Jeyamohan's Blog, page 126

April 20, 2025

அன்னைப் பெருமரம்

I am listening to your videos on philosophy and literature. In fact, I am watching these videos to feel intellectually closer to you. I used to imagine that I was with you at your house, listening to your thoughts and emotions.

The feeling of proximity 

காலை வகுப்பு ஆலமரத்தடியில் ஆரம்பமானது. “ஆல் என்றால் நீர் ” , இம்மரம் அபிரிமிதமான நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் என ஆரம்பித்தார், புனித நீரை தொட்டு நற்காரியங்களை துவங்குவது போல.. ! தாவரவியல் பெயர் ficus Benghalensis , Fig biology ஒரு தனித்துறை – FICUS ல் உள்ள இந்த ‘US’ என்று வந்தாலே “அன்னைப் பெருமரங்கள்” என்று பொருள் படும் என்றார். அச்சொல்லே சிலிர்க்க வைத்தது. எங்கெங்கும் அன்னைகளாக நிறைந்து நின்ற கானகம் நினைவை நிறைத்து. தத்துவ வகுப்பில் உபநிடதங்கள் கானகங்களில் உருவெடுத்தது என்று நீங்கள் சொன்னதன் முழு பரிமாணம் புரிந்தது  இக்கணம் . 

அன்னைப் பெருமரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2025 11:30

April 19, 2025

இன்று பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில்…

 

Of Men Women and Witches

Book Talk about the new book written by eminent Tamil author Jeyamohan.
Venue: Attakalatta, Indira Nagar, Bangalore.
Date and Time: 20 April 2025 Evening 5:30 PM
Participants: Satish Chaprike, Kannada author
Sangeetha Puthiyedath (Translator)
and Jeyamohan, author 

Of Men, Women and Witches – Amazon

An extraordinary memoir from one of Tamil Nadu’s most acclaimed novelists

The great Tamil novelist Jeyamohan came from the region of Tamil Nadu that originally belonged to Travancore (in Kerala), and grew up in a unique, syncretic culture straddling two distinct worlds.

In this memoir, originally written in Malayalam, he draws a vivid picture of his family which followed the matriarchal family systems of Kerala. He especially focuses on his powerful mother and grandmother, who pitted their wills against and were constantly at odds with his abusive father. Moving between the stories of his parents’ marriage, his often-unhappy childhood, falling in love and becoming a writer, Jeyamohan also tells the story of the region he comes from, stretching the form of the memoir from family to history.

Beautifully written and profoundly imagined, Of Men, Women and Witches is another masterwork from this great novelist.

நண்பர்களை நிகழ்வுக்கு அழைக்கிறேன்

 

(ஜக்கர்நாட் பதிப்பகத்தில் இருந்து  பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கத்தில் அறம் கதைகளின் ஆங்கிலவடிவமான  Stories of the True வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் FSG நிறுவனத்தால் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியிடப்படுகிறது.

ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் நாவலின் ஆங்கிலவடிவமான THE ABYSS  வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு 2026 ல் அமெரிக்காவின் டிரான்ஸிட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த  சிறுகதைகளின் தொகுப்பான A Fine Thread and other stories ரத்னா புக்ஸ் நிறுவனத்தால் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.)

Of Men, Women and Witches – என் நான்காவது ஆங்கிலநூல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:36

க.நா.சுவின் வழியில்…

க.நா.சு தமிழ் விக்கி

க.நா.சு . இந்த பெயரை நான் அதிகம் படித்தது. கேட்டது எனது ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் இவர்களின் எழுத்துக்களில் உரைகளில். அதன் மூலம் சென்றடைந்தது  இக்கட்டுரைகள் (சக்கரவர்த்தி உலா.   மற்றும்    க.நா.சுவின் தட்டச்சுப்பொறி     

அவரின் ஒரு நூலையாவது முதலில் படிக்கவேண்டும் என முடிவு செய்து வாங்கியது ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்‘. இந்த நூலை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணம் பெங்களூர் இலக்கிய விழாவில் ஆசிரியரை பேட்டி கண்ட எழுத்தாளர் பொழிபெயர்ப்பாளர் சுசித்ரா இந்நூலை மேற்கோள்காட்டி பேசினார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு அறம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்தேன். இன்னொரு நண்பருக்கு அவரின் மகன் ஆங்கிலத்தில் படிக்கும்வண்ணம் ‘Stories Of the true’ வாங்கிக் கொடுத்தேன் . இருவருமே சொன்ன ஒன்றுண்டு . ‘ இது என்ன இவ்வளவு raw வா இருக்கு ‘, ‘கெட்ட வார்த்தை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். இதை படிக்கும் ஒருவர் எப்படி கடைத்தேறுவார்?’ இப்படி பல கேள்விகள். அப்போது நான் சொன்னது ..பகடிக்காக ஆனால் அவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி ‘ஆமாம் உண்மைதான் . இந்த கருத்துக்களை ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான எதிர்வினைகளுக்காக என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பவர் அவர் என்று சொல்லி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தேன் . அவர்களுக்கு அந்த நூல் வாங்கிய பணத்துக்கு வெங்காயம் வாங்கி இருக்கலாமே என்ற ஆதங்கம்தானே ஒழிய மின்னஞ்சல் அனுப்பவெல்லாம் நேரமில்லை .

இதில் உள்ளுறைந்திருக்கும் மனப்பான்மை என்பது ‘நான் எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருப்பேன் அதற்குள் நான் அறிந்த விஷயத்தையே மனம் லயிக்கும்படி சொல்லவேண்டும்‘ அதை மீறக்கூடாது.அப்படி என்றால் எந்த புதிய கருத்தும் சிந்தனையும் நம்முள் செல்லாது என்பதை பற்றி  பிரக்ஞையற்ற நிலை தான் இது.

இப்போது இந்த நூலைப் பற்றி.இதிலுள்ள கட்டுரைகள் அறுபதுகளில் க.நா.சுவால் நடத்தப்பட்ட இலக்கியவட்ட இதழில் எழுதப்பட்டவை. 1985 ல் நூலாக வெளிவந்துள்ளது.

விமர்சனம் என்பது இலக்கியத்துறைகளில் ஒன்று அதன் தேவை இடம் என்ன என்பதே இதன் அடிநாதம் . ஆனால் அதன்மூலம் இது தொட்டு சென்றிருக்கும் இடங்கள் பல. விமர்சனத்தின் தேவை , பத்திரிக்கை / பேராசிரிய , பல்கலைக்கழக எழுத்து,  இலக்கிய எழுத்து இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், ஒரு வாசகராக ஒருவர் எப்படி ஒரு நூலை படிக்க வேண்டும். அதிலும் பயிற்சி எடுத்துக்கொள்ள என்ன என்ன செய்யவேண்டும். நல்ல நூல் என்று இனம்காண வாசிப்பின் வழி மட்டுமே சென்றடையமுடியும், உலக இலக்கியம் பற்றிய புரிதல் , மொழிபெயர்ப்பின் பயன் என்ன அது எப்படி இருக்கவேண்டும், தமிழ் தூய்மைவாதம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் , விமர்சகனுக்கு இருக்கவேண்டிய நிமிர்வு , பாரதியாரை குறளை நாம் எப்படி அணுகவேண்டும் ஆனால் எப்படி அணுகிக் கொண்டிருக்கிறோம் , டி கே சி யைப் பற்றிய உண்மையான வரிகள் எஸ்.வி.வி என்ற எழுத்தாளரைப் பற்றிய அறிமுகம் . கம்பனை ஷேக்ஸ்பியரைப் பற்றிய விரிவான விமர்சனங்கள் , அன்று தமிழில் எழுதிக்கொண்டிருந்தவர்களை சிலரைக் குறிப்பிட்டு இவர்களே எனக்கு முக்கியமான,  இலக்கியத்தரமுள்ளவர்களாய் தெரிகிறது என சொல்லியிருப்பது சிறுகதை நாடகங்கள் நாவல்கள் கவிதைகள், விமர்சனம், சோதனைகள் என இவற்றைப்பற்றிய விரிவான புரிதல்களை அளிக்கும் இந்நூல் .

