காவியம் – 12
பைசாசினி, பொயு 1 சாதவாகனர் காலம், பைத்தான்இனிமை திகட்டுமென்பது ஒரு பொய். எல்லா பொய்களும் தனிநபர்களின் தற்காலிக அனுபவம் சார்ந்த உண்மைகள்தான். மெய்யான இனிமை திகட்டுவதில்லை என்பதை நான் அறிந்த நாட்கள். நாக்கு அடையும் இனிமை திகட்டும். உடல் சார்ந்த எந்த இனிமையும் திகட்டும். ஏனெனில் உடல் என்பது ஒரு பொருள், பொருள் எல்லையுள்ளது. உள்ளம் அப்படியல்ல. அதனால் கற்பனையில் விரிய முடியும். கற்பனை எல்லையற்றது. அது தேடும் இனிமையும் முடிவற்றது.
என் ஒவ்வொரு நாளும் மும்மடங்கு இனிமை கொண்டதாக ஆகியது. இனிமை தொடத்தொட வளர்ந்தது. ஆனால் இனிமைக்கான விழைவு அதற்குப் பலமடங்கென விரிந்தது. ஒருகணமும் மேலும் மேலும் என்ற தவிப்பு அடங்கவேயில்லை. எந்த ஒரு நினைப்பும் ஏக்கம் இன்றி முடியவில்லை.
உடனிருக்கையில் இதோ நீ, இங்கே நீ, இப்போது நீ மட்டுமே என்று குதூகலித்து, தன்னைத்தானே சுழன்று, மகிழ்வில் என்ன செய்வதென்று தெரியாமல் விழுந்து புரண்டு, துள்ளி விழுந்து, முனகிப் பொய்க்கடி கடித்து, கொப்பளித்துக் கொண்டிருக்கும் நாய்க்குட்டிபோல் திளைத்தேன். கொந்தளிக்கும் அலைப்பரப்பில் ஒரு சிறு குமிழியாக இருந்தேன். பிரிந்த மறுகணமே அனைத்தும் பறிக்கப்பட்டவன் போல, ஒன்றையும் அடையாதவன் போல, அக்கணமே ஆயிரம் மடங்கு வேண்டுமென்பதைப் போல தவிக்கலானேன்.
அந்த நாட்கள் நான் எங்கிருந்தேன் என்று என்னால் அப்போது உணரமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதென நிகழ்ந்ததனால் முந்தைய நாள் முற்றாக மறந்து போய்விட்டது. ஒரு சொல் எஞ்சியில்லாமல். ஒவ்வொரு நாளும் புதிதாக வரைந்து கொண்டு வைக்கப்பட்ட ஓவியம்போல் விடிந்தது. ஒவ்வொரு கணமும் பேசுவது முந்தைய கணத்துடன் தொடர்பற்ற தனிநிகழ்வாக இருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு முழு வாழ்க்கை. தனக்கென தனிமுழுமை கொண்டது. தனக்கான தனி அர்த்தம் கொண்டது. கணந்தோறும் பிறந்தெழுதல். கணந்தோறும் இறந்து மீளுதல்.
திடீரென்று எண்ணியபோது அவளுடனான உரையாடலும் காதலும் நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருப்பது போல் இருந்தது. மறுகணமே ஒருநாள், ஒருமணி கூட ஆகவில்லை என்று தெரிந்தது. அக்கணம் மட்டுமே இருப்பது போல. ஆண்டாண்டுகளாக மலைமுடிகளைப்போல் தனிமையில் ஓங்கி அமைந்திருப்பதுபோல. தனித்து அமர்ந்து எண்ணும்போது மறுநாளுக்கான ஏக்கம் மட்டுமே எஞ்சியது. நிகழ்ந்தவை துளி நினைவாகக்கூட மீளவில்லை.
நீண்ட காலத்திற்குப்பின் எண்ணங்களைத் துழாவுகையில் அந்த நாட்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும், கண்களின் மின்வெட்டும் கூட கல்லில் செதுக்கப்பட்டவை போல என் நினைவில் இருப்பதை தெரிந்துகொண்டேன். நான் இறுதித் துளி எலும்பும் தசையும் பொசுங்கி சிதையில் அடங்கும் கணம் வரைக்கும் கூட அவை நினைவில் இருக்குமென்று தோன்றியது. உடல் எரிந்து அழிந்த பின்னரும் கூட அவை இந்தக்காற்றில் ஏதேனும் ஒரு வடிவில் எஞ்சியிருக்ககூடும்.
