Jeyamohan's Blog, page 119

May 2, 2025

பெருங்கதை

குணாத்யர் பைசாசிக மொழியில் எழுதிய பிருஹத் கதா என்னும் பெருங்காவியம் அழிந்துவிட்டது. அதை மறு ஆக்கங்கள் சம்ஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் எழுதப்பட்டன. அந்நூல்களின் கருப்பொருளை விரிவாக்கி எழுதப்பட்ட வழிநூல் என்று பெருங்கதை கருதப்படுகிறது.

பெருங்கதை பெருங்கதை பெருங்கதை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:34

காவியம் – 12

பைசாசினி, பொயு 1 சாதவாகனர் காலம், பைத்தான்

இனிமை திகட்டுமென்பது ஒரு பொய். எல்லா பொய்களும் தனிநபர்களின் தற்காலிக அனுபவம் சார்ந்த உண்மைகள்தான். மெய்யான இனிமை திகட்டுவதில்லை என்பதை நான் அறிந்த நாட்கள். நாக்கு அடையும் இனிமை திகட்டும். உடல் சார்ந்த எந்த இனிமையும் திகட்டும். ஏனெனில் உடல் என்பது ஒரு பொருள், பொருள் எல்லையுள்ளது.  உள்ளம் அப்படியல்ல. அதனால் கற்பனையில் விரிய முடியும். கற்பனை எல்லையற்றது. அது தேடும் இனிமையும் முடிவற்றது.

என் ஒவ்வொரு நாளும் மும்மடங்கு இனிமை கொண்டதாக ஆகியது. இனிமை தொடத்தொட வளர்ந்தது. ஆனால் இனிமைக்கான விழைவு அதற்குப் பலமடங்கென விரிந்தது. ஒருகணமும் மேலும் மேலும் என்ற தவிப்பு அடங்கவேயில்லை. எந்த ஒரு நினைப்பும் ஏக்கம் இன்றி முடியவில்லை.

உடனிருக்கையில் இதோ நீ, இங்கே நீ, இப்போது நீ மட்டுமே என்று குதூகலித்து, தன்னைத்தானே சுழன்று, மகிழ்வில் என்ன செய்வதென்று தெரியாமல் விழுந்து புரண்டு, துள்ளி விழுந்து, முனகிப் பொய்க்கடி கடித்து, கொப்பளித்துக் கொண்டிருக்கும் நாய்க்குட்டிபோல் திளைத்தேன். கொந்தளிக்கும் அலைப்பரப்பில் ஒரு சிறு குமிழியாக இருந்தேன். பிரிந்த மறுகணமே அனைத்தும் பறிக்கப்பட்டவன் போல, ஒன்றையும் அடையாதவன் போல, அக்கணமே ஆயிரம் மடங்கு வேண்டுமென்பதைப் போல தவிக்கலானேன்.

அந்த நாட்கள் நான் எங்கிருந்தேன் என்று என்னால் அப்போது உணரமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதென நிகழ்ந்ததனால் முந்தைய நாள் முற்றாக மறந்து போய்விட்டது. ஒரு சொல் எஞ்சியில்லாமல். ஒவ்வொரு நாளும் புதிதாக வரைந்து கொண்டு வைக்கப்பட்ட ஓவியம்போல் விடிந்தது. ஒவ்வொரு கணமும் பேசுவது முந்தைய கணத்துடன் தொடர்பற்ற தனிநிகழ்வாக இருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு முழு வாழ்க்கை. தனக்கென தனிமுழுமை கொண்டது. தனக்கான தனி அர்த்தம் கொண்டது. கணந்தோறும் பிறந்தெழுதல். கணந்தோறும் இறந்து மீளுதல்.

திடீரென்று எண்ணியபோது அவளுடனான உரையாடலும் காதலும் நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருப்பது போல் இருந்தது. மறுகணமே ஒருநாள், ஒருமணி கூட ஆகவில்லை என்று தெரிந்தது. அக்கணம் மட்டுமே இருப்பது போல. ஆண்டாண்டுகளாக மலைமுடிகளைப்போல் தனிமையில் ஓங்கி அமைந்திருப்பதுபோல. தனித்து அமர்ந்து எண்ணும்போது மறுநாளுக்கான ஏக்கம் மட்டுமே எஞ்சியது. நிகழ்ந்தவை துளி நினைவாகக்கூட மீளவில்லை.

நீண்ட காலத்திற்குப்பின் எண்ணங்களைத் துழாவுகையில் அந்த நாட்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும், கண்களின் மின்வெட்டும் கூட கல்லில் செதுக்கப்பட்டவை போல என் நினைவில் இருப்பதை தெரிந்துகொண்டேன். நான் இறுதித் துளி எலும்பும் தசையும் பொசுங்கி சிதையில் அடங்கும் கணம் வரைக்கும் கூட அவை நினைவில் இருக்குமென்று தோன்றியது. உடல் எரிந்து அழிந்த பின்னரும் கூட அவை இந்தக்காற்றில் ஏதேனும் ஒரு வடிவில் எஞ்சியிருக்ககூடும்.

மீண்டும் பிறவி, ஏழ் பிறவி, முடிவிலாப்பிறவி என்று ஒவ்வொரு காதல் கவிதையும் புலம்புவது ஏன் என்று அப்போது தான் புரிந்துகொண்டேன். இந்திய உள்ளம் காதல் கொண்டதுமே ’ஏழேழு பிறவிக்கும்’ என அரற்றத் தொடங்குகிறது. தொல்கவி வால்மீகியிலிருந்து மைதிலிசரண் வரை எல்லாக் கவிஞர்களும் அப்படிப் பாடியிருக்கிறார்கள். ஏனென்றால் காதல் ஒரு பிறவிக்கு போதாது. அந்தச் சிறிய கொள்கலனுக்குள் அது நுரைத்து நுரைத்து பொங்கி எழுந்து வெளியே வழிகிறது. மேலும் மேலுமென புதிய கலங்களில் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மந்திரவாதியின் மாயக்கலம் போல ஒழியாத உறையாத ஊற்று கொண்டது அது.

பிறவிகள் தோறும் மீண்டும் மீண்டும் இதையே நடிக்கவேண்டும். திரும்பத் திரும்ப, ஒரு அணுவிடைகூட மாறாமல். ஏனென்றால் இது நிகழும் கணத்தை விட இது பெரியது. அக்கணத்தில் அறிந்து அனுபவித்து அடையும்போதே அது போதவில்லை என்றும் தோன்றுகிறது. இப்பிறவி இந்த உடலில் நிகழ்கிறது. இந்த உடல் காலம் கொண்டது. காலத்தை வெல்ல வேண்டும். இக்காலத்தை இப்படியே நிறுத்திவிட முடியவில்லை எனில் இதை மீண்டும் மீண்டும் நிகழ்த்த வேண்டும். ஒரு விறகிலிருந்து இன்னொன்றுக்கு பற்றிக்கொள்ளும் தீ போல  இந்தக்காதல்  படர்ந்து செல்லவேண்டும்.

காதல் என்ற வார்த்தையையே நான் ஏளனத்துடன் படித்த காலங்கள் உண்டு. சம்ஸ்கிருதக் காவியங்களைப் படிக்கும் எவருக்கும் உண்மையில் காதல் கொஞ்சம் விலகித்தான் செல்லும். காதலைப் பாடிப் பாடி அது ஒரு அனுபவமல்ல, கவிதைக்கான கருப்பொருள் மட்டுமே என்று அவர்கள் ஆக்கிவிட்டார்கள்.  சொல்லுக்கு அழகு சேர்க்கும் ஓர் கூடுதல் அழகுப்பொருள். லஸ்ஸி மேல் ரோஜா மலரிதழ் போல. சம்ஸ்கிருத காவிய வாசகன் காதலை இயல்பாக எடுத்துக்கொண்டு, அப்படியொன்று நிகழ்வதையே அறியாமல், சொல்லிணைவுகளின் சுவைநோக்கிச் செல்கிறான்.

நான் அறிந்த சம்ஸ்கிருத காவிய ஆசிரியர்களில் எவருமே காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் அல்ல. சம்ஸ்கிருதக் கவிதைகளில் ஊறித்திளைப்பவர்கள் எவருமே மெய்வாழ்வில் காதலர்கள் அல்ல. அவர்கள் எளிமையான குடும்பத்தலைவர்கள் மட்டும்தான். அவர்கள் காமத்தைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுமளவுக்கு ஆசாரமானவர்கள்.

என் எம்.ஏ. வகுப்பில் ஆதர்ஷ் ஜோஷி காளிதாசனை கற்பித்துக்கொண்டிருந்தார். காமத்தின் கலைகளை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான், அக்கலைகளையே அவள் அவனுக்கு குருதட்சிணையாக அளித்துவிட்டாள் என்று அவர் சொல்லி “அரிய சொல்லாட்சி… நயம்படச் சொல்வதில் அவனுக்கு இணை இல்லை” என்று மூக்குக் கண்ணாடியின் மேலே கண்ணைத் தூக்கி எங்களைப் பார்த்தபின் மீண்டும் படிக்கையில் சட்டென்று எனக்கு மெய்சிலிர்த்தது. என்ன சொல்கிறான் காளிதாசன். ஆண்காமத்தை பெண்காமம் வெல்லும் தருணமா அது? அந்தக் கலவிக்காட்சியை நான் என்னுள் உருவகித்துக்கொண்டபோது வியர்த்துவிட்டேன். ஆனால் வகுப்பில் ஒருவருக்குமே அப்படி எதுவும் தோன்றவில்லை. அத்தனை இயந்திரத்தனமாக, வெறும் சொல்லாராய்ச்சியாகவே அந்த வகுப்பு முன்சென்றது.

வாளின் கூர்மை போலவும், வைரத்தின் ஒளி போலவும், மலரின் மென்மை போலவும் சம்ஸ்கிருதக் காவியங்களில் துலங்கும் காதலை படிக்கும்போதெல்லாம் காதல் பற்றிய அவநம்பிக்கையுடன் தான் இருந்தேன். அவை காதல்கள் அல்ல அதிகாதல்கள் என்பதனாலேயே அவை மானுடத்தன்மையை இழந்து யட்சர்களும் கந்தர்வர்களும் தெய்வங்களும் மட்டுமே அடையத்தக்கவையாக ஆகிவிட்டன. மின்னலைக் கண்டு விழியழிந்த ஒருவன் மின்னல் பற்றி புலம்பியது போன்று அவை தோன்றலாயின. ஆகவே நவீன கவிதையில் காதல் வந்தால் அந்த யதார்த்தத்தில் அவை வெளிறி அபத்தமாகத் தெரிந்தன. மேடையில் நடனமாடுபவர் அந்த முகச்சாயத்துடன் மதியவெயிலில், நடுச்சாலையில் எதிர்ப்பட்டதுபோல. நவீனகவிஞன் காதலை ஏளனம் செய்தால் உடனே என் உள்ளம் அதை ஏற்றுக்கொண்டது.

ஆனால் நான் காதலை அடைந்தபோது எத்தனை பெருங்கவிஞர்கள் எத்தனை சொற்களில் சொன்னாலும் காதல் சொல்லப்படாததாகவே எஞ்சியிருக்குமென்று தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு அவை வெற்றுச்சொற்கள். காதலை அடையாதவர்களோ எத்தனை நுட்பமான சொற்கள் வழியாகவும், எத்தனை அரிய படிமங்கள் வழியாகவும், எந்நிலையிலும் காதலைப் புரிந்து கொள்ள முடியாது. இரு நிலையிலுமே காதல் கவிதைகள் பயனற்றவையே.

காதலை அத்தனை தன்னியல்பானது என்றாலும் இங்கே அத்தனை அரிதானது. அவ்வளவு செயற்கையான ஒரு வாழ்க்கையை உருவாக்கி வைத்து அதில் அமைந்து பொருந்தியிருக்கிறோம். மாபெரும் மதில்சுவர்களில் கற்கள் பதிந்திருப்பதுபோல. சுவரின் மாபெரும் எடையே பற்று என்றும் பாதுகாப்பு என்றும் தோன்றுகிறது. சிறைச்சுவருக்கும் கோட்டைச்சுவருக்குமான வேறுபாடு எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான்.

ஒருபோதும், ஒரு துளியும், காதலை அறியாதவர்களே இங்கே மிகப்பெரும்பான்மை. அவர்கள் அதை காமமென்றும், கொண்டும் கொடுத்தும் ஆடும் உறவின் வணிகம் என்றும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளப்படாத ஒன்று பித்தென்றும் கேலிக்குரியதென்றுமே தோன்றும். அச்சுறுத்தவும் கூடும். இந்த உலகம் ஏன் காதலுக்கு எதிராக இத்தனை தீவிரம் கொண்டிருக்கிறது என்பது காதலெனும் திளைப்பில் இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் காதல் என்றல்ல, அத்தனை பெரும் திளைப்பை அளிக்கும் எதையும் எதிர்ப்பதாகவே என்றும் உலகியல் இருந்துள்ளது. பெரும்பக்தர்கள் கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள் கவிஞர்கள் வறுமையில் சாகவிடப்பட்டிருக்கிறார்கள்.

நான் அறிந்த ஒன்றையும் அப்போது அறிந்திருக்கவில்லை. பெரும்பேதமையில் இருந்தேன். அருவிக்கு கீழே நின்றிருப்பவன் போல அந்தப் பொழுதுகளில் திகழ்ந்தேன். ஒருகணம் என் தலையை தாக்கிய நீர் மறுகணம் இல்லை. ஒருகணம் பொழிந்து என்னை முற்றிலும் மூழ்கடிக்க அதில் எஞ்சி என்னுள்ளிருக்கும் அழியாத சாரம் மட்டுமேயான ஒன்று அடுத்த கணத்தை அடைந்தது. காதல் வழியாக மட்டுமே நம் எண்ணங்களின் எல்லை கடந்த ஒன்றை, நம் இருப்புக்கு அப்பாலுள்ள பிறிதொன்றை அறிய முடியும். அதை அன்று அறிந்தேன் என அறிய மேலும் பல ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டன.

