Jeyamohan's Blog, page 110

May 14, 2025

சிறுகதைகளின் வசந்தம் – கடிதம்

நிறைவிலி சிறுகதை

ஜெ

புனைவுக்களியாட்டுச் சிறுகதைகள் ஒரு பெரிய மழைபோலக் கொட்டி ஓய்ந்தன. 136 கதைகள் ஓராண்டில் என்பது ஒரு திக்குமுக்காடச்செய்யும் நிகழ்வு.நம்மில் இலக்கிய வாசகர்கள்கூட வாழ்நாளில் மொத்தமாக அவ்வளவு கதைகளைத்தான் வாசித்திருப்பார்கள். நமது படைப்பாளிகள் பலரும் வாழ்க்கை முழுக்க அவ்வளவுதான் எழுதியிருப்பார்கள். அத்தனை கதைகள்.

ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம். ஒவ்வொரு சுவை. நையாண்டியும் பிரியமும் கலந்த கதைகள். திகில் கதைகள். சரித்திரக்கதைகள். உருவகக்கதைகள். பலவகையான சிறுகதை உத்திகள். உண்மையில் ஒரு சிறுகதையை வாசித்து ரசித்து அதன் ஆழத்திற்குப் போவதற்குள் அடுத்த சிறுகதை. ஆகவே பல கதைகளை வாசிக்கவே இல்லையோ என்று இப்போது படுகிறது.

புனைவுக்களியாட்டுக் கதைகள் அவ்வளவு எண்ணிக்கையில் வெளிவந்தமையால் அவற்றைப் பற்றி அறிந்திராதவர்கள் மிகக்குறைவு.  ஆனால் எல்லா கதைகளையும் வாசித்தவர்கள் சிலர்தான். அவர்களும்கூட ஒரு சில கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

136 கதைகளில் 80 கதை பிடித்திருக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். சரி என்னென்ன கதை சொல் என்று கேட்டேன். அவர் பட்டியல் போடுவதற்குள் குழம்பி தவித்தார். அவர் பட்டியலிட்ட பிறகு மிஞ்சிய கதைகளில் ஒவ்வொன்றாகக் கேட்டேன். எல்லாமே அற்புதமானவை என்றார். இதுதான் நிலைமை. எல்லா கதைகளும் நல்லவை என்று சொல்ல முடியாது. ‘சூஸி’ ஆகவேண்டும் அல்லவா? ஆகவே ஒரு நம்பரைச் சொல்கிறார்கள்.

நான் சொன்னேன். அந்தக் கதைகளில் மிகச்சாதாரணமானது என்று சொல்லப்படும் ஒரு கதையை மட்டும் ஒருவர் எழுதியிருந்தால் அவரை நல்ல சிறுகதையாசிரியர் பட்டியலில் சேர்ப்போம். பல பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களின் பெஸ்ட் அந்த தரம் வரை வரும் சிறுகதைகள் அல்ல. 

நண்பரிடம் அப்படி ஒரு சாதாரணமான கதையை சொல்லும்படிச் சொன்னேன். அவர் யோசித்து ஒவ்வொரு கதையாக பார்த்து இந்தக்கதையைச் சொன்னார். நிறைவிலி. தலைப்பு ஞாபகமில்லாததனால்தான் அவர் நல்ல கதை அல்ல என்று சொன்னார். கதையை அதன்பிறகு படித்தோம்.  ‘நீ அந்த பாத்திரத்தை நிறையவே விடக்கூடாது’ என்ற வரியில் ஒரு மாதிரி ஒரு நடுக்கம் உருவானது. மகத்தான சிறுகதை. மோட்டிவேஷனல் கதைகள் பல கண்ணில் படுகின்றன. அவற்றில் உச்சமான ஒரு கதை இது.

வசந்தகாலத்தில் நாம் பூக்களைப் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்தமாக பூக்காலத்தையே பார்க்கிறோம். சில சிறிய மலர்கள் பேரழகு கொண்டவை. அவற்றை நின்று பார்த்தாகவேண்டும்.

நன்றி ஜெ

சா. மாதவன்

குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 11:31

சிந்திப்பதன் இறுக்கம்.

ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் ஏனோ எனக்குள் ஒரு கர்வம் உறுவாகிறது. இவ்வாறு வசிப்பின் வழியே எனக்கு நானாக உருவாக்கி கொண்ட கர்வச்சுமை என்னை இறுகியவனாக மற்றியது. புதிய நட்பை உருவாக்கி கொள்ள முடியாத நிலைக்கு என்னை அழைத்து சென்றது. யார் எதை சொன்னாலும் மறுப்பது, சுற்றத்தில் உள்ள நண்பர்கள் அனைவரையும் சிறுமையாகவும், என்னை நானே பெருமையாகவும் பாவிப்பது, என்ற அடுத்த கட்டத்திற்கு என்னை இக்கர்வம் கடத்தி சென்றது. இதனால் எனது நண்பர் வட்டம் மெல்ல சுருங்கி , நற்சிந்தனை உள்ள, நன்கு வாசிக்க கூடிய, கலைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் கூட எனக்கு இல்லாத நிலை. 

சிந்திப்பதன் இறுக்கம்.

While reading the letters about those classes, I feel what I have lost. I was confused about whether these classes would be useful and so delayed applying, though my children were insisting on them.(Because many vocational classes I found on the internet are hoaxes in experience.)When will the next set of classes be?

Next classes for children
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 11:30

சிந்திப்பதன் இறுக்கம்.

ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் ஏனோ எனக்குள் ஒரு கர்வம் உறுவாகிறது. இவ்வாறு வசிப்பின் வழியே எனக்கு நானாக உருவாக்கி கொண்ட கர்வச்சுமை என்னை இறுகியவனாக மற்றியது. புதிய நட்பை உருவாக்கி கொள்ள முடியாத நிலைக்கு என்னை அழைத்து சென்றது. யார் எதை சொன்னாலும் மறுப்பது, சுற்றத்தில் உள்ள நண்பர்கள் அனைவரையும் சிறுமையாகவும், என்னை நானே பெருமையாகவும் பாவிப்பது, என்ற அடுத்த கட்டத்திற்கு என்னை இக்கர்வம் கடத்தி சென்றது. இதனால் எனது நண்பர் வட்டம் மெல்ல சுருங்கி , நற்சிந்தனை உள்ள, நன்கு வாசிக்க கூடிய, கலைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் கூட எனக்கு இல்லாத நிலை. 

சிந்திப்பதன் இறுக்கம்.

While reading the letters about those classes, I feel what I have lost. I was confused about whether these classes would be useful and so delayed applying, though my children were insisting on them.(Because many vocational classes I found on the internet are hoaxes in experience.)When will the next set of classes be?

Next classes for children
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 11:30

May 13, 2025

வெறுப்பை ஏன் பரப்புகிறார்கள்?

நவீனக் காலகட்டத்தை ஒற்றைச் சொல்லால் வரையறை செய்யவேண்டும் என்றால் ‘பொதுமக்களின் வெறுப்பு குவிந்து சக்திகளாக ஆன காலகட்டம்’ என்று சொல்லலாம். சென்ற காலங்களில் வெறுப்பைக் கட்டமைத்தவை அரசுகள், மதங்கள், கோட்பாடுகள்… இன்று சாமானிய மக்கள் அவற்றைவிட பலமடங்கு வெறுப்புகளை உருவாக்கிக் குவிக்கிறார்கள். எப்படி அவர்களை எதிர்கொள்வது?.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:36

பூனைசாட்சி

பஷீர் மாந்த்ரீகப்பூனை

 

போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம்.

அவர் சொன்னார்,  “இல்லைசார் பூனைகளைப் பற்றி ரொம்ப எழுதறாங்க”.

‘உங்களுக்கு என்ன பிரச்சினை  அதிலே?” என்றேன்.

“தொந்தரவா இருக்குல்ல?” என்றார்.

“ஏன் ?”என்றேன்.

“தெரியலை” என்றார்.

“அவங்களுக்கும் அப்டி இருக்கும்போல, அதான் எழுதறாங்க” என்றேன்

அதிகமாக தமிழில் எழுதப்பட்ட உயிர்கள் என்னென்ன? நாய்,காகம்,பூனை. நாய் பற்றி பெரும்பாலும் எதிர்மறையாகவே  எழுதப்பட்டுள்ளது. சுந்தர ராமசாமி மூன்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார். நாய் அவரிடம் ஒவ்வாமையையே உருவாக்கியிருக்கிறது.நடுநிசி நாய்கள் என்ற அவருடைய கவிதைத் தலைப்பு புகழ்பெற்றது. காகம் அவரிடம் முற்றிலும் நேர்நிலையான பதிவை உருவாக்கியது. அவர் நடத்திய இலக்கிய அமைப்பின் பெயரே காகங்கள்தான். காகங்கள் என்னும் நல்ல கதையையும் எழுதியிருக்கிறார்

பூனையைப்பற்றி அவர் எழுதியது குறைவே.ஆனால் ஒரு கவிதை புகழ்பெற்றது

வித்தியாசமான மியாவ்

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்                                  
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…

உண்மையில் இந்தக்கவிதையை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இதை ஒரு நூலின் அட்டையின் பின்பக்கம் சாதாரணமாக குறித்து வைத்திருந்தார். இது ஓர் அபாரமான கவிதை என்று அவரிடம் நான் சொன்னேன். பூனைகளைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். உடனே இது பிரசுரமாகவில்லை. ஏன் பிரசுரிக்கவில்லை என்று கேட்டேன்.

“இது சும்மா வேடிக்கைக்காக எழுதியது, ஒருவரை கேலிசெய்ய ” என்றார்.

“இல்லை இது உங்கள் நல்ல கவிதைகளில் ஒன்று” என்று நான் சொன்னேன்.

பின்னர் ராஜமார்த்தாண்டனும் சொன்னபிறகே அவருக்கு நம்பிக்கை வந்தது.

