Jeyamohan's Blog, page 128

April 16, 2025

ஒருமையுணர்வும் மானுடமும்

சரியான சிந்தனை என்பது என்ன? சரியான சிந்தனை ஒருங்கிணைவை, முழுமையை நோக்கிச் செல்வதாக இருக்கும் என நினைக்கிறேன். பிளவுபடுத்தும் சிந்தனை எதுவும் சரியானது அல்ல. அது எந்த நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டாலும். போலி இலட்சியவாதங்கள் சொல்லப்பட்டாலும். ‘நாம்’  ‘அவர்கள்’ என்னும் பகுப்பை அடிப்படையாகக்கொண்ட எச்சிந்தனையும் எதிர்மறையானதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:35

துளிவாழ்க்கை

ஒரு திரைப்பட விஷயமாக எர்ணாகுளம் வரவேண்டியிருந்தது, கூடவே ஓர் இலக்கிய விழாவும். (வி.கே.பவித்ரன் என்னும் பகுத்தறிவுச் செயல்பாட்டாளரின் நூறாண்டு விழாக் கொண்டாட்டம்)  ஒருவாரம் இங்கே தங்கவேண்டும். வழக்கமாக நட்சத்திரவிடுதிகளில்தான் சினிமாச்சந்திப்புகள் நிகழும். அண்மைக்காலமாக வெவ்வேறு இடங்களில் ‘வாழ்வதில்’ ஓர் ஆர்வம் முளைவிட்டிருப்பதனால் ஏதேனும் வீட்டில் தங்கலாம் என எண்ணினேன். ஏர்பிஎன்பி வழியாக ஒரு வீட்டை அமர்த்திக்கொண்டேன். 

இது ஒரு வழக்கறிஞரின் இல்லம். அவரும் அவர் மனைவியும் மட்டும்தான் வீட்டில். மகன்கள் வெளிநாட்டில். மிகமிகப்பெரிய வீடு. தனியாக அதைப் பராமரிக்கமுடியாது. தனிமை பெரிய சுமையும்கூட. ஆகவே அதில் இரண்டு அறைகளை மட்டும் வாடகைக்கு விடுகிறார்கள். நட்சத்திரவிடுதி அளவுக்கே பராமரிக்கப்பட்ட அறை, ஐந்திலொரு பங்கு வாடகை. கேரளம் முழுக்க இதேபோன்ற ஆடம்பர மாளிகைகள், பகுப்பில்லங்களை வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளனர்.

இந்த அறை வீட்டுக்குள்ளேயே உள்ளது. நாம் இக்குடும்பத்தில் ஒருவராகத் தங்கவேண்டும். காலையுணவை அவர்களே அளிப்பார்கள். வழக்கமான அவர்களின் உணவு. (புட்டு பழம், வெள்ளையப்பம் கடலைக்கறி, இட்லி என. இப்போது ஈஸ்டர் நோன்புக்காலம். கேரள கத்தோலிக்கர்கள் அசைவ உணவை தவிர்ப்பார்கள்) நான் யார் என்று வீட்டம்மாவுக்கு தெரியும். ஒழிமுறி படம் பற்றி, அண்மையில் வந்த படத்தின் தோல்வி பற்றி பேசிக்கொண்டோம் . அவருக்கிருந்த ரத்த அழுத்தச்சிக்கல் பற்றிச் சொன்னார். 

ஆனால் இப்படி வீட்டை அயலாருக்கு வாடகைக்கு அளிக்கும் வழக்கம் உருவாகி நீடிக்கவேண்டும் என்றால் உறுதியான சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு தேவை. தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் சாத்தியமே இல்லை. பிரச்சினை என்றால் இங்கே பத்து நிமிடத்தில் போலீஸ் வந்துவிடும். வீட்டிலும் வெளியிலும் முழுக்க சிசிடிவி பதிவுகள் உண்டு. போலீஸ் வந்தால் உறுதியான நடவடிக்கையும் இருக்கும். தமிழ்நாட்டில் நாம் ரத்தக்களரியே ஆனாலும் போலீஸிடம் போவது என்பது நாமே பிரச்சினைக்குள் சென்று சிக்கிக்கொள்வது அல்லவா?

இங்கே வந்து முதல்நாள் கடந்ததுமே ஒரு ‘ரொட்டீன்’ உருவாகிவிட்டது. ஐந்து மணிக்கு எழுந்து ஒரு விடியற்காலை நடை. அங்கே டீகுடிக்கும் கடையும் வழக்கமானதுதான். கடைக்காரர் புன்னகைத்து சீனி இல்லாத டீ தயாரிக்க ஆரம்பித்துவிடுகிறார். பகலில் கொஞ்சம் தூக்கம். மாலையில் மீண்டும் நடை. அக்கம்பக்கத்தினரிடம் புன்னகை. அண்மையில்தான் எர்ணாகுளத்தின் மையக்கடைவீதி. அங்கே சென்று ‘வாய்பார்த்துவிட்டு’ வரலாம்.

