Jeyamohan's Blog, page 123
April 25, 2025
எவ்.எக்ஸ்.ஸி. நடராசா
ஈழத்து தமிழறிஞர். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதினார். ஈழத்து நாடோடிப் பாடல்களைத் தொகுத்தார்.
எவ்.எக்ஸ்.ஸி. நடராசா
எவ்.எக்ஸ்.ஸி. நடராசா – தமிழ் விக்கி
தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ.,
தெரிந்த ஒருவரால் வாழ்க்கை வரலாறு எழுதப்படும்போது, அவர் ஒரு எழுத்தாளராகவும் நெருங்கியநண்பராகவும் இருக்கும்பட்சத்தில் அந்தப் புத்தகத்தின் பரிமாணமே முற்றிலும் வேறொன்றாக மாறிவிடுகிறது. உ வே.சா எழுதிய ‘கோபாலகிருஷ்ண பாரதி – வாழ்க்கை வரலாறு‘, சுந்தரராமசாமியின் ‘கிருஷ்ணன் நம்பி‘, நீங்கள் எழுதிய ‘சுந்தரராமசாமியின் நினைவின் நதியில்‘ போன்ற சிலநூல்கள்தான் ஒரு எழுத்தாளனை உயிரோடு நேரில், நம்மில் ஒருவராகக் காண்பது போன்ற அனுபவத்தை அளித்துள்ளன. சமீபத்தில் படித்த தொ மு சி ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன்‘ நூலும் அந்த வரிசையில் வருகிறது. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே அன்னையை இழந்து, தந்தையால் உதாசீனப்படுத்தப்பட்டு, சித்தியால் துன்புற்று, பட்டதாரி ஆனாலும் தகுந்த வேலையின்றி, அரைச்சாப்பாட்டிற்கும் வழியின்றி குடும்பத்தோடு அவதியுற்று, நாற்பது வயதிற்கு மேல் கிடைத்த திரைப்பட வாய்ப்பு தொடர முடியாமல் மரணத்தால் முடிவுக்குவரும் அவலவாழ்வு. தீவிர இலக்கியத்தை நம்பி வாழ்க்கையை நடத்தத் துணிந்தால் என்ன நேரும் என்பதை உயிரைக்கொடுத்து நிரூபித்த புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு.
புதுமைப்பித்தன் நிதானமான ஐந்தேமுக்காலடி உயரம். ஒல்லியான உருவம். கரிசல்நிலம் போல சுருக்கம் விழுந்த நெற்றி. தலையில் பிள்ளைமுடி போல மெலிதான முடி. தூக்கி வாரிய தலை. அதைத் தன்னுடைய மெலிதான விரல்களால் அவ்வப்போது கலைத்துவிட்டுக் கொள்வதுண்டு. வெற்றிலைக்காவியேறிய பற்கள். சற்றே பற்கள் வெளித்தெரியும் உதட்டமைப்பு. எதிராளி பேசிக்கொண்டிருக்கும்போது தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டபடி அவ்வப்போது ‘கட கட‘ வென்று – புதியவர்களுக்கு எரிச்சலூட்டும் – வாய்விட்டுச் சிரிப்பு. “ஆழக் குழிக்குள் அமிழ்ந்து முத்துப்போல ஒளிவீசும் கண்களில் ஒரு ஏக்கம் கலந்த வெறி தெறிப்பதுபோலத் தோன்றும். லேசாகக் கிழடு தட்டிப்போன பிரமையும் தட்டுப்படும். கண்களிலே தீராத ஏக்கமும், பித்தும், ஒளியும் நிறைந்திருக்கும். அந்தக் கண்களின் தீட்சண்யம் எதிராளியின் கண்ணை உறுத்திவிடும். அவர் கண்களைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அவரே மொழிபெயர்த்த பிரேதமனிதன் ‘போரிஸ் கார்லோவ்‘ வின், ஆனால் சற்று அதீத ஒளிநிறைந்த கண்கள்” என்கிறார் தொமுசி.
கர்ணம் உலகளந்த பெருமாள் பிள்ளை பெயர் வாயில் நுழையாததால் அவர் வேலைசெய்யும் ஊரான விருத்தாசலத்தின் பெயரையே அவருக்கு வைத்து விடுகிறார் வெள்ளைக்கார அதிகாரி. அவரும் தெய்வமே தனக்கு பெயர் வைத்தாற்போல அகமகிழ்ந்துபோனார். பின்னாளில் தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றார். அவருடைய பேரனுக்குப் பேரன்தான் இந்த சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். நண்பர்களுக்கு சொவி, சோவி. புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம்பிள்ளையும் தாசில்தார்தான். செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய இடங்களில் தந்தையின் பணிமாற்றம் காரணமாக மாறி மாறி பள்ளிப்பருவம் கழிந்தது. படிப்பை விட செஞ்சிக் கோட்டையைப் பார்ப்பதில்தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்.
தந்தை ஓய்வு பெற்றபின், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வர, இந்துக் கல்லூரியில் பி ஏ வரை படிப்பு. ஆங்கில நாவல்களில் இருந்த நாட்டம் கல்லூரிப் படிப்பில் இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆற அமர இருந்து படித்ததில் நாலைந்து வருடம் கல்வி நீண்டுவிட்டது. தேவையில்லாமல் கடுமை காட்டும் தந்தை, சித்தி இவர்களோடு ஆரம்பத்திலிருந்தே நல்ல உறவில்லை அவருக்கு. முத்தையாபிள்ளை புத்தகக்கடையில் – கடைச்சங்கம் – இலக்கிய விசாரம், நண்பர்கள் அறையில் அரட்டை என்று பொழுது இனிமையாகக் கழிந்தது. நிறைய உவமானக் கதைகள் சொல்வதால் சொவிக்கு பரமஹம்சர் என்ற பெயருமுண்டு. வேலையில்லாவிட்டாலும் அந்தக்கால வழக்கப்படி கமலாவுடன் திருமணம் நடந்தேறியது. ஆனால் தொடர்ந்து நடந்துவந்த குடும்பச் சண்டையால் வீட்டைவிட்டு மனைவியோடு வெளியேறி விடுகிறார் சொவி. சித்தப்பா வீட்டில் புகலிடம் தேடிச்சென்றால் அங்கிருந்தும் விரட்டியடிக்கிறார் தந்தை. சில நாட்கள் உறவினர்கள் வீட்டில் அழையா விருந்தாளியாகத் தங்கி, மனைவி கமலாவை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சென்னைக்கு வேலைதேடிச் செல்கிறார் சொவி.
1931 ல் ‘குலாப்ஜான் காதல்‘ என்று டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திய ‘காந்தி‘ பத்திரிகையில் எழுதிய கட்டுரை வழியேதான் தமிழிலக்கியத்திற்குள் நுழைகிறார் புதுமைப்பித்தன். அதனைப்பாராட்டி வ.ரா.விடமிருந்து ஒரு கடிதம் வர, அவரைச் சென்று பார்க்கிறார். பி.எஸ்.ராமையாவின் அறிமுகமும் கிடைக்கிறது. மணிக்கொடிக்கும் எழுத ஆரம்பிக்கிறார். ‘மணிக்கொடி பட்டொளி வீசிப்பறந்தாலும் கம்பம் ஆடிக்கொண்டேதான் இருந்தது‘ என்கிறார் தொமுசி. அதைவிட ஷீண திசையில் இருந்த ‘காந்தி‘ மணிக்கொடியோடு இணைகிறது. அந்த அடுத்தவேளைச் சாப்பாட்டிற்கு வழியில்லாத நிலையிலும் ‘பொன்னகரம்‘, ‘கவந்தனும் காமனும்‘, ‘ஆண் சிங்கம்‘ போன்ற பல கதைகளை மணிக்கொடி இதழில் எழுதியதில் புதுமைப்பித்தனின் புகழ் பரவ ஆரம்பிக்கிறது. அவருடைய ‘அவதாரம்‘ கதையில் சொல்வதுபோல ‘பிறந்தவுடனே நஞ்சுக்கொடியைத் தோளில் போட்டுக்கொண்டு தெருவில் கோஷமிட்டுக்கொண்டுவரும் குழந்தையின் அசாதாரணத்தன்மை‘ யோடுதான் இலக்கியவானில் பிரவேசிக்கிறார் புதுமைப்பித்தன். சரஸ்வதியை திகம்பர சொரூபமாக வருணித்து அவர் எழுதிய ஒரு கதையைக் கிழித்து எறிந்த பத்திரிகாசிரியரைப் பார்த்து புதுமைப்பித்தன் கூறினார் “குழந்தையைக் கொன்றுவிட்டீர்கள். ஆனால் நான் மலடல்ல. இன்னும் காத்திரமான பல குழந்தைகளைப் பெற்றெடுப்பேன்“. சோதனை என்றொரு இலக்கியப்பத்திரிகை நடத்த எண்ணமிருந்தது அவருக்கு. ஆனால் முயற்சி கைகூடவில்லை.
புதுமைப்பித்தனை முழுநேர ஊழியராகச் சேர்த்துக்கொள்ள ‘மணிக்கொடி‘யின் நிதிநிலைமை இடம்கொடுக்கவில்லை. எனவே ராய. சொக்கலிங்கத்தின் ‘ஊழியன்‘ பத்திரிகையில் உதவியாசிரியராக வேலை செய்கிறார். சிறிது காலத்திலேயே அங்கிருந்தும் வெளியேறிவிடுகிறார். பின்னர் ‘வீரகேசரி‘ பத்திரிகையில் பணிபுரிய கொழும்பு செல்லவிருக்கும் நிலையில் ஆசிரியர் டி எஸ் சொக்கலிங்கம் பரிந்துரையில் ‘தினமணி‘ யில் 1936 ல் உதவியாசிரியர் வேலை கிடைக்கிறது. புதுமைப்பித்தன் நீண்டகாலம் வேலைசெய்தது இங்குதான். ஏழு வருடங்கள் கழித்து 1943 ல் டி எஸ் சொக்கலிங்கம் ராஜினாமா செய்ய அவருடன் வெளியேறிவிடுகிறார். பின் ‘தினசரி‘ யில் நல்ல சம்பளத்தில் வேலை. அங்கிருந்தும் திருப்தியின்றி சிறிதுகாலத்திலேயே வெளியேறி விடுகிறார். படைப்பூக்கமில்லாத தர்ஜுமா (மொழிபெயர்ப்பு) வேலை மனதை நோகச் செய்துவிடுவதாக இருந்திருக்கிறது.
