Jeyamohan's Blog, page 114
May 9, 2025
Tamil renaissance movement.
தாங்கள் இலக்கியத்திலிருந்து வாசகர்களை தத்துவத்திற்கு இட்டுச்செல்லும்பாதை நன்றாக தெளிவாக தெரிகிறது. ஆலமரத்தை தத்துவ தரிசனத்தின் அடையாளமாக சொல்லுவார்கள். கோயம்புத்தூர் ஆனைகட்டி ஆஸ்ரமம் சுவாமி தயானந்த சுவாமியின் இலச்சினை ஆலமரம்.
தத்துவவிருட்சம், கடிதம்Generally, populist movements like the Dravidian movement absorb the essence of intellectual moments and achieve political power. They present their leaders as intellectuals. EVR, C.N. Annadurai, and M. Karunanidhi are political icons, not intellectuals.
Tamil renaissance movement.May 8, 2025
மனதைப் பழக்கும் பயிற்சிகள்
என்னிடம் நிறையபேர் கேட்கும் கேள்வி “எப்படி விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்கிறீர்கள்? எப்படி தொடங்கிய அனைத்தையும் செய்து முடிக்கிறீர்கள்?” அது ஒரு மனப்பழக்கம் என்று பதில் சொல்வேன். அதை பழகுவது எப்படி என்று அடுத்த கேள்வி எழும். இன்றைய வாழ்க்கையின் முதன்மைச் சவால்களில் ஒன்று நம் உள்ளத்தை நம் தேவைக்கென பழக்குவதுதான்.
சேலம், வெண்முரசு கூடுகை
சேலம் நகரில் வெண்முரசு வாசிப்பு விவாத அரங்கு வரும் மே 12 அன்று நிகழ்கிறது. நேரம் மாலை 6 .15. சேலம் நகரில் மாதந்தோறும் நிகழும் அரங்கின் நான்காவது அமர்வு இது
அச்சம் என்பது…
எங்கள் வீட்டில் பூனைகளின் தலைமுறைகள் பெற்று பெருகி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அருகே அரைச்சதுப்பு நிலங்கள் இருப்பதனால் பூனையோ நாயோ தேவை என்பது அருண்மொழியின் எண்ணம். தண்ணீர்ப்பாம்புகள் முதல் நச்சுப்பாம்புகள் வரை இப்பகுதியில் இருக்கலாம். ஆனால் பூனைகளை செல்லப்பிராணிகளாக வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. வீட்டுக்கு வெளியேதான். சோறுகொடுப்பது, அப்பால் நின்று வேடிக்கைபார்ப்பதுடன் சரி. பூனைகளும் அந்த எல்லைகளைப் பேணுகின்றன.
பூனைகளின் முடி நமக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது என் எண்ணம். பூனைகள் தங்கள் நக்கி உடலில் பூசிக்கொள்ளும் எச்சில்கலந்த திரவம் குறிப்பிட்ட சில நுண்ணுயிரிகளைக் கொண்டது. நாயின் உடலில் பெருகும் பூஞ்சைகள், உண்ணிகள் எவையும் பூனையுடலில் இல்லாமலிருப்பது அதனால்தான். அந்த நுண்ணியிரிகள் மானுட உடலில் நுழைந்து செல்களுக்குள் வாழ்பவை, மூளைகளை சென்றடைபவை என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூனைகளை தொட்டுக்கொஞ்சுபவர்கள் உளச்சோர்வை அடைகிறார்கள். உளச்சோர்வுள்ளவர்கள் பூனைகளை தொட்டுக்கொஞ்ச விரும்புகிறார்கள். இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகளா, அறிவியல் ஊகங்களா தெரியவில்லை. ஆனால் எதற்கு வம்பு? (ஆனால் பூனையுடலில் வாழும் நுண்ணியிரிதான் தான் வாழும்பொருட்டு நம் மூளைக்குள் புகுந்து அங்கே வாழ்ந்து பூனைமேல் பிரியத்தையும் உளச்சோர்வையும் உருவாக்குகிறது என்பது நல்ல புனைவென்றே தோன்றுகிறது)
எங்கள் வீட்டை நம்பியே வாழும் பூனை ஒன்று எப்போதும் உண்டு. (பார்க்க வம்சம்) அதன் இரு கண்களும் இரண்டு வண்ணங்களில் இருக்கும். அது மிக அரிதான ஒன்று என்கிறார்கள். அது இங்கே ‘குடியிருக்கிறது’. அதன் கணவனாக ஒரு கடுவன் அவ்வப்போது வந்து உணவைப் பகிர்ந்து உண்டு இங்கே வாழும். கிளம்பிவிடும். அது போனபின் இது கர்ப்பமாகியிருப்பது தெரியும்.
ஆண்டுக்கு இரண்டு மூன்று குட்டிகள். அவை கொஞ்சநாள் இங்கே வாழும். சில குட்டிகள் இறந்துபோகும். சில குட்டிகள் காணாமலாகும். சில பெண்குட்டிகள் அன்னையின் தோழிகளாக கூட இருக்கும். சில கடுவன் குட்டிகள் ‘தடிமாடுகளாக’ ஆன பின்னரும் அம்மாவுடனேயே இருக்கும். நாங்கள் வெளியூர் பயணம் செய்கையில் வீடு கொஞ்சநாள் பூட்டியிருந்தால் அவை வேறு வாழ்விடம் தேடிச்செல்லும். திரும்பி வரும்போது அம்மாக்காரி மட்டும்தான் மீண்டும் வருவாள்.
காலைநடைக்கு கதவைத் திறந்தால் வாசலில் மிதிமெத்தையில் மூன்று குட்டிகளுடன் சுருண்டு கிடந்தாள் இரட்டைக்கண்ணி. நான் ஊரில் இல்லாத பத்துநாளுக்குள் ஈன்று புறந்தந்த வாரிசுகள் அவை. ஒருவார வளர்ச்சி. என் காலோசை கேட்டதும் எழுந்து வெளியே சென்றாள். குட்டிகள் மின்வேகத்தில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டன. அன்னை சலிப்புடன் சற்று தள்ளி முற்றத்தில் சென்று படுத்து என்னைப் பார்த்து ”என்ன வே?” என்றாள். நான் அவளிடம் அதிகம் பேசுவதில்லை, அவள் அருண்மொழியின் தரப்பைச் சேர்ந்தவள், கடித்துக் கிடித்து வைத்தால் எதற்கு வம்பு?
காலைநடை முடிந்து திரும்பி வந்தேன். முற்றத்தில் அதே இடத்தில் மூன்றுகுட்டிகளை கால்களுக்கு நடுவே போட்டபடி அன்னை படுத்திருந்தாள். என் காலடியோசை கேட்டு வாலை கொஞ்சம் நெளித்து, செவிகளை திருப்பி, இரட்டைநிறக் கண்ணால் பார்த்தாள். குட்டிகள் ஒளிந்துகொண்டன.
ஆனால் அதில் ஒரு முறைமை இருந்தது. அதை அதிகாலையிலும் கவனித்திருந்தேன். மூன்று குட்டிகளில் ஒரு குட்டி சிறு ஓசைக்கே சட்டென்று பாய்ந்து முழுமையாக மறைந்துகொண்டது. பூனை, நாய் , மனிதன் உட்பட எல்லா குட்டிகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு, முகத்தை மறைத்துக் கொண்டால் ஆளே மறைந்துவிட்டதாக அவை எண்ணிக்கொள்ளும். பூந்தொட்டிக்கு அப்பால் வால் நெளிந்தது. பின்பு இப்பால் பாதி முகம் என்னை எட்டிப்பார்த்தது. எப்போதுமே அந்தக்குட்டி (அவளா அவனா?) தான் முதலில் அஞ்சிப் பாய்ந்து ஒளிந்துகொள்கிறது.
இரண்டாவது குட்டி கொஞ்சம் யோசித்து, கவனித்து, அதன்பின் இன்னொரு பக்கம் ஒளிந்தது. ஆனால் நன்றாகவே மறைந்துகொண்டு விட்டது. மூன்றாவது குட்டி என்னை கூர்ந்து நோக்கியபடி அப்படியே அமர்ந்திருந்தது. ஆனால் மந்தமாக இல்லை. பார்வை விலகவில்லை.
நான் செல்பேசியில் காணொளி பதிவுசெய்தேன். செல்பேசி நெருங்குவதைக் கண்டபின் மூன்றாம் குட்டி எழுந்து அப்பால் ஒளிந்தது. ஆனால் அங்கே நின்று நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தது. நான் ஒன்றும் தவறாகச் செய்யவில்லை என புரிந்துகொண்டதும் முதலில் அதுதான் திரும்ப வந்தது. அடுத்து மற்ற பூனைக்குட்டிகள். கடைசியாக வந்தது முதலில் சென்றதுதான்.
பூனைக்குட்டிகளைக் கவனித்தால், முதலில் ஒளிந்துகொண்டதுதான் சோனி. அதுதான் நடுங்கிக்கொண்டே இருந்தது. கடைசியாகச் சென்றது குண்டு. தாய்ப்பாலில் பெரும்பகுதியை முண்டியடித்து உறிஞ்சுவது அதுதான். சூழலை தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்கிறது அது, கூடவே அந்த இரண்டாவது பூனைக்குட்டிக்கு ஆதரவளிக்கிறது, ஆறுதலும் சொல்கிறது. பயந்துநடுங்கும் சோனியை அது கண்டுகொள்வதே இல்லை.
நான் என் நண்பரான வனவியலாளரிடம் அதைப்பற்றி கேட்டேன். “அப்படியே புலிக்கும் இது பொருந்தும். மூன்றில் ஒன்றுதான் உயிர்வாழும். சிலசமயம் இரண்டு. அந்த சோனி வாழ வாய்ப்பே இல்லை. தைரியமானதுதான் வாழ்வதற்கு வாய்ப்பு மிகுதி. இங்கே அந்த தைரியசாலியின் ஆதரவு இருப்பதனால் இரண்டாவது பூனைக்குட்டியும் வாழ வாய்ப்புண்டு…”
“ஆனால் எச்சரிக்கையாக இருப்பது நல்ல குணம்தானே?” என்றேன்.
“ஆம், அதைவிட துணிவே தேவையான குணம். துணிவுக்கு ஆதாரமாக இருப்பது அறிவு. துணிவான அந்தக் குட்டி உங்களைப் பற்றி புரிந்துகொள்ள முயலும், சீக்கிரமே புரிந்துகொள்ளும். அது பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம். பாருங்கள் இரண்டு மூன்று நாட்களில் அது உங்களிடம் வந்து உணவு போடும்படி கேட்கும்…. அறிவே அச்சத்தை அகற்றுகிறது. அறிவுள்ளவை வாழவேண்டும் என்பதே இயற்கையின் நெறி. பிறப்பிலேயே அந்தந்த குணங்கள் உருவாகி விடுகின்றன”
“சரி, அப்படியென்றால் ஏன் அந்த பயந்த குட்டி பிறக்கவேண்டும்?”
