காவியம் – 6

தாய்த்தெய்வம், சாதவாகனர் காலம், பொயு 1, பைதான் அருங்காட்சியகம், சுடுமண் சிற்பம்.

பங்கிகள் என்றால் குறைபட்டவர்கள், உடைந்த சிறு துண்டுகள் என்று பொருள். நாங்கள் உடைந்த ஆத்மா கொண்டவர்கள் என்று எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் கீர்த்திலால் தேஷ்முக் சொன்னார். உடைந்த ஆத்மாக்களைக் கொண்டிருப்பது ஒரு பெரிய வசதி. எங்களுக்கு எங்கள் தெய்வமாகிய சீதளை ஒரு வரம் தந்தாள். நாங்கள் எந்த அழுக்கையும் தொடலாம், எந்த மலினத்திலும் துழாவலாம், எதுவும் எங்களுக்குத் தீட்டு ஆவதில்லை. “உடைந்த பொருளால்தான் அழுக்கை வழித்து எடுப்போம் இல்லையா?” என்றார் கீர்த்திலால்.

“நான் எதையும் குறையாகச் சொல்லவில்லை. உடைந்திருப்பது ஒரு வகையில் நல்லது. முழுமையான ஆத்மா கொண்டவர்களின் பொறுப்புகள் ஏதும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறம் செய்யவேண்டியதில்லை, வேள்விகள் செய்யவேண்டியதுமில்லை. தேசம், ஊர், மதம் எதற்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அறியாமை அவர்களுக்கு பாவம் அல்ல. அவர்கள் சமூகத்தின் குழந்தைகள் போல. சமூகம்தான் அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூகம் அவர்களை இடுப்பில் தூக்கி வைத்திருக்கிறது.”

அவர் கண்களில் இருந்த சிரிப்பு எனக்கு மட்டும் தெரியவில்லை. மொத்த வகுப்புமே புன்னகைத்துக் கொண்டிருந்தது. எங்களைப் போன்றவர்கள் ஏழுபேர் வகுப்பில் இருந்தோம். நாங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். அப்படி தலைகுனிந்து அமர்ந்து பழகிவிட்டிருந்தோம். மிக எளிதில் அதில் இருந்து வெளியே வந்துவிடவும் எங்களால் இயன்றது. ஏனென்றால் எங்கள் அன்றாடம் கடினமானது, ஒவ்வொரு நாளிலும் சவால்கள் கொண்டது. முயல்கள் போன்ற சிற்றுயிர்கள் காட்டில் எக்கணமும் முழு விழிப்புடன்தான் இருந்தாகவேண்டும்.

எங்கள் கதைகளில் எங்களைப் பற்றி இன்னும் இழிவாகவே சொல்லப்பட்டிருந்தது. சமூகம் என்ற வார்த்தை. அதை சிறுவயதில் கிழவர்கள் சொல்லிக் கேட்கையில் நான் ஒரு அப்பளம் போன்று மென்மையான, கண்ணாடி போன்று ஒளிவிடக்கூடிய, வானில் மிதக்கக்கூடிய ஒரு பொருளாகக் கற்பனை செய்துகொண்டேன். சமாஜம் சமாஜம் என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருப்பேன். அழகான ஒன்று. ஆனால் மிகக்கூர்மையான உடைந்த முனைகொண்டது, அபாயமானது. ஏனென்றால் அது உடைந்திருக்கிறது. முன்பொரு காலத்தில் பிரம்மா மக்களை ஒரே சமாஜமாகத்தான் படைத்தார். அதில் இருந்து உடைந்து மண்ணில் விழுந்த துண்டுதான் பங்கிகள். அவ்வாறுதான் அவர்களுக்கு அப்பெயரே வந்தது.

சமாஜம் முன்பு மேகம்போல வானில் பறந்துகொண்டிருந்தது. மனிதர்களுக்கெல்லாம் வெண்ணிறமான சிறகுகள் இருந்தன. பிரம்மாவிடம் அவர்கள் தங்களுக்கும் தேவர்களைப்போல அமுதத்தை உண்ணும் உரிமை தேவை என்று கோரினார்கள். பிரம்மா அவர்களுக்கு ஒரு சோதனை வைத்தார். அவர்கள் நூறாண்டுக்காலம் உணவில்லாமல் நோன்பு இருக்கவேண்டும். பசியை எவர் தாங்கிக்கொள்கிறார்களோ அவர்களுக்கே அமுதம் சொந்தம். நூறாண்டு நோன்பு தொடங்கியபோது ஒவ்வொருவராக பசி தாளமுடியாமல் நோன்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியாக பிரம்மாவால் வகுக்கப்பட்டனர். நூறாண்டு நோன்பை வென்றவர்கள் பிராமணர்களானார்கள்.