காலமும் இடமும் அற்ற பித்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் மெல்ல விசையிழந்தன. ஒரு கட்டத்தில் இருவரும் அவரவர் ஆய்வுகளுக்குத் திரும்பவேண்டியிருந்தது. ராதிகா அவளுடைய ஆய்வேட்டை எழுத ஆரம்பித்தாள், நானும் மெதுவாக என் ஆய்வுக்குத் திரும்பினேன். ஓராண்டு முதற்கட்ட ஆய்வுக்குப்பின் நான் என் ஆய்வேட்டின் தலைப்பை முடிவு செய்துவிட்டிருந்தேன். ‘இடைக்கால சம்ஸ்கிருதப் பெருங்காவியங்களில் மரபின் தொடர்ச்சிகள் – குமரிலபட்டரின் ஸ்போட கொள்கையின் அடிப்படையில்’. ஸ்ரீகர் மிஸ்ராவுக்கு அணுக்கமான தலைப்பு. நான் அவரிடம் மேலும் அணுக்கமாக ஆவதற்குரிய வழியும்கூட.

நான் பூர்வமீமாம்சையை, பட்டமீமாம்சையை ஒருபக்கம் படிக்கவேண்டியிருந்தது. அதைப்படிக்க சம்ஸ்கிருத வியாகரண மரபையே படிக்கவேண்டும். பூர்வமீமாம்சகர்கள்தான் வியாகரணத்தை ஆயிரம் ஆண்டுகாலமாக முன்னெடுத்தவர்கள். மறுபக்கம் அந்த கோணத்தில் எல்லா பழங்கால சம்ஸ்கிருத காவியங்களையும் படிக்கவேண்டியிருந்தது. ஸ்ரீகர் மிஸ்ராவின் உண்மையான விரிவு எனக்கு அப்போதுதான் தெரியத்தொடங்கியது. அவர் அனைத்தையும் படித்திருந்தார், அனைத்து தகவல்களையும் நினைவிலிருந்தே சொன்னார், ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு கோணத்துடன், புதிய கருத்துடன் தோன்றினார்.

நாங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டும் சந்திப்பவர்களானோம். பெரும்பாலும் வார இறுதிகளில்தான் விரிவாகப் பேச முடிந்தது. கங்கைக் கரைக்குச் செல்வோம், அல்லது கடைகளுக்குச் செல்வோம். பெரும்பாலும் அவரவர் ஆய்வேடுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். விந்தை என்னவென்றால் அப்படி முற்றிலும் புறவயமான ஓர் உலகியல் விஷயத்தைப் பேசியது எங்களை இன்னும் அணுக்கமானவர்களாக ஆக்கியது. அவளுடைய ஆய்வேட்டை நான் மேம்படுத்தினேன். என் ஆய்வேட்டில் அவள் வலுவான கேள்விகளை முன்வைத்தாள். இருவருக்கும் நடுவே இலக்கியம் ஒருவரை ஒருவர் சென்றடையும் இனிய பாதையாக இருந்தது.

நான் நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை, தோன்றியபோது மட்டும், ஊருக்குச் சென்று வந்தேன். ஊருக்குச் செல்வது எனக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. நான் வாழ்ந்த பனாரசில் இருந்து மிகமிகத் தொலைவில், வேறொரு உலகில் இருந்தது என் ஊர். பைத்தான் நகரின் பங்கிகளின் குடியிருப்பு. அந்த இடுங்கலான தெருக்கள், நீங்காத சாக்கடை நாற்றம், நெரிசல், கூச்சல்கள். தெரிந்த ஒவ்வொரு கண்களில் இருந்தும் என்னை வந்தடைந்த என் சாதி. ‘நீ’ என்ற சொல், அல்லது ‘நாம்’ என்ற சொல். இரண்டுமே எரிச்சலூட்டின. ஏனென்றால் இரண்டுமே என்னை வேறொரு வகையில் வரையறை செய்தன. நான் பிறிதொன்றாக வளர்ந்துகொண்டிருந்தேன் என அவை உணரவேயில்லை, அவற்றுக்கு அதை தெரியவைக்க வழியும் இல்லை.

ஆகவே கூடுமானவரை தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்தில் குற்றவுணர்வை கொண்டிருப்பதைவிட சட்டென்று சென்றுவிட்டு திரும்புவதுதான் நல்லது என்று தோன்றும்போது கிளம்பினேன். பனாரஸிலிருந்து ஔரங்காபாத் வரை இரண்டு ரயில்கள் மாறி வந்து அங்கிருந்து பஸ் பிடித்து பைத்தான் சென்று சேரும்போது நான் மானசீகமாக ஏற்கனவே பனாரஸுக்கு திரும்பிவிட்டிருப்பேன். அங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் பனாரஸில் இருந்துகொண்டு அந்த இடத்தைப் பார்த்துத் திகைத்துக் கொண்டிருப்பேன்.

என் வரவை அம்மா பொருட்படுத்துவதில்லை, அவள் தன் உலகில் முழுமையாக ஆழ்ந்துவிட்டிருந்தாள். நான் வரவேண்டும் என அழைப்பதில்லை, வந்தால் கிளர்ச்சி அடைவதுமில்லை. வழக்கத்திற்கு மீறி எதையும் சமைப்பதுகூட இல்லை. அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாதென்பதனால் நான் கடிதங்களும் எழுதுவதில்லை. அவசியமாகத் தெரிவிக்கவேண்டிய எதுவும் நிகழவுமில்லை. அப்பாவின் ஓய்வூதியம் அம்மாவுக்கு வந்துகொண்டிருந்தது. எனக்கு ஆய்வுமாணவர்களுக்குரிய உதவித்தொகை செலவுக்கும் மேலேயே இருந்தது. ஆகவே இருவருக்கும் ஒருவரை ஒருவர் முற்றிலும் தேவைப்படவில்லை.

ஏற்கனவே நான் அம்மாவிடம் பேசுவது மிகக்குறைவு. பனாரஸுக்குப் போனபிறகு கிட்டத்தட்ட பேச்சே இல்லாமலாகிவிட்டது. வீட்டுக்கு வந்தால் இரண்டுநாட்கள் தங்குவதே பிறர் என்ன ஏது என்று கேட்கக்கூடாது என்பதற்காகத்தான். வெளியே செல்வதே இல்லை. அறைக்குள் அமர்ந்து நான் கொண்டுவந்த புத்தகங்களை  வாசித்துக் கொண்டிருப்பேன். அல்லது குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பேன். எப்போது நாட்கள் நகரும் என எண்ணிக்கொண்டிருப்பேன். ஞாயிறு மாலை ஆனதுமே கிளம்பிவிடுவேன். கிளம்பும்போது அம்மாவிடம் சொல்வேன், அவள் மெல்ல தலையசைப்பதுடன் சரி. அங்கிருந்து கிளம்பும்போது ஒவ்வொரு காலடியிலும் விடுபட்டுக்கொண்டிருப்பதாக உணர்வேன். முதல் பேருந்தில் ஏறியதும் உருவாகும் அபாரமான நிம்மதியை பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருப்பேன்.

ராதிகாவைச் சந்தித்தபின் நான் ஊருக்கு வரவே இல்லை. வரவேண்டிய தேவை இருக்கவில்லை என்பதுடன் எல்லா வார இறுதிகளையும் ராதிகாவுடன் செலவிடவே விரும்பினேன். அதன்பின் ஆய்வுவேலைகள் விசைகொண்டன, எதற்கும் பொழுதிருக்கவில்லை. ஓர் ஆய்வின் பெரும்பகுதி வேலை புத்தகங்களை கண்டுபிடித்து புரட்டிப்பார்த்து தேடுவதைக் கண்டடைவதுதான். அது ஒரு துப்பறியும் பணி. கண்டுபிடிப்பது உண்மையில் ஒரு வாசலை, அது மேலும் பல வாசல்களை நோக்கி கொண்டுசெல்லும். காலம் ஒழுகிச்செல்வதே தெரியாது. ஆய்வில் மூழ்கியிருப்பவர்களுக்கு புறவுலகமே இல்லாமலிருப்பதை முன்னரும் கண்டிருக்கிறேன், எனக்கே அப்படி ஆகுமென்று அறிந்தேன்.

திடீரென்று ஊரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பைத்தான் நகரிலிருந்து இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தார், என் அப்பாவின் வழக்கு விஷயமாக. பனாரஸில் எனக்கு தொலைபேசி இல்லை. பல்கலைக்கழகத்தின் அலுவலகத்திற்கு கான்ஸ்டபிள் அழைத்து என்னைப் பற்றி விசாரித்து என் துறைத்தலைவரின் எண்ணை வாங்கி பைத்தான் இன்ஸ்பெக்டருக்கு அளித்திருந்தார். நான் என் துறைத்தலைவரின் அலுவலகத்தில் காத்திருந்தேன். மற்ற பேராசிரியர்கள் அப்பால் என்னை கூர்ந்து கவனித்தபடி படிப்பதுபோலவோ விடைத்தாள் திருத்துவது போலவோ நடித்துக்கொண்டிருந்தார்கள். துறைத்தலைவரே உடலால் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

போலீஸ் அழைப்பு என்பதனால் நான் பதற்றம் கொண்டிருந்தேன். முதலில் இன்ஸ்பெக்டரின் குரலைக் கேட்டதும் என் மூளை அசைவற்றுவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கவனிக்க முடியவில்லை. அவருக்கும் தொலைபேசியில் பேசத்தெரியவில்லை. நேரில் பேசுவதுபோல உதிரி வார்த்தைகளில் குழறியபடி பேசினார். நிறையச் சொற்கள் கடந்தபின், அவர் பலமுறை கத்தியபின்புதான் எனக்கு அவர் என் அப்பாவின் கொலைபற்றி என்னிடம் பேச விரும்புகிறார் என்று தெரிந்தது. என் வீட்டுக்கு பல கடிதங்கள் சென்றிருந்தன, அம்மாவிடம் நேரில் கான்ஸ்டபிளை அனுப்பிச் சொல்லிவிட்டிருந்தார். அம்மா கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டாள், கான்ஸ்டபிள் சொன்னவை அவளுக்குப் புரியவில்லை.

நான் உடனே கிளம்பி பைத்தான் சென்றேன். வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று தோன்றவில்லை. வந்தவேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குப் போய்விட்டு, உடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். என்னிடம் ஒரு சிறிய தோள்பை மட்டும்தான் இருந்தது.

பேருந்து நிலையத்தில் இருந்து நேராகவே காவல்நிலையம் சென்றேன். இன்ஸ்பெக்டர் இருந்தார். குண்டான, மாநிறமான மனிதர். பெரிய புருவங்கள், தொங்குமீசை, இரட்டைத்தாடை, தொங்கும் கன்னங்கள், களைத்துப்போன கண்கள் என பெரும்பாலான போலீஸ்காரர்களுக்குரிய தோற்றத்துடன் இருந்தார். நான் வணங்கியதும் தலையை மட்டும் அசைத்தார். என்னை உட்காரும்படிச் சொல்லவில்லை. ஒருமையில் “நீ பனாரஸில் என்ன செய்கிறாய்?” என்றார்.

“படிக்கிறேன்”

“என்ன படிக்கிறாய்?”

நான் “பி.ஹெச்.டி” என்றேன்.

அவருக்குப் புரியவில்லை. “டிகிரியா?” என்றார். “பிஏவா?”

“பி.ஏ, எம்.ஏ இரண்டும் முடித்துவிட்டேன். மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெறுவதற்காகப் படிக்கிறேன்”

“டாக்டரா?”

அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று தெரிந்தது, நான் மேற்கொண்டு விளக்க முற்படவில்லை.

“அதாவது, இந்த வழக்கு பல காலமாக இங்கே இருக்கிறது. கோப்புகளில் ஏராளமான தாள்கள் இல்லை. இதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. இதைப்பற்றி மேலிடத்தில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதை முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“எந்த ஒரு துப்பும் இது வரை கிடைக்கவில்லை. தலையில் அடிபட்டு இறந்திருக்கிறார். குடித்திருந்ததற்கான சான்று இருக்கிறது. மல்லாந்து விழுந்து பாறாங்கல்லில் அடிபட்டுக்கூட இறந்திருக்கலாம்… இப்போதைக்கு கொலை என்று எங்கள் ஆவணங்களில் இல்லை. சந்தேக மரணம் என்றுதான் இருக்கிறது. விபத்துதான் என்று எழுதினால் கோப்பை மூடிவிடலாம்.”

நான் அதற்கும் பேசாமலிருந்தேன்.

“நீங்கள் கையெழுத்திட்டால் போதும்”

“எதில்?”

“நாங்கள் சில கேள்விகள் கேட்டு அதற்கு நீங்கள் பதில் தந்ததுபோல நான்கு காகிதங்கள். எல்லாம் சென்ற ஆண்டு தேதியிட்டவை… கடைசியாக இப்போது ஒரு கடிதம்… கையெழுத்திட்டால் முடித்துவிடலாம்.”

நான் தலையசைத்தேன்.

“முடிக்காவிட்டால் உங்களுக்கும் தான் பிரச்சினை. வழக்கு முடிவடையாது, ஆனால் நீங்கள் இங்கே பைத்தானிலேயே தங்கவேண்டியிருக்கும்… நான் வாரண்ட் கூட வாங்க முடியும்…” என்றார். “எந்த ஒரு விஷயத்திற்கும் காவல்நிலையத்தில் இருந்து சான்று தேவைப்படும். ஒரு பாஸ்போர்ட் வாங்கவேண்டும் என்றால்கூட…”

”நான் கையெழுத்து போடுகிறேன்”

“சரி” என்றார். “இங்கே அவருடைய அரசியல்கட்சிக்காரர்களுக்கு அக்கறை இல்லை. பழைய எவரும் கட்சியில் இல்லை…”

“தெரியும்”

“முனீர்” என அவர் அழைத்தார். கான்ஸ்டபிள் காகிதங்களைக் கொண்டுவந்து வைக்க நான் கையெழுத்துகளைப் போட்டேன்.

“நன்றி… இதனால் எல்லாருக்கும்தான் நன்மை” என்றார் இன்ஸ்பெக்டர்.

“சரி” என்றேன்.

“மறுபடியும் பார்ப்போம்” என்றார்.

