Jeyamohan's Blog, page 136
April 4, 2025
செம்மை, கடிதம்
அன்புள்ள ஜெ,
செம்மை கட்டுரையின் முதலில் இருக்கும் உங்கள் புகைப்படமே எனக்கு பிரமாதமான காட்சியாக கண்ணில் தேங்கி நின்று விட்டது. அந்த படத்தை குறைந்தது ஐந்து நிமிடமேனும் பார்த்து நின்ற பின்னரே படிக்கத் தொடங்கினேன். ஒரு வளைந்த மென்மையான மணல் குன்று. அதன் மேல் நீங்கள். பின்னால் எதுவுமற்ற நீண்ட வானப் பெருவெளி. அபாரமான படம். உயர்ந்து நிற்கும் ஒரே பொருள் நீங்கள் மட்டுமே. அந்த வண்ணங்களும், நிலப்பரப்பும் ஒரு விந்தையாக இருந்தது. வானின் மேலே அடர் நீலம். அது மங்கி மங்கி நிலத்தை அடையும் போது முற்றிலும் வெண்மை. கீழே நீலத்திற்கு நேர் எதிரான சிகப்பு. குளுமையும் வெம்மையும் ஒரு சேர படிந்து இணைத்து விட்டது போல் இருந்தது. மெரூன் நிற மேலாடையும், நீல நிற ஜீன்ஸும் கொண்ட உங்கள் உடை அந்த படத்தை இன்னும் இன்னும் அழகாக்கியது. அந்த படத்திற்குள் வண்ணங்களின் முரணும் அதே சமயம் ஒருமையும் கலந்தே இருந்தது போல் இருந்தது. திடீரென அந்த மணல் குன்று ஒரு மாபெரும் ஒட்டகம் போல தெரிந்தது. ஒட்டகத்தின் திமில் மேல் ஏற்றி நிறுத்தப்பட்ட சிறு பொம்மை போல நீங்கள் தெரிந்தீர்கள்.
ஓராண்டுக்கு முன்பு நாங்கள் ஒரு நான்கு நண்பர்கள் பத்து நாட்கள் கொண்ட ஒரு மும்மாநில பயணம் சென்றோம். அப்போது நாங்கள் முதலில் சென்ற இடம் கந்திக்கோட்டா. இன்றும் என்னுடைய கனவுகளில், வெறுமனே இமைகள் மூடும் போது கூட நான் அங்கு பார்த்த காட்சி கண்ணுக்குள் வந்து நிற்கும். பலநேரங்களில் கண்ணை விழித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த காட்சி தோன்றும். விடியற்காலை, இருள் நீங்கும் முன்னரே தட்டுத்தடுமாறி அந்த பாறைகளுக்கு நடுவே சென்று அமர்ந்து விட்டோம். ஷார்ஜாவில் செம்மை நிலத்திற்குள் நின்று கொண்டு ஒளி மயங்க மயங்க அது இருளடைவதை பார்த்த அனுபவத்தை எழுதி இருந்தீர்கள். நாங்கள் இருளில் இருந்து, எதுவுமற்ற ஒன்றில் இருந்து ஒரு அபாரமான காட்சி துலங்கி வருவதை பார்த்தோம். அந்த கற்பாறைகள் கொண்ட மலையை அரித்து உருவாகப்பட்ட பள்ளத்தில் பெண்ணா ஆறின் மடியில் இருந்து ஒரு தணல் உதித்தெழுந்த தருணம் ஒரு மாபெரும் தரிசனம். அங்கு சூழ்ந்திருந்த பாறைகள், வானம், ஆறு எல்லாம் மெல்ல மெல்ல செம்மை படர்ந்து கொண்டு இருந்தது. அங்கு நின்று கொண்டிருக்கும் போதே அந்த மங்கலான ஒளி துலங்கி வரும் கணங்கள் பெரும் போதமுற்று கனவு நிலையில் இருப்பது போலத்தான் இருந்தன. ஒரு மாபெரும் நிசப்தம் மெதுவாக அழிந்து பறவைகளின் இசை மேலெழும்பி குதிக்கத் தொடங்கியது. மங்கை ஒருவளின் மார்குழியில் ஓடும் கூந்தல் போல அந்த ஆறு வழிந்தோடிக் கொண்டு இருந்தது.
இன்னொரு காட்சியும் கூடவே நினைவுக்கு வருகிறது. நாம் ஹொன்னவார் பயணத்தில் ஒரு மாலை சூரிய அஸ்த்தமனம் பார்க்க கும்டா கடற்கரைக்கு சென்று இருந்தோம். அங்கிருந்த பாறை அடுக்குகள் தன்னுள் ஒரு செந்தணலை ஏந்தி உறைந்து நின்றிருந்தன. ஒவ்வொரு பாறைக்குள்ளும் ஒரு தணலின் வேட்கை. அந்த பாறை பெருக்கின் விளிம்பில் கடல். நீண்ட நீல கம்பளம். அதன் மேலே மீண்டும் வானில் ஒரு தீ பிழம்பு. அந்த தீ மெல்ல மெல்ல கடலுக்குள் அமிழ்வதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு கணத்தில் கடலும் எரியத் தொடங்கியது. குளுமைக்கும் வெம்மைக்கும் இடையிலான ஒரு யுத்தக் களியாட்டு போல் உணர்ந்தேன்.
சிபி
வில்லுப்பாட்டு மாதவி
வில்லுப்பாட்டு போன்ற நாட்டார்கலைகளுக்கு கிட்டத்தட்ட ஆதரவே இல்லை என்பதே நிலை. பார்வதிபுரத்தில் நிகழும் வில்லுப்பாட்டு நிகழ்வுகளுக்கு ஒரே ஒரு பார்வையாளர் இருந்தால்கூட அதிசயம். ஆனால் எந்தக் கலைக்கும் சட்டென்று ஒருவர் தோன்றி புது வெளிச்சம் அளிப்பார். அண்மைக்கால வில்லுப்பாட்டு விண்மீன் என்று மாதவியைச் சொல்லலாம். அவருடைய அழகும் இயல்பான சிரிப்பும் ஒரு முக்கியமான காரணம். தெற்கத்தி மொழியின் அழகிய சாயல்கள் வெளிப்படும் நகைச்சுவை, இனிய குரல் என ரசிப்பதற்கு ஏராளம். யுடீயூபிலேயே நாட்டார் கலைக்கு இத்தனைபேர் பார்வையாளர்கள் இருப்பது ஓர் இனிய விந்தை. வாழ்க.
மூளைநடை!
