Jeyamohan's Blog, page 134

April 7, 2025

இங்கிருக்கும் இன்னொரு இலக்கிய உலகம்

 

நண்பர் கொள்ளு நதீம் வழியாகத்தான் அறிமுகமானார், சென்னை புத்தகக் கண்காட்சியில். அபிக்கு நாங்கள் விஷ்ணுபுரம் விருது அளித்தபோது அந்த விழாவுக்கு வந்திருந்தார். அபி எண்பது விழாவிலும் கலந்துகொண்டார். அவர் உருது அறிஞர் என அறிந்திருந்தேன். ஏதோ உருது கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்றும் எண்ணியிருந்தேன்.

கொள்ளு நதீம் எனக்கு ஓர் ஆலோசனைபோல சொன்னார், சையத் ஃபைஸ் காதரி அவர்களைக்கொண்டு ஓர் உருது இலக்கிய அறிமுக வகுப்பு நடத்தலாமே என்று. எனக்கு முதலில் அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. உருது இலக்கியத்தை மலையாளம், கன்னடம் போல ஓர் அயல்மொழிச் சூழல் என்றே எண்ணினேன். ஓர் இலக்கியவாசகன் அதை அறிந்துகொண்டாக வேண்டும்தான், ஏனென்றால் எல்லா இலக்கியச் சூழல்களையும் அவன் அறியவேண்டும். ஆனால் நாங்கள் ஒருங்கிணைப்பவை அறிமுக வகுப்புகள். தமிழிலக்கியத்தை அறிந்த பின்னர்தானே இன்னொரு இலக்கியத்தை அறியவேண்டும்.

ஆனாலும் ஒரு வகுப்பு நடக்கட்டுமே என எண்ணி அறிவித்தோம். எங்கள் பிற நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களில் சிலர் இதில் கலந்துகொண்டனர். என் நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன், கடலூர் சீனு என ஒரு வட்டம். இருபத்தைந்துபேர் தேறியது ஒரு நல்ல விஷயம்தான். எல்லாருமே நுண்ணுணர்வு கொண்ட இலக்கியவாசகர்கள். எனக்கு உருது இலக்கியம் பற்றி பெரிய அறிமுகம் இல்லை, ஓரிரு எழுத்தாளர்களை மொழியாக்கத்தில் வாசித்ததுடன் சரி. ஆகவே நானும் கலந்துகொண்டேன்.

உண்மையில் இந்நிகழ்வின் முக்கியத்துவம் என்ன என்பதை ஃபைஸ் காதரி அவர்கள் தன் வகுப்பைத் தொடங்கியபோதே உணர்ந்தேன். உருது இந்தியாவின் மண்ணில் தோன்றிய ஒரு மொழி. மலையாளம், ஆங்கிலம் போல ஒரு நவீனகாலகட்டத்து மொழி. நவீன மொழிகள் பொதுவாக மொழிக்கலப்பால் உருவாகி வருபவை. ஆகவே அவற்றுக்கு மூன்று நல்ல அம்சங்கள் உண்டு.

அவை, ஏற்கனவே உள்ள மொழிகளின் சிறந்த சில அம்சங்களின் கலவையாக இருக்கும். எந்த அம்சம் அந்த மூலமொழிகளை மக்கள் செல்வாக்குள்ளதாகவும், தாக்குப்பிடிப்பதாகவும் ஆக்குகிறதோ அதை இந்த வழிமொழி எடுத்துக் கொண்டிருக்கும்.

அவை புதியதாக உருவாகி வரும் இலக்கணம் கொண்டிருக்கும். நீண்ட நெடிய இலக்கணமரபு இல்லாமலிருப்பது மொழிகளை மிகச்சுதந்திரமானதாக ஆக்குகிறது. அந்த இலக்கணம் நெகிழ்வானதாகவும், நடைமுறை சார்ந்ததாகவும் இருக்கும். அந்த மொழிகளின் வளர்ச்சிக்கு அவ்விலக்கணமே மிகப்பெரிய அடிப்படையை அளிக்கும்.