வாயிநோக்கி என்பது பொதுவாக இங்கே பெண்களை வேடிக்கைபார்ப்பவர்களுக்கான பெயர். அது உண்மையில் ஒரு நல்ல அழகியல் பயிற்சிதான். மேற்படிப் பயிற்சியை மேற்கொண்டதில் கண்டடைந்த உண்மை என்பது எர்ணாகுளத்தில் பெண்கள் பொதுவாகவே அழகிகள். அது முன்னரே தெரிந்ததுதான். இப்போது அவதானித்வை சில.

இங்கே இருபது வயதுக்குக் குறைவான பெண்குழந்தைகளில் கொடி போன்ற குழந்தையே இல்லை. எல்லாமே ‘plumb’ என்று சொல்லத்தக்க உடல்வாகு கொண்டவை. நவநாகரீக உடைகள். உற்சாகமான நடை. உரத்த சிரிப்பு. பெண்கள் கூட்டமாகச் செல்வது கண்ணுக்குப்படவில்லை. பெண்களும் ஆண்களுமாகச் செல்கிறார்கள், அல்லது ஜோடிகளாக.

நம்மூரிலும் நவீன ஆடைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. ஷார்ட்ஸ் போடுவதுகூட. ஆனால் தனக்கேயான தனித்த தலையலங்காரம், ஆடைமுறை என்னும் வழக்கம் இன்னும் உருவாகவில்லை. இங்கே இந்த வட்டாரத்தில் அதை அதிகமாகப் பார்க்கமுடிகிறது. நான் இன்று மதிய உணவு உண்ட விடுதியில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வகை தலைமுடி. ஒவ்வொரு வகையான ஆடை. ஒரு பெண் இளநீலநிறத்தில் நுனி சாயம் செய்யப்பட்ட சுருள்முடி கொண்டிருந்தாள். அவள் தலையில் ஏதோ பிளாஸ்டிக் விக் அணிந்திருப்பதாகவே எண்ணினேன்.

வாய்நோக்கும் கலைக்கு இணையானது பராக்கு பார்ப்பது. அந்த இரண்டாவது கலை வழியாக பொதுவாக நகர் பற்றி அறிந்துகொண்டவை இவை. நகர் பெரும்பாலும் தூய்மையாக உள்ளது, ஆனால் நகர் முழுக்கச் சுற்றி ஓடும் ஓடைகளும் கடலின் பின்நீர்ப் பரப்பும் மலினமாகிவிட்டிருக்கின்றன. ஆகவே கொசு மிக அதிகம். அடுக்கு மாடி வீடுகள் முளைத்துக்கொண்டே உள்ளன. பெரும்பாலானவை ஆடம்பரமான வீடுகள். தனிப்பட்ட வில்லாக்களும் ஏராளம். பொதுவாக எர்ணாகுளம் ஓர் அமெரிக்க நகரத்தின் செல்வச்செழிப்பைக் காட்டுகிறது.

பெரும்பாலும் ஓர் ஓய்வான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என நினைக்கிறேன். வீடுகளில் சமையல் உண்டா என்பதே சந்தேகமாக உள்ளது. வீட்டுச்சமையலை உத்தரவுக்கேற்ப கொண்டுசென்று கொடுக்கும் நூற்றுக்கணக்கான சிறிய அமைப்புகளின் விளம்பரங்கள். வீடுகளை மூன்றுநாட்களுக்கு ஒருமுறை வந்து நவீனக்கருவிகளுடன் தூய்மைசெய்து கொடுக்கிறார்கள். தோட்டம் சீரமைப்பது உட்பட எல்லா வீட்டுவேலைகளையும் ஏஜென்ஸிக்கள் செய்கின்றன. என் அறையை ஒரு பெண்மணி 20 நிமிடத்தில் தூய்மை செய்தார். அதற்கான கருவிகள் எல்லாமே அவளே கொண்டுவந்திருந்தாள். வெளியே அவள் வந்த சிறிய கார் நின்றது. ஓர் அறைக்கு நூறு ரூபாய் கூலி. அப்பகுதியிலேயே பதினேழு அறை தூய்மைசெய்யவேண்டும். ஒரு நாளுக்கு இரண்டாயிரம் வரை சம்பாதிக்கிறாராம்.