மீண்டும் பிறவி, ஏழ் பிறவி, முடிவிலாப்பிறவி என்று ஒவ்வொரு காதல் கவிதையும் புலம்புவது ஏன் என்று அப்போது தான் புரிந்துகொண்டேன். இந்திய உள்ளம் காதல் கொண்டதுமே ’ஏழேழு பிறவிக்கும்’ என அரற்றத் தொடங்குகிறது. தொல்கவி வால்மீகியிலிருந்து மைதிலிசரண் வரை எல்லாக் கவிஞர்களும் அப்படிப் பாடியிருக்கிறார்கள். ஏனென்றால் காதல் ஒரு பிறவிக்கு போதாது. அந்தச் சிறிய கொள்கலனுக்குள் அது நுரைத்து நுரைத்து பொங்கி எழுந்து வெளியே வழிகிறது. மேலும் மேலுமென புதிய கலங்களில் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. மந்திரவாதியின் மாயக்கலம் போல ஒழியாத உறையாத ஊற்று கொண்டது அது.
பிறவிகள் தோறும் மீண்டும் மீண்டும் இதையே நடிக்கவேண்டும். திரும்பத் திரும்ப, ஒரு அணுவிடைகூட மாறாமல். ஏனென்றால் இது நிகழும் கணத்தை விட இது பெரியது. அக்கணத்தில் அறிந்து அனுபவித்து அடையும்போதே அது போதவில்லை என்றும் தோன்றுகிறது. இப்பிறவி இந்த உடலில் நிகழ்கிறது. இந்த உடல் காலம் கொண்டது. காலத்தை வெல்ல வேண்டும். இக்காலத்தை இப்படியே நிறுத்திவிட முடியவில்லை எனில் இதை மீண்டும் மீண்டும் நிகழ்த்த வேண்டும். ஒரு விறகிலிருந்து இன்னொன்றுக்கு பற்றிக்கொள்ளும் தீ போல இந்தக்காதல் படர்ந்து செல்லவேண்டும்.
காதல் என்ற வார்த்தையையே நான் ஏளனத்துடன் படித்த காலங்கள் உண்டு. சம்ஸ்கிருதக் காவியங்களைப் படிக்கும் எவருக்கும் உண்மையில் காதல் கொஞ்சம் விலகித்தான் செல்லும். காதலைப் பாடிப் பாடி அது ஒரு அனுபவமல்ல, கவிதைக்கான கருப்பொருள் மட்டுமே என்று அவர்கள் ஆக்கிவிட்டார்கள். சொல்லுக்கு அழகு சேர்க்கும் ஓர் கூடுதல் அழகுப்பொருள். லஸ்ஸி மேல் ரோஜா மலரிதழ் போல. சம்ஸ்கிருத காவிய வாசகன் காதலை இயல்பாக எடுத்துக்கொண்டு, அப்படியொன்று நிகழ்வதையே அறியாமல், சொல்லிணைவுகளின் சுவைநோக்கிச் செல்கிறான்.
நான் அறிந்த சம்ஸ்கிருத காவிய ஆசிரியர்களில் எவருமே காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் அல்ல. சம்ஸ்கிருதக் கவிதைகளில் ஊறித்திளைப்பவர்கள் எவருமே மெய்வாழ்வில் காதலர்கள் அல்ல. அவர்கள் எளிமையான குடும்பத்தலைவர்கள் மட்டும்தான். அவர்கள் காமத்தைக்கூட அறிந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுமளவுக்கு ஆசாரமானவர்கள்.
என் எம்.ஏ. வகுப்பில் ஆதர்ஷ் ஜோஷி காளிதாசனை கற்பித்துக்கொண்டிருந்தார். காமத்தின் கலைகளை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான், அக்கலைகளையே அவள் அவனுக்கு குருதட்சிணையாக அளித்துவிட்டாள் என்று அவர் சொல்லி “அரிய சொல்லாட்சி… நயம்படச் சொல்வதில் அவனுக்கு இணை இல்லை” என்று மூக்குக் கண்ணாடியின் மேலே கண்ணைத் தூக்கி எங்களைப் பார்த்தபின் மீண்டும் படிக்கையில் சட்டென்று எனக்கு மெய்சிலிர்த்தது. என்ன சொல்கிறான் காளிதாசன். ஆண்காமத்தை பெண்காமம் வெல்லும் தருணமா அது? அந்தக் கலவிக்காட்சியை நான் என்னுள் உருவகித்துக்கொண்டபோது வியர்த்துவிட்டேன். ஆனால் வகுப்பில் ஒருவருக்குமே அப்படி எதுவும் தோன்றவில்லை. அத்தனை இயந்திரத்தனமாக, வெறும் சொல்லாராய்ச்சியாகவே அந்த வகுப்பு முன்சென்றது.