அவை தூய்மைவாதம் இல்லாதவையாக இருக்கும். ஆகவே சொற்களை எளிதாக எடுத்துக்கொண்டு தன்வயமாக்கிக்கொள்ளும். புதியன நோக்கி எளிதில் நகரும். 

உருது எப்படி அரபி, பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் வடஇந்தியப் பேச்சுமொழிகளில் இருந்து உருவாகி திரண்டு வந்தது என்று காதரி அவர்கள் சுவாரசியமான வரலாற்றுச் சித்திரத்தை அளித்தார். அப்போதே ஒன்று எனக்கு தோன்றியது, உருது தோன்றி வலுப்பெற்ற வரலாற்றை தெளிவாக உணராத ஒருவரால் இந்திய வரலாறும், பண்பாடும் திரண்டுவந்ததை புரிந்துகொள்ளவே முடியாது. என் புரிதலில் இருந்த பல்வேறு இடைவெளிகளை அவர் அளித்த வரலாற்றுச் சித்திரம் நிரப்பிக்கொண்டே இருந்தது.

மானுடம் தன்னை தேக்கிக்கொள்ள விழைவதில்லை, நீர் போல தன்னைத்தானே கலக்கிக்கொண்டே இருக்கிறது அது, தன்னில் அனைத்தையும் கரைத்துக்கொண்டே இருக்கிறது. வண்ணங்கள் கலந்து கலந்து உருவாகும் புதிய வண்ணங்களின் பரிணாமத்தையே நாம் வரலாறென்கிறோம், பண்பாடென்கிறோம். காதரி அவர்கள் அளித்தது அந்த மகத்தான கலப்பின் சித்திரம். பாரசீகம் இங்கே தென்னிந்தியாவில், தமிழில், நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு உரையாடலிலும் கலந்திருக்கிறது.  பாரசீகத்தின் இந்தியக்குழந்தை உருது. அதன் அன்னை சம்ஸ்கிருதம்.

உருது இலக்கியத்தின் தலைமகனாகிய அமீர் குஸ்ரு முதல் அதன் இறுதிப் பெருங்கவிஞரான ஃபைஸ் அகமது ஃபைஸ் வரை அதன் இலக்கிய வரலாற்றை கவிதைகளினூடாக விரித்துரைத்துக்கொண்டே சென்றார். காதரி அவர்கள்.ஒவ்வொருவருடனும் இந்தியவரலாற்றின் ஒரு காலகட்டம் பிணைந்துள்ளது. ஒவ்வொருவருடனும் ஓர் பிற இந்தியமொழி ஆளுமை ஒருவரை இணைத்துப் பார்க்கமுடிந்தது.

இலக்கிய அறிமுகம் என்பதற்கு அப்பால் இரண்டு வகையில் இந்த வகுப்பு எனக்கு மிகப்பெரிய தொடக்கமென அமைந்தது. இப்படி ஒரு சூழலில், இத்தனைத் தீவிரமான அமர்வுகளில் அன்றி அவற்றை இப்படி நுணுக்கமாகப் புரிந்துகொண்டிருக்க முடியாது.

ஒன்று, உருது இசைப்பாடல்களின் அறிமுகம். கஸல், கவாலி என்னும் இரண்டு வகை இசைமரபுகளின் பண்பாட்டுப் பின்புலம், அவற்றின் பரிணாமம், அவற்றின் செய்யுள் அமைப்பு, அவற்றின் உள்ளடக்கம் ஆகியவற்றை விரிவாக காதரி விளக்கினார். கஸல், கவாலி இரண்டு மரபுகளிலுமுள்ள பெரும் பாடகர்களை அறிமுகம் செய்தார். உஸ்தாத் நுஸ்ரத் படேகுலாம் அலிகான், மெஹ்தி ஹஸன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்கவிட்டு உதாரணம் காட்டி விளக்கினார்.