நண்பர்களோடு அரட்டை அடிப்பதென்றால் புதுமைப்பித்தனுக்கு மிகவும் பிடித்த விஷயம். தன் எழுத்துவேலையைக் கூட மறந்துவிடுவார். எழுதுவதற்காக, யாரும் வந்தால் இல்லையென்று சொல்லிவிடு என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அடுக்களையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பார். அவர் மனைவி வருபவரை அதேபோலச் சொல்லி அனுப்பிக்கொண்டிருக்கும்போதே, அவர் குரல் கேட்டு ‘சார்..இங்கயிருக்கேன்..’ என்றபடி வெளியே வந்துவிடுவாராம். பேச்சு சுவாரசியத்தில் குரல் உச்சத்திற்குப்போய் இருமல் வந்துவிடும். சிறிது நேரத்தில் தண்ணீரைக்குடித்து வெற்றிலையைப் போட்டுக்கொண்டு மறுபடி பேச்சுக்கச்சேரி ஆரம்பமாகிவிடும். பத்திரிகைகளுக்கு குறித்தநேரத்தில் கதை சென்றதேயில்லை. கடைசிவரை திருநெல்வேலி வட்டாரவழக்கில்தான் பேசியிருக்கிறார். பேச்சில் ஆங்கிலம் கலந்திருக்கும். அவர் பேச்சில் அடிக்கடி இடம்பெறும் வார்த்தைகள், ‘விவகாரம்‘, ‘பொசிஷன்‘, ‘இருக்கு‘. புத்தகங்கள் மீது பெருங்காதல். வ.ரா.சொல்கிறார் “ஆசாமி ஒரு நா ஊர் லேர்ந்து கெளம்பி திடுதிப்புன்னு வந்து நின்னுட்டார். எங்க நெலமதான் தெரியுமே? தள்ள முடியுமா? சரின்னு செலவுக்கு ரெண்டு ரூபா குடுத்தோம். மேச்செலவுக்கா? சாப்பாட்டுச் செலவுக்கு. என்ன பண்ணார் தெரியுமா? மூர்மார்கெட்டுக்குப் போயி, மாப்பஸான் கதைப்புத்தகம் ஒண்ணே கால் ரூபாய்க்கு, மிச்சப் பைசாவுக்கு ஸ்பென்ஸர் சுருட்டு வாங்கிட்டு வந்துட்டார்” புத்தகங்களை வாங்கிக்குவிப்பது, ஆறு மாதத்துக்குத் தேவையான கில்லெட் ப்ளேடுகளை மொத்தமாக வாங்கிப் போடுவது, கடன் கேட்டு யாராவது வந்தால் மனைவியிடம் சமாளிக்கச் சொல்வது என்று மனைவி கமலாவைப் படாதபாடு படுத்தியிருக்கிறார். மனைவி கமலா மீது பிரியம் அதிகம். கமலாவிற்கு அழகான கண்கள் என்பதில் அவருக்குப் பெருமை. மனைவியைக் ‘கண்ணா‘ என்றுதான் அழைப்பார்.
கணேசசர்மா என்றொரு சங்கீத ரசிகர் புதுமைப்பித்தனின் நண்பர். அவர் நாகஸ்வர வித்துவான்கள் திருவீழிமிழலை சகோதரர்களுக்கும் நண்பர். ஒரு நாள் அவர்களிடம் “நீங்கள் வாசித்து யார் யாரோ பாராட்டியிருப்பார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் சங்கீதத்தில் பெரிய ஞானஸ்தன். அவரிடம் நீங்கள் பாராட்டு வாங்கிகாட்டுங்கள் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு புதுமைப்பித்தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார். ‘என்ன சோவி, திருவீழிமிழலை ப்ரதர்ஸ், உங்ககிட்ட வாசிச்சுக்காட்டணுமாம்‘ என்று சொல்ல அவரும் சரி வாசிக்கட்டும் என்று கூற, கச்சேரி ஆரம்பமானது. சகோதரர்கள் வழக்கம்போல பிரமாதமாக வாசித்தனர். புதுமைப்பித்தன் வெற்றிலை போட ஆரம்பித்தார். வித்துவான்கள் மேலும் உழைத்து வாசித்தனர். ஆலாபனைகள் முத்தாய்ச் சொரிந்தன. ஞானஸ்தரின் முகத்தில் ஒரு முகக்குறிப்பையும் காணவில்லை.
மேலும் வாசிப்பு தொடர்ந்தது. சோவி ஒரு ஆங்கில நாவலை எடுத்துவைத்துக்கொண்டு படிக்கவாரம்பித்துவிட்டார். அறைக்கு வெளியேயிருந்த சர்மா சிரித்துக்கொண்டே உள்ளேவந்து ‘இவ்வளவுதானா உங்க வாசிப்பு, இவரை மயக்க முடியவில்லையே?’ என்று அவர்களை கலாட்டா பண்ணியபிறகுதான் புதுமைப்பித்தனுக்கு விஷயம் புரிந்தது. சங்கீதத்தில் அவர் ஒரு அவுரங்கசீப் என்று தெரிந்து அனைவரும் சிரித்தனர். பின்னர் வித்துவான்கள் இருவரும் புதுமைப்பித்தனின் ரசிகர்களாகிவிட்டார்கள். அவர்களிடமிருந்து ஒரு புத்தம்புதிய நாயனத்தையும் வாங்கி வீட்டில் மாட்டிவைத்துவிட்டார் புபி. தொமுசி ‘என்ன புதுசா நாயனம்?’ என்று கேட்க ‘வர்றவன விரட்டறதுக்குத்தான். என்ன ராஜா, ராஜரத்தினம்பிள்ளை கட்டுரையெழுதும்போது நான் நாயனம் வாசிக்கக் கூடாதா?’ என்றாராம் சொன்னதுபோலவே கிளம்பாமல் கழுத்தறுப்பவர்களை ‘கொஞ்சம் நாயனம் கேக்கீயளா?’ என்று ‘சாதகம்‘ பண்ணி விரட்டியதுமுண்டு. இதுபோல எத்தனையோ நினைவுகள் இந்தநூலில்.
1946 ல், தனக்குத் தெரிந்த இலக்கியத்தைக்கொண்டு தன்னுடைய வறுமையை எப்படியாவது ஒழித்துக்கட்ட முடிவுசெய்து, சினிமாவில் கதை வசனம் எழுத முடிவு செய்தார் புதுமைப்பித்தன். ஏற்கனவே அவருடைய நண்பர்கள் பி.எஸ்.ராமையா, கி.ராமச்சந்திரன் முதலியோர் சினிமாவில் இருந்ததாலும், எல்லோரும் அறிந்த படைப்பாளியாக இருந்ததாலும் அவருக்கு ஜெமினியின் ‘அவ்வையார்‘ படத்தில் எழுத வாய்ப்பு வந்தது. நூலாசிரியர் தொமுசியிடம் காட்டாமல் வசனங்களை அனுப்பமாட்டார். மிகச்சிறப்பாக வந்திருந்தபோதும் ஏனோ படத்தில் அவர் வசனங்களை உபயோகப்படுத்தவில்லை. காமவல்லி என்ற படத்திற்கு வசனம் எழுதினார். 1947 ல் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அமைந்தவையும் பாதியிலேயே நின்று போயின. இந்த நேரத்தில் விபரீதமாக அவருக்கு சொந்தப்படமெடுக்கும் ஆசை வந்தது. ‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்‘ என்று தன் அம்மாவின் பெயரில் படக்கம்பெனி ஆரம்பித்து நாகர்கோயில் மகாதேவனுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. படத்துக்காகப் பணம் திரட்டும் முயற்சியில் பல ஊர்களுக்கும் அலைந்து இருக்கிற பணத்தையும் இழந்தார் புதுமைப்பித்தன். தீபாவளிக்கு ஊருக்கு வரக்கூட பணமில்லாத நிலையில், கடன் வாங்கிக்கொண்டு ரயிலில் ‘ஃபஸ்ட் கிளாஸ்‘ சில் செல்கிறார். ‘படமுதலாளி ஆகிவிட்டாரே?’ புதுமைப்பித்தன் முன்பு தன்னுடைய குழந்தை இறந்தபோதுகூட ஊருக்குச் செல்ல முடியாத வறுமையில் இருந்ததுண்டு. இப்போது போலி கௌரவத்திற்காக மேலும் கடன், மேலும் வறுமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அப்போதுதான் தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி‘ படவாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. முன்பணம் பெற்றுக்கொண்டார். புனாவில் படப்பிடிப்புக்குச் செல்லும்போதே அவருக்கு இருமல் அதிகமாகியிருந்தது. அங்கு சரியான உணவு இல்லாமை, இடையறாத உழைப்பு, வியாதியின் கடுமை இவற்றால் உடல் மேலும் நலிவுற்றது. சித்தவைத்தியத்தில் நம்பிக்கை கொண்டு, தகுந்த சிகிச்சை எடுக்காமல், இருமலை உதாசீனப்படுத்தியது தவறென்று அவருக்குப் புரியும்போது நிலைமை கைமீறிப்போயிருந்தது. அவருக்கு முற்றிய காசநோய் என்று கண்டறியப்படுகிறது. கைக்குழந்தையுடன் இருக்கும் மனைவியை கண்டிப்பாக வரக்கூடாது என்றும், இன்னொரு கடிதத்தில் காந்தி கொலைக்குப்பிறகு எப்படி புனா நகரமே பற்றிஎரிகிறது என்றும் எழுதுகிறார். ஒவ்வொரு கடிதத்திலும் நோயின் கடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே என்புதோல் போர்த்த உடம்பு, எலும்புருக்கி நோய் வேறு. 1948 மே மாதம் 5 ஆம் தேதி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நடைப்பிணமாக, கையில் கம்போடு, தாடியும் மீசையுமாக வந்திறங்கியவர்தான் புதுமைப்பித்தன் என்று யாரும் நம்பவில்லை. ‘இந்த உடம்போடு எப்படி வந்தீர்கள்?’ என்று கேட்ட சிதம்பரம் என்ற நண்பரிடம் ‘இதோ இவள்தான் இழுத்துவந்துவிட்டாள்‘ என்று குழந்தை தினகரியின் தலையைத் தடவியபடியே புதுமைப்பித்தன் சொல்கிறார் ‘என்னப்போல இருக்கறவன்லாம் உணர்ச்சிப்பெருக்கால காரியத்தைச் செய்யறது. அபாயத்தை உணர்வதில்லை. பிறகு அதன் பலாபலன்களை அனுபவித்து வருகிறது. சரிதானேயப்பா?’