வாளின் கூர்மை போலவும், வைரத்தின் ஒளி போலவும், மலரின் மென்மை போலவும் சம்ஸ்கிருதக் காவியங்களில் துலங்கும் காதலை படிக்கும்போதெல்லாம் காதல் பற்றிய அவநம்பிக்கையுடன் தான் இருந்தேன். அவை காதல்கள் அல்ல அதிகாதல்கள் என்பதனாலேயே அவை மானுடத்தன்மையை இழந்து யட்சர்களும் கந்தர்வர்களும் தெய்வங்களும் மட்டுமே அடையத்தக்கவையாக ஆகிவிட்டன. மின்னலைக் கண்டு விழியழிந்த ஒருவன் மின்னல் பற்றி புலம்பியது போன்று அவை தோன்றலாயின. ஆகவே நவீன கவிதையில் காதல் வந்தால் அந்த யதார்த்தத்தில் அவை வெளிறி அபத்தமாகத் தெரிந்தன. மேடையில் நடனமாடுபவர் அந்த முகச்சாயத்துடன் மதியவெயிலில், நடுச்சாலையில் எதிர்ப்பட்டதுபோல. நவீனகவிஞன் காதலை ஏளனம் செய்தால் உடனே என் உள்ளம் அதை ஏற்றுக்கொண்டது.
ஆனால் நான் காதலை அடைந்தபோது எத்தனை பெருங்கவிஞர்கள் எத்தனை சொற்களில் சொன்னாலும் காதல் சொல்லப்படாததாகவே எஞ்சியிருக்குமென்று தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு அவை வெற்றுச்சொற்கள். காதலை அடையாதவர்களோ எத்தனை நுட்பமான சொற்கள் வழியாகவும், எத்தனை அரிய படிமங்கள் வழியாகவும், எந்நிலையிலும் காதலைப் புரிந்து கொள்ள முடியாது. இரு நிலையிலுமே காதல் கவிதைகள் பயனற்றவையே.
காதலை அத்தனை தன்னியல்பானது என்றாலும் இங்கே அத்தனை அரிதானது. அவ்வளவு செயற்கையான ஒரு வாழ்க்கையை உருவாக்கி வைத்து அதில் அமைந்து பொருந்தியிருக்கிறோம். மாபெரும் மதில்சுவர்களில் கற்கள் பதிந்திருப்பதுபோல. சுவரின் மாபெரும் எடையே பற்று என்றும் பாதுகாப்பு என்றும் தோன்றுகிறது. சிறைச்சுவருக்கும் கோட்டைச்சுவருக்குமான வேறுபாடு எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான்.
ஒருபோதும், ஒரு துளியும், காதலை அறியாதவர்களே இங்கே மிகப்பெரும்பான்மை. அவர்கள் அதை காமமென்றும், கொண்டும் கொடுத்தும் ஆடும் உறவின் வணிகம் என்றும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளப்படாத ஒன்று பித்தென்றும் கேலிக்குரியதென்றுமே தோன்றும். அச்சுறுத்தவும் கூடும். இந்த உலகம் ஏன் காதலுக்கு எதிராக இத்தனை தீவிரம் கொண்டிருக்கிறது என்பது காதலெனும் திளைப்பில் இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் காதல் என்றல்ல, அத்தனை பெரும் திளைப்பை அளிக்கும் எதையும் எதிர்ப்பதாகவே என்றும் உலகியல் இருந்துள்ளது. பெரும்பக்தர்கள் கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள் கவிஞர்கள் வறுமையில் சாகவிடப்பட்டிருக்கிறார்கள்.
நான் அறிந்த ஒன்றையும் அப்போது அறிந்திருக்கவில்லை. பெரும்பேதமையில் இருந்தேன். அருவிக்கு கீழே நின்றிருப்பவன் போல அந்தப் பொழுதுகளில் திகழ்ந்தேன். ஒருகணம் என் தலையை தாக்கிய நீர் மறுகணம் இல்லை. ஒருகணம் பொழிந்து என்னை முற்றிலும் மூழ்கடிக்க அதில் எஞ்சி என்னுள்ளிருக்கும் அழியாத சாரம் மட்டுமேயான ஒன்று அடுத்த கணத்தை அடைந்தது. காதல் வழியாக மட்டுமே நம் எண்ணங்களின் எல்லை கடந்த ஒன்றை, நம் இருப்புக்கு அப்பாலுள்ள பிறிதொன்றை அறிய முடியும். அதை அன்று அறிந்தேன் என அறிய மேலும் பல ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டன.