நான் வெளியே வந்தபோது உண்மையில் நிம்மதியாக உணர்ந்தேன். பைத்தான் நகரில் முழுக்க அம்பேத்கரின் படங்களும் சிலைகளும் நிரம்பியிருந்தன. சிவாஜிக்கும் சம்பாஜிக்கும் வைக்கப்படும் சிலைகளுக்கும் படங்களுக்கும் சமானமாக, போட்டியாக வைக்கப்பட்டவை. ஏராளமான சுவரொட்டிகளில் எனக்கு எவரென்றே தெரியாத முகங்கள் சிரித்தபடி, கைகூப்பியபடி. தொப்பி போட்டவை, வெவ்வேறு வண்ணங்களில் மாலை அணிந்தவை, நெற்றியில் நீண்ட செந்தூரத்திலகம் அணிந்தவை…

நான் உடனே வீட்டுக்குச் செல்லவில்லை. நேராக கோதாவரியின் கரைக்குச் சென்று அமர்ந்திருந்தேன். அது நான் அதுவரை போகாத புதிய இடம். கோதாவரியின் கரையிலேயே மிகச்சில இடங்கள்தான் எனக்குத் தெரிந்தவை.

இருட்டியபிறகு கிளம்பி வீட்டுக்குச் சென்றேன். ஒரு டீ குடிக்கலாம் என நினைத்தேன், ஆனால் எங்களுக்கு டீ அளிக்கும் கடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியூர்க்காரர்கள் எங்கும் டீ குடிக்கலாம், என்னை உள்ளூரில் எவரேனும் அடையாளம் கண்டுகொண்டால் பிரச்சினை ஆகிவிடும்.

வீட்டை நெருங்கும்போது அத்தனை சலிப்பாக இருந்தது. அப்படியே திரும்பி பஸ் ஏறிவிடலாமா என்றுகூட நினைத்தேன். நான் வருவது அம்மாவுக்குத் தெரியாது. ஊரிலும் எவரும் என்னைப் பார்த்திருக்கவில்லை. அப்போது ஓர் எண்ணம் வந்தது, அம்மாவுக்கு ராதிகாவைப் பற்றி நான் அதுவரை சொல்லியிருக்கவில்லை. இதுதான் தருணம், சொல்லிவிடலாம். அவளுக்கு எந்த எதிர்ப்பும் இருக்க நியாயமில்லை, அவள் அக்கறைகாட்டக்கூட வாய்ப்பில்லை.

அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று எண்ணிக்கொண்டு நான் அரையிருட்டில் நடந்தேன். நான் எங்கள் பகுதியின் திருப்பத்தை அடைந்தபோது மின்சாரம் போய்விட்டது. மின்சாரம் போகும்போது உருவாகும் ஒருவகையான முழக்கம். வீடுகளில் மண்ணெண்ணை விளக்குகள் ஒன்றொன்றாக ஏற்றப்பட்டன. வீடுகள் கண் திறப்பதுபோலிருந்தது. சிறிய ஊடுவழியில் வெளிச்சமே இல்லை. கண்களைக் கூர்ந்து நடக்கவேண்டியிருந்தது. சாக்கடைக்குள் கால்சென்றுவிட எல்லா வாய்ப்பும் இருந்தது.

நான் என் வீட்டை அடைந்தபோது முன்கதவு திறந்துகிடப்பதைக் கண்டேன். வீட்டுக்குள் விளக்கு ஏதுமில்லை. அம்மா வெளியே எங்காவது போயிருக்கிறாளா? அல்லது கொல்லைப்பக்கம் இருக்கிறாளா? ஓசை கேட்கும்படிச் செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன். கூடத்தில் அப்பா வாங்கிப்போட்ட நான்கு பிளாஸ்டிக் நாற்காலியும் ஒரு பிளாஸ்டிக் மேஜையும் மட்டும் இருந்தன. இருட்டுக்குள் அவற்றின் வடிவம் தெரிந்தது. அப்பால் சமையலறை நோக்கி திறக்கும் கதவும் திறந்திருந்தது. மறுபக்கம் படுக்கையறை நோக்கித் திறக்கும் கதவு மூடியிருந்தது.

நான் ராதிகாவைப் பற்றி அப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஒருபக்கம் கண்ணும் செவியும் கூர்மையடைந்து அந்த அறையை அறிந்துகொண்டிருக்க மறுபக்கம் ராதிகாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லவேண்டிய சொற்களாக நான் கோத்து வைத்திருந்தவை சிதறி பல்வேறு தனிச்சிந்தனைகளாக மாறி குழம்பி ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய அப்பா அம்மாபற்றி. பாட்னா பற்றி. வங்காளம் பற்றி…

நான் “அம்மா” என்று அழைத்தேன். என் குரல் விந்தையான ஒரு கம்மல் கொண்டிருந்தது. தொண்டையை கனைத்தபடி “அம்மா!” என்று மீண்டும் அழைத்தேன். மீண்டும் “அம்மா!” என்றேன்

அங்கே எவருமில்லை, அதை உடலாலும் உணரமுடிந்தது.  அம்மா எங்கே தீப்பெட்டியையும் விளக்கையும் வைப்பாள் என்று நினைவுகூர முயன்றேன். எனக்கு அந்த வீடே நினைவுக்கு வரவில்லை.

சட்டென்று இருட்டில் அதைக் கண்டுவிட்டேன். நெஞ்சு ஒருகணம் நின்று பின் அறையத்தொடங்க, உடல் புல்லரித்துவிட்டது. அறையின் மூலையில் இருளைக் குவித்ததுபோல ஓர் உருவம் அமர்ந்திருந்தது. சற்று குனிந்து கண்களை இடுக்கி பார்த்தேன். இருட்டுக்குள் கன்னங்கரிய கரடி ஒன்று அமர்ந்திருப்பதுபோல. அதன் கண்கள் மட்டும் மெல்லிய மினுப்பு கொண்டிருப்பதுபோல.

“யார்?” என்றேன்.

இருட்டில் கரகரத்த குரலில் ஒரு சொற்றொடர் ஒலித்தது. நான் அந்த மொழியைக் கேட்டதே இல்லை. ஆணைபோல அத்தனை அதிகாரம் கொண்ட குரல். ஆனால் அடக்கமாகவும் அழுத்தமாகவும் அது பேசியது.

“யார்?” என்று மேலும் உரத்த குரலில் கேட்டேன். ”யார்? எழுந்திரு… யாரது?”

மீண்டும் அந்தக்குரல் என்னிடம் பேசியது, அந்த அறியாத மொழியில். நான் பாய்ந்து வெளியே வந்து முற்றத்தில் நின்றேன். உள்ளே அந்த குரல் வேகமாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.

என் உடலில் காற்றுபட்டு குளிர்ந்தபோதுதான் நான் அத்தனை வியர்த்து சட்டை நனைந்திருப்பதை உணர்ந்தேன். திரும்பி பக்கத்து வீடுகளைப் பார்த்தேன். அங்கெல்லாம் சிறு விளக்குகள் எரிந்தன. சன்னல் வெளிச்சம் சிவப்பாக தரையில் விழுந்து கிடந்தது. அந்த ஒளியே இருட்டைத் துலக்கப் போதுமானதாக இருந்தது.

ஒளி ஒரு தெளிவை அளித்தது. நான் மிக மெல்ல காலெடுத்து வைத்து வாசலை அடைந்து உள்ளே பார்த்தேன். இருட்டுக்குள் அந்த உருவம் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தது. நான் அறியாத குரல், அறியாத மொழி. ஆனால் அது அம்மா என்று எனக்கு எப்படியோ தெரிந்தது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:33

எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்

ஆசிரியருக்கு,

 

நானொரு வாடகை வீடு

யாருடைய

யார் இதில் வசிப்பது

 

…..குஞ்நுண்ணி

 

அடிபட்டு விழுந்த பறவை ஒன்று பறக்க எத்தனித்து மீண்டும் மீண்டும் வீழும் கவிதைகள் விஜயகுமாருடையது. இருளில் தனித்து விடப்பட்ட அக அவஸ்தைகளை  ஊடு நூலாகவும்  புற அவஸ்தைகளை பாவு நூலாகவும் மாறி மாறி நெய்து கவிதை செய்கிறார் விஜயகுமார்.  நான் மேற்கண்ட  குஞ்நுண்ணி கவிதைகளை அடிக்கடி நினைத்துக் கொள்ளவது உண்டு. இது ஒரு கவிஞன் உணரும் மீட்பற்ற சாம்பல் நிற உணர்வு. விஜயகுமாரின் கவிதைகளும் பெரும்பகுதி இந்த அலைகழிப்பின் நிலையழிவு.

சிற்றெறும்பின் நிழல் தொகுப்பில் உள்ள இந்த கவிதைகளை வாசிக்கையில் –

 

குரலொன்று பாடுகிறது

 

புறப்பட்ட இடம் சிதைந்து

போக இடமின்றி

இறங்க நிலமின்றி

இம்மைக்கும் மறுமைக்குமாய் அந்தரத்தில் ஆடுகிறது

என் ஊஞ்சல்

 

அது ஆடுகிறது

தூளியாகி

தொட்டிலாகி

கூண்டாகி

பாடையாகி

பானையாகி

 

சித்துவேலை தெரிந்த

குரலொன்று

மாறி மாறிப் பாடுகிறது

ஆராரிரோ

தாலேலலோ

அம்மம்மா

ஏலேல்லோ

ஐயையோ

முதுமக்கள் தாழியை நோக்கும் போது உள்ளே இருள் சில எலும்புகள் அது ஒரு வட்ட வடிவ நிரந்தர சிறை எனத் தோன்றும். தூளி ஒரு சிறை, தொட்டில் ஒரு சிறை, பாடை ஒரு சிறை பின்னர் தாழியும் ஒரு சிறை. இப்பிறவியில் எல்லையில்லா காலம் வரை இறப்பின் பாடலை கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். இறுதியில் வரும் அய்யய்யோ தான் கவிஞனின் குரல்.

 

மற்றொன்றில்

 

நீ இந்த உலகத்தின் ஆளில்லை

கருணையற்ற தேவன் ஒருவன் தனது

பணி நேரம் முடியும்போது விளையாட்டாய் உன்னை ஒரு

தொட்டிலை விடுத்து மற்றொன்றில்

தூங்க வைத்தான்

 

இது எனது பிரபஞ்சம் இல்லை

குரூரமான துரோகி ஒருவன் ஒரு

அலமாரியிலிருந்து இன்னொரு

அலமாரிக்கு என்னை வாஞ்சையுடன்

மாற்றி வைத்தான்.

 

தீர்ப்பில் உள்ள அச்சுப் பிழையால் அந்தமான் சிறையில் நாலாண்டுக்கு பதில் நாற்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தோர் உண்டு. வேறெங்கோ எக்காலத்திலோ பிறக்க வேண்டிய நாம் கடவுளின் கைமறதியால் இங்கு இப்படி பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு நிரந்தர ஒவ்வாமை விதிக்கப் பட்டுள்ளது, இது என்னுலகு அல்ல சொல்லப் போனால் இது எனது பிரபஞ்சமும் அல்ல என உணர்பவன் மற்றொன்றில் வாழ்கிறான். துரோகியின் வாஞ்சை எனும் ஒரு குரூர பண்பை ஏந்தியுள்ளதே இக்கவிதையின் சிறப்பு.

 

வெள்ளைச் சூரியன்     

 

மஞ்சள் ஒளி ததும்பக்

தண்கள் கூசும் சூரியனை

இன்று வேப்ப இலைகளிடையே

பளிங்கு நிறத்தில் பார்த்தேன்

அத்தனை வெண்மையை

அத்தனை தூய்மையை

அதற்கு முன் கண்டதில்லை

 

என் சின்னஞ்சிறு இலையே

அன்றாடம் நான் காண

சூரியனைக் கொண்டு வா

என் சின்னஞ்சிறு கசப்பே

கூசாமல் நான் வாழ

ஒரு பொழுதை அப்படியே தா.

 

கசந்த ஒளி என்பதே ஒரே வினோத அழகியல், இதுவே இக்கவிதை நமக்குத் தரும் வினோத சுவை.

 

“இருள் என்பது சூன்யம்

இருள் என்பது சாசுவதம்”

என்கிற இந்த வரிகள் இக்கவிஞனின் பிரகடனம் போல ஒலிக்கிறது.

 

மறுபாதி

 

என்ன நினைத்துக்கொண்டு

அந்த இலையை என்னிடம் நீட்டினாய்

அதுவோ ஒரு பாதி பச்சையாலிருந்தது

மறுபாதி உலர்ந்திருந்தது

 

ஒற்றை இலை எடுத்துப்

பாடம் செய்து வைத்தேன்

அதை வசந்தத்தில் குடிக்கொள்

அல்லது

அதைச் சூடிக்கொண்டு காத்திரு

 

 

நினைவிற்கு வக்கில்லை

 

பீரோவின் அந்தரங்கப் பெட்டியில்

பூட்டப்பட்ட ஒரு பொருள் அந்நினைவு

அதனோடு வீசப்பட்ட

ஒன்றிரண்டு அந்துருண்டை

அந்நாள்

காலம் அடிக்கடி திறந்து மூடுகிறது

நியாபகத்தின் கதவை

 

அந்துருண்டைகள் உருகிவிட்டன

சட்டென மறைந்துபோக

நினைவிற்கு வக்கில்லை

ஒருபுறம் காய்ந்த இலை, பீரோவின் அந்தரங்கப் பெட்டி என்கிற இரண்டு அழகிய உருவகங்களை கொண்டுள்ளதே இவற்றின் சிறப்பு. இந்த பேரிருப்பின்  சிற்றிருப்பின் அர்த்தமின்மையை ஒலிக்கும் ஓலம் இந்த தொகுப்பு. தேவதேவானும் இசையும் மிதந்து மிதந்து கொண்டாடும் இவ்வுலகையும் வாழ்வையும் இறக்கி வைக்க இயலா எடையுடன் துடித்து துடித்து வாழும் கவி விஜயகுமார். இருளுக்கு பதில் மாயையை கேட்பான் கவிஞன், இருளென்றாலும் உண்மையை கேட்பான் சற்று கூர் கொண்ட கவிஞன். உண்மைநாடும் கவிதைகள் கொண்டுள்ளதால் “சிற்றெறும்பின் நிழல்” ஒரு முக்கிய தொகுப்பு.  உங்கள் தனிப்பட்ட அழகியல் கொள்கைக்கு உகக்காவிடிலும் குமரகுருபரன் விருதுக்கு கவிஞர் விஜயகுமாரை தேர்வு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள், விருது பெறும் கவிஞருக்கும்.

