Jeyamohan's Blog, page 125
April 22, 2025
புதுவை வெண்முரசு கூடுகை 81
வணக்கம்.
மகாபாரதத்தை நவீன இலக்கியம் மறு ஆக்கம் செய்து எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
நிகழ்விடம் :
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி:
வெண்முரசு நூல் – 9.
“வெய்யோன்”
பகுதி 4 கூற்றெனும் கேள் – 36 – 40
அத்தியாயம். (13 -17)
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
April 21, 2025
காவியம்- 1
(பைசாசம். பொதுயுகம் 2 ஆம் நூற்றாண்டு. பைதான் அருங்காட்சியகம்)
கதைகளைச் சொல்லும் பிசாசு ஒன்று உண்டு என்று அம்மாதான் என்னிடம் சொன்னாள். அந்தப் பிசாசை என் அம்மாவின் பாட்டி நெடுங்காலத்திற்கு முன் நேரில் பார்த்திருந்தாள். கோதாவரியில் அதிகாலையில் குளிக்கச் சென்றபோது அது சேற்றுச்சரிவில், சரிந்த கற்படிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தது. நீண்ட தலைமுடி சடைக்கற்றைகளாக நான்குபக்கமும் விரிந்து மண்ணில் பரவியிருக்க, இருட்டின் குமிழி போல் தோன்றியது. அதை பிசாசு என எண்ணிய கணம் அது நிழலாக மாறியது. அவள் நடுக்கம் தீர்ந்து மெல்ல நடந்து அணுகி, கடந்துசென்று, நீரில் இறங்கி மூழ்குவதற்கு முன்பு மீண்டும் கரையைப் பார்த்தபோது அது அங்கில்லை. ஆனால் நீரில் மூழ்கி சற்றே நீந்தி ஆழத்திற்குள் கண் திறந்தபோது அதன் முகம் மிக அருகே தெரிந்தது. அதன் கண்கள் நீரின் இருட்டுக்குள் இரண்டு ஒளிரும் நீலநிற இணைமீன்கள் போலிருந்தன. மீன் என எண்ணியதுமே அவை மீன்களாகி அகன்றன.
அவள் மூச்சுத்திணறி மூழ்கி, பின்னர் கைகால்களை அடித்துக்கொண்டு கரையேறி, ஈர ஆடையுடன் ஓடி வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளை மீறி அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஏதேதோ சொல்லிப் புலம்பினாள். அவள் பேசிய மொழியை எவரும் கேட்டிருக்கவே இல்லை என்று அவள் வீட்டார் பின்னர் சொன்னார்கள். ஆனால் அப்படி பிசாசுமொழி பேசுபவர்கள் அவர்களின் கிராமத்தில் முன்பும் இருந்தனர். அது நாகாகட்டத்தின் சுடுகாட்டின் மரங்களுக்குமேல் பகலிலும் குழறும் ஆந்தைகள் பேசும் மொழி. கோதாவரிக்கரை நாணற்சதுப்பில் நரிகளின் ஊளையாக ஒலிக்கும் மொழி. அவள் விழித்த கண்களுடன் மல்லாந்து பாயில் படுத்திருந்தாள். அவளுடைய இரு கைகளும் விரிந்து மல்லாந்திருந்தன. தொங்கிக்கிடப்பவள் போல அவள் கால்கள் இழுபட்டு நீண்டிருந்தன. அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. அவள் மிக அருகே அந்த பிசாசின் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவை வரைந்து வைக்கப்பட்டவை போல அசையாமல் காற்றில் நின்றிருந்தன.
ஏழுநாட்கள் காய்ச்சலில் கிடந்து, கடும் வாய்க்கசப்புடன் மீண்டு வந்தபோது அவளுக்குள் மீண்டும் அந்தப் பிசாசைப் பார்க்கவேண்டும் என்ற ஆசைதான் நிறைந்திருந்தது. எழுந்து மீண்டும் ஆற்றங்கரைக்குச் செல்லவே அவள் துடித்தாள். அவள் உடல் மிக மெலிந்து, கால்கள் நிலைகொள்ளாமலிருந்தமையால் சுவரைப் பற்றிக்கொண்டு நின்று மீண்டும் நிலத்தில் தளர்ந்துவிழுந்தாள். அவள் அம்மா ஓடிவந்து அவளைப் பிடித்து படுக்கவைத்தபோது அவள் கைநீட்டி ஏதோ சொன்னாள்.
அவள் அம்மா ஆற்றின் மறுகரைக்குச் சென்று மந்திரம் போடும் சமேலி கிழவியை அழைத்துவந்தாள். கிழவி தான் கொண்டுவந்திருந்த நீண்ட சடைமயிர்க்கற்றைகளை தலையில் அணிந்துகொண்டு, பையில் இருந்த சாம்பலை அள்ளி அள்ளி அவள் மேல் வீசி, உரக்க ‘ஹோ’ என்ற ஓசை எழுப்பி அவள் மேல் மூச்சுக்காற்றை ஊதியும், கைகளால் எதிர்பாராதபடி தரையில் அறைந்தும், கரிய உதடுகள் துடிக்க மந்திரங்களை ஓசையின்றி உச்சரித்தும் கிழவி அந்தப் பிசாசை அவளிடமிருந்து துரத்த முயன்றாள். பகல் முழுக்க அந்த நிழலோட்டும் சடங்கு நடைபெற்றது. அவள் அம்மா முறத்தில் நெல்லும் காய்கறியும் ஒரு செம்பு நாணயமும் வைத்து சமேலிக்குக் கொடுத்தாள்.
பின்முற்றத்துக் கல்லில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு சமேலி கிழவி சொன்னாள். தனித்து நடமாடுபவர்களை பிசாசுகள் நன்றாக அறியும். தனித்து உறங்குபவர்களுக்கு மிக அருகே சுவர்களுக்கு அப்பால் பிசாசுகள் நின்றிருக்கும். ஆகவே எவரும் தனித்திருக்கக்கூடாது. கன்னியர், குழந்தைபெற்ற அன்னையர் எதன்பொருட்டும் தனித்திருக்கவே கூடாது. இங்குள்ள பிசாசுகளை எனக்குத் தெரியும். இங்கே நான் துரத்திவிட்ட பிசாசுகளும் பேய்களும்தான் நிறைந்திருக்கின்றன. என்னால் எல்லாக் கூழாங்கற்களிலும் அவற்றின் பார்வையை உணரமுடிகிறது. என் மந்திரங்கள் ஆற்றல் இழக்கும் காலம் வரும். அவை பசிவெறிகொண்ட காகங்கள் செத்த உடல்மேல் விழுந்து மொய்ப்பதுபோல என் மேல் பாயும்.