சார்த்ரின் பூனை

பொதுவாக இவ்வாறு எழுதப்படும் உயிரினங்களின் இயல்பைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். மனிதர்களுடனான அவற்றின் உறவு, அல்லது மனிதத்தன்மைதான் முக்கியமானது. அவை சில மனிதக்கூறுகளை நடிக்கின்றன. காகங்கள் நாய்கள் பூனைகள் மனிதர்களுடன் மிக அணுக்கமானவை. மனிதர்களாக உருமாறியே அவை புனைவில் நுழைகின்றன

அதற்குமேல் சொல்லவேண்டும் என்றால், அவற்றின் விரைவு, உடலின் வளையும்தன்மை, பார்வையின் இயல்புகள் என காட்சிரீதியான சில காரணங்கள். ஆர்.பி.பாஸ்கரன் பூனைகளை ஏராளமாக கோட்டோவியமாக வரைந்திருக்கிறர். அவருடைய பூனைப்படங்கள் பூனைகளின் உடலசைவை வரைந்துவிட முயல்பவை.விந்தையான கோணங்களில் அவற்றின் உடல் நெகிழ்ந்து வளைவதை அவற்றில் காணலாம்

மார்க் ட்வைனும் பூனையும்

மேலைநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பூனை ஒரு முதன்மையான செல்லப்பிராணி. ஒரு காலத்தில் பூனை சாத்தானின் வாகனம் என ஐரோப்பாவில் கருதப்பட்டது. காரணம் அதன் இருளில் மின்னும் விழிகள், தனியாக கூட்டம்கூடி வாழும் சமூக இயல்பு, சில ரகசியப் பயணங்கள். ஆகவே பூனை கொன்று ஒழிக்கப்பட்டது. அதன்விளைவாக எலிபெருகி பிளேக் வந்து ஐரோப்பா அழிந்தது. அதன்பின் அரசகட்டளைகளால் பூனைகள் வெளியில் இருந்து, குறிப்பாக தாய்லாந்திலிருந்து, கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டன. பூனைகள் பற்றிய செல்லம் தொடங்கியது

ஆகவே அங்கே எழுத்தாளர்கள் பூனைகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கிறார்கள். பூனை அங்கே அத்தனை செல்லமாக ஆவதற்கான காரணங்களில் முக்கியமானது அது வீட்டுக்குள் வளர்வது, வீட்டுக்குள்ளேயே இருக்கும் குளிர்நிலத்துத் தனிமைக்கு சரியான துணை அது என்பது. ஆகவே பூனைகளைப் பற்றி எழுதித் தள்ளியிருக்கிறார்கள். பூனைகளுடன் இருக்கும் பெரிய எழுத்தாளர்களின் படங்களை நாம் நிறையவே காணலாம்.

ஆல்டஸ் ஹக்ஸ்லியும் பூனையும்

மேலைநாட்டுப் படைப்பாளிகளின் பூனைகளைப் பற்றி ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் . பூனைகளை எழுத்தாளர்கள் வளர்ப்பதற்கு முதன்மையான காரணம் அவை எழுதும்போது தொந்தரவு செய்வதில்லை என்பதுதான் என்று படுகிறது.  “ஆனால் எழுத்தாளர்களை புஸ்ஸிக்கள் ரொம்பத்  தொந்தரவு செய்கின்றனவே ” என நாகர்கோயில் எழுத்தாளர் ஒருவர் வருத்தமாக ஒருமுறை கேட்டார்.

இயல்பான பூனைப்பற்று இந்திய எழுத்தாளர்களில் எவரிடம் என எண்ணிப்பார்க்கிறேன். வைக்கம் முகமது பஷீரின் பூனை நினைவுக்கு வருகிறது. அவருடைய சிம்மாசனமான அந்த சாய்வுநாற்காலியில் எந்நேரமும் ஏறி அமரத்துடிக்கும் அவருடைய பூனை கதைகளில் அடிக்கடி வருகிறது. பலவகையான மாந்திரிக சக்திகள் கொண்டது. மனிதர்களை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டது/ ‘மாந்திரிகப்பூனை’ என்ற அவருடைய நாவல் புகழ்பெற்றது

ஓ.வி.விஜயன் பூனைக்காதலன். அவருடைய மேஜைமேல் அமர்ந்து அவர் எழுதுவதை நோக்கிக்கொண்டிருக்கும் பூனையின் படம் ஒன்று உண்டு. ஆனால் விஜயன் பூனைகளைப் பற்றி அவ்வளவாக எழுதியதில்லை.

பூனைகள் நகுலனின் வாழ்க்கையில் முக்கியமானவை. அவருடைய முதல்நாவல்  ‘அந்த மஞ்சள்நிறப் பூனைக்குட்டி’ என்பது. அது பிரசுரமாகவில்லை. அதன் இன்னொருவடிவமே நாய்கள் என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். பூனை எப்படி நாய்களாகியது? ஆனால் நகுலனிடம் எதுவும் சாத்தியமே.  பூனைகள் கதைகளில் கவிதைகளில் ஊடாகச் செல்கின்றன. அவரைத் தேடிச்சென்ற கோணங்கிக்குத்தான் அவை மேலும் பெரிய குறியீடாகத் தோற்றம் அளித்திருக்கின்றன.

க.நா.சு பூனைகளைப்பற்றி கவிதை எழுதியிருக்கிறார். ஆனால் பூனை வளர்க்கவில்லை. அவரே பூனை போலத்தான் வாழ்ந்தார். அவ்வப்போது ஓர் ஊர் என்று. பூனைக்குட்டி என்னும் அவருடைய கவிதை நினைவுக்கு வருகிறது. அவருக்கு பூனைக்குட்டி அவருடைய ஆழத்திலிருந்து எழுந்த ஒன்றாக, விளையாட்டுத்தனம் மிக்கதாக, குழந்தையாக தோன்றியிருக்கிறது.

விளையாடும் பூனைக்குட்டி

மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் துணியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடி கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி _
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படித்திருந்து விட்டேன்.
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி.

நகுலன்

சுந்தர ராமசாமி பூனை வளர்க்கவில்லை. கடைசிக்காலத்தில்தான் பேரனுக்காக நாய் வளர்க்க முயன்றார். ஆனால் பூனைகளைப் பற்றி உற்சாகமாகப் பேசுவார்.பூனைகளின் ரகசிய வாழ்க்கை போன்றது தமிழ் சிற்றிதழ் இயக்கம் என்றார். நள்ளிரவில் ஏதேனும் ஒதுக்குபுறமான இடத்தில் பூனைகள் கூடி அமர்ந்து விசித்திரமான ஓசை எழுப்பிக்கொண்டிருக்கும். அதைக்கண்டால் நாம் துணுக்குறுவோம். அவை ஏதோ மாயப்பிறவிகள் போலத் தோன்றும். அவை சாத்தானின் படை என்றும் வேற்றுக்கோள் ஒற்றர்கள் என்றும் நம்புபவர்கள் இருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ் படைப்பாளிகள் எங்காவது கூடி இலக்கியம் பேசக்கண்டால் சமூகத்திற்கும் போலீஸுக்கும் அந்தமாதிரியான துணுக்குறல் ஏற்படுகிறது என்றார் சுந்தர ராமசாமி ஒருமுறை.

பெர்னாட் ஷாவும் பூனையும்

பூனைகள் அறிவியக்கவாதிகளுடன் அணுக்கமான முறையில் இருந்திருக்கின்றன. நாய்களைப் போலன்றி அவை அவர்களின் மேஜைமேல் அமர்ந்து எழுதுவதை பார்த்திருக்கின்றன. படுக்கைக்கு அடியில் ஒளிந்து வேவுபார்த்திருக்கின்றன. அவற்றுக்கு எவ்வளவோ தெரியும்.

பூனை வளர்த்தவர்களில் முக்கியமானவர் என நினைவுக்கு வருபவர் எம்.என்.ராய். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். இந்திய இடதுசாரிச் சிந்தனைகளின் தொடக்கப்புள்ளி. ரஷ்யாவுக்கு வெளியே உலகின் முதல் கம்யூனிஸ்டுக்கட்சியை மெக்ஸிகோவில் தொடங்கியவர். லெனினுக்கு அணுக்கமானவர். பின்னாளில் கம்யூனிஸ்டுக் கட்சியில் அவநம்பிக்கை கொண்டார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

எம்.என்.ராய்

ராய் 1938 முதல் தன் பூனையுடனும் ஜெர்மானிய மனைவி எலெனுடனும் டெஹ்ராடூனில் மோஹினிசாலையில் ஓர் இல்லத்தில் தனிமையில் வாழ்ந்தார்.1958ல் அவர் மர்மமான முறையில்  அங்கே இறந்தார்.  அது மாரடைப்பு என விளக்கப்பட்டது. ஆனால் அன்றிரவு அவருடைய இல்லத்தில் எவரோ நுழைந்தமைக்கு ஆதாரம் இருந்தது என்று சொல்லப்பட்டது. அறையில் அவருடைய பூனை  அவர் உடலருகே அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தது.