கிருஷ்ணன், ஈரோடு.

 

ஒரு ஸ்க்ரோல் தூரம்

சிற்றெறும்பின் நிழல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:32

பேச்சு, சிந்தனை, திருப்புமுனை

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாதா மாதம்  நடத்தும் கூட்டங்களில் (நாவல்களை முன்வைத்து) தடையின்றி பேசும் எனக்கு மிகுந்த மகிழ்சியளித்தது தங்களின் அறிவிப்பு. முதல் நாள் மாலையே மலைத் தங்குமிடத்திற்கு வந்துவிடும் வழக்கப்படி நானும் எனது நண்பர் KJ .அசோக்குமாரும் வந்து சேர்ந்தோம் . மறுநாள் நீங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் வரை ஒரு வித எதிர்பார்பும் அதிகரித்தபடி இருந்தது.

பேச்சு, சிந்தனை, திருப்புமுனை

At the age of 20, I had a dream: becoming a writer like Jeyakanthan. However, as usual, I found myself compelled to pursue a technical course in order to secure employment and lead a peaceful life. “You can do whatever you want and settle in a secure financial and social status,” I was told” I became one, but it took nearly 20 years to accomplish it.

The fire within…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:30

May 1, 2025

அன்றைய பார்வைகள்!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கம். என் பெயர் வினோத் ராஜ். நவீனத் தமிழிலக்கிய வாசகன். மிகச் சமீபத்தில், பழைய புத்தகங்களை விற்பனைச் செய்யும் நண்பரிடமிருந்து ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலை வாங்கியிருந்தேன்.

தமிழினி பதிப்பகம். முதல் பதிப்பு நவம்பர் 1999. எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பிரதியின் சிறப்பு என்னவென்றால், ‘ஞானக்கூத்தன்’ பெயர் நாவலின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. கூடவே, ‘இந்தியா டுடே மதிப்புரைக்கு’ என்றும் எழுதப்பட்டுள்ளது. தமிழினி பதிப்பகத்திடமிருந்தோ இந்தியா டுடே இதழிடமிருந்தோ மதிப்புரை வேண்டி, ஞானக்கூத்தனுக்கு வழங்கப்பட்ட பிரதி என்று அறிய முடிகிறது.

இப்பிரதியினுள், ஞானக்கூத்தன் இந்தியா டுடேவுக்கு எழுதிய மதிப்புரையின் Paper Cut மடித்து வைக்கப்பட்டுள்ளது. கூடவே, இராஜமார்த்தாண்டன் நாளிதழொன்றுக்கு எழுதிய மதிப்புரையின் Paper Cutஉம் மடித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உங்கள் பார்வைக்கு Scan செய்து அனுப்பியுள்ளேன். இராஜமார்த்தாண்டன் எழுதிய மதிப்புரையில் கடைசி வரிகள் மங்கலாக உள்ளன. அந்த மதிப்புரை வெளியான நாளிதழ் எதுவென உறுதியாகத் தெரியவில்லை. தினமணி என நினைக்கிறேன். ஜனவரி 05, 2000 அன்று வெளியாகியுள்ளது. அதைப் பென்சிலால் காகிதத்தில் குறித்து வைத்துள்ளேன்.

நன்றி.

வினோத் ராஜ்

தியாகத்தின் உயிர்ப்பலிகளின் அர்த்தம் என்ன?

ராஜமார்த்தாண்டன்

மனித வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. கலைத்துப் போட்ட நூல்கண்டைப் போலச் சிடுக்குகள் கொண்டது. பல்வேறு பார்வைகள் கோணங்களிலான தொடர்ந்த கேள்விகள், விவாதங்கள் மூலமாகவே தீர்வுகளை நோக்கிய முன்நகர்தல் சாத்தியம். ஆனால், தமிழ் நாவல்களோ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு மிக எளிய, ஒற்றைப்படையான தீர்வுகளையே வாசகர் முன் வைக்கின்றன. விதிவிலக்குகள் மிகச் சிலவே அவற்றுள் ஒன்று ஜெயமோகனின் மூன்றாவது நாவலான பின்தொடரும் நிழலின் குரல்.

காலம் நிர்த்தாட்சண்யமானது. ஒரு காலகட்டத்தின் பெருங்கனவை – லட்சியத்தை – இன்னொரு காலகட்டம் முற்றாகச் சிதைத்து விடுகிறது. அப்படியானால் மனிதனின் கனவுகளுக்கு, லட்சியங்களுக்கு, தியாகங்களுக்கு அர்த்தம்தான் என்ன? மாபெருங்கனவான ரஷியப் புரட்சிக்குப்பின் ஸ்டாலினிய ஆட்சியின் போது, லட்சியத்தின் பெயரால் கொன்று குவிக்கப்பட்ட – சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களின் உயிர்ப்பலிகளுக்கு, அந்தக் கனவின் சிதைவுக்குப் பின் அர்த்தம் என்ன? கேள்விகள் தொடர்கின்றன. சார்பான கருத்துகளும் மறுதலிப்புகளும் விவாதங்களும் எதிர் விவாதங்களும் மேலும் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன.

ரப்பர் தோட்டத் தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவன் தோழர் அரு ணாசலம், கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிட நிர்பந்தத்தால், அவன்மீது மிகுந்த அக்கறை கொண்ட தோழர் கெ.கெ.எம்மின் தலைமையை எதிர்த்து நின்று வெற்றி பெறுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அங்கு நடந்த சித்திரவதைகள், உயிர்ப்பலிகள் பற்றித் தோழர் வீரபத்ர பிள்ளை திரட்டிய தகவல்கள் காரணமாக அவர் தொழிற்சங்கத்திலிருந்தும் கட்சியின் வரலாற்றிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட விவரம் அறிகிறான் மனம் குழம்பி, வீரபத்ர பிள்ளையின் எழுத்துகள் மூலமாகவும் ரஷியப் புரட்சிக்குப்பின் கொல்லப்பட்ட புகாரின் வாழ்க்கையினூடாகவும் விவாதங்களினூடாகவும் பயணம் மேற்கொண்டு, இறுதியில் சில தெளிவுகளை நோக்கி நகர்கிறான். ’என் மனம் குழந்தையையே கடவுளாக ஏற்கும். அரைஞாண் குலுங்க, சிறுபண்டிய சைய, குழல் சுருள் பறக்கச் சிரித்து வரும் பெண் குழந்தையை’ என்கிறார் ஒரு சந்தர்ப்பத்தில் நாவலின் கதாபாத்திரமான எஸ்.எம்.ராமசாமி. குழந்தைகளின் களங்கமின்மையும் பெண்களின் கருணையுமே ஆண்கள் நடத்தும் புரட்சிகளையும் போராட்டங்களையும் ஓரளவிலேனும் நல்வழிப்படுத்த முடியும் என்னும் பார்வையை நாவலினூடான பயணம் உணர்த்துகிறது. குழந்தை மனைவி என்னும் பிணைப்பு இல்லையேல் அருனாசலத்தின் வாழ்க்கையும் வீரபத்ர பிள்ளையைப் போல இருளில் மூழ்கியிருக்கக்கூடும் இறுதியில் மீட்பர் வந்தபோது, அவரது எளிய கோலத்தால் அவரை, நம்ப மறுக்கிறார் பாதிரியார்.

ஆனால்-குழந்தைகள்தாம் முதலில் மீட்பரைப் புரிந்துகொண்டு அவரிடம் செல்கின்றன. புகாரினினைப் பிடித்து மேகங்களுக்குத் தூக்குவதும் லிஸிக் குழந்தைதான். இப்படி ஒரு விரிவான தளத்தைக் கொண்டுள்ளதால், இந்த நாவல் நேர்கோட்டில் அமையாமல், வரலாற்று நிகழ்வுகள், அதுதொடர்பான சிறுகதைகள். நாடகங்கள், கவிதைகள், விவாதங்கள். எதிர் விவாதங்கள் எனப் பல நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாசக அனுபவம் ஆழமும் விரிவும் கொள்கிறது.

நாவவில் வரும் ரஷிய வரலாற்று நிகழ்வுகளும் இன்றைய இந்திய அரசியல் சித்தாந்தம் மற்றும் இலக்கிய விவாதங்களும் ஜெயமோகனின் அறிவின் சாமர்த்தியமும் —- நாவலின் கலாபூர்வமான தேவைகளாகி, வாசகனுள் பல்வேறு சிந்தனைகளையும்  தேடல்களையும் புரிதல்களையும் விரிவுபடுத்துவனவாகவே அமைந்துள்ளது. இது நாவலின் சிறப்பம்சம்.

நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் ஜெயமோகனின் உத்வேகம் மிகுந்த மொழிநடை. அரசியல் சித்தாந்த விவாதங்கள், அருணாசலத்துக்கும் அவன் மனைவிக்குமிடையேயான ஊடலும் கூடலுமான இயல்பான தாம்பத்திய வாழ்க்கை, சடங்குகளின் விவரணை, குடலைப்பிடுங்கும் பசியில் வீரபத்திர பிள்ளையின் மனநிலைச் சித்திரிப்பு, அருணாசலத்தின் மனப்பிறழ்வின் கட்டறுந்த ஓட்டங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் தொழிற்சங்கத் தோழர்களின் உரையாடல்கள் —- சைபீரிய வதைமுகாம், உயிர்த்தெழுதல் காட்சி என நாவலில் வரும் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப மொழிநடையில் வேறுபாடு காட்டி மொழியின் வெளியீட்டுச் சாத்தியப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார் ஜெயமோகன்.

கம்யூனிஸ சித்தாந்தத்தின் செயல்பாட்டை மட்டுமே விமர்சிக்கும் நாவல் அல்ல இது ஒழுக்கம் அறம், சமயம், அரசியல் சார்ந்த அனைத்துச் சித்தாந்தங்களும் அவை நிறுவனங்களாகிச் செயல்படுத்தப்படும்போது பெரும் அழிவுகளை ஏற்படுத்தின இவற்றைச் சித்திரிப்பதன் மூலம் மானிட, அறம் குறித்தான ஆழ்ந்த தேடல்களின் வெளிப்பாடுதான் இந்த நாவல் இது. நாவலின் பல இடங்களில் உரையாடல்கள் மூலமாகச் சுட்டிக்காட்டவும் படுகிறது. ஒரு பேரழிவை நிகழ்த்திய சமீபத்திய வரலாற்று நிகழ்வு என்றவகையிலேயே, மானிட அறம் குறித்தான தேடலுக்குப் பொருத்தமான பின்னணியாக ஸ்டாலின் காலத்திய சோவியத் வரலாறு நாவலில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

காந்தி, தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, புகாரின், சுந்தர ராமசாமி. ஞானி, ஜெயமோகன் போன்ற நிஜ மனிதர்களும் இந்த நாவலில் கதாபாத்திரங்களாக வந்து விவாதங்களிலும் கலந்துகொள்வது வாசகரை நாவலினுள் மிக நெருக்கமாக உறவு கொள்ள வைக்கிறது தமிழில் இதுவரை வெளிவந்துள்ள அரசியல் நாவல்களில் விரிவான தளத்தில் இயங்கும் முதன்மையான நாவல் இதுதான்.

நாவலின் சம்பவங்களுக்குப் பொருத்தமான அற்புதமான வண்ண ஓவியங்களுடன் கூடிய வெகுநேர்த்தியான, சிரத்தையான அச்சமைப்பு. மிக முக்கியமான இந்தக் கலைப்படைப்புக்கு மேலும் கௌரவம் சேர்க்கிறது.

ராஜமார்த்தாண்டன்ஜனவரி 05, 2000

வரலாறு தத்துவம் புனைவு – விரிவான விவாதங்களையும் பலவிதமான புனைவுகளையும் உள்ளடக்கிய நாவல்

அச்சில் 700 பக்கங்களுக்கு மேல் பரவி ஓடும் ஜெயமோகளின் இரண்டாவது நாவல் இது. தாவலின் பருமனைப் பார்த்தாலே ஆசிரியரின் உழைப்பு சொல்லிக் காட்டாமலே விளங்கக் கூடியது. ஆனால் அந்தப் பருமனைத் தருவது கதை என்பதைக் காட்டிலும் உள்ளே அனுமதிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வரலாறு, கம்யூனிச தத்துவத்தைப் பற்றிய விவாதம், இன்னும் அது தொடர்பான புனைவுகள் என்பது பொருந்தும். 12 பெரிய தலைப்புகளும் அதற்குள் சிறு அத்தியாயங்களுமாக அமைந்திருக்கும் இத்தாவல் விறுவிறுப்பாகவும் சலிப்பாகவும் இயங்குகிறது. சலிப்புக்குக் காரணம், ஆசிரியர் வீரபத்திரப்பிள்ளை என்ற பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்ய மேற்கொண்ட யுக்தி. ஆனால் இந்த சலிப்பை அகவாரசியமாகக் கொண்டுவிடக்கூடாது. விளைவு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை வாசகனின் அவசரத்துக்கு இடம் தராததால் ஏற்படும் சலிப்பு. இது பிரமிக்கத்தக்க வகையில் நேராக்கப்படுகிறது. தொழிற்சங்கிகளான அருணாச்சலம். கெ.கெ.மாதவன் நாயர், வீரபத்திரப்பிள்ளை, ரஷ்யத் தலைவரான புகாரின் இவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கம் பெறுகிறார்கள். இவர்களில் பின்னிருவர் அரூபிகள். கெ.கெ.மாதவன் நாயர் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறார் என்றால், அருணாசலம் அதிநுட்பமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நாவலில் ’மட்கி’ என்ற ஒரு சொல்தான் ஜெயமோகனை அளவுக்கு அதிகமாகப் பற்றிக்கொண்டுள்ளது. ஆனால் எழுதுகை என்பதில் சிறிதளவும் சோர்வடையாத இந்த நாவல் பல சந்தர்ப்பங்களில் மனதை நெகிழ வைக்கிறது. ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வதெப்படி என்ற நாடகம் ஒரு ஜன்னி கண்ட தன்மையில் உருவாகிறது. த்வன்யா லோகம் என்ற ஸம்ஸ்கிருத நூல் ஸ்தாயி பாவம், சஞ்சார பாவம் என்று பேசும். அதற்கு இந்த அத்தியாயம் அற்புதமான எடுத்துக்காட்டு. கடுங்குளிர் கவிதைகள் என்ற இதில் உள்ளடங்கிய தொகுப்பில் விடுதலை என்ற கவிதை சில்லிட வைப்பதாகும். கவிதைகள், நாடகங்கள், குறிப்புக்கள் தவிர கடிதங்களும் உறுப்புக்களாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நாவலில், தமிழின் முதல் நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம். கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் முதலியவற்றிலேயே கடிதங்கள் கதை மாந்தர்களின் பரிவர்த்தனைக்குக் கருவியாக்கப்பட்டுள்ளன. ’57 நெ. மாதா கோவில் வீதி, காரைக்கால், ஆதித்ய வாரம்’ என்று வலது கைப்பக்கத் தலைப்பில் குறிப்பிட்டு அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம். ஒரு கடிதத்தை வரைகிறது. ஆதித்ய வாரம் என்றால் ஞாயிற்று வாரம்.