தாங்களும் நூறாண்டு நோன்பை முடித்துவிட்டதாக சிலர் பிரம்மாவிடம் பொய் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் பசிதாளாமல் காமதேனுவின் குட்டிகளில் ஒன்றாகிய நந்தினியை ரகசியமாகக் கொன்று தின்றிருந்தார்கள். அவர்களை பிரம்மா சாபம் போட்டு சமாஜத்தில் இருந்து உடைத்து அப்பால் வீசினார். பிறருடைய கழிவுகளை அள்ளித்தான் அவர்கள் வாழவேண்டும் என ஆணையிட்டார். அவர்களே பங்கிகள். பங்கம் வந்தவர்கள். திரும்பத் திரும்ப எங்கள் சாதியிலேயே ஏதோ ஒரு கிழவர் இந்தக்கதையைச் சொல்வார்கள். அதை எந்த சந்தேகமும் இல்லாமல் பிறர் கேட்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு நிறைவு இருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுக்கான பதில் அது. அப்படி ஒரு பதில்போதும்.

அதற்கப்பால் ஒன்றும் இருந்தது. “பிற சாதியினர் அவர்கள் செய்யும் பிழைகளுக்குக் கழுவாய் செய்யவேண்டும். பங்கிகள் செய்யும் தொழிலும் வாழும் வாழ்க்கையும் முழுமையாகவே கழுவாய்தான். ஆகவே அவர்களுக்கு சாபவிமோசனம் அமைந்தே தீரும். அடுத்த பிறவியில் அவர்களுக்கு விடுதலை அமையும்” என்று கிழவர்கள் சொல்வார்கள். எங்கள் ஊரில் எவருமே அதையெல்லாம் எதிர்த்துப் பேசி நான் கேட்டதில்லை. முதன்முதலாக அதை கண்டித்து, அதைச் சொன்ன கிழவரை வசைபாடியவர் என் அப்பாதான்.

ராணுவத்தில் இருந்து வந்தபின் என் அப்பா எட்டு மாதகாலம் குடித்துக்கொண்டே இருந்தார். அவரால் ராணுவத்தை விட்டு விலகிவந்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்றோ ஒருநாள் அவர் ராணுவவீரன் அல்லாமலாகிவிடுவார் என்று அவர் எண்ணியதே இல்லை. திரும்பி வந்தபோது அவருக்குள் அது ஒரு விடுமுறை என்ற எண்ணம் இருந்திருக்கும்போல. ஆனால் வந்த சில நாட்களிலேயே அவர் அதை உணர்ந்தார். அவர் ராணுவவீரர் அல்ல என்பதை அவர் சந்தித்த ஒவ்வொருவரும் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ‘இனி நீங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமா?’ என்றார்கள். ‘இப்போது போலீஸ் உங்களைக் கைதுசெய்தால் ராணுவம் தலையிடாது அல்லவா?’ என்றார்கள்.

மெல்ல மெல்ல, எவர் என்ன சொன்னாலும் தான் ராணுவவீரன் அல்ல என்பதுதான் அதன் உட்பொருள் என அவர் எண்ணலானார். காலையில் அவரைச் சந்திப்பவர் ‘டீ சாப்பிட்டாயிற்றா?’ என்று கேட்டால்கூட அவர் வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர் என்று குறிப்புணர்த்தப்படுவதாக நினைத்தார். ஒரு முறை அம்மா அவருக்கு உணவு பரிமாறும் வெள்ளை எனாமல் பாத்திரத்துக்குப் பதிலாக ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை வைத்தபோது எடுத்து வீசிவிட்டு கூச்சலிட்டார். அது ராணுவத்தில் கொடுக்கப்படும் பாத்திரம். இறுதிவரை அதில்தான் அவர் சாப்பிட்டார். வெள்ளை எனாமல் குடுவையில்தான் தண்ணீர் அருந்தினார்.