காலமும் இடமும் அற்ற பித்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் மெல்ல விசையிழந்தன. ஒரு கட்டத்தில் இருவரும் அவரவர் ஆய்வுகளுக்குத் திரும்பவேண்டியிருந்தது. ராதிகா அவளுடைய ஆய்வேட்டை எழுத ஆரம்பித்தாள், நானும் மெதுவாக என் ஆய்வுக்குத் திரும்பினேன். ஓராண்டு முதற்கட்ட ஆய்வுக்குப்பின் நான் என் ஆய்வேட்டின் தலைப்பை முடிவு செய்துவிட்டிருந்தேன். ‘இடைக்கால சம்ஸ்கிருதப் பெருங்காவியங்களில் மரபின் தொடர்ச்சிகள் – குமரிலபட்டரின் ஸ்போட கொள்கையின் அடிப்படையில்’. ஸ்ரீகர் மிஸ்ராவுக்கு அணுக்கமான தலைப்பு. நான் அவரிடம் மேலும் அணுக்கமாக ஆவதற்குரிய வழியும்கூட.
நான் பூர்வமீமாம்சையை, பட்டமீமாம்சையை ஒருபக்கம் படிக்கவேண்டியிருந்தது. அதைப்படிக்க சம்ஸ்கிருத வியாகரண மரபையே படிக்கவேண்டும். பூர்வமீமாம்சகர்கள்தான் வியாகரணத்தை ஆயிரம் ஆண்டுகாலமாக முன்னெடுத்தவர்கள். மறுபக்கம் அந்த கோணத்தில் எல்லா பழங்கால சம்ஸ்கிருத காவியங்களையும் படிக்கவேண்டியிருந்தது. ஸ்ரீகர் மிஸ்ராவின் உண்மையான விரிவு எனக்கு அப்போதுதான் தெரியத்தொடங்கியது. அவர் அனைத்தையும் படித்திருந்தார், அனைத்து தகவல்களையும் நினைவிலிருந்தே சொன்னார், ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு கோணத்துடன், புதிய கருத்துடன் தோன்றினார்.
நாங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டும் சந்திப்பவர்களானோம். பெரும்பாலும் வார இறுதிகளில்தான் விரிவாகப் பேச முடிந்தது. கங்கைக் கரைக்குச் செல்வோம், அல்லது கடைகளுக்குச் செல்வோம். பெரும்பாலும் அவரவர் ஆய்வேடுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். விந்தை என்னவென்றால் அப்படி முற்றிலும் புறவயமான ஓர் உலகியல் விஷயத்தைப் பேசியது எங்களை இன்னும் அணுக்கமானவர்களாக ஆக்கியது. அவளுடைய ஆய்வேட்டை நான் மேம்படுத்தினேன். என் ஆய்வேட்டில் அவள் வலுவான கேள்விகளை முன்வைத்தாள். இருவருக்கும் நடுவே இலக்கியம் ஒருவரை ஒருவர் சென்றடையும் இனிய பாதையாக இருந்தது.
நான் நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை, தோன்றியபோது மட்டும், ஊருக்குச் சென்று வந்தேன். ஊருக்குச் செல்வது எனக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. நான் வாழ்ந்த பனாரசில் இருந்து மிகமிகத் தொலைவில், வேறொரு உலகில் இருந்தது என் ஊர். பைத்தான் நகரின் பங்கிகளின் குடியிருப்பு. அந்த இடுங்கலான தெருக்கள், நீங்காத சாக்கடை நாற்றம், நெரிசல், கூச்சல்கள். தெரிந்த ஒவ்வொரு கண்களில் இருந்தும் என்னை வந்தடைந்த என் சாதி. ‘நீ’ என்ற சொல், அல்லது ‘நாம்’ என்ற சொல். இரண்டுமே எரிச்சலூட்டின. ஏனென்றால் இரண்டுமே என்னை வேறொரு வகையில் வரையறை செய்தன. நான் பிறிதொன்றாக வளர்ந்துகொண்டிருந்தேன் என அவை உணரவேயில்லை, அவற்றுக்கு அதை தெரியவைக்க வழியும் இல்லை.