இன்று ஒருவர் உடன்வந்தார். தான் காலைநடை செல்வதைப்பற்றிய பெருமை முகமெங்கும். “இந்த ஏரியாவிலே வாக்கிங் வாறியளோ”
“ஆமா, சும்மா இப்டியே…” நான் ஏன் தப்பு நடந்துபோச்சு மொதலாளி பாவனையில் அதைச் சொன்னேன் என எனக்கே புரியவில்லை.
மூளைநடை!
Emburan film is the talk of the town.Usually antihero film characters become successful in cinema box offices.The perversion in the human beings reflect in these kind of mass hero films. When hindi films like Don, Deewar became successful, Amithab Batchen was celebrated throughout our country.
Emburan!April 3, 2025
அ. மார்க்ஸின் குரல்
சென்ற மார்ச் 23 அன்று காலை 10 மணிக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு. “நான் மார்க்ஸ் பேசுகிறேன்’
எனக்கு எவர் என தெரியவில்லை. எழுத்தாளர் கார்ல் மார்ஸா? அவர் குரல் அல்ல அது. அது மென்மையானது. என்னுடன் பணியாற்றிய நண்பர் மார்க்ஸா? ஆனால் அவர் தொடர்பிலேயே இல்லை.
“யார்? யார்?” என்று பலமுறை கேட்டேன்.
“நீங்க ஜெயமோகன் தானே?”
“ஆமா”ம
“நான் மார்க்ஸ், அ.மார்க்ஸ்”
“சார்!” என எழுந்து நின்றுவிட்டேன். அப்படி ஓர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. நான் அ.மார்க்ஸ் அவர்களிடம் மிகக்குறைவாகவே பேசியிருக்கிறேன். அவ்வப்போது நிகழும் இலக்கிய விழாக்களில் வழக்கமான மரியாதை வார்த்தைகள் மட்டும்.
“நீங்க என்னைப்பற்றி எழுதியிருப்பதை வாசிச்சேன்… மகிழ்ச்சியா இருந்தது. அதான் சும்மா கூப்பிட்டேன்”
“நல்லா இருக்கீங்களா சார்?”
“அவ்ளவு நல்லா இல்லை. உடம்புப் பிரச்சினைகள் இருக்கு. அதிகமா வெளியே போறதில்லை. திடீர்னு இந்த குறிப்பைப் பாத்தேன். அதான் கூப்பிட்டேன்”
மேலும் சில பொதுவான உரையாடல். நான் ஃபோனை அணைத்ததுமே கீழே சென்று அருண்மொழியிடம் “அருணா, இப்ப அ.மார்க்ஸ் என்னை கூப்பிட்டார்” என்றேன்.
“அப்டியா?” என்றாள். “எதுக்கு?”
நான் சொன்னதும் முகம் மலர்ந்து “அவரு எங்கூர்க்காரர்” என்றாள். அருண்மொழிக்கு விரிந்த தஞ்சை சொந்த நிலம். அங்குள்ள எல்லா அறிவுஜீவிகளும் தமிழகத்தை தாங்கும் தூண்கள்.
“எங்க அப்பாவுக்குக் கூட அவரைத் தெரியும். அவரோட அப்பா ஒரு ரெவலூஷனரி” என்றாள்.
அருண்மொழியின் அப்பாவுக்கு அ.மார்க்ஸை பிடிக்கும். அருண்மொழியின் அப்பா திராவிட இயக்க ஆதரவாளர், பெரியார் பிறந்தநாளை சுண்டல் வினியோகம் செய்து கொண்டாடுபவர். பரமகஞ்சர், ஆனால் அண்மைக்காலமாக அவரது மகன் மறைந்தபின் தன் சொத்துக்களை வெவ்வேறு கல்விப்பணிகளுக்கு பெரியார் பெயரால் அன்பளிப்பாக அளித்துக்கொண்டிருக்கிறார். பல லட்சம் அளித்துவிட்டார். “நாம என்ன கோயிலுக்கா குடுக்கமுடியும்?” என்றார். சென்ற சில ஆண்டுகளாக அவருக்கு கண்பார்வை முழுமையாகவே போய்விட்டது. முதுமையின் சிக்கல்கள்.
என் நாளே ஒளிகொண்டதாக ஆகிவிட்டது. நண்பர்களிடம் அ.மார்க்ஸ் என்னிடம் பேசியதைச் சொன்னேன்.
ஒருவர் ஐயத்துடன் “அவரு உங்களை கடுமையா கண்டிச்சிருக்காரு சார்”
“ஆமா, அவருக்கு ஒரு பலமான ஐடியாலஜி இருக்கு” என்றேன்.
“ரொம்ப கடுமையா…” என்றார்
“பொதுவா ஐடியாலஜியிலே நம்பிக்கை கொண்டவங்க அப்டித்தான். அவரு நாற்பதாண்டுகள் தமிழ்நாட்டோட மனசாட்சியா இருந்திருக்கார். எங்க எந்த பிரச்சினைன்னாலும் போயி நின்னிருக்கார். பலமான நம்பிக்கைகள் இல்லாமல் அப்டி செய்யமுடியாது” என்றேன்.
“அப்ப அவர் சொன்ன கருத்துக்கள் சரீன்னு நினைக்கிறீங்களா?”
“அப்டி இருக்கணும்னு இல்லை. நான் வேதாந்தி. நாராயணகுருவும் நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் முன்வைச்ச தூய அத்வைதம் என்னோட வழி. அது ஐடியாலஜி இல்லை, பிலாசபி கூட இல்லை. ஒருவகையான காஸ்மிக் விஷன் மட்டும்தான். அதன்படி ஒரு அப்சல்யூட் இருக்கு, அதை எங்கும் எப்பவும் உணரமுடியும். அந்த அப்சல்யூட் தவிர வேற எல்லாமே ரிலேட்டிவ்தான். அது அப்சல்யூட்டா இருக்கிறதனாலேயே காலம், வெளி எல்லாமே ரிலேட்டிவ்தான். இருக்கு, இல்லேன்னா இல்லை…. அப்ப சாதாரண கொள்கைகள், நம்பிக்கைகள், நிலைபாடுகள் எல்லாம் எப்படி மாறாத உண்மைகளா இருக்க முடியும்? நம்ம அனுபவ மண்டலத்திலே, நம்ம அறிவு எல்லைக்குள்ளே சிலது நம்மளோட உண்மை. அதை நாம் நம்பி முன்னாலே போகிறோம்… அந்த எல்லைக்கு அப்பால், நம்ம அறிவுக்கு அப்பால் இன்னும் எத்தனையோ உண்மைகள் இருக்கலாம். அதை மத்தவங்க சொல்லலாம். ஒரு அத்வைதிக்கு ராமானுஜர், மத்வர், நிம்பார்க்கர் சொல்றதெல்லாம் மாற்றுத்தரப்பு மட்டும்தான், பொய்யோ பிழையோ இல்லை. அவங்க அத்வைதத்தை ரொம்பக் கடுமையா மறுத்துச் சொல்றாங்க. சங்கரை வசைபாடுறதும் உண்டு. அது அவங்களோட உண்மை, அவ்ளவுதான்”
அரைமணிநேரம் பேசியும் நண்பரை சமாதானம் செய்ய முடியவில்லை. அவர் சமூகவலைத்தள அறிவுஜீவிகளில் ஒருவர். தீவிரமான காங்கிரஸ்கார். அதைவிட முக்கியமாக அதிபயங்கர பெரியார் எதிர்ப்பாளர்.
