Jeyamohan's Blog, page 130
April 14, 2025
பதற்றங்களைக் கையாளுதல்…
எல்லா தியானப் பயிற்சிகளும் நம்முடன் நாமே இருப்பதற்கான பயிற்சிகள்தான். நாம் நம் உள்ளத்தை அமைதியாகக் கவனிப்பதுதான் தியானம். நாம் எவ்வளவு பதற்றங்கள் கொண்டவர்கள், நம் உள்ளம் எத்தனை கட்டற்றுப்பாய்கிறது என்று அப்போது அறிகிறோம்.
நீரும் நெறியும்
பேச்சிப்பாறை கால்வாய்,பார்வதிபுரம்
பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா?”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா?”என்றார். ”விடல்லியோ?” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது?
கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் வயல்வெளிகளாக உள்ள பகுதிகள் எல்லாம் அந்த அணைவந்தபின் நீர் பெற்ற தரிசு நிலங்கள்தான். மொழி -சாதி அரசியல் காரணமாக இன்றைய குமரிமாவட்ட நாடார்களில் இளைய தலைமுறையினர் மன்னரை வெறுக்கிறார்கள். சாதி அரசியலும் மதஅரசியலும் உருவாக்கிய குறுகிய, இருண்ட ஒரு வரலாற்றுணர்வே இங்கே உள்ளது.
ஆனால் குமரிமாவட்ட நாடார்களிடம் இன்றுள்ள செழிப்பான தென்னந்தோப்புகள் எல்லாமே பேச்சிப்பாறை அணைநீர் மூலம் உருவானவையே. அவ்வணையே இங்குள்ள நாடார் எழுச்சியில் பெரும்பங்குவகித்தது என்றால் அது மிகையல்ல. சமீபத்தில் பேச்சிப்பாறை அணையின் நூறாண்டு நிறைவுவிழா [இரண்டுவருடம் பிந்தி ]கொண்டாடபப்ட்டது. மொத்தப் பேச்சாளர்களும் இப்போதைய ஆட்சியாளர்களைப் பற்றி மட்டுமே பேசினர், ஒருவர் கூட மூலம்திருநாளைப் பற்றியோ அவரது கனவை நனவாக்கிய எஞ்சினியர் மிஞ்சின் பற்றியோ ஒரு சொல்லும் சொல்லவில்லை என்று நாளிதழ்களில் செய்திவந்தது.
வரலாறு எப்போதுமே அப்படித்தானே? பண்டைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இன்றைய குமரிமாவட்டத்தின் வளத்துக்கு மூலகாரணமானவர் இருவர். மதுரை ஆட்சியாளர்களிடமிருந்து குமரி நிலப்பகுதிகளை மீட்டு 1731 முதல் இருபதாண்டுக்காலம் ஆட்சி செலுத்திய மார்த்தாண்டவர்மா மகாராஜா. அவரது படைத்தலைவரான காப்டன் பெனடிக்ட் டி லென்னாய் என்ற டச்சுக்காரர். டி லென்னாயின் சமாதி தக்கலை அருகே உதயகிரிக் கோட்டையில் பாழடைந்து கிடக்கிறது. நான் அறிந்து திருவனந்தபுரம் அரச குலம் அல்லாமல் எவருமே அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதில்லை.
மார்த்தாண்டவர்மாபேச்சிப்பாறையைப் பற்றி கணபதியா பிள்ளை ஒன்று சொன்னார். அணையை கட்டும் முடிவை எடுத்தவர் மூலம்திருநாள் மகாராஜா. ஆனால் போதிய நிதி இல்லை. ஆகவே குளங்கள் வயல்களாக விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. ஆனால் அது ஒரு கண்துடைப்பு. இன்று பத்மநாபசாமி ஆலயத்தில் இருக்கும் அரண்மனையின் ரகசிய கருவூலத்தில் இருந்தே நிதி வந்தது. அதை வெள்ளையன் அறிந்துகொண்டால் பிடுங்கிவிடுவான் என்பதனால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. அன்றைய பெரும்பஞ்ச காலகட்டத்தில் திருவிதாங்கூரில் மட்டும் மூன்றுவேளை அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்பட்டது. கஞ்சித்தொட்டிக்கான செலவும் இப்படி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக நாடகம் போடப்பட்டது
அணை கட்டப்பட்டதும் ஆயக்கட்டு பகுதிகள் முழுமையாக சர்வே செய்யப்பட்டன. சானலின் ஒரு மடை வழியாக பயன்பெறும் வயல்கள் ஒரு அலகாக வகுக்கப்பட்டன. அவர்கள் இணைந்து நீரை பங்கிட்டுக் கொள்ள ஒரு உழவர் குழுவை அமைக்க வேண்டும். கிடைக்கும் நீரை அவர்கள் சீராக பங்கிடவேண்டும். அவர்களுக்கு தேவையான நீர் கணக்கிடப்பட்டு அது கிடைக்கும்வரை மட்டுமே மடை திறக்கப்படும். அதை அதிகாரிகள் கறாராகவே கண்காணிப்பார்கள். நீரை அவர்கள் குளங்களில் சேமித்துக் கொண்டு சீராக செலவிடுவார்கள்.
சுதந்திரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீர்ப்பங்கீட்டு அமைப்புகள் சீரழிந்து கடந்த நாற்பது வருடங்களாக எந்தவிதமான கட்டுபாடும் இல்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் அவர்களே மடைகளை திறந்து விட்டுக் கொள்கிறார்கள். இன்று வேளாண்மைப் பகுதி பத்துமடங்காக ஏறியிருக்கிறது. ஆனால் நீர் அரிதிலும் அரிதாக உள்ளது. பல ஊர்களில் கால்வாய் நீரை மடை திருப்பி தோப்புகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் சதுப்பாகும் வரை நனைக்கிறார்கள். நாட்கணக்கில் விட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் நீர் நிறைந்து காடுகளையெலலம் நனைத்து ஓடைகள் வழி ஆற்றுக்கு போய் வீணாகிறது.