அது ராய் அமெரிக்க ஊடகங்களுடனும் அமெரிக்க பல்கலைகளுடனும் நெருக்கமாக ஆரம்பித்த தருணம். அவருடைய அரசியல் கட்டுரைகளின் பெருந்தொகை அமெரிக்காவில் வெளியாவதாக இருந்தது. அவர் அமெரிக்காவில் ஒரு சொற்பொழிவுப் பயணத்திற்கும் திட்டமிட்டிருந்தார். அவருடைய சாவால் அப்பயணம் நிகழாது போயிற்று. தொடர்ந்து அந்த இல்லத்திலேயே தங்கியிருந்த எலென் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

ராயின் மரணம் மர்மமானது என்றும் அதற்குப்பின்னால் சர்வதேச அரசியல்சூழ்ச்சிகள்,குறிப்பாக இந்தியாவில் அன்று வேரூன்றிருந்த ஸ்டாலினின் கைகள், உண்டு என்று ராயின் அணுக்கமான மாணவரும், ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் தென்னக அமைப்பாளருமான எம்.என்.கோவிந்தன் கருதினார். அதைப்பற்றி அவர் எழுதிய கட்டுரை ராயின் பூனையின் பார்வையில் அமைந்திருந்தது.பூனை ஒன்றே சாட்சி

உண்மையில் எம்.என்.ராய் போன்ற ஒரு.மாமனிதரின் மரணம் இப்படி ‘மர்மமான’ முறையில் நடந்ததும், ராயின் வரலாற்று இடத்தை நன்கு அறிந்தவரான ஜவகர்லால் நேரு அதை கண்டுகொள்ளாமல் கடந்துசென்றதும் இந்தியவரலாற்றின் துணுக்குறச்செய்யும் பகுதிகளில் ஒன்று. உண்மையில் முறையான புலனாய்வு நிகழவேயில்லை. ராய்க்குப்பின் எல்லென் கொல்லப்பட்டதுகூட இந்திய அரசியல்அமைப்புக்களை,  அரசநிறுவனங்களை செயலூக்கம் கொள்ளச் செய்யவில்லை. சம்பிரதாயமான சொற்களுடன் அவ்விறப்புகள் கடந்துசேல்லப்பட்டன.

 

அது நாம் ருஷ்யாவுடன் அணுக்கம் கொள்ளத்தொடங்கியிருந்த காலம். நேருவின் அரசின் உயர்மட்டத்திலேயே சோவியத் ஆதரவாளர்கள் ஊடுருவிவிட்டிருந்தனர். அவருக்குப்பின் வந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாம் ஒரு துணைரஷ்யாவாகவே செயல்பட்டோம். இன்னொரு நாட்டில் என்றால் இதழாளர்களும் இலக்கியவாதிகளும் அதை தோண்டித்துருவி எழுதித் தள்ளியிருப்பார்கள்.  ஆனால் நம் அறிவுத்துறை இடதுசாரிச் சாய்வு கொண்டது – அன்றும் இன்றும். அது சிலவற்றை நோக்காமலிருக்கும் கண்கொண்டது

சக்கியின் [SAKI] டோபர்மரி என்னும் சிறுகதையில்  ஒருவர் பூனைக்குப் பேசக்கற்றுக்கொடுக்கிறார். அது ஏராளமான அந்தரங்கங்களை வெளிப்படுத்த தொடங்குகிறது. அதை சாகடிக்கிறார்கள். பிரபுக்களில் ஒருவர் சொல்கிறார். “விலங்கைப் பேசவைத்தே ஆகவேண்டும் என்றால் ஏன் யானைகளுக்கு கற்பிக்கக்கூடாது? குறைந்தபட்சம் நம் படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொள்ளாது அல்லவா?”

அரசியலிலும் இலக்கியத்திலும் பூனைகள் மட்டுமே அறிந்தவை பல உள்ளன. என்றாவது அவை எழுதினால் வரலாறு வேறுவகையில் வெளிப்படும்.

பி.கு

சும்மா தேடிக்கொண்டிருந்தபோது இந்த இணையப்பக்கம் கண்ணில் பட்டது. இலக்கியவாதிகளுடன் பூனை இருப்பதைப்பற்றிய பல புகைப்படங்கள் இருக்கின்றன. இவற்றை தொகுத்துப்போட்டு பூனை ஒரு அபாயகரமான ரகசிய விலங்கு, உண்மையில் அது வேற்றுக்கிரக ஒற்றன், அதுதான் பூமியில் இலக்கியவாதிகளின் உள்ளங்களை ஊடுருவி இலக்கியம் என்னும் அமைப்பையே உருவாக்கியிருக்கிறது என ஒரு சதிக்கோட்பாட்டை உருவாக்க்கலாமா என்று தோன்றியது.

பூனைகளும் எழுத்தாளர்களும் படங்கள்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:35

இராம. அரங்கண்ணல்

எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர். திரைக்கதை-வசன ஆசிரியர். திரைப்படத் தயாரிப்பாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. அரங்கண்ணலின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

இராம. அரங்கண்ணல் இராம. அரங்கண்ணல் இராம. அரங்கண்ணல் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:33

காவியம் – 23

ஏழன்னையர் சிலை, நாககட்டம், பைத்தான்

அத்தனை இனியது, அத்தனை தனித்தது, அத்தனை துயரமானது. சாவின் பொழுதில் அம்மா அதைச் சுட்டிக்காட்டி என்னிடம் “நீ எனக்குப் பிரியமானவன்” என்று சொன்னபோது நான் அவள் அதனிடம் சொல்வதாகவே எண்ணினேன். அவள் விலகியபோது அதை நோக்கித் திரும்பினேன்.

இருண்ட மூலையில் இருந்து அது நகர்ந்து என்னருகே வருவது போலிருந்தது.  என்னருகே காற்றுப் பரப்பு சற்று கசங்கியிருப்பது போல அதன் இருப்பு தெரிந்தது. கூர்ந்து பார்க்கும்தோறும் அது மறைந்தது. ஆனால் அதன் குரலை மிகத்தெளிவாக நான் கேட்டேன். “பயப்படாதே” என்று அது சொன்னது. “பயப்பட ஏதும் இல்லை. இவை எல்லாமே சிறிய விஷயங்கள்.”

”நான் பயப்படவில்லை” என்று நான் சொன்னேன். “எனக்கு சாவு பயம் இல்லை. இழக்கவும் ஏதுமில்லை.”

அது மெல்லச் சிரித்து “பயம் என்பது அதனாலெல்லாம் அல்ல. அது மனிதனுடன் பிறந்த ஓர் உணர்ச்சி. நம் முன்னோர்கள் அனைவருக்குமாகச் சேர்த்துத்தான் நாம் பயப்படுகிறோம்.”

“ஆமாம்” என்று நான் சொன்னேன்.

“நம் துயரங்களும்கூட நம் முன்னோர்கள் அடைந்த அனைத்து அனுபவங்களுக்குமாகச் சேர்த்துத்தான்  என்று புரிந்துகொண்டால் எல்லாம் எளிதாகிவிடுகின்றன.”

நான் பெருமூச்சுவிட்டேன். “நான் இப்படி எவருடனாவது உரையாட முடியும் என்றே நினைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன். எனக்கு உள்ளம் என ஒன்று இருப்பது எனக்கு மட்டுமே தெரியும் என்னும் நிலை… உரையாடும்போது எல்லா சொல்லும் நான் இருக்கிறேன் நான் வாழ்கிறேன் என்றே ஒலிக்கின்றன. என்னுடன் நானே உரையாடலாம், ஆனால் அது நான் வாழ்கிறேன் என்பதற்கான சான்று அல்ல. என் உடல் இங்கு உள்ளது என்பதற்கான சான்றுகூட அல்ல.”

“உனக்கு ஏன் அது தேவையாகிறது?”

“ஒவ்வொருவருக்கும் அது தேவை… நான் ஒரே ஒருமுறை ரயிலில் ஒரு தொழுநோய்ப் பிச்சைக்காரரிடம் பேசினேன். ரயிலில் ஜன்னலோரமாக நின்றுகொண்டிருந்தேன். எப்படியோ அவரை நேருக்குநேர் பார்த்துவிட்டேன். அவருடைய முகத்தில் தெரிந்த ஆர்வம் என் பார்வையை விலக்க முடியாதபடிச் செய்தது. அவர் தன் வாழ்க்கையை எனக்குச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஒரு நல்ல கடை வைத்திருந்தவர், எட்டு குழந்தைகளின் தந்தை. எட்டுபேரையுமே நல்ல நிலையில் வாழ்க்கையில் நிலைபெறச் செய்தவர். நோய் வந்ததும் துரத்திவிட்டார்கள்… அவர் பிச்சைக்காரர் ஆகி எட்டாண்டுகள் ஆகியிருந்தன… நான் அதன்பின் வியந்துகொண்டே இருந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார்? அவர் குறைசொல்லவில்லை. தன்னிரக்கமும் இல்லை. அவருக்கு இன்னொருவர் தேவையாக இருந்தார். இருக்கிறேன், வாழ்கிறேன் என்று அவர் நிறுவிக்கொள்ள வேண்டியிருந்தது… தன் ரசனைகளை, தெரிவுகளைச் சொன்னார். அரசியல் கருத்துகளைகூடச் சொன்னார்… பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போவதைப் பற்றிக் கவலைப்பட்டார்… அவர் சொற்களின் வழியாக தன்னை முழுமையாக கட்டி எழுப்பிக்கொண்டே இருந்தார்…”

நான் தலையை அசைத்தேன். “அவரை இப்போதுதான் அத்தனை அணுக்கமாகப் புரிந்துகொள்கிறேன். அவர் சொன்னவற்றை மிகத்தெளிவாக, சரளமாகச் சொன்னார். அவர் நிறையப் பேரிடம் பேச வாய்ப்புள்ளவர் அல்ல. அவரை எவரும் ஏறிட்டே பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு சரளம் எப்படி வந்தது? அவர் தனக்குத்தானே அவற்றை பலநூறு முறை பேசியிருக்கிறார். ஒரு செவி கிடைத்துவிட்டது என கற்பனை செய்துகொண்டு பேசிப்பேசி வாழ்ந்திருக்கிறார்.”

“ஒரே ஒருவருடன் மட்டுமே உரையாடுவதென்பது எவ்வளவு அரிதானது இல்லையா?” என்று அது கேட்டது.

“ஆமாம்” என்று நான் சொன்னேன். “என்னால் நம்ப முடியவில்லை. மெய்யாகவே எனக்கு என ஓர் உலகமே உருவாகிவிட்டதுபோல் உள்ளது. நான் முற்றிலும் புதிய ஒருவனாக ஆகிவிட்டிருக்கிறேன்.”

“ஆனால் அதை நாம் முடிந்தவரை சாதாரணமானதாக ஆக்கிக்கொள்வோம். இயல்பாக இருப்போம்.”