நான் நாற்பதாண்டுகளாக கஸல் கேட்பவன். ஆனால் கஸலின் அமைப்பு எனக்கு இந்த வகுப்புவரை உண்மையில் தெரியாது. அதை தென்னிந்தியக் கீர்த்தனைகளின் அதே அமைப்பு கொண்டது என்றே எண்ணியிருந்தேன். அதே அமைப்புதான், ஒருவேளை அங்கிருந்து நம் கீர்த்தனைகளுக்கு அந்த அமைப்பு வந்திருக்கலாம். ஏனென்றால் கர்நாடக சங்கீதம் உருவாவதற்கு முன்பு நமக்கிருந்தவை பண் பாடல் அமைப்பும் வரிப்பாடல்களின் அமைப்பும்தான்.

ஆனால் கஸல்களுக்கும் கீர்த்தனைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு வேறுபாடுள்ளது. கஸலின் ஈரடிகள் ஒன்றோடொன்று நேரடியான தொடர்பற்றவை.  அவற்றின் நடுவே பாடகர் சொல்பவை அந்த பாடல்களின் வரிகள் அல்ல, அவருக்கு அந்த மேடையில் தோன்றும் இணையான வேறு கவிதைவரிகள். கஸல் என்னும் மகத்தான இந்திய இசைவடிவை முதல்முறையாக அணுகியறிய முடிந்தது என்று தோன்றியது.

அத்துடன் காதரி அவர்களே மிகச்சிறந்த பாடகர். அவரே உருது கஸல்களை நிறைய எழுதியிருக்கிறார். இந்திய அளவில் பயணம் செய்து முஷராக்களில் உருதுக் கவிதைகளை முன்வைத்திருக்கிறார். தன் ஆழ்ந்த குரலில், துல்லியமான ராகபாவத்துடன் அவர் கஸல் வரிகளைப் பாடியபோது வகுப்பு அடைந்த மோனநிலை மிக அரிதான ஒன்று.

இரண்டு, உருது இலக்கியம் என்பது தமிழ்நிலத்திலும் மிகத்தீவிரமாக இயங்கும் ஒரு மரபு என்னும் அறிதல். நான் தமிழிலக்கியத்தில் நாற்பதாண்டுகளாகச் செயல்படுபவன். தமிழ் இஸ்லாமிய இலக்கியம் பற்றியும் விரிவான அறிமுகம் உண்டு. ஆனால் உருது இலக்கியத்திற்கு இத்தனை தீவிரமான ஒரு செயற்தளம் தமிழகத்தில் உண்டு என தெரியாது. அதன் பேராளுமைகள் எவர் பெயரும் தெரியாது. மிக ஆழமான ஒரு வெட்கம் உருவான தருணம் அது.

நம்மருகே ஓடிக்கொண்டிருக்கும் பெருநதி அது. நாம் அப்பக்கம் திரும்பவே இல்லை. அதை அறியவே இல்லை. எனக்குத்தெரிந்து ஓரிரு இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கு மெல்லிய அறிமுகம் இருக்கலாம், தமிழ் இலக்கியச்சூழலுக்கு அந்தப் பெருக்கைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதே உண்மை. அதற்குக் காரணம் நம் முன்முடிவுகளும் உளக்குறுகலும்தான் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் உருது இலக்கியத்திற்கான கவியரங்குகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல்லாயிரம்பேர் பங்களிக்கும் உருது இலக்கிய விழாக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பலர் தொடர்ந்து உருதுவில் இன்றும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தமிழிலக்கியத்திற்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தாகவேண்டும். 

காதரி அவர்களிடம் பேசும்போது ஒன்று சொன்னேன். ஒரே ஆண்டு இரு தமிழ்நாட்டுத் தமிழர்கள் உருது இலக்கியத்திற்காகவும் தமிழிலக்கியத்துக்காகவும் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள் என்றால் அன்றுதான் நாம் மெய்யாகவே வெல்கிறோம் என்று. 

உருது இலக்கியத்தின் முற்போக்கு அலை, நவீனத்துவ அலை, பெண்ணிய அலை, இன்றைய இலக்கியம் வரை வந்து நிறைவுற்ற மூன்றுநாள் அமர்வு பங்கேற்ற அனைவருக்குமே ஓர் அரிய கற்றல் அனுபவம்.

