காவியம் – 4
தொடக்க சாதவாகனர் காலம், அன்னை தெய்வம், பொமு 2, சுடுமண் சிற்பம், பைத்தான் அருங்காட்சியகம்தன் தங்கை மறைந்த அன்றுதான் அம்மா தன் பாட்டியிடம் முதன் முதலாகப் பேசினாள். தங்கையை அப்பா தூக்கிச் செல்வதை அவள் இருட்டில் கண்மூடிக்கிடந்து, காலடியோசைகள் வழியாகக் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தங்கையுடன் அப்பா வாசலைத் தாண்டிச் சென்றதும் அவள் உடலில் ஒரு முடிச்சு அவிழ்ந்ததுபோல விதிர்ப்பு ஏற்பட்டது. அவள் புரண்டு படுத்து வைக்கோல்த் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அருகே அவள் அம்மாவும் தூங்காமல் படுத்திருந்தாள் என்பதை உணர்ந்தாள். அவள் பெருமூச்சுவிட்ட சற்று நேரத்தில் அம்மாவும் பெருமூச்சுவிட்டாள்.
ஆனால், எதிர்பாராதபடி அவள் அன்றிரவு மிக ஆழ்ந்து தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தபோது நன்றாகவே ஒளி வந்திருந்தது. எழுந்து சமையலறைக்குச் சென்றபோது அவள் அம்மா கீழே குந்தி அமர்ந்து வரட்டியை எரியவிட்டு சோளத்தை வறுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா அவளிடம் திரும்பி பல்தேய்த்துவிட்டு வரும்படிச் சொன்னாள். அம்மாவின் கண்கள் வழக்கம்போலத்தான் இருந்தன. அப்பா சாணி மெழுகப்பட்ட திண்ணையில் குந்தி அமர்ந்து பீடியை ஆழ இழுத்து இருமிக்கொண்டிருந்தார். அம்மாவைக் கடந்து பின்னால் சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு, கரிப்பொடியை அள்ளிக்கொண்டு கொல்லைப்பக்கத்தில் பானை அருகே அமர்ந்து பல்தேய்த்துக்கொண்டிருந்தபோது அவளுக்குத் தோன்றியது, அம்மாவின் பார்வை வழக்கம்போல இல்லை என்று. அது மிகவும் வழக்கம்போலிருந்தது, மிகக்கவனமாக நிகழ்த்தப்பட்ட வழக்கம் போல.
அவள் அம்மா கரைத்துக்கொடுத்த கூழைக் குடித்துவிட்டு குடத்தை எடுத்துக்கொண்டு நீர் மொண்டுவரச் சென்றாள். நூறுகுடத்திற்குமேல் தண்ணீர் தேவைப்படும். கன்று ஈனவிருக்கும் எருமையை அருகே சாலமரத்தடியிலேயே கட்டியிருந்தனர், அதை கோதாவரிச் சதுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்புவதில்லை. அதற்கு நாள் முழுக்க தண்ணீர் தேவைப்படும். எருமையை அவிழ்த்துக்கட்டி, சோளத்தட்டைகளை அள்ளி தீனியாகப் போட்டுவிட்டு, சாணியை வழித்துக் கொண்டுசென்று கொட்டியபின் அவள் வந்தபோது அம்மா அவளுக்கு வறுத்தசோள உருண்டையைத் தந்தாள். அதை மென்றபடி அவள் திண்ணையில் அமர்ந்தாள்.
தன் மனம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அத்தனை ஒழிந்துகிடப்பதை அவளே வியப்புடன் உணர்ந்துகொண்டாள். சோள உருண்டை முன்பெங்கும் இல்லாத அளவு சுவையாக இருந்தது. முற்றத்தில் வேப்பமரத்தில் இருந்து இறங்கி கூடையை கடந்து அருகே தயங்கி தயங்கி வந்து அவள் அசைந்ததும் சட்டென்று பின்னால் பாய்ந்து மரத்தில் ஏறிக்கொண்ட அணிலை அவள் அத்தனை கூர்ந்து முன்பு எப்போதும் பார்த்ததில்லை. அவள் எப்போதென்று தெரியாமல் தூங்கிவிட்டாள். திண்ணையிலேயே சரிந்து விழுந்து, தன்மேல் விழுந்த வெயிலின் கதகதப்பில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். கனவிலும் அவள்மேல் வெயில் விழுந்துகொண்டிருந்தது. மரங்களும், வீடுகளும், மண்சாலைகளும் எல்லாம் சிவப்பாக இருந்தன. அப்போது அவள் தன் தங்கையைப் பார்த்தாள்.
