Jeyamohan's Blog, page 122
April 27, 2025
எலிசபெத் சேதுபதி
[image error]பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பதற்காக புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர்.
எலிசபெத் சேதுபதி
எலிசபெத் சேதுபதி – தமிழ் விக்கி
வளவதுரையனுக்கு விஷ்ணுபுரம் புதுச்சேரி வட்டம் கௌரவம்
புதுவை வெண்முரசு 81 வது கூடுகை வழமை போல மிக சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது . இந்த கூடுகையின் சிறப்பு உங்களின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக இரண்டு அமர்வுகளாக அது நிகழ்ந்தன. முதல் அமர்வில் ஆன்மீக உபன்யாசகர், பேச்சாளர் , எழுத்தாளர்,திராவிட ஆதரவாளர், பதிப்பாசியர், கடந்த ஐம்பதாண்டு இலக்கிய நிகழ்வு ஏற்பாட்டாளர் என பன்முகம் கொண்ட திரு வளவதுரையன் அவர்களின் 75 வது அகவை நிறைவை கொண்டாடவும் அவரை கௌரவப்படுத்தவும் அந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டோம். அவரது 75 அகவை நிறைவு மலரை வெளியிட எழுத்தாளர் பாவண்ணன் முன்னெடுத்து வருகிறார்.
முதல் அமர்வு எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி நிகழ்ந்தது. திரு.வளவ துரையன் அவர்களுக்கு கடலூர் சீனு சால்வை மரியாதை செய்ய வெண்முரசு நண்பர்கள் திருமதி அமுர்தவல்லி மற்றும் திருமதி சித்ரா அவருக்கு சிறிய பரிசை அளித்தனர். நிகழ்வின் துவக்கத்தில் வெண்முரசு கூடுகை நண்பர் தாமரைகண்ணனின் நேர்காணலில் திரு.வளவதுரையன் குறித்த ஆவண படம் மறுதிரையிடப்பட்டது. பின்னர் அவரது இளமை காலம் குறித்த செய்திகளை நண்பர்நாகராஜனும், அவரின் இலக்கிய பங்களிப்பு, இலக்கிய உலகில் அவருக்கான இடம் என்ன என்பது குறித்து கடலூர் சீனுவும் பேசினார். அமர்வின் இறுதியில் உங்களின் பிறந்நாள் கொண்டாட்டதை ஒட்டி திரு.வளவதுரையன் எழுதிய சிகரங்கள் புத்தகத்திற்கு “மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்” என நீங்கள் எழுதிய முன்னுரையை சிறிய நூலாக நண்பர் திரு. நாகராஜன் வெளியிட்டார்.
அந்த முன்னுரை ஒட்டுமொத்த இலக்கியத்தை அந்தந்த காலகட்டத்தில் இருந்த அவற்றைப் பற்றிய புரிதல் மற்றும் அதன் ஏற்பின் வகை என்ன என மிக விரிவாக சொல்லி வந்து அதில் திரு.வளவதுரையன் அவர்களின் ஆக்கம் மற்றும் அவரது பங்களிப்பு மற்றும் இடம் பற்றிய மிக வரிவான குறிப்புகளை கொடுத்திருந்தீர்கள். செவ்வியல் பற்றிய அவதானிப்புகளில் இருந்து ஒரு சமூகம் தன் அடிப்படை என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பது பற்றி தீர்மானித்துக் கொள்ளவும் ஒவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும் போதும் அந்த காலகட்டங்களில் தன்னில் எது “செவ்வியல் இலக்கியம்” என்கிற கேள்வியை உருவாக்கி அதை வரையறை செய்து நகர்வதை பற்றி மிக விரிவான சித்திரத்தை கொடுத்திருந்தீர்கள்.
புதுவை வெண்முரசுஒவ்வொரு காலகட்டத்தில் அது வளர்ந்து வருவது பற்றி சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு இயக்கமும் வளர்தளின் பொருட்டு ஆக்கபூர்வமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் சில சமயங்களில் திட்டமிடப்படாமல் அதன் மைய ஓட்டம் தனது வழியை தானே தேர்கிறது. அனைவரையும் இணைக்கும் ஒரு மையக் கரு அதற்கான காரணமாக இருக்கிறது. எதையும் துவங்குவது எளிது தொடர்வது கடினம். தொடர முடியாத ஒன்றை துவங்காது இருப்பது நல்லது என நினைப்பவன். என்றாலும் இம்முறை அதன் போக்கிற்கு நகரும் சிலவற்றை ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருப்பது போதுமானதாக என இருந்து விடுவதுண்டு. எழுத்தாளர் ஜெயமோகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அப்படி அதன் போக்கிற்கு உருவாகி அனைவரையும் உள்ளிழுத்து கொண்டு தனது பயணத்தில் இருப்பதைத் தான் ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
2023 எனது தங்கைமகள் திருமணத்தின் போது “ஜெ”யின் குமரித்துறைவி புத்தகம் திருமண பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என முன்வைத்த போது அது துவங்கியது. இதில் விந்தை பல பதிப்புகளை கண்ட பிறகு “குமரித்துறைவியின்” முறையான நூல் வெளியீடாக அது நிகழ்ந்தது. நண்பர் கடலூர் சீனு அதை வெளியிட்ட பெருமைக்குறியவர்.
இரண்டாவது வருடம் 2024 தனது 25 வது திருமணநாள் “ஜெ” யின் பிறந்தநாளில் வருவதை ஒட்டி இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் திட்டமும் அதற்கான சிறிய நிதியையும் வழங்கி துவக்கி வைத்த கூடுகை உறுப்பினர் அமுர்தவல்லி எண்ணப்படி இளம் எழுத்தாளர் திரு.அரிசங்கர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
பின்னர் அவருடன் இணைவதாக சொல்லி முன்வந்த பிறிதொரு உறுப்பினர் சித்ரா கொடுத்த மற்றொரு சிறிய தொகையுடன் இணைந்து அனைத்து கூடுகை உறுப்பினர்கள் பங்களிக்க இந்த முறை கலை இலக்கிய பண்பாட்டு செயல்பாடு என களம் விரிந்த போது யாரை தெரிவு செய்வது என திட்டமிட்டு பின்னர் திரு.வளவதுரையன் என முடிவானதும் “இது நமக்கு நாமே வழங்குவதாகாதா” என கேள்வி முன்வைக்கப்பட்ட பிறகும் பண்முக செயல்பாட்டாளர் திரு.வளவதுரையன் அவர்கள் அந்த வரையறையில் வரமாட்டார் என்கிற புரிதலுடன் இந்தவருட “ஜெ” பிறந்தநாள் ஒட்டி அவரை கௌரவிக்கும் வாய்ப்பை புதுவை வெண்முரசு கூடுகை அடைந்தது.
இரண்டாவது அமர்வில் நண்பர் சித்ரா அவர்கள் வெண்முரசின் நாவல் வரிசையில் வெய்யோனின் “கூற்றெனும் கேள்” இறுதி பகுதி பற்றிய தனது எண்ணத்தை வழக்கம் போல தயக்கமற்ற பேச்சில் முன்வைத்தார் கூடுகை நண்பர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களை முன்வைக்க இறுதியில் கடலூர்சீனு பேசி நிகழ்வை நிறைவு செய்தார்.
நன்றி
ஆழ்ந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
The meaning of myths.
I would be delighted if you could explain how to understand the Puranas and Ithihasa of Hinduism. You’re doing a great service, sir, educating ill-informed people like us who don’t even know about our religion.
The meaning of myths.உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பார்வைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது சரியா?
பிரச்சாரமா?
April 26, 2025
ஏன் நகரங்களை வெறுக்கிறது நவீனஇலக்கியம்?
தமிழ் நவீன இலக்கியத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியும், நகரங்களை நவீன இலக்கியம் எப்போதுமே எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. கிராமங்களை சொர்க்கமாக காட்டுகிறது. ஆனால் உண்மையில் தமிழர்கள் அனைவருமே நகரத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள். சென்றவர்கள் மீள்வதுமில்லை. ஏன் இலக்கியத்தில் மட்டும் அந்த எதிர்மனநிலை?
காவியம் – 6
தாய்த்தெய்வம், சாதவாகனர் காலம், பொயு 1, பைதான் அருங்காட்சியகம், சுடுமண் சிற்பம்.பங்கிகள் என்றால் குறைபட்டவர்கள், உடைந்த சிறு துண்டுகள் என்று பொருள். நாங்கள் உடைந்த ஆத்மா கொண்டவர்கள் என்று எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் கீர்த்திலால் தேஷ்முக் சொன்னார். உடைந்த ஆத்மாக்களைக் கொண்டிருப்பது ஒரு பெரிய வசதி. எங்களுக்கு எங்கள் தெய்வமாகிய சீதளை ஒரு வரம் தந்தாள். நாங்கள் எந்த அழுக்கையும் தொடலாம், எந்த மலினத்திலும் துழாவலாம், எதுவும் எங்களுக்குத் தீட்டு ஆவதில்லை. “உடைந்த பொருளால்தான் அழுக்கை வழித்து எடுப்போம் இல்லையா?” என்றார் கீர்த்திலால்.
“நான் எதையும் குறையாகச் சொல்லவில்லை. உடைந்திருப்பது ஒரு வகையில் நல்லது. முழுமையான ஆத்மா கொண்டவர்களின் பொறுப்புகள் ஏதும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறம் செய்யவேண்டியதில்லை, வேள்விகள் செய்யவேண்டியதுமில்லை. தேசம், ஊர், மதம் எதற்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அறியாமை அவர்களுக்கு பாவம் அல்ல. அவர்கள் சமூகத்தின் குழந்தைகள் போல. சமூகம்தான் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூகம் அவர்களை இடுப்பில் தூக்கி வைத்திருக்கிறது.”
அவர் கண்களில் இருந்த சிரிப்பு எனக்கு மட்டும் தெரியவில்லை. மொத்த வகுப்புமே புன்னகைத்துக் கொண்டிருந்தது. எங்களைப் போன்றவர்கள் ஏழுபேர் வகுப்பில் இருந்தோம். நாங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். அப்படி தலைகுனிந்து அமர்ந்து பழகிவிட்டிருந்தோம். மிக எளிதில் அதில் இருந்து வெளியே வந்துவிடவும் எங்களால் இயன்றது. ஏனென்றால் எங்கள் அன்றாடம் கடினமானது, ஒவ்வொரு நாளிலும் சவால்கள் கொண்டது. முயல்கள் போன்ற சிற்றுயிர்கள் காட்டில் எக்கணமும் முழு விழிப்புடன்தான் இருந்தாகவேண்டும்.