கீழே வெயில் எரிந்துகொண்டிருந்தாலும் மலைக்குமேல் இதமான பருவநிலை நிலவியது. காலையில் முகில்களால் மலைகளும் முற்றமும் மூடப்பட்டிருந்தன. இரவில் மெல்லிய தூறலும் குளிரும் இருந்தது. பிரியத்திற்குரிய நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். வகுப்பு எடுப்பவனாக அன்றி வகுப்பில் அமர்பவனாக அங்கே செல்வது இன்னொரு இனிமை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2025 11:35

இரா. சண்முகம்

தமிழறிஞர், எழுத்தாளர். திராவிட இயக்க ஈடுபாடு கொண்டவர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மற்றும் இலக்கண, இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். மலேசியாவில் நீண்ட காலம் வாழ்ந்தார். ‘தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்’ உள்ளிட்ட நூல்களை எழுதினார். ‘தொல்காப்பியத் தொண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.

இரா. சண்முகம் இரா. சண்முகம் இரா. சண்முகம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2025 11:34

மகத்தான வழி- கடிதம்

ஜெ,

அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடல். ‘விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு எல்லாம் படிக்கவே முடியல்லை.” என்றார்

“ஏன்?” என்றேன்.

“நெறைய தகவல்கள். ஏகப்பட்ட உணர்ச்சிகள். உச்சநிலைகள் வந்திட்டே இருக்கு. கவித்துவமான வரிகளாகவே இருக்கு. டூமச்னு படுது….சுத்தமா படிக்க முடியலை. பத்து பக்கத்துக்குமேலே ஓடலை”

“இருக்கலாம். நினைச்சா அத கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்… நீங்க கிளாஸிக் லிட்டரேச்சர் கொஞ்சம் படிச்சா போதும்”

”நான் அந்த புக்ஸ் மேலே என்னோட விமர்சனத்தைச் சொல்றேன்”

”என்னங்க இது? உங்க லிமிட்டேஷன்ஸ் எப்டி அந்த புக்கோட குறைபாடா ஆகும்? உங்களுக்கு உள்ள போக முடியலேன்னா அது உங்க பிரச்சினை. அது எப்டி விமர்சனமா சொல்லமுடியும்?”

“வாசகனை தடுக்குதுல்ல?”

“வாசகனை எல்லா படைப்பும் தடுக்கும். தடைய தாண்டுறதுதான் வாசிப்பே”

“இல்ல, எல்லாமே உச்சமா இருக்கு. எல்லா கேரக்டருமே தீவிரமா இருக்கு… விஷ்ணுபுரத்திலே பாதிப்பேரு ’மகா’ங்கிற அடைமொழியோட இருக்காங்க… வெண்முரசிலே எல்லாருமே சூப்பர்மேன் மாதிரி இருக்காங்க”

”ஏன் இருக்கக்கூடாது? மனுஷனோட பிரச்சினைகளை தீவிரமா பேசணுமானா அந்தப்பிரச்சினைகளை தீவிரமா அடைஞ்ச மனுஷங்களைத்தானே எடுத்துக்கிட முடியும்? அகிம்சையைப் பத்திப் பேசணுமானா ஒருபக்கம் காந்தி இன்னொரு பக்கம் ஹிட்லர் வேணும்ல?” என்றேன். “அவரோட வாசகர் ஒருவாட்டி எழுதியிருந்தார். ஒரு நாவலிலே காந்தி, நேரு, ஜின்னா, அம்பேத்கர்,மௌண்ட்பேட்டன், ஐஸனோவர், ஹிட்லர், ஸ்டாலின் எல்லாரும் கதாபாத்திரமா வந்தா அதான் மகாபாரதம்னு… அப்டித்தான் இருக்கும்”

“ஆனால் அது டூமச்சா இருக்கு”

“யாருக்கு? உங்களுக்கு….எனக்கு அப்டி இல்லை. அதைவிடவும் ஹிஸ்டரி பெரிசுன்னு நினைக்கிறேன்”

“ஆனா படிக்கவே முடியலையே”