“மூன்றும் மூன்று இயல்புகள். மூன்றும் மூன்று சாத்தியக்கூறுகள். ஒருவேளை அந்த சோனிக்குட்டிக்குச் சாதகமான சூழல் இருந்தால் அது வாழும், துணிந்ததும் அடுத்ததும் இறந்துவிடும். உதாரணமாக, நீங்கள் ஒருவேளை அஞ்சி நடுங்கும் அந்தப் பூனைக்குட்டிமேல் அனுதாபம் கொண்டு அதற்கு பாலூட்டி வளர்க்க வாய்ப்புண்டு அல்லவா? இயற்கை மூன்று இயல்புகளையும் சோதித்துப் பார்க்கிறது. இயற்கைக்கு அதில் பேதம் ஏதும் இல்லை”
இயற்கை என்று இவர் சொல்வது கடவுளையா என்று குழம்பினேன். “இப்படி கேட்கிறேன் டாக்டர், இந்த மூன்று குணங்களில் எது நல்லது, தேவையானது?”
“தெரியவில்லை. சிலசமயம் மெலனின் இல்லாமை போன்ற குறைபாடுகளைக்கூட இயற்கை பேணி தொடர்ந்து வரச்செய்கிறது, அதற்கும் ஏதோ தேவை இருக்கலாம் என இயற்கை என்ணுகிறது. அந்த இரட்டைக்கண் கூட அப்படிப்பட்ட ஒரு தனி இயல்புதான்…”
“சரி இப்படி கேட்கிறேன். வீரமும் துணிவும் ஒரு பக்கம். கனிவும் அன்பும் இன்னொரு பக்கம். எது இயற்கையில் உள்ள தேவையான இயல்பு?”
“இதுவரையிலான விலங்கு வாழ்க்கையைக்கொண்டு இப்படிச் சொல்லலாம். மந்தை விலங்குகளுக்கு கனிவும் அன்பும் ஆற்றலாக ஆகின்றன. தனித்த வேட்டை விலங்குகளில் வீரமும் துணிவும். ஆனால் மந்தை விலங்குகளில் துணிவும் வீரமும் கொண்டதுதான் தலைவன்…. வேட்டைவிலங்குகளில்கூட கனிவை பயன்படுத்தி எதிரியுடன் தேவையானபோது சமரசம் செய்துகொள்ளும் விலங்குகளே மேலும் ஆற்றலுடன் உள்ளன… ஆனால்…”
“சரி விடுங்கள். இது மிகவும் தத்துவார்த்தமாக போகிறது…”
“ஆனால் ஒன்றே ஒன்று உறுதியாகச் சொல்லலாம். தயக்கம், அச்சம் கொண்டவை அழிய விதிக்கப்பட்டவை’
நான் பெருமூச்சுவிட்டேன். “தெரிகிறது” என்று போனை அணைத்தேன்.
வம்சம்ஆர்.ஜி.சந்திரமோகன்
தொழில் நிறுவனர். அருண் ஐஸ்க்ரீம், ஹட்ஸன் ஃபுட்ஸ், ஐபாகோ போன்ற பல நிறுவனங்களை உருவாக்கியவர். தமிழக அரசின் விருது, பத்ம ஸ்ரீ விருது ஆகியவை பெற்றார்.
ஆர்.ஜி.சந்திரமோகன் – தமிழ் விக்கி
காவியம் – 18
அறியப்படாத உருவம். பைதான் அருங்காட்சியகம். மாக்கல் செதுக்கு. பொமு 1 சாதவாகனர் காலம்மதியத்திற்குப் பின் கல்லூரியில் இருந்தபோது எனக்கு அழைப்பு வந்தது. நான் அலுவலகத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அடுத்த வகுப்புதான். என் அருகே தமிழரசன் வினாத்தாள் திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாள் திருத்தும்போது மட்டுமே வரும் சூள்கொட்டல்கள், அலுப்பொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. “தமிழை கொலை செய்கிறார்கள்” என்றார்.
நான் “ஆயிரம் கொலை செய்தவன் அரைவைத்தியன்” என்றேன். ”உங்களுடைய பழமொழிதான்”
சார்ல்ஸ் வந்து நின்று “போன்” என்றார்.
“யாருக்கு?” என்று தமிழரசன் எழுந்தார்.
“இந்தி ஆசிரியருக்கு” என்றான் சார்ல்ஸ்.
“ஓ” என அவர் அமர்ந்து “உங்கள் மனைவியாக இருக்கலாம்” என்றார்.
நான் மெல்லிய பதற்றத்துடன் எழுந்துகொண்டேன். ராதிகா அப்படி என்னை அழைக்க வாய்ப்பே இல்லை.
துறைத்தலைவர் அறையில்தான் தொலைபேசி இருந்தது. அது எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் தன் பெரிய நாமம் அணிந்த நெற்றிக்குக் கீழே கண்களை மிதக்கச் செய்த கண்ணாடி வழியாக பார்த்து, வெற்றிலை தளும்பாமல் மோவாயால் தொலைபேசியைச் சுட்டிக்காட்டிவிட்டு குனிந்து கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
நான் தொலைபேசியை எடுத்தபோது என் மூச்சின் ஒலிதான் அதில் சீறலாக ஒலித்தது. “ஹலோ” என்றேன்.
“துக்காராம்? மிஸ்டர் துக்காராம்? எம்.துக்காராம் பைதானி?” என்றது அந்நியக்குரல்.
என் நெஞ்சு ஓசையிட்டது. என்னால் பேசமுடியவில்லை. உடம்பு வியர்வை பூத்து நடுங்கிக்கொண்டிருந்தது. தொலைபேசியை நழுவவிட்டுவிடுவேன் என்று பயந்து இரண்டு கைகளாலும் பிடித்து காதுடன் அழுத்திக்கொண்டேன்.
“துக்காராம்? ஹிந்தி மாஸ்டர்? எம்.துக்காராம் பைதானி?”
“நான்தான்…”
“நாங்கள் இங்கே டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறோம்… ஒரு சிறு தெளிவுபடுத்தலுக்காக…”
“சொல்லுங்கள்”
“ஹலோ”
“சொல்லுங்கள்” என்றேன் சத்தமாக.
“ஒன்றுமில்லை. சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் இருந்து காகிதங்கள் வந்திருக்கின்றன. எல்லா விலாசங்களையும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சாதாரண சம்பிரதாயம்தான்… உங்கள் விலாசத்தை சரிபார்க்கவேண்டும். நீங்கள் திருமணம் பதிவுசெய்தீர்கள் அல்லவா?”
“ஆமாம்”
“அந்த சான்றிதழை எடுத்துக் கொள்ளுங்கள்… திருவாரூர் விலாசம் கொடுத்திருக்கிறீர்கள். அதன் சான்றும் தேவை… நீங்கள் இருவரும் வந்து கையெழுத்து போட்டுவிட்டுப் போகவேண்டும்”
“இருவருமா?”
“ஆமாம், போட்டோ மேல் நாங்கள் கையெழுத்து போடுவோம்… நீங்கள் கீழே கையெழுத்து போடவேண்டும். உங்கள் வீட்டுக்கு கான்ஸ்டபிள் போயிருக்கிறார். அங்கே யாருமில்லை. தொலைபேசி எண்ணை பக்கத்துவீட்டில் தந்தார்கள்”
“வருகிறேன்”
“அவர்களும் வரவேண்டும்…”
“சரி” என்றேன்.
துறைத்தலைவர் “என்ன ராம்?” என்றார்.
“போலீஸ் விசாரணை… பதிவுத்திருமணம் செய்ததைப் பற்றி…”
“ஆமாம், சிலசமயம் செய்வார்கள். அதிலுள்ள போட்டோவிலுள்ளவர்தானா நேரில் வருவது என்று பார்ப்பார்கள். சிலசமயம் போட்டோவில் இருபத்தைந்து வயதுப் பெண் இருப்பாள், நேரில் அவளைப் பார்த்தாலே தெரியும் பதினைந்து பதினாறுகூட இருக்காது”
திரும்ப வந்தபோது தமிழரசன் “என்ன சார்?” என்றார். நான் சொன்னதும் “போலீஸ் ஸ்டேஷனுக்கா? நானும் வருகிறேன்” என்றார்.
“இது வழக்கமான ஒரு விசாரணைதான்”
”ஆனால் நீங்கள் வெளியூர், ஏதாவது கேட்டால் குழம்புவீர்கள். அந்த திருவாரூர் விலாசம் பொய்…“
“ஆமாம்”
”உங்கள் ஊர்விலாசத்தை ஒருவேளை கேட்பார்கள்… நான் வருகிறேன். அல்லது தோழர் குப்புசாமி கூட வருவார். பேசிக்கொள்ளலாம். ஆயிரம் ரூபாய் கேட்பார்கள், அவ்வளவுதான்.”
“பார்க்கிறேன்… நான் ராதிகாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்”
நானும் ராதிகாவும் எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்று தமிழரசனுக்குச் சொல்லியிருந்தேன்.
நான் ராதிகாவிடம் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னேன். வீட்டுக்குச் சென்றபோது ராதிகா வந்திருந்தாள்.
“ஒன்றுமில்லை, வழக்கமான ஒரு விசாரணையாகத்தான் இருக்கும். ஆயிரம் ரூபாய் கேட்பார்கள் என்று தமிழரசன் சொன்னார். இரண்டாயிரம் ரூபாய் கொண்டு போவோம்.”
“அவரைக் கூப்பிடலாமே?” என்றாள்.
”வேண்டாம், அங்கே கூடுதலாக ஏதாவது பேச்சு வரலாம்… நம்மைப்பற்றிய தகவல்கள் அதிகம் வெளியே தெரியவேண்டாமே?”
“தமிழரசன் நம்பகமானவர்.”
“ஆமாம், ஆனால் அவரிடமிருந்து வெளியே கசியும்… வேண்டாம்.”
“ராம், நீங்கள் மனிதர்களை நம்பவேண்டும்.”
“சரி, நீ போன் போட்டு அவரைக் கூப்பிடு… கூட்டமாக போவோம்… அவர் கம்யூனிஸ்டு. அவர்களைக் கண்டாலே போலீஸ்காரர்களுக்கு பிடிக்காது… அங்கே போலீஸ் ஏதாவது கேட்டு இவர் ஏதாவது சொல்லி தகராறு வந்தால் அவர்கள் தோண்ட ஆரம்பிப்பார்கள்…”
“சரி, கத்தாதே… நாம் மட்டும் போகலாம். சரியா?”
நாங்கள் ஓர் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருந்தாள். நான் வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன்.
போலீஸ் ஸ்டேஷன் ரத்தச்சிவப்பு வண்ணத்தில் சாலையின் ஓரமாகவே இருந்தது. முகப்பில் கீற்றுக்கொட்டகை. அதில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். தரையில் குடிசைவாசிகள் என்று தோன்றிய சிலர் அமர்ந்திருந்தனர். ஆண்கள் குந்தியபடியும் பெண்கள் சப்பணம்போட்டும். சீருடை அணிந்த ஒருவர் ஏதோ படித்துச் சொல்ல லுங்கி கட்டி வண்ணச்சட்டை போட்ட இன்னொருவர் அதை எழுதிக்கொண்டிருந்தார். அருகே இருவர் நின்றிருந்தனர். அமர்ந்திருந்தவர்களில் ஒருவருக்கு காலில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.
காவல்காரர் என்னிடம் ”என்ன வேணும்? என்றார்.