எங்கள் கதைகளில் எங்களைப் பற்றி இன்னும் இழிவாகவே சொல்லப்பட்டிருந்தது. சமூகம் என்ற வார்த்தை. அதை சிறுவயதில் கிழவர்கள் சொல்லிக் கேட்கையில் நான் ஒரு அப்பளம் போன்று மென்மையான, கண்ணாடி போன்று ஒளிவிடக்கூடிய, வானில் மிதக்கக்கூடிய ஒரு பொருளாகக் கற்பனை செய்துகொண்டேன். சமாஜம் சமாஜம் என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருப்பேன். அழகான ஒன்று. ஆனால் மிகக்கூர்மையான உடைந்த முனைகொண்டது, அபாயமானது. ஏனென்றால் அது உடைந்திருக்கிறது. முன்பொரு காலத்தில் பிரம்மா மக்களை ஒரே சமாஜமாகத்தான் படைத்தார். அதில் இருந்து உடைந்து மண்ணில் விழுந்த துண்டுதான் பங்கிகள். அவ்வாறுதான் அவர்களுக்கு அப்பெயரே வந்தது.
சமாஜம் முன்பு மேகம்போல வானில் பறந்துகொண்டிருந்தது. மனிதர்களுக்கெல்லாம் வெண்ணிறமான சிறகுகள் இருந்தன. பிரம்மாவிடம் அவர்கள் தங்களுக்கும் தேவர்களைப்போல அமுதத்தை உண்ணும் உரிமை தேவை என்று கோரினார்கள். பிரம்மா அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார். அவர்கள் நூறாண்டுக்காலம் உணவில்லாமல் நோன்பு இருக்கவேண்டும். பசியை எவர் தாங்கிக்கொள்கிறார்களோ அவர்களுக்கே அமுதம் சொந்தம். நூறாண்டு நோன்பு தொடங்கியபோது ஒவ்வொருவராக பசி தாளமுடியாமல் நோன்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியாக பிரம்மாவால் வகுக்கப்பட்டனர். நூறாண்டு நோன்பை வென்றவர்கள் பிராமணர்களானார்கள்.
தாங்களும் நூறாண்டு நோன்பை முடித்துவிட்டதாக சிலர் பிரம்மாவிடம் பொய் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் பசிதாளாமல் காமதேனுவின் குட்டிகளில் ஒன்றாகிய நந்தினியை ரகசியமாகக் கொன்று தின்றிருந்தார்கள். அவர்களை பிரம்மா சாபம் போட்டு சமாஜத்தில் இருந்து உடைத்து அப்பால் வீசினார். பிறருடைய கழிவுகளை அள்ளித்தான் அவர்கள் வாழவேண்டும் என ஆணையிட்டார். அவர்களே பங்கிகள். பங்கம் வந்தவர்கள். திரும்பத் திரும்ப எங்கள் சாதியிலேயே ஏதோ ஒரு கிழவர் இந்தக்கதையைச் சொல்வார்கள். அதை எந்த சந்தேகமும் இல்லாமல் பிறர் கேட்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு நிறைவு இருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுக்கான பதில் அது. அப்படி ஒரு பதில்போதும்.
அதற்கப்பால் ஒன்றும் இருந்தது. “பிற சாதியினர் அவர்கள் செய்யும் பிழைகளுக்குக் கழுவாய் செய்யவேண்டும். பங்கிகள் செய்யும் தொழிலும் வாழும் வாழ்க்கையும் முழுமையாகவே கழுவாய்தான். ஆகவே அவர்களுக்கு சாபவிமோசனம் அமைந்தே தீரும். அடுத்த பிறவியில் அவர்களுக்கு விடுதலை அமையும்” என்று கிழவர்கள் சொல்வார்கள். எங்கள் ஊரில் எவருமே அதையெல்லாம் எதிர்த்துப் பேசி நான் கேட்டதில்லை. முதன்முதலாக அதை கண்டித்து, அதைச் சொன்ன கிழவரை வசைபாடியவர் என் அப்பாதான்.
ராணுவத்தில் இருந்து வந்தபின் என் அப்பா எட்டு மாதகாலம் குடித்துக்கொண்டே இருந்தார். அவரால் ராணுவத்தை விட்டு விலகிவந்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்றோ ஒருநாள் அவர் ராணுவவீரன் அல்லாமலாகிவிடுவார் என்று அவர் எண்ணியதே இல்லை. திரும்பி வந்தபோது அவருக்குள் அது ஒரு விடுமுறை என்ற எண்ணம் இருந்திருக்கும்போல. ஆனால் வந்த சில நாட்களிலேயே அவர் அதை உணர்ந்தார். அவர் ராணுவவீரர் அல்ல என்பதை அவர் சந்தித்த ஒவ்வொருவரும் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ‘இனி நீங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமா?’ என்றார்கள். ‘இப்போது போலீஸ் உங்களைக் கைதுசெய்தால் ராணுவம் தலையிடாது அல்லவா?’ என்றார்கள்.
மெல்ல மெல்ல, எவர் என்ன சொன்னாலும் தான் ராணுவவீரன் அல்ல என்பதுதான் அதன் உட்பொருள் என அவர் எண்ணலானார். காலையில் அவரைச் சந்திப்பவர் ‘டீ சாப்பிட்டாயிற்றா?’ என்று கேட்டால்கூட அவர் வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர் என்று குறிப்புணர்த்தப்படுவதாக நினைத்தார். ஒரு முறை அம்மா அவருக்கு உணவு பரிமாறும் வெள்ளை எனாமல் பாத்திரத்துக்குப் பதிலாக ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை வைத்தபோது எடுத்து வீசிவிட்டு கூச்சலிட்டார். அது ராணுவத்தில் கொடுக்கப்படும் பாத்திரம். இறுதிவரை அதில்தான் அவர் சாப்பிட்டார். வெள்ளை எனாமல் குடுவையில்தான் தண்ணீர் அருந்தினார்.
அப்பா தன் ராணுவச் சப்பாத்துக்களை இறுதிவரை வைத்திருந்தார். ஊரில் அதைப் போடமுடியாது. ஆனால் திருவிழாக்கள் நடக்கும்போது அதைப்போட்டுக்கொண்டு செல்வார். ‘இதைக் கடந்து பாம்பு கடிக்க முடியாது’ என்று அதற்குக் காரணம் சொன்னார். மூன்று ஆண்டுகள் வரை எப்போதும் பழைய ராணுவச் சீருடையான சட்டையையே அணிந்துகொண்டார். கால்சட்டைக்குப் பதில் பைஜாமா போடமுடியாதென்பதனால் காக்கி துணியில் பைஜாமா போன்ற ஒன்றை தைத்துக்கொண்டார். அவர் சொல்லும் ராணுவக்கதைகள் பெருகிக்கொண்டே இருந்தன. தினமும் செய்தித்தாளில் எல்லைப்புறச் செய்திகளை வாசித்து, அங்கே வெளியே தெரியாதபடி நிகழும் போர்களையும், அவற்றில் ராணுவம் செய்துகொண்டிருக்கும் சாகசங்களையும் பற்றி சொன்னார். எந்த உரையாடலிலும் ஒருமுறையாவது ‘இப்போது போனாலும் என்னை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வார்கள்’ என்றார். ஒரு போர் வரும், அப்போது அவரை மீண்டும் ராணுவத்திற்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்.
மூன்றாண்டுகளுக்கு பின்னர் அவர் திடீரென்று மாறினார். மூன்றாண்டுகளில் அவருடைய ராணுவமோகம் குறைந்துவிட்டிருந்தாலும் அதை அடையாளமாக வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் ராணுவத்தில் வேலைபார்த்த ஒருவரின் மகளின் திருமணத்திற்காக புனே சென்றார். அங்கேதான் அவர் அம்பேத்கரின் சிலைமுன் நிகழ்ந்த ஓர் உரையைக் கேட்டார். அவருக்கு அம்பேத்கர் மேல் ஈடுபாடில்லை, மெல்லிய வெறுப்பும் இருந்தது. அவர் மாணவராக இருந்தபோது காந்திமேல் பக்தி கொண்டிருந்தார். ராணுவத்தில் சேர்ந்தபின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேல் ஈடுபாடு கொண்டார். ஆனால் காந்தியை வெறுக்கவில்லை. ‘காந்திக்கு ஒன்றும் தெரியாது. அவர் ஓர் ஆண்டுகாலம் ராணுவத்தில் வேலைபார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்’ என்று மட்டும் சொல்வார். அம்பேத்கர் அவர்களுக்கு எதிரானவர் என்று அப்பா நினைத்தார்.
அதைவிட ஒன்று உண்டு, அப்பா தன் சாதியடையாளத்தை வெறுத்தார். அதைப்பற்றி எவரேனும் பேசும்போது கடும் ஒவ்வாமை கொண்டார். சாதி சார்ந்த அரசியல் பேசுபவர்களிடம் உரக்கக் கூச்சலிட்டு எதிர்த்துப்பேசுவார். அவர் உறுதியான காங்கிரஸ் ஆதரவாளர். காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் போஸ் ஆகிய பெயர்கள் அவருடைய அரசியலில் வந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் இந்திராகாந்தியையும் சேர்த்துக்கொள்வார். மகாராஷ்டிர அரசியல்வாதிகள் எவர் மீதும் அவருக்கு மதிப்பில்லை. ‘இந்திராகாந்தி துர்க்கை. பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பித்தவர்’ என்று சொல்வார். ஆனால் அவர் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை. அரசியல் பேச்சுகளிலேயே எடுத்து எடுப்பில் தன் தரப்பை கூறிவிட்டு சுருட்டை பற்றவைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்.
ஆனால் புனாவில் இருந்து திரும்பி வந்தவர் அதிதீவிர அம்பேத்கர் ஆதரவாளராக ஆனார். பைதானில் எங்கள் வீடிருக்கும் பகுதியில் அம்பேத்கரின் பெயரை சுவரில் முதலில் எழுதிப்போட்டவர் அவர்தான். அம்பேத்கர் படிப்பகம் என்று ஒன்றை ஒரு குடிசையில் தொடங்கினார். அதில் ஒரு பெஞ்சும் ஒரு மேஜையும் வாங்கிப்போட்டு இரண்டு மராத்தி நாளிதழ்களையும் வாங்கி வைக்கத் தொடங்கினார். அங்கே சொற்பொழிவாற்றுவதற்கு வெளியூரில் இருந்து பேச்சாளர்களைச் சொந்தச் செலவில் கூட்டிவந்தார். இந்தியக் குடியரசுக் கட்சியின் கிளை ஒன்றை அவர்தான் அங்கே தொடங்கினார், அதன் செயலாளராக அவரே செயல்பட்டார்.
