தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா?

அன்புள்ள ஜெ

அண்மையில் அரவிந்தன் கண்ணையன் தன் முகநூல் பக்கத்தில் தமிழில் ‘துயர இலக்கியம்’ உண்டா என்று கேட்டு, இருக்க வாய்ப்பில்லை என்று முடிவுக்கும் வந்து, சில ஆங்கில நூல்களையும் குறிப்பிட்டிருந்தார். அதையொட்டி அவருடைய பதிவின் கீழ் உள்ள விவாதத்தில் பலரும் பதிவுகள் போட்டிருந்தனர். எவருக்குமே எந்த பொதுவான வாசிப்பும் இல்லை என்றுதான் அந்த உரையாடல் காட்டியது. பொதுவாக இந்தவகையான விவாதங்களில் இணையத்தில் தேடுவது, கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது எல்லாம் வழக்கம். அதுகூட நிகழவில்லை. அந்த விவாதம் சோர்வளித்தது. நான் சும்மா தமிழ்விக்கியில் தேடியபோது இந்த பதிவு அகப்பட்டது. முக்கியமான ஒன்று. ஏன் நம்மவர் தமிழ்விக்கியைக்கூடவா பார்ப்பதில்லை?

ராம்

*

அன்புள்ள ராம்,

முகநூலர்கள் முகநூலுக்கு வெளியே உலகமிருப்பதையே அறியாதவர்கள். வெளியே இருப்பவற்றை அவர்கள் கவனிப்பது முகநூலுக்கு வம்பு ‘கண்டெண்ட்’ தேவை என்பதற்காகவே.

பொதுவாக எதையொன்றையும் பேசுவதற்கு முன் கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பது என்பது மேலைநாட்டு கல்வித்துறை அளிக்கும் பயிற்சி. நம்மூர் கல்வித்துறை அப்படி எந்தப்பயிற்சியையும் அளிப்பதில்லை. நம்மிடமுள்ள அறிவுஜீவிகளுக்குக் கூட அப்படி எந்த அடிப்படை ஒழுங்கும் கிடையாது.

துயர இலக்கியம் அல்லது Lament  என உலகளாவ ஒரு நிறுவப்பட்ட வகைமை இல்லை. அது விமர்சகர்களால் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் மட்டுமே. மிகப்பொதுவான ஒரு பகுப்பு – வாசிப்பின் கோணத்தில் உருவாக்கப்பட்டது. அதை உலகமெங்குமுள்ள எல்லா இலக்கியச்சூழலிலும் எதிர்பார்க்கமுடியாது.

துயரங்கள் பலவகை. உலகப்பேரிலக்கியங்கள் பலவும் பல்வேறுவகை துயரங்களை பேசுவனதான். சொல்லப்போனால் பெருந்துயர் பேசப்படாத பேரிலக்கியங்களே உலகில் இல்லை. மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் உட்பட பெரும்பாலான பேரிலக்கியங்கள் துயரமுடிவு கொண்டவை. ஆகவே துயர இலக்கியம் என்பதை குறிப்பாக வரையறை செய்துகொள்ளவேண்டும்.  

கிரேக்க நாடக இலக்கணத்தில் இருந்து ஐரோப்பிய இலக்கியத்திற்குள் நுழைந்த இரு சொற்கள் இன்பியல் (Comedy)  துன்பியல் (Tragedy). அவற்றைக்கொண்டு இந்திய இலக்கியங்களை அறுதியாக வகைப்படுத்த முடியாது. அவ்வாறு ஆராய்ந்து பார்க்கலாம், அடையாளப்படுத்த முயன்றால் பெரும்பிழைகளை நோக்கிச் செல்வோம். கீழை இலக்கியங்களில் பலசமயம் தற்கொலை என்பது வீடுபேறாகவே முன்வைக்கப்படுகிறது. துயரமுடிவு என்று தோன்றுவது உலகியல் என்ற பெருஞ்சுழற்சியில் இருந்து பெறும் விடுதலையாக அந்நூல் உருவாக்கும் கருத்துக் களத்தால் கருதப்பட்டிருக்கும். இங்குள்ள மதிப்பீடுகள் வேறு.