பிசாசுகள் நாம் அனைவரையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. நாம் பேசும்போது சொற்கள் குழறுவது எதனால்? நாம் நடக்கும்போது கால்கள் தடுக்குவது எதனால்? சிறுநீர் கழிக்கும்போது நாம் உலுக்கிக்கொள்வது எதனால்? உண்ணும் சோறு விக்குவது எதனால்? எவரும் இங்கே எப்போதும் தனியாக இல்லை. பார்க்கப்படாத ஒரு கணம்கூட எவருக்கும் இல்லை. எங்கோ நமக்குள்ளே அவற்றை காணவேண்டும் என்னும் ஆசை தோன்றுகிறது. நாமே அறியாத ஆசை. நம் உடலுக்குள் நமக்கே தெரியாமல் நோய் கருவுறுவதுபோல. அதன்பின்னர் நாம் தனித்துச்செல்ல தொடங்குகிறோம். நாமே அதை தேடிக் கண்டடைகிறோம். தேடாதவர்களை பிசாசுகள் அணுகுவதில்லை.
பிசாசுகள் கண்களோடு கண்கோத்து நம்மைப் பார்க்கின்றன. அக்கணத்தில் அவை தங்களைப் பிசாசாக வைத்திருக்கும் அறியமுடியாத காரணம் ஒன்றை நம் ஆத்மாவுக்குள் செலுத்திவிடுகின்றன. நம் ஆத்மா அதன்பின் அதற்குரியதாகிறது. தேங்கிய நீரில் தவளை முட்டையிட்டுச் செல்வதுபோல. நமக்குள் ஆயிரம் பல்லாயிரம் பிசாசுகள் பெருகத்தொடங்குகின்றன. பிசாசுகள் முருங்கை மரத்தில் முசுக்கட்டைப்பூச்சிகள் போல நமக்குள் செறிந்திருக்கின்றன. இருண்ட குகையில் வௌவால்கள் போல நமக்குள் கண்கள் மின்ன நிறைந்திருக்கின்றன.
பிசாசுகளைப் பற்றிப் பேசலாகாது. பிசாசுகளைப் பற்றி கதைகளைப் புனையலாகாது. ஏனென்றால் இங்குள்ள எல்லா பிசாசுகளும் எவரோ முன்பு சொன்ன கதைகள்தான். வானத்திலுள்ள பனி காலையில் நீர்த்துளியாக ஆவதுபோல கதைகள் உருவங்களாக ஆகிவிடுகின்றன. பின்னர் அவை எடைகொள்கின்றன. எடை மிகுந்து மிகுந்து அவை பூமியை அழுத்தித் துளைத்து ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. புதைக்கப்பட்டவற்றை முளைத்தெழச்செய்கிறது பூமி. அது பூமிக்கு தெய்வங்கள் அளித்த வரம். இங்கே புதைக்கப்பட்டு முளைத்தெழாத ஒன்றுகூட இல்லை. ஆமாம் ,ஒன்றுகூட.
நிழல்களை கவனியுங்கள். கோடானுகோடி நிழல்கள் இங்கே விழுந்து விழுந்து மறைகின்றன. நிழல்கள் அவற்றின் மூல உருவத்தின் அடிமைகள். அந்த உருவத்திற்குள் மீண்டுசெல்லவேண்டும் என்ற ஆணைகொண்டவை. ஆனால் அவற்றில் ஏதோ ஒன்று முதலுருவிலிருந்து விடுதலை அடைந்துவிடுகிறது. அதன்பின் அது இங்கே நிலையழிந்து அலையத்தொடங்குகிறது. அது எங்கே செல்லும்? எதைச் செய்யும்? கற்களுக்கு கீழே, மரங்களின் பின்னால், சுவர்மடிப்புகளுக்கு அப்பால் அவை காத்திருக்கின்றன. தனக்கான உரிமையாளரைத் தேடி அலையும் நிழல்களை ஒருமுறையேனும் சந்திக்காதவர் எவர்?
ஓசையே இல்லாமல் நிழல் நம்மை தொடர்கிறது. நம்முள் புகுந்துவிட முயல்கிறது. நம் உடல் எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு அதை வெளியே தள்ளி விடுகிறது. நம் உடல் புல்லரிக்கிறது. நடுங்கிக்கொண்டே இருக்கிறது. மிக அரிதாக அதை நாம் உள்ளே விட்டுவிடுகிறோம். அது நமக்குள் நுழைய ஒரே வாசல்தான். நம் கண்கள். கண்கள்தான் ஆத்மாவுக்கு வாசல்கள். நமக்குள் அவை நுழையும் கணம் நமக்குத் தெரியும். நம் நெஞ்சில் ஓர் உதைவிழுவதுபோல. நாம் மிக மதிப்புமிக்க எதையோ இழந்துவிட்டவர்கள் போல. நமக்கு மிக எதிர்பாராதது ஒன்று எக்கணமும் நிகழவிருக்கிறது என்று உணர்ந்தவர்கள் போல.
புதிய நிழல் உள்ளே நுழைந்ததும் நம் நிழல் நடுங்கி ஆர்ப்பரிக்கிறது. நிழல்கள் நம்முள் போராடுகின்றன. வந்த நிழல் வெல்லும் என்றால் நம் நிழல் அதற்கு அடிமையாகிவிடும். அவர்களைக் கவனியுங்கள், அவர்களுக்கு எப்போதும் இரண்டு நிழல்கள் இருக்கும். அவர்களின் கண்களில் இரண்டு பேரின் பார்வைகள் இருக்கும். அவர்கள் வாயில இரண்டு மொழிகள் வெளிப்படும். அவர்களைச் சூழ்ந்திருக்கும் காற்றில் அவர்களுடையது அல்லாத வாடை ஒன்று வெளிப்படும்.
சமேலி அத்தனை எச்சரித்திருந்தும், குடும்பத்தினர் கவனமாக இருந்தும்கூட என் அம்மாவின் பாட்டி சற்று உடல்தேறியதும் எவருக்கும் தெரியாமல் கிளம்பி கோதாவரிக்கரைக்குச் சென்றாள். அங்கே அவள் மீண்டும் பிசாசைப் பார்த்தாள். என் அம்மாவிடம் அவள் அதை எப்படிப் பார்த்தாள் என்று சொன்னாள். அதே இடத்தில் என் அம்மாவும் பின்னர் அதே பிசாசைப் பார்த்தாள். கதைசொல்லும் அப்பிசாசை நானும் பின்னர் எப்போதோ பார்க்கவிருக்கிறேன். அதன் கதைகளைக் கேட்கவுமிருக்கிறேன்.
நான் வெறுக்கும் இந்நகரில் எங்கள் சாதியினர் குளிப்பதற்கென்று ஒதுக்கப்பட்டது நாககட்டம். அதன் இடப்பக்கம் பெரும் சுடுகாடு. அதைச்சூழ்ந்திருக்கும் பெரிய முள்மரங்கள். அங்கே செல்லும் வழியில் எப்போதுமே மனிதநடமாட்டம் இருப்பதில்லை. சுடுகாடாக ஆவதற்கு முன்பு எப்போதோ அது மிகப்பெரிய மாளிகைகள் அமைந்த ராஜவீதியாக இருந்திருக்கிறது. அந்த மாளிகைகள் அனைத்தும் இடிந்து பாழடைந்து வரிசையாக நின்றிருக்கின்றன. இறந்து மட்கிய பெரிய விலங்குகளின் ஓடும் எலும்புகளும் மயிர்ச்சுருட்களும் பாதி மண்ணில் புதைந்து கிடப்பதுபோல.