நான் “இங்கே இருந்து ஃபோன் வந்தது… ஒரு சர்ட்டிஃபிகெட் பற்றி விசாரிக்கவேண்டும் என்று”
”பாஸ்போட்டுக்கா?”
“இல்லை, மேரியேஜ் சர்டிஃபிகெட்”
“பாலுசார், மேரியேஜ் சர்டிபிகெட் விசயமா வந்திருக்காங்க”
சீருடை போடாதவர் நிமிர்ந்து பார்த்து “தனா சாரோட கேஸ்… உள்ள போங்க. லெஃப்டுலே தட்டி மறைச்சிருக்கிற ரூம்” என்றார்.
நான் ராதிகாவுடன் அந்தச் சிறிய அறைக்கு முன் சென்று நின்றேன். அங்கே ராதிகா மிக அந்நியமாக இருந்தாள். அவளுடைய நிறம், உயரம், மிடுக்கு, நீலம் கலந்த கண்கள். தமிழ்நாட்டில் அவள் அசாதாரணமான அழகி. தெருவில்கூட அவளை வேடிக்கை பார்க்காதவர்கள் குறைவு. அனைவரும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எழுதியவரும் வாசித்துக்கொடுத்தவரும் கேட்டுநின்றவர்களும் தவிர.
உள்ளிருந்து கரிய தடிமனான நாற்பது வயதுக்காரர் எட்டிப்பார்த்து “மேரியேஜ் சர்ட்டிபிகெட் விசயமாத்தானே? கூப்பிட்டிருந்தோமே?”
“ஆமாம்”
அவர் எழுந்து வெளியே வந்து என்னிடம் “வாங்க” என்று சொல்லிகொண்டு வெளியே சென்றார்.
நான் அவரை தொடர்ந்து செல்ல ராதிகா பின்னால் வந்தாள். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே சென்றதும் அவள் என்னிடம் கண்களால் எங்கே செல்கிறோம் என்று கேட்டாள்.
நான் தயங்கினேன். அவரை அழைக்கலாம் என்று தோன்றியது, ஆனால் தைரியம் வரவில்லை.
ராதிகா தமிழில் “சார், எங்கே போறம்?” என்றாள்.
“இது கிரைம் ஸ்டேஷன்மா… டாக்குமெண்ட்லாம் அந்த ஆபீஸ்லதான் இருக்கும். எல்லா பேப்பர்ஸும் கொண்டாந்திட்டீங்க இல்ல?”
“ஆமா” என்றாள்.
“காமிங்க”
அவள் காட்டிய காகிதங்களைப் பார்த்துவிட்டு “ஏம்மா, இது ரசீது… மேரியேஜ் சர்டிஃபிகேட் எங்க?” என்றார்.
”இதான் குடுத்தாங்க”
”அன்னிக்கு அதான் குடுப்பாங்க… ஒரு மாசம் கழிச்சு நேர்ல போயி சர்ட்டிபிகேட் வாங்கணும். அதான் லீகல் டாக்குமெண்ட்”
“தெரியலீங்க” ராதிகா அமைதியடைந்துவிட்டதை உணர முடிந்தது.
“சரி, இப்ப இதை குடுங்க. ஆனா ஒரு வாரத்துக்குள்ள சர்டிபிகேட் சப்மிட் பண்ணியாகணும்… போனா குடுப்பான். ஒரு ஆயிரம் ரூபா கேப்பான்…”
ஒரு வெள்ளை வேன் வந்து நின்றது. அவர் என்னிடம் “ஏறிக்குங்க” என்றார்.
“இதிலேயா?”
“ஆமா, நானும் வரணும்ல? முதல்ல நீங்க ஏறுங்கம்மா ”
ராதிகா ஏறிக்கொண்டதும் நான் ஏறி அவள் அருகே அமர்ந்தேன். ஆனால் அதே கணம் எங்களுக்குப் பின்னால் வந்து நின்றிருந்த ஆட்டோவில் இருந்து ஒருவன் ஏறி என்னருகே அமர்ந்தான். இன்னொருவன் மறுபக்கம் ஏறி அவளருகே அமர்ந்தான். சப் இன்ஸ்பெக்டர் வேனில் ஏறாமல் கதவை சாத்திவிட்டு விலகிக்கொள்ள வேன் சிறு உந்தலுடன் விரைந்து முன்னால் சென்றது.
வேனுக்குள் பின்னால் ஒருவன் இருக்கைக்கு அடியில் ஒளிந்து அமர்ந்திருந்தான். அவனும் அதே வேகத்தில் எழுந்து அவள் முகத்தில் ஒரு டவலை வைத்து அழுத்தினான். இன்னொருவன் அவள் இரு கைகளையும் அழுந்தப்பற்றிக்கொண்டான். அவள் திமிறித்துடிக்க என்னருகே அமந்திருந்தவன் என் முகத்தில் டவலை வைத்து அழுத்தினான்.
அந்த நெடி என் நுரையீரலை நிறைத்தது. என் மூச்சு அந்த திரவத்தின் நெடியாக மாறியது. அவன் அந்த துவாலையை நெகிழ்த்தினான். நான் ஆவேசத்துடன் மீண்டும் மூச்சை இழுத்ததும் அதே விசையுடன் மேலும் அழுத்திக்கொண்டான். அப்படியே நாலைந்து முறை. என் தலை கனத்து வந்தது. என் கழுத்து நரம்பு துடித்து துடித்து வலித்தது. தலையின் எடையை உடலால் தாங்க முடியவில்லை. உள்நாக்கு தளர்ந்து தொண்டைக்குள் பின்னடைவதுபோலிருந்தது. எண்ணங்கள் சிதைந்து தொடர்ச்சி இல்லாத சொற்களும் பிம்பங்களும் ஆயின.
எனக்கு தன்னுணர்வின் மிச்சம் அப்போதும் இருந்தது. மயங்கிக்கொண்டிருக்கிறேன், நானும் ராதிகாவும் அபாயத்தில் இருக்கிறோம், விழித்துக்கொள்ள வேண்டும் என்னும் பதற்றம் இருந்தாலும் உடலின் எல்லா தசைகளும் தளர்ந்து அப்படியே சரிந்து தூங்கவேண்டும் என்றும் தோன்றியது.
நான் விழித்துக்கொண்டபோது அந்த வேன் நின்றிருந்தது. அந்த அமைதிதான் என்னை திகைத்து விழிக்கச் செய்தது. நான் அபாயத்தில் இருக்கிறேன், ஓடும் வேனில் கடத்தப்படுகிறேன் என்ற என் தன்னுணர்வுதான் முதலில் உருவாகியது. மறுகணமே அந்த அமைதி. என்னருகே ராதிகா சரிந்து தூங்கிக்கொண்டிருந்தாள். என் இரு பக்கமும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் அசைந்ததும் அவர்களில் ஒருவன் ஏதோ சொன்னான். இன்னொருவன் அதற்குப் பதில் சொன்னான்.
நான் ராதிகாவின் தோளைப்பிடித்து உலுக்கி “ராதிகா, ராதிகா” என்றேன். அவள் முனகியபடி அசைந்தாள்.
என்னருகே அமர்ந்திருந்தவன் என் தோளை அழுந்தப் பிடித்து கீழிறக்கினான். “ம்” என்ற ஒலியாலேயே ஆணையிட்டான். பின்னால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து இறங்கியவன் நான் பனாரஸில் பார்த்த குண்டன். அவன் அருகே வந்ததும் நான் சட்டென்று முழங்காலில் மண்டியிட்டேன். என்னை அறியாமலேயே கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்… நான் அவளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறேன்… தயவுசெய்து… எங்காவது கண்காணாத இடத்திற்குப் போய்விடுகிறேன். திரும்ப வரவே மாட்டேன்” என்று நான் கைகூப்பி கெஞ்சினேன்.
“உன்னை விட முடியாது… எவ்வளவோ சொன்னோம், நீ கேட்கவில்லை. உனக்கான கெடு முடிந்துவிட்டது” என்று அவன் சொன்னான். “உன்னை இங்கேயே கொல்லப்போகிறோம். நீ வேண்டுமென்றால் அலறி அழலாம்… இங்கே எத்தனை கத்தினாலும் யாரும் வரப்போவதில்லை…”
“அவளை விட்டுவிடுங்கள்… அவள் எந்த தப்பும் செய்யவில்லை. நான்தான் அவள் என்னுடன் வரவில்லை என்றால் செத்துவிடுவேன் என்று சொல்லி அவளைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.”
“அதை அவளிடமே கேட்டுக்கொள்கிறோம்” என்று குண்டன் சொன்னான்.
மிக ஆச்சரியமாக என் பயம் நடுக்கம் எல்லாம் போய்விட்டன. என் மூளை நிதானமாக வேலைசெய்தது. “உங்களுக்கு தேவை நான்தானே? என்னை கொல்லுங்கள். அவளை உயிருடன் கொண்டுசெல்லுங்கள். ஒரு வேளை அவள் அண்ணன் அவளைக் கொல்லச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் அம்மாவும் அப்பாவும் அதைச் சொல்லவே மாட்டார்கள். அவளைக் கொன்றால் அவர்கள் ஒருவேளை கோபம் அடைவார்கள். அது உங்களுக்கே தீமையாக முடியலாம்… அவளைக் கொண்டு சென்று அவள் பெற்றோரிடம் ஒப்படையுங்கள். அவர்கள் முடிவுசெய்யட்டும்… அவர்கள் கொல்லச்சொன்னால் கொன்றுவிடுங்கள்…”
என்னை கவனிக்காதவனாக “அவளை இறக்கு” என்று குண்டன் ஆணையிட்டான்.
சென்னையின் புறநகர் பகுதி அது என்று தெரிந்தது. அருகே மிகப்பெரிய ஏரி ஒன்று மென்மையான ஒளியுடன் விரிந்து கிடந்தது. அப்பால் ஒரு நெடுஞ்சாலையில் ஒளியுடன் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றுகொண்டே இருந்தன. அவற்றின் ஓசை தொடர்ச்சியான முழக்கமாகக் கேட்டது. மிகத் தொலைவில் நகரத்தின் பல்லாயிரம் விளக்குகள் கனல் புள்ளிகள் போல செறிந்து அதிர்ந்துகொண்டே இருந்தன.
அவர்கள் இருவர் ராதிகாவை காரிலிருந்து இழுத்து கீழிறக்கினர். அவள் கால்கள் தள்ளாடி தரையில் அமர்ந்தாள். அவள் கூந்தல் அவிழ்ந்து முதுகில் விழுந்தது. அவள் முகம் இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை.
“அவள் ஒன்றும் செய்யவில்லை… நாங்கள் இங்கே வந்து இப்படி தங்கியது யாருக்குமே தெரியாது. என்னுடன் அவள் வந்ததற்கே சான்று இல்லை. அவளை அவள் சாதியிலேயே யாருக்காவது திருமணம் செய்துவைக்க முடியும்” என்றேன்.
“பேசாதே” என்று என்னிடம் சொல்லிவிட்டு அவர்களிடம் “அவளை விழிக்கச் செய்யுங்கள்” என்றான்.
