவுள்ளது. இந்த நிகழ்வில் கவிஞர் இசை நீலி மின்னிதழில் எழுதிய ’களிநெல்லிக்கனி’ கட்டுரைத்தொடர் குறித்து உரையாட திட்டமிட்டுள்ளோம். இந்தத்தொடர் வெளிவந்து கொண்டிருக்கும் போதே தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து பொதுவெளியில் தெரிவித்து உரையாடிய எழுத்தாளர் பாவண்ணன், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோருடன், நீலி ஆசிரியர் குழுவில் ஒருவரான விக்னேஷ் ஹரிஹரனும் உரையாற்றுகின்றனர். இது தொடராக எழுதப்பட்டு நிறைவடைந்து புத்தகமாகவும் வெளிவந்ததும் மகிழ்ச்சிக்குரியது. 

அடுத்த உரையாடல் நிகழ்வு ஜூன் மாதம் சைதன்யாவின் உலகப்பெண் சிந்தனையாளர்கள் கட்டுரைத்தொடர் குறித்து உரையாட திட்டமிட்டுள்ளோம். அந்த கட்டுரைத்தொடரும் நிறைவடைந்து புத்தகமாக வெளிவர வேண்டும் என விரும்புகிறோம். சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பில் அதன் தாக்கத்தை உணர முடிந்தது. 

ஒரு அறிவார்ந்த உரையாடலை சூழலில் முன்னெடுக்க சரியான சிந்தனைக்கான அடித்தளம் அவசியம். இந்த மூன்றரை ஆண்டுகளில் அப்படியான சில உரையாடல்களை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை நீலி உருவாக்கியுள்ளது என்ற எண்ணம் உள்ளது. தொடர்ந்து சில கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

*

கூடுகை சுட்டி:

https://us02web.zoom.us/j/81824287154?pwd=VlVEOEpZNFUrMFUwWlAzMS8yeGdJdz09

Meeting ID: 818 2428 7154

நீலி குழு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:36

பழைய பாடல் கேட்பவர்கள்

சிங்காரவேலா விளையாட வா

அண்மையில் நண்பர்களுடன் ஓர் உரையாடல். நான் ‘சிங்காரவேலா விளையாட வா ஒரு நல்ல பாட்டு” என்றேன். நண்பர் பரிவுடன் “ஆமா சார். ஆனா சிங்காரவேலனே தேவான்னு லைன்” என்றார்.

நான் “அந்தப்பாட்டு எனக்கு தெரியும், இது வேறபாட்டு” என்றேன். செல்பேசி இல்லா இடம். ஆகவே பாட்டை ஒலிக்கவிட முடியவில்லை. என்னால் பாடி எந்தப் பாட்டையும் நினைவுறுத்த முடியாது. நண்பர் அப்பாட்டை கேட்டதில்லை. அங்கிருந்த எவருமே கேட்டதில்லை. ஆச்சரியமென்னவென்றால் அங்கிருந்த இளம்நண்பர் இருவர் ’சிங்காரவேலனே தேவா’ கூட கேட்டதில்லை.

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, அதுதான் உலகத்தியல்பு. அன்றாடம் மிகமிக ஆற்றல்கொண்ட ஒன்று. அது நம்மை முழுமையாகச் சூழ்ந்துகொள்கிறது. இன்றே இங்கில் நிலைநிறுத்துகிறது. அதிலும் இன்றைய ஊடகப்பேரலை நம்மை தூசுபோல அடித்துச் செல்கிறது.நம்மை வெறுமொரு வணிகநுகர்வோர் என வரையறை செய்கிறது இன்றைய முதலீட்டியச் சூழல்.

ஆனால் கொஞ்சம் நுண்ணுணர்வுடையோர் தங்களை விரித்துக்கொண்டே இருப்பார்கள் என நினைக்கிறேன். விரித்தல் பலவகை. இன்றில் மட்டும் நிலைகொள்ளாமை அதில் முதல் படி. நம் பிரக்ஞை எத்தனை பெரிய வெளியில் திகழ்கிறது என்பதே நாம் எவர் என்பதைக் காட்டுகிறது. நூறாண்டில் வாழ்வது பெரிய வாழ்க்கை. ஈராயிரமாண்டில் வாழ்வது மேலும் பெரியவாழ்க்கை.

நான் ஒரு நாளில் வாழும் காலங்களை எண்ணிப்பார்க்கிறேன். மூவாயிரத்தைநூறாண்டு தொன்மையான பிரம்மசூத்திரம். தமிழ் விக்கியின் நூறாண்டு தொன்மையான ஆளுமைகள். தொல்நூல்கள், தொல்சிந்தனைகள். கூடவே இன்றைய அதிநவீன பின்பின்நவீனத்துவச் சிந்தனைகள். பிரெஞ்சு புதுத்தாராளவாதம், நாளைய அறிவியல் பற்றிய சிந்தனைகள்… என் உலகம் எனக்கு நிறைவூட்டும்படிப் பெரிது.

ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா

நான் இசைகேட்கும் நண்பர்களிடம் கேட்பேன், என்னென்ன இசை கேட்கிறீர்கள் என. பல ‘இளையராஜா பாட்டு கேப்பேன்’ என்பார்கள். திரும்பத் திரும்ப ஐம்பது அல்லது நூறு பாட்டுக்குள்தான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். “எத்தனை வாட்டி வேணும்னாலும் கேக்கலாம்” என்று அதற்கொரு விளக்கமும் சொல்வார்கள். அது ரசனை அல்ல, வெறுமே நினைவை மீட்டுதல்தான். அந்த ஓசை வழியாக பழகிப்போன ஒரு மனநிலையை அடைதல் மட்டுமே.

நல்ல இசைரசிகர்கள் இசையை தேடிக்கொண்டே இருப்பார்கள். யூடியூப் ஒரு இசைக்களஞ்சியம். தேடித்தேடிச் சென்றுகொண்டே இருக்கலாம். உலகம் முழுக்க உள்ள இசைகளைக் கேட்கலாம். புதிய இசைக்காகத் தேடாதவர் இசை கேட்பவர் அல்ல, வெறும் பழக்கத்துக்கு அடிமையானவர் மட்டுமே. ஒருநாளில் அன்றைய பொழுதுக்கென ஒரு புதிய பாடலை கொத்திக்கொள்பவரே நல்ல இசைரசிகர். நான் என்னை இசைரசிகன் என சொல்ல மாட்டேன். ஆனால் தணியாத தாகம் கொண்டவனாக, தொடர்ந்து கண்டுபிடிப்பவனாக இருக்கிறேன்.

தமிழிலேயே பாட்டு கேட்பவர்கள் ஏராளமான பழைய பாடல்களைக் கேட்பதே இல்லை. நான் சுட்டிகொடுக்கும் பாடல்களை பலர் கேட்டிருப்பதில்லை. நடுவயதானவர்கள் “எப்பவோ சிலோன் ரேடியோலே கேட்ட ஞாபகம்” என்பார்கள். ஆனால் அவர்கள்கூட மீண்டும் அப்பாடல்களைக் கேட்பதில்லை. உலகம் முழுக்கவே இவ்வாறுதான் பொதுமனநிலை. ஓடிடி தளங்களில் பத்தாண்டுக்கு முந்தைய படங்களை, செவ்வியல் படங்களைக்கூட, பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதமே என்று அத்துறை நிபுணர் என்னிடம் சொன்னார்.

ஓ மோகன செந்தாமரை

பழையபாடல்கள் கேட்க ஒரு மனநிலை தேவை. ஒன்று கொஞ்சமேனும் கர்நாடக இசை செவிக்குப் பழகியிருக்கவேண்டும். ஏனென்றால் கணிசமான பாடல்கள் ராக அமைப்பு- அல்லது ராகபாவம் கொண்டவை. இன்றைய பாடகர்களின் குரல் பழையகாலப் பாடகர்களிடம் இருக்காது. இன்றைய ரசிகர்களுக்கு அவை முதியோர் பாடுவதுபோலத் தோன்றலாம், அன்றைய பாடல்முறை அது. அத்துடன் பழையபாடல்களில் ஒலிப்பதிவு துல்லியமற்றதாக இருக்கும். சூழலிசை திரும்பத் திரும்ப ஆர்மோனியமும் வயலினுமாக இருக்கும். அத்துடன் அவற்றை வெறும் இசையாகவே காணவேண்டும், காட்சிகள் மிகப்பழையவையாக இருக்கும்.

ஆனால் எந்தக்கலையும் கற்பனையில்தான் விரியவேண்டும். இந்த குறைபாடுகளுக்கு அப்பால் பழையபாடல்களில் இரண்டு அரிய அனுபவச்சாத்தியங்கள் உண்டு. ஒன்று, நல்ல பாடல்கள் மிகமிக உள்ளார்ந்து உணர்வுநிலைகொண்டு பாடப்பட்டிருக்கும். மண்மறைந்துபோன ஒரு மேதையின் உள்ளத்தை நம்மால் அந்தக்குரல் வழியாகச் சென்று தொடமுடியும், அது ஓர் அரிய அனுபவம். இரண்டு, இன்று நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும் ஒரு பழைய பண்பாட்டுச்சூழலை அப்பாடல்கள் வழியாக அடையமுடியும். அது ஒரு காலப்பயணம், ஒரு கனவுப்பயணமும்கூட.

ஆனால் இந்த அனுபவம் அனைவருக்குமானது அல்ல. நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு சமகால இசைமேல் பெரும்சலிப்பு சீக்கிரமே உருவாகிவிடுகிறது. காரணம் அது எங்குபார்த்தாலும் ஒலிக்கிறது. சராசரி ரசனைக்காக கட்டமைக்கப்பட்டது அது. ஆகவே அவர்கள் அரிது தேடிச்செல்கிறார்கள். அவர்களுக்கென ஒன்றை கண்டடைய விரும்புகிறார்கள். அத்தகையவர்களே இத்தகைய இசைப்பயணங்களைச் செய்யமுடியும்.