ஆகவே கூடுமானவரை தள்ளிப்போட்டேன். ஒரு கட்டத்தில் குற்றவுணர்வை கொண்டிருப்பதைவிட சட்டென்று சென்றுவிட்டு திரும்புவதுதான் நல்லது என்று தோன்றும்போது கிளம்பினேன். பனாரஸிலிருந்து ஔரங்காபாத் வரை இரண்டு ரயில்கள் மாறி வந்து அங்கிருந்து பஸ் பிடித்து பைத்தான் சென்று சேரும்போது நான் மானசீகமாக ஏற்கனவே பனாரஸுக்கு திரும்பிவிட்டிருப்பேன். அங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் பனாரஸில் இருந்துகொண்டு அந்த இடத்தைப் பார்த்துத் திகைத்துக் கொண்டிருப்பேன்.
என் வரவை அம்மா பொருட்படுத்துவதில்லை, அவள் தன் உலகில் முழுமையாக ஆழ்ந்துவிட்டிருந்தாள். நான் வரவேண்டும் என அழைப்பதில்லை, வந்தால் கிளர்ச்சி அடைவதுமில்லை. வழக்கத்திற்கு மீறி எதையும் சமைப்பதுகூட இல்லை. அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாதென்பதனால் நான் கடிதங்களும் எழுதுவதில்லை. அவசியமாகத் தெரிவிக்கவேண்டிய எதுவும் நிகழவுமில்லை. அப்பாவின் ஓய்வூதியம் அம்மாவுக்கு வந்துகொண்டிருந்தது. எனக்கு ஆய்வுமாணவர்களுக்குரிய உதவித்தொகை செலவுக்கும் மேலேயே இருந்தது. ஆகவே இருவருக்கும் ஒருவரை ஒருவர் முற்றிலும் தேவைப்படவில்லை.
ஏற்கனவே நான் அம்மாவிடம் பேசுவது மிகக்குறைவு. பனாரஸுக்குப் போனபிறகு கிட்டத்தட்ட பேச்சே இல்லாமலாகிவிட்டது. வீட்டுக்கு வந்தால் இரண்டுநாட்கள் தங்குவதே பிறர் என்ன ஏது என்று கேட்கக்கூடாது என்பதற்காகத்தான். வெளியே செல்வதே இல்லை. அறைக்குள் அமர்ந்து நான் கொண்டுவந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பேன். அல்லது குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பேன். எப்போது நாட்கள் நகரும் என எண்ணிக்கொண்டிருப்பேன். ஞாயிறு மாலை ஆனதுமே கிளம்பிவிடுவேன். கிளம்பும்போது அம்மாவிடம் சொல்வேன், அவள் மெல்ல தலையசைப்பதுடன் சரி. அங்கிருந்து கிளம்பும்போது ஒவ்வொரு காலடியிலும் விடுபட்டுக்கொண்டிருப்பதாக உணர்வேன். முதல் பேருந்தில் ஏறியதும் உருவாகும் அபாரமான நிம்மதியை பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருப்பேன்.
ராதிகாவைச் சந்தித்தபின் நான் ஊருக்கு வரவே இல்லை. வரவேண்டிய தேவை இருக்கவில்லை என்பதுடன் எல்லா வார இறுதிகளையும் ராதிகாவுடன் செலவிடவே விரும்பினேன். அதன்பின் ஆய்வுவேலைகள் விசைகொண்டன, எதற்கும் பொழுதிருக்கவில்லை. ஓர் ஆய்வின் பெரும்பகுதி வேலை புத்தகங்களை கண்டுபிடித்து புரட்டிப்பார்த்து தேடுவதைக் கண்டடைவதுதான். அது ஒரு துப்பறியும் பணி. கண்டுபிடிப்பது உண்மையில் ஒரு வாசலை, அது மேலும் பல வாசல்களை நோக்கி கொண்டுசெல்லும். காலம் ஒழுகிச்செல்வதே தெரியாது. ஆய்வில் மூழ்கியிருப்பவர்களுக்கு புறவுலகமே இல்லாமலிருப்பதை முன்னரும் கண்டிருக்கிறேன், எனக்கே அப்படி ஆகுமென்று அறிந்தேன்.