அப்பா தன் ராணுவச் சப்பாத்துக்களை இறுதிவரை வைத்திருந்தார். ஊரில் அதைப் போடமுடியாது. ஆனால் திருவிழாக்கள் நடக்கும்போது அதைப்போட்டுக்கொண்டு செல்வார். ‘இதைக் கடந்து பாம்பு கடிக்க முடியாது’ என்று அதற்குக் காரணம் சொன்னார். மூன்று ஆண்டுகள் வரை எப்போதும் பழைய ராணுவச் சீருடையான சட்டையையே அணிந்துகொண்டார். கால்சட்டைக்குப் பதில் பைஜாமா போடமுடியாதென்பதனால் காக்கி துணியில் பைஜாமா போன்ற ஒன்றை தைத்துக்கொண்டார். அவர் சொல்லும் ராணுவக்கதைகள் பெருகிக்கொண்டே இருந்தன. தினமும் செய்தித்தாளில் எல்லைப்புறச் செய்திகளை வாசித்து, அங்கே வெளியே தெரியாதபடி நிகழும் போர்களையும், அவற்றில் ராணுவம் செய்துகொண்டிருக்கும் சாகசங்களையும் பற்றி சொன்னார். எந்த உரையாடலிலும் ஒருமுறையாவது ‘இப்போது போனாலும் என்னை ராணுவத்தில் சேர்த்துக்கொள்வார்கள்’ என்றார். ஒரு போர் வரும், அப்போது அவரை மீண்டும் ராணுவத்திற்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தார்.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் அவர் திடீரென்று மாறினார். மூன்றாண்டுகளில் அவருடைய ராணுவமோகம் குறைந்துவிட்டிருந்தாலும் அதை அடையாளமாக வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் ராணுவத்தில் வேலைபார்த்த ஒருவரின் மகளின் திருமணத்திற்காக புனே சென்றார். அங்கேதான் அவர் அம்பேத்கரின் சிலைமுன் நிகழ்ந்த ஓர் உரையைக் கேட்டார். அவருக்கு அம்பேத்கர் மேல் ஈடுபாடில்லை, மெல்லிய வெறுப்பும் இருந்தது. அவர் மாணவராக இருந்தபோது காந்திமேல் பக்தி கொண்டிருந்தார். ராணுவத்தில் சேர்ந்தபின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேல் ஈடுபாடு கொண்டார். ஆனால் காந்தியை வெறுக்கவில்லை. ‘காந்திக்கு ஒன்றும் தெரியாது. அவர் ஓர் ஆண்டுகாலம் ராணுவத்தில் வேலைபார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்’ என்று மட்டும் சொல்வார். அம்பேத்கர் அவர்களுக்கு எதிரானவர் என்று அப்பா நினைத்தார்.

அதைவிட ஒன்று உண்டு, அப்பா தன் சாதியடையாளத்தை வெறுத்தார். அதைப்பற்றி எவரேனும் பேசும்போது கடும் ஒவ்வாமை கொண்டார். சாதி சார்ந்த அரசியல் பேசுபவர்களிடம் உரக்கக் கூச்சலிட்டு எதிர்த்துப்பேசுவார். அவர் உறுதியான காங்கிரஸ் ஆதரவாளர். காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் போஸ் ஆகிய பெயர்கள் அவருடைய அரசியலில் வந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் இந்திராகாந்தியையும் சேர்த்துக்கொள்வார். மகாராஷ்டிர அரசியல்வாதிகள் எவர் மீதும் அவருக்கு மதிப்பில்லை. ‘இந்திராகாந்தி துர்க்கை. பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பித்தவர்’ என்று சொல்வார். ஆனால் அவர் அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை. அரசியல் பேச்சுகளிலேயே எடுத்து எடுப்பில் தன் தரப்பை கூறிவிட்டு சுருட்டை பற்றவைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்.

ஆனால் புனாவில் இருந்து திரும்பி வந்தவர் அதிதீவிர அம்பேத்கர் ஆதரவாளராக ஆனார். பைதானில் எங்கள் வீடிருக்கும் பகுதியில் அம்பேத்கரின் பெயரை சுவரில் முதலில் எழுதிப்போட்டவர் அவர்தான். அம்பேத்கர் படிப்பகம் என்று ஒன்றை ஒரு குடிசையில் தொடங்கினார். அதில் ஒரு பெஞ்சும் ஒரு மேஜையும் வாங்கிப்போட்டு இரண்டு மராத்தி நாளிதழ்களையும் வாங்கி வைக்கத் தொடங்கினார். அங்கே சொற்பொழிவாற்றுவதற்கு வெளியூரில் இருந்து பேச்சாளர்களைச் சொந்தச் செலவில் கூட்டிவந்தார். இந்தியக் குடியரசுக் கட்சியின் கிளை ஒன்றை அவர்தான் அங்கே தொடங்கினார், அதன் செயலாளராக அவரே செயல்பட்டார்.

