Jeyamohan's Blog, page 127

April 18, 2025

ஒளியின் கூர்மை முள்ளை எடுக்குமா?

2008 அமெரிக்க பொருளாதார சிக்கல் நாமறிந்த ஒன்று. வீட்டுக்கடன் போன்ற நிலையான கடன்களின் பத்திரங்களை சேர்த்து ஒரு முதலீட்டு அலகாக மாற்றி விற்க ஆரம்பித்த அமெரிக்க நிதிச்சந்தை பின்னர் அந்த அலகுகளை சேர்த்து இன்னொரு அலகாக – அவற்றைச் சேர்த்து இன்னொரு அலகாக மாற்றி விற்க ஆரம்பித்தது. மறுபக்கம் இந்த குமிழியில் பங்கெடுக்க வரையின்றி வீட்டுக்கடன் வழங்கப்பட்டது. அந்த கடன் மிகச் சில நாட்களுக்குள் இந்த பலகட்ட கடன் முதலீட்டு அலகில் வந்து சேரும். இனி இந்த கடன் முதலீட்டு அலகிற்கு எதிரான காப்பீடும் – ஒரு வேளை சம்மந்தப்பட்ட கடன்கள் திரும்பக் கட்டப்படாமல் வாராக் கடனாக மாறினால் முதலீட்டாளரின் பாதுகாப்பிற்காக‌ எடுக்கப்படும் காப்பீடு – அதுவும் ஒரு அலகாக மாறி பங்குச்சந்தையில் விற்கப்பட‌ ஆரம்பித்து. இந்த இரு அலகுகளும் முழு வீச்சில் வாங்கியும் விற்கப்பட்டும் ஊக வணிகத்தில் முழுவதுமாக இழுக்கப்பட்டு பெரும் சுழல் என சுழன்று பின்னர் நம்பமுடியாத பேரிழப்புடன் உலகை உலுக்கியது. சில நூறு பேரின் பேராசை பலரை தங்களது ஓய்வுக்கால சேமிப்பை முற்றாக இழந்து தெருவிற்கு வர வைத்தது.

நான் 2007ல் பட்டப் படிப்பு முடித்தவுடனே பெங்களுரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்திருந்த புதிய பதினைந்து மாடி கட்டிடத்தில் எங்களது திட்ட அலுவலகம் இருந்தது. இனிமையான காலநிலை, கையில் புரளும் பணம், புதிய ஊரில் புதிய நபர்களை சந்திப்பது, பெரிய நிறுவனங்களின் பணிகளில் பங்கெடுப்பது, முக்கியமாக சொந்த ஊரில் கிடைக்கும் மரியாதை என ஒரு போதையுடன் திரிந்து கொண்டிருந்தோம். 

வட்ட வடிவிலான கட்டடம் அது. தரைத்தளத்தின் மையத்திற்கு வந்து மேலே பார்த்தால் வரிசையாக பதினைந்து வளையங்களும் இறுதியாக அதை மூடி வைத்திருக்கும் ஒரு கூரையும் தெரியும். முழு கட்டிடமும் குளிரூட்டப்பட்டிருக்கும்.

ஒரு ஆண்டுக்குள் அமெரிக்க பொருளாதார சிக்கலின் புயல் இங்கும் வீசத் தொடங்கியது. கொத்து கொத்தாக ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள். அதற்கு நிறுவனம் சொன்ன காரணம், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பயன்மதிப்பை ‘ நிரூபிக்க‘வில்லை என்பது. அதாவது ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வேலை செய்யும் நபர் திடீரென ஒரு மாதத்திற்குள் தன்னை நிரூபிக்கக் கோரப்படுவார். இயல்பாக அம்‌மாத இறுதியில் வீட்டிற்கு அனுப்பப்படுவார். தங்களது காலாண்டு லாப விகிதம் குறையக் கூடாது என்பதற்காக நிறுவனம் கையாண்ட அணுகுமுறை இது. 

எனது  திட்ட வேலை அரபு நாடுகளைச் சார்ந்த இரவுப்பணி என்பதாலும், மிகக் குறைந்த அனுபவமும் ஊதியமும் வாங்குபவன் என்பதாலும் நான் தப்பித்துக் கொண்டேன்.