மூன்றாண்டுகளில் என் அப்பா பைதானின் முக்கியமான குடியரசுக் கட்சி ஊழியராக ஆனார். மேடைகளில் தீவிரமாகப் பேச ஆரம்பித்தார். நான் அவரைப் பார்ப்பதே அரிதாகியது. நாட்கணக்கில் பயணங்களில் இருந்தார். மகாராஷ்டிரத்தின் பல நகர்களுக்கு அவர் சென்று வந்தார். சுவரொட்டிகளில் பலருடைய படங்களுடன் அவருடைய முகமும் இடம் பெற்றது. நான் அவருடைய மகன் என்பதை பலரும் அடையாளம் காணலாயினர். அப்பா வெள்ளைச் சட்டையும், பைஜாமாவும் அணிந்து மேலே கையில்லாத கோட்டு அணிந்தார். தலையில் இளநீல நிறத்தில் தொப்பி அணிந்தார். அவருடைய அந்த முகம் எனக்குப் பழகி அவர் ராணுவத்தில் எடுத்துக்கொண்ட கறுப்புவெள்ளை புகைப்படம் விந்தையான பழம்பொருளாக மாறியது.
அப்போது நான் கல்லூரியில் சேர்ந்துவிட்டிருந்தேன். கல்லூரியில் சாதி தெளிவாக இருந்தது, எனக்கு என் சாதிக்கு வெளியே எவருமே நண்பர்கள் அல்ல. பெயருக்கு அப்பால் எவரும் அறிமுகமும் இல்லை. ஆனால் நாங்கள் எண்ணிக்கையில் நிறையபேர் இருந்தோம். எந்த ஒரு சீண்டலிலும் சட்டென்று அடிதடியில் இறங்குபவர்களாக இருந்தோம். ஆகவே எங்கும் நாங்கள் அஞ்சப்பட்டோம். கல்லூரியில் எனக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வேறு பல கொண்டாட்டங்கள் இருந்தன. முக்கியமாக இந்தி சினிமா. இரவுபகலாக இந்திப்பாடல்கள். அப்போது ஆடியோ டேப்கள் பிரபலமாக இருந்தன. நான் என் அம்மாவிடம் அழுது மன்றாடி இரண்டாம் விலைக்கு ஒரு நேஷனல் டேப்ரிக்கார்டர் வாங்கினேன். அதில் இந்தி சினிமாப்பாடல்களை தேயத்தேய போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
என் ஊர் மாறிக்கொண்டே இருந்தது. 1976ல் பைத்தான் அருகே கோதாவரி ஆற்றில் ஜெய்க்வாடி அணை கட்டப்பட்டது. ஆற்றின் அமைப்பும் ஒழுக்கும் மாறியது. 1965ல் அணையின் கட்டுமானம் தொடங்கியபோதே ஊரில் புதியவர்களின் குடியேற்றம் தொடங்கியது. புதிய குடியேற்றப்பகுதிகள் கைவிடப்பட்டுக் கிடந்த ஆற்றங்கரைச் சதுப்புநிலங்களில் உருவாகி வந்தன. சாலைகள் அகலமாக ஆயின. சந்தையும் பேருந்து நிலையமும் பெரிதாயின. மையச்சாலையை ஒட்டி கான்கிரீட் கட்டிடங்கள் எழத்தொடங்கின. அணைக்கட்டு முடிவடைந்தபின் அம்மாற்றங்கள் மேலும் தீவிரமடைந்தன. என் நினைவு துலங்கத் தொடங்கியபோதே பைதான் ஒரு நகரமாக ஆகிவிட்டிருந்தது. அது ஒரு சிறு கிராமமாக இருந்தது என்று என் அப்பாவின் தலைமுறையினர் சொல்லும்போது அதை என்னால் காட்சியாக ஆக்கிக்கொள்ளவே முடியவில்லை.
எங்களூரின் சமூகஅமைப்பும் மாற ஆரம்பித்தது. எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் அணைக்கட்டில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து, அவர்களிடம் பணம் புழங்க ஆரம்பித்தபோதே அந்த மாற்றங்கள் தொடங்கின. அவர்களில் பலர் வீடுகளைக் கட்டத் தொடங்கினர். இரண்டு சக்கர வண்டிகளை வாங்கினர். பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினர். அவர்கள் நன்றாக சலவைசெய்த வெள்ளை ஆடைகளை அணிந்தனர். பெண்கள் வண்ணச்சேலைகளை கட்டிக்கொண்டு சந்தைகளுக்கும் சினிமா அரங்குகளுக்கும் சென்றனர். அவை பிறரிடம் ஒவ்வாமையை உருவாக்கின. மெல்ல மெல்ல பூசல்கள் தலையெடுத்தன.
பூசல்களுக்கான காரணங்கள் நேரடியாகப் பார்த்தால் மிக எளியவை, ஆனால் ஆழத்தில் அவை நெடுந்தொலைவுக்கு வேரோடியிருந்தன. முதன்மையாக, எங்கள் மக்கள் ஊரில் வீடுதோறும் சென்று கழிவுகளை அள்ளிக்கொண்டு வருவதை நிறுத்தினர். கழிவுநீக்கும் தொழிலாளர்களை நகராட்சியே நியமித்தது. அவர்கள் கழிவை சுமந்து அகற்றும்படியான கழிப்பறைகள் அமைக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். பழைய கழிவறைகளை மாற்றிக்கொள்ள தயங்கியவர்கள் ஒவ்வொரு முறையும் பணம்கொடுத்து அதற்கு ஆள்தேடவேண்டியிருந்தது. அந்தியில் உணவுக்காக சட்டியுடன் வீடுதோறும் வருபவர்கள் மறைந்தனர். மாறாக அவர்கள் ஓட்டுக்கூரைபோட்ட வீடுகளைக் கட்டிக்கொண்டு அங்கே மின்விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு ரேடியோவில் பாட்டு கேட்டனர்.
எங்கள் பெண்கள் சாலைகளுக்குச் சென்று அன்று ஊரெங்கும் நிறைந்திருந்த சைக்கிள் ரிக்ஷாக்களில் ஏறுவதுதான் பெரும் சிக்கலாக இருந்தது. ரிக்ஷா ஓட்டியவர்களில் பலர் அணைக்கட்டு வேலையை ஒட்டி ஊருக்கு வந்த ஏழை இஸ்லாமியர். அவர்கள் எல்லாரையும் வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். எவர் என அறியாமல் எங்கள் ஆட்களை ஏற்றிக்கொண்ட ரிக்ஷாக்காரர்கள் அறிந்தபின் சண்டைபோட்டனர். டீக்கடைகளில் டீ அளித்தபின் ஆளை அடையாளம் கண்டுகொண்டு அடிக்கவந்தனர். எங்கள் ஆட்கள் தலையில் தொப்பி வைத்துக்கொள்வதையும், பொதுவீதிகளில் செருப்பு போட்டுக்கொள்வதையும் கண்டு பிறர் குமுறினார்கள். வேறு ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக பூசல் உருவானால் அத்தனை சீற்றமும் சேர்ந்து வெடித்தன.
அடிதடிகள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றால் அங்கே பிறருக்காக அரசியல் கட்சிக்காரர்களும், மடங்களைச் சேர்ந்தவர்களும் வந்தனர். எங்களுக்காக எந்தக் கட்சியும் வரவில்லை. அந்த இடத்தைத்தான் குடியரசுக்கட்சி நிரப்ப ஆரம்பித்தது. என் அப்பா எந்தப் பிரச்சினைக்கும் கும்பலைக் கூட்டிக்கொண்டு சென்று நின்றார். தேவையென்றால் அவரே முன் நின்று அடிதடிகளில் ஈடுபட்டார். அவர் பிற மக்களால் அஞ்சவும் வெறுக்கவும் பட்டார். எங்கள் பகுதிகளில் அவரை தலைவர் என்று கொண்டாடினார்கள்.
அப்பா உயிரிழந்தது எண்ணிப்பார்த்தால் சிரிப்பூட்டும் ஒரு காரணத்துக்காக. தன் வாழ்நாள் முழுக்க அப்பா வெறுத்துவந்த ஒருவர் ஆதிகவிஞரான வான்மீகி. தன் பெயருடன் வால்மீகி என்று சேர்த்துக்கொள்வதை அவர் ராணுவத்தில் சேர்ந்தபோதே தடுத்துவிட்டார். அதன்பின் எங்கள் ஆட்கள் எக்காரணம் கொண்டும் தங்களை வால்மீகியின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்று அப்பா சொல்வார். ஆண்டுதோறும் பள்ளிக்கூடம் தொடங்கும் நாட்களில் அவரே குழந்தைகளுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் பெயர்களுடன் வால்மீகி என்று சேர்க்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். அவ்வாறு பெயரை எழுதிக்கொண்ட ஓர் ஆசிரியரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அறைந்தார். அதன்பின் அவரை அஞ்சியே அப்படி எழுதும் வழக்கத்தை நிறுத்தினர். வால்மீகியை தெய்வமாக நிறுவி வழிபட்டு வந்த சில சிறுகோயில்கள் எங்கள் பகுதியில் இருந்தன. அப்பா அங்கே எவரும் செல்லக்கூடாது என்று அனைவரையும் விலக்கினார். சென்றவர்களை வசைபாடி எச்சரித்தார்.
“வால்மீகி என்பவன் இனத்துரோகி. அவனுக்கு சற்றேனும் தன்மானம் இருந்திருந்தால் அவன் சம்பூகனின் கதையை எழுதியிருக்கவேண்டும். ஆனால் அவன் தன் இனத்தவனாகிய சம்பூகனை கொன்ற அந்த ஷத்ரியனைப் புகழ்ந்து எழுதினான். எந்த ஆயுதமும் ஏந்தாத தவமுனிவனான சம்பூகனை அவன் தலைகீழாகத் தவம்செய்யும்போது கொன்றவன் எத்தனை கொடியவன். அந்தக் கொடியவனை புகழ்ந்து எழுதிய இவன் எவ்வளவு கொடியவன். அவர்களில் ஒருவனைப் புகழ்ந்து எழுதியதனால்தான் வால்மீகி எழுதிய காவியத்தை இவர்கள் இத்தனை தலைமுறைகளாகக் கொண்டாடுகிறார்கள். மாறாக நமது வார்த்தைகள் ஒன்றுகூட சரித்திரத்தில் இல்லை. இந்த தேசத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் நம்மைச் சார்ந்தவர்களின் குரலே இல்லை. நமது குரலை ஒடுக்க நம்மைச் சார்ந்த ஒருவனையே அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் அவர்கள். வால்மீகி நம்மை அழிக்கும் கோடரி.”