மரணம் வெகுநெருக்கத்திலிருப்பதை அறிந்திருந்தபோதும் அவர் மொழிபெயர்த்த ஜாக் லண்டனின் ‘உயிராசை‘ என்னும் கதைபோல அவருக்கு வாழவேண்டும் என்ற ஆசைதான் மிதமிஞ்சி நின்றது. அந்த ஆசையே இலங்கை ‘ஈழகேசரி‘ ஆசிரியர் அரியரத்தினத்திற்கும், இந்நூலாசிரியர் தொமுசி ரகுநாதனுக்கும் தான் குணமடைய எழுத்தாளர்கள், வாசகர்கள் பணம் அளித்து உதவமுடியுமா என்று கேட்டு கடிதம் எழுதவைத்தது. இத்தனைக்கும் கு.ப.ரா.விற்கு இதேபோல நிதி திரட்டியபோது விமர்சனம் செய்தவர்தான் புதுமைப்பித்தன். 1948 ஜூன் 30 ஆம் தேதி அவர் மறைவோடு அந்தத் துன்பியல் நாடகம் முடிவுக்கு வருகிறது.
தொமுசி ரகுநாதன்
இந்நூலாசிரியர் தொமுசி ரகுநாதன் புதுமைப்பித்தன் மறைவுக்குப் பிறகு அவருடைய தந்தை சொக்கலிங்கம் பிள்ளையைச் சென்று பார்க்கிறார்.சொக்கலிங்கம்பிள்ளை ஒரு புத்தக ஆசிரியரும் கூட. Indo European Races என்னும் புத்தகத்தின் மூன்றாம் பாகத்தை அந்தத் தொண்ணூற்றிமூன்று வயதானகாலத்திலும் எழுதிக்கொண்டிருக்கிறார். கண்ணாடி இல்லாமல் படிக்கவும், கம்பில்லாமல் நடக்கவும் முடிந்த திடகாத்திரர். அவர் சொல்கிறார் “விருத்தாசலம்தானே! பயல் துடியானவன்தான். சின்னவயசிலேயே கந்தர் கலிவெண்பாவை வைத்துக்கொண்டு பாராயணம் செய்வான். எனக்கு அவனைக்கொண்டு என் நூலை மொழிபெயர்த்து வெளியிடணும்னு ஆசை (அந்தத் தலகாணிய யார் வாங்குவா? – புபி). ஆனா, பய நம்மள மதிச்சானா என்ன? ம்ம்ம் ..அவன் பிறந்த நேரம். அடங்காப்பிறவி. இந்தக் காலத்துப் பசங்க வயசு வந்தோண்ணயே, பெட்டிச் சாவியைத் தூக்கிக்குடுத்துட்டு தகப்பனார் மண்டையைப் போடணும்கிறானுக. பிள்ளைக்கன்று தாய் வாழையைக் கொன்று தீர்க்கிறதே, அந்த மாதிரி. நாம என்ன சொல்லக்கிடக்கு?”. இவரிடமிருந்து தனக்குச் சேரவேண்டிய பரம்பரைச் சொத்தையே நீதிமன்றத்தில் வழக்காடித்தான் பெறமுடிந்தது சொவியால். அந்த நிலத்தை ‘தன் நினைவு என்றும் இருக்கும்படி‘ ஒரு இஸ்லாமியரிடம் குறைந்த விலைக்கு விற்றார் சொவி. அப்போது இரண்டாம் உலகப்போர் முடிந்தகாலமாதலால் ‘ஜீப்பு‘கள் மலிவாகக் கிடைத்தன. வாங்கி வாடகைக்கு விட்டால் நன்கு சம்பாதிக்கலாம். ஒன்று வாங்கி விடச்சொன்ன சித்தப்பாவிடம் ‘எங்கப்பா மேலன்னா, விடறேன்‘ என்றாராம் சொவி. தாசில்தார் சொக்கலிங்கத்திற்கு திருநெல்வேலியிலேயே நாலைந்து வீடுகள் இருந்தன. தன் மகனுக்கு திருமணமானவுடன் ஒருவீடு கொடுத்திருந்தால் சொவி மணமாக ஊரிலேயே இருந்திருக்கலாம். ஆனால் இலக்கியத்திற்கு ஒரு புதுமைப்பித்தன் கிடைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Whip Your Brain !!!
In your speech recently, you had put forward the following thought. ‘We should strive to do the work that is challenging and difficult at least one hour per day,’ The typical advice would be to carry out the work that we enjoy everyday. Hence what you say is odd. What is the need for it? I am trying to clarify my confusion.
Whip Your Brain !!!
Kick start your day.என்பார்கள். அதுபோல கிளம்பி செல்லுங்கள் எட்டு திக்கும் அறிவு,அனுபவம் பெற.சிறு வயதில் தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,தமிழ்வாணன்,இதயம் மணியன், போன்ற எழுத்தாளர்களின் எழுத்து ஞாபகம் வருகிறது .சுயமுன்னேற்ற நூற்கள் அவசியம்.தங்களின் காணொளியை அவ்வப்போது எனது முகநூலில் பகிர்கிறேன் என்னுடைய கடிதத்துடன்.தற்போது இளைஞர்களை தட்டி எழுப்பி செயல்புரிய வைக்கும் பேச்சும் எழுத்தும் தேவைப்படுகிறது.
பெருஞ்செயல், கடிதம்April 24, 2025
தமிழிலக்கியத்தில் என்ன இருக்கிறது?
தமிழில் ஏதும் வாசிப்பதில்லை என்று சொல்லும் சிலரை நான் அடிக்கடிச் சந்திப்பதுண்டு. நான் ஆங்கிலத்தில் நிறைய வாசிப்பவன். மலையாளத்திலும் வாசிக்கிறேன். ஆனால் கன்னடத்தில், தெலுங்கில் என்ன நிகழ்கிறது என்று தெரிந்துகொள்ள பெரும் விழைவும் கொண்டிருக்கிறேன். இந்த எந்த இலக்கியமும் இன்னொன்றால் ஈடுசெய்யத்தக்கவை அல்ல. அதிலும் தமிழ், இன்றைய இலக்கியத்தின் மிகச்சிறந்த சாதனைகளை தன்னுள்கொண்டது என ஐயமின்றிச் சொல்வேன்
எழாம் உலகம், சர்வதேசப்பதிப்பு
என் ஏழாம் உலகம் நாவல் The Abyss சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் சென்ற ஆண்டு ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வந்தது. இந்திய ஆங்கில வாசகர்கள் நடுவே பரவலான ஏற்பைப் பெற்ற நாவல் அது. ஆங்கிலம் வழியாக இந்திய மொழிகளின் வாசகர்களிடம் அது சென்று சேர்ந்தது. அதன் கன்னட மொழியாக்கம் முடிவடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நூல் வெளியாகும். தெலுங்கு வடிவமும் முழுமையடைந்துள்ளது. குஜராத்தி, இந்தி வடிவங்கள் வெளிவரவுள்ளன.
ஏழாம் உலகம் நாவலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவில் Transit Books பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு பதிப்பாளர்களின் ஆவண இதழில் வெளியாகியுள்ளது. நோபல் பரிசு பெற்ற Imre Kertész உள்ளிட்ட ஹங்கேரிய இலக்கிய ஆசிரியர்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்த புகழ்பெற்ற பதிப்பகமான டிரான்ஸிட் பதிப்பகம் த அபிஸ் நாவலை வெளியிடுவது ஒரு முக்கியமான நிகழ்வு.
ஏற்கனவே அறம் கதைகளின் தொகுப்பான Stories Of The True பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வந்து பல பதிப்புகள் கண்டுள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் FSG பதிப்பக வெளியீடாக வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளிவரவுள்ளது. பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கத்தில் என் வெள்ளையானையின் மொழியாக்கமான The White Elephant இவ்வாண்டு இந்தியாவில் HarperCollins வெளியீடாக வரவுள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவில் FSG பதிப்பகத்தால் இவ்வாண்டு இறுதியில் வெளியிடப்பட ஒப்பந்தமாகியுள்ளது. இவ்விரு நூல்களும் வெளிவந்தபின் வெளிவரும்.
தொடர்ச்சியாக என் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. என் தன்வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பான Of Men Women and Witches ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வந்து பரவலாக வாசிக்கப்படுகிறது. சுசித்ரா மொழியாக்கத்தில் குமரித்துறைவி அடுத்து ஜக்கர்நாட் வெளியீடாக வரவுள்ளது.
ஆங்கிலம் வழியாக ஓர் ஆசிரியர் கவனிக்கப்படும்போதே அவருக்கு இந்திய அளவில் ஏற்பு அமைகிறது. சர்வதேச ஏற்பு என்பது அமெரிக்காவில் நூல் வெளியிடப்படும்போது மட்டுமே நிகழ்கிறது. தமிழிலிருந்து மிகக்குறைவாகவே நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன, அவை கவனம்பெறுவதும் அரிது. முதன்மையான காரணம் அவை அதிகம் விற்பனையாவதில்லை என்பதே. அந்த எல்லையை உடைத்து முன்சென்ற நூல்கள் Stories of the true போல மிகச்சிலவே.
Stories of the true கவனம் பெற்றமைக்கு அந்நூல் அளித்த தீவிரமான வாசக அனுபவம் முதன்மைக்காரணம். கமல்ஹாசன் அந்நூலுக்கு ஆங்கிலத்தில் அளித்த அறிமுகம் நல்ல தொடக்கமாக அமைந்தது. புகழ்பெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் அந்நூல் பற்றி அவரே ஒரு சிறு காணொளியை வெளியிட்டிருந்தார். சமூகசேவகியும் போராளியுமான சுமதி ராமசாமி அந்நூலைப்பற்றி எழுதியிருந்தார். இதழாளர்கள் சிறந்த மதிப்புரைகள் எழுதியிருந்தனர். அந்நூல் என் அடுத்த நூல்கள் மேலும் கவனத்தை உருவாக்கியது.
அதற்கு அப்பால் நூல்கள் விற்பனையாவதற்கு அவசியத்தேவை என்பது தமிழ்மக்கள் அவற்றை வாங்குவது. மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திற்குச் செல்லும் நூல்களை வாங்குபவர்களில் மலையாளிகளின் பங்கு மிக முக்கியமானது. அடுத்த தலைமுறை மலையாளிக்குழந்தைகள், மலையாளம் நன்கு வாசிக்கத் தெரியாதவர்கள், மலையாளக் கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்காக அவற்றை வாங்குகிறார்கள். வங்காளிகளும் கன்னடியரும்கூட அவ்வாறு வாங்குகிறார்கள். அம்மொழி நூல்களுக்கு வலுவான ஓர் அடித்தள விற்பனையை அது உறுதிசெய்கிறது.
தமிழ்மக்கள் மிகமிகக்குறைவாகவே தமிழ்நூல்களை வாங்குகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு நூல்களை அறிமுகம் செய்பவர்கள் மிகக்குறைவு. தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் அதிகமாக வாசிப்பதாகச் சொல்வார்கள், ஆனால் இந்தியாவிலேயே மிகமிகமிகக் குறைவாக, நம்பவே முடியாத அளவு குறைவாக, ஆங்கில நூல்கள் விற்பனையாகும் வட்டாரமும் தமிழ்நாடுதான். சென்னையில் ஒரு ஆங்கிலப் புத்தக்கடைகூட இல்லை என்பதை நினைவில்கொள்ளவேண்டும். (பெங்களூரில் ஒரே தெருவிலேயே நான்கு மாபெரும் ஆங்கிலப்புத்தகக்கடைகள் உள்ளன) இணையநூல் விற்பனையில் தமிழகத்தின் இடம் திகைப்பூட்டும்படி குறைவு- பதிப்பாளர்களைப் பொறுத்தவரை அது பூஜ்யம் என்பதற்கு சமம்.