எங்கு பார்த்தாலும் பேக்கரிகள். இங்கே ரொட்டி, கேக் சாப்பிடுவது அதிகம். பிஸா, பர்கர் கடைகளும் அதிகம். மருந்துக்கடைகள் எங்கு காணினும். மால்கள்தான் பெருகுகின்றனவே ஒழிய சிறுவணிகர்களின் கடைகள் குறைந்து வருகின்றன. சாயங்காலங்களில் அமர்ந்து பேச உகந்த காபி பார்கள், ரெஸ்டாரெண்டுகள் ஏராளமானவை உள்ளன. மிகச் செலவேறிய விடுதிகளில் அழகான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். விசித்திரமான ‘தீம்’ கொண்ட விடுதிகள். கப்பல் போல கட்டப்பட்ட ஒரு உணவகத்தில் காபி குடித்தேன். அங்கே சாதாரணமாக இளம்பெண்களும் பையன்களும் அமர்ந்து காபி சாப்பிடுகிறார்கள்- ஒரு காபி நாநூறு ரூபாய். எங்கோ எப்படியோ பண ஓட்டம் இருக்கிறதென நினைக்கிறேன். எர்ணாகுளம் வட்டாரம் ஏற்றுமதிக்கு அப்பால் துபாய் வணிகம் மற்றும் அமெரிக்க ஊழியர்கள் அனுப்பும் பணத்தால் வாழ்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த நாட்களில் எதையும் குறிப்பாகப் பார்க்கக்கூடாது, குறிப்பாக புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். சும்மா செல்போனை தூக்கி கண்டபடி படம் எடுத்தேன். சட்டகம் கூட முக்கியமில்லை. சிக்குவது என்னவோ அது பெரிய ஒரு யதார்த்தத்தின் ஒரு துளி. இங்கே நான் இருக்கும் நாலைந்து நாட்கள் இங்கு நிகழும் வாழ்க்கைப்பெருக்கின் சிறு துணுக்கு என்பதுபோல. ஆனால் இந்த வெற்றுப்பார்வையிலேயே எவ்வளவு அவதானங்கள். உதாரணமாக, கேரளத்தில் வெற்றிலைபோடும் பழக்கம் அனேகமாக மறைந்துவிட்டிருக்கிறது. “முறுக்கான்கடை”களே கண்ணுக்குப் படவில்லை. வேட்டி கட்டியவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், வேட்டியை டப்பாக்கட்டு கட்டிக்கொண்டு அலையும் இளைஞர்களை இருபதாண்டுகளுக்கு முன்புகூட பார்க்கமுடிந்தது.

உணவுப்பழக்கங்களிலும் மாறுதல். புட்டு- கடலைக்கறி, பழம்பொரி எல்லாம் கிடைக்கின்றனதான். ஆனால் எங்கும் பர்கர், பிஸா ஓங்கியிருக்கிறது.பிரெஞ்சு ஃப்ரைஸ் தின்றுகொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் இங்கே பாதிப்பேர் ‘காலிச்சாயா’ அடிப்பார்கள். இப்போது ஒரே ஒருவர்தான் அப்படி குடிப்பதைப் பார்த்தேன்.

எர்ணாகுளம் மரைன்டிரைவ் சென்றிருந்தேன். காதலர்கள், குடும்பங்கள். ஏராளமான தெலுங்கு சுற்றுலாப்பயணிகள். கடலோரமாக இரு மூன்று கிலோமீட்டருக்கு பெரிய நடைபாதை ஒன்றை உருவாக்கி அதை ஒரு நகர்மையமாகவும் வணிகமையமாகவும் ஆக்கியிருக்கின்றனர். 2016ல் அங்கே ஒரு சினிமாவுக்காக ஜோளி என்னும் தயாரிப்பாளரின் 18 ஆவது மாடி பகுப்புவீட்டில் குடியிருந்தேன். கண்ணாடிச்சுவருக்கு அப்பால் மேற்குப்பருவமழை பெருகி வருவதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே தாஜ் ஓட்டலிலும் சிலநாட்கள் தங்கியிருக்கிறேன்.

தீனி ஒரு பெருங்கொண்டாட்டமாக இங்கே உள்ளது. மந்தி என ஒரு வகை உணவு. அரபு உணவு. அரேபியாவில் அரிசியையும் இறைச்சியையும் கலந்து தோலில் பொதிந்து வெயிலில் கொதிக்கும் மணலில் புதைத்து மேலே கொஞ்சம் தீயும் போடுவார்கள். ஊனின் நெய்யில் அரிசி வெந்துவிடும், அதுதான் மந்தி. மந்தி என்றாலே குழிதான். இங்கே குழிமந்தி என்கிறார்கள். காரமில்லாத, வாசனைப்பொருள் இல்லாத வெறும்பிரியாணி என்று சொல்லலாம். எல்லா உணவையும் கலந்த சட்டிச்சோறு, மரவள்ளிக்கிழங்கு பிரியாணி, விதவிதமான போர்ச்சுக்கல் ஸ்ட்யூ வகைகள், ஆட்டுக்குடலுக்குள் ஆட்டுக்கறியை வைத்து சுட்டு எடுக்கும் ஒரு விசித்திரப்பொருள்…

சமுத்ரா என்னும் ஓட்டலில் சாப்பிட்டேன். அங்கே சமுத்ர சத்யா என்னும் விருந்து. 18 வகை மீன்களால் ஆனது. மீன்குழம்புகள். மீன் ‘பொள்ளிச்சது’ வகைகள். பொரித்த மீன்கள். மீன் பொரியல், மீன் கூட்டு, மீன் துவையல், மீன் ஊறுகாய்… மோரில் மீன் இல்லை.

ஒவ்வொருநாளும் காலையில் ஒரு சுற்று. சாயங்காலமும் ஒரு சுற்று சுற்றி வந்தால் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்த நிறைவு. இங்கே ஒரு நான்குநாள் வாழ்ந்துவிட்டு நாகர்கோயிலுக்கு போனால் பார்வதிபுரம் கருப்பட்டிக் காபியின் சுவை மாறியிருக்குமா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:35

எம். கன்னியப்பன்

தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). ஐந்தாவது தலைமுறைக் கலைஞர்.