ஒருவன் ஒரு பிளாஸ்டிக் குப்பியில் இருந்து நீரை கையில் ஊற்றி அவள் முகத்தின்மேல் அறைந்தான். அவள் அதிர்ந்து முனகியதும் மீண்டும் நீரை வீசினான். அவள் சட்டென்று எழுந்துகொண்டு “ஆ” என்றாள். என்னை உடனே பார்த்துவிட்டாள். “ராம்!”
குண்டன் அவளிடம் “நான் உன் அண்ணனின் ஆள். ஏற்கனவே இவனை கிழித்தவன் நான்தான். அப்போது ஓர் எச்சரிக்கை விட்டேன், இவன் கேட்கவில்லை. இவன் கணக்கு முடிந்தது. இவனைக் கொல்லப் போகிறோம். உன்னை கொல்லாமல் விட முடியும். ஆனால் நீ நினைக்கவேண்டும்” என்றான்.
ராதிகா சுற்றுமுற்றும் பார்க்க குண்டன் “இங்கே யாருமில்லை… கத்தினாலும் அந்த வண்டிகளின் ஓசையில் ஒன்றும் கேட்காது” என்றான். “நீ முடிவெடுக்கலாம்”
அவள் நிதானமடைந்தாள். “என்ன?”
“நீ இவனை விட்டுவிட வேண்டும். எங்களுடன் வந்து உன் சாதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இவனை மறந்துவிடவேண்டும்… அதை இப்போதே இவன் முன் நீ ஒப்புக்கொண்டால் உயிருடன் எங்களுடன் பாட்னாவுக்கு வரலாம்.”
“ராதிகா, நீ இவர்களுடன் போ. நீ உயிருடன் இரு… என்னைப்பற்றி யோசிக்காதே” என்று நான் சொன்னேன்.
“வாயை மூடு முட்டாள்” என்று ராதிகா என்னை நோக்கி சீற்றத்துடன், மூச்சொலிபோல சீறும் குரலில் சொன்னாள். “நான் உயிருடன் இருந்தால் இந்த நாய்களை சும்மா விடமாட்டேன். இவர்களை தூக்குமேடைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன். அந்த அயோக்கியனையும் அவனுடைய பெற்றோரையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்… அவனுக்கு என்னை நன்றாகவே தெரியும்… என்னை உயிருடன் விடவே மாட்டான்.”
“ராதிகா நீயே ஏதோ எண்ணிக் கொள்ளாதே, என்னை மறந்துவிடு” நான் அவனிடம் “அவள் ஏதோ சொல்கிறாள்… ஆனால் அவள் என்னை மறந்துவிடுவாள்… நானே சொல்கிறேன்” என்றேன்.
“நான் உன்னை கைவிட்டுவிட்டேன் என்ற வார்த்தையை கேட்டுக்கொண்டு நீ சாகவேண்டும், அதுதான் இந்தப் பதர்கள் எதிர்பார்ப்பது. அது ஒருபோதும் நடக்காது… ராம் இந்த பன்றிகளிடம் கெஞ்சாதே… நாம் கௌரவமாக சாவோம்… டேய், கொல்வதென்றால் எங்களை சேர்த்தே கொல்… கொன்றுவிட்டு கிளம்பு.”
“கொல்லத்தான் போகிறோம்” என்று அந்தக் குண்டன் சொன்னான். “ஆனால் நீ இன்னொரு முறை யோசிக்கலாம். அப்படி கடைசிக்கணத்தில் உயிருக்கு ஆசைப்பட்டு கெஞ்சியவர்கள் நிறையப்பேரை நான் பார்த்திருக்கிறேன்.”
“சீ, நாயே… உன் முன்னால் நான் கெஞ்சுவேன் என்று நினைத்தாயா? இதோ பார், நான் இவர் மனைவி. இவருடைய குழந்தை என் வயிற்றில் இருக்கிறது. நான் இவர் மனைவியாகத்தான் சாவேன்.”
“த்தூ…” என்று துப்பியபடி அவன் முன்னால் பாய்ந்தான். அவன் கையில் என்ன இருந்தது என்று நான் இருட்டில் சரியாகப் பார்க்கவில்லை. அவளை அவன் என்ன செய்தான் என்றும் பார்க்கவில்லை. அவள் அப்படியே பின்னால் சரிந்து குழைந்து விழுந்தாள். அவள் முதுகு தரையில் அறைபடும் ஓசை கேட்டது. அவளுடைய அறுபட்ட தொண்டைவழியாக ரத்தமும் மூச்சும் வெளியேறும் குழறல்போன, கொப்புளம் போன்ற ஓசை.
நான் “ராதிகா!” என்று அலறியபடி முன்னால் பாய்ந்தேன்.
அவன் “த்தூ” என்று மீண்டும் துப்பியபடி தன் கையில் இருந்த நீளமான கத்தியால் என்னை வெட்டினான். நான் ராதிகாவை நோக்கிக் குனிந்ததனால் அந்த வெட்டு என் தோளிலும் கழுத்திலுமாக விழுந்து அப்பால் சென்றது. வெட்டுபட்ட இடத்தை அழுத்தியபடி நான் முழங்காலில் மடிய அவன் இன்னொரு முறை வெட்டினான். ஆனால் அவன் கைதான் என் தோளில் விசையுடன் பட்டது. நான் தெறித்தவன் போல உருண்டு சென்று அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆழமான ஓடைக்குள் விழுந்தேன்.
கெட்டியான சாக்கடை பெருகிச்சென்றுகொண்டிருந்த ஓடை. “பிடி, பிடி அவனை” என்று அவன் கூவ இருவர் சாக்கடைக்குள் டார்ச் லைட்டை அடித்தனர். ஆனால் நீரின் விசை அதிகமாக இருந்தது. அது என்னை இழுத்துச்சென்றது. சிமிண்ட் குழாய்க்குள் என்னை உந்தி செருகியது.
நான் உள்ளே இருந்த ஒரு கல்லில் முட்டி குழாயின் நடுவே சிக்கி நின்றுவிட்டேன். என் மேல் சாக்கடைநீர் பெருகி கொப்பளித்து கடந்து சென்றது. வெளியே பேச்சுக்குரல்களைக் கேட்டேன். அவர்கள் உள்ளே டார்ச் அடித்துப்பார்த்தனர். சற்றுநேரத்தில் மறுபக்கமிருந்தும் டார்ச் அடித்துப் பார்த்தனர். இருபக்கமிருந்தும் ஒளி என்னை அணுகவில்லை. அந்த மடைக்குள் என்னென்னவோ சிக்கியிருந்தன. எனக்கு சற்று அப்பால் ஒரு பழைய டயர் நெடுக்குவாட்டில் இருந்தது. அதன்மேல் டார்ச் ஒளி அசைந்துகொண்டிருந்தது.
இருண்டு நீண்ட குகைக்குள் கடும் நாற்றத்துடன் கரிய நீர் பெருகிச்சென்றுகொண்டிருந்த ஒலியைக் கேட்டுக்கொண்டு நான் அசைவற்று அமர்ந்திருந்தேன். என் தோளிலும் கழுத்திலும் எரிச்சல் இருந்தது. அங்கே ஆழ்ந்த வெட்டுக்காயம் இருக்கலாம், குருதியிழப்பால் நான் சாகலாம்.
நான் சாகவே விரும்பினேன். அந்த சாக்கடை என் ரத்தத்தில் கலக்கவேண்டும். என் ரத்தமே சாக்கடையாக வேண்டும். நான் செத்து இங்கேயே மட்கிவிடவேண்டும். என் எலும்புக்கூடுகூட கண்டடையப்படக்கூடாது. நான் இருந்தமைக்குத் தடையமே இருக்கக் கூடாது. இருக்கிறது, அங்கே வெளியே ராதிகாவின் உடல் கிடக்கிறது. அவள் வயிற்றுக்குள் வளரத் தொடங்கிய கரு இருக்கிறது. அதுவும் எஞ்சப்போவதில்லை.
அவர்கள் விலகிச்சென்றிருக்கவேண்டும். வெளியே கார்கள் செல்லும் ஓசை ஏதும் உள்ளே கேட்கவில்லை. நீரின் கலங்கலும் கொப்பளிப்புமான ஓசை மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தது.
சட்டென்று எனக்கு மிக இதமான ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் சிறு குழந்தையாக இருக்கும்போது போர்வையை அப்படி தலைக்குமேல் போட்டுக்கொண்டு மணிக்கணக்காக ஒளிந்திருப்பேன். அதன்பின் சிறு பதுங்கிடங்களில் எலிபோல சுருண்டு அசையாமல் இருப்பேன். அப்போது என்னிடம் எப்போதுமிருக்கும் பதற்றம் முழுமையாக அகன்று அதன் நிம்மதி என்னில் நிறையும். என் உடலில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த ரத்தம் என்னை எடையற்றவனாக ஆக்கியது. என் உடல் சுருங்கிச் சுருங்கி ஒரு சிறு சுண்டெலியளவுக்கு ஆகிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
(மேலும்)
மேடையில் நிகழ்தல்- திரு
நான் மிகவும் நிறைவாக உணர்ந்த நாட்கள், முதல் 5 நிமிட உரைக்கு தயார் செய்ய ஆரம்பித்தவுடன் இருந்த தயக்கம், ஒரு சிந்தனையை (ஐடியா) அது என்னுடையதாக இல்லாவிட்டாலும், நீங்கள் கொடுத்து வடிவத்தில் தயாரிக்க முடிந்தது. எனக்குள்ளேயே பேசி பார்த்தேன், பிறகு அலைபேசியில் பதிவு செய்து நேரம், குரல் வாக்கிய அமைப்பு எல்லாவற்றையும் பயிற்சி செய்து பார்த்தேன்.
மேடையில் நிகழ்தல்- திருContinuously, you are talking about utilizing our lives in a creative way and making real happiness out of it. But I am skeptical of the results. Your great short speeches are generally not listened to by many—some really excellent videos have just below 3000 hits.
Who is listening?குரு நித்யா இலக்கிய அரங்கம்
1993ல் குரு வாழும் காலத்திலேயே குரு நித்யா இலக்கிய அரங்கம் தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப்பின் அப்பெயர் போடப்பட்டது. எல்லா ஆண்டும் மே மாதம் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தப்பட்டது. ஏற்காட்டில் ஓர் ஆண்டு நடத்தப்பட்டது. சென்ற இரு ஆண்டுகள் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு ஊட்டியில் நடத்த திட்டமிட்டோம். ஊட்டியில் மே மாதம் பெருந்திரளும் பயணக்கட்டுப்பாடும் இருந்தமையால் ஜூனில் தேதி முடிவுசெய்தோம். ஆனால் அங்கே நிகழ்த்த முடியாத சூழல். ஆகவே முழுமையறிவு நிகழும் இடத்திலேயே நடத்த எண்ணுகிறோம்
வரும் ஜூன் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோடு மலைத்தங்குமிடத்தில் நிகழும்.
பங்கேற்பாளர் பதிவுக்கு
(இவ்வரங்கில் செலவுகளில் பங்கேற்கும் பொருளியல் சூழல் இல்லாதவர்கள் அதைக்குறிப்பிட்டு எழுதினால் கட்டணம் இன்றி பங்கேற்கலாம். கூடுதலாகக் கட்ட விரும்புபவர்கள் கட்டலாம். ஆனால் எந்த தகவலும் தனிப்பட்ட முறையிலானதே. எதுவும் வெளிப்படுத்தப்படாது.)