அப்பா பேச ஆரம்பித்தால் மேடைப்பேச்சின் தொனியும் குரலும் வந்துவிடும். ஒரு சாதாரண உரையாடலில் ஒருவர் அப்படிப் பேசினார் என்றால் அவரிடம் மேற்கொண்டு பேச எவராலும் முடிவதில்லை. நான் அப்போதெல்லாம் வால்மீகி யார் என்பதையே பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவுக்கு வெளியே எனக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் ஏதும் இருக்கவில்லை. மும்பைக்கு ஓடிப்போய் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால் சினிமாவில் நுழைந்துவிடலாம் என்று நானும் நண்பர்களும் கனவுகண்டுகொண்டிருந்தோம்.
வால்மீகியால்தான் அப்பா உயிரிழந்தார். பைத்தானில் பிறந்தவர் வைணவ பக்தரும் கவிஞருமான ஏகநாதர். அவருடைய சமாதி ஆலயம் எங்கள் இல்லத்தில் இருந்து நடந்துசெல்லும் தொலைவில், கோதாவரிக்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. நெடுங்காலம் எங்கள் சாதியினர் எவரும் அங்கே செல்ல அனுமதி இருக்கவில்லை. வெளியூரிலிருந்து எவரென்றே தெரியாத பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவியத் தொடங்கியபிறகுகூட எங்களூர்க்காரர்கள் அங்கே செல்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரும் மதில் அந்தப்பகுதிக்கும் எங்கள் பகுதிக்கும் இடையே இருந்தது. அங்கே பாடப்படும் பஜனை ஒலி இங்கே கேட்கும். எங்கள் பகுதியில் சற்று மேடான இடத்தில் நின்றால் அந்த ஆலயத்தையேகூட பார்க்கமுடியும். ஆனால் ஏகநாதர் என்ற பெயரே எங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ராம் ராம் என முடியும் பெயர்கொண்டவர்கள்தான் எங்களில் பெரும்பாலானவர்கள் என்றபோதிலும்கூட.
நகரின் பல பகுதிகளில் சிறிய கோயில்களில் ஏகநாதரின் பாடல்களைப் பாடி பஜனையும் பூஜையும் செய்வதுண்டு. அங்கே தெய்வங்களுக்கு இனிப்புப் படையலிட்டு அதை பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த கோயில்களில் ஒன்றில் வால்மீகியை கோயிலுக்கு வெளியே ஒரு புதரின் அடியில் நிறுவியிருந்தனர் என்று ஒரு பிராமணப் பையன் எங்கள் பகுதிப் பையன் ஒருவனிடம் சொன்னான். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சண்டை அது. “உன் சாதிக்காரரான வால்மீகியையே நாங்கள் கோயிலுக்கு வெளியில்தான் நிறுத்தியிருக்கிறோம்.”
எங்களூர்ப் பையன் அதைப் பேச்சுவாக்கில் அவன் அண்ணனிடம் சொல்ல அந்த அண்ணன் என் அப்பாவிடம் அதைச் சொன்னான். அப்பா இருபதுபேருடன் கிளம்பி நேராகச் சென்றார். அவர்கள் பிராமணர்கள். இவர்களைப் பார்த்ததுமே அஞ்சிவிட்டனர். அப்பா உரத்தகுரலில் கூவியபடி சென்று முற்றத்தில் நின்றார். “ஏண்டா குடுமிக்காரர்களா, உங்களுக்கு ராமகதையை எழுதித்தந்தால்கூட கோயிலுக்குள் ஏற்ற மாட்டீர்களா? வெளியே வாருங்களடா”
அங்கிருந்த முதிய பிராமணர் சமாதானமாகப் பேச முயன்றார். இளைஞர்கள் அவருக்கு பின்னால் நின்றனர். அங்கே முள்மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த வால்மீகி சிலையைச் சுட்டிக்காட்டி அப்பா சொன்னார் “இவரை உள்ளே கொண்டு வைக்காமல் இங்கே பூஜை நடக்காது… பார்த்துவிடுவோம்”
ஆனால் பிராமணக்கிழவர் உறுதியாக மறுத்துவிட்டார். அவர்களின் வழக்கமான வாதம்தான். “நானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நான் எளிய பிராமணன். என் முன்னோர்கள் எல்லாவற்றையும் தெளிவாக வகுத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நான் அவற்றைக் கடைப்பிடிப்பவன் மட்டும்தான்”
“உன் பெண்கள் விதவையானால் மொட்டையடித்து சமையலறையிலா வைத்திருக்கிறாய்? மீண்டும் திருமணம் செய்து கொடுக்கவில்லையா? உன் ஆட்கள் பூஜையும் நோன்புமாகவா வாழ்கிறார்கள்? வெளியே சென்று எல்லா வேலையையும் செய்யவில்லையா? நீ வைத்திருக்கும் இந்த மூக்குக்கண்ணாடி உன் மூதாதையர் சொன்னதா என்ன?”
அவர்களுக்கே உரிய சில பாவனைகள் உண்டு. புரிந்துகொள்ளாமல் மூர்க்கமாக இருக்கும் எளியவனை நோக்கி கருணையுடன் பேசுவது முதன்மையானது.அவர் திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் சொன்னார். “என்னுடைய சம்பிரதாயங்களை நான் மீறமுடியாது. உங்கள் சம்பிரதாயங்களில் நான் தலையிடப்போவதுமில்லை…. அவரவர் வழி அவரவருக்கு… எதற்கு நமக்குள் தகராறு?”
ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு சலித்துவிட்டது. “முட்டாள்கள், அயோக்கியர்கள்” என்று காறித்துப்பினார். “அப்படியென்றால் இந்தச் சிலை உங்களுக்கு தேவையில்லை. டேய் அதை எடுங்கள்டா” என்றார்.
அவருடன் வந்த இளைஞர்கள் அதை எடுத்துக்கொண்டார்கள். அப்பா மீண்டும் காறித்துப்பிவிட்டு திரும்பினார். ஆனால் வரும் வழியிலேயே அவருடைய கோபம் தணிந்து சிலைமேல் ஆர்வமும் தணிந்துவிட்டது. “இதை என்ன செய்வது?” என்று ஓர் இளைஞன் கேட்டபோது “தூக்கி கோதாவரியில் போடு… வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்று சொல்லிவிட்டார்.
அவர்களால் சிலையை தூக்கிப்போட முடியவில்லை. அது சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட அழகற்ற சிறிய சிலை. ஒரு சாண் உயரமிருக்கும். அதை இளைஞர்கள் கோதாவரியின் கரையில், நாககட்டத்தில் இருந்த சப்தமாதாக்களின் சிலைக்கு அருகே கொண்டுசென்று வைத்து ஒரு காட்டுப்பூவை பறித்து சூட்டி வணங்கிவிட்டு திரும்பினர்.
போலீஸிடமிருந்து அழைப்பு வரும் என அப்பா எதிர்பார்த்தார். குடியரசுக் கட்சியின் பைத்தான் நகரத்தலைவரிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுச் சொல்வதாக அவர் ஒப்புக்கொண்டார். அப்பா கூடவந்த இளைஞர்களுடன் இரவில் திரும்பி வந்தவர் பூட்டிக்கிடந்த சந்துலால் கடை அருகே அவர்களிடமிருந்து விடைபெற்றுவிட்டு இருட்டில் எங்கள் வீட்டை நோக்கி வந்தார். ஆனால் வந்துசேரவில்லை.
மறுநாள் அவர் வீடுவந்துசேரவில்லை என்பதை அம்மா கட்சியின் இளைஞர்களிடம் சொன்னாள். அவர்கள் பல இடங்களுக்கும் சென்று தேடினர். அவர்களில் ஒருவன் சந்துலால் கடையருகே நாய்கள் கூட்டமாக மண்ணை முகர்ந்து நிலைகொள்ளாமல் முனகியும், தரையைப் பிராண்டியும், குரைத்தும், ஒன்றையொன்று சுற்றிச்சுழல்வதைக் கவனித்தான். அப்பகுதியை கூர்ந்து பார்த்தபோது ஆழமான சாக்கடைக்குள், கன்னங்கரிய மலின ஒழுக்குக்குள் அப்பா புதைந்திருப்பதைக் கண்டான். அவருடைய சட்டையின் நுனி மட்டுமே தெரிந்தது. கூர்ந்து கவனித்தபோதுதான் உடலை காணமுடிந்தது.
அப்பா ராணுவத்தில் சேர்ந்த நாள் முதல் தூய்மையில் கவனம் கொண்டவராக இருந்தார். மனநோய் அளவுக்கு அந்த தூய்மைவெறி அவரிடமிருந்தது. அவருடைய செருப்புகூட புழுதிபடியாமல்தான் இருக்கும். சட்டைக்காலரில்கூட அழுக்கு இருக்காது. வீடு அந்தக்கணம் துடைத்து வைத்ததுபோல் இருக்கவேண்டும் அவருக்கு. மெத்தைமேல் தூயவெள்ளை விரிப்பு இருக்கவேண்டும். அதில் ஒரு சுளிப்பு கூட இருக்கலாகாது. இரவு படுப்பதற்கு முன் படுக்கையை கையால் நீவி நீவிச் செருகி சரிசெய்வார். படுத்து காலையில் எழுந்தால் அங்கே ஒருவர் படுத்திருந்த தடையமே இருக்காது. அவர் உணவு உண்ட இடத்தில் ஒரு துளி நீர் கூடச் சிந்தியிருக்காது. காலையிலும் மதியமும் குளிப்பவர் இரவும் குளித்தபின்னரே படுப்பார். தினம் இரண்டு ஆடைகள் மாற்றிக்கொள்வார். ஒவ்வொரு முறை குளித்ததும் தாஜ் என்னும் அத்தரும் பூசிக்கொள்வார். தன் படுக்கையறையில் ஊதுவத்தி ஏற்றி வைத்தபின்னரே தூங்குவார்.