எம். கன்னியப்பன் எம். கன்னியப்பன் எம். கன்னியப்பன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:34

கவிதைகள் இதழ், ஏப்ரல்

அன்புள்ள ஜெ,

ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக உலக இலக்கியம் சார்ந்த போன கட்டுரையின் தொடர்ச்சியாக ‘கவிதை – இந்திய, உலக இலக்கிய போக்குகள் – 2’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ‘கவிதையில் சொல்லாட்சிகள்’ என்ற தலைப்பில் மதார் ஓசூர் கவிதை முகாமில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமும், கமலதேவி இசை கவிதை குறித்து எழுதிய ரசனை குறிப்பும், தேவி.க.பொன்முகலி கவிதை குறித்து எழுதிய ரசனை குறிப்பும், பிரமிளின் ‘வடக்குவாசல்’ கவிதையும் இடம்பெற்றுள்ளன.

https://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

(மதார், நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:31

சாமானியனும் தத்துவக்கேள்வியும்

இயல்பாக தத்துவ கேள்விகள் பெரிதாக எழாத ஒருவனுக்கு தத்துவ அறிமுகம் கிடைக்கும் எனில், அதன் பிறகு அந்த அறிமுகத்தினால் அவனுக்கு தத்துவத்தின் மீது ஆர்வம் உருவாக்கி அவன் தத்துவ மாணவனாக வாய்ப்புள்ளதா? 

சாமானியனும் தத்துவக்கேள்வியும்

 

Today, there are many questions about religion in our society. We also hear all of them from the mouths of politicians and repeat them exactly as they are. Today, the situation of respect exists only when even those who have religious faith speak in public, disparaging and slandering religion.

Religion and Wisdom
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:30

April 15, 2025

சென்றகால ஆண்களும் பெண்களும்

 

[image error]

சென்ற 23 ஆகஸ்ட் 2024 அன்று பி.எம்.கண்ணன் எழுதிய நாவல்கள் ஒட்டுமொத்தமாக அல்லையன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. அவ்விழாவில் சிவசங்கரி , திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்கள் கலந்துகொண்டனர். அதற்கு முன் நான் பி.எம்.கண்ணனை வாசித்த ஒருவரைக்கூடச் சந்தித்ததில்லை என எழுதியிருந்தேன். (பி.எம்.கண்ணன் பதிவு) பி.எம்.கண்ணனின் கதைகள் 1950 -60களில் தொடர்ச்சியாக குமுதம், கல்கி இதழ்களில் வெளிவந்தன. அக்காலகட்டத்துப் பெண்களுக்கு மிகப்பிடித்தமானவை அவை.

கணவனால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுதல், கைவிடப்படுதல், கொடுமைக்காளாதல் ஆகியவை ஓங்கி நின்றிருந்த காலகட்டம் அது. பெண்கள் தங்கள் பொறுமையால், பண்புகளால், போராட்டகுணத்தால் அந்தக் காலகட்டத்தை வென்று மீண்டனர். அந்த காலகட்டத்தின் சித்திரங்களை பி.எம். கண்ணன் எழுதினார். பெரும்பாலும் பெண்களின் தரப்பில் இருந்து.  அவருடைய பல நாவல்கள் அக்காலகட்டத்தில் பெரும்புகழ்பெற்றிருந்தன.

பி.எம்.கண்ணன் ஓர் ஆசிரியராக மறைந்துவிட்டதைப் பற்றி வியக்க அல்லது வருந்த ஒன்றுமில்லை. அவருடைய கதைகள் பொதுவாசிப்புக்குரியவை, வணிக இதழ்களில் வெளியானவை. அத்தகைய ஆக்கங்களுக்கு சமகாலத்தன்மை உண்டு, காலம்கடந்த தன்மை இல்லை. அவை வாசகர்களை உத்தேசித்தே எழுதப்படுபவை, பின்னூட்டங்கள் வழியாகவே அவற்றின் உணர்ச்சிகளும், கதையோட்டமும் எல்லாம் முடிவாகின்றன. அதாவது வாசகர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் படைப்புகள் அவை, கதையாசிரியன் அவர்களின் தேவைக்கேற்ப அவற்றை எழுதிக்கொடுப்பவன் மட்டுமே.

அந்த வகையான எழுத்தின் பின் ஓர் ‘ஆசிரிய ஆளுமை’ இல்லை. ஆகவே வாசகர்கள் அந்தப் பெயரை ஒரு ‘பிராண்ட்’ என்ற அளவிலேயே பார்க்கிறார்கள். அந்த எழுத்தாளரின் தனிச்சிந்தனை என்ன, அதை நோக்கி வந்த அவரது வாழ்க்கை என்ன, அவருடைய உணர்வுகளும் கனவுகளும் என்ன என்றெல்லாம் அவர்கள் நோக்குவதில்லை. புதுமைப்பித்தன் படைப்புகள் வழியாக நாம் செல்வது அந்த எழுத்தாளுமை நோக்கி, ஆகவே அவரது வாழ்க்கை நமக்கு முக்கியம். பி.எம்.கண்ணனின் எழுத்துக்கள் வழியாக நாம் அவரை நோக்கிச் செல்வதில்லை. ஆகவே அவருடைய ஆளுமை மறக்கப்படுகிறது.