அ.மார்க்ஸுக்கு நான் ஒரு நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன், காந்தி பற்றிய நூல். அப்போதே பலர் அந்தச் செயலை கண்டு ‘அதிர்ச்சி’ அடைந்து எழுதியுள்ளனர். அப்போதே நான் விளக்கியிருக்கிறேன். எனக்கு அ.மார்க்ஸுடன் கருத்துவேறுபாடுகள் இருப்பதெல்லாம் முதன்மையாக இலக்கிய அழகியல் சார்ந்துதான். அவருடையது நடைமுறை அரசியல் சார்ந்த அணுகுமுறை, இரும்பாலான சல்லடை போன்றது அது. என் அழகியல் அதற்கு ஒவ்வாதது. நான் இலக்கியத்தை அணுகும் முறைவேறு.
அ. மார்க்ஸை நான் கேள்விப்படுவது 1986 ல், சுந்தர ராமசாமி வழியாக என்றால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். சுட்டி என்னும் கையளவுப் பத்திரிகை ஒன்று அப்போது வெளிவந்துகொண்டிருந்தது. மிகச்சிறிய இதழ். அதில் அ. மார்க்ஸ் கேள்விபதில்கள் எழுதிக்கொண்டிருந்தார். தஞ்சையில் பணியாற்றிய அவரை 1986 வாக்கில் அரசு இடமாற்றம் செய்தது. அதைப்பற்றிய செய்தியை வாசித்து இவர் யார் என்று நான் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன்.
“மார்க்ஸிசத்திலே மையப்பாதையிலே இருந்து விலகிப்போறவங்க ஐரோப்பாவிலே நெறையபேர் இருக்காங்க… நியோமார்க்ஸிசம்னு சொல்லலாம். நமக்கு அப்டி சிலபேருதான். ஏற்கனவே எஸ்.என்.நாகராசன், ஞானி, எஸ்.வி.ராஜதுரைன்னு ஒரு பட்டியல் இருக்கு. இப்ப ராஜேந்திரசோழன், இவருன்னு புதிய ஒரு அலை. ஆனால் இவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியிலே போறாங்க. இவங்களுக்குள்ள பொதுவா ஒண்ணுமில்லை. இவரு அனார்க்கிஸம் நோக்கி போறார்னு நினைக்கிறேன்” என்றார் சு.ரா. (இது என் டைரியில் நான் எழுதி வைத்திருக்கும் வரி)
சு.ராவை அ.மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துவந்த காலத்தில்கூட சு.ரா. அவர் மேல் மதிப்பு கொண்டிருந்தார். குறிப்பாக அவருடைய உரைநடை சிறப்பானது என்று எண்ணினார். அது நவீனத்துவ அழகியல்வாதிகளின் மனநிலை. ‘கச்சிதமான சொற்றொடர்கள்’ என்பதுதான் அவர்களின் அறுதி இலக்கு.அவர்களை வசைபாடி எழுதினாலும்கூட நல்ல உரைநடை என்பது கொண்டாடப்படவேண்டிய சாதனை!
எனக்கும் அ.மார்க்ஸின் உரைநடை மேல் என்றும் பெரும்பற்று உண்டு. அவர் தமிழகத்தின் மாபெரும் களச்செயல்பாட்டாளர், சுதந்திர இடதுசாரிக்குரல், மனித உரிமைக்கான தரப்பு என்பதில் எனக்கு பெரும் மதிப்புதான். அதில் அவர் ஒரு வரலாற்று ஆளுமையெ. ஆனால் கூடவே அவர் புனைவெழுத்தை முயன்றிருக்கலாம் என்றே இப்போதும் எண்ணுகிறேன். அவருடைய அனுபவச் சித்தரிப்புகள் எல்லாமே பெரிய புனைவெழுத்தாளர்களின் நுண்மொழித்திறன் கொண்டவை. அவருக்கு புனைவெழுத்துமேல் பெரிய மதிப்பு இல்லாமல் போனது இழப்புதான்.
நேற்று, 31 -3-2025அன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் அ.மார்க்ஸின் எழுத்துக்களை தொகுக்கும் பணி ஒன்றை தொடங்குவதாக இருக்கிறார். அ.மார்க்ஸின் கொள்கைத்தரப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவருடைய வழிசென்றவரே அல்ல. இடதுசாரிப் பார்வை கொண்டவர் என்று மட்டும் சொல்லலாம். ஆனால் அ.மார்க்ஸின் கருத்தியல் பங்களிப்பு, களப்பங்களிப்பு மேல் பெரும் மதிப்பு கொண்டவர்.
உண்மையில் ஒரு சிந்தனையாளன் அவனுடைய எதிர்த்தரப்பால் எப்படி மதிப்பிடப்படுகிறான் என்பதே அவனுடைய மெய்யான இடம் என நான் நினைக்கிறேன். ஆதரவுத்தரப்பால் அல்ல எதிர்த்தரப்பால்தான் அவன் வரலாற்றில் நிலைநிறுத்தப்படுகிறான். தொடர் விவாதங்கள் வழியாக. உலகமெங்கும் அவ்வாறுதான் நிகழ்ந்தது.
சிந்தனையாளர்களில் கணிசமானவர்கள் களச்செயல்பாட்டாளர்கள். அவர்களின் எழுத்துக்களில் பெரும்பகுதி அதைச் சார்ந்தே இருக்கும். எல்லா சிந்தனையாளர்களும்; ஹெகல் மார்க்ஸ், நீட்சே என நாமறிந்த ஐரோப்பிய தத்துவமேதைகள் உட்பட அனைவருமே; கணிசமான பக்கங்கள் கருத்துப்பூசல் (polemics) சார்ந்து மிகுதியாக எழுதியிருப்பார்கள். அத்துடன் சிந்தனையாளர்களுக்கு அவர்களுக்கே உரிய தனிப்பட்ட ‘கிறுக்கு’ பகுதியும் ஒன்று இருக்கும். சம்பந்தமே இல்லாத ஒரு களத்திலும் நிறைய எழுதி வைத்திருப்பார்கள். காந்தி உணவு, மருத்துவம் பற்றி எழுதி குவித்திருப்பது போல.