அப்பாவை போலீஸார் அந்த புழுத்துநாறிய மலக்குழியில் இருந்து கொக்கிகளை வீசி சிக்கவைத்து இழுத்துத்தான் எடுத்தார்கள். குழாயால் நீரைப்பீய்ச்சி அவர் உடலைத் தூய்மை செய்தார்கள். அவரை பிணச்சோதனை செய்தபோது பின்மண்டையில் கனத்த பொருளால் ஓங்கி அறைந்து வீழ்த்தி, கூரிய பொருளால் நெஞ்சில் குத்தி இதயத்தை கிழித்து தூக்கி வீசியபின் எடைமிக்க கல்லையும் தூக்கி அவர் உடல்மேல் போட்டு அவரை மூழ்கடித்துவிட்டு சென்றிருந்தார்கள் என்று தெரிந்தது.
(மேலும்)
எம்.வி. வெங்கட்ராம்
எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி காலத்தில் எழுதவந்தாலும் இளமையில் வறுமையாலும் எழுத்தை தொழிலாகக் கொண்டமையாலும் நீண்டகாலம் இலக்கியப் பணிகளில் இருந்து விலகி நின்றார். சௌராஷ்டிரக் குடியேற்றம் பற்றிய வேள்வித்தீ, மகாபாரத மறு ஆக்கமான நித்யகன்னி ஆகியவை அந்தந்த வகைமைகளில் முன்னோடி முயற்சிகள். காதுகள் இந்திய ஆழ்மனம் கொள்ளும் சிதைவும் ஆன்மிகமான கண்டடைதலும் வெளிப்படும் நாவலாகக் கருதப்படுகிறது.
எம்.வி.வெங்கட்ராம் – தமிழ் விக்கி
Of Men Women and Witches- A discussion
பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் நிகழ்ந்த ஓர் உரையாடல். நானும் சதீஷ் சபரிகேயும் மொழிபெயர்ப்பாளர் சங்கீதா புதியேடத்தும் சென்ற 20 ஏப்ரல் 2025 அன்று நிகழ்த்தியது
To Buy
‘Devastated by my mother’s death, I found refuge in writing’That which blooms
My love for the written word, which I discovered at the age of ten and my love for nature which I discovered at the age of twenty are the two main driving forces of my life.
That which blooms
எப்போதும் போல சொல்ல வந்த கருத்தை நன்றாக தங்கள் காணொளியில் வாசகர்களின் மனதில் இணைப்பை ஏற்படுத்தி புரிய வைக்கிறீர்கள்.You are an expert in conneting your thoughts with your readers .இது ஒரு நவீன நாவலாசிரியருக்கு மிக அவசியம்.
கலை, இயற்கை- கடிதம்April 25, 2025
‘நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’
அன்புள்ள ஜெ
இலக்கியம் மேட்டிமைவாதமா என்ற காணொளிக்கு வழக்கத்துக்கு மாறாக முகநூலில் சில எதிர்வினைகளைக் கண்டேன். அதைக் கண்டித்துப் பேசியிருந்தார்கள். இதை நீங்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அதெல்லாம் இல்லை, இலக்கியவாதிகளும் வாசகர்களும் சாமானியர்கள்தான் என்று ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த பூசல் முடிவதே இல்லைபோல.
ராம்
அன்புள்ள ராம்,
இந்த உரையாடல்களில் ஒரு விசை – ஒரு அடிபோடும் தன்மை அவ்வப்போது வருவதாக நண்பர் சொன்னார். நான் சொன்னேன். அது ‘எதிரிக்கான’ அடி அல்ல. இங்கே நம் சமூகம் ஒருமாதிரி கற்பாறை போல அசைவற்று உறைந்திருக்கிறது. அறிவின்மேல் நம்பிக்கை இல்லை. நுண்ணுணர்வுகள் மேல் ஈடுபாடில்லை. தத்துவம், மெய்யியல் எதிலும் ஆர்வமில்லை. எளிய உலகியலுக்கு அப்பால், பிழைத்துக்கிடப்பது நுகர்வது என்பதற்கு அப்பால் இலக்குகளே இல்லை. அந்த கரும்பாறையை முட்டி முட்டி கொஞ்சம் நகர்த்துவதற்கான முயற்சிதான் அது.
சாமானியனுக்கு அவன் சாமானியன் என்று தெரியும். தெரியாத சாமானியனே இல்லை. ஆனால் தன் சோம்பலால், எளிய நுகர்வுவெறியால் அவன் சாமானியனாக இருக்கிறான். அவனுக்கு அது சார்ந்த தாழ்வுணர்ச்சி உண்டு. ஆகவே அவன் சாமனியத்தன்மைக்கு அப்பால் சிறிய அளவுக்கு தனித்தகுதி கொண்டிருப்பவர்களைக்கூட வெறுக்கிறான், அஞ்சுகிறான், அதை ஏளனமாகவும் புறக்கணிப்பாகவும் வெளிப்படுத்துகிறான். அதுதான் இன்று சமூக ஊடகங்களை ஆக்ரமித்துள்ள பொதுவான குரலாக உள்ளது.
அந்தக்குரல் பேசும் கருத்துக்களை உருவாக்கியவர்கள் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள். அவர்கள் சாமானியர்களிடம் சாமனியனாக இருப்பதே தகுதி, சிறப்பு என்று சொல்கிறார்கள். சாமானியத்தன்மை என்பதை கள்ளமற்ற தன்மை என விளக்குகிறார்கள். சாமானிய மக்கள் என்று சொல்லாத அரசியல்வாதியே இல்லை. சாமானியன் யோக்கியன் மற்றவர்கள் அயோக்கியர்கள் என்று அவர்கள் நிறுவுகிறார்கள், சாமானியர்கள் அதை நம்புகிறார்கள். ஆனால் சொல்பவன் சாமானியன் அல்ல, அவன் சாமானியர்களைப் பயன்படுத்திக்கொள்பவன். அதிகார இலக்குகொண்ட அயோக்கியன்.
சாமானியர் கொண்டுள்ள அதன் தன்னுணர்வுக்கு எதிரான குரலையே நான் உருவாக்குகிறேன். சாமானியர் நல்லவர், சாமானியனாக இருப்பது ஒரு சிறப்பு என இங்கே அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ள பொய்யில் இருந்து விடுபடாத வரை ஒருவன் அறிவியக்கவாதியாக, மெய்யான சமூகப்பணியாளனாக ஆகவே முடியாது. சாமானியர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளாமல் ஒருவனால் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவே முடியாது. சாமானியர்களின் கருத்துக்களை பொருட்படுத்தும்வரை, அவர்களுடன் உரையாட முற்படும் வரை அவனால் எதையுமே கற்கமுடியாது.
அவன் சாமானியர்களை நேசிக்கலாம். அவர்களை கவனிக்கலாம். அவர்களைப் பற்றி சிந்திக்கவும் எழுதவும் செய்யலாம். ஆனால் அவர்களில் ஒருவன் அல்ல தான் என்னும் எண்ணம் அவனுக்கு இருந்தாகவேண்டும். சாமானியர்களின் அறிவின்மைக்குரல்கள் ஒன்றாகி மாபெரும் அதிகாரமாக திரண்டு எல்லா அறிவுச்செயல்களையும் முடக்கிவிடும் ஆற்றல் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதைச் சொல்லிச் சொல்லி நிறுவவேண்டியிருக்கிறது.
எந்த ஒரு அறிவுச்செயல்பாடு பற்றிப் பேசினாலும், எந்த ஒரு அறிஞனைப் பற்றிப் பேசினாலும் நையாண்டியும் வசையுமாக கிளம்பி வரும் கும்பலைக் கவனியுங்கள். அதேசமயம் சாதாரண சினிமாக்களை பற்றி, தீனி பற்றி, அரசியல் பற்றி சலிக்காமல் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பதை பாருங்கள். இந்தக் கும்பலை நிராகரிக்காமல், இவர்களிடமிருந்து விலகிக்கொள்ளாமல் இங்கே ஒருவன் எதையாவது கற்கவோ சிந்திக்கவோ முடியுமா என்ன?
சிந்திப்பதைப் பற்றி, வாசிப்பதைப் பற்றிச் சொன்னதுமே இந்தக்கும்பல் கிளம்பி வந்து ‘புத்தகம் வாசிக்காமலேயே அறிவு வரும்.’ ‘புத்தகம் வாசிப்பவர்கள் எல்லாம் பெரிய கொம்பன்களா.’ ‘புத்தகம் வாசிக்காதவர்கள் எல்லாரும் நல்லவர்கள்.’ ‘எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அயோக்கியர்கள்.’ ‘வாசிப்பவனும் வாசிக்காதவனும் சமம்.’ ‘வாசிக்காதவனிடமிருந்து வாசிப்பவன் தன்னை பிரித்துப் பார்க்கக்கூடாது.’ என்றெல்லாம் ஆரம்பிப்பார்கள். இது நூறாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டே இருக்கும் ஒன்று. இப்போது சமூக வலைத்தளங்கள் இவர்களுக்கான இடத்தை உருவாக்கி அளிக்கின்றன. இவர்கள் ஒன்றாகத் திரண்டு பெரும் ஆற்றலைப் பெற வழிவகுக்குக்கின்றன.
இன்று இத்தனை வலுவாக இவற்றைச் சொல்லவேண்டிய தேவை உள்ளது. முன்பு சோறு, சினிமா, சாதி, அரசியல் என்று இவர்கள் உழலும் உலகம் குமுதவிகடகுங்குமத்தில் எங்கோ இருந்தது. சிற்றிதழ் என்னும் அறிவுச்சூழலுக்குள் கதவைச் சாத்திக்கொண்டு தன் கல்வியின் வழியாக தன் சாதனைகளை நோக்கிச் செல்ல முடிந்தது. இன்று அது ஒரு பெரும் கடலாக நம்மைச் சுற்றி அலையடிக்கிறது. அது உருவாக்கும் எதிர்மறைத்தன்மை, அது அளிக்கும் ஏளனம் ஆகியவற்றை நம்மால் எளிதில் கடந்து செல்லவே முடிவதில்லை.
சாமானியர்களின் மடமையின் ஆதிக்கத்தால் தன்னுள் சுருங்கிக்கொண்டு, தனக்கான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தவறவிடும் இளைஞர்கள் பெருகிவரும் சூழலில் அவர்களுக்காகவே இதைச் சொல்கிறேன். சாமானியர்களை நோக்கிச் சொல்லவில்லை. அவர்களுடன் பேச எனக்கு ஒரு சொல்கூட இல்லை.