எனவே நூல்களை தமிழிலோ ஆங்கிலத்திலோ வாசிக்கும் குழந்தைகள் மிகக்குறைவு. வாசிக்கும் குழந்தைகள்கூட எளிமையான பிரபல சாகசநூல்களையே வாசிக்கின்றன. இலக்கியநூல்களை அல்லது தீவிரவாசிப்புக்குக் கொண்டுசெல்லும் நூல்கலை வாசிப்பதில்லை. அவ்வழக்கம் உருவாகுமென்றால் மட்டுமே நூல்கள் கொஞ்சமேனும் விற்கத்தொடங்கும். விற்கும் நூல்களே கவனிக்கப்படும், மேலும் நூல்கள் வெளியாகும். அப்போதுதான் தமிழிலக்கியம் இந்திய அரங்கை, உலகக்களத்தை சென்றடையும்.
இலக்கியத்தை ஆங்கிலம் வழியாக அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதென்பது இருபாற்பட்டது. ஒன்று, அவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு அறிமுகமாகிறது. அவர்களின் வேர்களுடன் ஆழ்ந்த உறவும் உருவாகிறது. இரண்டு, தமிழிலக்கியம் உலக அரங்கைச் சென்றடைகிறது. அதுவே தமிழுக்கு உண்மையான பெருமை.
திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் தமிழிலக்கியம் சர்வதேச அரங்கைச் சென்றடையும் தொடக்கம் இதுதான். இப்போது இந்தத் தொடக்கம் வெற்றிகரமாக நிகழும் என்றால் இது தமிழுக்கு மிகப்பெரிய வாசலைத் திறந்து தரும். நான் எப்போதும் தனித்துச் செல்பவன் அல்ல, தமிழை உடன்கொண்டு செல்ல முயல்பவன்.
இத்தருணத்தில் ஒரு தமிழர் செய்யத்தக்க சிறு பங்களிப்பு இந்நூல்களை வாங்குவதே. நமக்கே உரிய எளிய தயக்கங்கள், தாழ்வுணர்ச்சிகளால் இத்தருணத்தை நாம் தவறவிட்டால் அது ஒரு வரலாற்று வாய்ப்பை இழப்பதுதான்.
Stories of the True FSG USA- To Buy என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக… அறம் அமெரிக்கக் குழந்தைகள். Of Men, Women and Witches – Amazon’ Stories of the True : Translated from the Tamil by Priyamvada THE ABYSS Jeyamohan To buy A Fine Thread and other Storiesகாவியம் – 4
தொடக்க சாதவாகனர் காலம், அன்னை தெய்வம், பொமு 2, சுடுமண் சிற்பம், பைத்தான் அருங்காட்சியகம்தன் தங்கை மறைந்த அன்றுதான் அம்மா தன் பாட்டியிடம் முதன் முதலாகப் பேசினாள். தங்கையை அப்பா தூக்கிச் செல்வதை அவள் இருட்டில் கண்மூடிக்கிடந்து, காலடியோசைகள் வழியாகக் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தங்கையுடன் அப்பா வாசலைத் தாண்டிச் சென்றதும் அவள் உடலில் ஒரு முடிச்சு அவிழ்ந்ததுபோல விதிர்ப்பு ஏற்பட்டது. அவள் புரண்டு படுத்து வைக்கோல்த் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அருகே அவள் அம்மாவும் தூங்காமல் படுத்திருந்தாள் என்பதை உணர்ந்தாள். அவள் பெருமூச்சுவிட்ட சற்று நேரத்தில் அம்மாவும் பெருமூச்சுவிட்டாள்.
ஆனால், எதிர்பாராதபடி அவள் அன்றிரவு மிக ஆழ்ந்து தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தபோது நன்றாகவே ஒளி வந்திருந்தது. எழுந்து சமையலறைக்குச் சென்றபோது அவள் அம்மா கீழே குந்தி அமர்ந்து வரட்டியை எரியவிட்டு சோளத்தை வறுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா அவளிடம் திரும்பி பல்தேய்த்துவிட்டு வரும்படிச் சொன்னாள். அம்மாவின் கண்கள் வழக்கம்போலத்தான் இருந்தன. அப்பா சாணி மெழுகப்பட்ட திண்ணையில் குந்தி அமர்ந்து பீடியை ஆழ இழுத்து இருமிக்கொண்டிருந்தார். அம்மாவைக் கடந்து பின்னால் சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு, கரிப்பொடியை அள்ளிக்கொண்டு கொல்லைப்பக்கத்தில் பானை அருகே அமர்ந்து பல்தேய்த்துக்கொண்டிருந்தபோது அவளுக்குத் தோன்றியது, அம்மாவின் பார்வை வழக்கம்போல இல்லை என்று. அது மிகவும் வழக்கம்போலிருந்தது, மிகக்கவனமாக நிகழ்த்தப்பட்ட வழக்கம் போல.
அவள் அம்மா கரைத்துக்கொடுத்த கூழைக் குடித்துவிட்டு குடத்தை எடுத்துக்கொண்டு நீர் மொண்டுவரச் சென்றாள். நூறுகுடத்திற்குமேல் தண்ணீர் தேவைப்படும். கன்று ஈனவிருக்கும் எருமையை அருகே சாலமரத்தடியிலேயே கட்டியிருந்தனர், அதை கோதாவரிச் சதுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்புவதில்லை. அதற்கு நாள் முழுக்க தண்ணீர் தேவைப்படும். எருமையை அவிழ்த்துக்கட்டி, சோளத்தட்டைகளை அள்ளி தீனியாகப் போட்டுவிட்டு, சாணியை வழித்துக் கொண்டுசென்று கொட்டியபின் அவள் வந்தபோது அம்மா அவளுக்கு வறுத்தசோள உருண்டையைத் தந்தாள். அதை மென்றபடி அவள் திண்ணையில் அமர்ந்தாள்.
தன் மனம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அத்தனை ஒழிந்துகிடப்பதை அவளே வியப்புடன் உணர்ந்துகொண்டாள். சோள உருண்டை முன்பெங்கும் இல்லாத அளவு சுவையாக இருந்தது. முற்றத்தில் வேப்பமரத்தில் இருந்து இறங்கி கூடையை கடந்து அருகே தயங்கி தயங்கி வந்து அவள் அசைந்ததும் சட்டென்று பின்னால் பாய்ந்து மரத்தில் ஏறிக்கொண்ட அணிலை அவள் அத்தனை கூர்ந்து முன்பு எப்போதும் பார்த்ததில்லை. அவள் எப்போதென்று தெரியாமல் தூங்கிவிட்டாள். திண்ணையிலேயே சரிந்து விழுந்து, தன்மேல் விழுந்த வெயிலின் கதகதப்பில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். கனவிலும் அவள்மேல் வெயில் விழுந்துகொண்டிருந்தது. மரங்களும், வீடுகளும், மண்சாலைகளும் எல்லாம் சிவப்பாக இருந்தன. அப்போது அவள் தன் தங்கையைப் பார்த்தாள்.
தங்கையை அவள் பாட்டி இடுப்பில் வைத்திருந்தாள். தங்கை அவளிடம் ஏதோ கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்க பாட்டி அவளை முத்தமிட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மா குழறிக்கொண்டு விழித்து எழுந்து அமர்ந்து எங்கிருக்கிறோம் என்று திகைத்தாள். வெயில் முற்றத்தில் இடம் மாறியிருந்தது. கோழிகள் வெயிலுக்கு அஞ்சி வைக்கோல் குவியலுக்குள் அமர்ந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அம்மா எழுந்து சென்று பார்த்தபோது அம்மா உள்ளே தரையில் துணியை விரித்து தூங்கிக்கொண்டிருந்தாள். அடுப்பங்கரையில் மூடிவைக்கப்பட்ட சோற்றுக்கலத்தின் அருகே பூனை அமர்ந்திருந்தது. அவளை திரும்பிப் பார்த்து பாதிமூடிய கண்களுடன் மெல்லிய ஓசையிட்டது.
அம்மா அப்போது உணர்ந்தது என்ன என்பதை அவள் என்னிடம் சொன்னாள். அவள் ஏன் இரவில் அப்படித் தூங்கினாள் என்றுதான். திரும்பத் திரும்ப அது ஒன்றுதான். அத்தகைய நிம்மதியிழக்கச் செய்யும் எண்ணங்களை உடனடியாக தவிர்க்க முயல்வது உள்ளத்தின் இயல்பு. மாறாக அவள் உள்ளம் அந்த எண்ணத்தை பெருக்க விரும்பியது. அதில் ஒரு குரூரமான இன்பத்தைக்கூட அடைந்தது. அவள் தன்னை தண்டிக்க விரும்பினாள். ஆகவேதான் அவள் எவருமறியாது பாட்டியின் குடில்நோக்கிச் சென்றாள். குடிலை நெருங்க நெருங்க அவளுடைய நடையின் வேகம் அதிகரித்தது. குடிலுக்குள் பாட்டியுடன் தங்கை இருப்பாள் என்று அவள் எணணவில்லை, ஆனால் அக்கனவு நினைவில் இருந்தது. குடிலுக்குள் வேறு ஏதோ ஒன்று நிகழுமென எண்ணினாள். அத்தனைபேரும் அஞ்சிக்கொண்டிருப்பது ஒன்று.
குடிலுக்குள் அவள் பாட்டி எப்போதும்போல சுவர்களை மாறிமாறி தொட்டபடி சுற்றி வந்துகொண்டிருந்தாள். குடில் நடுவே அறையப்பட்ட ஆணியில் கட்டப்பட்டிருந்த அவளுடைய காலின் இரும்புச்சங்கிலி அவளுடன் தரைப்புழுதியை சீவியபடி சுற்றிவந்தது. அது சுற்றிச்சுற்றி உருவான வட்டம் பலநூறு கோடுகளால் ஆனதாக இருதது. ஒரு பெரிய கோலம் போல. அது தானாகவே சுழல்வதுபோலவும் அவள் அதில் சிக்கிச் சுழல்வதுபோலவும் தோன்றியது. அந்தப் புழுதி அத்தனை மென்மையானதாக ஆகி, அது சுழன்றுவரும்போது ஓசையே எழவில்லை. அவள் எவரிடமோ உரையாடிக் கொண்டிருப்பதாக அம்மா முதலில் நினைத்தாள். ஆனால் உள்ளே சென்றபோது அவள் எவரிடமும் பேசவில்லை என்று தெரிந்தது. பாட்டி சீரான, உறுதியான குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அவள் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் என்பதை அம்மா பின்னர்தான் அறிந்தாள்.