”அவனுகளுக்கு நெறைஞ்ச பெறவுதான் பய்ய வெள்ளம் இங்க வந்து சேரும்…அதாக்கும் காரியம்”என்றார் பிள்ளைவாள்.”எஸ்டேட்டுக்காரனுகளை தட்டிக் கேக்க எங்கிளுக்கு சங்குறப்பு இல்லல்லா? அவனுக பைசா உள்ளவனுக…”
அப்படி கால்வாயில் வந்த நீரை தேக்கிவைப்பது இன்னும் கஷ்டம். பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. கணியாகுளம் மைய ஏரியே உதாரணம். அதன் நான்குபக்கமும் பங்களா வீடுகள் வந்து விட்டன. நீரை நிரப்பி விட்டு விவசாயி வீட்டுக்குச் சென்றால் நள்ளிரவிலேயே ஆள்வைத்து மதகை திறந்துவிட்டுவிடுவார்கள். அல்லது தோண்டி விடுவார்கள். ஐந்துவருடத்தில் ஒருமுறைகூட ஏரியில் நீர் நிற்க அவர்கள் விட்டதில்லை. சுங்கான்கடையில் உள்ள மாபெரும் குதிரைபாஞ்சான்குளம் நிறைந்தால் ஐந்தே நாளில் காலியாகி மணல் ஓடிக்கிடக்கும். கணியாகுளத்தின் நான்கு ஏரிகளுமே கரைகளில்லாத வெற்றுச் சதுப்புகள்.
”என்னசெய்ய? ஆரிட்டண்ணு சண்டைக்குப் போறது? சாவுகது வரை நாம செய்வோம். பின்ன கெடந்து முள்ளு முளைக்கட்டு”என்றார் பிள்ளை. ”செரி அப்பம் கடமடைக்கு எப்பம் வெள்ளம் போறது?”என்றேன்.
”கடமடைக்கு வெள்ளம் போகணுமானா அவனுக நாலுநாள் பஸ்ஸை மறிக்கணும்…”என்றார் கணபதியாபிள்ளை. ”கலெக்டர் வந்து பேசி எடுத்து கொஞ்சம் தண்ணி விட்டுகுடுப்பாக….தலையெளுத்து கடப்பொறம் ஆளுகளுக்குத்தான். அவனுகளுக்கு இந்த வெள்ளம் எங்க போயி எண்ணைக்கு அவனுக குடிக்கது?”
மூலம்திருநாள் ராமவர்மா”இதையா குடிக்காங்க?” என்றேன்.. பார்வதிபுரம் தாண்டினால் நகரில் உள்ள முக்கிய கழிவுநீர் ஓடைகள் எல்லாமே இதில்தான் கலக்கின்றன. அரசாங்கமே பெரிய சிமிட்டி ஓடையாக கட்டி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ”பின்ன? வேற தண்ணி வேணும்லா? குளோரினை அடிச்சு குடுப்பானுக…அப்டிபார்த்தா பழையாத்திலதானே நாகருகோயிலுக்க சாக்கடையும் கக்கூசும் முழுக்க கலக்குது..அதைத்தானே கன்யாகுமரி முதல் உள்ள எல்லா கடப்பொறம் ஆளுகளும் குடிக்கானுக?”
நாகர்கோயிலில் எந்த ஆஸ்பத்திரியிலும் நேர் பாதிப்பேர் கடற்கரை பரதவர்களாகத்தான் இருப்பார்கள். வருடம் தோறும் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கடற்கரைகளில் ஒரு வயிற்றுப்போக்கு அலையுண்டு. பலர் சாவார்கள். ”பீச்சுனாமி”என்று அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நாகரீகத்தின் சாக்கடை குடிக்கவைக்கப்பட்ட மனிதர்கள்.
”இது இங்க மட்டும் உள்ள காரியமில்ல..தமிழ்நாடு முழுக்க இந்த கதைதாலா…தண்ணி இல்ல. உள்ளவன் இல்லாதவனுக்கு விடமாட்டான். விட்டாலும் அவனுக்க பீயக் கலக்கித்தான் குடுப்பான்…என்ன செய்யியது?” என்றார் கணபதியா பிள்ளை.
நீர் பங்கீடு
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 21, 2008
ஜார்ஜ் திபாட்
ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர். பிரம்ம சூத்திரம் முதலிய நூல்களை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தவர். வாரணாசி சம்ஸ்கிருத கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய வானவியல், கணிதவியல் ஆகியவற்றிலும் ஆய்வுகளைச் செய்தார்.
ஜார்ஜ் திபாட்
ஜார்ஜ் திபாட் – தமிழ் விக்கி
மனசாட்சியின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல். நம் நிழலை நம் மனதின் குரலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ரஷ்யாவில் நடந்த புரட்சியின் மூலம் கம்யூனிசம் சாதித்தது என்ன? ஓர் இயக்கத்தின் கொள்கையிலும், அதன் பாதையிலும் தவறு இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது எப்படி துரோகம் ஆகும்? ஒரு இயக்கத்தின் ஆன்மாவை தூய்மையாக காட்ட வேண்டும் என்பதற்காக தூய்மையான மனிதர்களை ஒழித்துக்கட்டுவது எவ்வகை நியாயம்? ரஷ்யப்புரட்சியில் ஜார் மன்னனின் குடும்பத்தைக் கொன்றதும், உழைப்பு என்ற பெயரில் குழந்தைகளை வதைத்ததும், அரசுக்கு இணங்காத விவசாயிகளை கொன்றொழித்ததும் எப்படி பொன்னுலகம் படைக்கும் சித்தாந்தம் ஆகும்? இப்படி நாவலெங்கும் நிறைய கேள்விகளை அடுக்கியுள்ளார் ஜெயமோகன்
நமக்குப் பர்சனலாக கம்யூனிசம் மீது பெருங்காதல் உண்டு. அதனால் ஜெயமோகனின் எள்ளல் மீதும், மொத்தப் பழியையும் கம்யூனிச சிந்தாத்தின் மீது போடுவதிலும் உடன்பாடில்லை. அதேநேரம் அவர் மிகத்திறமையாக இந்த நாவலை அரங்கேற்றியிருப்பதை வியக்காமலும் இருக்க முடியவில்லை.
ஒரு இயக்கத்தின் அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்த ஒருவனை மனப்பிறழ்விற்கு ஆளாக்கி அவன் மனைவியை முப்பாதாண்டுகள் வதை முகாமில் வைத்திருந்த செய்தியை நாவலின் நாயகன் அருணாச்சலம் அறிகிறான்.