ஒய்யாரத்து சத்து மேனோன் மலையான மொழியில் எழுதிய இந்துலேகா (1889) என்ற நாவலில் ஒரு அத்தியாயம் முழுவதும் உலக விசாரம் செய்யப்படுகிறது. நாத்திக வாதமும் இந்திய தேசிய காங்கிரஸும்தான் இந்த அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகின்றன. ஆங்கிலம் படிப்பது ஆபத்தானது என்றால் அந்த ஆபத்தை தான் வரவேற்பதாகக் கூறிய சந்து மேனோனின் கருத்துக்கு நேர்மாறாக தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல என்ற வேதநாயகம் பிள்ளை தனது பாத்திரமான ஞானாம்பானைப் பேச வைக்கிறார். அத்தியாயம் 41. 42களில் நீதித்துறைப் பற்றியும் கல்வித்துறை பற்றியும் செய்யப்படும் இந்தப் பிரசங்கங்களைக் குறித்து இவ்வளவும் தான் செய்த பிரசங்கம் என்று யாராவது எண்ணிவிடப் போகிறார்களே என்று கடைசியில் ’என்றாள் ஞானாம்பாள்’ என்று அத்தியாய இறுதியில் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். இப்படி க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். இந்து லேகாவின் அத்தியாயத்தைப் பற்றி, அந்த அத்தியாயம் கதையின் மேன்மைக்குத் துணைபுரியவில்லை என்று கெ.அய்யப்பப் பணிக்கர் குறிப்பிட்டிருக்கிறார். தங்களது அன்றாடத் தன்மையுள்ள வாழ்வைத் தவிர கதை மாந்தர்கள் இலக்கிய, அரசியல். ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு அவற்றைப் பற்றி விவாதிப்பது வாசகர்களுக்குப் பிடித்தமான விஷயமல்ல. பிரதாப முதலியார் சரித்திரம் மற்றும் இந்துலேகா இரண்டிலும் அதற்குரிய நியாயங்களை ஆசிரியர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. கதைக்கு மாறான செய்திகளைக் குறித்த ஆட்சேபம் நியாயமானதுதான். ஆனால் கதாபாத்திரத்தின் வாழ்க்கையே அன்றாடத் தன்மையிலிருந்து விலகியிருக்கிற பட்சத்தில் இந்தத் தடைக்கு ஏற்பில்லை. ஜெயமோகனின் இந்த நாவல் இவ்வகையைச் சேர்ந்தது. அன்றாட வாழ்க்கை பின்தள்ளப்படுவதும் அது தனக்குரிய இடத்தைப் பற்றிக் கொள்ளத் தீவிரமாகப் போராடுவதும் நாவலை அசாதாரணமாக்குகிறது. ஆண்களே பெருமளவு பங்கு பற்றும் நிறுவனங்களில் காம விகாரங்கள் தலையெடுப்பது பற்றியும் இந்த நாவலில் பேசப்படுவது கவனிக்கப்பட வேண்டும். இதைத் தவிர விரசங்களும் உண்டு. விரசமும் ரசாபாசமும் நவீன இலக்கியத்தின் அறிகுறிகளாகிவிட்டன தொடக்கத்திலிருந்தே. இந்த நாவலைப் பலவிதமாகப் படிக்கலாம். 70ன் தொடக்கத்தில் ஸோல் ஸெனிட்சின் எழுதிய நாவல்களைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு இந்த நாவலைப் படித்து முடித்தபோது ஏற்பட்டது. ஜெயமோகனின் முந்தைய நாவலான விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. அதையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது இந்நாவல்.

ஞானக்கூத்தன், இந்தியா டுடே, மே 17, 2000

பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க

contact@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:35

அலை

[image error]இலங்கையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். தொடக்ககால ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அ.ஏசுராசா தொடர்ந்து இவ்விதழை நடத்தினார்.

அலை அலை அலை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:34

காவியம் – 11

யட்சி, சாதவாகனர் காலம் பொயு 1, பைதான் அருங்காட்சியகம்

ஒரே நாளில் நான் உலகிலேயே ஆற்றல் மிக்கவனாக என்னை உணரத்தொடங்கினேன். ’உலகத்தின் உச்சியில் நின்றிருப்பது போல’ என்று ஒரு சொல்லாட்சியை அடிக்கடி இலக்கியத்தில் படிப்பதுண்டு. உண்மையில் அதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரிந்ததில்லை. இலக்கிய நூல்களில் அப்படி நூற்றுக்கணக்கான வரிகளை வெறும் வரிகளாக எடுத்துக்கொண்டு கடந்து செல்கிறோம். தேய்வழக்கு என்று சாதாரணமாக தள்ளிவிடுவதும் உண்டு.

ஆனால் யோசித்துப் பார்க்கையில் தேய்வழக்குகள் தான் உண்மையில் மிக ஆழமான, அரிதான, உச்சகட்டமான அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன என்று தெரிகிறது. தேய்வழக்கு என்னும் விலக்கத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவை மகத்தான கவிதை வரிகளாகத் திகழ்கின்றன. மானுட மேன்மையோ, ஆழமோ, பிரபஞ்சப்பொருளோ வெளிப்படும் அபாரமான அனுபவங்கள் மிகமிக அரிதாகவே நிகழ்கின்றன. நிகழ்ந்ததுமே அவை பிரமிக்கச்செய்யும் பேருருவத்துடன் நம் முன் நின்றிருக்கின்றன. நம் மொழி செயலிழந்து நின்றுவிடுகிறது. நமக்குநாமே கூட அவற்றை சொல்லிக்கொள்ள முடிவதில்லை.

எங்கோ ஒருவன் அதற்குரிய சரியான வார்த்தையை, சொற்சேர்க்கையை, படிமத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான். அதை அவன் சொன்னதுமே நூற்றுக்கணக்கான உள்ளங்கள் ’ஆம் அதுதான்! அப்படித்தான்!’ என்று பாய்ந்து வந்து ஏற்றுக்கொள்கின்றன. அது அழிவதே இல்லை. நாவிலிருந்து நாவுக்கு, நூலில் இருந்து நூலுக்கு தாவி தலைமுறைதோறும் சென்றுகொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் அத்தகைய தருணங்களுக்கு அதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

காலப்போக்கில் அதற்கிணையான சற்று வேறுபட்ட அனுபவங்களுக்குக்கூட அந்தச் சொற்றொடர்களை அவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் அத்தகைய அனுபவங்கள் எதற்குமே வேறு சொற்றொடர்கள் இல்லை. அரிதான ஒன்றுக்குத்தான் மிகக்குறைவான வர்ணனைகளும் விளக்கங்களும் இருக்கின்றன. அவ்வாறு அது தேய்ந்து பழையதாகிறது. அடிக்கடி கண்ணில் படுவதனாலேயே பொருளற்றதாகிறது. இலக்கியக் கட்டுரைகளைத் திருத்தும் ஆசிரியர்களால் சிவப்பு மையால் அடிக்கோடிடப்பட்டு இகழ்ச்சியுடன் சூள்கொட்டச் செய்கிறது.

என்றோ ஒருநாள் நமக்கும் ஓர் அரிய அனுபவம் வாய்க்கிறது. நம்மால் அதை நாமறிந்த எந்த சொற்றொடர் கொண்டும் விளக்கிவிட முடிவதில்லை. நமக்குத் தெரிந்த மொழி என்பது முச்சந்தியில் மட்டுமே திகழக்கூடியதென்றும், நம் படுக்கையறைக்கும் பூஜையறைக்கும் கழிப்பறைக்கும் வரக்கூடியதல்ல என்றும் அப்போது உணர்கிறோம். வேறு வழியே இல்லை, தேய்வழக்கைத்தான் எடுத்தாகவேண்டும். நாம் எண்ணிக்கூட எடுப்பதில்லை. நம் உள்ளம் தன்னிச்சையாக தேய்வழக்கொன்றை எடுத்துக்கொள்கிறது.

ஆனால் அப்போது அந்த தேய்வழக்கு அக்கணம் பிறந்த புதிய தெய்வம் போல் நின்றிருக்கிறது. நம்மால் வெட்டவெளியிலிருந்து மந்திரத்தால் உருக்கொள்ளச் செய்து எடுக்கப்பட்டது போல. நாமன்றி பிற எவரும் அதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்பது போல. அதை பித்துப் பிடித்தது போல் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் உள்ளமே அதுவாக நிகழ்கிறது. அதையே அனைவரிடமும் சொல்கிறோம். நம்மை அறிந்தவர்கள் கண்முன் கோமாளிகளும் பைத்தியக்காரர்களுமாக ஆகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை.

இப்படி சொல்கிறேன், ஒரு தேய்வழக்கில் வாழ வாய்ப்பற்றவர்கள் அரிதான ஒன்றை ஒருபோதும் அடையாதவர்கள். அடைந்த அனுபவங்களை முழுக்கச் சரியாகச் சொல்லில் அமைத்து விட்டவர்கள் புதியதாக எதையும் அறியவில்லை. அவர்கள் மிக எளிய வாழ்க்கை மட்டுமே வாழ விதிக்கப்பட்டவர்கள். சந்தையில் கடை பரப்பப்பட்டிருக்கும் எளிய பயன்பாட்டுப் பொருட்களை போன்ற அனுபவங்கலையே அடைந்திருக்கிறார்கள். கருவறை தெய்வத்தின் சிலைக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் நவமணிகளைப் போல மிக அரிதான அனுபவங்கள் இப்புவியில் உண்டு என்பதை அவர்கள் அறியவில்லை.

எனக்கும் ராதிகாவுக்குமான உறவு மறுநாள் காலை முதல் முற்றிலுமாக மாறி பிறிதொன்றாக ஆகிவிடும் என்று அன்று இரவு முழுக்க நான் எதிர்பார்த்தேன். அந்த இரவை நான் எழுத எனக்குத் தெரிந்த காவிய இயல் போதாது. எண்ணி எண்ணிச் சொற்கள் சலித்து, உணர்வுகள் அப்படியே மிஞ்சியிருக்க, படுக்கையிலேயே எழுந்தமர்ந்து, அந்த அசைவாலேயே உள்ளத்தைப் புரட்டிக்கொண்டு, பிறிதொரு இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி, மீண்டும் சலித்து, மீண்டும் எழுந்தமர்ந்து, ஒவ்வொரு கணமாக இரவை ஓட்டி, கடந்து வந்த அனுபவம் கொண்டவர்கள் இதை நான் இன்னமும் கூடச் சொல்லலாம் என்றே எண்ணுவார்கள்.

பின்னிரவில் எழுந்து வெளியே வந்து, வானம் முழுக்க நிரம்பி பரவிக்கிடந்த விண்மீன்களைப் பார்த்தபடி நின்றேன். காற்று இரண்டு பக்கங்களிலிருந்தும் மாறி மாறி வீசிக்கொண்டிருந்தது. பனாரஸ் நகரின் காற்று அப்படித்தான். எங்கிருந்தோ அது கங்கைக்குச் செல்லும். கங்கையிலிருந்து மெல்லிய பாசி மணமும் சேற்று மணமுமாக திரும்பிச் சுழன்று வரும். ஒன்றைத் திரும்ப திரும்ப சொல்வது போல, வலியுறுத்துவது போல காற்று வீசிக்கொண்டிருக்கும்.

என் மார்பிலும் முதுகிலும் மாறி மாறி சட்டை பறந்து துடித்தது. தலைமயிர் அலைபாய்ந்தது. இருகைகளையும் விரித்து காலை சற்று உந்தினால் எடையின்றி காற்றிலேறி விண்மீன் வரை சென்றுவிட முடியும் போல் இருந்தது. அந்தக்கணத்தில் ஒருவன் தன்னை மிகப்பெரியவனாக உணர்கிறான். ஏனெனில் அவன் அப்போது மனிதனாக அல்ல. இயற்கையோடு இணைந்த ஒரு இருப்பாக உணர்கிறான். அப்போது சகமனிதர்கள் மிக அற்பமானவர்களாக விலகிச் சென்றுவிடுகிறார்கள். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஐயத்திற்கு அப்பாற்பட்ட மேதையான ஸ்ரீகர் மிஸ்ரா கூட. வானம், நட்சத்திரங்கள், நிழலென உருமாறியிருந்த மரங்கள், அலையடித்துக் கொண்டிருந்த காற்று, அப்பால் எங்கோ குளிரென்றும் மணமென்றும் தன்னை அறிவித்துக்கொண்டிருந்த நீர் ஆகியவற்றுடன் நான். பிறிதொன்றும் புவியில் இல்லாமல் இருந்தது.

