ஒளியின் கூர்மை முள்ளை எடுக்குமா?

2008 அமெரிக்க பொருளாதார சிக்கல் நாமறிந்த ஒன்று. வீட்டுக்கடன் போன்ற நிலையான கடன்களின் பத்திரங்களை சேர்த்து ஒரு முதலீட்டு அலகாக மாற்றி விற்க ஆரம்பித்த அமெரிக்க நிதிச்சந்தை பின்னர் அந்த அலகுகளை சேர்த்து இன்னொரு அலகாக – அவற்றைச் சேர்த்து இன்னொரு அலகாக மாற்றி விற்க ஆரம்பித்தது. மறுபக்கம் இந்த குமிழியில் பங்கெடுக்க வரையின்றி வீட்டுக்கடன் வழங்கப்பட்டது. அந்த கடன் மிகச் சில நாட்களுக்குள் இந்த பலகட்ட கடன் முதலீட்டு அலகில் வந்து சேரும். இனி இந்த கடன் முதலீட்டு அலகிற்கு எதிரான காப்பீடும் – ஒரு வேளை சம்மந்தப்பட்ட கடன்கள் திரும்பக் கட்டப்படாமல் வாராக் கடனாக மாறினால் முதலீட்டாளரின் பாதுகாப்பிற்காக‌ எடுக்கப்படும் காப்பீடு – அதுவும் ஒரு அலகாக மாறி பங்குச்சந்தையில் விற்கப்பட‌ ஆரம்பித்து. இந்த இரு அலகுகளும் முழு வீச்சில் வாங்கியும் விற்கப்பட்டும் ஊக வணிகத்தில் முழுவதுமாக இழுக்கப்பட்டு பெரும் சுழல் என சுழன்று பின்னர் நம்பமுடியாத பேரிழப்புடன் உலகை உலுக்கியது. சில நூறு பேரின் பேராசை பலரை தங்களது ஓய்வுக்கால சேமிப்பை முற்றாக இழந்து தெருவிற்கு வர வைத்தது.

நான் 2007ல் பட்டப் படிப்பு முடித்தவுடனே பெங்களுரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்திருந்த புதிய பதினைந்து மாடி கட்டிடத்தில் எங்களது திட்ட அலுவலகம் இருந்தது. இனிமையான காலநிலை, கையில் புரளும் பணம், புதிய ஊரில் புதிய நபர்களை சந்திப்பது, பெரிய நிறுவனங்களின் பணிகளில் பங்கெடுப்பது, முக்கியமாக சொந்த ஊரில் கிடைக்கும் மரியாதை என ஒரு போதையுடன் திரிந்து கொண்டிருந்தோம். 

வட்ட வடிவிலான கட்டடம் அது. தரைத்தளத்தின் மையத்திற்கு வந்து மேலே பார்த்தால் வரிசையாக பதினைந்து வளையங்களும் இறுதியாக அதை மூடி வைத்திருக்கும் ஒரு கூரையும் தெரியும். முழு கட்டிடமும் குளிரூட்டப்பட்டிருக்கும்.

ஒரு ஆண்டுக்குள் அமெரிக்க பொருளாதார சிக்கலின் புயல் இங்கும் வீசத் தொடங்கியது. கொத்து கொத்தாக ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள். அதற்கு நிறுவனம் சொன்ன காரணம், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பயன்மதிப்பை ‘ நிரூபிக்க‘வில்லை என்பது. அதாவது ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வேலை செய்யும் நபர் திடீரென ஒரு மாதத்திற்குள் தன்னை நிரூபிக்கக் கோரப்படுவார். இயல்பாக அம்‌மாத இறுதியில் வீட்டிற்கு அனுப்பப்படுவார். தங்களது காலாண்டு லாப விகிதம் குறையக் கூடாது என்பதற்காக நிறுவனம் கையாண்ட அணுகுமுறை இது. 

எனது  திட்ட வேலை அரபு நாடுகளைச் சார்ந்த இரவுப்பணி என்பதாலும், மிகக் குறைந்த அனுபவமும் ஊதியமும் வாங்குபவன் என்பதாலும் நான் தப்பித்துக் கொண்டேன்.