தங்கையை அவள் பாட்டி இடுப்பில் வைத்திருந்தாள். தங்கை அவளிடம் ஏதோ கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்க பாட்டி அவளை முத்தமிட்டுக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மா குழறிக்கொண்டு விழித்து எழுந்து அமர்ந்து எங்கிருக்கிறோம் என்று திகைத்தாள். வெயில் முற்றத்தில் இடம் மாறியிருந்தது. கோழிகள் வெயிலுக்கு அஞ்சி வைக்கோல் குவியலுக்குள் அமர்ந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அம்மா எழுந்து சென்று பார்த்தபோது அம்மா உள்ளே தரையில் துணியை விரித்து தூங்கிக்கொண்டிருந்தாள். அடுப்பங்கரையில் மூடிவைக்கப்பட்ட சோற்றுக்கலத்தின் அருகே பூனை அமர்ந்திருந்தது. அவளை திரும்பிப் பார்த்து பாதிமூடிய கண்களுடன் மெல்லிய ஓசையிட்டது.
அம்மா அப்போது உணர்ந்தது என்ன என்பதை அவள் என்னிடம் சொன்னாள். அவள் ஏன் இரவில் அப்படித் தூங்கினாள் என்றுதான். திரும்பத் திரும்ப அது ஒன்றுதான். அத்தகைய நிம்மதியிழக்கச் செய்யும் எண்ணங்களை உடனடியாக தவிர்க்க முயல்வது உள்ளத்தின் இயல்பு. மாறாக அவள் உள்ளம் அந்த எண்ணத்தை பெருக்க விரும்பியது. அதில் ஒரு குரூரமான இன்பத்தைக்கூட அடைந்தது. அவள் தன்னை தண்டிக்க விரும்பினாள். ஆகவேதான் அவள் எவருமறியாது பாட்டியின் குடில்நோக்கிச் சென்றாள். குடிலை நெருங்க நெருங்க அவளுடைய நடையின் வேகம் அதிகரித்தது. குடிலுக்குள் பாட்டியுடன் தங்கை இருப்பாள் என்று அவள் எணணவில்லை, ஆனால் அக்கனவு நினைவில் இருந்தது. குடிலுக்குள் வேறு ஏதோ ஒன்று நிகழுமென எண்ணினாள். அத்தனைபேரும் அஞ்சிக்கொண்டிருப்பது ஒன்று.
குடிலுக்குள் அவள் பாட்டி எப்போதும்போல சுவர்களை மாறிமாறி தொட்டபடி சுற்றி வந்துகொண்டிருந்தாள். குடில் நடுவே அறையப்பட்ட ஆணியில் கட்டப்பட்டிருந்த அவளுடைய காலின் இரும்புச்சங்கிலி அவளுடன் தரைப்புழுதியை சீவியபடி சுற்றிவந்தது. அது சுற்றிச்சுற்றி உருவான வட்டம் பலநூறு கோடுகளால் ஆனதாக இருதது. ஒரு பெரிய கோலம் போல. அது தானாகவே சுழல்வதுபோலவும் அவள் அதில் சிக்கிச் சுழல்வதுபோலவும் தோன்றியது. அந்தப் புழுதி அத்தனை மென்மையானதாக ஆகி, அது சுழன்றுவரும்போது ஓசையே எழவில்லை. அவள் எவரிடமோ உரையாடிக் கொண்டிருப்பதாக அம்மா முதலில் நினைத்தாள். ஆனால் உள்ளே சென்றபோது அவள் எவரிடமும் பேசவில்லை என்று தெரிந்தது. பாட்டி சீரான, உறுதியான குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அவள் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் என்பதை அம்மா பின்னர்தான் அறிந்தாள்.