May 7, 2025
கதைகளை ‘சரியாக’ வாசித்தல்.
நான் உங்களின் புது வாசகன். உங்களின் எழுத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. அதன் பொருட்டு உங்களிடமே அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள விழைகிறேன். நீங்கள் எழுதிய கிடா சிறுகதையைப் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த கதாபாத்திரங்கள்.
சிதம்பரம் ஒரு உணர்ச்சிவயப்படும் கதாபாத்திரம். அவனுக்கு மனிதர்களின் மனதைப் படிக்கும் பக்குவம் இல்லை. அதே நேரத்தில் அண்ணன் மற்றவர்களால் மதிக்கப்படுகின்ற குணம் பெற்றவனாய் இருக்கிறான். மனங்களை எளிதாய் புரிந்து கொள்கிறான்.
அண்ணனை கிடா முட்டாது. அதன் மனம் அவனுக்கு புரிகிறது. இதில் கிடாவும் அண்ணனும் ஒத்த குணங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதன் கம்பீரம் அங்கங்கே சொல்லப்படுகின்றது. அண்ணனின் குணங்களும் வெகுவாகப் பேசப்படுகின்றது.
சிதம்பரத்துக்கு ஜானகி மேல் இருப்பது ஒரு ஈர்ப்பு மட்டுமே. ஆனால் அண்ணன் ஜானகியை உண்மையாக விரும்புகின்றான். கடைசியில், அண்ணன் ஜானகியின் மனதை அவள் சொல்லாமலே அறிந்து தம்பிக்கு கட்டி வைக்கச் சொல்கிறான்.
“நமக்கு புடிச்சவங்களுக்கு நம்மள புடிச்சிருக்கானு பாக்கணுமில்ல” என்கிற வசனத்தில் நிறைய அர்த்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அண்ணன் கிடாயையும் புரிந்து கொண்டான், ஜானகியையும் புரிந்து கொண்டான். கடைசியில் கிடா வெட்டப்படுகிறது. அதே போல் அண்ணனின் காதலும் காணாமல் போகிறது. இதில் ஏதேனும் உருவகம் உள்ளதா?
தங்களின் பதிலும் விளக்கமும் என் இலக்கிய வாசலைத் திறக்கும் என்று நம்புகிறேன்.
அன்புள்ள
மணிகண்டன்
அன்புள்ள மணிகண்டன்,
வெண்கடல் என்னும் தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று இக்கதை. ரத்தசாட்சி என்னும் திரைப்படமாக வெளிவந்த கைதி என்னும் கதையும் இதில்தான் உள்ளது. அந்த தொகுதியை நினைத்துக்கொண்டேன்.
உங்கள் கேள்வி, பொதுவாக வாசிக்க ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுவதுதான். அவர்கள் வாசிக்க தொடங்கும்போது உருவாகும் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, கதையை தொடக்கத்தில் ‘அப்படியே’ வாசிப்பார்கள். அதில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதை. அதாவது கதையில் வெளிப்படையாக உள்ளதே அதன் சாரம் என புரிந்துகொள்வார்கள். நம் கல்விமுறையும் அப்படியே கற்பிக்கிறது.
இந்நிலையில் கதையைப் பற்றிப் பேசும்போது கதையைச் சுருக்கிச் சொல்வார்கள். கதையின் பேசுபொருள் என்று கருத்து ஒன்றை சொல்வார்கள். அதாவது திரண்ட கருத்து.
மெல்ல நிறைய கதைகளை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். எளிமையான ஒரு கருத்துக்காக ஓர் இலக்கியவாதி எழுதியிருக்க மாட்டார் என்னும் புரிதலை அடைகிறார்கள். இலக்கிய மதிப்புரைகள், உரையாடல்களைக் கவனிக்கிறார்கள். இலக்கிய விமர்சனம் அறிமுகமாகிறது. இந்நிலையில் சொல்லப்பட்டது அல்ல சொல்லப்படாமல் விடப்பட்டதே கதை என்னும் புரிதலை அடைகிறார்கள்.
உண்மையும் அதுதான். இலக்கியம் என்பது மறைபிரதி (subtext) வழியாகத் தொடர்புறுத்துவது. சொல்லப்படாததே முக்கியமானது, அதுவே கதை உணர்த்த விரும்புவது. வாசகன் கதையை தன் கற்பனையில் விரித்துக்கொள்ளும்போதே அக்கதை உண்மையில் நிகழ ஆரம்பிக்கிறது. அக்கற்பனையை தூண்டும் ஒரு பகுதியே எழுதப்பட்டது. எழுதப்படாதது என்பது வாசகனுக்குள் அவனால் விரித்தெடுக்கப்படுவது.
ஆனால் இந்த இரண்டாவது நிலையில் வாசகன் இன்னொரு குழப்பத்தை அடைகிறான். ஒரு கதையை தான் சரியாகத்தான் வாசிக்கிறோமா என குழம்ப ஆரம்பிக்கிறான். தான் வாசிக்காத ஒரு கோணத்தை இன்னொருவர் சொல்லிவிட்டால் அது தன் வாசிப்பின் போதாமை என்றோ, அறிவுக்குறைபாடு என்றோ எண்ண ஆரம்பிக்கிறான். தாழ்வுணர்ச்சி கொள்கிறான்.
விளைவாக அவனிடம் இரண்டு பிரச்சினைகள் உருவாகின்றன. ஒன்று, மிகைவாசிப்பு. இரண்டு, மூளைசார்ந்த வாசிப்பு.
கதையை மிக அதிகமாகக் கற்பனை செய்ய ஆரம்பிப்பதே மிகைவாசிப்பு. வாசகனுக்குக் கற்பனையுரிமை உண்டு. ஆனால் கதை அளிக்கும் வாய்ப்புக்குள்தான் அது நிகழவேண்டும். ஒரு கதை நமக்குள் உருவாக்கும் நினைவுகளும் சிந்தனைகளும் எல்லாம் அக்கதையின் மீதான வாசிப்பு ஆகாது. எதைப்பார்த்தாலும் நம் சிந்தனைகளும் கற்பனைகளும் எந்த எல்லைக்கும் செல்ல வாய்ப்புண்டு. அந்தக்கதையின் நிகழ்வுகள், படிமங்கள் ஆகியவை அளிக்கும் கற்பனைக்கான வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வதே நல்ல வாசிப்பு. ஒருவர் எதை வாசித்தாலும் அந்தக்கதையில் அதற்கான வாய்ப்பு உண்டா என்பதையே கவனிக்கவேண்டும்.
கதை என்பது கற்பனையை தூண்டவேண்டும். சொற்கள் வழியாக ஒரு வாழ்க்கை விரிக்கப்படுகிறது. அதை கற்பனை வழியாக நிகழ்த்திக் கொண்டு ஒரு மெய்யான வாழ்க்கையை நாம் வாழவேண்டும். அதற்குப் பதிலாக அக்கதையை ஓர் ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டு பகுதிபகுதியாக கழற்றி, பகுப்பாய்வு செய்வது வாசிப்பாகாது. அப்படிப்பட்ட அறிவுசார்ந்த வாசிப்பு பெரும்பாலும் கதையின் உயிர்த்துடிப்பை நழுவவிட்டுவிடும். மிகப்பெரும்பாலும் செயற்கையான அர்த்தங்களை எடுப்பதில்கொண்டு சென்று விடும்.
எந்தக் கதையும் ஆய்வுக்குரியவை அல்ல. கல்வியாளர்கள் ஆய்வு செய்வதுண்டு – அவர்களுக்கு இலக்கியம் முக்கியம் அல்ல, வாழ்க்கையும் முக்கியம் அல்ல. அவர்கள் கதைகளை மொழியியல் முதல் சமூகவியல் வரை பல்வேறு அறிவுத்துறைகளுக்கான கச்சாப்பொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசியலாளர்களும் கதைகளை வெறுமே அரசியல் நோக்கில், பகுப்பாய்வு செய்து வாசிக்கின்றனர். தங்களுக்குச் சாதகமான அரசியல் உள்ளதா இல்லையா என்று மட்டுமே பார்க்கின்றனர். அவர்கள் இலக்கியவாசிப்பாளர்களே அல்ல.
சரி எப்படி வாசிப்பது?
முதலில், நீங்கள் வாசிப்பது சரியான வாசிப்பா என ஐயப்படாதீர்கள். சரியான வாசிப்பை நிகழ்த்த முயலாதீர்கள். நீங்கள் வாசிப்பது உங்கள் வாசிப்பு. அதை இன்னொருவர் வாசிக்கமுடியாது. நீங்கள் உங்கள் வாழ்வனுபவம், உங்கள் உணர்வுநிலைகளைக் கொண்டு வாசிக்கிறீர்கள். அப்படி ஒவ்வொருவரும் வாசிக்கலாம். வாசிப்பு என்பது ஓர் அந்தரங்கச் செயல்பாடு.செயற்கையாக, அறிவார்ந்து படைப்பை பகுப்பாய்வு செய்யாதீர்கள். படைப்பைப் பற்றிய இலக்கியக்கொள்கைகள், அரசியல் கொள்கைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாதீர்கள். அந்தப்படைப்பாளியே அதையெல்லாம் சொல்லியிருந்தாலும்கூட.படைப்பை எழுதப்பட்ட ஒரு மொழிவடிவம் என நினைக்காதீர்கள். அதை ஒருவர் உருவாக்கியிருக்கிறார் என நினைக்கையில்தான் ஏன் அப்படி உருவாக்கினார் என்று யோசிக்கிறீர்கள். அது உண்மையிலேயே நிகழ்ந்தது என எண்ணுங்கள். ஒரு வாழ்க்கைத்துண்டு என எண்ணுங்கள். நீங்களே நேரில் ஒரு வாழ்க்கையை பார்க்கிறீர்கள். அது எவரும் திட்டமிட்டு உருவாக்கியது அல்ல. தானாக நிகழ்ந்தது. அப்படியென்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? அதற்கு எப்படி பொருள்கொள்வீர்கள்? உங்கள் வாழ்க்கையனுபவம், உங்களுடைய சொந்த அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி பொருள்கொள்வீர்கள் அல்லவா? அப்படியே இலக்கியப்படைப்பையும் பொருள்கொள்ள முயலுங்கள்.நீங்கள் வாசித்ததும் பொருள்கொண்டதும் குறைபட்டதாக இருக்கலாம். அக்கதை உங்களுக்குள் வளரட்டுமே. கொஞ்சநாள் கழித்து மேலும் பிடிகிடைக்கலாமே. எவ்வளவோ வாழ்க்கையனுபவங்கள் பல ஆண்டு கழித்து நமக்கு புரிகின்றன அல்லவா? உடனே முழுக்கப்புரிந்தாக வேண்டும் என பிடிவாதம் தேவையில்லை.சரி, இப்போது கிடா கதைக்கு வருகிறேன். இப்படி வைத்துக் கொள்ளுங்கள். அது நான் எழுதிய ஒரு கதை அல்ல. அதில் நானே இல்லை. அது உண்மையில் நிகழ்ந்தது. நீங்கள் அருகே நின்று அதைப் பார்க்கிறீர்கள். அப்படி ஓர் அண்ணன் தம்பி உறவை, உரையாடலை நீங்கள் உண்மையில் கவனிக்கிறீர்கள். உரையாடலை கேட்கிறீர்கள். அந்நிகழ்வை எப்படி புரிந்துகொள்வீர்கள்? அதில் உங்களுக்கு என்னென்ன கேள்விகள் எழும். என்னென்ன உணர்வுகள் தோன்றும்? அதையே இங்கும் அடையுங்கள். அவ்வளவுதான் வாசிப்பு.
