ஒரு நூல், மூன்று வடிவங்கள்
அன்புள்ள ஜெ
மலையாளத்தில் நீங்கள் எழுதிய உறவிடங்கள் பல ஆண்டுகளுக்கு பின் இப்போது Of Men Women and Witchesஎன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலில் உள்ள விஷயங்களை தொட்டு தமிழில் நிறைய எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்நூல் நேரடியாக தமிழுக்கு வரவில்லை. நூல் பகுதி ஒன்றினை ப்ரெண்ட் லைன் இதழ் (இதழ் பெயர் சரியாக நினைவில்லை) பக்கத்தில் வாசித்தேன். இந்நூல் தனக்கேயுரிய தனி அவதானிப்புகளுடன் உள்ளது. எனவே நீங்களே மீண்டும் நூலை தமிழில் எழுதி வெளியிட ஏதும் எண்ணம் உள்ளதா ?
அல்லது எவரேனும் மொழியாக்கம் செய்தால் ஒப்பு கொள்வீர்களா ? ஆனால் எழுத்தாளர் ஒருவரின் முதன்மை மொழியில் அவரது நூலையே மொழியாக்கம் செய்வது வீட்டு சொந்தக்காரரிடமே வீட்டை விலைபேசி விற்பது போல் சிரிப்பூட்டுகிறது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்,Of Men Women and Witches தொகுப்பிலுள்ள கதைக்கட்டுரைகள் என்னால் 2000 முதல் பாஷாபோஷிணி இதழில் எழுதப்பட்டவை. கால்நூற்றாண்டு கடந்தவை. என் நண்பர் கே.ஸி.நாராயணன் அப்போது அவ்விதழின் ஆசிரியர். மலையாளத்தின் மிகமுக்கியமான இலக்கிய இதழ் அது. மலையாள மனோரமா நாளிதழ் நிறுவனத்தாரால் நடத்தப்படுவது.
அன்றும் இன்றும் தமிழில் அதையெல்லாம் எழுத இதழ்களின் ஆதரவு இல்லை. (ஆனந்த விகடன் ஒரு விதிவிலக்காக சங்கசித்திரங்களை அப்போது வெளியிட்டது). ஏனென்றால் இவை தன்வரலாற்றுக்குறிப்புகள். தன்வரலாற்றுக் குறிப்பை எழுதுவதற்கு தமிழகத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மட்டுமே தகுதி உண்டு என்பது இங்குள்ள இதழாளர்கள், வாசகர்களின் நம்பிக்கை. எழுத்தாளர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
இக்கட்டுரைகள் மலையாளத்தில் மிகப்புகழ்பெற்றவை. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மறுபதிப்புகளாக வந்துகொண்டே உள்ளன. இவற்றை ஒட்டியே ஒழிமுறி என்னும் திரைப்படம் உருவாகியது. மதுபால் இயக்கிய அந்தப்படம் தேசிய விருதுகளைப் பெற்றது. இன்றும் ஒரு கிளாஸிக் ஆக எல்லா பட்டியல்களிலும் இடம்பெறுகிறது.
இந்த கட்டுரைக்கதைகளில் நான் சம்ஸ்கிருதம் கூடுமானவரை தவிர்க்கப்பட்ட, ஒரு ‘நாட்டு மலையாளத்தை’ பயன்படுத்தினேன். ஆனால் பேச்சுமொழி அல்ல. நான் மலையாளத்தின் வழக்கமான தேய்வழக்குகள், சம்ஸ்கிருத நெடிகொண்ட சொல்லாட்சிகளை முழுமையாகவே தவிர்த்தேன். சுருக்கமான சொற்றொடர்களில் எழுதினேன். அதேசமயம் எளிமையான கவித்துவம் கொண்ட ஒரு நடை அது. அந்த நடை மலையாளத்தில் மிக விரும்பப்படும் ஒன்றாக உள்ளது.
இக்கட்டுரைகளின் தமிழ்வடிவத்தை ஆங்காங்கே எழுதியிருக்கிறேன். இவற்றிலுள்ள பல கட்டுரைகள் நிகழ்தல் என்னும் தொகுப்பாக வெளிவந்துள்ளந. உயிர்மை, நற்றிணை, கிழக்கு பதிப்பகங்களால் நான்கு பதிப்புகளாக அந்நூல் வெளிவந்துள்ளது. ஆனால் என் நூல்களில் குறைவாகவே படிக்கப்பட்ட நூல் அது. விஷ்ணுபுரம் பதிப்பகம் அந்நூலை விரைவில் மீண்டும் வெளியிடுமென நினைக்கிறேன்.