திடீரென்று ஊரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பைத்தான் நகரிலிருந்து இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தார், என் அப்பாவின் வழக்கு விஷயமாக. பனாரஸில் எனக்கு தொலைபேசி இல்லை. பல்கலைக்கழகத்தின் அலுவலகத்திற்கு கான்ஸ்டபிள் அழைத்து என்னைப் பற்றி விசாரித்து என் துறைத்தலைவரின் எண்ணை வாங்கி பைத்தான் இன்ஸ்பெக்டருக்கு அளித்திருந்தார். நான் என் துறைத்தலைவரின் அலுவலகத்தில் காத்திருந்தேன். மற்ற பேராசிரியர்கள் அப்பால் என்னை கூர்ந்து கவனித்தபடி படிப்பதுபோலவோ விடைத்தாள் திருத்துவது போலவோ நடித்துக்கொண்டிருந்தார்கள். துறைத்தலைவரே உடலால் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
போலீஸ் அழைப்பு என்பதனால் நான் பதற்றம் கொண்டிருந்தேன். முதலில் இன்ஸ்பெக்டரின் குரலைக் கேட்டதும் என் மூளை அசைவற்றுவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கவனிக்க முடியவில்லை. அவருக்கும் தொலைபேசியில் பேசத்தெரியவில்லை. நேரில் பேசுவதுபோல உதிரி வார்த்தைகளில் குழறியபடி பேசினார். நிறையச் சொற்கள் கடந்தபின், அவர் பலமுறை கத்தியபின்புதான் எனக்கு அவர் என் அப்பாவின் கொலைபற்றி என்னிடம் பேச விரும்புகிறார் என்று தெரிந்தது. என் வீட்டுக்கு பல கடிதங்கள் சென்றிருந்தன, அம்மாவிடம் நேரில் கான்ஸ்டபிளை அனுப்பிச் சொல்லிவிட்டிருந்தார். அம்மா கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டாள், கான்ஸ்டபிள் சொன்னவை அவளுக்குப் புரியவில்லை.
நான் உடனே கிளம்பி பைத்தான் சென்றேன். வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று தோன்றவில்லை. வந்தவேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குப் போய்விட்டு, உடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். என்னிடம் ஒரு சிறிய தோள்பை மட்டும்தான் இருந்தது.
பேருந்து நிலையத்தில் இருந்து நேராகவே காவல்நிலையம் சென்றேன். இன்ஸ்பெக்டர் இருந்தார். குண்டான, மாநிறமான மனிதர். பெரிய புருவங்கள், தொங்குமீசை, இரட்டைத்தாடை, தொங்கும் கன்னங்கள், களைத்துப்போன கண்கள் என பெரும்பாலான போலீஸ்காரர்களுக்குரிய தோற்றத்துடன் இருந்தார். நான் வணங்கியதும் தலையை மட்டும் அசைத்தார். என்னை உட்காரும்படிச் சொல்லவில்லை. ஒருமையில் “நீ பனாரஸில் என்ன செய்கிறாய்?” என்றார்.
“படிக்கிறேன்”
“என்ன படிக்கிறாய்?”
நான் “பி.ஹெச்.டி” என்றேன்.
அவருக்குப் புரியவில்லை. “டிகிரியா?” என்றார். “பிஏவா?”
“பி.ஏ, எம்.ஏ இரண்டும் முடித்துவிட்டேன். மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெறுவதற்காகப் படிக்கிறேன்”
“டாக்டரா?”
அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று தெரிந்தது, நான் மேற்கொண்டு விளக்க முற்படவில்லை.
“அதாவது, இந்த வழக்கு பல காலமாக இங்கே இருக்கிறது. கோப்புகளில் ஏராளமான தாள்கள் இல்லை. இதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. இதைப்பற்றி மேலிடத்தில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதை முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“எந்த ஒரு துப்பும் இது வரை கிடைக்கவில்லை. தலையில் அடிபட்டு இறந்திருக்கிறார். குடித்திருந்ததற்கான சான்று இருக்கிறது. மல்லாந்து விழுந்து பாறாங்கல்லில் அடிபட்டுக்கூட இறந்திருக்கலாம்… இப்போதைக்கு கொலை என்று எங்கள் ஆவணங்களில் இல்லை. சந்தேக மரணம் என்றுதான் இருக்கிறது. விபத்துதான் என்று எழுதினால் கோப்பை மூடிவிடலாம்.”
நான் அதற்கும் பேசாமலிருந்தேன்.
“நீங்கள் கையெழுத்திட்டால் போதும்”
“எதில்?”
“நாங்கள் சில கேள்விகள் கேட்டு அதற்கு நீங்கள் பதில் தந்ததுபோல நான்கு காகிதங்கள். எல்லாம் சென்ற ஆண்டு தேதியிட்டவை… கடைசியாக இப்போது ஒரு கடிதம்… கையெழுத்திட்டால் முடித்துவிடலாம்.”