உள்ளே சென்று அம்மா அசையாமல் பாட்டியை பார்த்தபடி நின்றாள். உடல் மெலிந்து எலும்புகள் தெரிந்தன. வற்றி, நீரிழந்து, தசை உலர்ந்து ஆணென்றும் பெண்ணென்றுமான வேறுபாடுகளைக் கடந்துவிட்ட உடல். ஒரு காலகட்டத்தில் அவள் பேரழகியாக இருந்தாள் என்று முதியவர்கள் சொல்லி அவள் அறிந்திருந்தாள். தோலில் அழுக்கு படிந்து கிழங்கின் தோல் போலவே மாறி விரிசல்கள் விட்டு வெடித்திருந்தது. கால்நகங்கள் கருமையாக வளைந்திருந்தன. இடைக்கும் கீழே தழைந்து கிடந்த சடைக்கற்றைகள் மண்ணாலானவை போலிருந்தன. தன்னை அவள் உணர்ந்ததும் எழவிருக்கும் உறுமலோசைக்காக அம்மா காத்திருந்தாள். ஆனால் நெஞ்சில் அச்சம் இருக்கவில்லை. பதற்றம்கூட இருக்கவில்லை. விந்தையான ஓர் இனிமை மட்டுமே இருந்தது.
அவளை பாட்டி திரும்பிப் பார்த்தாள். அம்மா அந்தக் கண்களைக் கண்டு நெகிழ்ந்தாள். அவை சிறுகுழந்தையின் தெளிந்த கண்கள். அந்த முகத்தில் விரிந்த புன்னகையை மிக அழகானதாக அவை மாற்றின. அப்படியே ஓடிச்சென்று அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்குள் இருந்த தாயை விம்மவைத்த புன்னகை அது. அம்மா அருகே சென்றதும் பாட்டி அவளை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவள் உடலில் இருந்து முதல்மழையின் மண்மணம் எழுந்தது. அவள் கைகள் பூமாலைபோல மென்மையான எடைகொண்டிருந்தன.
பாட்டி அவளிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கென்றே கனிந்து பேசுவதுபோன்ற சொற்கள். முதிராத கன்னியின் சிரிப்பும் குழைவுமாக கொஞ்சுவது போன்ற பேச்சு. அவளுக்கு அதில் ஒரு சொல்லும் புரியவில்லை. ஆனால் அச்சொற்களில் இருந்து அணுவளவும் அகம் விலகவில்லை. அந்த இனிமையில் இருந்து மீளவேண்டும் என்னும் எண்ணமே வரவில்லை. பாட்டி அவள் முகவாயை தொட்டு அந்த அறையின் மூலைகளில் நின்றிருந்த நிழல்களைக் காட்டினாள். தரையில் நீர் சிந்தி ஊறிப்பரந்தது போலிருந்த நிழலைக் காட்டி சிரித்தாள். அம்மா அந்நிழலை பார்த்துக்கொண்டு பொழுதுமயங்கி நின்றிருந்தாள். கதைசொல்லும் பிசாசை அவள் முதல்முறையாகக் கண்டது அப்போதுதான். அவள் கலைந்து வெளியே ஓடியது அப்பால் மஹதி உணவுக்கலத்துடன் வரும் ஓசையைக் கேட்டபோதுதான்.
