Jeyamohan's Blog, page 117

May 5, 2025

அ.சீனிவாசன்

எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தொழிற்சங்கவாதி; அரசியல்வாதி; சுதந்திரப் போராட்ட வீரர். இந்திய விமானப் படையில் பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் பாரதிய ஜனதாவிலும் செயல்பட்டார். தமிழக அரசால் இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அ.சீனிவாசன் அ.சீனிவாசன் அ.சீனிவாசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2025 11:33

இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு

இன்னும் நிதானமாக எரிவேன். 

இன்னும் நிதானமாக

அழிவேன்.

_சோ.விஜயகுமார்_

மேற்கண்ட வரிகளை சமீபத்தில், குடித்தழியப் பிறப்பெடுத்த சருகு குப்பை ஒன்றின் வாயிலிருந்து உளறல் எனக் கேட்டேன். கண்ணீர் மல்க உளறிக் கொண்டிருந்தது அது. பாண்டிச்சேரி பகுதி பார்களில் அவ்வப்போது, எந்த வேலையும் செய்ய வக்கற்ற, (இளமையின் துடிப்பில் கற்ற இலக்கிய ஈடுபாடு சற்றே எஞ்சும்) 35+ வயது ஆசாமிகளை நிறைய காண முடியும். 25 வயது வரை படிப்பு அதற்கான வேலை என்று ஒரு ஓட்டம். இடையில் ஒரு வெட்டிக் கூட்டம் சேரும். படித்த கொஞ்சம் இலக்கியம். மட்டு மீறிய காமம், மட்டு மீறிய போதை, மட்டு மீறிய தன் முனைப்பு எல்லாம் சேர அவ்வளவுதான், ஒட்டுமொத்தமாக அதன் வாழ்க்கை அங்கேயே முடிந்தது. கல்யாணம் குடும்பம் பிள்ளை குட்டி எல்லா நிலவரமும் தடுமாற்றம், நிரந்தர வேலை இல்லை. இந்த இரண்டும் இல்லாது தொடர் போதை காமம் என்று அலைக்கழிந்து, நிறைவு கொண்ட இன்பம் என்பதையே அறியாது அப்படியே உதிர்ந்து மக்கி காணாது போகும் அந்த சருகு வாழ்வு.

எதையுமே செய்ய திராணி அற்ற அந்த வாழ்கையை வாழ அவர்கள் ஒரு நியாயம் சொல்வார்கள். எல்லா இலக்கியங்களும் வாசித்து விட்டேன். இலக்கியவாதி சொல்வது வேறு செய்வது வேறு. ஆகவே அவர்கள் போலிகள். லட்சியவாத களப் பணி என்பதெல்லாம் மற்றும் ஒரு அரசியல் ஏமாற்று. இப்படி துவங்கி நீளும் அந்த பட்டியல் வழியே சொந்த உறவு துவங்கி சமூக உறவு வரை அனைத்திலும் உள்ளார்ந்து இருக்கும் இந்த சுயநலம் சார்ந்த போலி தன்மையை இவர்கள் ‘ கண்டுபிடித்து ‘ விடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் தங்களை சுற்றி நிகழும் எக்ஸ்ப்ளாய்டேஷனை இவர்களால் தாள முடியவில்லை என்றும், ஆனால் வேறு வழியே இன்றி இந்த வாழ்வை வாழ வேண்டி இருக்கிறது என்றும் ஆகவே தாங்கள் இவ்விதம் இருப்பதாகவும் கூறுவார்கள்.

அவர்களின் பாவனைகளை கழற்றி விட்டுப் பார்த்தால் அங்கே யதார்தமானதொரு சமூக சிக்கல் இருப்பதை அறியலாம். அந்த சிக்கல் 2000 துக்கு பிறகு உருவாகி இப்போது தீவிரம் கொண்டிருக்கிறது. 2000 பிறகு உலக பொருளாதார ஓடைகள் அதன் பல்வேறு முறைமைகளை இழந்து ஒற்றை வலதுசாரி பொருளாதாரம் என்று மாறி உலக நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு எல்லாம் அதை ஒட்டி வடுவமைக்கப்பட்டுவிட்டது. 2000 பிறகான பொருளாதார ஓட்டம் நுகர்வு வெறி கொண்ட இயந்திரமாக இயங்கும் ஒரு தனி மனிதனை அடிப்படை அலகாக கொண்டது. அதில் இறுதி கடை கோடி மனிதனும் சிக்கிய பிறகு, மனித அடிப்படை உணர்வான தோய்தல் இன்பம் எனும் நிலையை முற்றிலும் இழந்து விட்ட, நுகர்வு வெறி உணர்ச்சி மட்டுமே கொண்ட (கிட்டத்தட்ட ஜோம்பி) ஒரு பெரும்பான்மை  கூட்டம் ஒன்று சமூகத்தின் அடித்தளத்தில் வலதுசாரி பொருளாதாரத்தின் அஸ்திவார அடிப்படையாக அதன் உபரி  கசடாக சென்று படியும்.  (பத்து ரூபாய் ஜோம்பிக்கள் என்றே ஒரு கவிதை எழுதி இருக்கிறார் விஜய். ) மேற்கண்ட கவிதை வரிகளில் தோய்தல் எனும் மனித உணர்வை இழந்து விட்ட, நுகர்வு வெறி மட்டுமே கொண்டே அதை அறிந்த ஆனால் மீட்சி அற்ற ஒரு இயந்திரத்தின் சுய புலம்பலை கேட்க முடியும். அந்த வரிகளுக்கு மற்றும் ஒரு வாசிப்பும் உண்டு. ஒரு கவிதை எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் அக்கணம் அது இனிது எனில் கவிஞன் பூ போல மெல்ல மெல்ல மலர்ந்துகொண்டு இருக்கிறான். துயரம் எனில் அக்கவிஞன் மெல்ல மெல்ல எரிந்து கொண்டு இருக்கிறான். இனிதோ துயரோ அக்விதை எழுதி முடிக்கப்பட்டதும் வாடிய பூ இனி மலராது என்பதை போல, சாம்பல் இனி தழலாகாது என்பதை போல கவிஞனுக்குள் முற்றிலுமாக ஒன்று முடிந்து போகிறது என்று டி எஸ் எலியட் சொல்கிறார். இந்த புள்ளியில் வைத்து மேற்கண்ட வரிகளை கவிஞன் கொண்ட படைப்பு தொழிலின் கணத்துடன் பொருத்தியும் பொருள் கொள்ள முடியும். அந்த வகையில் கடந்த கால் நூற்றாண்டு கால தமிழ் சமூக அடித்தளத்தில் படிந்த உபரி கசடுகளின் குரல் என்றும், எழுந்து வரும் புதிய கவிக் குரல் எனவும் சோ.விஜயகுமார்  கவிதைகளை சொல்ல முடியும். 

_அந்தத் தெருவில்_

அந்தத் தெருவில் 

நின்று கொண்டிருக்கிறேன் மழை பெய்கிறது. 

ஒரு காதலைப் போல 

ஒரு அழுகையைப் போல ஒரு முத்தத்தை போல 

என்றெல்லாம் எழுதலாம்தான் 

கவிதைக்கு ரொமான்டிசைஸ் ஆடம்பரம்.

அந்தத் தெருவில் 

நின்று கொண்டிருக்கிறேன் மழை பெய்கிறது. 

யாரோ ஒரு மூன்றாம் நபர் போல 

நான் யாரோ ஒரு அன்னியன் என்பதைப்  போல 

முன்னாள் காதலைப் போல 

மூர்க்கமான காமத்தை போல 

என்றாலும் கவிதையில் யாருடைய சாயலும் வரக்கூடாது. 

மழை பெய்கிறது மழையைப் போல என்றாலும் 

உள்ளதைச் சொல்ல கவிதை எதற்கு 

அந்தத் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன் 

அதே பழைய மழை 

அதே பழைய தெரு 

புதிதாய் ஏதுமில்லை 

என்றாலும் மழை பெய்கிறது சாலையெல்லாம் மூத்திர வாசம். 

            __________

மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கும் கவி விஜயகுமாரின் முதல் தொகுப்பான ஒரு ஸ்க்ரோல் தூரம் தொகுப்பில் உள்ள கவிதை இது. (தலைப்பிலேயே காண்டம்பிரரி லைஃப் இல் நின்றாக வேண்டும் என்ற கவியின்  தவிப்பு துலங்கி விடுகிறது.) வாசித்த முதல் பார்வையிலேயே தென்பட்டு விடும் இது சுந்தர ராமசாமி உலகை சேர்ந்த கவிதை என்பது. சு ரா கவிதைகளின் வடிவத்தை மிகப் பொதுவாக வரையறை செய்தால், அதில் ஒரு எதிரிடை, ஒரு மைய விஷயம், அந்த விஷயம் கொண்ட குணம், அந்த விஷயம் கிளர்தும் தாக்கம் இந்த நான்கும் இருக்கும். கூடவே விமர்சனமும். சுரா கவிதை ஒன்றில் வானம் தரைக்கு வரும். தரைக்கு வந்த மறு கணமே அது கழிப்பறையை தேடி ஓடும். இந்த வானம் பூமி போல அதே எதிரிடயை இந்த கவிதையிலும் காணலாம். கற்பனைக்கும் யதார்ததுக்கும் ஆன எதிரிடை.

மேற்கண்ட கவிதையிலேயே, எல்லாம் சொல்லபட்டுவிட்ட மழையை அதன் ஆடைகளை களைந்து அதே பழைய மழையாக மீட்டுறுவாக்கம் செய்யும் கவிஞரின் யத்தனமும் புலப்படுகிறது.

இப்படி இரு குரல்கள், நிழலை ஏந்தி நிற்கும் கண்கள்,யாரும் கேட்கப் போவது இல்லை, போன்ற கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் கவிதை உலகின் தொடர்ச்சியாகவும், டூ மினிட்ஸ் அக்கா, ஓம்மாள சித்தர் கவிதைகளில் இசை கவிதை உலகின் தொடர்ச்சியாகவும் விஜயகுமார் இயங்குகுரார். அதே சமயம் அக்கவிதைக்குள் தனக்கே உரிய மெல்லிய ஒரு விலகலையும் காட்டுகிறார். உதாரணம் ஒம்மாள சித்தர் கவிதை. அது இசை கவிதை உலகை தொடர்ந்து வந்தாலும், கவிஞர் இசைக்கு ஒரு ஜெண்டில் மேன். பாய்ஸ் ரசிகர்களை விட கேர்ள்ஸ் ரசிகர்கள் அவருக்கு அதிகம் என்பதால், ஒம்மாள சித்தர் கவிதையில் வரும் அளவு பேட் வேர்ட்ஸ் களை அவர் யூஸ் செய்ய மாட்டார். இப்படி சில பகுதிகளுக்கு சென்று பார்க்கும் விஜயகுமார், வாஸ்கோடகாமா, மாலுமி போன்ற கவிதைகளில் விசித்திர உலகங்களையும் உருவாக்கிப் பார்க்கிறார் 

_தோலுரித்த கனவு_

நானென்பது 

தனது பசிக்கு தன்னையே தருகிற 

பாம்பின் வால்.

நீயேன்பது

ஈன்றபசிக்கு அழிந்து போகும்

அதிர்ஷ்டமில்லாத முட்டை.

வாலுமில்லை நீயுமில்லை 

சிற்றெரும்புகளின் நூறு வாய்களாய்

சிதறிக்கிடக்கிறது

தோலுரித்த கனவு.

                __________

மேற்கண்டது போல சில கவிதைகளில் ஹோண்டிங் ஆன படிம உருவாக்கங்களையும் நிகழ்த்திப் பார்க்கிறார். 

_இரு வேறு இலைகள்_

ஒரே மரத்தில் இரு வேறு இலைகள் 

அப்படி துடித்து அசைகின்றன 

ஆயுளுக்கும் அவை சந்திப்பதே இல்லை.

              ___________

மேற்கண்டது போன்ற கவிதைகளில் முயற்சிகள் அனைத்தையும் உதறி எளிய கூறுமுறைக்குள் சென்று பார்க்கிறார்.

எல்லாமே அப்பா சட்டையை குழந்தை போட்டு பார்க்கும் குதூகலம்தான். குழந்தை “புத்தம் புதிதாக” அந்த சட்டைக்குள் இருக்கிறது. இந்த தொகுப்பில் எதை எப்படி எழுதுவது என்று கவிஞர் கொண்ட தவிப்பு எல்லாம் 2000 பிறகு கவிதை எழுத வரும் எல்லா கவிஞரும் வந்து விழும் இடர்தான். எல்லாமே சொல்லப்பட்டு விட்டது இனி எதை சொல்வது என்றபடி ஒரு தயக்கம். தான் சொல்வதற்கு வாழ்க்கை தருணங்கள் இருக்கிறது, ஆனால் அந்த தருணங்கள் நிற்கும் சாரம்சமான வாழ்வு எது? அதன் மீதான குழப்பம். 

ஆதி பழங்குடி வாழ்வில் தனிமை கொண்ட மனம் என்று ஏதும் இல்லை. எல்லோரையும் கட்டி வைக்கும் சடங்கு கலைகள் கொண்டது அது. மிக மிக பின்னர் வந்த பக்தி இயக்கம் சமூகத்தின் கடைக்கோடி மனிதனையும் சென்று தொட்டது. இப்படி காங்கிரஸ் இயக்கம், தனி தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், கம்யுனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் என தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் சமூகத்தின் கடைக்கோடி மனிதனையும் குறி வைத்து இயங்கியது. 2000 பிறகு இத்தகு விஷயங்களின் தொடர்ச்சியில் இனி நிறவவே முடியாது எனும் படிக்கு ஒரு பெரிய அகழி விழுந்து, அந்த அகழிக்கு அந்தப் பக்கம் எவராலும் வந்து தொட முடியாது சிக்கிக் கொண்ட ஒரு சமூகம் உருவானது. இந்தத் தொகுப்பை எழுதிப் பார்த்து, அதன் வழியே அகழிக்கு அந்தப் பக்கம் இருக்கும், பசி காமம் சாவு  தவிர வேறு எதுவும் சென்று தொடாத அந்த சமூகத்தின் குரலாக விஜயகுமார் தன்னைக் கண்டடைந்து கொண்டார் என்பதை இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் வழியே அறியலாம் உதாரணமாக கீழ்கண்ட இந்த கவிதை. 

_வானதைப் பார்ப்பது_

ஒட்டிய வயிறு உடையவர்கள் 

நிலத்தில் நின்றபடி அண்ணாந்து பார்க்கிறார்கள் 

சில சமயங்களில் நம்பிக்கை மேலிருந்து விழுவது.

அந்த விடுதியில் மூர்க்கமான புணர்ச்சிக்குப் பிறகு

மறக்க விரும்புகிற முகத்தை 

நட்சத்திரங்களில் தேடி கொள்கிறாள் ஒருத்தி.

தூக்குக் கயிற்றை மாட்டியயவனின் கண்களும் 

மேல் நோக்கியே இருந்தன வானத்தைப் பார்ப்பது ஒருபோதும் 

வானத்துக்காக அல்ல.

               __________

2000 வருட செழுமை திகழும் மொழியில் வந்த எல்லாமே சொல்லப்பட்டு விட்டது என்று மயக்கத்தை அது அளித்தாலும், அவற்றால் கவிதையை காலாவதியாக்கிவிட முடியாதபடிக்கு, கவிதைக் கலையை அவ்வாறே நீடிக்கச் செய்யும் அம்சம் எது?  முதலாவது இந்த கணத்தில் நிகழும் வண்ணம் கவிதை கொண்ட உடனடி தன்மை. இரண்டாவது கல்ப காலம் கொண்டு உறைந்த அதே வைரம்தான் ஆனால் ஒவ்வொரு முறை அதை புரட்டும் போதும் அது சிதறடிக்கும் ஒளி புதியது என்பது போல, கவிதை வெளிப்படுத்தும் என்றும் உள்ள அகவய உணர்வின் புத்தம் புது வெளிப்பாடு,மூன்றாவது கவிதை என கிளர்ந்து எழும் உண்மையின் தீவிரம்.

இந்த மூன்றும் கூட, எப்படிச் சொல்வது எனும் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற கவிதைகள் நிறைந்த தொகுதி என்று விஜயகுமார் எழுதிய இரண்டாவது தொகுப்பான சிற்றெறும்பின் நிழலில் கவிதை தொகுப்பை சொல்லலாம்.

(அதில் சில கவிதைகளை ஈரோடு கிருஷ்ணன் பகிர்ந்து விட்டதால் அவர் பகிராத சில கவிதைகளை இங்கே பகிர்கிறேன்) 

_என் கனவுகளைக் காகங்கள் அடைகாத்தன_

குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு காகம் என்னை எட்டிப் பார்த்தது. 

காகங்கள் கவனிக்கப்படுவதில்லை.