சில வாரங்களுக்குப் பிறகு இரவு அலுவலகம் வருகையில் வழக்கமாக பார்ப்பது போல் தரைத் தளத்தில் இருந்து மேலே பார்க்கையில் இரண்டாம் மாடி வளைவில் தீயணைப்புத்துறை பயன்படுத்தும் வலை கட்டப்பட்டிருந்தது.  முதலில் ஒன்றும் புரியவில்லை. வேலை நீக்கம் செய்யப்பட்ட சிலர் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து நேர் தலைகீழாக குதித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே , மிகுந்த படைப்பூக்கத்துடன் நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது. அதைவிட முக்கியமாக இறந்தவர் குறித்த எந்த தகவலும் யாருக்கும் எதுவும் தெரியாது. அடிக்கடி காவல்துறை வாகனம் வரும் – சிறிது நேரத்தில் சென்று விடும். செய்தித்தாள்களில் எந்த செய்தியும் வராது.  

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இது நடந்தது. பிறகு நிலைமை பழையபடி திரும்பியது. ஆனால் இறந்தவர்கள் மற்றும் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள்?  நிதிச் சூதாடிகளின் தவறுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவர்கள் தன்னை நிரூபிக்கச் சொல்லி பலிகொடுக்கப்பட்டார்கள். உண்மையான குற்றவாளிகள் அமைதியாக எதுவும் தெரியாதது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அதே அதிகாரத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  .

 மேற்கில் சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இரு உலகப் போர்களில் கொல்லப்பட்டனர். கொன்றவர்களின் வாரிசுகள் சிறு கீறல் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இதைப் பார்க்கிறோம். பஞ்சத்திலும் விடுதலைப் போரிலும் அப்பாவிகளும் லட்சியவாதிகளும் பலர் வாழ்வை இழந்தனர். புல்லுருவிகளும் துரோகிகளும் கயவர்களும் சின்ன சிராய்ப்பின்றி மேன்மேலும் தலைமுறைகளாக வளர்ந்து கொண்டே செல்கின்றனர்.

அறம், நீதி, தெய்வம், ஒழுக்கம் என்றெல்லாம் சொல்வதன் உள்ளீடு என்ன என்பதே பெரும் வதையை அளிக்கும் கேள்வியாக இருக்கிறது. தெய்வம் நின்று கொல்லும் என்றால் யாரைக் கொல்லும்? விஷ ஐந்துக்களை விட்டு விட்டு வாயில்லா பூச்சிகளை அந்த தெய்வம் நசுக்கி விளையாடுவதைக் காண்கிறோம். பிறகு தர்மம் என்பது தான் என்ன? 

இருளின் பேருருவ பேரலை சித்தத்தை உறைய வைத்து அமர வைத்து விடுகிறது. இனி அடுத்தது என்ன என்னும் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

இமைக்கணத்தில் கர்ணனுக்கு இளைய யாதவன் செய்யும் உபதேசங்கள் இந்த சிக்கலுக்கு உரியனவாகத் தோன்றுகிறது‌‌.தனிவெளியின் உண்மைகளை இயல் வெளியில் வைத்து விளையாடுவதே குழப்பங்களுக்கு மிக முக்கியமான காரணம். வகுக்குப்பட்டு ‘அமர வைக்கப்பட்டுள்ள‘ களத்தில் மாயை, முக்தி, நானேயிறை என்று சொல்லி தேடுவதை,

எவ்வளவு கூரியதாக இருந்தாலும் ஒளியினால் காலில் தைத்த முள்ளை அகழ்ந்து எடுக்க முடியாது என்கிறான் யாதவன்.  அடக்கப்பட்டால் எதிர்த்து எழுக என்கிறான்.  வேழங்களை தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதில்லை என்னும் வரியில் நமக்கான செய்தி சொல்லப்பட்டுள்ளது.

சங்கரன் ரவிச்சந்திரன்

https://youtu.be/jimQp2Fp_gM?list=PLoiiNMLQqet1ccRHxIumSd5tCQx1Qo8dr

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887)

மாமனிதர்களின் உருக்கு உலை இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:31

உருது வகுப்புகள், ஞானசேகரன்

உருது இலக்கிய வகுப்பு கற்றலும் கவிதையும் இசையுமாக இருந்தது. மூன்று மொழிகளைக் கொண்டு பிறந்தெழுந்த நவீன மொழி உருது என்று அறிந்ததும் அந்நாள் முழுக்க ஒருவித வியப்பு நீங்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

உருது வகுப்புகள், ஞானசேகரன்

I am listening to the videos you are posting, and I have great insights from those short discourses. They are not lectures; you are talking to us directly from your heart, and we can feel our proximity while listening to your soft and hesitating voice.