அதன்பிறகு என்னால் பேச முடியவில்லை. இதுதான் உங்கள் நூல்களை வாசிப்பவர்களில் ஒரு சாராருக்கான பிரச்சினை. அவர்கள் நவீன இலக்கியமாக வாசித்தவை எல்லாமே ‘சாதாரண’ மனிதர்களின் ‘அன்றாட’ பிரச்சினைகள். ‘நம்மைப்போன்ற சாமானியர்களின் கதை’ என்றுதான் பலநாவல்கள் சொல்லப்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களுடன் அவர்கள் தங்களையும் தங்களுக்குத் தெரிந்தவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. அந்தக் கதைச் சூழலை தாங்கள் அறிந்த கதைச்சூழலுடன் இணைத்துக்கொள்ளவும் முடிகிறது.  அந்த நாவல்களையே தாங்கள் அறிந்தவற்றைக்கொண்டு புரிந்துகொள்கிறார்கள்.

இந்த வகையாக நவீன எழுத்துக்குப் பழகிய சாமானிய வாசகர்கள் விஷ்ணுபுரம், வெண்முரசு உள்ளிட்ட படைப்புகளுக்குள் செல்லமுடியவில்லை. அவற்றின் தீவிரமும் விரிவும் அவர்களுக்குப் பயத்தை அளிக்கின்றன. அவற்றுடன் தங்களை பிணைத்துக்கொள்ள முடியவில்லை. வாசித்தாலும்கூட அதையெல்லாம் trivialize செய்துகொள்கிறார்கள்.

இங்கே உள்ள விமர்சகர்களுக்கும்கூட இந்த மாபெரும் படைப்புகளை உள்வாங்கவோ விளக்கவோ முடியவில்லை. அதற்கான சிந்தனைக்கருவிகள் அவர்களிடம் இல்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் வெறும் அரசியலை நோண்டி எடுப்பதுதான். தமிழுக்கு இந்த படைப்புகள் ‘டூ மச்’ என்பதுதான் என் எண்ணமாகவும் இருந்தது.

ஆனால் அடுத்த தலைமுறை மிக எளிதாக இவற்றை உள்வாங்கும், அதற்கான சிந்தனைகளும் உருவாகும் என எண்ணினேன். அதை மாணவர்களிடம் சொல்லியும் வந்தேன். அஜிதனின் இந்தப்பேட்டியைப் பார்த்தேன். அதில்  Macht – might- mahath பற்றி அவர் சொல்லும் இடம், வாக்னரின் உலகுடன் உங்கள் புனைவுலகை ஒப்பிடும் இடம் அத்தனை தெளிவுடன் இருந்தது.

உங்கள் படைப்புகளிலுள்ள greatness அல்லது width ஏன் என்பதற்கான அழகிய விளக்கம். உங்களை அணுகுவதற்கான மிகச்சரியான வழியாக இருந்தது. உங்களை மட்டுமல்ல டால்ஸ்டாய் அல்லது டாஸ்டாயெவ்ஸ்கியை அணுகுவதற்கும் அதுவே சிறந்த வழி.  பிறர் திகைப்பது ஏன் என்பதையும் விளக்குவதாக இருந்தது. மிகச்சிறந்த பேட்டி அது. அடுத்த தலைமுறை விரிவான உண்மையான வாசிப்பும், கூட்மையான புரிதலும் கொண்டு வந்துவிட்டது.

வாழ்த்துக்கள்

மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2025 11:32

குருகு, 19

அன்புள்ள நண்பர்களுக்கு,

குருகு பத்தொன்பதாவது இதழ் வெளிவந்துள்ளது. தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரும் , செயல்பாட்டாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒருக்கிணைக்கும் மரப்பாச்சி இலக்கியகூடுகையில் நடந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் உடனான சந்திப்பின் எழுத்து வடிவம். சுனில் கிருஷ்ணனுக்கும் நேர்காணலை எழுத்தாக்கம் செய்த விக்னேஷ் ஹரிஹரனுக்கும் நன்றி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை தொடர்ந்த இதழியல் அறிவியக்கத்தில் நாத்திமும் பௌத்தமும் எவ்வாறு முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது என்னும் சித்திரத்தை அளிக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியவியலாளர்களின் கட்டுரைகளை குருகு இதழில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். மோனியர் வில்லியம்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அடுத்து சமஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதிய ஆர்தர் அந்தோனி மக்டோனெல் அவர்களின் வேத தொன்மங்களில் பற்றிய கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகிறது.