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில எழுத்தாளர்கள் பெயர்கள் இன்று அதிகம் கேட்பதில்லை என்றாலும் அவர் சொல்லும்படி அது அவரின் பார்வை மட்டுமே . உதாரணம் சிதம்பர சுப்ரமணியம் .அதோடு அவர் எதையும் இந்நூலில் நிறுவவில்லை. இதையெல்லாம் நான் இன்ன இன்ன காரணங்களினால் சொல்கிறேன். இதை இந்த முறைமைகளின் படி மறுப்பவர்கள் அவர்கள் கண் கொண்டு மறுக்கலாம் என சொல்கிறார். இது இலக்கியத்துக்கு மட்டுமல்ல நமது அன்றாட வழக்கு சழக்குகளுக்கும் பயன்படுத்திப்பார்க்கலாம் . இலக்கியத்தின் பயன்தானே அதுவும் .

இலக்கியத்தில் கருத்தும் உருவமும் ஒரு சம்பாஷணை என்ற உரையாடல் வடிவக் கட்டுரையில் . மிக ஆழ்ந்த கவனத்தைக்கோரும் விவாதங்கள் இடம் பெறுகிறது. ஒரு படைப்பிற்கு முக்கியம் கருத்தா வடிவமா . ஒரு வடிவத்தை படைப்பாளி எப்படி தேர்ந்தெடுக்கிறார். அந்த வடிவத்தில் இல்லாது வேறுவடிவத்தில் எழுதியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என விரிவான உரையாடல்.

உலகப் படைப்பாளிகள் பலரது ஆக்கங்கள் விவாதிக்கப் பட்டுள்ளது அதில் சிலரது பெயர்கள் நான் முதல்தடவையாக வாசிக்கிறேன். உதாரணம் டாண்டே .

சரி அப்படி ஆரம்ப நிலை வாசகன் இந்த மாதிரி அழுத்தமிக்க நூலை வாசிக்கவேண்டுமா என்றால் . நிச்சயமாக ஆம் என்பதே என் பதில். அதற்கு துணை செய்யும் நூலில் உள்ள பொன்வரிகள் . உதாரணங்கள் சில கீழே .

இலக்கியாசிரியன் வாசகனைத் தேடுவதில்லை. நல்ல வாசகன்தான் இலக்கியாசிரியனைத் தேடுகிறான்நல்ல இலக்கியாசிரியர்கள் எங்கே எங்கே என்று தேடுகிற கூட்டம் இன்று தமிழ்நாட்டில் அதிகம் இல்லை. ஏற்படவேண்டும்இலக்கியாசிரியன் எந்தக் குறிப்பிட்ட வாசகனையும் கூட்டத்தையும் மனதில் கொண்டு எழுதுவதில்லை . எழுதவேண்டிய அவசியம் , அரிப்பு  , அர்ஜ் ஏற்படுகிறது – எழுதுகிறான் தாங்கள் படித்ததற்கு அப்பாலும் ரசிக்கத் தகுந்தது இருக்கலாம் என்கிற சிந்தனை முறையாகப் படித்தவர்களுக்கு இருப்பதில்லைபழசைப் பற்றியே எழுதித் தங்கள் பொழுதையும் நம் பொழுதையும் புதுசாக எதுவும் சொல்லாமல் போக்கிக் கொண்டிருப்பவர்களை , சமுகத்திலும் அறிவுலகத்திலும் இருந்து பகிஷ்கரிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்  தமிழ் தமிழ் என்று பாராட்டிச் சுயநலத்துக்காகப் பெருமை பேசுகிறவர்கள் உலக இலக்கியத்தில் தமிழ் தன் ஸ்தானத்தை ஏற்பதற்கு ஒன்றும் செய்யாதவர்கள் , செய்ய இயலாதவர்கள் என்று காண்கிறோம்எத்தனையை தெரிந்துகொள்வது , அதற்கு மேலும் தெரிந்து கொள்ளவேண்டியது இருந்துகொண்டேதானே இருக்கும் என்று கேட்கலாம். உண்மைதான். தெரிந்துகொள்வதைத் தெரிந்துகொண்டு , இன்னும் இருக்கிறது என்கிற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டு விட்டால் இலக்கியம் வளரும்தமிழில் எல்லாமே இருக்கிறது குறளில் எல்லாமே இருக்கிறது வேறு ஒன்றும் நமக்குத் தேவையில்லை என்று ஆரம்பத்தில் பண்டிதப் பேராசிரியர்களும் , அரசியல்வாதிகளும் பின்னர் வந்த தமிழ் மட்டும் பற்றி வெறி கொண்டவர்களும் சூழ்நிலையை வீணாக்கிவிட்டார்கள்.உலகில் உள்ளதில் சிறந்ததை அங்கீகரித்துப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஊர் ஆர்வம் வேண்டும் .முதலில் அந்த ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும்.சிந்திக்கவே மறுப்பதற்குப் பதில் , சிந்தித்து முடிவு காண முடியாவிட்டாலும் பாதகமில்லை – சிந்திப்பது என்பதுதான் முக்கியம்

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய விஷயங்கள் இன்றும் பெரிதாக மாறவில்லை என்பதே இன்றும் இந்த நூலுக்கான தேவையை உறுதிப்படுத்துகிறது .

இந்த நூலின் தலைப்பு மற்றும் முதல் கட்டுரையின் தலைப்பு ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்‘ . அதில் எவை எவையெல்லாம் வேண்டும் என சொல்லப்பட்டிருந்ததோ அவைகளில் பெரும்பாலானவை முழுமையறிவு , தமிழ் விக்கி , , விஷ்ணுபுரம் விருது , குமரகுருபரன் விருது, பெரியசாமி தூரன் விருது , உலகத் தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புகள் , அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மாநாடு என ஆசிரியர் ஜெயமோகனின் முன்னெடுப்பில் சொல்லெடுப்பில் செயல்வடிவம் பெறுவதை காணும்போது அவர் தன்னை க.நா.சு மரபினன் என்று சொல்லிக்கொள்வது வெறும் வார்த்தைகளல்ல என்று உணர முடிகிறது.

தற்போதைய வாசகன் என்னும் நிலையில் என்னாலும் ஒருதுளி  அளவிலாவது சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது ‘ நான் ஆசான் ஜெயமோகனின் க.நா.சுவின் மரபினன்‘ என்று !

https://kmrvignes.blogspot.com/2025/03/blog-post_29.html

அன்புடன்

கே.எம்.ஆர்.விக்னேஸ்.

அன்புள்ள விக்னேஷ்

அன்புள்ள விக்னேஸ்,

நான் க.நா.சுவின் இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் நூலை  1986 ல் வாசித்தேன். அப்போது எனக்கு 24 வயது. அவ்வாண்டுதான் நவீனத்தமிழிலக்கியத்திற்கு சுந்தர ராமசாமி வழியாக அறிமுகமாகிக்கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி வீட்டுக்கு வந்த ராஜமார்த்தாண்டன் அதை எனக்கு வாசிக்கக்கொடுத்தார். அவருடன் வந்திருந்த கட்டைக்காடு ராஜகோபாலன் (கொல்லிப்பாவை சிற்றிதழ் ஆசிரியர்) அந்நூலைப் பற்றிப் பேசினார். புத்தகம் அவருடையதுதான்.

அது க.நா.சுவை வெளிப்படுத்தும் நூல் அல்ல, அவருடைய நாவல்களே அவர் என்றார் ராஜகோபாலன். “சும்மா அவரோட எண்ணங்களை எழுதியிருக்கார். கிடைச்ச கட்டுரைகளை திரட்டி புக்கு போட்டிருக்காங்க. கிரிட்டிசிசம்னா நீங்க சி.சு.செல்லப்பாவைத்தான் வாசிக்கணும்” என்றார்.

“செல்லப்பா அலசல் விமர்சனம் பண்ணுவார். நீளமாட்டு இருக்கும் இதெல்லாம் எளிமையான கட்டுரைகள். இந்த புக்கு இவரைமாதிரி தொடங்குறவங்களுக்கு நல்லது. இலக்கியம்னா என்னான்னு காட்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன்.

சுந்தர ராமசாமி “அவர் ஏற்கனவே டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், பி.கே.பாலகிருஷ்ணன், குட்டிக்கிருஷ்ண மாரார்னு பெரிய கிரிட்டிக்கை எல்லாம் வாசிச்சாச்சு…. இது இலக்கிய அறிமுகம், அவ்ளவுதான். க.நா.சு கிரிட்டிசிசம் எழுதலை. அவர் எழுதினதெல்லாம் இலக்கியச் சிபாரிசுகள்தான்… ஆனா அவருக்கு மிகப்பெரிய ரோல் இருக்கு. அவர் ஒரு பெரிய சகாப்தம்” என்றார்.