Philosophy and religion – A Letter

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:30

April 17, 2025

பெங்களூர் புக்வார்ம் கடையில் இன்று மாலை

19 ஏப்ரல் (சனிக்கிழமை)  மாலையில் பெங்களூரில் BOOKWORM என்னும் புத்தகக்கடையில் என் நூல்களில் கையெழுத்திடுகிறேன்.

நாள்: 19 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம் BOOKWORM Bookstal BPL Building Church Street Bangalore

என் நான்கு ஆங்கில நூல்களும் அங்கே கிடைக்கும்.

மறுநாள் 20 ஏப்ரல் 2025 ஞாயிறு மாலையில் ஆட்டக்கலாட்டா புத்தகக்கடையில் உரையாடல் நிகழ்விலும் நூல்கள் கிடைக்கும்

 

Of Men, Women and Witches – Amazon’ Stories of the True : Translated from the Tamil by Priyamvada THE ABYSS Jeyamohan To buy A Fine Thread and other Stories
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:37

புக்வார்ம் கடையில் ஒரு மாலை

19 ஏப்ரல் (சனிக்கிழமை)  மாலையில் பெங்களூரில் BOOKWORM என்னும் புத்தகக்கடையில் என் நூல்களில் கையெழுத்திடுகிறேன்.

நாள்: 19 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம் BOOKWORM Bookstal BPL Building Church Street Bangalore

என் நான்கு ஆங்கில நூல்களும் அங்கே கிடைக்கும்.

மறுநாள் 20 ஏப்ரல் 2025 ஞாயிறு மாலையில் ஆட்டக்கலாட்டா புத்தகக்கடையில் உரையாடல் நிகழ்விலும் நூல்கள் கிடைக்கும்

 

Of Men, Women and Witches – Amazon’ Stories of the True : Translated from the Tamil by Priyamvada THE ABYSS Jeyamohan To buy A Fine Thread and other Stories
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:37

நாஞ்சில்நாடன் ஆவணப்படம்

எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களின் தேவை 2014ல் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி எங்களுக்கு தோன்றியது. இதுவரை 11 ஆவணப்படங்களை விஷ்ணுபுரம் அமைப்பு உருவாக்கியுள்ளது. நாஞ்சில்நாடன் எங்கள் புரவலர்களில் ஒருவர், அனேகமாக ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றவர் என்பதனால் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவில்லை. அவருக்கு ஓர் ஆவணப்படம் உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. புதுவை இளவேனில் அழகும் ஆழமும் கொண்ட ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி முந்திக்கொண்டிருக்கிறார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:36

ஒரு நினைவு, ஒரு முகம், ஒரு நூல்

சென்ற வாரம் எர்ணாகுளத்தில் இருக்கையில் எனக்கு ஓர் வாட்ஸப்  தொலைபேசி அழைப்பு. ஜெர்மனியில் இருந்து. குரல் எனக்கு தெரியவில்லை. “மாத்ருபூமியில் இருந்து எண்ணை வாங்கினேன்… என் சொந்தக்காரர் ஊரில் மாத்ருபூமி ஏஜெண்ட். அவர் வாங்கித்தந்தார். சுகமா?”

“யார்?” என்றேன்

“நான் –” என்றார்.

பெயரும் நினைவிலெழவில்லை. “மன்னிக்கவும், நான் மறந்துவிட்டேன்….நாம் சந்தித்து நீண்ட நாளாகிவிட்டிருக்கிறது என நினைக்கிறேன்”

“ஆமாம், நாற்பதாண்டுகள். சரியாகச் சொன்னால் 1984 வாக்கில் நாம் சந்தித்தோம்” என்றார். “இடம் சொன்னால் ஞாபகமிருக்கும், சென்னையில்…தொழிலதிபர் – இல்லத்தில். அன்றைக்கு நீங்கள் அரைச்சாமியார்”

என் மூளை உலுக்கிக்கொண்டது. முகம் நேர் முன்னால் என வந்து நின்றது. குரல், கண்களின் ஒளி, சிரிப்பு எல்லாமே…

“ஆ!” என்றேன். “மறுபடியும் பேசவே இல்லை”

“ஆமாம், பேசியும் நாற்பதாண்டுகள் ஆகிறது… 1985 ல் பேசினோம்… அதன்பிறகு பெரிய வாழ்க்கை…நீண்ட காலம். வாழ்க்கையே முடியப்போகிறது…எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்கள் என்று தெரியும். புகழ்பெற்றிருக்கிறீர்கள். எல்லாரும் பேசுகிறார்கள்… அமெரிக்காவிலேயே புத்தகங்கள் வரப்போகின்றன”

“எப்படித்தெரியும்?”