அந்த மொத்த எழுத்துக்குவியலில் இருந்து காலம் தேர்ந்தெடுக்கும் ஒரு பகுதியே சிந்தனை வரலாற்றில் நீடிக்கிறது. செறிவான, தர்க்கபூர்வமான ஒரு பகுதி. கனவும் இலட்சியவாதமும் கொண்ட இன்னொரு பகுதி. அத்துடன் அழகான சொற்றொடர்கள் மட்டுமேயான ஒரு பகுதியும் வெறும் அழகியலுக்காகவே நீடிக்கிறது. அந்த ‘தேர்வை’ பெரும்பாலும் அச்சிந்தனையாளரின் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவர்களால்கூட மறுக்கமுடியாத பகுதிகளாக இருப்பவை அவை.
ஆதரவாளர்களுக்கு அந்தச் சிந்தனையாளரின் ஏதேனும் ஒரு பகுதியே போதுமானதாக இருக்கும். சாரம் தேவைப்படாது. ஆனால் எதிர்த்தரப்பும், அடுத்த தலைமுறையும் அவரைச் சாராம்சப்படுத்தியாகவேண்டும். அன்றி அவர்கள் பேசமுடியாது. சென்ற பல ஆண்டுகளில் நான் மார்க்ஸ் பற்றி எழுதியவை எல்லாமே அவரை சாராம்சமாக தொகுத்துக்கொள்வதற்கான முயற்சிகளே.
அ.மார்க்ஸ் விரிந்து பரந்துசெல்லும் ஒரு கருத்துக்களத்தை உருவாக்கியவர். அதில் உள்ள அரசியல்கள், பூசல்கள் ஆகியவற்றைக் கடந்து அவரை தொகுத்துக் கொள்ள வேண்டிய காலம். அதற்கு அடுத்த தலைமுறை இளைஞர்கள் முன்வருவது நிறைவளிக்கிறது. இன்னும் பலகாலம் அவர் விவாதமையமாகவே இருப்பார்.
அ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள் அ.மார்க்ஸ் பற்றி… அ.மார்க்ஸ்,காந்தி அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல் அ.மார்க்ஸ் பற்றி… அ.மார்க்ஸ்,காந்தி அ.மார்க்ஸ்:கடிதங்கள் அ.மார்க்ஸும் ஜெகேவும் அ.மார்க்ஸின் ஆசி
வே.கலைமணி
[image error]வே. கலைமணி, பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். தமிழ்நாடு யாதவ மகாசபையின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இயங்கும் வெவ்வேறு அமைப்புகளில் பங்குகொண்டார். நாடகவியல் ஆய்வுக்களத்தில் பங்களிப்பாற்றியிருக்கிறார்.
வே.கலைமணி
வே.கலைமணி – தமிழ் விக்கி
கம்பனை கால்தொடர்தல்…
கம்பராமாயணம், வாசிப்பு முடிவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். சீனிவாசன், சுதா தம்பதிகளின் கம்பராமாயணம் வாசிப்பு பற்றிய கடிதம் வாசித்தேன். இவர்களைப்போன்றவர்களின் செயலும் ஆக்கமும்தான், அவர்கள் சென்ற பயணத்தின் பாதச்சுவடுகள்தான்,பின் வருபவர்களை வழி நடத்துகின்றன. ஊக்குவிக்கின்றன. அவர்களை பாராட்டி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
எமர்சன் முகாமில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள், கம்பராமாயணத்திற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், எடுத்துக்கொண்ட தலைப்பிற்கான பாடல்களை இசையுடன் பாடுகிறார்கள். முன்னேற்பாடாக, ராலே ராஜன், பாடும் நண்பர்களுக்கு அவர்கள் பாடிப் பயிற்சி பெறுவதற்கென, அந்தந்த பாடலுக்கான மெட்டுடன் பாடி ஒலிவடிவத்தை அனுப்புவார். ஒருங்கமைப்பாளனாக எனக்கு ஒரு பிரதி கிடைத்துவிடும். கடந்த மூன்று வருடங்களாக, அந்தப் பாடல்களை , காலையில் கேட்கிறேன். இந்த வருடம், ‘கடலோ மழையோ ” பாடலை ராஜன் இசையமைக்க சிக்கில் குருச்சரண், நாஞ்சில் நாடன், மற்றும் உங்கள் முன்னிலையில் வெளியிட்டோம். அதை வெளியிடும் முன்னர் நாங்கள் அழைக்கவிருந்த விருந்தாளிகளில் ஒருவராக நடிகர் சிவக்குமார் அவர்களும் இருந்தார். ஆறு வருடங்களுக்கு முன்னர் , அவர் ஈரோடில் , ஒரு கல்வி வளாகத்தில் நடத்திய கம்பராமாயண உரையை யூட்யூபில் இருக்கும் பதிவைக் கேட்டிருக்கிறேன். அவருடன் பேசும் பொழுது , 30 நிமிட உரையாடலில், 25 கம்பராமயாணப் பாடல்களை நினைவு கூர்ந்தார். “எப்படி சார் இப்படி? ” என நான் வியக்க , தனது 67 வயதுக்கு அப்புறம் எப்படி ஆர்வமுடன் கற்றுக்கொண்டார் என என்னிடம் பகிர்ந்துகொண்டார். “சும்மா வராது, சௌந்தர் ! மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்க, நான் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, இன்னொரு அறைக்குச் சென்று எழுதிப்பார்த்து மனனம் செய்வேன்” என்றார்.
கம்பராமாயணத் தாகம், “கடலோ மழையோ‘ வெளியீட்டோடு, தீர்ந்தபாடில்லை. பாடகர்களும், இசை வாத்தியக் கலைஞர்களும் நிறைந்த ஒரு குழுவை வைத்துக்கொண்டு நாம் ஏன் ஒரு கம்பராமாயணக் கச்சேரி நடத்தக்கூடாது என்று ராஜனும் நானும் ஒரு நாள் பேசினோம். எப்படி இதை எடுத்துச் செல்லலாம் , எத்தனை பாடல்கள் பாடலாம் என ராஜன், நண்பர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் டாலஸ் மாநகரில் அமெரிக்காவில் முதன் முதலாக கம்பராமாயணக் கச்சேரி நடத்தவுள்ளோம். விரைவில் நண்பர்கள், அமெரிக்கத் தளத்திலும், தங்கள் தளத்திலும் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
முகில்களில் வாழ்தல்
இந்த ஆண்டின் முதல் வெண்முரசு நாவல் ‘வெண்முகில் நகரம்’ . முதல் வாசிப்பு இன்றுடன் நிறைவு.