குப்பை தொட்டியிலிருக்கும் 

கைவிடைப்பட்ட கனவுகளை காகங்கள் உண்கின்றன .

தன் ஒற்றைக் கண்ணால் உன்னிப்பாக பார்த்தபடி 

கூரிய அலகால் கொத்திக் கொத்தித் தின்றபடி 

கையறு நிலையின் ஊன் ருசியை காகங்கள் நன்றாய் அறியும்

என் கனவுகளைக் காகங்கள் அடைகாத்தன.

           _________

அடிப்படையில் காகங்கள் மிச்ச மீதி கழிவுகளை உண்டு வாழ்பவை. 

அப்படிப்பட்ட மிச்ச மீதி கனவுகள் அது.

அந்த கனவுகளும் அடை காப்பது என்பதை அறியா காகங்கள் அடை காப்பது.

காகங்களை மூதாதை என்று கொண்டால் அது அறியும் கையறு நிலையில் ஊன் சுவை என்னும் சித்திரம்… பித்ரு ரூபதுக்கு பதிலாக அந்த காக்கை நுகர்வு வெறி ஊட்டும் காரணிகளுக்கு குறியீடாக மாறினால்?

_ஊளை_

நான் வேட்டை மிருகம் வேட்டை என் சுபாவம்.

எனது வனத்தின் நீண்ட இருள் என் சாசுவத துக்கத்தால் பாவப்பட்டது 

என் பசி வயிற்றிலிருந்து உதிப்பதல்ல 

என் வேட்டை பசிக்கானதுமல்ல

என் வேட்டைப்பொருள் நீ 

நீ வேட்டையைப் பழகுவதற்காகவே ஊளையிட்டுத்திரியும் மிருகம் நான்.

          _______

மனிதன் விலங்காகித் திரியும் யுகத்தில்

//என் பசி வயிற்றிலிருந்து உதிப்பதல்ல 

என் வேட்டை பசிக்கானதுமல்ல//

எனும் வரிகள் கிளர்த்தும் கற்பனை சாத்தியங்கள் துனுக்குரச் செய்வது.

_அல்லால்_

ஒரு இரவில் மயானத்தில் தனியாக எரியும் பிணத்தருகே

ஒரு குவார்ட்டரை ராவாகக் குடி 

பொசுங்கிய பூவிற்கு உன் காதலைச் சூடு

இழந்த எல்லா உறவுகளுக்கும் சேர்த்து மாரில் அடித்து அழு

நாயோடு சேர்ந்து தீனமாய் ஊளையிடு 

செய்த எல்லாப் பாவங்களுக்கும்

துடித்து எழும்பும் காலைப் பிடித்து மன்னிப்பு கேள்

ஆசைகளை எரிசுள்ளியால் அடித்து அழி 

உடைகளை சிதையில் எரித்துவிட்டு

அந்தப் பிணத்திற்கு உன் பெயரை வை 

பாரம் இறங்கியதென நம்பினால் 

அம்மணமாய் வீடு திரும்பு 

அல்லால் சிதையில் ஏறி அமர்.

         _________

இங்கே எழுவது கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் தனது துரோக உலகுக்குள் திரும்பும் சராசரியின் குரல் அல்ல, உறவுகள் எவரும் இன்றி தனித்து எரியும் அனாதை பிணம். அதனிடம் சொல்லி கழுவாய் தேடும் கவிஞனின் குரல். இந்த காலத்தின் கவி இந்த காலத்து வாழ்வை முன்னிட்டு தனக்குத் தானே நெஞ்சோடு புலத்தல் தான் இது.

_கண்ணாடி_

பிம்பத்தின் ஆழத்தை அறிய அதன் விளிம்பினை ஒற்றை விரலால் தடவிப்பார்க்க வேண்டும் எவ்வளவு ரத்தம் பீறிடுகிறோதோ அவ்வளவுதான் கூர்மை எவ்வளவு ஆழமாய் கீறுகிறதோ அவ்வளவுதான் அணுக்கம்

கண்ணாடி உக்கிர வெப்பத்தில் உருத்திரண்ட மணல் துகள்கள் 

மனதோ அழிவதற்காகவே ஆக்கப்பட்ட சாபத் திரட்டு.

           ________

எப்படிச் சொல்வது எனும் கலையில் தேர்ந்த கவிதை மேற்சொன்னது.

_நைனா சிகரெட்_

ஊர் தவறாது திருவிழாவில் கடைபோடும் ஒண்டிக்கட்டை நைனாவிற்கு 

சிகரெட் டீ கட்டிங் சாப்பாடென வாங்கித்தர ஏழெட்டு பிள்ளைகள்

ஒரு சிகரெட்டை தத்துகொடுத்து நானும் நைனாவைத் தத்தெடுத்தேன்

அவருக்கிருக்கும் ஏழெட்டு பிள்ளைகளில் நான் சிகரெட் பிள்ளை

அன்றாடம் வாங்கும் பத்து சிகரெட்களில் ஒரு சிகரெட் நைனா சிகரெட்.

              ________

நேரடியாக சொல்லப்பட்ட ஆனால் நுட்பம் பொதிந்த கவிதை. சிகரெட் என்பது என்ன? ஒரு விதமான சுய கொள்ளி தானே. விரும்பி ஈடுபடும் சிறிய அளவிலான சுய அழிவு. அப்படி சுய அழிவின் மெல்லிய சுகம் கண்டு, அதையே பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அளித்துக் கொள்ளும் தந்தை மகன் உறவாக கண்டு இணையும் இருவர். 

விஜயகுமார் எழுதிய மூன்றாவது தொகுப்பு அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூ. அம்மா குறித்த ஹான்டிங் ஆன சித்திரங்கள் பலவற்றை வெய்யில் எழுதி இருக்கிறார். இந்த தொகுப்புக்கு முன்பாக அம்மாவை மலைப்பாம்பு பார்த்துக்கொண்டு இருந்தது எனும் தலைப்பில் கவிஞர் கதிர் பாரதி எழுதிய தொகுப்பு உண்டு. அவற்றிலிருந்து விஜயகுமாரின் தொகுப்பு எங்கே வேறுபட்டு தனித்துவம் கொள்கிறது? அது தலைப்பிலேயே துவங்கி விடுகிறது. கதிர் பாரதி தொகுப்பின் தலைப்பில் மலைப்பாம்பு வருகிறது. அணிகள் அலங்காரங்கள் என மரபு கவிதைகள் போலவே நவீன கவிதைகள் தன் மேல் போர்த்திக்கொண்ட பல்வேறு விஷயங்கள் உண்டு. அவற்றை உதறி எழுந்த கவிதைகள் அடங்கியது அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூ தொகுப்பு. தலைப்பிலேயே அதன் நேரடி தன்மை துவங்கி விடுகிறது. 

எனது இடையீடு என ஏதும் இன்றி அந்த தொகுப்பின் கவிதைகள் சிலவற்றை கீழே தருகிறேன்.

***

பித்தவெடிப்பில்லாமல் அம்மாவின் கால்களைக் காணமுடியாது. 

அவளால் மருதாணி வைத்துக்கொள்ள முடியாது.

 மாதம் ஒருமுறைதான் தலைக்குக் குளிப்பாள் என்பதால் எண்ணெய்ச்சிக்கான கூந்தலை அவளால் சிலுப்பிவிட முடியாது. வசீகரத்திற்கான எந்த அலகுகளுக்குள்கும் அடங்காதவள் அம்மா. 

அம்மா என்பதாலேயே வசீகரமாய் இருந்தாள்.

***

எந்த வாசனை திரவியத்திற்கும்

அடங்காத உடல் வாசனை அம்மாவுடையது

அவளின் வாசைனையை

அப்படியே தவிட்டுப்படியெடுத்துப் பிறந்தவன் நான்

நாங்களணிந்த ஆடைகள்

வண்ணம் பூசப்பட்ட தவிட்டுக் கோணிகள் 

நாங்கள் தறிகெட்ட தவிட்டு மூட்டைகள்

***

ஒருமுறை பிடிவாதம் பிடித்ததற்காய் விறகைக்கொண்டு சூடு போட்டாள் 

பின் அவளேதான் கண்ணீர் மல்க மருந்து போட்டாள்

நேசம்போன்று நோகடிக்கும் ஆயுதமில்லை 

இந்த வரி அந்தத் தழும்பு பரிசளித்தது.

***

வீட்டின் சமையலறையில் பாதி டம்ளர்களால் நிறைந்தவை.

காபி பருக ஒரு டம்ளர்

நீரை சூப்பிக்குடிக்க ஒரு டம்ளர்

ஊதுபத்தியை சொருகுவதற்கென

அரிசி நிறம்பிய ஒரு டம்ளர்

பல்லியும் தேளும் குடித்தனம் நடத்த சில டம்ளர்

வலிப்பில் நெளிந்த வளையல்களை

ஒடுக்கெடுத்து மீண்டும் வட்டமாக்குவதற்கென  டம்ளர்

வலிப்பின்போது

அவள் உதட்டை கிழிக்காதபடி

நீரைத் தர தோதான ஒரு டம்ளர்.

***

அடிக்கடி கண்களைக் சுருக்கிக் கையை சட்டென இழுத்துக்கொண்டு பற்களை நறநறவென கடிப்பதும் வேண்டாமென்பதற்குக் கைகளை வேகவேகமாக ஆட்டுவதும் 

தண்ணீரைக் குடிக்கும்போது மடித்த கையின் முஷ்டியை நெஞ்சருகே வைத்துக்கொள்வதும் தும்மல் வரும்போதெல்லாம் இல்லாத இறைவனை பெயரிட்டு அழைப்பதும் அம்மாவின் அனிச்சைச் செயல்கள் 

வலிப்பின்போது உதட்டில் வரும் ரத்தத்தை துப்பாமல் முழுங்குவதும்.

***

எங்களுக்கு பூர்வீக நிலம் கிடையாது

தோட்டத்துச் செடியிலிருந்து அள்ள

மண்ணும் கிடையாது

தொலைதூர ஊருக்கு

வேலைக்குச் செல்லும்போது

நான் காபித்தூளை எடுத்துச் சென்றேன்

அம்மாவின் நியாபகம் வரும்போதெல்லாம்

என் பர்சைத் திறந்து

நான் அந்தக் காபித்தூளை முகர்ந்துகொள்வேன்.

***

பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல வலிப்பு வரும்போதெல்லாம் நிலத்தில் வீழ்வாள் அம்மா

நான் கண்ட கனவில் அம்மா மெத்தையாலான நிலத்தில் வீழ்ந்தாள் 

அப்படித்தான் முதன்முதலாக அவள் என் கனவிற்குள் வந்தாள்.

***

என் கவிதை என்பது வலிப்பின்போது என் அம்மா முனகும் அந்தப் புரியாத வார்த்தைகள் 

என் அம்மாவிற்கு புரியும்படி சொல்லத் தெரியாமல் நான் தவிர்த்த வார்த்தைகள்

***

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் நான் கண்ட பல பல்லவர் கால கொற்றவை சிலைகள், விவசாயம் உள்ளிட்டு எதன் பொருட்டோ பூமியை தோண்டும் போது அதன் அடியில் இருந்து எழுந்து வந்தவை. சென்னை (புரசைவாக்கம் என்று நினைக்கிறேன்) அங்கே பொன்னியம்மன் கோயில் உண்டு. கிணறு தோண்டுவதற்கான முயற்சியில் பாதாளத்திலிருந்து கிடைத்த தெய்வம் அவள். ஆகவே அவளுக்கு பாதாள பொன்னியம்மன் என்று பெயர் வைத்து விட்டார்கள். அப்படிப்பட்டவள்தான் விஜயகுமாரின் தொகுப்பில் வரும் இந்த அம்மாவும். தமிழ் பண்பாட்டை தோண்டி பார்த்தால் எல்லாவற்றுக்கும் கீழே  இருக்கக்கூடிய தாய்வழி சமூகத்தின் அன்னைதான் அவள். பிரிட்டனின் பதினெட்டாம் நூற்றாண்டு கோதிக்  இலக்கியத்தில், அந்த வகை மாதிரி கிறிஸ்துவ பண்பாட்டை தோண்டி பார்க்க, அதன் அடியிலிருந்து கிறிஸ்தவ பண்பாட்டால் புதைக்கப்பட்ட பாகனிய தெய்வங்கள் சாத்தானின் உருவம் கொண்டு வெளியே வந்தனர். அப்படி கண்ணில் பூ விழுந்து, சிக்கு மண்டயுடன், எத்து பற்களுடன், சூம்பிய கை கால்களுடன் உருமாறி வந்திருக்கும் பண்டைய தாய் வழி சமூகத்தின் இன்றைய அம்மா தான் அவள். அங்கே கையறு நிலையில் நிற்கும் மகனாக நின்று வாசகன் காணும் அம்மாவின் சித்திரம் எல்லாம் அந்த ஆதி தாய் கொண்ட இன்றும் எஞ்சும் அவளது கண்ணீர்தான் அந்தத் தொகுப்பில் எழுந்து வரும் துயரமும் கரிப்பும், இந்த சாராம்சமான ஆழம் கொண்ட பண்பாட்டு துயரிலிருந்து வெளியாவது தான்.

தீவிர இலக்கியத் தமிழ்க் கவிதை மரபில் எழுந்து வரும் சோ. விஜயகுமார் என்ற இந்த புதிய குரல், மனுஷ்யபுத்திரன் பட்டறையில் இரந்து வெளி வருவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழ் சமூக வரலாற்றில் பக்தி இயக்கம் துவங்கி பல்வேறு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தை கட்டமைக்க இயங்கிய நிலையில், அதே நோக்குடன் பாரதி வழியே துவங்கிய நவீன தமிழ் இலக்கிய இயக்கம் மெல்ல மெல்ல பொது சமூக களத்தை விமர்சித்து விமர்சித்து தன்னைத் திரட்டி, எழுத்து முதல் பல்வேறு சிற்றிதழ் இயக்கம் வழியே கிட்டத்தட்ட பொதுவில் இருந்து துண்டித்துக்கொண்டு தனித்ததொரு இயக்கமாக செயல்பட்டது. தமிழ் சமூகதின் கலை, அறிவு, விழுமியங்கள், அறங்களை வரையறை செய்யும் அடிப்படை மையமாக மாறியது. அப்படி உருவானவை அங்கிருந்து சென்று பொது தமிழ் சமூகத்தில் சென்று கலக்க, தீவிர தமிழ் இலக்கிய இயக்கம், பொது நீரோட்டத்தில் இருந்து தன்னை துண்டிந்துக் கொண்ட நிலையே பெரும் தடையாக அமைந்தது. இந்த தடையை கடக்கவே க நா சு இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் என்ற கனவு கண்டார். சுந்தர ராமசாமி அதற்கு முயன்றார். இந்த தடையை முதன் முதலாக மூர்க்கமாக மோதி உடைத்தவர் ஜெயகாந்தன். வெகு மக்கள் வழியே உரு திரளும் கலாச்சாரத்தில், சீரிய தமிழ் எழுத்தாளன் என்பவன் யார், சீரிய இலக்கியம் என்பது என்ன? அதன் விழுமியங்கள், அறம், லட்சியவாதம் என அனைத்தையும், பொதுக் களத்தில் அதற்கான இடத்தை தனது ஓங்கிய குரல் வழியே உறுதி செய்தார். 

ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் நிகழும் செயல்பாடு இது. தீவிர இலக்கியம் கண்டடைந்தவற்றை எவரேனும் ஒரு இயக்கமாக செயல்பட்டு அதைக் கொண்டு வெகு மக்கள் வழியே திரளும் கலாச்சாரத்தின் சேர்ப்பார்கள். எழுத்தாளர் சுஜாதா செய்தது அதைத்தான். அவருக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டால் சுந்தர ராமசாமி நீல பத்மநாபன் என்று தான் சொல்வார். தீவிர இலக்கியத்தில் இருந்து மனுஷ புத்திரனை வெகுமக்கள் களத்துக்கு அடையாளம் காட்டியவரும் அவர்தான். 2000 துவங்கி மனுஷ்ய புத்திரனின் இலக்கியக் களச் செயல்பாடு மிகத் தீவிரமானது. தீவிர இலக்கியதின் எல்லா கூறுகளையும் எல்லா முக்கிய கதை கவி ஆளுமைகளையும் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் வெகு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். 

ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் அந்தந்த காலத்தின் தீவிர இலக்கியம் கண்டடைந்த கூறுகள் வெளியே பரவலாக்கம் கண்டு அது சகஜம் என்றானவுடன், உள்ளே புதிய நோக்குகள், வகை மாதிரிகள் இங்கு தீவிர இலக்கிய களத்தில் தோன்றும். உண்மையில் தீவிர இலக்கியத்தில் சிக்கல் வாய்ந்த இடம் இதுதான். சாமியார்களில் ஒரு சாமியார் முளைத்த இடத்தில் அவரை மறைத்து நூற்று பத்து போலி சாமியார்கள் முளைப்பதை போல, தீவிர தமிழ் இலக்கியத்திலும் இந்த இடைவெளியில் கணிசமான போலிகள் தோன்றும். விநோதமான மோஸ்தர்கள் எல்லாம் தோன்றும் பின் நவீனத்துவம் போல. துர் விதியாக அவற்றில் பல நிலைபெற்றும் விடும். உதாரணம் யவனிகா ஶ்ரீராம். இது ஒரு தொடர் செயல்பாடு. விட்டு விலகா தொடர் விதி. இந்த வருடம்  வெளியான சசி இனியன் என்பவர் எழுதிய நீலி வனம் தொகுப்பு வரை  (சமயற்கட்டில் குக்கரில் விசில் அடித்தால் கூட நீலி வன கவிஞருக்கு தத்துவத் தவிப்பு வந்துவிடுகிறது) , தொடர்வது தீவிர தமிழ் இலக்கியத்தை பிடித்த அதன் உயிர் மையத்தைக் காயடிக்க முனையும் இந்த சீர்கேடு. 

இந்த சூழலில்தான் இளம் கவிஞர்களுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுகள் முக்கியத்துவம் கொள்கிறது. இதுவரை இந்த விருது பெற்ற கவிஞர்கள் எவரும் உள்ளடக்கத்தில் போலி இல்லை என்பதே இந்த விருதுகள் வழியே அடையாளம் காட்டப்படும் இவர்களின் முதல் தகுதி. இந்த விருது பெற்ற ஒவ்வொருவரின் கலை நோக்கும் இன்னும் கால் நூற்றாண்டு கழித்து வெகு மக்கள் பண்பாட்டில் கலக்கும் எனில், அது தீவிர இலக்கியம் தனது மையத்தில் என்றென்றும் கொண்டிருக்கும் உண்மையின் தீவிரதின் பதாகை என்றே அவை அமையும். அந்த வகையில் இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெறும், மனுஷ்ய புத்திரன் அவர்களின் இளவலும், இளம் கவிஞருமான, பிரியத்துக்குரிய நண்பர் (என்னைப்போலவே) என் தட்டுக்கெட்ட தவிட்டு மூட்டைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2025 11:31

Education and Insight

You had explained the difference between learning and insight beautifully. The words synonymous with insight themselves are exciting: wisdom, realisation. But synonyms of knowledge are flat: intelligence, brilliance etc

Education and Insight

கர்நாடக சங்கீதம் நன்கு அறிந்த மலையாளப்பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தன்னை எப்போதும் வித்துவான் என்று அழைப்பதை விரும்ப மாட்டார் ,ஒரு வித்யார்த்தி (மாணவன்)என்றே கூறிக்கொள்வார்.

ஆசிரியரா? கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2025 11:30

May 4, 2025

இலக்கியத்தில் ஏன் சண்டைகள்?

இன்று முகநூலில் சென்று இலக்கியத்தை மேலோட்டமாக அறிமுகம் செய்துகொள்பவர்கள் அடிக்கடிச் சொல்லும் ஒன்று உண்டு. ‘என்ன சார் இலக்கியம்? ஒரே அடிதடி சண்டை. அதனாலே படிக்கிறதில்லை’. சரி, அவர்கள் தேடும் சமாதானக் களம்தான் என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:36

நோயும் வாழ்வும்

என் மரியாதைக்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு ,

என் பெயர் அ- ,வயது 25 . உங்கள் வாசகன் நான். உங்கள் பத்திகளை இணையத்தில் தொடர்ந்து படித்து வருகிறேன் , தற்போது சென்னை வாசி சொந்த ஊர் நெல்லை மாவட்டம். BTECH படித்து இரண்டு வருடங்கள் வேலை இல்லாமல் இருந்து கடந்த நான்கு மாதமாக ஒரு சின்ன software company இல் வேலை கிடைத்து உள்ளது..

இலக்கியம் சார்ந்த கடிதம் அல்ல இது,என்னுடைய தனிப்பட்ட உள சிக்கல் காரணமாக இந்த கடிதத்தை அனுப்புகிறேன் .அதனால் பிழை இருந்தால் மன்னிக்கவும்..

எனக்கு பிடித்த புத்தகங்களை படித்து கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்க்கை போய் கொண்டு இருந்த நான்கு மாதம் முன்பு,இருமல் அதிகமாக இருந்ததால் சென்னையில்  உள்ள ஒரு  ஒரு நுரையீரல் நிபுணரிடம் பரிசோதித்தேன் (5000 ரூபாய்க்கு மேல் செலவானது )  Xray,CT scan போன்றவற்றை எடுத்தபோது  bronchiectasis என்னும் நுரையீரல் நோய் இருப்பது தெரிய வந்தது ….

இந்த நோயை பற்றி டாக்டர்கள் இதை மருந்துகளால் முற்றிலும்  குண படுத்த முடியாது என்றும் மருந்துகளால் ஓர் அளவு கட்டு படுத்தவே முடியும் என்றும் சொன்னார்கள் . மேலும் இந்த இருமல் நிற்கவே செய்யாது,என்றும் வாழ்க்கை முழுவதும் Anti-Biotic எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி ஒரு பொதி போல் மாத்திரைகளை கட்டி  தந்தார்கள்.

இந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அது ஒரு துர் கனவு போல் தான் இன்று வரை இருந்து வருகிறது,நோய் உண்டாக்கிய பயம் என் ரத்தத்தில் கலந்து விட்டது …. மனமே என்னை மேலும் நலிவடைய  செய்துவிடும் லிருக்கிறது …. இதனால் நான் ஏன் சொந்த ஊருக்கு திரும்பி திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  விசாரித்த போது,  நீங்கள் கொண்டிருப்பது மிகை கற்பனை என்றும்,பயப்பட தேவை இல்லை எனவும் சொன்னார்கள்.Anti-Biotic வாழ்க்கை முழுவதும், எடுப்பது அவசியம் இல்லாதது என்றும்,அது மிகுந்த பின் விளைவுகளை தரும் என்றும் சொன்னார்கள்.

என் நண்பர்கள் அறிவுரை சொல்லும் போது மூர்க்கமான வெறுப்பு அவர்கள் மேலும்,என் மேலும் ஏற்பட்டது.  என் தந்தை படிக்கா விட்டாலும் உங்கள் தந்தையை போல அன்பு கொண்டவர் … அவர் எனக்கு  ஒரு நண்பர் போல.  அவரிடம் மட்டும் என் நிலையை பற்றி சொல்லி அழுது இருக்கிறேன்,அப்போது அவர் “உனக்கு வயசு காணாது டா … எங்க வயசில் எவ்வளோவோ பார்த்தாச்சு ” டாக்டர் என்ன கடவுளா?இது வரும்னு நீ நெனச்சியா? வந்திடுச்சு,அதே போல  ஆண்டவன் நெனச்சா நொடில போய்ரும்டா! ” என்பார் உனக்கு ஏதாவதுன்னா எங்க உள் உணர்வு சொல்லும் டா எங்க ரெண்டு பேருக்கும் துளி கூட அது இல்ல ,நீ தைரியமா இரு டா என்று சிரிப்பார்.ஒரு வகையில் பேரு பெற்றவன் நான் .

அப்பா என்னிடம் ” நீ வீட்டிலயே இருந்தா இதை நினைச்சே வம்பா போயிருவே கிளம்பு ,சென்னைக்கு போ இந்த தடவை வேலை கிடைக்கும் என்றார் “கிளம்பி வந்தேன் வேலையும் கிடைத்தது …

இப்போது இருமல் சுத்தமாக நின்றுவிட்டது, ஆனால் முதுகு மற்றும் மார்பு வலி இருந்து கொண்டே இருக்கிறது, ஒரு நண்பர் மூலமாய் திருவனந்தபுரம்மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கிறேன் அது sterroid என்பதால் முதுகு மற்றும் மார்பு வலிஇருந்து கொண்டே ருக்கிறது .அதனால் தற்போது மாத்திரைகளை முழுமையாக நிறுத்திவைத்து விட்டு உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் நிலை  ஓரளவிற்கு பரவில்லை ..  ஆனால்  இன்னும் மூச்சை உள்ளே இழுத்தால் Painful Inhaling ஆகத்தான் இருக்கிறது

வலி கிளம்பும் போதெல்லாம் பயம் சூழ்ந்து கொள்கிறது,  என்னால் நிம்மதி கொண்டு வேலை செய்ய முடியவில்லை …. பயத்தை போக்க புத்தகத்தின் துணை யை தவிர வேறு எனக்கு ழிஇல்லை .இந்த நோய் என்னை மன அளவிலும் உடல் அளவிலும் மேலும் தளர வைத்துள்ளது ….இவ்வளவிற்கும் இந்த நோய் புற்று நோயை போல மிக கொடிய நோய் அல்ல  என்பதையும்  அறிவேன் …..

நான் தத்துவத்தில் சிறிது ஆர்வம் உள்ளவன்,ஓஷோ ,ஜக்கி வாசுதேவ் படித்திருக்கிறேன் எனவே நான் செய்த கர்மா தான் இதற்கு காரணம் எனபது உண்மைஎனில் அந்த கர்மாவை எப்படி கரைப்பது?கர்மாவை பற்றி நினைத்து மேலும் கர்மாவின் சுழல் புதைகுழிக்குள் சிக்கி கொள்கிறேனா ??

நீங்கள்  உங்கள் காலில் மண் வெட்டி வெட்டிய போது எழுதிய பத்தியை வாசித்து இருக்கிறேன் …. “சிவம்”  என்ற  உக்கிரமான உண்மையின் தரிசனத்தை சிறிது  அனுபவித்து இருக்கிறேன் .உங்கள் தெய்வ மிருகம் படித்த போது அழுதே விட்டேன் ..
இயற்கை மருத்துவம்,மாக்ரோ பயாட்டிகஸ் ,மேயோ கிளினிக்  முற்றிலும் உண்மை …

உங்களுக்கு இந்த கடிதம் அனுப்ப காரணம்   நீங்கள் அனுபவித்த துன்பத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் இன்னும் அனுபவிக்க வில்லை,உங்கள் பெற்றோரின்,  நண்பனின் மரணங்கள் தந்த மன பேதளிப்பே இன்று மிக உக்கிரமான படைபூக்கமாக உங்களிடம் வெளிபடுகிறது

வாசிப்தைதவிர எனக்கு வேறு பொழுதுபோக்கு யாது ….அதனால், வாசிப்பின் மூலமே மனதிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன் …மேலும் இந்த பேதளிப்பை முற்றிலுமாக இலக்கியம் ,தத்துவம், ஆன்மீகம் நோக்கி மடை மாற்றம் செய்ய விரும்பிகிறேன் ….

நீங்கள் அறிந்த வரையில் நான் எந்த மாதிரி சிகிழ்ச்சை எடுக்க வேண்டும் ஆயுர்வேதம்,இயற்க்கை வைத்தியம் ,யூனானி போன்ற வற்றில் இதற்கான மருந்துகள் உண்டா உண்டு எனில் அது மிகுந்த  எனக்கு உள  ஆறுதல் அளிக்கும்

உங்களுக்கு எதற்காக இந்த கடிதம் எழுதினேன் என்று துல்லியமாக
அறிந்தேலேன்..எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்,அதிக பிரசிங்கிதனம் இருந்தால் மன்னிக்கவும் …….

என் மன நிலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை கூச்சமும் துக்கமும் தான் காரணம் …ஏனோ உங்களிடம் சொல்ல ன்றியது. பிரபஞ்ச சத்தியத்தை  பற்றி எழுதுபவர் என்பதால் தானோ என்னவோ ?

அப்பாவிடம் மட்டுமே சொல்லுவதற்கென்று சில அந்தரங்கமான வலி இருக்கிறது …அது அப்பா மட்டுமே உணரும் மகனின் வலி …நீங்களும் ஒரு  வகையில் எனக்கு   தகப்பன் தானே

அன்பன்
-அ –
அன்புள்ள அ-

உங்கள் தனிப்பட்ட கடிதத்தையும் என் பதிலையும் பிரசுரிப்பதற்கு மன்னியுங்கள் . இத்தகைய உரையாடல்கள் வெறுமே கவனிப்பவர்களில் கணிசமானவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றன என்பதைக் கண்டிருக்கிறேன். அதாவது நீங்கள் எழுதிவிட்டீர்கள். எழுதாதவர்களே ஏராளம்.

இத்தகைய தருணங்களில் ஒருவருடைய உள்ளிருந்தே வெளியேறும் வழிக்கான வாசல் திறக்கமுடியும். அதுவே என் அனுபவம். வெறுமே சொல்லப்படும் கருத்துக்கள், அறிவுரைகள், அலசல்களினால் எந்தப்பயனும் இல்லை. அவை நமக்குச் சொற்கள் மட்டுமே. ஆகவே நான் உங்களிடம் நான் படித்தவற்றையோ சிந்தித்தவற்றையோ சார்ந்து ஏதும் சொல்லப்போவதில்லை. நான் கண்டதையும் அனுபவித்ததையும் சார்ந்தே சொல்லப்போகிறேன்.

நான் மிக இளம்வயதில் உடலால் நலிவுற்று உடல்நலச்சிக்கல்கள் பல வழியாகக் கடந்துசென்றவன். அதனாலேயே உடலை கூர்ந்து அவதானிக்கவும் உடல்நலச்சிக்கல்களை நானே கையாளவும் எப்போதும் கவனமாக இருக்கிறேன். உடலை பொருட்படுத்தாமலிருக்கும் நண்பர்களிடம் அது நம் கருவி, அதைப் பேணாவிடில் நாம் நம்முடையதென நினைக்கும் பல விஷயங்களை இழக்க வேண்டிருக்கும் என சொல்லி வருகிறேன்.

ஆனால் நாம் நம் உடல்தான் என்பது ஓர் ஆரம்ப கட்ட எளிமையான உணர்வேயாகும். அந்த உணர்வை ஏதேனும் ஒரு தளத்தில் தாண்டிச்செல்லாதவர்கள் இப்பிரபஞ்சம் வழங்கும் அளவில்லாத இன்பங்களை இழக்கிறார்கள் என்றே சொல்வேன். உடலே நான் என்ற உணர்வு அடிப்படையான விலங்குணர்வு. நான் என்று சொல்லி குட்டித்தொப்பையைச் சுட்டிக்காட்டும் சின்னக்குழந்தைப் பிராயத்தில் இருந்தே அந்த உணர்வு உருவாகி வந்திருக்கிறது. அதிலிருந்து எளிதில் விடுபட இயலாது. முற்றிலும் விடுபடுதல் சாத்தியமே அல்ல. ஆனால் அந்த விடுபடல் நிகழ்ந்தாகவேண்டும்.

எம்.முகுந்தன் எழுதிய மய்யழி நதியின் கரையில் என்ற நாவலில்[மலையாளம்] ஒரு அபூர்வமான இடம் வரும். மாஹியின் சுதந்திரப்போராட்ட்டத்தைப் பற்றிய நாவல் அது. அதில் வரும் ராகவன் மாஸ்டர் என்ற போராளி பிறப்பிலேயே கடுமையான நோயாளி. ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்தவர். அவரது தாயும் தந்தையும் அவரை எப்போதுமே மரணப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். ஒருநாள் அவர் நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வந்து வெளியே  தென்னைமரத்தின் அடியில் அமர்கிறார். வானத்தை ஏறிட்டுப்பார்க்கிறார். அங்கே மின்னிக்கொண்டிருக்கும் ஒற்றை நட்சத்திரம். வான்வெளியின் நினைப்புக்கெட்டாத தூரத்தில் அது ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. கோடானுகோடி வருடங்களாக அது மின்னிக்கோண்டிருக்கிறது. மனிதன் அந்த காலவெளி முன்னால் ஒரு சிறு கொப்புளம் மட்டுமே.

ராகவன் மாஸ்டருக்கு அந்த நிலையாமை உனர்வு நேர்மாறாக ஒரு மன எழுச்சியை அளிக்கிறது. நான் இருக்கிறேன் என்ற உணர்வு. நாளை இருப்பேனா என்பதல்ல,  இப்போது இருக்கிறேன் என்பது. இந்தக்கணம் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது. அது எத்தனை மகத்தான விஷயம்! அந்த அற்புதமான இருத்தல் உணர்வால் மனம் கொந்தளிக்கப்பட்டு அவர் வீட்டுக்குள் செல்கிறார். ஒரு கூடை நிறைய பொற்காசுகள் கிடைத்தது போல. அவற்ரைக்கொண்டு என்னென்னவோ செய்யலாம். செய்து தீராத விஷயங்கள் கண்முன் இருந்தன.