அப்போது க.நா.சு உயிருடன் இருந்தார். எனக்கு அவர் பெயர்தான் அப்போது தெரியும், நான் மலையாள- ஆங்கில இலக்கியத்தில் ஊறிக்கிடந்த நாட்கள் அவை. காஸர்கோட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். க.நா.சுவின் கட்டுரைகளை அப்போது குங்குமம், தினமணி முதலிய இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தார். அந்த நூலுக்கு அவ்வாண்டே சாகித்ய அக்காதமி விருது கிடைக்கவிருந்தது. அதைவிட க.நா.சுவை நான் அதற்குச் சில மாதங்களுக்குப் பின் சென்னையில் சுவாமிநாதன் என்னும் நண்பாரல ஒருங்கிணைக்கப்பட்ட விஜில் என்னும் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் சந்திக்கவும் நேர்ந்தது.

அந்நூலை நான் அன்றே வாசித்து முடித்தேன். எனக்கு பெரும் உள எழுச்சியை உருவாக்கிய நூல் அது. அதிலுள்ள கனவுதான் என்னை முதலில் கவர்ந்தது. இலக்கியக் கொள்கைகள், இலக்கிய ஆய்வுகள் அதில் இல்லை. க.நா.சு ஓர் அறிவியக்கத்தை உருவாக்க முயன்றுகொண்டே இருந்தார், வாழ்நாள் முழுக்க. சிற்றிதழ்கள் நடத்தினார். கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலத்தில் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்தார். தமிழ்ச்சூழலில் அணைந்துவிட்டிருந்த அனலை ஊதி ஊதி பற்றவைக்க முயன்றபடியே இருந்தார். அதன்பொருட்டு வசைபாடப்பட்டார், இன்றும் அவரை வசைபாடுபவர்கள் மிகுதி.

அவருடைய நடைமுறை முயற்சிகள் எல்லாமே தோல்விதான். ஏனென்றால் அவர் ஒரு ‘விட்டேத்தியான’ மனநிலை கொண்டிருந்தார். (சுந்தர ராமசாமியின் சொல்) எதையும் பொறுப்பாகச் செய்யவில்லை. ஆனால் அவருடைய இலட்சியத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதை சுந்தர ராமசாமி போன்ற சில மாணவர்களிடம் பற்றவைத்துச் செல்ல அவரால் இயன்றது.

நான் க.நா.சுவிடமிருந்து அந்தக் கனவை பெற்றுக்கொண்டேன். இளமைக்குரிய திமிருடன் சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். “ஒரு இயக்கம் தேவைசார். அதை உருவாக்கணும்னு நினைக்கிறேன்”

சுந்தர ராமசாமிக்கும் அக்கனவு இருந்தது. அவர் காகங்கள் போன்ற அமைப்பை உருவாக்கி சிலகாலம் நடத்தி வந்தது அதனால்தான். நாங்கள் உத்வேகத்துடன் ஓர் இலக்கிய அமைப்பைப் பற்றி அந்த மாதங்களில் பேசிக்கொண்டோம். நான் காசர்கோட்டில் இருந்து அனேகமாக தினமும் அவரிடம் உரையாடினேன். மாதம் ஒருமுறை நாகர்கோயிலுக்கு வந்து அவர் இல்லத்தில் தங்கினேன். திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் பேசினோம். காகங்கள் அமைப்பை திரும்ப ஆரம்பிப்பது முதல் திட்டம். அதை சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் விரிவாக்குவது அடுத்த கனவு.

க.நா.சு 1986 ல் சாகித்ய அக்காதமி விருது பெற்றார். அவரைச் சந்தித்தது என்னை அவரை வழிபடும் மனநிலைக்குக் கொண்டுசென்றது. அவரைப் பார்த்து “நான் உங்க கனவை எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிடவேண்டும் என்று கனவுகண்டேன். சுந்தர ராமசாமி வீட்டுக்கு க.நா.சு வந்தார். அப்போது அவரிடம் போனில் ஓரிரு சொற்கள் பேசினேன். மொத்தக்குரலும் எனக்குள்ளே ஒலிக்க நான் “உங்களைப் பாக்கணும் சார்” என்று மட்டும் சொன்னேன்.

க.நா.சு வந்துபோன சில வாரங்கள் கழித்து சுந்தர ராமசாமி காகங்கள் என்னும் இதழை ஆரம்பிப்பது பற்றிச் சொன்னார். நான் உற்சாகத்துடன் கிளம்பி வந்தேன். அதற்கு மொழியாக்கங்கள் செய்வது, பிளாக்குகள் வாங்கி வருவது போன்றவற்றைச் செய்தேன். இதழின் பெயர் காலச்சுவடு என மாறியது.  சுந்தர ராமசாமி அவருடைய ஆசிரியர் அவருக்களித்த கனவை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார். அவரால் அதை தொடரமுடியவில்லை. அவருடைய மகன் அக்கனவை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். தொடக்க காலத்தில் காலச்சுவடு இலக்கியவிழாக்களை அமைப்பது உட்பட பல பணிகளை முன்னெடுத்தது. இன்று பதிப்பகம் மட்டுமாகச் சுருங்கியுள்ளது. ஆயினும் காலச்சுவடு ஓர் இயக்கம்.

எனக்கு காலச்சுவடு மேல் பெரும் ஈடுபாடு இருந்தது. அது ஒன்றரை ஆண்டில் நின்றுவிட்டமை சோர்வளித்தது. நான் அக்காலகட்டத்தில் சுப்ரபாரதி மணியனுடன் இணைந்து கனவு இதழுக்காக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி மலர்களை தயாரித்தேன். நானே ஒரு சிற்றிதழ் தொடங்கும் கனவுடன் இருந்தேன். சுபமங்களா தொடங்கப்பட்டபோது அதில் தீவிரமாக ஈடுபட்டேன். அனேகமாக எல்லா இதழ்களிலும் எழுதினேன்.

மீண்டும் காலச்சுவடு தொடங்கப்பட்டபோது அதில் முதன்மைப் பங்களிப்பாற்றினேன். ஆனால் என் திட்டங்களை நோக்கி அவர்களைக் கொண்டுசெல்ல முயன்று , முரண்பாடு உருவாகி விலகிக்கொண்டேன். இரண்டாம் கட்ட காலச்சுவடு இதழில் உருவான மனுஷ்யபுத்திரன் விலகிக்கொண்டு உயிர்மை இதழை தொடங்கினார். தொடக்க காலத்தில் நான் உட்பட பலர் பங்களிப்புடன் பல முனையில் செயல்பட்டது உயிர்மை. இன்று மனுஷ்யபுத்திரன் கட்சிசார்பு கொண்டவராகி அவ்விதழும் கட்சியிதழாகச் சுருங்கிவிட்டாலும் உயிர்மையும் ஓர் இலக்கிய இயக்கமே. இவை அனைத்துக்கும் தொடக்கம் இந்நூலில் உள்ள க.நா.சுவின் கனவே.

நான் 1992ல் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். அது என் வாழ்க்கையில் பெரிய மறுதொடக்கம். நான் நித்யாவைச் சந்திக்கவில்லை என்றால் க.நா.சு, சுந்தர ராமசாமி முதல் இன்றுவரை நீடிக்கும் சிற்றிதழ் மனநிலையை வளர்த்துக் கொண்டிருப்பேன். எனக்கும் நவீனத்துவ தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையேயான வேறுபாடு நித்யா வழியாக உருவானதே. அவர் எனக்கு செவ்வியலின் உச்சங்களை அறிமுகம் செய்தார். மேற்கு ஏற்கனவே நவீனத்துவத்தை கடந்துவிட்டதை அறிவித்தார். என்னை நான் கண்டடையச் செய்தார்.