நான் தலையசைத்தேன்.
“முடிக்காவிட்டால் உங்களுக்கும் தான் பிரச்சினை. வழக்கு முடிவடையாது, ஆனால் நீங்கள் இங்கே பைத்தானிலேயே தங்கவேண்டியிருக்கும்… நான் வாரண்ட் கூட வாங்க முடியும்…” என்றார். “எந்த ஒரு விஷயத்திற்கும் காவல்நிலையத்தில் இருந்து சான்று தேவைப்படும். ஒரு பாஸ்போர்ட் வாங்கவேண்டும் என்றால்கூட…”
”நான் கையெழுத்து போடுகிறேன்”
“சரி” என்றார். “இங்கே அவருடைய அரசியல்கட்சிக்காரர்களுக்கு அக்கறை இல்லை. பழைய எவரும் கட்சியில் இல்லை…”
“தெரியும்”
“முனீர்” என அவர் அழைத்தார். கான்ஸ்டபிள் காகிதங்களைக் கொண்டுவந்து வைக்க நான் கையெழுத்துகளைப் போட்டேன்.
“நன்றி… இதனால் எல்லாருக்கும்தான் நன்மை” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சரி” என்றேன்.
“மறுபடியும் பார்ப்போம்” என்றார்.
நான் வெளியே வந்தபோது உண்மையில் நிம்மதியாக உணர்ந்தேன். பைத்தான் நகரில் முழுக்க அம்பேத்கரின் படங்களும் சிலைகளும் நிரம்பியிருந்தன. சிவாஜிக்கும் சம்பாஜிக்கும் வைக்கப்படும் சிலைகளுக்கும் படங்களுக்கும் சமானமாக, போட்டியாக வைக்கப்பட்டவை. ஏராளமான சுவரொட்டிகளில் எனக்கு எவரென்றே தெரியாத முகங்கள் சிரித்தபடி, கைகூப்பியபடி. தொப்பி போட்டவை, வெவ்வேறு வண்ணங்களில் மாலை அணிந்தவை, நெற்றியில் நீண்ட செந்தூரத்திலகம் அணிந்தவை…
நான் உடனே வீட்டுக்குச் செல்லவில்லை. நேராக கோதாவரியின் கரைக்குச் சென்று அமர்ந்திருந்தேன். அது நான் அதுவரை போகாத புதிய இடம். கோதாவரியின் கரையிலேயே மிகச்சில இடங்கள்தான் எனக்குத் தெரிந்தவை.
இருட்டியபிறகு கிளம்பி வீட்டுக்குச் சென்றேன். ஒரு டீ குடிக்கலாம் என நினைத்தேன், ஆனால் எங்களுக்கு டீ அளிக்கும் கடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியூர்க்காரர்கள் எங்கும் டீ குடிக்கலாம், என்னை உள்ளூரில் எவரேனும் அடையாளம் கண்டுகொண்டால் பிரச்சினை ஆகிவிடும்.
வீட்டை நெருங்கும்போது அத்தனை சலிப்பாக இருந்தது. அப்படியே திரும்பி பஸ் ஏறிவிடலாமா என்றுகூட நினைத்தேன். நான் வருவது அம்மாவுக்குத் தெரியாது. ஊரிலும் எவரும் என்னைப் பார்த்திருக்கவில்லை. அப்போது ஓர் எண்ணம் வந்தது, அம்மாவுக்கு ராதிகாவைப் பற்றி நான் அதுவரை சொல்லியிருக்கவில்லை. இதுதான் தருணம், சொல்லிவிடலாம். அவளுக்கு எந்த எதிர்ப்பும் இருக்க நியாயமில்லை, அவள் அக்கறைகாட்டக்கூட வாய்ப்பில்லை.
அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று எண்ணிக்கொண்டு நான் அரையிருட்டில் நடந்தேன். நான் எங்கள் பகுதியின் திருப்பத்தை அடைந்தபோது மின்சாரம் போய்விட்டது. மின்சாரம் போகும்போது உருவாகும் ஒருவகையான முழக்கம். வீடுகளில் மண்ணெண்ணை விளக்குகள் ஒன்றொன்றாக ஏற்றப்பட்டன. வீடுகள் கண் திறப்பதுபோலிருந்தது. சிறிய ஊடுவழியில் வெளிச்சமே இல்லை. கண்களைக் கூர்ந்து நடக்கவேண்டியிருந்தது. சாக்கடைக்குள் கால்சென்றுவிட எல்லா வாய்ப்பும் இருந்தது.
