எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்
நானொரு வாடகை வீடு
யாருடைய
யார் இதில் வசிப்பது
…..குஞ்நுண்ணி
அடிபட்டு விழுந்த பறவை ஒன்று பறக்க எத்தனித்து மீண்டும் மீண்டும் வீழும் கவிதைகள் விஜயகுமாருடையது. இருளில் தனித்து விடப்பட்ட அக அவஸ்தைகளை ஊடு நூலாகவும் புற அவஸ்தைகளை பாவு நூலாகவும் மாறி மாறி நெய்து கவிதை செய்கிறார் விஜயகுமார். நான் மேற்கண்ட குஞ்நுண்ணி கவிதைகளை அடிக்கடி நினைத்துக் கொள்ளவது உண்டு. இது ஒரு கவிஞன் உணரும் மீட்பற்ற சாம்பல் நிற உணர்வு. விஜயகுமாரின் கவிதைகளும் பெரும்பகுதி இந்த அலைகழிப்பின் நிலையழிவு.
சிற்றெறும்பின் நிழல் தொகுப்பில் உள்ள இந்த கவிதைகளை வாசிக்கையில் –
குரலொன்று பாடுகிறது
புறப்பட்ட இடம் சிதைந்து
போக இடமின்றி
இறங்க நிலமின்றி
இம்மைக்கும் மறுமைக்குமாய் அந்தரத்தில் ஆடுகிறது
என் ஊஞ்சல்
அது ஆடுகிறது
தூளியாகி
தொட்டிலாகி
கூண்டாகி
பாடையாகி
பானையாகி
சித்துவேலை தெரிந்த
குரலொன்று
மாறி மாறிப் பாடுகிறது
ஆராரிரோ
தாலேலலோ
அம்மம்மா
ஏலேல்லோ
ஐயையோ
முதுமக்கள் தாழியை நோக்கும் போது உள்ளே இருள் சில எலும்புகள் அது ஒரு வட்ட வடிவ நிரந்தர சிறை எனத் தோன்றும். தூளி ஒரு சிறை, தொட்டில் ஒரு சிறை, பாடை ஒரு சிறை பின்னர் தாழியும் ஒரு சிறை. இப்பிறவியில் எல்லையில்லா காலம் வரை இறப்பின் பாடலை கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். இறுதியில் வரும் அய்யய்யோ தான் கவிஞனின் குரல்.
மற்றொன்றில்
நீ இந்த உலகத்தின் ஆளில்லை
கருணையற்ற தேவன் ஒருவன் தனது
பணி நேரம் முடியும்போது விளையாட்டாய் உன்னை ஒரு
தொட்டிலை விடுத்து மற்றொன்றில்
தூங்க வைத்தான்
இது எனது பிரபஞ்சம் இல்லை
குரூரமான துரோகி ஒருவன் ஒரு
அலமாரியிலிருந்து இன்னொரு
அலமாரிக்கு என்னை வாஞ்சையுடன்
மாற்றி வைத்தான்.
தீர்ப்பில் உள்ள அச்சுப் பிழையால் அந்தமான் சிறையில் நாலாண்டுக்கு பதில் நாற்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தோர் உண்டு. வேறெங்கோ எக்காலத்திலோ பிறக்க வேண்டிய நாம் கடவுளின் கைமறதியால் இங்கு இப்படி பிறந்திருக்க வாய்ப்பு உண்டு. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு நிரந்தர ஒவ்வாமை விதிக்கப் பட்டுள்ளது, இது என்னுலகு அல்ல சொல்லப் போனால் இது எனது பிரபஞ்சமும் அல்ல என உணர்பவன் மற்றொன்றில் வாழ்கிறான். துரோகியின் வாஞ்சை எனும் ஒரு குரூர பண்பை ஏந்தியுள்ளதே இக்கவிதையின் சிறப்பு.
வெள்ளைச் சூரியன்
மஞ்சள் ஒளி ததும்பக்
தண்கள் கூசும் சூரியனை
இன்று வேப்ப இலைகளிடையே
பளிங்கு நிறத்தில் பார்த்தேன்
அத்தனை வெண்மையை
அத்தனை தூய்மையை
அதற்கு முன் கண்டதில்லை
என் சின்னஞ்சிறு இலையே
அன்றாடம் நான் காண
சூரியனைக் கொண்டு வா
என் சின்னஞ்சிறு கசப்பே
கூசாமல் நான் வாழ
ஒரு பொழுதை அப்படியே தா.
கசந்த ஒளி என்பதே ஒரே வினோத அழகியல், இதுவே இக்கவிதை நமக்குத் தரும் வினோத சுவை.
“இருள் என்பது சூன்யம்
இருள் என்பது சாசுவதம்”
என்கிற இந்த வரிகள் இக்கவிஞனின் பிரகடனம் போல ஒலிக்கிறது.
மறுபாதி
என்ன நினைத்துக்கொண்டு
அந்த இலையை என்னிடம் நீட்டினாய்
அதுவோ ஒரு பாதி பச்சையாலிருந்தது
மறுபாதி உலர்ந்திருந்தது
ஒற்றை இலை எடுத்துப்
பாடம் செய்து வைத்தேன்
அதை வசந்தத்தில் குடிக்கொள்
அல்லது
அதைச் சூடிக்கொண்டு காத்திரு
நினைவிற்கு வக்கில்லை
பீரோவின் அந்தரங்கப் பெட்டியில்
பூட்டப்பட்ட ஒரு பொருள் அந்நினைவு
அதனோடு வீசப்பட்ட
ஒன்றிரண்டு அந்துருண்டை
அந்நாள்
காலம் அடிக்கடி திறந்து மூடுகிறது
நியாபகத்தின் கதவை
அந்துருண்டைகள் உருகிவிட்டன
சட்டென மறைந்துபோக
நினைவிற்கு வக்கில்லை
ஒருபுறம் காய்ந்த இலை, பீரோவின் அந்தரங்கப் பெட்டி என்கிற இரண்டு அழகிய உருவகங்களை கொண்டுள்ளதே இவற்றின் சிறப்பு. இந்த பேரிருப்பின் சிற்றிருப்பின் அர்த்தமின்மையை ஒலிக்கும் ஓலம் இந்த தொகுப்பு. தேவதேவானும் இசையும் மிதந்து மிதந்து கொண்டாடும் இவ்வுலகையும் வாழ்வையும் இறக்கி வைக்க இயலா எடையுடன் துடித்து துடித்து வாழும் கவி விஜயகுமார். இருளுக்கு பதில் மாயையை கேட்பான் கவிஞன், இருளென்றாலும் உண்மையை கேட்பான் சற்று கூர் கொண்ட கவிஞன். உண்மைநாடும் கவிதைகள் கொண்டுள்ளதால் “சிற்றெறும்பின் நிழல்” ஒரு முக்கிய தொகுப்பு. உங்கள் தனிப்பட்ட அழகியல் கொள்கைக்கு உகக்காவிடிலும் குமரகுருபரன் விருதுக்கு கவிஞர் விஜயகுமாரை தேர்வு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள், விருது பெறும் கவிஞருக்கும்.
கிருஷ்ணன், ஈரோடு.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