மலையாளத்தில் இருந்து தமிழில் கொஞ்சம் வேறுபாடுகள் உண்டு. மலையாளத்திலுள்ள சில கட்டுரைகள் தமிழில் எழுதப்படவே இல்லை. குறிப்பாக நாஞ்சிலநாடு பற்றி, கேரளத்தின் பழைய மரபுகள் பற்றிய கட்டுரைகள். அவற்றை மட்டும் திரும்ப எழுதும் நோக்கம் இல்லை, அந்த மனநிலையில் இருந்து வெகுவாக விலகி வந்துவிட்டேன். நிகழ்தல் தொகுப்பை இந்த ஆங்கில நூலின் தமிழ்வடிவமாகக் கொள்ளவேண்டியதுதான்.
என் நூல்களின் ஆங்கில மொழியாக்கங்களை நான் வாசிப்பதில்லை , என் மொழிபெயர்ப்பாளர்கள் ஆற்றல்மிக்க உரைநடையாளர்கள். அவர்கள் என்னை திரும்ப பாதித்துவிடக்கூடாது என நினைப்பேன். ஆனால் இந்நூலை அண்மையில் எர்ணாகுளம் போனபோது வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடித்தேன். மலையாளத்தில் இருந்த எளிமையான மொழிகொண்ட கவித்துவம் சங்கீதா புதியேடத்து மொழியாக்கத்தில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. பல இடங்களில் நான் அந்த வாழ்க்கைக்குச் சென்று தீவிர உணர்வுநிலைகளை அடைந்தேன்.
இந்தக் கட்டுரைகளின் அமைப்பு என்பது புனைவு கலந்த தன்வரலாறு என்பது. நிகழ்வுகள் உண்மையானவை, ஆனால் தொகுப்புமுறையிலும் காட்சிச்சித்தரிப்பிலும் புனைவம்சம் உண்டு. ஆகவே பல கட்டுரைகள் சிறுகதைகளாகவும் வாசிக்கத்தக்கவை.
இந்தக் கட்டுரைக்குறிப்புகள் மலையாளத்தில் ஏன் முக்கியமானவை என கருதப்பட்டன என்றால் இவற்றில் தாய்வழிச்சமூகத்தின் வீழ்ச்சியும் தந்தைவழிச் சமூகத்தின் எழுச்சியும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையினூடாகச் சொல்லப்பட்டுள்ளன, அவை கேரளப்பண்பாட்டுக்கு மிக முக்கியமானவை என்பதனால்தான். சில ஆய்வேடுகளிலேயே இக்கட்டுரைகள் மேற்கோள்காட்டப்பட்டதுண்டு.
இன்னொரு கோணத்தில் இவை இளையதலைமுறை வாசகர்களுக்கு முக்கியமானவையாக உள்ளன. இந்நூல் எழுதப்பட்டபோது பிறக்காதவர்கள் இதை வாசிக்கிறார்கள். ஏனென்றால் இளமையின் தேடலும் கொந்தளிப்பும் தனிமையும் கண்டடைதலும் இவற்றில் உள்ளது. ஓர் இளைஞனுக்கு தன் பண்பாட்டின்மேல், குடும்பத்தின் மேல் உள்ள ஈர்ப்பும் கசப்பும் கலந்த உறவாடலை இதில் காணமுடிகிறது.
இந்நூல் ஆங்கிலத்தில் வந்தபின் பல மலையாள இளைஞர்கள் வாசித்து எழுதினார்கள். அவர்களால் ஆங்கிலத்தில்தான் சரளமாக வாசிக்கமுடியும் என்பதே காரணம். இந்திய அளவிலும் அவ்வகையில் வாசிக்க ஆரம்பிக்கும் இளையதலைமுறைக்கு இந்நூல் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இன்று புனைவு பெருகிக்கிடக்கிறது. சினிமா, சீரியல் என புனைவுப்பெருக்கில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நேரடியான, உண்மையான வாழ்க்கை ஒரு பெரிய அனுபவமாக அமையலாம்.அது சென்ற தலைமுறையின் வாழ்க்கை, ஆனால் அதன் கொந்தளிப்புகள் முற்றிலும் சமகாலத்தையவை, ஏனென்றால் அவை எக்காலத்திற்கும் உரியவை,
ஜெ
(ஜக்கர்நாட் பதிப்பகத்தில் இருந்து பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கத்தில் அறம் கதைகளின் ஆங்கிலவடிவமான Stories of the True வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் FSG நிறுவனத்தால் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியிடப்படுகிறது.
ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் நாவலின் ஆங்கிலவடிவமான THE ABYSS வெளிவந்துள்ளது. அதன் சர்வதேசப்பதிப்பு 2026 ல் அமெரிக்காவின் டிரான்ஸிட் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த சிறுகதைகளின் தொகுப்பான A Fine Thread and other stories ரத்னா புக்ஸ் நிறுவனத்தால் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.)
Of Men, Women and Witches – என் நான்காவது ஆங்கிலநூல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