பொழுதைப் பற்றிய கணக்கு இல்லாமல், விலகவேண்டும் என்னும் உணர்ச்சி இல்லாமல் எந்த அனுபவமும் வாழ்க்கையில் நிகழ்வதே இல்லை. மிகச்சிறிய அனுபவம்கூட. இங்கே இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்னும் உணர்வு அது. மனம் என்பது அதுவே. எதை அறிகையிலும் ‘நான் அறிகிறேன்’ என மனம் அதை அறிகிறது. தன்னை இழந்து அது எதிலும் இறங்குவதில்லை. திரும்பி வர ஒரு சரடை எஞ்சவிடாமல் எந்த ஆழத்திலும் மூழ்குவதில்லை. தன்னை இழந்து நாம் சென்றடைந்த அனுபவங்களை அடைவது மனம் அல்ல. அந்த அறிதல்கள் மனம் கடந்தவை, அவை மீண்டு எழுகையிலும் மனம் நாணியோ அஞ்சியோ சுருங்கி மறைந்துவிடுகிறது. மனம் அறியாத அறிதல்கள் நம் நினைவுக்குள்ளும் இருப்பதில்லை. அம்மாவுக்கு அங்கே நிகழ்ந்தது என்ன என்பது முற்றிலும் நினைவில் இல்லை. அவள் பேசத்தொடங்கினாள் என்பதை மட்டுமே எத்தனை ஆழ்ந்து சென்றாலும் நினைவுகூர முடிந்தது. ஆனால் அவள் அறிந்திருந்தாள்.
அம்மா பாட்டியிடமிருந்து கேட்டது பாட்டி கோதாவரியின் கரையில் மிகவிடியலில் நீராடச்சென்ற கதையை. தற்செயலாக அன்று பாட்டி விழித்துக்கொண்டபோது விடிவெள்ளி எழுந்திருக்கவில்லை. வெளியே வந்து வானைநோக்கி விடிவெள்ளி இல்லை என்று கண்டதும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்புதான் தோன்றியது. ஏன் செல்லக்கூடாது? விடிவெள்ளியைக் கண்டதுமே இரவெல்லாம் இருளுக்குள் அலையும் நிலையழிந்த நிழல்கள் தங்களைச் சுருக்கிக்கொள்ளும். கூழாங்கற்களுக்கும் இலைகளுக்கும் அடியில் அவை பதுங்கிவிடும். நிழல்கள் அலையும் இரவில் சித்தம் சற்றேனும் தெளிந்திருக்கும் எவரும் தனித்து வெளியே செல்லக்கூடாது. அதிலும் நாககட்டத்தின் அருகே ஆயிரம் ஆண்டுகளாகச் சிதைகள் எரிந்துகொண்டிருக்கும் சுடுகாட்டின் சிதைந்த படிக்கட்டுகள் கொண்ட படித்துறைக்குச் செல்வதை எண்ணிக்கூட பார்க்கலாகாது. ஏன் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது. நிழல்களில் ஒன்றை நேருக்கு நேர் காண்பதென்றால்கூட அவளுக்கு அச்சமில்லை.
அவள் தொலைவில் அந்த நிழலைப் பார்த்ததும் அதை இரவென்னும் இருட்டின் அலைப்பரப்பில் தோன்றிய ஒரு மெல்லிய குமிழி என்று நினைத்தாள். அது மிதந்து இறங்கி மண்ணில் படிந்து மெல்ல விரிந்து பரவியதுபோல் இருந்தது. அது கதைசொல்லும் பிசாசு என்று பாட்டிதான் என் அம்மாவிடம் சொன்னாள். அளவிட முடியாத கதைகள் தெரிந்தது அது. அத்தனை கதைகளையும் சொல்லியாக வேண்டும் என்னும் பெருந்துடிப்பு கொண்டது. இந்த உலகில் கதைகளைப் போல ஒளியும் இனிமையும் கொண்டவை வேறில்லை. முடிவில்லாத வண்ணங்கள் கொண்டவை, கணந்தோறும் வளர்பவை, ஒருபோதும் குன்றாதவை அவை. கதைகளின் உயிரூற்று அந்தப் பிசாசு. கதைகளின் முடிவின்மையாலேயே அது துயருற்றதாக ஆகிவிட்டிருந்தது. இன்பம் எனும் மறுபக்கம் இல்லாத துயரம் அது. அந்த துயரத்தால் அது பேரழகு கொண்டதாக இருந்தது.