ஆனால் மறுநாள் ராதிகாவை சந்திக்கும்போது ஒன்றும் நிகழவில்லை. உண்மையில் அன்று காலையிலேயே ஒன்றும் நிகழவில்லை. அந்த காலையில் முந்தையநாளின் உள்ளக்கிளர்ச்சிகூட விலகிவிட்டிருந்தது. வழக்கமான, கண்கூசும் வெயிலுக்குள் விழித்தெழுந்த, பொழுதுகடந்த மாலை. முந்தையநாள் விடியற்காலை நான்கு மணிக்கோ ஐந்து மணிக்கோதான் நான் வந்து படுத்துக்கொண்டேன். விடிவெள்ளி எழுந்தபிறகு தான், அது எனக்கு நினைவிருக்கிறது. கால் கடுத்து படிகளில் அமர்ந்திருந்தேன். பிறகு படிகளிலேயே மல்லாந்தேன். விடிவெள்ளியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

விடிவெள்ளி அத்தனை சுடர்விடுவது என்று அப்போது தான் தெரிந்தது. அது மட்டும் வானத்தில் இருப்பது போல் இருந்தது. வானத்தில் விண்மீன்கள் உதிக்கும் என்பதே அப்போது தான் எனக்குத் தெரியும்போல் இருந்தது. மெல்ல என்னுடைய எண்ணங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விடுபட்டு தனித்தனிச் சொற்றொடர்களாக ஆகி, கைகால்கள் தளர்ந்து படிகளில் பரவ, உள்ளம் இடமும் காலமும் அழிந்து கரைய, என் குரட்டையை நானே கேட்டு விழித்துக்கொண்டேன். உடலெங்கும் தூக்கம் பரவி ஈரத்துணி போல் எடைகொள்ள எழுந்து மெல்ல நடந்து படுக்கையில் சென்று குப்புறப் படுத்தேன்.

விழித்துக்கொண்டபோது என் அறைக்குள் வெயில் பரவியிருந்தது. ஸ்ரீகர் மிஸ்ரா என் கதவைத் தட்டியபின் உள்ளே வந்து “உனக்காக டீ கொண்டுவந்தேன்” என்றார்.

நான் எழுந்து “ஐயோ” என்றேன்.

“பரவாயில்லை, நீ நேற்று தூங்கியிருக்க மாட்டாய்” என்றார்.

“ஆமாம்” என்றேன்.

“அரிய அனுபவம். காதல் நிகழ்வது இங்கே பத்தாயிரத்தில் லட்சத்தில் ஒருவருக்குத்தான்” என்றார்.

நான் புன்னகைத்தேன். படுக்கையில் அமர்ந்து அவர் அளித்த டீயைக் குடித்தேன். நன்றாகவே டீ போட்டிருந்தார். அவர் சாந்திநிகேதனில் படித்தவர். வங்காளிகள் நல்ல டீ ரசிகர்கள். கல்கத்தா ஒரு நகல் லண்டன். வங்காளிகளின்  காபிதான் சகிக்காது, பிரிட்டிஷ் காபிபோலவே இருக்கும் என்பார்கள்.

ஸ்ரீகர் மிஸ்ரா என் முன் அமர்ந்து “உண்மையில் காதல் என்பது மிக மிக சாதாரணமான அனுபவம். அத்தனை விலங்குகளும் அடையும் ஒன்று. மிக எளிதாக அது நிகழவேண்டும் அப்படித்தான் நிகழவும் செய்கிறது. இங்கு நாம் நெறிகள் வழியாக நிபந்தனைகள் வழியாக அதை அரிதாக்கிக் கொண்டிருப்பதனால்தான் அதை எதிர்கொண்டவுடனே அத்தனை பதற்றம் வருகிறது. ஆனால் அதை அணுகும்போது அது அத்தனை சாதாரணமாக இருக்கும். ஊற்றுத் தண்ணீர் போல அத்தனை எளிதாகவும் இனிதாகவும் இருக்கும். அந்த எளிய இனிய தன்மைதான் அதன் அழகு. அது தேன் போல ருசிக்க வேண்டும் என்றும், மது போல வெறியூட்ட வேண்டும் என்றும் நீ எதிர்பார்க்கக் கூடாது” என்றார்.

நான் புன்னகைத்தேன். எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தபோதும் அது அப்படித்தான் என்று அப்போது தெளிவாகத்தெரிந்தது. ஸ்ரீகர் மிஸ்ரா நிறையப் பேசுவார் என்று எண்ணினேன், எனக்கு அப்போது முதல்முறையாக அவருடைய பேச்சு தேவையிருக்கவில்லை. ஆனால் அவர் மேற்கொண்டு பேசாமல் எழுந்து கைகளை நெளித்து சோம்பல் முறித்துவிட்டு “ஒரு கட்டு வினாத்தாள் இருக்கிறது” என்றபின் திரும்பிச் சென்றார்.

ஒன்பது மணிக்கு கல்லூரிக்குச் சென்றேன். கொன்றை மரங்கள் சாய்ந்து கவிந்து கூரை போல் ஆகிவிட்டிருந்த நீண்ட செங்கல் பதித்த பாதையில் என் கண்கள் மிகத் தொலைவிலேயே, ஒரு சிறு அசைவிலேயே, ராதிகாவை அடையாளம் கண்டன. அவள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூக்கள் போட்ட சுடிதார் அணிந்திருந்தாள். அப்போது தான் நான் ஒரே ஒரு முறை மிகத் தற்செயலாக அவளுடைய அந்த ஆடை எனக்குப் பிடித்திருந்ததை சொன்னேன் என்பதை நினைவு கூர்ந்தேன். அது அவளுக்குள் இருந்திருக்கிறது.  அத்தனை அறிவுஜீவி பாவனைகளுக்குள்ளும் ஒரு சாதாரணப் பெண் அதற்காகச் செவி கூர்ந்திருக்கிறாள். நான் அந்த எண்ணம் அளித்த புன்னகையுடன் அவளை நெருங்கினேன்.

அவள் தனக்குள் சிரித்துக்கொண்டு, பக்கவாட்டில் கொன்றை மரங்களை பார்த்துபடி, மெல்ல தளரத்தொடங்கிய நடையுடன் நெருங்கி வந்தாள். நான் நின்றபோது என் அருகே வந்து “ஹாய்” என்றாள். அவள் குரல் தளர்ந்ததுபோல, தழைந்ததுபோல இருந்தது. அப்படி அவள் குரலை நான் கேட்டதே இல்லை

எப்படி எதைப் பேசத்தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் முழு மனதையும் திரட்டி உந்தி முன் சென்று “இந்த சுடிதார் அழகாக இருக்கிறது. இதை முன்னரே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

“ஆம் தெரியும்” என்று அவள் சொன்னாள். அவள் கன்னம் வெட்கத்தில் சிவக்க முடியுமென்று அப்போது தான் தெரிந்துகொண்டேன்.

“உனக்கு நினைவு இருக்க முடியுமென்று நான் நினைக்கவேயில்லை” என்றேன்.

“உனக்குத்தான் நினைவிருக்காது. இப்போது பார்த்தபோதுதான் நினைவு வந்திருக்கும்” என்றாள்.

“ஆமாம்” என்றேன்.

“ஏனென்றால் நீ அதை தன்னை மறந்து சொன்னாய். நான் கண்களைத் தூக்கியதுமே பதறி விலகிக்கொண்டாய் உண்மையில் எனக்கும் அதுதான் தொடக்கம்.”

“எது?” என்றேன்.

“இதுதான்” என்றாள்.

நான் சிலகணங்களுக்குப்பிறகு “நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றேன்.

“ஏன்?” என்றாள்.

“உன்னுடைய உலகமே வேறு” என்றேன்.

எது?”

“உன் படிப்பு, குடும்பம், சமூகம், சாதி…”

“புற உலகம்” என்று அவள் சொன்னாள். “இளமையிலிருந்து எனக்கென்று ஓர் அகவுலகம் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதில் மட்டும்தான் நான் வாழவேண்டுமென்று கற்பனை செய்தேன். அதற்குள் தகுதியற்ற யாரும் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கொஞ்சம் கடுமையாகவும் அவ்வப்போது முரட்டுத்தனமாகவும் கூட இருந்தேன். மிக இயல்பாக நீங்கள்… நீ உள்ளே வந்தாய்.”

அவள் ‘நீ -நீங்கள்’ என்று அடைந்த அந்த தடுமாற்றத்தை நான் கவனித்து புன்னகைத்தேன்.

அவள் உடனே “நீ…” என்று அழுத்தமாகச் சொல்லி “பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னை எனக்கு அருகே கொண்டு வந்தது. நான் எனக்குள்ளே ஒரு எண்ணத்தொடர்ச்சியை கொண்டிருக்கிறேன். அதில் ஏதேனும் ஒரு வகையில் வந்து தொடுத்துக்கொள்ளும் ஓர் உரையாடலைத்தான் என்னால் கவனிக்க முடியும். முற்றிலும் வெளியே இருக்கக்கூடிய ஒரு உரையாடல் ஓரிரு நிமிடங்களுக்குள் எனக்கு சலிக்கிறது. இதனாலேயே என் வகுப்பிலிருக்கும் பிற பெண்களிடம் பேச முடிவதில்லை. ஆண்கள் இன்னும் சலிப்பூட்டுகிறார்கள். பெண்களிடமாவது நகைகளைப்பற்றியோ புடவையைப்பற்றியோ பேசமுடியும். ஆண்கள் முழுமையாகவே அசடுகள்” என்றாள்.

நான் புன்னகைத்தேன்.

“உன்னிடம் பேசும்போது நீ முழுக்கவே என்னுடன் வருவது போலிருக்கிறாய். இத்தனை ஆண்டுகளில் நாம் பேசப்பேச சலித்ததே இல்லை. இத்தனை மாதங்களில்… ஒன்று தோன்றுகிறது. ஒருவர் யாரிடம் நல்ல உரையாடல் சாத்தியமோ அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு எதுவுமே அளவுகோல்கள் அல்ல.”

நான் “ஆனால் எல்லாத் திருமணமான தம்பதிகளும் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்” என்றேன்.

“இல்லை” என்று அவள் சொன்னாள். “திருமணமான தம்பதிகளைப்பார், பெரும்பாலும் அந்தப் பெண்தான் பேசிக்கொண்டிருப்பாள். ஏனென்றால் அவள் பெண்ணாக உணர்ந்தபிறகு அவளுக்குப் பேச துணையே இருப்பதில்லை. சிறுமியாக இருக்கும்போது தோழிகளிடம் பேசிக்கொண்டிருப்பாள். ஒருகட்டத்தில் தோழிகளிடம் பெரிதாகப் பேச முடியாமலாகும். தோழிகளும் கவனிக்காமலாவார்கள். அதன்பிறகு அவள் பேச ஆள் தேடிக்கொண்டே இருக்கிறாள். காதலனோ கணவனோ கிடைத்தபின் பேசித்தள்ளுகிறாள்.”

“தன் இளமைப்பருவம் பற்றித்தான் பெரும்பாலான பெண்கள் பேசுவார்கள்” என்று அவள் தொடர்ந்தாள். “தன்னுடைய விருப்பு வெறுப்புகள் தன்னுடைய நினைவுகள் என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆனால் அவை வெறும் நினைவுப்பதிவுகள் அல்ல, அது ஒருவகையான புனைவுதான். அவள் அவன் முன் தன்னை ஒருவகையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறாள். அதற்காக தன்னை புனைந்து புனைந்து உருவாக்குகிறாள். அந்தக் காலகட்டத்தில் அவன் அந்தப்புனைவை அப்படியே வாங்கிக்கொள்பவனாக இருப்பான். உண்மையிலேயே நம்பவும் செய்வார்கள். அதெல்லாம் மிகக்குறைவான நாட்கள். தான் ஒரு தம்பதி செல்லும்போது அவர்களில் ஒருவர் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் சீக்கிரமே அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசாமல் ஆகிவிடுவார்கள்.”

“நீ எதைத்தான் கவனிக்கவில்லை…” என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“எனக்குப் பதற்றமிருந்தது. சரியான உறவுகள் அமையாது போய்விடுமோ என்ற குழப்பத்திலேயே ஒவ்வொரு மனிதரையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.”

“இது சரியான உறவென்று  உறுதியாக உனக்குத்தெரியுமா?” என்றேன்.

“சந்தேகமே இல்லை இது சரியான உறவுதான்” என்று அவள் சொன்னாள். பிறகு “நான் ஸ்ரீகர் மிஸ்ராவிடம் இதைக்கேட்டேன், அவர் என்ன நினைக்கிறார் என்று” என்றாள்.

“அவர் என்ன சொன்னார்?”

“இப்போதைக்கு உனக்கு வேறு ஒருவனைக் கற்பனை செய்ய முடியவில்லை என்று சொன்னார்.”

நான் அப்போதுதான் முதன்முறையாக அந்த எண்ணத்தை அடைந்தேன் அது சில கணங்களுக்குள்  பெருகி பெருகி எடைகொண்டு என்னை அழுத்த ஆரம்பித்தது.

“என்ன?” என்று அவள் கேட்டாள்.

“ஒன்றுமில்லை” என்றேன்.

“உன் கண்கள் மாறிவிட்டன” என்றாள்.

“இல்லை” என்றேன்.

“சொல் என்ன?”

“என் ஜாதி” என்றேன்.

“ஆம் அதற்கென்ன?” என்றாள்.

“அதை உன் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா?”

அவள் “ஒத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றாள். நான் அவளைக்கூர்ந்து பார்க்க, அவள் “எனக்கு அது பொருட்டாக இல்லை” என்றாள்.

“உன் பெற்றோர் குடும்பம் வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு முன்னால் செல்ல முடியுமா?” என்றேன்

“ஏன் சம்பிரதாயமாக ஒரு திருமணம் செய்துகொண்டால் கூட அதுதானே நடக்கிறது?” என்றாள் “திருமணமாகும்போது அப்படி விட்டுவிட்டு செல்வது ஒரு விசித்திரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லா உறவுகளுமே எப்போதுமே விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வது நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் படித்த தோழர்கள் இப்போது நம்மோடு இருக்கிறார்களா என்ன? இப்போது கல்லூரி முடிந்து போனால் இந்த உறவும் மாறிவிடுகிறதல்லவா?”

நான் “எதற்கும் உன்னிடம் ஒரு தர்க்க பூர்வமான பதில் இருக்கிறது” என்றேன்.

“அப்படியில்லை, எனக்குத் தெளிவில்லாத விஷயங்களை தெளிவான மொழியில் சொல்லிப்பார்க்கிறேன்” என்றாள்.