தொடுதிரை விடுத்து நூலாய் கையில் எடுத்து வாசித்ததும் இதுவே முதல் வெண்முரசு நாவல்.
, தரிசனமாய் அடைந்தவைகளும் என தொகுக்க ஓர் சிறிய முயற்சி
மணத்தன்னேற்பில் திரௌபதியை வென்று பாஞ்சாலத்தில் வாழ்கிறார்கள் பாண்டவர்கள். அவளுக்கானவன் வென்ற பார்த்தனா , மூத்தோன் தருமனா என்று வாதங்களில் தொடங்கி மூத்தோர் சொல்லை துணை கொண்டு அரசாண்மைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஐவருக்குமானவள் அவள் என்பது முடிவாகிறது.
முறை வைத்து நடக்கிறது அவர்கள் ஒவ்வொருக்குமான முதற் தனிக்கூடல் திரௌபதியுடன். ஆழ்கடல் பாவையில் தருமனும், பிடியின் காலடிகளில் பீமனும், தழல் நடனத்தில் அர்ஜுனனும் , ஆடிச் சூரியனென நகுலனும் அவ்வாடியின் அனலில் சகதேவனும் இணைகிறார்கள் அவளுடன். ஒவ்வொருவருடனும் அவரவர் திறன் அறிந்து அளிக்கிறாள் அன்னை தன்னை ! தனிப்பட்ட காதல் செய்தல்களுடன் அரசு செய்தலுக்கான அடித்தளமும் சேர்ந்தே நடக்கிறது.
காம்பில்யத்தில் நடந்த மணத்தன்னேற்பு நிகழ்வுகள் மற்றும் தங்கள் எதிர்காலம் பற்றிய கனவுகள் சஞ்சலங்கள் மனதிலோட தங்கள் மண் நோக்கி திரும்புகிறார்கள் மத்ர , சௌவீர , பால்ஹிக அரசர்கள். அவர்களின் இளையோர்களில் தனித்த திறன் உள்ளவனும் பூர்வ பால்ஹிக நாட்டின் இளவரசனுமான பூரிசிரவஸ் பால்ஹிக கூட்டமைப்பின் பகடையாய் உருட்டிவிடப்படுகிறான். விளைவாய் தொடங்குகிறது குல மூதாதை பால்ஹிகரைத் தேடி சிபி நாட்டுப் பயணம். அந்த நீண்ட நெடிய பயணங்களின் கூடுதல் பயனாய் தேவிகையின் பிரேமையின் காதல்கள். மத்ர இளவரசி விஜயையும் அவன் மனதில் ஏற்றப்படுகிறாள் அரசமுறை தேவைக்காய். 
அரசு சூழ்தல் அல்லது தமது நாடுகளை யாரும் சூழாதிருக்கும் வண்ணம் வேவுப் பார்க்கும் வகையில், மணத்தன்னேற்பு தோல்வியில் இருந்து நாடு செல்லாமல் தசசக்கரத்தில் இருக்கும் கௌரவர்களிடம் தூதாய் செல்கிறான் பூரிசிரவஸ். அங்கு துரியோதனன் அன்பில் தன்னை நண்பனாய் அவனுக்கு முழுத்தளித்து என்றும் அவனுடன் நிற்க வாக்களிக்கிறான். அதன் விளைவாய் அங்க அரசன் கர்ணனின் நட்பு, துச்சளையின் சொல்லப்படாத காதல், ‘சிற்றரசின் இளவரசன்தான் நீ‘ என்னும் எள்ளல், துரியனின் அளவுகடந்த நட்பு என பல அவன் அங்கு அடைந்தது. அடைந்தது சில இழந்தது பல என்னும் கூற்றுக்கு இணையாய். எடுப்பார் அனைவருக்கும் கைப்பிள்ளை கால்பிள்ளை என எல்லாமும் ஆகி காற்றின் விசைக்கு அலைக்கழிக்கப்படும் சருகாய் பூரிசிரவஸ். அவனின் மூத்தவன் சலனால் எய்தப்படுகிறான் அம்பாய் எங்கும். ஆனால் அந்த அம்பு அன்பையே எங்கும் ஏந்தி செல்கிறது. சல்லியர் அவையில் அரசு சூழ்தலுக்கும் காதலுக்குமான போராட்டத்தில்
முன்னதையே தேர்ந்தெடுத்து பின்னாளில் அதன் பயனை எதிர்கொள்கிறான் பாண்டவ அரசிகளில் ஒருத்தியாய் வந்து நிற்கும் விஜயையிடம்.
யாதவ குல இளைஞர்களின் பெருங்கனவு இளைய யாதவனின் அடிசேர்ந்து அவனிடம் பணிதலே. அப்படியாய் கிளம்பி பெருவாயில்புரமாம் துவாரகை சென்று தொழும்பர் குறி ஏற்று கிருஷ்ணனின் அடிமையாய் தன்னைக் கொடுத்து அவனிடம் சேர்கிறான் சாத்யகி. இளைய யாதவனின் பெருங்கருணையில் அவனுக்கு நிழலாய் மாறி துவாரகை இளவரசன் என்னும் நிலைக்கு சென்று சேர்கிறான்.
கிருஷ்ணன் காம்பில்யம் வந்து யாதவ அரசி பாஞ்சால இளவரசி , பாண்டவர்கள் என அனைவரையும் சந்தித்து முதற் தூது கொண்டு அஸ்தினபுரி செல்கிறான். நாட்டைபங்கிடும் வழிகாட்டுதல்கள் கொண்ட குந்தியும் திரௌபதியும் கொடுத்த இரு வேறு வரைபடங்களுடன். அவன் செல்லுமிடமெல்லாம் புறத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் துணைவனாய் அவன் குறிப்பறிந்து உடன் செல்வது சாத்யகி. சேவகனாய் அல்ல நகர்வலம் செல்லும்போதும் இளைய யாதவனுக்கு நிகராய் தேர்த்தட்டில் நின்று.
