காவியம் – 5
(சாதவாகனர் காலம், பொயு 1 ஆம் நூற்றாண்டு சுடுமண்காலம். தாய்த்தெய்வங்கள்)
என் அப்பா மிட்டாலால் பைதானி ராணுவத்தில் வேலைபார்த்தார். அவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தவர். எங்கள் பங்கிகள் சமூகத்தில் அன்று அது மிகப்பெரிய படிப்பு. தொன்மையான இந்த பைத்தான் நகரில், இடிந்துகுவிந்த பழைய கட்டிடங்கள் இருபுறமும் மண்டிய புழுதி இளகிய தெருக்கள் சென்றுசேரும் கோதாவரியின் கரையில், ஒரு மழையில் சேறாகிவிடும் புழுதிப்பரப்பில், முள்மரங்களுக்கு நடுவே இருந்த தகரக்கூரையிடப்பட்ட சிறிய வீடுகளில், மலம் அள்ளியும் பன்றிகளை மேய்த்தும் வாழும் மக்களில் பிறந்த ஒருவர் ஐந்து வயது முதல் தினம் பன்னிரண்டு மணிநேரம் உழைத்தாகவேண்டும். அவர் படித்ததற்கு ஒரே காரணம் அவருக்கு அப்பா இல்லை என்பதுதான்.
என் அப்பாவின் அப்பா சூர்தாஸ் அப்பாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது காய்ச்சலில் இறந்தார். அவர் அம்மா மறுபடியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தார். எங்கள் சாதியில் குழந்தைகளை தந்தையர் பணம் ஈட்டித்தரும் விலங்குகளாகவே பார்த்தனர், பன்றிகளைப் போல. அவற்றுக்கு உணவு என்று எதுவும் அளிக்கவேண்டியதில்லை. தேவையானபோது பிடித்து கால்களை கட்டித் தூக்கிச் சென்று விற்கலாம். குழந்தைகளுக்கு உணவளிக்கும் வழக்கமே இருக்கவில்லை. அவை ஊர் முழுக்க அலைந்து ஆணையிடப்படும் எல்லா வேலைகளையும் செய்து கிடைத்ததைத் தின்று வாழும். ஆறேழு வயது ஆனதுமே எவருக்காவது அடிமைவேலைக்கு விற்றுவிடலாம். ஒரு குழந்தையை விற்ற பணம் ஒரு மாதம் வேலையே செய்யாமல் குடிப்பதற்கு போதுமானது.
ஆனால் என் பாட்டி என் அப்பாவை பள்ளிக்கு அனுப்பினாள். அவளுக்கும் படிப்பு என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் படித்தால் தலையில் வெண்ணிறக் குல்லா வைக்கமுடியும், வெள்ளை நிற பைஜாமாவும் சட்டையும் போடமுடியும், செருப்பு போட்டு சாலையில் நடக்க முடியும் என்று அவள் நினைத்தாள். அரசு அளித்த இலவச உணவுதான் என் அப்பாவை படிக்கச் செய்தது. இருட்டு விலகாத அதிகாலையில் எழுந்து ஊருக்குள் துப்புரவுப் பணிக்கு செல்லும் என் பாட்டிக்கு அப்பாவுக்கு உணவு அளிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. மாலையில் அவள் வீடுதோறும் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து சமைப்பதுதான் வீட்டில் உண்ணும் உணவு .
அப்பா காலையில் எழுந்து பன்றிகளை திறந்துவிட்டுவிட்டு அவரே கிளம்பி பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் மதிய உணவுக்கு மணி அடிப்பது வரை பசித்திருந்தார். அவர் படிப்பில் பேரார்வம் கொண்டிருந்தவர். ஆனால் ஒரு செவி பகல் முழுக்க அந்த மணியோசைக்காக காத்திருந்தது. மாவுகிண்டி பசை போல அளிக்கப்படும் அந்தப் பொருள் அந்த வயதில் அவருக்கு அத்தனை சுவையுடன் இருந்தது. எப்போதும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுண்டு. அவர் என்னிடம் இனிதாகப்பேசிய ஒரே விஷயம் அது மட்டுமே. சுருட்டை ஆழ இழுத்து, இருமி இருமி துப்பியபடி “அது ஒரு காலம். அன்றெல்லாம் அத்தனை பசி” என்று எந்த தனக்குத்தானே சொல்வதுபோல சொல்லிக்கொள்வார்.