க.நா.சுவில் தொடங்கி ரமிள், ஜி.நாகராஜன் வரை அனைவருமே ஏதேனும் இலக்கிய இயக்கத்தை உருவாக்க முயன்றவர்களே. அவர்களின் முயற்சிகள் மேலெழவில்லை. பெருங்கனவுகள் இருந்தாலும் கூடவே அவநம்பிக்கையையும் சோர்வையும் வளர்த்துக்கொள்பவர்கள் நவீனத்துவப் படைப்பாளிகள். தனித்து மட்டுமே செயல்படக்கூடியவர்கள். அமைப்புகளை உருவாக்கி முன்னெடுக்கும் வழிகாட்டித்தன்மையும் தொலைநோக்கும் அற்றவர்கள். அதாவது எதையும் பொறுப்பேற்றுக்கொள்ளாத, பிறர் என்பதே மனதில் இல்லாத போக்கு கொண்டவர்கள். அவர்கள் உருவாக்கிய அமைப்புகளின் தேக்கமும், எல்லைகளும் அதன் விளைவே.

அந்த மனநிலை உண்மையில் ‘நவீனத்துவ’ எழுத்தாளர்களில் உலகம் முழுக்க இருந்து வந்த ஒன்று. அவர்களிடம் இருக்கும் கசப்பும், எதிர்மறை மனநிலையும் அவர்களை தனியர்களாக ஆக்கிவிடும். ஆனால் உலகமெங்கும் பேரிலக்கியவாதிகளுக்கு இவ்வியல்பு இருந்ததில்லை. பேரிலக்கியவாதிகளே உலகமெங்கும் மிகப்பெரிய இலக்கிய- பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கியவர்கள். இயக்கங்களை தொடங்கியவர்கள். இந்தியாவிலேயே தாகூர், வள்ளத்தோள் நாராயணமேனன், சிவராம காரந்த் என ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

நித்ய சைதன்ய யதியைச் சந்தித்த பின் நான் என் செயல்பாடுகளை அவருடைய வழிகளில் அமைத்துக்கொண்டேன். அவருக்கும் தமிழில் ஓர் அறிவியக்கத்தை முன்னெடுக்கும் கனவு இருந்தது. அதற்கு அவர் சிற்பி, பிரம்மராஜன் போன்ற பலர் வழியாக முயற்சிகள் செய்து அவை ஈடேறாத நிலையில் இருந்தபோதுதான் அவரை நான் சந்தித்தேன். க.நா.சு வழியாக நான் பெற்றுக்கொண்ட கனவே நித்யா எனக்களித்த ஆணையாகவும் இருந்தது.

1992 முதல் என் பணி ஓர் அறிவியக்கத்தை கட்டமைப்பதாகவே இருந்தது. 1992ல் தொடங்கிய குரு நித்யா காவிய அரங்குகளில் இருந்து இன்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வரை பல துணைஅமைப்புகளாக அந்தச் செயல்பாடு விரிந்துகொண்டே உள்ளது. க.நா.சு எழுதியதுபோல ஊர் தோறும் இன்று ஏதேனும் ஓர் அமைப்பு எங்களிடமிருந்து தொடங்கி நடைபெறுகிறது. அனேகமாக எல்லா நாளிலும் ஆண்டு முழுக்க இலக்கிய- பண்பாட்டு நிகழ்வுகள் உள்ளன. தமிழ்விக்கி ஓர் இயக்கம். இன்று முழுமையறிவு இன்னொரு இயக்கம். இவற்றின் விளைவுகள் என்ன என்பதை இன்று கண்கூடாகவே பார்க்கலாம். எவர் எங்கே எந்த இலக்கியக்கூட்டம், பண்பாட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தினாலும் அதில் பங்கெடுப்பவர்களில் பாதிப்பேர் இங்கிருந்து சென்றவர்களாகவே இருப்பார்கள்.

நான் இதை நிகழ்த்தினேன் என பெருமிதம் கொள்ளவில்லை- அதை எனக்கேயான ஆணையாகச் சொல்லிக்கொள்கிறேன். க.நா.சுவிடமிருந்து கனவை, நித்யாவிடமிருந்து செயலைக் கற்றுக்கொண்டேன். அந்த கனவை தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொண்டே இருக்கிறேன். அவர்களின் தொடர்ச்சியே நான். செயல்களுக்கு நான் பெருமிதம் கொண்டேன் என்றால் என் செயல்பாடு நின்றுவிடும். இன்னொன்று, இதை நான் நிகழ்த்தவுமில்லை. இப்படி ஒரு கனவை முன்வைத்து உரிய நண்பர்களை திரட்டியது மட்டுமே என் பணி. உண்மையில் களத்தில் நான் எதையுமே செய்யவில்லை. எல்லா சாதனைகளும் என் நண்பர்களுடையவை மட்டுமே.

ஜெ

 

க.நா.சுவின் கதைகள் க.நா.சுவின் படித்திருக்கிறீர்களா? விபுலானந்தரும் க.நா.சுவும்- கடிதங்கள் க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன் சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும் பாரதி விவாதம்-7 – கநாசு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:35

மா.சு.சம்பந்தன்

மா.சு.சம்பந்தன். தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், இதழியல் வரலாற்றாய்வாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர். தமிழ் இதழியல் மற்றும் அச்சுத்தொழில் வளர்ச்சி பற்றிய இவருடைய ஆய்வுநூல்கள் முன்னோடியான முயற்சிகள்.

மா.சு.சம்பந்தன் மா.சு.சம்பந்தன் மா.சு.சம்பந்தன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:34

பல்லவர் கட்டுத்தளிகள்- தாமரைக்கண்ணன்

பல்லவர் கட்டுத்தளிகள் வாங்க

அன்புள்ள ஜெ 

அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதைகளில் திருநின்றவூர் பூசலாரின் கதை மிகவும் வித்தியாசமானது. அந்தணரான அவர் சிவனுக்கு ஒரு கோவில் கட்ட முயற்சிக்கிறார். அவரால் பொருள் திரட்ட முடியவில்லை, ஆகவே அவரது மனதில் இறைவனுக்கு ஆகம முறைப்படி கோவில் ஒன்றை எழுப்புகிறார். அதே சமயத்தில் காஞ்சியில் பல்லவ அரசன் எழுப்பிய கற்கோவிலில் சிவன் எழுந்தருளும் நாள் வந்தது , அரசனது கனவில் இறைவன் தான் பூசலார் கட்டி முடித்த கோவிலில் அதே நாள் எழுந்தருள்வதாகவும், காஞ்சிக் கோவிலுக்கு  வேறுநாள் பார்க்கும்படியும் அரன் சொல்கிறார். மன்னன் அதிசயித்து அடியவரது கோவிலைத் தேடிச்சென்று அப்படி ஒன்று இல்லாதது கண்டு திகைக்கிறான். பூசலார்  மனத்தால் கோவில் கட்டியமையை வேந்தனுக்கு  சொல்கிறார், பல்லவன்  பூசலாரைப் பணிந்து காஞ்சி மீள்கிறான். தொண்டை நாட்டவரான பூசலார் அப்பர் சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்கிறார் இராசமாணிக்கனார். 

மேலே சொன்ன கதை பெரியபுராணத்தில் மன்னியசீர் சருக்கத்தில் சேக்கிழாரால் பாடப்பட்டுள்ளது. பூசலார் ஆகம முறைப்படி மனக்கோவில் அமைப்பதையும், உபானம், சிகரம் போன்ற ஆலயத்தின் உறுப்புக்களையும் தனது பாடல்களில் கிழார் குறிப்பிடுகிறார், அவ்வகையில் கோவில் கலை குறித்த இலக்கிய ஆவணமாகவும்  இப்பாடல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. சோழர்களின் கலை சாதனைகளாகிய தஞ்சை, கங்கைகொண்ட சோழபுர சிவாலயங்கள் சேக்கிழார் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. அவற்றை விதந்தோதாது நாயன்மார் கதைகளோடு இயைந்த தில்லை, ஆரூர் போன்ற பெருங்கோவில்களின் சிறப்புகளையே சேக்கிழார் பாடுகிறார். எனினும் பூசலார் கதையில் காஞ்சியில் பல்லவர் எழுப்பிய கற்றளியை சேக்கிழார் குறிப்பிட மறக்கவில்லை. 