உள்ளே சென்று அம்மா அசையாமல் பாட்டியை பார்த்தபடி நின்றாள். உடல் மெலிந்து எலும்புகள் தெரிந்தன. வற்றி, நீரிழந்து, தசை உலர்ந்து ஆணென்றும் பெண்ணென்றுமான வேறுபாடுகளைக் கடந்துவிட்ட உடல். ஒரு காலகட்டத்தில் அவள் பேரழகியாக இருந்தாள் என்று முதியவர்கள் சொல்லி அவள் அறிந்திருந்தாள். தோலில் அழுக்கு படிந்து கிழங்கின் தோல் போலவே மாறி விரிசல்கள் விட்டு வெடித்திருந்தது. கால்நகங்கள் கருமையாக வளைந்திருந்தன. இடைக்கும் கீழே தழைந்து கிடந்த சடைக்கற்றைகள் மண்ணாலானவை போலிருந்தன. தன்னை அவள் உணர்ந்ததும் எழவிருக்கும் உறுமலோசைக்காக அம்மா காத்திருந்தாள். ஆனால் நெஞ்சில் அச்சம் இருக்கவில்லை. பதற்றம்கூட இருக்கவில்லை. விந்தையான ஓர் இனிமை மட்டுமே இருந்தது.
அவளை பாட்டி திரும்பிப் பார்த்தாள். அம்மா அந்தக் கண்களைக் கண்டு நெகிழ்ந்தாள். அவை சிறுகுழந்தையின் தெளிந்த கண்கள். அந்த முகத்தில் விரிந்த புன்னகையை மிக அழகானதாக அவை மாற்றின. அப்படியே ஓடிச்சென்று அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்குள் இருந்த தாயை விம்மவைத்த புன்னகை அது. அம்மா அருகே சென்றதும் பாட்டி அவளை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவள் உடலில் இருந்து முதல்மழையின் மண்மணம் எழுந்தது. அவள் கைகள் பூமாலைபோல மென்மையான எடைகொண்டிருந்தன.
பாட்டி அவளிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கென்றே கனிந்து பேசுவதுபோன்ற சொற்கள். முதிராத கன்னியின் சிரிப்பும் குழைவுமாக கொஞ்சுவது போன்ற பேச்சு. அவளுக்கு அதில் ஒரு சொல்லும் புரியவில்லை. ஆனால் அச்சொற்களில் இருந்து அணுவளவும் அகம் விலகவில்லை. அந்த இனிமையில் இருந்து மீளவேண்டும் என்னும் எண்ணமே வரவில்லை. பாட்டி அவள் முகவாயை தொட்டு அந்த அறையின் மூலைகளில் நின்றிருந்த நிழல்களைக் காட்டினாள். தரையில் நீர் சிந்தி ஊறிப்பரந்தது போலிருந்த நிழலைக் காட்டி சிரித்தாள். அம்மா அந்நிழலை பார்த்துக்கொண்டு பொழுதுமயங்கி நின்றிருந்தாள். கதைசொல்லும் பிசாசை அவள் முதல்முறையாகக் கண்டது அப்போதுதான். அவள் கலைந்து வெளியே ஓடியது அப்பால் மஹதி உணவுக்கலத்துடன் வரும் ஓசையைக் கேட்டபோதுதான்.
பொழுதைப் பற்றிய கணக்கு இல்லாமல், விலகவேண்டும் என்னும் உணர்ச்சி இல்லாமல் எந்த அனுபவமும் வாழ்க்கையில் நிகழ்வதே இல்லை. மிகச்சிறிய அனுபவம்கூட. இங்கே இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்னும் உணர்வு அது. மனம் என்பது அதுவே. எதை அறிகையிலும் ‘நான் அறிகிறேன்’ என மனம் அதை அறிகிறது. தன்னை இழந்து அது எதிலும் இறங்குவதில்லை. திரும்பி வர ஒரு சரடை எஞ்சவிடாமல் எந்த ஆழத்திலும் மூழ்குவதில்லை. தன்னை இழந்து நாம் சென்றடைந்த அனுபவங்களை அடைவது மனம் அல்ல. அந்த அறிதல்கள் மனம் கடந்தவை, அவை மீண்டு எழுகையிலும் மனம் நாணியோ அஞ்சியோ சுருங்கி மறைந்துவிடுகிறது. மனம் அறியாத அறிதல்கள் நம் நினைவுக்குள்ளும் இருப்பதில்லை. அம்மாவுக்கு அங்கே நிகழ்ந்தது என்ன என்பது முற்றிலும் நினைவில் இல்லை. அவள் பேசத்தொடங்கினாள் என்பதை மட்டுமே எத்தனை ஆழ்ந்து சென்றாலும் நினைவுகூர முடிந்தது. ஆனால் அவள் அறிந்திருந்தாள்.
அம்மா பாட்டியிடமிருந்து கேட்டது பாட்டி கோதாவரியின் கரையில் மிகவிடியலில் நீராடச்சென்ற கதையை. தற்செயலாக அன்று பாட்டி விழித்துக்கொண்டபோது விடிவெள்ளி எழுந்திருக்கவில்லை. வெளியே வந்து வானைநோக்கி விடிவெள்ளி இல்லை என்று கண்டதும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்புதான் தோன்றியது. ஏன் செல்லக்கூடாது? விடிவெள்ளியைக் கண்டதுமே இரவெல்லாம் இருளுக்குள் அலையும் நிலையழிந்த நிழல்கள் தங்களைச் சுருக்கிக்கொள்ளும். கூழாங்கற்களுக்கும் இலைகளுக்கும் அடியில் அவை பதுங்கிவிடும். நிழல்கள் அலையும் இரவில் சித்தம் சற்றேனும் தெளிந்திருக்கும் எவரும் தனித்து வெளியே செல்லக்கூடாது. அதிலும் நாககட்டத்தின் அருகே ஆயிரம் ஆண்டுகளாகச் சிதைகள் எரிந்துகொண்டிருக்கும் சுடுகாட்டின் சிதைந்த படிக்கட்டுகள் கொண்ட படித்துறைக்குச் செல்வதை எண்ணிக்கூட பார்க்கலாகாது. ஏன் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது. நிழல்களில் ஒன்றை நேருக்கு நேர் காண்பதென்றால்கூட அவளுக்கு அச்சமில்லை.
அவள் தொலைவில் அந்த நிழலைப் பார்த்ததும் அதை இரவென்னும் இருட்டின் அலைப்பரப்பில் தோன்றிய ஒரு மெல்லிய குமிழி என்று நினைத்தாள். அது மிதந்து இறங்கி மண்ணில் படிந்து மெல்ல விரிந்து பரவியதுபோல் இருந்தது. அது கதைசொல்லும் பிசாசு என்று பாட்டிதான் என் அம்மாவிடம் சொன்னாள். அளவிட முடியாத கதைகள் தெரிந்தது அது. அத்தனை கதைகளையும் சொல்லியாக வேண்டும் என்னும் பெருந்துடிப்பு கொண்டது. இந்த உலகில் கதைகளைப் போல ஒளியும் இனிமையும் கொண்டவை வேறில்லை. முடிவில்லாத வண்ணங்கள் கொண்டவை, கணந்தோறும் வளர்பவை, ஒருபோதும் குன்றாதவை அவை. கதைகளின் உயிரூற்று அந்தப் பிசாசு. கதைகளின் முடிவின்மையாலேயே அது துயருற்றதாக ஆகிவிட்டிருந்தது. இன்பம் எனும் மறுபக்கம் இல்லாத துயரம் அது. அந்த துயரத்தால் அது பேரழகு கொண்டதாக இருந்தது.
ஆனால் பாட்டி சொன்னது அதைத்தான் என்று அம்மா அறிந்துகொண்டது மேலும் நீண்டநாட்களுக்குப் பின். அன்று பாட்டியைச் சந்தித்தபின் அவள் பிறிதொருத்தியாக ஆனாள். அவள் பூசலிடவில்லை, சீற்றம் கொள்ளவில்லை, எதன் பொருட்டும் எரிச்சலடையவும் இல்லை. அவள் எவரிடமும் பேசிச்சிரிப்பதில்லை, தின்பதிலும் ஆடைகளிலும் ஆர்வமும் இல்லை. தன்னுள் ஆழ்ந்து சென்றவளாக இருந்தாள். ஆனால் பிறர் அஞ்சும் ஆற்றல்கொண்டவளாக இருந்தாள்.
ஆடையை மடித்து மடித்து இறுக்கி பானைக்குள் வைப்பதை அவள் இளமையில் கண்டது உண்டு. அம்மா நீவி நீவி துணியை மடிப்பாள். வண்ணமும் வடிவமும் ஆக விரிந்த ஒன்று மடிந்து மடிந்து தன்னுள் தானே சென்றுகொண்டே இருப்பதை வியப்புடன் அவள் அருகே இருந்து பார்ப்பாள். தன் குடிலை அப்படி அதற்குள் அதுவே மடிந்து செல்லச் செய்யமுடியுமா? வீட்டுமுன் விரிந்த முற்றத்தையும், அதன்மேல் கவிந்த வானையும், அத்தனை மரங்களுடனும் செடிகளுடனும் பறவைகளுடனும் வானுடனும் அப்படி அதற்குள் அதைச் செலுத்திச் சுருக்கிச் சுருக்கிச் செல்ல முடியுமா? சிறுமியாக அதைப்பற்றி அவள் தனித்து அமர்ந்து கனவு கண்டதுண்டு. அன்று அவள் அப்படி தன்னுள் மடிந்து மடிந்து இறுகிச்சென்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு என் அப்பாவுடன் திருமணமாகியது. அவளுடைய கல்போன்ற மௌனத்துடன் என் அம்மா பைத்தானில் என் அப்பாவின் வீடிருந்த இன்னொரு பகுதிக்கு மணமகளாக வந்தாள். என் அப்பாவால் ஒரு கணம்கூட வெல்லமுடியாத பெண்ணாக இருந்தாள். நான் பிறந்தபின், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில் அவள் விடிவெள்ளி முளைப்பதற்கு முன்னரே கிளம்பி கோதாவரியின் சீதா கட்டத்திற்குச் சென்றாள். படிகளில் அவள் இறங்கிச் சென்றபோது வானத்தில் இருந்த இருள் நீராவியில் கூரைக்கரி ஊறிச்சொட்டுவதுபோல நிலத்தில் விழுந்து குவிந்திருந்த ஒரு கரிய வடிவத்தைக் கண்டாள். அவள் திடுக்கிட்டு அசையாமல் நின்றாள். பின்னர் அதை முன்பு கண்டிருந்ததை நினைவுகூர்ந்தாள். தயக்கமில்லாத கால்களுடன் அதை நோக்கிச் சென்றாள்.