யார் இந்த அருணாச்சலம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ரப்பர் தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் ஒரு முக்கிய அங்கம். அவனுக்கு முன்னவர் கே.கே எம். தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மலைகள் ஏறி இறங்கியவர். மூத்திரச்சந்தில் நின்று அடி வாங்கிய மூத்த தோழர். அவரின் தலைவர் பதவியைப் பிடுங்கி கட்சி அருணாச்சலத்திற்கு வழங்குகிறது. அருணாச்சலத்திற்கு குற்றவுணர்ச்சி இருந்தாலும், பதவியைத் தூர எறியமுடியவில்லை. அந்த நேரத்தில் அருணாச்சலம் வீரபத்திரபிள்ளை என்ற ஒருவரைப் பற்றி அறிகிறார். அவர் யார் என்றால், கட்சியால் திருடன் துரோகன் என அடையாளப்படுத்தப் பட்டு, அடிமட்டம் வரை அழிக்கப்பட்ட ஒருவர். அவர் ஏன் அழிக்கப்பட்டார்?
1919 அக்டோபரில் ரஷ்யப்புரட்சி நடக்கிறது. ஸ்டாலின் புகாரின் ட்ராஸ்கி மூவரும் முன் நிற்கிறார்கள். புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் இயக்க ஒழுங்கு, லட்சியவாதம் என்ற பெயரில் விவசாயிகளை அழித்தொழிக்கும் வேலையைச் செய்கிறார். புகாரினுக்கு அது நியாயமாகப் படவில்லை..அதனால் அவர் ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளிக்கிறார்.
“ஒரு இயக்கம் என்பதும், தத்துவம் என்பதும், புரட்சி என்பதும் மக்களின் அமைதிக்கானதாகவும் ஆனந்தத்திற்காகவும் தான் இருக்கவேண்டும். அவர்களை வதைப்பதன் மூலம் நம் லட்சியத்தைத் தக்க வைப்பதில் எந்த நியாயமும் இல்லை” என்பது புகாரின் கேள்வியாக இருக்கிறது. ஸ்டாலினை எதிர்த்து புகாரின் கேள்விகளை எழுப்புகிறார். உடனே ஸ்டாலின் புகாரின் மீது கட்சிக்கு களங்கம் கற்பிக்கிறார் என்றும், வேறுபல துரோகங்களை செய்கிறார் என்றும் அவரைக் கைது செய்கிறார். மேலும் புகாரினின் இளம் மனைவியான அன்னாவை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி புகாரினுக்கு எதிராக புகாரினிடமே வாக்குமூலம் வாங்குகிறார். மனைவியின் அன்பிற்கும் கனிவுக்கும் கட்டுப்பட்ட புகாரின் மனைவியின் உயிர்நலம் கருதி வாக்குமூலம் கொடுத்துச் சிறைக்குச் சென்று சாகிறார். சாகும் தருவாயில் தன் மனைவியிடம் நடந்தவற்றைச் சொல்கிறார். “இதை உலகுக்குச் சொல்ல ஒருநாள் உனக்கு வாய்க்கும். அப்போதுச் சொல்” என்ற புகாரினின் வார்த்தைகளை 50 ஆண்டுகளாக மனதில் பதிய வைத்து சமயம் வரும்போது உலகுக்கு பந்தி வைக்கிறாள் அன்னா. சோவியத் வீழ்ந்து 1988-ஆம் ஆண்டு ரஷ்யாவில் கோர்பசேப் ஆட்சிக்கு வந்த பிறகு இறந்து போன புகாரின் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுகிறது.
இந்தக் கொடிய வரலாற்றை அறிந்த அதிதீவிர கம்யூனிஸ்ட் ஆன வீரபத்ரபிள்ளை புகாரினுக்கு ஆதரவாக எழுதுகிறார். இதைக் கண்டிக்கும் இயக்கம் புகாரினைப் போல வீரபத்ரபிள்ளைக்கும் துரோகப்பட்டம் கட்டுகிறது. மனப்பிறழ்விற்கு ஆளாகி இறக்கிறார் வீரபத்ரபிள்ளை.
இவற்றையெல்லாம் அறியும் அருணாச்சலத்திற்குள் இயக்கத்தை வழி நடத்தும் மூலவர்கள், தங்கள் இயக்கத்தின் தவறுகளை சுட்டுக்காட்டுவதை விரும்பவில்லை என்பதையும், இயக்கத்தை விமர்சனம் செய்பவனை வதைத்தே கொல்லும் மனோபாவத்தை ஒவ்வொரு எளிய தொண்டனுக்கும் இயக்கம் ஊட்டிவுள்ளது என்றும் அறிகிறான்.அதன் பின் அவர் வீரபத் ரபிள்ளையின் நிழலாகவும், புகாரினின் குரலாகவும் மாறுகிறான்.
அறத்தைத் தேடும் அவனது பயணத்தின் ஊடே நடக்கும் அத்தனை உளச்சிக்கலையும், எதார்த்த அரசியலையும் புட்டுபுட்டு வைத்து எழுதியுள்ளார் ஜெமோ கம்யூனிசத்தில் கொஞ்சகாலம் அவர் இருந்துள்ளார். தன் அகண்ட வாசிப்பு வழியே அவர் கம்யூனிசத்தை நிறைய அறிந்துமுள்ளார். நம்மிள் ஆசை ஒன்று உண்டு. ஜெயமோகன் ஆர்.எஸ் எஸ் இயக்கத்திலும் இருந்துள்ளார். அதன் தீவரத்தில் முகிழ்ந்துள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பு குறித்தும் ஒரு தன்னிகரற்ற நாவலை அவர் எழுத வேண்டும். ஏற்கெனவே எழுதியிருந்தால் யாரேனும் அடியேனுக்குப் பரிந்துரையுங்கள்.
கம்யூனிசம் மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் இயக்கங்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான். ஏன் புகாரின் மீது கூட நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதைப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையுண்டு. அந்த உரிமையில் பழிபோடும் பாவம் மட்டுமே தெரியக்கூடாது என்பது எமது வாதம்
மற்றபடி பேராசான் ஜெயமோகனின் எழுத்தின் வீரியமும், இந்த நாவலுக்குள் கதைகளையும், நாடகங்களையும், கட்டுரைகளையும், சுந்தர ராமசாமி போன்ற மனிதர்களையும் இணைத்து அவர் புனைந்துள்ள திறம் வியக்க வைக்கிறது. ஜெயமோகனும் நாவலில் ஒரு கேரக்டராக வருகிறார்.