பி.எம்.கண்ணன் 1969 வாக்கில் எழுத்தை நிறுத்திவிட்டார். அரைநூற்றாண்டாக அவர் படைப்புகள் வெளியாகவுமில்லை. அடுத்தடுத்த காலகட்டங்கள் வந்தன, அவற்றை எழுதும் எழுத்தாளர்கள் வந்தனர், அவர்களுக்கான வாசகர்கள் உருவாயினர்.என்னைப்போல 1960 களில் பிறந்தவர்களுக்கே கூட பி.எம்.கண்ணனின்  கதைமாந்தரின் பிரச்சினைகள் அபத்தமாகத் தெரியும்.

உதாரணமாக ஒரு கதையில் ஒரு பெண் திருமணமானதுமே ஒரு சாமியாரை ஆற்றங்கரையில் சந்திக்கிறாள். அவர் அவள் கழுத்திலுள்ள தாலியை ஒரு பாம்பு ஆக காண்கிறார். அவள் கணவனுடன் உறவுகொண்டால் அவன் இறந்துவிடுவான் என்கிறார். ஆனால் அதை அவனிடமும் வேறு எவரிடமும் சொல்லக்கூடாது என எச்சரிக்கிறார். அவள் அதை உறுதியாகக் கடைப்பிடிக்க கணவன் அவள்மேல் சந்தேகம்கொண்டு தள்ளிவைக்கிறான். அவள் செத்துவிடுகிறாள்.

பி.எம்.கண்ணனின் இன்பப்புதையல் என் அம்மாவுக்கு பிடித்த தொடர்கதை. கணவனின் மூர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்படும் மனைவியின் கதை அது. அம்மா அதில் தன் வாழ்க்கையின் சில அம்சங்களைக் கண்டிருக்கலாம். இன்று பார்க்கையில் கணவனின் கொடுமைகளை பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும் மனைவியை கண்ணன் புகழ்ந்து, அவளை முன்னுதாரணமாக ஆக்கியிருப்பதாக தோன்றலாம். அவர் ஆசாரவாத, பிற்போக்கு நோக்கை முன்வைப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவர் எழுதியவை வணிக எழுத்துக்கள். அந்த வாசகர்கள் (அதாவது பெரும்பாலும் வாசகிகள்) ஏற்றுக்கொள்ளும்வகையில்தான் அவர் எழுத முடியும். அன்றைய வாசகமனநிலை அப்படி இருந்தது என்பதே அக்கதைகள் வழியாக நாம் ஊகிக்கவேண்டியது.

தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் எண்பதுகளின் இறுதிவரை அத்தகைய பெண்கதாபாத்திரங்களே ஏற்பு பெற்றன என்பதை காணலாம். அதற்கு முன்னரே மீறலை எதிர்ப்பாக முன்வைத்த சிவசங்கரி- வாசந்தி- இந்துமதி தலைமுறை பொதுரசனை வாசிப்பில் நிலைகொண்டுவிட்டது. படித்த பெண்களின் மனநிலை அந்த ‘பொறுமையான கதைநாயகி’ என்னும் அடையாளத்தை தூக்கிவீசிவிட்டது. அந்தக் கதைநாயகி காட்சியூடகத்திற்கு மேலும் இருபதாண்டுகள் கழித்து தொலைக்காட்சித் தொடர்கள் வழியாகவே உருவாகி வந்தாள்.

பி.எம். கண்ணனின் ஒரு கதை இணையவாசிப்புக்கு கிடைக்கிறது. மறுஜன்மம் என் அம்மாவுக்கு ஏன் பி.எம்.கண்ணன் பிடித்தமானவராக இருந்தார் என்பதை அக்கதையைக்கொண்டு இன்னும் கூர்மையாகப் புரிந்துகொள்கிறேன். என் அம்மா தமிழ் ,ஆங்கிலம், மலையாளம் என மூன்றுமொழிகளிலும் இலக்கிய வாசிப்பு உடையவர். திருமணத்திற்கு முன்பு கதைகள் எழுதியவர். ஆனால் மணமான பின் ஒரு வரிகூட எழுதவில்லை. அதே கதைதான் மறுஜன்மம். இசையிலும் இலக்கியத்திலும் தேர்ச்சிகொண்ட பெண். கணவனுக்கும் அது பிடித்திருக்கிறது. ஆனால் மாமியாருக்குப் பிடிக்கவில்லை. ஊராருக்கு இளக்காரம். அவள் மணவாழ்க்கையே முடியும் நிலையில் மறுபிறப்பு எடுக்கிறாள்.

அது அடங்கிப்போதலா அல்லது ஒருவகை மௌனமான எதிர்ப்பா? அந்த இடத்தில்தான் அக்கதை நுணுக்கமான ஒன்றாகிறது. ஒரு காலகட்டத்தின் மனநிலையையே பிரதிநிதித்துவம் செய்வதாக ஆகிறது.