“நான் உங்கள் இணைதளத்தை வாசிப்பேன்”

“அப்படியா?”

“ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசிப்பேன்… இணையம் வந்தபிறகுதான் ஒரு முறை தற்செயலாக உங்களை கண்டுபிடித்தேன். 2017ல்… சும்மா பெயரை அடித்து தேடினேன். வந்துவிட்டது. தொடர்ச்சியாக வாசிக்கிறேன். எல்லாவற்றையும் அல்ல. எனக்கு பெரிய அளவில் இலக்கிய ஆர்வமோ வாசிப்போ இல்லை. கிறிஸ்தவ இலக்கியம் மட்டும்தான் வாசிப்பேன். உங்கள் சிறிய கட்டுரைகளை வாசிப்பேன். பயணக்கட்டுரைகளை வாசிப்பேன்.”

“எங்கே இருக்கிறீர்கள்?”

“ஜெர்மனியில்… நான் 1990 லேயே இங்கே வந்துவிட்டேன். என் முன்னாள் கணவர் இங்கே வேலைபார்த்தார். நானும் இங்கே வந்து நர்ஸாக வேலைபார்த்தேன். இப்போது மகனுடன் இருக்கிறேன். மகனுக்கு முப்பத்த்திரண்டு  வயது. பேரனுக்கு நான்கு வயது. பேத்திக்கு ஒரு வயது. இங்கே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வயதானவர்களுக்கு நல்ல கிராக்கி. ஆகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்”

“கணவர்…”

“அவர் ஜெர்மன் குடிமகன், மலையாளி. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். திருமணமாகி ஆறாண்டுகளிலேயே விவாகரத்து ஆகிவிட்டது. அவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டார், சென்ற ஆண்டு இறந்துவிட்டார். நான் அடக்கநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்…”

“நீங்கள் அதன் பிறகு திருமணம் செய்துகொள்ளவில்லையா?”

“இல்லை…எனக்கு ஆர்வமில்லை. நிறைய பேர் ஆசைப்பட்டார்கள். பிடிக்கவில்லை…”

“ஏன்?”

“நான் பக்தியில் ஈடுபாடுகொண்டுவிட்டேன்… மகனை வளர்த்து ஆளாக்கினேன்”

“அப்படியா?”

“உண்மையைச் சொல்லப்போனால் ஆண்களிடம் மனம் செல்லவில்லை. சலிப்பூட்டுகிறார்கள்… ஆகவேதான்… ஏனென்று உங்களுக்கும் தெரியும்”

“எனக்கா?” என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “உங்களுக்கு என்ன வயது?”

“அறுபத்திரண்டு…” பின்னர் சிரிப்பு. “உங்களை விட ஒரு வயது குறைவு”

“ஓகோ”

“ஜெர்மனியில் நான் இருக்கும் நகர் வழியாகச் சென்றிருக்கிறீர்கள். அதுவும் தெரியும்”

“அப்படியா?”

“ஆமாம், மலையாளத்தில் பாஷாபோஷிணியில் என்னைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். உறவிடங்கள் தொகுதியில் அந்த கதை இருக்கிறது. அது இருபதாண்டுகளாகப் பதிப்பில் உள்ளது. ஆனால் நான் கேள்விப்படவே இல்லை. நான் சொன்னேனே, என் வட்டம் வேறு. முழுக்க முழுக்க கத்தோலிக்க வட்டம் இது… இப்போது இந்த நூலை வாசித்தேன்… ஆங்கிலத்தில் வந்திருப்பதனால்தான் வாசித்தேன். எனக்கு மலையாள எழுத்துக்களே மறந்துவிட்டன. நான் மலையாளம் பேசுவதுகூட மிகக்குறைவு. ஊருக்கு வந்தது மகன் திருமணத்தின்போதுதான்…”

“எது?”