அப்படித்தான் மாஸ்டர் மாகியின் சுதந்திரப்போராட்ட முன்னோடியானார். எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்ற உணர்வே அவரை  அசாதாரணமானவராக ஆக்கியது. எந்த விஷயத்துக்காகவும் தயங்கி நிற்க நேரமில்லை. ஒரு கணம் கூட வீணடிப்பதற்காக இல்லை. அந்த ஆவேசம் அவரை பெரும் புரட்சியாளர் ஆக்கியது

ஒரு வெறும் புனைவு அல்ல இது. இதனுடன் ஒப்பிடத்தக்க இரண்டு முன்னுதாரணங்களாவது நம் முன் உள்ளன. ஒன்று சே குவேரா. கடுமையான நுரையீரல் நோயால் வாழ்நாள் முழுக்க திணறிக்கொண்டிருந்தவர் அவர். இரண்டு, எம்.முகுந்தனுக்கு முன்னுதாரணமாக இருந்த தோழர்.பி.கிருஷ்ணபிள்ளை. அவருக்கு குணப்படாத காச நோய் இருந்தது. அந்த நோய்களில் இருந்தே அவர்கள் குன்றாத ஊக்கத்தைப் பெற்றார்கள்.

சிறந்த இசைக்கருவி மேலான இசைக்கு அவசியம். ஆனால் இசை என்பது ஒருபோதும் இசைக்கருவி அல்ல. அதை மீட்டுபவனின் ஆத்மாவே . இசைக்கலைஞன் மேதை என்றால்  எந்தக் கருவியும் இசைக்கருவியே. உடலை ஓம்ப வேண்டும். ஆனால் உடலாக உணரக்கூடாது. உடலாக இருக்கக் கூடாது. உடலில் மட்டுமே வாழக்கூடாது. இதுவே நான் என் வாழ்நாளில் கண்டடைந்தது.

உங்கள் உடல் உபாதை என்பது மிகச் சாதாரணமானதுதான். அது ஒன்றும் உங்கள் வாழ்நாளை நீங்கள் எண்ணிச்செலவிடச்செய்யும் ஒன்று அல்ல. அப்படியானால் ஏன் உங்களுக்கு இந்த பீதி ஏற்படுகிறது? அதை நீங்கள் சற்றே புறவயமாக சிந்தனைசெய்து பாருங்கள். நீங்கள் உங்கள் உடலை முடிவில்லாத சாத்தியங்கள் கொண்டதாக, அழிவில்லாததாக கற்பனைசெய்துகொண்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்கள் வயது இருபத்தைந்துக்குள் என்றீர்கள். அந்த வயதில் அப்படி நினைக்காதவர்களே இல்லை. அந்தவயதுக்குரிய மாயை அது.

நீங்கள் நாற்பதைக் கடந்தால் உடல் என்பது மிக மிக எல்லைக்குட்பட்டது, நாள்தோறும் அழிந்துகொண்டிருப்பது என்பதை உணர முடியும்.  அப்போது இப்போது நீங்கள் அடைந்த அதிர்ச்சி உருவாகாது. இப்போது உங்களுக்குள் இருந்துகொண்டு கடைசி வரை தொடரக்கூடிய ஒரு நோய் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நாற்பது வயது தாண்டிய அனைவருக்கும் அப்படி  ஏதாவது ஒரு நோய் மருத்துவர்களால் சொல்லப்பட்டுவிட்டிருக்கும். இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு அவர்கள் வாழ்வதற்குக் கற்றுக்கொள்வார்கள்.

இப்போது நீங்கள் உங்கள் உடலின் ஒரு எல்லையை உணர்ந்துவிட்டிருக்கிறீர்கள் அவ்வளவுதான். இனி எல்லையில்லாத வாழ்க்கைச் சாத்தியங்களைப்பற்றி முதிரா இளமைக்கே உரிய முறையில் பகற்கனவுகள் காண்பதை விட்டுவிட்டு  உங்களுக்கு அளிக்கப்பட்ட அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு ஒரு வாழ்க்கையை அடைவதைப்பற்றித் திட்டமிடுங்கள். எல்லா வாழ்க்கையும் அப்படிப்பட்ட எல்லையால் வகுக்கப்பட்டதே. எந்தச் சிறிய எல்லைக்குள்ளும் முழுமையான நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியும்.

இனி உங்களால் ஒருவேளை இமயமலை ஏறி கங்கோத்ரியைப் பாக்க முடியாமல் போகலாம். ஆனால் நள்ளிரவில் தீடிரென்று வரும் இளம் காற்றில் தென்னை ஓலைகள் ஒலியெழுப்புவதைக் கேட்கும்போது நான் இப்போது உணரும் இந்த அற்புதமான மனஎழுச்சியை உணர்வதற்கு என்ன தடை? நீங்கள் நூறு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டமுடியாமல் போகலாம். ஆனால் ஏன் தியாகராஜ கீர்த்தனை ஒன்றைக்கேடு மெய்மறந்து  அமர்ந்திருக்க முடியாது?

இயற்கையில் கலைகளில் சிந்தனைகளில் ஆழத்தெரிந்த மனிதனுக்கு ஒருபோதும் ஒரு வாழ்வும் வீணல்ல. ஒருபோதும் நாட்கள் துயரத்தால் செயலிழப்பதுமில்லை. அப்படி உங்களால் ஆழத்தெரியவில்லை என்றால் அது அப்படி ஆழத்தெரியாததன் குறைபாடே ஒழிய அதற்கு உடல்நிலை காரணமில்லை. ‘நான் கடவுள்’ படத்தில் கிருஷ்ண்மூர்த்தி பாகவதர் என்ற இசைக்கலைஞர் நடித்திருக்கிறார். இரு கைகளும் இரு கால்களும் கிடையாது. வெறும் உடல் மீது தலைதான். நன்றாக பாடுவார். ”கஷடமா இருக்கா சார்?” என்று கேட்டபோது ”இல்லசார்..அதான் பாடுறேனே” என்றாராம். கலைகளும் சிந்தனையும் இயற்கையும் நிரப்பிக்கொள்ளாத இடைவெளி என ஏதும் மானுட வாழ்க்கையில் இல்லை.

ஆனால் பலசமயம் நான் மனிதர்கள் தங்கள் நுண்ணுணர்வின்மைக்கு, சுயமைய நோக்குக்கு, சோம்பலுக்கு உடலையும் சூழலையும் பொறுப்பாக்குவதைக் கண்டு வருகிறேன். எடுத்த எடுப்பிலேயே உடல்நலம் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ”என்ன படிச்சீங்க?” ”என்னத்த படிக்கிறது? நாலுவாரமா வயிறே சரியில்ல.. ஒரே பொருமல்… ஆசிட்டு….. ஒண்ணுமே புடிக்கலை போங்க” . நீங்கள் உங்கள் உடல்நலக்குறைவை ஒரு மாபெரும் சாக்காக பயன்படுத்துகிறீர்களா என நீங்கள்தான் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

மனிதன் முன் அவனுக்குச் சாத்தியமான இன்பங்கள் முடிவிலாது கொட்டிக்கிடக்கின்றன. வாழ்நாளோ அனுதினமும் சுருங்கிக்கொண்டே இருக்கும் ஒரு மாயம். இப்போது நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. சற்று கற்பனை செய்துதான் புரிந்துகொள்ள முடியும். இளமையில் அளவில்லாத காலம் கையில் இருப்பதுபோல தோன்றும். செய்வதற்கு ஏதுமில்லாமல் காலம் கையிலிருந்து நழுவி நழுவி வீணாகும். நடுவயதில் அறிவோம் காலம் எத்தனை வேகமாகச் செல்கிறதென. என்னசெய்வதென சரியாக திட்டமிட்டு முடிப்பதற்குள் பத்தி இருபது என வருடங்கள் ஓடிச்சென்றுவிடும்.

நாஞ்சில்நாடன் சொன்னார் ஒருமுறை எதைப்படிக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்குள் பத்துவருடம் போனது, எடுத்து வைப்பதற்குள் இன்னொரு பத்து வருடம் என. என் நூலகத்து நூல்களைப் பார்க்கும்போது ஏக்கம் நெஞ்சை நிரப்புகிறது. நான் இன்னும் படிக்காத நூல்களே அவற்றில் அதிகம். மேலும் மேலும் அவை வந்து நிரம்பிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு நண்பர் கிட்டத்தட்ட 8000 பாடல்களை பதிவுசெய்து அனுப்பிவைத்தார். அவற்றை ஒருமுறை கேட்பதற்குள் பல வருடங்கள் என்னைக் கடந்துசென்றுவிடும். மனிதவாழ்க்கையில் கவலையே கூடாது, ஏனென்றால் கவலைப்படுவதற்கு நேரமில்லை.

இப்போது உங்களிடம் மிக அபாயமான ஒரு நோய் இருக்கிறது. அந்த நுரையீரல் பிரச்சினையைச் சொல்லவில்லை. அது எளிய உடல்நோய்தான். அது தேருக்கு இருக்கும் பழுது மட்டுமே. தேராளிக்கு இருக்கும் நோயைப்பற்றிச் சொல்கிறேன். நோயை நினைத்துக்கோண்டிருப்பது, நோயாளியாகவே எப்போதும் உணர்வது என்ற மனநிலையே மாபெரும் நோய். அது சத்தமில்லாமல் உங்கள் வாழ்க்கையை உறிஞ்சி உண்டு உங்களை சக்கையாக துப்பிவிடும். அப்படி அழிந்த பலரை நான் அறிவேன். அந்த மனநிலையில் இருந்து வெளிவர உங்களால் மட்டுமே முடியும். அது நோய் என்றும் அதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றும் எண்ணினால் மட்டுமே போதுமானது. அவ்வெண்ணத்தை ஒவ்வொரு கணமும் மனதில் ஓட்டிக்கொண்டால், அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், மெல்லமெல்ல அது சாத்தியமாகும்.

அதற்கு நேர்மாறான ஒரு வழி உள்ளது. அது தன்னிரக்கத்தின் பாதை. அது மிகமிக இன்பமானது. நம் ரத்தம்போல நமக்கே சுவையாக இருப்பது வேறொன்றில்லை என்பதை அப்போது நாம் அறிவோம். தனிமையையும் தன்னிரக்கத்தையும் இணைத்துக்கொண்டால் போதும் விசித்திரமான பகற்கனவுகளில் அலையலாம். மனம் இரங்கி ஏங்கி விம்மி அழுவதன் இனிமையை அனுபவிக்கலாம். நோயும் பேரிழப்புகளும் நமக்களிக்கும் பெரிய சாபமே இந்த தன்னிரக்கம்தான். நானும் அந்த மனநிலையை அடைந்து விரைவிலேயே அதைத் தாண்டிவந்தவன். அந்த இனிமை மிகமிகப்போலியானது. அது நம் உடலை நாமே சுவைத்து தின்று சாவதுபோன்றது.

அந்த மனநிலையில் இருந்து முற்றிலுமாக விடுபட ஒரே வழி நம்மை அழுத்தும் கெட்ட கனவில் இருந்து எப்படி நாம் விடுபடுகிறோமோ அந்த வழிதான். ஒரே உதறலாக உதறி எழுந்துவிடுதல். வேறு வழி இல்லை. தன்னிரக்கம் மனிதமனம் கொள்ளும் கீழ்மைகளில் ஒன்று. ஞானம், கற்பனை, ஆளுமைத்திறன் அனைத்தையும் இல்லாமலாக்கிவிடக்கூடியது அது.

கடைசியாக ஒன்று உண்டு. மனிதனின் வாழ்க்கையின் நிறைவும் மகிழ்ச்சியும் படைப்பூக்கத்தில்தான் உள்ளது. நான் இதைச்செய்தேன் என நாம் உணரும் நிலையிலேயே நாம் என்ற உணர்வின் முழுமையை அடைகிறோம். ஏதாவது ஒரு தளத்தில் எதையாவது ஒன்றை நிகழ்த்துபவனே மகிழ்ச்சியானவன். படைப்பூக்கத்தின் நிலையில் நாம் சுமந்துகொண்டிருக்கும் நம்மை இழக்கிறோம். நம்முள் இருந்து நமது எல்லா சாத்தியங்களும் வெளிவருகின்றன. நாம் நம்மை மீண்டும் மீண்டும் கண்டடைகிறோம். நம்மை நாம் தொடர்ந்து  உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.

மானுட உழைப்பு என்பது பொருள் பொதிந்ததாக ஆவது படைப்பூக்கத்தின் நிலையிலேயே. நீங்கள் எதில் சிறந்தவர், எந்த தளத்தில் உங்கள் படைப்பூக்கம் வெளிப்படுகிறது என்று கண்டடைவது மிகமிக இன்றியமையாதது. அப்போது நீங்கள் அறிவீர்கள், உங்கள் உடல் அதற்கேற்ப மாறுவதை. அப்போது உங்களுக்கு உடலைப்பற்றி கவலைபப்ட நேரமிருக்காது.

கடைசியாக ஒன்று, ஒருபோதும் உங்கள் நோயின் மனதின் சுமைகளை அப்பா அல்லது பிறர் மீது சுமத்தாதீர்கள். அது ஒரு தார்மீகமான காரியம் அல்ல. எல்லா உயிர்களும் மண்ணில் தனிமையில்தான் வாழ்கின்றன. தனிமையில்தான் மடிகின்றன. இந்த வாழ்க்கைச்சூழலில் நாம் ஆறுதலையும் உதவியையும் பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நம் துயரங்களில் பிறரை பங்காளிகள் ஆக்கக் கூடாது. உங்கள் அப்பாவை விட்டுவிடுங்கள். அவரிடம் சொல்ல வேண்டியவற்றைப் பற்றி மட்டுமே சொல்லுங்கள். அவரை துயரப்படுத்தும் விஷயங்களை விட்டுவிடுங்கள். அது உங்கள் கடமை.

நீங்கள் உங்களை அனுதாபத்துடன் பார்க்காத உங்களை சமமாக மட்டுமே காணக்கூடிய நண்பர்களிடம் அல்லது பிறரிடமே பேசவேண்டும். அல்லது நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி பேச வேண்டியவற்றை உடனே பேசிவிடுங்கள். ஒருபோதும் ஒருபோதும் தீராத மன உரையாடலுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

கர்மா என்பதெல்லாம் ஊகங்களே. வற்றைப்பற்றி ஒரு நெருக்கடியில் சிந்தனைசெய்வதில் எந்த பயனும் இல்லை. மண்மீது கோடானுகோடி உயிர்கள் பிறந்து வாழ்ந்து மறைகின்றன.  இந்தச் சுழற்சியின் காரண காரியம் என்பது நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அதற்காக மனிதன் உருவாக்கிய ஒரு கோட்பாடுதான் கர்மம் என்பது. அது உண்மையானாலும் பொய்யானாலும் நம் வாழ்க்கையை அது மாற்றப்போவதில்லை. இந்த வாழ்க்கையில் நம் முன் உள்ளது நம்மைச்சூழ்ந்த இயற்கையும் நம் உடலும் மனமும் ஓடிச்செல்லும் காலமும் மட்டுமே.

உயிர் என்றால் அதற்கு நோயும் மரணமும் உண்டு. மனிதனும் அவற்றில் ஒன்றுதான். வலி பயம் குழப்பம் துயரம் ஆகியவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. ஆனால் இன்பம் மட்டும் மனிதனுக்கு அதிகம். அவனுடைய கற்பனை அவனை எங்கும் கொண்டுசெல்ல முடியும்.

உங்கள் நோயைப்பற்றி நிபுணன் அல்லாத நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நிபுணர்களை நீங்கள் கலந்தாலோசிப்பதே அவசியம் என்று எண்ணுகிறேன். ஐயம் கொண்டு மருத்துவர்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் சொல்வதில்லை. சரியான நிபுணர் ஒருவரின் வழிகாட்டலைத்தேடுவதையே உத்தேசிக்கிறேன்.

ஆயினும் சிலவிஷயங்கள் எனக்குப் படுகின்றன. நோய்த்தொற்று இல்லாத நிலையில் தொடர்ச்சியாக ஏன் நோய்முறிகளை [ஆன்டிபயாட்டிக்] சாப்பிடவேண்டும்? அவை உடலின் சமநிலையை இல்லாமலாக்கும். கண்டிப்பாக நம்மை மேலும் நோயாளியாக ஆக்கும். அதைப்பற்றி நீங்கள் இன்னும் மேலான மருத்துவரிடம் பரிந்துரை கோர வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

நம்முடைய உடலின் ஒரு பலவீனம் நமக்குத்தெரிந்துவிட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு. அந்த பலவீனத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது.செய்யக்கூடியது செய்யக்கூடாதது என தெளிவாக வரையறுத்துக்கொள்வது. அதன்படி கச்சிதமாக வாழ்வது. இரண்டாவதாக அந்த பலவீனத்தை தொடர்ச்சியாக கவனத்தில் வைத்துக்கொள்வது. அதற்கு இனியமையாத குறைந்த பட்ச சிகிழ்ச்சை அல்லது பராமரிப்பை மேற்கொள்வது.