பேராசிரியர் கு. பத்மநாபன் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்து வரும் ஶ்ரீகண்டய்யாவின் ‘இந்திய கவிதையியல்’ தொடர் பரவலான வாசக கவனத்தை பெற்று வருகிறது. தொடரின் இந்த பகுதி சம்ஸ்க்ருத காவிய மரபின் ‘சுவைக்கொள்கையை’ விவரிக்கிறது.

ஏனைய தொடர்களான தொன்மங்களின் ஆற்றல் மற்றும் டுடன்காமுன் கல்லறை ஆகியவை வாசகர்கள் விரும்பி படிப்பவையாக இருக்கிறது. சென்ற இதழில் தொடங்கிய நூல் அறிமுகம் பகுதியின் தொடர்ச்சியாக சிலம்பு நா செல்வராசு அவர்களின் காரைக்காலம்மையார் தொன்மம் நூல் அறிமுகம் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

இந்த குருகு இதழிலும் பல்வேறு சமூக, கலை, வரலாற்று தளங்களை தொகுக்கும் ஒருங்கிணைந்த பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளும் நேர்காணலும் இடம்பெறுகிறது வாசக நண்பர்கள் எப்போதும் போல வாசித்து எதிர்வினை ஆற்றுவார்கள் என்று கருதுகிறோம். நன்றி.

http://www.kurugu.in

பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.

https://x.com/KuruguTeam

அன்புடன்

குருகு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2025 11:31

உளக்குவிப்பு- கடிதம்

மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன். இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.

உளக்குவிப்பு- கடிதம்

A few days ago, a famous spiritual leader, who is the head of an age-old institution, came to our city to deliver a sermon. His talk was filled with political anecdotes, and it was practically an apolitical harangue.

Learning without politics
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2025 11:30

April 6, 2025

கலைக்களஞ்சியம் என்னும் விதைத்தொகுப்பு

கலைக்களஞ்சியம் என்பதன் தேவை நம்மில் பலருக்கு உண்மையிலேயே தெரிவதில்லை. இன்று கலைக்களஞ்சியங்களில் செய்திளைத் தேடுபவர்களே அருகிவிட்டிருக்கின்றனர். எவை தங்களைத் தேடிவருகின்றனவோ அவையே செய்தி என ,தரவு என நம்புகிறார்கள். நம்மைத் தேடிவருவனவற்றில் பெரும்பகுதி வெறும் பிரச்சாரங்கள். அதன்பொருட்டு திரிக்கப்பட்ட செய்திகளும் தரவுகளும்தான் அவை. மெய்யான அறிவுச்சேகரிப்பு என்பது கலைக்களஞ்சியங்களிலேயே உள்ளது…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2025 11:36

நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.

அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்

‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.

ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்.

‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’

‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசைகட்டி நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’

அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’

‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’

‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’

அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்

‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன. நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

[தினமலர் தீபாவளி மலருக்கு எழுதிய கட்டுரை]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2025 11:35

முத்து காமிக்ஸ்

தமிழில் செயல்பட்டு வரும் படக்கதை வெளியீட்டகம். ஆங்கிலத்தில் இருந்து புகழ்பெற்ற படக்கதைகளை உரிமம் பெற்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறது. தமிழ் சித்திரகதைகளில் முத்து காமிக்ஸ் புகழ்பெற்றது

முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2025 11:34

சந்திரநிலம்- கடிதம்

சந்திரனைப் பூசிகொண்ட நிலம்

அன்புள்ள ஜெ 

சந்திரனை பூசிக்கொண்ட நிலம் பாடலை இன்று காலையில் கேட்டேன். எழுந்து இரண்டு தமிழ் விக்கி பதிவுகள் போட்டு விட்டு குளிப்பதற்கு முன்னர் கேட்பது இனிமையாக இருக்கிறது. முழு நிலவில் காயலில் சென்ற படி கேட்பதாக கற்பனை செய்து கொண்டேன். நன்றாக இருக்கும். உங்களுக்கு அப்படியான சமயம் அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.