“ஏன்?”

“உச்சநிலைகள் சீக்கிரம் சலிப்பூட்டுபவை.”

நான் பெருமூச்சுடன் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். “இதோ என் அம்மா இறந்து கிடக்கிறாள். நான் இதை உலகத்திற்கு அறிவிக்கவேண்டும்… நான் வெளியே செல்லவேண்டும். நீ உதவ முடியுமா?”

“அது மிக எளிமையானது… நான் செய்கிறேன்”

“நீ பிசாசா? கதை சொல்லும் பிசாசு என என் அம்மா உன்னைப்பற்றி என்னிடம் சொன்னாள்.”

“நான் உன்னைப் பொறுத்தவரை அது. தத் என்று சொல். அவ்வளவுபோதும்.”

“தத்…என் அம்மாவின் வாழ்க்கை ஏன் இப்படி ஆகியது? ஏன் இந்த முடிவு?”

“எந்த வாழ்க்கையைப் பற்றியும் அப்படி எதையும் கேட்கக்கூடாது” என்றபின் அது விலகிச் சென்றது.

சற்று நேரத்தில் பக்கத்துவீட்டுப் பெண் என் வீட்டுக்குள் நுழைந்தாள். குழம்பியவள் போல, அஞ்சியவள் போல என் அம்மாவை “தீதீ” என்று அழைத்தாள். கதவை தட்டி ஓசை எழுப்பினாள்.

“அவள் காதருகே சென்று பேசினேன்…”

“என்ன?”

“அவள் என் சொற்களைக் கேட்டாள். கேட்டாளா இல்லை அது பிரமையா என்று குழம்புகிறாள்.”

என் முகத்தில் வந்த புன்னகையைக் கண்டு அவள் திகைக்கிறாள் என்று எண்னினேன். அவள் மெல்ல சமையற்கட்டுக்குள் சென்றாள். அம்மாவைப் பார்த்துவிட்டாள். மூச்சொலியுடன் ஓடிச்சென்று அம்மாவை குனிந்து பார்த்தாள். முழந்தாளிட்டு அமர்ந்து தொட்டு அசைத்துப் பார்த்தாள். பின்னர் ”சாரதா, அடீ சாரதா” என்று கூச்சலிட்டபடி வெளியே ஓடினாள். நான் என் தோல்மேல் எழுந்த அதிர்வால் அனைத்தையும் உணர்ந்து கற்பனையும் கொண்டிருந்தேன். அல்லது பார்த்துக்கொண்டுதான் இருந்தேனா?

கூட்டம் கூடிவிட்டது. பேச்சொலிகள், ஆணைகள். ஊர்த்தலைவர் தத்ராஜ் வந்தார். அதன்பின் அவர் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்யலானார். அவர்கள் அம்மாவை வெளியே கொண்டுசென்று படுக்க வைத்தனர். ஊருக்குள் தண்டோரா போடப்பட்டது. அனைவரும் வந்து கூடினார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என அது என்னிடம் முணுமுணுப்பாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. ஒவ்வொன்றும் வேடிக்கையாக இருந்தன. அவர்கள் அந்தச் சாவை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக்கொண்டனர். துயரத்திற்கு வழியற்ற சாவு ஒரு தீவிரமான நிகழ்வு, ஆகவே அது மறைமுகமாக மகிழ்வூட்டுவது. ஒவ்வொருவரும் எதையேனும் செய்ய நினைத்தனர். அப்பாவின் படத்தை எடுத்து அம்மாவின் மார்பின்மேல் ஒருவர் வைத்தார். ஒருவர் எங்கிருந்தோ குடியரசுக் கட்சியின் ஒரு கொடியைக் கொண்டு வந்து அம்மாமேல் போர்த்தினார். மஞ்சள்செவ்வந்தி மாலைகளை ஒருவர் கொண்டுவந்தார்.

என் அருகே வந்து மூச்சு என் மேல் படும்படியாக பலர் உற்றுப் பார்த்தார்கள். நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன்.

அம்மா மறைந்தபின் நானும் அதுவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தோம். நான் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்ததனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எவரும் என் அருகில் வரவில்லை. ஒருநாளில் ஒரே இருமுறை மட்டும் உணவைக் கொண்டுவந்து ஒரு கழியால் தள்ளி என்னருகே வைத்துவிட்டுச் சென்றார்கள். நான் கொல்லைப் பக்கத்திலேயே மலம் கழித்தேன். அறைக்குள்ளேயே சிறுநீர் கழித்தேன். உணவை உண்டபின் கையை உடலிலேயே துடைத்துக் கொண்டேன். குளிப்பதை நிறுத்தினேன். அந்தப் படுக்கையிலேயே இரவும் பகலும் வாழ்ந்தேன்.

வீட்டை விட்டு வெளியேறியபின் என் உடல்நிலை கொஞ்சம் மேம்பட்டது. என்னால் சாலைகளை நினைவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு காலாக கழியின் துணையுடன் எடுத்துவைத்து நடமாட முடிந்தது. குளிர் அடித்தபோது சாலையோரங்களில் தேடி எனக்கான ஆடைகளை கண்டுபிடித்து ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுக்கொள்ள முடிந்தது.

முதலில் நான் மக்கள் நடமாடும் பகுதிகளில்தான் வாழ்ந்தேன். அங்கே ஒரு மூடிய கடைமுன் நான் இரவில் தங்கினால் மறுநாள் அந்தக் கடைமுன் இரவில் தண்ணீரை ஊற்றி நனைத்துவிட்டுச் சென்றார்கள். ஒருவன் ஒவ்வொரு இரவும் ஆணிகள் அறையப்பட்ட பலகைகளை கடைமுன் வைத்தான். நான் கடைகளை மாற்றிக்கொண்டே இருந்தேன். பின்னர் எங்கும் தங்கமுடியாமலாகியது.

நான் கடும் நாற்றத்துடன் இருந்தேன், ஒரு முறை காலையில் நான் எழுவதற்குள் வந்த ஒருவன் என்னை காலால் உதைத்து அப்பால் தள்ளினான். விழுந்து கிடந்த இடத்தில் இருந்து என்னால் நீண்டநேரம் அசைய முடியவில்லை. தவழ்ந்தே அப்பால் விலகி சாக்கடையின் ஓரமாக எரியும் வெயிலில் கிடந்தேன் .என்னுடன் வந்தமர்ந்த அதனிடம் “ஒருவன் என்னை தள்ளிவிட்டான்” என்றேன்.

“ஆம், பார்த்தேன். அவன் நீ குப்பைக்கூடை போல நாற்றமெடுப்பதாகச் சொன்னான்”

“அப்படியா?” என்றேன். “இருக்கலாம். நான் குளித்து நீண்டநாட்களாகின்றன. பல்தேய்ப்பதுமில்லை. இந்த ஆடைகள் குப்பையில் இருந்து எடுக்கப்பட்டவை… பலமுறை சாக்கடைச்சேற்றில் விழுந்திருக்கிறேன்.”

அது ஒன்றும் சொல்லவில்லை.

“நீ என்ன நினைக்கிறாய்?” என்றேன். “நான் நாற்றமடிக்கிறேனா? உனக்கு அது கஷ்டமாக இருக்கிறதா?”

“நான் எப்போதுமே அழுக்கும் நாற்றமும் அடிக்கும் இடத்தில்தான் இருக்கிறேன்” என்று அது சொன்னது. “என்னைப் போன்றவர்களின் இடம் அதுதான். ஒரு நாற்றம் வழியாகவே நாங்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியும். அந்த நாற்றத்தை உணர்பவரிடம்தான் சென்றடைய முடியும்”

நான் புன்னகைத்து “விந்தை!” என்றேன். “சம்ஸ்கிருத காவியங்களில் யக்ஷர், கின்னரர், வித்யாதரர் போன்றவர்களைப் பற்றி நேர் எதிராகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் மலர்களில் குடியிருப்பார்கள். நறுமணமாக காற்றில் ஏறி பயணம் செய்வார்கள். இரவில் அவர்களின் நறுமணத்தை எவர் உணர்கிறார்களோ அவர்களைச் சென்றடைந்து விடுவார்கள்.”

“ஒவ்வொன்றுக்கும் இரண்டு பக்கங்கள்” என்று அது சொன்னது. “ஒன்றை அறிந்தவர் இன்னொன்றை அறியாதவர் ஆகிறார். அறிதலைப்போல அறிவைக் கட்டுப்படுத்துவது வேறில்லை.”

அன்றிரவு தெருநாய்கள் வெறிகொண்டவை போல குரைத்து என்னை அச்சுறுத்தின. இரவில் தூங்க இடமில்லாமல் நான் ஆளோய்ந்த சாலை வழியாக நடந்தேன். என்னுடன் அது இருந்துகொண்டிருந்தது. நான் சட்டென்று ஒரு சொல்லை நினைவுகூர்ந்தேன். அந்த மாளிகைக்குள் செறிந்த காட்டுக்குள் இருந்து ஒலித்த சொல் அது. அது ஓர் அழைப்பு.

“அந்தச் சொல் ஓர் அழைப்பு!” என்று நான் சொன்னேன். “நீ பேசிக்கொண்டிருக்கும் மொழியில் அந்த அழைப்பு இருந்தது.”

“அன்று உன்னை அழைத்தவன் நான்தான்”

“நீயா?”

“ஆம், நீ பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னை நான் அழைத்தேன்”

“ஏன்?”

“நான் இங்கே வரும் அனைவரையும் ஒரு முறையாவது அழைத்திருப்பேன். இந்த வழியே தனியாகச் சென்ற ஒவ்வொருவரையும்…”

“அவர்கள் எவரும் உன்னை புரிந்துகொண்டதில்லையா?”