நவீனமருத்துவர் ஒருவரின் தொடர்ச்சியான கண்காணிப்பில் நீங்கள் உங்கள் அன்றாடவாழ்க்கையை சரிசெய்துகொள்வதற்கான இயற்கையான வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்றே நான் சொல்வேன். நான் மருந்துக்களை நம்பாமல் உணவையும் மன-உடல் பயிற்சிகளையும் அதிகம் நம்பக்கூடியவன். அது என் வழிமுறை.

உதாரணமாக நுரையீரல் சார்ந்த எந்த சிக்கலுடனும் குடலின் சுத்தம் மிக நேரடியான தொடர்பு கொண்டிருக்கிறது என நான் அறிந்திருக்கிறேன். ரசாயன உணவுகளை முழுமையாகவே தவிர்த்தல், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை நோக்கித் திரும்புதல் அதற்கு மிகமிகப் பயன் தருமென நான் கண்டிருக்கிறேன். அதேபோல மிக அதிகமான அளவுக்கு நீர் அருந்துவதும் முக்கியமானது என்பது என் எண்ணம். நீங்கள் கோவை போன்ற ஊர்களில் உள்ள நல்ல இயற்கை சிகிழ்ச்சைநிலையங்களை நாடலாம்.

நுரையீரல்சார்ந்த சிக்கல்களுக்கு பிராணயாமம், தியானம் [ஆனால் பனியில் செய்யக்கூடாது] போன்றவை அற்புதமான விளைவுகளை உருவாக்கும். அவற்றை முறைப்படிக் கற்றுத்தர பல அமைப்புகள் இன்று உள்ளன. எந்த அளவில்செய்தாலும் அந்த அளவில் பயன் தருபவையே. ஆனால் இவற்றைச் செய்வதனால் அலோபதியை விட்டுவிடாதீர்கள். அலோபதியின் மருத்துவக் கண்காணிப்பு முறை என்பது மிகமிக சிறந்தது.

உடலை கண்காணியுங்கள். அதைப்பேணுங்கள். உடலின் எல்லைக்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். ஆனால் உடல் அல்ல வாழ்க்கை என்பதை மறக்காதீர்கள். அது ஓர் எளிய கருவி மட்டுமே. வாழ்க்கையை வாழ்வது மனமே.

நூறாண்டிருக்க வாழ்த்துகிறேன்

அன்புடன்
ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம்  Jan 20, 2009 

அரதி

ஹோமியோபதி:ஒருகடிதம்

குரலிலில்லாதவர்கள்மேயோ கிளினிக்:கடிதங்கள்மேயோகிளினிக் :உடல்நலக்கையேடுகொட்டம்சுக்காதிமாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கைஇயற்கை உணவு : என் அனுபவம்நவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:35

அ. சுப்பிரமணிய பாரதியார்

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். குழந்தைகளுக்கான இதழை நடத்திய முன்னோடி. பாரதியாருடன் இணைந்து சுதேசமித்திரனில் பணியாற்றினார். ஔவையாரின் பாடல்கள் அனைத்தையும் முழுமையாகத் தொகுத்துப் பதிப்பித்தார். பாரதியாரின் காலத்தில் இவர்தான் புகழ்பெற்றிருந்தார், இவரைத்தான் பாரதியார் என்றார்கள்.

அ. சுப்பிரமணிய பாரதியார் அ. சுப்பிரமணிய பாரதியார் அ. சுப்பிரமணிய பாரதியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:33

காவியம் – 14

சாதவாகனர் காலம், பொயு2, அமராவதி அருங்காட்சியகம்

மனித உள்ளம் எத்தனை நெருக்கமாக இடங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பது உளநெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும்போது மட்டும்தான் அத்தனை தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஊரில் நாம் அடைந்த கொந்தளிப்பும் துயரும் பிறிதொரு ஊரில் முற்றிலும் விலகிச்சென்று விடுகின்றன. அவை முந்தைய ஊருக்குச் சொந்தமானவையாக, அங்கே மட்டும் நிகழக்கூடியவையாக நமது உள்ளம் எண்ணிக்கொள்கிறது. புதிய ஊரில் வேறு வகையான உள நெருக்கடிகள் நமக்கு இருக்கலாம். ஆனால் அவை பழையவற்றின் தொடர்ச்சி அல்ல. உளநெருக்கடிகளிலிருந்து தப்ப ஊரைவிட்டு ஓடுவதென்பது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் செய்துகொண்டிருப்பதுதான். தெரிந்த அனைத்து ஊர்களிலிருந்தும் செல்வது துறவென்று சொல்லப்பட்டது.

இரண்டு ரயில்பயணங்கள் வழியாக பனாரஸுக்கு வந்திறங்கி, பையுடன் எனது இல்லத்திற்கு நடந்துகொண்டிருக்கும்போது எனக்கு ஊரில் நிகழ்ந்த எதுவுமே நினைவில் இல்லை. சென்று குளித்துவிட்டு ஒருமணி நேரமாவது தூங்கிவிட்டு கல்லூரிக்கு செல்லமுடியுமா, ஸ்ரீகர் மிஸ்ரா அறையில் இருப்பாரா, என்றெல்லாம் தான் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பனாரஸ் ரயில்நிலையம், ஆட்டோர் ரிக்ஷா, சாலை, கல்லூரி முகப்பு, என் வீட்டுக்குச் செல்லும் கொன்றை படர்ந்த செங்கல் பாவிய பாதை எல்லாமே தெரிந்தவையாக, அணுக்கமானவையாக இருந்தமை ஆழ்ந்த அமைதியை அளித்தது. என்னால் அங்கே என்னை பொருத்திக்கொள்ள முடிந்தது.சிமிண்ட் சுவரில் பெயர்ந்து விழுந்த கல்லை மீண்டும் அந்தப்பள்ளத்தில் வைப்பதுபோல.

நான் நுழைந்தபோது ஸ்ரீகர் மிஸ்ரா அவருடைய வழக்கமான தூளி நாற்காலியில் அமர்ந்து, இரு கைக்கட்டைகளுக்கு நடுவே பலகையை வைத்து எதையோ ஒரு நூலில் இருந்து குறித்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்து அடையாளம் தெரியாதவர் போன்ற விழிப்புடன் கண்களை நிலைக்கவிட்டு மீண்டும் எழுதத்தொடங்கினார். அவர் புத்தகங்களிலோ எண்ணங்களிலோ ஆழ்ந்திருக்கும்போது மனிதர்களைப் பொருட்படுத்துவதில்லை. என்று அறிந்திருந்தேன். ஆகவே ஒன்றும் நான் ஒன்றும் சொல்லாமல் என் அறைக்குச் சென்றேன்.

ஆடைகளைக் கழற்றி குளித்து ஈரத்தலையை கையால் நீவியபடி குளியலறையில் இருந்து வெளிவந்தபோது அனைத்தும் சீரடைந்து எல்லாவற்றிலிருந்தும் முழுமையாக விடுபட்டிருந்தேன். அஞ்சுவதற்கு ஏதுமில்லாத, எந்தக்கவலையும் இல்லாத ,பிறிதொரு நிலத்தில் இருந்தேன். புதிய ஆடைகளை அணிந்துகொண்டு முந்தைய பயணத்தில் போட்டிருந்த ஆடைகளைப் பார்த்த போது ஒரு சிறு தொடுகை போல பைத்தானில் நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தன. அந்த ஆடைகளை அப்படியே சுருட்டி செய்தித்தாளில் பொதிந்து குப்பைக்கூடைக்குள் போட்டேன். அந்த அர்த்தமற்ற செயல் உண்மையிலேயே அந்த நினைவை என்னிடமிருந்து அகற்றியது.

வெளிவந்தபோது ஸ்ரீகர் மிஸ்ரா தீவிரமாக தன் புத்தகத்தில் தலைகுனிந்து ஆழ்ந்திருப்பதைக் கண்டேன். அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வெளியே நடந்து கல்லூரி நோக்கிச் சென்றேன். அன்று அவர் வகுப்புக்கு அநேகமாக வரப்போவதில்லை. அத்தனை காலையிலேயே அவர் புத்தகத்துடன் அமர்ந்திருந்தார் என்றால் விடியற்காலையில் எழுந்திருப்பார். விடியற்காலையில் எழவேண்டும் என்றால் முற்றிலும் புதிய ஒரு கருத்து அவரிடம் தோன்றியிருக்கவேண்டும். அதற்கு சான்றுகளுடன், தர்க்கங்களுடன் ,அழகிய சொற்றொடர்களுடன் ஓர் உருவத்தை அளிப்பது வரை அவரால் அந்த நாற்காலியில் இருந்து எழ முடியாது.

நான் ராதிகாவின் விடுதிக்குச் சென்றேன். அவளுடைய விடுதி எங்கள் பல்கலைக்கழக வளைப்புக்குள்ளேயே தனியாக இருந்தது. பிற கல்லூரிகளைப் போல அங்கே ஆண்கள் செல்வதற்கோ அங்கிருக்கும் பெண்களைச் சந்திப்பதற்கோ  தடையேதுமில்லை. பழைய ஓட்டுக்கட்டிடம் அது. பெரிய அறுகோண வடிவ கூடத்தில் ஆறு பெரிய சன்னல்கள். பழ்மையான ஈட்டிமரச் சோபாவில் அமர்ந்தபடி பணிப்பெண்ணான ராக்கியிடம் ராதிகா பேரைச் சொல்லி நான் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். என்னை அவளுக்குத் தெரியும். நாங்கள் காதலிக்கிறோம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என்று அவளுடைய பாவனைகள் காட்டின.

சிறிது நேரத்தில் ராதிகா வந்து என்னருகே நெருங்கி கையைப்பற்றி ”வா” என்றாள்.

அவளுடைய முகபாவனையிலிருந்த தீவிரத்தன்மை என்னை குழப்பியது. முதல் எண்ணம் என் வீட்டில் நிகழ்ந்தது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது என்பதுதான். ஆனால் தலைகுனிந்து நடந்த அவளை ஓரக்கண்ணால் திரும்பி பார்த்து கொண்டே வந்தபோது அது அல்ல பிறிதொன்று என்று தோன்றத் தொடங்கியது.

வழக்கமான சிமெண்ட் பெஞ்சில் வந்து அமர்ந்தபோது நான் அவளிடம் ”என்ன?” என்று கேட்டேன்.

அவள் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடி மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு ”சிக்கல்” என்றாள். அவள் தொண்டை ஏறி இறங்கியது.

”என்ன?” என்று மீண்டும் கேட்டேன்.

”என் அப்பா அழைத்திருந்தார். அதன்பிறகு அண்ணா.”

எனக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. ”என்ன?” என்று மீண்டும் கேட்டேன்.

”இங்கிருக்கும் எவரோ அவர்களிடம் போய் சொல்லிவிட்டார்கள்” என்றாள்.

”எதை?” என்று கேட்டதுமே அது அசட்டுத்தனமான கேள்வி என்று தெரிந்தது.

அவள் ”உன்னைப்பற்றி…உன் சாதியைப்பற்றி குறிப்பாக…” என்றாள். ”யோசித்தால் யார் சொல்லியிருக்கக்கூடும் என்று கூட கண்டுபிடிக்க முடியும். இங்கே பாட்னாவிலிருந்து பலபேர் படிக்கிறார்கள். அறிவியல் துறைகளில் ஆசிரியர்களாகக் கூட சில பேர் இருக்கிறார்கள் என்று தெரியும். என்னைப்பற்றி எளிதில் விசாரிக்கலாம். பாட்னாவில் என் அப்பா சற்றே புகழ்பெற்றவர். என் அண்ணா அத்தனை பேருக்குமே தெரிந்தவர். அவன் கயாவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான்.”

“அப்பா என்ன சொன்னார்?” என்றேன்.

அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள். பிறகு “அப்பா அண்ணனிடம்  பேசியிருக்கிறார். அவன்தான் கொதித்துப்போயிருக்கிறான். அவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்கள் மிகப்பழமையான குடும்பம். புத்தகயா பக்கம் ஏதோ அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார்கள் என்றும், பன்னிரண்டு ஆலயங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். தங்களை ஒருவகையான அரசர்கள் என்று அவர்கள் கருதுதுவதால் அவன் மேல் அவளுடைய செல்வாக்கு மிக அதிகம். அவன்தான் கத்தினான்” என்றாள்.

”திட்டினானா?” என்றேன்.

”கெட்ட வார்த்தைகள்” என்றாள்.

நான் அவள் கையைப்பற்றி ”I am sorry ” என்றேன்.

அவள் திரும்பி புன்னகைத்து ”எதற்கு?” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவள் ”அப்பா முதலில் கத்தினார். அதன்பிறகு அழ ஆரம்பித்தார். நான் நம் குடும்பத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கிவிட்டேன் என்று சொன்னார். படிப்பை  முடித்துவிட்டு அப்படியே கிளம்பி பாட்னாவுக்குச் செல்லும்படி சொல்கிறார்.”

”நீ என்ன சொன்னாய்?”

“அவர் நினைப்பதெல்லாம் தவறு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்னேன். யாரோ பொய்யாக வதந்தி கிளப்புகிறார்கள் நம்பவேண்டாம் என்று சொன்னேன்.”

”ஏன்?”

”நமக்கு இப்போது தேவை நேரம்தான். நான் இந்த முனைவர் பட்டத்தை வாங்கவேண்டும். இந்த ஆய்வேட்டை முடிக்க எனக்கு இன்னும் ஆறுமாதமாவது ஆகும்.”

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

“அவர் நம்பியது போல் தெரியவில்லை. ஆனால் திரும்பத் திரும்ப கெஞ்சிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார். அண்ணாவை அப்படி எளிதாக ஏமாற்ற முடியாது. மிக எளிதாக அவர் எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்துகொள்ள முடியும் .போலீஸ்காரர்கள் ஒரு பெரிய ஜாதி போல. அங்கிருந்து அவர் இங்கே காவல் நிலையத்திற்குப் பேசமுடியும். இவர்கள் என்ன சொன்னாலும் அதை அவர்கள் நம்புவார்கள். இங்கே வந்து ஒரு கான்ஸ்டபிள் விசாரித்தாலே நம்மைப்பற்றி தெரிந்துவிடும்.”

”என்ன செய்வது?” என்று நான் கேட்டேன்.

“இப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் ஒரு இரண்டு நாட்களுக்குள் சித்திரம் தெளிவாகிவிடும். இப்போதைக்கு நாம் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடையது வெறும் மாணவர் உறவு மட்டும் தான் என்று ஒரேயடியாக சாதித்துவிடுவோம். நமக்கான காலம் வரும் வரை காத்திருப்போம்” என்றாள்.

“ஆம், அதுதான் சரியான வழி” என்று நான் சொன்னேன்.

”இங்கே தான் இருக்கப்போகிறோம். சாதாரணமாகப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்ளலாம். இப்படி வந்து அமர்ந்து பேசுவது மட்டும் தான் தேவையில்லை” என்றாள்.

“ஆம்” என்றேன்.

“ஸ்ரீகர் மிஸ்ராவிடம் அவருடைய அலுவலகத்தில் சென்று நான் எல்லாவற்றையும் சொல்லிக்கொள்கிறேன். என்ன நடந்தது என்று நான் சொன்னால்தான் அவருக்குப் புரியும்” என்று ராதிகா சொன்னாள்.

அதற்கும் நான் ”ஆம்” என்றேன்.

அவள் என் கையைத்தொட்டு ”இப்படி ஒரு நெருக்கடி வருமென்று நாம் பழகத்தொடங்கும்போதே தெரிந்ததுதான். அது இத்தனை சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை. சரி, வந்துவிட்டது. வந்தவரைக்கும் நல்லதுதான். சீக்கிரமே இதை முடித்து கடந்துவிடுவோம்” என்றாள். பின்பு புன்னகைத்து ”கவலைப்படாதே” என்று மீண்டும் சொன்னாள்.

அதுவரை அவளிடம் இல்லாத ஒரு தாய்மை அந்த சிரிப்பில் தெரிவது போல் இருந்தது. நான் அவளை பார்க்காமல் ”கவலைப்படவில்லை” என்றேன்.

உண்மையில் அந்தக்  கவலை எனக்குத் தேவைப்பட்டது. நான் பழைய அனைத்தில் இருந்தும் விடுபட்டு என் உள்ளம் முற்றிலும் ஈடுபடும் இன்னொரு கொந்தளிப்பில் சிக்கிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு பைத்தான் நினைவு மேலெழுந்து வந்து என்னை சுழற்றி அடிக்க ஆரம்பித்து விடுமோ என்ற சந்தேகம்  மெல்ல எங்கோ இருந்தது, அது இப்போது இல்லாதாயிற்று.  இப்போது இந்தக்கவலையில் நான் அதை துளிகூட நினைக்கப்போவதில்லை.