உங்களுக்கு என்னென்ன தோன்றினாலும் அதுவே உங்களுடைய வாசிப்பு. அதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் தன் வாசிப்பைச் சொல்வார். அதைக்கேட்டால் உங்களுடைய வாசிப்பு இன்னொரு கோணத்தை அடையும். நிஜவாழ்க்கையையும் நாம் அப்படி பேசிப்பேசித்தானே புரிந்துகொள்கிறோம். இலக்கியம் என்பது நாம் வாசித்து அடையும் வாழ்க்கை, வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படியே இலக்கியத்தையும் புரிந்துகொள்வோம்
ஜெ
காவியம் – 17
யட்சி,பூதம்- பைதான் -பொயு 1, சாதவாஹனர்ஒவ்வொரு நாளும் ஒரு முழுவாழ்வு நிகழ்ந்து முடிவதென்பது எவருக்கும் அரிதாக மட்டுமே அமைவது. அதை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வண்ணம் நிகழும்போது அப்போதே ‘இதோ நான் வாழ்கிறேன்’ என்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கும். மேலான வாழ்வு வாழ்பவர்களுக்கு அப்போது அது மேலானது என்று தெரிந்திருக்கிறது. கீழான வாழ்வு வாழ்பவர்களில் அது கீழானது என அறியாதவர் எவருமில்லை. மானுட உள்ளம் மேன்மையையும் கீழ்மையையும் தானே அறியும் ஆற்றல்கொண்டது என்று ஶ்ரீகர் மிஸ்ரா சொல்வதுண்டு. அது உண்மை என நான் அறிந்த நாட்கள் அவை.
ஆனால் அத்தகைய வாழ்வுத்தருணங்களில் அது அவ்வாறே என்றென்றைக்கும் நீடிக்கும் என்று ஒரு பக்கமும், எங்கோ ஒரு புள்ளியில் அது மறைந்துவிடும் என்ற பதற்றம் மறுபக்கமும் நம்மை ஆட்கொள்ளும். தலைநிற்காத கைக்குழந்தையை கையில் எடுப்பதுபோல பயமும் பரவசமும் கலந்த நிலை. “என்ன கவலை? உன்னால் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாதா?” என்று ராதிகா கேட்பாள். “நான் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன்” என்பேன். “இல்லை, எப்போதும் ஒரு பதற்றமும் உன்னிடம் இருந்துகொண்டிருக்கிறது. குருவி போல நிலைகொள்ளாமல் இருந்துகொண்டே இருக்கிறாய்” என்றாள். “குருவிகளைப்பிடிக்க வானில் எத்தனை வேட்டைப்பறவைகள் உள்ளன என்று உனக்குத் தெரியாது. தலைமுறை தலைமுறையாக வேட்டையாடப்படும் உயிர்கள் எப்போதும் எச்சரிக்கை கொண்டிருக்கும்.”
ஆனால் நான் மகிழ்ச்சியில் திளைத்தேன் என்றே சொல்லவேண்டும். இனிமை என்பது புதியவை நிகழ்வதல்ல என்று உணர்வதற்கு மெய்யான இனிமை நம் வாழ்வில் வந்துசேர வேண்டியிருக்கிறது. புதியவற்றை தேடித்தேடித் முன்னால் தாவும் இளமை அதில் ஓர் இனிமையை அறிகிறது என்பது உண்மை. ஆனால் ஒவ்வொன்றையும் மாறாத ஒரே சுழற்சியில் அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் துளித்துளியென அதை வேறுபடுத்திக் கொண்டு, நிகழும் வாழ்க்கை இன்னும் இனியது. ஒவ்வொரு நாளும் புதியவை நிகழும் வாழ்வில் அப்புதுமையே ஒரே இன்பம். புதுமையினாலேயே அதன் வெளிவட்டம் மட்டுமே நம்மை அடைகின்றது. அதுவே நம்மை கிளர்ச்சிகொள்ளச் செய்து மேலும் அறியாமல் ஆக்கிவிடுகிறது. மாறாச்சுழற்சியில் அவ்வாறு புதியவை ஒன்றும் நிகழாததனாலேயே நுட்பங்களை மட்டுமே அறிந்து வாழத்தொடங்குகிறோம். சுற்றுலா சென்ற ஊர் அழகானது, வாழ்ந்து பழகிய ஊரின் அழகு நுட்பமானது.
செவ்வியல் என்பதே மீள மீள நிகழ்வதுதான். துளித்துளியாக கணம் கணமாக வேறுபடுவதுதான். திரும்பத் திரும்ப ஒரே வண்ணத்தில், ஒரே வடிவத்தில் மலர்களைப் பூத்துக் கொட்டும் ஒரு மலர்ச்செடி அது. மலர்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடு வழியாக ஒரு முடிவிலா ஆடலை அது ஆடிக்கொண்டிருக்கிறது. ஒரே ராகத்தை நுணுக்கமான ஸ்வர வேறுபாடுகளினூடாக விரித்து விரித்துச் செல்லும் பாடகன் போல. இங்கே தென்னிந்திய ஆலயம் ஒன்றின் ஒரு தூண் ஒரு மலர்ச்செடி. ஒன்றேதான், ஆனால் ஒவ்வொரு கணுவும் வேறுபட்டதும்கூட.
சம்ஸ்கிருதச் செவ்வியல் தன் நுணுக்கங்களை அடைவது அது ஒன்றையே திரும்பத் திரும்ப சொல்லும்போதுதான். காளிதாசனின் சகுந்தலை தன் காலில் தைத்த தர்ப்பை முள்ளை எடுக்கும் பாவனையில் திரும்பி துஷ்யந்தனை பார்க்கும் காட்சியை விளக்கிய அபிஜித் வர்மா புன்னகையுடன் சம்ஸ்கிருத காவியங்களில் கதாநாயகியின் காலில் திரும்பத் திரும்ப அந்த தர்ப்பை முள் குத்துவதை பாதி விளையாட்டாகவும் பாதி தீவிரமாகவும் சொன்னதை நினைவு கூர்கிறேன். அந்த முள் அவள் கால்களுக்காக காட்டில் காத்திருக்கிறது. ”நெஞ்சில் மலரம்பு தைக்கும்போது காலில் அம்மலரின் முள் தைப்பது இயல்புதானே” என்று அவர் சொன்னார். வகுப்பு சிரித்தது. தைத்த ஒவ்வொரு முள்ளும் நுணுக்கமாக வேறுபடுகிறது என்று நான் அப்போது எண்ணிக்கொண்டேன். சம்ஸ்கிருதக் காவிய மாணவர்கள் பெரும்பாலும் உணரும் சலிப்பு எனக்கு உருவாகாமல் போனதற்கு காரணம் அன்று நான் அறிந்த அந்த உணர்வு தான்.
ஒரு பெருங்காவியத்தின் போக்கு என்பதே கங்கை காசியிலிருந்து அலகாபாத் செல்லும் ஒழுக்கு போன்றது. அது அசைவதென்றே தோன்றாது. மாபெரும் ஏரியென்று எண்ணினால் அவ்வாறே தென்படவும் கூடும். இறங்கி நீந்துபவன் மதயானையின் துதிக்கை போல ஆற்றலுடன் நீர் தன்னை இழுப்பதை உணரலாம். மூழ்குவான் என்றால் கப்பல்களைப் புரட்டிச்செல்லும் ஆற்றல் அதன் அடித்தட்டில் திரண்டிருப்பதை அவன் உணர்வான். ஆனால் மெல்லிய மணல் போன்ற கரையில் கன்றை நக்கும் தாய்ப்பசுவின் நாக்கு போன்ற மென்மையுடன் கங்கை சிற்றலை கொண்டிருக்கிறது.
செவ்வியல் அமைதி கூடிய நாட்கள் சென்னையில் எங்களுக்கு அமைந்தன. காமமும் காதலும் கொந்தளித்த நான்கைந்து மாதங்களுக்குப்பின் ஓர் அன்றாடச் செயலொழுக்கு தானாகவே திரண்டு உருவாகியது. நான் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து உடைமாற்றிக்கொண்டு, என் வீடிருந்த சாலையிலேயே மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று, சிங்காரவேலன் என்ற பெயர் கொண்ட டீக்கடைக்காரரின் டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு திரும்பிவருவேன். அதுதான் நாளின் தொடக்கம். இனிமையான தனிமைநடை. பறவைகளின் ஒலி. இளங்குளிர்.
சிங்காரவேலன் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் செல்வதற்குள்ளாகவே என் சுவைக்கேற்ற டீ ஒன்றைத் தயாரிக்கத் தொடங்குவார். இங்கே தென்னிந்தியாவில் டீயின் அளவு இருமடங்கு. புதிய பாலில் புதிய டீத்தூளை விட்டு செய்யப்படும் இந்த டீ வடக்கத்திய நாக்குகளுக்கு சற்று சப்பென்று தோன்றலாம். வடக்கே நிறைய டீத்தூள் போட்டு, அதைக் கொதிக்கக் கொதிக்கப் பிழிந்து, கஷாயம் போல் இறக்கி, சுண்டிக் குறுகிய பாலுடன் சேர்த்து மிகக்குறைவாக கொடுப்பார்கள். துளித்துளியாக நாக்கில் விட்டு, கடும் சுவையை உணர்ந்து, சப்புக்கொட்டி அதை இலகுவாக்கிக் குடிப்பது அங்குள்ள வழக்கம். இங்கே டீ சிறு மிடறுகளாக அருந்தப்படுகிறது. உறிஞ்சும் ஒலியே கூட கேட்கும்.
முதலில் அங்கே நான் டீ குடிக்கச் சென்றபோது எனக்கு அது ஏமாற்றம் அளித்தது. ஆகவே ஸ்ட்ராங் டீ என்று அவர்களின் மொழியில் சொல்லிப்பார்த்தேன். இன்னும் ஸ்ட்ராங் இன்னும் ஸ்ட்ராங் என்று சொன்னேன். ‘உங்களுக்கு ஆம்ஸ்ட்ராங் டீ போட்டிருக்கிறேன்’ என்று சிங்காரவேலன் சிரித்தபடியே சொல்வதுண்டு. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சென்னையின் டீ தான் உண்மையிலேயே சுவையானதென்று தோன்றத் தொடங்கியது. வடக்கத்தி டீ நாம் குடித்து முடித்த பிறகு நாவில் பசையாக ஒட்டி ஒரு சிறு ஊறல் சுவையுடன் நெடுநேரம் எஞ்சியிருக்கிறது. சென்னை டீயில் பாலின் மணம் வாயில் மிஞ்சுகிறது.