“இல்லை, நீ என்ன செய்தாய்? அதைப்போலத்தான். அஞ்சி விலகி ஓடிவிடுவார்கள். அது தங்கள் பிரமை என்று விளக்கிக் கொள்வார்கள். இந்த நகரில் நான் அலைந்துகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் நிழலாகக் காத்திருக்கிறேன். தனிமையில் ஒதுங்கி இருந்து அழுபவர்களை பார்த்தபடி நேர் எதிரில் நின்றிருப்பேன். இரவுகளில் விழித்துக்கொண்டு ஏங்குபவர்களின் மிக அருகே அமர்ந்திருப்பேன். அவர்களிடம் பேசுவேன். சிலசமயம் குழந்தைகளிடம் விளையாடுவேன்… மிகச்சிலரே என்னை பார்க்கிறார்கள். உன் அம்மாவைப்போல. அவர்களிடம் பேசத்தொடங்கிவிடுவேன்.”

“உனக்கு என்னதான் பிரச்சினை?”

அது என்னை மெல்ல அணைத்துக்கொண்டது. அதன் மெல்லிய கைகளால் என் கைகளைப் பிடித்தது. “நான் துயருற்றவன், மிக மிகத் தனிமையானவன்…” என்றது

“நீ ஆணா?” என்றேன்.

“ஆம், நீ ஆண் என்பதனால்” என்று அது சொன்னது. “நீ தோழனை தேடுகிறாய் என்பதனால்…”

நான் புன்னகைத்து “ஆம்” என்றேன். “உனக்கு என்ன துயர்? ஏன் தனிமை?”

“அது எளிய மானுடத்துயர் அல்ல. கருமுகில்களைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மாபெரும் ஏரியளவுக்கு நீரைச் சுமந்திருப்பவை அவை. அவை எடைகொண்டு கருமையடைந்து குளிர்ந்துவிடுகின்றன. மிகமெல்ல அவை நகர்கின்றன. மின்னலும் இடியுமாக அதிர்கின்றன. பூமியையே குளிரச்செய்துவிடுகின்றன. இலைகளை எல்லாம் அசைவிழக்கச் செய்கின்றன. நதியலைகளைக்கூட அவை நிலைக்கச் செய்துவிடுகின்றன. இங்கே மாபெரும் துயர்கள் உள்ளன. மானுடத்துயர்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால்கூட அதில் ஒரு துளியளவு வருவதில்லை.”

நான் அந்த மாளிகையின் முகப்புக்கு எளிதாகவே வந்துவிட்டேன். ஏனென்றால் அங்கே பலநூறு முறை அப்படி உள்ளத்தால் வந்திருந்தேன். என்னிடமிருந்த பழைய சணல்சாக்கை விரித்து அதன்மேல் படுத்துக்கொண்டேன். இனிய காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்று கரையில் இருந்து அந்த வழியாக கோதாவரிக்குச் சென்றது. புழுதியின் மென்மையான மணம். வேப்பம்பூக்களின் கறைமணம்.

நீண்டநாட்களுக்குப் பின்னர் நான் அன்று நிறைவாக நீண்டநேரம் தூங்கினேன். காலையில் என் மேல் வெயில்பட்டபோதும் அங்கேயே படுத்திருந்தேன். கடைமுகப்புகள் போல காலைக்குளிரிலேயே எழுந்து இடம் மாறவேண்டியதில்லை. அங்கே எவரும் என்னை நின்று திரும்பிப் பார்க்கவில்லை. அந்த இடத்தின் இடிபாடுகளில் நான் மிக இயல்பாகவே ஒன்றாகக் கலந்துவிட்டிருந்தேன்.

என்னுடன் அவன் இருந்துகொண்டே இருந்தான். “உன் பெயர் என்ன?” என்று ஒருமுறை கேட்டேன்.

“பெயர் என்பது மானுடர்களுக்குரியது. அவர்கள் ரூபம் வழியாகவே எதையும் அறியவும் நாமம் வழியாக மட்டுமே நினைவில் கொள்ளவும் முடியும். பெயர்களின் பெருக்கே மொழி. அவர்கள் அறிந்த இயற்கை நாமரூபங்களின் கலவை” என்றான். ”உன் ரூபப்பிரபஞ்சத்தில் மட்டும்தான் நான் ஆண். உன் மொழியில் மட்டும்தான் எனக்குப் பெயர்… என் பெயரை நான் உனக்குச் சொல்லும் தருணம் அமையவில்லை.”

“எப்போது அத்தருணம் அமையும்? என்னுடன் நீ இருந்துகொண்டே இருக்கிறாய். இந்த வாழ்வில் எனக்கு நீ மட்டுமே இருக்கிறாய்”

”நீ என்னை விரும்புவதனால் உன்னுடன் இருக்கிறேன். உன் அம்மா இறந்தபின் எனக்கும் வேறு எவருமில்லை” என்று அது சொன்னது.

”நான் உன்னைப் பார்க்கவேண்டும், உன் கண்களும் சிரிப்பும் மிக மிக அழகானவை என்று அம்மா சொன்னாள். நான் அழகென்பதை அறிந்தே நீண்ட நாட்களாகின்றன. அறிந்த அழகையே என் உள்ளம் மறந்துவிட்டிருக்கிறது.”

“அதற்கு அனுமதி வேண்டும்”

“எவருடைய அனுமதி?”

“என் தெய்வத்தின் அனுமதி…”

“எங்கிருக்கிறது அந்த தெய்வம்?”

“இங்கே மிக அருகே, கோதாவரியின் நாககட்டத்தில்…”

“என் பாட்டி உன்னைப் பார்த்த இடத்தில்… என் அம்மாவும் ஒருமுறை உன்னை அங்கே பார்த்திருக்கிறாள்”

“ஆம், அருகேதான்…”

“என்னை அழைத்துச்செல்… எனக்கு உன் தெய்வத்தைக் காட்டு.”

“எதற்காக? நீ முதலில் அதை உறுதிப்படுத்திக் கொள். எதற்காக என் தெய்வத்தைச் சந்திக்க விரும்புகிறாய்?”

“எனக்கு நீ வேண்டும். முழுமையாக வேண்டும். உன்னைப் பார்க்கும் கண் வேண்டும்… அது மட்டும்தான் என்னிடம் எஞ்சியிருக்கும் ஆசை இப்போது”

“சரி, அழைத்துச்செல்கிறேன். ஆனால் வாழ்க்கையில் எந்த முன்னோக்கிய நகர்வும் போலத்தான் இதுவும், திரும்பவே முடியாது…”

“ஆமாம், ஆனால் வேறு வழியில்லையே. முன்னோக்கிச் சென்றாகவேண்டுமே”

“ஒழுகிச்செல்லலாம். நாம் பொறுப்பை ஏற்கவேண்டியதில்லை. நாமே சென்றோம் என்றால் எண்ணி வருந்த நேரிடும்.”

“நான் இதுவரை எதற்கும் வருந்தவில்லை.”

“எதையும் எண்ணி வருந்துவதே இல்லையா? செய்திருக்க வேண்டாம் என்றும், சென்றிருக்க வேண்டாம் என்றும் எண்ணிய தருணங்களே இல்லையா?”

“இதோபார், இங்கே இப்படி அமர்ந்திருக்கிறேன். பழையவற்றில் இருந்து என்னை முழுமையாகத் துண்டித்துக் கொள்ளாமல் இப்படி அமரமுடியாது. எனக்கு நேற்று இல்லை. நினைவுகள் என எதுவுமே இல்லை. எனக்கு எதுவும் மிச்சமில்லை, ஒரு துளிகூட”

“அப்படியென்றால் இன்றிரவு”

அன்று இரவு அவன் என்னை அழைத்துச்சென்றான். அவனுடைய அருகமைவுணர்வும், அவ்வப்போது சில உதிரிச்சொற்களும். நான் கோதாவரியின் நீரின் ஒலியைக் கேட்க ஆரம்பித்தேன். நள்ளிரவில் ஒலிக்கும் வௌவால்களின் பறத்தலோசை.

”இது நாக கட்டம்”

நான் படிகளில் என் கைத்தடியை ஊன்றி மெல்ல இறங்கினேன்.

“இந்த படிக்கட்டுக்கு நீ வந்திருக்கிறாய். இங்கே ஏழு அன்னையரை நிறுவியிருக்கிறார்கள், தெரியுமல்லவா?”

”ஆமாம் படிக்கட்டிலேயே புடைப்புச் சிற்பமாக இருக்கும். மிக மழுங்கிப்போன சிலை. செங்குழம்பு வேறு பூசப்பட்டிருக்கும். ஏழன்னையரும் ஒரே உருவம்போல இணைத்துச் செதுக்கப்பட்டிருப்பார்கள்.”

“அது இந்த படிக்கட்டுகள் கட்டப்படுவதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றங்கரையில் இருந்த கல். அதற்கும் முன்பு இங்கிருந்த காட்டுக்குள் இருந்த கல். அதை பல்லாயிரமாண்டுகள் அதைச் செதுக்கியவர்கள் வழிபட்டனர். பின்னர் அவர்கள் மறைந்துபோய், எவரும் அறியாமல் பல ஆயிரமாண்டுகள் காட்டுக்குள் கிடந்தது.”

படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டே இருந்தேன். நீண்டதொலைவுக்குச் சென்றுவிட்டது போலிருந்தது பல பாதாள உலகங்களைக் கடந்து ஆழத்திற்கு அமிழ்ந்துவிட்டதுபோல.

”வந்துவிட்டோம்”

படிகளில் அமர்ந்தேன். என் கழியை நீட்டி நீட்டி தட்டி அந்தச் சிலையை தொட்டுவிட்டேன். பிறகு நெருங்கிச் சென்று அதை வருடினேன். ”பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, சிம்ஹி, வராகி, சாமுண்டி, ஜ்யேஷ்டை.”

“அவள்தான்… ஜ்யேஷ்டை என்றால் மூத்தவள். அவர்கள் அறுவருக்கும் முதல்வி, அனைவருக்கும் அன்னை.”

“அழுக்கின், இருட்டின் அரசி.”