949 பக்கங்கள் கொண்ட இந்த அகண்ட நாவலை வியந்து பேசவும், இகழ்ந்து ஏசவும் இரு சாராருக்கும் அவ்வளவு விசயங்கள் கொட்டிக்கிடக்கிறது.
நாவலுக்குள் சில கேரக்டர்கள் பேசும் வசனங்களில் தெறிக்கும் எதார்த்த தத்துவம் அவ்வளவு திறப்புகளைக் கொடுக்கும்
சாம்பிள்க்கு ரெண்டு,
“ஒரு மனிதனைச் சுற்றி ஆயிரம் இறந்தவர்கள் வாழ்கிறார்கள்“
“நீங்களும் செரி அவுகளும் செரி மெளனமா இருக்கது தான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்திற்கு புஸ்தகம் எழுதுவீக”
“தெளிவுப்படுத்திக்கணும்ல?
” பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுப்படுத்திக்க முடியாது. தெளிவு இருக்க இடத்துல பேச்சு இருக்காது” அருணாச்சலத்தின் மனைவி நாகம்மை பேசுகிற இந்த இரண்டாம் வசனம் அருணாச்சலத்தை மட்டுமல்ல நம்மையும் உலுக்கிப் போடும்
பெண்களின் எளிமை முன்பு ஆண்களின் எந்தத் தத்துவமும் சிறிதாகிவிடும் போல
விமர்சனங்கள் உண்டு– ஆனாலும் வீரியமான நாவல்
ஜெகன் கவிராஜ்
About the English videos…
Just can understand when spoken, only colloquial can be understood by me despite that drawback I try and listen to your lectures but unable to get the full gist of it. I know you talk on philosophy, art, literature and reading habits which is really heartening to see, I really appreciate such a great writer taking this initiative.
About the English videos…’பெருஞ்செயல்களை தொடங்குவோம்’ என்ற உங்கள் காணொளியைக் கண்டபோது நான் ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள ரோடு (Rohru) என்ற இடத்தில் இருந்தேன். சிம்லாவில் இருந்து 150 கிமீ தொலைவில் இருக்கிறது. ’கிளம்பிச் செல்லுங்கள்’ என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு மேலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. நீங்கள் பயணம் பற்றி பேசினாலோ எழுதினாலோ கூடுதல் ஆனந்தம்தான்.
மீண்டும் ஒரு முகிழ்த்தல்April 13, 2025
சு.வேணுகோபாலுக்கு கோவை கண்ணதாசன் விருது
கோவை. கண்ணதாசன் விருது பெறும் எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கு வாழ்த்துக்கள்
கண்ணதாசன் – தமிழ் விக்கிகோவை கண்ணதாசன் கழகம் 2025 கண்ணதாசன் விருதுகள் அறிவிப்பு
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 17 ஆண்டுகளாக கவியரசர் பிறந்த நாளை ஒட்டி அவர் பெயரில் விருதுகள் வழங்கி வருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் கலைப்பிரிவில் திரு காரைக்குடி நாராயணன் அவர்களுக்கும் படைப்பிலக்கியப் பிரிவில் எழுத்தாளர் திரு சு.வேணுகோபால் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
கவியரசர் படைப்புகளை பரப்பும் அரிய பணிக்காக இசைக்கவி ரமணன் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் கொண்டவை.
கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு வி கிருஷ்ணகுமார் இந்த விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.
ஜூன் மாதம் கோவையில் நடைபெற உள்ள கண்ணதாசன் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுவரை 2009-ல் நாஞ்சில்நாடன், டி.ஆர்.எம்.சாவித்திரியும் ,2010-ல் திரு.வண்ணதாசன், சீர்காழி சிவசிதம்பரமும் ,2011-ல் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.இராம முத்தையாவும், 2012-ல் திரு.கலாப்ரியா, திரு.பி.ஆர்.சங்கரனும், 2013-ல் திரு.அசோகமித்திரன், திரு.முத்துலிங்கமும் ,2014-ல் திரு. ஜெயமோகன், திருமதி வாணி ஜெயராமும் ,2015-ல் திரு.சிற்பி, திருமதி பி.சுசீலாவும் அதேபோல ,2016-ல் திரு. பஞ்சு அருணாசலம், ஓவியர் அமுதோனும் ,2017-ல் திரு.பிரபஞ்சன், எல்.ஆர்.ஈஸ்வரியும் ,2018-ல் திரு.மாலன், திரு எஸ்.பி. பாலசுப்ரமணியமும்,2019-ல் திரு.சாரு நிவேதிதா, திரு.பி.ஜெயச்சந்திரனும் , 2021-ல் திரு.சங்கர் கணேஷ், திரு.போகன் சங்கரும் ,2022-ல் திரு.வி.சி.குகநாதன், திரு.வண்ணநிலவனும் ,2023-ல் இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன், திரு எம் கோபாலகிருஷ்ணனும் 2024 ல் திருமதி அ.வெண்ணிலா திரு பழனி பாரதி ஆகியோரும் கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருது பெற்றுள்ளனர்.
இந்த தகவலை கண்ணதாசன் கழகத்தின் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா தெரிவித்துள்ளார்
அக்ரஹாரத்தில் கொன்றை!
பார்வதிபுரம் அக்ரஹாரம் இன்று ஏறத்தாழ அக்ரஹாரம் என்றுதான் சொல்லவேண்டும். கணிசமான வீடுகளை இடித்து கான்கிரீட்டில் விந்தையான வடிவங்களில் கட்டிவிட்டார்கள். அக்ரஹாரம் என்பதனால் விசாலமாக கட்ட இடமில்லை, ஆகவே எல்லா வீடுகளும் ரேஷன்கடை வரிசையில் முண்டியடிப்பவைபோல நின்றிருக்கின்றன. சில வீடுகளின் பக்கவாட்டில் ஜிப்பாவில் பை போல சின்னச்சின்ன ‘போர்ஷன்’களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.