பி. எம். கண்ணன் – தமிழ் விக்கி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 11:35

எஸ்.எம். கமால்

தமிழக எழுத்தாளர். வரலாற்றாய்வாளர். பதிப்பாளர். இதழாளர். ஆய்வு நோக்கில் பல நூல்களை எழுதினார். தமிழக அரசில் வட்டாட்சியராகப் பணியாற்றினார். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். தனது வரலாற்றாய்வு முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்

எஸ்.எம். கமால் எஸ்.எம். கமால் எஸ்.எம். கமால் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 11:34

நாம், நமது குழந்தைகள்

நமது குழந்தைகள், நமது பெற்றோர் பறவையும் குழந்தைகளும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன்.

காருக்குள் கருவுற்ற ஒரு கவிதை தருணம் என மனதில் பதிந்த அந்த சில நிமிடங்களை நினைத்து பார்க்கையில் பூரிப்பாய் இருந்தது. காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் அன்றைய தினம் நிகழ்ச்சிகள் முடிந்து மாலை வேலாயுதம், வேணு, ராம், நான் நால்வரும் வேணுவை அவர் தங்கியிருக்கும் இடத்தில் விட்டுவிட்டு காரைக்குடி போவதாக கிளம்பினோம்.

2017 ஆம் ஆண்டு ஊட்டி காவிய முகாமில் வேணுவின் ’கவிதையில் படிமம்’ என்பதற்கு மரப்பிசினால் முடிப்போன எறும்பு பற்றிய விளக்கமும், பாரியின் ரெனே ஹீகுயுதா துள்ளலான சாகச விளையாட்டை பார்க்கையில் நமக்கு பற்றிக்கொள்ளும் அந்த அனுபவத்தை, கவிதையும் அப்படியான அனுபவத்தை தரக்கூடியது என்று சொன்னது மிக பெரிய அறிதலாக இருந்தது. உரைநடை வாசிப்பில் இருக்கும் சௌகரியங்களை கடந்து கவிதையை வாசிக்க உணர ஆவல் கொண்டு அன்றில் இருந்து கவிதைகளை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஏதாவது ஒரு கவிதை நல்ல அனுபவத்தை உணரச்செய்தால் நன்றியோடு வேணுவையும் பாரியையும் நினைத்துக்கொள்வேன்.

அன்று வேணுவிடம் ராம் எனக்கு ஒரு கவிதை தோனுது என்று சொல்ல எனக்கு பகீர் என்று இருந்தது. காரில் திண்டுக்கல் வரை சென்ற போது, அவரது கப்பல் பணி பற்றிய அனுபவங்களை தொடங்கி அப்படியே கவிதை பக்கம் பேச்சு மாறிய கனத்தில் நடந்த விபரீதம். அப்படியா எங்க சொல்லு என்றார் வேணு

அன்று மாலை தங்குமிடம் சுற்றி பறவைகள் பார்த்த போது தவிட்டுக்குருவிகளில் ஒன்றை அவன் அசையாமல் பின்னால் கைகட்டி கவனித்தபடியே நின்றிருந்தான். அவன் அத்தனை அருகில் இருந்தும் பறக்காமல் நிதானமாக இருந்தது பறவை, நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் பின் அதை படம் எடுக்க முயற்சித்த நேரம் அவன் இன்னும் சற்று முன் நகர பறவை அங்கிருந்து பறந்து அருகில் இருந்து கிளையில் அமர்ந்தது. இந்த நிகழ்வை அவன் வேணுவிடம் சொல்லி ‘அந்த பறவை ஏன் பறந்தது? அப்போது அந்த பூ என்ன நினைத்திருக்கும்?’ என்று முடித்து வைத்தான். அதற்கு வேணு அவரின் வசீகர குரலில் கடைசி வரி நல்லாயிருக்கே ராம் இன்னொரு முறை சொல்லு என்றார்.

நான் நினைத்துக்கொண்டேன் நமக்கும் கவிதைக்கும் இன்னும் தூரம் என்று, சற்று பின் நகர்ந்து அமைதியாகிவிட்டேன். வேணு தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டோம் இருந்த போதும் ஓரமாக வண்டியை நிறுத்தி பேச்சு தொடர்ந்தது, மீண்டும் சொல்லிப் பார்ப்போம் ராம் என்று சில சொற்கள் மாற்றி பின் வாக்கியத்தை நேர்த்தி செய்து பார்த்தார்கள். அங்கே கவித்துவமாய் ஏதோ நடந்து கொண்டிருந்தது. நேரம் ஆனதால் அவர் தொடர்பு எண்களை வாங்கிக்கொண்டு ராமிடம் ஊக்கப்படுத்தி தொடர்ந்து எழுது எனக்கு அனுப்பு பேசுவோம் என்று சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கி கொண்டார்.