நான் இப்படிச் சொல்லும்போது சாமானியர்களின் தரப்பில் இருந்து பலவகையான எதிர்க்குரல் எழத்தான் செய்யும். நான் சொல்வது அவர்களுக்கு எவ்வகையிலும் புரியாது. அதற்கான எல்லா வாசல்களையும் அவர்கள் மூடிவிட்டிருப்பார்கள். என்னென்ன மாய்மாலங்கள், ஜாலங்கள். ‘நான்லாம் வாசிப்பேன், ஆனா எல்லா புக்கும் எனக்குச் சமம்தான்’ என ஆரம்பித்து ‘எழுத்தாளர்கள்லாம் மோசடிக்காரங்கன்னு தெரிஞ்சப்றம் வாசிப்பை நிப்பாட்டிட்டேன்’ என்பது வரை இவர்களின் குரல்நடிப்புகள் பல. (‘நிப்பாட்டிவிட்டு’ என்ன செய்வார்கள்? அரசியல்வாதிகள் எட்டு தலைமுறைக்குச் சொத்து சேர்க்க கொடிபிடிப்பார்கள். சாதிமதச்சண்டை போடுவார்கள். பிரியாணி விவாதங்களில் மூழ்குவார்கள், வேறென்ன?)
இந்த இரு தரப்பும் எப்போதும் இங்கே இருக்கும். ஒன்று, சுரணையின்மை மற்றும் அறியாமையின் தரப்பு. இன்னொன்று இங்கே தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வரும் அறிவின் தரப்பு. இன்று முதல்தரப்பு பூதாகரமானதாக இருக்கலாம். ஆனால் அறிவின் தரப்பு ஒருபோதும் தோற்காது, அழியாது. ஏனென்றால் மானுடம் இங்கே நீடிக்கவேண்டும் என விழையும் ஒரு பிரபஞ்ச ஆணையின் விளைவாகவே அது நிகழ்கிறது.
அதையே ஒரு நம்பிக்கையாகவும் வாக்குறுதியாகவும் இளம் வாசகர்களிடம், இளம் எழுத்தாளர்களிடம் சொல்கிறேன். அவர்களின் கனவுகளை பாதுகாக்கவே முயல்கிறேன். ஆகவே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தளரவேண்டாம், சோர்வுற வேண்டாம். ஏசு சொன்னதுபோல ‘நீங்கள் மண்ணின் உப்பாக இருக்கிறீர்கள்’
ஜெ
காவியம் – 5
(சாதவாகனர் காலம், பொயு 1 ஆம் நூற்றாண்டு சுடுமண்காலம். தாய்த்தெய்வங்கள்)
என் அப்பா மிட்டாலால் பைதானி ராணுவத்தில் வேலைபார்த்தார். அவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தவர். எங்கள் பங்கிகள் சமூகத்தில் அன்று அது மிகப்பெரிய படிப்பு. தொன்மையான இந்த பைத்தான் நகரில், இடிந்துகுவிந்த பழைய கட்டிடங்கள் இருபுறமும் மண்டிய புழுதி இளகிய தெருக்கள் சென்றுசேரும் கோதாவரியின் கரையில், ஒரு மழையில் சேறாகிவிடும் புழுதிப்பரப்பில், முள்மரங்களுக்கு நடுவே இருந்த தகரக்கூரையிடப்பட்ட சிறிய வீடுகளில், மலம் அள்ளியும் பன்றிகளை மேய்த்தும் வாழும் மக்களில் பிறந்த ஒருவர் ஐந்து வயது முதல் தினம் பன்னிரண்டு மணிநேரம் உழைத்தாகவேண்டும். அவர் படித்ததற்கு ஒரே காரணம் அவருக்கு அப்பா இல்லை என்பதுதான்.
என் அப்பாவின் அப்பா சூர்தாஸ் அப்பாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது காய்ச்சலில் இறந்தார். அவர் அம்மா மறுபடியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தார். எங்கள் சாதியில் குழந்தைகளை தந்தையர் பணம் ஈட்டித்தரும் விலங்குகளாகவே பார்த்தனர், பன்றிகளைப் போல. அவற்றுக்கு உணவு என்று எதுவும் அளிக்கவேண்டியதில்லை. தேவையானபோது பிடித்து கால்களை கட்டித் தூக்கிச் சென்று விற்கலாம். குழந்தைகளுக்கு உணவளிக்கும் வழக்கமே இருக்கவில்லை. அவை ஊர் முழுக்க அலைந்து ஆணையிடப்படும் எல்லா வேலைகளையும் செய்து கிடைத்ததைத் தின்று வாழும். ஆறேழு வயது ஆனதுமே எவருக்காவது அடிமைவேலைக்கு விற்றுவிடலாம். ஒரு குழந்தையை விற்ற பணம் ஒரு மாதம் வேலையே செய்யாமல் குடிப்பதற்கு போதுமானது.
ஆனால் என் பாட்டி என் அப்பாவை பள்ளிக்கு அனுப்பினாள். அவளுக்கும் படிப்பு என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் படித்தால் தலையில் வெண்ணிறக் குல்லா வைக்கமுடியும், வெள்ளை நிற பைஜாமாவும் சட்டையும் போடமுடியும், செருப்பு போட்டு சாலையில் நடக்க முடியும் என்று அவள் நினைத்தாள். அரசு அளித்த இலவச உணவுதான் என் அப்பாவை படிக்கச் செய்தது. இருட்டு விலகாத அதிகாலையில் எழுந்து ஊருக்குள் துப்புரவுப் பணிக்கு செல்லும் என் பாட்டிக்கு அப்பாவுக்கு உணவு அளிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. மாலையில் அவள் வீடுதோறும் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து சமைப்பதுதான் வீட்டில் உண்ணும் உணவு .
அப்பா காலையில் எழுந்து பன்றிகளை திறந்துவிட்டுவிட்டு அவரே கிளம்பி பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் மதிய உணவுக்கு மணி அடிப்பது வரை பசித்திருந்தார். அவர் படிப்பில் பேரார்வம் கொண்டிருந்தவர். ஆனால் ஒரு செவி பகல் முழுக்க அந்த மணியோசைக்காக காத்திருந்தது. மாவுகிண்டி பசை போல அளிக்கப்படும் அந்தப் பொருள் அந்த வயதில் அவருக்கு அத்தனை சுவையுடன் இருந்தது. எப்போதும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுண்டு. அவர் என்னிடம் இனிதாகப்பேசிய ஒரே விஷயம் அது மட்டுமே. சுருட்டை ஆழ இழுத்து, இருமி இருமி துப்பியபடி “அது ஒரு காலம். அன்றெல்லாம் அத்தனை பசி” என்று எந்த தனக்குத்தானே சொல்வதுபோல சொல்லிக்கொள்வார்.
பள்ளிப்படிப்பை முடித்ததுமே அப்பா ராணுவத்தில் சேர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே அவரை அடிமைவேலைக்கு வாங்க பலர் என் பாட்டியிடம் பேரம் பேசினார்கள். என் பாட்டி ஆங்காரம் கொண்டு காறித்துப்பியும் மண்ணை வாரி வீசியும் அவர்களை விரட்டினார். அப்பா மலம் அள்ளும் துடைப்பத்தை கையால் தொடாமல் வாழவேண்டும் என்று பாட்டி கனவுகண்டார். மலம் அள்ளும் துடைப்பத்தில் ஜ்யேஷ்டாதேவி வாழ்கிறாள். பங்கிகளுடன் நிழல்போல உடனிருக்கும் தெய்வம். அழுக்கின், நாற்றத்தின், நோயின் தலைவி. அவளிடமிருந்து அவர் தப்பவேண்டும். “காலையில் எழுந்ததுமே குளிப்பவன்தான் மனிதன். என் மகன் குளித்துவிட்டுச் செய்யும் வேலைக்குப் போகவேண்டும்.” என்று பாட்டி சொன்னாள். “அவன் மேல் சாக்கடை படவேகூடாது…அதற்காக நான் யாரை வேண்டுமென்றாலும் சிரித்துக்கொண்டே கொல்வேன்”
என் அப்பா ஆண்டு முழுக்க ஒரே காக்கி அரைக்கால் சட்டையும், காக்கிச் சட்டையும் அணிந்துகொண்டு செருப்பில்லாமல் நடந்து பள்ளிக்குச் சென்று வந்தார். அவர் எவர் முன்னாலும் அமர்வதில்லை, எந்தக் கூட்டத்திலும் சேர்வதுமில்லை. ஊரின் எந்த அறியப்பட்ட முகத்தைக் கண்டாலும் ஒளிந்துகொள்வார். ஆயினும் அவருக்கு ஒவ்வொரு நாளும் சிறுமைகள் நிகழ்ந்தன. அவர் பள்ளியில் படிக்கிறார் என்று தெரிந்தமையாலேயே அவரை அப்படி நடத்தினர். அவரை செருப்பைத் தூக்கி வரும்படி ஆணையிட்டனர். பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே பெரிய வீட்டுக்காரர்கள் சொன்னால் அவர் சட்டையைக் கழற்றிவிட்டு சாக்கடையைத் தூர்வாரினார், மலக்குழிகளை தூய்மை செய்தார்.
அந்த அழுக்கு ஆடையுடன் பள்ளிக்குச் சென்று பங்கிகளுக்கான தனி பெஞ்சில் அமர்ந்து பயின்றார். பங்கிகளுக்கான தனி வரிசையில் நின்று மதிய உணவை உண்டார். பங்கிகளுக்கான தனிப்பானையில் நீர் அருந்தினார். அவருடைய நோட்டுப்புத்தகங்களை தனியாக வைக்கும்படி ஆசிரியர்கள் ஆணையிட்டனர். அவற்றின்மேல் நீர் தெளித்தபின்னரே எடுத்துக்கொண்டனர். பள்ளியின் கழிப்பறைகளை அவரும் அவரைப்போன்ற மாணவர்களும்தான் கழுவினார்கள். பள்ளியிலும் உயர்குடி மாணவர்கள் அவருக்கு வேலைகளை ஏவினர். அவர்களின் பொருட்களை, குறிப்பாக உணவுப்பாத்திரங்களை மறந்தும் தொட்டுவிடக்கூடாது.