“சங்கீதா புதியேடத்து எழுதியது… இல்லை மொழிபெயர்த்தது… ”

Of Men Women and Witches

“ஆமாம், அந்த புத்தகம் பற்றி உங்கள் இணையதளத்தில்தான் வாசித்தேன். ஒரு பிரதி வாங்கி அனுப்பும்படி அண்ணன் மகனிடம் சொன்னேன். அவன் அனுப்பினான். அதில்தான் என்னைப் பற்றிய கட்டுரையை வாசித்தேன்”

நான் பேசாமலிருந்தேன். என்ன சொல்வது? மன்னிப்பு கோரவேண்டுமா என்ன?

“சங்கீதா நன்றாக மொழிபெயர்த்திருந்தார்”

“ஆம்”

“எளிதாகப் படிக்க முடிந்தது”

“ஆமாம்”

மீண்டும் ஒரு நீண்ட மௌனம்.

“எல்லாம் ஏசுவின் விருப்பம்”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு பேசியபோது அவர் குரல் மாறியிருந்தது. “அன்று நீங்கள் எடுத்த முடிவு ஆழமான ஒன்று. என் அதற்குப்பிந்தைய வாழ்க்கையே சான்று .  அதை தற்செயலாக எடுத்தீர்கள் என நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அது பிழை. அது தற்செயல் அல்ல. பிற்காலத்தில் நீங்கள் என்னவாக ஆகவேண்டுமோ அது உங்களுக்குள் கரு வடிவில் இருந்திருக்கிறது. உங்கள் ஆழ்மனதுக்குத் தெரியும். அந்த மனமே அம்முடிவை எடுத்தது. அதைத்தான் நான் ஏசுவின் ஆணை என்று சொல்கிறேன்” என்றார்.

“ஆம்” என்றேன்.

“நாம் மீண்டும் பேச வாய்ப்பில்லை என நினைக்கிறேன்” என்றார். சிரித்து “அதுதான் ஏசுவின் ஆணை என்று படுகிறது”

நான் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை

“கர்த்தர் உடனிருக்கட்டும்…”

“நன்றி” என்றேன்

போன் தொடர்பு அறுபட்டபோது நான் எண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒன்று தோன்றி எண்ணையும், தொடர்புத்தகவல்களையும் முழுமையாக அழித்தேன்.சில விஷயங்கள் அப்படித்தான், அவை தோன்றி முற்றிலுமென மறைவதே அவற்றுக்கான ஒருமை.

நகக்கீறல்மேல் பனிக்கட்டியை வைத்ததுபோல மெல்லிய ஒரு நிம்மதி. பெருமூச்சுடன் எழுந்து வெளியே நடக்கத் தொடங்கினேன். நல்ல இரவு. கோடைகாலத்தின் விண்மீன்கள் நிறைந்த இருண்ட வானம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:35

டி.ஏ. கோபிநாத ராவ்

இந்திய சிற்பவியல் ஆய்வாளர். இந்தியாவின் சிற்பவியலை மேற்கத்திய ஆய்வு மற்றும் தொகுப்பு முறைமைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, தரவுகளைத் தொகுத்து, கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட இந்து சிற்பவியல் என்னும் நான்கு பாகம் கொண்ட பெருநூலை படைத்தார். இந்தியச் சிற்பவியல் மற்றும் தொன்மவியல் ஆய்வுகளின் முன்னோடிநூலாகவும் வழிகாட்டிநூலாகவும் இது கருதப்படுகிறது.

டி.ஏ. கோபிநாத ராவ் டி.ஏ. கோபிநாத ராவ் டி.ஏ. கோபிநாத ராவ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:34

அ. மார்க்ஸ், ஒரு கடிதம்.

அ. மார்க்ஸின் குரல்

அன்புள்ள ஜெ,

அ.மார்க்ஸ் பற்றிய உங்கள் கட்டுரையைப் பற்றி நண்பர்கள் நடுவே வாட்ஸப் குழும உரையாடல் நடைபெற்றது. ’தீவிர’ நண்பர் ஒருவர் ‘ஜெயமோகன் விலைபோய்விட்டார். மாற்றிப்பேசுகிறார் ’ என்று ஆரம்பித்தார். ‘இப்போது ஜெயமோகன் எதற்கோ அடிபோடுகிறார்’ என்றெல்லாம் சொன்னார்.

‘அந்தக் கட்டுரையின் கீழேயே கடந்த பல ஆண்டுகளில் அவர் அ.மார்ஸ் பற்றி சொன்ன கட்டுரைகள் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் இதே மரியாதையான பார்வைதானே உள்ளது’ என்றேன். ஆனாலும் அதே பேச்சுதான்.