பள்ளிப்படிப்பை முடித்ததுமே அப்பா ராணுவத்தில் சேர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே அவரை அடிமைவேலைக்கு வாங்க பலர் என் பாட்டியிடம் பேரம் பேசினார்கள். என் பாட்டி ஆங்காரம் கொண்டு காறித்துப்பியும் மண்ணை வாரி வீசியும் அவர்களை விரட்டினார். அப்பா மலம் அள்ளும் துடைப்பத்தை கையால் தொடாமல் வாழவேண்டும் என்று பாட்டி கனவுகண்டார். மலம் அள்ளும் துடைப்பத்தில் ஜ்யேஷ்டாதேவி வாழ்கிறாள். பங்கிகளுடன் நிழல்போல உடனிருக்கும் தெய்வம். அழுக்கின், நாற்றத்தின், நோயின் தலைவி. அவளிடமிருந்து அவர் தப்பவேண்டும். “காலையில் எழுந்ததுமே குளிப்பவன்தான் மனிதன். என் மகன் குளித்துவிட்டுச் செய்யும் வேலைக்குப் போகவேண்டும்.” என்று பாட்டி சொன்னாள். “அவன் மேல் சாக்கடை படவேகூடாது…அதற்காக நான் யாரை வேண்டுமென்றாலும் சிரித்துக்கொண்டே கொல்வேன்”
என் அப்பா ஆண்டு முழுக்க ஒரே காக்கி அரைக்கால் சட்டையும், காக்கிச் சட்டையும் அணிந்துகொண்டு செருப்பில்லாமல் நடந்து பள்ளிக்குச் சென்று வந்தார். அவர் எவர் முன்னாலும் அமர்வதில்லை, எந்தக் கூட்டத்திலும் சேர்வதுமில்லை. ஊரின் எந்த அறியப்பட்ட முகத்தைக் கண்டாலும் ஒளிந்துகொள்வார். ஆயினும் அவருக்கு ஒவ்வொரு நாளும் சிறுமைகள் நிகழ்ந்தன. அவர் பள்ளியில் படிக்கிறார் என்று தெரிந்தமையாலேயே அவரை அப்படி நடத்தினர். அவரை செருப்பைத் தூக்கி வரும்படி ஆணையிட்டனர். பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே பெரிய வீட்டுக்காரர்கள் சொன்னால் அவர் சட்டையைக் கழற்றிவிட்டு சாக்கடையைத் தூர்வாரினார், மலக்குழிகளை தூய்மை செய்தார்.
அந்த அழுக்கு ஆடையுடன் பள்ளிக்குச் சென்று பங்கிகளுக்கான தனி பெஞ்சில் அமர்ந்து பயின்றார். பங்கிகளுக்கான தனி வரிசையில் நின்று மதிய உணவை உண்டார். பங்கிகளுக்கான தனிப்பானையில் நீர் அருந்தினார். அவருடைய நோட்டுப்புத்தகங்களை தனியாக வைக்கும்படி ஆசிரியர்கள் ஆணையிட்டனர். அவற்றின்மேல் நீர் தெளித்தபின்னரே எடுத்துக்கொண்டனர். பள்ளியின் கழிப்பறைகளை அவரும் அவரைப்போன்ற மாணவர்களும்தான் கழுவினார்கள். பள்ளியிலும் உயர்குடி மாணவர்கள் அவருக்கு வேலைகளை ஏவினர். அவர்களின் பொருட்களை, குறிப்பாக உணவுப்பாத்திரங்களை மறந்தும் தொட்டுவிடக்கூடாது.