இது ஒரு பாழடைந்த பழைய நகரம். இதன்பெயர் பைத்தான், ஔரங்காபாத் அருகே உள்ளது. பைதானி சேலைகள் இங்கே புகழ்பெற்றவை. இங்கு வைணவ பக்தர் ஏக்நாதரின் சமாதி ஆலயமாக இருக்கிறது. நிம்பார்க்கர் என்னும் வேதாந்தி பிறந்த ஊரும் இதுதான். முன்பு இதை பிரதிஷ்டானபுரி என்று அழைத்தனர். வேதகாலம் முதல் இருந்துவரும் நகரம் இது. நிலைகொண்ட நகரம் என்று பொருள். நிலைகொள்ளுதல் என்றால் நிழல்களைப் பெருக்கிக்கொள்ளுதல் என்று பொருள். இந்நகரத்தில் இல்லங்களை விட இடிபாடுகள் மிகுதி.
சிதைந்த கற்சுவர்கள், உடைந்தழிந்த கோட்டைகளில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு ஆங்காங்கே நிறுவப்பட்டு செந்தூரம் பூசப்பட்ட அனுமாரின் சிலைகள், தோல் உரிக்கப்பட்ட விலங்கின் சிவந்த தசைபோல செங்கல் தெரியும் இடிந்த மாளிகைகள். பன்றியின் பிடரிபோல அவற்றின்மேல் முளைத்தெழுந்த முட்புதர்கள். உடைந்த சாக்கடைகள் ஒழுகும் தெருக்களில் அலைந்து திரியும் பன்றிகளும் கொழுத்த மாடுகளும். இங்கே மக்கள் சில இடங்களில் செறிந்து வாழ்கிறார்கள். சிறுபூச்சிகள் ஒன்றோடொன்று ஒட்டியவைபோல கூடுகளில் அடர்ந்திருப்பது போல. எஞ்சிய இடங்களில் எப்போதோ பூட்டப்பட்ட இல்லங்கள் துருப்பிடித்த பூட்டுகளுடன் முற்றிலும் மௌனமாக மட்கிக்கொண்டிருக்கின்றன. வெயிலில் வெந்த புழுதியின் வாசனையும் சாணத்தின் நெடியும் கலந்த தெருக்கள் பாழ்பட்டவை என வெறித்துக் கிடக்கின்றன.
நாககட்டத்திற்குச் செல்லும் பாதை புழுதிநிறைந்தது. இருபுறமும் அடர்ந்த புதர்களில் இருந்து முட்கள் நீண்டுவந்து உடம்பை கிழிக்கும். அங்கே கோதாவரியின் கரையில் தொன்மையான மயானம். அதைச் சூழ்ந்திருக்கும் மரங்களில் இருந்து எழுந்துகொண்டிருக்கும் ஆந்தைகளின் உறுமல்கள். இம்முறை என் முப்பாட்டி அப்பிசாசை சந்திப்பதற்காகவே அதிகாலையில் எழுந்து எவரும் அறியாமல் அங்கே சென்றாள். கோதாவரியின் சரிவில், படிக்கட்டில், முன்பு போலவே அது விரிந்த சடைகளுடன், நெடுந்தொலைவுக்கு நீண்டு கிடந்த கைகளுடன் அமர்ந்திருந்தது. அவள் அதைக்கண்டு புன்னகைத்தபடி நின்றாள்.
பிசாசின் கண்கள் அத்தனை அழகாக இருந்தன. சொல்திருந்தாத கைக்குழந்தையின் கண்கள் போல அத்தனை தெளிந்திருந்தன. அதில் புன்னகை அன்றி எந்த உணர்வும் வெளிப்பட இயலாது என்று தோன்றியது. அவள் அதை நோக்கிச் சென்றபோது பிசாசு எழுந்து அவளை நோக்கி கைநீட்டியது. அவள் அதைநோக்கி கைவிரித்தபடிச் சென்றாள். அவளை தொட்ட அதன் கைகள் நீரிலூறிய வாழைத்தண்டுகள் போலக் குளிர்ந்திருந்தன. அவளை அது தன் உடலுடன் சேர்த்து தழுவிக்கொண்டது. அப்போது அவள் அதன் முகத்தை மிக அருகே எனக்கண்டாள். அதன் அழகிய விழிகளில் துயர் நிறைந்திருந்தது. மறுகணம் அழவிருக்கும் குழந்தை போன்றிருந்தது அதன் முகம்.
(மேலும்)
வெளிச்சம்
வெளிச்சம் தமிழீழ விடுதலைப்புலிகள் முன்வைத்த மொழிவழித்தேசியம் என்னும் கொள்கையை முன்வைத்த இதழ். புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றிய இளைஞர்கள் இந்த இதழில் எழுதினார்கள். இந்த இதழில் எழுதிய ஏராளமான படைப்பாளிகள் பின்னர் அறியவரவில்லை. பலர் புனைபெயர்களில் எழுதி, பின்னர் எழுத்தை நிறுத்திக்கொண்டார்கள்.பலர் கொல்லப்பட்டனர். இவ்விதழில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஜெயமோகன், வேலனையூர் சுரேஷ், தூயவள், நாமகள், புதுவை இரத்தினதுரை, கருணை ரவி என பலரும் எழுதியிருக்கிறார்கள். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாயின.
வெளிச்சம் – தமிழ் விக்கி
மகளை அறிதல், கடிதம்
அன்பின் ஜெ,
நலம் விழைகிறேன். குமரித்துறைவி தந்த மிகப்பெரும் உணர்வெழுச்சி சற்று தணிந்த பின்னரே உங்களுக்கு எழுத வேண்டும் என்று இருந்தேன். வாசிக்கும் காலம் தோறும் பொங்கும் உவகையில் அப்படித் திளைத்து இருந்தேன் என்பதே உங்கள் எழுத்தின், அவள் கருணையின் அருள்,பொருள்,இன்பம்.
நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டது போல் இது முற்றிலும் மங்கலம் நிறைந்த படைப்பு. இது வரை நான்கு முறை மீள் வாசித்து விட்டேன். இப்புத்தகத்தோடு தன்மீட்சியும் வாங்கி வாசித்திருந்தேன். இவ்விரு புத்தகங்களும் என் அகம் புறம் இரண்டையும் நல்வழிக்கு கொணரும் நூல்களெனவே போற்றுகிறேன்.
ஏன் என் அகம் குமரித்துறைவியைப் படிக்க விழைந்து கொண்டே இருக்கிறது?. நானே இக்கேள்விக்கு விடையை பல விதங்களில் சொல்லி சரிபார்த்துக் கொண்டேன்.
முழுமுதற் காரணம் என் மகள் கோதை. அவள் மேல் அமைந்த என் தீரா அன்பு. இன்னும் எவ்வளவோ வருடங்கள் கழிந்து வரப்போகும் அப்பிரிவுக்கு மறுகும் பித்து மனம். வேணாட்டு அரசரின் ஒவ்வொரு விதிர் விதிர்ப்பையும், துயருறும் விசும்பலையும் கண்ணீரின் வெம்மையையும் என்னுள் உணர்கிறேன்.