ஆனால் பாட்டி சொன்னது அதைத்தான் என்று அம்மா அறிந்துகொண்டது மேலும் நீண்டநாட்களுக்குப் பின். அன்று பாட்டியைச் சந்தித்தபின் அவள் பிறிதொருத்தியாக ஆனாள். அவள் பூசலிடவில்லை, சீற்றம் கொள்ளவில்லை, எதன் பொருட்டும் எரிச்சலடையவும் இல்லை. அவள் எவரிடமும் பேசிச்சிரிப்பதில்லை, தின்பதிலும் ஆடைகளிலும் ஆர்வமும் இல்லை. தன்னுள் ஆழ்ந்து சென்றவளாக இருந்தாள். ஆனால் பிறர் அஞ்சும் ஆற்றல்கொண்டவளாக இருந்தாள்.
ஆடையை மடித்து மடித்து இறுக்கி பானைக்குள் வைப்பதை அவள் இளமையில் கண்டது உண்டு. அம்மா நீவி நீவி துணியை மடிப்பாள். வண்ணமும் வடிவமும் ஆக விரிந்த ஒன்று மடிந்து மடிந்து தன்னுள் தானே சென்றுகொண்டே இருப்பதை வியப்புடன் அவள் அருகே இருந்து பார்ப்பாள். தன் குடிலை அப்படி அதற்குள் அதுவே மடிந்து செல்லச் செய்யமுடியுமா? வீட்டுமுன் விரிந்த முற்றத்தையும், அதன்மேல் கவிந்த வானையும், அத்தனை மரங்களுடனும் செடிகளுடனும் பறவைகளுடனும் வானுடனும் அப்படி அதற்குள் அதைச் செலுத்திச் சுருக்கிச் சுருக்கிச் செல்ல முடியுமா? சிறுமியாக அதைப்பற்றி அவள் தனித்து அமர்ந்து கனவு கண்டதுண்டு. அன்று அவள் அப்படி தன்னுள் மடிந்து மடிந்து இறுகிச்சென்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு என் அப்பாவுடன் திருமணமாகியது. அவளுடைய கல்போன்ற மௌனத்துடன் என் அம்மா பைத்தானில் என் அப்பாவின் வீடிருந்த இன்னொரு பகுதிக்கு மணமகளாக வந்தாள். என் அப்பாவால் ஒரு கணம்கூட வெல்லமுடியாத பெண்ணாக இருந்தாள். நான் பிறந்தபின், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில் அவள் விடிவெள்ளி முளைப்பதற்கு முன்னரே கிளம்பி கோதாவரியின் சீதா கட்டத்திற்குச் சென்றாள். படிகளில் அவள் இறங்கிச் சென்றபோது வானத்தில் இருந்த இருள் நீராவியில் கூரைக்கரி ஊறிச்சொட்டுவதுபோல நிலத்தில் விழுந்து குவிந்திருந்த ஒரு கரிய வடிவத்தைக் கண்டாள். அவள் திடுக்கிட்டு அசையாமல் நின்றாள். பின்னர் அதை முன்பு கண்டிருந்ததை நினைவுகூர்ந்தாள். தயக்கமில்லாத கால்களுடன் அதை நோக்கிச் சென்றாள்.
கதைகளைச் சொல்லும் பிசாசும் அவளை நன்கறிந்திருந்தது. அவளைக் கண்டதும் அது எழுந்து நின்று இரு கைகளையும் விரித்தது. அவள் அருகே சென்றதும் அது சிறிய வெண்ணிறமான பற்களைக் காட்டிச் சிரித்தது. தெளிந்த குழந்தைக் கண்களுடன் அவளை வரவேற்றது. அதன் மொழியை அவள் நன்றாகவே புரிந்து கொண்டாள். அக்கணம் அவளிடம் அவள் பாட்டி சொன்னவை எல்லாம் புரிந்தன. அவள் அதுவரை கேட்டறிந்த எல்லா சொற்களும் தெளிவடைந்தன. அவள் தன்னுள்ளும் பிறரிடமும் பேசிக்கொண்டிருந்த மொழியிலேயே அச்சொற்கள் ஊடுருவி நிறைந்திருந்தன என்று கண்டாள். அச்சொற்களைக் கொண்டு அவள் அதுகாறும் சொன்னவையும் புரிந்துகொண்டவையும் அல்ல அவற்றின் உண்மையான பொருள் என உணர்ந்தாள். அது வரை அவள் பேசியவை, கேட்டவை, எண்ணியவை எல்லாம் உண்மையில் என்னென்ன என்று அறிந்துகொண்டாள்.