இப்பாடல் முடிந்து வருகையில் விசித்திரவீரியன் தீர்க்கசியாமர் வாயிலாக சந்தனு கதையினை கேட்கும் பகுதி நினைவுக்கு வந்தது. ஆனால் என் மனதில் அத்தியாயங்கள் முன்பின்னாக மாற்றி அடுக்கப்பட்டிருப்பதை, அத்தியாயங்களை தேடி எடுத்து வாசிக்கையில் உணர்ந்து கொண்டேன். தீர்க்கசியாமர் சொல்வது சந்தனுவும் கங்கையும் இணையும் கதை. என் மனதில் சந்தனு – சத்யவான் – சத்யவதி – கங்கை – விசித்திரவீரியன் என அனைவரும் ஒன்றாகி சத்யவதி யமுனையில் நின்றபடி நிலவை காணும் ஓவியம் மனதில் தோன்றியது. இரண்டு அத்தியாயங்களில் விசித்திரவீரியன் வரும் 18 ஆம் அத்தியாயத்தின் தொந்தரவு உள்ளாக்குவது. ஒருவகையில் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்து கொள்வதால் நிகழ்வது. என்றேனும் விசித்திரவீரியனை போலவே எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவேன் என்றால் பேறு பெற்றவனான்.

இங்கே ஆசைதீர காதலித்து மறைந்தவர் உண்டா ? தெரியவில்லை, இருக்கலாம் இல்லாமலிருக்கலாம்.

அன்புடன் 

சக்திவேல் 

பி.கு: 

முதற்கனல் 7

https://venmurasu.in/mutharkanal/chapter-7

முதற்கனல் 18

https://venmurasu.in/mutharkanal/chapter-18

நேரமுள்ள போது வாசித்து பாருங்கள். அண்மையில் ஸ்டேட்டஸில் வெண்முரசின் வரிகளை வைத்திருந்ததை பார்த்தோம். வியப்பாக இருந்தது. நம் நவீன இலக்கிய ஆசிரியர்கள் யாரும் தாங்களே முற்றிலும் அன்னியமாகி நின்று வியந்து நிற்கும் பெரும் படைப்புகளை எழுதியவர்கள் அல்ல. ஏதோ ஒரு நுனி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2025 11:31

More about international classes

You mentioned that you are currently accepting only Tamil participants. What about international participants who are Tamil speaking? Reason being, I am Singaporean Tamil, and am really eager to participate in the workshops offered by Unified Wisdom.

More about international classes

முழுமையறிவு நிகழ்ச்சியில் நீங்கள் நடத்தும் பல வகுப்புகள் இன்றைய தொழிற்சூழலில் மிக அவசியமானவை. அலுவலகச்சூழலில் அவை இல்லை என்பதனால் உருவாகும் பிரச்சினைகள் ஏராளம். உதாரணமாக நீங்கள் விவாதக்கல்வியை அளிக்கிறீர்கள். இங்கே நம் மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு விவாதம் என்பதே தெரியாது. இஷ்டத்துக்கு தோன்றியதை எல்லாம் பேசுவார்கள், பிரிமைஸ் என்பதே தெரியாது. லாஜிக் என்பதே தெரியாது. இதையெல்லாம் கல்விநிறுவனங்களில் சொல்லிக்கொடுக்கவும் ஆளில்லை. அதேபோல ஏழுநிமிடம் பேசும் கலை. புத்தகங்களை ஆழ்ந்து வாசிக்கும் பயிற்சி. இதெல்லாம் இன்று ஒரு வேலையில் முன்னேறுவதற்கு மிக அவசியமானவை. இவற்றை நீங்கள் அலுவலகங்களுக்குச் சென்று கற்றுக்கொடுக்கலாமே.

அலுவலகங்களில்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.