ஒரு மணிநேரம் கழித்து இன்னொரு வாட்ஸப் பேச்சு. அதில் ‘அ.மார்க்ஸ் விலைபோய்விட்டார்’ என ஒருவர் ஆரம்பித்தார். அடச்சை என்று விலகிவிட்டேன்.

இந்த வகையான சூழலில் கருத்துச்செயல்பாடுகளுக்கு என்னதான் மதிப்பு இருக்கமுடியும்? அ.மார்க்ஸின் முகநூலிலேயே அவருக்கு ஆலோசனை சொல்லவும், அவரை அடக்கவும்தான் பலரும் முயல்கிறார்கள். ஓர் அறிஞர் என்ற பார்வையெல்லாம் எவரிடமும் இல்லை. அவரை வாசிப்பவர்கள்கூட அங்கே தென்படவில்லை.

சா.கிருஷ்ணசாமி

அன்புள்ள கிருஷ்ணசாமி,

பொதுவாக இங்கே உள்ளவர்கள் அரசியல் அற்ற நடுத்தவர்க்க அப்பாவிகள். மதத்திற்குள், சாதிக்குள், குடும்பத்திற்குள் வாழ்பவர்கள். அரசுக்கு அடங்கி, போலீஸுக்குப் பயந்து, மனைவிக்கு பணிந்து, மாமியாருக்கு அஞ்சி வாழும் எளிய மக்கள். முகநூல் அவர்கள் டைனோஸர் வடிவம் கொண்டு உலாவும் ஒரு புனைவு வெளி. அங்கே அவர்கள் ஊனுண்ணிகள், அதில் அறிஞர் என்ன சாமானியர் என்ன? கொன்று உண்ணவேண்டியதுதான். பாவம், அதுவாவது அவர்களுக்கு மிஞ்சட்டுமே.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:31

தூலமும் சூட்சுமமும்

The small discussion about Indian philosophy is profound and useful. Generally we deal with Indian philosophy as theology in India. We have no ability to discern philosophy and religion. We cannot discuss philosophy without the inclusion of mysticism, which is essentially a form of silly magic.

Learning Indian philosophy – Real problems

சிதம்பரத்திற்கு நான் வந்திருந்தபோது உங்களைக் காண ஆவலாக இருந்தேன். அப்பா, உங்களைப் பற்றியும், சாம்ராஜ் அவர்களைப் பற்றியும் நிறைய கூறியிருக்கிறார்.  உங்கள் இருவரையும் சந்தித்தப் பிறகு பின் நான் நிறைவடைந்தேன். நீங்கள் சிதம்பரம் கோவிலின் வரலாறை மிகச் சிறப்பாக கூறினீர்கள். கோவில் வழிபாட்டு முறைகளை வகித்தவர்களான வ்யாக்ர பாதர் பதஞ்சலி போன்றோர் பற்றிய வரலாறுகளை நன்று விளக்கினீர்கள். 

தூலமும் சூட்சுமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2025 11:30

April 16, 2025

நாளை பெங்களூரில்…

 

நாளை பெங்களூரில் இருப்பேன். (19 ஏப்ரல் 2025). ஒருநாள் முன்னரே வருகிறேன்.

நாளை மறுநாள் 20 ஏப்ரல் 2025 அன்று பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் என்னுடைய நான்காவது ஆங்கில நூலான Of Men, Women and Witches  பற்றிய ஒரு விவாத நிகழ்வு. மொழிபெயர்ப்பாளர் சங்கீதா புதியேடத்து மற்றும் புக்பிரம்மா அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான சதீஷ் சப்பரிகே ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

19 ஏப்ரல் மாலையில் பெங்களூரில் BOOKWORM என்னும் புத்தகக்கடையில் என் நூல்களில் கையெழுத்திடுகிறேன்.

நாள்: 19 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம் BOOKWORM Bookstal BPL Building Chusrch Street Bangalore

என் நான்கு நூல்களும் அங்கே கிடைக்கும்.

மறுநாள் மாலையில் ஆட்டக்கலாட்டா உரையாடல் நிகழ்விலும் நூல்கள் கிடைக்கும்

 

Of Men, Women and Witches – Amazon’ Stories of the True : Translated from the Tamil by Priyamvada THE ABYSS Jeyamohan To buy A Fine Thread and other Stories
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.