கதைகளைச் சொல்லும் பிசாசும் அவளை நன்கறிந்திருந்தது. அவளைக் கண்டதும் அது எழுந்து நின்று இரு கைகளையும் விரித்தது. அவள் அருகே சென்றதும் அது சிறிய வெண்ணிறமான பற்களைக் காட்டிச் சிரித்தது. தெளிந்த குழந்தைக் கண்களுடன் அவளை வரவேற்றது. அதன் மொழியை அவள் நன்றாகவே புரிந்து கொண்டாள். அக்கணம் அவளிடம் அவள் பாட்டி சொன்னவை எல்லாம் புரிந்தன. அவள் அதுவரை கேட்டறிந்த எல்லா சொற்களும் தெளிவடைந்தன. அவள் தன்னுள்ளும் பிறரிடமும் பேசிக்கொண்டிருந்த மொழியிலேயே அச்சொற்கள் ஊடுருவி நிறைந்திருந்தன என்று கண்டாள். அச்சொற்களைக் கொண்டு அவள் அதுகாறும் சொன்னவையும் புரிந்துகொண்டவையும் அல்ல அவற்றின் உண்மையான பொருள் என உணர்ந்தாள். அது வரை அவள் பேசியவை, கேட்டவை, எண்ணியவை எல்லாம் உண்மையில் என்னென்ன என்று அறிந்துகொண்டாள்.
அம்மா என்னிடம் சொன்னாள். “கதைசொல்லும் பிசாசு மிகமிகத் தனிமையானது. அதன் கதைகளின் உலகில் அது மட்டுமே உள்ளது. அது கதைசொல்வதே தன் தனிமையை கலைத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் கதைகளினூடாக அது மீண்டும் மீண்டும் தன் தனிமையை உணர்கிறது. கதைகள் அதன்மேல் மலைப்பாறைகளை தூக்கி வைத்ததுபோல் அழுந்தியிருக்கின்றன. பாறைகளை வெடிக்கவைத்து வெளிவரும் மெல்லிய வேர்போலத்தான் அதன் மொழி வெளியே வருகிறது.
அம்மா என்னிடம் அந்தப் பிசாசைப் பற்றிச் சொன்னாள். “அது அழிவற்றது. அழிவின்மை என்பது எத்தனை பெரிய சுமை என்று உணர்ந்தது. இங்கே அழிவற்றவை அனைத்துமே குளிர்ந்து எடைகொண்டு தன்னைத் தான் சுமக்க முடியாமல் அமைந்திருக்கின்றன”
அம்மா கதைகளின் பிசாசிடமிருந்து கதைகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாத நிழலாக எப்போதும் இருந்தபடி அது தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தது. அரிதாக அதை ஒரு கணமின்னலாக கண்ணால் பார்க்கவும் அவளால் முடிந்தது. அம்மாவை ஆற்றல்மிக்கவளாக ஆக்கியது அந்த நிழல். அவளுடைய நாட்களை முழுக்க இனியதாக ஆக்கியது. நானறிந்த பெண்களில் என் அம்மாவுக்கு நிகரான ஒருவரை கண்டதில்லை. அம்மாவுக்கு முதுமை வரவே இல்லை. நடுவயதுகூட வரவில்லை. மாறாத இளங்கன்னிப்பருவம் கொண்டவளாகவே அவள் இருந்தாள். என் அம்மாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் ‘அவளுடன் எப்போதும் ஒரு பிசாசு உள்ளது. முடிவில்லாத கதைகளுடன் காலம்கடந்து என்றுமென இருந்துகொண்டிருப்பது’ என்று நான் சொல்வேன். கேட்பவர்கள் அதை அவரவருக்கு தோன்றியபடி விளங்கிக்கொள்வார்கள்.
ஐம்பத்தாறு வயதில் அம்மா இறப்பது வரை. இறக்கும்பொழுதில் அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னாள். “அந்தப் பிசாசை நாம் தனித்துவிடக்கூடாது. நான் அதை உனக்கு தந்துவிட்டுப் போகவா?”
நான் “ஆம் அம்மா… எனக்கு அது வேண்டும்…” என்று சொன்னேன். நன்கு எண்ணித்தான் அதைச் சொன்னேன். ஏனென்றால் தாளமுடியாத தனிமையில் இருந்தேன். அம்மா இல்லாமலான பிறகு என்னிடம் எஞ்சவிருக்கும் தனிமையைப் பற்றி என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
அம்மா பக்கவாட்டில் திரும்பி சுவர்மூலையின் இருட்டை நோக்கி பொருளறியாத பைசாசிக மொழியில் ஏதோ சொன்னாள். சுவர்மூலையில் இருட்டில் ஓர் அசைவு தெரிவதுபோல் இருந்தது. அம்மா புன்னகையுடன் என்னிடம் “நீ எனக்கு பிரியமானவன்” என்று சொல்லிவிட்டு விழிகளை மூடிக்கொண்டாள்.
(மேலும்)
ஆர்.ஆர்.கெய்தான்
அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.
ஆர்.ஆர். கெய்தான் – தமிழ் விக்கி
My time in Nithyavanam
I am a 15 year old avid reader who’s mother is a very ardent follower of your books and blog, and grandmother who has also written you two letters of her experiences after following my mothers footsteps into your works. We have met and talked once in the past, though I’m quite sure you will not remember me amidst the throng of your admirers, even with the gargantuan memory you possess. I have two reasons for writing this short letter, to tell you about my time in the traditional yoga retreat in Nithyavanam last week, and because my mother thought it was essential I write to you about it.
My time in Nithyavanamநீங்கள் கமல் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். கமல் ஹாசனின் அந்த தணியாத கல்வித்தாகம் என்பது அனைவருக்குமே முன்னுதாரணமான ஒன்றுதான். இந்தியாவில் எழுபது வயது என்பது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நாமே முடிவுகட்டிவிடும் பருவம்.
கமல், இளமை, கடிதம்April 23, 2025
அழகிய தொன்மங்களின் கொத்து
எகிப்தில் லக்ஸர் என்னும் ஊரில், அமன்ஹோட்டப் கட்டிய, தொடர்ந்து ஆயிரமாண்டுகள் கட்டப்பட்டுக்கொண்டே இருந்த மாபெரும் ஆலயத்தை பார்த்துவிட்டு வந்து இதை எழுதுகிறேன். மாபெரும் தூண்கள் கொண்ட ஆலயம் அது. இந்நூல் ஆயிரம்கால் மண்டபம் என்னும் தலைப்பு கொண்டது.
ஆயிரங்கால் மண்டபம் என்னும் சிறிய அழகிய கதை எனக்கு என்றும் பிரியமான ஒன்று. ஏனென்றால் இதில் கதைநாயகியாக நான் உருவகித்திருப்பது குழந்தையான அருண்மொழியை – அவள் பெயருக்கு நிகரான ஓர் அழகிய தமிழ்ப்பெயரை அக்கதாபாத்திரத்திற்குப் போட்டிருந்தேன். வடிவ ஒழுங்கும் உருவக அமைதியும் இயல்பான கள்ளமின்மையும் கூடிவந்த அக்கதையை என் சிறந்த கதைகளில் ஒன்றாகவே கருதுகிறேன்.
தொண்ணூறுகளில் தமிழில் வெளிவந்த இந்தியா டுடே இதழ் நவீனத்தமிழிலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியாக அமைந்தது. அதில் வண்ண ஓவியங்களுடன் சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளின் கதைகள் வெளியாயின. அவர்களுக்குப் பிற இதழ்களில் வழங்கப்படுவதைவிட பத்து மடங்கு பெரிய மதிப்பூதியமும் வழங்கப்பட்டது. மாலன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் என் கதைகள் ஏதும் அதில் வெளியாகவில்லை. ஆனால் வாசந்தி ஆசிரியராக வெளிவந்தபின் என் கதைகள் அதில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அக்கதைகள் அன்று புதியவகை எழுத்தின் தொடக்கமாக கருதப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றன. நான் உருவகக்கதைகள், வரலாற்று மறு ஆக்கக்கதைகள், தொன்ம மறுஆக்கக்கதைகள், நேரடியான யதார்த்தக்கதைகள் என பலவகையான படைப்புகளை இந்தியா டுடே இதழில் எழுதினேன். இன்று எண்ணுகையில் என் உருவாக்கத்தில் இந்தியாடுடே இதழும் வாசந்தியும் அளித்த பங்களிப்பு கோவை ஞானியும் (நிகழ்) கோமல் சுவாமிநாதனும் (சுபமங்களா) அளித்த பங்களிப்புக்கு நிகரானது என்று தோன்றுகிறது. வாசந்தியை இத்தருணத்தில் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.
இக்கதைகள் பற்றி எனக்கு ஒரு தெளிவு அன்றே இருந்தது. தமிழ்ச்சிறுகதையின் நவீனத்துவ இறுக்கத்தைக் கடந்து செல்ல அன்றைய இளம் படைப்பாளிகளாக இருந்த கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றவர்கள் முயன்றுகொண்டிருந்த காலம். நான் கதையமைப்பு, கதை அளிக்கும் சுவாரசியம் இரண்டையும் இழக்காமலேயே எழுதவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்தேன். என் கதையை ஒருவர் இன்னொருவரிடம் சொன்னாலும் பெரும்பாலும் ஏதும் இழக்கப்பட்டிருக்கக்கூடாது. இலக்கியம் என்பது படிமம், கதை என்னும் இரண்டு அடிப்படைக்கூறுகளால் ஆனது என்பதே என் எண்ணம். இரண்டும் சரிவர அமைவதே இலக்கியத்தின் வடிவம். வடிவச்சோதனைக்காக அவையிரண்டையும் கைவிட நான் சித்தமாக இருக்கவில்லை. அத்தகைய எழுத்துகள் மேல் எனக்கு அன்றுமின்றும் ஈர்ப்பில்லை. இலக்கியம் என்பது ஆழுள்ளம் மொழியில் வெளிப்படுவதற்கான ஒரு வழிமுறை. மொழியில் நிகழும் கனவு. அதை எய்தவே முயன்றேன். இன்று வாசிக்கையிலும் இத்தொகுதியிலுள்ள கதைகள் தொன்மங்களின் வசீகரத்துடன், காலம்கடந்து நின்றிருக்கும் வடிவத்துடன் உள்ளன என்பது என் எண்ணம் சரியே என்பதற்கான சான்று.
