மகளை அறிதல், கடிதம்
அன்பின் ஜெ,
நலம் விழைகிறேன். குமரித்துறைவி தந்த மிகப்பெரும் உணர்வெழுச்சி சற்று தணிந்த பின்னரே உங்களுக்கு எழுத வேண்டும் என்று இருந்தேன். வாசிக்கும் காலம் தோறும் பொங்கும் உவகையில் அப்படித் திளைத்து இருந்தேன் என்பதே உங்கள் எழுத்தின், அவள் கருணையின் அருள்,பொருள்,இன்பம்.
நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டது போல் இது முற்றிலும் மங்கலம் நிறைந்த படைப்பு. இது வரை நான்கு முறை மீள் வாசித்து விட்டேன். இப்புத்தகத்தோடு தன்மீட்சியும் வாங்கி வாசித்திருந்தேன். இவ்விரு புத்தகங்களும் என் அகம் புறம் இரண்டையும் நல்வழிக்கு கொணரும் நூல்களெனவே போற்றுகிறேன்.
ஏன் என் அகம் குமரித்துறைவியைப் படிக்க விழைந்து கொண்டே இருக்கிறது?. நானே இக்கேள்விக்கு விடையை பல விதங்களில் சொல்லி சரிபார்த்துக் கொண்டேன்.
முழுமுதற் காரணம் என் மகள் கோதை. அவள் மேல் அமைந்த என் தீரா அன்பு. இன்னும் எவ்வளவோ வருடங்கள் கழிந்து வரப்போகும் அப்பிரிவுக்கு மறுகும் பித்து மனம். வேணாட்டு அரசரின் ஒவ்வொரு விதிர் விதிர்ப்பையும், துயருறும் விசும்பலையும் கண்ணீரின் வெம்மையையும் என்னுள் உணர்கிறேன்.
இரண்டாவது காரணம் எங்கள் குலதெய்வம். தகப்பனின் குடியும், அவரின் நோயும், வறுமையும் என உழன்ற என் இளம்பருவத்தில், என் மூதாதை ஒருத்தி, குலதெய்வக்கோயிலில் வைத்து தெய்வ வாக்கெனவே எனக்குச் சொன்ன சொல். “நீ ஒரு ஆளாகி எழுந்து வந்து இந்த குடும்பத்த காப்பாத்தனும்”. அது முதல் இன்று வரை, அச்சொல் நான் கொடும் பாவத் தடம் சாய வேண்டிய தருணங்களில் ஒரு அசரீரி எனவே ஒலித்து என் பாதங்களை வழி நடத்துகிறது. வெறும் பட்டுத்தறி கூலியாக வாழத் தள்ளிய விதியின் பிடியிலிருந்து நான் நினைத்துப் பார்க்காத உயரத்தில் இன்று நிறுத்தி இருக்கின்றது. இப்போதும் காரிலோ இருசக்கர வானத்திலோ நான் செல்கையில் ஒரு நிழல் போல என் தோளின் பின்னே எழும் குலதெய்வ முகம் என்னை வழிநடத்துகிறதென்றே நம்பியிருக்கிறேன். இந்நூல் ஒரு தொல்குடி தெய்வ அணங்கின் மேல் அத்துணை மாந்தரும் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆவணம். வீரமார்த்தாண்டன் தன் தலை அறுத்து வைக்கவும் துணிந்த அதே நம்பிக்கை.
மூன்றாவது மதுரையின் பேரரசி மீனாட்சியே. மதுரைக்கு மாப்பிள்ளை ஆன எனக்கு வருடத்திற்கு எப்படியும் இரண்டு மூன்று முறை அங்கு செல்ல வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறையும் வீட்டு மீனாட்சி வழி நடத்தலில் அரசி மீனாட்சியை தரிசிக்க கிளம்பி விடுவது. இப்புத்தகம் வாசிக்கையில் மண்டையில் உரை(தை,றை)த்தது, அத்தனை முறையும் கருவறையின் விளக்கொளியில் நான் பார்த்தது ஒரு சிறுமியையே. அதுவும் குறும்பு கொப்பளிக்கும் விளையாட்டுச் சிறுமி. என் மனைவிக்கு அவள் கொலு வீற்றிருக்கும் அரசி. வழக்கம் போல் சொக்கரிடம் எப்படி சிக்கிருக்கோம் பாத்தியா மக்கா என்று ஒரு அளாவல். அவ்வளவே. எங்களூர் காஞ்சி காமாட்சி எப்போதும் என் கண்களுக்கு ஒரு கண்டிப்பான ஆசிரியை. வீட்டுப்பாடம் எல்லாரும் சரியா பண்ணியாச்சா, பண்ணாதவன் லாம் எழுந்து நில்லு எங்க பாப்போம் என்று சற்றே கறாராக விசாரிக்கும் தொனி.
இம்மூன்று காரணங்களும் உள்ளத்தின் ஆழத்தில் உறைபவை. எல்லா இடர்களிலிருந்தும் கடைத்தேற்றும் நம்பிக்கை அந்த ஆழத்தில் இருந்து எழுவதே. குமரித்துறை அவ்வாழத்திற்கு என்னை கொண்டு சென்று மீளக் கரை சேர்க்கும் ஒரு அழகிய தெப்பம். உங்கள் எழுத்து அத்தெய்வ அணங்கை எல்லா மங்கல அணிகளும் பூட்டி காண்போரின் கண்குளிர மனம் குழைய அதில் கொலு அமர்த்தி இருக்கிறது.
அத்தெய்வ அருள் பொலிந்து இன்னுமொரு நூற்றாண்டிருங்கள் ஆசானே
தங்கள் அன்புடன்
சங்கர் கிருஷ்ணன்
புதுச்சேரி
பிறவித்தேன் மீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர் தேவியும் மகளும் -கடிதங்கள் குமரியின் எழில்-கடிதங்கள் குமரித்துறைவி, கடிதம் குமரித்துறைவியின் தருணம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