மூன்றாண்டுகளில் என் அப்பா பைதானின் முக்கியமான குடியரசுக் கட்சி ஊழியராக ஆனார். மேடைகளில் தீவிரமாகப் பேச ஆரம்பித்தார். நான் அவரைப் பார்ப்பதே அரிதாகியது. நாட்கணக்கில் பயணங்களில் இருந்தார். மகாராஷ்டிரத்தின் பல நகர்களுக்கு அவர் சென்று வந்தார். சுவரொட்டிகளில் பலருடைய படங்களுடன் அவருடைய முகமும் இடம் பெற்றது. நான் அவருடைய மகன் என்பதை பலரும் அடையாளம் காணலாயினர். அப்பா வெள்ளைச் சட்டையும், பைஜாமாவும் அணிந்து மேலே கையில்லாத கோட்டு அணிந்தார். தலையில் இளநீல நிறத்தில் தொப்பி அணிந்தார். அவருடைய அந்த முகம் எனக்குப் பழகி அவர் ராணுவத்தில் எடுத்துக்கொண்ட கறுப்புவெள்ளை புகைப்படம் விந்தையான பழம்பொருளாக மாறியது.

அப்போது நான் கல்லூரியில் சேர்ந்துவிட்டிருந்தேன். கல்லூரியில் சாதி தெளிவாக இருந்தது, எனக்கு என் சாதிக்கு வெளியே எவருமே நண்பர்கள் அல்ல. பெயருக்கு அப்பால் எவரும் அறிமுகமும் இல்லை. ஆனால் நாங்கள் எண்ணிக்கையில் நிறையபேர் இருந்தோம். எந்த ஒரு சீண்டலிலும் சட்டென்று அடிதடியில் இறங்குபவர்களாக இருந்தோம். ஆகவே எங்கும் நாங்கள் அஞ்சப்பட்டோம். கல்லூரியில் எனக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வேறு பல கொண்டாட்டங்கள் இருந்தன. முக்கியமாக இந்தி சினிமா. இரவுபகலாக இந்திப்பாடல்கள். அப்போது  ஆடியோ டேப்கள் பிரபலமாக இருந்தன. நான் என் அம்மாவிடம் அழுது மன்றாடி இரண்டாம் விலைக்கு ஒரு நேஷனல் டேப்ரிக்கார்டர் வாங்கினேன். அதில் இந்தி சினிமாப்பாடல்களை தேயத்தேய போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

என் ஊர் மாறிக்கொண்டே இருந்தது. 1976ல் பைத்தான் அருகே கோதாவரி ஆற்றில் ஜெய்க்வாடி அணை கட்டப்பட்டது. ஆற்றின் அமைப்பும் ஒழுக்கும் மாறியது. 1965ல் அணையின் கட்டுமானம் தொடங்கியபோதே ஊரில் புதியவர்களின் குடியேற்றம் தொடங்கியது. புதிய குடியேற்றப்பகுதிகள் கைவிடப்பட்டுக் கிடந்த ஆற்றங்கரைச் சதுப்புநிலங்களில் உருவாகி வந்தன. சாலைகள் அகலமாக ஆயின. சந்தையும் பேருந்து நிலையமும் பெரிதாயின. மையச்சாலையை ஒட்டி கான்கிரீட் கட்டிடங்கள் எழத்தொடங்கின. அணைக்கட்டு முடிவடைந்தபின் அம்மாற்றங்கள் மேலும் தீவிரமடைந்தன. என் நினைவு துலங்கத் தொடங்கியபோதே பைதான் ஒரு நகரமாக ஆகிவிட்டிருந்தது. அது ஒரு சிறு கிராமமாக இருந்தது என்று என் அப்பாவின் தலைமுறையினர் சொல்லும்போது அதை என்னால் காட்சியாக ஆக்கிக்கொள்ளவே முடியவில்லை.