கோவில் கட்டிடக்கலை குறித்த தமிழ் வெளியீடுகளில் எப்போதாவது நிகழும் அற்புதங்களில் ஒன்று இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடாக வந்திருக்கும் பல்லவர் கட்டுத்தளிகள் என்ற புத்தகம். வரலாற்றாய்வாளரும் கண் மருத்துவருமான இரா கலைக்கோவனுடன் ஆய்வாளர்கள் மு நளினி மற்றும் சீ கீதா ஆகியோர் இணைந்து நானூற்று எழுபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கியுள்ளனர்.  

இந்நூலின் ஆசிரியரான கலைக்கோவன் வரலாற்றாய்வாளர் இராசமாணிக்கனாரின் மகன். மா இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு , பெரிய புராண ஆராய்ச்சி ஆகிய நூல்கள் இவ்வளவு காலம் கழித்தும் ஆர்வலர்கள் வாசிப்பிலுள்ள ஆக்கங்கள். இராசமாணிக்கனாரின் பெயரில் அமைந்த ஆய்வு மையத்தின் இயக்குனருமான கலைக்கோவன் அவரது ஆய்வு மையத்தினருடன் இணைந்து சோழர் கற்றளிகள், தென்னகக்குடைவரைகள்  குறித்த முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாறு என்ற பெயரில் வெளிவந்த இணைய இதழும் இந்த ஆய்வு மையத்தின்  முன்னோடி முயற்சியே. இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடுகள் அதன் தரவுகளின் நம்பகத்தன்மைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பவை. பாண்டியர் பல்லவர் இருமரபினரும் இன்று நாம் காணும் கோவில்களுக்கு முன்னோடியாக ஒருகல் தளி, குடைவரை, கட்டுத்தளி ஆகிய மூன்று வகை கோவில்களையும் செய்தவர்கள்.  பல்லவர் கட்டிடக்கலை குறித்து இம்மையம் முன்பே வெளியிட்டுள்ள மகேந்திரர் குடைவரைகள், பல்லவர் ஒருகல் தளிகள் ஆகிய நூல்களை அடுத்ததாக இந்த பல்லவர் கட்டுத்தளிகள் நூல் வெளிவந்துள்ளது.  

பல்லவர் எழுப்பிய கட்டுத்தளிகளான  இருபத்தி ஒன்பது ஆலயங்களை இந்த நூல் கட்டிடக்கலை நோக்கில் பதிவு செய்கின்றது. அவற்றில் மாமல்லையின் ஆறு ஆலயங்கள், காஞ்சிபுரத்தின் பதினோரு ஆலயங்கள், உத்திரமேரூரின் இரு ஆலயங்கள் தவிர பிற இடங்களிலுள்ள பத்து ஆலயங்களும் அடங்கும். இருபத்து ஒன்பதில் ஐந்து விண்ணகரங்கள் ஒரு சமண ஆலயம் தவிர ஏனையவை சிவாலயங்கள்.  பல்லவர் கட்டுத்தளிகள் என்றால் பொதுவாக நினைவுக்கு வருபவை காஞ்சி கைலாசநாதர் கோவிலும், மாமல்லை கடற்கரை கோவிலும்தான். இந்நூலில் அதிகமும் அறியப்படாத விளக்கணாம்பூண்டி விசலேஸ்வரம், ஆலம்பாக்கம் மாடமேற்றளி  போன்ற ஆலயங்களும் பல்லவர் ஆலயங்களா என்று தெரிந்துகொள்ளமுடியாதபடி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்ட கூரம், நெமிலி பெருமாள் ஆலயங்களும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன.  

இந்த நூல் ஒவ்வொரு கோவிலின் கட்டிட அமைப்பையும் விரிவாக சொல்கிறது. நேரில் பார்ப்பதுபோல ஒவ்வொரு கட்டிட உறுப்பையும் அதன் வகைமையையும் வார்த்தையாக்கி சொல்லிச்செல்வது  கலைக்கோவனின் எழுதும் முறை. கோவில் கட்டிடக்கலை அடிப்படை தெரிந்தவர்கள் படிக்கப்படிக்க மனக்கண்ணில் கோவிலின் ஒவ்வொரு பகுதியும் விரிந்துசெல்லும். அதுபோலவே சிற்பங்கள் குறித்த விவரணையும் அமைந்துள்ளது வெவ்வேறு மூர்த்தங்களின் அணிகள், முத்திரைகள், அமர்ந்த நிலை, கரணங்கள் இவை அனைத்தையும் பதிவு செய்கிறது ஆசிரியர் குழு. 

நூலின் சிறப்பியல்புகளாக மேலுமிரு விஷயங்களை கூற வேண்டும். இந்த நூலில் பல்லவர் கலை குறித்து ஏற்கனவே எழுதியுள்ள முன்னோடி எழுத்தாளர் கருத்துக்களிலிருந்து மாறுபடும் இடங்கள்  தெளிவாக குறிப்புகளின் வழியே பதிவு செய்யப்படுகிறது. இரண்டாவது இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், முக்கியமான படங்கள் வண்ணத்திலும், ஏனையவை கருப்பு வெள்ளையிலும் அச்சிடப்பட்டுள்ளன. ஆய்வாளர் கலைக்கோவனின்  சேகரங்கள் இவை, இவற்றில் பல எடுக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது மாற்றம் பெற்றிருக்கலாம் என்பதாலும், இனிமேல் மாற்றம் செய்யப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதாலும் இவை முக்கியமான ஆவணங்களாகின்றன. 

ஒவ்வொரு கோவிலையும் படங்களுடன் விளக்கிய பின்னர் நூலின் இறுதிப்பகுதியில், இவை அனைத்தையும் தொகுத்துக்கொள்ளும்படி இரண்டு ஒப்பீடுகள் வைக்கப்படுகின்றன. முதலாவதாக கோவில் கட்டடக்கலையின் பதினாறு உறுப்புக்கள் எவ்வாறு பல்லவர் ஆலயங்களில் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை ஆசிரியர் குழு ஒவ்வொரு பகுதியாக விளக்கிச்சொல்கிறது.  அடுத்ததாக சிற்பங்கள் பகுதியில் இறை வடிவங்கள் மட்டுமல்லாமல், ஆடல் சிற்பங்களின் கரணங்கள், இசைக்கருவி மீட்டுவோர், தேவர்கள், பூதங்கள், முனிவர்கள், அரசர்கள், காவற்பெண்டுகள், கவரிப்பெண்கள், அடியவர்கள், தோழியர் என ஒவ்வொரு சிற்பமும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்று விளக்கப்படுகின்றது. அத்துடன் சிற்பங்களின் உடலமைப்பும், மெய்ப்பாடுகளும், அணிகளும், கை முத்திரைகளும், ஆயுதங்கள் உள்ளிட்ட கைப்பொருள்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

வரலாறு என்பது தமிழர்களுக்கு எப்போதும் குடிப்பெருமிதம் என்றே ஒலிக்கின்றது. எல்லா அரசர்களும் அவர்களுக்கு ஏதோ வகையில் மூதாதையர். மாறாக கலைப்பெருமிதம் என்று ஒன்று நமக்கு இருக்கலாம், அது காலம் காலமாக இங்கு செழித்து வளர்ந்த கோவில்களை மையமாக்கி வளர்ந்த பண்பாட்டின் விளைவு. பல்லவர்கள் அதற்கு மிகவலுவான அடித்தளமிட்டவர்கள். அவ்வகையில் இந்நூல் மிக முக்கியமான ஒரு மூலத்தரவு நூல். இதை வாசிக்கையிலேயே பல்வேறு ஆய்வுகளுக்கான மூலநூல் இது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இது போன்ற நூல்கள் தமிழில் வெளிவருகின்றது என்பதாலேயே இதன் மீதான வாசக கவனமும், நூலின் மீதான மதிப்பும் குறைவாகத்தான்  கிடைக்கும். அது எவ்வகையிலும் நூலின் உருவாக்கத்திற்கான உழைப்புக்கு பத்தில் ஒருபங்கும் ஈடாகாது. 

மெய்யாகவே கலை ரசனை கொண்ட நண்பர்களுக்கு இந்நூல் முக்கியமானது என்பது புரியவேண்டும். ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளின்வழி அடிப்படை புரிதல் கொண்ட நண்பர்கள் பெருகிவருவதை ஒரு நல்ல நேர்மறையான மாற்றத்திற்கான துவக்கமாக பார்க்கிறேன். அவர்களிடையே இந்நூல் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டாம் பதிப்பு வரட்டும் என்ற காத்திருப்பு வேண்டாம், ஏனெனில் உடனே அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.  