காரணம் பார்வதிபுரம் அக்ரஹாரம் இன்று இருப்பது பார்வதிபுரம் ஜங்ஷன் அருகே. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் அங்கே உருண்டை ஐயர் என்பவரின் ஒரே ஒரு ஓட்டல்தான். அங்கே ரவாலாடு எனப்படும் வெண்ணிறமான ஓர் உருண்டை வஸ்து பிசுக்கிபிடித்த கண்ணாடிப்பெட்டிக்குள் நுகர்வோரைக் காத்து அமர்ந்திருக்கும். அக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. இண்டர்வியூ போவதென்பது இளைஞர்களின் பத்தாண்டுகால வாழ்க்கை. அப்பின்னணியில் “அதுக்கு அப்பாயின்மெண்ட் வரல்லை கேட்டியா?” என்று அந்தோணி சொன்னதை புரிந்துகொள்ளவேண்டும்.
அப்போது அக்ரஹாரமும் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலேஜ் செல்லும் வழியில் அப்பகுதிக்குள் நுழைந்து அப்பால் வந்தால் சிலசமயம் ஐயப்பா கல்லூரியில் படிக்கும் இளம் அழகிகளைப் பார்க்கலாம். காலேஜ் செல்லும் வழியில் நம்மைப் பார்த்தால் கெத்தாகச் செல்பவர்கள் அக்ரஹாரத்தில் அவர்களின் வீட்டருகே பார்த்தால் புன்னகைப்பார்கள். பின்னாளில் இந்துமுன்னணி உட்பட அமைப்புகளின் தலைவராக இருந்த (மறைந்த) நாராயணன் என் சீனியர். தைரியமாக ஒரு வீட்டில் நுழைந்து “சாமி இருக்காரா? சமையலுக்கு பேசணும்” என்றார். “அது அடுத்த வீடாக்கும்… காபி சாப்பிடறேளா?” என்றாள் மாமி. ஆனால் அந்த வீட்டு அழகிக்கு எங்கள் உத்தி புரிந்து கண்களால் சிரித்தாள்.
அன்றைய அக்ரஹாரம் மிக அமைதியானது. அன்று அக்ரஹாரத்திலுள்ளவர்களின் வாழ்க்கை என்பது பெரும்பாலும் தெருவிலும் திண்ணையிலும்தான். உள்ளே சிறிய அறைகளில் வாழமுடியாது. பகல் முழுக்க திண்ணைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். கடந்துசெல்லும்போதே தெரியும் மிகச்சாவகாசமான பேச்சு .”அந்தா அவன் இருக்கானே, அதாண்டி மத்தவன், எதுக்குச் சொல்றேன்னா…”
தெரு என்பது அன்றைய டிவி. அதில்தான் நிகழ்ச்சிகள். அதைப்பற்றித்தான் விவாதங்களும். தெருவிலும் விந்தையான கதைமாந்தர் நடமாட்டம் இருக்கும். அங்கேதான் ஒருவன் மூக்கில் வளையமிட்ட இரண்டு கரிய கரடிகளுடன் செல்வதைப் பார்த்தேன். சின்னப்பிள்ளைகள் படுக்கையில் மூச்சா பெய்தால் அந்தக் கரடியின் அனுக்ரகத்தால் சரியாகப்போய்விடுமாம். கரடியே நடுத்தெருவில் பச்சையாகவும் நெடியாகவும் மூச்சா பெய்ததைக் கண்டேன்.
“நம்ம ஊருக்கெல்லாம் இவனுக வாறதில்லைடே” என்று அந்தோணி சொன்னான். “நம்ம ஊரிலே நம்ம பாகுலேயன்பிள்ளை இருக்காருல்லா?” என்று செல்வராஜ் சொல்ல நான் சிரித்தேன். எனக்கு என் அப்பாவை எப்படி கேலிசெய்தாலும் பிடிக்கும். கழைக்கூத்தாடிகள், குறவஞ்சிகள் என எல்லாருக்குமே அக்ரஹாரம் மிக வசதியானது. அரைகிலோமீட்டர் நடையில் நூறுபேரை பார்த்துவிடலாமே. எங்களூருக்கு அந்தவகையானவர்கள் அதிகம் வருவதில்லை. ஒவ்வொரு ஊரும் சுயமான பெரிய தோட்டத்திற்குள் அமைந்திருக்கும். நாயர் அம்மச்சிகள் ஓய்வாக அமர்ந்திருப்பதனால் விரிவாக பேரமும் பேசுவார்கள்.
அக்ரஹாரத்தில் எல்லாரையும் மாமிகளுக்கு தெரியும் என்று தோன்றும். “ஏய் முத்துமாரி, வாழைப்பூ என்னடீ வெலே?” என்று கேட்டபின் ஒரு மாமி நாலைந்து நாட்களுக்கு அப்பக்கமாக நடமாடிய என்னிடம் “நீ எந்தூருப்பா? பயனோனியர்லே படிக்கிறியா? நம்ம லக்ஷ்மிய தெரியுமோ?” என்று கேட்டுவிட்டாள். நான் பொய்களை யோசித்துப் பதறுவதற்குள் “இவா அப்பா கல்யாண சமையல் பண்றார். சின்ன அளவிலே கூட பண்ணுவார். உனக்கு பார்ட்டி ஏதாவது தெரிஞ்சா சொல்றையா?” என்றுகேட்டு உள்ளே சென்றாள். நான் புன்னகைசெய்தேன்.
இன்று அக்ரஹாரத்தில் சிமிண்ட் சாலை போட்டுவிட்டார்கள். ஓரிரு வீடுகள் மட்டும் பழைய ஓட்டுக்கூரையுடன், அக்ரஹார வீடுகளுக்கே உரிய சுரங்கப்பாதை போன்ற கட்டுமான விசித்திரத்துடன், வாசலில் பொடிக்கோலத்துடன் , மறு எல்லையில் ஆடும் வாழையிலைகளுடன், நின்றிருக்கின்றன. அனேகமாக தினம் இருமுறை அக்ரஹாரம் வழியாகத்தான் நடை செல்கிறேன். எனக்குத்தெரிந்த எந்த முகமும் அங்கே இப்போது இல்லை- ஒரே ஒரு ஆத்மா தவிர. என் அக்காவின் கணவர் மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களின் நண்பரின் அப்பா. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே கிழவர். அதே இல்லத்தில் அதே திண்ணையில் அதே வேட்டியுடன் அதே முறைப்புடன் அமர்ந்திருக்கிறார். காலம் மாறியது அவருக்கு ‘துண்டாக’ பிடிக்கவில்லை. இப்போதும் என்னை முறைத்தார். நாற்பதாண்டுகளுக்கு முன்பு லட்சுமியை வேடிக்கை பார்க்க வந்தபோதும் அப்படித்தான் முறைத்தார்.