இரவு நேரத்தில் கார் ஓட்டுவது எதிர் வெளிச்சத்தில் எனக்கு சிரமமாக இருந்ததால் நண்பர் வேலாயுதம் தான் காரை ஓட்டினார். நடுசாம நேரத்தில் திருப்பத்தூர் வந்தோம் வேல் இறங்கிக் கொண்டார். மெதுவாக காரை உருட்டிக்கொண்டு வந்தேன் நான் தூங்காமல் இருக்க ராம் பேசிக்கொண்டு வந்தான். நாங்கள் காரைக்குடி வந்து சேருவதற்குள் வேணுவின் செய்தி வந்தது ’நான் அந்த பறவையை நோக்கி போனேன்..’ ராம் சிதம்பரம் என்று பெயருடன். ராம் படு துள்ளலுடன் வீட்டிற்குள் சென்றான்.

அடுத்த அடுத்த வாரங்களில் மாலை நேர வகுப்புகளுக்கு போய் வரும் வழியில் இருக்கும் குளத்தில் பார்த்த தாழைக்கோழியின் செயல்களை பற்றி தான் வேணுவிடம் சொல்லி எழுதினான். இது ஒரு புறம் என்றால், அங்கு பார்த்ததை இணையத்தில் பதிந்து அதை விஷ்ணுபுர பறவைகள் வட்டத்திற்கு பகிர்ந்து அதில் பிரிடிங் கோடு (Breeding code) போன்ற கூடுதல் தகவல்களை சேர்த்து விஜயை பீதி அடைய செய்தான், பின் விஜய் ராமிடம் பேசி அவனின் ஆர்வத்திற்கு மடை போட்டார்.

தமிழக அரசு முன்னெடுத்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட இளம் வயது ஆர்வலர் என்று ராமை சிவகங்கை திருப்பத்தூர் சரக வனத்துறை அன்பளிப்பு அளித்து ஊக்கப்படுத்தியது. அதனை தொடர்ந்து அவனுக்கு வாழ்த்துகள் அனுப்பியது தொடங்கி கப்பல்காரன் ஷாகுல் அவர்களுடனும் கடல் பறவைகள் பற்றி தினமும் ஒரு உரையாடல் நடக்கிறது, நேரம் கிடைக்கும் போது ஷாகுல் வாட்ஸ்ஆப்பில் அழைத்துப் பேசுகிறார். கடல் பறவைகள் தொடங்கி, கடல் பருவ நிலையில் பயணம், கடல் கொந்தளிப்பு என்று பேசி பின் கடல் கொள்ளையர்கள் பற்றிய கேட்டுக்கொண்டிருக்கிறான். அவர்களின் கப்பல்காரன் பதிவை இரவில் வாசித்துக் காட்டுகிறேன்.

முதன் முதலில் நண்பர் வெங்கடேஷ் அவர்களின் கடிதமும் விஜயின் உரையாடலுடன் தான் பறவைகள் குறித்து நான் அவனிடம் சொன்னது பிறகு அருகில் இருக்கும் சிறிய சரணாலயத்திற்கு சென்று வந்தது அவ்வளவே. பறவை பார்ப்பதும் அதன் உலகமும் ராமிற்கு இத்தனை விருப்பமானது என்று நித்தயவனம் வகுப்பும், ஆசிரியர்கள் விஜயும் ஈஸ்வரமூர்த்தியும் அவர்கள் வழிகாட்டலும் ஒருங்கிணைப்பும் அமைந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் மற்றும் தமிழக பறவை ஆர்வலர்கள் இந்த இரண்டு குழுவிலும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வரை செலவிடுகிறான். நேரம் இருக்கையில் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் எதன் மீதாவது ஒரு ஆர்வம் அவர்கள் நேரத்தை முழுமையாக்கி கொண்டே செல்கிறது. 

இந்த விடுமுறை நாட்களில் அவன் வைத்திருக்கும் திட்டங்களில் பாதி பறவைகள் சார்ந்தது, இதில் குறிப்பாக அவனது ஆசிரியர்கள் இருவரையும் அவர்கள் ஊரில் சென்று சந்தித்து அவர்களுடன் சென்று பறவை பார்க்க வேண்டும் மற்றும் ஈரோடு எலத்தூர் குளத்தில் பறவைகள் பார்ப்பது; இந்த இடம் காந்திய நடைபயணம் சென்ற போது அனு சொன்னது.

பள்ளிக்கு சென்று வந்த பிறகு கிடைக்கும் மற்ற நேரங்களில் விளையாட்டு பொழுதுபோக்கு என்று சில வகுப்புகளில் நுழைந்து அதில் பாதியை உதரி மீதியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் அவர்களுக்கு தேவையானதை எப்படியோ பழகிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு சில அறிதலுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் அதுவே ஆரோக்கியமான பழக்கமாக இருக்கும். பனிமனிதன், உடையாள், யானை டாக்டர், நேஷனல் ஜியாகிரபி இதழ் என்று சூழல் சார்ந்த வாசிப்பில் இருந்தும் பறவைகள் வகுப்பு வழியாகவும் தனக்கான விருப்பமாக உயிர் சூழலியிலை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறான்.