அவள் ”பார்ப்போம்” என்று சொல்லி எழுந்து விலகிச்சென்றாள். நான் சிமென்ட் பெஞ்சிலேயே கைகளைக்கட்டிக்கொண்டு , காற்றில் கொன்றைமரக்கிளைகள் நலுங்குவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

நான் அன்று வகுப்புக்குச் செல்லவில்லை. நேராக கல்லூரி உணவகத்திற்குச் சென்று ஒருமணி நேரம் தனியாக அமர்ந்திருந்தேன். மூன்று காப்பி குடித்தேன். அது என்னை தூங்காமல் பார்த்துக்கொண்டது. நூலத்துக்குச் சென்று என்னுடைய ஆய்வேட்டை மீண்டும் தொடங்க முடியுமா என்று பார்த்தேன். எத்தனை முயன்றபோதும் வார்த்தைகள் பொருளற்று விலகி எங்கோ தான் இருந்தன.

அதன்பிறகு திரும்பி வீட்டுக்கு வந்தேன். ஸ்ரீகர் மிஸ்ரா அதே நாற்காலியில் அப்படியேதான் அமர்ந்திருந்தார். அதே போன்று நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு குனிந்துகொண்டார். என் அறைக்குச் சென்று ஆடைகளை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டேன். கண்களுக்குள் வண்ணங்கள் கொப்பளிப்பதை, சிறு குமிழிகள் அலைவதை எண்ணங்களின்றி பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதோ தூங்கிவிட்டேன்.

விழித்தபோது அந்தி சாய்ந்திருந்தது ரயிலில் நான் முற்றிலும் தூங்காமலிருந்திருக்கிறேன். ஆகவே அந்த தூக்கம் மிக ஆழ்ந்ததாக, முற்றிலும் காலம் அற்றதாக இருந்தது. எழுந்தபோது நல்ல தூக்கம் அளிக்கும் தெளிவு வந்திருந்தது. இப்போது என்ன ஆயிற்று? உண்மையில் ஒன்றுமே நிகழ்வில்லை. அவர்களிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவளிடம் விசாரித்திருக்கிறார்கள். அவள் முழுமையாக மறுப்பாள். அவள் உறுதியாக என்னை மணக்கப் போவதாகச் சொன்னால் மட்டும்தான் அவர்களுக்கு கொந்தளிப்பும் கோபமும் வரவேண்டும். அவள் என்னை மணக்கவே போவதில்லை, இது மிகச்சாதாரணமான உறவுதான், அதையும் முழுக்க நிறுத்திவிடுவதாகச் சொன்னால் அவர்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

உண்மையில் இந்த விலக்கம் குறைந்தது ஏழெட்டு மாதங்களுக்கு எங்களுக்கு நல்லது. ஆய்வேட்டை முடித்து அளித்துவிடலாம். ஆறுமாதத்துக்குள் செய்யவேண்டிய அனைத்தையும் செய்துவிடலாம். எங்கோ ஒரு வேலையைக்கூட தேடிக்கொள்ள முடியும். வீடு கூட பார்த்துவிடமுடியும். மிக எளிதாக இங்கிருந்து கிளம்பிச்சென்று எங்களுக்கான ஒரு வாழ்க்கையைத் தொடங்கிக்கொள்ள முடியும். சட்டபூர்வமான ஒரு திருமணத்திற்குப்பின் எவர் எங்களை என்ன செய்யமுடியும்? இது சட்டமும் நீதிமன்றமும் உள்ள நாடு. பழையகாலம் போல அல்ல, இந்தியா மிகப்பெரிய நிலம். நாங்கள் எங்கே வேண்டுமென்றாலும் சென்றுவிட முடியும்.

எல்லாமே சரியாகவும் சாதகமாகவும் தான் இருக்கிறது என்று தோன்றியது.  நான் சட்டையைப் போட்டுக்கொண்டு அறைக்கு வெளியே வந்தபோது அந்த எண்ணம் வளர்ந்தபடியே வந்தது. சாய்வு நாற்காலியில் மல்லாந்து மூக்குக்கண்ணாடியை முகத்தில் வைத்தபடியே தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகர் மிஸ்ராவைப் பார்த்தபின் வெளியே நடந்தேன். இருட்டு பரவத்தொடங்கியிருந்தது. பாதைகளில் எவருமில்லை. அப்பால் மைதானங்களில் இருந்து விளையாடுபவர்களின் ஓசைகள் அலையலையாக கலைந்து வந்துகொண்டிருந்தன. கல்லூரி உணவகத்தை மூடிவிட்டிருந்தார்கள். ஆகவே வளாகத்தை விட்டு நடந்து வெளியே வந்து சாலையில் நின்றேன். ஆட்டோரிக்ஷாக்கள் உறுமியும் சீறியும் சென்று கொண்டிருந்தன.

எனக்குப் பசித்தது.சாலையைக்கடந்து சற்று நடந்தால் பிரபலமான ஷர்மா பிகாரி சைவ உணவகம் இருந்தது. நான் அசைவ உணவை விட்டு நெடுநாட்கள் ஆகியிருந்தது. சம்ஸ்கிருதம் பயிலத்தொடங்கும்போது அதை நிறுத்தியிருந்தேன். எனக்கு எம்.ஏ சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்த ஜோஷி என்னிடம் திரும்பத் திரும்ப அசைவத்தை விட்டுவிடும்படி சொன்னார்.

“அசைவத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான். மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள் பலரும் ஷத்ரியர்கள். அவர் அசைவம் உண்டிருக்கக்கூடும்தான். இதெல்லாம் எனக்கும் தெரியும், ஆனால் எனக்கு உன்னிடம் ஒரு நெருக்கம் வரவேண்டியிருக்கிறது. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் நீ அசைவம் உண்பவன் என்று எனக்குத் தோன்றாமல் இருக்க வேண்டும். நமக்கிடையே இருக்கும் தூரம் மிகப்பெரியது. நான் பிராமணன், நீ மகர்”

“இல்லை நான் பங்கி” என்றேன்.

“ஆம்ம, பங்கி. நமக்கிடையே இருக்கும் அந்த தூரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளலாமே…” என்று அவர் சொன்னார்.

அன்று நான் அசைவத்தை விட்டேன். பிறகு ஒருபோதும் உண்டதில்லை. ராதிகாவை சந்தித்தபிறகு நான் எப்படியோ மானசீகமாக பிராமணனாக மாறிக்கொண்டிருந்தேன். அசைவ உணவு மட்டுமன்றி தீவிரமான மணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைக்கூட உண்ணாமலானேன். ஆகவே சர்மா உணவகம் எனக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. ஆனால் அப்போது ஏனோ அங்கே சென்று சப்பாத்தியும், நெய்விட்ட சப்ஜியும், குலாப்ஜாமூனும் சாப்பிடப் பிடிக்கவில்லை.

சாலையின் இருபுறத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றபோது சட்டென்று அசைவம் உண்டாலென்ன என்று தோன்றியது. பன்றியோ மாடோ பனாரஸ் நகரத்தில் எங்கும் கிடைப்பதில்லை. ஆட்டுக்கறியோ கோழிக்கறியோ கூட மிக அரிதாக ஆங்காங்கே சில விடுதிகளில் தான் கிடைக்கும். சிறிய கடைகள் அஞ்சியவை போல  தலைமறைவாக சந்தைகளின் மடிப்புகளுக்குள் எங்கோ புதைந்திருக்கும். ஆனால் வெளிநாட்டவரும், பெரியமனிதர்களும் வந்து சாப்பிடும் பெரிய உணவகங்கள் வெளிப்படையாகவே பெரிய விளம்பரப்பலகைகளுடன், விளக்கு அலங்காரங்களுடன் அசைவ உணவுக்கான அழைப்புகளை முன்வைத்திருக்கும்.

நான் ஒரு ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி அதில் ஏறிக்கொண்டேன். அசைவ உணவகம் ஒன்றை தேடிச்செல்லும்படி சொன்னேன். அவன் ”பிஸ்வாஸ் உணவகம் ஒன்று இருக்கிறது. மிகத் தரமானது” என்றான்.

நான் ”அங்கே செல்லலாம்” என்றேன்.

என்னிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். முழு உதவித்தொகையையுமே அப்படியே எடுத்து குர்தாவின் பைக்குள் வைத்திருந்தேன்.

பிஸ்வாஸ் உணவகத்தில் அப்போது பெரிய கூட்டம் ஏதும் இல்லை. இரவு எட்டு மணிக்கு மேல் தான் அங்கே நிறைய பேர் சாப்பிட வருகிறார்கள் போல. நான் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் குழம்பி மெனு அட்டையை பார்த்துக் கொண்டிருந்தேன். முடிவெடுக்க முடியவில்லை. எந்த உணவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. பிரியாணி என்ற பெயர் மட்டும் சட்டென்று நினைவில் ஒரு சீண்டலை உருவாக்கியது. மட்டன் பிரியாணிக்கு ஆணையிட்டேன்.

ஆனால் அது என் முன் வரும்போது அதை என்னால் உண்ண முடியுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது நான் அசைவத்தைத் தொட்டு. அசைவ உணவு குமட்டுவதாக, நினைத்தாலே அருவருப்பூட்டுவதாக எல்லாம் சைவர்கள் சொல்வதுண்டு. எனக்கும் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது என்று நான் கற்பனை செய்துகொண்டதும் உண்டு.

ஆனால் எண்ணை ஆவி பறக்க இளந்தவிட்டு நிறத்தில் பிரியாணி பெரிய பீங்கான் தட்டில் ஒரு குமிழி போல வைக்கப்பட்டு என் முன் கொண்டு பரிமாறப்பட்டபோது என் நா சுரந்துவிட்டது. ஒரு கிண்ணத்தில் தயிர் வெங்காயம். இன்னொரு கிண்ணத்தில் ஊறுகாய். பிறிதொன்றில் குழம்பு. ஒருகணத்தில் அந்த மணம் என்னை முழுக்க ஆட்கொண்டது. ஆவலுடன் அதை எடுத்து உண்ணத்தொடங்கினேன்.

பிரியாணி அத்தனை சுவையானதென்று முன்பு எப்போதுமே நான் அறிந்திருக்கவில்லை. அதன் ஒவ்வொரு பருக்கையும் சுவை கொண்டிருந்தது வயிறு நிறைந்து அதிலிருந்த எண்ணை மார்பை கரிக்கத் தொடங்கவில்லை என்றால் இன்னொரு பிரியாணிக்கு ஆணையிட்டிருப்பேன். பழச்சாறு வேண்டுமா என்று பரிமாறுபவன் வந்து கேட்டான். ஒரு சாத்துக்குடி பழச்சாறு சொன்னேன். அதைக் குடித்து முடித்து அவனுக்கு சிறிய தொகையையும் வைத்துவிட்டு வெளியே வந்து கையிலெடுத்துக்கொண்ட சிறு குச்சியால் பல்லைக்குத்தியபடி ,சாலையில் வண்ணங்களின் பெருக்காக வண்டிகள் ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு நின்றபோது உடம்பு தளும்ப நீர் நிறைந்த குடம் போல் அமைதி கொண்டிருந்தது.

சுஹாஸ் தாராவாலா  “எப்போதெல்லாம் சோர்வு தெரிகிறதோ அப்போதெல்லாம் சென்று உடல் நிறையுமளவுக்கு , மூச்சுத்திணறுமளவுக்கு சாப்பிடுவதுண்டு” என்று என்னிடம் ஒருமுறை சொன்னான். ”சாப்பாடு உள்ளத்தின் சோர்வையும் கொந்தளிப்பையும் ஆற்றிவிடும். உடலால் இருப்பதே முக்கியமென்று எண்ண வைக்கிறது. சாப்பிட்டு முடித்து நிறைந்த வயிற்றுடன் நிற்கும்போது இங்கே எதுவுமே பொருட்டல்ல என்று தோன்றும். சாப்பிட முடிகிறது, சுவை என ஒன்று இருக்கிறது, இப்போது நிறைந்திருக்கிறேன். இதற்கப்பால் ஒன்றுமில்லை என்று எண்ணம் ஓடும்”.

அது எவ்வளவு உண்மை !அக்கணம் எனக்கு நேற்றும் நாளையும் இல்லாமலிருந்தது.  எண்ணவோ வருந்தவோ ஏதுமில்லை. பதற்றங்கள் பயங்கள் எதுவுமில்லை. ஒரு மதர்ப்பு உடலெங்கும் இருந்தது. அந்த நிதானத்தை கொண்டாட விரும்பினேனேன். ஓட்டலின் மேட்டிலிருந்து கீழே வந்து அங்கிருந்த மிகச்சிறிய பீடாக்கடையில் ஒரு இனிப்புப் பீடா வாங்கி போட்டுக்கொண்டேன். அதை மென்றபடி ஒரு ஆட்டோ ரிக்ஷாவுக்காக கைகாட்டினேன். அவன் வளைத்து என்னை நோக்கி வந்தான்

அந்த ஆட்டோ ரிக்ஷாவை முந்தி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா என் முன் நின்றது. அதிலிருந்து உயரமான ஒருவன் இறங்கி என்னை நோக்கி வந்தான். இன்னொருவன் ஆட்டோவிலிருந்து இறங்கி அதன் அருகிலேயே நின்றான். அந்த ஆட்டோவின் ரிக்ஷா டிரைவர் சரிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் கை காட்டிய ஆட்டோ ரிக்ஷா தயங்கி, அவர்களைப் பார்த்தபின் விரைந்து வளைந்து முன் சென்றது.

என்னை நோக்கி வந்தவன் ”ராம்?” என்றான்.

நான் ”ஆம்” என்றேன்.

“உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.

நான் ”யார் நீங்கள்? எதற்கு?” என்றேன்.

அவன் என் தோளில் கைவைத்து ”வண்டியில் ஏறு” என்றான்.

”இல்லை நான்…” என்று சொல்லப்போனேன்.

அவன் கை என் கையை இறுகப்பிடித்தது. ”வண்டியிலேறினால் நாம் பேசலாம். ஏறமாட்டாய் என்றால் இங்கேயே உன்னைக் குத்தி சரித்துவிட்டு போய்விடுவேன்” என்றான்.

என் உடல் நடுங்கி துள்ளத் தொடங்கியது. ”இல்லை நீங்கள் ஆளறியாமல்…” என்றேன்.

”நீ யார் என்று எனக்குத் தெரியும். உன்னிடம் தான் நான் பேசவேண்டும் வா” என்றான்.

நான் கால் தளர்ந்து நின்றிருக்க, என் தோளைப்பிடித்து தள்ளிக்கொண்டு சென்று, ”ஏறு” என்றான்.

அப்போதும் என்னால் நானாக ஆட்டோவில் ஏற முடியவில்லை. அவன் என்னைத்தள்ளி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு என் மறுபக்கம் ஏறிக்கொண்டான். ஆட்டோ உறுமலுடன் அதிர்ந்து கிளம்பியது.

ஆட்டோவில் இருவருக்கும் நடுவே நான் அமர்ந்திருந்தேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. இருபுறமும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

”நீங்கள் யார்? என்ன பேசவேண்டும்” என்றேன்.

”பாட்னாவிலிருந்து எங்களை அனுப்பியிருக்கிறார்கள். பயப்படாதே, உன்னைக் கொல்லப்போவதில்லை. அடிக்கவும் போவதில்லை. உன்னிடம் பேசத்தான் வந்திருக்கிறோம். பேசாமலிரு” என்றான்.

இன்னொருவன் ”நீ கத்திக் கூச்சலிட்டால் உன்னைக் கொன்று தூக்கி வீசிவிட்டுப் போவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அது எங்களுக்கு கஷ்டமும் இல்லை” என்றான்.

”நான் ஒன்றும் செய்யவில்லை. எனக்கு ஒன்றும் தெரியாது நீங்கள் வேறு யாரையோ…” என்று நான் சொல்லும்போதே என் குரல் உடைந்தது. கண்ணீர் வந்து முட்டியது.

அவன் ”நீ யாரென்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் என்ன பேசப்போகிறோம் என்றும் உனக்கு தெரியும்” என்றான்.

கைகூப்புவது நெஞ்சில் இரண்டு கைகளையும் சேர்த்துவைத்து நடுங்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. எங்கானாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஆட்டோ கங்கையின் ஆளொழிந்த கரையொன்றில் சென்று நின்றது. ஓரிரு இருசக்கர வண்டிகள் மட்டும் அவ்வப்போது எங்களைக் கடந்து சென்றன.

”இறங்கு” என்று அவன் சொன்னான்.

நான் இறங்கி நின்றதும் அவன் இறங்கி என் அருகே நின்றான்.

மிகப்பெரிய உடல் கொண்டவன். கைகள் கால்கள் எல்லாமே பெரியதாக இருந்தன. இரண்டு காதுகளிலும் வெள்ளியில் கடுக்கன் போட்டிருந்தான். இன்னொருவன் இறங்கி அவனுக்குப் பின்னால் நின்றான். இரு கைகளையும் தன் கால் சட்டைப்பைக்குள் வைத்திருந்தான்.