தாமரைக்கண்ணன் 

புதுச்சேரி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:31

சோற்றின் கணக்குகள், கடிதம்

  Stories of The True    வாங்க

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் கடிதம். சில ஆண்டுகளுக்கு முன்பே அறம் தொகுதி படித்தவுடன் எழுதவேண்டுமென்று தோன்றியது. அதுவும் முதல் சில கதைகளைப் படித்து முடித்தவுடனேயே.ஏன்  ‘அறம்’ என்ற தலைப்பேகூட போதுமானது  எழுதத்தூண்டுவதற்கு. ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தில் எழுதவில்லை. அறம் தொகுதியின் வளர்புகழும் அதற்கு வெளியாகிக்கொண்டிருந்த உளமுருக்கும் தொடர்கடிதங்களும் தொடக்ககால வாசகனான எனக்கு தயக்கத்தைத் தந்திருக்கலாம்.

கொச்சியில் பிறந்து வளரும் என் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கக் காரணம் நாளை நாம் அவர்களிடம் ஒரு குறளையோ கம்பனின் சொல்லழகையோ கூறும்போது அவர்கள் ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நிற்க நேரிடுமோ என்பது போன்ற அச்சம் ஒருபக்கம் இருப்பினும், முதன்மையாகக் கருதியது ‘அ’ என அவர்களுக்கு எழுத்தறிவிக்கும் அக்கணமே ‘அ- அறம் செய விரும்பு’ எனத்தொடங்கும் வாய்ப்பைத் தவறவிடலாகாது என்பதுதான்.

அந்தச்சிறு வயதில் குழந்தைகளுக்கு ‘தான தருமம் செய் (அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்தகோபனைப் போல)’ என எளிதாக பொருள்கூறி தொடங்கி வைக்கலாம். ஆனால் அவர்கள் வளரும்தோறும் ‘அறம்’ என்ற சொல் அதன் எண்ணற்ற வண்ணபேதங்களைக் காட்டி படிப்படியாக வளர்ந்து ஒருநாள் எல்லையற்ற ‘பேரறம்’ ஆக  அவர்களுக்குத் தன் விஸ்வரூப தரிசனத்தை  அது அளிக்கக்கூடும். ஆக ‘அறம்  செய விரும்பு’ என்பது ஆற்றுவதெல்லாம் அறத்தின்பால் ஆற்றுக என ஆற்றுப்படுத்தும் ஒட்டுமொத்த வாழ்நாளுக்கான ஆப்த வாக்கியம், மந்திரம், வழிகாட்டி. அதை முதல்  எழுத்தின் அறிவிப்பிலேயே ஒரு குழந்தைக்கு உரைக்கும் பேறு வேறு எம்மொழியிலேனும் வாய்க்குமோ என்பதறியேன். தமிழிலேயேகூட ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அச்சம் தவிர், அம்மா இங்கே வா வா’ என எத்தனை வந்தாலும் ‘அறம்  செய விரும்பு’ என்பதை அவை எக்காலத்தும் வெல்லப்போவதில்லை.

அண்மையில் பெங்களூரு சென்றிருந்தபோது விமானநிலையத்தில் கண்ட ஒரு கட்சியே இக்கடிதத்தை எழுத்தூண்டியது. ஏறக்குறைய ஒன்றரை பதிற்றாண்டுகால விமனப்பயணங்களில் எனக்குள்ள புரிதல் என்பது விமானநிலையங்கள் என்பவை ஒரு பொருளுக்கு ஐந்து முதல் பத்து மடங்கு வரை கூடுதல் விலை வைத்து விற்பவை, குடிநீர் உட்பட. விமான நிறுவனங்கள் என்பவை ஏற்கனவே விற்கப்பட்ட விமானச்சீட்டுக்கு  விருப்ப இருக்கைத் தேர்வு எனத்தொடங்கி கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் எப்படி கூடுதல் பணம் வசூலிப்பது என்ற நோக்கம் கொண்டவை. ஆனால் எவ்வித தற்பொறுப்பும் அற்றவை. உதாரணத்திற்கு விமானம் தாமதம் ஆவதும் அதனால் பயணிகளுக்கு ஏற்படும் நேரம்,பொருள் மற்றும் இன்னபிற இழப்புகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. துலாத்தட்டில் அவர்கள் கூறும் ‘we sincerely apologize for the delay’ என்ற வாசகத்தை மறுபுறம் வைத்து நம் எல்லா இழப்புகளையும் நிகர் செய்துவிட்டதாக எண்ணிக்கொண்டு எந்த இக்கட்டிலும் எப்படி நேர்நிலை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது என்ற பாடத்தையும் ‘sincere’ போன்ற சொற்களின் இக்கால செயற்கள அர்த்தத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

அதிலும் அடுத்த ஊருக்கான இணைப்பு விமானம் கொண்டவர்களின் கதி அதோ கதிதான். கடந்த நவம்பரில் எங்கள் அஜந்தா எல்லோரா பயணத்தின் போது சென்னையிலிருந்து மும்பை வழி ஔரங்காபாத் வரை வரவேண்டிய நண்பர்களின் தனியார் விமான நிறுவனமொன்று ஐந்து நிமிடம் தாமதமாகும் என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்து மன்னிப்பு கோரும் பெருந்தகைமையில் தொடங்கி அவர்களின் நூதன ‘progressive disclosure’  மூலம் படிப்படியாக அறிவிப்புகளை வெளியிட்டு கடைசியில் தங்கள் சொந்த நிறுவனத்தை சேர்ந்த அடுத்த விமானத்தை பிடிக்க இயலா வண்ணம் முடிந்ததை தங்கள் தளத்தில் வெளியான நண்பர்களின் கடிதங்களில் காணலாம் (ஒளிரும் பொற்கணங்கள், பெருங்கனவின் ஒட்டுண்ணிகள்-கடிதம்). எனினும் குண்டும் குழியும் நிறைந்த புழுதி மண்டிய சாலைவழி  மும்பை-ஔரங்காபாத் இடையேயான 12 மணி நேரப் பயணத்தை நண்பர் குழு உற்சாகமும் சிரிப்புமாக மாற்றிக் கொண்டது, தங்களின் நீண்ட கால பண்படுத்தலால்தான். அல்லாதவர்களுக்கு இத்தகைய அனுபவம் அல்லலன்றி வேறல்ல. நல்லவேளையாக ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் அன்று மாலையில் அறிமுகமும் அடுத்த நாள் இடங்களைப் பார்ப்பதும் என ஏற்பாடு செய்திருந்தார். அன்றே இடங்களைக் காண்பதாக இருந்திருப்பின் தங்கள் வழிவந்த குழுவே ஆயினும் இழப்பு இழப்புதான்.

பெங்களூரு விமான நிலையத்தின் உணவக வளாகத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களைக் கண்டதும் சற்று ஆச்சரியமாக இருந்தது. காவல் சோதனைக்குப் பிறகு விமானம் ஏறுமிடமல்லாது வரிசைகளைக் காண்பது அரிது. ஆகையால் அருகே சென்று கண்டபோது ‘தாமதமான விமானங்களின் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைக் காண்பித்து இலவசமாக உணவை பெற்றுக் கொள்ளலாம்’ என்று எழுதியிருந்தது. அங்கு நல்ல உணவும் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது (பிரியாணி என நினைக்கிறேன், உடன் தொட்டுக் கொள்ளவும் இருந்தது, மேலும் குடிநீர் புட்டியும் பழச்சாறும்).எந்த ஆரவாரமோ, எந்த விளம்பரமோ, எவருடைய/ எந்த அமைப்பின் பெயரோகூட இன்றி. இதை விமான நிலையம் செய்கிறதா, அரசு செய்கிறதா அல்லது தனிநபர்/ நிறுவனம் செய்கிறதா என்பதறியேன். அதற்கான எத்தடையமும் அங்கு இல்லை.