அம்மா என்னிடம் சொன்னாள். “கதைசொல்லும் பிசாசு மிகமிகத் தனிமையானது. அதன் கதைகளின் உலகில் அது மட்டுமே உள்ளது. அது கதைசொல்வதே தன் தனிமையை கலைத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் கதைகளினூடாக அது மீண்டும் மீண்டும் தன் தனிமையை உணர்கிறது. கதைகள் அதன்மேல் மலைப்பாறைகளை தூக்கி வைத்ததுபோல் அழுந்தியிருக்கின்றன. பாறைகளை வெடிக்கவைத்து வெளிவரும் மெல்லிய வேர்போலத்தான் அதன் மொழி வெளியே வருகிறது.
அம்மா என்னிடம் அந்தப் பிசாசைப் பற்றிச் சொன்னாள். “அது அழிவற்றது. அழிவின்மை என்பது எத்தனை பெரிய சுமை என்று உணர்ந்தது. இங்கே அழிவற்றவை அனைத்துமே குளிர்ந்து எடைகொண்டு தன்னைத் தான் சுமக்க முடியாமல் அமைந்திருக்கின்றன”
அம்மா கதைகளின் பிசாசிடமிருந்து கதைகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாத நிழலாக எப்போதும் இருந்தபடி அது தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தது. அரிதாக அதை ஒரு கணமின்னலாக கண்ணால் பார்க்கவும் அவளால் முடிந்தது. அம்மாவை ஆற்றல்மிக்கவளாக ஆக்கியது அந்த நிழல். அவளுடைய நாட்களை முழுக்க இனியதாக ஆக்கியது. நானறிந்த பெண்களில் என் அம்மாவுக்கு நிகரான ஒருவரை கண்டதில்லை. அம்மாவுக்கு முதுமை வரவே இல்லை. நடுவயதுகூட வரவில்லை. மாறாத இளங்கன்னிப்பருவம் கொண்டவளாகவே அவள் இருந்தாள். என் அம்மாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் ‘அவளுடன் எப்போதும் ஒரு பிசாசு உள்ளது. முடிவில்லாத கதைகளுடன் காலம்கடந்து என்றுமென இருந்துகொண்டிருப்பது’ என்று நான் சொல்வேன். கேட்பவர்கள் அதை அவரவருக்கு தோன்றியபடி விளங்கிக்கொள்வார்கள்.
ஐம்பத்தாறு வயதில் அம்மா இறப்பது வரை. இறக்கும்பொழுதில் அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னாள். “அந்தப் பிசாசை நாம் தனித்துவிடக்கூடாது. நான் அதை உனக்கு தந்துவிட்டுப் போகவா?”
நான் “ஆம் அம்மா… எனக்கு அது வேண்டும்…” என்று சொன்னேன். நன்கு எண்ணித்தான் அதைச் சொன்னேன். ஏனென்றால் தாளமுடியாத தனிமையில் இருந்தேன். அம்மா இல்லாமலான பிறகு என்னிடம் எஞ்சவிருக்கும் தனிமையைப் பற்றி என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
அம்மா பக்கவாட்டில் திரும்பி சுவர்மூலையின் இருட்டை நோக்கி பொருளறியாத பைசாசிக மொழியில் ஏதோ சொன்னாள். சுவர்மூலையில் இருட்டில் ஓர் அசைவு தெரிவதுபோல் இருந்தது. அம்மா புன்னகையுடன் என்னிடம் “நீ எனக்கு பிரியமானவன்” என்று சொல்லிவிட்டு விழிகளை மூடிக்கொண்டாள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