குண்டன் என்னிடம் ”உன்னிடம் விரிவாக எதையும் பேச வரவில்லை. நீ எங்கள் பெண்ணிடம் நட்பாக இருக்கிறாய் என்று தெரியும். அவள் உன்னை விடமாட்டாள் என்றும் தெரியும்” என்றான்.

நான் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவளுடைய தந்தையும் அண்ணாவும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் சொன்னால் அவள் கேட்கப்போவதில்லை. அப்படியென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீ அவளை விட்டுவிட வேண்டும். இன்றே இப்போதே திரும்பி உன் வீட்டுக்குச் சென்று உன் ஆடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலேறி உன் சொந்த ஊருக்குப் போகவேண்டும். அங்கே ஒருநாள் நீ இருக்கலாம். மறுநாளே அங்கிருக்கும் வீட்டையும் காலி செய்துவிட்டு முற்றிலும் புதிய ஒரு ஊருக்கு சென்றுவிடவேண்டும். அவள் உன்னைத் தேடி அங்கு வந்தால் அங்கும் உன்னைக் கண்டுபிடிக்கக் கூடாது. இனி அவள் எத்தனை முயற்சி செய்தாலும் உன்னை கண்டுபிடிக்கவே கூடாது. புரிகிறதா?”

அவன் என் தோளில் வைத்த கை என்னால் சுமக்கமுடியாத அளவு எடைகொண்டிருந்தது. “அவள் வாழ்க்கையிலிருந்து நீ முழுக்கவே அகன்றுவிடவேண்டும். அவள் எப்படி உன்னைக் கண்டுபிடித்தாலும் அது உன்னுடைய தவறு என்று தான் எடுத்துக்கொள்வோம். அவள் உன்னைக் கண்டுபிடித்த இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் உன்னை வெட்டி உன் தந்தையை வீசியது போல சாக்கடைக்குள் வீசுவோம்” என்றான்.

அவன் குரல் எனக்கு மட்டும் பேசுவதுபோல் ஒலித்தது. சற்று குனிந்து நின்றிருந்த அவனுடைய பெரிய முகத்தின் கண்கள் உணர்ச்சியே இல்லாமல் கண்ணாடிக்கோலிகள் போலிருந்தன. ”நீ அந்தச் சாக்கடையிலிருந்து நீந்தி மேலெழுந்து வந்துதான் இவ்வளவு படிக்கிறாய். சாக்கடைக்கு வெளியே ஒரு வாழ்க்கை உனக்கு வேண்டுமென்றால் உனக்கு வேறு வழியில்லை. சாக்கடைக்குள் திரும்ப வேண்டுமென்றால் அது உன் விருப்பம்.”

நான் என் இருகைகளையும் நெஞ்சில் அழுத்தி நடுங்கிக்கொண்டு நின்றிருந்தேன்.

”சொல்வது புரிகிறதா?” என்று அவன் கேட்டான்.

நான் தலையசைத்தேன்.

”நான் ஒன்றும் வெறும் ரௌடி இல்லை. நானும் பட்டப்படிப்பு முடித்தவன்தான். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்கிறேன். இதில் பல கொலைகளை செய்வது போல் ஆகிவிட்டது. ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறேன். எனக்கு அஸ்வத் தேஷ்பாண்டே உதவி செய்திருக்கிறார். அவருக்கு நான் திரும்ப உதவி செய்யவேண்டும். செய்த கொலைகளுக்கு மேல் இன்னொரு கொலை என்றால் அது எனக்கு பெரிய பிரச்னை அல்ல. அத்துடன் உன்னைப் போன்ற ஒரு மகரை கொலை செய்து வீசினால் எவரும் கேட்கப்போவதில்லை. உன் தந்தையைக் கொன்ற வழக்கு கூட இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்” என்றான்.

”வேண்டாம், நான் விலகிக்கொள்கிறேன்” என்றேன்.

”முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும். புரிகிறதல்லவா? அதாவது இனி அவள் உன்னை தன் கண்களால் பார்க்கக்கூடாது. அது எத்தனை வருடம் ஆனாலும் சரி. ஒருவேளை அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, அறுபது எழுபது வயதாகிவிட்டிருந்தாலும் கூட திரும்ப அவள் உன்னைப் பார்க்கக்கூடாது. எப்போது அவள் மீண்டும் உன்னைப் பார்த்தாலும் அதற்கு மறுநாள் நீ கொலை செய்யப்படுவாய்” என்றான்.

”தெரிகிறது” என்றேன்.

அவன் மோவாயைத் தடவியபடி, ”சரி நாங்கள் கிளம்புகிறோம். நீ இங்கிருந்து நடந்து சென்று ஏதோ ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் செல். ஆனால் இது வெறும் பேச்சல்ல என்று உனக்குத் தெரியவேண்டும். இந்த நாளை நினைக்கும்போதெல்லாம் உனக்குள் ஒரு பயம் வரவேண்டும். இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இந்த பயம் ஒருமணி நேரத்தில் குறைந்துவிடும்.அசட்டுத் துணிச்சலும் வந்துவிடும்”

அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை வந்தது. ”உன் உடலில் நல்ல வலுவான ஒரு தழும்பு இருக்கவேண்டும். எப்போது அதைப்பார்த்தாலும் இந்த நாள் நினைவுக்கு வரவேண்டும்” என்றபின் திரும்பி ”பாய்…” என்றான்.

அவனுக்குப் பின்னால் நின்றவன் சட்டென்று முன்னால் வந்து ஓங்கி என் இடுப்புக்குக்கீழே உதைத்தான். இரு கால்களுக்கு நடுவே ஓர் அலைபோல் அடித்த வலியில் பல்லை இறுகக்கடித்து முனகியபடி நான் குப்புற விழுந்தேன். அவன் என்னைக் கீழே போட்டு காலை வீசி வீசி மிதித்தான். பிறகு என்னைப் புரட்டிப்போட்டு கத்தியால் என் முழங்கையை குத்தி புஜம் வரைக்கும் நீளமாக இழுத்துக் கிழித்தான். என்னை உதைத்துப் புரட்டிப் போட்டுவிட்டு திரும்பி ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

என் கையிலிருந்து சூடான ரத்தம் பெருகி ஆடை முழுக்க நனைந்தது. இன்னொரு கையால் காயத்தை அழுந்தப் பிடித்துக்கொண்டேன். விரல்கள் நடுவே ரத்தம் பெருகியது. வலிக்கவில்லை, ஆனால் ரத்தம் என்னை பதற்றப்படுத்தியது. உடலில் விழுந்த அடிகள் எங்கெங்கோ வலித்தன. இரண்டுமுறை எழ முயன்றபிறகு நான் மயங்கி மல்லாந்து விழுந்துவிட்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:33

வரலாற்றை எப்படி கற்கத்தொடங்குவது?

As we enter a new academic year , a thought is lingering in my mind. We all avidly monitor social media for various references, ranging from astrology to artificial intelligence. Social media tutorials aid in our understanding of theories, but we also require practical skills such as hands-on experience and experiential learning.

The real education

நான் கல்லூரி  மாணவி. எனக்கு நம் நாடு மற்றும் நான் வசிக்கும் ஊரின் முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

வரலாற்றைக் கற்கத் தொடங்குதல்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 11:30

May 3, 2025

தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா?

அன்புள்ள ஜெ

அண்மையில் அரவிந்தன் கண்ணையன் தன் முகநூல் பக்கத்தில் தமிழில் ‘துயர இலக்கியம்’ உண்டா என்று கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்று முடிவுக்கும் வந்து, சில ஆங்கில நூல்களையும் குறிப்பிட்டிருந்தார். அதையொட்டி அவருடைய பதிவின் கீழ் உள்ள விவாதத்தில் பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவான வாசிப்பும் இல்லை என்றுதான் அந்த உரையாடல் காட்டியது. பொதுவாக இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவது, கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது எல்லாம் வழக்கம். அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம் சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில் தேடியபோது இந்த பதிவு அகப்பட்டது. முக்கியமான ஒன்று. ஏன் நம்மவர் தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்லை?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள் முகநூலுக்கு வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்றை அவர்கள் கவனிப்பது முகநூலுக்கு வம்பு ‘கண்டெண்ட்’ தேவை என்பதற்காகவே.

பொதுவாக எதையொன்றையும் பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது என்பது மேலைநாட்டு கல்வித்துறை அளிக்கும் பயிற்சி. நம்மூர் கல்வித்துறை அப்படி எந்தப்பயிற்சியையும் அளிப்பதில்லை. நம்மிடமுள்ள அறிவுஜீவிகளுக்குக் கூட அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும் கிடையாது.

துயர இலக்கியம் அல்லது Lament  என உலகளாவ ஒரு நிறுவப்பட்ட வகைமை இல்லை. அது விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் மட்டுமே. மிகப்பொதுவான ஒரு பகுப்பு – வாசிப்பின் கோணத்தில் உருவாக்கப்பட்டது. அதை உலகமெங்குமுள்ள எல்லா இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள் பலவகை. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்களை பேசுவனதான். சொல்லப்போனால் பெருந்துயர் பேசப்படாத பேரிலக்கியங்களே உலகில் இல்லை. மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் உட்பட பெரும்பாலான பேரிலக்கியங்கள் துயரமுடிவு கொண்டவை. ஆகவே துயர இலக்கியம் என்பதை குறிப்பாக வரையறை செய்துகொள்ளவேண்டும்.  

கிரேக்க நாடக இலக்கணத்தில் இருந்து ஐரோப்பிய இலக்கியத்திற்குள் நுழைந்த இரு சொற்கள் இன்பியல் (Comedy)  துன்பியல் (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்த முடியாது. அவ்வாறு ஆராய்ந்து பார்க்கலாம், அடையாளப்படுத்த முயன்றால் பெரும்பிழைகளை நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம் தற்கொலை என்பது வீடுபேறாகவே முன்வைக்கப்படுகிறது. துயரமுடிவு என்று தோன்றுவது உலகியல் என்ற பெருஞ்சுழற்சியில் இருந்து பெறும் விடுதலையாக அந்நூல் உருவாக்கும் கருத்துக் களத்தால் கருதப்பட்டிருக்கும். இங்குள்ள மதிப்பீடுகள் வேறு.

ஆகவே துயர இலக்கியம் என்னும் சொல்லை இந்திய இலக்கியச் சூழலில் பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும். நம் தேடல் ‘உயிரிழந்தவர்களை எண்ணி இரங்கி எழுதப்படும் இலக்கியம்’ என்றால் அதற்கு ‘இரங்கல்’ இலக்கியம்’ என்னும் சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக் கீழே வருவன பல்வேறு வகையான இலக்கிய வெளிப்பாடுகள்.

இலக்கியத்தின் பரிணாம வரைபடம் இது. இலக்கியத்தின் தோற்றுவாய் பழங்குடிப் பாடல். அங்கிருந்து நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல். அதிலிருந்து தூயசெவ்வியல், மற்றும் கற்பனாவாதச் செவ்வியல். பழங்குடிப்பாடல்களில் பொதுவான பேசுபொருட்கள் இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல், வீரவழிபாடு போன்றவை. அவற்றில் ஒன்று மறைந்தவர்களுக்கான இரங்கலும் புகழ்பாடலும். 

பழங்குடிப்பாடல்களின் இன்றும் நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம் பாட்டுகளில் மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால் படுகளத்தில் மறைந்தவனே தெய்வமாகவும் எழுகிறான். இவ்விரு பேசுபொருட்களும் நம் நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல், வீரம்புகழ்தல், அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள் கொண்டவைதான். 

வீரவழிபாடு மேலும் விரிவான நீத்தார் வழிபாட்டின் ஒரு பகுதியாகவே தமிழக நாட்டார் மரபில் உள்ளது. இங்கே உள்ள தெய்வங்களில் அறுகொலைத் தெய்வங்கள் என்னும் ஒரு வகை உண்டு. ஆயுள் முடியாமல் இறந்தவர்களை தெய்வமென வழிபடுதல். கொல்லப்பட்டவர்கள், விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள் பலவகை. அவர்களைப் பற்றிய  பாடல்கள் எல்லாமே மறைவுக்கு இரங்குதல் என்னும் கருப்பொருள் கொண்டவையே. 

அத்தகைய நூற்றுக்கணக்கான இரங்கல் இலக்கியங்கள் தமிழ் நாட்டார் மரபில் உள்ளன. குறுங்காவியங்களே பல உள்ளன. தமிழ்விக்கியிலேயே உலகுடையபெருமாள் கதைஅனந்தாயி கதை போன்றவற்றை பார்க்கலாம்.

நாட்டார் மரபில் இருந்து பேசுபொருட்கள் அப்படியே தொல்செவ்வியலில் நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்டன. உதாரணமாக ஒரு வீரனை புகழ்ந்து பாடுவது பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் கையறு நிலை என்னும் துறையாக அவை வகுக்கப்பட்டன. மறைந்த வீரனை, சான்றோனை பற்றி அவன் மறைவுக்கு இரங்கியும், அவன் புகழை ஏத்தியும் பாடப்படுபவை இந்த வகை பாடல்கள்.

சங்க இலக்கியத்தில் மகத்தான கையறுநிலைப் பாடல்கள் பல உள்ளன. பாரி மறைவின்போது கபிலர் பாடியது, பாரியைப் பற்றி பாரி மகளிர் பாடியது, கோப்பெருஞ்சோழன் மறைந்தபோது பாடியது போன்றவை உதாரணம். ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ போன்ற வீச்சுள்ள வரிகள் (புறநாநூறு 242) பல உண்டு. யானை மறைந்த பின் அது நின்ற கொட்டிலைப் பார்த்து அழும் பாகன் போல கோப்பெருஞ்சோழன் மறைந்தபின் அவன் விட்டுச்சென்ற மன்றை எண்ணி அழுகிறேன் என்னும் பொத்தியாரின் பாடலில்  (புறநாநூறு 220) உள்ளது போன்ற அரிய படிமங்களும் ஏராளமாக உள்ளன.

சங்ககாலத்துடன் நம் வீரயுகம் முடிந்தது. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம். ஐம்பெருங்காப்பியங்கள் அறத்தை பேசுபொருளாகக் கொண்டவை, தத்துவ நோக்கை முன்வைப்பவை. ஆகவே அவற்றில் கையறுநிலை, வீரவழிபாடு போன்றவை முதன்மையிடம் பெறவில்லை. அதன்பின் பக்தி இலக்கியங்களின் காலம். அதன்பின் காவியங்களின் காலம். கம்ப ராமாயணம் முதல் பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம் பக்தி என்னும் விழுமியத்தை முன்வைப்பதே. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒரு விதிவிலக்குதான்.

பிற்கால தமிழ் செவ்விலக்கியங்களில் நேரடியான கையறுநிலை பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்தி கலபம்பகம்தான்.  பிற்காலத் தொன்மம் ஒன்று அது நந்திவர்மனை அறம்பாடிய நூல் என்று சொல்கிறது என்றாலும் அது நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையையே பேசுபொருளாகக் கொண்டுள்ளது.

சிற்றிலக்கியங்களில் கையறு நிலை ஒரு சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறது. புலம்பல் என்னும் சிற்றிலக்கிய வகையும் கிட்டத்தட்ட கையறுநிலைக்கு இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ணி பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில் பேசுபொருளாக்குவதுண்டு.

நாட்டார் மரபில் கையறுநிலை ஏன்னும் பேசுபொருள் மிக வலுவாகவே தொடர்ந்தது. நம் நாட்டார் மரபில் இறந்தோருக்கான இரங்கல் – புகழ்பாடல் என்பது ஒரு நிகழ்த்துகலையாகவே ஆகியது. அந்த பாடல்கள் ஒப்பாரி எனப்பட்டன.ஒப்பாரி பாடுவதை தொழிலாகக் கொண்ட குழுக்களே உருவாகி நீடித்தன.  மறைவின் துயரை பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வது இன்றும் மிகத்தீவிரமாக நம் கிராமிய வாழ்க்கையில் நீடிக்கிறது. 

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தது. அரிச்சந்திரன் கூத்தில் மயான காண்டத்தில் சந்திரமதி பாடுவது போன்றவை நாட்டார் மரபில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகைய நாடகங்கள் புதிதாகவும் எழுதப்பட்டன. நாடகங்களிலும் தொடக்ககால திரைப்படங்களிலும் இடம்பெற்றன.