அந்த மாதிரி ஆத்மாக்கள் எந்த பழைய இடத்திலும் இருக்கும். சென்றகாலத்தில் இருந்து இந்தக் காலகட்டத்திற்கு வந்து நீடிக்கும். காலம் உறைகுத்துவது என்று தோன்றுகிறது. இல்லையேல் எப்படி சமகாலத்தை இறந்த காலத்துடன் தொடர்புகொள்ளச் செய்ய முடியும்? என் நண்பரும் மறைந்த கேரள வரலாற்றறிஞருமான எச்.சிவசங்கரன் நாயர் ஒருமுறை சொன்னார். அவர் ஒரு கட்டு மிகப்பழைய நூல்களை வைத்திருக்கிறார். அதைப்படிக்கும் மனமகிழ்ச்சி புதிய நூல்களால் வருவதில்லை. ஆகவே புதிய நூல்களை அந்த பழைய நூல்களின் அருகே வைத்துவிடுவார். ராமபாணப்பூச்சி அங்கிருந்து இங்கே வந்து ஓட்டைபோட்டுவிடும். அதன்பின் புதியபுத்தகத்தையும் மனநிறைவாக வாசிக்கலாம்.
அக்ரஹார வாழ்க்கை என்பது தனித்தனி வீடுகளில் ஒரே குடும்பமாக வாழ்வது. சொல்லப்போனால் தனித்தனி வீடு கூட இல்லை, ஒரே நீளமான வீடுகளின் அல்வாப் பகுப்புகள்தான். இன்று வீடுகள் ஒன்றாக இருந்தாலும் அவரவர் அறைகளுக்குள் அவரவர் ஒண்டிக்கொண்டு வாழ்கிறார்கள். டிவி வந்ததுமே தெரு முக்கியத்துவம் இழந்துவிட்டது. தெருவம்புகள் அனேகமாக இல்லை. டிவி வம்புகளுக்கே நேரம்போதவில்லை. இருபதாண்டுகளுக்கு முன்புகூட அக்ரஹாரத்தின் நடுவிலிருந்த பெரிய வீடு ஒரு சமூகக்கூடமாக இருந்தது. ‘பூணல்’ ‘வரலட்சுமி பூஜை’ உட்பட ஏதேனும் நிகழும். ராமநவமி, சீதா கல்யாணம், பாண்டுரங்க பஜனை என கூட்டான அபஸ்வரம் காதில் விழும்…. மாதம் இரண்டுநாள் ‘சத்யை’ உண்டு. இப்போது அது பாழடைந்து பூட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் கொஞ்சநாள் கணியாகுளம் பஞ்சாயத்து அலுவலகமாக இருந்தது.
அக்ரஹாரத்தின் பின்பக்கம் ஒரு நல்ல குளம் இருந்தது. மேற்கு எல்லையிலுள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்குச் சொந்தமான குளம். நாற்பதாண்டுகளுக்கு முன் நான் அங்கே நிறையவே குளித்திருக்கிறேன். இப்போது பார்வதிபுரம்’ஜங்ஷனின்’ எல்லா சாக்கடையையும் அங்கே திறந்துவிடுகிறார்கள். குப்பைகளை கொட்டுகிறார்கள். ஐயர்கள் வேலிகட்டி, சுவர் கட்டி எல்லாம் பார்த்தபின் கைவிட்டுவிட்டனர். ஆனாலும் பிடிவாதமாக சிலர் குளிக்கிறார்கள். ஜானகிராமன் ஒரு கதையில் நூறாண்டுகளுக்குமுன்னரே கும்பகோணம் குளம் அப்படி சாக்கடைக்கரைசலாக இருந்ததை சொல்லியிருப்பதை அண்மையில் வாசித்தேன். (கும்பகோணம் கதைகள். தொகுப்பு ராணி திலக்)
இன்னமும் அக்ரஹாரத்தில் வசிப்போர் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள்தான். இப்போதும் அங்கே மீன்விற்பனையாளர் செல்வதில்லை. இப்போதும் தெருவில் அங்கே மட்டும் விந்தையான விற்பனையாளர்கள் தென்படுகிறார்கள். நேற்று ஒருவன் “தாமரைத்தண்டேய்” என்று கூவிக்கொண்டிருந்தான். விசாரித்தேன். தாமரைத்தண்டேதான். முருங்கைக்காய் போல சாம்பாரில் போடலாம், இளமூங்கில்போல சுவையானது. பக்கவாட்டில் கோணலாக வெட்டி உலரவைத்து எண்ணையில் பொரிக்கலாம்.ஐயர்களுக்கு சுவை பிடிக்கும், கூடவே குற்றவுணர்ச்சியும் உண்டு. புலனுணர்வுகளை கடந்தாகவேண்டுமே. “வாயுகோபத்துக்கு நல்லதாக்கும்” என்று ஒருவர் சொன்னார். அந்தக்காலத்தில் நான் என் நண்பர் ஹரிஹரன் வீட்டுக்குச் சென்றால் அவன் அப்பா நாராயணையர் இப்படித்தான் தின்ன வாழைப்பழம் தருவார். அதை உரிக்கையில் “காலம்பற சுகமாட்டு பேதி போகும், கேட்டையா?” என்று சொல்லி வைப்பார்.