கணித ஆசிரியர் ஸ்ரீராம் ஜோஷி மட்டுமே அவரை மனிதனாக நடத்தினார். அவருடைய நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைப்பதற்காக அவர் ஒரு காந்தி படத்தை அளித்தார். அப்பா தன் இளமைக்காலம் முழுக்க எல்லா நோட்டுப்புத்தகங்களிலும் காந்தி படத்தை வைத்திருந்தார். தன் வீட்டின் மரக்கதவில் காந்தி படத்தை ஒட்டி வைத்திருந்தார். காந்தியின் படத்தை பென்சிலால் வரைவது அவர் உள்ளம் ஒன்றிச் செய்யும் பொழுதுபோக்காக் இருந்தது. ஆனால் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கூட அவரும் அவரைப் போன்றவர்களும் தனியாகத்தான் நின்றனர். அவர்களுக்கு இனிப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.
பள்ளிநிறைவுக்குப்பின் ஸ்ரீராம் ஜோஷி அவரிடம் மேலும் படிக்கும்படியும், அவருக்கு அரசு உதவித்தொகை கிடைக்கும் என்றும் சொன்னார். ‘இல்லை, இதற்குமேல் நான் ஊரில் வாழமுடியாது’ என்று என் அப்பா சொல்லிவிட்டார். எங்கள் சாதியில் தன்மானத்தை காத்துக்கொள்வதற்கு இருந்த ஒரே வழி ராணுவத்தில் சேர்வதுதான். ஔரங்காபாதில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் செய்தியை அவரைப்போன்ற சமர்களில் ஒருவன் தான் சொன்னான். அப்பா அவனுடன் சென்று இரவெல்லாம் காத்துக்கிடந்து மறுநாள் ராணுவத்துக்குப் பெயர்கொடுத்தார். அவரை சேர்த்துக்கொண்ட சிமன்லால் எங்களைப் போன்ற சாதியைச் சேர்ந்தவர். எங்கள் சாதியைச் சேர்ந்த அனைவரையுமே அவர் ராணுவத்தில் சேர்த்துக்கொண்டார்.
அப்பா வீடு திரும்பவில்லை. அப்படியே ராணுவத்திற்குச் சென்றார். ’உங்கள் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்’ என்று சிமன்லால் சொன்னார். ’வீட்டில் இருந்து எடுத்துக்கொள்ள ஏதுமில்லை, சொல்லிவிட்டே வந்தேன்’ என்று என் அப்பா சொன்னார். ஔரங்காபாதில் இருந்து ராணுவ வண்டியில் நாசிக்குக்குக் கிளம்பிச் சென்றபோது அவர் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. இனியவையும், சிறந்தவையுமான எல்லாமே இனிமேல் வரவிருக்கும் ஊர்களில் நிறைந்திருக்கின்றன. இனி ஒரு போதும் பன்றிகளும் சாக்கடைகளும் கொண்ட பைத்தானுக்கு திரும்பப் போவதில்லை. இனி சாக்கடையை தொடப்போவதில்லை.
ராணுவத்திலும் பங்கிகள் பங்கிகள்தான். ஆனால் அவரைப் போன்றவர்கள் ஏராளமாக இருந்தார்கள். மகர்கள், சாம்பர்கள், சமர்கள். அவர்கள் ஒன்றாகக் கூடி தங்களுக்குள் ஒரு சிறு சமூகமாக ஆக முடிந்தது. அங்கே ஒருவரை ஒதுக்கலாம், அவமதிக்க முடியாது. அடிபணிய ஆணையிடமுடியாது. அப்பா ராணுவத்தில் நுழைந்த அன்று அவருக்கு சீருடைகளும் பூட்ஸுகளும் அளித்தார்கள். அப்பாவுக்கு கிடைத்த முதல் புதிய ஆடை அது. அதன் முறுக்கமும் பசைமணமும் அவரை பித்துப்பிடிக்கச் செய்தன. புதுமழையின் மண்மணத்தில் எருமைக்குட்டிகள் துள்ளிக்குதிப்பது போல அவர் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்தார். முகர்ந்து முகர்ந்து மகிழ்ந்தார். நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர்விட்டார்.