எங்களூரின் சமூகஅமைப்பும் மாற ஆரம்பித்தது. எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் அணைக்கட்டில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து, அவர்களிடம் பணம் புழங்க ஆரம்பித்தபோதே அந்த மாற்றங்கள் தொடங்கின. அவர்களில் பலர் வீடுகளைக் கட்டத் தொடங்கினர். இரண்டு சக்கர வண்டிகளை வாங்கினர். பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினர். அவர்கள் நன்றாக சலவைசெய்த வெள்ளை ஆடைகளை அணிந்தனர். பெண்கள் வண்ணச்சேலைகளை கட்டிக்கொண்டு சந்தைகளுக்கும் சினிமா அரங்குகளுக்கும் சென்றனர். அவை பிறரிடம் ஒவ்வாமையை உருவாக்கின. மெல்ல மெல்ல பூசல்கள் தலையெடுத்தன.

பூசல்களுக்கான காரணங்கள் நேரடியாகப் பார்த்தால் மிக எளியவை, ஆனால் ஆழத்தில் அவை நெடுந்தொலைவுக்கு வேரோடியிருந்தன. முதன்மையாக, எங்கள் மக்கள் ஊரில் வீடுதோறும் சென்று கழிவுகளை அள்ளிக்கொண்டு வருவதை நிறுத்தினர். கழிவுநீக்கும் தொழிலாளர்களை நகராட்சியே நியமித்தது. அவர்கள் கழிவை சுமந்து அகற்றும்படியான கழிப்பறைகள் அமைக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். பழைய கழிவறைகளை மாற்றிக்கொள்ள தயங்கியவர்கள் ஒவ்வொரு முறையும் பணம்கொடுத்து அதற்கு ஆள்தேடவேண்டியிருந்தது. அந்தியில் உணவுக்காக சட்டியுடன் வீடுதோறும் வருபவர்கள் மறைந்தனர். மாறாக அவர்கள் ஓட்டுக்கூரைபோட்ட வீடுகளைக் கட்டிக்கொண்டு அங்கே மின்விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு ரேடியோவில் பாட்டு கேட்டனர்.

எங்கள் பெண்கள் சாலைகளுக்குச் சென்று அன்று ஊரெங்கும் நிறைந்திருந்த சைக்கிள் ரிக்‌ஷாக்களில் ஏறுவதுதான் பெரும் சிக்கலாக இருந்தது. ரிக்‌ஷா ஓட்டியவர்களில் பலர் அணைக்கட்டு வேலையை ஒட்டி ஊருக்கு வந்த ஏழை இஸ்லாமியர். அவர்கள் எல்லாரையும் வண்டிகளில் ஏற்றிக்கொண்டனர். எவர் என அறியாமல்  எங்கள் ஆட்களை ஏற்றிக்கொண்ட ரிக்‌ஷாக்காரர்கள் அறிந்தபின் சண்டைபோட்டனர். டீக்கடைகளில் டீ அளித்தபின் ஆளை அடையாளம் கண்டுகொண்டு அடிக்கவந்தனர். எங்கள் ஆட்கள் தலையில் தொப்பி வைத்துக்கொள்வதையும், பொதுவீதிகளில் செருப்பு போட்டுக்கொள்வதையும் கண்டு பிறர் குமுறினார்கள். வேறு ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக பூசல் உருவானால் அத்தனை சீற்றமும் சேர்ந்து வெடித்தன.

அடிதடிகள் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றால் அங்கே பிறருக்காக அரசியல் கட்சிக்காரர்களும், மடங்களைச் சேர்ந்தவர்களும் வந்தனர். எங்களுக்காக எந்தக் கட்சியும் வரவில்லை. அந்த இடத்தைத்தான் குடியரசுக்கட்சி நிரப்ப ஆரம்பித்தது. என் அப்பா எந்தப் பிரச்சினைக்கும் கும்பலைக் கூட்டிக்கொண்டு சென்று நின்றார். தேவையென்றால் அவரே முன் நின்று அடிதடிகளில் ஈடுபட்டார். அவர் பிற மக்களால் அஞ்சவும் வெறுக்கவும் பட்டார். எங்கள் பகுதிகளில் அவரை தலைவர் என்று கொண்டாடினார்கள்.