அஸ்தினபுரியில் கிருஷ்ணன் ஆடியது சகுனியுடனான பகடையாட்டம் மட்டுமல்ல. திருதராஷ்டிரர் , காந்தாரி , அவளின் இளையோர்கள் , அரண்மனைச் சேடிகள் , காவலர்கள், வணிகர்கள் என அனைவரிடமும் தான். ஹஸ்தவனம் சென்று தன்னுள் தான் அடங்கி வீற்றிருந்த பீஷ்மரும் அவனின் ஆடலில் தப்பவில்லை. ‘என் கடன் சொல்வது. அது ஆனது‘ என்று சொல்லி அவரிடம் அவன் ஆடியது ‘அம்பை‘யாட்டம்.
பகடையாய் எண்களில் ஒன்றான பூரிசிரவஸ் பால்ஹிகபுரி திரும்ப, மறுபடியும் உருட்டப்படுகிறான் தேவிகையின் ஓலையால் சிபி நாட்டிற்கு , சலனின் ஆணையால் மத்ர நாட்டிற்கு , துரியோதனனின் அழைப்பால் அஸ்தினபுரிக்கு என்று! ‘அவன் நினைத்திருக்க அவனை அவளும் நினைத்திருக்க‘ என்றிருந்த தேவிகையை பீமன் கவர்ந்து செல்ல , அரசியல் ஆட்டத்தில் தான் இரண்டாய் வைத்த விஜயை பாண்டவ இளையனுக்கு மனைவியாய் வர, துச்சளையும் ஜயத்ரதனுக்கு என்றாகிறது.
‘அவரிடம் எழுந்தது அறத்தின் தெய்வம்‘ என்கிறான் தந்தையின் வெறியாட்டில் கர்ணன் துச்சாதனன் புடைசூழ சென்று தந்தை முன் வீழ்ந்துபட்ட கௌரவ மூத்தவன் மனைவி பானுமதியிடம்.
கிருஷ்ணனின் செய்தி கொண்டு காம்பில்யம் செல்கிறான் சாத்யகி எனும் மதியூகி. அவன் அந்த நகரில் உள்நுழையும்போது காவலர்களிடம் சொல்வதோ பாண்டவர்களை, யாதவ அரசியை சந்திக்க துவாரகையில் இருந்து வந்திருப்பதாக. ஆனால் திரௌபதியை சந்திக்கும்போது சொல்வதோ அவளைத்தான் அவன் பிரதானமாக சந்திக்கவந்திருப்பதாக, பாண்டவர்களை சந்திக்க செல்வது முறைமைக்காகவே என்று!
சாத்யகி சொல்கண்டு குந்தி அஸ்தினபுரி நுழைகிறாள் பலவருடங்கள் கழித்து. அவளின் நகர் நுழைவு சாதாரண நிகழ்வே . ஆனால் அது உண்டாக்கும் அரசியல் சலசலப்பு அதிகம். அங்கும் ஆடுவது இளைய யாதவனே! தம்மை மேல்வைத்து குந்தியை கிருஷ்ணனை கீழ்வைக்க முனையும் கௌரவ அணியை அதைக்கொண்டே அதற்கும் மேல் எழுந்து நிற்கிறது அவனின் செயற்கரிய செய்கைகள்.
புதல்வர்களை புறந்தள்ளி நண்பர் விப்ரருடன் கானுறைய சென்ற அரசர் திருதராஷ்டிரரும் நகர் திரும்புவது அவனின் ஆடலிலனாலே. அவரை வைத்தே கர்ணனும் துரியோதனனும் வாளேந்தி அவளின் இருபுறமும் வர, நகர் காணா பெருநிகழ்வாய் மாறுகிறது வெண்முகில் நகர் கனவு கொண்ட பாஞ்சால இளவரசி திரௌபதியின் நகர் நுழைவு.
முறையே அம்பாய் சருகாய் நாம் உணரும் சாத்யகியும் பூரிசிரவஸும் சுதுத்ரியின் கரையில் சந்தித்து சாத்யகி அஸ்தினபுரி செல்ல, பூரிசிரவஸ் அங்கிருந்து விடைபெற நிறைவுறுகிறது நாவல் ‘இத்தருணம் வாழ்க‘ என்ற வாழ்த்துடன்.
வாசகன் அடைந்த தரிசனங்கள் :
* பாராதவர்ஷமே அதிகார வெறியின் ருசிகண்டு அதன் பயணத்தில் இருக்க அதன் எந்த அடிச்சுவடும் தெரியாத வேறு ஒரு உலகில் இருக்கும் கோவாசனரும் அவரின் சிபி நாட்டு சைப்யபுரி நகரும்
* போர் குறித்து அதன் வணிகத் தேவைகள் குறித்து பூரிசிரவஸும் சுதாமரும் உரையாடும் தருணம்
* காம்பில்யம் நோக்கிய போர் ஆயத்த பேச்சில் கணிகர் துரியோதனனை கர்ணனை அவர்களின் நோக்கத்தை மிகச்சரியாக மதிப்பிடுவது. அதற்கு உவமையாய் சர்ப்பதம்சம் என்ற மிகச்சிறிய முள்ளை சொல்வது .
* தன்னிரக்கம், தன்னை தான் வெறுத்தல் என சில நேரங்களில் குறுகி நிற்கும் கர்ணன் அர்ஜுனனின் வெற்றிக்கு காரணமாய சொல்லும் வரிகள் ‘ தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமை கொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில். அவர்களே கர்ம யோகிகள் , அவன் அத்தகையோரில் ஒருவன்! சினமற்றவன் விருப்பற்றவன் இளமைக்குரிய தூய விழைவே உருவானானவன்!’