அவருக்கு அளிக்கப்பட்ட ராணுவச்சப்பாத்துக்கள் பழையவை, ஆனால் மெழுகுதேய்த்து கன்னங்கரிய ஒளியுடன் இருந்தன. அவர் இரண்டு அல்லது மூன்று சாக்ஸ்களைப் போட்டுக்கொள்ளாவிட்டால் அவற்றுக்குள் அவருடைய கால்கள் தனியாக அசைந்து வழுக்கும். அவற்றை முதலில் போட்டுக்கொண்டபோது அவர் கால்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ள, தடுக்கி தடுக்கி விழுந்தார். ஆனால் இரவும் பகலும் அவர் முகாமில் நடந்துகொண்டிருந்தார். இரண்டே நாட்களில் அவை அவருடைய கால்களாகவே ஆகிவிட்டன. அவற்றை போட்டுக்கொண்டு நடக்கையில் எழுந்த ஒலிதான் அவர் தன்னைப்பற்றி எண்ணி தானே மகிழ்ந்துகொண்ட முதல் விஷயம்.கடைசி வரை அப்பா கெட்டியான அடிப்பக்கம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்தார். அவை ஓசையிடவேண்டும் என விரும்பினார்.
ராணுவச்சப்பாத்துக்களை உயிருள்ளவை போலவே அப்பாஎண்ணினார். தனக்கு இணையான, அல்லது தன்னைவிட மேலான துணையாக அவற்றை கருதினார். கால்களில் போடாதபோது அவற்றை அருகே வைத்திருப்பார். இரவில் படுக்கையருகே வைத்துக்கொள்வார். இரவில் தூக்கம் விழித்தால் அதை மெல்ல தடவிக்கொடுப்பார். ஒவ்வொரு நாளும் அவற்றை மெருகேற்றினார். ஒரு துணியால் சற்று புழுதி படிந்தாலும் துடைத்தார்.
“மிட்டாவின் சப்பாத்துக்கள் எப்போதும் மெருகுடன் இருக்கின்றன” என்று ஹவல்தார் ஹரிநாராயண் ரானே சொன்னார். அப்போது அவர் முகத்தில் இருந்த கோணலான புன்னகையின் பொருளை அனைவரும் அறிந்திருந்தனர்.
அப்பா “எஸ் சர்” என்றார்.
“புழுதிபடியாமலேயே அவை இருக்கமுடியாது…” என்று கண்களை இடுக்கிக்கொண்டு ஹவல்தார் ரானே சொன்னார்.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அன்று முதல் பல மாதகாலம் ஒவ்வொரு நாளும் காலையில் செம்புழுதி மண்டிய மைதானத்தில் ரைஃபிளை தலைக்குமேல் தூக்கியபடி அப்பா நூறு தடவை ஓடி சுற்றிவந்தார். ஆனால் வந்து அமர்ந்ததுமே பைக்குள் இருந்து துணியை எடுத்து துடைத்து அவற்றை ஒளிரச் செய்தார்.
அவர் ஓடி முடித்து அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்த ரானே “தே ஆர் ஸ்டில் ஷைனிங் மிட்டா” என்றார்.
“யெஸ் சர், ஆல்வேய்ஸ் சர்” என்றார் அப்பா.
அதன் பின் அவர் அப்பாவிடம் ஏதும் பேசவில்லை, அந்த தண்டனையும் நிறுத்தப்பட்டுவிட்டது. மெல்ல அப்பாவிடம் ரானே கொஞ்சம் நெருக்கமானவராகவும் ஆனார். எப்போதோ ஒருமுறை குடித்துக்கொண்டிருக்கும்போது ”ராணுவம் ஆண்களுக்குரியது, மிட்டாலால் போல” என்று சொன்னார்.
அப்பாவின் பெயர் தந்தை பெயர் கிஷன் தாஸ். ஆகவே அவர் கே. மிட்டா லால். உண்மையில் அவருடைய பெயர் மிட்டா அல்லது மிட்டி மட்டும்தான். அவரை பள்ளியில் சேர்த்துக்கொண்ட ஆசிரியர்தான் தன் விருப்பப்படி லால் என்று சேர்த்துக்கொண்டார். அவருக்கு அடுத்துவந்த மாணவன் பெயரை தாஸ் என்று சேர்த்துக்கொண்டார். அத்தனைபேருக்கும் அவர்தான் பெயரை உருவாக்கினார். சிலருக்கு புதிய பெயர்களையே போட்டார்.