அப்பா உயிரிழந்தது எண்ணிப்பார்த்தால் சிரிப்பூட்டும் ஒரு காரணத்துக்காக. தன் வாழ்நாள் முழுக்க அப்பா வெறுத்துவந்த ஒருவர் ஆதிகவிஞரான வான்மீகி. தன் பெயருடன் வால்மீகி என்று சேர்த்துக்கொள்வதை அவர் ராணுவத்தில் சேர்ந்தபோதே தடுத்துவிட்டார். அதன்பின் எங்கள் ஆட்கள் எக்காரணம் கொண்டும் தங்களை வால்மீகியின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்று அப்பா சொல்வார். ஆண்டுதோறும் பள்ளிக்கூடம் தொடங்கும் நாட்களில் அவரே குழந்தைகளுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் பெயர்களுடன் வால்மீகி என்று சேர்க்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். அவ்வாறு பெயரை எழுதிக்கொண்ட ஓர் ஆசிரியரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அறைந்தார். அதன்பின் அவரை அஞ்சியே அப்படி எழுதும் வழக்கத்தை நிறுத்தினர். வால்மீகியை தெய்வமாக நிறுவி வழிபட்டு வந்த சில சிறுகோயில்கள் எங்கள் பகுதியில் இருந்தன. அப்பா அங்கே எவரும் செல்லக்கூடாது என்று அனைவரையும் விலக்கினார். சென்றவர்களை வசைபாடி எச்சரித்தார்.

“வால்மீகி என்பவன் இனத்துரோகி. அவனுக்கு சற்றேனும் தன்மானம் இருந்திருந்தால் அவன் சம்பூகனின் கதையை எழுதியிருக்கவேண்டும். ஆனால் அவன் தன் இனத்தவனாகிய சம்பூகனை  கொன்ற அந்த  ஷத்ரியனைப் புகழ்ந்து எழுதினான். எந்த ஆயுதமும் ஏந்தாத தவமுனிவனான சம்பூகனை அவன் தலைகீழாகத்  தவம்செய்யும்போது கொன்றவன் எத்தனை கொடியவன். அந்தக் கொடியவனை புகழ்ந்து எழுதிய இவன் எவ்வளவு கொடியவன். அவர்களில் ஒருவனைப் புகழ்ந்து எழுதியதனால்தான் வால்மீகி எழுதிய காவியத்தை இவர்கள் இத்தனை தலைமுறைகளாகக் கொண்டாடுகிறார்கள். மாறாக நமது வார்த்தைகள் ஒன்றுகூட சரித்திரத்தில் இல்லை. இந்த தேசத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் நம்மைச் சார்ந்தவர்களின்  குரலே இல்லை. நமது குரலை ஒடுக்க நம்மைச் சார்ந்த ஒருவனையே அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் அவர்கள். வால்மீகி நம்மை அழிக்கும் கோடரி.”

அப்பா பேச ஆரம்பித்தால் மேடைப்பேச்சின் தொனியும் குரலும் வந்துவிடும். ஒரு சாதாரண உரையாடலில் ஒருவர் அப்படிப் பேசினார் என்றால் அவரிடம் மேற்கொண்டு பேச எவராலும் முடிவதில்லை.  நான் அப்போதெல்லாம் வால்மீகி யார் என்பதையே பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவுக்கு வெளியே எனக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் ஏதும் இருக்கவில்லை. மும்பைக்கு ஓடிப்போய் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டால் சினிமாவில் நுழைந்துவிடலாம் என்று நானும் நண்பர்களும் கனவுகண்டுகொண்டிருந்தோம்.

வால்மீகியால்தான் அப்பா உயிரிழந்தார். பைத்தானில் பிறந்தவர் வைணவ பக்தரும் கவிஞருமான ஏகநாதர். அவருடைய சமாதி ஆலயம் எங்கள் இல்லத்தில் இருந்து நடந்துசெல்லும் தொலைவில், கோதாவரிக்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. நெடுங்காலம் எங்கள் சாதியினர் எவரும் அங்கே செல்ல அனுமதி இருக்கவில்லை. வெளியூரிலிருந்து எவரென்றே தெரியாத பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவியத் தொடங்கியபிறகுகூட எங்களூர்க்காரர்கள் அங்கே செல்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரும் மதில் அந்தப்பகுதிக்கும் எங்கள் பகுதிக்கும் இடையே இருந்தது. அங்கே பாடப்படும் பஜனை ஒலி இங்கே கேட்கும். எங்கள் பகுதியில் சற்று மேடான இடத்தில் நின்றால் அந்த ஆலயத்தையேகூட பார்க்கமுடியும். ஆனால் ஏகநாதர் என்ற பெயரே எங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ராம் ராம் என முடியும் பெயர்கொண்டவர்கள்தான் எங்களில் பெரும்பாலானவர்கள் என்றபோதிலும்கூட.