“வேர்களின் தலைவி. வேர்கள் உறங்கும் மண்ணின் ஆழத்தில் வாழ்பவள். உப்பாக மண் முழுக்க நிறைந்திருப்பவள். அவளை நோக்கி அனைத்தையும் செலுத்தும் சாவின் தேவியான சாமுண்டி அவள் மகள். மண்ணை அகழ்ந்திறங்கும் வராகி சாமுண்டியின் மகள். முளைத்தெழுபவள் சிம்ஹி, இலைத்தழைப்பு கௌமாரி, மலர் மகேஸ்வரி, விதை பிராம்மி… ஒருவரிலிருந்து ஒருவரென எழும் ஏழு தலைமுறைகள்…”

நான் பெருமூச்சுடன் “ஆம், அப்படியும் ஒரு பாடம் இருக்கக்கூடும்.”

“அவள் எழும் பொழுது அணுகி வருகிறது.”

சட்டென்று நான் ஒரு கெடுநாற்றத்தை உணர்ந்தேன். மட்கிய இலைகளின், அதனுடன் கலந்த விலங்குகளின் சாணியின், புழுதியின் நாற்றம். அது அணுகி அணுகி வந்தது. ஏதோ ஓரிடத்தில் அது நறுமணம் ஆக மாறியது. கோதாவரியின் குளிர்ந்த காற்றை உணர்ந்தேன். குளிர் ஏறி ஏறி வந்து பல அடுக்கு ஆடைகளுக்கு அடியில் என் உடல் நடுங்கத் தொடங்கியது. என் கண்களுக்குள் இளநீல அலைகள். அவை ஒளியென்றாயின. பின்னர் நான் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினேன்.

கோதாவரியின் நீர்ப்பரப்பு இருட்டுக்குள் தன்னொளியுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. வான் முழுக்க விண்மீன்கள் செறிந்திருந்தன. என்னருகே ஓர் இருண்ட குவியல்போல அவன் நின்றிருந்தான். இருட்டு செறிந்து உருவான ஒரு குமிழிபோல. படிகளின்கீழே ஒளி கூடிக்கூடி வந்தது.

மூவர் நீரில் இருந்து படியேறி வந்தனர். வலப்பக்கம் விழிக் குழிகளுக்குள் துறித்த வெறிக்கண்களும், மண்டையோட்டு முகமும், மண்டைமாலை அணிந்த எலும்புக்கூடு உடலும், பின்னால் விரிந்து பறக்கும் கரிய கூந்தல் அலைகளுமாக சாமுண்டி. இடப்பக்கம் சிறுபிறைவடிவ கொடும்பற்களுடன் மேலுதடு வளைந்து எழுந்த கூர்ந்த பன்றிமுகமும், இலைக் காதுகளும், சிறிய மின்னும் விழிகளும் கொண்ட கருநீல உடையணிந்த தடித்த பெண்ணுருவமாக வராஹி. நடுவே பெரிய குடவயிறும், தொங்கிப்படிந்த முலைகளும், குறுங்கால்களும், உருண்ட முகத்தில் வெண்ணிறச் சிரிப்பு போலத் தெரிந்த பெரிய பற்களுமாக ஜ்யேஷ்டை அன்னை.

நான் கைகூப்பி அமர்ந்திருந்தேன். மூவரும் என் முன் நின்றனர். என்னருகே நின்ற அவன் “கேள்” என்றான். “நீ வேண்டுவதை அன்னையிடம் கேள்.”

என் கூப்பிய கை நடுங்கிக் கொண்டிருந்தது. என் நாக்கு பேசுவதை மறந்துவிட்டிருந்தது. என் உள்ளத்தில் ஒரு சொல்லும் இல்லை. மூன்று அன்னையரும் என் முன் காற்றில் திகழும் சுடர் போல நின்றிருந்தனர்.

சட்டென்று நான் என் வலுவான காலால் படிக்கட்டை உதைத்து முன்னோக்கி விழுந்து சாமுண்டி அன்னையின் காலடியில் சென்று சரிந்தேன். என் நெற்றியும் மூக்கும் மண்ணில் அறைபட்டன. என் வலுவான கையால் கற்படிகளை அறைந்து அறைந்து கூவினேன். “சாவின் அன்னையே! தேவியே! எனக்கு அவளை காட்டு… ராதிகாவின் முகத்தை நான் பார்க்கவேண்டும். அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசவேண்டும்… அவளைத் தவிர நான் வேண்டுவது ஒன்றுமே இல்லை. அவளை காட்டு என் தாயே.”

நான் பார்த்த அக்காலடி எலும்பாலானது. நான் அந்தக் கால்களை நோக்கி உந்தி உந்தி சென்றபடி “அம்மா! அம்மா! அம்மா!” என்று கூவினேன். “எனக்கு ராதிகா வேண்டும்… ராதிகா ராதிகா” என்று வெறிகொண்டவனாக கூச்சலிட்டேன்.

என் மேல் எவரோ குனிவது போலிருந்தது. இன்னொரு படிக்கு நான் குப்புறக் கவிழ்ந்து உருண்டேன். என் தலை கற்படிகளில் அறைபட்டது. வலியை உணர்ந்தபடி, செயல்படாத கைகால்களில் வலிப்பு எழ நான் மயங்கிவிட்டேன்.

விழித்துக்கொண்டபோது கோதாவரியின் படிக்கட்டில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன். எப்போது அங்கே வந்தேன் என்று எண்ணிக்கொண்டு எழ முயன்றபோதுதான் என் உடலின் ஆற்றலின்மையை அறிந்தேன். ஒரு கணத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்று தெரிந்தது. சற்று தன்நினைவு மயங்கியதும் அவன் வந்து என்னில் படிந்துவிடுகிறான். அந்தக் கல்லூரி மாணவன், காவிய ஆய்வாளன், கவிஞன்.

சற்று அப்பால் எவரோ அமர்ந்திருப்பதைக் கண்டேன். இருண்ட கரிய உருவம். படிகளில் அமர்ந்து முழங்கைகளை கால்முட்டின்மேல் வைத்து தலைதாழ்த்தி இருந்தது. அதன் சடைமுடிக் கற்றைகள் தொங்கி முகத்தை மறைத்தன. இருபக்கமும் சடைகள் தொங்கி படிகளில் படிந்திருந்தன.

“நீயா?” என்று நான் கேட்டேன்.

அது என்னை நிமிர்ந்து பார்த்தது. இப்போது அதை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இருண்ட பிசாசின் முகம். ஆனால் தெளிந்த விழிகள், பேரழகு கொண்ட விழிகள். என்னால் அப்பார்வையின் எழிலில் இருந்து சிந்தனையை விலக்க முடியவில்லை.

அது எழுந்து என்னை நோக்கி வந்தது. நான் நிகழ்ந்த அனைத்தையும் நினைவுகூர்ந்தேன். “என்னை மன்னித்துவிடு… என்னால் முடியவில்லை. ஏன் அப்படி கேட்டேன் என்றே தெரியவில்லை. என்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை”

என் கண்களில் இருந்து நீர்வழிந்தது. கைகளைக் கூப்பியபடி “ஆனால் நான் அதைக் கேட்டதற்காக வருந்தவில்லை. அதுதான் என்னுள் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. வேறுவழியே இல்லை. நான் மிக எளியவன்… நான் வெறும் மனிதன்… இன்னொரு முறை அன்னையர் எழுந்து வந்தால்கூட மீண்டும் அதைத்தான் கேட்பேன்…ராதிகாவைத் தவிர எனக்கு எதுவுமே முக்கியமில்லை…”

அது என்னருகே வந்து குனிந்தது. ”பரவாயில்லை, அன்னையர் உனக்கு அனைத்தையும் அருளினார்கள். பேரருள் கொண்ட மூத்தவள் உன்னை தூக்கி தன் மடியில் படுக்கவைத்தாள். தன் மார்புடன் உன்னை அணைத்துக்கொண்டு உன் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டாள்.”

நான் கண்ணீருடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மிகமிகக் கனிந்த புன்னகை. எந்த மானுட முகத்திலும் அத்தனைபெரிய கருணை திரள முடியாது. பார்ப்பவன் தன்னை முழுமையாகவே அதன்முன் படைத்துவிடச் செய்யும் புன்னகை. நான் கைகளை நெஞ்சுடன் சேர்த்துக் கொண்டு அழத்தொடங்கினேன்.

அது என்னை அணைத்துக் கொண்டது. “அழாதே, என் கண்ணல்லவா?” என்றது. சட்டென்று அது பெண்ணாகிவிட்டது. அன்னை போல் “அழாதே. உன்னுடன் நான் இருக்கிறேன்… என் செல்லம் அல்லவா? அழாதே” என்றது.

“ராதிகா! ராதிகா! நான் என்ன செய்வேன். என் உள்ளம் அடங்கவில்லையே. என் செல்லத்தை நான் சரியாகப் பார்க்கக்கூட இல்லையே. அவளிடம் விரும்பிய அளவு பேசக்கூட இல்லையே” என்று அரற்றியபடி நான் இளங்கரடியுடையது போன்ற அதன் மென்மயிர் மார்பில் முகம்புதைத்துக் கொண்டேன்.

“காலத்தில் பின்நகர தெய்வங்களாலும் இயலாது” என்று அது சொன்னது. “ஆனால் உன் அழலை நான் எடுத்துக் கொள்கிறேன். என்னுள் நிறைந்திருக்கும் ஊழித்தீ போன்ற அழலுக்குள் அதையும் சேர்த்துக்கொள்கிறேன். அழாதே… என் குழந்தை அல்லவா நீ? என் ரத்தினம் அல்லவா?”