அப்பா ராணுவத்தில் பெயர் கொடுக்கும்போது அவருக்கு முன் நின்றவர்கள் தங்கள் பெயர்களைச் சொன்னபோது பெயரை எழுதிக்கொண்டவர் கூடவே இரண்டாம் பெயர் கேட்டார். தந்தை பெயரே இரண்டாம் பெயராக இருந்தால் போதும். ஆனால் பெயர் எழுதிய மகான் சிங் அலுவாலியா இன்னொரு பெயரும் தேவை என வலியுறுத்தினார். பெரும்பாலானவர்கள் இன்னொரு பெயர் சொல்ல திணறியபோது அவரே அவர்களின் சாதியைக் கேட்டு அறிந்துகொண்டு வால்மீகி என்று சேர்த்துக்கொண்டார். அப்பாவின் முறை வந்தபோது அவர் தன் ஊர்ப்பெயரைச் சொன்னார். பைத்தானி.
அப்பா ராணுவத்தில் சேர்ந்தபின் மீசை வைத்துக்கொண்டார். மீசை அடந்து வளர்வதற்காக தினமும் இருமுறை சவரம் செய்தார். இரவு தூங்கும்போது மேலுதட்டில் எண்ணை பூசிக்கொண்டார். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அப்பா பைத்தானுக்கு திரும்பி வந்தார். மீசை முளைக்காமல் வரக்கூடாது என்று உறுதிகொண்டிருந்தார். கரிய மெழுகுடன் சேர்த்து இறுக்கமாக முறுக்கி மேலேற்றிவிட்ட மீசையுடனும், மின்னும் சப்பாத்துகளுடனும், ராணுவச்சீருடையுடனும், பச்சைநிறமான பெரிய தகரப்பெட்டியைச் சுமந்தபடி சுமைதூக்கிச் சிறுவன் பின்னால் வர அவர் நடந்து தன் குடிலை நோக்கிச் சென்றார்.
அப்பா ராணுவத்தில் இருந்து பழைய 303 ரைபிளை கேட்டு வாங்கி கொண்டுவந்திருந்தார். பங்கிகளும் சமர்களும் மகர்களும் அப்படி வெடிக்காத பழைய ரைஃபிள்களை கேட்டு வாங்கி கொண்டுசென்று விடுமுறையை முடித்துவிட்டு வரும் வழக்கம் வெள்ளைக்காரர்களின் காலம் முதலே ஏற்கப்பட்டு விட்டிருந்தது. ராணுவ வீரனை எவரும் வேலை ஏவக்கூடாது, எவரும் தாக்கக்கூடாது. அது ராணுவத்திற்கே அவமதிப்பு என்று ராணுவத்தில் இருந்த பிராமணர்களும் தாக்கூர்களும் கூட உறுதியாக இருந்தனர்.
பலநூறு கைகளால் ஏந்தப்பட்டு மென்மையாகி, மனிதத்தோல் போலவே மாநிறத்தில் மின்னிக்கொண்டிருந்த தேக்குக்கட்டை கொண்ட ரைஃபிள் அது. நன்கு தேய்த்து எண்ணையிடப்பட்ட இரட்டைக்குழல்கள் மின்னிக்கொண்டிருந்தன. குண்டுகளைக் கொண்டுவர அவருக்கு அனுமதி இருக்கவில்லை. ஆனால் அவர் செல்லும் வழியில் ஊர்க்காரர்கள் திகைத்த கண்களுடன் பார்த்தனர். அவருடைய சாதியைச் சேர்ந்தவர்கள் தவிர எவரும் அவரை பார்த்ததாக காட்டிக்கொள்ளவோ ஓரிரு சொற்களேனும் சொல்லவோ செய்யவில்லை.
அப்பா அந்த ரைஃபிளை சாய்த்து வைத்துவிட்டு ஷிண்டேயின் டீக்கடையில் பெஞ்சில் அமர்ந்து ஒரு டீ சொன்னார். அங்கே அமர்ந்திருந்தவர்கள் இயல்பாக எழுவதுபோல எழுந்து விலகினர். ஷிண்டே அளித்த டீயை அவர் நிதானமாகக் குடிப்பதை அத்தனை பேரும் பிரமித்த கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர் எழுந்து விலகியதும் அவர்கள் உடலின் இறுக்கம் தளர்ந்து எளிதாக ஆனார்கள். ஷிண்டே அந்த கண்ணாடிக் கோப்பையை எறிந்து உடைத்தான். அந்த பெஞ்சை தண்ணீர்விட்டு கழுவினான். அப்போது அவன் துப்பிக்கொண்டே இருந்தான்.