தங்களுக்கான தேர்வுகளை தாங்களே செய்கிற போது அதனூடாகவே அதற்கான பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுகிறார்கள். பொறுப்புகளை உணர்வது வழியாக தான் கற்றுக்கொள்ள முடியும் என்பது என் எண்ணம். நாளை எப்படியான சூழல் இருந்தாலும் அங்கே தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கு வழி இருக்கிறது, சவால்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை சமாளிப்பது அவரவர் திறமை! அதை விருப்பத்தோடு செய்கையில் ஒருபோதும் கஷ்டமாக தெரிவதில்லை!

நான் நம்பும் சில தாத்பரியங்களில் ‘மாதா பிதா குரு தெய்வம்’ ஒன்று, தாய் தந்தையை அடையாளம் காட்டுகிறார், தந்தை குருவை அடையாளம் காட்டுகிறார் குருவே பரம்பொருள் ஆன்மீக விடுதலைக்கு வழி காட்டுகிறார். 

இன்றைய சூழலில் குல குரு முறையும் குல தொழில் முறையும் அருகிவிட்ட அமைப்பு என்ற போதிலும் மிக பெரிய வெளி இருக்கிறது அதில் நமக்கான தேர்வும் செயலும் எது என்று கண்டடைய முறையான அறிதல் அவசியமாக இருக்கிறது. திருவிழாவில் குழந்தைகளை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு சுற்றத்தை வேடிக்கை காட்டுவது போல வாழ்க்கைக்கும் தேவையான பல தடையங்களை அறிதல்களுக்கான வழிகளை காட்டவேண்டும். விஷ்ணுபுரம் நண்பர்களின் அரவணைப்பு என்பது குழந்தைகளுக்கு அறிதலின் அச்சாரம்.

இறுகிப்போன பண்பாட்டில் ஒழுங்கு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்ளாமல் அதனையே ஊக்க சக்தியாக கொண்டு ஒழுங்கற்ற ஒழுங்கிற்கு விடுபடவேண்டும். எதை செய்தாலும் நன்றாக செய்ய வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட கல்வி அங்கிருந்து விருப்பமானதை செய்கையில் இயல்பாகவே நன்றாக அமைந்துவிடும் என்ற நகர்வுக்கு முயற்சிக்கிறேன்.

முன்னோர்கள், பெற்றவர்கள், குரு, பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் நம்மை காக்கும் நமக்கு வழிகாட்டும். அப்படி அமைவது பெரிய பேறு.

நன்றி

நாராயணன் மெய்யப்பன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 11:31

ஞாநி, எஸ்.வி.வி. கடிதம்

அன்புள்ள ஜெ

ஞாநி என் பிரியத்துக்குரியவர். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்துள்ளது. இன்று தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தில் அவர் பற்றிய பதிவைப் படித்தேன். ஒரு முழு வாழ்க்கையையே சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். இத்தனை முழுமையான பதிவு ஞாநி போன்று எந்த தனிப்பட்ட லாப நோக்கமும் இல்லாமல் பாடுபட்ட ஓர் அறிவுஜீவிக்கு அளிக்கப்படும் பெரிய கௌரவம். இதற்குத்தான் இத்தகைய கலைக்களஞ்சியங்களை இலக்கியவாதிகள் நடத்தவேண்டும் என்கிறோம்

நன்றி

கிருஷ்ணசாமி மகாதேவன்

ஞாநி

அன்புள்ள ஜெ

நான் மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.வி. அவருடைய கதைகளை இளமைக்காலத்தில் வாசித்தவன். உங்கள் தளத்தில் அவரைப்பற்றிய குறிப்பை பார்த்துவிட்டு தமிழ்விக்கி பதிவையும் பார்த்தேன். விரிவான முழுமையான பதிவு. நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன்துமிலன்நாடோடி என பலருக்கும் முன்னோடி எஸ்.வி.வி. தான் என்னும் மதிப்பீடும் கச்சிதமான ஒன்று.

தமிழ்விக்கி போன்ற முயற்சிகள் இல்லை என்றால் நம் மரபே அப்படியே மறைந்துபோய்விட்டிருக்கும்.

எம்.சந்தானகிருஷ்ணன்

எஸ்.வி.வி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 11:31

கஸல், கவிதை, மலை- ஜீவா சக்தி

கசல் பாடல் ஒன்றில்,  கடலின் ஆழம் அறிவேன், நீயோ அதன் ஒவ்வொரு துளியிலும் ஆழம் காட்டுகிறாய் என்று  காதலியிடம்  தன்வலி சொல்வதாக அமைந்த  தேன் வரிகள் !  தேன் குடுவையின் சுவையை ஒரு துளியில் அறியக்கூடும். கடலின் ஆழத்தை அதன் ஒரு துளியில் அறிய முடியுமா? 

கஸல், கவிதை, மலை- ஜீவா சக்தி

I read what you wrote about Kamal. Kamal Haasan’s unwavering academic drive is an example for everyone. In India, seventy is the age when we decide that life is over. People around us would tell us, “You are old! You should rest.” If I had attended such training, my wife and daughters might have remarked, “Is it necessary at your age?” I am 3 years younger than Kamal Haasan!

Kamal Hasan, A letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.