பொதுவாக விமானநிறுவனங்கள் தாமதமாகும் தங்கள் விமானத்தின் பயணிகளுக்கு உணவல்ல ஒரு குப்பி தண்ணீர் கூட விநியோகிப்பதில்லை. விமான நிலையங்களில் இலவச தானியங்கி குடிநீர் விநியோகிப்பான்கள் உண்டு. ஆனால் அதில் மரியாதையுடன் யாரும் தண்ணீர் அருந்த இயலாது. கீழே ஒரு பொத்தானை விரலால் அழுத்தமேலே சிறுபிள்ளை பீய்ச்சி அடிக்கும் திருநீரைப் போல வெளியேறும் தண்ணீருக்கு இடையில் மந்திகளைப் போல தலையைநீட்டி மாந்தி நிற்கும் மாந்தரை முதன்முதலாகக் கண்டபோது தூக்கி வாரி போட்டது. இப்போது பழகிவிட்டது(கொச்சி விமான நிலையம் போன்றவை விதிவிலக்கு, குடிதண்ணீர் மற்றும் வெந்நீர் விநியோகிப்பான்களும் பிடித்துக் குடிக்க காகிதக்குப்பிகளும் குறைவின்றி பல இடங்களில் காணலாம்; வசூல் ராஜா/ நிறுவனங்கள் நினைத்தால் மக்களை மரியாதையாக நடத்துவதுசாத்தியமே எனத் தோன்றும் இடம் அது). எப்படியோ சிலகணம் நம் ஆதிமூதாதையராக மாறிமகிழும் இத்தருணங்களும் ஒரு நல்வாய்ப்புதானோ?. இந்தியாவிலேனும் நிலை இப்படி. பல வெளிநாட்டு விமான நிலையங்களில் இவ்வசதியும் இல்லை. சில டாலர்களைக் கொடுத்தே மக்கள் தாகம் தீர்த்துக்கொள்ள இயலும்.

உலகெங்கும் பெரும்பாலும் விமான நிலையத்தின் உணவக வளாகங்கள் மட்டுமல்ல விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு வரை எதையும் எவருக்கும் விலையின்றி வழங்கிட அங்குள்ள பெருவாடகை நல்கிவணிகம் செய்யும் முதலாளிகள் விரும்பிட வாய்ப்பில்லை. நடுத்தரவர்க்கமும் விமானப்பயணங்கள் மேற்கொள்ளும் இக்காலத்தில் விமானத்தாமதத்தால் அங்கு ஒருகுடும்பத்திற்கு ஒருவேளை உணவுண்ண நேரிடின் அது ஒருபயணச்சீட்டிற்காகும் விலையைவிட கூடுதலாக ஆகக்கூடும். அத்தகையவர்களுக்கு உரிய நேரத்தில் மரியாதையுடன் எவ்வித விளம்பரமுமின்றி அளிக்கப்படும் இதுவும் ஒருவகைத் தொண்டே.

இத்தகுத் தருணங்களில் ‘Lounge’ எனப்படும் இளைப்பாறல் நிலையங்களில்  உணவுண்ணும் பொருட்டு பல கடனட்டைகளை வாங்கிக்குவிக்கும் நண்பர்களையும் கண்டுள்ளேன். மும்பை போன்ற விமனநிலையங்களில் இவ்வட்டைகள் கூவி விற்கப்படுவதும் உண்டு. அரசே இத்தகு காரியங்களைச் செய்யினும் சோற்றுக்காகும் செலவைவிட அதனை விளம்பரப்படுத்த செய்யப்படும் செலவு மிகும் காலம் இது. அறம் தொகுதிக்குப்பின் விளம்பரமற்று உண்பவருக்கு உறுத்தலின்றி அளிக்கப்படும் இத்தகுச் சோற்றை எத்திசை காணினும் அக்கணம் உதிப்பவர் கெத்தேல் சாகிப்பே!. அவர் எவராயினும் வாழ்க. மற்ற விமனநிலையங்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம்.

இனிய மாலையில் கண்ணை உறுத்தாது மங்கிய ஒளியில் மிளிரும் வேய்ங்குழலால் வேயப்பட்ட பொய்க்கூரைகளின் எழிலும் அவற்றைத் தாங்கி நிற்கும் கழிக்கால் பொழிலும் சற்றே மனதை மயக்கச் செய்திடினும் உண்மையில் வியக்கச் செய்தது எதிர்பாராத இடத்தின் இந்தச் சோற்றுக்கணக்கே.

ஆசிரியருக்கு நன்றி,

இரா. செந்தில்

THE ABYSS Paperback –  வாங்கThe Abyss Kindle Edition வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:31

Philosophy and common man

If a person who does not normally have many philosophical questions is introduced to philosophy, does that introduction then create an interest in philosophy in him and make him a student of philosophy?

Philosophy and common man

ஆன்மிகவாதிகளுக்கு இலக்கிய அறிமுகம் ஏன் தேவை என்ற காணொளியைக் கண்டேன். மிகமிக முக்கியமான ஒன்று. இன்றைய சூழலில் நமக்குத்தெரியாதது இதுதான். ஆன்மிகவாதிக்கு ஆன்மிகம் மட்டும் போதும், வேறேதும் தேவையில்லை என்ற எண்ணம் உள்ளது.

ஆன்மிகமும் இலக்கியமும், கடிதம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:30

April 18, 2025

இலக்கியம் மேட்டிமைத்தனமா?

என்னிடம் ஒரு நண்பர் சொன்னார். “என் நண்பர்கள் எல்லாரும் ‘இலக்கியம்லாம் நமக்கு எதுக்கு? நாம நம்ம பொழைப்பைப் பாப்போம்’ என்று சொல்கிறார்கள் சார்”.

நான் சொன்னேன். “பிழைப்புதான் முக்கியம் என நினைப்பவர்கள் பிழைப்புவாதிகள். அவர்கள் வாசிக்கவே கூடாது. நாம் வாசிக்கச் சொல்லக்கூடாது. வாசிப்பைப் பற்றி அவர்களிடம் பேசவும்கூடாது”

வாசிப்பு ‘வாழ்பவர்களுக்கு’ உரியது. வாழ்க்கை அரியது, அதை பொருள் உடையதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என எண்ணுபவர்களுக்கு உரியது. கலை, இலக்கியம், ஆன்மிகம் மூன்றுமே அப்படித்தான்.

ஆனால் உண்மையில் இங்கே பிழைப்புவாதிகள் பிழைப்பை மட்டுமா பார்க்கிறார்கள்? சினிமாவே கதி என கிடக்கிறார்கள். குடியில் கொண்டாட்டமிட்டு அழிகிறார்கள். அதாவது அவர்கள் இலக்கியம் என்பதை ஒருவகை ‘மேட்டிமைத்தனம்’ என நினைக்கிறார்கள். அதற்குச் செலவழிக்க அவர்களிடம் மூளை இல்லை என நினைக்கிறார்கள்.

இலக்கியம் என்பது ஒரு மேட்டிமைத்தனமா என்ன?

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:36

ஒரு நூல், மூன்று வடிவங்கள்

Of Men, Women and Witches  வாங்க

அன்புள்ள ஜெ

மலையாளத்தில் நீங்கள் எழுதிய உறவிடங்கள் பல ஆண்டுகளுக்கு பின் இப்போது  Of Men Women and Witchesஎன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலில் உள்ள விஷயங்களை தொட்டு தமிழில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்நூல் நேரடியாக தமிழுக்கு வரவில்லை. நூல் பகுதி ஒன்றினை ப்ரெண்ட் லைன் இதழ் (இதழ் பெயர் சரியாக நினைவில்லை)  பக்கத்தில் வாசித்தேன். இந்நூல் தனக்கேயுரிய தனி அவதானிப்புகளுடன் உள்ளது. எனவே நீங்களே மீண்டும் நூலை தமிழில் எழுதி வெளியிட ஏதும் எண்ணம் உள்ளதா ?

அல்லது எவரேனும் மொழியாக்கம் செய்தால் ஒப்பு கொள்வீர்களா ? ஆனால் எழுத்தாளர் ஒருவரின் முதன்மை மொழியில் அவரது நூலையே மொழியாக்கம் செய்வது வீட்டு சொந்தக்காரரிடமே வீட்டை விலைபேசி விற்பது போல் சிரிப்பூட்டுகிறது.

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,

Of Men Women and Witches தொகுப்பிலுள்ள கதைக்கட்டுரைகள் என்னால் 2000 முதல் பாஷாபோஷிணி இதழில் எழுதப்பட்டவை.  கால்நூற்றாண்டு கடந்தவை. என் நண்பர் கே.ஸி.நாராயணன் அப்போது அவ்விதழின் ஆசிரியர். மலையாளத்தின் மிகமுக்கியமான இலக்கிய இதழ் அது. மலையாள மனோரமா நாளிதழ் நிறுவனத்தாரால் நடத்தப்படுவது.   