அப்பா வந்தது திருமணம் செய்துகொள்வதற்காக. அவருக்காக அவர் அம்மா பெண் பார்த்திருந்தாள். அதற்கு முன் அவர் அனுப்பிய பணத்தால் ஓடு வேய்ந்த இரண்டு அறைகளும் சமையலறையும் திண்ணையும் கொண்ட சிறு வீட்டை குடில் இருந்த இடத்திலேயே கட்டியிருந்தாள். அம்மாவின் அப்பா வந்து பார்த்தபோது அந்த வீட்டைக் கண்டதுமே அம்மாவை பெண்கொடுக்க முடிவுசெய்துவிட்டார். என் அம்மாவை அப்பா சீதளை அன்னையின் கோயில் முகப்பில் வைத்து கருகுமணித்தாலி அணிவித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்மா நல்ல செம்மஞ்சள் நிறம். மெல்லிய சிறிய உடல். கூர்மையான முகமும், சிறிய உதடுகளும் கொண்டவள். என் அப்பா அம்மாமேல் பெரும் காதலுடன் இருந்தார். விடுமுறை முடிந்து திரும்பி ராணுவத்திற்குச் செல்லும்போது அழுதார். பெரிய கரிய மீசையுடன் அவர் அழுததை என் அம்மா நீண்டநாட்கள் சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
என் அம்மா அந்த பகுதிக்கே ஒளியைக் கொண்டுவந்தாள் என்று அவளைவிட மூத்த பெண்கள் பலர் சொல்லி சிறுவயதில் கேள்விப்பட்டிருந்தேன். அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால் எத்தனைநேரம் வேண்டுமென்றாலும் பாடமுடியும். பண்டிகைகளில் அவள் பாட ஆரம்பித்தால் விடிவதுதான் கணக்கு, அவளுடைய பாட்டு முடிவதே இல்லை. நாலைந்து எருமைகளை வாங்கிவிட்டாள். பால் கூட்டுறவு நிறுவனங்கள் வந்துவிட்டதனால் பங்கிகளிடமிருந்தும் பாலை வாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். என் அம்மாவிடம் எப்போதுமே கொஞ்சம் பணம் இருந்தது. தேவையானவர்களும் எப்போதும் முகமலர்ச்சியுடன் கொடுப்பவளாகவும் இருந்தாள். ஆகவே எல்லா பெண்களாலும் விரும்பப்பட்டாள். அவளைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருப்பதையே நான் பார்த்திருக்கிறேன்.
அப்பாவைப் பற்றிய என் நினைவுகள் மங்கலானவை. அவர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வந்தார். வந்தால் ஒரு மாதம் இருந்துவிட்டுச் செல்வார். அப்பாவின் அம்மா இறந்தபோதுதான் வந்துவிட்டு உடனே திரும்பிச் சென்றார். அப்பா என்பது எனக்கு விந்தையான துண்டுத்துண்டு நினைவுகள்தான். முற்றிலும் புதிய ஒருவர் எங்கிருந்தோ வந்து வீட்டில் தங்க ஆரம்பிக்கிறார், அவரை அஞ்சி நான் ஒதுங்கிக்கொள்ள அவர் என்னை அதட்டுகிறார். எனக்கு ஆணையிடுகிறார். என் மேல் அன்பேதும் காட்டுவதில்லை, ஆனால் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறார்.
என்னை அவர் ஆண்களுக்குரிய உலகுக்கு அழைத்துச்செல்கிறார். டீக்கடைகள், பீடாக்கடைகள், ஆற்றங்கரையின் சீட்டாட்ட இடங்கள். வீட்டில் இருந்து புட்டியில் எண்ணையுடன் கோதாவரிப் படிக்கட்டுக்குச் சென்று அனுமன் கட்டத்தில் உடலெங்கும் எண்ணை பூசி வழித்து உருவிக்கொள்கிறார். எனக்கு அவரே எண்ணை பூசிவிடுகிறார். ஆற்றில் பாய்ந்து நீந்த கற்றுத்தருகிறார். நான் எப்போதும் ஆற்றின் விளிம்பில் இருந்து அப்பால் செல்வதில்லை. என்னை மையப்பெருக்கு வரை கூட்டிச்செல்கிறார்.