இரண்டாவது காரணம் எங்கள் குலதெய்வம். தகப்பனின் குடியும், அவரின் நோயும், வறுமையும் என உழன்ற என் இளம்பருவத்தில், என் மூதாதை ஒருத்தி, குலதெய்வக்கோயிலில் வைத்து தெய்வ வாக்கெனவே எனக்குச் சொன்ன சொல். “நீ ஒரு ஆளாகி எழுந்து வந்து இந்த குடும்பத்த காப்பாத்தனும்”. அது முதல் இன்று வரை, அச்சொல் நான் கொடும் பாவத் தடம் சாய வேண்டிய தருணங்களில் ஒரு அசரீரி எனவே ஒலித்து என் பாதங்களை வழி நடத்துகிறது. வெறும் பட்டுத்தறி கூலியாக வாழத் தள்ளிய விதியின் பிடியிலிருந்து நான் நினைத்துப் பார்க்காத உயரத்தில் இன்று நிறுத்தி இருக்கின்றது. இப்போதும் காரிலோ இருசக்கர வானத்திலோ நான் செல்கையில் ஒரு நிழல் போல என் தோளின் பின்னே எழும் குலதெய்வ முகம் என்னை வழிநடத்துகிறதென்றே நம்பியிருக்கிறேன். இந்நூல் ஒரு தொல்குடி தெய்வ அணங்கின் மேல் அத்துணை மாந்தரும் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆவணம். வீரமார்த்தாண்டன் தன் தலை அறுத்து வைக்கவும் துணிந்த அதே நம்பிக்கை.
மூன்றாவது மதுரையின் பேரரசி மீனாட்சியே. மதுரைக்கு மாப்பிள்ளை ஆன எனக்கு வருடத்திற்கு எப்படியும் இரண்டு மூன்று முறை அங்கு செல்ல வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறையும் வீட்டு மீனாட்சி வழி நடத்தலில் அரசி மீனாட்சியை தரிசிக்க கிளம்பி விடுவது. இப்புத்தகம் வாசிக்கையில் மண்டையில் உரை(தை,றை)த்தது, அத்தனை முறையும் கருவறையின் விளக்கொளியில் நான் பார்த்தது ஒரு சிறுமியையே. அதுவும் குறும்பு கொப்பளிக்கும் விளையாட்டுச் சிறுமி. என் மனைவிக்கு அவள் கொலு வீற்றிருக்கும் அரசி. வழக்கம் போல் சொக்கரிடம் எப்படி சிக்கிருக்கோம் பாத்தியா மக்கா என்று ஒரு அளாவல். அவ்வளவே. எங்களூர் காஞ்சி காமாட்சி எப்போதும் என் கண்களுக்கு ஒரு கண்டிப்பான ஆசிரியை. வீட்டுப்பாடம் எல்லாரும் சரியா பண்ணியாச்சா, பண்ணாதவன் லாம் எழுந்து நில்லு எங்க பாப்போம் என்று சற்றே கறாராக விசாரிக்கும் தொனி.
இம்மூன்று காரணங்களும் உள்ளத்தின் ஆழத்தில் உறைபவை. எல்லா இடர்களிலிருந்தும் கடைத்தேற்றும் நம்பிக்கை அந்த ஆழத்தில் இருந்து எழுவதே. குமரித்துறை அவ்வாழத்திற்கு என்னை கொண்டு சென்று மீளக் கரை சேர்க்கும் ஒரு அழகிய தெப்பம். உங்கள் எழுத்து அத்தெய்வ அணங்கை எல்லா மங்கல அணிகளும் பூட்டி காண்போரின் கண்குளிர மனம் குழைய அதில் கொலு அமர்த்தி இருக்கிறது.
அத்தெய்வ அருள் பொலிந்து இன்னுமொரு நூற்றாண்டிருங்கள் ஆசானே
தங்கள் அன்புடன்
சங்கர் கிருஷ்ணன்
புதுச்சேரி
பிறவித்தேன் மீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர் தேவியும் மகளும் -கடிதங்கள் குமரியின் எழில்-கடிதங்கள் குமரித்துறைவி, கடிதம் குமரித்துறைவியின் தருணம்காக்காய்ப்பொன், கடிதம்
காக்காய்ப்பொன் கதையை விஷ்ணுபுரம் ஐரோப்பிய கதை கலந்துரையாடலுக்காக மீள் வாசிப்பு செய்தேன். ‘ஏன்‘ என்ற என்றுமுள, பதில்களால் தீர்க்கவே முடியாத கேள்வியை இக்கதை விசாரம் செய்கிறது. அனைத்து தத்துவ தேடல்களுக்கு ஊற்றாகவும், எந்த தத்துவத்தினாலும் அறுதி விடையளிக்க முடியாத ஆதி வினா. தொல் மானுடன் முதல் கடைசி மனிதன் வரை உள்ளங்களில் எதிரொலித்து கொண்டிருக்க போகிற புதிர்.
‘கா‘ என்ற சமஸ்கிருத சொல் பற்றிய குறிப்பை சங்கரரின் பஜ கோவிந்த பாடலான ‘கஸ்தவம் கோஹம்‘ (யார் நான்) உடன் இணைத்து கொண்டேன். மீட்புக்காக இந்திய மெய்யியல் மரபு பரிந்துரைக்கும் வழிகள் நான்கு. முறையே தியான வழி (யோகம்), பக்தி வழி, பலன்களில் பற்றற்ற செயல் வழி மற்றும் ஞானத்தின் வழி. சத்யானந்தர் தியானம், பாராயணம் (பக்தி) மற்றும் புலனடக்கத்துடன் கூடிய கடும் உடலுழைப்பு (செயல் யோகம்) மூலம் மீட்பை தேடும் ஆன்மீக சாதகர். அத்வைதத்தின் வழியான ஞான விசார மார்க்கத்தில் அவரை சேர்க்கும் குரு காக்கையேதான். மின்னும் பொருட்கள் எவையாயினும் (காமம், ஆணவம் உட்பட) அவை உருவமற்ற, குணங்களற்ற பிரபஞ்ச சாரத்தின் மேல் ஒளிரும் மாய தோற்றங்களே என்ற விவேக சூடாமணியின் (பிரம்ம சத்யம், ஜகன் மித்ய) ஞானத்தை அவருக்கு காக்கை வழங்கி மீட்பளிக்கிறது.அத்வைத தரிசனத்தை இலக்கிய அனுபவமாக (மலை காடுகள் உறைந்த பச்சை அலை போன்ற சொல்லாடல்கள்) தந்த உங்களுக்கு நன்றி.
வாசு, ஆம்ஸ்டர்டாம்.
கிறிஸ்தவ மெய்ஞானம் -கடிதம்
அங்கு இருந்த மூன்று நாட்கள் எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுவரை இப்படி ஒரு கற்றல் அனுபவத்தை நான் பெற்றதில்லை. வாழ்க்கையில் எப்படி நிறைவாக இருப்பது என்பதை கற்றுக் கொண்டேன்
The small speech on nature and art was a great experience. I listened to it more than five times. Being with nature is a state everyone wants to be in. But mostly we can’t achieve it, and generally we never understand that actually we are not with nature.
The art and nature- A LetterApril 20, 2025
கடவுள் இருக்கின்றாரா?