நான் என் வீட்டை அடைந்தபோது முன்கதவு திறந்துகிடப்பதைக் கண்டேன். வீட்டுக்குள் விளக்கு ஏதுமில்லை. அம்மா வெளியே எங்காவது போயிருக்கிறாளா? அல்லது கொல்லைப்பக்கம் இருக்கிறாளா? ஓசை கேட்கும்படிச் செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன். கூடத்தில் அப்பா வாங்கிப்போட்ட நான்கு பிளாஸ்டிக் நாற்காலியும் ஒரு பிளாஸ்டிக் மேஜையும் மட்டும் இருந்தன. இருட்டுக்குள் அவற்றின் வடிவம் தெரிந்தது. அப்பால் சமையலறை நோக்கி திறக்கும் கதவும் திறந்திருந்தது. மறுபக்கம் படுக்கையறை நோக்கித் திறக்கும் கதவு மூடியிருந்தது.
நான் ராதிகாவைப் பற்றி அப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஒருபக்கம் கண்ணும் செவியும் கூர்மையடைந்து அந்த அறையை அறிந்துகொண்டிருக்க மறுபக்கம் ராதிகாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லவேண்டிய சொற்களாக நான் கோத்து வைத்திருந்தவை சிதறி பல்வேறு தனிச்சிந்தனைகளாக மாறி குழம்பி ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய அப்பா அம்மாபற்றி. பாட்னா பற்றி. வங்காளம் பற்றி…
நான் “அம்மா” என்று அழைத்தேன். என் குரல் விந்தையான ஒரு கம்மல் கொண்டிருந்தது. தொண்டையை கனைத்தபடி “அம்மா!” என்று மீண்டும் அழைத்தேன். மீண்டும் “அம்மா!” என்றேன்
அங்கே எவருமில்லை, அதை உடலாலும் உணரமுடிந்தது. அம்மா எங்கே தீப்பெட்டியையும் விளக்கையும் வைப்பாள் என்று நினைவுகூர முயன்றேன். எனக்கு அந்த வீடே நினைவுக்கு வரவில்லை.
சட்டென்று இருட்டில் அதைக் கண்டுவிட்டேன். நெஞ்சு ஒருகணம் நின்று பின் அறையத்தொடங்க, உடல் புல்லரித்துவிட்டது. அறையின் மூலையில் இருளைக் குவித்ததுபோல ஓர் உருவம் அமர்ந்திருந்தது. சற்று குனிந்து கண்களை இடுக்கி பார்த்தேன். இருட்டுக்குள் கன்னங்கரிய கரடி ஒன்று அமர்ந்திருப்பதுபோல. அதன் கண்கள் மட்டும் மெல்லிய மினுப்பு கொண்டிருப்பதுபோல.
“யார்?” என்றேன்.
இருட்டில் கரகரத்த குரலில் ஒரு சொற்றொடர் ஒலித்தது. நான் அந்த மொழியைக் கேட்டதே இல்லை. ஆணைபோல அத்தனை அதிகாரம் கொண்ட குரல். ஆனால் அடக்கமாகவும் அழுத்தமாகவும் அது பேசியது.
“யார்?” என்று மேலும் உரத்த குரலில் கேட்டேன். ”யார்? எழுந்திரு… யாரது?”
மீண்டும் அந்தக்குரல் என்னிடம் பேசியது, அந்த அறியாத மொழியில். நான் பாய்ந்து வெளியே வந்து முற்றத்தில் நின்றேன். உள்ளே அந்த குரல் வேகமாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தது.
என் உடலில் காற்றுபட்டு குளிர்ந்தபோதுதான் நான் அத்தனை வியர்த்து சட்டை நனைந்திருப்பதை உணர்ந்தேன். திரும்பி பக்கத்து வீடுகளைப் பார்த்தேன். அங்கெல்லாம் சிறு விளக்குகள் எரிந்தன. சன்னல் வெளிச்சம் சிவப்பாக தரையில் விழுந்து கிடந்தது. அந்த ஒளியே இருட்டைத் துலக்கப் போதுமானதாக இருந்தது.
ஒளி ஒரு தெளிவை அளித்தது. நான் மிக மெல்ல காலெடுத்து வைத்து வாசலை அடைந்து உள்ளே பார்த்தேன். இருட்டுக்குள் அந்த உருவம் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தது. நான் அறியாத குரல், அறியாத மொழி. ஆனால் அது அம்மா என்று எனக்கு எப்படியோ தெரிந்தது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