நகரின் பல பகுதிகளில் சிறிய கோயில்களில் ஏகநாதரின் பாடல்களைப் பாடி பஜனையும் பூஜையும் செய்வதுண்டு. அங்கே தெய்வங்களுக்கு இனிப்புப் படையலிட்டு அதை பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த கோயில்களில் ஒன்றில் வால்மீகியை கோயிலுக்கு வெளியே ஒரு புதரின் அடியில் நிறுவியிருந்தனர் என்று ஒரு பிராமணப் பையன் எங்கள் பகுதிப் பையன் ஒருவனிடம் சொன்னான். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சண்டை அது. “உன் சாதிக்காரரான வால்மீகியையே நாங்கள் கோயிலுக்கு வெளியில்தான் நிறுத்தியிருக்கிறோம்.”

எங்களூர்ப் பையன் அதைப் பேச்சுவாக்கில் அவன் அண்ணனிடம் சொல்ல அந்த அண்ணன் என் அப்பாவிடம் அதைச் சொன்னான். அப்பா இருபதுபேருடன் கிளம்பி நேராகச் சென்றார். அவர்கள் பிராமணர்கள். இவர்களைப் பார்த்ததுமே அஞ்சிவிட்டனர். அப்பா உரத்தகுரலில் கூவியபடி சென்று முற்றத்தில் நின்றார். “ஏண்டா குடுமிக்காரர்களா, உங்களுக்கு ராமகதையை எழுதித்தந்தால்கூட கோயிலுக்குள் ஏற்ற மாட்டீர்களா? வெளியே வாருங்களடா”

அங்கிருந்த முதிய பிராமணர் சமாதானமாகப் பேச முயன்றார். இளைஞர்கள் அவருக்கு பின்னால் நின்றனர். அங்கே முள்மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த வால்மீகி சிலையைச் சுட்டிக்காட்டி அப்பா சொன்னார் “இவரை உள்ளே கொண்டு வைக்காமல் இங்கே பூஜை நடக்காது… பார்த்துவிடுவோம்”

ஆனால் பிராமணக்கிழவர் உறுதியாக மறுத்துவிட்டார். அவர்களின் வழக்கமான வாதம்தான். “நானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நான் எளிய பிராமணன். என் முன்னோர்கள் எல்லாவற்றையும் தெளிவாக வகுத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நான் அவற்றைக் கடைப்பிடிப்பவன் மட்டும்தான்”

“உன் பெண்கள் விதவையானால் மொட்டையடித்து சமையலறையிலா வைத்திருக்கிறாய்? மீண்டும் திருமணம் செய்து கொடுக்கவில்லையா? உன் ஆட்கள் பூஜையும் நோன்புமாகவா வாழ்கிறார்கள்? வெளியே சென்று எல்லா வேலையையும் செய்யவில்லையா? நீ  வைத்திருக்கும் இந்த மூக்குக்கண்ணாடி உன் மூதாதையர் சொன்னதா என்ன?”

அவர்களுக்கே உரிய சில பாவனைகள் உண்டு. புரிந்துகொள்ளாமல் மூர்க்கமாக இருக்கும் எளியவனை நோக்கி கருணையுடன் பேசுவது முதன்மையானது.அவர் திரும்பத் திரும்ப ஒன்றைத்தான் சொன்னார். “என்னுடைய சம்பிரதாயங்களை நான் மீறமுடியாது. உங்கள் சம்பிரதாயங்களில் நான் தலையிடப்போவதுமில்லை…. அவரவர் வழி அவரவருக்கு… எதற்கு நமக்குள் தகராறு?”

ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு சலித்துவிட்டது. “முட்டாள்கள், அயோக்கியர்கள்” என்று காறித்துப்பினார். “அப்படியென்றால் இந்தச் சிலை உங்களுக்கு தேவையில்லை. டேய் அதை எடுங்கள்டா” என்றார்.

அவருடன் வந்த இளைஞர்கள் அதை எடுத்துக்கொண்டார்கள். அப்பா மீண்டும் காறித்துப்பிவிட்டு திரும்பினார். ஆனால் வரும் வழியிலேயே அவருடைய கோபம் தணிந்து சிலைமேல் ஆர்வமும் தணிந்துவிட்டது. “இதை என்ன செய்வது?” என்று ஓர் இளைஞன் கேட்டபோது “தூக்கி கோதாவரியில் போடு… வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்று சொல்லிவிட்டார்.