அண்மையில் ஒரு நாத்திகப்பேச்சாளரான ஒரு பெண்மணி ஒரு காணொளியில் பேசியதை கேட்டேன். “உலகத்தில் எல்லாருமே நாத்திகர்கள்தான்” என்றார். உரையாடியவர் அதிர “வீட்டுக்கு பூட்டும் தாழும் போடும் அனைவருமே நாத்திகர்கள்தான்” என்றார். சிரிப்பு.
பெரும்பாலும் இங்கே நாத்திகவாதம் இப்படித்தான் உள்ளது. இதை பாமர நாத்திகவாதம் எனலாம். இது பாமர ஆத்திகத்தை நோக்கிப் பேசுகிறது. ஆனால் மேலான அறிவுத்தளத்தில் செயல்படும் ஆத்திகமும் அதை அந்த தளத்தில் எதிர்கொள்ளும் ஆத்திகமும் உண்டு.
திரள்வதன் நெறிகள்
க.நா.சுவின் வழியில் சிறிதேனும் செய்யமுடிந்த அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். இன்று தமிழகத்தில் நவீன இலக்கியம் என்ற இயக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அமைப்பு இதுவே. எங்கள் அமைப்பு மற்றும் கிளையமைப்புகள் சார்பாக ஒவ்வொரு நாளும் எங்கேனும் இலக்கிய, தத்துவ விவாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியம் நிகழ்கிறது. முழுமையறிவு போன்ற ஒரு கல்வியமைப்பு நிகழ்கிறது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செயற்தளமும் வீச்சும் விரிந்துகொண்டேதான் உள்ளது. இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிளைபரப்பியுள்ளது.
அரசியல்கட்சிகளின் துணை அமைப்பாக அன்றி இத்தனை விரிந்த அளவில் ஓர் இலக்கிய இயக்கம் நிகழமுடியும் என்பதே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழியாகத்தான் இயன்றிருக்கிறது. க.நா.சு கண்ட கனவு இதுவே. இதற்கு முன்பு பிரமிள், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி என பலர் தொடங்கிய முயற்சி இது. அவர்களுக்கு இயலாதது இப்போது நிகழ்ந்துள்ளது. நவீன இணைய ஊடகம் அதற்கு முதற்காரணம். தமிழில் இடைநிலை இதழ்களான சுபமங்களா, தமிழ்மணி, இந்தியா டுடே வழியாக உருவான புதிய வாசிப்புச்சூழல் இன்னொரு காரணம்.
அதற்கு அப்பால் எங்கள் கூட்டுமுயற்சியைச் சொல்லவேண்டும். இந்த நண்பர்குழுவை மையமென அமைந்து ஒருங்கிணைக்கிறேன் என்பதே என் பங்களிப்பு. இந்தத் தளத்தில் நான் எனக்கென உருவாக்கிக்கொண்ட சில செயல்தள விதிகள் உண்டு. அவற்றை இவ்வாறு தொகுத்துச் சொல்வேன். இவ்வாறான பிறசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இவை உதவக்கூடும்.
ஒரு மையக்கட்டுப்பாடு கொண்ட அமைப்பாக ஓர் அறிவியயக்கம் திகழமுடியாது. அந்த மையக்கட்டுப்பாடே அதை வளராமலாக்கிவிடும். அது பொதுவான உளநிலைகொண்ட இலக்கிய- பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களின் இயல்பான கூட்டமைப்பாகவே இருக்கமுடியும். ஆகவே அதற்கு உறுதியான அமைப்பு தேவையில்லை. பொதுவான புரிதல் இருந்தால்போதுமானது.ஓர் அமைப்பு உயிருள்ளது என்றால் நெகிழ்வானதாகவும், கிளைவிட்டு கிளைவிட்டுப் பிரிவதாகவும், தன்னிச்சையாக புதிய களங்களுக்குப் படர்ந்துகொண்டே இருப்பதாகவும்தான் இருக்கும்.அமைப்பை ஒருங்கிணைப்பவர்களே எல்லாவற்றையும் செய்யவேண்டியதில்லை. செய்யவும் முடியாது. எல்லாவற்றையும் தானே செய்ய நினைப்பவர், எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்பவர் எந்த அமைப்பையும் நடத்தமுடியாது. முடிந்தவரை நண்பர்களை ஒருங்கிணைப்பது மட்டுமே நம் பணி. நான் என் இலக்கிய அமைப்புகளில் மிகமிகக் குறைவாகப் பங்கேற்பவன். என்னைவிட பலமடங்கு ஒருங்கிணைப்பாற்றலும் வேகமும் கொண்டவர்களே இவற்றை நடத்துகிறார்கள்.ஓர் அமைப்பில் பங்களிப்பாற்றும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயல்களமும், சாதனைநிறைவும் அமையவேண்டும். ஒவ்வொருவரும் அதனூடாக வளரவேண்டும்.எது நம் களமோ அதில் மட்டுமே நம் செயல்பாடு இருக்கவேண்டும். எங்கள் களம் இலக்கியம், பண்பாடு மட்டுமே. ஆகவே அரசியல் போன்றவற்றை நாங்கள் உள்ளே கொண்டுவருவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு தங்களுக்கான அரசியல் இருக்கலாம். அவர்கள் அதை வேறு களங்களில் செயல்படுத்தலாம். ஆனால் இந்தக் களத்தில் அரசியலே இருக்கலாகாது. கட்சி சார்ந்த அரசியல் பிளவுபடுத்துவதும் கசப்பை மட்டுமே உருவாக்குவதுமாகும்.எந்நிலையிலும் நேர்நிலை மனப்பான்மையும் நம்பிக்கையும் மட்டுமே கொண்டதாகச் செயல்பாடுகள் இருக்கவேண்டும். ஆகவே கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் தேவையில்லை. கற்றல், கற்பித்தல், அதன்பொருட்டு ஒருங்குகூடுதல் ஆகிய செயல்பாடுகளே போதும். எதிர்செயல்பாடுகள் கசப்பையே உருவாக்கும். கசப்புகொண்ட செயல்பாடுகள் நீடிப்பதில்லை. இனிய நட்பாடலாக நிறைவடையும் நிகழ்வுகளே நீடிக்கும். ஒரு நிகழ்வு மகிழ்வுடன், சிரிப்புடன் மட்டுமே முடியவேண்டும்.எச்செயல்பாடும் அன்றாடம் என நிகழவேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கவேண்டும். விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் எல்லா நாளிலும் ஏராளமான ஊர்களில், ஏராளமான மனிதர்கள் வழியாக நிகழ்பவைதான்.