“நீ அவர்களை விட்டுவிட்டு என்னுடன் வாழ்வதற்கு உன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டேன்.

“அவர்கள் எதிர்ப்பார்கள், அந்த எதிர்ப்பை நான் எந்த வகையிலும் பொருட்படுத்த மாட்டேன் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். வசைபாடுவார்கள், வெறுப்பார்கள் பெரும்பாலும் என்னை கைவிட்டு விலகிசெல்வார்கள். சிலசமயம் ஒருபோதும் என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். பல ஆண்டுகளுக்குப்பிறகு ஏற்றுக்கொண்டாலும் ஆயிற்று. அது வருத்தமானதுதான் ஆனால் அதன்பொருட்டு நான் எனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழக்க முடியாது.”

நான் “என் பக்கம் எந்தப்பிரச்சனையும் இல்லை எனக்கு அம்மா மட்டும் தான்” என்றேன்.

“உன் உறவினர்கள்?”

”அவர்களுக்கும் எந்தப்பிரச்னையும் இருக்காது” என்றேன். “ஆனால் நம் சூழல் அதை ஏற்றுக்கொள்ளுமா என்றும் தோன்றுகிறது. இந்தக்கல்லூரி ஒரு சிறிய வட்டம். இங்கு ஜாதி இருந்தாலும் அது இல்லாதது போல் பாவனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கே யாரும் ’எலைட்’கள் இல்லை ஆனால் எலைட்டாக நடிக்க வேண்டிய சுமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இங்கே நாம் இருவரும் உட்கார்ந்து பேசும்போது இருக்கும் இந்த இயல்பான தன்மை வெளியே இருக்க வாய்ப்பில்லை.”

“ஆம் அது உண்மைதான் ஆகவே தான் பனாரஸிலோ பாட்னாவிலோ அல்லது இதைப்போன்ற ஒரு வடக்கத்தி நகரத்திலோ நாம் வாழவேண்டியதில்லை என்று தோன்றுகிறது. நாம் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் கல்கத்தாதான் சிறந்த இடம் அங்கே சம்ஸ்கிருத, இந்தி ஆசிரியர்களுக்கெல்லாம் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அல்லது தெற்கே செல்வோம். நம்முடைய சாதியைச் சொன்னாலும் எவருக்கும் புரியாத ஊர்கள் எவ்வளவோ இருக்கின்றன. முடிந்தால் இந்த நாட்டைவிட்டு எங்காவது செல்வோம். சம்ஸ்கிருதத்திற்கு இன்றைக்கு இந்தியாவைவிட வெளிநாட்டில் தான் வாய்ப்புகள் அதிகம்.”

நான் வாய்விட்டுச் சிரித்து “அந்த அளவுக்கு யோசித்தாகிவிட்டது இல்லையா?” என்றேன்.

அவள் உரக்கச்சிரித்து “உண்மையிலேயே நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் திருமணத்தைப் பற்றிக்கூட நான் யோசித்துவிட்டேன்” என்றாள்.

“அப்படியா?”

“நேற்று ராத்திரி முழுக்க தூங்காமல் இதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்.”

“நான் விடியற்காலையில்தான் தூங்கினேன்” என்றேன்.

“நானும் விடியற்காலையில்தான் போய் படுத்தேன். அதற்குள் என் பக்கத்து படுக்கைக்காரி எழுந்து விளக்கைப் போட்டு படிக்க ஆரம்பித்தாள். நான் எழுந்து அமர்ந்தேன். மனம் அவ்வளவு தறிகெட்டு ஓடுவதை அந்த எல்லைக்குமேல் தாங்க முடியவில்லை. அவ்வளவு யோசித்துவிட்டேன். ஒரு இரவு முழுக்க யோசிப்பதாக இருந்தால் ஒரு நூலகம் அளவுக்கு சொற்கள் பெருகிவிடுகின்றன. ஆகவே மைதிலி சரண் குப்தாவின் ஒரு கவிதையை எடுத்து வைத்து அதை நகல் செய்யத்தொடங்கினேன். கவிதைகளை நகல் செய்வது எனக்குப்பிடிக்கும் என்று தெரியுமே உனக்கு?”

“ஆம், மனப்பாடம் செய்வதற்கு அது ஒரு நல்ல வழி” என்றேன்.

“முழுக்க எழுதின செய்த பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அதை கையோடு எடுத்து வந்தேன்” என்றாள்.

அந்தத் தாளை அவள் எனக்கு எடுத்து நீட்டினாள். பூத்து குலுங்கி தழைந்து நின்ற கொன்றை மரங்கள் கீழே அமர்ந்து அந்த கையெழுத்தில் மைதிலி சரண் குப்தாவின் காவியத்தை நான் ஆங்கிலத்தில் படித்தேன்.

அது காதல் கவிதை அல்ல, இருத்தலியல் கவிதை. வாழ்க்கையின் புரிந்துகொள்ளமுடியாத பிரம்மாண்டம் பற்றியது. ஆனால் அது அந்த மனநிலைக்கு உகந்ததாக இருந்தது. இருவரும் சேர்ந்து தீவிரமாக எதையோ செய்வதுபோல. அந்தப் பாவனைதான் அப்போது தேவையாக இருந்தது. இருவரும் சேர்ந்து காதல்கவிதை எதையாவது படித்திருந்தால் அது செயற்கையானதாக, ஓர் ’அமெச்சூர்’ சினிமா காட்சிபோலத் தோன்றியிருக்கும்.

நான் அதில் சில திருத்தங்கள் சொன்னேன், அது ஏன் என்று விளக்கினேன். அவள் சில இடங்களில் என்னிடம் வாதிட்டாள். அந்தக் கவிதையை செப்பனிட்டோம். அந்த சிமிண்ட் பெஞ்சிலேயே இரண்டு மணிநேரம் அமர்ந்திருந்தோம். பின்பு எழுந்து சென்று ஒரு காபி சாப்பிட்டோம். மீண்டும் இன்னொரு பெஞ்சில் சென்று அமர்ந்தோம். அங்கே அமர்ந்து மீண்டும் பேசினோம். இந்திக் கவிதைக்கு சம்ஸ்கிருதம் அளிக்கும் நெருக்கடி பற்றி. சம்ஸ்கிருதச் சொற்கள் எல்லாமே எப்படியோ கொஞ்சம் கற்பனாவாதத்தன்மை கொண்டவை, அவற்றை நவீன வாழ்க்கைக்குப் பயன்படுத்தவே முடிவதில்லை என்று நான் சொன்னேன்.

அவள் மிகக்கூர்மையான சொற்களில் பேசுபவள். ’நீ பேசுவதை எழுதி கட்டுரையாக ஆக்கிவிடலாம்’ என்று நான் முன்பும் அவளிடம் சொன்னதுண்டு. பதிலுக்கு அவள் ‘எனக்கு அது பிடிக்கும். ஒன்றை வரையறை செய்து சொல்லும்போது அது நாம் கையாளத்தக்க பிடியும் கொக்கியும் எல்லாம் உள்ள ஒரு கருவியாக ஆகிவிடுகிறது என்றும் தோன்றிவிடும்” என்றாள்.

அன்றும் அப்படியே பேசிக்கொண்டிருந்தாள். எண்ணி எண்ணி அடுக்கப்பட்டவை போன்ற சொற்கள், ஆனால் மிகச் சரளமாக ஒலிப்பவை. நான் யோசித்து யோசித்துப் பேசுபவன். என் பேச்சை நானே உள்ளிருந்து கவனித்துக்கொண்டும், கட்டுப்படுத்திக் கொண்டும் இருப்பேன். அது என் பின்னணியில் இருந்து வந்த வழக்கம். என்னுள் ஓடும் சொற்கள் தீவிரமானவை, நான் பேசும் சொற்கள் தயக்கமும் தொடர்பின்மையும் கொண்டவை. ஆகவே அவள் பேச்சை நான் விரும்பினேன். அவள் பேசப்பேச கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த உரையாடல் வழியாக நாங்கள் இறங்கி வந்தோம். தரையில் நடப்பதுபோல ஆனோம். நெடுங்காலமாகக் காதலர்களாக இருந்துகொண்டிருப்பதுபோல, சொல்லப்போனால் தம்பதிகளைப் போல மாறினோம். எத்தனை இனிய பாவனைகள் வழியாக காதலை நிகழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் மிக இனிய பாவனை நெடுங்காலக் கணவன் மனைவி போல ஆவது. எல்லா காதலர்களும் அதை நடிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் உக்கிரமான காதல் என்பது எப்படியோ அந்தரத்தில் நின்றிருக்கிறது. ஒருவருக்காக ஒருவர் காத்திருப்பது, ஒருவரை ஒருவர் உணர்ந்துகொண்டே இருப்பது, ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டே இருப்பது எல்லாமே தீவிரமானவை. கொதிப்பவை. அவற்றின்மேல் நீண்டநேரம் நின்றிருக்கமுடியாது. இந்த இயல்புத்தன்மை என்னும் நடிப்பு இந்த இனிமையில் முடிவில்லாமல் திளைக்கச் செய்கிறது.

அன்று மாலை நானும் அவளும் அவளுக்கு ஒரு உள்ளாடையும் கைப்பையும் வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றோம். நான் அவளுக்கு ஒரு புதிய சுடிதார் வாங்கித்தந்தேன். வெண்ணிறத்தில் இளநீலப் பூக்கள் போட்ட வங்கபாணிச் சுடிதார் அது. அவளுக்கு அது மிகவும் பிடிக்கும் என எனக்குத் தெரிந்திருந்தது. வங்காளத்தை நினைவூட்டும் எதுவுமே அவளுக்குப் பிடிக்கும்.

“அய்யோ, இதுதான் நான் வாங்க நினைத்த டிசைன். எப்படி தெரியும் எனக்குப் பிடிக்கும் என்று?” என்று அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

”எனக்கு உன்னைத் தெரியும்” என்று நான் சொன்னேன்.

மாலையில் என் வீட்டுக்கு அவளும் வந்தாள். ஸ்ரீகர் மிஸ்ரா தூளி நாற்காலியில் அமர்ந்து ஏதோ குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அவர் மிக இயல்பாக எங்களை வரவேற்று நேரடியாக அவர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பாணபட்டரின் காதம்பரி என்னும் காவியத்தின் நுட்பங்களுக்குள் புகுந்தார். நேற்றுமாலை முதல் அவர் தொடங்கிவைத்த எங்கள் உறவை அவரே மறந்துவிட்டது போலிருந்தார். உண்மையிலேயே மறந்துவிட்டார். எல்லாம் அத்தனை இயல்பாக ஆகிவிட்டிருந்தன.

அவள் பத்துமணிக்கு கிளம்பிச்சென்றாள். நான் என் அறைக்குத் திரும்பினேன். எல்லாம் முற்றிலும் சாதாரணமாக இருந்தன. என் உள்ளத்தில் எந்த அலைபாய்தலும் இல்லை. வழக்கமான ஒரு நாள். எல்லாமே நான் பிறந்தது முதல் இருப்பவை போலவே இருந்தன. எனக்கு அந்த நாளின் தொடக்கம் தனித்து நினைவுக்கு வரவில்லை. முந்தைய நாளின் கொந்தளிப்பு சற்றும் எஞ்சவில்லை. நல்ல தூக்கக் கலக்கம்தான் இருந்தது. படுத்ததும் தூங்கிவிட்டேன்.

ஒரு மணிநேரம் தூங்கியிருப்பேன். விழித்துக்கொண்டதும் நான் படியில் படுத்திருப்பதாகத் தோன்றியது. விடிவெள்ளிக்காகத் தேடி, கட்டிலில் அறைக்குள் படுத்திருப்பதை அறிந்து, ஒரு நாள் அப்படியே கடந்துசென்றிருப்பதை உணர்ந்து புன்னகைத்தேன். அப்புன்னகையுடன் மீண்டும் தூங்கிவிட்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:32

தரிசனம், கடிதம்

அன்புள்ள அண்ணா,

நடைமுறை வாழ்வை செறிவுள்ளதாக்க அவ்வப்போது பயணங்களும், பெரும் ஆளுமைகளை சந்திப்பதையும், சில கடின இலக்கு, பணிகளை செய்ய முயற்சிக்கும் போதும் புத்துணர்வு பெறுகிறேன்.சென்ற வாரத்தில் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ஊழியரகத்தில் பேரன்னை க்ருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களை பார்த்து விட்டு வரலாம் என்று சென்னை செந்தில் , மொழி பெயர்ப்பாளர் நரேன், ஈரோடு சிவாவோடு நானும் சென்றிருந்தேன். அம்மாவின் தரிசனம் பெற்றேன். 

காலை 6 மணிக்கே  அம்மா பிரார்த்தனை முடித்து வந்த உடன் சந்தித்து ஆசி பெறலாம் என திட்டமிட்டு முந்தைய தினமே திண்டுக்கல்லில் தங்கி விட்டோம். அதிகாலையிலேயே எழுந்து காந்தி கிராமத்துக்கு வந்து அங்கிருந்து ஊழியரகத்தில் நுழைந்தோம். இடது புறம் எளிமையான தங்கும் அறைகள், வலப்புறம் ஒரு பெரிய கூடம் . நடுவில் உள்ள பாதையில் செல்கையில் இரண்டு மூன்று நாய்கள் உரக்க வரவேற்றன. அதை தாண்டி சென்ற பின் ஒரு பெரிய உயரமான ஓடுகள் வேயப்பட்ட கூடம். அதன் அக்கினி மூலையில் அமர்ந்து சூரிய ஒளியை உள்வாங்கிக்கொண்டு ஆங்கில தினசரியை உயர்த்தி பிடித்து படித்து கொண்டிருந்தார்கள் கிருஷ்ணம்மாள் அம்மா.

அந்த காட்சியே ஒரு ஒளி ஓவியம் போல இருந்தது, 100வயதான தமிழகத்தின் சாதனையாளர் ஒருவர் காலை 7 மணிக்கு பிரார்த்தனையை முடித்து விட்டு ஆங்கில தினசரியை கருத்தூன்றி படித்து கொண்டிருக்கும் காட்சி.அறிதல் மீதான ஆர்வம் அவர்களை இன்றும் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் அருகில் சென்று வணக்கம் சொல்லிய போது தான் பேப்பரை தாழ்த்தி எங்களை பார்த்தார்கள். பின்பு வரவேற்றார்கள். அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார சொன்னார்கள். நாங்கள் அவரின் பாதத்தின் அருகில் தரையில் அமந்து கொண்டோம். வணக்கம் சொல்லி ஆசி பெற்றுக்கொண்ட பிறகு எந்தெந்த ஊர்களில் இருந்து வருகிறீர்கள் எனக்கேட்டார்கள்.