அன்றும் இன்றும் தமிழில் அதையெல்லாம் எழுத இதழ்களின் ஆதரவு இல்லை. (ஆனந்த விகடன் ஒரு விதிவிலக்காக சங்கசித்திரங்களை அப்போது வெளியிட்டது).  ஏனென்றால்  இவை தன்வரலாற்றுக்குறிப்புகள். தன்வரலாற்றுக் குறிப்பை எழுதுவதற்கு தமிழகத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மட்டுமே தகுதி உண்டு என்பது இங்குள்ள இதழாளர்கள், வாசகர்களின் நம்பிக்கை. எழுத்தாளர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. 

இக்கட்டுரைகள் மலையாளத்தில் மிகப்புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மறுபதிப்புகளாக வந்துகொண்டே உள்ளன. இவற்றை ஒட்டியே ஒழிமுறி என்னும் திரைப்படம் உருவாகியது. மதுபால் இயக்கிய அந்தப்படம் தேசிய விருதுகளைப் பெற்றது. இன்றும் ஒரு கிளாஸிக் ஆக எல்லா பட்டியல்களிலும் இடம்பெறுகிறது.

இந்த கட்டுரைக்கதைகளில் நான் சம்ஸ்கிருதம் கூடுமானவரை தவிர்க்கப்பட்ட, ஒரு ‘நாட்டு மலையாளத்தை’ பயன்படுத்தினேன். ஆனால் பேச்சுமொழி அல்ல. நான் மலையாளத்தின் வழக்கமான தேய்வழக்குகள், சம்ஸ்கிருத நெடிகொண்ட சொல்லாட்சிகளை முழுமையாகவே தவிர்த்தேன். சுருக்கமான சொற்றொடர்களில் எழுதினேன். அதேசமயம் எளிமையான கவித்துவம் கொண்ட ஒரு நடை அது. அந்த நடை மலையாளத்தில் மிக விரும்பப்படும்  ஒன்றாக உள்ளது.

இக்கட்டுரைகளின் தமிழ்வடிவத்தை ஆங்காங்கே எழுதியிருக்கிறேன். இவற்றிலுள்ள பல கட்டுரைகள் நிகழ்தல் என்னும் தொகுப்பாக வெளிவந்துள்ளந. உயிர்மை, நற்றிணை, கிழக்கு பதிப்பகங்களால் நான்கு பதிப்புகளாக அந்நூல் வெளிவந்துள்ளது. ஆனால் என் நூல்களில் குறைவாகவே படிக்கப்பட்ட நூல் அது. விஷ்ணுபுரம் பதிப்பகம் அந்நூலை விரைவில் மீண்டும் வெளியிடுமென நினைக்கிறேன்.

மலையாளத்தில் இருந்து தமிழில் கொஞ்சம் வேறுபாடுகள் உண்டு. மலையாளத்திலுள்ள சில கட்டுரைகள் தமிழில் எழுதப்படவே இல்லை. குறிப்பாக நாஞ்சிலநாடு பற்றி, கேரளத்தின் பழைய மரபுகள் பற்றிய கட்டுரைகள். அவற்றை மட்டும் திரும்ப எழுதும் நோக்கம் இல்லை, அந்த மனநிலையில் இருந்து வெகுவாக விலகி வந்துவிட்டேன். நிகழ்தல் தொகுப்பை இந்த ஆங்கில நூலின் தமிழ்வடிவமாகக் கொள்ளவேண்டியதுதான். 

என் நூல்களின் ஆங்கில மொழியாக்கங்களை நான் வாசிப்பதில்லை , என் மொழிபெயர்ப்பாளர்கள் ஆற்றல்மிக்க உரைநடையாளர்கள். அவர்கள் என்னை திரும்ப பாதித்துவிடக்கூடாது என நினைப்பேன். ஆனால் இந்நூலை அண்மையில் எர்ணாகுளம் போனபோது வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடித்தேன். மலையாளத்தில் இருந்த எளிமையான மொழிகொண்ட கவித்துவம் சங்கீதா புதியேடத்து மொழியாக்கத்தில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. பல இடங்களில் நான் அந்த வாழ்க்கைக்குச் சென்று தீவிர உணர்வுநிலைகளை அடைந்தேன்.

இந்தக் கட்டுரைகளின் அமைப்பு என்பது புனைவு கலந்த தன்வரலாறு என்பது. நிகழ்வுகள் உண்மையானவை, ஆனால் தொகுப்புமுறையிலும் காட்சிச்சித்தரிப்பிலும் புனைவம்சம் உண்டு. ஆகவே பல கட்டுரைகள் சிறுகதைகளாகவும் வாசிக்கத்தக்கவை. 

இந்தக் கட்டுரைக்குறிப்புகள் மலையாளத்தில் ஏன் முக்கியமானவை என கருதப்பட்டன என்றால் இவற்றில் தாய்வழிச்சமூகத்தின் வீழ்ச்சியும் தந்தைவழிச் சமூகத்தின் எழுச்சியும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையினூடாகச் சொல்லப்பட்டுள்ளன, அவை கேரளப்பண்பாட்டுக்கு மிக முக்கியமானவை என்பதனால்தான். சில ஆய்வேடுகளிலேயே இக்கட்டுரைகள் மேற்கோள்காட்டப்பட்டதுண்டு.

இன்னொரு கோணத்தில் இவை இளையதலைமுறை வாசகர்களுக்கு முக்கியமானவையாக உள்ளன. இந்நூல் எழுதப்பட்டபோது பிறக்காதவர்கள் இதை வாசிக்கிறார்கள். ஏனென்றால் இளமையின் தேடலும் கொந்தளிப்பும் தனிமையும் கண்டடைதலும் இவற்றில் உள்ளது. ஓர் இளைஞனுக்கு தன் பண்பாட்டின்மேல், குடும்பத்தின் மேல் உள்ள ஈர்ப்பும் கசப்பும் கலந்த உறவாடலை இதில் காணமுடிகிறது.

இந்நூல் ஆங்கிலத்தில் வந்தபின் பல மலையாள இளைஞர்கள் வாசித்து எழுதினார்கள். அவர்களால் ஆங்கிலத்தில்தான் சரளமாக வாசிக்கமுடியும் என்பதே காரணம். இந்திய அளவிலும் அவ்வகையில் வாசிக்க ஆரம்பிக்கும் இளையதலைமுறைக்கு இந்நூல் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இன்று புனைவு பெருகிக்கிடக்கிறது. சினிமா, சீரியல் என புனைவுப்பெருக்கில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நேரடியான, உண்மையான வாழ்க்கை ஒரு பெரிய அனுபவமாக அமையலாம்.அது சென்ற தலைமுறையின் வாழ்க்கை, ஆனால் அதன் கொந்தளிப்புகள் முற்றிலும் சமகாலத்தையவை, ஏனென்றால் அவை எக்காலத்திற்கும் உரியவை,

ஜெ

(ஜக்கர்நாட் பதிப்பகத்தில் இருந்து  பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கத்தில் அறம் கதைகளின் ஆங்கிலவடிவமான  Stories of the True வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் FSG நிறுவனத்தால் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியிடப்படுகிறது.

ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் நாவலின் ஆங்கிலவடிவமான THE ABYSS  வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு 2026 ல் அமெரிக்காவின் டிரான்ஸிட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த  சிறுகதைகளின் தொகுப்பான A Fine Thread and other stories ரத்னா புக்ஸ் நிறுவனத்தால் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.)

Of Men, Women and Witches – என் நான்காவது ஆங்கிலநூல்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:35

எல்லார்வி

எல்லார்வி பொதுவாசிப்புக்கான நாவல்களையும், குறுங்கட்டுரைகளையும் எழுதியவர். பெரும்பாலும் இதழியல் சார்ந்த எழுத்து அவருடையது. அவருடைய தனிப்பங்களிப்பு தமிழக இசைமேதைகளைப் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகளும், நிகழ்வுத்தொகுப்புகளுமாகும். அவ்வகை எழுத்தில் தமிழில் அவர் முன்னோடியின் இடம் கொண்டவர்.

எல்லார்வி எல்லார்வி எல்லார்வி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.