வெண்முரசு எழுதியபின், முப்பதாண்டுகள் கழித்து, அன்று எழுதிய கதைகளை ஒவ்வொன்றாக படித்துப்பார்க்கிறேன். இவற்றில் சில கதைகளை வெண்முரசில் எளிதாகச் சரியாகப்பொருத்திவிடலாம் என்பதே என் கலையுணர்வு தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கான சான்றாக எனக்குப் படுகிறது. இதிலுள்ள மாயங்கள் எல்லாமே கனவோ கவியுருவகமோதான். அவையெல்லாமே என் ஆழத்திற்கு, நான் உருவாகி வந்த பண்பாட்டின் அடித்தளத்திற்கு, மானுடத்தின் அறியாப்பக்கங்களுக்கு நீள்வனவாகவே உள்ளன. இவற்றில் சில கதைகள் இப்போது ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு உலக இலக்கிய வாசகர்களைச் சென்றடையும்போது அவர்களுக்கு அவை மிகப்புதியனவாக இருக்கின்றன, ஆழமும் அழுத்தமும் கொண்ட கலைப்படைப்புகளாகவும் மதிப்பிடப்படுகின்றன. அது இப்போது அளிக்கும் நிறைவே இந்நூலை இன்று முன்வைக்கத் தூண்டுகிறது.
இந்நூலை முதலில் வெளியிட்ட கவிதா பதிப்பகத்திற்கும், பின்னர் வெளியிட்ட உயிர்மை, கிழக்கு பதிப்பகங்களுக்கும், இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
ஜெ
ஆயிரங்கால் மண்டபம் வாங்க ஆயிரங்கால் மண்டபம் மின்னூல் வாங்ககாவியம் – 3
(சாதவாகனர் காலம், பொயு1- பைத்தான் அருங்காட்சியகம். பைசாசம்)விளையாட்டின்போதுகூட பாட்டியின் அறையருகே செல்லக்கூடாது என்று குழந்தைகளை கடுமையாக விலக்கியிருந்தார்கள். அவள் சொல்லும் சொற்களை செவிகொடுத்துக் கேட்கக்கூடாது. அதை கைக்குழந்தையாக இருக்கையிலேயே ஒவ்வொருவருக்கும் சொல்லிச் சொல்லி நிறுவியிருந்தனர். அவற்றில் ஒரு சொல்கூடப் புரிவதில்லை, ஆனால் புரியாத மொழி என்பதே ஒரு நிழல் என்று என் அம்மாவிடம் அவள் அம்மா சொன்னாள். புரியாத மொழி என்பது அயலூரில் இருந்து வந்த பைத்தியக்காரன் போல. அவன் தன் வீடு என நினைத்து நம் வீட்டுக் கதவை மோதுகிறான். தட்டித்தட்டிக் கூச்சலிட்டு அலறுகிறான் நாம் மூடித்தாழிட்டால் அதன் மேல் தலையால் அறைகிறான். வீட்டைச்சுற்றி ஓடி ஓடி எல்லா கதவுகளையும் உடைக்க முயல்கிறான். அவனை திருப்பி அனுப்பவே முடியாது. நாம் சொல்லும் எதுவும் அவனுக்குப் புரிவதில்லை. நம்மிடமிருந்து எதுவும் அவனை நோக்கிச் செல்வதில்லை. அவன் முடிவில்லாது நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறான்.
எங்கோ ஒரு புள்ளியில் நம் மனம் நிலையழிகிறது. ஏன் என்பதை எவரும் அறியமுடியாது. அறியாதவற்றை நம்மால் தவிர்க்கவே முடியாது. நாம் என்ன எளிய விலங்குகள் கூட அறியாதவற்றை விட்டு விலகுவதில்லை. அறியவே முடியாதவையோ பலநூறு மடங்கு ஈர்ப்பு கொண்டவை. அவற்றை நம் கண்ணோ காதோ உள்ளமோ தொட்டுவிட்டால் அதன்பின் நாம் எவ்வளவு போராடினாலும் பயனில்லை. பணிந்து விழுந்து நம்மை அதற்கு ஒப்படைத்துக்கொண்டே ஆகவேண்டும். அறியாத பைத்தியக்காரன் ஒவ்வொரு குரலுக்கும், ஒவ்வொரு தட்டலுக்கும் மேலும் வளர்ந்தவனாக நம் கதவுகளை அறைகிறான். நாம் ஒரு சிறு கதவை சற்றே திறந்து அவனைப் பார்க்கமுயல்கிறோம். அவன் அக்கதவை உடைத்து திறந்து உள்ளே வந்துவிடுகிறான்.
என் அம்மாவின் வீட்டில் எல்லாருக்குள்ளும் அவள் பைத்தியக்கார மொழி சிறிதளவேனும் இருந்தது. குடித்துவிட்டு வந்து பூசலிடும்போது அவள் அப்பா திகைக்கச்செய்யும் ஒலிகொண்ட சொற்களைச் சொன்னார். அவர் கையிலிருந்து அடிவாங்கி அலறி அழும்போது ஆங்காரத்துடன் அடிவயிற்றில் அறைந்து அவள் அம்மா புதியமொழி பேசினாள். பெரியவர்கள் அறியாமல் பேசிக்கொள்கையில் குழந்தைகள் ரகசியமான சொற்களைப் பேசிக்கொண்டன. அந்த ஊரில் அந்த மொழியின் ஒரு சொல்லேனும் ஒருநாளில் எங்காவது ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஒரு சொல் ஒரே ஒருமுறை ஒலித்தால்கூட எவர் செவியும் அதை தவறவிடவுமில்லை.
குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த மொழியின் சொற்களில் ரகசிய ஆர்வமிருந்தது. அவை அச்சொற்களை தங்கள் விளையாட்டின் பொருட்களையும் நிகழ்வுகளையும் குறிக்க பயன்படுத்தின. அந்தச் சொற்கள் அந்த பொருளில் பெரியவர்களிடமும் சென்று சேர்ந்தன. அர்த்தம் கொண்டதுமே அவை பிசாசின் சொற்களாக அல்லாமலாயின. அவற்றை அவர்களின் பேசுமொழி ஏற்றுக்கொண்டது. காட்டுச்செந்நாய் வளர்ப்புநாய்களைப் புணர்வதுபோல அந்த மொழி அவர்களின் மொழிக்குள் நுழைந்து பெற்றுப்பெருகியது. அவர்கள் பேசிய மொழியில் இருந்த பிசாசின் சொற்கள் சொல்பவரும் கேட்பவரும் அறியாமல் புழங்கின. சொல்பவர் சொல்லாத கேட்பவர் அடையாத அர்த்தங்களை உண்டுபண்ணிக்கொண்டன.
என் அம்மாவின் தங்கை பிறந்து ஒருவயதாகி தன் முதல்சொல்லைப் பேசியபோது அது பைசாசிக மொழியின் சொல்லாக இருந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். அவளை எங்கள் குலதெய்வம் சீதளையின் ஆலயத்திற்குக் கொண்டுசென்று கோழிபலி அளித்து வழிபட்டனர். ஒரு கையில் துடைப்பமும் மறுகையில் கலமுமாக நின்றிருந்த அன்னையின் கால்களில் கோழியின் குருதியை சொட்டி வழிபட்டனர். கோழிக்குருதியின் துளியை தங்கையின் நாவில் தடவினர். கோழிக்குருதி கலந்த சோற்றை ஏழுமுறை கோதாவரியில் வீசி அந்த நீர்ப்பரப்பில் மீன்களாக ஆழத்தில் வாழும் தெய்வங்களுக்கு ஊட்டினர்.
ஆனால் அவள் மீண்டும் மீண்டும் அச்சொல்லையே சொல்லிக்கொண்டிருந்தாள். மலர்ந்த கண்களுடன், இனிய சிரிப்புடன், சிறிய சுட்டுவிரலை தூக்கி அவள் ஒவ்வொருவரை நோக்கியும் அதைச் சொன்னாள். வெளியே சென்று பார்த்த ஒவ்வொன்றிடமும் சொன்னாள். அச்சொல் வழியாகவே அவள் உலகத்தையும், உறவுகளையும் அறிந்துகொண்டிருந்தாள். காகங்கள் அச்சொல்லை அவளிடமிருந்து கேட்டு திடுக்கிட்டு எழுந்து பறந்தன. எருமைகள் மிரண்டு கட்டுத்தறியைச் சுற்றிவந்தன.
இரவில், குரட்டைகள் ஒலிக்கும் இருளில், அச்சொல்லைக் கேட்டு அம்மா திகைத்து எழுந்து அமர்ந்து நெஞ்சை அழுத்தியபடி அமர்ந்து கவனித்தாள். எவரும் விழித்திருக்கவில்லை. இருட்டுக்குள் அச்சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது. எண்ணை விளக்கை ஏற்றி அவள் ஒவ்வொரு முகமாகப் பார்த்தாள். அவள் மகளின் உதடுகளில் இருந்துதான் அச்சொற்கள் வந்துகொண்டிருந்தன. அவள் முகம் எதையோ எண்ணி மகிழ்ந்து மலர்ந்திருந்தது. அம்மா மூச்சுப்பதற தன் கணவனை உலுக்கி எழுப்பினாள். அவர்கள் மங்கிய விளக்கொளியில் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அவளை எங்கேனும் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று அவளுடைய தாய்மாமன்கள் சொன்னார்கள். கிராமத்தில் அனைவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அவளிடமிருந்து அச்சொற்கள் குழந்தைகளுக்குப் பரவிவிட்டால் எவர் பொறுப்பேற்பது? ஆனால் சிறுகுழந்தையை அவ்வாறு விட்டுவிட அவள் அன்னைக்கு மனமில்லை. குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு அதை விடவே மாட்டேன் என்று அவள் அலறினாள். அதை தொடவந்தவர்களை சீற்றம்கொண்ட பூனைபோல பற்களைக்காட்டி தாக்கவந்தாள்.
குழந்தையின் தாய்மாமன்கள் ஆற்றின் மறுகரையில் இருந்து பூசகர்களை கொண்டுவந்து மந்திரித்தார்கள். ஒவ்வொருவரும் அவர்களின் சாம்பல் பட்டதுமே குழந்தைக்குள் நுழைந்துவிட்ட நிழல் அகன்றுவிடும் என்றனர். ஆனால் அவள் அடுத்த சொல்லையும் அந்த விந்தையான அயல்மொழியில் இருந்தே சொன்னாள். இறுதியாக வந்த மந்திரவாதி “இது வந்தமைந்த நிழல் அல்ல. கருவிலேயே உள்ளே நுழைந்து உயிரென்றே ஆகிவிட்ட நிழல். அவள் உடலே அந்த நிழல் அணிந்த ஆடைதான்… என்னால் அல்ல எவராலும் ஒன்றும் செய்யமுடியாது” என்றான்.