மென்மையாக அது என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் உடலின்  மணம். தொடுகையின் மென்மை. எனக்கு மட்டுமாக ஒலித்த அந்தக் குரல். நான் அதன் அணைப்பில் மயங்கி தூங்கிவிட்டேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:32

கவிஞனைக் கண்டடைதல்- எஸ்.பாஸ்கர்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு

அன்புள்ள ஜெ,

சோ.விஜயகுமாரின் கவிதைகளை இணைய இதழ்களில் ஆங்காங்கே வாசித்ததுண்டு. இன்ஸ்டாகிராமிலும் அவருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். இணைய இதழ்களில் கவிதை வாசிப்பதன் பிரச்சினை என்பது அதன் பெருக்கம்தான். Abundance is the curse of postmodern era. நிறைய வந்து கொட்டும் கவிதைகளில் இருந்து ஒரு கவிஞனைத் திரட்டிக்கொள்ள முடிவதில்லை. உதிரியாக வரிகள் நினைவில் நிற்கின்றன. அவற்றுக்குப் பின்னால் உள்ள கவிஞனின் personality நினைவில் உருவாவதில்லை.

கவிஞனின் அந்த personality என்பது poet-personality தானே ஒழிய தனிப்பட்ட personality அல்ல. எல்லா கவிதைகளுக்குள்ளும் ஒரு சரடு ஆக ஓடும் அந்த இணைப்புதான் அந்த poet-personality. கவிதைகள்தான் அதை திரட்டி நமக்கு அளிக்கின்றன. கவிதைகள்தான் அதை உருவாக்குகின்றன. கவிஞன் கவிதைகளில் அதை இயல்பாக வெளிப்படுத்துகிறான்.

அப்படி ஒரு personality உருவானதென்றால் அதன்பிறகு நம்முள் அவன் கவிதைகள் கூடுதல் பொருள் அளிக்க ஆரம்பிக்கின்றன. தனியாக அவ்வளவு முக்கியமில்லாத கவிதைகள்கூட ஒட்டுமொத்தமாக கவிஞனின் மனமாக வெளிப்படும்போது ஆழமானவை ஆகிவிடுகின்றன. அதாவது கவிஞனின் எல்லா கவிதைகளும் சேர்ந்து ஒரு கவிதையை அர்த்தப்படுத்துகின்றன. இப்படித்தான் கவிதைகள் உலகம் முழுக்க வாசிக்கப்படுகின்றன. இதனால்தான் கவிஞர்களைப் பற்றித்தான் இலக்கிய விமர்சனம் அதிகமாகப் பேசியிருக்கிறது. கவிதைகளைப் பற்றி அல்ல.

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது போன்ற ஒரு முக்கியமான அங்கீகாரம் ஓர் இளங்கவிஞனுக்கு அளிக்கப்படுவது இதனால்தான் முக்கியமானதாக ஆகிறது. அந்தக் கவிஞன் முன்வைக்கப்படுகிறான். நாம் அவன் எழுதிய எல்லா கவிதைகளையும் தேடி வாசிக்க ஆரம்பிக்கிறோம். அவனை ஒரு poet-personality ஆக தொகுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம். அது அவன் கவிதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. கவிதைகளில் சிதறிக்கிடக்கும் கவிஞனை இப்படித்தான் நாம் compose செய்துகொள்கிறோம்.

சோ.விஜயகுமாரின் கவிதைகளை நாலைந்து நாட்களாக வாசிக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளையும் வாசித்தேன். அவருடைய பேட்டிகளையும் வாசித்தேன். அவருடைய பேட்டிகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவை வழக்கமாக நவீனக் கவிதைகள் எழுதுபவர்கள் என்னென்ன சொல்வார்களோ அவற்றை எதிரொலி செய்பவையாக இருந்தன. தனித்தன்மை என ஏதும் தெரியவில்லை. கட்டுரைகள் வழியாக அவரை ஓரளவு அணுக முடிந்தது.

சோ.விஜயகுமாரின் கவிதைகள் பலவகையான எதிரொலிகளுடன் தொடங்கியிருக்கின்றன என்று தோன்றியது. உதாரணமாக

கண்களை யாரும்

உற்றுப் பார்ப்பதில்லை!

மாடோ, ஆடோ, யாதாயினும்

வெட்டும்போது அதன் கண்களை

யாரும் உற்றுப் பார்ப்பதில்லை!

(சோ.விஜயகுமார் கவிதைகள் வாசகசாலை இணைய இதழ்)

என்னும் கவிதை ஒரு சரியான மனுஷ்யபுத்திரன் கவிதை. (ஆனால் மனுஷ்யபுத்திரனின் நல்ல கவிதைகளின் தொடர்ச்சியாக அமைந்து இதுவும் ஒரு நல்ல கவிதையாக உள்ளது).

அதேபோல

முந்தி விநாயகனுக்கான துதி

ஊர்த்தலைவர் வரும் வரை நீளுமென்பது

எழுதப்படாத விதி

(சோ. விஜயகுமார் கவிதைகள். வாசகசாலை)

என்ற கவிதையை இன்று பலரும் எழுதிவரும் micro narration வகையிலான கவிதைகள் என்று சொல்லலாம். வெய்யில் போன்ற கவிஞர்கள் இவற்றை எழுதிவருகின்றனர்.

இந்த வகையான எதிரொலிகள் வழியாகவே கவிஞர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த எதிரொலிகளில் அவர்கள் முன்னோடிகளில் இருந்து நுணுக்கமான ஒரு வேறுபாட்டை அடைகிறார்கள். அந்த வேறுபாடு ஒரு மரத்தின் தடியில் சிறிய முளை எழுவதுபோல. அது தனி மரமாக வளர்ந்து எழுகிறது.

பூக்கடை அருகே

வசிக்கும் புற்றெறும்புக்கு

வாசமலர்

வேறொன்றுமில்லை! வசந்தகாலம்! 

என்ற வரிகளில் ஒரு தனிக்குரல் எழுவதன் அழகு உள்ளது. அப்படி தொடக்ககாலக் கவிதைகள் பலவற்றில்  ஒரு கவிஞன் எழுவதைக் காண முடிகிறது.

தன்னிலிருந்து தோண்டப்பட்ட கல்

தன்மீதே எறியப்படும் போது

நீரின் வளையங்களில் எல்லாம்

கர்ப்பப்பையின் சுவடுகள்!

என்பதுபோன்ற வரிகளில் அசலான ஒரு கவிஞன் வெளிப்படுகிறான். நீர்வளையங்களை கருப்பையாக உருவகிப்பதில் உள்ள இயல்பான கற்பனைதான் என்னைப் பொறுத்தவரை கவிதை. அடிவயிற்றுப் பிரசவவரிகளை நீரில் காண்பவனே உண்மையான கவிஞன்.

ஒரு நல்ல கவிஞனை அடையாளம் காட்டியதற்கு நன்றி. கவிஞன் தன் பாதையில் தன்னை கண்டடைந்து நிறுவிக்கொள்ளவேண்டும் என வாழ்த்துகிறேன்.

எஸ். பாஸ்கர்

சித்தரிப்பும், கவிதையும்- எம்.ஶ்ரீனிவாசன் இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு எறும்பின் நிழலை எழுதுதல் – கிருஷ்ணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:31

Being with birds- A boy’s letter

I saw many birds. also, unique bird which I am seeing first time such as wagtail, Hornbill, Shikra, Rufous Treepie,  Oriental Magpie Robin, Brahminy starling, long tailed Shrike, Barn Swallow, Coppersmith barbet, blue faced malkoha and yellow footed green pigeon, spotted eagle.

Being with birds- A boy’s letter

வழக்கம் போல மிகவும் அர்த்தம்பொதிந்த உரைகளில் இதுவும் சிறந்ததொரு உரை.வெளிப்படுதல் தான் மிக முக்கியம் என ஒவ்வொரு உரையிலுமே அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். அது உண்மைதான் இயற்கை பறவைகளுக்கு அழகான இறக்கைகளை கொடுத்திருக்கிறது.பூக்களுக்கு நிறத்தை கொடுத்திருக்கிறது. நீருக்கு பொங்கிபிரவாகம் ஆகும் தன்மையை கொடுத்திருக்கிறது

எழுதுவது என்பது…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 11:30

May 12, 2025

‘இன்றைய காந்தி’ இன்று…

காந்தியின் எளிமையின் செலவு என்னும் கேள்விபதில் என் இணையப்பக்கத்தில்  23 ஜூலை 2008 ல் வெளிவந்தது. அதுதான் இன்றைய காந்தி என்ற இந்த நூலின் தொடக்கம். ஒரு வாசகர் கேட்ட எளிமையான கேள்விக்குப் பதிலாக அதை எழுதினேன். தொடர்ச்சியாக கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. நானும் பதில் எழுதிக்கொண்டே இருந்தேன். பின்னர் அவற்றை இன்றைய காந்தி என்ற பேரில் தொகுத்து நூலாக்கினேன். பல பதிப்புகள் வெளிவந்த மிகப்புகழ் பெற்ற அந்நூல் காந்தி பற்றிய இளைய தலைமுறையினரின் பார்வையையே மாற்றியமைத்த முன்னோடிப் படைப்பு என இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

அன்றில் இருந்து இன்று காலம் எவ்வளவு மாறிவிட்டது. அன்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. காந்தி அதன் முகமாகக் கருதப்பட்டார். ஆளும்கட்சிக்கு எதிரான எல்லா கோபங்களும் காந்திமேல் குவிந்தன. காந்தியை அரசு தன் முகமாக வைத்திருந்தது. ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியையே அனைவரும் அறிந்திருந்தார்கள். பாடநூல்களில் படித்தனர். அமைப்பை எதிர்ப்பதென்றால், சுதந்திரமாகச் சிந்திப்பதென்றால் காந்தியை நிராகரிக்கவேண்டும் என்று புரிந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் இங்கே இருந்த பெரும்பாலும் எல்லா அரசியல் தரப்பினருக்கும் காந்தி எதிரியாக இருந்தார். திராவிட இயக்கமும், இடதுசாரிகளும், தலித்தியர்களும் காந்தியை வெறுத்தனர். பெரும்பாலானவர்கள் வசைபாடினர், அவதூறு செய்தனர், அவரை திரித்து முன்வைத்தனர். அரிதாகச் சிலரே ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் மாற்றுப்பார்வைகளையும் முன்வைத்தனர். இந்துத்துவர்  காந்தி கொலையின் பழியால் பின்னடைவு கொண்டிருந்த காலகட்டத்தில் காந்தியை மாபெரும் இந்துச் சான்றோர்களின் நிரையில் வைத்து வெளியே பேசினர், ஆனால் அகத்தே வெறுப்பு கொண்டிருந்தனர். காங்கிரஸ்காரர்கள் நேருவின் மரபையே விரும்பினர், காந்தியை நேருவின் பொருட்டு மௌனமாக நிராகரித்தனர். சர்வோதயர்கள், காந்திய கல்விநிலையத்தவர்களுக்கு காந்தி ஒரு வணிகமுத்திரை மட்டுமே.