சில வாரங்களுக்குப் பிறகு இரவு அலுவலகம் வருகையில் வழக்கமாக பார்ப்பது போல் தரைத் தளத்தில் இருந்து மேலே பார்க்கையில் இரண்டாம் மாடி வளைவில் தீயணைப்புத்துறை பயன்படுத்தும் வலை கட்டப்பட்டிருந்தது.  முதலில் ஒன்றும் புரியவில்லை. வேலை நீக்கம் செய்யப்பட்ட சிலர் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து நேர் தலைகீழாக குதித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே , மிகுந்த படைப்பூக்கத்துடன் நிறுவனம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது. அதைவிட முக்கியமாக இறந்தவர் குறித்த எந்த தகவலும் யாருக்கும் எதுவும் தெரியாது. அடிக்கடி காவல்துறை வாகனம் வரும் – சிறிது நேரத்தில் சென்று விடும். செய்தித்தாள்களில் எந்த செய்தியும் வராது.  

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இது நடந்தது. பிறகு நிலைமை பழையபடி திரும்பியது. ஆனால் இறந்தவர்கள் மற்றும் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள்?  நிதிச் சூதாடிகளின் தவறுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவர்கள் தன்னை நிரூபிக்கச் சொல்லி பலிகொடுக்கப்பட்டார்கள். உண்மையான குற்றவாளிகள் அமைதியாக எதுவும் தெரியாதது போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அதே அதிகாரத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  .

 மேற்கில் சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இரு உலகப் போர்களில் கொல்லப்பட்டனர். கொன்றவர்களின் வாரிசுகள் சிறு கீறல் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இதைப் பார்க்கிறோம். பஞ்சத்திலும் விடுதலைப் போரிலும் அப்பாவிகளும் லட்சியவாதிகளும் பலர் வாழ்வை இழந்தனர். புல்லுருவிகளும் துரோகிகளும் கயவர்களும் சின்ன சிராய்ப்பின்றி மேன்மேலும் தலைமுறைகளாக வளர்ந்து கொண்டே செல்கின்றனர்.

அறம், நீதி, தெய்வம், ஒழுக்கம் என்றெல்லாம் சொல்வதன் உள்ளீடு என்ன என்பதே பெரும் வதையை அளிக்கும் கேள்வியாக இருக்கிறது. தெய்வம் நின்று கொல்லும் என்றால் யாரைக் கொல்லும்? விஷ ஐந்துக்களை விட்டு விட்டு வாயில்லா பூச்சிகளை அந்த தெய்வம் நசுக்கி விளையாடுவதைக் காண்கிறோம். பிறகு தர்மம் என்பது தான் என்ன? 

இருளின் பேருருவ பேரலை சித்தத்தை உறைய வைத்து அமர வைத்து விடுகிறது. இனி அடுத்தது என்ன என்னும் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.

இமைக்கணத்தில் கர்ணனுக்கு இளைய யாதவன் செய்யும் உபதேசங்கள் இந்த சிக்கலுக்கு உரியனவாகத் தோன்றுகிறது‌‌.தனிவெளியின் உண்மைகளை இயல் வெளியில் வைத்து விளையாடுவதே குழப்பங்களுக்கு மிக முக்கியமான காரணம். வகுக்குப்பட்டு ‘அமர வைக்கப்பட்டுள்ள‘ களத்தில் மாயை, முக்தி, நானேயிறை என்று சொல்லி தேடுவதை,

எவ்வளவு கூரியதாக இருந்தாலும் ஒளியினால் காலில் தைத்த முள்ளை அகழ்ந்து எடுக்க முடியாது என்கிறான் யாதவன்.  அடக்கப்பட்டால் எதிர்த்து எழுக என்கிறான்.  வேழங்களை தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதில்லை என்னும் வரியில் நமக்கான செய்தி சொல்லப்பட்டுள்ளது.

சங்கரன் ரவிச்சந்திரன்

https://youtu.be/jimQp2Fp_gM?list=PLoiiNMLQqet1ccRHxIumSd5tCQx1Qo8dr

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887)

மாமனிதர்களின் உருக்கு உலை இருநதிகளின் இணைவில்- இந்துமதி நழுவும் தருணம் – கலைச்செல்வி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.