ஈரோடு , திருப்பூர், கோவை என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நினைவை மீள்பதிவு செய்தார்கள். ஈரோட்டில் டாக்டர் ஜீவா மற்றும் இன்னொரு காந்திய ஆதரவாளர் ஒருவரையும் விசாரித்தார்கள். என் அப்பா, சர்வோதய சங்க ஊழியர் என்பதையும் வினோபாவின் சீடர் என்பதையும் கிராம ராஜ்யம் பத்திரிக்கையில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தவர் என்றும் சொன்னேன். அதற்குள் அம்மா இன்னும் ஆயிரம் ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு வீடில்லாத பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு தயாராக வேண்டும்ன்னு சொன்னாங்க…

அதற்குள் அவர்களின் மகள் மருத்துவர் சத்யாக்கா, வந்தார்கள், எங்களை வரவேற்று டீ சாப்பிடுங்கள் என்று அன்புக்கட்டளையோடு உள்ளே சென்றார்கள். அம்மா,  வினோபா பவே பற்றியும், தன் இளம் பருவத்தில் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு போராட்டங்களுக்கு சென்றதை பற்றி சொன்னார்கள். அவர் மகன் பூமியின் படிப்பு, சத்யாக்காவின் படிப்பு ஆகியவற்றை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் கீழ் வெண்மணி சம்பவம், அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கு இன்று வரை செய்து கொண்டிருக்கும் உதவிகள் பற்றி சொன்னார்கள். 

அதற்குள் சத்யாக்கா ஜெகந்நாதன் அய்யாவின் சமாதியில் பிரார்த்தனை செய்து வரலாமா என கேட்க, அம்மாவோடு நாங்களும் சென்று அய்யாவின் திருவடக்க தலத்தில் திருவருட்பாவின் சில பாக்களை அம்மாவுடன் இணைந்து  பிரார்த்தித்து விட்டு மெளனமாக தியானம் செய்து விட்டு அம்மாவின் நினைவுகளை கேட்டுக்கொண்டிருந்தோம். அம்மா தான் ஒரு சராசரி தாயாக தன் மகனுக்கும் மகளுக்கும் கடமையாற்ற வாய்ப்பில்லாமல் போனது  வருத்தம் தான் ஆனால் சமூக கடமை நிலமற்ற ஏழைகளின் தவிப்பு, கீழ் வெண்மணியில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பரிதவிப்பிற்கு ஆறுதல் என்று தொடர்ந்து தன் கடமை பற்றியும் கடமை பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சமூககடமைகள் குறித்து மட்டுமே பேசினார்கள். 

சாமானிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு நாம் அளிக்க வேண்டிய சமுதாய கடமைகள் பற்றி தான் சொன்னார்கள். தன் உரிமை, தம், தமது, என் உரிமை அரசு செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டுக்களும் இல்லை. கர்மயோகிகள்ன்னு சுவாமிஜி சொல்வது போல ஒரு வாழ்க்கை, தவம் இயற்றுவது போல அதீத சிரத்தை, கடமை உணர்வு, தம் மக்கள் எனும் கம்பேஷன் இது தான் அம்மாவின் பேச்சின் ஒட்டு மொத்த சாராம்சம். மீண்டும் கீழ் வெண்மணியில் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கான மீட்பு பணிகள் பற்றிய நினைவுகள். செய்த பணிகள் இது பற்றி தான் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 

திடீரென நினைவு பெற்று வினோபா பற்றிய புத்தகத்தை எடுத்து வர சொன்னார்கள். சத்யாக்கா அதை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த புத்தகத்தை வாத்ஸல்யத்தோடு வாங்கினார்கள். ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளும் தாயின் அன்போடு புத்தகத்தை தொட்டு தடவிப்பார்த்தார்கள். வினோபா பவேவின் நினைவுகளை சொன்னார்கள். தேசம் முழுக்க நடந்தே பூமி தானம் பெற்ற நினைவுகள். உணவை பொருட்படுத்தாத ஆச்சார்யரின் குணம், அவருக்கு கீதையின் மீது இருந்த பிரேமை. பொது மக்களின் மேன்மைக்கான அர்ப்பணிப்பு இதை எல்லாம் ஒரு தாயின் கனிவோடு , ஒரு மகளின் பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் நினைவுக்கும், சரித்திரமுமாக வாழும் வினோபாவின் வாழ்க்கை சித்திரத்தை ஒரு பக்தனை போல விவரித்து கொண்டிருந்தார்கள். இதை எல்லாம் சொல்லும் போது அந்த புத்தகத்தை விரல்களால் வருடும் அன்னையை பார்க்கும் போது ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் வீணையை வருடும் போது தோன்றும் சங்கீதம் போல புத்தகத்தின் ஒவ்வொரு படமும் வினோபா பற்றிய புதிய செய்தியை நினைவை மீட்டி மீட்டி  பகிர்ந்து கொண்டார்கள். மீண்டும் இடையில் கீழ் வெண்மணியில் நான் தவறிழைத்து விட்டேன், இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என நினைக்காமல் இருந்து விட்டேன்ன்னு சொன்னாங்க….

எதைப்பற்றியும் எவர் பற்றியும் குற்றம் குறைகளையே சொல்லவில்லை, தாம் செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் பற்றி மட்டும் தான் சொல், செயல், நினைவு எல்லாம்…..காந்தி என்ற மகத்தான ஞானி எப்படி எல்லாம் மனித மனங்களை மலர செய்திருக்கிறார் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. லாப்டி, பூமி தான இயக்கம், சர்வோதய இயக்கம்ன்னு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய பேரன்னை, அது பற்றிய பெருமிதமோ, தான் ஒரு வரலாற்று சாதனையாளர் என்ற நினைவோ கூட சிறிதுமற்ற ஒரு யோக நெருப்பு இவர்கள். இவர்களை தரிசிக்கும் அனைவரையும் ஆட்கொண்டு பற்றி படர்ந்தேறும் ஒரு தியாக நெருப்பு. வைஸ்வாநரன்.

இடை இடையே சத்யாக்கா வந்து அம்மாவிற்கான பணிவிடைகள், எங்களோடு சில வார்த்தைகள், அதற்குள் சத்யாக்காவுடன் நடக்க விரும்பும் நாய்கள், அதற்கும் சேவை செய்யும் அக்கா, பணிக்கு தயாராகிக்கொண்டே இத்தனையையும் ஒரு நடனம் போல செய்து கொண்டிருந்தார்கள். அம்மா தன் மகன் பூமி அயல் நாட்டில் படித்து கொண்டிருந்து விட்டு கன்னி வெடியில் பாதிக்கப்பட்டு வறுமை கொண்டு நின்ற கம்போடியாவிற்கு சேவையாற்ற சென்று விட்டது  சொன்னார். அவர் இன்று திரும்பி பாரதம் வருவது பற்றி சொன்னார். ஒரு குடும்பத்தில் எப்படி அனைவருமே கர்மயோகிகளாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. கிருஷ்ணம்மாள் அம்மா, ஜெகந்நாதன்அய்யா, பூமி, சத்யாக்கா அனைவருமே சமூகத்திற்காகவே தங்களை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்கள். புற உலகின் எந்த சலனங்களும் இவர்களை அசைக்க வில்லை. 

நாய்களோடு நடைபயணம் சென்று திரும்பிய சத்யாக்கா அனைவரையும் சாப்பிட அழைத்தார்கள். சிவா அண்ணனும் நரேனும் , செந்தில் அண்ணனும் அம்மாவிற்கு இருபுறமும் காவலாக பிடித்து கொண்டு அம்மாவோடு நடந்து கூடத்திற்கு வந்தோம். திரும்பவும் வினோபாவின் புத்தகத்தை எடுத்து அதன் புகைப்படங்களை பார்த்து அதன் வரலாற்று முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த கூடம் முழுவதும் வரலாறு புகைபட சட்டகங்களாக உறைந்து அமைந்திருந்தது. அக்கா அந்த புகைப்படங்களையும் அதன் சூழலையும் விளக்கமாக சொன்னார்கள். நேரு, வந்தது, மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் வந்தது, வினோபா வின் யாத்திரை, ஜெகந்நாதன் அய்யாவின் போராட்ட நினைவுகள், லாப்டி, பூமி தான இயக்கம், காமராஜர் பற்றி, அய்யா, கைத்தான் அவர்கள், காந்தி கிராம கட்டுமானம், மாற்று நோபல் பரிசு பெற்றது என்பதை எல்லாம் மிக மிக சாதாரணமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். 

அவர்கள் சிறு வயதில் பள்ளி விடுமுறை காலங்களில் கூட வராத அம்மா, அப்பா பற்றி வருத்தம் இருக்கும் , பின்னர் அவர்களோடு பயணிக்க பயணிக்க அவர்களின் பணி நிமித்தம் அதன் அவசியம் ஆகியவைகளை உணர்ந்ததாக சொன்னார்கள். புற உலகின் எந்த வசதியோ, நவீன வாழ்க்கை முறையோ , பொருள் சூழ் உலகோ, இவர்களின் மனதிற்கு அருகில் கூட இல்லை. நிறை வாழ்க்கை வாழும் புண்ணிய ஆன்மாக்கள். சாப்பிடும் போது கூட  கீழ் வெண்மணியில் நடந்ததற்கு பிறகான மீள் கட்டுமானம் அங்கு உடைமைகள் வாழ்வாதாரங்களை தொலைத்த குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம், வீடு ஆகியவைகளுக்கான பணிகள் பற்றி அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். 

இளம் வயதில் இந்த ஊழியரக கட்டுமானத்தை தாங்கள் முன்னின்று கட்டியதையும் , உணவிற்கு வரும் போது கைகளை காட்ட சொல்லி கைத்தான் கேட்பாராம், கைகளில் பணி செய்ததற்கான தடத்தை பார்த்ததும் இன்று உனக்கான உணவை பெறுவதற்கு நியாயம் செய்திருக்கிறாய்ன்னு சொல்லிட்டு உணவு உண்ணச்சொல்வாராம். நாங்கள் உணவிற்கு பின்னும் சிறிது நேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவரின் பாதம் பணிந்து விடை பெற்றோம். 

தூய்மை, தியாகம், தொண்டு, தவம் இவைகளுக்கான நிஜமான பொருளை நேரில் கண்டு உணர்ந்தேன். நீலகண்ட பறவையை தேடி நாவலில் அடிக்கடி கேச்சோரக்கான்னு ஒரு சொல் திரும்ப திரும்ப வரும், அது போல அம்மாவுடனான பேச்சில் மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி சம்பவமும் அதன் காயமும் அதற்கான மீட்சி பணிகளுமே அவரின் எண்ணம் , சொல், சிந்தனை , செயல் என அனைத்திலும் வியாபித்து இருக்கிறது. இந்த செயலும் சிந்தனையுமே அம்மாவின் ஆன்மீகம், மீட்பிற்கான பணிகள் தன் கடமை என உணர்கிறார். அதை செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்கிறார். இந்த தூய்மையான ஆன்மாவிற்கு முன் சொல்லிழந்து செயலிழந்து பாதம் பணிந்து ஒடுங்கி கண்ணீர் சிந்துவது தவிர வேறு எதையும் எண்ணத்தோன்ற வில்லை. 

தெய்வம் மானுஷ ரூபனே…. ந்னு தெய்வம் மானுட வடிவில் என்ற சொல்லை உணர்ந்தேன். தெய்வங்கள் , தேவதைகள்ன்னு இறை ரூபத்தை தரிசித்த ஸ்தம்பிப்போடும் நிறைவோடும் விடை பெற்று திரும்பினோம். 

ராஜமாணிக்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:31

சாமானியர்களிடம் விவாதிக்கலாமா?

உங்கள் கட்டுரைகளை நான் அவ்வப்போது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதுண்டு. பலரும் முகநூல்களில் இருந்து ஓரிரு வரிகள் வழியாக உங்களைப் பற்றி அபிப்பிராயங்களை உண்டுபண்ணி வைத்திருப்பவர்கள். எல்லாவற்றைப் பற்றியும் இப்படி ஒற்றை வரி வைத்திருப்பார்கள். அதைச் சொல்லி எல்லாம் தெரிந்தவர்களாக நடிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு பதிலை அனுப்பினால் முழுக்கப் படிக்க மாட்டார்கள். அதிலும் ஓரிரு வரிகளை படித்துவிட்டு அதை விருப்பப்படி விளக்கிக்கொண்டு திரும்பத் திரும்ப ஒன்றையே பேசுவார்கள்.

சாமானியர்களிடம் விவாதிக்கலாமா?

I have been watching your videos. I think you are campaigning for your ideas. Is it appropriate for a writer to propagate an ideology?

Am I doing propaganda?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 11:30

April 30, 2025

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு

2025 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இளங்கவிஞர்களுக்கான விருது கவிஞர் சோ.விஜயகுமாருக்கு வழங்கப்படவுள்ளது.

விஜயகுமார் நீண்டகாலம் உயிர்மையில் உதவியாசிரியராகப் பணியாற்றியவர். மனுஷ்யபுத்திரனின் மாணவர்களில் ஒருவர். தீவிரமான இலக்கியத்தேடல்கொண்டவர். மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. (+91 80563 52536)

சோ.விஜயகுமார் தமிழ்விக்கி

குமரகுருபரன் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது

 

கவிஞர் குமரகுருபரன் நினைவாக 2017 வழங்கப்படும் இவ்விருது இதுவரை

2017 சபரிநாதன்2018 கண்டராதித்தன்2019 ச. துரை2020 வேணு வேட்ராயன்2021 மதார்2022 ஆனந்த்குமார்2023 சதீஷ்குமார் சீனிவாசன்2024 வே.நி.சூர்யா

ஆகிய கவிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2025 23:44

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.