கணித ஆசிரியர் ஸ்ரீராம் ஜோஷி மட்டுமே அவரை மனிதனாக நடத்தினார். அவருடைய நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைப்பதற்காக அவர் ஒரு காந்தி படத்தை அளித்தார். அப்பா தன் இளமைக்காலம் முழுக்க எல்லா நோட்டுப்புத்தகங்களிலும் காந்தி படத்தை வைத்திருந்தார். தன் வீட்டின் மரக்கதவில் காந்தி படத்தை ஒட்டி வைத்திருந்தார். காந்தியின் படத்தை பென்சிலால் வரைவது அவர் உள்ளம் ஒன்றிச் செய்யும் பொழுதுபோக்காக் இருந்தது. ஆனால் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட அவரும் அவரைப் போன்றவர்களும் தனியாகத்தான் நின்றனர். அவர்களுக்கு இனிப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.
பள்ளிநிறைவுக்குப்பின் ஸ்ரீராம் ஜோஷி அவரிடம் மேலும் படிக்கும்படியும், அவருக்கு அரசு உதவித்தொகை கிடைக்கும் என்றும் சொன்னார். ‘இல்லை, இதற்குமேல் நான் ஊரில் வாழமுடியாது’ என்று என் அப்பா சொல்லிவிட்டார். எங்கள் சாதியில் தன்மானத்தை காத்துக்கொள்வதற்கு இருந்த ஒரே வழி ராணுவத்தில் சேர்வதுதான். ஔரங்காபாதில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் செய்தியை அவரைப்போன்ற சமர்களில் ஒருவன் தான் சொன்னான். அப்பா அவனுடன் சென்று இரவெல்லாம் காத்துக்கிடந்து மறுநாள் ராணுவத்துக்குப் பெயர்கொடுத்தார். அவரை சேர்த்துக்கொண்ட சிமன்லால் எங்களைப் போன்ற சாதியைச் சேர்ந்தவர். எங்கள் சாதியைச் சேர்ந்த அனைவரையுமே அவர் ராணுவத்தில் சேர்த்துக்கொண்டார்.
அப்பா வீடு திரும்பவில்லை. அப்படியே ராணுவத்திற்குச் சென்றார். ’உங்கள் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்’ என்று சிமன்லால் சொன்னார். ’வீட்டில் இருந்து எடுத்துக்கொள்ள ஏதுமில்லை, சொல்லிவிட்டே வந்தேன்’ என்று என் அப்பா சொன்னார். ஔரங்காபாதில் இருந்து ராணுவ வண்டியில் நாசிக்குக்குக் கிளம்பிச் சென்றபோது அவர் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. இனியவையும், சிறந்தவையுமான எல்லாமே இனிமேல் வரவிருக்கும் ஊர்களில் நிறைந்திருக்கின்றன. இனி ஒரு போதும் பன்றிகளும் சாக்கடைகளும் கொண்ட பைத்தானுக்கு திரும்பப் போவதில்லை. இனி சாக்கடையை தொடப்போவதில்லை.
ராணுவத்திலும் பங்கிகள் பங்கிகள்தான். ஆனால் அவரைப் போன்றவர்கள் ஏராளமாக இருந்தார்கள். மகர்கள், சாம்பர்கள், சமர்கள். அவர்கள் ஒன்றாகக் கூடி தங்களுக்குள் ஒரு சிறு சமூகமாக ஆக முடிந்தது. அங்கே ஒருவரை ஒதுக்கலாம், அவமதிக்க முடியாது. அடிபணிய ஆணையிடமுடியாது. அப்பா ராணுவத்தில் நுழைந்த அன்று அவருக்கு சீருடைகளும் பூட்ஸுகளும் அளித்தார்கள். அப்பாவுக்கு கிடைத்த முதல் புதிய ஆடை அது. அதன் முறுக்கமும் பசைமணமும் அவரை பித்துப்பிடிக்கச் செய்தன. புதுமழையின் மண்மணத்தில் எருமைக்குட்டிகள் துள்ளிக்குதிப்பது போல அவர் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்தார். முகர்ந்து முகர்ந்து மகிழ்ந்தார். நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர்விட்டார்.
அவருக்கு அளிக்கப்பட்ட ராணுவச்சப்பாத்துக்கள் பழையவை, ஆனால் மெழுகுதேய்த்து கன்னங்கரிய ஒளியுடன் இருந்தன. அவர் இரண்டு அல்லது மூன்று சாக்ஸ்களைப் போட்டுக்கொள்ளாவிட்டால் அவற்றுக்குள் அவருடைய கால்கள் தனியாக அசைந்து வழுக்கும். அவற்றை முதலில் போட்டுக்கொண்டபோது அவர் கால்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ள, தடுக்கி தடுக்கி விழுந்தார். ஆனால் இரவும் பகலும் அவர் முகாமில் நடந்துகொண்டிருந்தார். இரண்டே நாட்களில் அவை அவருடைய கால்களாகவே ஆகிவிட்டன. அவற்றை போட்டுக்கொண்டு நடக்கையில் எழுந்த ஒலிதான் அவர் தன்னைப்பற்றி எண்ணி தானே மகிழ்ந்துகொண்ட முதல் விஷயம்.கடைசி வரை அப்பா கெட்டியான அடிப்பக்கம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்தார். அவை ஓசையிடவேண்டும் என விரும்பினார்.
ராணுவச்சப்பாத்துக்களை உயிருள்ளவை போலவே அப்பாஎண்ணினார். தனக்கு இணையான, அல்லது தன்னைவிட மேலான துணையாக அவற்றை கருதினார். கால்களில் போடாதபோது அவற்றை அருகே வைத்திருப்பார். இரவில் படுக்கையருகே வைத்துக்கொள்வார். இரவில் தூக்கம் விழித்தால் அதை மெல்ல தடவிக்கொடுப்பார். ஒவ்வொரு நாளும் அவற்றை மெருகேற்றினார். ஒரு துணியால் சற்று புழுதி படிந்தாலும் துடைத்தார்.
“மிட்டாவின் சப்பாத்துக்கள் எப்போதும் மெருகுடன் இருக்கின்றன” என்று ஹவல்தார் ஹரிநாராயண் ரானே சொன்னார். அப்போது அவர் முகத்தில் இருந்த கோணலான புன்னகையின் பொருளை அனைவரும் அறிந்திருந்தனர்.
அப்பா “எஸ் சர்” என்றார்.
“புழுதிபடியாமலேயே அவை இருக்கமுடியாது…” என்று கண்களை இடுக்கிக்கொண்டு ஹவல்தார் ரானே சொன்னார்.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அன்று முதல் பல மாதகாலம் ஒவ்வொரு நாளும் காலையில் செம்புழுதி மண்டிய மைதானத்தில் ரைஃபிளை தலைக்குமேல் தூக்கியபடி அப்பா நூறு தடவை ஓடி சுற்றிவந்தார். ஆனால் வந்து அமர்ந்ததுமே பைக்குள் இருந்து துணியை எடுத்து துடைத்து அவற்றை ஒளிரச் செய்தார்.
அவர் ஓடி முடித்து அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்த ரானே “தே ஆர் ஸ்டில் ஷைனிங் மிட்டா” என்றார்.
“யெஸ் சர், ஆல்வேய்ஸ் சர்” என்றார் அப்பா.
அதன் பின் அவர் அப்பாவிடம் ஏதும் பேசவில்லை, அந்த தண்டனையும் நிறுத்தப்பட்டுவிட்டது. மெல்ல அப்பாவிடம் ரானே கொஞ்சம் நெருக்கமானவராகவும் ஆனார். எப்போதோ ஒருமுறை குடித்துக்கொண்டிருக்கும்போது ”ராணுவம் ஆண்களுக்குரியது, மிட்டாலால் போல” என்று சொன்னார்.
அப்பாவின் பெயர் தந்தை பெயர் கிஷன் தாஸ். ஆகவே அவர் கே. மிட்டா லால். உண்மையில் அவருடைய பெயர் மிட்டா அல்லது மிட்டி மட்டும்தான். அவரை பள்ளியில் சேர்த்துக்கொண்ட ஆசிரியர்தான் தன் விருப்பப்படி லால் என்று சேர்த்துக்கொண்டார். அவருக்கு அடுத்துவந்த மாணவன் பெயரை தாஸ் என்று சேர்த்துக்கொண்டார். அத்தனைபேருக்கும் அவர்தான் பெயரை உருவாக்கினார். சிலருக்கு புதிய பெயர்களையே போட்டார்.
அப்பா ராணுவத்தில் பெயர் கொடுக்கும்போது அவருக்கு முன் நின்றவர்கள் தங்கள் பெயர்களைச் சொன்னபோது பெயரை எழுதிக்கொண்டவர் கூடவே இரண்டாம் பெயர் கேட்டார். தந்தை பெயரே இரண்டாம் பெயராக இருந்தால் போதும். ஆனால் பெயர் எழுதிய மகான் சிங் அலுவாலியா இன்னொரு பெயரும் தேவை என வலியுறுத்தினார். பெரும்பாலானவர்கள் இன்னொரு பெயர் சொல்ல திணறியபோது அவரே அவர்களின் சாதியைக் கேட்டு அறிந்துகொண்டு வால்மீகி என்று சேர்த்துக்கொண்டார். அப்பாவின் முறை வந்தபோது அவர் தன் ஊர்ப்பெயரைச் சொன்னார். பைத்தானி.
அப்பா ராணுவத்தில் சேர்ந்தபின் மீசை வைத்துக்கொண்டார். மீசை அடந்து வளர்வதற்காக தினமும் இருமுறை சவரம் செய்தார். இரவு தூங்கும்போது மேலுதட்டில் எண்ணை பூசிக்கொண்டார். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அப்பா பைத்தானுக்கு திரும்பி வந்தார். மீசை முளைக்காமல் வரக்கூடாது என்று உறுதிகொண்டிருந்தார். கரிய மெழுகுடன் சேர்த்து இறுக்கமாக முறுக்கி மேலேற்றிவிட்ட மீசையுடனும், மின்னும் சப்பாத்துகளுடனும், ராணுவச்சீருடையுடனும், பச்சைநிறமான பெரிய தகரப்பெட்டியைச் சுமந்தபடி சுமைதூக்கிச் சிறுவன் பின்னால் வர அவர் நடந்து தன் குடிலை நோக்கிச் சென்றார்.