ஆகவே துயர இலக்கியம் என்னும் சொல்லை இந்திய இலக்கியச் சூழலில் பயன்படுத்துவது தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும். நம் தேடல் ‘உயிரிழந்தவர்களை எண்ணி இரங்கி எழுதப்படும் இலக்கியம்’ என்றால் அதற்கு ‘இரங்கல்’ இலக்கியம்’ என்னும் சொல்லை பயன்படுத்தலாம். அச்சொல்லுக்குக் கீழே வருவன பல்வேறு வகையான இலக்கிய வெளிப்பாடுகள்.

இலக்கியத்தின் பரிணாம வரைபடம் இது. இலக்கியத்தின் தோற்றுவாய் பழங்குடிப் பாடல். அங்கிருந்து நாட்டார் வாய்மொழிப் பாடல்கள். அதன்பின் தொல்செவ்வியல். அதிலிருந்து தூயசெவ்வியல், மற்றும் கற்பனாவாதச் செவ்வியல். பழங்குடிப்பாடல்களில் பொதுவான பேசுபொருட்கள் இறைவேண்டுதல், காதல்கொண்டாட்டம், போர்ப்பாடல், வீரவழிபாடு போன்றவை. அவற்றில் ஒன்று மறைந்தவர்களுக்கான இரங்கலும் புகழ்பாடலும். 

பழங்குடிப்பாடல்களின் இன்றும் நீடிக்கும் உதாரணமான கேரளத்துத் தெய்யம் பாட்டுகளில் மிகப்பெரும்பாலானவை தெய்வமெழுப்புதலும், வீரர்களின் சாவைப் பாடும் படுகளப்பாடலும்தான். சொல்லப்போனால் படுகளத்தில் மறைந்தவனே தெய்வமாகவும் எழுகிறான். இவ்விரு பேசுபொருட்களும் நம் நாட்டார் மரபில் அப்படியே நீடிக்கின்றன. தமிழகத்திலுள்ள நாட்டார் பாடல்களில் மிகப்பெரும்பாலானவை களம்பட்ட வீரனுக்கான இரங்கல், வீரம்புகழ்தல், அவனை தெய்வமென ஆக்குதல் ஆகிய கருப்பொருள் கொண்டவைதான். 

வீரவழிபாடு மேலும் விரிவான நீத்தார் வழிபாட்டின் ஒரு பகுதியாகவே தமிழக நாட்டார் மரபில் உள்ளது. இங்கே உள்ள தெய்வங்களில் அறுகொலைத் தெய்வங்கள் என்னும் ஒரு வகை உண்டு. ஆயுள் முடியாமல் இறந்தவர்களை தெய்வமென வழிபடுதல். கொல்லப்பட்டவர்கள், விபத்துகளில் மடிந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள், பிள்ளைப்பேறில் மறைந்தவர்கள் என அவர்கள் பலவகை. அவர்களைப் பற்றிய  பாடல்கள் எல்லாமே மறைவுக்கு இரங்குதல் என்னும் கருப்பொருள் கொண்டவையே. 

அத்தகைய நூற்றுக்கணக்கான இரங்கல் இலக்கியங்கள் தமிழ் நாட்டார் மரபில் உள்ளன. குறுங்காவியங்களே பல உள்ளன. தமிழ்விக்கியிலேயே உலகுடையபெருமாள் கதைஅனந்தாயி கதை போன்றவற்றை பார்க்கலாம்.

நாட்டார் மரபில் இருந்து பேசுபொருட்கள் அப்படியே தொல்செவ்வியலில் நுழைந்தன. அப்பேசுபொருட்கள் திணை, துறை என வகுக்கப்பட்டன. உதாரணமாக ஒரு வீரனை புகழ்ந்து பாடுவது பாடாண் எனப்பட்டது. தமிழ்ச்ச்செவியல் மரபில் கையறு நிலை என்னும் துறையாக அவை வகுக்கப்பட்டன. மறைந்த வீரனை, சான்றோனை பற்றி அவன் மறைவுக்கு இரங்கியும், அவன் புகழை ஏத்தியும் பாடப்படுபவை இந்த வகை பாடல்கள்.

சங்க இலக்கியத்தில் மகத்தான கையறுநிலைப் பாடல்கள் பல உள்ளன. பாரி மறைவின்போது கபிலர் பாடியது, பாரியைப் பற்றி பாரி மகளிர் பாடியது, கோப்பெருஞ்சோழன் மறைந்தபோது பாடியது போன்றவை உதாரணம். ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ போன்ற வீச்சுள்ள வரிகள் (புறநாநூறு 242) பல உண்டு. யானை மறைந்த பின் அது நின்ற கொட்டிலைப் பார்த்து அழும் பாகன் போல கோப்பெருஞ்சோழன் மறைந்தபின் அவன் விட்டுச்சென்ற மன்றை எண்ணி அழுகிறேன் என்னும் பொத்தியாரின் பாடலில்  (புறநாநூறு 220) உள்ளது போன்ற அரிய படிமங்களும் ஏராளமாக உள்ளன.