நான் சென்னையின் டீக்கு பழகியது போலவே சென்னைக்கும் பழகிக்கொண்டிருந்தேன். சென்னையில் குளிர்காலம் என்பதே இல்லை என்பது வடக்கத்தியர் ஒவ்வொருவருக்கும் திகைப்பூட்டுவதுதான். டிசம்பரிலும் பிப்ரவரியிலும் கூட விடியற்காலையிலேயே அங்கு புழுங்க வாய்ப்புண்டு. மராத்தாவின் பெருமழைக்கு இணையான மழை இல்லையென்றாலும் நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒரேயடியாக மழை கொட்டி நகரை மூடிவிடுவதுண்டு. மழைக்காலத்திலும் கூட இங்குள்ள ஆண்கள் குடை வைத்துக்கொள்வதில்லை. குடை பெண்களுக்குரியதாக பலருக்கும் தோன்றுகிறது. சென்னை இருசக்கர வண்டிகளின் நகரம். டிவிஎஸ்50 என்னும் சிறிய வண்டி தேனீ போல நகரெங்கும் பறந்துகொண்டே இருக்கிறது.
இங்கே பேருந்துகளில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே அமரவேண்டும். இடமிருந்தாலும் பெண்கள் அருகே அமரக்கூடாது. பெண்கள் இருக்கும் ஆட்டோவில் ஆண்களை ஏற்றிக்கொள்வதில்லை. பெண்கள் கோயிலில் கூட முந்தானையால் தலை மறைப்பதில்லை. திருமணத்தன்று மட்டுமே கைநிறைய நகைகளையும் வளையல்களையும் கழுத்து நகைகளையும் அணிந்துகொள்கிறார்கள். திருமணத்தின்போது கூட நடனமிடுவதில்லை. பழகிய பெண்கள் கூட பொது இடங்களில் நம்மிடம் பேசுவதில்லை, புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள். திருமணமான பெண்கள் நெற்றிவகிட்டில் குங்குமம் அணிந்துகொள்வதில்லை. ஆண்களுக்குப் பின்னால் குழந்தைகளுடன் பெண்கள் செல்வதில்லை. குழந்தைகளை ஆண்கள் வைத்திருக்க, பெண்கள் இணையாகவே பேசிக்கொண்டு செல்கிறார்கள்.
ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருந்தேன். ஒவ்வொன்றிலும் என் உள்ளம் பெருவிருப்புடன் சென்று படிந்தது. சென்னையிலன்றி வேறெங்கும் என்னால் வாழமுடியாது என்று உணரத் தொடங்கினேன். நான் மெல்ல மெல்ல எனக்குள்ளிருந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டிருந்தேன். என் உடல் அசைவுகளிலேயே அந்த சுதந்திரம் வெளிப்படலாயிற்று. சாலையில் செல்லும்போது நான் இருகைகளையும் வீசிச் செல்வதை ஒருநாள் உணர்ந்தபோது எத்தனை தூரம் தள்ளி வந்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன்.
இங்கே எனது சாதி எவருக்கும் தெரியாது. அதன் பெயரைச் சொன்னால் கூட இவர்களுக்கு அது வடக்கத்திய மொழியில் ஒரு சொல் மட்டும்தான். அந்த உணர்வே எனக்கு முதலில் விடுதலையை அளித்தது. என் ஊரில் எனது முகஅமைப்பையே சாதிக்கான முதல் ஐயமாகக் கொள்வார்கள். என்னைப் பார்த்ததுமே அவர்களின் புருவங்கள் நடுவே விழும் சிறு சுருக்கமும், கண்களில் தோன்றும் மெல்லிய விலக்கமும், அவ்வுள்ளம் எங்கு செல்கிறது என்று காட்டும். எந்த ஊர் என்றோ எப்பகுதி என்றோ வரும் கேள்விகள் மிக எளிதாக எனது சாதி நோக்கி சென்றுவிடும். அந்த விளையாட்டை அதிக நேரம் நீடிக்கக்கூடாதென்று தான் என் பெயரை சாதியுடனே முழுக்க சொல்லிவிட்டு உடனே விலகிவிடுவது வழக்கம்.
இரண்டு வகை மனிதர்களையே மகாராஷ்ட்ராவிலும் உத்தரப்பிரதேசத்திலும் நான் சந்தித்திருக்கிறேன். என் சாதியை அறிந்துகொண்டதுமே தங்களுடைய சாதி சார்ந்த ஒவ்வாமையை உடனே வெளிப்படுத்தி, அதையே வாழ்வின் இயல்பென்று எடுத்துக்கொண்டு, நானும் அவ்வண்ணமே கருதவேண்டும் என முடிவுசெய்துகொண்டு, தொடர்ந்து பழகுவார்கள். அவர்களின் உடலை நான் தொடுவதை அனுமதிப்பதில்லை. நான் பார்க்க எதையும் உண்பதோ குடிப்பதோ இல்லை. அவர்களின் உறவினர்களையோ நண்பர்களையோ அறிமுகம் செய்வதில்லை. அவர்களே பெரும்பாலானவர்கள்.
பிறிதொரு சாரார் படித்தவர்கள், நகர் சார்ந்தவர்கள், பெரும்பாலும் கல்லூரி வட்டங்களில் இருப்பவர்கள். தாங்கள் சாதியுணர்வுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று தொடர்ந்து வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒருகணம் கூட என் சாதியை மறப்பதில்லை. என் கையில் இருக்கும் டீக்கோப்பையை வாங்கி ஒரு மிடறு அருந்திவிட்டு திருப்பிக் கொடுக்கும் சகமாணவனோ ’பங்கிகளாகிய நீங்கள் இந்த சமூகத்தை தட்டிக்கேட்கவேண்டும், அதற்கான உரிமை மட்டும் அல்ல கடமையும் உங்களுக்கு உள்ளது’ என்று வகுப்பில் தீவிரமாகப் பேசும் பேராசிரியரோ ஒருகணம் கூட சாதி சார்ந்த உணர்விலிருந்து வெளியே செல்வதில்லை.
ஒரு பங்கிக்கு முதலில் சொல்லப்பட்டவர்களே இன்னும் கையாள எளிதானவர்கள். இரண்டாம் வகையானவர்களும் சாதி விலக்கத்துடன் கூடிய பழக்கத்தைத்தான் முன்வைக்கிறார்கள். அது தலைகீழாக்கப்பட்ட சாதிவிலக்கம். ஆனால் அதன் பொருட்டு ஒரு பங்கி அவர்களிடம் நன்றியுடனும், பணிவுடனும், ஒவ்வொரு கணமும் அதை எண்ணி நெகிழும் தன்னிரக்கத்துடனும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சென்னையில் முதல் ஆறு மாதங்களுக்குப்பின் நான் சாதி என்ற சிந்தனையே எழாமல் முழு நாட்களையும் கடத்த முடிந்தது. ஏதோ ஒரு தருணத்தில் என் சாதியைப் பற்றி எப்போது எண்ணினேன் என்று யோசிக்கையில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்ற எண்ணம் வந்தபோது திகைப்பாக இருந்தது. பின்னர் இங்கும் நான் ஒளிந்து தானே இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது. இங்கு உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அந்த எண்ணமே எனக்கு ஆபத்தானது என்று தோன்றினாலும் என்னால் அதன் கவர்ச்சியில் இருந்து விலகமுடியவில்லை.
என்னுடன் பணியாற்றும் தமிழரசன் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதை அவருடன் பழகி பல மாதங்களுக்குப்பின் அறிந்துகொண்டபோது வியப்பாக இருந்தது. அவருடன் பிறர் பழகும்போது எந்த வேறுபாடும் இருப்பது போல் தெரியவில்லை. அதன் பிறகுதான் என் சாதியை நான் வெளிப்படுத்தலாமா என்ன ஆகும் என்ற குறுகுறுப்பு வலுப்பெறத் தொடங்கியது. மிகக்கவனமாக சொல்லெடுத்து என்னுடைய துறையின் தலைவராக இருந்த வைணவப் பிராமணரிடம் ”தமிழரசன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
”அவரிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்” என்றபின் அவர் சற்றே தலைசரித்து ”அவன் கம்யூனிஸ்ட்” என்றார்.
அவர் நெற்றியில் அணிந்திருந்த லாட வடிவமான பெரிய நாமம், எதையும் எச்சரிக்கையுடன் பார்க்கும் அவருடைய பார்வை, தான் ஐயமும் அச்சமும் கொள்வதை சட்டென்று குரல் தாழ்த்தி சொல்லும் பாவனை ஆகியவற்றைக் கொண்டு அவர் சாதியைத்தான் சொல்லப்போகிறார் என்று நான் எதிர்பார்த்தேன்.
”அதனால் என்ன?” என்றேன்.
”கம்யூனிஸ்டுகள் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவார்கள்” என்றபின் மேலும் குரல் தாழ்த்தி ”இங்கே நம்முடைய முதலாளிகளுக்கு கம்யூனிசம் பிடிக்காது” என்றார்.
”அதனால் நமக்கு என்ன?” என்றேன் மீண்டும்.
”முதலாளிகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நமக்கு ஒரு பிரச்னை வரும்போது அவர்கள் நம்மை கம்யூனிஸ்டாக நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். நான் பொதுவாக கம்யூனிஸ்டுகளிடம் எச்சரிக்கையாக இருப்பேன். எனக்கு எதற்கு வம்பு?” என்றபின் அவர் இன்னொருவரின் பெயரைச்சொல்லி ”அவர் இன்னும் அபாயமானவர்” என்றார். அவர் இவருடைய அதே சாதியைச் சேர்ந்தவர்.
முதல் முறையாக தென்னிந்தியாவில் சாதி என்பது முற்றிலும் வேறொன்று என்றெனக்கு புரியத்தொடங்கியது. இங்கே மிகச்சில சாதிகளைத் தவிர சாதிக் கலப்புமணங்கள் கூட ஓரளவுக்கு ஏற்கப்படுகின்றன. சாதி எல்லைகள் முற்றிலும் அழிந்துவிட்டன என்றில்லை. சாதிக்கணக்குகள் இல்லாமலும் இல்லை. ஆனால் வட இந்தியா போல மூச்சிலும் பேச்சிலும் சாதி இல்லை. தென்னகம் சாதிக்கு அப்பால் அரசியலைத்தான் அடையாளமாகக் கொண்டிருக்கிறது. இரவு பகலாக அரசியலைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. அந்த அரசியலுக்குள் உள்ள சாதிக்கணக்குகள் தான் இங்குள்ளன. ஆயினும் ஒருவகையில் அது மிகப்பெரிய முன்நகர்வென்றும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள எடைமிக்க கால் கை சங்கிலிகள் அகற்றப்பட்ட நிலை என்றும் நான் உணரத்தொடங்கினேன்.
படிப்படியாக முன் நகர்ந்து ஒருமுறை என்னுடைய சாதியை நான் சொன்னேன். ஓர் உரையாடலில் நான் அசைவம் உண்பேனா என்று என் துறைத்தலைவர் கேட்டார்.
”எங்கள் சாதியினர் எல்லா அசைவத்தையும் உண்பார்கள்” என்றேன்.
”எல்லா அசைவமும் என்றால்…”
நான் அவரைக் கூர்ந்து பார்த்து ”எங்கள் ஊரில், நான் பிறந்த தாழ்த்தப்பட்ட சாதியில் மட்டுமே பன்றி உண்பார்கள்” என்றேன்.