அப்பா ராணுவத்தில் இருந்து பழைய 303 ரைபிளை கேட்டு வாங்கி கொண்டுவந்திருந்தார். பங்கிகளும் சமர்களும் மகர்களும் அப்படி வெடிக்காத பழைய ரைஃபிள்களை கேட்டு வாங்கி கொண்டுசென்று விடுமுறையை முடித்துவிட்டு வரும் வழக்கம் வெள்ளைக்காரர்களின் காலம் முதலே ஏற்கப்பட்டு விட்டிருந்தது. ராணுவ வீரனை எவரும் வேலை ஏவக்கூடாது, எவரும் தாக்கக்கூடாது. அது ராணுவத்திற்கே அவமதிப்பு என்று ராணுவத்தில் இருந்த பிராமணர்களும் தாக்கூர்களும் கூட உறுதியாக இருந்தனர்.
பலநூறு கைகளால் ஏந்தப்பட்டு மென்மையாகி, மனிதத்தோல் போலவே மாநிறத்தில் மின்னிக்கொண்டிருந்த தேக்குக்கட்டை கொண்ட ரைஃபிள் அது. நன்கு தேய்த்து எண்ணையிடப்பட்ட இரட்டைக்குழல்கள் மின்னிக்கொண்டிருந்தன. குண்டுகளைக் கொண்டுவர அவருக்கு அனுமதி இருக்கவில்லை. ஆனால் அவர் செல்லும் வழியில் ஊர்க்காரர்கள் திகைத்த கண்களுடன் பார்த்தனர். அவருடைய சாதியைச் சேர்ந்தவர்கள் தவிர எவரும் அவரை பார்த்ததாக காட்டிக்கொள்ளவோ ஓரிரு சொற்களேனும் சொல்லவோ செய்யவில்லை.
அப்பா அந்த ரைஃபிளை சாய்த்து வைத்துவிட்டு ஷிண்டேயின் டீக்கடையில் பெஞ்சில் அமர்ந்து ஒரு டீ சொன்னார். அங்கே அமர்ந்திருந்தவர்கள் இயல்பாக எழுவதுபோல எழுந்து விலகினர். ஷிண்டே அளித்த டீயை அவர் நிதானமாகக் குடிப்பதை அத்தனை பேரும் பிரமித்த கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர் எழுந்து விலகியதும் அவர்கள் உடலின் இறுக்கம் தளர்ந்து எளிதாக ஆனார்கள். ஷிண்டே அந்த கண்ணாடிக் கோப்பையை எறிந்து உடைத்தான். அந்த பெஞ்சை தண்ணீர்விட்டு கழுவினான். அப்போது அவன் துப்பிக்கொண்டே இருந்தான்.
அப்பா வந்தது திருமணம் செய்துகொள்வதற்காக. அவருக்காக அவர் அம்மா பெண் பார்த்திருந்தாள். அதற்கு முன் அவர் அனுப்பிய பணத்தால் ஓடு வேய்ந்த இரண்டு அறைகளும் சமையலறையும் திண்ணையும் கொண்ட சிறு வீட்டை குடில் இருந்த இடத்திலேயே கட்டியிருந்தாள். அம்மாவின் அப்பா வந்து பார்த்தபோது அந்த வீட்டைக் கண்டதுமே அம்மாவை பெண்கொடுக்க முடிவுசெய்துவிட்டார். என் அம்மாவை அப்பா சீதளை அன்னையின் கோயில் முகப்பில் வைத்து கருகுமணித்தாலி அணிவித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்மா நல்ல செம்மஞ்சள் நிறம். மெல்லிய சிறிய உடல். கூர்மையான முகமும், சிறிய உதடுகளும் கொண்டவள். என் அப்பா அம்மாமேல் பெரும் காதலுடன் இருந்தார். விடுமுறை முடிந்து திரும்பி ராணுவத்திற்குச் செல்லும்போது அழுதார். பெரிய கரிய மீசையுடன் அவர் அழுததை என் அம்மா நீண்டநாட்கள் சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
என் அம்மா அந்த பகுதிக்கே ஒளியைக் கொண்டுவந்தாள் என்று அவளைவிட மூத்த பெண்கள் பலர் சொல்லி சிறுவயதில் கேள்விப்பட்டிருந்தேன். அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால் எத்தனைநேரம் வேண்டுமென்றாலும் பாடமுடியும். பண்டிகைகளில் அவள் பாட ஆரம்பித்தால் விடிவதுதான் கணக்கு, அவளுடைய பாட்டு முடிவதே இல்லை. நாலைந்து எருமைகளை வாங்கிவிட்டாள். பால் கூட்டுறவு நிறுவனங்கள் வந்துவிட்டதனால் பங்கிகளிடமிருந்தும் பாலை வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். என் அம்மாவிடம் எப்போதுமே கொஞ்சம் பணம் இருந்தது. தேவையானவர்களும் எப்போதும் முகமலர்ச்சியுடன் கொடுப்பவளாகவும் இருந்தாள். ஆகவே எல்லா பெண்களாலும் விரும்பப்பட்டாள். அவளைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருப்பதையே நான் பார்த்திருக்கிறேன்.
அப்பாவைப் பற்றிய என் நினைவுகள் மங்கலானவை. அவர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்தார். வந்தால் ஒரு மாதம் இருந்துவிட்டுச் செல்வார். அப்பாவின் அம்மா இறந்தபோதுதான் வந்துவிட்டு உடனே திரும்பிச் சென்றார். அப்பா என்பது எனக்கு விந்தையான துண்டுத்துண்டு நினைவுகள்தான். முற்றிலும் புதிய ஒருவர் எங்கிருந்தோ வந்து வீட்டில் தங்க ஆரம்பிக்கிறார், அவரை அஞ்சி நான் ஒதுங்கிக்கொள்ள அவர் என்னை அதட்டுகிறார். எனக்கு ஆணையிடுகிறார். என் மேல் அன்பேதும் காட்டுவதில்லை, ஆனால் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறார்.
என்னை அவர் ஆண்களுக்குரிய உலகுக்கு அழைத்துச்செல்கிறார். டீக்கடைகள், பீடாக்கடைகள், ஆற்றங்கரையின் சீட்டாட்ட இடங்கள். வீட்டில் இருந்து புட்டியில் எண்ணையுடன் கோதாவரிப் படிக்கட்டுக்குச் சென்று அனுமன் கட்டத்தில் உடலெங்கும் எண்ணை பூசி வழித்து உருவிக்கொள்கிறார். எனக்கு அவரே எண்ணை பூசிவிடுகிறார். ஆற்றில் பாய்ந்து நீந்த கற்றுத்தருகிறார். நான் எப்போதும் ஆற்றின் விளிம்பில் இருந்து அப்பால் செல்வதில்லை. என்னை மையப்பெருக்கு வரை கூட்டிச்செல்கிறார்.
அவருடைய வாசனைகள் அறிமுகமாகின்றன. எப்போதும் அவரிடமிருப்பது சுருட்டின் எரியும் புகையிலை வாசனை. அந்தியில் அவர் தன் பச்சைநிற தகரப்பெட்டியில் இருந்து எடுக்கும் நீளமான புட்டியில் இருக்கும் திரவத்திற்கு அழுகும் பழங்களின் எரியும் வாடை. அதன் பின் அவர் மேலும் கனிந்தவராகவும் கொஞ்சம் கோமாளியாகவும் ஆகிறார். உடைந்த குரலில் பாட்டுப்பாடுகிறார். என்னை அருகே அழைத்து என் மெலிந்த கைகளையும் தோள்களையும் பற்றிக்கொண்டு அன்பாகப்பேசுகிறார். அம்மா சலிப்புடன் சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஒரே ஒருமுறை அவர் அந்த இளம்பழுப்பு திரவத்தில் கொஞ்சம் எனக்கு விட்டுத்தர முயன்றபோது மட்டும் சீற்றத்துடன் வந்து என்னை இழுத்துச்சென்றுவிட்டாள்.
ஆனால் அப்படியே அவர் மறைந்துபோய், என் நினைவிலிருந்தும் அழிந்து, இன்னொரு காலத்தில் என் வாழ்வுக்குள் நுழைபவர் இன்னொரு மனிதர். எனக்கு முந்தைய மனிதருடன் அவரை இணைக்க முடிந்ததே இல்லை. அவர் மாறியிருக்கலாம், நான் அதைவிட மாறியிருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவர் கொண்டுவரும் கம்பிளிகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிலேயே கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தேன். அவர் வந்த பின் என் வீடு மெல்ல மாற்றமடைவதில் ஒவ்வாமையும் கொண்டிருந்தேன். அவர் சென்றபின் மெல்லிய நிம்மதியை அடைந்தேன். ஆனால் வீட்டின் சுவரில் இருந்த ராணுவச்சீருடையில் இருக்கும் அவருடைய புகைப்படம் எனக்கு எப்போதுமே பிடித்திருந்தது.
நான் வளர்ந்த பின்னர், பள்ளியில் எனக்கான ஒரு வட்டம் உருவான பிறகு, எனக்கு அவருடன் நெருங்க முடியவில்லை. விடுமுறைக்கு வந்து தங்கிச்செல்லும் இரண்டு மாதகாலமும் அவரிடம் இருந்து விலகியே இருந்தேன். வீட்டில் அவருடன் நான் இருக்கும் பொழுதும் குறைவு. நான் காலையில் பள்ளிசெல்லும்போதுதான் அவர் எழுவார். நான் மாலையில் வரும்போது அவர் இருப்பதில்லை. இரவில் புதியதாகக் கண்டடைந்த குடித்தோழர்களுடன் போதையில் வந்துசேர்வார். நாங்கள் ஓரிரு சொற்கள் கூட பேசிக்கொள்ளாமலேயே விடுமுறைகள் முடிந்தன.
வந்து வந்து சென்றுகொண்டிருந்த அப்பா நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது நிரந்தரமாக திரும்பி வந்தார். ஓய்வுபெற்றபின் ஊருக்கு வந்து தங்கிய அவர் அதன்பின் ஆறு ஆண்டுகள்தான் உயிருடன் இருந்தார். அவரை இன்னமும்கூட கண்டுபிடிக்கப்படாத கொலையாளிகள் கொன்றுவிட்டனர். அவர் இறந்த பன்னிரண்டாம் நாள் சடங்கு முடிந்த அன்று இரவில்தான் அம்மா அவள் பாட்டி அவளுக்குக் காட்டித்தந்த அந்த துயர்மிகுந்த பிசாசை மூன்றாம் முறையாகக் கண்டாள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers




