உதிர்ந்தமலரின் கவி
எம்.எஸ்.விஸ்வநாதன் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க நல்ல படங்களுக்கு அரிய இசையை அமைத்திருக்கிறார். ஆச்சரியமென்னவென்றால் தமிழில் அவர் செய்யாத பல சோதனைகளை அங்கே செய்திருக்கிறார். குறிப்பாக மெட்டுக்கு இசையமைக்காமல் பாடலை எழுதவைத்து இசையமைத்தார். கவிதையைப் பாடுதல் என்பது கேரளத்தின் பண்பாடு. அந்த chanting அம்சம் கொண்ட பல பாடல்களை அங்கே அமைத்தார்.
அவற்றை அவர் தமிழில் செய்திருக்கமுடியாது. மலையாளத்தில் அவர் ஒரு இசையரசனைப் போல நுழைந்தார். அங்குள்ள தயாரிப்பாளர்களும் நடிகர்களும் அவருக்காக வந்து பணிந்து நின்றனர். இங்கே அது சிவாஜி-எம்.ஜி.ஆர் யுகம். அவர்கள் பாடல்களை இறுதியாக ‘ஓகே’ சொல்லவேண்டும். எம்.எஸ்.வி அதிகாலையிலேயே ஆர்மோனியத்துடன் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று காத்திருந்து, அவர்களுக்கு திரும்பத் திரும்ப மெட்டுக்களை போட்டுக்காட்டி, அவர்கள் ஏற்கும் வரை மன்றாடி, அதன்பின் பாடல்களை இசையமைக்கவேண்டும்.
(அதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார், அவருக்கு அதில் வருத்தமேதும் இல்லை, உற்சாகமாகவே சொல்லியிருக்கிறார், தன் சாதனைகள் என்பதுபோல. அவர் மிக எளிமையான, சிறுவன்போன்ற மனிதர் என எனக்கு நேர்ப்பழக்கத்தில் ஓரளவு தெரியும். நடிகர்களிடமோ, இயக்குநர்களிடமோ, தயாரிப்பாளர்களிடமோ பணிந்து நிற்காத முதல் தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாதான். சிவாஜிக்காக அவர் அமைத்த முதல்படத்தின் பாடல்களை இசையமைப்பு முடிந்து, பாடல்பதிவும் முடிந்து, கடைசிவடிவைத்தான் அவரிடம் காட்டினார் என்றும், சிவாஜி அன்று ஒன்றும் சொல்லமுடியவில்லை என்றும் ஒரு கதை உண்டு.)
எம்.எஸ்.வி அவரது 17 வயதில் கண்ணனூரில் இருந்து சென்னை வந்துவிட்டாலும் அவருள் மலையாளப் பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வு தெளிவாகவே இருந்தது என்று காட்டுபவை அவருடைய பல பாடல்கள். அவற்றிலொன்று இன்றும் மிகப்புகழ் பெற்றிருக்கும் ‘வீண பூவே’ என்ற பாடல். 1973ல் வெளிவந்த ‘ஜீவிக்கான் மறந்நு போய ஸ்த்ரீ’ என்ற படத்திற்காக வயலார் ராமவர்மா எழுதி, யேசுதாஸ் பாடியது.
அந்த கதை மலையாள நாவலாசிரியர் வெட்டூர் ராமன்நாயர் (5 ஜூலை 1919 – 11 ஆகஸ் 2003) அதேபேரில் எழுதியது. வெட்டூர் ராமன்நாயர் சுந்தர ராமசாமியின் நண்பர், நாகர்கோயிலுக்கு வந்து சு.ரா இல்லத்தில் தங்கியிருக்கிறார். மலையாளத்தில் அவர் ஒரு நடுத்தர வகை எழுத்தாளர். தூய இலக்கியமும் அல்ல, வெறும் வணிக எழுத்தும் அல்ல. மிகப்பிரபலமாக இருந்தார். அவருடைய புரி முதல் நாஸிக் வரை என்னும் பயணக்கட்டுரை மிகப்புகழ்பெற்றது- 1940ல் அவர் நடத்திய பயணக்குறிப்பு அது. பாடநூலாக நீண்டகாலம் இருந்தது.
வெட்டூர் ராமன்நாயர்இந்நாவல் ஒரு நடனமங்கையின் கதை. அவள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்பட்டவள். அவளை ஓர் ஓவியன் காதலிக்கிறான், அவளை ஆராதிக்கிறான், அவளை அரசி என உணரச்செய்கிறான். அந்தக்காதல் அவளை மலரச்செய்கிறது. அவன் சட்டென்று மறைந்துவிடுகிறான். அவள் அவன் நினைவாகவே வாழ்கிறாள். 30 ஆண்டுகள் அவனுக்காக நோன்பாக வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். இசையரசியாக ஆகிவிட்டிருக்கும் அவள் ஒரு பெண்ணை சந்திக்கிறாள். அவளிடமிருந்து தன் காதலனாகிய ஓவியனுக்கு பல பெண் தொடர்புகள் உண்டு என, அவன் ஓர் ஏமாற்றுக்காரன் என அறிகிறாள். ஒவ்வொரு பெண்ணையும் அவளுக்குரிய ஒரு நடிப்பை அளித்து வென்றெடுத்து நுகர்வது அவன் வழக்கம்.
அவளுக்கு அது ஏமாற்றம். தன் வாழ்க்கை வீணாகிப்போன ஒன்றா என்னும் ஐயத்தை அடைகிறாள். ஆனால் பின்னர் உணர்கிறாள், அவன் பொய்யானவனாக இருக்கலாம், அவளுடைய காதல் உண்மையானது. அது அவள் வாழ்க்கையை பொருளுள்ளதாக ஆக்கியிருக்கிறது. அது அவள் செல்வம். அவள் வாழ்வின் பொருள் அது. அந்நாவலை தோப்பில் பாஸி திரைக்கதை எழுதி, சேதுமாதவன் இயக்கி படமாக்கினர். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு அன்று மிகவும் பேசப்பட்ட ஒன்று. அன்றிருந்த தமிழ்ப்படங்களின் கண்கூசும் வண்ணங்கள் கொண்ட ஒளிப்பதிவுத்தரத்துடன் ஒப்பிட்டால் வேறுபாடு திகைக்கச் செய்வது. அன்றைய சர்வதேசத்தரமான ஒளிப்பதிவு அது.
இந்தப்பாடல் குமாரன் ஆசான் மலையாளத்தில் எழுதிய மிகப்புகழ்பெற்ற குறுங்காவியமான வீணபூவு (உதிர்ந்த மலர்) என்னும் படைப்பைப் பற்றிப் பேசுகிறது. மலர்ந்திருக்கும்போது உன்னைப்பாட கவிஞர் பலர் வருவார்கள், உதிர்ந்தால் உன் துயர் அறிந்து உன்னை எடுத்து காவியமரத்தின் உச்சிக்கிளையில் வைக்க குமாரன் ஆசான் என்னும் மாபெரும் கவிஞர் மட்டுமே வருவார் அல்லவா என்று பாடல் பேசுகிறது.
இதிலுள்ள ஒரு நுட்பம் ஆசான் உன்னை ‘வசந்ததிலகம்’ ஆக்கினார் என்று வயலார் பாடுகிறார். வசந்தத்தின் பொட்டு என்று பொருள். வசந்ததிலகம் என்பது ஒரு செய்யுள் வடிவமும்கூட.
ஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்
எத்ர சோ·பிச்சிருந்நு ஒரு ராக்ஞி கணக்கே நீ?
[‘ஓ மலரே உன்னதமான இடத்தில்
எத்தனை சோபித்திருந்தாய் நீ, ஒரு மகாராணியைப்போல!’]
என தொடங்கும் வீணபூவு என் அம்மாவுக்கு மிகப்பிடித்தமான கவிதை. அம்மாவின் இனிய குரலில் பல முறை நான் கேட்டது அது.
வீணபூவே குமாரனாசான்றே வீணபூவே
வீண பூவே
விஸ்வதர்சன சக்ரவாளத்திலெ
நக்ஷத்ரமல்லே நீ
விகாரவதி நீ விரிஞ்ஞுநிந்நப்போள்
விரல்தொட்டு உணர்த்திய பாவனகள்
கவி பாவனகள்
நின்னே காமுகி மாருடே சுண்டிலே
நிஸீதகுமுதமாக்கி
கவிகள்
மன்மதன் குலய்க்கும் ஸ்வர்ண தனுஸிலே
மல்லீஸரமாக்கி…
விஷாதவதி நீ கொழிஞ்ஞுவீணப்போள்
விரஹமுணர்த்திய வேதனகள் நின் வேதனகள்
வர்ணப்பீலி தூலிக கொண்டு ஒரு
வசந்த திலகமாக்கி ஆசான்
விண்ணிலே கல்பத்ருமத்தின்றே கொம்பிலே
வாடா மலராக்கி
வயலார்படம்: ஜீவிக்கான் மறந்நுபோய ஸ்த்ரீ
இயக்கம்: கே.எஸ்.சேதுமாதவன்
ஒளிப்பதிவு பாலு மகேந்திரா
நடிப்பு: ஷீலா, மோகன் சர்மா
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வயலார் ராமவர்மா
பாடகர் ஜேசுதாஸ்.
சேதுமாதவன்உதிர்ந்த மலரே, குமாரன் ஆசானின் உதிர்ந்த மலரே
உலக இலக்கியத் தொடுவானில் ஒரு
விண்மீன் அல்லவா நீ?
காதல்கொண்டு நீ விரிந்து நின்றிருந்தபோது
விரலால் தொட்டு உன்னை மலரச்செய்த கற்பனைகள்
கவிஞர்களின் கற்பனைகள்
உன்னை
காதலியரின் உதடுகளில் தோன்றும்
இரவுத்தாமரை என்றாக்கினர்
மன்மதன் தொடுக்கும்
பொன்வில்லின்
மல்லிகை அம்பாக்கினர்.
துயர்கொண்டு நீ உதிர்ந்து விழுந்தபோது
பிரிவு அளித்த உன் துயரங்களை
பொற்பீலித் தூரிகையால்
ஒரு வசந்த திலகமாக்கினார்
ஆசான்
வானின் கற்பகமரத்தின் உயர்ந்த கிளையில்
ஒரு வாடாத மலராக ஆக்கினார்.
உதிர்ந்த மலரே
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