அவர் மிகத்தீவிரமாக கண்ணாடியை மேலே தள்ளிவிட்டுக்கொண்டு ”பன்றியை மட்டும் எக்காரணம் கொண்டும் உண்ணக்கூடாது. அதிலுள்ள ஒரு பாக்டீரியா அழிவதே இல்லை. அது எத்தனை வெப்பநிலையிலும் தனக்கென ஓர் உறையை உருவாக்கிக் கொள்ளும். மனித உடம்பிலேயே வாழும். விந்து வழியாக தலைமுறைகளுக்குப் பரவும். அதுதான் உடம்பில் சிறிய கொழுப்புருளைகளாக மாறுகிறது…” என்று ஆரம்பித்து ஒரு முதிராத அறிவியல் விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தார்.
நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
”நீங்கள் நம்பவில்லை என்று எனக்குத் தெரியும். எந்த இறைச்சியை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், ஆனால் பன்றி சாப்பிடக்கூடாது” என்று அவர் சொன்னார்.
“மாடு?”
அவர் குழம்பிப்போய் “மாடும் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் ஒரு மாடு நீண்டகாலம் வாழ்வது. நீண்டகாலம் வாழும் உயிரைக் கொல்வது சரியல்ல”
நான் புன்னகைத்தேன். அவர் எதையும் தர்க்கபூர்வமாக ஆக்கவேண்டியிருக்கிறது. அறிவியலை துணைக்கு அழைத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது. இங்குள்ள அனைவருக்கும் அந்தக் கட்டாயம் இருக்கிறது. என் ஊரில் என்றால் உடனே புனிதநூல்களை மேற்கோள் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.சம்பிரதாயங்களையே அறுதியான உண்மைகள் என்று படித்தவர்கள்கூட பேச ஆரம்பிப்பார்கள்.
என் எதிரில் அமர்ந்திருந்த இப்ராகிம் கனி எழுந்து வந்து ”அதனால் தான் இஸ்லாமியர்கள் அதைச் சாப்பிடுவதில்லை. குரானில் இல்லாத அறிவியலே கிடையாது…” என்று ஆரம்பித்தார். அவர் பன்றி என்ற பெயரையே சொல்ல விரும்பவில்லை.
என்னுள்ளே அவர்கள் நடிக்கிறார்களா என்று வியந்துகொண்டிருந்தேன். மெய்யாகத்தான் இதைப் பேசிக்கொண்டிருக்கிறார்களா? உண்மையிலேயே அவர்களுக்குள் என்னுடைய சாதி துணுக்குறலையும் விலக்கத்தையும் உருவாக்கவில்லையா?
அதற்கடுத்த நாட்களில் ஒவ்வொரு உரையாடலிலும் அதைக் கவனித்துக்கொண்டே இருந்தேன் நான் சொன்னதை அவர்கள் கருத்தில் கொண்டார்களா மறந்தார்களா என்று தெரியவில்லை.
தமிழரசனிடம் அதைச் சொன்னேன். “நாம் அவர் வீட்டில் சென்று பெண் கேட்டால் மட்டும் தான் அவர்களுக்கு சாதி நினைவு வரும்” என்று அவர் சொல்லி சிரித்தார். “இது மகாராஷ்ட்ரா அல்ல தோழர்”
நான் சிரித்தபடி ”அது அம்பேத்கார் பிறந்த ஊர்” என்றேன்.
தமிழரசன் ”இது கம்யூனிஸத்தின் நிலமாக இருந்தது. இன்றைக்கு அந்தக் கட்சி தேய்ந்து சிறிதாகிவிட்டாலும் அடிப்படையில் தமிழர் சிந்தனையை கம்யூனிஸ்ட் கட்சிதான் தீர்மானிக்கிறது” என்றார்.
ஒவ்வொன்றும் இனிமையாகிக்கொண்டே சென்றது. ஒவ்வொன்றும் எளிதாகிக்கொண்டே இருந்தது. இத்தனை இனியவையா, இத்தனை எளியவையா என்று ஒவ்வொன்றும் திகைக்கச் செய்தது. ராதிகா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மிகவும் பழகிக் கலந்துவிட்டாள். வரலட்சுமி பூஜைக்கு சேர்ந்து கோவில்களுக்குச் சென்றாள். கீழிருக்கும் அபார்ட்மெண்டைச் சேர்ந்த பெண்மணியின் அக்காள் மகள் திருமணத்திற்கு பெண்களுடன் திருவாரூர் சென்று வந்தாள். இன்னொருவரின் தம்பி வீடு கிரகப்பிரவேசத்திற்கு போய் ஒரு நாள் தங்கியிருந்தாள்.
ஒரு பண்டிகைக்குச் சென்று வந்தபின் பட்டுப்புடவையை கழற்றி மடிப்புகளை விரித்து உதறி கொடியில் காற்றில் உலர போட்டுவிட்டு என்னிடம் ”நம்மிடம் இன்னும் கொஞ்சம் நகை பாக்கியிருக்கிறது நல்ல வேளை” என்றாள். ”இங்கே சாதாரணமாக குறைவாகத்தான் நகை போடுகிறார்கள். ஆனால் திருமணம் போன்ற விஷயங்களுக்கு நிறைய நகை போடுவதுதான் இங்கு முக்கியம்” என்றாள்.
எங்காவது அவள் பாட்னா குறித்தோ குடும்பம் குறித்தோ எண்ணுகிறாளா என்று நான் உள்ளே வியந்துகொண்டேன். அவள் ஒருமுறைகூட அவற்றை குறிப்பிடவில்லை. தமிழ்வாழ்க்கைக்குள் ஊடுருவுவது மட்டுமே அவள் நோக்கமாக இருந்தது. அதற்குச் சமையல் ஒரு நல்ல வழி. எல்லா தோழிகளிடமிருந்தும் சமையல்குறிப்புகளை வாங்கிக்கொண்டுவந்தாள். எல்லாவற்றையும் சமைத்துப் பார்த்தாள். பாட்னாவில் விமானம் ஓட்ட கனவுகண்டவள், பனாரஸில் முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த அறிவுஜீவி அவள் என்ற தடையமே இல்லை.
அவள் சரளமாகத் தமிழ் பேசத்தொடங்கிவிட்டிருந்தாள். மொழியியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருந்த நான் ஏற்கனவே தமிழின் ஆயிரம் சொற்களுக்குமேல் தெரிந்து வைத்திருந்த போதிலும் பேசுவதற்கு நாவில் தமிழ் வராமல் தவித்துக்கொண்டிருந்தேன். ஆனால் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, வீட்டில் தினத்தந்தி வாங்கி ஒவ்வொரு நாளும் அரைமணிநேரத்துக்கு மேல் செலவழித்து அதை படித்துக்கொண்டிருந்தேன். தினத்தந்திதான் எனக்கு தமிழகத்தின் கிராமங்களைப் பற்றிய சித்திரத்தை அளித்தது. கையளவு முதலை ஒன்றை காவேரியில் கண்டு பயந்து போன ஊர்க்காரர்கள் சாலைமறியல் செய்ய அதை வனத்துறை அதிகாரிகள் சென்று பிடித்த புகைப்படத்தைக் கண்டு நெடுநேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்.
வேலைக்கு போய்விட்டு வந்த பின்னர் மாலையில் நாங்கள் இருவரும் எங்கள் தெருவின் ஐந்து கிலோமீட்டர் வட்டத்திற்குள் இருந்த நான்கு சிறிய கோவில்களில் ஒன்றுக்கு சென்று வருவோம். அல்லது திரையரங்குக்குச் சென்று சினிமா. எப்போதும் தமிழ் சினிமாதான். விஜயகாந்த் போன்ற ஒருவரை தென்னகத்தில் மட்டுமே கதைநாயகனாக ஏற்கமுடியும். மாதத்திற்கு ஒருமுறை மெரீனா கடற்கரை. திரும்பும்போது திரும்பும்போது ஏதேனும் ஒரு கோயில். ஓட்டலில் உணவு. தென்னிந்திய உணவுதான், நாங்கள் இருவருமே தோசையை விரும்பினோம்.
சென்னைக்கு வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகுதான் சென்னைக்குள் உள்ள பெரிய ஆலயங்களைப் பார்த்தோம். இத்தனை பெரிய நகரத்திற்குள்ளேயே மயிலை கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்று பெரிய ஆலயங்கள் இருப்பது வியப்பூட்டியது. அதைவிட சென்னையைச் சுற்றி திருநின்றவூர், திருநீர்மலை போன்ற அத்தனை ஆலயங்கள் இருப்பது மேலும் வியப்பு. தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொன்னார்கள். தினசரி ஒரு முக்கியமான கோயில் என வைத்துப்பார்த்தால் கூட ஓரளவுக்கு கோயில்களைப் பார்த்து முடிக்க பத்தாண்டுகளாகும். என்னுடைய துறைத்தலைவர் சொன்னார். ”இங்கே கோயில்களுக்குச் செல்வதுதான் சுற்றுலா. மற்றபடி பிக்னிக் செல்வதெல்லாம் வழக்கம் கிடையாது.”
நான் தமிழகத்தின் முக்கியமான கோவில்களுக்கெல்லாம் போவதற்கு ஒரு பட்டியலைப் போட்டேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில். தஞ்சை பெரிய கோயில். அதன் நடுவே தான் ராதிகா திருவாரூர் ஆலயத்தை பார்த்துவிட்டு வந்து அந்த மாபெரும் குளத்தைப் பற்றி வியந்து வியந்து பேசிக்கொண்டிருந்தாள்.
நான் அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தபோது ”நாம் தமிழர்களாக மாறிவிட்டோம் போல” என்றேன்.
”ஆம், நான் ஒரு போதும் திரும்பிப்போகப் போவதில்லை” என்றாள்.
“எல்லாம் சரியானால்…”
“சரியாகாது. சரி ஆனாலும் திரும்பிப் போவதில்லை. வட இந்தியா என்பது ஒரு மாபெரும் பாலைவனம். தேங்கிப்போன மக்கள். அங்கே உண்மையில் பண்பாடென்பதே இல்லை. இங்கு வாழும் அனுபவத்தின் ஒரு துளி கூட இல்லை.”
“வங்காளம் கூடவா?” என்று நான் கேட்டேன்.
“வங்காளம் நடித்துக் கொள்கிறது, கம்யூனிசம் அங்கே பாவனை செய்யத்தான் கற்றுக்கொடுக்கிறது. சட்டென்று அங்கே கம்யூனிசம் இல்லாமலானால்கூட ஆச்சரியப்படமாட்டேன். கல்கத்தாவுக்கு வெளியே எதுவோ அதுதான் உண்மையான வங்காளம். அது பிகாரே தான். அதை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன்” என்றாள்.
ஒவ்வொன்றுமே அத்தனை சுலபமாக ஆகிக்கொண்டிருக்கும்போது எங்கோ எதுவோ அணுகி வருகிறதென்று பொருள். ஆனால் இன்பத்தில் திளைக்கும்போது அடியிலிருந்து வந்து தொட்டு தொட்டுச்செல்லும் அந்தக் குளிர்ந்த சந்தேகத்தை தொடர்ந்து விலக்கிக்கொண்டிருப்பதுதான் மனிதர்களின் இயல்பு.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