ஆச்சரியம் என்னவென்றால் இந்த நுண்ணுணர்வுக்கு வயது அடையாளம் என ஏதுமில்லை. மிக இளையவர்கள் மிகப் பழைய பாடல்களைத் தேடிச்செல்வதையும், மிக முதியவர்கள் சமகாலத்தில் மூழ்கிக்கிடப்பதையும் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:35

அப்புசாமி, சீதாப்பாட்டி

எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் பாக்கியம் ராமசாமி என்னும் பெயரில் உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரங்கள். கதைகளாகவும் படக்கதைகளாகவும் குமுதம் இதழில் தொடர்ந்து வெளிவந்த இக்கதைகள் புகழ்பெற்றவை.

அப்புசாமி சீதாப்பாட்டி அப்புசாமி சீதாப்பாட்டி அப்புசாமி சீதாப்பாட்டி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:34

கம்பராமாயணம், வாசிப்பு முடிவு

அன்புள்ள ஜெ,

2021 இல் தொடங்கிய எங்கள் கம்பராமாயண கூட்டு வாசிப்பு இன்று நானும் ஶ்ரீநிவாஸனும் மட்டுமாக நிறைவடைந்தது.

ஒவ்வொரு முறையும் ஊட்டி காவிய முகாம் முடிந்து ஊர் திரும்பியவுடன் தினமும் 10 பாடல்களாவது படிக்கவேண்டும் என்று ஆரம்பிப்போம். சில நாட்களோடு நின்றுவிடும்.

கொரோனா காலத்தில் நீங்கள் ஒருங்கிணைத்த ஜூம் நிகழ்வுகளில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ராவணன் மந்திராலோசனை முதல் விபீஷணன் அடைக்கலம் வரையான பகுதிகளை நாடகமாக்கினோம். அந்த ஒத்திகைகள் எங்களை பித்துகொள்ள வைத்தன. சுஷில் குமார், ஆனந்த்குமார், ரம்யா, நிக்கிதா, சிங்கப்பூர் கணேஷ், அனங்கன் ஆகியோருடன் சேர்ந்து ஜூமிலேயே தினமும் கம்பனை படிக்கத் தொடங்கினோம். இதுவன்றி கம்பனை முழுதும் படிப்பதுதான் தங்கள் லட்சியம் என்று கூறி இதில் இணைந்தவர்களும் ஒரே அமர்வுடன் தலைமறைவானவர்களும் பலர் உண்டு

நிக்கிதா விடாமல் எல்லா பாடல்களையும் வாசித்து தன் உச்சரிப்பை சீர்செய்வார். ஆனந்த்குமாரின் உள்ளிருக்கும் கவிஞர் அவ்வப்போது வெளிவருவார். சுஷில் குமார் கம்பன் நாஞ்சில் நாட்டான்தான் என்று நிறுவ முயல்வார். ரம்யா ராமனை பிரிந்த சீதையின் மூச்சுபோல வருவதும் போவதுமாக இருப்பார். கணேஷ் கம்பனுக்கு சிரக்கம்பம் கரக்கம்பம் செய்துகொண்டிருப்பார். அனங்கன் ‘அது அப்படித்தானே இருக்கமுடியும்‘ என்று கம்பனுக்கு அங்கீகாரம் அளிப்பார்.

வாசிப்புடன் role play வும் இருக்கும். பரதனாக, குகனாக, தசரதனாக, கைகேயியாக, ஏன் தாடகையாக கூட மாறுவோம். சூர்ப்பனகைக்கு ரசிகர் மன்றம் அமைக்கவும் ராவணனை உதாசீனம் செய்யும் சீதைக்கு எதிராக கண்டன ஊர்வலம் நடத்தவும் கூட ஏற்பாடுகள் நடந்தன.

தினமும் பங்கேற்க இயலாத நிலையில் ஒவ்வொருவராக குறைந்து சுந்தர காண்டம் தொடங்கியபோது ஜூம் சந்திப்பு இல்லாமலே ஆகியது. நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சிய நிலையில் இனி நிறுத்துவதில்லை என்று நாங்கள் மட்டுமாக தொடர்ந்து இன்று இனிதே நிறைவு செய்தோம்.

இந்த செயலுக்கு என்றும்போல காரணமாக இருந்த உங்களுக்கும், பாதி வரை உடன் பயணித்து முடித்தே ஆகவேண்டும் என்ற இலக்கு நோக்கி எங்களை செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

அன்புடன்,

சுதா

*

அன்புள்ள சுதா

தனித்தோ சேர்ந்தோ கம்பராமாயணத்தை முழுமையாக வாசித்து முடிப்பதென்பது ஒரு அருந்தவம்தான். ஒரு தலைமுறையில் ஒரு சிலரே அவ்வாறு வாசிக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வாசிப்பவர் சிலராவது இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் செவ்வியல் வாழாது. வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.