தமிழில் நவீன இலக்கியம் தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்றன. இங்கே உருவான நவீன இலக்கியம் அது உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களையே கொண்டிருந்தது, அதுவே இயல்பானது. இந்தியாவிலுள்ள தொடக்ககால நாவல்கள் எல்லாமே பெண்கல்வியை முன்வைப்பவை என்பதைக் காணலாம். தமிழிலுள்ள தொடக்ககால நாவல்கள் மூன்றுமே பெண்கல்வியை பேசுபொருளாகக்கொண்டவை. (பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம்)

தொடக்ககால நவீன இலக்கியம் சமூகசீர்திருத்த– மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டிருந்தது. பின்னர் தேசிய இயக்கத்தின் பேசுபொருட்களை எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் கருத்துநிலைகளை வெளியிடலாயிற்று. தமிழில் நவீனத்துவ இலக்கியம் உருவாவது வரை இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகளை, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடைய தனிப்பட்ட உணர்வுகளை அது வெளிப்படுத்தவேண்டும் என்னும் கோணம் இருக்கவில்லை. ஆகவே கையறுநிலை போன்றவை நவீன இலக்கியத்தில் மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநாத சர்மா

நவீன இலக்கியத்தில் இறப்பின் கையறு நிலையை வெளிப்படுத்த இரங்கற் பா என்னும் புதியவடிவம் உருவாகி வந்தது. பெரும்பாலும் இது மரபுக்கவிதையால் ஆனதாகவே இருந்தது. பின்னர் நீண்ட, உணர்ச்சிகரமான வசனகவிதைகளிலும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தலைவர்கள், சான்றோர்கள் மறைவின் போது இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தனிப்பட்ட இழப்புகளின்போதும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. ஒரு சடங்குபோல கவிஞர்களைக்கொண்டு மறைந்தவர்களுக்கு இரங்கல் எழுதிவாங்கும் வழக்கமும் இருந்தது. கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை நூற்றுக்கணக்கான இரங்கற் பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கான இரங்கற்பாடல்கள் உள்ளன. கண்ணதாசன் தன் நாய் இறந்தபோது இரங்கற்பா எழுதியிருக்கிறார்.

நவீன உரைநடை இலக்கியத்தில் தனிப்பட்ட இழப்பை ஒட்டி எழுதப்பட்ட இரங்கல் இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்கே கூடுமானவரை எழுத்தாளர்கள் தங்கள் தனிவாழ்க்கையை எழுத்தில் இருந்து விலக்கி வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்ததுதான். இன்றும் அப்படி நம்பும் பலர் உள்ளனர். எழுத்தாளர்கள் தன் வரலாறுகளை எழுதுவதும் மிகக்குறைவு.

மலையாளத்தில் இரங்கல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த மிகப்புகழ்பெற்ற படைப்புகள் உள்ளன, நாலப்பாட்டு நாராயணமேனன் தன் மனைவியின் மறைவை ஒட்டி எழுதிய ‘கண்ணீர்த்துளி’ என்னும் குறுங்காவியம் ஒரு நவீனச் செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில் அவ்வகையில் செய்யுளில் ஏதும் எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தன் வாழ்க்கைக்குறிப்புகளில் தன் துணைவியின் மரணம் குறித்து எழுதியவை உணர்ச்சிகரமான இலக்கியத்தன்மை கொண்டவை.

தன்வரலாற்றுத்தன்மை கொண்ட இரங்கல் இலக்கியத்தில் தமிழில் தலைசிறந்த படைப்பு வெ. சாமிநாத சர்மா ன் மனைவியின் இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான அவள் பிரிவு. இத்தகைய எந்த விவாதத்திலும் சுட்டிக்காட்டப்படவேண்டியது அது. அதை இயல்பாகவே சுட்டிக்காட்டும் ஒரு விவாதத்திற்கு மட்டுமே இலக்கியவாசகன் குறைந்தபட்ச மதிப்பை அளிக்கவேண்டும். மற்ற எல்லாமே வெட்டி அரட்டைகளுக்கு அப்பால் மதிப்பற்றவை.

ஜெ

இரங்கற்பா புலம்பல் கையறு நிலை ஒப்பாரி  இரங்கல் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:35

தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா?

அன்புள்ள ஜெ

அண்மையில் அரவிந்தன் கண்ணையன் தன் முகநூல் பக்கத்தில் தமிழில் ‘துயர இலக்கியம்’ உண்டா என்று கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்று முடிவுக்கும் வந்து, சில ஆங்கில நூல்களையும் குறிப்பிட்டிருந்தார். அதையொட்டி அவருடைய பதிவின் கீழ் உள்ள விவாதத்தில் பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவான வாசிப்பும் இல்லை என்றுதான் அந்த உரையாடல் காட்டியது. பொதுவாக இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவது, கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது எல்லாம் வழக்கம். அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம் சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில் தேடியபோது இந்த பதிவு அகப்பட்டது. முக்கியமான ஒன்று. ஏன் நம்மவர் தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்லை?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள் முகநூலுக்கு வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்றை அவர்கள் கவனிப்பது முகநூலுக்கு வம்பு ‘கண்டெண்ட்’ தேவை என்பதற்காகவே.

பொதுவாக எதையொன்றையும் பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது என்பது மேலைநாட்டு கல்வித்துறை அளிக்கும் பயிற்சி. நம்மூர் கல்வித்துறை அப்படி எந்தப்பயிற்சியையும் அளிப்பதில்லை. நம்மிடமுள்ள அறிவுஜீவிகளுக்குக் கூட அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும் கிடையாது.

துயர இலக்கியம் அல்லது Lament  என உலகளாவ ஒரு நிறுவப்பட்ட வகைமை இல்லை. அது விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் மட்டுமே. மிகப்பொதுவான ஒரு பகுப்பு – வாசிப்பின் கோணத்தில் உருவாக்கப்பட்டது. அதை உலகமெங்குமுள்ள எல்லா இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள் பலவகை. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்களை பேசுவனதான். சொல்லப்போனால் பெருந்துயர் பேசப்படாத பேரிலக்கியங்களே உலகில் இல்லை. மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் உட்பட பெரும்பாலான பேரிலக்கியங்கள் துயரமுடிவு கொண்டவை. ஆகவே துயர இலக்கியம் என்பதை குறிப்பாக வரையறை செய்துகொள்ளவேண்டும்.  

கிரேக்க நாடக இலக்கணத்தில் இருந்து ஐரோப்பிய இலக்கியத்திற்குள் நுழைந்த இரு சொற்கள் இன்பியல் (Comedy)  துன்பியல் (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்த முடியாது. அவ்வாறு ஆராய்ந்து பார்க்கலாம், அடையாளப்படுத்த முயன்றால் பெரும்பிழைகளை நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம் தற்கொலை என்பது வீடுபேறாகவே முன்வைக்கப்படுகிறது. துயரமுடிவு என்று தோன்றுவது உலகியல் என்ற பெருஞ்சுழற்சியில் இருந்து பெறும் விடுதலையாக அந்நூல் உருவாக்கும் கருத்துக் களத்தால் கருதப்பட்டிருக்கும். இங்குள்ள மதிப்பீடுகள் வேறு.

ஆகவே துயர இலக்கியம் என்னும் சொல்லை இந்திய இலக்கியச் சூழலில் பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும். நம் தேடல் ‘உயிரிழந்தவர்களை எண்ணி இரங்கி எழுதப்படும் இலக்கியம்’ என்றால் அதற்கு ‘இரங்கல்’ இலக்கியம்’ என்னும் சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக் கீழே வருவன பல்வேறு வகையான இலக்கிய வெளிப்பாடுகள்.

இலக்கியத்தின் பரிணாம வரைபடம் இது. இலக்கியத்தின் தோற்றுவாய் பழங்குடிப் பாடல். அங்கிருந்து நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல். அதிலிருந்து தூயசெவ்வியல், மற்றும் கற்பனாவாதச் செவ்வியல். பழங்குடிப்பாடல்களில் பொதுவான பேசுபொருட்கள் இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல், வீரவழிபாடு போன்றவை. அவற்றில் ஒன்று மறைந்தவர்களுக்கான இரங்கலும் புகழ்பாடலும். 

பழங்குடிப்பாடல்களின் இன்றும் நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம் பாட்டுகளில் மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால் படுகளத்தில் மறைந்தவனே தெய்வமாகவும் எழுகிறான். இவ்விரு பேசுபொருட்களும் நம் நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல், வீரம்புகழ்தல், அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள் கொண்டவைதான். 

வீரவழிபாடு மேலும் விரிவான நீத்தார் வழிபாட்டின் ஒரு பகுதியாகவே தமிழக நாட்டார் மரபில் உள்ளது. இங்கே உள்ள தெய்வங்களில் அறுகொலைத் தெய்வங்கள் என்னும் ஒரு வகை உண்டு. ஆயுள் முடியாமல் இறந்தவர்களை தெய்வமென வழிபடுதல். கொல்லப்பட்டவர்கள், விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள் பலவகை. அவர்களைப் பற்றிய  பாடல்கள் எல்லாமே மறைவுக்கு இரங்குதல் என்னும் கருப்பொருள் கொண்டவையே. 

அத்தகைய நூற்றுக்கணக்கான இரங்கல் இலக்கியங்கள் தமிழ் நாட்டார் மரபில் உள்ளன. குறுங்காவியங்களே பல உள்ளன. தமிழ்விக்கியிலேயே உலகுடையபெருமாள் கதைஅனந்தாயி கதை போன்றவற்றை பார்க்கலாம்.

நாட்டார் மரபில் இருந்து பேசுபொருட்கள் அப்படியே தொல்செவ்வியலில் நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்டன. உதாரணமாக ஒரு வீரனை புகழ்ந்து பாடுவது பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் கையறு நிலை என்னும் துறையாக அவை வகுக்கப்பட்டன. மறைந்த வீரனை, சான்றோனை பற்றி அவன் மறைவுக்கு இரங்கியும், அவன் புகழை ஏத்தியும் பாடப்படுபவை இந்த வகை பாடல்கள்.

சங்க இலக்கியத்தில் மகத்தான கையறுநிலைப் பாடல்கள் பல உள்ளன. பாரி மறைவின்போது கபிலர் பாடியது, பாரியைப் பற்றி பாரி மகளிர் பாடியது, கோப்பெருஞ்சோழன் மறைந்தபோது பாடியது போன்றவை உதாரணம். ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ போன்ற வீச்சுள்ள வரிகள் (புறநாநூறு 242) பல உண்டு. யானை மறைந்த பின் அது நின்ற கொட்டிலைப் பார்த்து அழும் பாகன் போல கோப்பெருஞ்சோழன் மறைந்தபின் அவன் விட்டுச்சென்ற மன்றை எண்ணி அழுகிறேன் என்னும் பொத்தியாரின் பாடலில்  (புறநாநூறு 220) உள்ளது போன்ற அரிய படிமங்களும் ஏராளமாக உள்ளன.

சங்ககாலத்துடன் நம் வீரயுகம் முடிந்தது. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம். ஐம்பெருங்காப்பியங்கள் அறத்தை பேசுபொருளாகக் கொண்டவை, தத்துவ நோக்கை முன்வைப்பவை. ஆகவே அவற்றில் கையறுநிலை, வீரவழிபாடு போன்றவை முதன்மையிடம் பெறவில்லை. அதன்பின் பக்தி இலக்கியங்களின் காலம். அதன்பின் காவியங்களின் காலம். கம்ப ராமாயணம் முதல் பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம் பக்தி என்னும் விழுமியத்தை முன்வைப்பதே. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒரு விதிவிலக்குதான்.

பிற்கால தமிழ் செவ்விலக்கியங்களில் நேரடியான கையறுநிலை பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்தி கலபம்பகம்தான்.  பிற்காலத் தொன்மம் ஒன்று அது நந்திவர்மனை அறம்பாடிய நூல் என்று சொல்கிறது என்றாலும் அது நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையையே பேசுபொருளாகக் கொண்டுள்ளது.

சிற்றிலக்கியங்களில் கையறு நிலை ஒரு சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறது. புலம்பல் என்னும் சிற்றிலக்கிய வகையும் கிட்டத்தட்ட கையறுநிலைக்கு இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ணி பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில் பேசுபொருளாக்குவதுண்டு.

நாட்டார் மரபில் கையறுநிலை ஏன்னும் பேசுபொருள் மிக வலுவாகவே தொடர்ந்தது. நம் நாட்டார் மரபில் இறந்தோருக்கான இரங்கல் – புகழ்பாடல் என்பது ஒரு நிகழ்த்துகலையாகவே ஆகியது. அந்த பாடல்கள் ஒப்பாரி எனப்பட்டன.ஒப்பாரி பாடுவதை தொழிலாகக் கொண்ட குழுக்களே உருவாகி நீடித்தன.  மறைவின் துயரை பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வது இன்றும் மிகத்தீவிரமாக நம் கிராமிய வாழ்க்கையில் நீடிக்கிறது. 

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தது. அரிச்சந்திரன் கூத்தில் மயான காண்டத்தில் சந்திரமதி பாடுவது போன்றவை நாட்டார் மரபில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகைய நாடகங்கள் புதிதாகவும் எழுதப்பட்டன. நாடகங்களிலும் தொடக்ககால திரைப்படங்களிலும் இடம்பெற்றன.

தமிழில் நவீன இலக்கியம் தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்றன. இங்கே உருவான நவீன இலக்கியம் அது உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களையே கொண்டிருந்தது, அதுவே இயல்பானது. இந்தியாவிலுள்ள தொடக்ககால நாவல்கள் எல்லாமே பெண்கல்வியை முன்வைப்பவை என்பதைக் காணலாம். தமிழிலுள்ள தொடக்ககால நாவல்கள் மூன்றுமே பெண்கல்வியை பேசுபொருளாகக்கொண்டவை. (பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம்)

தொடக்ககால நவீன இலக்கியம் சமூகசீர்திருத்த– மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டிருந்தது. பின்னர் தேசிய இயக்கத்தின் பேசுபொருட்களை எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் கருத்துநிலைகளை வெளியிடலாயிற்று. தமிழில் நவீனத்துவ இலக்கியம் உருவாவது வரை இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகளை, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடைய தனிப்பட்ட உணர்வுகளை அது வெளிப்படுத்தவேண்டும் என்னும் கோணம் இருக்கவில்லை. ஆகவே கையறுநிலை போன்றவை நவீன இலக்கியத்தில் மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநாத சர்மா

நவீன இலக்கியத்தில் இறப்பின் கையறு நிலையை வெளிப்படுத்த இரங்கற் பா என்னும் புதியவடிவம் உருவாகி வந்தது. பெரும்பாலும் இது மரபுக்கவிதையால் ஆனதாகவே இருந்தது. பின்னர் நீண்ட, உணர்ச்சிகரமான வசனகவிதைகளிலும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தலைவர்கள், சான்றோர்கள் மறைவின் போது இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தனிப்பட்ட இழப்புகளின்போதும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. ஒரு சடங்குபோல கவிஞர்களைக்கொண்டு மறைந்தவர்களுக்கு இரங்கல் எழுதிவாங்கும் வழக்கமும் இருந்தது. கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை நூற்றுக்கணக்கான இரங்கற் பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கான இரங்கற்பாடல்கள் உள்ளன. கண்ணதாசன் தன் நாய் இறந்தபோது இரங்கற்பா எழுதியிருக்கிறார்.

நவீன உரைநடை இலக்கியத்தில் தனிப்பட்ட இழப்பை ஒட்டி எழுதப்பட்ட இரங்கல் இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்கே கூடுமானவரை எழுத்தாளர்கள் தங்கள் தனிவாழ்க்கையை எழுத்தில் இருந்து விலக்கி வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்ததுதான். இன்றும் அப்படி நம்பும் பலர் உள்ளனர். எழுத்தாளர்கள் தன் வரலாறுகளை எழுதுவதும் மிகக்குறைவு.

மலையாளத்தில் இரங்கல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த மிகப்புகழ்பெற்ற படைப்புகள் உள்ளன, நாலப்பாட்டு நாராயணமேனன் தன் மனைவியின் மறைவை ஒட்டி எழுதிய ‘கண்ணீர்த்துளி’ என்னும் குறுங்காவியம் ஒரு நவீனச் செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில் அவ்வகையில் செய்யுளில் ஏதும் எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தன் வாழ்க்கைக்குறிப்புகளில் தன் துணைவியின் மரணம் குறித்து எழுதியவை உணர்ச்சிகரமான இலக்கியத்தன்மை கொண்டவை.

தன்வரலாற்றுத்தன்மை கொண்ட இரங்கல் இலக்கியத்தில் தமிழில் தலைசிறந்த படைப்பு வெ. சாமிநாத சர்மா ன் மனைவியின் இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான அவள் பிரிவு. இத்தகைய எந்த விவாதத்திலும் சுட்டிக்காட்டப்படவேண்டியது அது. அதை இயல்பாகவே சுட்டிக்காட்டும் ஒரு விவாதத்திற்கு மட்டுமே இலக்கியவாசகன் குறைந்தபட்ச மதிப்பை அளிக்கவேண்டும். மற்ற எல்லாமே வெட்டி அரட்டைகளுக்கு அப்பால் மதிப்பற்றவை.

ஜெ

இரங்கற்பா புலம்பல் கையறு நிலை ஒப்பாரி  இரங்கல் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.