வளவதுரையனுக்கு விஷ்ணுபுரம் புதுச்சேரி வட்டம் கௌரவம்

அன்புள்ள ஜெ,

புதுவை வெண்முரசு 81 வது கூடுகை வழமை போல மிக சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது . இந்த கூடுகையின் சிறப்பு உங்களின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக இரண்டு அமர்வுகளாக அது நிகழ்ந்தன. முதல் அமர்வில் ஆன்மீக உபன்யாசகர், பேச்சாளர் , எழுத்தாளர்,திராவிட ஆதரவாளர், பதிப்பாசியர், கடந்த ஐம்பதாண்டு இலக்கிய நிகழ்வு ஏற்பாட்டாளர் என பன்முகம் கொண்ட திரு வளவதுரையன் அவர்களின் 75 வது அகவை நிறைவை கொண்டாடவும் அவரை கௌரவப்படுத்தவும் அந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டோம். அவரது 75 அகவை நிறைவு மலரை வெளியிட எழுத்தாளர் பாவண்ணன் முன்னெடுத்து வருகிறார்.

முதல் அமர்வு எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை  ஒட்டி நிகழ்ந்தது.  திரு.வளவ துரையன் அவர்களுக்கு கடலூர் சீனு சால்வை மரியாதை செய்ய வெண்முரசு நண்பர்கள் திருமதி அமுர்தவல்லி மற்றும் திருமதி சித்ரா அவருக்கு சிறிய பரிசை அளித்தனர். நிகழ்வின் துவக்கத்தில் வெண்முரசு கூடுகை நண்பர் தாமரைகண்ணனின் நேர்காணலில் திரு.வளவதுரையன் குறித்த ஆவண படம் மறுதிரையிடப்பட்டது. பின்னர் அவரது இளமை காலம் குறித்த செய்திகளை நண்பர்நாகராஜனும், அவரின் இலக்கிய பங்களிப்பு, இலக்கிய உலகில் அவருக்கான இடம் என்ன என்பது குறித்து கடலூர் சீனுவும் பேசினார். அமர்வின் இறுதியில் உங்களின் பிறந்நாள் கொண்டாட்டதை ஒட்டி திரு.வளவதுரையன் எழுதிய சிகரங்கள் புத்தகத்திற்கு “மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்” என நீங்கள் எழுதிய முன்னுரையை சிறிய நூலாக நண்பர் திரு. நாகராஜன் வெளியிட்டார்.

அந்த முன்னுரை ஒட்டுமொத்த இலக்கியத்தை அந்தந்த காலகட்டத்தில் இருந்த அவற்றைப் பற்றிய புரிதல் மற்றும் அதன் ஏற்பின் வகை என்ன என மிக விரிவாக சொல்லி வந்து அதில் திரு.வளவதுரையன் அவர்களின் ஆக்கம் மற்றும் அவரது பங்களிப்பு மற்றும் இடம் பற்றிய மிக வரிவான குறிப்புகளை கொடுத்திருந்தீர்கள். செவ்வியல் பற்றிய அவதானிப்புகளில் இருந்து ஒரு சமூகம் தன் அடிப்படை என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பது பற்றி தீர்மானித்துக் கொள்ளவும் ஒவ்வொரு புதிய கலாச்சார இயக்கம் உருவாகும் போதும் அந்த காலகட்டங்களில் தன்னில் எது “செவ்வியல் இலக்கியம்” என்கிற கேள்வியை உருவாக்கி அதை வரையறை செய்து நகர்வதை பற்றி மிக விரிவான சித்திரத்தை கொடுத்திருந்தீர்கள்.

புதுவை வெண்முரசுஒவ்வொரு காலகட்டத்தில் அது வளர்ந்து வருவது பற்றி சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு இயக்கமும் வளர்தளின் பொருட்டு ஆக்கபூர்வமாக முன்னகர்ந்து கொண்டே இருக்கிறது. அதில் சில சமயங்களில் திட்டமிடப்படாமல் அதன் மைய ஓட்டம் தனது வழியை தானே தேர்கிறது. அனைவரையும் இணைக்கும் ஒரு மையக் கரு அதற்கான காரணமாக இருக்கிறது. எதையும் துவங்குவது எளிது தொடர்வது கடினம். தொடர முடியாத ஒன்றை துவங்காது இருப்பது நல்லது என நினைப்பவன். என்றாலும் இம்முறை அதன் போக்கிற்கு நகரும் சிலவற்றை ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருப்பது போதுமானதாக என இருந்து விடுவதுண்டு. எழுத்தாளர் ஜெயமோகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அப்படி அதன் போக்கிற்கு உருவாகி அனைவரையும் உள்ளிழுத்து கொண்டு தனது பயணத்தில் இருப்பதைத் தான் ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

2023 எனது தங்கைமகள் திருமணத்தின் போது “ஜெ”யின் குமரித்துறைவி புத்தகம் திருமண பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என முன்வைத்த போது அது துவங்கியது. இதில் விந்தை பல பதிப்புகளை கண்ட பிறகு “குமரித்துறைவியின்” முறையான நூல் வெளியீடாக அது நிகழ்ந்தது. நண்பர் கடலூர் சீனு அதை வெளியிட்ட பெருமைக்குறியவர்.

இரண்டாவது வருடம் 2024 தனது 25 வது திருமணநாள் “ஜெ” யின் பிறந்தநாளில் வருவதை ஒட்டி இலக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் திட்டமும் அதற்கான சிறிய நிதியையும் வழங்கி துவக்கி வைத்த கூடுகை உறுப்பினர் அமுர்தவல்லி எண்ணப்படி இளம் எழுத்தாளர் திரு.அரிசங்கர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. 

பின்னர் அவருடன் இணைவதாக சொல்லி முன்வந்த பிறிதொரு உறுப்பினர் சித்ரா கொடுத்த மற்றொரு சிறிய தொகையுடன் இணைந்து அனைத்து கூடுகை உறுப்பினர்கள் பங்களிக்க இந்த முறை கலை இலக்கிய பண்பாட்டு செயல்பாடு என களம் விரிந்த போது யாரை தெரிவு செய்வது என திட்டமிட்டு பின்னர் திரு.வளவதுரையன் என முடிவானதும் “இது நமக்கு நாமே வழங்குவதாகாதா” என கேள்வி முன்வைக்கப்பட்ட பிறகும் பண்முக செயல்பாட்டாளர் திரு.வளவதுரையன் அவர்கள் அந்த வரையறையில் வரமாட்டார் என்கிற புரிதலுடன் இந்தவருட “ஜெ” பிறந்தநாள் ஒட்டி அவரை கௌரவிக்கும் வாய்ப்பை புதுவை வெண்முரசு கூடுகை அடைந்தது. 

இரண்டாவது அமர்வில் நண்பர் சித்ரா அவர்கள் வெண்முரசின் நாவல் வரிசையில் வெய்யோனின் “கூற்றெனும் கேள்” இறுதி பகுதி பற்றிய தனது எண்ணத்தை வழக்கம் போல தயக்கமற்ற பேச்சில் முன்வைத்தார் கூடுகை நண்பர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களை முன்வைக்க இறுதியில் கடலூர்சீனு பேசி நிகழ்வை நிறைவு செய்தார். 

நன்றி 

ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.