* பூரிசிரவஸ் சென்றடைவது கௌரவர்களிடம் ஆனால் அங்கு என்னதான் நண்பன் மலைகளின் இளவரசன் என சொல்லுரு கொண்டு போற்றப்பட்டாலும் , பல நேரங்களில் அவனின் இருப்பு அவன் நாட்டின் நிலவளம் ,விஸ்தீரணம், செல்வம் ஆகியவை கொண்டு கீழ்வைத்தே மதிக்கப்படுகிறது. ‘நான் ஜாதியே பார்ப்பதில்லை . என் வீட்டிற்குள் அனைத்து சாதியும் வருவர்‘ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு ஜாதி வெறியர் இந்த இடத்தில் நினைவில் வரலாம். தொழும்பர் குறி கொண்டவர்கள் கடல் உலா செல்ல இளவரசராய் மாற என இளையயாதவனுக்கு நெருக்கமாகிறார்கள் துவாரகையில். அடிப்படைவாதத்திற்கு முன்னதும் அடுத்தகட்ட உலகு சமைப்பதற்கு பின்னதும் உதாரணம்
* சமையர்கள் மிருஷை கிருபை கலுஷை போன்றவர்கள் இளவரசர்களுக்கு ஒப்பனை செய்யும் நேரத்தில் நடத்தும் உரையாடல்கள் அனைத்தும் எத்துணை முறை வாசித்தும் தீரா பொருள் கொள்ளும் வரிகள்(‘அப்படியே நடந்து வெளியேறிவிடுங்கள் இளவரசே . நெடுந்தூரம் செல்ல முடியும் ‘ ~ துரியோதனனிடம் சொல்வது )
* சகுனியும் கிருஷ்ணனும் ஆடும் ஆட்டத்தில் சகுனியின் எண்ண ஓட்டங்கள். அதுவரை கிருஷ்ணனின் ஆட்டத்தில் மதிமயங்கி இருந்த மனது சகுனியின் இந்த வரியில் அவராய் தன்னை உணர்ந்தது ‘சிறிய உத்தி வழியாக என்னை வென்றுவிடலாமென எண்ணுகிறான் என்றால் என்னை என்னவென்று எண்ணினான் . என் பொறுமையை இழந்து நான் இவன் முன் சிதறுவேன் என திட்டமிடுகிறான் ‘ . இந்த வரிகள் தான் இந்த நாட்களில் எனது பற்று கோல். வேலையில், குடும்ப பொறுப்புகளில், வாசிப்பில் என எனது அன்றாட செயல்களில் ஊசி முனையில் யானையை கோர்க்க பிரயத்தனப்படுகையில் இந்த வரிகளே எனக்கு துணை . அத்தருணங்களில் சகுனியும் நானே கிருஷ்ணனும் நானே !
* பொதுமக்கள் சராசரி பணியாளர்கள் பற்றிய அவதானிப்புகள் ‘ போரை மக்கள் ஏன் விரும்புகின்றனர் ? வரலாற்றில் தங்கள் கண்முன் எதாவது நடக்கும் என நினைக்கிறார்கள் ‘
‘பதறிக்கொண்டே இருக்கும் நடிப்புக்கு அடியில் எதையும் ஒரு பொருட்டெனவே எண்ணாத அரண்மனைப் பணியாளர்கள் ‘ .. இந்த வரிகள் நேரடியான வரிகள் ஆனால் நாமும் அந்த வேடத்தை பொருள் கொடுக்கும் வேலையில் சில வேளைகளில் போடுகிறோம் என்ற நினைப்பு வந்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
* பூரிசிரவஸ் அரண்மனையில் குறை தேடி சுவரில் கறை கண்டடைந்த தருணம். அதன் காரணமானவனையும் கிருஷ்ணனின் சவுக்கை வாங்கும் நேரத்தில் கண்டுகொள்வது
* இளைய யாதவன் ஒரு இடத்துக்கு செல்லும்முன் அங்குள்ள அனைத்தையும் பற்றி அறிந்து செல்வது அங்குள்ள மனிதர்கள் பெயர்கள் உட்பட . அது இந்த நுனிப்புல் யுகத்தில் மாபெரும் படிப்பினை எனக்கு.
மேற்சொன்ன வரிகள் போக கையேட்டில் ஏறிய வரிகள் ஏராளம் . அதில் சில
குந்தி பானுமதிக்கு சொல்லியனுப்பியது ‘ பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை‘
இளைய யாதவன் சாத்யகியிடம் ‘அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்‘
பானுமதி ‘மிக மிக எளிய உயிர்கள் ஆணும் பெண்ணும் . மிகமிக பழகிப்போன நாடகம் அதைமட்டும் உணர்ந்து கொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான் . அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்‘
‘பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன ? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துருவதும் என்ன ?’ கண்ணனின் இசைகேட்டு பூரிசிரவஸ் நின்ற கணம்.
——————————
வெண்முரசு நாவல்கள் வாசிக்கத் தொடங்கிய இந்த ஓராண்டில் நான் உணர்ந்தது ‘அளவில் பெரிய நாவல்களைக்கண்டு இப்போது மலைப்பெதுவும் ஏற்படுவதில்லை‘ . முன்னிலும் அதிகமாக மற்றநூல்களை அதிகம் வாசிக்கிறேன். அந்த வகையில் வாசிப்பில் வேகத்திற்கும் உள்வாங்கும் திறனுக்கும் இந்த பயணம் பெரிதும் துணை செய்கிறது.
நான் செய்யும் இன்னொரு குழந்தைத்தனமான உத்தியும் உண்டு. அது இணைப்பில் படத்தில் உள்ள Book mark ஐ இணை வாசிப்புக்கு நான் எடுக்கும் மற்ற நூலில் வைத்துக்கொள்வது . வெண்முரசும் என் ஆசிரியரும் உடன் வந்து கவனித்துக்கொண்டிருப்பதாய் ஒரு உணர்வை அது ஏற்படுத்துகிறது :)
இந்த நாவலில் ஒரு வரிவரும் ‘ துவாரகைக்குமேல் கடலின் துமி எப்போதும் மழையென பெய்து கொண்டிருப்பதனால் அங்கே வெயில் வெம்மை படிவதேயில்லை ‘ . அதுபோல அன்றாடத்தின் வெம்மை படியாமல் தனது வரிகளால் எம்மைக் காத்துவரும் பேராசானுக்கு நன்றிகள் கோடி . உடன் வாசிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் .
“ சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு – என்குலமே
சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு !”
அன்புடன்
கே . எம் . ஆர் . விக்னேஸ்
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி மழை தொடக்கம் மாமனிதர்களின் உருக்கு உலைSkill training classes?
The classes you conduct in the program “unified wisdom” are very necessary in today’s business environment. There are many problems that arise in corporate offices because this kind of training is not available here. For example, you provide training for debate and argument. Most of our people here do not know how to talk in a common discussion.
Skill training classes?இன்றைக்கு மதத்தைப் பற்றி ஏராளமான கேள்விகள் நம் சூழலில் உள்ளன. அதையெல்லாம் நாமும் ஏதோ அரசியல்வாதிகளின் வாயிலிருந்து கேட்டு அப்படியே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மதநம்பிக்கை உடையவர்கள் கூட மதத்தை இழித்தும் பழித்தும் பொதுவெளியில் பேசினால்தான் மதிப்பு என்னும் நிலைமை இன்றைக்கு இருக்கிறது.
மதம் மெய்ஞானம் கடிதம்April 2, 2025
சூப்பர்ஹீரோக்கள் யார்?
எம்புரான் சினிமாவை முன்வைத்து இன்னொரு காணொளி. ஏன் நாம் சூப்பர்ஹீரோக்களுக்காக ஏங்குகிறோம்? ஏன் சாமானியர்களை அப்படிக் கொண்டாடுகிறோம்? சினிமாவில் அரசியலில் அதிமானுடர்களுக்காக ஏன் துழாவிக்கொண்டே இருக்கிறோம்?
வேம்பார் மணிவண்ணனின் சேகரிப்புகள்.
ஒருமுறை கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார். “எப்பவோ ரெண்டாயிரம் வருசம் முன்னாடி சங்கப்பாட்டுல பலதும் அழிஞ்சுபோச்சுன்னு சொல்லி வருத்தப்படுறாங்க. நம்ம கண் முன்னாலே எத்தனையோ சினிமாக்கள் அழிஞ்சுபோச்சு. அதைப்பத்தின பிரக்ஞையே நம்ம கிட்ட இல்லை. நான் நடிச்ச படங்களே பல படங்களை இனிமே திரும்ப பாக்க முடியாது… பல பெரிய டைரக்டர்ஸ் எடுத்த படங்களுக்கு எந்த ரெக்கார்டும் இல்லை. ஃபிலிம்நியூஸ் ஆனந்தன் அப்டீன்னு ஒருத்தர் இருந்ததனாலே படங்களோட பெயராவது மிஞ்சியிருக்கு”
நான் உண்மையில் ஆச்சரியப்பட்டேன். அப்படி படங்கள் முழுமையாக மறைந்துவிடும் என நான் எண்ணியதில்லை. “சர்க்கார் டாக்குமெண்ட்ஸ்கூட இல்லியா” என்று அசட்டுத்தனமாகக் கேட்டேன்.
“சர்க்கார்லே அவங்க டாக்குமெண்டே ஒழுங்கா இருக்காது. அப்றமில்ல சினிமா டாக்குமெண்ட்…” என்றார். ”பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ்லே பி.கே.நாயர் அவரோட தனி முயற்சியாலே ஊமைப்படங்களை எல்லாம் சேகரிச்சு வைச்சார். ஆனா அவருக்குக்கூட ஒரு செலக்ஷன் இருந்தது. அவருக்கு ஆர்ட் ஃபிலிம் அழிஞ்சிரக்கூடாதுன்னுதான் அக்கறை. அதைக்கூட இப்ப இருக்கிற முட்டாள்கள் அழியவிட்டுட்டாங்க…நான் என்ன சொல்றேன்னா, எல்லா ஃபிலிமுமே முக்கியம். ஒரு ரிசர்ச் பண்றவனுக்கு எல்லாமே டாக்குமெண்ட்ஸ்தான்..சோஷியல் டாகுமென்ட்ஸ், ஆர்ட் டாக்குமெண்ட்ஸ் அதெல்லாம்…ஒரு காலகட்டத்தையே காட்டுறதிலே சினிமா மாதிரி இன்னொரு நேரடிப் பதிவு இல்லை”
பின்னர் நான் அறிந்தேன். பி.கே.நாயர் சேர்த்துவைத்த சினிமா சேகரிப்புகள் அழியவிடப்பட்டன. அவற்றை டிஜிட்டலைஸ் செய்ய பணம் ஒதுக்கப்படவில்லை, அவற்றை அழியாமல் காப்பதற்குரிய பணிகளைச் செய்யும் ஊழியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பாரதீய ஜனதா அரசு அந்நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்தவர் கஜேந்திர சௌகான் என்ற ஆசாமி. ஒரு நாலாந்தர டிவி நடிகர், மகாபாரதம் தொடரில் யுதிஷ்டிஷரனாக நடித்தவர். பாரதிய ஜனதாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தமைக்காக அளிக்கப்பட்ட பரிசு அது. பாரதிய ஜனதா பார்வையில் அது ஒரு வருமானமற்ற ’சோட்டா’ பதவி.
பின்னர் தன் All We Imagine As Light சினிமாவுக்காக கேன்ஸ் விருது பெற்ற பாயல் கபாடியா உட்பட மாணவர்கள் ஆவணக்காப்பகத்தை அழியவிடலாகாது என்று போராடினர். பாயல் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒரு கிரிமினல் என்றார் கஜேந்திர சௌகான். அவர் கேன்ஸ் படவிழாவில் விருதுபெற்றபோது அதே கஜேந்திர சௌகான் சொன்னார், “அவரை உருவாக்கியது நான் தலைமையேற்ற நிறுவனம்” என்று.
கஜேந்திர சௌகான் பி.கே.நாயர் வாழ்நாள் முழுக்க அலைந்து சேகரித்த கலைச்செல்வங்கள் அழியவிடப்பட்டது பற்றிய கேள்விக்குச் சொன்ன பதில் ‘கிளாஸிக்’ ரகம். “அரே ஃபையா, அதெல்லாம் பழைய சினிமா…இப்ப யார் அதெல்லாம் பாக்கிறாங்க? எவ்ளவு நல்ல புதிய படங்கள் பாலிவுட்லே வந்துட்டு இருக்கு?” (ஆனால் இதை கொஞ்சம் முன்னால் வடிவேலு “நல்லவேளை, புதிசோன்னு நினைச்சேன்” என்று சொல்லி வழிகாட்டியிருந்தார்)
வேம்பார் மணிவண்ணனை பலர் அறிந்திருக்கலாம், மேலும் பலருக்கு தெரியாமலும் இருக்கலாம். யூ.டியூபில் பழையபாடல் கேட்பவர்கள் அறியாமலிருப்பது அரிது. அவருடைய பழையபாடல் தொகுப்புகள் அபாரமானவை. 1940 முதல் வெளிவந்த பாடல்கள் அவருடைய யூடியூப் தொகுப்பில் உள்ளன. அவை ஒரு பெரிய காலப்பெட்டகம்போல.
யூடியூப் சானல் என்பது இன்றைக்கு ஒரு மாபெரும் வெட்டிச்சுரங்கம். நின்றது தின்றது எல்லாவற்றையும் காணொளியாக எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காணொளி எந்த அளவுக்கு எந்த மூளையுழைப்பையும் கோராத அளவுக்கு வெட்டியானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது புகழ்பெறுகிறது. சினிமாவம்புகள், வசைபாடல்கள், அற்பச்செயல்கள் ஆகியவற்றுக்கே பெருந்திரளாக மக்கள் செல்கிறார்கள்.
நடுவே ஏதேனும் ஒரு களத்தில் தனக்கான தேடலுடனும் பங்களிப்புடனும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் வேம்பார் மணிவண்ணன். என்னைப்பொறுத்தவரை அவருடைய இந்தச் சேகரிப்பு ஒருவகையான இணைய ஆவணப்படுத்தல்தான்.
வேம்பார் மணிவண்ணன் யூடியூப்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