பார்வதிபுரம் அக்ரஹாரம் பலபெருமைகள் கொண்டது. அதில் முக்கியமானதாக எனக்குப்படுவது டி.ஏ.கோபிநாத ராவ் பத்தாண்டுகளுக்கு மேல் இங்கே தங்கியிருந்தார் என்பது. அவர் திருவிதாங்கூர் அரசின் தொல்லியல்துறை இயக்குநர். அரசர் அவருக்கு ஓர் உதவியாளரையும், ஒரு ஜீப்பையும் அளித்தார். அவர் தமிழகம், கேரளம் முழுக்கச் சுற்றி இந்திய சிற்பவியல் பற்றிய தொடக்ககால நூல் ஒன்றை எழுதினார். இன்றும் அது ஒரு ‘கிளாஸிக்’ ஆகக் கருதப்படுகிறது. (Elements Of Hindu Iconography )
பார்வதிபுரம் அக்ரஹாரம் வழியாக இன்று வந்துகொண்டிருக்கும்போது கொன்றை பூத்திருப்பதைக் கண்டேன். சரக்கொன்றை இப்போது கன்யாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பூக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறது. கோடை இந்த ஆண்டு கடுமையாக இருக்கும் என்பதற்கும், ஜூனில் மழை கனமாக இருக்கலாம் என்பதற்குமான சான்று அது என்று வழக்கம்போல கருப்பட்டிக் காபிக்கடையில் ஒருவர் சொன்னார். கோடை ஏற்கனவே வந்துவிட்டது. எங்குபார்த்தாலும் மாம்பூ வாசனை. காலையில் குயில்களின் குரல்கள் (எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்தால் எல்கேஜி குழந்தைகளின் இசைக்கூச்சல்). சந்தையடிகளில் பலா, மாங்காய் ஆகியவற்றுடன் அயனிப்பழமும் காணக்கிடைக்கிறது.
நூறு பவுன் நகைபோட்ட கேரளத்து மணப்பெண் போல கொன்றை சரம் சரமாகத் தொங்கவிட்டுக்கொண்டு நின்றிருந்தது. கூடவே ‘தந்தைப்படி’ போல தென்னைமரமும். மிகையலங்காரம் பற்றி நவீனத்துவ ஆத்மாக்களுக்கு எப்போதுமே ‘பராதி’ உண்டு. அவர்கள் இயற்கையை திருத்தியமைக்க நினைப்பவர்கள். விட்டால் அவர்கள் வேளிமலையையே செதுக்கி சதுரமோ செவ்வகமோ ஆக்கி ‘வடிவ ஒழுங்குக்கு’ கொண்டுவந்துவிடுவார்கள்.
கொன்றையை பார்த்தபடி நின்றிருந்தேன். ஒரு பருவத்திற்காக இத்தனை அலங்காரம் செய்துகொண்டு காத்திருப்பதென்பது ஓர் அரிய விஷயம்தான். கொன்றைக்குள் இருந்து பொன் வெளியே வருகிறது. அதன் வேர்களில் கனவென உறைந்திருந்த ஒளி. நான் கோவிட் தொற்றுக் காலத்தை எண்ணிக்கொண்டேன். அன்றைய சூழலில் சட்டென்று பொன்பொலிந்த கொன்றை எனக்களித்த நம்பிக்கையை, கனவை.
கணிக்கொன்றை பொற்கொன்றைஎம். ஜெகந்நாத நாயக்கர்
தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). பெண் வேடங்கள் அதிகம் ஏற்று ஆடுபவர்.
எம். ஜெகந்நாத நாயக்கர் – தமிழ் விக்கி
அறிதலின் வெளி…
அன்புள்ள ஜெ
தங்கள் நலம் அறிய விழைகிறேன்.
எனது வெண்முரசு வாசிப்பு இப்போது சற்று வேகம் அடைந்துவிட்டது . வெய்யோன் நாவல் முடித்து இப்போது பன்னிரு படைக்களம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது நாவலும் என்னை ஏதோ ஒரு புது உயரத்திற்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். முதற்கனல் வாசிக்கும் போது உங்களை பற்றி பெரிதாக ஏதும் அறியாமல் வாசிக்க ஆரம்பித்தேன். என் வாசிப்பு விரிய விரிய நான் ஏதோ ஒரு மிகப்பெரிய மலையின் முன் நிற்பதாக உணர்கிறேன்.
உண்மையில் வெண்முரசு என் வாழ்வில் நடத்திய மாற்றங்கள் எண்ணற்றவை. என் மொழி செம்மை அடைந்துள்ளது. என் சிந்தனை சீராகியுள்ளது. என் பார்வை பரந்துள்ளது. என் வானம் விரிந்துவிட்டது. என் இலக்கு தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஒரு தலைசிறந்த இலக்கியம் ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவு மாற்றும் என்று நான் என்னைக்கொண்டே அளந்து கொள்கிறேன். இனிமேல் என் வாழ்வில் வசந்தம் தான் என்று நான் சொல்ல வரவில்லை. எத்தனை தடங்கல் வந்தாலும் என்னால் அதை தாண்டி உள வேகத்தோடு செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதை அடைந்ததில் வெண்முரசுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
இன்னும் நான் வெகு தூரம் செல்ல விழைகிறேன். அடுத்து அடுத்து என் வாசிப்பை உங்களிடம் பகிர்வேன்.
பின்குறிப்பு : வெண்முரசு தான் எனக்கு தத்துவத்தில் பெரு விளைவை தந்தது. இந்திய தருவதில் மூன்று வகுப்புகள் முடித்துவிட்டேன். நான்காம் வகுப்புக்கு விண்ணப்பித்தும்விட்டேன்.
நன்றி
சரவணன்
https://youtu.be/jimQp2Fp_gM?list=PLoiiNMLQqet1ccRHxIumSd5tCQx1Qo8dr
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887)
மாமனிதர்களின் உருக்கு உலை இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்விநாளைக்காக வாழ்தல், கடிதம்
நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,எனது கணவர் உங்களது வாசகர் அவர் அவ்வப்போது உங்களது கட்டுரை இணைப்புகளை எனக்கு அனுப்புவார் நானும் நேரம் கிடைக்கும் பொழுது படிப்பேன். அவ்வாறு இன்று அதிகாலை 5 மணிக்கு Apr 7,2025 அன்று நீங்கள் எழுதிய “நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?” என்ற கட்டுரையை அனுப்பி வைத்தார். அதை படித்ததிலிருந்து மனதிற்கு நெருடலாகவே இருந்தது. அதனால் சீக்கிரம் சமையல் முடித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு எழுத அமர்ந்தேன். மனதில் தோன்றியதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.
தந்தைக்கு :
ஐயா உண்மையிலேயே உங்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது. உங்கள் மகன்களை படி படி என்று அழுத்தம் கொடுத்து, நல்லபடியாக படிக்கவும் வைத்து, பிள்ளைகள் எதிர்காலத்தையே உங்கள் வாழ்க்கையாக எண்ணி உங்களுக்கும் வயதான பிறகு ஒரு எதிர்காலம் இருக்கிறதென்று கொஞ்சம் கூட யோசிக்காமல், மகன்களை வெளிநாடுகள் சென்று வேலை பார்க்கும்படி நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்டு, கடைசி காலத்தில் தனிமையில் நீங்களும் உங்கள் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பது மிகவும் தவறுதான்.