எச்செயலும் சரியாக திட்டமிடப்பட்டு, நீண்டகாலம் தொடர்ச்சியாக நிகழ்ந்தாகவேண்டும். செயல்பாடும் ஒரு தலைமுறைக்காலமாவது நீடித்தாலொழிய அதற்கு பெரிய விளைவு ஏதுமில்லை. தொடங்கி, நடத்தமுடியாமல் நிறுத்தி, புலம்பிக்கொண்டிருப்பது ஒரு பெருமை என்னும் சிற்றிதழ் மனநிலை இங்குள்ளது. அதைவிட தொடங்காமலிருப்பதே மேல். தோல்வியடைந்து புலம்புவோர் புதியதாக வருபவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடுகிறார்கள்.எந்நிகழ்வும் சிறிதேனும் பணம் மிச்சமாகும்படியே நிகழவேண்டும். பொருளியல்சிக்கனமே பொருளியல் உறுதிப்பாட்டின் அடிப்படை.மிகையான பணம் இருக்கலாகாது. பணம் இல்லாமலும் இருக்கலாகாது. பண இழப்புடன் நடத்தப்படும் எந்த செயல்பாடும் நீடிக்காது. நீடிக்காத செயலால் பயனேதுமில்லை.ஒரு பண்பாட்டுச் செயலின் உடனடி விளைவை நாம் அனேகமாகக் கண்ணால் பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை உருவாகி வர நீண்டகாலமாகும். நாம் விதைகளையே வீசுகிறோம். ஆகவே செயலுக்கு அதற்கான பயன் உண்டு என்ற நம்பிக்கையே நம்மிடம் இருக்கவேண்டும். விளைவைக் கணக்கிடுவது உளச்சோர்வையே அளிக்கும்.எந்த ஒரு பெருஞ்செயலும் சாமானியரை எரிச்சலுக்குள்ளாக்குகிறது. ஏனென்றால் அது அவர்களைச் சாமானியர்கள் என்று முகத்திலடித்ததுபோலச் சொல்கிறது. சாமானியர் தங்கள் ஆற்றலின்மையால் சாமானியராக நீடிப்பவர்கள், உள்ளூர அதற்காக கூச்சம்கொண்டிருப்பவர்களும் கூட. அத்தகையோரே வம்புப்பேச்சு நிகழுமிடங்களில் எல்லாம் திரள்கிறார்கள். சாமானியர்களின் வசைகள், அவதூறுகள், சில்லறை எதிர்ப்புகள் இல்லாமல் எந்தப்பெருஞ்செயலும் இங்கே நிகழ்வதில்லை. அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை. நம் தரப்பை நாம் விளக்கலாம், ஆனால் அத்தகைய எதிர்நிலைகளுக்குப் பதில் சொல்லக்கூடாது. அது மேலும் கசப்பையும் காழ்ப்பையுமே உருவாக்கும்.எந்தச் செயல்பாடும் நீண்டகால நோக்கில் சாமானியர்களின் நலன்களை உத்தேசித்தே நிகழ்கிறது. ஆகவே சாமானியர்களின் நலனுக்காகச் செய்யப்படும் ஒரு செயலை அவர்களே புரிந்துகொள்வதில்லை என்னும் முரண்நகை வரலாறு முழுக்கவே உள்ளது. செயலாற்றுவோர் அவர்களை மன்னிக்கவே வேண்டும்.கூட்டான செயல்பாடுகளில் ‘அனைவருமே நமக்கு வேண்டும்’ என்னும் மனநிலை அவசியமானது. எவரையுமே நாம் இழக்கலாகாது. ஒவ்வொருவரும் அவரவர் ஆளுமையுடன் இருப்பது இயல்பு.மனிதர்களிடம் குறைகாண்பதும், அவர்களைத் திருத்தியமைக்க முயல்வதும் பங்களிப்பாளர்களை விலக்குவதிலேயே முடியும். நாம் எவரையும் திருத்தியமைக்கும் பொருட்டுச் செயலாற்றவில்லை, அனைவரையும் இணைத்து நம் இலக்கொன்றை நோக்கிச் செல்கிறோம். அப்பயணத்தில் இணைபவர்கள் இயல்பாக தங்களை வளர்த்துக்கொள்ளலாமே ஒழிய அந்த அமைப்பு அவர்களை எந்த வகையிலும் மாற்றமுடியாது.ஓர் அமைப்புக்குள் அதன் பங்கேற்பாளர்களுக்குள் சிறுசிறு பூசல்களும், உரசல்களும் இருந்துகொண்டே இருக்கும், ஏனென்றால் வெவ்வேறு இயல்புடைய மனிதர்கள் அங்கே கூடுகிறார்கள். புகார்கள் எழும், மனக்குறைகள் முன்வைக்கப்படும். ஓர் அமைப்பின் மையமென அமைபவர்கள் தொடர்ச்சியாக சமரசம் செய்துகொண்டேதான் இருக்கவேண்டும். அனைவருக்கும் நடுவே திகழும் சமரசமையமே பண்பாட்டியக்கங்களை முன்னகர்த்தமுடியும். ஏனென்றால் இங்கே மையஅதிகாரம் என ஒன்று இல்லை.அனைவரும் நமக்குத்தேவை என்னும் அணைத்துச்செல்லும் போக்கே இருக்கவேண்டும். ஆனாலும் கூட்டான செயல்பாடுகளில் இருந்து சிலர் தொடர்ச்சியாக உதிர்ந்துகொண்டே இருப்பார்கள். காரணங்கள் பல. சிலரால் அவர்களே நம்பும் இலட்சியவாதத்தில் நீடிக்கமுடியாது. சிலர் இலட்சியவாதத்தை கற்பனாவாதமாகப் பெருக்கிக்கொண்டு, நடைமுறையைப் புரிந்துகொள்ளாமலிருப்பார்கள். சிலரால் பிறருடன் இணைந்து செயல்படவே முடியாது. சிலருக்கு அவர்களின் ஆணவம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. சிலருக்கு தாழ்வுணர்ச்சி அதற்கு தடையாக இருக்கும். எங்கும் எப்போதும் தன் தனித்தன்மையை மட்டுமே வெளிப்படுத்த முயல்பவர்கள் கூட்டுச்செயல்பாடுகளில் இருந்து விலகிவிடுவார்கள். அந்த உதிர்வை தடுக்கவே முடியாது. புதியோர் வருவார்கள் என்றால் எவரும் எந்த இழப்பையும் உருவாக்கிவிடமுடியாது.துல்லியவாதிகளாலும் கூட்டுச்செயல்பாடுகளில் நீடிக்கமுடியாது. ‘தன்’ செயல்களில் துல்லியவாத நோக்கு கொண்டவர்களே உயர்கலைஞர்கள். அவர்களுக்கு ஒரு வகையான தனிப்போக்கு இருக்கலாம். ‘பிறர்’ செயலில் துல்லியவாதநோக்கு கொண்டவர்கள் எதையும் செய்து முடிக்கமுடியாத வெறும் பொதுத்தொந்தரவுகள் மட்டுமே. அவர்களில் ஒருசாரார் பொய்யாக அப்படி நடிப்பவர்கள், தங்களுக்கு ஒரு பிம்பம் உருவாகவேண்டும் என்பதற்காக. சில துல்லியவாதிகள் ஓர் உளப்பீடிப்பாக அதைக் கொண்டவர்கள். அவர்களை தவிர்த்தே முன்செல்லமுடியும்.உயர்ந்த கருத்துக்களையும் இலக்குகளையும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருப்பவர்கள் உண்மையில் வீணானவர்கள். செயலுக்கு எதிரான சக்திகள், பலசமயம் உளச்சோர்வையும் எரிச்சலையும் மட்டுமே அளிப்பவர்கள். எதையேனும் தொடர்ச்சியாகச் செய்பவர்கள், குறைவாகவேனும் செய்து முடிப்பவர்கள் மட்டுமே பயனுள்ளவர்கள். செயல் தொடர்ச்சியாக நிகழ்வதே முக்கியமானது. அதுவே நம்மால் செய்யக்கூடியது.