சங்ககாலத்துடன் நம் வீரயுகம் முடிந்தது. அதன்பின் வருவது அறவிவாதங்களின் காலகட்டம். ஐம்பெருங்காப்பியங்கள் அறத்தை பேசுபொருளாகக் கொண்டவை, தத்துவ நோக்கை முன்வைப்பவை. ஆகவே அவற்றில் கையறுநிலை, வீரவழிபாடு போன்றவை முதன்மையிடம் பெறவில்லை. அதன்பின் பக்தி இலக்கியங்களின் காலம். அதன்பின் காவியங்களின் காலம். கம்ப ராமாயணம் முதல் பெரியபுராணம் வரையிலான காவியங்களின் நோக்கம் பக்தி என்னும் விழுமியத்தை முன்வைப்பதே. போர்வெறியை நேரடியாகப் பேசும் கலிங்கத்துப் பரணி ஒரு விதிவிலக்குதான்.

பிற்கால தமிழ் செவ்விலக்கியங்களில் நேரடியான கையறுநிலை பேசுபொருளாகக்கொண்ட நூல் நந்தி கலபம்பகம்தான்.  பிற்காலத் தொன்மம் ஒன்று அது நந்திவர்மனை அறம்பாடிய நூல் என்று சொல்கிறது என்றாலும் அது நூல் என வாசிக்கையில் நேரடியான கையறுநிலையையே பேசுபொருளாகக் கொண்டுள்ளது.

சிற்றிலக்கியங்களில் கையறு நிலை ஒரு சிற்றிலக்கியவகைமையாகவே குறிப்பிடப்படுகிறது. புலம்பல் என்னும் சிற்றிலக்கிய வகையும் கிட்டத்தட்ட கையறுநிலைக்கு இணையானது. இரண்டுமே மாண்டவரை எண்ணி பாடப்படும் பாடல்களால் ஆனவை. பேரழிவுகளையும் இந்த வகைமையில் பேசுபொருளாக்குவதுண்டு.

நாட்டார் மரபில் கையறுநிலை ஏன்னும் பேசுபொருள் மிக வலுவாகவே தொடர்ந்தது. நம் நாட்டார் மரபில் இறந்தோருக்கான இரங்கல் – புகழ்பாடல் என்பது ஒரு நிகழ்த்துகலையாகவே ஆகியது. அந்த பாடல்கள் ஒப்பாரி எனப்பட்டன.ஒப்பாரி பாடுவதை தொழிலாகக் கொண்ட குழுக்களே உருவாகி நீடித்தன.  மறைவின் துயரை பெருக்கிப்பெருக்கி பாடித் தீர்த்துக்கொள்வது இன்றும் மிகத்தீவிரமாக நம் கிராமிய வாழ்க்கையில் நீடிக்கிறது. 

அந்த நாட்டார் சடங்கு மரபு நாட்டார் கலைகளிலும் நீடித்தது. அரிச்சந்திரன் கூத்தில் மயான காண்டத்தில் சந்திரமதி பாடுவது போன்றவை நாட்டார் மரபில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை அப்படியே மேடையில் நிகழ்த்திக்கொள்வதுதான். அத்தகைய நாடகங்கள் புதிதாகவும் எழுதப்பட்டன. நாடகங்களிலும் தொடக்ககால திரைப்படங்களிலும் இடம்பெற்றன.

தமிழில் நவீன இலக்கியம் தோன்றி நூற்றைம்பதாண்டுகளே ஆகின்றன. இங்கே உருவான நவீன இலக்கியம் அது உருவான காலகட்டத்திற்குரிய பேசுபொருட்களையே கொண்டிருந்தது, அதுவே இயல்பானது. இந்தியாவிலுள்ள தொடக்ககால நாவல்கள் எல்லாமே பெண்கல்வியை முன்வைப்பவை என்பதைக் காணலாம். தமிழிலுள்ள தொடக்ககால நாவல்கள் மூன்றுமே பெண்கல்வியை பேசுபொருளாகக்கொண்டவை. (பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம்)