அவர்களால் சிலையை தூக்கிப்போட முடியவில்லை. அது சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட அழகற்ற சிறிய சிலை. ஒரு சாண் உயரமிருக்கும். அதை இளைஞர்கள் கோதாவரியின் கரையில், நாககட்டத்தில் இருந்த சப்தமாதாக்களின் சிலைக்கு அருகே கொண்டுசென்று வைத்து ஒரு காட்டுப்பூவை பறித்து சூட்டி வணங்கிவிட்டு திரும்பினர்.

போலீஸிடமிருந்து அழைப்பு வரும் என அப்பா எதிர்பார்த்தார். குடியரசுக் கட்சியின் பைத்தான் நகரத்தலைவரிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுச் சொல்வதாக அவர் ஒப்புக்கொண்டார். அப்பா கூடவந்த இளைஞர்களுடன் இரவில் திரும்பி வந்தவர் பூட்டிக்கிடந்த சந்துலால் கடை அருகே அவர்களிடமிருந்து விடைபெற்றுவிட்டு இருட்டில் எங்கள் வீட்டை நோக்கி வந்தார். ஆனால் வந்துசேரவில்லை.

மறுநாள் அவர் வீடுவந்துசேரவில்லை என்பதை அம்மா கட்சியின் இளைஞர்களிடம் சொன்னாள். அவர்கள் பல இடங்களுக்கும் சென்று தேடினர். அவர்களில் ஒருவன் சந்துலால் கடையருகே நாய்கள் கூட்டமாக மண்ணை முகர்ந்து நிலைகொள்ளாமல் முனகியும், தரையைப் பிராண்டியும், குரைத்தும், ஒன்றையொன்று சுற்றிச்சுழல்வதைக் கவனித்தான். அப்பகுதியை கூர்ந்து பார்த்தபோது ஆழமான சாக்கடைக்குள், கன்னங்கரிய மலின ஒழுக்குக்குள் அப்பா புதைந்திருப்பதைக் கண்டான். அவருடைய சட்டையின் நுனி மட்டுமே தெரிந்தது. கூர்ந்து கவனித்தபோதுதான் உடலை காணமுடிந்தது.

அப்பா ராணுவத்தில் சேர்ந்த நாள் முதல் தூய்மையில் கவனம் கொண்டவராக இருந்தார். மனநோய் அளவுக்கு அந்த தூய்மைவெறி அவரிடமிருந்தது. அவருடைய செருப்புகூட புழுதிபடியாமல்தான் இருக்கும். சட்டைக்காலரில்கூட அழுக்கு இருக்காது. வீடு அந்தக்கணம் துடைத்து வைத்ததுபோல் இருக்கவேண்டும் அவருக்கு. மெத்தைமேல் தூயவெள்ளை விரிப்பு இருக்கவேண்டும். அதில் ஒரு சுளிப்பு கூட இருக்கலாகாது. இரவு படுப்பதற்கு முன் படுக்கையை கையால் நீவி நீவிச் செருகி சரிசெய்வார். படுத்து காலையில் எழுந்தால் அங்கே ஒருவர் படுத்திருந்த தடையமே இருக்காது. அவர் உணவு உண்ட இடத்தில் ஒரு துளி நீர் கூடச் சிந்தியிருக்காது. காலையிலும் மதியமும் குளிப்பவர் இரவும் குளித்தபின்னரே படுப்பார். தினம் இரண்டு ஆடைகள் மாற்றிக்கொள்வார். ஒவ்வொரு முறை குளித்ததும் தாஜ் என்னும் அத்தரும் பூசிக்கொள்வார். தன் படுக்கையறையில் ஊதுவத்தி ஏற்றி வைத்தபின்னரே தூங்குவார்.

அப்பாவை போலீஸார் அந்த புழுத்துநாறிய மலக்குழியில் இருந்து கொக்கிகளை வீசி சிக்கவைத்து இழுத்துத்தான் எடுத்தார்கள். குழாயால் நீரைப்பீய்ச்சி அவர் உடலைத் தூய்மை செய்தார்கள். அவரை பிணச்சோதனை செய்தபோது பின்மண்டையில் கனத்த பொருளால் ஓங்கி அறைந்து வீழ்த்தி, கூரிய பொருளால் நெஞ்சில் குத்தி இதயத்தை கிழித்து தூக்கி வீசியபின் எடைமிக்க கல்லையும் தூக்கி அவர் உடல்மேல் போட்டு அவரை மூழ்கடித்துவிட்டு சென்றிருந்தார்கள் என்று தெரிந்தது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2025 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.