நானும் எனது கணவரும் இரு மகன்களுக்கு தாய் தந்தையர் தான் எங்களுக்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை உங்களை போன்ற மனநிலை தான் இருந்தது. பிள்ளைகளை நல்ல படியாக படிக்க வைக்க வேண்டும், அவர்கள் எதிகாலத்தை நல்லபடியாக அமைத்து கொடுக்கவேண்டும் என்று. பிறகு ஜெ அவர்களின் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தோம், அவரது முற்போக்கான சிந்தனைகளை அதிகம் இல்லையென்றாலும் ஒரு சிலவற்றை கேட்க ஆரம்பித்தோம். பிறகு தான் புரிந்தது வயதான பிறகும் ஒரு எதிர்காலம் இருக்கிறது அதை நாம் தான் நல்லபடியாக அமைத்துக் கொள்ளவேண்டுமென்று. பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக நாம் உழைக்கும்போதே நமது எதிர்காலத்திற்கான தேவைகளையும் எடுத்துக்காட்டாக நமக்கு பிடித்த கலைகளையோ, புத்தக வாசிப்போ அல்லது எதாவது நமக்கு பிடித்த ஒன்றை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் தான் நான் சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்ட ஆடல் கலையை கற்க ஆரம்பித்திருக்கின்றேன். கற்றுக்கொள்வதற்கு வயது தடையல்ல. இப்பொழுதும் உங்களுக்கு காலம் கடந்து விடவில்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்து உங்களையும், உங்கள் மனைவியையும் busy ஆகவும், நிம்மதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை கண்டு கொள்ளாத மகன்களை எண்ணி உங்கள் உடம்பை வருத்திக்கொள்ளவேண்டாம்.
வயதான காலத்தில் என் குழந்தைகள் என்னை கண்டுகொள்ளவில்லை என்று புலம்புவதைவிட, அவர்களை கண்டுகொள்வதற்கு எங்களுக்கு நேரமில்லை என்று பெற்றோர்கள் கூறும் அளவிற்கு நாம் நம்முடைய நேரத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.
மகன்களுக்கு :
நீங்கள் ஜெ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஏதோ நீங்கள் பெரிய கொடுமைகளை அனுபவித்தவர் போல எழுதியிருந்தீர்கள். உங்களது அப்பா போல தான் என்னுடைய அப்பாவும், அதற்கு ஒரு படி மேல், நானும் என் அண்ணனும் நிறைய அடி வாங்குவோம். எனக்கும் சிறு வயதிலிருந்து இந்தியாவில் இருக்கும் வரை பெற்றோரை கண்டால் பிடிக்காது, அவர்களை வெறுப்பேன். இப்பொழுது நான் வெளிநாட்டில் வாழ்கின்றேன். இங்கு வந்து இந்த சூழலை பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கையென்று. பின்பு தான் ஒன்றை புரிந்துகொண்டேன். இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறதென்றால் இங்கு உள்ள சூழல் வேறு அங்கு உள்ள சூழல் வேறு. நமது பெற்றோர்கள் படி படி என்று சொல்கிறார்களென்றால் அதற்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தியாவில் உள்ள கல்வி சூழல் அவ்வாறு, போட்டி மிகுந்த அந்த சூழலில் தனது குழந்தைகள் முன்னேறவேண்டும், அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு வாழ்ந்திருப்பார்கள். அதை தவிர வேற எதையும் நினைப்பதற்கு அவர்களுக்கு தோன்றியிருக்காது.
நீங்கள் வெளிநாட்டு சூழ்நிலைகளையும், இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளையும் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். ஏதோ நீங்கள் இளமையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்க்காக உங்களது தாய் தந்தையரை “இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள் அவ்வளவுதான்.” என்று அணுகுவது முறையல்ல. நீங்கள் பல கொண்டாட்டங்களை அனுபவிக்கவில்லையென்றால் உங்களோடு சேர்ந்து அவர்களும் தான் அனுபவிக்காமல் இருந்திருப்பார்கள், உங்களை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் தனியாகவா கொண்டாடியிருப்பார்கள்? எல்லா பெற்றோர்களும் குழந்தைகளை வெவ்வேறு அணுகுமுறையில் வளர்க்கின்றார்கள் ஆனால் நோக்கம் என்னவோ ஒன்று தான். உங்கள் பெற்றோர்கள் உங்களவிற்கு இலக்கியம் பயிலாதவர்களாகவும் , பயணம் செயாதவர்களாகவும் அதை பற்றி புரிதல் இல்லாதவர்களாகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் பயின்றவர் தானே நீங்கள் அனுபவித்த இளமை கால வேதனையை இப்பொழுது அவர்களின் முதுமை காலத்தில் நீங்கள் திருப்பி கொடுக்கலாமா?
இப்பொழுது வாழும் அமெரிக்கா பிடித்திருக்கின்றது இருபத்திரண்டு வருடம் வாழ்ந்த திருச்சியுடன் மானசீகமாக எந்த உறவும் இல்லையென்றால் அது உங்களது தவறு. நாடு நாடக பயணம் செய்யும் உங்களுக்கு உங்கள் சொந்த ஊரான திருச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அது உங்களது தவறு. உங்கள் பெற்றோர்கள் அதற்கு என்ன செய்வார்கள்.
கொஞ்சம் யோசியுங்கள். கடந்த காலத்தை நினைத்து நிகழ் காலத்தை வெறுக்காதீர்கள். கோடைகால விடுமுறைக்கு வருடா வருடமோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ ஊருக்கு குடும்பத்துடன் செல்லுங்கள், பெற்றோருடன் கூடி சந்தோசமாக செலவிடுங்கள் அதில் ஒன்றும் உங்கள் நிம்மதி கெட்டுவிடாது.
உயிருடன் இருக்கும் பொழுது பெற்றோர் மீது குறை கூறிவிட்டு அவர்கள் போன பிறகு WhatsApp ல் status வைப்பதில் எந்த பயனும் இல்லை.
இப்படிக்கு
லோகாம்பாள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