தொடக்ககால நவீன இலக்கியம் சமூகசீர்திருத்த– மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டிருந்தது. பின்னர் தேசிய இயக்கத்தின் பேசுபொருட்களை எடுத்துக்கொண்டது. விரைவிலேயே இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் கருத்துநிலைகளை வெளியிடலாயிற்று. தமிழில் நவீனத்துவ இலக்கியம் உருவாவது வரை இலக்கியப்படைப்பு என்பது ஆசிரியரின் கொள்கைகளை, இலட்சியங்களை முன்வைப்பதாகவே எண்ணப்பட்டது. அவருடைய தனிப்பட்ட உணர்வுகளை அது வெளிப்படுத்தவேண்டும் என்னும் கோணம் இருக்கவில்லை. ஆகவே கையறுநிலை போன்றவை நவீன இலக்கியத்தில் மையப்பேசுபொருளாக இருக்கவில்லை.

வெ.சாமிநாத சர்மா

நவீன இலக்கியத்தில் இறப்பின் கையறு நிலையை வெளிப்படுத்த இரங்கற் பா என்னும் புதியவடிவம் உருவாகி வந்தது. பெரும்பாலும் இது மரபுக்கவிதையால் ஆனதாகவே இருந்தது. பின்னர் நீண்ட, உணர்ச்சிகரமான வசனகவிதைகளிலும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தலைவர்கள், சான்றோர்கள் மறைவின் போது இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. தனிப்பட்ட இழப்புகளின்போதும் இரங்கற்பாடல்கள் எழுதப்பட்டன. ஒரு சடங்குபோல கவிஞர்களைக்கொண்டு மறைந்தவர்களுக்கு இரங்கல் எழுதிவாங்கும் வழக்கமும் இருந்தது. கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை நூற்றுக்கணக்கான இரங்கற் பாடல்களை இயற்றியுள்ளார். தனிப்பாடல்களாக ஆயிரக்கணக்கான இரங்கற்பாடல்கள் உள்ளன. கண்ணதாசன் தன் நாய் இறந்தபோது இரங்கற்பா எழுதியிருக்கிறார்.

நவீன உரைநடை இலக்கியத்தில் தனிப்பட்ட இழப்பை ஒட்டி எழுதப்பட்ட இரங்கல் இலக்கியங்கள் ஒப்புநோக்க குறைவு, அதற்குக் காரணம் இங்கே கூடுமானவரை எழுத்தாளர்கள் தங்கள் தனிவாழ்க்கையை எழுத்தில் இருந்து விலக்கி வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்ததுதான். இன்றும் அப்படி நம்பும் பலர் உள்ளனர். எழுத்தாளர்கள் தன் வரலாறுகளை எழுதுவதும் மிகக்குறைவு.

மலையாளத்தில் இரங்கல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த மிகப்புகழ்பெற்ற படைப்புகள் உள்ளன, நாலப்பாட்டு நாராயணமேனன் தன் மனைவியின் மறைவை ஒட்டி எழுதிய ‘கண்ணீர்த்துளி’ என்னும் குறுங்காவியம் ஒரு நவீனச் செவ்வியல்படைப்பு என கருதப்படுகிறது.

தமிழில் அவ்வகையில் செய்யுளில் ஏதும் எழுதப்படவில்லை. தன்வரலாறாக எழுதப்பட்டவற்றில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தன் வாழ்க்கைக்குறிப்புகளில் தன் துணைவியின் மரணம் குறித்து எழுதியவை உணர்ச்சிகரமான இலக்கியத்தன்மை கொண்டவை.

தன்வரலாற்றுத்தன்மை கொண்ட இரங்கல் இலக்கியத்தில் தமிழில் தலைசிறந்த படைப்பு வெ. சாமிநாத சர்மா ன் மனைவியின் இறப்பைக் குறித்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான அவள் பிரிவு. இத்தகைய எந்த விவாதத்திலும் சுட்டிக்காட்டப்படவேண்டியது அது. அதை இயல்பாகவே சுட்டிக்காட்டும் ஒரு விவாதத்திற்கு மட்டுமே இலக்கியவாசகன் குறைந்தபட்ச மதிப்பை அளிக்கவேண்டும். மற்ற எல்லாமே வெட்டி அரட்டைகளுக்கு அப்பால் மதிப்பற்றவை.

ஜெ

இரங்கற்பா புலம்பல் கையறு நிலை ஒப்பாரி  இரங்கல் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.