நாம் செயலுக்கே பொறுப்பானவர்கள், விளைவுகளைக் கணக்கிடும் உரிமை நமக்கில்லை. செயல் நமக்களிக்கும் விடுதலையும் நிறைவுமே நமக்கான பயன்கள். விளைவுகளை ஒருவேளை நாம் அறியவே முடியாமல் போகலாம். அதை காலத்திற்கு விட்டுவிடுவதே உகந்தது.செயலே விடுதலை. செயலே நிறைவு. செயலில் இருத்தலே மெய்யான வாழ்க்கை.
தமயந்தி
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமாகவே இருக்கும்” என்று பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.
தமயந்தி – தமிழ் விக்கி
வ.வே.சு.ஐயர் கடிதங்கள்- கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ.,
வ வே சு ஐயர் லண்டனிலிருந்து இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதிய கடிதங்கள் ‘லண்டன் கடிதம்‘ என்ற பெயரில் பிரசுரமானது. பெ.சு.மணி தொகுத்த ‘வ வே சு ஐயர் கடிதங்கள்‘ புத்தகத்தில் மேற்படிக் கடிதங்களும் வேறு சில நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும்படிக்கக் கிடைத்தது. பலகடிதங்களையும் அளித்து உதவியவர் பெ.சு.மணியின் நண்பரான வ வே சு ஐயரின் புதல்வர் டாக்டர் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தி (1912-2001).புதுச்சேரியிலிருந்து பாரதியின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘இந்தியா‘ பத்திரிகைக்கு ஒரு
வெளிநாட்டு நிருபராக இருந்து பலசெய்திகளை கடிதம் மூலம் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்திருக்கிறார் வ வே சு ஐயர். அங்கிருக்கும் புரட்சிக்குழுக்களின் செயல்பாடுகள்,மக்களுடைய வாழ்க்கைமுறை, ஆங்கிலேய அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஐரோப்பாவின்ஏனைய நாடுகளின் அரசியல் போக்கு என்று கடிதம்தோறும் புதுப்புது செய்திகள்.
‘என் அன்புள்ள ரிஷி‘ என்று சாவர்க்கரால் அழைக்கப்பெற்று, அபிநவ பாரத சபையின் ஐரோப்பியக்கிளையை நிறுவி, டென்மார்க்கில் இன்டர்நேஷனல் சோசியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் மேடம் காமாவுடன் கலந்துகொண்டு, பாரிசில் ‘பாரிஸ் குழு‘ என்னும் புரட்சிக்குழுவில் பணியாற்றி, பின்னர் ரோம், துருக்கி, எகிப்து, மும்பை, கொழும்பு, கடலூர் வழியாக பிரிட்டிஷ் ஒற்றர்களை ஏமாற்றி சாகசப் பயணம் செய்து புதுச்சேரியை அடைந்து, ஆஷ் துறையைக் கொல்ல வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும்வரை ‘புரட்சி வீரர்‘ ஆக இருந்த வ.வே.சு அய்யர் ‘கம்ப நிலையம்‘ என்ற பதிப்பகத்தை நிறுவி நூல்களை வெளியிட்டு இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து வர, பாரதியார், மண்டயம் ஸ்ரீனிவாசாச்சார்,அரவிந்தர் போன்றோரின் நட்பு முக்கியமான காரணம்.
கர்சன்வாலியைக் கொன்ற மதன்லால் திங்க்ரா லண்டனில் தூக்கிலிடப்பட்டபின் அவரது உடலை எரியூட்ட விண்ணப்பிக்கப்பட்டபோது ஆங்கிலேயர் ஏற்க மறுத்தனர். அப்போது ‘க்ளாஸ்கோ‘ என்னுமிடத்தில் ஒரு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டுலட்சம் பெருமான சரக்கு எரிந்து சாம்பலானது. இதுகுறித்து இந்தியாவிற்கு எழுதிய கடிதத்தில் ஐயர் தனக்கான புனிதப்பொருள் கிடைக்கப்பெறாத அக்னி பகவான் வெகுண்டெழுந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்ததாக எழுதியிருந்தார். ஆசிரியரான பாரதி ஆட்சேபம் தெரிவித்தாலும் பத்திராதிபர் வ.வே.சு ஐயர் பக்கம் இருந்ததால் கடிதம் பிரசுரமானது. ஆனாலும் அடுத்த இதழில் தலையங்கத்திலேயே தனிநபர் பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்ற இதழில் நமது நிருபர் இவ்வாறு எழுதியது சரியல்ல என்று எழுதினார் பாரதி. பாரதிக்கு ஆஷ் கொலையிலும் உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியாவது ‘கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோ போல்‘ என்கிறார். ஐயருக்கு கம்பனைத் தவிர யாரும் தெரிவதில்லை. மேற்படிப்புக்காகச் சென்றபோது 1908 ல் லண்டன் ‘ஹைகேட் யூனிடேரியன் சர்ச்’ ல் கம்பராமாயணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்துகிறார்.அது லண்டனில் பிபின் சந்திரபாலர் நடத்திய ‘ஸ்வராஜ்‘ பத்திரிகையில் வெளியிடப்படுகிறது. சொந்தச்செலவில் கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தின் தேர்ந்டுத்த பாடல்களை சந்தி பிரித்து, 1917 ல், புத்தகமாகப் பதிப்பிக்கும் அளவிற்கு போகிறார். ஆனால்
இந்தப் பதிப்பிற்கு நிறைய கண்டனங்களே இருந்தன. அப்பிடி பொங்கியெழுந்த ஒரு கண்டனக்கடிதத்திற்கான பதிலில் இவ்வாறு கூறுகிறார் “பதங்களெல்லாம் ஒன்றோடொன்று கோர்த்துக்கொண்டிருப்பதால் சாமான்யக் கல்வியினர் இந்தச் செய்யுள்களின் பொருளைக் கண்டுபிடிக்க எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது? உரையெழுதிய ஆசிரியர் ஒருவரும் தவறான உரையெழுத ஏதுவாக இருந்திருக்கிறது. இது காரணம் பற்றியே ஆங்கிலம் படித்த பலரும் கம்பராமாயணத்தைத் தொடுகிறர்களில்லை. அதைப்படித்து அனுபவித்து அதன்
யோக்கியதையை வெளிப்படுத்தக்கூடிய மேதாவிகள் அதைப் படிக்காமலிருப்பது தீங்கா? புத்தகத்தைச் சுருக்கி பதம்பிரித்து அச்சிடுவது தீங்கா?என்று யோசிக்கவேண்டும். சுவை கண்டவர்கள் முழுநூலைத் தேடி வருவார்களல்லவா? பேரிலக்கியங்களின் மீது ஜனங்களுக்குள்ள மலைப்பு போகவேண்டுமானால் இது போன்ற பதிப்புகள் அவசியம்”
இத்தனைக்கும் முன்னுரையில் எங்கெங்கே சந்தியைப் பிரித்தால் பொருளில் சந்தேகம் வருமோ அல்லது தெளிவு குறையுமோ அங்கெல்லாம் சந்தி பிரிக்கவில்லை என்று கூறுகிறார். இலியட், ஹெரிவார்ட் தி வேக், டலிஸ்மான், ஐவான்ஹோ, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் என்று சுருக்கப்பட்ட நூல்களின் வரிசை பெரிது என்கிறார். முதலில் சுருங்கிய பதிப்பும், பின்னர் மொத்த நூலையுமே அதேபோல சந்திபிரித்து விரிந்த பதிப்பும்செய்ய திட்டம் வைத்திருந்தார் ஐயர். இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதுகுறித்து தமிழறிஞர் காரைக்குடி சொ முருகப்பா தன்னுடைய ‘கம்பர் காவியம்‘ நூலில் “யாராவது உள்ளம்குழைந்து அரும்பாடுபட்டு உயிரைக்கொடுத்து நூல் வெளியிட முற்பட்டால் அவனை
மறுபடி அந்தப்பாதையில் விடுவார்களா நம் தமிழர்கள்“; என்று அங்கலாய்க்கிறார். ஆனால் 1958 ல் மர்ரே ராஜம் கம்பராமாயணத்தை சந்திபிரித்துப் பதிப்பிக்க ஒரு தூண்டுகோலாக அமைந்தது இந்தப் பதிப்பு. “சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி மாத்திரமில்லை சங்கநூல்கள் யாவும் இதேபோல பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற சுவப்னமும் இருந்துவருகிறது” என்கிறார் ஒரு கடிதத்தில். அது சுவப்னமாகவே முடிந்தது.