தன் தங்கையிடம் என் அம்மா பெரும்பாசத்துடன் இருந்தாள். அவள் அம்மாவின் வயிறுநிறைந்து பெருக்கத் தொடங்கியபோதே அவள் அக்குழந்தையை விரும்ப ஆரம்பித்துவிட்டாள். கிராமத்தில் எப்போதும் சிலர் கர்ப்பமாக இருந்தனர். தன் அம்மாவோ தானோ கர்ப்பமாக வேண்டும் என்று சிறுமியாக இருந்த என் அம்மா ஆசைப்பட்டாள். தான் கர்ப்பமாவதற்காக சீதளை அன்னையிடம் ரகசியமாக வேண்டுதல் செய்துவந்தாள். தன் வயிற்றை தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். எருமைக்கடாவின் பெரிய விதைகளை தொட்டு கண்க்ளில் ஒற்றிக்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று தோழி சம்பா சொன்னதை நம்பி பலமுறை செய்துபார்த்தாள்.
தன் அம்மா கர்ப்பமானபோது சிறுமியாக இருந்த என் அம்மா அதை சீதளை அன்னையின் கனிவென்றே எடுத்துக்கொண்டாள். எப்போதும் தன் அம்மாவுடனேயே இருந்தாள். அம்மாவின் வயிற்றை தடவிக்கொண்டும், அதன்மேல் தன் கன்னத்தை மெல்ல அழுத்தி உள்ளே குமிழிகள் வெடிக்கும் ஒலியை கேட்டுகொண்டும் இருந்தாள். அவள் தொடுகையை உணர்ந்து உள்ளிருந்து பலமுறை அவள் தங்கை அவளை மெல்லத் தொட்டாள். நீருக்குள் இருந்து மீன் வந்து தொட்டுச் செல்வதுபோல.
பிறந்த குழந்தை ஒரு காராமணிப் பயறுபோல கருமையாக மின்னியது. முதல்நாளிலேயே அதன் கண்கள் தன்னை அடையாளம் கண்டுகொண்டன என்று என் அம்மா என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் சொன்னாள். அக்குழந்தையின் கண்களில் அத்தனை ஒளி இருந்தது. கைக்குழந்தையின் கண்களிலுள்ள பால்படலம் அவற்றில் இல்லை. அவள் அதன் கைகளில் தன் கைகளை வைத்தபோதெல்லாம் அதன் மெல்லிய விரல்கள் அதை இறுகப்பற்றிக்கொண்டன.
அம்மா தன் தங்கையை விட்டு அகலவே இல்லை. அதனருகே முடிந்தவரை அமர்ந்திருந்தாள். அவளுடனேயே அது வளர்ந்தது. அதைத் தூக்கிக்கொண்டு அலைந்தாள். ஊருணியில் நீர் சேந்தச் செல்லும்போதும், வரட்டி தட்டும்போதும் எல்லாம் தன் இடையிலேயே அக்குழந்தையை வைத்திருந்தாள். ஒருநாள் அக்குழந்தை பேச ஆரம்பித்தபோது அவள்தான் மகிழ்ச்சிக் கூச்சலுடன் அதை தூக்கிக்கொண்டு வந்து அனைவருக்கும் காட்டி துள்ளிக்குதித்தாள். அக்குழந்தை பேசுவது பைசாசிக மொழி என்று அவர்கள் சொல்லி, அஞ்சி வெளிறியபோது திகைத்து குழந்தையை நெஞ்சோடணைத்துக்கொண்டு சுவருடன் ஒட்டிக்கொண்டு நின்றாள்.
அவள் குடும்பமே பதறி கலைந்துவிட்டது. அம்மா வெளியே ஓடி மாமரத்தடியில் நின்று நெஞ்சில் கைவைத்து ஏங்கினார். அப்பா முற்றத்தில் இறங்கிவிட்டார். சற்றுநேரத்திலேயே ஊருக்கு செய்தி தெரிந்துவிட்டது. வீடு முழுக்க பெண்கள் கூடிவிட்டனர். அம்மாவின் இடுப்பிலேயே அவள் தங்கை அமர்ந்திருந்தது. அவர்கள் அக்குழந்தையைப் பார்க்கும் பார்வையைக் கண்டு அம்மா நடுங்கினாள். குழந்தையுடன் அவள் வெளியே ஓடி கோதாவரியின் கரையில் அமர்ந்திருந்தாள். குழந்தை ஆற்றைச் சுட்டிக்காட்டி மலர்ந்த விழிகளுடன் அந்த பைசாசிக மொழிச்சொல்லைச் சொல்லி சிரித்தது. அவர்களை தேடி வந்த அவள் அம்மா தொலைவில் நின்று வசைச்சொல்லைக் கூவி வீட்டுக்கு அழைத்தாள்.
பதினைந்து நாட்களுக்குப் பின் அக்குழந்தையை அவள் அப்பா இரவில் அவளுடைய அணைப்பில் இருந்து மெல்ல பிரித்து எடுத்து ஓசையின்றி நடந்து வெளியே கொண்டுசென்று கோதாவரியில் வீசிவிட்டு வந்தார். அவள் காலையில் எழுந்தபோது அவளிடம் அக்குழந்தையைப் பற்றி இனிமேல் ஒரு சொல் பேசக்கூடாது என்று அவள் தந்தை சொன்னார். அவள் அம்மா சமையலறைக்கு வெளியே குப்பைமேட்டில் அமர்ந்து ஓசையில்லாமல் அழுதுகொண்டிருந்தாள். வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் தலைதாழ்த்தி, பிறர் கண்களைப் பார்க்காமல் விலகிச் சென்றனர். அம்மா அழவில்லை, எவரிடமும் எதுவும் கேட்கவுமில்லை. பிறகு ஒருபோதும் அவள் தன் தங்கையைப் பற்றிப் பேசவுமில்லை.
அம்மாவின் அப்பா அதன்பின் பெருங்குடிகாரனாக ஆனார். என் அம்மாவுக்கு திருமணமான பின் இரண்டு ஆண்டுகளே அவர் உயிருடன் இருந்தார். அவர்களின் அந்தக் கிராமமேகூட இரண்டு ஆண்டுகள்தான் இருந்தது. தீ பற்றவைப்பதில் சுவையறிந்துவிட்ட சோட்டு முடிந்தபோதெல்லாம் குடில்களுக்கு தீவைத்தான். அவன் தீவைப்பதைக் கண்டதுமே ஓடிவந்து அதை அணைத்தனர். நான்கு முறை முழுதும் எரிந்த குடிசைகளில் இருந்து தீ பரவாமல் ஊர்கூடி அணைத்தபின் அவனை அவர்கள் கைகால்களைக் கட்டி ஒரு தனிக்குடிலில் வைத்திருந்தார்கள். ஒருநாள் நள்ளிரவில் வெளிவந்த அவன் அவன் தப்பி வெளியே வந்து வைத்த தீயில் எல்லா குடில்களும் எரிந்து சாம்பலாயின. அதில் அவனும் பாய்ந்து எரிந்து எலும்புகளாக எஞ்சினான். ஓர் எருமையும் ஏழு ஆடுகளும் அந்த தீயில் எரிந்து இறந்தன. அவர்கள் அங்கிருந்து ஊரை விலக்கிக்கொண்டு எட்டு கிலோமீட்டர் அப்பாலிருந்த பாங்கு என்னும் ஊருக்கு வெளியே சதுப்பில் குடிசை கட்டிக்கொண்டனர். அது சோட்டாபாங்கு என்னும் ஊராக பின்னர் மாறியது.
தன் அப்பா அம்மாவிடம் பேசுவதை கேட்டதாக என் அம்மா என்னிடம் பின்னாளில் சொன்னார். அக்குழந்தையை அவர் எடுத்துச்செல்லும்போது அது சீராக மூச்சுவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. நாகாகட்டத்தின் அருகே சுடுகாட்டின் சரிவில், சாம்பல் கரைக்கும் சிறிய படித்துறையில், அவர் இறங்கிச் சென்று அக்குழந்தையை மெல்ல தூக்கியபோது அது இரு கண்களையும் விழித்து அவரை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது உதடுகள் விரிய சிரித்துக் கொண்டிருந்தது. கைகள் நடுங்க அவர் அதை கீழே போட்டுவிடப்போனார். ஆனால் உடலில் ஒரு வலிப்புபோல வந்தது, இடதுகால் துள்ளித்துள்ளி விழுந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவர் கையில் இருந்து எவரோ அதைப் பிடுங்கி நீரில் வீசுவதுபோல் இருந்தது. குழந்தை சென்று நீர்ப்பரப்பில் விழுந்தது.
ஆற்றின் வாய் திறந்து அக்குழந்தையை விழுங்கியது. குமிழிகள் எழுந்து நீர்ப்பரப்பில் உடைந்து சிறுவட்டங்களாகப் பரவின. நீருக்குள் இருந்து வந்த ஒளியில் அவர் அந்தக் குமிழிகளை எல்லாம் விந்தையான கண்கள் போல தோன்றி தோன்றி மறைவதாகத் தெரிந்தது. பெரிய எருமைவிழிகள். கன்றுகளின் விழிகள். பின்னர் ஆற்றுப்பெருக்கு அமைதியாக சிறிய அலைகளுடன் விரிந்து கிடந்தது. ஒளியா இருளின் மினுமினுப்பு தானா என்று தெரியாத மெல்லிய நீரொளி. அவர் அக்குழந்தை நீரை விட்டு எழுந்து தலையை நீட்டும் என எண்ணினார். புன்னகைக்கும் என்றும் அச்சொல்லைச் சொல்லும் என்றும் எதிர்பார்த்தார். அதன்பின் அந்த எண்ணத்தையே அஞ்சியவராக திரும்பி ஓடினார்.
அம்மாவுக்குத் திருமணம் ஆகி, நான் பிறந்து, எனக்கு இரண்டு வயதானபோது அம்மா கதைசொல்லும் பிசாசிடம் தன் தங்கையைப் பற்றிக் கேட்டாள். துயரம் நிறைந்த கண்களுடன் அது அவள் தங்கையைப் பற்றி அவளிடம் சொன்னது. அவள் அதைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். கதைசொல்லும் பிசாசு தன் கதைகள் வழியாக அனைத்தையும் உருவாக்கும் ஆற்றல்கொண்டது. வானத்தின் மறு எல்லையில் இருந்து அவள் உடலுக்கு ஆடையென்றாகும் வரை பெருகியிருந்த இருட்டின் திரையில் அது அவள் தங்கையை உருவாக்கிக் காட்டியது. அவள் சிரிக்கும் குழந்தைக்கண்களுடன் அவள் முன் நின்றாள். கைநீட்டி அச்சொல்லைச் சொல்லி புன்னகைத்தாள். ஆனால் அப்போது என் அம்மாவுக்கும் அச்சொல் நன்கு தெரிந்த மொழியைச் சேர்ந்ததாக இருந்தது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