அவருடைய வாசனைகள் அறிமுகமாகின்றன. எப்போதும் அவரிடமிருப்பது சுருட்டின் எரியும் புகையிலை வாசனை. அந்தியில் அவர் தன் பச்சைநிற தகரப்பெட்டியில் இருந்து எடுக்கும் நீளமான புட்டியில் இருக்கும் திரவத்திற்கு அழுகும் பழங்களின் எரியும் வாடை. அதன் பின் அவர் மேலும் கனிந்தவராகவும் கொஞ்சம் கோமாளியாகவும் ஆகிறார். உடைந்த குரலில் பாட்டுப்பாடுகிறார். என்னை அருகே அழைத்து என் மெலிந்த கைகளையும் தோள்களையும் பற்றிக்கொண்டு அன்பாகப்பேசுகிறார். அம்மா சலிப்புடன் சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறாள். ஒரே ஒருமுறை அவர் அந்த இளம்பழுப்பு திரவத்தில் கொஞ்சம் எனக்கு விட்டுத்தர முயன்றபோது மட்டும் சீற்றத்துடன் வந்து என்னை இழுத்துச்சென்றுவிட்டாள்.
ஆனால் அப்படியே அவர் மறைந்துபோய், என் நினைவிலிருந்தும் அழிந்து, இன்னொரு காலத்தில் என் வாழ்வுக்குள் நுழைபவர் இன்னொரு மனிதர். எனக்கு முந்தைய மனிதருடன் அவரை இணைக்க முடிந்ததே இல்லை. அவர் மாறியிருக்கலாம், நான் அதைவிட மாறியிருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவர் கொண்டுவரும் கம்பிளிகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிலேயே கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தேன். அவர் வந்த பின் என் வீடு மெல்ல மாற்றமடைவதில் ஒவ்வாமையும் கொண்டிருந்தேன். அவர் சென்றபின் மெல்லிய நிம்மதியை அடைந்தேன். ஆனால் வீட்டின் சுவரில் இருந்த ராணுவச்சீருடையில் இருக்கும் அவருடைய புகைப்படம் எனக்கு எப்போதுமே பிடித்திருந்தது.
நான் வளர்ந்த பின்னர், பள்ளியில் எனக்கான ஒரு வட்டம் உருவான பிறகு, எனக்கு அவருடன் நெருங்க முடியவில்லை. விடுமுறைக்கு வந்து தங்கிச்செல்லும் இரண்டு மாதகாலமும் அவரிடம் இருந்து விலகியே இருந்தேன். வீட்டில் அவருடன் நான் இருக்கும் பொழுதும் குறைவு. நான் காலையில் பள்ளிசெல்லும்போதுதான் அவர் எழுவார். நான் மாலையில் வரும்போது அவர் இருப்பதில்லை. இரவில் புதியதாகக் கண்டடைந்த குடித்தோழர்களுடன் போதையில் வந்துசேர்வார். நாங்கள் ஓரிரு சொற்கள் கூட பேசிக்கொள்ளாமலேயே விடுமுறைகள் முடிந்தன.
வந்து வந்து சென்றுகொண்டிருந்த அப்பா நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது நிரந்தரமாக திரும்பி வந்தார். ஓய்வுபெற்றபின் ஊருக்கு வந்து தங்கிய அவர் அதன்பின் ஆறு ஆண்டுகள்தான் உயிருடன் இருந்தார். அவரை இன்னமும்கூட கண்டுபிடிக்கப்படாத கொலையாளிகள் கொன்றுவிட்டனர். அவர் இறந்த பன்னிரண்டாம் நாள் சடங்கு முடிந்த அன்று இரவில்தான் அம்மா அவள் பாட்டி அவளுக்குக் காட்டித்தந்த அந்த துயர்மிகுந்த பிசாசை மூன்றாம் முறையாகக் கண்டாள்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