ராஜதுரோகக் குற்றத்திற்காக பெல்லாரியில் சிறையிலிருந்தபோது, மேற்படிக் கண்டனக்கடிதத்தை எழுதிய காசியைச் சேர்ந்த ஆதிமூர்த்தி என்பவரிடமிருந்து திலகரின் ‘கீதா ரகசியம்‘ ,Griffith’s translation of Valmiki Ramayan and Tulasidas முதலிய நூல்களைப்பெற்று கம்பராமாயணத்தின் பத்துகதாபாத்திரங்களின் குணவிசேஷங்களை ஆராய்ந்து Kambaramayana – A Study என்ற அரிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதுகிறார் ஐயர். இதில் சீதையின் பாத்திரம் பின்னர் சேர்க்கப்பட்டு வேறொருவரால் முடிக்கப்பட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தால் 1950 ல் வெளியிடப்பட்டது.
வ.வே.சு ஐயருக்கு கடித இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. மாவீரன் நெப்போலியனின் பிரெஞ்சு மொழிக்கடிதங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1915 ல் ‘ஹிந்துஸ்தான் ரெவ்யூ‘; இதழில் The Commentaries of Napoleon I என்னும் கட்டுரையில் நெப்போலியனின் எழுத்தாற்றலை விவரித்துக் கூறியுள்ளார். மேலும் ‘நப்போலியன்‘; என்னும் நூலை புதுச்சேரி கம்ப நிலையம் மூலம் வெளியிட்டார். “இது குமரக்கடவுளின் அவதாரமோ என்று பிரமிக்கத்தகுந்த மகாவீரன் முதல் நப்போலியன் சரித்திரம்“; என்று இந்தப் புத்தகத்திற்கு விளம்பரம் செய்தார். இருநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்நூலை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்தனர். மிகுந்த சிரமத்திற்கிடையே திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து ஐயரின் ஏழு நூல்களைக் கம்ப நிலையம் வெளியிட்டது. இன்னொரு முயற்சியாக
வங்கமொழியின் ‘ப்ரவாசி‘; மற்றும் ஆங்கிலத்தின் ‘மாடர்ன் ரெவ்யூ‘ போல தமிழிலும் ஒரு இலக்கியப்பத்திரிகை தொடங்க மூவாயிரம் ரூபாய் தேவைப்படுவதால் தலா நூறுரூபாய் முதலீட்டில் முப்பது பேரைச் சேர்க்க முயற்சி செய்தார் வ.வே.சு.ஐயர். முன்வந்தவர்கள் நாலே பேர்தான்.
ராஜகோபாலன் என்ற கற்பனை நண்பர் இவருக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் கூறுமுகமாக இவர் எழுதிய கடிதங்கள் தமிழில் கடித இலக்கியத்தின் ஆரம்பப்புள்ளி. அதில் கிங்ஸ்லியின் ‘போ,மேற்கு நோக்கி‘ (Westward Ho) என்னும் நூல் அவருள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், அதுபோலவே தமிழில் பாரி, நன்னன், கபிலர் முதல் நம்மாழ்வார், ராமானுஜர், தேசிகர் வரையிலான கதை நாயகர்களைக் கொண்டு தான் செய்யவிருக்கிற ‘காமிக்‘ வரிசைகளைப்பற்றி விரிவாகக் கூறுகிறார். ‘இந்த நோக்கத்திற்காகவே மங்கையர்க்கரசியின் காதல், லைலா மஜ்னு, அனார்கலி போன்ற கதைகளை கைப்பழக்கத்திற்காக எழுதிவருகிறேன்‘; என்கிறார். ‘அவர் எழுதிய ராஜகோபாலன் கடிதங்களில் அபூர்வமான கதைகள் உண்டு‘ என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.
சேரன்மாதேவி பரத்வாஜ ஆசிரமத்தில் நடைபெற்ற சர்ச்சை குறித்து நண்பர் ஆதிமூர்த்திக்கு 1925 ல் எழுதிய கடிதத்தில் “மகாத்மா இருதலைக்கொள்ளி எறும்பு போல அவஸ்தைப்படுவதைக் கண்டேன். நானும் வைதீகர்களுக்கும் அவர்களது எதிரிகளுக்கும் நடுவில் இருப்பதால் இரண்டுபேருக்கும் நம்மிடத்தில் அபிமானமில்லை. ஆனால் வழி இவ்விருவகுப்பினருக்கும் இடையில்தான் உள்ளது. ஜாதீய ஒற்றுமையை உண்டாக்குவது மிகமிகக் கடினம். ஆனால் சிதைப்பது மிக எளிது. அந்த வேலை ஸ்ரீநாயுடுவால் துவங்கப்பட்டிருக்கிறது. சன்யாசியைப் போல வாழ்ந்துவரும் என் மேலேயே ஸ்ரீநாயுடுபோன்றோருக்கு இவ்வளவு ஷாத்திரம் என்றால் மற்றவர்கள் மேல் எவ்வளவு இராது? எல்லாவற்றையும் இயக்கிக்கொண்டிருக்கிற பராசக்திக்கு எல்லாம் தெரியும்” என்கிறார்.அந்தக் கடிதத்திலேயே எஞ்சியகாலத்தை அத்தியாத்ம வளர்ச்சியிலும், இலக்கியத்திலும் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். ஆனால் காலம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. 1925 ஜூன் 3 ம்
தேதி குருகுல மாணவர்களோடு சுற்றுலா சென்றபோது பாபநாசம் அருவிச் சுழலில் சிக்கிய மகளைக் காப்பாற்றச் சென்று மகளோடு தானும் உயிர்நீத்தார் வ.வே.சு.ஐயர்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