ஆனால் காந்திக்கு எவருமில்லாமல் போகவில்லை. காந்தியத்தை வாழ்க்கைமுறையாக எடுத்துக்கொண்ட மாபெரும் சமூகப்பணியாளர்கள் இந்தியாவெங்கும் இருந்துகொண்டுதான் இருந்தனர். உண்மையில் அவர்களே ஆக்கபூர்வமான அரசியலைச் செய்தனர். அவர்களிடமிருந்தே நான் காந்தியைக் கற்றுக்கொண்டேன். ஜி.குமாரபிள்ளை, சுகதகுமாரி, மேதாபட்கர், சுந்தர்லால் பகுகுணா, கிருஷ்ணம்மாள்- ஜெகந்நாதன் முதல் ஈரோடு வி.ஜீவானந்தம் வரை. நுண்ணலகு அரசியல், மாற்று அரசியல் என மெய்யான சமூகமாற்றத்தை நோக்கிச் செயல்பட்ட அனைவரையுமே காந்திதான் வழிநடத்தினார்.

நம் அரசியல்சூழலால் இங்கே உருவாக்கப்பட்ட காந்தி மீதான கசப்புகளும் அவதூறுகளும் ஒருபக்கம் இருந்தாலும், தமிழிலக்கியச் சூழலில் காந்தி என்றுமே எழுத்தாளர்களின் முன்னுதாரண மானுடராகவே இருந்தார், இன்றும் அவ்வாறுதான் நீடிக்கிறார். கா.சி.வெங்கடரமணி, எம்.எஸ்.கல்யாணசுந்தரம் சி.சு.செல்லப்பா போன்ற காந்திய யுக எழுத்தாளர்களில் தொடங்கி சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதல் பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தேவிபாரதி வரை. எங்கள் தலைமுறைக்குப்பின் கலைச்செல்வி, சுனீல்கிருஷ்ணன் என காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள் தமிழ் நவீன எழுத்தாளர்கள்.

ஆனால் இணையம் உருவானபோது நம் சூழலின் மேம்போக்கான காந்திக்காழ்ப்புகளே வெளிப்பட்டன. ஒவ்வொரு அக்டோபர் 2 அன்றும் காந்திக்கு எதிரான கசப்புகள், அவதூறுகள், திரிபுகள் இணையத்தில் பெருக்கெடுக்கும். அதற்கு எதிரான விளக்கங்களாகவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. இக்கட்டுரைகள் தொடர் எதிர்வினைகளை உருவாக்கின. இன்று காந்தி பற்றி தமிழகத்தில் எழுதப்படும் ஏறத்தாழ எல்லா கட்டுரைகளிலும் இவற்றின் தாக்கம் உண்டு.

2016 ல் இந்துத்துவம் ஆட்சியமைத்தது முதல் காந்தி குறித்த அரசியல் நிலைபாடுகள் மாற்றமடையலாயின. இந்துத்துவர்கள் தங்கள் முகமூடிகளைக் களைந்து காந்தியை தேசத்துரோகி என்று முத்திரையடிக்கும் எல்லைவரைச் சென்றனர். ஏற்கனவே அத்தரப்பில் தமிழில் ஓங்கிய குரலாக ஒலித்தது ராதா ராஜன் என்னும் சாதிவெறிகொண்ட பெண்மணியின் நூல்தான். ஆன்மிகமான தீராநோய் பாதித்தவர் என்றே அவரை நான் மதிப்பிடுகிறேன். அவர் கருத்துக்களுக்கு  எந்த அறிவார்ந்த அடிப்படை மதிப்பும் இல்லை. ஆனால் அக்கருத்துக்களை நான் சமநிலை கொண்டவர்கள், நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்று நம்பியவர்கள் கூடச் சொல்ல ஆரம்பித்தனர். ஒவ்வொருவராக வேறு வண்ணத்தில் வெளிப்படலாயினர்.

மறுபக்கம் காந்தியை எதிர்த்தவர்கள் அவருடைய பெறுமதியை அடையாளம் காணலாயினர். முதன்மைத்தரப்பினர் தலித்தியர். அம்பேத்கரை முன்னுதாரணமாகக் கொண்டு காந்தியை வெறுத்தவர்கள் அவர்கள். ஆனால் காந்தி தலித் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை அவர்கள் மெல்ல புரிந்து கொள்ளலாயினர். காந்தி தலித் மக்களுக்கான மாபெரும் ஆயுதம் என்றும், காந்தியைக் கொண்டே வளர்ந்துவரும் இந்துமேலாதிக்க வெறியை , ஆசாரவாதமும் பழமைவாதமும் கலந்த இருண்ட அரசியலை எதிர்கொள்ளமுடியும் என்று அறிந்தனர்

அவ்வாறு முன்வந்த முதல் ஆளுமை என நானறிந்தவர் வெ.அலெக்ஸ். என் இன்றைய காந்தி நூல் அவருடைய பார்வையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. என்னை வந்து சந்தித்து என் அணுக்க நண்பராக ஆனார். அம்பேத்கரை எதிர்த்தவர் என்னும் முறையில் இங்கே தலித்தியர்களால் நிராகரிக்கப்பட்ட எம்.சி.ராஜா மீது அவருக்கு புதிய பார்வை உருவாக அந்நூல் வழிவகுத்தது. அவருடைய எழுத்து பிரசுரம் என் நூல்களை வெளியிட்டது. இன்றைய காந்தி நூலை வெளியிட அலெக்ஸ் மெய்ப்பு நோக்கி, நிறைய அரிய படங்களையும் சேர்த்து வைத்திருந்தார். தீயூழாக அவர் குறைந்த அகவையில் மறைய நேரிட்டது.

இன்னொருவர் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம். காந்திய இயக்கம் தமிழகத்தில் தலித் கல்விக்காக ஆற்றிய பெரும்பணியை வரலாற்று மறதியில் இருந்து மீட்டு ஆதாரங்களுடன் பதிவுசெய்தவர் அவர். அதன்பின் தலித் சிந்தனையாளர்களின் பார்வையில் படிப்படியான மாற்றம் உருவாகியது. இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் கூட காந்தியை நட்புசக்தியாகப் பார்க்கலாயினர். இந்த நூல் எழுதப்பட்டபோது கடுமையான எதிர்நிலைபாடுகளை எடுத்தவர்கள் பலர் இன்று அம்மனநிலையில் இல்லை.

ஆனால் இந்நூல் ஒரு குறிப்பிட்ட அரசியல் – வரலாற்றுச் சூழலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இது காந்தியை ஒரு நவீன தத்துவசிந்தனையாளராக அடையாளம் காண்பது. தத்துவத்தை நடைமுறைகள் வழியாக முன்வைத்தவர் அவர். ஆகவே அவரது செயல்களில் இருந்து அவர் முன்வைத்த தத்துவத்தை திரட்டிக் கொள்ளும் பொறுப்பு நமக்குண்டு. இந்நூல் அதற்கான முயற்சி.

இந்நூலின் தரவுகளில் பெரும்பாலானவை நான் இந்நூலுக்காக, அந்தந்த கட்டுரைகளுக்காக, திரட்டியவை. இவற்றை முழுமையானவை முற்றிலும் பிழையற்றவை என்று சொல்ல மாட்டேன். ஒரு காந்திய ஆய்வாளரின் நூல் அல்ல இது. காந்தியை கண்டடைய முற்படும் ஓர் எழுத்தாளனுடையது . இந்நூலின் தரவுப்பிழைகள் பல சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியுள்ளேன். சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. காந்தியைப் பற்றிய அரிய தரவுகள் இதில் இல்லை என்று நினைக்கிறேன். இதிலுள்ளது காந்தியை வரலாற்றிலும், தத்துவக் களத்திலும் வைத்து புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் செய்யப்பட்டிருக்கும் முயற்சிதான். அந்தக் கோணத்திலேயே இந்நூல் முக்கியமானது.

இந்நூல் காந்தியின் அரசியலை, ஆன்மிகத்தை, சமூகப்பார்வையை அவருடைய நீண்ட வாழ்வின் பரிணாமம் வழியாக, அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் வைத்து தொகுத்துக் கொள்ள முயல்கிறது. வழக்கமான அரசியல் பார்வைகள், காந்திபக்தி நோக்குகள் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று இது ஒரு புதிய கோணத்தை முன்வைக்கிறது. இன்றைய சமகாலச் சிந்தனைகளை, நவீனத்துவத்தையும் பின்நவீனத்துவத்தையும் கடந்து சென்று உருவாக்கப்பட்ட இப்பார்வை புதிய தலைமுறைக்காக காந்தியை வகுத்தளிக்கிறது.

பதினைந்தாண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ்ச்சூழலுடன் விவாதித்துவரும் இந்நூலின் புதிய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் முந்தைய பதிப்பை வெளியிட்ட தமிழினி பதிப்பகத்திற்கும் நன்றி

ஜெ

(விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள இன்றைய காந்தி நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை)

இன்றைய காந்தி வாங்க

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக இன்றைய காந்தி வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : contact@vishnupurampublications.com Phone : 9080283887)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.